புதுச்சேரி விடுதலை இயக்க வீரரும் புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான தோழர் வ.சுப்பையா ஒரு பேட்டியில் பாரதிதாசன் பற்றி குறிப்பிடும்போது ‘அவர் உணர்ச்சிமிக்க கவிஞர். கவிதை எழுதத் தொடங்கினால் கவிதையாகவே மாறிவிடுவார். அது எவ்வளவு பெரிய கவிதையாக இருந்தாலும் எழுதி முடித்துவிட்டு தான் எழுந்திருப்பார். கவிதை எழுதும் பொழுது அதிகமாக சிகரெட் குடிப்பார்.

1936 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டமும், அதற்கு எதிராக நடந்த
அடக்குமுறைகளும் அதையும் மீறி எழுந்த தொழிலாளர்களின் எழுச்சியும் நடந்தபோது பாரதிதாசன் பல வகைகளில் உதவி செய்தார். தொழிலாளர் இயக்கத்தைப் பாராட்டியும் அடக்கு முறையை கண்டித்தும் தொழிலாளர்கள் பாரதிதாசனிடம் கவிதை எழுதிக் கொடுக்க கேட்டபோது, எவ்வித மறுப்பும் சலிப்புமின்றி எழுதிக் கொடுத்தார். 1937 ஆம் ஆண்டு பிரான்சில் பிறப்பிக்கப்பட்ட முதல் தொழிற்சங்க சட்டத்தை பிரஞ்சு மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து கொடுத்தது பாரதிதாசன் தான்.’ என்கிறார்.

பட்டுக்கோட்டை அழகிரி தோழர், வ. சுப்பையாவிற்கு எழுதிய கடிதத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நன்றாக கவிதை எழுதக்கூடியவர். கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். அவரை பாரதிதாசனிடம் உதவியாளராக சேர்த்து விடும்படி குறிப்பிட்டிருந்தார். அதற்கு இணங்க பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசனிடம் இரண்டு மூன்று மாதங்கள் இருந்துவிட்டு அங்கிருந்து சினிமாவிற்கு சென்றார்.

புதுவை மாநிலம் விடுதலை அடைந்த பிறகு 1955 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் முற்போக்கு ஜனநாயக கருத்துக் கொண்டோரை உள்ளடக்கிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் பாரதிதாசன் காசு கடை தெருவில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘பாரதிதாசன் கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தை மனம் கொண்டவர். சூதுவாது அறியாதவர். உணர்ச்சி மயமான மனிதர்’ என்கிறார்.

பெரியார் பாரதிதாசனின் கவித் திறத்தைப் பற்றி கூறும் போது, ‘பாரதிதாசன் எந்த இடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துக்களைப் பாட முற்படவில்லை.சமுதாய மாற்றத்திற்கான கருத்துக்களைத் துணிந்து கூறிய பெரும் புலவராவார். பாரதிதாசன் போன்று நமது நாட்டில் புரட்சி பாவலர்கள் தோன்றியிருப்பார்களேயானால் நமக்கு 2000, 3000 ஆண்டுகளாக இருந்து வரும் இழிதன்மை இருந்து வந்திருக்குமா?’ என்று சொன்னார்.

ஆங்கிலேய அரசு தம்ஆட்சி காலத்தில் காமச்சுவை கொண்ட நூல்கள் என்று காரணம் காட்டி 9 நூல்களை தடை செய்தது. அவற்றில் பில்கணீயமும் ஒன்று. வடமொழியில் வெளிவந்த இக்கவிதையை பாரதிதாசன் உள்வாங்கிக் கொண்டு மிகவும் வேறுபட்ட
தனித்தன்மையோடு சாதி எதிர்ப்பு, வர்ணாசிரம தர்ம எதிர்ப்பு, முடியாட்சி எதிர்ப்பு ஆகிய முற்போக்கு நோக்கங்களை உரிய வகையில் மாற்றம் செய்து காவிய நாயகனை புரட்சிக்கவி ஆக வளர்த்தெடுத்தார். புரட்சித் ததும்பும் கவிதை அழகும் கருத்து சிறப்பும் சேர்ந்து உள்ளத்தில் உணர்ச்சி ஊற்றுக்களைத் திறந்து பெருக்கி விடும் ஆற்றலோடு வெளிப்பட்ட புரட்சிக்கவி என்ற காப்பியம் வெளியான பிறகு பாரதிதாசனே புரட்சிக் கவிஞர் என்று போற்றப்படும் நிலை தமிழகத்தில் உருவானது.

புரட்சிக்கவி என்னும் காப்பியத்தில் உதாரன் என்ற கவிஞன் தன்னை காதலிக்கும் அரசகுமாரி அமுதவல்லி இடம் பேசுவதாக அமையும் இடத்தை பாருங்கள்..

‘பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?

பிறர் சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ?

நேரிருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையில் போட்டால்

நிறை தொழிலாளர்களுணர்வு மறைந்து போமோ?’

என்ற வரிகள் பாரதிதாசனின் பாடல்களில் பாடு பொருளாக இடம் பெற்ற தொழிலாளர் உயர்வும், பொதுவுடைமைக் கோட்பாடுமே. இவை அவரது பாடல்களில் தமிழ் பெற்ற இடத்தைப் பெற போட்டியிடுகிற பாடல் வரிகள் ஆகும்.

மத வேற்றுமைகளை அறவே வெறுத்தவர் பாரதிதாசன்.

‘மதம் வேறு, மக்கள் வேறு, மதங்கள் மக்களின் மாற்று சட்டைகள்.
இந்திய மக்கள் அவ்வெழிலுறு சட்டையின்
உட்புறத்தில் உள்ள மனிதனைக் காண்க.

துருக்கன் என்ற சொல்லை நீக்கு,
கத்தோலிக்கப் பித்தம் தொலைப்பாய்,
இந்து என்ற சிந்தனை வேண்டாம்.

யாவரும் மனிதர் என்பது தெரிந்தால் நிலவும் பொதுவே என்பது தெரியும்
அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே’

என்று ஒருநாள் இரவு சிறுவர்கள் கடற்கரை மணல் வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு துருக்கச் சிறுவன் வானில் அரசாட்சி செய்யும் நிலவிடம் கேள்வி கேட்பதாக அமைந்துள்ள இப்பாடலில் கத்தோலிக்கன், இந்து சிறார்களும் கேள்வி கேட்பதும் அதற்கு நிலவு பதில் கூறுவதாகவும் அமைந்துள்ளது.

08.08.1931 ல் இப்பாடல் ‘நிலவும் சிறுவர்களும்’ இந்த தலைப்பில் வெளிவந்தது.
.

‘மலர்கள் பற்பல, மணமும் பற்பல .
மதங்கள் கிடையாது;

விலங்குகள் பற்பல வண்ணம் பற்பல
வேற்றுமை கிடையாது.

தண்ணீர் பற்பல நிலங்கள் பற்பல
சாதிகள் கிடையாது;

பண்கள் பற்பல பாடல்கள் பற்பல
பகைத்தீ கிடையாது.

மலைகள் பற்பல மடுவுகள் பற்பல
மடமைகள் கிடையாது.

அலைகள் பற்பல ஆழ்கடல் பற்பல.சமயம் ஆங்கில்லை.

மாந்தர் பற்பலர் மொழிகள் பற்பல. மதிக்கும் அறிவிருந்தும்
ஏந்தும் சாதி சமயம் மதத்தின்

இழிவால் கெட்டனரே.இயற்கையில் இல்லை’

‘மனிதருக்கு ஏன்?’ என்ற தலைப்பில் எழுதிய இப்பாடல் இந்து பித்தம் தலைக்கேறி சாதி வெறி பிடித்துத் திரிபவர்களுக்கு நல்லதொரு அறிவுரையாகும்.

‘தூய உள்ளம் – அன்புள்ளம் – பெரிய உள்ளம் –
உலக மக்கள் எல்லாம் ஒன்றே என்னும் தாய் உள்ளம்’

இவைதான் பாரதிதாசன் மனிதநேயத்திற்கு அளித்த வரையறை ஆகும்.

சிறு குறிப்பு முதல் கட்டுரை – கவிதைகள் வரை அனைத்திலும் கருத்து – உணர்ச்சி – நகைச்சுவை இவைகளைத் தான் பாரதிதாசனின் படைப்புகளில் பரவலாகக் காண முடியும்.

1970 இல் இவருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்தது.

நிலைத்த நெஞ்சினர்; நேர்மை அவரது இயல்பு. உண்மை – உழைப்பு – மேதை இவைகளுக்கு நடுவில் இருப்பவர். நான் செய்ய வேண்டியது என்னவென்பது தான் என்னுடைய சிந்தனையே தவிர பிறர் என்ன எண்ணுவார்கள் என்பதல்ல என்ற புரட்சி கவிஞர் பாரதிதாசனின் நினைவு நாள் இன்று (21.04.1964)

  • Agri bharathwaj

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *