வெட்டுக்கிளி ராணுவம் பராக் பராக்..!

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பிரளயமாக அதிகரித்து வரும் புயல், வெயில், பூகம்பம், தீவிரவாதத் தாக்குதல்கள் என்ற வரிசையில் தற்போது பரவி வரும் கொரானா எனும் கொடிய வைரஸ் உலகில் உள்ள மக்கள் அனைவரையும் உயிர் பயத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 4 லட்சம் உயிர்களை பலி வாங்கிய இந்த வைரஸ் தாக்குதலையும் தாண்டி, இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு அடிமேல் அடியாக உருவெடுத்து வருகிறது வெட்டுக்கிளி படையெடுப்பு. ஏற்கனவே வாழ்வாதாரம் சீரழிந்து உள்ளதைச் சமாளிக்க முடியாமல் உள்ள இந்திய விவசாயிகள் தற்போதைய வெட்டுக்கிளி பூச்சித் தாக்குதலால் தங்களது பொருளாதாரச் சூழல் முற்றிலுமாக சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புலம்பி வருகின் றனர். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இந்த வெட்டுக்கிளிகள் வருவதாகச் சொல்லப்பட்டாலும் இந்தியாவில் எப்போதெல்லாம் பஞ்சம் தலை விரித்தாடியதோ அந்த வேளையில் எல்லாம் இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நடந்துள்ள தாக வரலாறுகள் மூலமாக அறிய முடிகிறது.

பெரும் கூட்டமாக மிகப் பெரும் எண்ணிக் கையில் படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம். தம் கண்ணில் படும் பயிர்கள் அத்தனையையும் அழித்து உண்டபடி கூட்டமாய் அடுத்தடுத்த உழவு நிலங்களை நோக்கி நகர்கின்றன. ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர் களுக்கும் மேல்கூட பயணிக்கும் திறன் கொண்ட இந்த கூட்டம், செடிகளின் இலைகள் முதல் வேர்கள் வரை எல்லாவற்றையும் சாப்பிடக்கூடியது. இவைகள் ஒன்றிணையும் வேளையில், ஓரிரு நாட்களில் ஒரு கிராமத்தின் மொத்தப் பயிர்களையும் தின்று தீர்த்துவிடும் வல்லமை பொருந்தியவை என்று தெரிவிக் கின்றனர் அறிவியலாளர்கள். கடந்த சில நாட்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் இந்த வெட்டுக்கிளி கூட்டம் சுமார்  எட்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கான பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.  உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்கள் இருந்தாலும் சுமார் 22 இனங்களே பயிர்கள் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

1662ஆம் ஆண்டு முழுவதும் மதுரை நகரம் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளைக் கண்டு மக்கள் அச்சத்துடன் இருந்தார்கள். பல குழந்தைகள் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தன எனவும், கரடிகளும் புலிகளும் காட்டை விட்டு வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித் திரிந்து, சில நேரங்களில் இவை தலைநகருக்குள்ளும் கிறிஸ்தவ தேவாலயத்தின் சுற்றுச்சுவருக்கு வெளியிலும் சுற்றித் திரிந்தாகவும், பலர் திடீரென காரணங்கள் ஏதுமின்றி இறந்துபோகின்ற அந்த நேரத்தில் கடும் அச்சத்திற்கு இடையே இருந்த வேளையில், யாரும் அறிந்திராத பல வகையான வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் கூட்டம் கூட்டமாகத் தோன்றி பொறுத்துக்கொள்ள முடியாத துர்நாற்றத்தைப் பரப்பியும் காற்றை மாசுபடுத்தியும் மக்களைக் கடித்து பொறுக்க முடியாத வலியையும் ஏற்படுத்தின. இதன் மூலம் காலரா எனும் வியாதி பரவியதால் ஒரே குடும்பத்தில் பதினைந்து நாட்களில் ஏழு பேர் இறந்துபோனார்கள் என்கிறது வரலாறு.

1880ம் ஆண்டில் ரஷ்யாவின் தெற்குப் பிரதேசத்தில் உள்ள மக்கள் வெட்டுக்கிளிகளின் தாக்கத்துக்கு பயந்து பல நாட்கள் கதவைச் சாத்திக் கொண்டு வீட்டிற்கு உள்ளேயே முடங்கிக் கிடந்தார்களாம்.

1955ம் ஆண்டில் மொராக்கோ நாட்டிற்குப் பறந்து வந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தின் அகலம் இருபது கிலோ மீட்டர் வரை பரவி வந்ததாகவும்,  அங்குள்ள ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த பயிர்களை அழித்தாகவும் கூறப்படுகிறது. அத்தகைய பெரிய திரள் ஒன்றுகூடும் பட்சத்தில் ஒரே நாளில் சுமார் 35 ஆயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படும் உணவை உட்கொள்ளும் அசாத்திய திறமை படைத்தவை இந்த கூட்டம் என்று கூறப்படுகிறது. வெட்டுக்கிளிகள் மிகக் குறுகிய காலத்தில் அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்டவை. ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 100 மைல்கள் பயணம் செய்து வெட்டுக்கிளி கூட்டம் ஒரு நாட்டையே மூடி மறைத்த வரலாறு இன்றைக்கும் வியப்பின் சரித்திரம்.  லெபனான் நாட்டின் மீது பறந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தால் ஒரு நாள் முழுக்க சூரிய ஒளி இன்றி அச்சத்தில் தவித்தனர் அந்நாட்டு மக்கள். தமிழில் கூறப்படும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்கிற பழமொழிக்கு பதிலடி கொடுத்தன இந்த வெட்டுக்கிளிக் கூட்டம்.

அடுத்ததாக 1889ல் செங்கடல் வழியாகப் பறந்த வெட்டுக்கிளிக் கூட்டம் சுமார் 22 ஆயிரம் சதுர மைல் பரப்பளவுக்குப் பறந்ததாக பல்வேறு தரப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக மணலில் முட்டையிடும் வழக்கம் கொண்டவை வெட்டுக்கிளிகள்.

1881ஆம் ஆண்டு சைப்பிரஸ் தீவில் உள்ள மணற்பரப்பில் இடப்பட்ட சுமார் 1,300 டன் வெட்டுக்கிளிகளின் முட்டைகளை மணலைக் கிளறி அளித்துள்ளனர் அந்நாட்டு அரசுத்துறையினர்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து வழக்கமாக எகிப்து வழியாக எத்தியோப்பியா, ஏமன் நாடுகளைக் கடந்து அப்படியே பாகிஸ்தான் வரை பறந்து வந்து அத்துடன் தங்களது பயணத்தை முடிப்பதுதான் வெட்டுக்கிளிக் கூட்டத்தின் வழக்கம்.

எப்போதாவது இந்தியா பக்கம் எட்டிப்பார்க்கிற வெட்டுக்கிளிக் கூட்டம் இந்தமுறை முழுவேகத்தோடு உள்ளே நுழைந்துள்ளதைக் காண முடிகிறது.

தற்போது படையெடுத்து வரும் வெட்டுக் கிளிகள் சுமார் 2 கிராம் எடையளவு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெட்டுக் கிளிகளின் சிறிய கூட்டத்தில் மட்டும் சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் என்கிறது அதிர்ச்சியான செய்தியொன்று.

இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களான ராஜஸ்தான் உத்திரப் பிரதேசம் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பு காரணமாக  விவசாயி களும் பொதுமக்களும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் கிருஷ்ணகிரி  மற்றும்  நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு வரத் தொடங்கியுள்ளதால், அங்குள்ள மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.

பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், நமது மண்ணின் தன்மைக்கேற்ற வெட்டுக்கிளி களுக்கும் வேறுபாடு உண்டு என தமிழக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தாலும், அதன் தாக்கம் குறித்து  மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

உலகம் முழுவதும் தொடரும் காற்று மாசுபாடு மற்றும் தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் இயற்கைப் பேரழிவுகள், தற்போது பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று மற்றும் வெட்டுக்கிளிக் கூட்டத்தின் படையெடுப்பு என தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் பருவநிலை மாற்றம் என்ற ஒற்றை மையப்புள்ளி யில் அனைத்தும் இணைகிறதைக் காண முடிகிறது. வரலாறு காணாத புயல் மழை, வெப்பம், வறட்சி எனப் புதிய புதிய ஆபத்துகளை ஏற்படுத்தி உலகில் உள்ள மனிதக் கூட்டங்களை அழித்து வருகிறது இந்த இயற்கை பேரிடர். இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிர்பலி விகிதத்தில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்ததாக தமிழகம் இடம்பிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டு வரும் வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுத்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *