காமராசர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை தமிழகத்தில் 9 ஆண்டு காலம் மட்டுமே முதலமைச்சராகப் பொறுப்பு வகித்திருந்தாலும், கல்வியில் மிகப் பெரிய மாற்றங்களை சாதாரண குடிமக்களுக்காகக் கொண்டு வந்த தலைவர் நமது காமராசர் என்பதை அனைவரும் அறிவோம். 2006-ஆம் ஆண்டிலிருந்து அவரது பிறந்தநாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு கொண்டாட்டம் என்பது வெற்றுப் புகழும் ஆடம்பரமும்தான் என்றால் மிகையாகாது. துறையின் சுற்றறிக்கைக்கு இணங்க பள்ளிகளில் காமராசரின் படம் வைத்து மாலை போடுவது, மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது, இவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி கோப்புகள் தயாரித்து வைத்துக்கொள்வது – இவற்றுக்குப் பெயர்தான் இங்கு கல்வி வளர்ச்சிநாள். மாறாக, இந்த 15 ஆண்டுகளில் கல்வியின் தரம் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்ற தரவுகளைக் கண்டடைந்தால் நமக்கு அதிர்ச்சிகளே மிஞ்சும். பள்ளிக்கல்வி என்பது அவசர சிகிச்சைக்குப் போனது இந்த பதினைந்து ஆண்டுகளில்தான். கல்வி தனியார்மயமாகிப் போகவா காமராசர் பாடுபட்டார்? “பிச்சை எடுத்தாவது படிக்கச்சொல்லி ஔவையார் சொன்னாங்களாம். நீங்க ஏன் பிச்சை எடுக்கணும்ங்கேன்? நான் கையேந்திப் பிச்சை எடுத்தாவது படிக்கவைக்கிறேன். நீங்க படிங்க” என்று சொல்லி ஏழை மாணவருக்குப் பள்ளிகளை உருவாக்கிக் கொடுத்தாரே, அது இதற்காகவா? ஊழல் நிறைந்த துறையாக மாறிப்போகவா இத்தனை பாடுபட்டார்? உண்மையான கல்வியை வழங்க, எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க, இல்லாமை வறுமை என்பதால் ஒரு குழந்தை கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துவிடாது இருக்கவே, அரசால் பள்ளிகளை உருவாக்க இயலா இடங்களில் மக்களின் இடங்களை வழங்கக் கூறி அரசு உதவி பெறும் பள்ளிகளையும் உருவாக்க வாய்ப்பு கொடுத்தார் என்கிறது வரலாறு. ஆனால் அவரது நோக்கம் சிதைந்து தனியார் பள்ளிகள் காளான்கள் போல உருவாகி, இன்று எங்கு பார்த்தாலும் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இங்கு பேசப்படுகிறதா? மாணவர்களுக்கு இன்றைய சமூகத்தின் கல்விச்சூழல் உணர்த்தப்படுகிறதா? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறி. இப்படிப்பட்ட கல்வி வளர்வதைத்தானா காமராசர் எதிர்பார்த்து அவ்வளவு தூரம் உழைத்தார்? கல்விகே கண் திறந்த காமராசர் என்று போற்றப்படக்கூடிய அவரது பிறந்தநாளில் கல்வியின் கண்களை அழித்து, கரிய துணி கொண்டு கட்டி அதை மறைத்து, பார்வையைக் குருடாக்கிவிட்ட ஒரு சூழலை அல்லவா இன்றைய சமூகம் உருவாக்கி வைத்துள்ளது? காமராசரின் பிறந்ததினத்தை நேர்மையுடன் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென்றால், இங்குள்ள உண்மையைப் புரிந்து கொள்ளக்கூடிய, அதை விமர்சனம் செய்யக்கூடிய, கேள்வி கேட்கக் கூடிய மனநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் முதலில் உருவாக வேண்டும். அவர்கள் தங்களை அவ்வாறு உருமாற்றிக் கொண்டால்தான், அவர்களின் வழிகாட்டலில் உருவாகும் எதிர்காலத் தலைமுறை, காமராசர் நினைத்த கல்விக்கண் திறக்கக்கூடிய நல்ல சமுதாயமாக மலரும். அதைவிடுத்து வெறும் கொண்டாட்டமாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து, பூக்களால் அலங்காரம் செய்து, வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட சொற்களால் போட்டிகள் நடத்தும் வெற்று செயல்பாடுகளால் இந்த சமூகத்தின் கல்வித்தரம் மேலும் மேலும் நசுங்கிச் சீரழியும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, ‘அரசுப் பள்ளிகள்தான் மக்களின் பள்ளிகள்’ என்ற தாரக மந்திரத்தை அனைவரும் உணரும்படியாக அனைத்துத் தரப்பிலும் கல்வியைத் தரமுள்ள சாதனமாக, அரசுப் பள்ளிக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்லவும் அரசுப்பள்ளியை நோக்கி மக்கள் வரவும் தேவையான சூழலை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், கல்வி அதிகாரிகள் போன்ற பொறுப்புகளில் இடம்பெறும் அளவில் தமிழகத்தின் கல்விச் சூழல் மாறவேண்டும். அன்றுதான் நமக்கு உண்மையான கல்வி வளர்ச்சி நாள். கட்டுரையாளர்: உமா, கல்வியாளர்