கரைசேராப் படகுகள் – 12
கோபாலண்ணன் கொடுத்த பேப்பரில் இருந்த பேரும் மகான் சொன்ன பேரும் ஒன்றாக இருந்தது. சுப்புடு ஐயர் ‘சுவாதி’ங்கற பெயரை எழுதிக் கொடுத்திருந்தார். அதைப் பார்த்ததும் செந்தாமரை கலங்கினார். ‘மகான் சொன்னது போல எனக்கு ஏதாவது கஷ்டம் வருமோ?’ன்னு மனசு கலங்கினார். செந்தாமரை முகம் மாறி, வெளிறிப்போய் நிற்பதைப் பார்த்ததும், “வில்லிபுத்தூர் ராசகோபுரமும் கரிகாலனும் தோத்துதான் போவாங்க என் ராசா கம்பீரமா நீ நின்னா.. ஏன் ராசா கலங்கி நிக்கற?”ன்னு கேட்ட பட்டம்மாவுக்கு, “ஒன்னுமில்ல ஆத்தா, மயிலம் மலை கணக்கா கல்லாட்டம்தான் இருக்கேன்.. நீ சோலிய பாரு ஆத்தா” என்று பட்டம்மாவை விரட்டி விட்டார் செந்தாமரை. “விடுப்பா செந்தாமரை.. ஒன்னும் நடந்திடாது. ஐயனாரப்பன் துணையிருக்கான்; போப்பா, போய் விசேசத்த பாரு. நான் போய் பொழுது சாயறச்சே வர்றேன்”னு சொல்லிட்டு கோபாலண்ணன் கிளம்பினார். டவுன்ல வாங்கிவந்த காப்பை யாருக்கும் தெரியாமல் பொஞ்சாதிகிட்டேயும் ஆத்தாகிட்டேயும் காட்டினார் செந்தாமரை. அந்தக் காப்பைப் பாத்ததும், “காணாதத கண்டாளாம் கண்டாங்கி கட்டனவ; போகும்போது போச்சாம் பவுசத்துப் போய்”ன்னு புலம்ப ஆரம்பிச்சா பட்டம்மா. “மாமா.. என்ன விலையிருக்கும்?”னு கேட்ட மரகதத்திற்கு, “பவுனு 50 ரூவா.. இந்தக் காப்பு அரைப் பவுனுக்குக்கூட. 30 ரூவா” என்று விளக்கமாகச் சொன்னார் செந்தாமரை. “காசு உன் சம்பந்தி குடுத்தாளா? அவதான் “எள்ளப் பிச்சு எழுவது பேருக்குப் பங்கு வைக்கறவளாச்சே”ன்னு சந்தேகமாகக் கேட்டார் பட்டம்மா. “ஆமாம் அத்தே, எனக்கு்ம் புலப்படல. இந்த மனுசன் சூது பேசறாரோன்னு தோனுது”ன்னு மாமியாளுக்கு ஒத்து ஊதினாள் மரகதம். “வேப்பமரத்துப் பேயும் ஆலமரத்துப் பிசாசும் ஆம்படையனை அடிக்க ஒன்னா சேந்துச்சாங்கற கதையா, ரெண்டு பேரும் ஒன்னா சேந்துட்டீங்களா? நான் விளங்கனா மாதிரிதான்”னு சொல்லிவிட்டு, பால் கறக்கப் பால் லோட்டாவை எடுத்துக் கொண்டு கிளம்பினார் செந்தாமரை. “வீட்டுக்கு மக்க, மனுசா எல்லாம் வருவாக. பொழுதோட மாட்ட ஓட்டியான்னு மாரியான்ட காலைலேயே சொன்னேன். மாடு வந்துதான்னு தெரியல” என்று புலம்பிக்கொண்டே கொட்டகைப் பக்கம் வந்தார் செந்தாமரை. “புனிதா இருக்கற அறையில மூனு பொட்டப் புள்ளையும் ஒன்னுக்கு மண்ணா உக்காந்து அரட்டை அடிக்கறாளுங்க. ஒன்னா வளந்ததனாலதான் பாசம் விட்டுப் போவல”ன்னு மரகதம் மனசுல நினைச்சுகிட்டாள். “மரகதத்தோட கூட பொறந்த கொடிங்க ரெண்டு பேரு இருக்காங்க. எங்க, அறுப்பை வச்சிகிட்டு ஊர் ஊரா சொல்ல முடியல. அதான் பொண்ணு குடுத்த சம்பந்தியோட நிறுத்தியாச்சு”ன்னு மரகதம் வந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தாள். திடீரென மேகங்களெல்லாம் தரையிறங்கி வந்திடுச்சி. இந்திரன் குதிரையாட்டம் நாலு காலு பாய்ச்சல காளையும் கன்னும் வீட்டுக்கு ஓடியாற, பெரும் புழுதி மூட்டம் கிளம்பியது. அந்த மண்வாசம், ஆயிரம் ரோசா தோட்டம் இருந்தாலும் இந்த வாசத்துக்கு ஈடாகாது. அக்கம் பக்கத்து மக்களெல்லாம் சீவிமுடித்து சிங்காரித்து ஒவ்வொருத்தரா சேர ஆரம்பித்துவிட்டார்கள். பக்கத்து வீட்டு வள்ளியும் எதிர்த்த வீட்டு சக்குபாயும் சமையல்கட்டுக்குக் கூடமாட ஒத்தாசைக்கு வந்தார்கள். அந்த நேரம் பாத்து வாசல்ல “கடகட..கட”ன்னு அவுத்திமேட்டு மல உருண்டு வர்ற சத்தம் வாசலில். புனிதா மாமியார் வூட்டு சனங்க வந்தார்கள். “பட்டாட்டம் பொட்டி வண்டி, கட..கட.. கட்ட வண்டியோட சம்பந்தம் பேசியிருக்கே.. எங்க அடுக்கும் இந்த நியாயம்?”னு புலம்பினா பட்டம்மா. “த.. ஆத்தா புலம்பாம இரு, அவுங்க காதுல விழப்போவுது”ன்னு அதட்டினார் செந்தாமரை. வந்தவர்களை வாங்கன்னு கூப்பிட்டு, காபி தண்ணி கொடுத்தாள் மரகதம். ஏழாம் காப்பு செய்றதுக்கு, கூடத்தைச் சுத்தம் பண்ணி, கூடத்துக்கு நடுவுல பச்சரிசி மாவுல கோலம் போட்டா. சுத்தி பட்டை பட்டையா கோடு போட்ட ஜமுக்காளம் போட்டு வந்தவர்களை உட்கார வைத்தார்கள். அதற்குள் குப்புசாமி ரெட்டி, கண்ணு உடையாரு, கோவாலு நாய்க்கரு, பண்டாரம் எல்லாரும் வந்துட்டாங்க. வந்த ஆம்பளங்க ஒரு பக்கமாகவும் பொம்பளங்க ஒரு பக்கமாகவும் அடைஞ்சி உட்காந்தார்கள். மரகதம் மாமியாகாரி முகத்தைப் பார்த்தாள். “எலி மூஞ்சி என்ன வளையில தூக்கி வச்சிருக்கு?”ன்னு யோசிச்சவ, அவங்கள கேட்காம செய்யறம்னு கோபம் போலன்னு புரிஞ்சிகிட்டு, “அத்தை, அப்பறம் என்ன செய்யணும்னு சொல்லுங்க”ன்னு கேட்டாள். “என்னவோ சொன்ன கதையில, எலி ரவுக்க கேட்குதாம் சபையிலங்கற மாதிரி எங்கிட்ட எதுக்குடி கேட்கற? இவ்வளவு நேரம் நீதானே செய்த?”ன்னு வெடுக்குனு பேசினா மாமியார். “தெரியலன்னுதானே கேட்கறாங்க.. சொன்னா, சிலுக்கு சீமைக்குப் போய்டுமா?’ன்னு பதில் பாட்டு பாடிகிட்டே, அங்க ஒரு மணைப் பலகை போட்டு, அதும் மேல வெள்ளை வேட்டியைப் போட்டாள் மரகதம். மணைக்கு எதிரில் செங்கல்லு வச்சு அதுமேல சாணியில மூனு பிள்ளையார் பிடிச்சு வச்சு, அதுமேல அருகம்புல்ல வைடி”ன்னு மாமியாகாரி அதிகாரம் பண்ணினார்கள். பட்டம்மா சொன்னா மாதிரியே எல்லாம் பண்ணி, தோட்டத்துல இருந்து அடுக்குமல்லியைப் பறிச்சு அதை சரமா கட்டி, பிள்ளையாருக்கும் விளக்குக்கும் போட்டாள் மரகதம். ஒரு குட்டி மண் பல்லாவுல விளக்கெண்ணெயும், மூலிகைத் தழையும், வேப்பங்குச்சி, கருடக்கிழங்கு, இதெல்லாம் போட்டு கரியாக்கிய மையை வைத்தாள். இந்த மையை வச்சா பால் மணத்துக்கு காத்து கருப்பு அண்டாது. ஒரு பித்தள தட்டுல பால்மணி, கருப்பு மணி, வெள்ளருக்கம் வேரில் திரிச்ச அண்ணாக்கயிறு, அதே வேருல திரிச்ச காப்பு இதெல்லாம் வைத்திருந்தாள் மரகதம். குத்துவிளக்கும் காமாட்சி அம்மன் விளக்கும் ஏற்றி வைத்து, புனிதாவையும் குழந்தையையும் சீவி சிங்காரிச்சு அழைச்சிட்டு வந்து மணையில உக்கார வச்சாங்க. கற்பூரம் ஏற்றி பூசை பண்ணினாள் மரகதம். புனிதா மாமியாரைக் கூப்பிட்டு வெள்ளெருக்கங் காப்பு போடச் சொன்னாங்க. தட்டில் இருந்தது எல்லாவற்றையும் குழந்தைக்குப் போட்டார்கள். செந்தாமரையின் மூத்த மகள்கள், குழந்தை கையில் ஆளுக்குப் பத்து ரூபாய் கொடுத்தார்கள். “குழந்தைக்குப் பவுன்ல காப்பு போடலையா?”ன்னு கூட்டத்துல யாரோ கேட்டார்கள். உடனே செந்தாமரை ஓடிப்போய் பவுனு காப்பை எடுத்து வந்து புனிதா மாமனாரிடம் தந்தார். அவரும் குழந்தைக்குப் போட்டுவிட்டார். “குழந்தைக்கு என்னப்பா பேரு?”ன்னு குப்பு ரெட்டி கேட்க, “சுவாதி”ன்னு செந்தாமரை சொன்னாரு. “என்னது… என் பேத்திக்கு நீங்க பேரு வைக்கறதா…?”ன்னு புனிதாவின் மாமனார் கத்தினார். தொடரும். சாம்பவி சங்கர்