மத்திய அரசின் உயர்சாதி மதியூகம்!
எழுபதுகளின் இறுதியில் தென் மாநிலங்களில் இருந்த மருத்துவக் கல்லூரிகளில் பிற்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 25 முதல் 50 % வரை இடங்கள் கிடைத்துவந்தன. மைய அரசின் மருத்துவக் கல்லூரிகள் என்பவை மிகக்குறைவு!
எனவே, கல்லூரிகளை அதிகப்படுத்தாமல் உயர்சாதி மாணவர்களுக்கு அதிக இடங்களைப் பெற்றுத் தருவதற்கான ஒரு திட்டத்தை 80- களின் காங்கிரஸ் அரசு தேசிய நீரோட்டம் என்னும் பெயரில் முன்மொழிந்தது. இதன்படி ஒவ்வொரு மாநிலமும் தன் வசமுள்ள MBBS இடங்களில் 15% , MD, MS இடங்களில் 50% மத்திய அரசுக்கு வழங்கிட வேண்டும் , அதனை மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாணவர் களுக்குப் போட்டித்தேர்வு அடிப்படையில் பிரித்து வழங்கும் என மாநில அரசுகளின் ஒப்புதலைக் கோரியது. அப்போது தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் காஷ்மீர், ஆந்திரா, ஆகிய மாநிலங்களும் இணைந்து இசைவு தர மறுத்துவிட்டன.

பல மாநிலங்களில் 100 இடங்களில் 25 மற்றும் 50(கர்நாடகா) இடங்கள் பெற்ற பிற்பட்டோர் முறையே 85 இடங்களில் 25% அல்லது 50% இடங்களை மட்டுமே பெற முடிந்தது. நான்கு அல்லது ஆறு இடங்கள் உள்ள உயர்கல்வி இடங்கள் பாதியாகக் குறைந்ததால் 4 இடங்களுக்குக் குறைவான இடங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்னும் விதி மாநிலங்களில் இருந்ததால் அப்பிரிவுகளில் முற்றிலும் இட ஒதுக்கீடு இல்லாமல் போனது. அப்போது மைய அரசின் வேலைகளிலோ, படிப்பிலோ பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பதால் மத்தியத் தொகுப்பில்
(Central Quota) அகில இந்திய அளவில் அவர்களுக்கு ஒதுக்கீடு எதுவும் தர இயலாது. S/C, S/T பிரிவினருக்கு இட ஒதுக்கீடு 22.5% இருந்தாலும், மைய அரசுக் கல்வி நிறுவன இடங்களுக்கு மட்டுமே அச்சட்டம் பொருந்தும், மாநிலங்களில் இருந்து திரட்டப்பட்ட இடங்களுக்கு அச்சட்டம் பொருந்தாது என்று மதியூகத்துடன் செயல்பட்டு அப்பிரிவினருக்கும் மத்தியத் தொகுப்பில் ஒரு இடமும் இல்லாது செய்தது காங்கிரஸ் அரசு. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி பிறப்பிக்கப்பட்ட அடுத்த சிலநாட்களிலேயே, கவர்னர் அலெக்ஸாண்டர் மூலம் தமிழ் நாட்டையும் மத்தியத் தொகுப்பில் காங்கிரஸ் அரசு இணைத்துக் கொண்டது. தமிழ்நாடும் சதி வலையில் சிக்கி அட்டவணைச் சாதி மற்றும் பிற்பட்ட சாதி மாணவர்களின் மருத்துவப் படிப்பு வாய்ப்பின் கணிசமான பகுதியை இழந்தது !
உயர்சாதி மதியூகம் வென்றது !
Comments (0)