ஆஷஸ் தொடரும் ஆஸ்திரேலியாவும்

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் அனல் பறக்கும் எனில், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து போட்டிகளில் தீப்பற்றி எரியும். மக்களுடன் சேர்ந்து அந்தந்த நாட்டின் தலைவர்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவார்கள். ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கிரிக்கெட்டின் தலைமையிடமான லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றபோது, அப்படிப் பல அனல் துளிகள் பறந்தன. இங்கிலாந்தின் பேர்ஸ்டோ அவுட் ஆக்கப்பட்ட விதம் குறித்து, இரு நாட்டுத் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிக்கை விட்டனர். அவர் அவுட் ஆகித் திரும்பும்போது, மைதானம் முழுவதும் ‘ஆஸ்திரேலியாவா.. அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்’ என்ற கோஷம் எழுந்தது. நடந்த நிகழ்வைச் சிறிது பின்னோக்கிப் பார்ப்போம். தனக்கு வீசப்பட்ட, தேநீர் இடைவேளைக்கு முந்தைய கடைசிப் பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ, ஏதோ ஒரு நினைவில், கிரீஸை விட்டு வெளியில் வந்து, தன் அணி கேப்டன் ஸ்டோக்ஸுடன் உரையாட வந்துவிடுகிறார். பந்து விக்கெட் கீப்பர் கேரியால் ஸ்டம்ப் நோக்கி வீசப்பட்டு அவுட் கேட்கப்படுகிறது. மூன்றாவது நடுவரால் அவுட் என முடிவு அறிவிக்கப்படுகிறது. ‘இது சரியா? நல்ல ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் (spirit of cricket) ஆகுமா?’ என்று இங்கிலாந்துப் பத்திரிக்கையாளர்கள் வறுத்தெடுக்கிறார்கள். இங்கிலாந்துப் பிரதமர், ‘ஆஸ்திரேலியா செய்தது சரியில்லை’ என்று அறிக்கை விட, ஆஸ்திரேலியப் பிரதமர், ‘எங்கள் வீரர்கள் எப்பொழுதும் சிறந்த கிரிக்கெட்டையே விளையாடுகிறார்கள்’ என்று பதிலடி கொடுக்கிறார். இதில் கவனிக்கவேண்டியது என்னவெனில், இங்கிலாந்து அணிக்கு இந்த முறையில் அவுட் என்பது புதிய ஒன்று அல்ல. சில மாதங்களுக்கு முன்னர், இதே வீரர் பேர்ஸ்டோ, வேறொரு போட்டியில் தான் விக்கெட் கீப்பராய் இருந்தபோது, எதிரணி வீரரை அவுட் செய்திருக்கிறார். கிரிக்கெட் என்பது விதிகளின் விளையாட்டு. எந்த அளவிற்கு விதிகளைக் கடைபிடிக்கிறோமோ, அந்த அளவிற்கு விளையாட்டு அழகும் அர்த்தமும் பெறும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் என்பது, 5 நாட்கள் பொறுமையாக ஆடுவது. இரண்டு அணிகளுமே வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்த முடிவைப் பற்றி இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘இது சரிதான். விளையாடும்போது பேட்டிங் செய்பவர்களின் நினைப்பு எப்போதும் கிரீஸ்க்குள்ளேயே இருக்க வேண்டும். மீறினால் இதுபோல நிகழ்வதைத் தவிர்க்க முடியாது’ என்கிறார் ரவி சாஸ்திரி. மேலும் ‘ஆஸ்திரேலிய அணியினர் இதை வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார்கள். பேர்ஸ்டோ, சாதாரணமாகவே அடிக்கடி ஒவ்வொரு பந்து வீச்சின் இடைவெளியிலும் கிரிஸை விட்டு வெளியே வந்து நிற்கும் பழக்கம் உள்ளவர். இதைக் கண்காணித்த ஆஸ்திரேலியா, ஸ்டோக்ஸ் – பேர்ஸ்டோ கூட்டணியைப் பிரிப்பதற்கு இந்த உத்தியைக் கையில் எடுத்திருக்கலாம் என்கிறார். இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், தான் ஒருமுறை இப்படி அவுட் ஆனதையும் தலையில் அடித்துக்கொண்டு, எப்படி ட்ரஸ்ஸிங் ரூமில் சக வீரர்களை எதிர்கொள்வது என்று யோசித்துக்கொண்டே வந்ததையும் நினைவு கூர்கிறார். ஆஸ்திரேலியா செய்தது சரிதான் என்றும் மூன்றாவது நடுவருக்கு அவுட் கொடுப்பதைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார். இதுபோன்ற வாக்குவாதங்கள், சண்டைகள் எல்லாமே இந்த ஆஷஸ் தொடர்களில் புதியதல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தொடர் இதுவரை 72 முறை நடந்திருக்கிறது. ஆஸ்திரேலியா 34 முறையும் இங்கிலாந்து 32 முறையும் தொடரை வென்றுள்ளன. 6 முறை, வெற்றி தோல்வியின்றி போட்டி ட்ராவில் முடிந்துள்ளது. இதிலிருந்தே எவ்வளவு பழமையான தொடர் இதுவென்று விளங்கும். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, சுழற்சி முறையில் இரு நாடுகளுக்கும் நடக்கும் இந்தத் தொடரின் பெயர்க் காரணமே வியப்பளிக்கக்கூடியது. அடுத்த நாட்டு அணியைத் தோற்கடித்து, அந்த நாட்டின் சாம்பலைத் தன் நாட்டிற்கு எடுத்துச்செல்லல் என்பதைக் குறிப்பதால்தான், அது ‘ஆஷஸ்’. ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்ப்பதும் ஏதோ போரை வெல்வதுபோல விளையாடுவதும் வழக்கமான ஒன்றுதான். 1930களில் இந்தத் தொடர் bodyline series என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டது. டக்ளஸ் ஜார்டின் என்ற இங்கிலாந்து கேப்டன், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மெனைக்கட்டுப்படுத்துவதற்காக, இழந்த கோப்பையை மீட்டு வருவதற்காக உருவாக்கிய பந்து வீச்சு என்பார்கள். அதற்கு முந்தைய வருடம் டான் பிராட்மேனிடம் செமர்த்தியாக அடி வாங்கிவிட்டுக் காத்துக் கொண்டிருந்தது இங்கிலாந்து. எந்த ஆஸ்திரேலியா தோற்கடித்ததோ அதே ஆஸ்ட்ரேலியாவில் அவர்களைப் பழி வாங்கி, டானைக் கட்டுப்படுத்தி வெல்ல வேண்டும் என்ற வேட்கை இங்கிலாந்து அணிக்கு இருந்தது. தன் வேகப்பந்து வீச்சாளர்களை, எதிரணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களின் உடலைத் தாக்குமாறு, டக்ளஸ் பந்து வீசச் செய்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர் போட்டியில், பல வீரர்கள் அடிவாங்கி அவுட் ஆனார்கள். லார்வுட்டின் வீச்சு, எதிர்கொள்ள முடியாதபடி இருந்தது. முதல் இரண்டு மேட்சில் பிராட்மென் கலங்கினாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டார். இருப்பினும் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து. பின்னர் வந்த காலங்களில் இது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதைப்பற்றிய படத்தொகுப்பு வந்ததும் அதை சென்னைத் தொலைக்காட்சி ஒளிபரப்பியதும் ‘ஆ’வென்று வாயைப் பிளந்து அதைப் பார்த்ததும் இன்றும் நினைவில் உள்ளது. இப்படிப்பட்ட தொடர் எதிர்ப்பலைகள் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளிலும் இருந்தாலும் நம் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே எந்தவிதப் பகைமை உணர்ச்சியும் வருவதில்லை என்பதில் நாம் பெருமைப்படலாம். அடுத்த தொடரை இங்கிலாந்து ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. நாமும்.