திருப்பூர் எனும் திருப்புமுனை – 20

திருப்பூர் எனும் திருப்புமுனை – 20

தொழிலாளர் மேம்பாடும் திறன் மேம்பாடும் கடந்த அத்தியாயத்தில் திருப்பூரின் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பார்த்தோம். இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பார்ப்போம். சிறு, குறு, நடுத்தரத் தொழில் என்றாலும் உள்நாட்டு உற்பத்தி, அதில் உள்ளாடைகள் உற்பத்தி மற்றும் இதர ஆடைகள் உற்பத்தி, ஏற்றுமதிக்கான உற்பத்தி என, பல்வேறு வகைகளில் இங்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வகை உற்பத்தியிலும் இயந்திரங்கள் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும் திறன் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் மாறுபடும் நிலை உள்ளது. உள்ளாடைகள் உற்பத்தியைப் பொறுத்தமட்டில் ஒரே சீரான வேலைவாய்ப்பும் ஒரே மாதிரியான ஆடைகளை உற்பத்தி செய்யும் முறையும் உள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி உற்பத்தியைப் பொறுத்த மட்டில் குறிப்பிட்ட வகை ஆடைகளை மட்டுமே தயாரிக்கும் நிறுவனங்கள் சீரான வாய்ப்புகளையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உற்பத்தி முறையையும் கையாள்வது நடைமுறையில் உள்ளது. மேலே குறிப்பிட்ட உற்பத்தி முறைகளைக கடந்து ஒவ்வொரு ஆர்டர்களும் வெவ்வேறு வகைகளில், வடிவங்களில் தயாரிக்க வேண்டிய சூழலைப் பல நிறுவனங்கள் சந்திக்கின்றன. அந்த நிலை தொழிலாளர்களின் திறனுக்கான சோதனையாகவும் அமைகிறது. அது மட்டுமல்ல. ஒரேவிதமான வேலையைச் செய்வது தொழிலாளர்களுக்கு ஒருவிதமான சலிப்புத் தன்மையை உருவாக்குவதால் ஒரே தொழிற்சாலையில் நீடிப்பது கேள்விக்குறியாகிறது. இதனால் உற்பத்தித் தடை, தரத்தில் குறை, கால தாமதம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன. ஒருபுறம் தொழில் வளர்ச்சியில் கவனத்தைச் செலுத்திய அளவுக்கு இதைப்போன்ற நுண் விடயங்களை நாம் தவறவிட்டதாகவே கருதுகிறேன். சிறிதும் பெரியதுமாக, அனைத்து உற்பத்தி நிலையிலும் ஏறத்தாழ 20000 தொழில் நிறுவனங்கள் உள்ளன. சுமார் ஆறு லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் இங்கு பணியாற்றினாலும் தொழிலாளர் சேம நல நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதித் திட்டங்களின் கீழ் இரண்டு லட்சத்திற்குக் குறைவானவர்களே பதிவு செய்துள்ளனர். இதுகுறித்துத் தொழிலாளர்கள் தரப்பில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது ஒருபுறம். மற்றொரு புறம், தங்களின் சிறிய பங்களிப்பைச் செலுத்துவதில் உள்ள மனத்தடையால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணிக்காலச் சலுகைகளை இழந்து வருகின்றனர். இந்த நிலையை மாற்ற அரசு, தொழில் முனைவோர் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இன்னும் இரு அவலங்களையும் இங்கே குறிப்பிட்ட விரும்புகிறேன். நாள் சம்பளம் என்பதைக் கடந்து பீஸ் ரேட், அதாவது எவ்வளவு ஆடைகளைத் தைக்கின்றார்களோ அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆடைக்குமான  கட்டணத்தை நிர்ணயம் செய்து, வார இறுதியில் தைத்த ஆடைகளுக்கு ஏற்ப சம்பளத்தைப் பெறுகின்றனர். இது குறுகிய காலத்தில் பெரும் பயனை அளித்தாலும் பல்வேறு உரிமைகள் மற்றும் சலுகைகளை இழப்பதோடு, தரம் மற்றும் தொடர்ந்து தொழிற்சாலைகளை மாற்றிச் செல்லும் போக்கு என ஆரோக்கியமற்ற சூழலுக்கு வழிவகுத்துள்ளது. பல சிறிய உற்பத்தி நிறுவனங்கள் இந்தப் போக்கினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி, தொழிலை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு அவலம், உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படும் தாமதங்களைச் சரி செய்ய, இறுதியாக ஆடைகள் தயாரிப்பை வேகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவர். இந்த அழுத்தம் மொத்தமும் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படுகிறது. தங்களது நிறுவனம் சிரமப்படக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தொழிலாளர்களும் கடுமையான உழைப்பினைக் கொடுத்து நிறுவனத்தின் சிரமத்தைக் குறைக்க உதவுவர். ஒருகட்டத்தில் இது ஒரு கலாச்சாரமாகவே மாறி, தொழிலாளர்கள் மத்தியில் ஒருவிதமான சலிப்புத் தன்மையை ஏற்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். எப்பொழுதுமே திருப்பூரைப் பொறுத்தமட்டில், ஆட்கள் பற்றாக்குறை என்பது நிரந்தரம். இதைப் பயன்படுத்தி அடிக்கடி தொழிலாளர்களும் தொழிற்சாலைகளை மாற்றும் போக்கும் ஆங்கங்கே நடக்கவே செய்கிறது. இது உற்பத்தி, தரம் மற்றும் கால தாமதத்தை ஏற்படுத்தி, தொழில் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் சூழலும் இருக்கவே செய்கிறது. இவற்றையெல்லாம் கள ஆய்வுக்கு உட்படுத்தி, தொழில் முனைவோர் தரப்பும் தொழிலாளர் தரப்பும் கலந்துரையாடி, நல்லதொரு வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவேண்டிய முக்கியத் தேவை உள்ளது. திறன் மேம்பாடு மற்றும் தொடர் பயிற்சிகள், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை சமீப வருடங்களில் ஏற்பட்டு, அதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. மத்திய மாநில அரசுகள் திறன் மற்றும் தர மேம்பாடு குறித்து மிகுந்த அக்கறை கொண்டு, அதற்கான திட்டங்களை வகுத்து, தொழிலுக்கு உதவுகின்றன. அதுமட்டுமல்ல; நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில், திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. அதனைச் சரியான முறையில் தொழில்துறையினர் பயன்படுத்தி, தங்களுக்கான தொழிலாளர்களை உருவாக்கிக் கொள்கின்றனரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. திருப்பூரைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கஜா புயல் சமயத்தில மீட்பு நடவடிக்கைக்காக சில நாட்கள் டெல்டா பகுதியில் பயணம் செய்தேன். அங்கே ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றித் தவிப்பதைக் காண நேர்ந்தது. குறிப்பாக, மீனவக் குடும்பத்துப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறவே இல்லை என்றே சொல்லலாம். அவர்களுக்கான வேலைவாய்ப்பினை அளிக்கும் வல்லமை ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிலுக்கு உள்ளது. ஏனெனில், அவர்களைப் புலம் பெயரச் செய்ய இயலாது. ஆனால், உற்பத்தித் தொழிற்சாலைகளை அங்கே அமைக்கலாம். நாளது தேதியில் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சிறந்த சாலை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதைப் பயன்படுத்தித் தொழிலாளர்களை தொழில் அமைந்துள்ள திருப்பூருக்கு வரவழைப்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் நிறைந்த பகுதிக்குத் தொழிற்சாலைகளைக் கொண்டு செல்வதன்மூலம் தொழிலை வளர்ப்பதோடு வேலைவாய்ப்புகளைப் பரவலாக மாநிலம் முழுவதும் ஏற்படுத்த இயலும். கொங்குப் பகுதியைப் பொறுத்தமட்டில், அதிக அளவு தொழில் வளர்ச்சியைக் கொண்ட மாவட்டங்கள் உள்ள பகுதி இது. இந்தியாவின் முன்னணி மாநிலமாக இருந்தும் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசில் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தாலும் மாவட்டங்களுக்கிடையே ரயில் போக்குவரத்தை மேம்படுத்தாமல் விட்டுவிட்டனர். ரயில் போக்குவரத்தை அதிகரித்தால் நிச்சயமாக இன்னும் பெருமளவு வேலைவாய்ப்பிற்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். ஆயத்த ஆடைத் துறையைப் பொறுத்தமட்டில் எந்த அளவு இயந்திரங்கள் அவசியமோ அந்த அளவுக்கு தொழிலாளர்களும் மிக அவசியம். அந்தவகையில் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல, உற்பத்திச் செலவில் பெரும்பகுதியைத் தொழிலார்களின் திறன் குறைவு காரணமாகச் செலவிடுவதைக் கருத்தில்கொண்டு, அதை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்லும். இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு குடும்பத்தில் இருவர் ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணியாற்றினால், குறைந்தது மாதம் இருபதாயிரத்திற்கும், கூடுதலாகப் பொருளீட்டலாம். முன்புபோல் இல்லாமல் தற்காலத்தில் தொழிற்சாலைகள் சர்வதேசத் தரத்தில் அமையப்பெற்றுள்ளன. சரியான அணுகுமுறையை மேற்கொள்வதான் மூலம் நிச்சயம் ஏரளமான தொழிலாளர்களை இந்தத் தொழிலுக்கு ஈர்க்க முடியும். மீண்டும் வரும் திங்களன்று வேறு சில தரவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை – 19

திருப்பூர் எனும் திருப்புமுனை – 19

தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அவர்களின் தேவைகளும் சுயம்புவாக உருவான திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வெற்றிக்குப் பின்னணியில் முக்கியக் காரணமாக இன்றளவும் விளங்குவது தொழிலாளர்களின் உழைப்பு. உலகில் வேறு எங்கும் காண இயலாத ஒரு வழக்கம், இங்குள்ள தொழிலாளர்கள் அனைவரும் பணிபுரியும் நிறுவனத்தைத் தங்களின் நிறுவனமாகக் கருதி உரிமையுடன் பணியாற்றும் காரணமே இங்குள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னணியில் உள்ள காரணங்களில் ஒன்று. இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்களின் வரலாற்றுப் பின்னணியில் நிச்சயம் அதன் உரிமையாளர்களும் பங்குதாரர்களும் ஏதேனும் ஒருவகையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து உழைப்பினால் முன்னேறி ஒரு நிறுவனத்தைக் கட்டமைத்து பல நூறு தொழிலாளிகளுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் நிலைக்கு உயர்ந்திருப்பதைக் காணலாம். தொழிலாளிகளைப் பொறுத்தமட்டில், மிக ஆரம்பக் காலகட்டங்களில் உள்ளூர்த் தொழிலாளர்களே தேவையான அளவு அனைத்து நிலை உற்பத்திகளிலும் பணியாற்றினர். ஒருகட்டத்தில் தொழில் அபரிதமாக வளர, வெளி மாவட்டத் தொழிலாளர்கள், குறிப்பாக தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலிருந்து புலம்பெயர்ந்து இங்கே பணிபுரியத் தொடங்கினர். பருவமழை பொய்த்துவிட்டது, வேளாண்மை சாத்தியம் இல்லை, வேலை இல்லை, குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் போன்ற பல்வேறு தேவைகளில் உள்ளவர்களின் புகலிடமாகத் திருப்பூர் திகழ்ந்தது, வந்தார் யாரையும் கைவிடாமல் அரவணைத்துக்கொண்டது திருப்பூர். இன்று இங்குள்ள பல முதலாளிகள் புலம்பெயர்ந்து, பிழைப்பிற்காகத் தொழிலாளியாக இங்கே வந்தவர்கள். ஒரு தலைமுறை தொழிலாளியாகப் பணியாற்றி, வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்தது. வாழ்வின் அடுத்த படிநிலை அவர்களை ஒரு தொழில் முனைவோர், அரசுப் பணியாளர், தனியார் நிறுவனங்களில் நிர்வாகி, அயல்நாட்டில் பணிபுரிவோர்  என முன்னேறிச் செல்ல, ஒருபுறம் ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியும் பிற மாவட்டத் தொழிலாளர்களைச் சொந்த மாவட்டத்தை நோக்கித் திரும்பச் செய்தது. ஏனெனில் திருப்பூரில் ஈட்டும் வருவாய் அவர்களின் ஊரில் ஈட்ட இயலாத காரணத்தால் இங்கு வந்ததும் தற்சமயம் அவர்களின் மாவட்டத்திலும் இதே அளவு வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் உருவானது ஒருபுறம்; மற்றொருபுறம் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவீனங்கள் திருப்பூரில் அதிகரித்தது போன்ற காரணங்களால் பல ஆயிரம் தொழிலாளர்கள் சொந்த மாவட்டத்தை நோக்கித் திரும்பினர். இந்த நிலையில் வட மாநிலத் தொழிலார்களின் வரவு அதிகரித்தது. ஆரம்பக் கட்டத்தில் வீடுகளுக்குப் பளிங்குக் கற்கள் பதிக்க, அவற்றிற்குப் பாலிஷ் செய்வதற்கான பணிகளுக்கு இங்கே வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், இங்குள்ள வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு, தங்களின் உற்றார், உறவினர், நண்பர்கள் என ஏரளாமானோரை இங்கு கொண்டுவந்து சேர்த்தனர். நாளது தேதியில், திருப்பூரின் தொழிலாளர்களில் 45 விழுக்காட்டுக்கும் அதிகமாக 19 வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு உற்பத்திப் படிநிலைகளில் பணியாற்றுகின்றனர். தொழிற்சங்கங்களைப் பொறுத்தமட்டில், பிரதான கட்சிகளின் 8 தொழிற்சங்கங்கள் வலுவாக இயங்குகின்றன. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சப்படிப் போராட்டம் என்றென்றும் திருப்பூரின் வரலாற்றில் அழியா இடம் பிடித்த ஒன்றாகும். 1990க்குப் பிறகு, தொழில்முனைவோர்கள் சங்கங்களின் சார்பில் ஒரு கூட்டமைப்பு, தொழிற்சங்கங்களின் சார்பில் ஒரு கூட்டமைப்பு, அரசாங்கம் என முத்தரப்பும் இணைந்து தொழிலார்களுக்கான சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்துப் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துகின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தை வாயிலாகப் புதுப்பிக்கப்படும். அந்தவகையில் கடந்த 30 ஆண்டு காலத்தில் சம்பளம் உள்ளிட்ட எந்தவொரு சலுகைகள் குறித்த சிறு சலசலப்போ போராட்டமோ இங்கு நடந்ததில்லை. அதற்குக் காரணம், தொழிற்சங்கங்களின் மனம் நிறைந்த ஒத்துழைப்பு மட்டுமல்ல; இந்தத் தொழிலுக்குச் சிக்கல் வந்தபோதெல்லாம் போராட்டக் களத்தில் முன் வரிசையில் நின்று நியாயம் பெற்றுத் தந்ததில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு அளப்பரியது. நாட்டிலேயே தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் சேம நல நிதிப் பங்களிப்பில் அதிகப் பங்களிக்கும் தொழில் நகரங்களில் திருப்பூரும் ஒன்று என்றாலும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இங்கு ESI மருத்துவமனையின் கட்டுமானம் நடைபெறுகிறது. தொழிலாளர்கள் அடர்ந்து காணப்படும் தொழில் நகரத்தில், தொடர்ந்து தொழில் வளர, மாதாந்திரச் செலவுகள் உயர்ந்துகொண்டே வருவதும் வருவாயின் பெரும் பகுதி அதற்கே செல்வதும் தற்சமயம் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதேசமயம், பெரும் நிறுவனங்கள் விடுதிகளை அமைத்து தொழிலார்களைத் தங்க வைத்துள்ளனர். ஒவ்வொரு மனிதனின் கனவு, வசிக்க ஒரு வீட்டை வாழ்நாளில் சொந்தமாகக் கட்டிவிட வேண்டும் என்பதே. அந்த வகையில், இங்குள்ள தொழிலாளர்களின் அந்தக் கனவினை நிறைவேற்ற, அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இன்று வரை அதற்கான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தொழிலாளர் பங்களிப்பு ஒரு பங்கு, பிரதமரின் வீட்டு வசதி மானியம் ஒரு பங்கு, மற்றவை எளிய தவணையில் கடனாக வங்கிகள் வாயிலாக அந்தத் தொழிலார்கள் பணிபுரியும் இங்குள்ள நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய, மாநில அரசு உரிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்தால் ஏரளமான குடும்பங்கள் பயன்பெறும். ஏனோ ஆட்சியாளர்கள் அது குறித்த சிந்தனையின்றி இருப்பது பெரும் ஏமாற்றமே. தொழிலாளர்களின் நிலையைப் பார்த்தோம். நாளது தேதியில் கள எதார்த்தம் என்ன? தொழிலார்களுக்கான சிக்கல் என்ன? அதைக் களையவேண்டிய திட்டங்கள் என்ன? வரும் வெள்ளியன்று விரிவாகக் காண்போம்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை – 18

திருப்பூர் எனும் திருப்புமுனை – 18

வங்கிகள் இணைப்பால் முடங்கும் தொழில் துறை கடந்த அத்தியாயத்தில் தொழில் முனைவோர்கள் தரப்பில் உள்ள தரவுகளைப் பார்த்தோம். இந்த அத்தியாயமும் அதையே பேசுகிறது. திருப்பூரைப் பொறுத்தமட்டில் இங்குள்ள நிறுவனங்கள் அனைத்துமே எல்லாவிதமான பின்னலாடைகளையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதே. அதுவே பலமும் பலவீனமும். ஏனெனில், தொழில் துவஙகிய காலத்தில் எல்லாவிதமான ஆடைகளை உற்பத்தி செய்கிறோம் என்கிற அடிப்படையில் இங்கே வாடிக்கையாளரக்ள் வரத் தொடங்கினர். ஒரு காலகட்டத்தில் பிரத்யோகமாக ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்தன. எல்லாவிதமான ஆடைகளையும் உற்பத்தி செய்த நிறுவனங்கள், நாளடைவில் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் தொழிலிருந்தே விலகின. ஆயத்த ஆடைகளைப் பொறுத்தமட்டில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் எனப் பிரிக்கப்பட்டு, அதில் விளையாட்டுக்கான உடைகள், சாதாரணப் பயன்பாட்டு (கேசுவல்) உடைகள், இரவு உடைகள் எனப் பிரிவுகளாக வகைப்படுத்துவர். குறிப்பிட்ட பாலினத்தில், குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள உற்பத்திகளை மேற்கொண்ட நிறுவனங்கள் படிப்படியாக வளர்ந்தன. இதற்கான காரணம், தொடர் பயிற்சி மற்றும் தொடர் தாகவமைப்பு மற்றும் புதிய நுட்பங்களைப் புகுத்துவது, சரியான தரம் மற்றும் குறித்த நேரத்தைக் கடைபிடிப்பதால் மேலும் மேலும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று அதிக அளவு வியாபார வாய்ப்புகளைப் பெறுகின்றனர். நிறுவனத்தில் நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் முதல் தொழிலாளர்கள் வரை சீரான நடைமுறைக்குத் தங்களை ஆட்படுத்திக்கொள்வது, நிறுவனத்தை வளரச் செய்கிறது. மேற்கொண்டு, நிலை இல்லாமல் எல்லாவிதமான ஆடைகளையும் தயாரிக்கும் நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதிய வகைகள், புதிய நுட்பங்கள், அதற்கான ஆய்வுகள், அதில் வரும் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைக் களைந்து, உற்பத்தியை முன்னெடுக்கும் நேரத்தில் ஆர்டர் கெடு தேதி கடந்துவிடுவதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழப்பதும் பொருளாதார இழப்பும்  ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் முதலீடுகள் காலியாகி நிறுவனம் மூடும் நிலைக்குச் செல்லும். நான் மேலே சொன்ன இரு நிலைகளை உணர்த்த பல நிறுவனங்கள், நாளது தேதியில், குறிப்பிட்ட பிரிவு உற்பத்தியை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. இந்த மாற்றமே பல்வேறு நிறுவனங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. இனி மற்றுமொரு சிக்கலையும் பார்ப்போம். பருத்தி ஆடை உற்பத்திக்கே பெயர் பெற்ற திருப்பூர், அந்த எல்லைக்குள்ளேயே தன்னை வரையறுத்துக் கொண்டது இன்று பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் செயற்கை நூலிழை ஆடைகளே பருத்தி ஆடைகளைக் காட்டிலும் அதிகஅளவில் விற்பனையாகக்கூடியது. இதை எதிர்பார்த்த சில நிறுவனங்கள், ஏற்கனவே அதற்கான கட்டமைப்பை உருவாக்கிக்கொண்டதால், நூல் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற காரணங்களால் எந்தப் பின்னடைவையும் சந்திக்காமல், தொடர்ந்து தொழிலில் வளர்ந்து வரும் நிலையை நாம் காணலாம். இனி வரும் காலங்களில், பருத்தி சார்ந்த ஆடை உற்பத்தியை மட்டுமே சார்ந்திராமல், ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது 25 முதல் 40 % வரை செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்கு மாறுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்ந்து, அதை நோக்கிப் பயணிக்க வேண்டும். திருப்பூரின் தொழில் பின்னடைவில் அடுத்த பிரச்சனையாகப் பார்ப்பது, நிதி மேலாண்மை. உற்பத்தி முதலீடே இல்லாமல் கடனுக்கு மூலப் பொருட்களைப் பெற்றே தொழிலை மேற்கொள்ளும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. நாளது தேதியில் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக அவ்வாறான நிலை மாறி, இன்றைய தேதியில் மொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தபட்சம் 70 % உற்பத்தி முதலீடு இருந்தால் மட்டுமே தொழிலை சிறப்பாக முன்னெடுக்க இயலும். இல்லையெனில் பல்வேறு தடைகள், தாமதங்கள் காரணமாகப் பலவேறு சிக்கல்கள் ஏற்பட்டுப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். நிதி மேலாண்மைக்கு இக்கட்டு ஏற்படும் வகையில், தற்சமயம் வங்கிகள் இணைப்பு, பேசேல்-3 அமலாக்கம் ஆகியவை, சிறு குறு நடுத்தர நிறுவனங்களை மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. கார்பொரேட் நிறுவனங்களுக்கான நடைமுறைகளை சிறு குறு நடுத்தர நிறுவனங்களையும் பின்பற்றச் செய்வதில் பல்வேறு சிக்கல்கல் ஏற்பட்டு, குறித்த நேரத்தில் கடன் உதவி பெற இயலாமல் வர்த்தக வாய்ப்புகளை இழக்கும் நிலை உள்ளது. ஏனெனில் வங்கிக் கிளைகளில் உள்ள அதிகாரிகளின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு, எங்கோ வேறு மாநிலத்தில் அமர்ந்திருக்கும் அதிகாரியின் ஒப்புதலைப் பெறவேண்டிய நிலை. அந்த அதிகாரிக்கு இங்குள்ள வியாபார அடிப்படை புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் விதிமுறைகளைப் பின்பற்றியே செயல்படுவார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், முறை சாரா இயக்கத்திற்குள்தான் வரும். ஒவ்வொரு தொழிலுக்கும் கட்டமைப்புகள், உற்பத்தித் திறன், கால அவகாசம் உள்ளிட்டவை மாறும். ஏனெனில், கிளை மேலாளரால் மட்டுமே அதைப் புரிந்துகொண்டு செயலாற்ற இயலும். தொழில் சிறப்பாக வளர்ந்ததும் இன்று பின்னடைவைச் சந்திப்பதற்கும் இது ஒரு காரணமாக அமைகிறது. நமது போட்டி நாடுகளைப் பொறுத்தமட்டில், ஆடை வடிவமைப்பை ஒவ்வொரு நிறுவனமும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. அதுமட்டுமல்ல; இறக்குமதியாளர்கள் பணி எளிமையாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட பல நூறு ஆடைகளிலிருந்து தேர்வு செய்து, சிறு மாற்றங்களுக்கு உட்படுத்தி, தங்களின் தேவைக்கு ஏற்ப ஆர்டர்களை வழங்குகின்றனர். இதனால் வர்த்தக வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தித் திட்டமிடல் சிறப்பாகச் செய்வதற்கு வழிவகை ஏற்பட்டு, தொழில் மேலும் வளர்கிறது. அந்த நிலையை நோக்கித் திருப்பூரும் பயணிக்கவேண்டும். அடுத்ததாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது. தொழிலாளர் மேலாண்மை. இது குறித்துத் தனி அத்தியாயமே எழுதவேண்டிய தேவை உள்ளது. அடுத்து வரும் அத்தியாயத்தில் அது குறித்துக் காண்போம். மீண்டும் திங்களன்று சந்திப்போம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 17

திருப்பூர் எனும் திருப்புமுனை – 17

தொழில் முனைவோராக எங்கு பெரிய அளவில் தவறுகிறோம்? திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் நிலவும் பல்வேறு சவால் நிலைகளைப் பல அத்தியங்களாகப் பார்த்து வந்தோம். போட்டி உற்பத்தி நாடாக விளங்கும் வங்கதேசச் சவால் குறித்துக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். வங்கதேசம், வியட்நாம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எவ்வாறு இந்தியாவைக் காட்டிலும் தொடர்ந்து ஜவுளித்துறையில் முன்னேறுகின்றனர், நாம் எங்கே பின்தங்கியுள்ளோம் என்பதை விரிவாகப் பார்ப்போம். வங்கதேசம், வியட்நாம் மற்றும் இலங்கையில் பஞ்சு விளைச்சல் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் அவர்களின் பருத்தி ஆடை ஏற்றுமதிக்கும் அவர்களின் பஞ்சு உற்பத்திக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. ஏற்கனவே சில அத்தியாயங்களில் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளேன். வியட்நாமைப் பொறுத்தமட்டில் இங்குள்ள 90% நிறுவனங்கள், சீனா, கொரியா, இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து  துணிகளை இறக்குமதி செய்து ஆடைகளைத் தயார் செய்து ஏற்றுமதி செய்கின்றனர். குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரும் நிறுவனங்கள் என, 5000க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள் அந்த நாடு முழுவதிலும் வியாபித்துள்ளன. இதில் 20% நிறுவனங்கள் நேரடி அந்நிய முதலீடு வகையைச் சார்ந்தவை. சீனா, கொரியா, இந்தியா மற்றும் ஜப்பானியர்கள் இந்தத் துறையில் இங்கு பெருமளவு முதலீடு செய்துள்ளனர். இது தவிர, அரசின் பொதுத்துறை என்ற அளவில், 50 பெரிய நிறுவனங்கள் வினா டெக்ஸ் என்ற பெயரின் கீழ் இயங்குகின்றன. வியட்நாமின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு 12%. கடந்த சில வருடங்களாகத் தனியார்த் துறை முதலீடுகள் அதிகரிக்கப்பட்டதால், இன்றளவில் அரசு, 26% பங்குகளை இந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அதிகபட்சம் 300  தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் முதலீட்டின் அடிப்படையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்படுகின்றன. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்களைப் பெற்ற தேதியிலிருந்து 90 நாட்களில் தயார் செய்து அனுப்புகின்றனர். நிரந்தரமான வழக்கத்தில் உள்ள ஆர்டர்கள் 45 நாட்களில் தயாரித்து அனுப்பப்படுகிறது. நிர்ண்யக்கப்பட்ட உற்பத்தித் திறன் இலக்கை, ஒவ்வொரு தொழில் நிறுவனமும் 90% எட்டுவது மிகவும் வியந்து கவனித்த ஒரு விஷயமாகும். MMR எனச் சொல்லக்கூடிய மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம், 1:1.25 என்ற அளவில் உள்ளதும் மிகச் சிறப்பான ஒன்றாகும். தொழிற்பேட்டைகளுக்கு அரசு செய்து கொடுத்துள்ள உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேசத் தரத்தில் உள்ளன.  வங்கதேசத்தைப் பொறுத்தமட்டில், கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. இங்குள்ள பெரிய தொழிற்சாலைகள் நூலை வாங்கி, அதை ஆடையாக ஏற்றுமதிக்கு அனுப்பும் அத்தனைப் படிநிலை உற்பத்திகளையும் ஒரே வளாகத்தினுள் செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் சீனா, தைவான், கொரியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து துணியாக இறக்குமதி செய்து ஆடைகளாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இயந்திரத் திறனில் 80% அளவு ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கும் மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம் 1:1.25  என்ற அளவில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.   இலங்கையிலும் இந்தியா, தைவான், கொரியா, சீனா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து துணிகளை இறக்குமதி செய்து ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெறுகிறது. இங்கும் தொழிற்சாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இயந்திரத் திறனில் 80% அளவு ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கும் மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம் 1:1.25  என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இந்தியச் சூழலைப் பார்ப்போம். குறிப்பாக, திருப்பூர் சூழல். இன்றும் 80% ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் நூலை வாங்கி ஒவ்வொரு உற்பத்திப் படிநிலைகளில் உள்ள துணை நிறுவனங்களிடம் கொடுத்து, துணியாக மாற்றி, ஆடை உற்பத்தியை மேற்கொள்கின்றனர். சுயம்புவாக உருவான தொழில் என்கிற நிலையில், இது சரியான முறை என்றாலும் காலத்திற்கேற்ற தகவமைப்பு மட்டுமே நம்மை வளரச் செய்யும் என்பதைச் சிந்திக்காமல் விட்டதன் விளைவு, இன்றைய பின்னடைவுக்கு ஒரு பெரும் காரணம் என்பதாகவே பார்க்கிறேன். திருப்பூரின் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இயந்திரத் திறனில் 40% அளவு மட்டுமே ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம் 2 என்கிற அளவில் உள்ளது. மேலே குறிப்பிட்ட மற்ற 3 நாடுகளின் தரவுகளோடு இதைப் பொருத்திப் பார்த்தால், பல்வேறு நிதர்சனங்களைப் புரிந்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு, 10000 சதுர அடி பரப்பு கொண்ட ஒரு தொழிற்சாலையில், அடிப்படை செலவுகளான வாடகை, பராமரிப்பு, நிர்வாக ஊழியர்கள், மின் கட்டணம் உள்ளிட்ட நிலையான செலவுகள் ஒன்றாகவே இருக்கும். ஆனால் அன்றாட உற்பத்தி என்பது திருப்பூர் ஆலைகளில் 40% என்கிற விகிதத்தில் எடுத்துக்கொண்டால், அடிப்படைச் செலவுகளை உற்பத்தி செய்த ஆடைகளுக்கு ஏற்பப் பிரித்தால், பெரும் தொகை வேறுபாட்டினைக் காணலாம். இது நமக்கான போட்டியை நாமே உருவாக்கிக்கொள்ளும் நிலையே. இந்த விடயங்களில் நாம் மிக அவசியமாகவும் போர்க்கால அடிப்படையிலும் செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் நூலை வாங்கித் துணிகளாக மாற்றுவதைக் காட்டிலும், துணியாக வாங்கும் முறைக்கு மாற வேண்டும். அதே நேரத்தில், படிநிலை உற்பத்தி நிறுவனங்கள் கூட்டாக இணைந்து துணி தயாரிக்கும் நிறுவனங்களாக மாற வேண்டும். அப்படி மாறும்பட்சத்தில் நிலையான உற்பத்தி, அதற்குரிய ஆர்டர்கள், செலவீனங்கள் குறைப்பு, துணிகளில் ஏற்படும் எடை மற்றும் தரக் குறைபாடுகள் பெருமளவில் குறையும். இது ஒரு புதிய மாற்றத்திற்கு மட்டுமல்ல, உற்பத்தியை அதிகரிப்பதுடன், தரம் மற்றும் கால அளவுகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இதன் வாயிலாக, உற்பத்தி நிறுவனங்கள் தடையின்றி இயங்கி, குறித்த நேரத்தில் ஆடைகளை ஏற்றுமதி செய்யும்பட்சத்தில், ஆர்டர்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, லாப விகிதங்களும் அதிகரிக்கும் என்பதே என்னளவிலான அவதானிப்பு. இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். மேலே கொடுக்கப்பட்டுள்ள வியட்நாமின் தரவுகள், 4 ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, மத்திய அரசின் தொழிலாளர் துறை, வர்த்தக துறை மற்றும் ஜவுளித்துறை உயர் அதிகாரிகளுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு அங்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிறுவனங்களைப் பார்வையிட்ட பின், அங்குள்ள அரசு அதிகாரிகள், நிறுவன மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் உரையாடியதில் சேகரித்த தரவுகளே. மேற்படித் தரவுகள் மூலம், திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழில் முனைவோராக நாம் எங்கு பெரிய அளவில் தவறுகிறோம் என்பதைக் குறித்து விவரித்துள்ளேன். அடுத்த பகுதியிலும் நாம் மேலும் எங்கு தவறுகிறோம் எனப் பார்ப்போம். வெள்ளியன்று சந்திப்போம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 16

திருப்பூர் எனும் திருப்புமுனை – 16

வங்கதேசச் சவால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து, தொடர்ந்து 15 அத்தியாயங்களாகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் வங்கதேச வடிவில் எழுந்துள்ள நெருக்கடியைக் காண்போம். 30 வருடங்களுக்கு முன் தையல் உற்பத்தி நிலையைத் தவிர்த்து, பெரும் உற்பத்தி அமைப்புகள் மிக மிகக் குறைவு. ஆனால் நாளது தேதியில் பஞ்சு இறக்குமதி செய்து ஆடைகளாக ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்தத் துறை அசாதாரணமாக வளர்ந்துள்ளது; தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. வளர்ச்சி குன்றிய தேசம் என்கிற அடிப்படையில் உலகளவில், 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவைப் பெருமளவு நம்பியே வங்கதேசத்தின் ஆயத்த ஆடை உற்பத்தியும் ஏற்றுமதியும் நிகழ்ந்தது. வளர்ந்த பொருளாதார வல்லரசுகளிடம் பெற்ற மற்றும் பெறும் சலுகைகள், தொடர் முயற்சி, மற்றும் அரசின் பரிபூரண ஆதரவுடன் நாளது தேதியில் உலகளவில் அந்த நாடு 3ஆம் இடத்தில உள்ளது. இந்தியா 5ஆம் இடத்தில் உள்ளது. அந்த வளர்ச்சி ஏன் தற்சமயம் இந்திய உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக திருப்பூருக்கு ஏன் அச்சறுத்தலாக உள்ளது என்பதைக் காண்போம். 2011ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, நட்பு நாடு, எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடு, நமக்கும் அவர்களுக்குமான வர்த்தகச் சமநிலை உள்ளிட்ட காரணங்களுக்காக 61 பொருட்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்கி வரியில்லா வர்த்தகச் சலுகையை அறிவித்தார். அதில் ஜவுளியும் ஒன்று. இங்குள்ள உற்பத்தியாளர்கள் இதன் பாதிப்பை உணர்ந்து அரசிடம் முறையிட, 2013ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் கவுண்ட்டர் வெய்லிங் டூட்டி, அதாவது எந்தவொரு நாட்டின் உற்பத்தி, இறக்குமதியால் பாதிப்பிற்கு உள்ளாகிறதோ அவர்கள் இறக்குமதிக்கான வரியை விதிக்கலாம் என்ற வகையில் வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் துணி மற்றும் ஆடைகளுக்கு 12 .6 % கவுண்ட்டர் வெய்லிங் டூட்டி விதிக்கப்பட்டது, இதன் காரணமாக இங்குள்ள உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமும் முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் பாதுகாக்கபட்டன. 2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக 12 .6 % கவுண்டர் வெய்லிங் டூட்டி விலக்கப்பட்டு செலுத்திய வரிகளைத் திரும்பப் பெறும் முறை பின்பற்றிய காரணத்தால் எவ்வித வரியும் இன்றி ஆயத்த ஆடைகளும் துணிகளும் வங்கதேசத்திலிருந்து பெருமளவு இந்தியாவிற்குள் இறக்குமதியாகத் தொடங்கியது. குரல் எழுப்பும் இடங்களிலெல்லாம் அரசிற்கு ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் இருப்பதாலும்,அதையும் கடந்து குரல் எழுப்பத் துணிந்தவர்களின் குரல் எட்டாமல் போனதன் காரணமாகவும் நாளது தேதியில் 8000 கோடி ரூபாய் அளவிற்கான ஜவுளி இங்கே இறக்குமதியாகிறது. பல்வேறு சில்லறை வர்த்தக அங்காடிகளுக்குச் சென்று பார்த்தால் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏரளமான ஆடைகளைக் காணலாம். வங்கதேசத்திலிருந்து தைக்கப்படாத துணிகளும் தொடர்ந்து இங்கு வரத் தொடங்கியுள்ளன. உள்ளூர் உற்பத்தியாளர்களைக் காட்டிலும் கிலோவிற்கு 40 ரூபாய் வரை விலை குறைவாக துணி விற்பனை செய்யப்படுகிறது. அரசுத் தரப்பில் இதுகுறித்து முறையிட்டால், பிற பொருட்கள் அங்கே நாம் ஏற்றுமதி செய்கிறோம்; அது பாதிப்பிற்கு உள்ளாகும் என்கிற பதிலே கிடைக்கிறது. இது ஏற்புடையதல்ல. 2013 முதல் 2017 வரை வேறு பொருட்கள் எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லையா என்கிற கேள்வியும் ஒரு பிள்ளையைக் காப்பாற்ற இன்னொரு பிள்ளையைப் பலி கொடுக்கும் செயலுக்கு ஒப்பானது. அதுமட்டுமல்ல. என்றுமே ஒரு பொருளின் மதிப்பைக் கூட்டும்போது வேலை வாய்ப்பு, பொருளாதாரச் சுழற்சி மற்றும் வரி வருவாய் அதிகமாக இருக்கும் என்பதே அடிப்படை. அந்த வகையில் நாம் சிந்திக்க வேண்டும். இங்கிருந்து செல்லும் பருத்தி, பஞ்சு, நூல் வாயிலாக உற்பத்தி செய்யும் ஆடைகளே இறக்குமதி செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. சீனா, தைவான், கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளிலும் அதிகளவு ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது. மறைமுகமாக சீனப் பொருட்களின் நுழைவு வாயிலாக வங்கதேசம் உள்ளது. திருப்பூரில் வர்த்தகம் மேற்கொள்ளும் உள்நாட்டு பிராண்டுகள், ஏறத்தாழ பாதியளவு உற்பத்தியை வங்கதேசத்திற்கு மாற்றிவிட்டனர். வரும் காலங்களில் இது இன்னும் உயரும் என்ற அச்சமும் உள்ளது.   ஏற்கனவே பல அத்தியங்களில் உற்பத்தி நிலைகள், அதில் உள்ள முதலீடுகள், வேலை வாய்ப்புகள் குறித்தெல்லாம் எழுதியுள்ளேன். உதாரணத்திற்கு, பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்யும் திருப்பூரின் சாய ஆலைகள் வங்கதேசத்தில் அப்படியான எந்த முற்றுப்பெற்ற அமைப்பும் இல்லாமல் செயல்படும் ஆலைகளுடன் போட்டி போடுகின்ற நிலையும் ஐரோப்பிய ஏற்றுமதியில் நேரடியாக 10 % விலை குறைத்தே போட்டிபோட வேண்டிய நிலை, மறைமுகமான நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் இங்குள்ள நிறுவனங்கள் திணறுகின்றன. உடனடியாக இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டும். குறைந்தபட்சம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சு மற்றும் நூலினால் தயாரான ஆடைகளை மட்டுமே வரி இல்லாமல் இறக்குமதி செய்யவும் மற்ற நாட்டுத் துணிகளின் ஆடைகளுக்குக் கடுமையான வரியையும் விதிக்கவேண்ண்டும். பஞ்ஜலா மற்றும் நூல் ஏற்றுமதி அளவிற்கான இறக்குமதியைக் கண்காணித்து அந்த அளவே ஆடைகள் இறக்குமதியாக அனுமதிக்க வேண்டும். செய்வதெல்லாம் சரி என்கிற பிம்பமும் கட்டமைப்பும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலே தவிர வேறொன்றும் இல்லை என்பதே நிதர்சனம். மீண்டும் திங்களன்று புதிய தரவுகளோடு சந்திப்போம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 15

திருப்பூர் எனும் திருப்புமுனை – 15

சாயத்தொழில் காப்பாற்றப்பட வேண்டும் திருப்பூர் எனும் திருப்புமுனை தொடரின் இந்தப் பகுதியில் வங்கதேசம் குறித்து எழுதுவதாகவே திட்டம். சாய ஆலைப் பிரச்சனை குறித்து மேலும் விவரமாக எழுதவேண்டும் என்று பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, மேலும் சில தரவுகளை இந்தப் பகுதியில் பதிவு செய்கிறேன். துணிகளுக்குச் சாயமிட வேதியியல், கனிமங்கள், உலோகங்கள், தாதுக்கள் உள்ளிட்ட கலவைகளுடன் கூடிய டைஸ் மற்றும் கெமிக்கல்ஸ் உபயோகப்படுத்தப்படும். தண்ணீர் அதிகம் தேவைப்படும் உற்பத்தி நிலை இது. துணிகளுக்குச் சாயம் ஏற்றிய பிறகு வெளியேற்றப்படும் கழிவு நீரில் நான் மேலே குறிப்பிட்ட வேதியியல், கனிமம், தாது, உலோகம் சார்ந்த பொருட்கள் இயற்கைக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை. உடனடியாகத் தீங்கு விளைவிக்காவிட்டாலும் நாளடைவில் விளைவுகள் மிகக் கடினமானதாகவே இருக்கும். இந்தக் கழிவு நீரின் காரணமாகவே நொய்யல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஒருகட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு, சாயத் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டது. பூஜ்ய முறை சுத்திகரிப்பு செயல்படுத்தப்பட்டு கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு ஆற்றில் விடுவது தடுக்கப்பட்டதோடு, தற்போது மறுசுழற்சி முறையில் தண்ணீர் சாயமேற்றப் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து முந்தைய பகுதியில் விவரித்துள்ளேன். 300 ஆலைகளுக்கு 18 பொதுச் சுத்திகரிப்பு அமைப்புகளும் 60 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் சிறப்பாக இயங்கிவருகின்றன. தற்போதைய பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள விடயம், சுத்திகரிப்பிற்குப் பின் எஞ்சும் ஸ்லட்ஜ் எனச் சொல்லப்படும் வேதியியல் எச்சங்களை, சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு இலவசமாகக் கொடுத்தாலும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு இல்லை என்பதே நிதர்சனம். உப்பைப் பிரித்து மீண்டும் உபயோகிக்கும் தொழில்நுட்பம் சோதனை முறையில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்தக் கழிவுகளைக் கடலுக்கு அருகில் எடுத்துச்சென்று மீண்டும் அதைக் கரைத்துக் கடலில் விடுவதற்கான ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சிகளையெல்லாம் இங்குள்ள தொழில்முனைவோர்களும் சாய ஆலைகள் சங்கமும் மட்டுமே முன்னெடுக்கின்றன. பொதுவாக, ஒரு நிறுவனம் தொடங்கி, அதை நடத்தி, தொடர்ந்து மேம்படுத்தி, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அந்த நிறுவனத்தைக் கொண்டுசெல்வதே ஒவ்வொரு தொழில் முனைவோரின் பணி. ஆனால் சாய ஆலைத் தொழில் முனைவோர்களைப் பொறுத்தமட்டில் கடந்த பல வருடங்களாகவே சுத்திகரிப்பு குறித்த விடயத்திலேயே தங்களின் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவதும் இதனால் தொழில் மேம்பாடு குறித்துச் சிந்திக்கவே நேரமற்று இருப்பதும் வேதனைக்குரிய விடயம். இந்த இடத்தில்தான் அரசின் ஆதரவு பெருமளவில் தேவைப்படுகிறது. அரசு மிகப்பெரிய அதிகார பலம் மற்றும் கட்டமைப்பைக் கொண்டது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களால் இதுபோன்ற பிரச்சனைக்கான தீர்வினைப் பெற்றுத்தர இயலும். ஆனால் அப்படி எந்தவொரு முயற்சியும் அரசுகள் எடுத்ததாக நான் அறியவில்லை. வட்டி இல்லாக் கடனும் மானியமும் மட்டுமே தொழிலைக் காப்பாற்றிவிடும் என்கிற அரசின் எண்ணம் தவறானது. ஏனெனில், தொழில் அமைவதற்கு மட்டுமல்ல; அது தொடர்ந்து சிக்கல் இல்லாமல் செயல்படுவதற்கும் அரசுகளின் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும். சுத்திகரிப்பிற்கான செலவில் 45 % மின் கட்டணத்திற்கே செலவாகிறது. அதிலும் தற்போது மாநில அரசு உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வு, தொழிலைக் கடுமையாக பாதித்துள்ளது. அது மட்டுமல்ல; பூஜ்ய நிலை சுத்திகரிப்புடன் இயங்கும் ஆலைகளில் சாயமிடும் கட்டணம் அதிகம். அதே நேரத்தில் எவ்வித சுத்திகரிப்பு அமைப்புகளும் இல்லாமல், பிற மாவட்டங்களில் இயங்கும் முறையற்ற சாய ஆலைகளும் குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் பிற மாநில சாய ஆலைகளும் சுத்திகரிப்புக் கட்டணமின்றி சாயமேற்றுவதால் இங்குள்ள தொழிற்சாலைகள் கடும் பாதிப்பினைச் சந்திக்கின்றன. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களும் விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று முறையற்று இயங்கும் தொழிற்சாலைகளைத் தேடிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். கடும் போராட்டத்திற்கிடையே இயற்கையை பாதிக்காத வண்ணம் பெரும் நெருக்கடியில் உள்ள முறையாக பூஜ்ய முறை சுத்திகரிப்பினைக் கடைபிடிக்கும் ஆலைகளுக்கே வர்த்தக வாய்ப்புகளை வழங்க வேண்டும். பூஜ்ய முறை சுத்திகரிப்பு ஆலைகள் பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களாக இயங்குகின்றன. அவை தொடர்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையெனில் பராமரிப்புச் செலவு கடுமையாக உயரும். அரசு உடனடியாகச் செய்யவேண்டியது, பொதுச் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான மின் கட்டணத்தில் சலுகை அளிப்பதும் (இது தற்காலிகத் தீர்வு மட்டுமே) சூரிய ஒளி மற்றும் காற்றாலை அமைக்க நிலம், மானியம் மற்றும் வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். சூழலியல் சார்ந்த உற்பத்தி மட்டுமே அடுத்து வரும் 10 ஆண்டுகளில் சாத்தியம். தமிழ்நாடு அதற்கு முன்னோடி மாநிலமாக உலகளவில் அறியப்படவேண்டும். திருப்பூர் சாய ஆலைக் கழிவினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரத்துப்பாளையம், நாளது தேதியில் பல்வேறு முயற்சிக்குப் பிறகு நல்ல நிலையை எட்டியுள்ளது. மேற்கொண்டு இந்தப் பகுதியில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம். அடுத்து வரும் சில ஆண்டுகளில் இந்தப் பகுதி ஒரு சுற்றுலாத் தளமாகவே அறியப்படும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், நொய்யலில் சாயக் கழிவுநீர் மட்டுமா செல்கிறது என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது. கோவையிலிருந்து புறப்படும் நொய்யல், காவேரியில் கலக்கும் வரை வழிநெடுக உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெளியேற்றும் அனைத்துக் கழிவுநீரும் நொய்யலில் கலக்கிறது. எனவே, அணைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உடனடியாகக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தவேண்டும். மேலும் இறைச்சி, மருத்துவம், கட்டடடக் கழிவுகளும் அதிகளவு நொய்யலில் கொட்டப்படுகின்றன. இதனைத் தடுக்கக் கடுமையான கண்காணிப்பும் அதிகபட்சத் தண்டனையும் அளிக்கும் சட்டங்களை அமல்படுத்தவேண்டும். இல்லையெனில் தொடர்ந்து நொய்யலின் சீர்கேட்டிற்குத் திருப்பூரை மட்டுமே அடையாளப்படுத்தும் செயல்கள் நடந்தேறும். அரசு, சாய ஆலை அதிபர்கள், உற்பத்தியாளர்கள் தொடர்ந்து உரையாடலை மேற்கொண்டு, சாய ஆலைகள் எவ்விதச் சிரமமுமின்றி இயங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரே ஒரு தரவைச் சொல்லி நிறைவு செய்கிறேன். கடந்த 7 -8 ஆண்டுகளில் சாயத் தொழிலில் முதலீடுகள் செய்யப்படுவது மிகச் சொற்பமே. காரணம், கடந்த இரண்டு அத்தியங்களிலும் குறிப்பிட்டதே. பின்னலாடைத் தொழிலின் பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகவே உள்ளது. இதை களையும் நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படவேண்டும். விலைப் போட்டியில்தான் நாம் பெரும்பாலும் பின்தங்குகிறோம். தற்போதைய சாயமிடுவதற்கான செலவினங்கள் குறைக்கப்பட்டு, தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, பூஜ்ய முறை சுத்திகரிப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்களின் முழுக் கொளளவிற்கு இயங்கினால் மட்டுமே சாயத்தொழில் மேம்படும். அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து இயங்கும் இந்த அமைப்புகளுக்கு சர்வேதேச அங்கீகாரம் பெற்றுத்தர அரசு முன்வரவேண்டும். உலகிலேயே பூஜ்ஜிய முறை சுத்திகரிப்பு திருப்பூரில் மட்டுமே உள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள சாயத் தொழிற்சாலைகளிலும் பூஜ்ய முறை அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு கடுமையாக உத்தரவிடவேண்டும். இதில் தொழிலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலச் சந்ததிகளுக்கு வாழத்தகுந்த பூமியை விட்டுச் செல்லும் நோக்கமும் உள்ளது. உரிய நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் குறைவான கட்டணத்தில் உற்பத்தியாளர்களுக்குச் சேவைகளை வழங்க இயலும் என்பதே நிதர்சனம்.   வங்கதேசத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அடுத்த அத்தியாயத்தில் விரிவாகக் காண்போம்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை -14

திருப்பூர் எனும் திருப்புமுனை -14

சவால்கள் நிறைந்த சாய ஆலை உற்பத்தி நிலை திருப்பூர் எனும் திருப்புமுனை தொடரின் இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளின் ஆதரவு மற்றும் ஆதரவற்ற நிலைகள் குறித்துப் பார்க்கலாம். சாய ஆலைப் பிரச்சனை, திருப்பூரின் பின்னலாடைத் தொழிலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. நொய்யல் என்னும் ஜீவ நதி பாழ்பட்டதோடு தொழிலும் ஒரு கட்டத்தில் ஸ்தம்பித்தது. நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளதைப்போல, எந்தவிதத் தொழில்நுட்பப் பின்புலன்களோ முறையான செயல்திட்டங்களோ இல்லாமல், சுயம்புவாக உருவாகி வளர்ந்த தொழில் திருப்பூரின் பின்னலாடை உற்பத்தித் தொழில். சாயக்கழிவுகளால் நிலத்தடி நீரும் ஆற்று நீரும் பாதிப்படைந்துள்ளதை அறிந்து கழிவு நீர் சுத்திகரிப்பு குறித்துப் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் அரசின் ஆதரவு என்பது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம். நிலத்தில் விழும் நீர் சுத்திகரிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதைத் தவிர எங்களுக்கு மேற்கொண்டு எதுவும் தெரியாது என்பதே அரசின் நிலைப்பாடு.  25 வருடங்களுக்கு முன், பெரும் படிப்பறிவில்லாத தொழில் சமூகமாக மாறிய வேளாண் சமூகம், தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இருப்பினும் 2011ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அனைத்து சாய ஆலைகளையும் மூட உத்தரவிட்டது. உள்ளபடியே இன்றுவரை, பின்னலாடைத் தொழில்துறையைப் பொதுச் சமூகத்தினர் ஒரு உவர்ப்பான மனநிலையிலேயே பார்க்கின்றனர். அணைக்கட்டுத் தண்ணீரைப் பாசனத்திற்குத் திறக்கவேண்டும் என்கிற போராட்டம் பற்றியே கேள்விப்பட்டுள்ள நிலையில், ஒரு வேளாண் சமூகம் அணையைத் திறக்கக் கூடாது என்கிற போராட்டத்தை முன்னெடுத்தது உலக வரலாற்றிலேயே இங்குதான் நிகழ்ந்தது என்பது கடும் வேதனைக்குரிய விடயம். 720 சாய ஆலைகள் ஒரே நாளில் மூடப்பட்டன. ஆடை உற்பத்தியின் மிக முக்கிய நிலைகளின் ஒன்றான சாயம் ஏற்றுதல் நிறுத்தப்பட, தொழில் நடத்துவது கேள்விக்குறியாக மாறியது. இருப்பினும் அந்தச் சமயத்தில் பல்வேறு முயற்சிகளை சாய ஆலை அதிபர்கள் முன்னெடுத்திருந்த காரணத்தால், குறுகிய காலத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கத் தொடங்க, சிறிது சிறிதாக உற்பத்தியும் மீண்டும் தொடங்கியது. நீதிமன்றத்தின் கடும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியே ஆலைகள் இயங்கத் தொடங்கின. ஆலைகளை இயக்குவதற்கு சாய ஆலை அதிபர்கள் பட்ட சிரமங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இரு அரசுகளின் பாராமுகம், வங்கிகளின் கடன் உதவி, கடைசிக் குன்றிமணித் தங்கம் வரை அடமானம் வைத்தோ விற்றோதான் ஆலைகளை இயக்கினர். நீண்ட முறையிடலுக்குப் பிறகு, இரு அரசுகளும் மானியங்களை அளித்தன.  இருப்பினும் 720 ஆலைகள் இயங்கிய நிலை மாறி 450 ஆலைகளே தற்போது இயக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும் 13 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் மீண்டும் உபயோகப்படுத்தப்படுவதால் நிலத்தடி நீர் எடுப்பது தடுக்கப்பட்டதுடன், மீதமுள்ள கழிவு நீரும் சுத்திகரிக்கப்பட்டு, தெளிவான நீர் மட்டுமே ஆற்றில் விடப்படுகிறது. இதற்குச் சான்றாக, கடந்த 4 ஆண்டுகளாகப் பாசனத்திற்கு அணை திறக்கப்படும் அந்த நற்செய்தியை இங்கு பதிவு செய்ய விழைகிறேன். எந்தவொரு பிரச்சனைக்கும் நீண்டகாலத் தீர்வும் குறுகிய காலத் தீர்வும் இருக்கவேண்டும். குறிப்பாக தொழில் சார்ந்த விடயங்களில் தொலைநோக்குப் பார்வை மிகவும் அவசியம். அதற்கான அடிப்படைத் தரவுகள், அதுகுறித்த ஆய்வுகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க அரசுகளால் மட்டுமே இயலும். அந்த வகையில் சூழலியல் மற்றும் தொழில் வளர்ச்சியை இணைத்து சாய ஆலைப் பிரச்சனையை அணுகியிருக்க வேண்டும். ஆனால், 400 கோடி ரூபாய் மானியத்துடன் ஏறத்தாழ 1000 கோடி ரூபாயை இங்குள்ள தொழில் முனைவோர்கள் முதலீடு செய்து, கடும் நெருக்கடியில் தொழிலை முன்னெடுக்கும் நிலையே நீடிக்கிறது. வேளாண் துறையும் சிறக்க வேண்டும்; அதே சமயம் தொழில்துறையும் வளரவேண்டும் என்கின்ற பார்வையில் கடலுக்கு அருகே சாய ஆலைகளைக் கொண்டு செல்லும் நீண்டகாலப் பயனளிக்கும் திட்டத்தை நல்ல மானியத்துடன் செயல்படுத்தியிருக்க வேண்டும். உதாரணத்திற்கு, நாங்குநேரி தொழிற்பூங்காவில் சாய ஆலைகளுக்கான இடத்தை ஒதுக்கி பொதுச் சுத்திகரிப்பு நிலையம், அனல், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் போன்ற பொது அமைப்புகளை உருவாக்கி, சாய ஆலைகளை அமைத்திருந்தால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் கொண்டு விட்டிருக்கலாம்.   பின்னலாடைத் தொழிலுக்குத் தற்போது பெரும் சவாலாக இருப்பது சாய ஆலைச் செலவினங்கள். மேலும் பெரும் முதலீடு தேவைப்படுவதாலும் முதலீட்டுக்கு ஏற்ற லாபம் கிடைப்பதில்லை என்பதாலும் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதிலும் தயக்கம் நிலவுகிறது. அதேசமயம் மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கே செலவுகள் அதிகமே. ஏனெனில் சுத்திகரிப்புப் பணிகளுக்கான கட்டணம் பெரும் பங்கினை எடுத்துக்கொள்கிறது. நான் மேலே குறிப்பிட்ட மாற்றம் நிகழ்ந்திருந்தால், சூழலியல் பாதுகாப்புடன் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவைகளைப் பெற்றிருக்கலாம். ஆடை உற்பத்தித் தொழிலும் மேலும் பல படிநிலை வளர்ச்சியை நோக்கிப் பயணித்திருக்கும். நாளது தேதியில் மேலும் பல முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகி, இன்று விவாதித்து வரும் செயற்கை நூலிழை உற்பத்தி போன்றவை என்றோ பெருமளவில் சாத்தியப்பட்டிருக்கும். இந்த விடயத்தில் நான் அரசை மட்டும் குறை கூற மாட்டேன். தொழில்துறையில் ஒரு கருத்தொற்றுமை உருவாகவில்லை அல்லது உருவாக்கத் தவறிவிட்டடோம். தற்போது அமையப்பெற்றிருக்கும் சாலை வசதிகளும் தொழில்நுட்பங்களும் தொலைத் தொடர்பு வசதிகளும் தொழிலை எளிதாக நடத்தும் சூழலை உருவாக்கியிருக்கும். ஏற்கனவே ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல, துணி உற்பத்தி ஆலைகள் உருவாகியிருக்கும். இது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். தவறவிட்டதைக் கைக்கொள்ளும் வாய்ப்பு தற்போது விருதுநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பாரதப் பிரதமர் ஜவுளிப் பூங்காவில் கிடைத்துள்ளது. சரியான திட்டமிடலுடன் உரிய மானிய உதவி மற்றும் கட்டமைப்பு உதவிகளை அரசு வழங்குமானால், சூழலியல் சார்ந்த உற்பத்தி சாத்தியப்படும். பொதுவாக ஆள்வோரின் பார்வை, அரசியல் கணக்குகள், குறிப்பாக வாக்கு வங்கி உள்ளிட்ட வரையறைக்குள்ளே நிற்கும். அதையும் தாண்டிச் சிந்திக்கும் ஆட்சியாளர்களால் பல விடயங்கள் சாத்தியப்பட்டன. எத்தனைத் தொகுதி பயன் பெறும் அல்லது பாதிக்கப்படும்? அது நமக்கான ஆதரவுப் பகுதியா? எந்தச் சமூகம் பெரும்பான்மையாக உள்ளது? போன்ற விடயங்களே பல்வேறு பின்னடைவிற்குக் காரணமாகின்றன என்று கருதுகிறேன். அரசியல் கணக்குகளைப் புறந்தள்ளி, நீண்ட காலத் தொழில் நன்மை கருதிச் சிந்திக்கவும் முடிவுகள் எடுக்கவும் ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும். இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் செல்போன், கார் உற்பத்திக்கு ஈடாக ஆயத்த ஆடைத் தயாரிப்பு உள்ளது. ஆனால் ஒரு செல்போன் நிறுவனத்துக்கு அல்லது ஒரு கார் தொழிற்சாலைக்கு உள்ள நிதி ஆதாரங்களோ கட்டமைப்புகளோ ஆயத்த ஆடைத் தொழிலுக்கு இருக்க இயலாது. ஏனெனில் இது சிறு, குறு, நடுத்தரப் பிரிவில் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழிலாக உள்ளது. அதைக் கருத்தில்கொண்டுதான் அரசு செயல்பட வேண்டும். கார் மற்றும் செல்போன் தொழிலோடு இதை ஒப்பிடுவது கூடாது. இந்தியா போன்ற அடர்ந்த மக்கள்தொகை கொண்ட நாட்டில், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களும் தொழில்துறைக்கான அரசின் உதவிகளும் தொடர்ந்து சீராக வழங்கப்பட்டால் மட்டுமே தொழில் எழுச்சி பெறும். இல்லையெனில் எந்தவொரு தொழிலும் பின்னடைவையும் ஒருகட்டத்தில் தொழிலே அழியும் சூழலும் ஏற்படும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, வங்கதேசத்திலிருந்து ஆடைகள் மட்டுமல்ல; பின்னலாடைத் துணிகள் திருப்பூரை நோக்கி அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இது சாய ஆலைகளுக்கு மேலும் நெருக்கடியைத் தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடும் சிரமத்தில் தொழிலை முன்னெடுத்துவரும் சாய ஆலைச் சமூகம் மேலும் சிரமத்தை எதிர்கொள்ளவேண்டும். அடுத்த அத்தியாயத்தில் வங்கதேசச் சவால் குறித்துக் காண்போம். மீண்டும் திங்களன்று புதிய தரவுகளோடு சந்திக்கிறேன்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை – 13

திருப்பூர் எனும் திருப்புமுனை – 13

மெத்தனப் போக்கில் மத்திய மாநில அரசுகள் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை உள்ளடக்கியது. பல்லடம் தாலூகாவின் கீழ் ஒரு கிராமமாக அறியப்பட்ட திருப்பூர், நாளது தேதியில் ஒரு மாவட்டத்தின் தலைநகராக, மாநகராட்சியாக உயர்ந்துள்ளதென்றால் அதற்கான முக்கியக் காரணம் பின்னலாடைத் தொழில் வளர்ச்சி. மாநில அரசிற்கும் சரி, மத்திய அரசிற்கும் சரி, வரி வருவாயினை ஈட்டித் தரும் முதன்மை மாவட்டங்களில் ஒன்று திருப்பூர். கூடுதலாக, அந்நியச் செலாவணியைக் கணிசமாக ஈட்டித் தருவதிலும் திருப்பூர் முன்னணி வகித்தது. கடந்த காலத்தில் பெருகிய மென்பொருள், மின்ணனுக் கருவிகள் உள்ளிட்ட ஏற்றுமதியின் காரணமாக, பிற மாவட்டங்களும் அந்நியச் செலாவணி ஈட்டுதலில் தற்போது திருப்பூரைக் காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருப்பூரின் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் நாம் காணலாம். மாநில அரசைப் பொறுத்தமட்டில், திருப்பூரின் உள்கட்டமைப்பு வசதிக்கு உரிய முக்கியத்துவத்தைத் தேவையான காலகட்டத்தில் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும். ஒருபுறம் தொழிற்சாலைப் பெருக்கம், மறுபுறம் குடியேற்றங்கள் என்று அசுர வளர்ச்சியில் பயணித்த காலகட்டத்தில், முறைப்படுத்தவேண்டிய பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு செய்யத் தவறிவிட்டது. மத்திய அரசுக்குத்தானே அந்நியச் செலவாணி செல்கிறது என்கிற எண்ணமும் இதற்கு ஒரு காரணம். மத்திய அரசு திருப்பூரின் ஏற்றுமதி வளர்ச்சியைக் கருதி அளித்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியினை, மத்திய அரசிற்குப் பெயர் சென்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில், ஒதுக்கப்பட்ட நிதியைத் திருப்பி அனுப்பிய வரலாறு உண்டு. சில வருடங்களுக்கு முன், வட இந்தியாவிலிருந்து பிரபலமான ஆங்கில மாத இதழின் நிருபர் ஒருவர் திருப்பூரைப் பற்றிய கட்டுரை ஒன்றுக்காகத் திருப்பூர் வந்திருந்தார். திருப்பூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவர் சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது. “திருப்பூர் நகரம் மிகுந்த நெருக்கடிகளைக் கொண்ட அசுத்தமான நகரம்; புழுதி நிறைந்த சாலைகள், சாக்கடை ஓடும் தெருக்கள் என்றே என்னளவில் நண்பர்கள் வாயிலாக அறிந்திருதேன். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல், சராசரி இந்திய நகரத்தைக் காட்டிலும் நன்றாகவே உள்ளது” எனக் குறிப்பிட்டார். உள்ளபடியே வருத்தமாக இருந்தது. ஏனெனில் இந்தியாவுடன், குறிப்பாக திருப்பூருடன் வர்த்தகம் செய்யாத பல இறக்குமதியாளர்கள் எண்ணம் இப்படியாக இருப்பதே. இரு மாதங்களுக்கு முன் தூத்துக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்த ஊரைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி, தங்களுடைய கொரியா வாடிக்கையாளர் பூஜ்ய முறை சுத்திகரிப்பு உள்ள உற்பத்தி நிலைகளில் தங்களின் ஆடைகளைத் தயாரிக்க விரும்புகிறார். இந்தியாவில் அந்த வசதி எங்கு உள்ளது எனக் கேட்டார். கடந்த 10 வருடங்களுக்கு மேல், சுமார் 1000 கோடி ரூபாய் செலவிட்டு பூஜ்ய முறை சுத்திகரிப்பில் உலகளவில் எங்குமே இல்லாத அளவு இயங்கிவரும் கட்டமைப்பினைப் பற்றி 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒருவருக்குத் தெரியவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளித்தது. மத்திய அரசு, மாநில அரசு என இரு தரப்புமே, சுயம்புவாக உருவாகி, இன்று 10 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பினை அளிக்கும் ஒரு குழுசார் உற்பத்தி அமைப்பினைப் பற்றி உலகளவில் பேசுபொருளாக்கத் தவறிவிட்டனே என்றே கருதுகிறேன். வங்கதேசத்தின் அசுர வளர்ச்சியின் பின்னணியில், அந்த நாட்டைப் பற்றி அந்த அரசாங்கம் உலகளவில் தொழிலை ஈர்க்கும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்றதே பிரதான காரணங்களில் ஒன்றாக உள்ளது. நம் மாநில அரசைப் பொறுத்தமட்டில், தற்போது நடக்கின்ற ஆட்சியில்தான் ஜவுளித்துறை அமைச்சகம் இரு பிரிவுகளாக பிரித்து இயங்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், ஜவுளித்துறை மட்டுமே வேண்டிய உதவிகளைச் செய்ய இயலாது. தொழில்துறை மற்றும் நிதித் துறையும் இணைந்து ஜவுளித்துறையின் பரிந்துரைகளை ஏற்கவேண்டும். ஆனால் அப்படியான ஒரு இசைவு குறைவாகவே உள்ளது. இதைத் தவிர, அதிகாரிகள் மட்டத்தில் மாநிலத்தில் உள்ள பிரதான மற்றும் முதன்மைச் சங்கங்களின் கருத்துகளுக்கு மட்டுமே பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், சிறு உற்பத்தியாளர்களின் குரல் அவர்களுக்கு எட்டுவதில்லை. மத்திய அரசைப் பொறுத்தமட்டில், எதுவுமே செய்யவில்லை எனச் சொல்ல இயலாது. இங்குள்ள தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசாங்கம் வழங்கியதே காரணம். அதேசமயம் வளர்ச்சியைத் தேங்கச் செய்ததற்கும் மத்திய அரசே பொறுப்பாகும். சிறு குறு நடுத்தரத் தொழில்களின் மீது கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள் தொழில்முனைவில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்றே. நாடு முழுவதும் தொடர்ந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டு வரும் வருத்தமான செய்திகளைக் கடந்தே நாம் பயணிக்கிறோம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வரிச் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் கிஞ்சித்தும் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை முறைசாராத் தொழில்களைக் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கின. ஆயத்த ஆடைத் தொழிலும் அதில் விதிவிலக்கல்ல. பல்வேறு முறையீடுகள், பல்வேறு மனுக்கள் எனத் தொடர் கவன ஈர்ப்பிற்குப் பிறகு, ஏறத்தாழ இரண்டாண்டுகள் கடந்த பிறகே நிலைமை சீரானது என்றாலும் அந்த இரண்டாண்டில் ஏரளமான நிறுவனங்கள் தொழிலை விட்டு வெளியேறின. வங்க தேசத்திற்கு அளித்த வரியில்லா வர்த்தகச் சலுகை, பெரும் தலைவலியாகத் தற்போது உருவெடுத்துள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வங்கி சீர்திருத்த நடைமுறைகள் மற்றும் வங்கிகளை ஒன்றிணைத்தல், இவை இரண்டும் தொழிலுக்குக் கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ் (Ease of doing business) என்று குறிப்பிடுவதற்கும் நடைமுறைக்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை என்பதே நிதர்சனம். முன்னைக் காட்டிலும் கடுமையான விதிகள், நடைமுறை மாற்றங்கள் ஆகியவற்றால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதில் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றன. வங்கதேசச் சிக்கல், வங்கி நடைமுறைச் சிக்கல் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் மத்திய மாநில அரசுகள் செய்துகொடுக்கவேண்டிய தேவைகள் குறித்தும் அடுத்து வரும் அத்தியாயங்களில் விவாதிப்போம். முக்கியமான ஒன்றை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அரசுகள் குறித்து எழுதும்போது, எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல், ஒரு தொழில்முனைவோனின் பார்வையில் மட்டுமே இவற்றை எழுதுகிறேன். வாசிப்பவர்கள் நினைவில்கொள்ள வேண்டியது, நீங்கள் எந்தச் சார்பாக இருந்தாலும் உங்களுக்குமான குரலாகவே இதை எழுதுகிறேன் என்பதை அன்புடன் குறிப்பிட விரும்புகிறேன். மாற்றுக் கருத்து இருப்பின் பதிவிடுங்கள். என் கருத்தில் பிழை இருப்பின் திருத்திக்கொள்கிறேன்; இல்லையெனில் உரிய விளக்கத்தை அளிக்கிறேன்.   வெள்ளியன்று மீண்டும் சந்திப்போம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 12

திருப்பூர் எனும் திருப்புமுனை – 12

தொழில் நிறுவனங்களின் நிலை திருப்பூரின் தொழில் வளர்ந்த வரலாறு, இன்றைய சிக்கல் மற்றும் தீர்வுகள் குறித்துப் பேசும் திருப்பூர் எனும் திருப்புமுனை தொடரில், தொழிலின் போக்கு மற்றும் பல்வேறு நிலைகளில் சந்திக்கும் சிக்கல் குறித்துப் பார்த்துவருகிறோம். இந்தப் பகுதியில் தொழில் நிறுவனங்களின் போக்கு குறித்துக் காணலாம். ஒரு பின்னலாடை நிறுவனம் எப்படி உருவாகிறது என்பது குறித்தும் வர்த்தக முறைகள், இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஏற்கனவே சில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம். காலங்கள் செல்லச் செல்ல உற்பத்தி நாடுகள் அதிகரித்தன. புவிசார் அரசியல், இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை நமது ஏற்றுமதிக்குக் கடும் நெருக்கடிகளை அளித்து வந்தன. இருப்பினும் அந்த மாற்றங்களை, சவால்களைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் தொடர் தகவமைப்பின் மூலம் தங்களின் வர்த்தகத்தைப் பாதுகாத்துக்கொண்டதோடு வளரவும் செய்தனர். மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளாத நிறுவனங்கள் பெரிய அளவு வளர இயலவில்லை. பொதுவாக, வர்த்தகம் தொடங்கிய காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனமும் எல்லாவிதமான ஆடைகளையும் தயார் செய்தே வந்தனர். ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட ஆடைகள் தயாரிப்பிற்கான நிபுணத்துவம் பெற்று, அந்த வகை ஆடைத் தயாரிப்பில் உள்ள தொழில் நுட்பங்களை அடையாளம் கண்டு, தொடர் மேம்பாடுகள் வாயிலாக நல்ல தரத்துடன் குறைந்த உற்பத்திச் செலவில் அதிக உற்பத்தி செய்து தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி, அந்த வகை ஆடைகளை இறக்குமதி செய்யும் வாடிக்கையாளர்களை அணுகி, தங்களின் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் நிறுவனங்கள் ஒருபுறம் உலகளாவிய சிக்கல் காரணமாக சிறு பின்னடைவைச் சந்தித்தாலும் தொடர்ந்து வளர்ந்தே வருகின்றனர்.  அதுமட்டுமல்ல, காலத்திற்கு ஏற்பத் தங்களின் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்துவருவதையும் அதற்காக லாபத்தின் ஒரு பகுதியைச் செலவிடுவதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதென்ன கட்டமைப்பில் மாற்றங்கள்? பொதுவாக ஒரு தொழில் வளரும்போது போட்டி வருவது இயல்பு. அப்படிப் போட்டி வரும்போது, வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஜவுளித்துறையைப் பொறுத்தமட்டில் அன்றாட மாற்றங்களே இந்தத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வருகிறது. உற்பத்தி நாடுகள் ஒருபுறம் அதிகரித்து வருவதும் கட்டமைப்பில் பின்தங்கியிருந்த நாடுகள் மிக வேகமாகக் கட்டமைப்பில் நம்மைக் காட்டிலும் முன்னேறி வருவதும் பின்தங்கிய நாடுகள் என்ற காரணத்தால் அவர்களுக்கு வரியில்லா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வளர்ந்த இறக்குமதி செய்யும் நாடுகள் அளிப்பதும் காட் ஒப்பந்தத்தின் சரத்துகளைக் காரணம் காட்டி, நமது நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைத் தடுத்ததும்  வங்கிகளில் ஏற்பட்ட நடைமுறை மாற்றங்கள், பருத்தியை அத்தியாவசியப் பட்டியலிலிருந்து நீக்கியது உள்ளிட்ட பல நெருக்கடிகளைத் தொடர்ந்து சந்தித்தே வருகிறோம். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு தொழிலை முன்னெடுக்கவேண்டிய நிர்பந்தம், மிகச் சவாலான இந்த நிலையைச் சரியாக உள்வாங்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த வருடங்களில் இந்தத் தொழில் எவ்வழியே பயணிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு பல்வேறு உற்பத்திநிலை மாற்றங்களை முன்னெடுத்தன. புதிய தொழில்நுட்பங்கள், உலகளாவிய உற்பத்தித் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் சிறந்த உற்பத்தி முறைகள், பருத்தி ஆடைகளைக் கடந்து செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி, உற்பத்திச் செலவினங்களைக் குறைக்கும் பல்வேறு முன்னெடுப்புகள் எனப் பயணித்த காரணத்தால் தங்களைத் தொழிலில் நிலைநிறுத்திக்கொண்டனர். மேலே கூறியவற்றைப் பின்பற்றாத நிறுவனங்கள் தொடர்ந்து வளரத் தடை ஏற்படுவதும் ஒருகட்டத்தில் வர்த்தகத்தைவிட்டு வெளியேறும் நிலையும் உள்ளது. இதில் இன்னொரு பெரும் சிக்கல், மேற்சொன்ன மாற்றங்களைச் செய்து பயணிக்க உள்ள தயக்கத்தால், தங்களின் நிலைக்கு உகந்த வர்த்தகத்தை முன்னெடுக்கும்பொருட்டு எவ்வித வரையறையும் விதிமுறைகளும் விதிக்காத இறக்குமதியாளர்களிடம் வர்த்தகம் செய்வதும் அதில் ஆடைகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதும், ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி விலையில் தள்ளுபடி செய்து ஏற்றுமதி செய்வது, ஏற்றுமதி செய்த ஆடைகளுக்குப் பணம் பெற இயலாத நிலை, எனக் கடும் சிக்கல்களைச் சந்தித்து, உற்பத்திச் சங்கிலியில் பாதிப்பினை ஏற்படுத்தி, வர்த்தகத்தை மூடிவிட்டுச் செல்லும் நிலை கவலைக்குரிய ஒன்று. ஏற்றுமதித் தொழிலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேற்சொன்ன நெருக்கடிகளைக் கருத்தில்கொண்டு உள்நாட்டு உற்பத்திக்கு வெகு நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொண்டன. கடந்த 15 ஆண்டுகளில் இந்த மாற்றம் படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி என்பது இரு நிலைகளில் நடைபெறுகிறது. ஒன்று, முறை சாரா உற்பத்தி, மற்றொன்று முறைசார் உற்பத்தி. முறை சாரா உற்பத்தியில், தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் வியாபித்துள்ள மொத்த வியாபாரிகள், இங்குள்ள உற்பத்தியாளர்கள் தயார் செய்யும் சரக்குகளைப் பெற்று சில்லறை வணிகர்களிடம் அனுப்பி விற்பனை செய்வர். முறைசார் உற்பத்தி என்பது, ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் நடத்தும் சில்லறை வர்த்தகக் கடைகளுக்குச் செல்லும் ஆடைகள். நாளது தேதியில் மேலே மற்றும் கடந்த இரு அத்தியாயங்களில் குறிப்பிட்ட ஏற்றுமதிக்கான தரக் கட்டுப்பாடு மற்றும் ஆய்வுச் சான்றிதழ் வரையறைக்குள் முறைசார் உள்நாட்டு உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களும் ஆட்படுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு படிநிலை நிறுவனங்களும் தங்களுக்கான சர்வதேச அங்கீகாரம் கொண்ட சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே தொழிலில் நிற்க இயலும் என்னும் நிலையை நோக்கித் தொழில்துறை பயணிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒவ்வொரு வருடமும் சரியாகத் திட்டங்களை வகுத்துப் பயணிக்கும் எல்லா நிறுவனங்களும் வளர்ந்தே வருகின்றன. திட்டமில்லாமல் அல்லது திட்டமிடத் தெரியாமல் பயணித்த நிறுவனங்கள் பின்னடைவையே சந்திக்கின்றன. திட்டம் வகுப்பது என்றால் என்ன? நிகழ் வருட உற்பத்தி, செலவுகள், சந்தித்த பிரச்சனைகள், நிதி நிலை அறிக்கைக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு, அடுத்து எப்படிப் பயணிக்க வேண்டும், அதற்கு என்ன மேம்பாடுகளைச் செய்ய வேண்டும், இலக்குகள் நிர்ணயம் போன்றவைதான் திட்டம் வகுப்பது. இதை வாசிப்பவர்களுக்கு, நான் ஏதோ கார்ப்பொரேட் ரேஞ்சிற்குப் பேசுவதாகத் தோன்றலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்; திருப்பூரிலிருக்கும் ஒவ்வோர் நிறுவனமும் 5 அல்லது 6 இலக்க முதலீட்டில் தொடங்கப்பட்டவையே. தொடர் தேடல்களே வளர்ச்சியைச் சாத்தியமாக்கின. தொடர் தேடல் என்பது கூட்டுமுயற்சி மற்றும் பகிர்தல் என்னும் அற விழுமியங்களால் சாத்தியமானது. வேதனையோடு ஒன்றைப் பகிரவேண்டும். அந்த அற விழுமியங்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தொலைத்து வருவதும் இந்தத் தொழிலின் பின்னடைவுக்கு ஒரு காரணம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். உரையாடல்களும் பகிர்தல்களும் மட்டுமே இந்தத் தொழிலை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என்றால் மிகையல்ல. அந்த விடுபட்ட பகிர்தல்களையும் உரையாடல்களை தொடர்ந்து மேற்கொள்வோம். அதுவே இந்தத் தொழிலை மீட்டெடுக்கும் கருவிகளில் ஒன்று. சரி, தொழில்முனைவோர்களிடத்தில் உள்ள பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறீர்கள், அரசாங்கம் சார்ந்த நெருக்கடிகள் இல்லையா? தொழில் பின்னடைவுக்கு அரசு காரணமில்லையா? என்னும் கேள்விகள் வாசிப்பவர்களுக்கு எழும். நிச்சயம் உள்ளன. அவை குறித்து அடுத்த அத்தியாயங்களில் பேசுவோம். மீண்டும் திங்களன்று புதிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை -11

திருப்பூர் எனும் திருப்புமுனை -11

தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் மற்றும் ஆய்வுமுறை நெருக்கடிகள் கடந்த அத்தியாயத்தில் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் ஆய்வுகள் மற்றும் சர்வதேசச் சான்றிதழ்கள் குறித்துப் பார்த்தோம். பின்னலாடைகளுக்கான தர ஆய்வுகள் மற்றும் அதன் சான்றிதழ்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். பின்னலாடைத் தயாரிப்பு என்பது பல உற்பத்திப் படிநிலைகளைக் கடந்து வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இறக்குமதியாளர்கள் இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர்களை வழங்கும்போதே அதற்குரிய தரக்கட்டுப்பாடுகளை உறுதி செய்வர். இதில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமே தங்களின் சொந்தத் தரக் கட்டுப்பட்டுப் பிரிவைக்கொண்டு தர ஆய்வு செய்து அனுப்புவது ஒரு வகை. பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும் தரக் கட்டுப்பாட்டுச் சேவை வாயிலாக, ஏற்றுமதி நிறுவனங்களில் தயாரான சரக்குகளை, ஏற்றுமதிக்கு முன்பாக, இறக்குமதி நிறுவனம் எந்தத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தை நியமிக்கிறதோ அந்த நிறுவன ஊழியர்கள், ஏற்றுமதிக்குத் தயாராகப் பெட்டிகளில் பேக்கிங் செய்து வைக்கப்பட்ட ஆடைகளை, குறிப்பிட்ட வரையறைகொண்ட கணக்கின் அடிப்படையில், பெட்டிகளைத் திறந்து ஆடைகளைத் தர ஆய்வு செய்து, அந்த ஆடைகள் இறக்குமதி நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்தில், தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, அந்த அறிக்கையை இறக்குமதி நிறுவனத்திற்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின் ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பர். முதல் வழிமுறையில் இறக்குமதி நிறுவனம் சரக்குகளைப் பெற்ற பின், அவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதை ஏற்றுமதி நிறுவனத்திற்குத் தெரிவித்து, உரிய நிவாரணங்களை பெறுவர். இதில், ஏற்றுமதி நிறுவனம் வர்த்தக வாய்ப்புகளை இழப்பதும் பெரும் பொருள் இழப்பைச் சந்திப்பதும் நிகழ்வது உண்டு. இரண்டாவது முறையில், இறக்குமதி செய்யப்பட்டபின் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது.  அப்படியே எழுந்தாலும் அதற்குரிய பொறுப்பு ஆய்வு செய்த நிறுவனத்திற்கு இருந்தாலும், இறுதியில் பொருள் இழப்பு என்னவோ ஏற்றுமதி நிறுவனத்திற்கே. தயார் செய்த ஆடைகளில் அப்படி என்ன தர ஆய்வுகள் நடைபெறும் என இந்தத் தொழிலைச் சாராதவர்களுக்குக் கேள்வி எழலாம். தர ஆய்வு என்பது இரு வகைப்படும். முதல் வகை, ஆடைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பன்னாட்டு நிறுவனத்திடம் துணியின் தன்மைகள், அதன் நெகிழும் தன்மை, சாயத்தின் தரம், குறிப்பிட்ட அளவுக்கு ஆடையைத் துவைத்த பின் ஏற்படும் மாற்றங்கள், உபயோகித்த ரசாயனங்களில் உள்ள நச்சுத்தன்மை, சர்வதேசக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட சாயங்கள் மற்றும் ரசாயனங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளனவா என்பன உள்ளிட்ட பல்வேறு அளவீடுகள் சோதிக்கப்பட்டு, சோதனை முடிவுகள் இறக்குமதி நிறுவனங்களுக்கு அறிக்கையாக அனுப்பப்படும். இரண்டாம் வகையில், ஆர்டர்களை வழங்கும் இறக்குமதி நிறுவனம் ஆடைகளின் வடிவமைப்பு, அளவுகள், அதில் உள்ள வண்ணங்கள், பிரிண்டிங் மற்றும் எம்பிராய்டரி இருந்தால் அதன் வடிவம் மற்றும் அதன் வண்ணங்கள் மற்றும் அதன் தரம் உள்ளிட்டவற்றை மிகத் துல்லியமாக கொடுத்துவிடுவர். ஆடை உருவாக்கத் துணியின் வகை, அதன் தன்மை, ஆடைகளில் தைக்கப்படும் லேபிள்கள், பிராண்ட் டேக், சில்லறை விலை உள்ள டேக், ஆடையைப் பேக் செய்ய பயன்படுத்தும் பாலிபேக் உள்ளிட்டவற்றைப் பற்றிய விவரங்களும் அளிக்கப்பட்டுவிடும். இந்த விவரங்கள் அனைத்தும், அந்தக் குறிப்பிட்ட ஆர்டருக்கு உகந்த மாதிரியுடன் தர ஆய்வினைச் செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்படும். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கும் முன் அதன் மாதிரியை (ப்ரொடக்சன் சாம்பிள்) இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதலைப் பெற்றபின் உற்பத்தியைத் தொடங்கும். ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு ஆடையை இறக்குமதி நிறுவனம், ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பும். ஆய்வு நிறுவனத்தினர் இதனைக் கொண்டு, தயாராக இருக்கும் ஆடைகளை ஆய்வு செய்து, அவற்றில் உள்ள குறைகளைப் பட்டியலிட்டு இறக்குமதி நிறுவனத்திற்கு அனுப்புவர். ஏற்றக்கொள்ளக்கூடிய அளவுகளில் குறைகள் இருப்பின் அதனை ஏற்றுக்கொண்டு தயாரான ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பர். குறைகள் அதிகம் இருப்பின் அவற்றைச் சரிசெய்து மறு ஆய்வுக்கு உட்படுத்தும்படி அறிவுறுத்தப்படுவர். ஏற்றுமதி நிறுவனமும் மீண்டும் ஆடைகளைச் செப்பனிட்டு மறு ஆய்விற்கு உட்படுத்தி ஏற்றுமதி செய்வர். இதில் ஆய்வு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து, இறக்குமதி நிறுவனங்களின் அலுவலகமும் இதற்கென்று தரக்கட்டுப்பாட்டுப் பிரிவைக் கொண்டிருக்கும். அந்தப் பிரிவு, மேற்சொன்ன இரண்டாம் வகை ஆய்வுடன், துணி முதற்கொண்டு உற்பத்தியின் ஒவ்வொரு நிலையையும் கட்டுப்படுத்தும். இதன்வாயிலாக, உற்பத்தியாகும் ஆடைகளின் தரத்தை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முதல் தர ஆய்வினை அதற்குரிய பன்னாட்டு நிறுவனங்களின் பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே செய்வர். இறக்குமதி நிறுவனங்களோ, அவர்களின் கிளை அலுவலகங்களோ இந்த வசதிகளை வைத்துக்கொள்வதில்லை; முற்றிலும் மற்ற நிறுவனங்களையே சார்ந்து இருக்கும். இதில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு என்ன சிக்கல்? முதலில் சொன்ன ஆய்வுகளை மேற்கொள்ள, இங்குள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களிடத்தில் வேண்டிய வசதிகளைக் கொண்ட ஆய்வுக்கூடத்தை அமைந்துள்ளதால், ஒவ்வொரு உற்பத்தி நிலையிலும் சரியான சோதனைகளை மேற்கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் சோதனைகளை எளிதாகக் கடந்து ஒப்புதல் பெறுவர். சிறு நிறுவனங்களிடம் இதுபோன்ற கட்டமைப்பு வசதி இல்லை என்பதால், உற்பத்தி நிலையில் எங்கு தவறு நேர்ந்தாலும் சோதனையில் தோல்வியடைந்தால் ஆர்டர்கள் ரத்தாகும் நிலை அளவுகக்குச் செல்லும் அல்லது தள்ளுபடியுடன் ஆர்டர்களை அனுப்ப நேரிடும். இதனால் அந்தச் சிறு நிறுவனத்தின் நிதிச் சுமை அதிகரித்து, ஒரு கட்டத்தில் நிறுவனத்தை நடத்த மேலும் கடன்களை வாங்கிப் பயணிக்கவேண்டிய நிலை உருவாகும். ஒருமுறை தவறு நேர்ந்ந்தாலும் வர்த்தக வாய்ப்புகள் சிறு நிறுவனங்களை விட்டு, வேறு நிறுவனங்களுக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், வாங்கிய கடன் சுமை அதிகரிக்க, ஒருகட்டத்தில் நிறுவனத்தை மூடும் நிலை ஏற்படும். இதில் தவறு யாருடையது? சிறு நிறுவனமோ பெரிய நிறுவனமோ, ஒரு ஆர்டரை ஒப்புக்கொண்டு வாங்கிவிட்டால், நிச்சயமாக அதற்கு நியாயம் செய்யவேண்டும். ஒவ்வொரு உற்பத்தி நிலையிலும் ஆடையின் தரம் மற்றும் தன்மைகள் அனைத்தும் இறக்குமதியாளர் குறிப்பிட்ட வரையறைக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். வர்த்தகப் போட்டியில் விலையைக் குறைத்து ஆர்டர்களை எடுப்பதன் காரணமாகத் தரத்தில் உடன்பாடு செய்துகொள்ளும் செயல்களால் ஆய்வுகளில் தோல்வியுற்று, அந்தக் குறிப்பிட்ட நிறுவனம் பாதிப்புக்கு உள்ளாவது மட்டுமின்றி, அதே இறக்குமதியாளர்களிடம் வர்த்தகம் செய்யும் மற்ற ஏற்றுமதி நிறுவனங்களிடத்திலும் அடுத்தடுத்து அந்த நிறுவனம் ஆடைகளுக்கான விலையைக் குறைத்துக் கேட்கும். இந்தச் சூழலில் ஏற்றுமதியாளர்களால் உடனடியாக வேறு இறக்குமதி நிறுவனங்களுக்குச் சென்று ஆர்டர்களை எளிதாகப் பெற்றுவிட முடியாது. ஒரு ஆர்டரைப் பெருவதற்குக் குறைந்தது 4 முதல் 6 மாதங்கள் ஆகும். இந்தச் சூழலில் லாபத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டு வர்த்தகம் செய்யவேண்டிய நிலைக்கு, நல்ல நிலையில் செயல்படும் நிறுவனமும் தள்ளப்படும். இதனால் லாப விகிதங்கள் குறைந்து, அடுத்து வேறொரு இறக்குமதி நிறுவனம் சரியான உற்பத்தி விலைக்கு ஆர்டர்கள் வழங்கும்வரை இந்தச் சிரமத்தை ஏற்றுக்கொண்டே பிற நிறுவனங்களும் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்படும். தரக் கட்டுப்பாடுகள், ஆய்வுகள், மற்றும் அதன் சிக்கல்கள் குறித்துப் பார்த்தோம். இந்தத் தரக்கட்டுப்பாடுகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்களின் போக்கு குறித்துத் தனி அத்தியாயம் ஒன்றை அடுத்து வரும் வாரங்களில் எழுதுகிறேன். ஏற்றுமதி நிறுவனங்களின் போக்கினைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம். மீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்போம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 10 

திருப்பூர் எனும் திருப்புமுனை – 10 

நெருக்கடிகளையும் போராட்டங்களையும் கடந்த பயணம் ஏற்றுமதி நிறுவனங்களின் கட்டமைப்பில் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்தப் பகுதியில் காண்போம்.   1980களில் ஏற்றுமதி தொடங்கிய காலத்தின் தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களின் கட்டமைப்பில் தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்தே ஜவுளித் தொழில் பயணிக்கிறது. அன்றைய காலகட்டத்தில் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பில் உருவான இயந்திரங்களே அனைத்து உற்பத்தி நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்தன. 1990களில் தொடங்கிய உலகமயமாக்கல் காரணமாக ஜப்பான், சீனா, கொரியா, ஐரோப்பா, துருக்கி, அமெரிக்க போன்ற நாடுகளிலிருந்து தையல், நிட்டிங், டையிங், காம்பக்ட்டிங், பிரின்டிங் மற்றும் எம்பிராய்டரி உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி நிலைகளுக்கும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வலுவான உற்பத்திச் சங்கிலிக் கட்டமைப்பு ஏற்பட்டது. அரசின் மானியங்கள், வரிச் சலுகைகள், வங்கிகளின் தாராளமான நிதி உதவி ஆகியவை, இங்குள்ள தொழில் முனைவோர்களை அடுத்தடுத்து தொழில் தொடங்கவும் விரிவுபடுத்தவும் ஊக்கமளித்தன. இதன் காரணமாக ஒருபுறம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெருகின. ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகின. தரமான ஆடைகள் குறித்த நேரத்தில் தயாராகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இறக்குமதி நாடுகள் காலத்திற்கு ஏற்ப, உற்பத்தி நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளின் கட்டமைப்பை ஆய்வுக்கு உட்படுத்தத் தொடங்கின. பல்வேறு விதிமுறைகளைக் கொண்ட ஆய்வினை பன்னாட்டு நிறுவனங்களின் வழியே மேற்கொண்டு, அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, வர்த்தகம் மேற்கொள்ளப்படும் நிலை உருவானது. சிறிய அளவில் தொடங்கிய இந்த முறை தொடர்ந்து சீரிய இடைவெளியில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தவண்ணம் உள்ளது. இதற்காகவே இங்குள்ள நிறுவனங்கள் பல்வேறு மாற்றங்களைச் செய்து உற்பத்தியை மேற்கொள்ளவேண்டிய நிலை நிலவுகிறது. நெறிமுறைகளும் ஆய்வுகளும் தொழிற்சாலைகள் அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா? சுகாதாரமான சூழல் உள்ளதா? தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா? தொழிற்சாலையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் சரியாகச் செயல்படுகிறதா? பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இருக்கின்றதா? இவற்றைப் போன்ற செயல்பாடுகளை உற்பத்தி நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுகின்றனவா என்பனவற்றையெல்லாம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி சான்றிதழ் அளிப்பர். இந்தச் சான்றிதழ் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்படும். இறக்குமதி செய்யும் நாடுகளுக்குத் தகுந்த ஆய்வறிக்கைகள், இதற்காகவே செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் வாயிலாகப் பெறப்படுகின்றன. இறக்குமதியாளர்கள், குறிப்பாக பிராண்ட் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வில் தேர்ச்சி பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே ஆர்டர்களை வழங்கின. இந்த ஆய்வுகளுக்கு உட்படாத நிறுவனங்களும் தொழிலில் நீடித்தன. ஏனெனில் அவர்களின் வாடிக்கையாளர்கள் இத்தகைய ஆய்வறிக்கைகளைக் கோரவில்லை. ஆனால், முன்பே ஓரிடத்தில் குறிப்பிட்டதைப்போல, இறக்குமதி நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, நாளது தேதியில், ஆய்வுகளுக்கு உட்படாத நிறுவனங்களால் ஏற்றுமதி உற்பத்தியில் ஈடுபட இயலாது என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம். பல்வேறு முன்னணி – பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு சான்றிதழ்களை அளித்தாலும் பலவேறு பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களும் ப்ராண்டுகளும் உற்பத்தித் தொழிற்ச்சாலைகளை ஆய்வு செய்வதெற்கென்றே ஒரு பிரிவினை ஏற்படுத்தி, அவர்களே நேரடியாக ஆய்வினை மேற்கொண்டு சான்றிதழ்களை அளிக்கின்றனர். இந்த மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டு, அதற்கென ஒரு தனிப் பிரிவினை ஏற்படுத்தி, தொடர்ந்து சூழலுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்ட நிறுவனங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் வருவதும் அதனால் தொடர்ந்த வர்த்தக வளர்ச்சி சாத்தியமானதும் வெளிப்படை. நான் மேற்சொன்ன மாற்றங்களுக்குத் தங்களை ஆட்படுத்திக்கொள்ளாத நிறுவனங்கள், இந்தச் சான்றிதழ்களைக் கோராத இறக்குமதியாளர்களிடம் மட்டுமே வர்த்தகம் மேற்கொள்கின்றனர். காலங்கள் செல்லச் செல்ல, ஒருகட்டத்தில் சான்றிதழ் பெறாத நிறுவனங்களால் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெற முடியாத நிலை ஏற்படும். எந்த ஏற்றுமதி நிறுவனம் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர்களைப் பெறுகிறதோ, அந்த நிறுவனம் மட்டுமே சான்றளிக்கப்பட்ட நிலை மாறி, ஆடை உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள நிறுவனங்கள் அனைத்துமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்கிற நிபந்தனை நாளது தேதியில் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. இதன் காரணமாக, ஜாப் ஒர்க்கில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெறும் நிலையை நோக்கி நகர்கின்றன. இன்னும் ஓரிரு வருடங்களில் உற்பத்திச் சங்கிலியில் உள்ள ஜாப் ஒர்க் நிறுவனங்கள் அனைத்துமே சான்றிதழ்கள் பெறுவது கட்டாயமாகும். சான்றிதழ்களைப் பெறுவது எளிதானதா என்று கேட்டால், நிச்சயமாக எளிதான ஒன்றல்ல என்றே கூற முடியும். அதே சமயத்தில், பெற இயலாததும் அல்ல என்றும் சொல்லலாம். ஆனால் அதற்கான செலவினங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் மிக அதிகம். மேலும் ஒவ்வொரு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதிய நிபந்தனைகளைச் சேர்ப்பதும் இருக்கும் விதிகளை மேம்படுத்துவதுமாக, பார்க்கவேண்டிய வர்த்தகத்தைத் தாண்டி, இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கிச் செயல்படவேண்டிய நிலை, கடுமையான அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆண்டொன்றுக்கு 1000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனமும் 10 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனமும் ஒரே மாதிரியான சான்றுகளைப் பெறவேண்டியது அவசியம். அதே சமயம், பெரு நிறுவனங்களுக்கு அதெற்கென்று தனிப் பிரிவினை உருவாக்கிச் செயல்படும் வல்லமை உண்டு. சிறு நிறுவனங்களால் அவ்வாறு செய்ய இயலாது. காரணம் அந்த அளவிற்கான நிதிச் சூழல் அவர்களுக்கு ஒத்துழைக்காது. இதன் காரணமாகவே பல நிறுவனங்கள் வர்த்தகத்தைச் சுருக்கிக்கொள்வதும் புதிய உயரங்களை நோக்கிப் பயணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் பின்தங்குவயதும் நிகழ்கிறது. அடுத்ததாக, காலம் செல்லச் செல்ல சான்றிதழ்கள் உள்ள நிறுவனங்களுக்குத் தேவையான வர்த்தக வாய்ப்பை இறக்குமதியாளர்கள் உறுதி செய்கின்றார்களா என்ற கேள்வி எழுமேயானால், அதுவும் இல்லை என்பதே கசப்பான உண்மை. தொழிற்சாலை ஆய்வுகளைக் கடந்து, நாளது தேதியில் ஏற்றுமதி நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு, வளங்குன்றா உற்பத்திச் செயல்பாடுகள், மூலப்பொருட்களின் பிறப்பிடம், கொடுக்கப்பட்ட ஆடைகள் எங்கு விளைந்த பருத்தியிலிருந்து எந்த நூற்பாலையில் நூலாக மாற்றப்பட்டு, எந்த நிறுவனத்தில் துணியாக மாற்றப்பட்டு, எந்த தையல் கூடத்தில் தைத்து ஏற்றுமதி செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்கவேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே வர்த்தக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், தங்களின் பிரதிநிதிகளை இங்கு அனுப்பி தன்னிச்சையாக ஆய்வுகளை மேற்கொள்வதும் அதனை அவர்கள் நாட்டில் உள்ள பத்திரிகைகளில் செய்தியாக வெளியிட்டு, இந்திய உற்பத்தியாளர்களின் மேல் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இது குறித்துத் தனி அத்தியாயம் ஒன்றைப் பின்னர் எழுதுகிறேன். தொழிற்கூட ஆய்வுகளைத் தாண்டி, தயாரிக்கப்படும் ஆடைகளின் தர ஆய்வுகள், அதன் முறைகள், அதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் அடுத்து வரும் அத்தியாயத்தில் பார்ப்போம். ஜவுளித் தொழிலில் இல்லாதவர்கள் அதை வாசிக்கும்போது ஒருவித அயர்ச்சி ஏற்படும் என்றாலும் எங்கள் நிலையை அது உங்களுக்குத் தெளிவாக உணர்த்தும். மீண்டும் திங்களன்று அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை – 9

திருப்பூர் எனும் திருப்புமுனை – 9

வசதியான வரையறையைக் கடந்தால் வளர்ச்சி தொடர்ந்து இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து, கருத்துகளைப் பகிரும் நண்பர்களுக்கு நன்றி. பல்வேறு கேள்விகள் மற்றும் விபரங்களைக் கேட்டும், இதுகுறித்து எழுதவில்லையா என்கிற கேள்விகளும் என்னிடம் முன்வைக்கப்படுகின்றன. அனைத்து விவரங்களும் கோர்வையாக வர வேண்டும் என்கிற கவனத்துடன் ஒவ்வொரு தரவுகளையும் எழுதிவருகிறேன். அடுத்தடுத்து வரும் பகுதிகளில் விடுபட்ட ஒவ்வொன்றையும் அவசியம் எழுத விழைகிறேன். செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்திக்கான துணி வகைகள் பல. அவற்றுள் முக்கியமானவை பாலியஸ்டர், நைலான், மொடால், பாம்பூ, அக்ரிலிக் , ரேயான் உள்ளிட்டவை. இவற்றில் பருத்தி இழைகள் கலந்தும், ஸ்பான்டெக்ஸ் என்ப்படும் இழுவை நூல்வகைகள் இணைத்தோ அல்லது தனியாக ஒரு நூலிழை வகையாகவோ துணிகள் தயாரிக்கப்பட்டு ஆடைகளாக உருவாகின்றன. நாளது தேதியில் நுகர்வில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவருகிறோம். 30 ஆண்டுகளுக்கு முன் நாம் எவ்வாறான ஆடைகளை உபயோகித்தோம், இன்றைய தேதியில் எவ்வளவு மாற்றங்களை அடைந்துள்ளோம் எனச் சிந்தித்துப் பாருங்கள். இந்த மாற்றங்கள் தொடர்ந்து வேகமாக முன்னெடுக்கப்படும் நிலையில் தொடர்ந்து பருத்தி இழை ஆடைகளின் உற்பத்தி குறித்தே நமது பார்வை இருப்பது இன்றைய பின்னடைவுக்கு மட்டுமல்லாது, வளர்ச்சி நிலைத் தேக்கத்துக்கும் காரணமாக நாம் பார்க்கலாம். பருத்தி உற்பத்தி இங்கே அதிகம். உலகத் தேவையில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே நாம் ஆடை ஏற்றுமதி செய்கிறோம். தேவைகள் பெருமளவிற்கு இருக்கும்போது ஏன் பருத்தி ஆடை உற்பத்தியை விட்டுவிட்டு செயற்கை நூலிழை உற்பத்தியை நோக்கி செல்லவேண்டும் என்கிற கேள்வி பலருக்கும் எழும். கடந்த 30 ஆண்டுகளில் உற்பத்தி தேசங்கள் அதிகரித்துள்ளன. பங்களாதேஷ், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா, கம்போடியா ஆகிய நாடுகள் அபரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன. பாகிஸ்தானும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. கோர் ப்ரோடக்ட் எனச் சொல்லப்படும் பல்வேறு ஆடைகளின் உற்பத்தி இந்த தேசங்களுக்கு மாறியுள்ளது. காரணம், இந்தத் தொழில் வளரவேண்டும் என்கிற நோக்கத்தில் அந்தந்த நாட்டின் அரசுகள் அங்குள்ள உற்பத்தியாளர்களுக்குக் கொடுத்த சலுகைகள், புவிசார் அரசியல் நோக்கம், அதே சமயம் மதிப்புக் கூட்டல் குறித்தான கருத்துக்களைப் புறந்தள்ளி பஞ்சு, நூல் மற்றும் துணி ஏற்றுமதியை ஊக்குவித்தது, உற்பத்தி தேசங்கள் பெற்ற சர்வதேசச் சலுகைகள் மற்றும் உள்நாட்டுச் சலுகைகள் ஆகியவை ஆடை விலைகளில் பெரும் வேறுபாடுகளை உருவாக்கியதால் இறக்குமதி நாடுகள் விலை குறைவாகக் கிடைக்கும் நாடுகளை நோக்கி நகர்ந்தனர். மென்பொருள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் அதிக வருவாய் ஈட்டியதால் ஜவுளித்துறையை ஆதரிப்பதில் அரசின் தரப்பில் சுணக்கம் ஏற்பட்டதும், வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் ஜவுளித்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் முக்கியத்துவத்தை அரசு புறந்தள்ளியதும், பருத்தியை ஊக பேர வணிகத்தில் சேர்த்ததும், அதனால் ஏற்பட்ட தொடர் நூல் விலை மாற்றங்கள் ஆகியவையும் பருத்தி ஆடை உற்பத்திக்கான பின்னடைவில் உள்ள முக்கிய காரணங்கள். முந்தைய பகுதியில், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி குறித்துப் பார்த்தோம். ஏற்கனவே திருப்பூரின் உற்பத்திப் படிநிலைகள் குறித்தும் பார்த்துள்ளோம். முற்றிலும் பருத்தி ஆடைகள் தயாரிப்பதற்கான கட்டமைப்பில், செயற்கை நூலிழை ஆடைகளை எவ்வாறு தயாரிப்பது என்கிற கேள்வி சிலருக்கு எழக்கூடும். திருப்பூரின் வரலாறே, உழைப்பு; அதையும் கடந்து, நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் விவேகமும் வேகமும்; மற்றும் முதலீடுகளுக்குத் தயங்காத தொழில்முனைவோர் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான். மேற்சொன்ன காரணங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டே இருக்கப் போகிறோமா அல்லது இந்தக் கடும் சவால்களையும் தாண்டிய வாய்ப்புகளை நமதாக்கிக்கொள்ளப் போகிறோமா என்பதே நமது அடுத்தகட்டப் பயணத்தைத் தீர்மானிக்கும். பெரும் முதலீடுகள் இல்லாமல், அதே சமயம் இருக்கும் கட்டமைப்பை செயற்கை நூலிழை ஆடைத் தயாரிப்பிற்கு ஏற்ப மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பல்வேறு தளங்களில் இதை முன்னெடுக்க வேண்டும். அதே சமயம், புதிய முதலீடுகளை இந்தக் கோணத்தில் திருப்பவேண்டிய தேவையும் உள்ளது. தனித்தனி உற்பத்திக் கேந்திரங்களாக உள்ள நூற்பாலைகள், நிட்டிங், டையிங், பினிஷிங், பிரிண்டிங் போன்றவை குழுவாக இணையவேண்டும். இவை ஒரே நிறுவனமாக மாறி, துணிகள் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனங்களாக மாறவேண்டும். இந்தவகையில் உற்பத்திச் செலவு குறைவு, தொடர்ந்து இடைவெளியின்றி இயங்கும் வழிகள், பணச்சுழற்சி, ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மொத்தமாகத் துணியாக வாங்கி ஆடைத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டு இன்னும் கவனத்தைக் குவித்தால் வர்த்தகத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10% நிறுவனங்கள்,துணியாக வாங்கி ஆடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் முறைக்கு முழுமையாக மாறிவிட்டனர். பல நிறுவனங்கள் பகுதி அளவில் இவ்வாறு செயல்படுகின்றன. இந்த முறைக்கு மாறுவது தொழிலை நாம் தக்கவைக்கும் முயற்சிகளில் ஒன்றாகவே பார்க்கிறேன். திரும்ப திரும்ப ஒன்றைத் தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறேன். பருத்தி ஆடை உற்பத்தி மட்டுமே பிரதானம் என்னும் வசதியான வரையறையைக் கடந்து வெளியே வரவேண்டும். அவ்வாறு கடந்து வந்தால் பெரும் வாய்ப்பு நமக்காகக் காத்திருக்கிறது. அழியப் பிறந்த மண் அல்ல இது; அழிவின் விளிம்பு வரை சென்று, மிகப் பெரிய அளவில் உயிர்த்தெழும் வல்லமை கொண்ட ஊர். அடுத்தடுத்த அத்தியாங்களில் வங்கி சார்ந்த சிக்கல்கள், தொழிலார்கள் அளவில் செய்யவேண்டிய மாற்றங்கள், உற்பத்தி நிலைகளில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பார்ப்போம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 8

திருப்பூர் எனும் திருப்புமுனை – 8

கடினக் காலங்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் இதுவரை திருப்பூரில் பின்னலாடைத் தொழிலின் தோற்றம், உள்கட்டமைப்பு, கடந்துவந்த பாதை, தொழிலாளர்கள், பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பார்த்தோம். இனி இந்தத் தொழிலில் உள்ள பிரச்சனைகளைக் குறித்துக் காண்போம். 1980களில் துவங்கிய ஏற்றுமதி 1984இல் 9 கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து படிப்படியாக வளர்ந்து, இன்று 37 ,500 கோடி ரூபாய் என்ற அளவினை எட்டி உள்ளது. ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் இங்கு உள்ளன. இதில் 200 நிறுவனங்கள் 23000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. மீதமுள்ள 11500 கோடி ரூபாயை 1800 நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன. 1991ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் பல்வேறு உலகளாவியச் சந்தை வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. இருப்பினும் கோட்டா முறை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்திய நிலையில், 2004ஆம் ஆண்டுக்குப் பின் கோட்டாமுறை ஒழிந்து மேலும் வாய்ப்புகள் எளிதாகின. இந்நிலையில் போட்டி நாடுகளின் தொடர் வளர்ச்சி, நமக்கான வாய்ப்புகளைப் பெறுவதில் கடும் சவால்களை உருவாக்கியுள்ளது. வளர்ந்த பொருளாதார வல்லரசுகளான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறைமுகமான தடைகளால் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்தே வந்தன. அதையும் கடந்து தொழிலில் சீரான முன்னேற்றங்களைப் பெற்றாலும் இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தொடர் தகமைப்பில் பின்தங்கின. அதேசமயம் இறக்குமதி நிறுவனங்களின் தேவைக்கேற்பத் தங்களைத் தகவமைத்து, புதிய நுட்பங்களுக்கு உடனடியாக முதலீடுகளைச் செய்து பயணித்த நிறுவனங்கள் இன்றளவும் தொடர்ந்து முன்னேறியே வருகின்றன. 10 முதல் 20% வரை ஒவ்வோரு வருடமும் அந்த நிறுவனங்கள் வளர்கின்றன. அதேபோல் குறிப்பிட்ட ஆடைகள், அதாவது உள்ளாடைகள் மட்டும், இரவு உடைகள் மட்டும், ஆண்களுக்கான மேலாடைகள் மட்டும், பெண்களுக்கான மேலாடைகள் மட்டும், பிறந்த மற்றும் சிறுவர்களுக்கான உடைகள் மட்டும் எனக் கவனம் பதித்து அதற்கேற்பத் தங்களின் தொழிற்சாலைக் கட்டமைப்புகளை அமைத்துப் பயணிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து முன்னேறுவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கவனச் சிதறல் இல்லாத காரணத்தால், தலைமை மேலாளர் முதல் கடைநிலை அலுவலர் வரை எல்லா நிலைகளிலும் நன்கு பயிற்சி பெற்று, தரம் மற்றும் குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப்பி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றதோடு அடுத்தடுத்த வர்த்தக அளவுகளில் அவர்கள் வளர்ச்சி காண்கின்றனர். எல்லா விதமான ஆடைகளையும் தயார் செய்யும் அணுகுமுறையைக் கொண்ட நிறுவனங்கள் வளர்ச்சியில் பின்தங்குவதும் ஒருகட்டத்தில் இழப்பைச் சந்தித்துத் தொழிலிருந்து விலகிய சூழல் ஏற்பட்டதும் உண்டு. அதேசமயம் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு எல்லா விதமான ஆடைகளை உற்பத்தி செய்யும் கட்டமைப்புகளைத் தனித்தனியாக ஏற்படுத்திப் பயணிக்கும் நிறுவனங்கள் அபார வளர்ச்சியையும் அடைந்துள்ளன. இந்தியா பருத்தி உற்பத்தியில் உலகளவில் இரண்டாம் இடத்தை வகிப்பது குறித்து ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். பருத்தியை நூலாக மாற்றும் நூற்பாலைகள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தாலும் இந்திய நூற்பாலைகளில் 55% தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. இங்கிருந்து உற்பத்தியாகும் நூல், உள்நாட்டுத் தேவைகள் மற்றும் ஏற்றுமதித் தேவையைப் பூர்த்தி செய்கிறது. பருத்தியாலான ஆடைகளே திருப்பூரில் 95% அளவுக்கு உற்பத்தியாகின்றன. குதிரைக்குக் கடிவாளம் இட்டதுபோல், அதை நோக்கியே இந்தத் துறை பயணித்தது இன்றைய தேதியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். பருத்தி ஆடைகள் மிருதுவானவை; கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்றவை. குளிர்காலத்தில் பருத்தி ஆடைகளின் பயன்பாடு மிகக் குறைவே. நமது ஏற்றுமதிச் சந்தை 90% ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைச் சார்ந்துஉள்ளது. அங்குள்ள பருவநிலை என்பது, ஆண்டுக்கு 4 முதல் அதிகபட்சம் 5 மாதங்களே கோடைக்காலம். மீதமுள்ள மாதங்களில் பருத்தி ஆடைகளின் தேவை என்பது மிகக் குறைவு. பருத்தித் துணியில் குளிர்கால ஆடைகளை மிகக் குறைவாகவே இறக்குமதியாளர்கள் வாங்குவர். ஏனெனில் பருத்தியைவிட செயற்கை நூலிழைகளான பாலியஸ்டர், நைலான் போன்றவற்றில் தயாராகும் ஆடைகளே உடலைக் கதகதப்பாக வைப்பதற்கு உதவும் என்பதால், இந்த வகை ஆடைகளையே அவர்கள் அதிகம் இறக்குமதி செய்வர். செயற்கை நூலிழை ஆடைகளைத் தயாரிப்பதில் நாம் கவனத்தைச் செலுத்தாமல் விட்டதை மிகப்பெரிய இழப்பாகத் தற்சமயம் உணர்கிறோம். நுகர்விலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நமது வாழ்க்கை முறையை ஒட்டியே ஒரு தகவலைச் சொல்கிறேன். 25 -30 வருடங்களுக்கு முன் பள்ளிக்குச் சென்று வந்தபின், சீருடைகளைக் களைந்து, இருக்கும் உடைகளை அணிந்து விளையாடச் செல்லும் பழக்கம் இருந்தது. இன்றைய தேதியில், என்ன விளையாட்டை மேற்கொள்கிறோமோ அதற்கேற்ப ஆடைகளை அணியும் பழக்கத்திற்கு அது மாறியுள்ளது. இது ஒரு மிகப் பெரிய வர்த்தக வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் விளையாட்டுகளுக்கென்றே தயாராகும் ஆடைகள் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதையும் அதற்கான பிரத்தியோக சில்லறை வர்த்தகப் பெரும் நிறுவனங்கள் வளர்ந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது தவிர இரவு உடை, பார்ட்டி வெர் என, ஒரு நாளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று விதமான ஆடைகளை அணிவதால், நுகர்வு அதிகரித்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள தரவுகளை நாம் உள்வாங்கத் தவறிவிட்டதாகவே நான் கருதுகிறேன். பருத்தி ஆடை உற்பத்தி என்னும் வசதியான வட்டத்திற்குள் நம்மை நாமே அடைத்துக்கொண்டோம். பஞ்சு விலையின் கடும் உயர்வு, நூல் தட்டுப்பாடு, நூல் ஏற்றுமதி, உள்ளிட்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றாகத் தொழிலுக்கான நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்படுத்துவது; அதனால் பெரும் பாதிப்பிற்கு இந்தத் தொழில் உள்ளவதற்கான காரணம், மாற்று ஏற்பாடுகள் இல்லாததும் அதை நோக்கி நமது கவனத்தைச் செலுத்தாததுமே. இதைச் சரியாக உள்வாங்கிய சீனா, பங்களாதேஷ், வியட்நாம், கொரியா, தைவான் போன்ற நாடுகள் தொடர்ந்து தொய்வின்றிப் பயணிக்கின்றன. உலகளவில் சந்தைக்கு வரும் விளையாட்டு தொடர்பான ஆடைத் தயாரிப்பில் பருத்தி ஆடைகள் 21% மட்டுமே. மீதமுள்ள 79% ஆடைகள் செயற்கை நூலிழையில் தயாரிக்கப்படுபவையே. பருத்தி ஆடை உற்பத்தியில் நமது போட்டி உற்பத்தி நாடுகளான வங்கம், வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பைக் கழித்தால் நமது பங்களிப்பு 3 முதல் 4% மட்டுமே. செயற்கை நூலிழை ஆடைகளில் நாம் போட்டியிலேயே இல்லை என்பதே கசப்பான உண்மை. இதற்கான காரணம், பருத்தித் துணிகள் தயாரிக்கும் அளவிற்கான நுட்பமும் சூழலும் செயற்கை நூலிழைத் தயாரிப்பில் இல்லை என்பதே. ஒவ்வொரு வருடமும் செயற்கை நூலிழை ஆடைகளுக்கான தேவை அதிகரித்தவண்ணமே உள்ளது. தற்சமயம் இந்தியாவின் விளையாட்டு தொடர்பான ஆடை வர்த்தகம் 8% என்ற அளவிற்கு உள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த ஆடையை வேண்டுமெனாலும் அணிந்துகொண்டு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, இதர விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தவர்கள், தற்சமயம் அந்தந்த விளையாட்டுகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியத் தொடங்கியுள்ளதை நம்மால் காணமுடியும். நம்மைச் சுற்றியே அதற்கான சான்றுகள் உள்ளன. மிகச் சமீப வருடங்களில் விளையாட்டு ஆடைகள் மற்றும் உபகரணங்களுக்காகவே பிரத்தியோகமாகத் தங்களது சில்லறை வர்த்தக மையங்களை இந்தியாவில் அமைத்த டெக்காதலோன் (Decathlon) நிறுவனம் நாளது தேதியில் மிக விரிவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களின் கடைகளையும் அமைத்துவருவதைக் கண்கூடாகக் காணலாம். பருத்தி ஆடைகள் உற்பத்தி என்கின்ற வட்டத்தைக் கடந்து, செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியையும் நாம் கைகொள்ளவேண்டிய நிலையை உணர்ந்து அதை நோக்கிப் பயணிக்கவேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதுவொன்றும் பெரும் விடயமும் அல்ல. பருத்தி ஆடைத் தயாரிப்பிற்கான கட்டமைப்பில் பல்வேறு சிறு மாற்றங்களையும் அதற்கான முதலீடுகளையும் செய்தால் அடுத்தடுத்த வருடங்களில் நமது ஆடைத் தயாரிப்பில் குறைந்தது 25% முதல் 30% செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியை எட்டலாம். அதற்கான முயற்சிகளைப் பல்வேறு தளங்களில் பல்வேறு நிறுவனங்கள் துவங்கியுள்ளன என்கிற நற்செய்தியையும் இங்கே பகிரக் கடமைப்பட்டுள்ளேன். கடினக் காலங்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் மகத்தானவை. அந்த விதத்தில் மகத்தான படங்களுடன் திருப்பூர் தொழில்துறை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த பகுதிகளில் மேலும் பல விபரங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை -7

திருப்பூர் எனும் திருப்புமுனை -7

போட்டி உற்பத்தியாளர்கள் திருப்பூர் பின்னலாடைத் துறையின் தோற்றம் மற்றும் கடந்து வந்த பாதையில் நாம் இந்தப் பகுதியில் பார்க்க இருப்பது, போட்டி உற்பத்தியாளர்கள். அதற்கு முன்பாக, நம் நாட்டில் வேறு எங்கெல்லாம் பின்னலாடை உற்பத்தி நடைபெறுகிறது எனப் பார்ப்போம், சென்னை, கர்நாடகா, மகாராஷ்டிரா, லூதியானா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தேவைகளுக்கான பின்னலாடைகள் உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால், திருப்பூர் மட்டுமே 55% அளவுக்கு நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் உற்பத்திக்கான பங்களிப்பைச் செய்கிறது. இந்தியா மட்டுமல்லாது, சீனா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, இந்தோனேஷியா, மியான்மார், சில ஆப்பிரிக்கா நாடுகள்,  பெரு, பிரேசில், துருக்கி, போர்ச்சுகல், ஜோர்டான் உள்ளிட்டவை இந்தியாவில் உற்பத்தியாகும் பின்னலாடை வகைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். உலக ஜவுளித் தேவையில் சீனா 35% பங்களிப்பை வழங்குகிறது. பங்களாதேஷ் 8%, வியட்நாம் 7%, இந்தியா 3.8% பங்கினை அளிக்கின்றன. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக, பருத்தி சார்ந்த ஆடைகளே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகின் பஞ்சு உற்பத்தியில் சீனா முதலிடமும் இந்தியா இரண்டாம் இடமும் வகிக்கின்றன. 1960களின் இறுதிவரை, உள்நாட்டுப் போர், கலவரம், நிலையில்லாத் தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்த சீனா, அமெரிக்க ஆக்கிரமிப்பினால் மிகுந்த இன்னலுக்கு உள்ளான வியட்நாம், இந்தியாவின் முயற்சியால் 1971இன் இறுதியில் தனி நாடு அந்தஸ்தைப் பெற்ற பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நாளது தேதியில், ஏறத்தாழ உலகின் ஜவுளிச் சந்தையின் சரி பாதியைத் தங்களிடம் வைத்துள்ளன. 1990களில் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து துணியை இறக்குமதி செய்து மட்டுமே ஆயத்த ஆடைத் தயாரிப்பை மேற்கொண்டிருந்த பங்களாதேஷ், இன்றைய தேதியில் பஞ்சை இறக்குமதி செய்து ஆடைகளைத் தயாரித்து அனுப்புமளவிற்குத் தனது கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது.   வியட்நாமைப் பொறுத்தவரை அதன் ஆடை உற்பத்தித் தேவைக்கான துணிகளை 8% மட்டுமே தனது நாட்டில் தயாரிக்கிறது. மீதமுள்ள 92% அளவிற்கான நூல் மற்றும் துணிகளை, சீனா, இத்தாலி, துருக்கி, பங்களாதேஷ், இந்தியா, தைவான், கொரியா போன்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்தே ஆடை உற்பத்தியை மேற்கொள்கிறது. பல உள்நாட்டுக் குழப்பங்களால் அண்டை நாடான இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்துவரும் பாகிஸ்தான், சிறுகச் சிறுகத் தனது ஆயத்த ஆடை உற்பத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தி, இன்று குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள், பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் தொழில் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதோடு, பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரி இல்லாமல் தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியன் ஏற்படுத்தியுள்ளது. 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்த உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் ஒருபுறம்; உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுத்தாலும் பல்வேறு இன்னல்களை இந்தியாவிற்குக் கொடுத்துள்ளது என்பதை மறுக்கவியலாது. உதாரணத்திற்கு, இங்குள்ள ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான பல மானியங்களை மத்திய அரசு வழங்கி வந்த காரணத்தால், தொழில் நன்றாக வளர்ந்தது. உலகத் தேவைக்கு 3% அளவிற்கும் தனிநபர் வருவாய் 1000 அமெரிக்க டாலர் என்கிற அளவினை எட்டும் நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள உற்பத்தித் தொழிலுக்கு வழங்கி வரும் மானியங்களைப் படிப்படியாக குறைத்துவிட வேண்டும் என்கிற நிபந்தனையைப் பின்பற்றவில்லை என்று, ஐ.நா.வில் இந்தியாவை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட புகார்களை சட்ட ரீதியாக எதிர்கொண்டு முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான அரசு, 8 ஆண்டுக் காலம், இயன்ற அளவு மானியங்களை வழங்கியே வந்தது. சீனாவைப் பொறுத்தமட்டில், அங்கு பருத்தி ஆடைகள் தவிர்த்து, செயற்கை நூலிழை எனச் சொல்லப்படும் பாலியஸ்டர், நைலான், ரேயான் உள்ளிட்ட ஆடைகள் பெருமளவு தயாரிக்கப்படுகின்றன. வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலும் இவ்வாறான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் பாலியஸ்டர் ஆடைகள் வடமாநிலங்கள், குறிப்பாக லூதியானா மற்றும் சூரத்தில் அதிகளவு தயாரிக்கப்படுகின்றன. அதுவும் உள்நாட்டு விற்பனைக்கே அதிகம் அனுப்பப்படுகிறது. இது தவிர, அக்ரிலிக், வூல் உள்ளிட்ட ஆடைகளும் சீனாவில் அதிகளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உற்பத்தித் திறனை எடுத்துக்கொண்டால், நாம் மற்ற நாடுகளைக் காட்டிலும் பின்தங்கியுள்ளோம். அதேபோல் ஒரு தொழிற்சாலையில் நிர்மாணிக்கப்பட்ட இயந்திரங்களுக்கு ஏற்ப ஆட்களின் பங்களிப்பு என்பது 1 இயந்திரத்திற்கு 1.15 என்கின்ற அளவிலே உள்ளது. இது பங்களாதேஷ் மற்றும் வியட்னாமிற்கும் பொருந்தும். அதேசமயம் இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு இயந்திரத்திற்கு இரு ஆட்கள் என்கிற அளவு உள்ளது. உற்பத்தியைப் பொறுத்தவரை, சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் நிர்ணமாணிக்கப்பட்ட தொழிற்சாலைக் கொள்ளளவிற்கு 80% அளவு உற்பத்தியை மேற்கொள்கின்றன. இந்தியாவில் இது 40% அளவே உள்ளது. ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஒதுக்கீடு அதாவது கோட்டா முறையிலேயே ஏற்றுமதி செய்ய இயலும். இது அனைத்து உற்பத்தி நாடுகளுக்கும் பொருந்தும். அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பா ஒருங்கிணைந்ததல்ல. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் என, தனித்தனி நாடுகளாக, ஒவ்வொரு நாட்டிற்கும் தனி ஒதுக்கீடு என்கிற அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் உற்பத்தி நாட்டு அரசும் இறக்குமதி நாட்டு அரசும் இந்த ஒதுக்கீடுகளை உறுதி செய்வர். அதன் அடிப்படையில் உற்பத்தி நாடுகளின் அரசு, தனது துறைசார் அலுவலகத்தின் வாயிலாக இந்த ஒதுக்கீடுகளை, சீரிய காலகட்டத்தில் ஏல அடிப்படையில் வெளியிடும். அதிக மதிப்புக்கூடிய ஆடைகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்த ஒதுக்கீடுகளைப் பெற்று ஏற்றுமதி செய்வர். 2004ஆம் ஆணடுக்குப் பிறகு இந்த முறை ஒழிக்கப்பட்டு, 2005 முதல் தாரளமாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திய நாடுகள் சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் என்பதைத் தரவுகள் விளக்கும். திருப்பூரின் கட்டமைப்பு மட்டுமே பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான பல்வேறு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த ஏதுவாக இருந்தது. இதுபோன்ற கட்டமைப்பை நாட்டின் பிற பகுதிகளில், அவ்வளவு ஏன், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில்கூட ஏற்படுத்த இயலாமல் போனது. இதை உள்ளபடியே பெரும் அவலமாகவே கருதவேண்டும். குறைந்தபட்சம் நாடு முழுவதும் 20 திருப்பூர் அமையப்பெற்றிருந்தால், வர்த்தக வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் பொருளாதாரச் சூழலும் பறந்து விரிந்திருக்கும். பல மாநிலங்கள் இன்றளவும் முயன்றாலும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதும், இனி வரும் காலங்களில் பல்வேறு மாற்றுச் சிந்தனைகளுடன் அணுகினால், பல திருப்பூர்களை உருவாக்க இயலும் என்பதே நிதர்சனம். ஏற்றுமதிக்கான ஆடைகள் பெரும்பாலும் கப்பல் வழியாகவே இறக்குமதி நாடுகளுக்கு அனுப்பப்படும். காலக்கெடு  தவறியோ அல்லது இறக்குமதி நிறுவனத்திற்கு உடனடித் தேவை என்கிற நிலையிலோ விமானம் வாயிலாக அனுப்பப்படும். பெரும்பாலான விமானம் வாயிலான சரக்குப் போக்குவரத்து சென்னை, பெங்களூரு, கொச்சின், மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் வாயிலாகச் செல்லும். கப்பல் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் தூத்துக்குடி, சென்னை, கொச்சின், மும்பை மற்றும் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகங்கள் வாயிலாகச் செல்கின்றன. தூத்துக்குடியைப் பொறுத்தமட்டில் மதர் வெஸ்ஸல்ஸ் எனப்படும் பெரிய கப்பல்கள் வருவதற்கான வாய்ப்பில்லை. அதனால் இங்கிருந்து சிறு கப்பல் வாயிலாக இலங்கைத் துறைமுகம் சென்று, சீனாவிலிருந்து புறப்பட்டு வரும் மதர் வெஸ்ஸல் வாயிலாக அனுப்பப்படும். மும்பை, கொச்சி, முந்த்ரா துறைமுகங்களுக்கு மதர் வெஸ்ஸல்ஸ் வருகின்றன, இந்தியாவிலிருந்து கப்பல் வாயிலாக அனுப்பப்படும் சரக்குகள் ஐரோப்பியத் துறைமுகங்களை அடைய 20 முதல் அதிகபட்சம் 30 நாட்களும் அமெரிக்காவிற்கு 28 முதல் 55 நாட்களும் எடுத்துக்கொள்கின்றன. விமானம் வாயிலாகச் செல்வதற்கு 2 முதல் 5 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.   ஒருவழியாக என்னால் இயன்ற அளவு, திருப்பூரின் பின்னலாடைத் தொழிலின் தோற்றம் மற்றும் அதன் கட்டமைப்பு, கடந்துவந்த பாதை குறித்து விவரித்துவிட்டேன். இனி நிகழ்கால நிலை, இடர்ப்பாடுகள், சவால்கள் மற்றும் எதிர்காலம் குறித்தான பார்வைகள் குறித்து அடுத்த பகுதியிலிருந்து பேசுகிறேன். தொடர்ந்து ஆர்வத்துடனும் உற்சாகத்துடன் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றியும் அன்பும்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பு திருப்பூர் பின்னலாடைத் தொழில் உருவாகிப் பின்னர் அது பெரும் தொழிலாக உருமாறிய பரிணாம வளர்ச்சியின் வரலாறு, சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடைத் தொழில் வளர்ச்சியால் மாநகரமாக விரிவடைந்தது, பின்னலாடைத் தொழிலின் படிநிலைகள், திருப்பூரின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதியில் தொழிலுக்கான அடிப்படை, முதலீடு மற்றும் அவை தொடர்பான தரவுகளைக் காண்போம். முந்தைய பகுதிகளை வாசிக்கத் தவறியவர்கள் கீழே உள்ள இணைப்புகள் வழியே அவற்றை வாசித்துவிட்டு, இந்தப் பகுதியைத் தொடர்ந்தால் பின்னலாடைத் தொழில் குறித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். பின்னலாடை உற்பத்திச் சங்கிலியின் பல்வேறு படிநிலைகளை முன்பே விளக்கமாகப் பார்த்தோம். ஒவ்வொரு படிநிலை உற்பத்தி மையங்களும் ஒவ்வொரு விதமான கட்டமைப்பு, அதற்கேற்றாற்போல் இயந்திரங்கள், தொழிலாளர்கள் ஆகியவற்றைக் கொண்டவை. அடிப்படை முதலீடுகளும் ஒவ்வொரு தொழிற்சாலையின் தன்மைக்கேற்ப மாறுபடும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் முதலீடுகள் செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பக் கட்டத்தில் முற்றிலும் இந்தியத் தயாரிப்பு இயந்திரங்களை மட்டுமே கொண்டு தொழிற்சாலைகள் இயங்கின, ஏற்றுமதி வர்த்தகம் தொடங்கிய பின்னர், ஒவ்வொரு படிநிலை உற்பத்தித் தளங்களிலும் இறக்குமதி இயந்திரங்கள் கோலோச்சத் தொடங்கின. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, தைவான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு கடன் சலுகைகள், மானியங்கள், ஊக்குவிப்புத் தொகை போன்றவை, சாமானியர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றியது. வங்கிக் கடன் வசதி மிக எளிதாகக் கிடைக்கப்பெற்றதும் கிடைத்த கடனைக் கொண்டு தொழிலைச் சிறப்பாக முன்னெடுத்து, அடுத்தடுத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு வர்த்தக வளர்ச்சியையும் அதன் வாயிலாக வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கப்பெற்ற சூழல் உருவானது. இதைத் தாண்டி, இங்கு ஒரு பண்பாடு உண்டு. ஆடை உற்பத்தி என்பது, பல்வேறு படிநிலைகளைக் கொண்டது என முன்பே குறிப்பிட்டதைப்போல, ஒவ்வொரு படிநிலைத் தொழில் முனைவோர்களும் அடுத்தடுத்த படிநிலைத் தொழிமுனைவோர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டதாலேயே இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது. இந்த இணக்கம் என்பது, பொருளாதார ஆதரவையும் உள்ளடக்கியது என்றால் மிகையல்ல. வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கப்பெறும் ஒரு ஏற்றுமதி நிறுவனம், அந்த ஆர்டருக்கான உற்பத்திச் செலவுக்காக, வங்கியில் மூலதனக் கடனைப் பெறும். ஆர்டரின் மொத்த மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் தொகையை வங்கிகள் கடனாகக் கொடுக்க, இதர படிநிலை நிறுவனங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பணிக்கான தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனாக வழங்க, ஏற்றுமதி நிறுவனம் அணைத்து ஒருங்கிணைப்பையும் செய்து ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து, வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்று, மூலதனக் கடனை அடைப்பர். வங்கிகள் உள்ளிட்ட, உற்பத்திப் படிநிலைக் கடன் அனைத்திற்கும் ஏற்றுமதி நிறுவனமே பொறுப்பு. ஏற்றுமதி செய்வதென்பது, லாபத்தைக் கடந்து, பெரும் சவாலான ஒன்று என்றே சொல்லலாம். ஏனெனில், வெளிநாட்டு வர்த்தகர், நாம் அனுப்பிய சரக்கை எடுக்காமலோ அல்லது பெற்றுக்கொண்டு பணத்தை வழங்காமல் போனாலோ, ஏற்றுமதி நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் மீளவே முடியாமல் சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்கும் சூழல் உருவாகும். ஆடைச் சந்தை என்பது மிக நுட்பமான ஒன்று. குறித்த காலத்திற்குள் ஆடைகள் தயாராகி சந்தைக்கு விற்பனைக்குச் செல்லவேண்டும். தவறும் பட்சத்தில் சரக்குக்குள் தேங்கும் அபாயம் மற்றும் அதிகத் தள்ளுபடி கொடுத்து விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதையும் கடந்து, வெளிநாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்து வாயிலாகச் செல்லும் ஆடைகள், உற்பத்தி இலக்குக் காலம் தவறும்பட்சத்தில், விமானம் மூலம் ஆடைகளை அனுப்ப நேர்ந்தால், கடல் வழியே அனுப்புவதற்குச் செலவாகும் தொகையைப்போல, 10 முதல் 12 மடங்கு அதிகமாகச் செலவழிக்க வேண்டும். இது ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு கடும் பொருள் இழப்பை ஏற்படுத்தும். ஏற்றுமதித் தொழிலில், குறித்த கால உற்பத்தியும் தரமும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை.  இந்தியாவைப் பொறுத்தமட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் தொழில் ஜவுளித் தொழில்.  அதேநேரத்தில், குறைத்த முதலீட்டில் நல்ல லாபமும் தொழிலைத் தொடர்ந்து விரிவாக்கும் வாய்ப்புகள் அதிகமும் பெற்ற தொழிலும் இதுதான். அடர்ந்த மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிக அளவில் இருக்க வேண்டும். அந்தவகையில் திருப்பூர், அதிக வேலைவாய்ப்பினை, அந்நியச் செலவாணியை, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஊராகத் திகழ்ந்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடு என்பது 110 பேருக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும். இதன் காரணமாகவே, அதிக வளர்ச்சியை நோக்கி இந்தத் தொழில் பயணித்தது. இன்னும் ஒரு பண்பாட்டை இங்கே மீண்டும் குறிப்பிட்ட ஆகவேண்டும். புதியவர்களுக்கு, தொழிலை மனமுவந்து கற்றுத் தருவதோடு மட்டுமல்லாது, அப்படிப் பயின்றவர்களுக்குச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதோடு, தொழிலைக் கற்றுக்கொடுத்தவரே முன்னின்று புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறும் வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து, மூலப்பொருட்களைத் தரும் நிறுவனங்களிடம் தாங்களே பிணையாக நின்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனைப் பெற்றுத்தந்ததுடன், சந்தை வாய்ப்புகளைக் கற்றுத் தந்து ஒரு சமூகமாக உயர்வதற்கான பண்பாட்டு விழுமியங்களைத் திருப்பூர் மக்கள் தங்களை அறியாமலே கொண்டிருந்தனர். இந்தத் திறந்த மனதும் பெருந்தன்மையான செயல்பாடும் திருப்பூரில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாக அமைந்தன. அது மட்டுமல்லாது, இங்குள்ள பெரும்பாலான தொழில் முனைவோர்கள் வேளாண் பின்னணியைக் கொண்டவர்களே. அவர்களுக்கு, வேளாண் வருவாய் சேமிப்பாக வைத்துள்ள உற்றார் உறவினர், மிகக் குறைந்த வட்டி அல்லது தங்களுக்குத் தேவையான நேரத்திற்கு தொகையைத் திருப்பித் தரவேண்டும் என்னும் நிபந்தனையோடு வட்டி இல்லாமலும் கடன் கொடுத்தனர். வங்கிக் கடனுக்குப் பிணையாக அசையாச் சொத்துக்களை வழங்க இயலாதவர்களுக்கு, இதுபோன்ற கடன் வசதிகள் பெரும் பேறாக அமைந்தன.   ஏற்றுமதி செய்வதிலிருக்கும் அபாயம் குறித்து மேலே பார்த்தோம். அதற்கான தீர்வாக, மத்திய அரசின் ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் (ECGC), இறக்குமதியாளர்களின் பின்னணியை, அதற்கென உள்ள மதிப்பீட்டு நிறுவனங்கள் வழியாகப் பெற்று, அதற்கேற்ப கடன் உத்திரவாதங்களை அளித்தனர். இதனால் பாதுகாப்பான ஏற்றுமதி என்கிற நிலையை எட்ட முடிந்தது. சுருங்கச் சொன்னால், இது ஒரு காப்பீட்டுத் திட்டம் போலச் செயல்படும். பணத்திற்கான உத்திரவாதத்தைக் கொடுப்பதற்கு நாம் சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு வட்டி மானியத் திட்டங்களுடன், மாநில அரசும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கடன் உதவிகளை விரைவாக அளித்ததும் இந்தத் தொழில் வளரப் பெருமளவு உதவியது. தற்சமயம் சிறிதும் பெரிதுமாக சுமார் 20000 நிறுவனங்கள் வாயிலாக, சுமார் 60000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது எனில், இவை அனைத்திற்குமான அடிப்படை முன்பே குறிப்பிடப்பட்ட பல்வேறு கடன் உதவிகளே. தொழில் வளர்ச்சிக்கான அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். இனி தொழில் சந்தித்துவரும் பிரச்சனைகள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான தீர்வுகள் போன்றவற்றை இனி அடுத்தடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம். மீண்டும் திங்களன்று புதிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன். நம்பிக்கையுடன் நடைபோடுவோம்.

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 5 முந்தைய 4 பகுதிகளில் திருப்பூரின் அடிப்படைத் தொழில் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் ஆதரவுக்கும் சமூக ஊடகத் தொடர்புத் தளங்கள் வாயிலாக கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோருக்கும் நன்றிகளும் பேரன்பும். இந்தப்ப பகுதியில் திருப்பூரில் தயாராகும் ஆடைகள் சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன, அங்குள்ள வர்த்தகக் கட்டமைப்பு குறித்தான விவரங்களைக் காண்போம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதிக்குத் தயாராகும் ஆயத்த ஆடைகள், ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இவற்றில் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 85% அளவிலும் இதர நாடுகளுக்கு 15% அளவிலும் ஏற்றுமதி நடைபெறுகிறது. இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பை, இறக்குமதியாளர்கள், சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் என்று பிரிக்கலாம். இவற்றைக் குறித்து தனித்தனியே காண்போம்.   இறக்குமதியாளர்கள் இறக்குமதி நிறுவனங்கள், அங்குள்ள நிகழ்நேரத் தேவைகளுக்கேற்ப ஆடை வடிவமைப்பளர்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில், வண்ணங்களில், டிசைன்களை அமைத்து, அவற்றை இங்குள்ள தங்களுடைய வர்த்தகத் தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடை மாதிரிகளைப் பெற்று, அவற்றை அங்குள்ள பல்வேறு சிறிதும் பெரிதுமான சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு எடுத்துச்சென்று, அவர்கள் தேர்ந்தெடுக்கும் மாதிரிகளில் ஆர்டர்களைப் பெற்று, அவற்றை மொத்தமாகத் தொகுத்து, இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மொத்த ஆர்டர்களாக வழங்குவர். குறித்த காலக்கெடுவுக்குள் அந்த ஆர்டர்களை இங்குள்ள நிறுவனங்களுக்கு அனுப்பி, தயாரிப்புப் பணிகளை முடித்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளைப் பெற்று சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். பல இறக்குமதியாளர்கள், தாங்களே நிகழ்நேரத் தேவைக்கேற்ப டிசைன்களை உருவாக்கி, அதை மொத்த ஆர்டர்களாக இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து பெற்று, விற்பனை செய்வர். இந்தச் சூழலில் இறக்குமதியாளர்களுக்கும் ஏற்றுமதியளர்களுக்கும் மட்டுமே தொடர்பு இருக்கும். தரக் கட்டுப்பாடு, விலை நிர்ணயம், ஏற்றுமதிக்கான பணப் பரிவர்த்தனை அனைத்திற்கும் இறக்குமதி நிறுவனமே பொறுப்பு. சில்லறை வர்த்தக நிறுவனங்கள்  இறக்குமதியாளர்கள் அல்லாது, சில்லறை வர்த்தக நிறுவனங்களே நேரடியாக இங்குள்ள ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தகம் செய்வதும் உண்டு. நிகழ்நேரத் தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஆர்டர்களை வழங்கி, குறித்த காலக்கெடுவுக்குள் உற்பத்தி செய்யப்பெற்று, தங்களின் வர்த்தகச் சங்கிலியில் உள்ள ஆடையகங்களில் விற்பனை செய்வர். இதில், ஆடைகளை மட்டுமே விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள், பல்வேறு நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள் என இரண்டு விதமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், முதலாம் வகைக்கு உதாரணமாக நமது நாட்டில் உள்ள ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற நிறுவனங்களையும் இரண்டாம் வகைக்கு உதாரணமாக பிக் பஜார், டி மார்ட் போன்ற  நிறுவனங்களையும் குறிப்பிடலாம். (பிக் பஜார் நிறுவனம் தற்போது மூடப்பட்டுவிட்டது). பிராண்டுகள் இவை பிரத்தியோகமாக உருவாக்கப்படும் ஆடைகள். நிகழ்நேரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு பிராண்டும் தங்களுக்கான தனித்துவமான கொள்கை வடிவமைப்புக்களின் அடிப்படையில், தங்களின் ஆடை வடிவமைப்புக்கென்றே உள்ள குழுவின் வாயிலாக டிசைன்களை உருவாக்கி, அவற்றை இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் ஆடைகளாகத் தயாரித்து ப்ராண்டுகளுக்கென்றே பிரத்தியோகமாக அமைக்கப்பெற்ற கடைகளிலும் பல்வேறு பிராண்டுகள் விற்பனை செய்யும் வர்த்தகச் சங்கிலி அமைப்புகளின் வாயிலாகவும் விற்பனை செய்வர். ப்ராண்டுகளுக்கான உதாரணமாக யூ.எஸ் போலோ, லெவிஸ், கேப், கேஸ், பெனட்டன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இறக்குமதியாளர்களைத் தவிர்த்து, சில்லறை வர்த்தக நிறுவனங்களும் ப்ராண்டுகளும் இணையத்தின் வாயிலாகவும் தங்களின் விற்பனையை மேற்கொள்கின்றன. மேற்சொன்ன மூன்று வகை இறக்குமதி அமைப்புகள், இங்குள்ள நிறுவனங்களில் நேரடியாகவோ முகவர்கள் வாயிலாகவோ அல்லது இந்தியாவில் அமையப்பெற்ற தங்களின் சொந்த அலுவலகத்தின் வாயிலாகவோ வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தரக்கட்டுப்பாடு, ஆடைகள் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களின் அமைப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். இவை தவிர, ஆடைகளைத் தரச் சோதனை செய்வதற்கான சர்வேதேசப் பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட தங்களின் அமைப்புகளை இந்தியாவில் ஆடை ஏற்றுமதி அதிகமாக நடைபெறும் நகரங்களில் ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், திருப்பூரில், பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச ஆடை தொடர்பான பரிசோதனைக் கூடங்களை இங்கு நிர்மாணித்து, தரச் சோதனைகளை மேற்கொள்கின்றன. இந்தக் கூடங்களில், ஆடைகளின் எடை, அதில் உள்ள சாயத்தின் தன்மை, ஆடைகளின் நிலைத்தன்மை, ஆடைகளைத் தயாரிக்கும்போது உபயோகித்த பலவகை ரசாயனங்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டதா, ஆடைகளின் சுருங்கும் தன்மை என, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த முடிவுகள் இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அம்முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். ஏற்றுமதிக்குத் தயார் நிலையில் இருக்கும் ஆடைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை இறக்குமதி நிறுவனங்களால் நியமனம் செய்யப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அல்லது சொந்த அலுவலகத்தின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்வர். இதில், ஆர்டர்கள் பெறப்பட்டபோது ஏற்றுமதி நிறுவனங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட தரத்தின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? அடிப்படைக் குறைபாடுகள் உள்ளதா? என்றெல்லாம் சோதித்து, அந்தச் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் தவறும்பட்சத்தில் ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி மறுக்கப்படும். இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், எவ்வாறு வர்த்தக வாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்கிற கேள்வி இந்தத் தொழிலில் இல்லாதோருக்கும் இந்தத் தொழிலின் மீதான ஈர்ப்பு உள்ளவர்களுக்கும் இயல்பாகவே எழும். வர்த்தகம் சார்ந்த வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு நடைபெறும் கண்காட்சிகளில் பங்கு பெறுவது, முகமை அலுவலகங்கள், முகவர்கள், இறக்குமதி நிறுவனங்களின் தேடல், இணையம், உற்பத்தி நிறுவனங்களின் பின்னணி போன்ற பல்வேறு வகைகளில் வர்த்தக வாய்ப்புகள் பெறப்படுகின்றன.  திருப்பூரைப் பொறுத்தமட்டில், நிட்டட் கார்மெண்ட்ஸ் என்னும் பின்னலாடை மட்டுமே பிரதானமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு குழந்தைகள், சிறுவர், பெரியவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிற்குமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், டி ஷர்ட், ஸ்போர்ட்ஸ் வேர், இரவு உடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை இங்கு பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாகப் பதிவு செய்யவேண்டுமெனில் இன்னும் சில அத்தியாயங்கள் தேவைப்படும். திருப்பூர் என்னும் சுயம்புவாக உருவாகிய தொழில் நகரத்தின் அடிப்படைகளைப் பற்றிப் பார்த்துவருகிறோம். இன்னும் இந்தக் கட்டுரைத் தொடரின் மையப்புள்ளிக்கு நாம் செல்லவில்லை. நேரடியாக அந்தப் புள்ளியிலிருந்து எழுத இயலும் என்றாலும், இந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கும் பெரிய புரிதல் தேவை இருக்கும் என்பதை உணர்ந்தே, தோற்றம் முதல் கடந்துவந்த பாதைகளை விவரித்து வருகிறேன். அடுத்து, பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பற்றிப் பார்த்த பிறகு, இன்றைய தடுமாற்றம், அதற்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான வழிகள் குறித்து எழுத விழைகிறேன். பொறுமையுடன் அடுத்தடுத்து வரும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டுகிறேன். இனிவரும் காலங்களில், தவிப்பைத் தவிர்த்து தளராமல் முன்னேற வேண்டும் என்ற நோக்கமே இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. வெள்ளியன்று மீண்டும் சந்திப்போம்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

தொழிலாளர் பங்களிப்பு பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் உற்பத்திப் படிநிலைகள் ஆகியவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தத் தொழிலின் அடிநாதமும் வெற்றிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றுமான தொழிலார்களைக் குறித்து இந்தப் பகுதியில் காண்போம். நூற்பாலைகள் அதிகமிருந்த ஊர் திருப்பூர் என்ற தரவை முன்பே பதிவு செய்திருந்தோம். அந்தவகையில், பின்னலாடைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் எளிதாகப் பங்குபெற இயன்ற சூழல் அமைந்தது. ஆடை உற்பத்தியில் பல்வேறு படிநிலைகள் கொண்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் வாய்ப்புகள் அமைந்தன. அதிகப்படியான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அமையப்பெற்றதும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிருந்து திருப்பூரை நோக்கிப் பலர் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தனர். திருப்பூருக்கு வேலை செய்து பொருளீட்ட வந்த யாரையும் திருப்பூர் கைவிடவில்லை என்பதே நிதர்சனம். எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாமல் திருப்பூரின் தொழிற்சாலைகளுக்கு வேலை கேட்டு வந்த ஒவ்வொருவரையும் அடிப்படைச் சம்பளம் ஒன்றை நிர்ணயம்செய்து, அவருக்குத் தேவையான பயிற்சிகளை நிகழ்நேரத் தொழிற்சாலை இயக்கத்தின்போதே அளித்து, ஒருகட்டத்தில் நன்கு தேர்வு பெற்றபின், திறனுக்கு ஏற்ற ஊதியத்துடன் பணியாற்றி வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைக்கு அவரை நகர்த்திச் சென்றது வரலாறு. பின்தங்கிய மாவட்டங்கள், குறிப்பாக வேளாண் மற்றும் இதர பணிகளுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது பொருளாதார மேம்பாட்டிற்காகத் திருப்பூரை நோக்கி வந்ததும் அப்படி வந்த ஒவ்வொருவரையும் திருப்பூர் கைவிடாமல் சுவீகரித்ததோடு மட்டுமல்லாமல் பொருளாதார மேம்பாட்டையும் வழங்கி, வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றது. பல்வேறு தொழிலாளர்களை முதலாளிகளாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் சமூகத்திலிருந்து ஏரளமான பட்டதாரிகள் உருவாகி சமூகத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் மாற்றங்களும் இங்கு நிகழ்ந்துள்ளன. இங்குள்ள தொழிலாளர்களும் சரி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில் முனைவோர்களும் சரி, எப்பொழுதும் தங்களுக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டதே இல்லை. எந்தவொரு தொழிலாளியிடம் உரையாடினாலும்  தான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுவதைக் காட்டிலும் ‘எங்க கம்பெனி’ என்பதை மிகுந்த உரிமையுடனும் வாஞ்சையுடன் குறிப்பிடுவர். ஏற்றுமதி ஆடைகளைக் குறித்த நேரத்தில் அனுப்பவேண்டிய நெருக்கடியான சூழல்கள் அடிக்கடி ஏற்படும். அந்த நேரங்களிலெல்லாம் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றே சொல்லவேண்டும். அதேநேரத்தில் தொழில்முனைவோர்களும் உரிய முறையில் தொழிலாளர்களின் மாண்பை மதித்து, அவர்களை நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே கருதுகின்றனர். தொழிலாளர்கள் என வரும்போது, தொழிற்சங்கங்களின் பங்களிப்பை நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். பஞ்சாலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, தொழிற்சங்கங்கள் மிக சிறப்பாக இயங்கி வந்தன. அதன் தொடர்ச்சியாக, பின்னலாடைத் தொழிலார்களுக்கான தொழிற்சங்கங்கள், பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் தொடங்கப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். 1984ஆம் ஆண்டு வரலாற்று ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பஞ்சப்படி போராட்டம், நீண்ட நாட்கள் வேலை நிறுத்தமாக நடைபெற்று, பலகட்டப் பேச்சுவாத்தைகளுக்குப் பிறகு முடிவுற்றது. தொழிற்சங்கங்களுக்கும் தொழில் முனைவோர் சங்கங்களுக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு பேணப்பட்டால் மட்டுமே எந்தவொரு தொழிலும் சிறப்பாக நடைபெறுவதோடு அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்லும் என்பது அடிப்படை. அந்தவகையில், அனைத்துத் தொழிற்சங்கங்களும் பிரதான தொழில்முனைவோர் சங்கங்களும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து, ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு வேலை நிறுத்தமோ சிறு சலசலப்போ இல்லாமல் தொழில் பயணிக்கிறதென்றால், இருதரப்பிற்கும் ஏற்பட்டுள்ள பரஸ்பர புரிதலும் உரையாடல்களுமே காரணம். தொழிலாளர்கள் – தொழில் முனைவோர்கள் உறவிலும் மற்ற எந்த ஊர்களிலும் காண இயலாத பண்பாட்டினைத் திருப்பூரில் காணலாம்.  சம்பளம் மற்றும் தொழிலார்களின் இதர உரிமைகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போதெல்லாம், அதைப் புதிதாகக் காண்பவர்களுக்கு, தொழிலாளர் – தொழில் முனைவோர் உறவு கெட்டு, இனி தொழிலுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்கிற தோற்றம் இயல்பாகவே ஏற்படும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. அவரவர் கருத்தில் அவரவர் வலுவாக நிற்பர். ஒருகட்டத்தில் மிகச் சுமூகமான தீர்வை நோக்கி நகர்ந்து, அதை நடைமுறைக்குக் கொண்டுவந்து தொழில் தடைபடாமல் நடைபெறச் செய்வர். தொழில் முனைவோர் சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுத் தரப்பு ஆகியவை இணைந்து, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தி, தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது வேறு எங்கும் காணமுடியாது ஒரு நடைமுறையாகும். ஒரு விடயத்தை இங்கே குறிப்பிடாவிட்டால் தொழிமுனைவோன் என்கிற முறையில் நான் நன்றி மறந்தவனாவேன். ஏனெனில் பின்னலாடைத் தொழில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சோதனைகளைச் சந்தித்து, ஸ்தம்பித்து நின்ற நேரங்களிலெல்லாம், போர்க்களத்தில் முன்நின்று களமாடி, போரை வெல்வதற்கான காரணமாக அமையும் முன்னணி வீரர்கள் போல், இந்தத் தொழிலைக் காப்பாற்றிய பெருமை அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களையே சாரும். நான் மேலே குறிப்பிட்ட தரவுகள் மூலம் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வெற்றிக்கான பின்புலங்களில் தொழிலாளர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தொழில் வெற்றியில் மட்டுமல்லாது, எங்கெல்லாம் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் திருப்பூரின் உதவிக்கரம் முதலாவதாக நீள்வதுடன், அதிகளவு பங்களிப்பை நல்குகிற செய்தியையும் நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும். அதன் அடிப்படை, நான் மேற்சொன்ன மனிதநேயமிக்க தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான உறவுப் பாலமே. கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் மிகக் கொடூரமான காலகட்டம் என்பதை நாம் அனைவருமே அனுபவத்தில் கண்டோம். குறிப்பாக, நாடெங்கிலும் புலம்பெயர்த் தொழிலாளர்கள் சந்தித்த அவலங்களை நாடே பார்த்தது. ஆனால் திருப்பூர் மட்டுமே அந்தச் சிக்கலைச் சிறப்பாகக் கையாண்டது என்றால் அது மிகையில்லை. ஒரு தொழிலாளர்கூடப் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டதோடு, ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் ரயில்களிலும் பேருந்துகளிலும் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிய பெருமை திருப்பூர் தொழில் சமூகத்தையே சாரும். அதுமட்டுமல்ல; அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் ஆகியவற்றோடு இலவசத் தடுப்பூசியை அரசு அறிவிக்கும் முன்னரே, கட்டணம் செலுத்தி பல ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்திய அந்த நேயமும் திருப்பூரையே சாரும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஏறத்தாழ 19 மாநிலத் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரின் விருப்ப மாநிலம் தமிழ்நாடு என்றாலும் அதில் திருப்பூர் முதன்மை வகிக்கிறது. இதற்குக் காரணம், பொருளீட்டல் வாய்ப்புகளைத் தாண்டி, தொழிலாளர்களை சரிசமமாக, சக மனிதனாக மதிக்கும் மக்கள் திருப்பூர் மக்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், சப்பாத்தியையும் இட்லியையும் பரஸ்பரம் பங்கிட்டு உண்ணும் பண்பாட்டினை, சக மனிதனை நேசிக்கும் அறத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ள மக்கள் திருப்பூர் மக்கள் என்பதே பெருமைமிகு உண்மை. தொழில் மற்றும் அது வளர்ந்த கதை, அதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் பங்களிப்புகளைப்பற்றி இதுவரை பார்த்தோம். அடுத்த பகுதியில், திருப்பூரிலிருந்து வர்த்தக உறவினை மேற்கொள்ளும் வர்த்தகர்கள், சந்தைகள் ஆகியவற்றைப்பற்றியும் அதைத் தொடர்ந்து, இன்றைய தேக்கநிலை, செய்யத் தவறிய மற்றும் மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிப் பார்ப்போம். தொடர்ந்து பயணிப்போம், நம்பிக்கையுடன்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை – 3

திருப்பூர் எனும் திருப்புமுனை – 3

பொதுவாக உலகெங்கிலும் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்கு வாடிக்கையாளர்களால் கொடுக்கப்பட்ட ஆர்டருக்குத் தேவையான ஆடைகளை உற்பத்தி செய்ய, தங்களின் தேவைக்கேற்ற தர வரையறைக்குள் துணி தயாரிக்கும் ஆலைகளிடம் துணிகளை ஆர்டர் செய்து பெற்று, ஆடைகளைத் தயாரித்து அனுப்புவர். திருப்பூரைப் பொறுத்தமட்டில், இங்கு துணி தயாரிப்பு நிறுவனம் என்பது கிடையாது (அண்மைக் காலங்களில் உருவாகி வருகிறது). ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தேவைகளுக்கேற்ப நூலை மொத்தமாக நூற்பாலைகளிலிருந்து கொள்முதல் செய்து, அதனைப் பல்வேறு படிநிலை சார்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடைத் தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் துணியாக உற்பத்தி செய்யபடும். முதல் நிலை, நிட்டிங் என அழைக்கப்படும். வாங்கிய நூலை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த குறியீடுகளுக்கு உட்பட்டு, அதற்குரிய துணி உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டு துணியாகப் பின்னல் செய்யப்படும். அடிப்படைத் துணி இவ்வாறாகத் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்நாட்டு இயந்திரங்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்ட நிலை மாறி, தற்போது அதிநவீன இறக்குமதி இயந்திரங்கள் வாயிலாக, அதிகளவு துணி உற்பத்தி நடைபெறுகிறது. உற்பத்தி செய்யபட்ட துணி, வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள விவரக்குறிப்பிற்கு உட்பட்டு சாயம் ஏற்றப்பட்டு அல்லது சலவை செய்யப்பட்டு, சில சமயங்களில் துணியாக இருக்கும் நிலையிலேயே பிரிண்ட் செய்யப்பட்டு, உரிய செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஆடைகளாகத் தைத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். இதில் ஆடைகளின் வடிவத்திற்கு ஏற்ப பிரிண்டிங், எம்பிராய்டரி போன்ற மதிப்புக்கூட்டல் செய்யப்படும். இது தவிர, அக்சஸரீஸ் என அழைக்கப்படும் லேபிள், டேக், ஸ்டிக்கர் மற்றும் ஆடைகளைப் பாதுகாப்பாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப நெகிழிப் பைகள், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவை அதற்குரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து பெறப்பட்டு ஆடைகளைப் பேக்கிங் செய்து அனுப்பிவைக்கப்படும். மேற்சொன்ன விபரங்களைக்கொண்டு திருப்பூரின் பின்னலாடை உற்பத்திச் சங்கிலியைச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம். இந்த உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலும் நூறு முதல் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. 5 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் – நிறுவனத்தின் உற்பத்திப் பின்னணி மற்றும் திறன் அடிப்படையில் – முதலீடு செய்யப்பட்டு இயங்கிவருகின்றன. குறைந்தபட்சம் 5 முதல் ஆயிரங்கள் என்னும் எண்ணிக்கையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த உற்பத்திச் சங்கிலியின் தலைமைப் பொறுப்பு, ஏற்றுமதி அல்லது உள்நாட்டு ஆடை உற்பத்தியாளரையே சாரும். ஒவ்வொரு நிலை சார்பு நிறுவனமும் அடுத்தடுத்த நிலை சார்பு நிறுவனங்களைச் சார்ந்தே இயங்குகிறது. சார்ந்து இயங்கினாலும் ஒவ்வொரு படிநிலை உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு மட்டுமே இந்த மாதிரியான உற்பத்திச் சங்கிலியை வெற்றிகரமாக இயங்க செய்யும். இதுவொரு இயல்பான கலாச்சாரமாகவே இங்கு உருவெடுத்துள்ளது. இப்படியான ஒரு அமைப்பை நான் அறிந்தவரை உலகளவில் திருப்பூரில் மட்டுமே காண இயலும். திருப்பூரில் உற்பத்தியாகும் ஒவ்வொரு பின்னலாடையையும் ஒரு பண்பாட்டு உருவாக்கமாகவே நாம் பார்க்கலாம். இந்தப் பண்பாட்டு இயக்கம் பல ஆயிரம் நபர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்தியது. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளியாக உயரப் பெரும் காரணம் இந்தப் பண்பாட்டு விழுமியமே என்று சொன்னால் மிகையல்ல. ஒரு தொழில் நகரம் உருவாகும்போது, ஒரு சமூகக் கட்டமைப்பு உருவாகும். அந்த வகையில், இங்கு பனியன் தொழில் சாராத பல தொழில்கள், அதாவது ஒரு கை வண்டியில் காய்கறி, பழங்கள் விற்கும் எளிய வியாபரி முதல், மளிகை, உணவகம், தங்கும் விடுதிகள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், மருத்துவமனைகள், திரை அரங்குகள், நகைக் கடைகள், அடுமனைகள் (பேக்கரி) என, பல அடுக்குகளில் தொழில்கள் உருவாகிச் செழித்து வளர்ந்துள்ளன. இப்படியாக, திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது, மிகப் பெரிய கட்டமைப்பைக் கொண்டது. ஒரு கிராமமாக ஒரு காலத்தில் அறியப்பட்ட ஊர், இன்று ஒரு மாவட்டத் தலைநகராக எவ்வாறு தன்னைத்தானே உயர்த்திக்கொண்டது என்பதை மேற்சொன்ன விவரங்கள் வாயிலாகப் புரிந்துகொள்ளலாம். இங்கு பின்னலாடைத் தொழிலுக்கு ஒரு பிரச்சனை என்றால், அதன் பாதிப்பு மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவே இவ்வளவு செய்திகளைக் கூறவேண்டியுள்ளது. இந்தத் தொடரின் இரண்டாம் பகுதியை வாசித்த ஒரு சகோதரி, நொய்யல் ஆற்றின் நிலை குறித்த தனது கவலையைப் பகிர்ந்திருந்தார். அவரின் கவலை, ஒட்டுமொத்த நொய்யல் வழித்தடச் சமூகத்தின் கவலை என்பதாகவே நாம் கருதலாம். ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் அதில் ஒரு அங்கம். கண்களை விற்று ஓவியம் வாங்குவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒட்டுமொத்தத் தொழில்துறையினரின் நிலைப்பாடும் அதுதான். இந்தத் தொடரில், நொய்யல் குறித்து, விருப்பு வெறுப்பின்றி தனி அத்தியாயமே வரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வெள்ளிக்கிழமை நான்காம் அத்தியாயத்தில் மற்றுமொரு தரவோடு உங்களைச் சந்திக்கிறேன்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

முதல் பகுதிக்குக் கிடைத்த ஆதரவு, மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்புணர்வையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இதுவொரு வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் உள்வாங்கி, உணர்ந்து, நம்பிக்கையுடன் தொடர்வோம். பொதுவாகவே, கொங்கு மண்டலப் பகுதி என்பது மழை மறைவுப் பிரேதேசம் ஆகும். இந்தப் பகுதியின் நீராதாரம் நொய்யல், பவானி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளையும் பருவமழையையும் மட்டுமே சார்ந்துள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் விவசாயம், பருவமழை சார்ந்த விவசாயம் என்பதால், பொருளீட்டலுக்கான தேடல் கொங்குப் பகுதிகளில் இயற்கையாகவே அதிகம். இதன் காரணமாகவே, பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இங்கு பல்கிப் பெருகி, தமிழ்நாட்டின் தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளிலும் பொருளாதாரம் மற்றும் உற்பத்திக் குறியீடுகளிலும் கொங்குப் பகுதி எப்பொழுதும் முன்னணி வகிக்கிறது. ஒட்டுமொத்த கொங்குப் பகுதிகளில் ஜவுளித் தொழில் பிரதானமாக வளர்ந்ததற்கு, பருத்தி உற்பத்தியோடு, நான் மேற்சொன்ன காரணங்களும் உள்ளடங்கியுள்ளன. இதையும் கடந்து, ஒரு வரலாற்றுத் தரவையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கொடுமணல் என்னும் ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் பட்டுப்பூச்சி வளர்ப்பும் பட்டாடைகள் நெய்து ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியும் நடந்துள்ள விவரங்கள் கிடைத்துள்ளன. எனவே, இங்குள்ள மக்களின் மரபணுவிலேயே ஜவுளித்தொழிலின் தாக்கம் இருப்பதே, இங்கு இந்தத் தொழில் வளர முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறலாம். 1950-களில் வேறொரு பணியின் காரணமாகக் கல்கத்தா சென்ற திரு. குலாம் காதர் அவர்கள், அங்கிருந்து தையல் இயந்திரங்களை வாங்கிவந்து, இங்கு பனியன் உற்பத்தியை முன்னெடுத்தார்.  தொடக்கத்தில் வெள்ளை நிற உள்ளாடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. நூலைத் துணியாகப் பின்னுவதற்கான நிட்டிங் இயந்திரம் லூதியானாவிலிருந்து வாங்கப்பட்டு, துணி உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து, அந்தத் துணிகளை வெள்ளையாக்கும் வேலைகளைச் செய்ய சலவைப் பட்டறைகள் உருவாக்கப்பட்டன. 1970-களில் துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் சாய ஆலைகள் தொடங்கப்பெற்று, உள்ளாடைகளைத் தாண்டி மேலாடை உற்பத்தியும் தொடங்கியது. பின்னர் ஆடைகளில் அச்சு (பிரிண்ட்) செய்வதற்கான ஆலைகளும் உருவாகின. ஏற்றுமதித் தரம் வாய்ந்த ஆடைகளின் தயாரிப்பு தொடங்கப்பெற்று, 1980-களில் ஏற்றுமதியும் தொடங்கியது. ஒரு தொழில் அமைக்க ஏதுவான சுற்றுச்சூழல், அந்தத் தொழில் குறித்தான நுட்பங்கள், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், அதனைச் சந்தைப்படுத்தும் வழிகள், எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதாரம், இவையனைத்தையும்  உள்ளடக்கியதுதான் வெற்றிகரமான உற்பத்தித் தொழிலுக்கான அடிப்படை. எந்தவித தொழில்நுட்ப, கல்விப் பின்புலமோ வழிகாட்டுதல்களோ இல்லாது, ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து’ என்னும் திருவள்ளுவரின் வாக்குக்கேற்ப, உயர வேண்டும் என்கிற எண்ணமும் அதற்கான தேடலும் தேடலைப் பகிர்தலும் அதன் வாயிலாக ஒரு சமூகமாக உயர்ந்ததும் திருப்பூரின் வெற்றிக்கான அடிப்படை. இந்தத் தொழிலும் இந்த ஊரும் சுயம்புவாக உருவானவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. 1980-களில் ஒரு தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே பெரும் செலவு செய்து, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அதுவும், வெளிநாடுகளுக்குத் தொடர்பு கொள்வது அத்தனை எளிதல்ல. அந்தக் காலகட்டத்தில் திருப்பூர் ஒரு சிறு நகரம்; ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு அங்கம். வெளிநாடுகளுக்கான தொலைபேசித் தொடர்புக்கு கோவைக்குச் செல்லவேண்டிய சூழல் இருந்தது. ஏற்றுமதிக்கான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு, அதற்கான அனுமதியை அளிக்கும் மத்திய  அரசின் அலுவலகங்களை நோக்கி சென்னை, பெங்களூரு, மும்பை அல்லது டெல்லி செல்லவேண்டும். இத்தகையை சிரமங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களின் மனோபலமும் விடாமுயற்சியும் எதற்கும் துணிந்த செயல்பாடுகளும் இந்தத் தொழிலின் ஆரம்பகாலச் சிரமங்களைக் கடந்து முன்னேற, அடுத்தடுத்து இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்குப் பெருமளவு உதவியது. பொதுவாக ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கும்போது, எளிதாக அந்தத் தொழிற்சாலைக்குள் அனுமதிப்பதோ நுட்பங்களைக் கற்று கொடுப்பதோ சந்தையைப் பற்றிய அறிவினைப் பகிர்வது என்பதோ நடக்காது. இன்றும், இந்தத் தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள காலத்திலும் பல இடங்களில் இது சாத்தியமில்லை. ஆனால், திருப்பூரைப் பொறுத்தமட்டில் இந்தத் தொழில் வளர்ந்ததற்கான பிரதான காரணங்கள் பல என்பதை ஒவ்வொரு இடத்திலும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். அதுபோலவே, பகிர்தல் என்பது திருப்பூரின் வளர்ச்சிப் பின்புலத்தின் பிரதான காரணங்களில் ஒன்று. தொழில் நுட்பங்கள், நிதியாதாரத் திரட்டல், சந்தை வாய்ப்புகள், மூலப்பொருட்களின் மூலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எந்தவிதத் தயக்கமுமின்றி இந்தத் தொழிலை முன்னெடுக்க வந்த நண்பர்கள், உற்றார், உறவினர், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் நண்பர்கள் எனப் பகிர்ந்து, அவர்களையும் தொழிலை நிறுவச்செய்த பண்பாடு  திருப்பூரைத் தவிர வேறெந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம். இதைச் சொல்வதால் மற்ற தொழில் நகரங்களைத் தாழ்த்தியோ அல்லது திருப்பூரை உயர்த்தியோ கூறுவது நோக்கமல்ல. இங்குள்ள இயல்பினையும் சுயம்புவாக இந்தத் தொழில் உருவானதையும் பல பத்தாண்டுகளாக நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் திருப்பூரைப் போன்ற ஒரு தொழில்நகரைத் தங்கள் மாநிலங்களில் அமைக்க முயன்று இயலாமல் போனதும் இன்றைய, மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  திரு. பியூஸ் கோயல், பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில்சார் கூட்டங்களில், ‘திருப்பூரைப் போன்று, இந்தியா முழுவதும் 75 திருப்பூரை உருவாக்கவேண்டும்’ என்று பதிவு செய்வதின் அடிப்படையும் திருப்பூரின் இந்தப் பண்பாட்டு விழுமியமே. ‘திருப்பூர் எனும் திருப்புமுனை’ கட்டுரை, இன்றைய சிக்கலான சூழலை விவரிக்கத்தானே! ஏன் பழைய வரலாறுகளைப் பேசவேண்டும்?’ என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். திருப்பூரின் தொழில், அடுத்த தலைமுறை மற்றும் சில தொழிற்சாலைகளில் இரண்டாம் தலைமுறைக்கு நகர்ந்துள்ள சூழலில், ஜவுளித் தொழிலைச் சாராதவர்களும் இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, அவர்களுக்கும் இந்தத் தொழில் கடந்து வந்த பாதை, அதைக் கடக்க ஏற்பட்ட சிரமங்கள், அந்தப் பயணத்தில் நேர்ந்த நல்ல விடயங்கள் மற்றும் தவறான முடிவுகள், செய்யத் தவறிய விடயங்கள் உள்ளிட்டவற்றை விவரித்தால் மட்டுமே, அடுத்து பயணிக்க வேண்டிய பாதையை வலுவாக அமைத்துக்கொள்ளலாம் என்பதாலேயே முந்தைய வரலாறுகளைச் சொல்ல வேண்டியுள்ளது. எனவே கடந்தகால வரலாற்றை மிகச் சுருக்கமாகப் புரிந்துகொண்டு, மேலும் பல்வேறு தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை

திருப்பூர் எனும் திருப்புமுனை

திணறுகிறது திருப்பூர், திண்டாடுகிறது திருப்பூர், இனி பின்னலாடைத் தொழில் அழிந்துவிடும் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே இந்தச் சமூகத்தின் பேசுபொருளாக இருந்துவருகின்றன. உண்மை நிலவரம் என்ன? உள்ளபடியே இத்தொழில் அழிந்துவிடுமா? திருப்பூரின் எதிர்காலம் என்னவாகும்? ஊடங்கங்களிலும் பொதுமக்களிடமும் பரவும் செய்திகளுக்கும் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் தரவுகளை உள்ளடக்கிய அவதானிப்பை விடையாகப் பகிர்கிறார், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளரும் ஈஸ்டர்ன் குளோபல் க்ளோத்திங் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரும் ஒன்றிய அரசின் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிரந்தர அழைப்பாளரும் பி.எஸ்.ஜி. கல்லூரியின் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புப் பாடத்திட்ட உருவாக்கக் குழு உறுப்பினருமான குமார் துரைசாமி அவர்கள். கட்டுரையாளர் முன் குறிப்பு: இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் முன், அரசியல் சிந்தாந்தச் சார்புகளை விடுத்து, பொதுவான மனநிலையில் அணுகுமாறு வேண்டுகிறேன். பல்வேறு அனுமானங்களைக் கடந்து நியாயமாக எழுப்பப்படும் ஐயங்களை இயன்றவரை தீர்க்க முயல்கிறேன். திருப்பூரைப் பொறுத்தமட்டில், பெருமளவில் பருத்தி விளையும் நிலப்பரப்பாக ஒரு காலத்தில் அறியப்பட்டது. சுமார் 60 -70 ஆண்டுகளுக்கு முன்னரே ஜின்னிங் மற்றும் நூற்பாலைகள் அமையப்பெற்ற ஊர் என்றாலும் 1950களில் மதுரை, சேலம் போன்ற பகுதிகளில் உள்ளாடை தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இங்கு மிகச் சிறிய அளவில் பனியன் உற்பத்தி தொடங்கப்பட்டு படிப்படியாக முன்னேறியது. பெருமளவு வேளாண் சமூகமாக அறியப்பட்ட இப்பகுதி மக்கள், பின்னலாடைத் தொழில் முனைவோர்களாகவும் தொழிலாளர்களாகவும் இந்தத் தொழிலை முன்னெடுத்தனர். 1979 இறுதியில் இத்தாலி வர்த்தகர் ஒருவரின் வருகையைத் தொடர்ந்து இங்கிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பினைப் பெற்றது. அதற்கு முன்னர் ஏற்றுமதி ஆடைகள் இங்கு தயாரிக்கப்பட்டாலும் மும்பை, டெல்லி வர்த்தகர்கள் அதனைக் கொள்முதல் செய்து அவர்கள் நேரடி ஏற்றுமதியில் ஈடுபட்டுவந்தனர். 1984ஆம் ஆண்டு சுமார் 9 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்த இந்த நகரம், தற்போதைய நிலவரப்படி சுமார் 38 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி மற்றும் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி என்கிற அளவில் உற்பத்தியை மேற்கொள்கிறது. சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் தொழிலில் பணியாற்றுகின்றனர். 1984ஆம் ஆண்டு 300 நிறுவனங்கள் இருந்த ஊரில், தற்போது 20000 க்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்குகின்றன. பல்லடம் தாலுகாவில் ஒரு கிராமமாக அறியப்பட்ட திருப்பூர், இன்று ஒரு மாவட்டத்தின் தலைநகராக, உலகளவில் பின்னலாடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஊராக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பின்னலாடை ஏற்றுமதியில் 54% திருப்பூரிலிருந்து மட்டுமே உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளை உள்ளடக்கிய ஒரு தொழில் வளர்ச்சிக்கான நகரம் என்று உலகளவில் திருப்பூரை மட்டுமே அடையாளம் காட்ட இயலும். ஏனெனில், சமூகத்தின் அனைத்துத் தரப்பின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் கட்டமைப்பைத் தன்னகத்தே கொண்ட தொழில் நகரம் இது. இங்குள்ள நிறுவனங்களின் வரலாற்றுப் பின்னணிகளை ஆய்வு செய்தால், ஒன்று வேளாண் பின்னணி அல்லது நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி என்கிற பின்னணியைப் பறைசாற்றும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தொழில் மற்றும் நகரம் என்கின்ற பின்புலம். தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் வேலை இல்லை, பருவமழை தப்பியதால் பிழைப்புக்கு வழி இல்லை எனும் நிலை எழும்போதெல்லாம், திருப்பூர் போனால் நாம் மட்டுமல்ல; நமது குடும்பத்திற்கான வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும் என்கிற ஒரு காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொழிலாளர்களாக, நிர்வாகத்தின் அங்கமாக, திருப்பூரை நோக்கித் தனியாகவும் குடும்பமாகவும் பல்லாயிரக்கணக்கான பேர் புலம்பெயர்ந்து இங்கு குடியேறினர். அவர்களில் பலர், இன்றைய தேதியில் தொழில் முனைவோர்களாகவும் பலரின் குழந்தைகள் வாழ்வின் அடுத்த படிநிலையை நோக்கி நகர்ந்தும் இருக்கின்றனர். வந்தோரையும் வழியின்றித் தவித்தவர்களையும் அரவணைத்துக் காப்பாற்றிய நகரம் திருப்பூர். பனியன் உற்பத்தி என்பது பல்வேறு நிலைகளைக் கொண்டது. நூலில் தொடங்கி ஆடை நுகர்விற்கு வரும்முன், அடிப்படையில் குறைந்தது 7 நிலைகளைக் கடக்க வேண்டும். மிக நுட்பான வேலைப்பாடுகளைக் கொண்ட ஆடைகள் 15 நிலைகள் வரை கடந்து உற்பத்தி செய்யப்படும். உலகிலேயே மிக ஆரோக்கியமான, குழு சார் உற்பத்திச் சூழலைக் கொண்ட நகரம் திருப்பூர். ஒவ்வொரு படிநிலையிலும் ஏரளமான நிறுவனங்கள், பல்வேறு அளவுகளில் உற்பத்தியை மேற்கொள்கின்றன. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்ட நிறுவனங்களாகவே இவை இயங்குகின்றன. ஒவ்வொரு படிநிலையிலும் உள்ள குழுசார் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று ஆதரவாக, ஒற்றுமையுடன் செயல்படுவதே இந்த மாநகரின் பின்னலாடைத் தொழில் வளர்வதற்கான முக்கியக் காரணம். இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ‘இனி இந்தத் தொழில் உயிர்ப்புடன் இருக்குமா?’ என்று சமூகத்தில் எழுந்துள்ள கேள்வி, தொடர்ந்து என்னுள் எதிரொலித்துக்கொண்டே உள்ளது. தற்சமயம் கடும் நெருக்கடியில் இந்தத் தொழில் உள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இரு பெரும் கொரோனா பெருந்தொற்றுக் காலம், பஞ்சு விலை ஏற்றம், ரஷ்யா -உக்ரைன் போர், அதன் தொடர்ச்சியாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகிய காரணிகளால் தொடர்ந்து ஏற்றுமதியிலும் உள்நாட்டுச் சந்தையிலும் இந்தத் தொழில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும்15 முதல் 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. ஏறத்தாழ எல்லா நிறுவனங்களும் 50 முதல் 70 சதவீதக் கொள்ளளவிலேயே இயங்குகின்றன. மேற்சொன்ன காரணங்களைக் கடந்து, பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கச் சிக்கல், மின் கட்டண உயர்வு, வங்கிகளின் நடைமுறையில் மாற்றங்கள், அரசின் கொள்கைகளில் மாற்றம் என பிற காரணங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இவை ஒருபுறம் இருக்க, உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மேம்படுத்திக்கொள்ளாத சூழலும் ஒரு பெரும் காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. யார் வேண்டுமெனாலும் தொழிலில் ஈடுபட்டுப் பொருளீட்டலாம் என்கிற நிலை மாறி, தகுதி பெற்றுத் தொழிலில் ஈடுபட்டால் பொருளீட்டலாம் என்கின்ற நிலையை அடைந்து, தற்போது, தகுதியானவர்கள் மட்டுமே தொழிலில் ஈடுபட்டுப் பொருளீட்ட இயலும் என்கிற நிலைக்கு வந்துள்ளோம். அடுத்தடுத்த பகுதிகளில் மேற்சொன்ன பல்வேறு விடயங்களைப் பற்றி விரிவாகப் பேசி, இறுதியில், தகுதியானவர்கள் என்பதன் பொருள் என்ன என்பதை அறிவோம். நம்பிக்கை மட்டுமே இப்போதைய தேவை. தொடர்ந்து பயணிப்போம். (அடுத்த பகுதி வெள்ளிக்கிழமை வெளியாகும்)