ஆறடி விந்தியம் காமராஜர்

எளிமைக்கு என்றும் இலக்கணமாம்
போலித்தனமில்லா புகழ் ஜோதியாம்
கல்லாமை ஒழிந்தாலே இல்லாமை
போகுமென உணர்ந்திட்ட உத்தமராம்
தாய் நாட்டின் மண்வளர்த்த தூய
பண்பாட்டை காத்திட்ட காவலராம்

பதவிதனைத் தேடுவோர் மத்தியில்
நாடிவந்த பதவிதனை நாடாதவரே
அதனால் கிங் மேக்கர் ஆனவரே
சாதி மதம் பாராமல் இலவசக்கல்வி
கொடுத்த கல்விக் காவலரே
கல்வி கற்கும் பிள்ளைகளின்
வயிற்றுப் பாட்டுக்கு வழிவகுத்து
மதிய உணவு தந்த வள்ளலே!

வான் தந்த மழைதனைச் சேமிக்க
வழிவகுத்த அணை வங்கியன்றோ!
ஆலைகள் பலவமைத்து ஏழைகளின் வாழ்வுதனை சோலையாக்கிய
ஆணைக் காவலரன்றோ!
நாட்டின் வளர்ச்சிகென சாலைகளும்
பாலங்களும் அமைத்த நித்திலமன்றோ!

மக்கள் வளம் காக்கும் மாக்களுக்கும் மருத்துவமனை அமைத்த மாசிலாமணியன்றோ!
கண்ணில் அமைதி ஏந்தி சொல்லில்
சுருங்கப் பேசி வீறுநடை போட்ட
வராக நதியன்றோ!
ஒதுக்கப்பட்டோர் நிலை உயர அறநிலையத்துறை அமைச்சராய்
கக்கனை அமர்த்தி அரசாண்ட விந்தியமன்றோ!
கன்னியொருத்தி கரம்பிடித்து
நீ வாழ கண்துயர்க் கொண்டு
அழுதாளோ உன் அன்னையன்று
என் நாட்டு மக்கள் நிலை உயராமல்

வேண்டாம் மணமென்று மறுத்ததால் பேசப்பட்டீரோ
அயல் நாட்டிலும் அன்று
அத்தத்துவத்தின் அறவழிதான்
உன்னைப் பார் முழுதும் போற்றுதய்யா!
நாடு முழுதும் நல்விழா உமக்கெடுத்து
இன்றும் உம்மை வணங்குதய்யா…!

ஆக்கம்: பாரியன்பன் நாகராஜன்


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *