திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

தொழிலாளர் பங்களிப்பு

பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் உற்பத்திப் படிநிலைகள் ஆகியவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தத் தொழிலின் அடிநாதமும் வெற்றிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றுமான தொழிலார்களைக் குறித்து இந்தப் பகுதியில் காண்போம்.

நூற்பாலைகள் அதிகமிருந்த ஊர் திருப்பூர் என்ற தரவை முன்பே பதிவு செய்திருந்தோம். அந்தவகையில், பின்னலாடைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் எளிதாகப் பங்குபெற இயன்ற சூழல் அமைந்தது. ஆடை உற்பத்தியில் பல்வேறு படிநிலைகள் கொண்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் வாய்ப்புகள் அமைந்தன. அதிகப்படியான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அமையப்பெற்றதும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிருந்து திருப்பூரை நோக்கிப் பலர் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தனர். திருப்பூருக்கு வேலை செய்து பொருளீட்ட வந்த யாரையும் திருப்பூர் கைவிடவில்லை என்பதே நிதர்சனம்.

எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாமல் திருப்பூரின் தொழிற்சாலைகளுக்கு வேலை கேட்டு வந்த ஒவ்வொருவரையும் அடிப்படைச் சம்பளம் ஒன்றை நிர்ணயம்செய்து, அவருக்குத் தேவையான பயிற்சிகளை நிகழ்நேரத் தொழிற்சாலை இயக்கத்தின்போதே அளித்து, ஒருகட்டத்தில் நன்கு தேர்வு பெற்றபின், திறனுக்கு ஏற்ற ஊதியத்துடன் பணியாற்றி வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைக்கு அவரை நகர்த்திச் சென்றது வரலாறு.

பின்தங்கிய மாவட்டங்கள், குறிப்பாக வேளாண் மற்றும் இதர பணிகளுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது பொருளாதார மேம்பாட்டிற்காகத் திருப்பூரை நோக்கி வந்ததும் அப்படி வந்த ஒவ்வொருவரையும் திருப்பூர் கைவிடாமல் சுவீகரித்ததோடு மட்டுமல்லாமல் பொருளாதார மேம்பாட்டையும் வழங்கி, வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றது. பல்வேறு தொழிலாளர்களை முதலாளிகளாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் சமூகத்திலிருந்து ஏரளமான பட்டதாரிகள் உருவாகி சமூகத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் மாற்றங்களும் இங்கு நிகழ்ந்துள்ளன.

இங்குள்ள தொழிலாளர்களும் சரி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில் முனைவோர்களும் சரி, எப்பொழுதும் தங்களுக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டதே இல்லை. எந்தவொரு தொழிலாளியிடம் உரையாடினாலும்  தான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுவதைக் காட்டிலும் ‘எங்க கம்பெனி’ என்பதை மிகுந்த உரிமையுடனும் வாஞ்சையுடன் குறிப்பிடுவர். ஏற்றுமதி ஆடைகளைக் குறித்த நேரத்தில் அனுப்பவேண்டிய நெருக்கடியான சூழல்கள் அடிக்கடி ஏற்படும். அந்த நேரங்களிலெல்லாம் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றே சொல்லவேண்டும். அதேநேரத்தில் தொழில்முனைவோர்களும் உரிய முறையில் தொழிலாளர்களின் மாண்பை மதித்து, அவர்களை நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே கருதுகின்றனர்.

தொழிலாளர்கள் என வரும்போது, தொழிற்சங்கங்களின் பங்களிப்பை நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். பஞ்சாலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, தொழிற்சங்கங்கள் மிக சிறப்பாக இயங்கி வந்தன. அதன் தொடர்ச்சியாக, பின்னலாடைத் தொழிலார்களுக்கான தொழிற்சங்கங்கள், பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் தொடங்கப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். 1984ஆம் ஆண்டு வரலாற்று ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பஞ்சப்படி போராட்டம், நீண்ட நாட்கள் வேலை நிறுத்தமாக நடைபெற்று, பலகட்டப் பேச்சுவாத்தைகளுக்குப் பிறகு முடிவுற்றது.

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் முனைவோர் சங்கங்களுக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு பேணப்பட்டால் மட்டுமே எந்தவொரு தொழிலும் சிறப்பாக நடைபெறுவதோடு அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்லும் என்பது அடிப்படை. அந்தவகையில், அனைத்துத் தொழிற்சங்கங்களும் பிரதான தொழில்முனைவோர் சங்கங்களும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து, ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு வேலை நிறுத்தமோ சிறு சலசலப்போ இல்லாமல் தொழில் பயணிக்கிறதென்றால், இருதரப்பிற்கும் ஏற்பட்டுள்ள பரஸ்பர புரிதலும் உரையாடல்களுமே காரணம்.

தொழிலாளர்கள் – தொழில் முனைவோர்கள் உறவிலும் மற்ற எந்த ஊர்களிலும் காண இயலாத பண்பாட்டினைத் திருப்பூரில் காணலாம்.  சம்பளம் மற்றும் தொழிலார்களின் இதர உரிமைகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போதெல்லாம், அதைப் புதிதாகக் காண்பவர்களுக்கு, தொழிலாளர் – தொழில் முனைவோர் உறவு கெட்டு, இனி தொழிலுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்கிற தோற்றம் இயல்பாகவே ஏற்படும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. அவரவர் கருத்தில் அவரவர் வலுவாக நிற்பர். ஒருகட்டத்தில் மிகச் சுமூகமான தீர்வை நோக்கி நகர்ந்து, அதை நடைமுறைக்குக் கொண்டுவந்து தொழில் தடைபடாமல் நடைபெறச் செய்வர். தொழில் முனைவோர் சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுத் தரப்பு ஆகியவை இணைந்து, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தி, தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது வேறு எங்கும் காணமுடியாது ஒரு நடைமுறையாகும்.

ஒரு விடயத்தை இங்கே குறிப்பிடாவிட்டால் தொழிமுனைவோன் என்கிற முறையில் நான் நன்றி மறந்தவனாவேன். ஏனெனில் பின்னலாடைத் தொழில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சோதனைகளைச் சந்தித்து, ஸ்தம்பித்து நின்ற நேரங்களிலெல்லாம், போர்க்களத்தில் முன்நின்று களமாடி, போரை வெல்வதற்கான காரணமாக அமையும் முன்னணி வீரர்கள் போல், இந்தத் தொழிலைக் காப்பாற்றிய பெருமை அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களையே சாரும்.

நான் மேலே குறிப்பிட்ட தரவுகள் மூலம் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வெற்றிக்கான பின்புலங்களில் தொழிலாளர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தொழில் வெற்றியில் மட்டுமல்லாது, எங்கெல்லாம் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் திருப்பூரின் உதவிக்கரம் முதலாவதாக நீள்வதுடன், அதிகளவு பங்களிப்பை நல்குகிற செய்தியையும் நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும். அதன் அடிப்படை, நான் மேற்சொன்ன மனிதநேயமிக்க தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான உறவுப் பாலமே.

கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் மிகக் கொடூரமான காலகட்டம் என்பதை நாம் அனைவருமே அனுபவத்தில் கண்டோம். குறிப்பாக, நாடெங்கிலும் புலம்பெயர்த் தொழிலாளர்கள் சந்தித்த அவலங்களை நாடே பார்த்தது. ஆனால் திருப்பூர் மட்டுமே அந்தச் சிக்கலைச் சிறப்பாகக் கையாண்டது என்றால் அது மிகையில்லை. ஒரு தொழிலாளர்கூடப் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டதோடு, ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் ரயில்களிலும் பேருந்துகளிலும் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிய பெருமை திருப்பூர் தொழில் சமூகத்தையே சாரும்.

அதுமட்டுமல்ல; அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் ஆகியவற்றோடு இலவசத் தடுப்பூசியை அரசு அறிவிக்கும் முன்னரே, கட்டணம் செலுத்தி பல ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்திய அந்த நேயமும் திருப்பூரையே சாரும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஏறத்தாழ 19 மாநிலத் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரின் விருப்ப மாநிலம் தமிழ்நாடு என்றாலும் அதில் திருப்பூர் முதன்மை வகிக்கிறது. இதற்குக் காரணம், பொருளீட்டல் வாய்ப்புகளைத் தாண்டி, தொழிலாளர்களை சரிசமமாக, சக மனிதனாக மதிக்கும் மக்கள் திருப்பூர் மக்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், சப்பாத்தியையும் இட்லியையும் பரஸ்பரம் பங்கிட்டு உண்ணும் பண்பாட்டினை, சக மனிதனை நேசிக்கும் அறத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ள மக்கள் திருப்பூர் மக்கள் என்பதே பெருமைமிகு உண்மை.

தொழில் மற்றும் அது வளர்ந்த கதை, அதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் பங்களிப்புகளைப்பற்றி இதுவரை பார்த்தோம். அடுத்த பகுதியில், திருப்பூரிலிருந்து வர்த்தக உறவினை மேற்கொள்ளும் வர்த்தகர்கள், சந்தைகள் ஆகியவற்றைப்பற்றியும் அதைத் தொடர்ந்து, இன்றைய தேக்கநிலை, செய்யத் தவறிய மற்றும் மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிப் பார்ப்போம்.

தொடர்ந்து பயணிப்போம், நம்பிக்கையுடன்.  

  • குமார் துரைசாமி

Comment (1)


Ananthi

writeup ,👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *