பொன்மகள் வந்தாள்

ஜோதிகா நடிப்பில் இணையத்தில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படம்! முதலில், நேரடியாக இணையத்தில் ஏன் இந்தப் படம் வெளிவந்தது என்பதை பார்ப்போம்! மார்ச் 25 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், கொரோனா காரணமாக அதற்கு முன்பே ஊரடங்கை அரசு அறிவித்தது. தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் எப்போது அவை திறக்கப் படும் என்பதும் உறுதியில்லை. இப்போது லாக்டவுன்-4ல் இருக்கிறோம். இது மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே, திரைப்படம் எடுப்பது ஒரு தொழில் என்ற முறையில் வேறு வழியின்றி இப்படத்தை இணையத்தில் வெளியிட சூர்யாவின் 2D  நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு காட்டி னார்கள். அதையும் மீறி சூர்யா இப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் இணையத்தில் அதாவது OTT தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது பற்றிச் சொல்ல வேண்டும். OTT என்பதன் விரிவு “Over The Top”. நேரடியாக நமது ஆண்ட்ராய்டு ஃபோன், அல்லது டிவியில் இணையம் மூலம் வெளியிடுவது. சாதாரணமாக ஒரு படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பல மாதங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகே தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றின் மூலம் பிற ஊடகங்களுக்கு உரிமை அளிக்கப்பட்டு வெளிவரும்.

(திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்று சட்ட அனுமதி இல்லாமல் வெளியிடப்படுவது வேறு கதை. அதை விட்டு விடுவோம்.)

இந்த இணைய தொழில்நுட்ப வெளியீடு பற்றி சில வரிகள். மனிதன் சக்கரத்தைக் கண்டுபிடித்தது முதல் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பையோ, ஊடகத்தையோ மக்களிடம் கொண்டு போகாமல் வணிக நோக்கில் தடுப்பது இயலாத செயல். சினிமா வரலாற்றில் முதன்முதலில் ஊமைப்படம், பின்னர் பேசும்படம், வண்ணப்படம், 70mm, சினிரமா, சினிமாஸ் கோப், த்ரீடீபடம் போன்ற பரிமாண வளர்ச்சி இருப்பது போல் திரைஊடக வரலாற்றிலும் திரை அரங்குகள், தொலைக்காட்சி, பின்னர் விசிஆர், சிடி வரிசையில் இப்போது வந்துள்ள OTT என்ற இணைய வெளியீடும் ஒரு பரிணாம வளர்ச்சிதான். அந்த வகையில் இப்படம் சினிமா ஊடக வரலாற்றில் ஒரு திருப்புமுனைப் படமாகும்.

ஆயினும், எந்தப் புதிய ஊடக கண்டு பிடிப்பாலும் திரையரங்குகள் மறைந்து போகாது என்று சொல்வார்கள். ஆனால், வெள்ளித்திரையில் பார்த்து மகிழ்வதற்கு மாற்று எதுவும் இல்லை என்பதை ரசிகர்கள் ஆதரவு நிரூபித்துள்ளது.

இந்தப் படம் அமேசான் பிரைம் மூலம் வெளியிடப்பட்டது. இணையத்தில் அமேசான் பிரைம் நிறுவனத்துக்குச் சந்தா கட்டியவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம். நெட்ஃபிளக்ஸ், டிஸ்னி போன்ற மற்ற பிற இணைய ஊடகங்களும் இத்துறையில் இயங்கி வருகின்றன. 2020 மே
29-ல் இப்படம் இணையம் மூலம் உலகம் முழுவதும் வெளியாகியது. நமக்கு நள்ளிரவு 12 மணிக்கு வெளியான இப்படத்தை தமிழில் திரைப்படங்கள் வெளிவராத ஃபிஜித் தீவு போன்ற உலகின் சிறிய தீவுகளில் உள்ள ரசிகர்களும் பார்த்து இணையத்தில் அப்போதே பதிவு செய்து விட்டனர்.

பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனத்துக்கு வருவோம். இயக்குநர் ஜேஜே ஃபிரடரிக் அறிமுகப்படம் இது.  ஒரு அறிமுக இயக்குனர் சொல்கிறபடி ஐந்து முத்தான மூத்த இயக்குநர்கள் கதாபாத்திரங் களாக நடித்திருப்பதால் அவர்களின் நடிப்பு பக்குவப்பட்டதாக அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற முதிர்ச்சி பெற்றதாக அமைந்துள்ளது.

இப்படத்தின் மையக்கருத்தாக மூன்று ஜீனர்களை குறிப்பிடலாம். முதலாவது நீதிமன்ற விசாரணை, அடுத்தது பெண்களை மையமாகக் கொண்டது, மூன்றாவது மனித உணர்ச்சி. படத்தின் கதை 2004ல் ஊட்டியில் ஜோதி என்ற  சைக்கோகில்லர் வடநாட்டுப்பெண் பல சிறுவர்களை கடத்தி, கொன்று புதைத்து வைத்ததை போலீசார் கண்டுபிடித்து அப்பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிடுகிறார்கள் என்பது செய்தி. அந்த வழக்கை 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் வழக்கறிஞர் வெண்பா மீண்டும் ஆரம்பித்து நடத்துகிறார். அந்த வழக்கின் முடிவு என்ன என்பதே முழுத் திரைக்கதை. அடுத்தடுத்து இறுதிக் காட்சி வரை இடைவிடாது திருப்பங்கள். கிளைமேக்ஸ் எதிர்பாராத திருப்பம். படத்தின் ஆங்கில சப்டைட்டில் இருப்பதால் உலகத் தமிழர்களுக்கு மேலும் தெளிவாக கதைப் போக்கு புரிகிறது. பிற மொழியாளர்களும் படத்தைப் பார்த்து பின்பற்றலாம்.

இடைவேளை இணையத்தில் தேவை இல்லை. திரையரங்கில் வெளியிடும்போது பாப்கார்ன், பானங்கள் சாப்பிட இடைவெளி தேவை. ஆனால், இங்கே இணையத்தில் படம் பார்த்தாலும் நீங்கள் சமையல் அறை சென்று நொறுக்குத்தீனி எடுத்துக் கொள்வதற்காக இடைவேளை விட்டிருக்கலாம்.

பில்லா, ரங்கா காலம் தொட்டு நடந்து வரும் சிறுவர் கொலை கதைதான். சமீபத்திய அசீஃபா, நந்தினியைத் தொடர்ந்து பொள்ளாச்சி சம்பவங்கள் வரை “பெண் குழந்தைகளை சீரழிப்பது” (Girl Child Abuse) பற்றி இதில் இடம்பெறும் வசனமே பேசுகிறது.

படத்தின் கதாநாயகி ஜோதிகா. 36 வயதினிலே, ராட்சசி வரிசையில் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் கதாநாயகன் இல்லை. வில்லன்கள், குணச்சித்திரப் பாத்திரங்கள் உண்டு. காதல் காட்சிகள், சண்டை, நகைச்சுவை போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. இதில் ஜோதிகா பண்பட்ட அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளில் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சி அளிக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை கதையைச் சுமந்து செல்பவரும் அவர்தான். இதில் வழக்கறிஞர் வேடத்தில் வரும் பார்த்திபன் தனக்கே உரிய முத்திரையைப் பதிக்கிறார். மனிதன் படத்தில் வரும் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ராஜை இந்தப் பாத்திரத்துடன் இணைத்து நினைத்துப் பார்க்கலாம். மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சென்னையில் வந்து வாதாடியதும் நினைவுக்கு வருகிறது. அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வருவது போல் அதிகமான நீதிமன்ற காட்சிகள் நிறைந்த படம். ஆரூர்தாஸ் வசனத்தில் வந்த ‘விதி’ படமும் நீதிமன்றக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.

ஆனாலும், 107 டிகிரி வெய்யில் பட்டையைக் கிளப்பும் இந்த மே மாதத்தில் குளுகுளு ஊட்டிக்கு நாம் நேரில் போக முடியாவிட்டாலும் ஊட்டி காட்சிகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. தமிழ்க் கவிஞர்களில்  பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரை என்று  சொல்லப்படுவதுபோல் இதில் வரும் நடிகர்களை இயக்குநர் பாரதிராஜா பரம்பரை நடிகர்கள் என்றும் வகைப்படுத்தலாம். பாரதிராஜாவின் சீடர் பாக்யராஜ், பாக்யராஜின் சீடர் பாண்டிய ராஜன், பாண்டியராஜனின் சீடர் பார்த்திபன் என்று முத்திரை பதித்த மூன்று தலைமுறை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மூத்த நடிகர் பிரதாப் போத்தன் நீதிபதியாக வந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அரசியல்வாதி வரதராஜனாக நடிகர் தியாகராஜன், போலீஸ் டி.எஸ்.பி. யாக சுப்பு பஞ்சுவும் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்பத் துறைகளில் ராம்ஜி சினிமாட்டோகிராஃபர், ரூபன் எடிட்டிங். இருவரும் சிறப்பாக ஒரு திகில் க்ரைம் கதைக்கு ஏற்ற வகையில் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். வா செல்லம், கலைகிறதே கனவே உட்பட ஐந்து பாடல்கள் கோவிந்த் வசந்தா இசையில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் கதைக்கருவை ஒட்டியதாக பின்னணியில் பாடப்படுகின்றன.

நீதிமன்றத்தில் ஜோதிகா வழக்கறிஞராக வாதாடும்போது, “ஒரு படி அரிசி திருடியதற்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த நாடு இது. ஆனால், பல நூறு பெண்களை நாசம் செய்தவர்கள் சுதந்திரமாக உலாவி வருகிறார்கள்!”, என்று  பேசும் வசனம் நெஞ்சைத் தைக்கிறது.

தமிழ்ப்பெண்ணின் வீரம் பழங்காலத்தில் இருந்தே பேசப்படுகிறது. தன் கணவனை கள்வன் என்று தீர்ப்பளித்த பாண்டிய மன்னன் அரசவையிலேயே சென்று, ‘‘தேரா மன்னா” என்று வாதாடி வெற்றி பெற்றவர் கண்ணகி. அந்த வரிசையில் ஜோதிகா நீதிக்காகப் போராடி வெற்றி பெறுகிறார்.

இந்த ஊரடங்கு நாட்களில் அறுபது நாட்களுக்கு மேலாக பழைய திரைப்படங்களையும், டி.வி சீரியல்களையும் மீண்டும் மீண்டும் பார்த்துப் பார்த்து நொந்து நூடுல்சாகிப்போன உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தக் காலகட்டத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளிவந்திருப்பது ஒரு வரப்பிரசாதம். இதைவிட உருப்படியாக ஊரடங்கில் வேறென்ன செய்யப் போகிறீர்கள்?

அனைவரும் ஒருமுறை பார்க்கலாம். குறிப்பாக ஆண்களும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களும் தவறாமல் பாருங்கள். நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

படத்தின் கடைசியில் வரும் ஒரு வசனம்: பெண் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch எவை என்று சொல்லி வளருங்கள் என்று சொல்லும் நாம் ஆண் குழந்தைகளுக்கு இதை ஏன் சொல்லித் தருவதில்லை என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

ஒரே ஒரு எச்சரிக்கை. படத்தின் கருத்தைப் பொறுத்தவரை ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் இப்படத்தைப் பார்ப்பது அவர்கள் மனதைப் பாதிக்கலாம். மற்றபடி அனைவரும் பாருங்க!

+++++++++++++


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *