தென்றல் வந்து தீண்டும்போது….

இசைஞானி இளையராஜாவிற்கு மணி மகுடம் சூட்டுகிறது “தென்றல் வந்து தீண்டும் போது” குறும்படம்.

தமிழ் சினிமாவில் இசை என்றாலே இளையராஜாவிற்கு முன், இளையராஜாவிற்கு பின் என்ற சகாப்தத்தை உருவாக்கி, இன்று உலக சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு தமிழ் இசை அரசனாக முடிசூட்டப்பட்ட இசைஞானி  இளையராஜாவின் பிறந்த நாள் வாழ்த்துக்களை இசை ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் கொண்டாட, பரந்து விரிந்த அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவரான அருள் சங்கர் என்பவர் தனது இசைத் தலைவனுக்கு வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ஆம், ‘தென்றல் வந்து தீண்டும் போது’ எனும் குறும்படம் மூலமாக இசை ரசிகர்களின் மனதில் இளையராஜா எப்படி வாழ்ந்து வருகிறார் என்பதை தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

தமிழக சினிமா ரசிகர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் தனதாக்கிக் கொள்ளும் சக்தி கொண்டது இளையராஜாவின் இசை என்ற பேச்சு வழக்கு உண்டு. இதைக் கண்முன்னே காட்டியிருக்கிறார்கள் இதன் ஒளிப்பதிவாளர்கள் ராசாமதி மற்றும் சந்தோஷ் தயாளன்.

‘தமிழ்ச் சமூகம் தவிர்க்கவே முடியாத இம் மாபெரும் கலைஞனுக்குத் தலைவணங்கி இக்குறும்படத்தை சமர்ப்பிக்கிறோம்’ என்ற முகப்பு வாசகத்தைப்  படிக்கும் போதே இக்குறும்படத்தின் கரு என்னவென்று புரிந்து விடுகிறது. இதுவே இந்த குறும்படத்தின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

வைதேகி காத்திருந்தாள் படத்தின் ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’  என்ற காதல் தோல்விப் பாடலுடன்  தொடங்கு கிறது இந்தப் படம். காதல் தோல்வி என்றால் சோகமான பாடல்களைத்தான் கேட்க வேண்டும் என்கிற விதியை உருவாக்கியுள்ள இந்திய சினிமா ரசிகர்களிடையே இந்தப் படத்தின் நாயகனும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே சத்யா என்ற பெண்ணைக் காதலித்து, அந்தக் காதல் தோல்வியால் மனம் நொந்து போயிருக்கும் அருணுக்கு அவரது நண்பர் அறிவுரை கூறும்போதே படத்தின் தலைப்புப் பகுதி முழுவது மாக முடிந்துவிடுகிறது. படத்தின் முதல் காட்சி பெண் பார்க்கும் படலத்துடன் தொடங்குகிறது.

யாழினி இந்தக் கதையின் நாயகி. கொஞ்சம் முக மற்றும் உடை ஒப்பனை சரியாகச் செய்திருந் தால் வெள்ளித்திரை நாயகியாகவே வாழ்ந்திருப்பார். ஆனாலும் இந்தக் கதைக்கு மெத்தப் பொருந்தியுள்ள பாத்திரமாக வாழ்ந்துள்ளார். கதையின் நாயகன் அருண், யாழினி உடனான பெண் பார்க்கும் முதல் சந்திப்பில், தனது முதல் காதல் குறித்து யாழினியிடம் கூறும்போது, ‘‘இங்கு வரும் வரையில் எனக்கு கல்யாண ஆசை இல்லை” எனும்போது, ‘‘அப்படியென்றால் இங்கு வந்த பின்னர் அந்த நினைப்பு மாறிவிட்டதா?” என்று கேட்க, நாயகன் அருணின் இரண்டாவது காதல் மொட்டு துளிர்விட தொடங்கு கிறது.

1988 ஆம் ஆண்டு வெளியான சத்யா திரைப்படத்தில் வரும் ‘வளையோசை கலகலகலவென’ என்ற பாடலைக் கேட்கும்போது முன்னாள் காதலி நினைவுக்கு வருவாரோ என்று அடிக்கடி குழப்ப நிலைக்குச் செல்கிறார் யாழினி.

தொலைக்காட்சி யில் இந்தப் பாடல் பாடல் வரிகள் வரும் வேளையில், இசையின் ஒலியைத் தடை செய்து, காட்சிப் பதிவினை மட்டும் கண்டு ரசிக், நாயக னின் முதல் காதல் பற்றிய சந்தேகம் எழுகிறது.

ஒரு கட்டத்தில் இளையராஜா பாடலையே கேட்கக் கூடாது என கணவரிடம் கண்டிப்பாக கூற, இளையராஜா பாடலைக் கேட்காமல் இவர்களின் குடும்ப வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் மீதமுள்ள படத்தின் கதை. படம் முழுக்க இரண்டு நபர்களைச் சுற்றி நகரும் கதைதான் என்றாலும் 26 நிமிடங்கள் எப்படிப் போனது என்று தெரியாமல் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.

அடிக்கடி பழைய காதலியைப் பற்றி கேட்கும் கேள்விகளைத் தவிர மற்ற இடங்களில் நடிப்புத் திறனில் ஒன்றிவிடுகிறார் நாயகி யாழினி. உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு குறும்பட விழாக்களில் கலந்து கொண்டு  சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த தயாரிப்பு என இதுவரை 22 விருதுகளை வாங்கியுள்ளது தென்றல் வந்து தீண்டும்போது குறும்படம்.

இளையராஜாவின் தென்றலை கலகலவென தீண்டியுள்ளது இந்தக் குறும்படம்.


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *