தபால்காரர் தெய்வமான கதை

தபால்காரர் தெய்வமான கதை

திரைப் பார்வை ‘அலை ஓசை’ நாவல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும், அதன் முதல் அத்தியாயத்தில் தபால் சாவடி என்று வரும். 1930களின் போஸ்ட் ஆபீசை, கல்கி அவ்விதம் எழுதியிருப்பார். ‘வெளியே சற்றுத் தூரத்தில் ‘ஜிங் ஜிங் ஜிக ஜிங்’ என்ற சத்தம் கேட்டது. வர வர அந்தச் சத்தம் தபாலாபீசை நெருங்கியது. ரன்னர் தங்கவேலு கையில் உள்ள ஈட்டிச் சிலம்பைக் குலுக்கிக்கொண்டு தபால் சாவடியின் வாசலுக்கு வந்து சேர்ந்தான்‘ என்று அந்த அத்தியாயத்தை முடித்திருப்பார் கல்கி. 1930களில் தபால்காரருக்கு ரன்னர் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது என்பதை அறிகிறோம். தபால்காரர்கள் வெள்ளையர் காலத்திலேயே கேந்திரமான பணியை வகித்தார்கள். நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த தபால்காரர்களுக்கும் தற்காலத்தில் வேலை பார்க்கும் தபால்காரர்களுக்கும் மிக முக்கியமான வேறுபாடே, முன்னவர்கள் நடந்தும் ஓடியுமே கடிதங்களைக் கொண்டு சேர்த்தார்கள் என்பதுதான். வனத்திலும் மலையிலும் அவர்களின் தடத்தை இந்தத் திரைப்படம் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது. ‘ஹர்காரா‘ படத்தைப் பார்த்ததும் ஹர்காரா என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தபால்காரர் என்று தெரிந்தது. நூறாண்டுக்கு முந்தைய தபால்காரரின் கதையைக் கேட்கிற இன்றைய தபால்காரர்.. எல்லா வேலைகளிலும் ரொம்ப முன்னால ஒருத்தர் இருந்திருப்பாரே.. இன்றைய மாறுதல்கள் எல்லாவற்றின் ஆரம்பமும் அவர் அல்லவா?! அவரின் கதை என்ன? அவர் ஒரு மலை மக்களின் தெய்வமாக மாறியது எப்படி? சென்ற காலத்தின் வரலாற்று விழுமியங்கள் நிகழ்காலத்தில் புதைக்கப்பட்டதால் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மண்டிக் கிடக்கும் சூழலில் வந்திருக்கும் சரியான கலைப் படைப்பு. ஆனால் தியேட்டரில் வெகுஜனங்களுடன் பார்த்து, திரைப்படம் முன்வைக்கும் விவாதங்களை ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் கவலை மேலிடுகிறது. பாலசந்தரின் ‘தண்ணீத் தண்ணீர்’ வெகுமக்கள் திரள் முன்பு எத்தனை விவாதங்களைத் தந்தது? ஜெயிலருக்கும் சந்திரமுகிகளுக்கும் கோடித் திரைகள் திறக்கட்டுமே.. எம் மக்களின் கதைகளைக் கேட்பதற்கு ஓரிரு திரைகளாவது ஒளிரக்கூடாதா? இப்படித்தான் ‘கக்கன்’ என்றொரு படம் வெளியாகி, தியேட்டர் இல்லாமல் பார்க்க முடியாது போனது. தமிழ்த் திரைஅரங்குகள் வெகுஜன விழுமியத்தில் இருந்த காலம் போய்விட்டது. சரி, படத்துக்கு வருவோம். மலையும் வனமும் சூழ்ந்திருக்கும் கிராமம் ஒன்றில், மலை மக்களைச் சமாளிக்க முடியாத தபால்காரரின் சிரமம் மிகுந்த பணிக்கிடையே, அவர் கேட்கும் பழைய தபால்காரரின் கதையை அவரோடு நாமும் கேட்கிறோம். ஒரு தபால்காரனின் துணிச்சலான முடிவு, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வர்த்தகச் சதியை முறியடிக்கிற கதையை, அதன் விளைவாக அவன் கழுவேற்றப்பட்டு தெய்வமாகிற சரித்திரத்தை நாமும் கேட்கிறோம். 19ஆம் நூற்றாண்டில் வெள்ளையன், தன்னை எதிர்ப்பவர்களைத் தூக்கில் ஏற்றுவான், பீரங்கி வாய்முன் சுட்டுப் பொசுக்குவான். கழு ஏற்றினானா என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் கதை விவாதத்தில் பயணித்திருக்கிற வாசிப்பை நேசிப்போம் குழுவின் கதிரவன் ரத்தினவேலிடம் பேசும்போது, அப்படியான செய்திகள் கிடைத்திருக்கின்றன என்கிறார். மலை சூழ்ந்த சூழலில் அதிகாரம் செலுத்துகிற வெள்ளைத் துரைகள் தனக்கு வாய்ப்பான முறையைப் பின்பற்றியிருக்கலாம் என்று சமாதானம் கொண்டேன். ஒரு மலைக் கிராமத்துக்குப் புதிதாக வந்திருக்கும் தபால்காரரை அந்த மலைக் கிராமத்து மக்கள் அணுகும் முறையில் பளிச்சென்று படம் தொடங்குகிறது. விடியும்போதே தபால்காரரை எழுப்பி, சேமித்த பணத்தைக் கேட்டு, அதிலும் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அதிகமாகப் பெற்றுச் செல்கிற பெண்ணும் அப்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசுகிற மக்களும்.. கொட்டாவி கலையாத முகத்துடன் பணத்தைக் கொடுக்கிற நம் தபால்கார் காளி என்ன செய்வார், பாவம்? தனக்கு மாற்றல் வேண்டி மேலதிகாரிகளுடன் பேசுகிறார். அதுவும் எப்படி? சிக்னல் இல்லாத மலைப் பிராந்தியத்தில் போனை வைத்துக்கொண்டு அலைந்தவாறு சிக்னல் கிடைக்கும்பொழுதில் சின்ன சந்தோஷத்தை முகத்தில் காட்டிப் பேச, மாறுதல் மறுக்கப்பட, உடனே எரிச்சலைக் காட்டுகிற அழகு.. மலைக் கிராமத்து தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டர், குமாஸ்தா, போஸ்ட்மேன் எல்லாம் ஒருவரே. நம் ஊர் ஓராசிரியர் பள்ளி போல, ஒரு நபர் போஸ்ட் ஆபிஸ்.தன் மாறுதலுக்காக மலை மக்களுக்கான அந்த ஒற்றைத் தபால் அலுவலகத்தையும் இல்லாமல் செய்ய, அந்த வெள்ளந்தி மக்களையே ஏமாற்றி அவர்களிடம் கைநாட்டு வாங்குகிறார் இந்தத் தபால்காரர் காளி. எத்தகைய மக்கள்? அரசுப் பணியில் இருக்கும் அந்தத் தபால்காரரை வெள்ளந்தியாக நம்புகிற மக்கள். வாழ்க்கையில் நேர்மறையான நம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்துகிற மலைவாசிகள். அந்த ஒற்றைக் காக்கிச் சட்டைக்காரரின் மேல் உரிமையையும் அன்பையும் காட்டுகிற கள்ளமில்லாத மக்கள். மாரியம்மாள் என்கிற, மலைமேல் இருக்கிற ஒரு முதிய பெண்ணுக்கு வந்திருக்கும் கடிதத்தைக் கொடுக்க, ‘நடை தூரத்தில்தான் இருக்கிறது’ என்று மலை மக்கள் வழிகாட்ட, போய்க்கொண்டே இருக்கும் மலைப் பாதையில் ஏறிக் களைத்துப்போய் மாரியம்மாளிடம் கடிதத்தைக் கொடுக்கிறார். மிக நீண்ட காலம் போராடிய அவளுக்கு, அரசு அவள் கோரிக்கையை ஏற்ற செய்தியைத் தெரிவிக்கிற கடிதம் அது. அது அவளுக்கான கோரிக்கை மட்டுமல்ல; அந்த மலை மீது வாழ்கிற முதியவர்கள் அனைவருக்குமான கோரிக்கை. அது என்ன? அது சொல்லும் அரசியல் என்ன? முதியோர் பென்சனைத் தபால்காரர் கொண்டு தந்து, வாங்கிக்கொண்டிருந்த மலைமக்களை இனி வங்கிக் கணக்கு மூலமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று முகத்தில் அறைந்துவிட்டது அரசு. மாரியம்மாள் தொடர்ந்து மனுப் போட்டு, மீண்டும் தபால் அலுவலகம் மூலம் தபால்காரரே கொண்டு தருவார் என்று தனது கோரிக்கையில் வென்றிருக்கிற செய்தியைச் சுமந்து வந்திருக்கிறார் நம் காளி. அதாவது, மலை மக்கள் சேமிப்பைத் தபால் அலுவலகம் இல்லாமல் வங்கிக்கு மாற்றலாம் என்று மலை மக்களே கேட்பதாகப் பொய் மனு எழுதி, மக்களிடம் கைநாட்டு வாங்கி இருக்கிற காளி. மலை மீது ஏறிவரும் பாதையில், ஏகாதிபத்திய வெள்ளையனால் கழுவிலேற்றப்பட்டு தெய்வமான பழைய ‘ஹர்காரா’ என்ற ரன்னர் மாதேஸ்வரனின் கதையைச் சொல்கிறார் அந்த மலைவாழ் பெரியவர் ஒருவர். செஞ்சட்டை அணிந்திருக்கிறார். அவர் காளியைக் கேட்கும் கேள்விகள், திரையரங்கில் பார்த்தால் கைத்தட்டல்களை அள்ளிவிடும் தன்மையுடன் மிகக் கூர்மையாக நம்மைத் துளைக்கின்றன. மாதேஸ்வரனின் கதை காவியத் தன்மையோடு திகழ்கிறது. மாதேஸ்வரனாக நடித்திருக்கும் ராம் அருண் காஸ்ட்ரோ அந்தப் பாத்திரத்தின் கூர்மையைக் கொண்டுவர இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அவரே படத்தின் இயக்குநரும் அவரே. இயக்குநராகவே அதிகம் ஸ்கோர் செய்கிறார்.தபால்காரர் காளி பாத்திரத்தில் வருபவர் பெயரும் காளி வெங்கட்தானாம். என்ன அருமையான, இயல்பான நடிப்பு! மலைக் கிராமப் பணியின் மீதான எரிச்சல், பொய் மனு வேலையில் காட்டும் கள்ளத்தனம், மாரியம்மாளைப் பார்த்துவிட்டு வரும்போது தன்னில் எழும் குற்றவுணர்வு, அத்தனையிலும் சிறந்த நடிப்பைக் காட்டியிருக்கிறார். பட்டப் படிப்பு படித்திருந்தாலும் கிராம வாழ்வை மெச்சி வாழும் அந்தக் கிராமத்தின் இளைஞன், பொய் மனுவைப் படிக்காமலே கையெழுத்துப் போடும்போது தங்கள் ஊர் தபால்காரர் மீது காட்டும் நம்பிக்கை மனதை அள்ளிவிடுகிறது. விடிந்தும் விடியாத காலையில் சேமிப்புக் கணக்கில் இல்லாத பணத்தை வாங்கி வந்து, அதைக் கறாராகத் திருப்பிக் கொடுத்ததுடன், தனது குட்டியாடை நன்றியுடன் தபால்காரரின் பெயரான காளி என்று பெயரிட்டு அழைக்கும் நன்றியறிதலில் கரைந்துபோகிறோம். நவீன யுகத்துத் தபால்காரர் ஒரு சைக்கிளாவது வைத்துக்கொண்டிருக்கலாமே என்பது மட்டும் பெரிதாக உறுத்துதியது. தலைப்பும் மக்களை ஈர்க்கும் விதத்தில் இருந்திருக்கலாம். படத்தின் தொழில்நுட்பக் குறைகளைக் கலைத்துறையில் தேர்ந்தவர்கள் சொல்லக்கூடும். முதல் முயற்சியிலேயே நல்லதொரு படத்தைத் தந்திருக்கும் இந்த வளர்ந்துவரும் கலைஞர்களைப் பாராட்ட மட்டுமே தோன்றுகிறது. பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்கள் மனம் நிறைக்கும் படங்களில் ஒன்றாகக் கண்டுகொள்வீர்கள். ஹர்காரா, தெய்வமானவர்களின் கதை மட்டுமல்ல; முதல் தலைமுறை அஞ்சல்காரர்களின் வரலாறும்தான்.

சித்தா

சித்தா

திரை விமர்சனம் பழனி நகராட்சியில் பணிபுரியும் ஈஸ்வரன், அவனது அண்ணி, அவளது எட்டு வயது சுந்தரி என மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது அக்குடும்பம். அவனுக்கு சுந்தரியும் சுந்தரிக்கு சித்தாவும்தான் எல்லாமுமே. அண்ணி அவனுக்குப் பெண் பார்க்க முனைகிறாள். பிடி கொடுக்காத ஈஸ்வரன், அதே நகராட்சியில் பணியில் சேரும் தன்னுடன் பள்ளியில் படித்த சக்தியை நேசிக்கிறான். இந்நிலையில், சுந்தரியுடன் படிக்கும் பொன்னியின் வேறுபாடான நடவடிக்கையைக் கவனித்த ஈஸ்வரன், அவளைத் தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க முயல, அவள் பித்துப் பிடித்தவள் போல பயத்தால் நடுங்கி, அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள்.  மருத்துவப் பரிசோதனையில் பொன்னி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறான். மேலும் அந்தப் பழி அவன் மீது விழ, இது இரட்டிப்பாகி அவனை நிலைகுலையச் செய்கிறது. அதிர்ச்சியிலிருந்து மீண்ட பொன்னி சொன்ன உண்மை அவன் மீதான பழியைத் துடைக்க, நிம்மதி அடைந்த வேளையில் சுந்தரி காணாமல் போக, பேரதிர்ச்சி அடைகிறான் ஈஸ்வரன். சுந்தரி எப்படிக் காணாமல் போனாள், அவள் கடத்தப்பட்டாளா, அவள் என்ன ஆனாள், மீட்கப்பட்டாளா என்பதுதான் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘சித்தா’ தமிழ்த் திரைப்படத்தின் மீதிக் கதை. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது போக, ஒவ்வொரு நாள் விடியும்போதும் இந்தக் கொடூரங்கள் நாடெங்கும் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்திற்கிடையே ‘சித்தா’ கவனம் பெறுகிறது. இந்தக் கதையை அருண்குமார் எழுதி இயக்கியதும் நடிகர் சித்தார்த் தயாரித்ததும் அவர்களுக்குக் குழந்தைகள் மீதுள்ள அக்கறையையே காட்டுகிறது. சித்தார்த் (ஈஸ்வரன்), சகஸ்ர ஸ்ரீ (சுந்தரி), நிமிஷா சஜயன் (வள்ளி), அஞ்சலி நாயர் (அண்ணி) முக்கியப் பாத்திரங்களாக இருந்தாலும் சித்தார்த்  ‘சேட்டை’ என சுந்தரி மீது கட்டற்ற பாசத்தைப் பொழிவதிலாகட்டும் பெண்ணுக்கு நேர்ந்ததை அறிந்து உடைந்து போவதிலாகட்டும் பழி தம்மீதே பேரடியாக இறங்கும்போதிலாகட்டும் “சித்தப்பாவாக இருந்தாலும்..” என்று அண்ணி சொல்வதைக் கேட்டு வேதனையான சிரிப்பை உதிர்ப்பதிலாகட்டும் சேட்டை காணாமல் போனதை அறிந்து துடித்துப் போவதிலாகட்டும் வள்ளி தனக்கு நேர்ந்ததைச் சொன்னதைக் கேட்டு நொந்து போவதாகட்டும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க இயலாத கையறு நிலையில் கதறுவதாகட்டும் திறம்பட்ட உணர்வுப்பூர்வமான நடிப்பால் படம் முழுவதும் மட்டுமல்ல, நம் மனத்திலும் வியாபித்து நிற்கிறார் சித்தார்த். காதல், வலி, வேதனையைத் துல்லியமாக நிமிஷா சஜயன் வெளிப்படுத்துகிறார். சுந்தரியாக சகஸ்ர ஸ்ரீயின் பங்களிப்பும் பொன்னியாக நடித்த சிறுமியின் நடிப்பும் அருமை. அண்ணியாகவும் ஓர் அம்மாவாகவும் அழுத்தமான நடிப்பைப் பதிவு செய்கிறார் அஞ்சலி நாயர். வடிவேலு பாத்திரத்தை ஏற்றவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். வசனங்கள் கூர்மையானவை; சிந்திக்கத் தக்கவை. கதைக் கருவுக்கு இணக்கமாக பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவும் விஷால் சந்திரசேகரின் விறுவிறுப்பைக் கூட்டும் பின்னணி இசையும் சுரேஷ் ஏ.பிரசாந்தின் படத்தொகுப்பும் படத்தின் சிறப்பு. கொஞ்சம் பிசகினாலும் பிரச்சாரமாகப் போய்விடக்கூடிய நிலையில், கத்தி மேல் நடப்பதான சவாலாக நடந்து,  உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், பார்ப்போர் மனத்தில் குழந்தைகள் மீதான பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை உணர்வு, இயல்பாகப் பதியும் வகையில் நேர்த்தியான திரைப்படமாக ‘சித்தா’வைத் தந்து, சவாலில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் அருண்குமார். மதிப்பெண்: 8.5/10

லொகி ஷெல்லே (ஒரு தேவதையின் முத்தம்)

லொகி ஷெல்லே (ஒரு தேவதையின் முத்தம்)

வங்க மொழித் திரைப்பட அறிமுகம் மேற்கு வங்கத்தில் இச்சான் கஞ் என்கிற கிராமத்தில் நிலவும், மனிதத்தை வதைக்கும் வகையிலான சமூக, மதக் கோட்பாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்று, அவர்களுக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும், மூன்று இளம் மருத்துவ மாணவர்களைச் சுற்றிச் சுழலும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்த வங்க மொழித் திரைப்படம்தான், கௌஷிக் கங்குலி துணிச்சலுடன் எழுதி இயக்கி, சோனி லைவ் தளத்தில் தமிழ் உட்பட ஆறு மொழிகளில் வெளியாகியுள்ள ‘லொகி ஷெல்லே.’ “லட்சுமி, மாதாவோட மறுபிறப்பு! நாலு கை இருந்துச்சாம்…” இந்தச் செய்தியும் சாரை சாரையாக மக்கள் செல்வதும் அந்தக் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதும், ஒரு திருமணத்திற்குச் சென்று கொல்கத்தா திரும்பும் வழியில் கார் பழுதானதையடுத்து, அதில் வந்த இளம் மருத்துவர்களான அமீர் உசேன் (உஜ்ஜ்ன் கங்குலி), காயத்ரி சட்டர்ஜி (ரித்விகா பால்) ஹிப்நாத் தாத்தா (புரப் சீல் ஆச்சார்யா) ஆகியோரை அங்கேயே தங்கவைத்துவிட்டது. பத்திரிகையாளர் ஜாய் மித்ரா (அம்ரிஷ் பட்டாச்சாரியா) தந்த கூடுதல் தகவல்கள், குழந்தை லட்சுமியைப் பார்க்கத் தூண்டியது. குழந்தையைப் பார்த்துக்  குழப்பம் அடைந்து, தொடர்பு கொண்ட மூத்த மருத்துவர் டாக்டர் மிதாலி சென் (சுர்னி கங்குலி), அந்தக் குழந்தை ‘பாராசிட்டிக் ட்வின்ஸ்’ என்றும் கூடுதலான கைகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றாது விட்டால், அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவிக்க, அதிர்ச்சி அடைகின்றனர். தீண்டத்தகாதவர்களாக அதுவரை ஒதுக்கி வைக்கப்பட்ட அந்தக் கிராமத்தில், கடவுளே வந்து பிறந்துள்ளதாக நம்பி, அம்மக்களும் சுற்றியுள்ள கிராம மக்களும் குழந்தை லட்சுமியைத் தரிசிக்கவும் காணிக்கை செலுத்தவும் குவியத் தொடங்குகின்றனர். இதனை அறிந்த ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், அந்த மக்களின் அறியாமையைப் பணமாக்கவும் அந்தக் குழந்தையை வணிகப் பொருளாகக் காட்டித் தங்களுக்கான நிரந்தர வருமானமாக மாற்றவும் திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது. “எல்லாம் மூட நம்பிக்கை… இதே மாதிரிதான் சில வருஷத்துக்கு முன்ன, பிள்ளையார் பால் குடிச்சதா சொன்னாங்க” என்று சொன்ன அமீர், எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று முனைகிறான். நண்பர்களுடனும் பத்திரிகையாளர் ஜாய் மித்ராவுடனும் சேர்ந்து, அதற்கான திட்டத்தை வகுக்கிறான். குழந்தையின் தன்மையை உணராத, அதன் உருவத்தை வைத்துக் கடவுளின் அவதாரமாக நம்புகிற,  அறியாமையில் உழலும் மக்கள் ஒருபுறம். அவர்களின் அறியாமையையும் அந்தக் குழந்தையையும் வைத்து வருமானம் பார்க்க விழையும் ஆதிக்க சாதிக் குடும்ப வாரிசான ரஜத் நாராயன் ராய் (இந்ராசிஷ் ராய்) அடியாட்களுடன் மறுபுறம். இவர்களிடமிருந்து அந்தக் குழந்தையை மீட்டு, உரிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வேண்டும் என்று அமீர் உசேன்  வகுத்த திட்டம் வெற்றி பெற்றதா என்பதுதான் ‘லொகி ஷெல்லே’ படத்தின் மீதிக் கதை. கௌஷிக் கங்குலி செதுக்கிய பாத்திரப் படைப்புகளும் அப்படைப்புகளை உணர்ந்து உயிர் கொடுத்துள்ள கலைஞர்களும் திரைப்படத்தை இறுதிவரை விறுவிறுப்பாகவும் உணர்வுப்பூர்வமாக நெகிழச் செய்வதாகவும் சில காட்சிகளில் மனதை உலுக்கிவிடுவதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் ஆக்கிவிடுகின்றனர். உஜ்ஜன் கங்குலி, ரித்விகா பால், புரப் சீல் ஆச்சார்யா, சுர்னி கங்குலி, இந்ராசிஷ் ராய், அம்ரிஷ் பட்டாச்சார்யா, ரிவிடொபிரிடோ சென், பிரிதீப் பட்டாச்சாரியா போன்ற முதன்மைப் பாத்திரங்களின் அட்டகாசமான நடிப்பிற்குக் குறையில்லாமல், குழந்தையின் அம்மா உட்பட துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பை வழங்கியுள்ளது சிறப்பு. இப்படி, சிந்தனையைத் தூண்டும் வசனங்களாலேயே கட்டமைக்கப்பட்ட அற்புதமான திரைக்கதை. கோபி பகத்தின் ஈர்ப்பான ஒளிப்பதிவும் பிரபுதா பானர்ஜியின் பின்னணி இசையும் பாடலிசையும் சுபஜித் சின்காவின் கச்சிதமான படத்தொகுப்பும் கௌஷிக் கங்கோலியின் இயக்கத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டி, வலு சேர்க்கின்றன. இந்தியாவில் இரண்டொரு மாநிலங்களைத் தவிர்த்து, இதர மாநிலங்களில் பெருவாரியான கிராமங்களில், ஏன் நகரங்களில் ‘படித்த’ மாந்தர்கள் உட்பட, மதரீதியாகக் கட்டமைக்கப்பட்ட புராண, இதிகாசக் கதைகளில் மாற்றுச் சிந்தனையின்றி ‘நம்பிக்கை’ கொண்டு வாழும் அப்பாவி மக்களும் அறியாமையில் உழலும் அம்மக்களைச் சுரண்டும் சாதி அடுக்கில் மேலோங்கி நிற்கும் ஆதிக்க, ஆன்மிகவாதிகளின் கட்டுக்கடங்காத சுரண்டல் அராஜகங்களும் அவற்றுக்குமிடையே அரிதாக உயிரைப் பணயம் வைத்தும் மனிதத்தை உயர்த்திப் பிடித்து உணர்த்தும் சில மனிதர்களும் உள்ள நடப்பை, படம்பிடித்துக் காட்டும் சீரிய படைப்புதான் ‘லொகி ஷெல்லே’   “சிட்டியோ கிராமமோ, அங்கு லட்சுமி மாதிரி யாரையாவது ஒரு குழந்தையப் பார்த்தீங்கன்னா, அமீர் வர்ற வரையில வெயிட் பண்ணாதீங்க. அதுக்குப் பதிலா, நீங்களே அமீர் ஹுசைன் மாதிரி களத்துல இறங்குங்க!” பத்திரிகையாளர்  ஜாய் மித்ராவின் இறுதியான இந்த வார்த்தைகள்தான், நெடுநாட்களுக்குக் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும்.   மதிப்பெண்: 8/10

பவால்

பவால்

திரை விமர்சனம் அஜய் தீட்சித்தின் பிரச்சனை, அவன் லக்னோ பள்ளி ஒன்றின் வரலாற்று ஆசிரியராக இருப்பதோ, தனக்குத் தானேயும் மற்றவர்களிடத்திலும் தன்னைப் பற்றிய போலியான ஒரு பெரிய பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டதோ,  அறிவும் அழகும் கொண்ட நிஷா மனைவியாக வாய்த்ததோ அல்ல. அவளுக்கு வலிப்புக் குறைபாடு இருப்பதை அறிந்து அவளை ஒதுக்க – அது அவர்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தியதும்  மனக் குழப்பத்தில் எம்.எல்.ஏ. விஷ்வாஷ் ரகுவன்சியின் மகன் அதுல் ரகுவன்சியை வகுப்பில் ‘பளா’ரென்று அறைந்ததும்தான்.   அவை, அவன் போலியாகக்  கட்டமைத்துக்கொண்ட பிம்பத்தைச் சடுதியில் நொறுங்கச் செய்து, அவனது வேலைக்கே உலை வைக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கின்றன. அவற்றை அவன் எவ்விதம் எதிர்கொண்டான், மண உறவும் வேலையும் மீண்டும் அவனுக்கு வாய்த்ததா என்பதுதான், நிதிஷ் திவாரி இயக்கி, ஹிந்தியில் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் வசனங்களுடன்  வெளியாகி உள்ள ‘பவால்’ திரைப்படத்தின் மொத்தக் கதை. வலிப்புக் குறைபாடு இருப்பதைத்  திருமணத்திற்கு முன்பே நிஷா தெளிவாக அவனிடம் கூறியும் சம்மதித்து ஏற்றுக்கொண்ட பின்னர் அதையே காரணம் காட்டி அவளைத் தவிர்க்கும் அஜய், தனக்குள் வியாபித்திருக்கும் ஆளுமைச்  சிதைவை அறியாதது சோகம்.   இரண்டாவது உலகப் போரில் தொடர்புடைய நாடுகளுக்கு, தவிர்க்க இயலாத நிலையில் மனைவியுடன் பயணித்துப்  பார்வையிடுவதும் அப்போது நாஜிக்களால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரோடு இருக்கும் ஒருவரது அனுபவத்தை அறிய நேரிட்டதால் அவனுக்குள் வரும் மாற்றத்தையும் அந்த மாற்றம் அவளுக்குள் ஏற்படுத்தும் நம்பிக்கையையும் அஜய் தீட்சித்தாக வரும் வருண் தாவணும் நிஷாவாக ஜான்வி கபூரும்  வெளிப்படுத்துவதில், தாங்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை முழுவதும் உள்வாங்கி, நிறைவான நடிப்பைத் தந்துள்ளனர். அஜயின் தந்தை மனோஜ் பாவா, தாய் அஞ்சுமன் சக்சேனா, எம்.எல்.ஏ. ரகுவன்ஷி முகேஷ் திவாரி, அவரது மகன் அதுல் நிகில் சாவ்லா, நண்பன் பிரதீக் பச்சோரி (பிபின்) போன்ற துணைப் பாத்திரங்களும் நடிப்பில் சோடை போகவில்லை. மித்தேஷ் மிர்ச்சந்தானியின் காமிரா, இந்தியாவில் லக்னோ, கான்பூர்,  மும்பை என்றும் பாரிஸ், பெர்லின், ஆம்ஸ்டர்டாம், கிரக்கோவ் வார்ஸா, போலந்து ஆகிய அயல்நாடுகளிலும் சுற்றிச் சுழல்வதுடன், இரண்டாம் உலகப்போர் காலத்திலான உருவகப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைக் கருப்பு வெள்ளையில் வழங்கி, மனதில் ஆழமாகப் பதிய வைப்பது சிறப்பு. டேனியல் பி ஜார்ஜ்ஜின் பின்னணி இசையும் சாரு ஸ்ரீ ராயின் படத்தொகுப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளன. இனிமையான பாடல்களுக்கு நால்வர் இசை அமைத்துள்ளனர். “எக்ஸாம் வருது பேப்பர் செட் பண்ணனும்” (அஜய்) “முதல்ல உன் லைஃப்ப செட் பண்ணு” (அம்மா) “பிரச்சனைகளைச் சமாளிக்கக் கத்துக்க. இப்படி ஓடாத” (அப்பா) “எப்போ உனக்கு இந்த உறவைச் சமாளிக்க முடியாதுன்னு தோனுதோ, அப்போ எங்ககிட்ட வந்துரும்மா.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. டைவர்ஸ் வாங்கறது கேவலம் இல்ல” (நிஷாவின் அம்மா) “தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டா எல்லாம் தெரியும்; இடத்தப் பத்தியும் மனுஷங்களப் பத்தியும்” (நிஷா) “நமக்குள்ள எதுவுமே காமனா இல்ல” (அஜய்) “காமனா இருக்கணும்னு அவசியமா?” (நிஷா) “ஹிட்லரோட லைஃப்ல இருந்து முக்கியமா ஒன்னு கத்துக்லாம்னா, அது பொய், பித்தலாட்டம். இதனால உருவாகற இமேஜ் ரொம்ப நாள் நீடிக்காது. அதனாலதான் இந்த நிலம,  எங்க இட்லர் செத்தானோ அங்க ஒரு கார் பார்க்தான் இருக்கு, ஒரு மெமோரியலும் இல்ல.  சரிதான், கடைசியில உண்மைதான் வெல்லும். பொய்மை இல்ல” (அஜய்) “பத்து மாசமா நெனச்சிகிட்டு இருந்தது, நீ எனக்கு லாயக்கில்லன்னு. ஆனா, இந்தப் பத்து நாள்ல புரிஞ்சுகிட்டேன் நான் உனக்கு லாயக்கில்லன்னு” (அஜய்) “நம்ம வாழ்நாள்ல ஏற்படற துக்கம் அவங்களோட ஒருநாள் வாழ்க்கைக்கு முன்ன ஒன்னுமே இல்ல” “வரலாறு இருக்கறதுக்குக் காரணம், நம்ம தப்ப திருத்திக்கத்தான்” (ரகுவன்ஷி) “மத்தவங்ககிட்ட இருக்கிறதப் பார்த்து அதையே நினைச்சுகிட்டு வருத்தமா இருந்தா, நாம என்னைக்குமே சந்தோஷமா இருக்க முடியாது. ஆனா, கிடைச்சதுல சந்தோஷத்தைத் தேடினா அப்போ முகத்தில் தெரிகிற உண்மையான சந்தோஷம், அந்தச் சந்தோஷத்தைவிடச் சிறந்த இமேஜ் எதுவுமே இல்லை” இவை, அர்த்தபூர்வமான, நினைவை வருடிக்கொண்டே இருக்கும் வசனங்கள். ஹிட்லரின் கொடிய ஆஸ்விட்ச் கான்சன்ட்ரேஷன் கேம்ப்பிலான அனுபவத்தைப் பெரியவர் ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, அதை மொழிபெயர்த்து உணர்வுப்பூர்வமாக அஜய்யிடம் சொல்லும் நிஷாவும் கேட்கும் அஜய்யும் அவை தங்களுடைய வாழ்வின் நிகழ்வுகளோடு ஒத்துப்போகும் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு உள்ளான லேசான விரிசல் மறையவும் அவனுக்குள் அவன் திருத்தம் பெறவும் வாய்ப்பாக அமைத்திருக்கும் பாங்கு, இயக்குநரின் முத்திரை. காதல், பாசம், குடும்பம், மனிதம், பிம்பம், ஆளுமை போன்றவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணரவும் நாயகன் அஜய் தீட்சித் போன்ற மனப்பான்மை கொண்ட எவரும் தங்களைச் சுயபரிசோதனை செய்து தெளிவு பெறவும் நித்தீஷ் திவாரி அற்புதமாக இயக்கி வழங்கி உள்ள ‘பவால்’ வாய்ப்பளிப்பது நிச்சயம். மதிப்பெண் : 7/10

ஹலோ மீரா

ஹலோ மீரா

திரை விமர்சனம் நாளை மறுநாள் காதலித்தவனுடன் மணவிழாவைக் காண உள்ள, ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் விஜயவாடாவைச் சேர்ந்த இளம்பெண் மீரா, தையற்காரரிடமிருந்து தனது திருமண உடைகளைப் பெற்றுக்கொண்டு, காரில் அமர்ந்து அம்மாவுடனும் கல்யாணுடனும் கிண்டலும் கேலியுமாகப் பேசி முடிக்கிறாள்.  அப்போது, தோழி சாக்‌ஷி குறிப்பிடும் இன்ஸ்டாகிராம் பதிவும் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விக்ரம் தெரிவிக்கும் தகவலும் அதிர்ச்சியைத் தர, மறுநாள் சங்கீத் உள்ள நிலையில் வீட்டிற்குக்கூடச் செல்லாமல்,  அந்த இரவில் அவள் விஜயவாடாவிலிருந்து, நிர்ப்பந்தத்தில் ஹைதராபாத்திற்குச் செல்லும்போது, வரும் அடுத்தடுத்த அழைப்புகளால், அவை தரும் செய்திகளால் பதற்றம், குழப்பம், அச்சம், வெறுப்பு, கோபம் என, பெரும் மன உளைச்சலில் உழல, அதிலிருந்து மீரா மீண்டாளா, திட்டமிட்டபடி அவளது திருமணம் நடைபெற்றதா என்பதுதான், ‘ஹலோ மீரா’ தெலுங்குப் படத்தின் மொத்தக் கதை.  வழக்கமான திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ‘ஹலோ மீரா’ படம்,  ஸ்ரீநிவாசு கக்கர்லா திரைக்கதையை அழகாக எழுதி, விறுவிறுப்பாக இயக்கியிருக்க, அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் வசனங்களுடன் வெளியாகி உள்ளது.  அழகான இளம் பெண் மீராவாக வரும் கர்கேயி எல்லபிரகடா, இக்கதைக்குப் பொருத்தமான நாயகி. பதற்றத்திலும் மன உளைச்சலிலும் மன உறுதியை இழக்காமல், உடைந்துவிடாமல், துணிச்சலுடன் பிரச்சனைகளைத் தெளிவாக எதிர்கொள்வதுமாக, யார் ஒருவருடனும் திரையைப் பகிர்ந்து கொள்ளாமல், முழுத்திரையையும் படம் முழுவதும் வியாபித்து,  உணர்வுபூர்வமான பாவங்களை வெளிப்படுத்தி, தனியாளாகவே நடிப்பில் முத்திரை பதிக்கிறார். படம் முழுவதும் அப்படி இப்படிக் கவனம் சிதறாமல், அவருடனேயே  நம்மையும் ஒன்றிடச் செய்திருப்பது வெகு சிறப்பு.  நாயகி மீரா  தவிர, அவளது அம்மா, அப்பா, தம்பி, மணமகன் கல்யாண், அவனின் அம்மா, சகோதரி திவ்யா, மீராவின் தோழிகள் சாக்‌ஷி, பூஜா, புவி, நண்பன் கிரண், ஏசிபி ராகவ ராவ், சப்-இன்ஸ்பெக்டர் விக்ரம், பெண் காவலர், சுதிர், அவனின் அப்பா, அம்மா, டைலர், டிஜே, பியூட்டிஷியன் சாந்தி என, எல்லாரும் திரைமறைவுப் பாத்திரங்களாக இருந்தாலும் குரல் வழியில் உயிர்ப்புடன் வழங்கியிருக்கும் நடிப்பு பாராட்டுக்குரியது.  ‘சாரி பேபி.. சாரி, நீ பேசும்போது அந்த இன்சூரன்ஸ் கம்பெனி ‘ஹட்’ல ஒரு பையன் பேசுவானே, அந்த மாதிரி இருந்தது’  ‘இதே மாதிரி பத்து வருஷத்துக்கு அப்றமும் பேசு, அப்ப நான் ஒத்துக்கறேன்’  ‘பேரு எழுதினதுக்கெல்லாமா அரெஸ்ட் பண்ணுவீங்க? அநியாயமா இருக்கு சார்!’ ‘இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு டிஸ்கஷன் அவசியமா?’  ‘போறவன் போகாம, சூசைட் நோட்ல என் பேரையும் ஏன் எழுதணும்?’  ‘இந்தப் பசங்களே இப்படித்தான், லவ் பண்றப்போ  பொண்ணுங்க சொல்றபடி கேட்கறது; மேரேஜ்னா அம்மா சொல்றபடி கேட்கறது.’  ‘சந்தோஷமா இருக்கும்போது நாம தைரியமாக இருக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கஷ்டம் வரும்போதுதான் நம்ம தைரியம் என்னன்னு நமக்குத் தெரியும்’  ‘லவ் பண்றதுன்னா, தெனமும் பத்து தடவ போன் பண்ணி, ஐ லவ் யூ’ன்னு சொல்றதில்ல. இந்த மாதிரியான நெலயில உன்னைப் புரிஞ்சுகிட்டு உனக்கு சப்போர்ட் பண்றது’  ஒரு நாள் கல்யாண கூட்டிட்டு வந்து, ‘ரெண்டு பேரும் லவ் பண்றோம்; இவனைத்தான் கட்டிப்பேன்’னு சொன்னே. ஆனா,  நீ மட்டும்தான் லவ் பண்ணி இருக்கேன்னு இப்ப தெரியுதுமா’  இவை  ‘நச்’ சென்று ஈர்க்கின்ற வசனங்களில் சில.  வேறுபட்ட களங்களுக்கு வாய்ப்பே இல்லாத நிலையிலும் காரில் அமர்ந்திருக்கும் நாயகியின் முகத்தைப் பல்வேறு கோணங்களிலும் வேறுபட்ட முக பாவங்களையும் கிடைத்த கொஞ்சமான வாய்ப்பில் ‘ட்ரோன் ஷாட்’டில் சாலைப் போக்குவரத்தை இரவு ஒளியில் அழகாகப் படமாக்கி, சலிப்புத் தட்டாமல் செய்த கொப்பிலிடி பிரசாந்தின் ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் எஸ்.சின்னாவின் இசையும், மெடிகொண்டா ராம்பாபுவின் படத்தொகுப்பும் இயக்கத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.  காதல், சண்டை, பாடல், நகைச்சுவைக் காட்சிகள் என எதுவும் இல்லாமல், ஒரே காட்சி, ஒரே நடிகை என்று வைத்து, விறுவிறுப்புடன் கூடிய தெளிவான திரைக்கதை, வசனங்களால் 90 நிமிடங்கள் அப்படியே இருக்கையில் கட்டிப் போட்டுவிட்ட இயக்குநர் ஸ்ரீநிவாசு கக்கர்லாவின்  ‘ஹலோ மீரா’, வித்தியாசமான அனுபவமாக அமையும் என்பதுடன், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள், இம்மாதிரியான பிரச்சினைகளைத் தவிர்க்க, எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டுவதை வலியுறுத்தும் என்பதும் நிச்சயம்.  மதிப்பெண்: 7.5/10

ஆயிஷா

ஆயிஷா

திரை விமர்சனம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள மாசூம் எனும் செல்வந்தர் வீட்டிற்கு, ஒரு பணிப் பெண்ணாகக் கேரளாவில் இருந்து செல்லும் ஆயிஷா, சில சிரமங்களைத் தாண்டி, அரண்மனை போன்ற அந்த வீட்டின் நடைமுறைகளை அறிந்துகொண்டு, நாளடைவில் குடும்பத்தின் தலைவி மமாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார். விளைவு, சக பணியாளர்களின் மகிழ்ச்சிக்கு உகந்தவராகவும் அதுவரை மமாவின் முதன்மைப் பணியாளர்களாக இருந்த பெண்களுக்கு எதிரியாகவும் ஆகிவிடுகிறார். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த வாழ்வில், ஆயிஷா குறித்த ஒரு உண்மை வெளிப்பட, நிலைமை தலைகீழாகிறது. மமாவுடனான ஆயிஷாவின் பிணைப்பு இளக, அவள் கேரளா திரும்புகிறாள். அடுத்து, ஆயிஷாவின் வாழ்க்கைப் பயணம் எப்படிச் செல்கிறது என்பதுதான், ஆஷிப் கக்கோடி அழகான திரைக்கதை எழுதி, அமீர் பள்ளிக்கல் அருமையாக இயக்கி, அரபிக் மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்பட்டு, அமேசான் பிரைம் வீடியோவில், ஆங்கிலத் திரை வசனங்களுடன் வெளியாகி உள்ள ‘ஆயிஷா’ திரைப்படத்தின் மீதிக் கதை. ஆயிஷாவாக மஞ்சு வாரியார், உழைப்பாளர்களைச் சுரண்டும் இடங்களில் எல்லாம் சீற்றம் கொள்ளும்போதும், “நான் எவ்வளவு அதிகாரம் மிக்கவன்னு உனக்குத் தெரியாது” என்று சொல்லும் சாராவிடம், “சாரா, என்னைப் பத்தி உனக்குத் தெரியாது. என்னோட விளையாடாத; உன்னோட விளையாட்டை நீயே நிறுத்திக்கோ. அதுதான் உனக்கு நல்லது” என்று புன்முறுவலுடன் சொல்லும்போதும், மமாவின் முதல் சந்திப்பில் நிகழும் சிறுசிறு தவறுகளை அதற்கடுத்த முறை சரி செய்துகொள்வதும் அவர்களுக்கு இணைப்பு இறுகவும் விலகவுமான நிகழ்வுகளின்போதும் முந்தைய வாழ்க்கை நினைவுகளில் லயிக்கும்போதும் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். நடனக் காட்சிகளிலும் கவர்கிறார். ஆயிஷா பாத்திரத்திற்கு இணையான மமா பாத்திரத்தில் மோனா டவில், அதியற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார். செல்வந்தர் வீட்டில், குடும்பத் தலைவியாகக் காட்டும் கண்டிப்பும் பணக்கார மிடுக்கும் தோரணையும் ஆயிஷாவிடம் காட்டும் அன்பும் அவளிடம் தன் சொந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கும் அவளைச் சொந்த ஊருக்கு அனுப்பச் செய்யும் நாடகமும் பிரிவை ஜீரணிக்க முடியாத தவிப்பும் திரும்பப் பார்த்ததும் பெறும் உற்சாகமும் மன வலியும் உடல் வலியும் ஒரு சேர அழுத்த அவற்றின் வெளிப்பாடாய் முகப் பிரதிபலிப்பும் காதல் கணவர் நாசருடன் சென்ற அனுபவங்களை, அந்த இடங்களுக்கெல்லாம் விரும்பியவாறு பயணிக்க அவரது உடல்நிலை இடம் தராத நிலையில், அந்த நினைவுகளை ஆயிஷா நாடக வடிவில் உருவகித்ததைக் காணும்போதான நெகிழ்வும் என நடிப்பில் அற்புதங்கள் செய்கிறார். நிஷா (ராதிகா), அபித் (எஸ் வி கிருஷ்ண சங்கர்), சாரா (லத்தீஃபா), ஹார்வா (சல்மா), அப்துல்லா (இஸ்லாம் அப்துல் கவாத்), அகீஃப் (பாரா அல் நிஜாமீ), ஹம்சா (சம்சுதீன்), நர்ஸ் மெரினா குரியன் (மினி அல்போன்ஸ்) போன்ற துணைப் பாத்திரங்களும் சோடை போகவில்லை. அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைக்குச்  செல்லும் பெண்கள் பல விதங்களில் அவமரியாதையும் கொடுமையும் படுத்தப்படுவதாகத்தான் செய்திகளும் ஏன், படங்களும்கூட வந்திருக்கின்றன. இந்தப் படம் அவற்றையெல்லாம் மறுதலிக்கும் விதத்தில் உள்ளதே என்கிற சிந்தனைக்கு, “எந்த வீட்டுக்கு நாம அனுப்பப்படறோமோ அதப் பொருத்து நம்ம நெலம அமையும்” என்று வீட்டு வேலைக்கு ரியாத்திற்கு வரும் பெண்மணிகளில் ஒருவர் ஆயிஷாவிடம் சொல்வதில் விடை கிடைத்துவிடுகிறது. “பெண்கள மதிக்கறவங்கதான் அரேபியர்கள்”“வீட்டுக்கு வந்த விருந்தினர்ங்க மூனு நாள் தங்க இடமும் விருந்தும் கொடுத்ததுக்கு அப்புறம்கூட, எதுக்கு வந்தீங்கன்னு கேட்காததுதான் அரேபியாவோட பாரம்பரியம்” என்று நிமிஷா, ஆயிஷாவிடம் சொல்வதும் அதற்கு வலு சேர்க்கிறது. “மமாவோட நினைவு மங்கி வருது. பழசுதான் ஞாபகம் இருக்கு. ஆனா அவங்க மறந்துபோன பட்டியல்ல ஆயிஷா பேர் இல்ல” (சாரா)“எவரெஸ்ட் மலைய தாண்டறதவிடக் கஷ்டம்  மனுஷங்களோட மனச ஜெயிக்கிறது, இல்ல?” (நிமிஷா)போன்ற வசனங்களும் ஆயிஷா மமா இடையிலான உரையாடல்களும் நயம். இயற்கை அழகு கொஞ்சும் கேரளாவையும் பரந்த பாலைவனத்தில் ஆங்காங்கே பிரமிக்க வைக்கும் அரண்மனை வீடுகளையும் ஒருங்கே அழகுற வழங்கிய ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மாவின் திறன் பாராட்டுக்குரியது. கதைக் களத்தோடு இயைந்த பின்னணி இசையையும் பாடல்களுக்கான துள்ளலான இசையையும் அற்புதமாக வழங்கி உள்ளார், எம் ஜெயச்சந்திரன். படத்தொகுப்பைப் பழுதில்லாமல் செய்துள்ளார், அப்பு என் பட்டாத்திரி. இடதுசாரி இயக்கங்களோடு பணியாற்றி, இஸ்லாமியப் பெண்ணாக இருந்தாலும் சமூகத் தடைகளைத் தாண்டி, கருத்தியலைப் பிரதிபலிக்கும் நாடகங்களில்  நடித்ததால், எதிர்ப்புகளையும் கல்லடிகளையும் ஏன், துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொண்டு துணிவுடன் நடித்து, ஒரு கட்டத்தில் அரபு நாட்டிற்குப் பணிப் பெண்ணாகச் சென்று திரும்பிய நிலாம்பூர் ஆயிஷாவின் சுய வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘ஆயிஷா’. திரைப்படத்தில், அவர் நாடகக் கலைஞராக இருந்த வாழ்க்கை சுருங்கிப் போயிருந்தாலும்,  சவுதி அரேபியாவில் பணிப் பெண்ணாக வாழ்ந்த காலம் விரிவாகவும் அவருக்கும் மமாவுக்கு இடையிலான பாசத்தின் பரிமாணத்தை மிகவும் அழகாகவும் நயமாகவும் சொல்லப்பட்டதற்காகவும் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கத்தக்க வகையில் ‘ஆயிஷா’ திரைப்படத்தை வழங்கியதற்காகவும் இயக்குநர் ஆமீர் பள்ளிக்கல் பாராட்டுக்குரியவர். மதிப்பெண் : 7/10

மார்க்சின் இலக்கிய மனம்

மார்க்சின் இலக்கிய மனம்

நூலறிமுகம் காரல் மார்க்ஸ் அன்பும் இருதயமும் ஒன்று சேர்ந்த மனிதர். ஸ்டூவர்ட்மில், பெட்டி, ஜான் பெல்லர்ஸ், பெய்லி, ஆதம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய அரசியல் பொருளாதார நிபுணர்கள், ‘முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வடிவம் அழிவற்றது; இறுதியானது’ என்ற தங்களுடைய கருத்தை எழுதி, மக்களை நம்ப வைத்துவிட்டனர். முதலாளித்துவம் அதனை வரித்துக்கொண்டு சட்டங்களாகவும் வேதங்களாகவும் ஆக்கியது. ‘இதை மாற்ற வேண்டும்; மாற்ற முடியும்’ என்று தனது பகுப்பாய்வின் மூலம் தெரியப்படுத்தியவர் காரல் மார்க்ஸ். அவர் எழுதிய எழுத்துக்கள், வெறும் பொருளியல் தத்துவங்கள் என்றில்லாமல், இலக்கிய வளமும் நயமும் கொண்டவை என்று இந்த நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது. வால்டேர், ஷீல்லர், ரூஸோ, கான்ட் போன்ற முற்போக்காளர்களுடைய கருத்துக்களால் இவரது இல்லம் சூழ்ந்திருந்தது, குழந்தைப் பருவத்தில் ஒரு நல்ல அடிப்படையாக அமைந்திருந்தது காரல் மார்க்சிற்கு.  புரோகிதத்தை வெறுத்த மார்க்ஸின் தந்தை ஹைன்ரிக் மார்க்ஸ், ஓர் அறிஞர்; விடாமுயற்சி உடையவர்; மனச்சாட்சிக்குப் பயந்து நடப்பவர்; மதத்தின் மீது பற்றில்லாதவர். இவரது தாய் ஹென்ரிட்டே ஒரு டச்சுக்கார யூதர். கிறிஸ்தவர்களாகப் பின்னர் மாறினர். சிறு வயது முதலே கவி பாடும் திறன் பெற்றிருந்தார் காரல் மார்க்ஸ். இலத்தீன், கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகள் தெரிந்தவர் அவர். பின்னாளில் ரஷ்ய இலக்கியங்களைக் கற்க, ரஷ்ய மொழியைக் கற்றார். கிரேக்கக் காவியங்களைப்  படித்தார். இவர் பிறந்த ஊரான டிரியருக்கருகிலுள்ள பான் நகரத்தில் படிக்கும்போது, அங்கிருந்த கவிஞர்கள் சங்கத்தில் தனது பெயரைப் பதிவு செய்துகொண்டார். மார்க்சின் குடும்ப நண்பர், ஜென்னியின் தந்தை லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலன் கலைச்சுவை நிரம்பியவர். கிரேக்கக் காவியங்களிலிருந்து, ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களிலிருந்து, அநேக பாகங்களைப் பாராமல் ஒப்பிப்பதோடு, அழகாக விளக்கவும் செய்வார். இவரது உறவு மார்க்சை இளம் பருவத்திலேயே இலக்கிய உலகிற்கு அழைத்துச் சென்றது. இவர் மார்க்சிற்கு ஹோமர், ஷேக்ஸ்பியர் போன்ற ஆகச்சிறந்த கவிஞர்களை அறிமுகப்படுத்தியதோடு, ஷேக்ஸ்பியரின் வரிகளையும் மார்க்சிற்குப் படித்துக் காண்பித்தார். இத்தகைய சூழல் காரல் மார்க்ஸ்க்கு கவிதை ரசனையைத் தூண்டி, அழகியலில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. காரல் மார்க்ஸ், தனது முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வுக் கட்டுரையை, லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலனுக்கு சமர்ப்பணம் செய்தார். அவ்வப்போது தான் எழுதிவைத்திருந்த சில கவிதைகளைத் தொகுத்து ஒரு கையெழுத்துப் புத்தகமாக ஜென்னிக்கு அனுப்பியுள்ளார் காரல் மார்க்ஸ். ‘கலை ஞானமும் சத்தியமும் சேர்ந்து வாழ்கிற கோயில்’ என்று ஒரு கவிஞனால் வர்ணிக்கப்பட்ட பெர்லின் பல்கலைக்கழகத்தில், அவர் எடுத்துக்கொண்ட பாடங்களில் இலக்கியமும் ஒன்று. படிக்கும் காலத்திலே ஜென்னியை நினைத்து, பல காதல் கவிதைகள் இயற்றியுள்ளார். இலக்கியப் படைப்புகளிலிருந்து சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் தனது தத்துவ ஆளுமையை உயர்த்திக்கொள்வதில் தன்னை வளர்த்துக்கொண்டார். சமுதாயச் செழுமைக்குப் பயன்படாத எந்த இலக்கியமும் இலக்கியம் அல்ல என்பது இவரின் மையக் கருத்து. மக்களுடைய ஆவலைப் பிரதிபலிக்கக் கூடியதாக, மக்களின் எண்ணத்தை உயர்த்துவதற்காக, எதிர்கால வாழ்க்கையை லட்சியப்படுத்திக் காட்டுவதற்காக இலக்கியம் இருக்க வேண்டும் என்று கருதியதால் ‘மூலதனம்’ நூலைக்கூட இலக்கியக் காட்சியும் இலக்கிய நயமும் உடையதாகப் படைத்தார் மார்க்ஸ். பாட்டாளி வர்க்க அரசியலுக்காக இயங்கிய தோழர் மார்க்ஸை, பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கக் கட்சியின் தோழர் போல் லபார்க் லண்டனில் சந்தித்தபோது, மார்க்ஸின் அரசியல் மதிப்போடு அவரது இலக்கிய ஈடுபாட்டையும் தனது நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். ‘காரல் மார்க்ஸிற்கு ஹைனே, கதே பாடல்கள் மனப்பாடம். உரையாடலின்போது அவர் அடிக்கடி பாடல்களை எடுத்துக் கூறுவார்; ஐரோப்பியக் கவிஞர்களின் படைப்புகளை உற்சாகத்தோடு படிப்பார்; ஸ்காட்லாந்து தேசத்துக் கவியின் நையாண்டிக் கவிதைகளையும் வீர காவியங்களையும் தம் புதல்வியர் ஒப்பிக்கும்போதோ பாடும்போதோ மிக மகிழ்ச்சியுடன் அவற்றைக் கேட்பார்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இலக்கிய ரசனையைத் தனக்குரிய தன்னிறைவாகக் கருதாமல், விமர்சனப்பூர்வமாக உள்வாங்கி, உரிய நோக்கத்திற்கு ஜனநாயகப்பூர்வமாகப் பயன்படுத்தினார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அதிக ஈடுபாடு கொண்ட மார்க்ஸ், அவற்றை மூலதனம் என்ற தன் படைப்பில் திறம்படக் கையாண்டார். ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மூலதனத்தில் பல இடங்களில் பயன்படுத்துகிறார். ‘ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில், நிலப் பிரபுத்துவம் சிதைவதையும் பூர்ஷ்வாக்கள் எழுச்சி பெறுவதையும் சித்தரித்திருக்கிறார்’ என்பது மார்க்சின் கருத்து. ஏதன்ஸ் நகர டிமன் என்ற நாடகத்தில், நாடகக் கதாநாயகன் மூலம் பணம் பற்றி ஒரு ஆழ்ந்த விமர்சனத்தை முன் வைத்ததை, ‘ஏ பாவ ஜென்மமே.. வா! மனித குலத்தின் வேசியே வா! உன் பணியைச் சரியாகச் செய்யவிடுகிறேன்’ என்ற கவிதை வரிகளை விளக்கும்போது, காரல் மார்க்ஸ், ‘பணம் மனிதனது பண்புகள் அனைத்தையும் மாற்றிவிடுகிறது. நடக்க முடியாததை நடத்திக் காட்டுகிறது. உண்மையைச் சிதைக்கிறது. மனிதத் தன்மையை மாற்றுகிறது. அது அவனது அந்நியமான திறமையாகும். மனிதனாகச் செய்ய முடியாததை, பணத்தின் மூலம் மனிதன் செய்கிறான். எனக்குப் பிடித்தமான உணவு வேண்டும் என்றால், நான் தபால் வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்றால், பணம் அதனைச் செய்துவிடுகிறது’ என்று எழுதுகிறார். மூலதனம் முதல் தொகுதியில், தென் அமெரிக்கச் சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றி ஒரு காட்சியைப் பதிவு செய்கிறார். ‘450 அடி ஆழத்திலிருந்து, உலோகங்களைத் தோளில் தூக்கிச் சுமந்துவரும் தொழிலாளர்களைப் பற்றி, தம்மளவில் இந்தத் தொழிலாளர்கள் ரொட்டி உண்பதையே விரும்புகிறார்கள். ஆனால் ரொட்டி உண்பதைக் காட்டிலும் குதிரைகள் தின்னும் மொச்சையைத் தின்றால் தொழிலாளர்களின் உழைப்பு சக்தி இன்னும் மேம்பட்டுக் கிடைக்கும் என்று கருதிய சுரங்கத் தொழிலதிபர்கள், தொழிலாளர்களை மொச்சை தின்னக் கட்டாயப்படுத்துகிறார்கள். தொழிலாளர்களின் சொந்த நுகர்வைக்கூட மறுதலிக்கும் முதலாளித்துவம், தனது ஆதிக்கத்தில் தொழிலாளியின் சொந்த நுகர்வு என்பது, மூலதனத்தின் உற்பத்தியிலும் மறு உற்பத்தியிலும் ஒரு காரணியாகிறது’ என்பதை இலக்கிய நயத்தோடு எடுத்துச் சொல்கிறார் கார்ல் மார்க்ஸ். இது போன்ற பதிவுகளை இந்நூலில் பரக்கக் காணலாம். சமுதாய வளர்ச்சி, வாழ்நிலைகளின் சூழலில் இலக்கியத்தைப் பயன்படுத்துகிறார். புதுவுலகப் படைப்பாளியான பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில், சமுதாய மாற்றத்திற்காக மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற, இலக்கியத்தையும் அதனோடு ஒப்பிட்டு அரசியலையும் அயராது கற்போம்; கசடறக் கற்போம்; அதன்படி நிற்போம். இதற்கு ஒரு துளி அளவேனும் பயன்படும் விதத்தில் இந்நூலைப் பழுதற வாசிப்போம். நூல்: மார்க்ஸின் இலக்கிய மனம்ஆசிரியர்:  துரை. சண்முகம்வெளியீடு: கீழடி பதிப்பகம்பக்கங்கள் : 40விலை: ரூபாய் 40தொடர்புக்கு : 9176 587 245

மாமன்னன்

மாமன்னன்

திரை விமர்சனம் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்குப் பழகிய சமூகத்தைச் சார்ந்த, தன் இயற்பெயரே மறந்த, மறக்கடிக்கப்பட்ட மண்ணு, தனது அடுத்த தலைமுறையான மகன் அதிவீரனால் ஆதிக்கச் சமூகத்தின் அடக்குமுறைகளையும் தாண்டி, மாமன்னனாக நிமிர்ந்த கதைதான், மாரி செல்வராஜ் எழுதி இயக்கி, வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீரத்தி சுரேஷ், ஃபகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘மாமன்னன்’ படத்தின் கதைச்சுருக்கம். “பன்னி மேய்க்கிற பசங்க கோவில் குளத்துல குளிக்கிறாங்களாம்… அவன்கள இன்னிக்கு விடக்கூடாது” என்று அந்த கிராமத்துப் பெரியவர்கள்(!) செய்யும் செயலிலேயே தெறிக்கிறது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேரும் கொடூரம். அடுத்து, நல்லிணக்கத்தைப் ‘பாதுகாக்கும்’ பொருட்டு, ‘கோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து நான்கு சிறுவர்கள் மரணம்’ என்கிற பத்திரிகைச் செய்தியோடு முடித்துக்கொள்வது, உச்சபட்சக் கொடூரம். நியாயம் கேட்கும் மண்ணுவை அப்போதைய எம்.எல்.ஏ சுந்தரம் மன்னித்துவிட நிர்ப்பந்திக்கிறான். இதிலிருந்து தப்பிப் பிழைத்தும், அப்பாவின் மௌனத்தைச் சகியாமலும் அந்த ஊரைவிட்டு ஓடிய அதிவீரன், ஊருக்குத் திரும்பியபின் தன் ஆசானிடம் கற்றுக்கொண்ட ‘அடிமுறை’ தற்காப்புக் கலையைக் கற்பிக்கும் பயிற்சிப் பள்ளி நடத்துகிறான். ஒரு கட்டத்தில், அதே ஊரைச் சேர்ந்த லீலா நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்புக்கும் அங்கு இடம் அளிக்கிறான். இதனால் பாதிக்கப்படும் சுந்தரம் கல்விக் குழுமம், ஆட்களை அனுப்பி அந்தப் பயிற்சி வகுப்பை அடித்து நொறுக்குகிறது. கொதித்தெழுந்த அதிவீரன், இளைஞர்களோடு சென்று அக்கல்விக் குழுமத்தை நாசம் செய்கிறான். தற்போதைய மாவட்டச் செயலாளரான சுந்தரத்தின் மகன் ரத்தினவேலு, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, எம்.எல்.ஏ. மண்ணுவையும் அதிவீரனையும் அழைக்கிறான். கட்சித் தொண்டனாக அன்று சுந்தரத்தின் எதிரில் நின்ற மண்ணு, அவன் மகன் ரத்தினவேல் தற்போது உட்கார்ந்திருக்க, எம்.எல்.ஏ. மாமன்னனாக இன்றும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துப் பொங்குகிற அதிவீரன், அவரை உட்காரச் சொல்கிறான். திடுக்கிட்ட ரத்தினவேலு, “யார் சொன்னாலும் அப்பா உட்கார மாட்டாருப்பா..” என்று சொல்ல, ‘நீ உட்காரச் சொன்னியா?’ என்று ரத்தினவேலுவிடம் கேட்பதோடு, மாமன்னனை நிர்பந்தப்படுத்தி உட்கார வைத்துவிடுகிறான் அதிவீரன். சகிக்க முடியாத ரத்தினவேலு அதிவீரனைத் தாக்க, அவன் திருப்பித் தாக்க, மிகப்பெரிய கைகலப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் முதல்வர் இதில் தலையிட, அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை, தேர்தலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கட்டும் என்று முடிவாகிறது. “நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வர வேண்டி இருக்கு” என்கிற அதிவீரன், அதை அடைந்தாரா என்பதுதான் ‘மாமன்னன்’ படத்தின் மீதிக் கதை. பார்த்ததும் சிரித்தே பழக்கப்பட்ட நம்மைக் கண்கலங்க வைக்கிறார் வடிவேலு. “இனிமேலாவது யாருக்கும் எங்கயும் இது நடக்கக் கூடாது” என்று முதல்வரிடம் நா தழுதழுக்கக் கோரும் மாமன்னனாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் வடிவேலுவின் மாறுபட்ட அசத்தலான நடிப்பு, “அவங்கள நிக்க வைக்கிறது என்னோட அடையாளம். இவன உட்கார வைக்கிறது என்னோட அரசியல்” என்று, கழுத்து நரம்பு புடைக்க, சாதிய ஆதிக்கமும் அரசியல் அதிகார வெறியும் கொப்பளிக்கும் இரத்தினவேலுவாக ஃபகத் பாசிலின் மிரட்டலான பங்களிப்பு,  “என்னடா பண்ணுவீங்க? உங்க ஊருக்குள்ள வந்தா கொன்றுவீங்களா? கொன்றுவீங்களாடா..?” என்று கொந்தளிக்கும் அதிவீரனாக உதயநிதி ஸ்டாலினின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டதான நடிப்பு, “இங்கு மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா நமக்குப் பைத்தியமே பிடிச்சுடும்…” என்று பொருமும் நீலாவாக, கிடைத்த வாய்ப்பில் பழுதில்லாமல் செய்த கீர்த்தி சுரேஷ்,  பாடல்களிலும் பின்னணியிலும் கதைக்கருவுக்கு நெருக்கமாக, இசையில் புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ள ஏ.ஆர்.ரகுமான், வேட்டை நாய்கள், குதிரை, புத்தர்,  அம்பேத்கார், பெரியார் போன்ற வழக்கமான குறியீடுகள் இருந்தாலும் பிரச்சார நெடி வீசாமல், இன்னும் பரவலாக நிலவும் சாதிக் கொடுமையை, அது ஏற்படுத்தும் வலியை, செதுக்கியது போன்ற அழுத்தமான பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள மாரி செல்வராஜ் என, ‘மாமன்னன்’ பலவகையில் ஒரு மாறுபட்ட படம். அழகம்பெருமாள் (சுந்தரம்), கீதா கைலாசம் (மாமன்னனின் மனைவி வீராயி), லால் (முதல்வர் சிந்தனை ராஜன்), சுனில் ரெட்டி (ரத்தினவேலுவின் சகோதரன்), ரவீனா ரவி (ரத்னவேலுவின் மனைவி) போன்ற துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். இசை போன்று, கதைக்கருவுக்கு நெருக்கமாகவே வண்ணத்திலும் கருப்பு வெள்ளையிலும் காட்சிகளைத் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ள தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பும் கவனம் பெறுகின்றன.  யுகபாரதியும் அறிவும்  எழுதியுள்ள பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன. வடிவேலு பாடிய ‘ராசாக் கண்ணு’ அருமை. எம்.எல்.ஏ.வைச் சுற்றி, ஒரு பத்து பேராவது எப்போதும் இருப்பது எங்கும் நடப்பதுதான். எப்போதும் மாமன்னன் ஒத்தையாகவே நிற்பதும் அந்தத் தொகுதி மக்களுக்கு சாதி வித்தியாசமின்றி நேர்மையாக உழைத்த, அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை, ஒட்டுமொத்த கிராமங்களும் உள்ளே வரக்கூடாது என்று கூறுவதும்,  திடகாத்திரமான சங்க நிர்வாகிகளில் ஒருவரை, ரத்னவேலு  நாயைக் கொன்றதுபோல அடித்துக் கொன்றது குறித்து எவருமே கேள்வி எழுப்பாததும் நம்பக் கூடியவையாக இல்லை. இறுதிக் காட்சியில், வடிவேலு உள்ளே நுழைய, முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நிற்பதில், ரத்தினவேலுவின் மனைவியைக் குறிப்பிட்டு காட்டுவது, நயம். இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், அவர் சார்ந்துள்ள கட்சி, தலித் சமூகம், சமூக நீதி, வேங்கை வயல், முன்னாள் சபாநாயகர் தனபால் போன்றவற்றையெல்லாம் மறந்து, மறைத்து, ‘இப்படி எல்லாம் இப்போது எங்கு நடக்கும்? யார் சாதி பார்க்கிறார்கள்?’ என்று கேட்கிற, சுயசாதிப் பெருமை பேசுகிற மனநிலை கொண்டவர்கள், மாமன்னன் படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். இல்லையெனில், மனத்தளவில் அதற்கான பொறுப்புத் துறப்புடனும் திறந்த மனத்துடனும் படத்திற்கு வரலாம். அப்படி வந்தால் மட்டுமே, யாதொரு மனப்புழுக்கமும் இல்லாமல் திரைப்படத்தில் லயிக்கவும் முடியும். சாதிய இழிவுகள், ஏற்றத்தாழ்வுக் கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய, முன்னெடுத்துச் செல்லும் தொடர்ப் பயணத்தில் ‘மாமன்னன்’ ஒரு சிறு பங்களிப்பு. மதிப்பெண்: 7.5/10

தீராக் காதல்

தீராக் காதல்

திரை விமர்சனம் நிறைவேறாத காதலின் நாயகன் கௌதமுக்கு வந்தனாவுடன் திருமணமாகி, ஐந்து வயதில் ஆர்த்தி என்கிற மகள் இருக்கிறாள். நாயகி ஆரண்யா, பிரகாஷ் என்பவனுக்கு மனைவியாக இருக்கிறாள். எதிர்பாராதவிதமாக, கௌதம் – ஆரண்யா சந்திப்பு பாலக்காடு சந்திப்பில் நிகழ்கிறது. நீருபூத்த நெருப்பாக இருந்த பழைய காதல் நினைவுகளை அச்சந்திப்பு விசிறிவிட, மீண்டும் காதல் உணர்வு தீப்பற்றிக்கொள்கிறது. விளைவு என்ன ஆனது என்பதுதான், ஜி.ஆர்.சுரேந்திரநாத்துடன் இணைந்து ரோகின் வெங்கடேசன் எழுதி இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள  ‘தீராக் காதல்’ தமிழ்த் திரைப்படத்தின் மொத்தக் கதை. கதை பழையது. என்ன.. அமைந்த அமைதியான வாழ்க்கையில், நிறைவேறாத காதலை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்ணை, காதலன் துரத்துவதாக இல்லாமல்,  உல்டாவாக அப்படியான ஒரு ஆணை, காதலி துரத்துவதான ‘புதுமை’.   ஆரண்யாவுக்கு வாழ்க்கை என்று இல்லாமல் போனதற்குக் காரணம், சாடிஸ்ட் கணவன் பிரகாஷ். ஆனால் அமைதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் கௌதம். இந்நிலையில், ‘வந்தனாவை விட்டுவிட்டு வந்துவிடு’ என்று ஆரண்யா அவனைக் கேட்பதில் என்ன நியாயமோ?! “ஆரண்யா இப்ப பிரச்சனயில இருக்கா. அவ சாயறத்துக்கு ஒரு தோள் வேணும். தேவையே இல்லாம நீ பிரச்சனயில மாட்டிக்காத” என்று நண்பன் அருண் அறிவுறுத்தியும், “இங்க நடந்தத இங்கேயே மறந்துடுங்க. அதுதான் நம்ம ரெண்டுபேருக்கும் நல்லது” என்று கௌதமே ஒரு கட்டத்தில் ஆரண்யாவிடம் கூறும் தெளிவிருந்தும், அவளது பேச்சிலும் செயலிலும் அவ்வப்போது சரிந்துபோகும் பரிதாப நிலையையும் வந்தனா மற்றும் குழந்தை ஆர்த்தி மீதான பாசத்தால் குமைந்துபோவதையும் கௌதமாக வரும் ஜெய்,  தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். ஒருபக்கம் வாழ்ந்தும் வாழாத வாழ்க்கை, மறுபக்கம் எதிர்பாராத சந்திப்பால் அடிமனத்தில் அமிழ்ந்துபோய் மீண்டும் துளிர்த்த காதல் நினைவுகள் ஊடே சிக்கித் தவிக்கும் ஆரண்யா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுபட்ட நடிப்பை வழங்கி, அப்பாத்திரத்தையே மெருகூட்டியுள்ளது சிறப்பு. மேம்போக்கில் ‘வொர்க்காலிக்’காகத் தெரியும் வந்தனா, கணவன் கௌதம் மீதும் மகள் ஆர்த்தி மீதும் அளவில்லாத அன்பைக் கொண்டுள்ள நிலையில், அவன் வெளிப்பட்டு நிற்கும்போது, “நீங்க எல்லா பொறுக்கித்தனமும் பண்ணுவீங்க. அப்புறம் வந்து ‘சாரி’ கேட்ட உடனே, நாங்க எல்லாத்தையும் தொடச்சி எறிஞ்சிட்டு, ‘ஈ’ன்னு இளிச்சுட்டு வந்துடணும்… இதே தப்ப நான் பண்ணி இருந்தா?” என்று கொதித்து வெடிப்பதும் குழந்தை காணாமல் போகும்போது பதைத்துப் போவதுமாக, வந்தனவாக வரும் ஷிவதா நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். கௌதமின் நண்பன் அருணாக வரும் அப்துல் லீ,  “என்னடா, எரியற பல்ப முழுசா முழுங்குன மாதிரி முகம் எல்லாம் பிரகாசமா இருக்கே!” என்று சூழலைக் கலகலப்பாக வைத்திருப்பதுடன், “ஒரே வழிதான் இருக்கு. வந்தனாகிட்ட போய் உண்மையைச் சொல்லி, அவ கால்ல விழுந்துரு” என்று இடையிடையே கருத்துள்ள ஆலோசனையும் வழங்கி, மிகையில்லாத நடிப்பைத் தந்திருப்பது அருமை. ஆரண்யாவின் கணவன் பிரகாஷை, ஒரு கட்டத்தில் ஆரண்யா அறையும்போதுதான், ஓரளவுக்கு ரசிகர்கள் ஆறுதல் அடைகிற வகையில், சேடிசத்தை வெளிப்படுத்தும் கணவன் பாத்திரத்தில் அம்ஜத்கான் சோபித்துள்ளார். குழந்தை ஆர்த்தியும் (வ்ருத்தி விஷால்) இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். “என்னடா.. இந்தக் காலத்துல ஹஸ்பண்ட் வைஃப்புங்கள்லாம் நல்லவங்களா மாறிட்டாங்களோன்னு பார்த்தேன்..” (கௌதம்) “புடிச்சவங்களோட ஒரு இடத்துல இருக்கும்போது அந்த இடம் இன்னும் ரொம்ப அழகா ஆயிடுது இல்ல..?!” (கௌதம்) “என்ன மோசமான உலகம் இது கௌதம்?! சேந்து வாழ வேண்டியவங்கள எல்லாம் பிரிச்சு வெக்கறாங்க; பிரிஞ்சி வாழ விரும்பறவங்கள எல்லாம் சேத்து வெக்றாங்க” (ஆரண்யா) “என்ன பண்றது.. வேலை நடக்கணும்னா பிளைட், வேலை முடிஞ்சுச்சுடுச்சுனா ட்ரெய்ன்னு..” (கௌதம்) “எல்லாக் கம்பெனியும் ஒரே மாதிரியாதான் இருக்காங்க” (ஆரண்யா) “இங்க வந்தா ஒன்னரை மணி நேரம் முன்னாடியே உன்ன பாக்கலாமில்ல..” (ஆரண்யா) போன்ற ஜி.ஆர்.சுரேந்திரநாத்தின் வசனங்கள் அருமை. மங்களூர், மும்பை, சென்னை நகரங்களில் இரவு பகலாக வலம்வந்து அழகை வாரி இறைத்த ரவிவர்மன் நீலமேகனின் ஒளிப்பதிவு, கண்களுக்கு விருந்து. சித்து குமாரின் பின்னணி இசை அருமை. ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு நிறைவு. கதையில் புதுமை இல்லை என்றாலும் கத்தி முனையில் நடக்கும் கதைக் கருவை, கீறல் இல்லாமல்  வழங்கிய விதமும் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பும்  ரோகின் வெங்கடேசன் இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. மதிப்பெண் : 6.5/10

சுலைகா மன்சில்

சுலைகா மன்சில்

திரை விமர்சனம் ஒருவரது இதயத்திலிருந்து  வரும் ஒரு சில வார்த்தைகளும்கூட,  இன்னொருவரது வாழ்க்கையின் பிடிமானமாகி, சடுதியில் தெளிவை ஏற்படுத்தும் என்பதன் அழகான திரை வடிவம்தான், அஷ்ரப் ஹம்சா எழுதி இயக்கி, மலையாளத்தில் உருவாகி, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ‘சுலைகா மன்சில்’. சுலைகாவின் ஒரே மகள் ஹாலா. அவள் விரும்பும் ஆஷிக்கிடம் தான் எதிர்பார்க்கும் தகுதியில்லை என்று மூத்த சகோதரன் சமீர் மறுக்க, எதிர்பாராமல் விபத்தில் அவன் உயிர் இழக்கிறான்.  பிறகு சகோதரன் பார்க்கும் வரன்களையெல்லாம் ஏதோ ஒரு காரணம் கூறி, ஐந்தாண்டுகளாக மறுத்துவரும் ஹாலா, ஒரு கட்டத்தில் அமீனை மணக்கச் சம்மதம் தெரிவிக்கிறாள். நிச்சயதார்த்த நிகழ்வுக்கு முன்னதாக, வளைகுடா நாட்டிலிருந்து வந்திருக்கும் அமீன், ஹாலாவைத் தொடர்புகொண்டு பேச முயல்கிறான். விருப்பம் இருந்தும் வீட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் அவளால் பேச இயலாத நிலை. அதைப் புரிந்து கொள்ளாத அமீன் அவளிடம் கடுமையாகப் பேசிவிடுகிறான். நண்பன் அன்வர் எடுத்துக் கூற, அவளிடம் மன்னிப்புக் கோருகிறான். அன்றிரவு அவளது வீட்டின் பின்புறம் சந்திக்கிறான். பேச்சு வாக்குவாதமாகிவிட, திருமணத்தை நிறுத்திவிடுவதாக அவன் முடிவு செய்கிறான். திருமணம் பிரச்சனையில் முடிந்ததா, பிரச்சனை தீர்ந்து திருமணம் முடிந்ததா என்பதுதான் ‘சுலைக்கா மன்சில்’ படத்தின் மீதிக் கதை. ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் நிகழும் எளிமையான சம்பவங்களின் தொகுப்பாக, படம் முழுவதும் ஒரே சீராக, கலகலப்பாகச் செல்ல மாப்பிள்ளை, மணப்பெண் உள்ளங்களில் மட்டும் ஏற்றமும் இறக்கமுமான உணர்ச்சி அலைகள். இரு வேறு நிலைகளையும் அழகியலுடன் வழங்கியிருக்கிறார் இயக்குநர் அஷ்ரப் ஹம்சா. ஹாலாவாக அனார்கலி மரிக்கர், குதூகலக் காதலையும் கொஞ்சம் வெறுமையையும் வரப்போகும் புதிய உறவில் தெளிவையும் உறுதியையும் அவற்றுக்கு ஏற்ற முகபாவங்களுடன், அழகுற வெளிப்படுத்தும் பாங்கு பாராட்டுக்குரியது. லக்மேன் அவரன் அமீன் பாத்திரத்தின் அவசரத்தன்மை கொண்ட, உணர்ச்சிவயப்பட்ட, சற்றுக் குழப்பமான தன்மையை நடிப்பில் குழப்பம் இல்லாமல் செய்துள்ளது சிறப்பு. செம்பொன் வினோத் ஜோஸ் (சமீர்), ஆமல்டா லிஸ் (பத்துல்), சபரீஷ் வர்மா (ரம்ஜான்), தீபா தாமஸ் (டாக்டர் அமீனா), நவ்ஷத் அலி (அன்வர்), அர்ச்சனா பத்மினி (ஹவ்வா), மம்மு கோயா (அப்துல் ரகுமான்),  சுபா ஸ்ரீதரன் (சுலைகா), ஷெபின் பென்சன் (ஆஷிக் மலியெக்கல்) உட்பட துணைப் பாத்திரங்களை ஏற்ற அனைவரும் தத்தம் பங்களிப்பை  நிறைவாகவே வழங்கியுள்ளனர். “ஜென்னத்துக்கே வந்துட்ட மாதிரி இருக்கு…”“ஜென்னத்துன்னா… சொர்க்கம்னு அர்த்தம்”“அப்பா.. சொர்க்கத்துல இப்படியெல்லாம்தான் லைட் போட்டுருப்பாங்களா?” “முறையா என்ன கூப்பிடல.. எனக்குத் தன்மானம்தான் முக்கியம்”“என்னால நடக்கிற கல்யாணத்துக்கு என்னையே கூப்பிட வருவியா? நாங்க அங்க வர்றதுக்குத்தான் கிளம்பிட்டு இருக்கோம்” “என்னடா தலை மட்டும் தனியா வருது?”“உடம்பும் இருக்கு” “செருப்பு இல்லாம கபரஸ்தான் வழியா போனா, கல்லு இல்ல, பாம்புகூட குத்தும். எப்பவும் ‘சென்டிமென்ட்ஸ்’சோட சுத்தனா இப்படித்தான் நடக்கும்” “படா பையாவா இருக்கறது ரொம்பக் காம்ப்ளிகேட்டட் பொசிஷன் இல்ல?” “பார்லர்க்கா? ஏற்கனவே அங்க இருந்து வந்த மாதிரிதான் இருக்கீங்க. திரும்ப பெயிண்ட் அடிக்கப் போறீங்களா?” “கொஞ்ச நேரத்துல அப்படி என்ன பேச முடியும்?”“காலைல எழுந்து சுலைமானி டீ குடிப்பியா? இல்ல.. பிளாக் காபி குடிப்பியான்னு கூடத் தெரியாதே!” “இது நல்லா இருக்காதுன்னு எனக்குத் தெரியும். இத போட்டுக்க வேண்டாம், போட்டுக்கறேன்னு அவர்கிட்ட ஒரு வார்த்த மட்டும் சொன்னா போதும், மத்தத நான் பாத்துக்கறேன்” “உங்களுக்கிருக்கற சாய்சும் பெர்சனாலிட்டியும் எனக்கும் இருக்குமில்ல?”“நீங்க ஹேப்பியா இல்லன்னா எங்க பைய்யாகிட்ட வந்து பேசுங்க, பொறுமையா டைம் எடுத்துட்டு லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கலாம்” “நான் வீட்டுக்குப் போய் சொல்லட்டுமா, ஹாலா?”“அப்போ அவங்க சந்தோஷம் முடிஞ்சு போயிடும்”“உங்களுக்கு இத்தனை பேரோட சந்தோஷத்தக் கெடுக்கணும்னு தோணல இல்ல.. இதவிடப் பெரிய குவாலிட்டி உள்ள லைஃப் பார்ட்னர் எனக்கு வேணும்னு நான் ஆசைப்பட்டதில்ல” ~இவை ரசிக்கத்தக்க, அர்த்தபூர்வமான வசனங்களில் சில. “நாளைக்குதானே உங்க அண்ணனோட கல்யாணம்?” என்று இளநீர்க் கடைக்காரர் அமீனிடம் கேட்பதும் அதற்கு அமீன் மறுப்பேதும் சொல்லாததும் நம்மைக் குழம்பச் செய்கிறது.   கண்ணன் பட்டேரியின் ஒளிப்பதிவு, கண்களுக்குக் குளுமை. பாடல் காட்சிகளைப் படமாக்கிய விதமும் அருமை. பாடல்களுக்கான விஷ்ணு விஜயின் துள்ளலான இசை தாளம் போட வைக்கின்றது. பின்னணி இசையும் அருமை. நவ்புல் அப்துல்லாவின் படத்தொகுப்பு கச்சிதம். வெறும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை கலந்து கலகலப்பாகவும் இளைய தலைமுறைக்கு ஒரு ‘பிரீ வெட்டிங் கவுன்சிலிங்’ போலவும் ‘சுலைகா மன்சில்’ படத்தை வழங்கியுள்ள இயக்குநர் அஷ்ரப் ஹம்சாவுக்கு ஒரு சபாஷ் போடலாம். மதிப்பெண் : 7.5/10

ஒரு சாமானியன் போதும்

ஒரு சாமானியன் போதும்

திரை விமர்சனம் சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை  பாமரத்தனமான கடவுள் பக்தியும் தங்களையே கடவுளாக வரித்துக்கொள்ளும் சாமியார்கள் மீதான கண்மூடித்தனமான பக்தியும் அந்தச் சமூகத்தை, அதன் அங்கமாக உள்ள  மக்களை, குறிப்பாகப் பெண்களை எப்படியெல்லாம் சீரழித்து வருகிறது என்பதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டேதான் வருகிறோம். அதிலிருந்து நாம் கற்ற பாடம் என்ன என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.   இப்படியான உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தீபக் கிங்கிரணியின் விறுவிறுப்பான கதை திரைக்கதை வசனத்தில், அபூர்வ் சிங் கார்க்கியின் நேர்த்தியான இயக்கத்தில், மனோஜ் பாஜ்பேயின் அழுத்தமான நடிப்பில் உருவாகி, ஜீ5 தளத்தில் தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ஹிந்தித் திரைப்படம்தான் ‘ சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ (ஒரு சாமானியன் போதும்). வாய்ப்புக்கு ஏதுவான இந்தப் ‘புண்ணிய’ பூமியில் வறுமை, நோய், அறியாமை, பேதமை, கல்வி அறிவின்மை தாண்டி, பகுத்தறிவின்மை, அச்சம் காரணமாக எதையும் நம்பும் மனோநிலையில் மக்கள். தீர்வு தேடி உழன்றுகொண்டிருக்கும் அவர்களிடையே ‘கடவுள் அவதார’மாக முளைத்துச் செழிக்கும் சாமியார்களில் ஒருவன்தான் பாபாஜி. அவனின் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் இளவயதுப் பெண்ணுக்காக நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தைத் தனிமனிதனாக நடத்துகிறார், குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர் சோலங்கி. பாபாஜிக்குப் பண பலம், ஆள் பலம் தாண்டி மக்களின் கண்மூடித்தனமான ஆதரவும் இருக்கிறது. மிகமிகப் பிரபல வக்கீல்கள்,  அவர் பொருட்டுப் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர் ஆகிறார்கள். சாட்சிகள் விலை பேசப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். கொடிய குற்றத்தைப் பின்னுக்குத் தள்ளி, அந்தக் கார்ப்பரேட் சாமியாரின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆசிரமங்கள் ஆகியவற்றால் மக்களின் ‘சேவை’ தடைபடுவதாக மட்டுமே, நீதிமன்றங்களில், மக்கள் மன்றங்களில், ஊடகங்களில் முன்னிறுத்தப்படுகின்றது. ஐந்து ஆண்டுகளாக நீளும் சட்டப் போராட்டத்தில்,  அப்பெண்ணின் வலி உணர்ந்த, உண்மைக்காகப் போராடும் வழக்குரைஞர் சோலங்கி, அந்த இளவயதுப் பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத் தந்தாரா என்பதுதான், ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படத்தின் மொத்தக் கதை. “எப்படியாவது அவர் மேல இருக்கிற போக்சோ கேச டிரா பண்ணு, இல்லன்னா பிரச்சனை பெருசா போய்டும்.” இப்படி பாபாஜி தரப்பு அலறுவதிலிருந்தே, போக்சோ  சட்டத்தின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். அதீத நம்பிக்கை கொண்ட அந்தக் குடும்பம் பாபாஜியின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைகிறது. உதவ நினைக்கும் காவல்துறை பெண் அதிகாரி, போக்சோ சட்டத்தின் நுணுக்கங்களை அறிந்த வழக்குரைஞர் சோலங்கியை அவர்களுக்குப்  பரிந்துரைக்கிறார். அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து கலங்கிப் போகும் சோலங்கி, தீவிர சிவ பக்தனாக இருந்தும், பாபாஜியின் கேடுகெட்டச் செயலை ஜீரணிக்க இயலாமல், வழக்கை எடுத்துக் கொள்கிறார். அவரிடம், “சார்.. உங்களோட பீஸ்?” தயங்கித் தயங்கிக் கேட்ட பாதிக்கப்பட்ட பெண் நூவின் தந்தையிடம், சோலங்கி  புன்முறுவலுடன் சொல்கிறார், “அந்தப் பொண்ணோட சிரிப்பு..” ” கோர்ட்ல கீழ்த்தரமான கேள்வி எல்லாம் கேப்பாங்க. எப்படியாவது உன் மனசை உடைக்க நெனப்பாங்க. நீ எதுக்கும் பயப்படக் கூடாது” என்று விசாரணைக்கு நூவைத் தயார் செய்யும்போதும், நூவின் பெற்றோர்களிடம் ஒரு கதையைச் சொல்லி, அவர்களது ஒத்துழைப்பைக் கோரும்போதும்,  போக்சோ சட்டத்தின் கூறுகளை, அவற்றின் நுணுக்கங்களை எடுத்துரைத்து, அழுத்தமான வாதங்களை முன்வைக்கும்போதும், சூழ்ந்துள்ள ஆபத்தில் தனது மகன் காணாமல் போனதை அறிந்து பதைபதைக்கும்போதும், “தற்கொலை செஞ்சுக்கலாம்னு தோனுது” என்று சொல்லும் நூவிடம், “நடக்கிற இந்தப் போருக்கான முழக்கத்தை அவங்க எழுப்பிட்டாங்க கண்ணா” என்று தைரியம் சொல்லி, சங்கநாதம் முழங்கும்போதும், பிரிய விரும்பாத தன் ஜூனியரிடம், அவரின் பாதுகாப்பு நிலைமையை எடுத்துச் சொல்லி, அக்கறையும் கண்டிப்புமாக வலியுறுத்தும் பொருட்டு அவரது காலில்விழ முயலும்போதும், ஐந்தாவது முறை ஷூவைப் பாலிஷ் செய்வதைப் பையன் கிண்டல் செய்வதை ரசிக்கும்போதும், “ஸ்கூல், ஹாஸ்பிடல் கட்டுறதுனால, அவர் ரேப் பண்ணலாம்னு ஒன்னும் அர்த்தம் கிடையாது…. இல்லையா?” என்று பாபாஜி தரப்பில் வந்த அட்வகேட்டிடம் செவுளில் அறைந்ததுபோல் கேட்கும்போதும், “இந்த நாட்ல ஒரு பெண்மணியோட வாழ்க்கையில ஏகப்பட்ட கஷ்டங்க ஏற்படுது. அந்தக் கஷ்டங்களோட ஒரு பிரதி பிம்பமா பாதிக்கப்பட்ட இந்தப் பெண் இருக்கா. இப்படிச் சொல்வதற்கு எனக்கு உண்மையிலேயே அவமானமா இருக்குது, யுவர் ஹானர்” என்று வாதத்தினிடையே தெரிவிக்கும்போதும், “மொத்த ‘ப்ரோசிடிங்ஸ்’லயும், ஒரு சில பேர் அவள பாதிக்கப்பட்ட பொண்ணா பாத்தாங்க, இல்ல பணமா பாத்தாங்க, சில பேர் அவங்க காமப் பசிக்குப் போகப் பொருளாப் பாத்தாங்க, இன்னும் சில பேர் ‘டி.ஆர்.பி’ யா பாத்தாங்க… நான் அந்தப் பொண்ணுக்குள்ள காளிய பார்த்தேன்..” என்று உணர்ச்சிவயப்பட்டுக் கூறும்போதும், வழக்குரைஞர் சோலங்கியாக மனோஜ் பாஜ்பேயி, மாறுபட்ட நடிப்புத் திறமையால் நம்மைப் படம் முழுவதும் அத்துடனேயே கட்டிப்போட்டுவிடுகிறார். நேர்மையான வழக்கறிஞர்கள் மீதான மதிப்பைப் பல மடங்கு கூட்டியும் விடுகிறார். பெரும்பாலான நீதிமன்றக் காட்சிகளில் முகத்திரை இட்டிருந்தும், கண்களிலேயே நுட்பமான பாவங்களை வெளிப்படுத்தி நடிப்பில் அசத்திய அட்ரிஜா சின்ஹா (நூ) சபாஷ் போட வைக்கிறார். பசுத்தோல் போர்த்திய புலியாக வரும் பாபாஜி (சூரிய மோகன் குல்ஸ்ரேஷ்தா), பாபாஜி தரப்பு அட்வகேட் சர்மா (விபின் ஷர்மா), சோலங்கியின் ஜூனியர், அவரது அம்மா, மகன், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்,  நூவின் பெற்றோர்கள்,  உட்பட ஏனைய துணைப் பாத்திரங்கள் அனைவரும் அவர்களுக்குரிய நேர்மையான பங்களிப்பைத் தந்துள்ளது சிறப்புக்குரியது. பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றங்களில் அமைந்திருந்தாலும் கொஞ்சமும் சலிப்புத் தட்டாத வகையில் படமாக்கியதில், அர்ஜுன் குக்ரேட்டியின் ஒளிப்பதிவுக்குப் பெரும்பங்கு உண்டு. படத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதைக்கேற்ற கொதிநிலையில் வைத்திருந்தமைக்கு சங்கீத் சித்தார்த்தின் இசை ஒரு காரணம். இன்னொரு காரணம், ‘சிக்’கென இருந்த சுமித் கோட்டியனின் படத்தொகுப்பு. ஒட்டுமொத்தமாக அல்லாது அவ்வப்போது ஃப்ளாஷ் பேக் உத்தியைப் பயன்படுத்திப் படக்கதை நகர்வது அழகு. அன்று, காவல்துறை அதிகாரிகளிடம் நேர்மை, நீதித்துறையில் தலையீடின்மை, பாதிக்கப்பட்ட பெண்ணின் மனோவலிமை, பெற்றோர்களின் உறுதி, உயிர் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் கயவர்களுக்கு எதிராக போராடும் சில மனிதர்களின் துணிச்சல், எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று ஒதுங்கி நின்ற ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு என்ற சூழல்தான், பெண்ணின் பார்வையில் வலி உணர்ந்து, சூழ்ந்துள்ள ஆபத்தை அறிந்தும் வழக்கை அணுகிய வழக்குரைஞர் சோலங்கியால் உண்மையை நிலை நாட்டிடச் செய்தது. எந்தப் புராண இதிகாசங்களைக் கைக்கொண்டு, இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் மக்களின் பாமரத்தனத்தின் மீது, தத்தம் மோசடிகளைக் கட்டமைத்து முறையற்ற சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களோ, குற்றம் என்னவென்று கருதாமல் குற்றவாளிகள் யார் என்று கருதக்கூடிய ‘செலெக்ட்டிவ் அப்ளிகேஷ’னுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய, அதே புராண இதிகாசங்களை நீதிமன்றங்களிலேயே மேற்கோள் காட்டி, அவர்களுக்கு எதிரான நீதியைப் பெற முயல்வது,  நகை முரண். என்றாலும், நீதிமன்றம் இந்தியக் குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பை வழங்குவதாக அமைத்ததற்கும் காலத்தின் கட்டாயமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழியைத் தோலுரித்துக் காட்டும் ஒரு நேர்த்தியான திரைப்படத்தை  வழங்கியதற்கும் இயக்குநர் அபூர்வ் சிங் கார்க்கி, வெகுவான பாராட்டுக்கு உரியவராகிறார். மதிப்பெண் : 8/10

வாழ்வின் பொருள் என்ன?…

வாழ்வின் பொருள் என்ன?…

வழக்கம் போல் பெரிய செவ்வியல் தன்மை கொண்ட நாவல்களைப் படித்து முடித்ததும் மனதில் உண்டாகும் ஆழ்ந்த இனம்புரியாத கனத்துடன்தான் “ஒரு குடும்பம் சிதைகிறது” நாவலை வாசித்துமுடித்த பின்னும், அதன் முன் மௌனித்து அமைதியாக அமர்ந்திருந்தேன். இம்முறை மனது சற்று அதிகமாகவே அலைபாய்ந்தது. அந்த வாழ்க்கை…, அந்த மனிதர்கள்…, நஞ்சம்மா… மனம் ஏகத்துக்கும் விக்கித்துதான் போயிருந்தது. நாவல் அதீத சிந்தனைப் பின்னல்களையும், மன ஆழ விசாரங்களையும், தத்துவத் தேடல்களையும் கொண்டிராவிட்டாலும், அவை அத்தனையையும் வாசிக்கும்மனதிற்குள் உண்டாக்குவதுதான் அவ்வெழுத்தின் மாயம். பைரப்பாவின் எழுத்து பிரமிப்பையும், ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தியது. நிகழ்வுகள், நிகழ்வுகள்…மேலும் மேலும் வாழ்வின் நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார் பைரப்பா. இயல்பான அதுவே வாசிக்கும்மனத்தை ஈர்த்து கிஞ்சித்தும் விலகவிடாமல் செய்கிறது. தி, ஜா-வின், அமி-யின், காரந்தின் எழுத்தில் வியக்க/கற்றுக்கொள்ள நுண்மைகள் இருப்பது போல், பைரப்பாவின் எழுத்திலும் அவ்வதிசயம் எங்கு, எப்படி நிகழ்கிறதென்று வியந்துகொண்டேயிருந்தேன். எச்.வி. சுப்ரமணியம் தமிழில் மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். நாவல் வெளியாகி அரை நூற்றாண்டானாலும், “ஒரு குடும்பம் சிதைகிறது” எக்காலத்திற்குமான செவ்வியல் நாவல். முக்குணங்களில் “தமஸ்”-ஐப் பற்றி அதிகம் படித்திருக்கிறேன்;பெரியவர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறேன். முதல் முறையாக தமஸே முழு மனித வடிவம் கொண்ட பாத்திரமாக “சென்னிகராய”ரை இந்நாவலில்தான் சந்தித்தேன். உணவிலும், உறக்கத்திலும் மட்டுமே பெரு விருப்பு கொண்ட ஒரு சுயநல ஜென்மம்.அம்மா, தம்பி, மனைவி, மகன்/மகள் யாருமே அவருக்கு அடுத்த பட்சம்தான். “நாவலில் சென்னிகராயரின் உணவுகள்” என்ற தலைப்பிலேயே ஒரு நீள்கட்டுரை எழுதலாம். நாவல் தலைப்பின் தன்மை/பிரதிபலிப்புகள், முதல் அத்தியாயத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகத்திலேயே துவங்கி விடுகிறது. வசைகளும், சாபங்களும் பல கதாபாத்திரங்களின் வாயிலாக நாவல் முழுவதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. எதிர்மறைகளின்பெரும்பான்மையில், நேர்மறை மூச்சுத் திணறுகிறது. வாழ்க்கைச் சக்கரத்தில், கதாபாத்திரங்களின் மரணங்கள் கூட வெகு இயல்பாக, சாதாரணமாக நாவலில் வந்து செல்கின்றன. பூ உதிர்கிறது; பிஞ்சு உதிர்கிறது; காய் உதிர்கிறது; கனி உதிர்கிறது. நல்லனவும்,நேர்மையும் இப்பூமியில் கஷ்ட ஜீவிதத்தில் குறை ஆயுளோடு அல்லலுற, தகிடுதத்தங்களும், ஏமாற்றும் தன்மையும், எதிரும் நீண்ட ஆயுளுடன் சிரிப்போடு பிழைக்கின்றன. காலம் தன் போக்கில் சுழன்று கொண்டிருக்கிறது. * 1920/30-களின் காலகட்டம். மைசூர் சமஸ்தானம், தும்கூர் ஜில்லா, திப்டூர் தாலுகா, கம்பனகெரே பிர்க்காவில் ராமஸந்திர கிராமத்தின் கணக்குப்பிள்ளை ராமண்ணாவிற்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு வருகிறாள் பதின் வயது கங்கம்மா.ஊரில் ஒரு சிவன் கோயிலும், ஆஞ்சநேயர் கோயிலும், இரு அம்மன் தேவதைகளும் (கிராம தேவதை காளம்மன், ப்ளேக் தேவதை சுங்கலம்மா) உண்டு. இரண்டு/மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊர் ப்ளேக் நோய் பரவலால் அவதிப்படும்;பிளேக் நோய் அறிகுறிகள் தென்பட்டதும் ஊர் மொத்த ஜனமும் ஊரைக் காலிசெய்து ஊருக்கு வெளியே கொட்டகை போட்டு தங்கிவிட்டு, பிளேக் முடிந்ததும் ஊருக்குள் வருவார்கள். ராமண்ணாவிற்கும் கங்கம்மாவிற்கும் முப்பது/முப்பத்தைந்து வயது வித்தியாசம். அவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவன் சென்னிகராயன்; இளையவன் அப்பண்ணய்யா. கங்கம்மாவின் இருபத்து ஐந்தாவது வயதில் ராமண்ணா இறக்கும்போது சென்னிகராயனுக்கு 9 வயது; அப்பண்ணய்யாவிற்கு 7 வயது. சட்டப்படி கிராமத்தின் கணக்குப்பிள்ளை வேலை, தந்தை இறப்புக்குப் பின் மூத்த மகனுக்கு வரவேண்டும். சென்னிகராயனுக்கு அப்போது 18 வயது ஆகவில்லையென்பதால் தற்காலிகமாக மணியக்காரர் மைத்துனன் சிவே கவுடன் அந்த வேலையைப் பார்த்து வருகிறான். பையன்கள் இருவருக்கும் படிப்பில் நாட்டமில்லை. கங்கம்மா மூர்க்க குணம் படைத்தவள். எப்போதும் வசைகளும், சாபங்களும், கெட்ட வார்த்தைகளுமே அவள் நாவில் நடமாடும். அவளின் வளர்ப்பு இரண்டு மகன்களிடமும் பிரதிபலிக்கிறது. படிக்க பள்ளிக்கூடம் செல்லச் சொல்லும் அம்மாவின் மீது கோபம் கொண்டு சொந்த வீட்டின் ஓட்டுக் கூரையையே இரவில் உலக்கையால் சேதப்படுத்துகிறார்கள். சென்னிகராயன் சோம்பேறி; சுயநலமி; போஜனப் பிரியன். அப்பண்ணய்யா அவனளவிற்கு இல்லையென்றாலும் அவனும் மூடன்தான்.அக்காலத்தில் பெண்கள் வயதுக்கு வருமுன்னே திருமணம் செய்கிறார்கள் (மகள்கள் பெரியவளாகும் வரை திருமணம் நடக்கவில்லையென்றால் அம்மாக்கள் கவலைப்படுகிறார்கள்); பின்னர் மணப்பெண் பெரியவளானதும் சீர்வரிசையோடு புக்ககம் வருவது வழக்கம்.நாகலாபுரம் கிராமத்தின் புரோகிதர் கண்டி ஜோசியரின் மகள் பனிரெண்டு வயது நஞ்சம்மாவிற்கும், பதினெட்டு வயது சென்னிகராயருக்கும் திருமணம் நடக்கிறது. கிராமத்தின் கணக்குப் பிள்ளை வேலையை திருப்பித் தர மறுக்கும் சிவலிங்கனிடமிருந்து,அவனை மிரட்டி அந்த வேலையை சென்னிகராயனுக்கு வாங்கித் தருகிறார் கண்டி ஜோசியர். வருடங்கள் உருண்டோடுகின்றன. சென்னிகராயனுக்கு கணக்குப் பிள்ளை வேலையை சரியாகச் செய்யத் தெரியவில்லை. நஞ்சம்மாதான் பார்த்துக் கொள்கிறாள். மாமியாரின் குணத்தினாலும், கணவனின் விட்டேற்றித் தனத்தினாலும் நஞ்சம்மா புகுந்த வீட்டில்சிரமங்களை அனுபவிக்கிறாள். அவ்வீட்டை கட்டிக் காக்கும் பொறுப்பு அவள் தலை மேல் விழுகிறது. தாய் மகன்களின் நடவடிக்கைகளால் அவ்வீட்டின் சொத்துக்கள் ஒவ்வொன்றாய் கைவிட்டுப் போவதை நஞ்சம்மா எவ்வளவு முயன்றும் தடுக்க முடிவதில்லை.நஞ்சம்மாவின் வீடெதிரில் இருக்கும் கோயிலில் வசிக்கும் பிரம்மச்சாரி பெரியவர் மாதேவய்யாவும், குருபரஹள்ளி குண்டே கவுடரும் அவர் மனைவி லக்கம்மாவும் நஞ்சம்மாவிற்கு ஆதரவாய் உதவிகள் செய்கிறார்கள். கடூர் வட்டம் நுக்கிகெரே கிராமத்தின் சியாம பட்டரின் மகள் சாதம்மாவை மணக்கிறான் இளையவன் அப்பண்ணய்யா. நஞ்சம்மாவின் பிறந்த வீட்டில் அவள் பாட்டி அக்கம்மாவும் (கண்டி ஜோசியரின் அம்மா), அண்ணன் கான்ஸ்டபிள் கல்லேசனும் வசிக்கிறார்கள்.கல்லேசனுக்கு, கண்டி ஜோசியர் ஹாசனைச் சேர்ந்த கமலாவைத் திருமணம் செய்து வைக்கிறார். கமலாவிற்கு கல்லேசனையும், நாகலாபுரம் கிராமத்தையும் பிடிப்பதில்லை. கால ஓட்டத்தில் நஞ்சம்மாவிற்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் பார்வதி, அடுத்தது ராமண்ணா (படிப்பிலும், சாமர்த்தியத்திலும் கெட்டி), மூன்றாவது விஸ்வநாதன் (விசுவன்). சாதம்மாவிற்கு இரண்டு குழந்தைகள்; மூத்தவள் ஜெயலட்சுமி, அடுத்து ராமகிருஷ்ணன்.கிராமத்தில் இன்னும் பல கதாபாத்திரங்கள்; வீட்டுத் திண்ணையில் கடை வைத்து நடத்தும் சென்ன செட்டி, அவர் மகன் கிரியன், கிரியனின் மனைவி நரசம்மா (மூவருக்குமான ஒரு அட்டகாசமான பஞ்சாயத்துக் காட்சி நாவலில் வருகிறது!). ஊருக்குள் பகட்டாகத்திரியும், கடன் வாங்கிச் சூதாடும் ரேவண்ண செட்டி, அவன் மனைவி சர்வக்கா. குடும்பத்தை நிலைநிறுத்த, குழந்தைகளை வைத்துக்கொண்டு நஞ்சம்மா எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறாள். பட்டினி கிடக்கிறாள்; கணவனின் கணக்குப்பிள்ளை வேலைகளைச் செய்கிறாள்; அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது, எப்படி காலம்தள்ளுவது என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறாள். புரச இலை தைத்து விற்கிறாள்; பஞ்சகாலத்தில் ஏரிப் படுகையில் தாமரைக் கிழங்கு தோண்டி உணவுக்குப் பயன்படுத்துகிறாள். அவள் சிரமப்பட்டு எழுந்து நிற்க முயலும் ஒவ்வொரு முறையும் விதிஅவளைக் கீழே தள்ளுகிறது. * நாவலில் எனக்கு மிகப் பிடித்த பகுதி, நஞ்சம்மா மகன் விஸ்வனுடன் மேற்கொள்ளும் சிருங்கேரிப் பயணம். மனம் நெகிழ்ந்து கண் நிறைந்த காட்சி, தினமும் பத்து மைல்கள் நடந்து பள்ளிக்குச் சென்று வரும் ராமண்ணா, ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில்இருட்டக் காத்திருந்து வீட்டில் பசியோடிருக்கும் எல்லோருக்கும் சேர்த்து பலாக்காய் திருடிக் கொண்டு வரும் காட்சி. மனதைக் கலங்கடித்த பகுதி அம்மா பிளேக்கினால் இறந்து பல மாதங்களான பின்னும், இன்னும் அதை நம்ப முடியாமல், மாதேவய்யாவுடன் ஊர்விட்டுக் கிளம்பும் கடைசிக் காட்சியில், தன் வீட்டிற்குள் போய் எல்லா இடங்களிலும் “அம்மா…அம்மா” என்று விஸ்வன் அழைக்கும் காட்சி. திருமணம் முடிந்து முதலிரவு கூட நடக்காத குழந்தை பார்வதியை பிளேக்கிற்குப் பறிகொடுத்து, அவளை மயானத்தில் எரித்து விட்டு வருவதற்குள் மகன் ராமண்ணாவும் பிளேக் காய்ச்சலினால் இறக்க மனம் நிலைகுலையும் நஞ்சம்மா அன்றிரவில் தற்கொலைசெய்துகொள்ள ஊர்க் கிணற்றின் விளிம்புச் சுவற்றின் மேல் ஏறி நிற்கிறாள்…அவள் மனம் அக்கிராமத்திற்கு அவள் மணம் முடித்து வந்த நாளிலிருந்து இப்போது வரையிலான அவளின் துயரங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறது… கூட்டுக் குடும்பங்கள் சிதைதலுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.. இல்லாமையும் வறுமையும் பிரதானமாக இருக்கும் என்ற புரிதலை நாவல் நம்மில் இறக்குகிறதோ.. வெங்கி “ஒரு குடும்பம் சிதைகிறது” – எஸ். எல். பைரப்பாகன்னட மூலம் – “Griha Bhanga”தமிழில்: எச். வி. சுப்ரமணியம்நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

இரவின் நிழல்

இரவின் நிழல்

திரை விமர்சனம்‘பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும்தான் என்னை எல்லா வயசிலேயும் விரட்டிக்கிட்டே இருந்தது ; சிலர் செய்யற பாவம் கங்கைக்குப் போனால் தீரும், சில பாவங்கள், செய்யறவா கங்கையோடு போனாலும் தீராது; வெதச்சுது எல்லாம் முளைக்கும்டா, பாவம் உட்பட’ – சுருக்கமாகச் சொன்னால் இதுதான், ‘இரவின் நிழல்’. நந்து (பார்த்திபன்) – காட்டமாகச் சொன்னால், கந்து வட்டிக்காரன்; கண்ணியமாகக் கூறினால், பைனான்சியர். குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயது வரையிலான, கரடுமுரடான அவனது வாழ்க்கையை, வேதனையை, சுரண்டலை, பஞ்சமா பாதகங்களை, ஆஷாடபூதித்தனம் இல்லாமல், அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுவதுதான், பார்த்திபன் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி, நடித்துள்ள ‘இரவின் நிழல்’ எனும் உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் கதை. இதனை ‘டார்க் ஸ்டோரி’ என்றால் அது நகைமுரண். நந்துவின் வாழ்க்கைப் பாதையில் இடையிடையே பயணிக்கும் அம்மா ராணி (ரேகா நாயர்), சந்துரு (நந்து), ஆனந்த கிருஷ்ணன் (நந்து), காதலி லட்சுமி (சினேகா), மனைவி சிலக்கம்மா (பிரீகிடா சகா), பார்வதி (சாய் பிரியங்கா ரூத்), பிரேம குமாரி (வரலட்சுமி சரத்குமார்), சாமியார் பிரேமானந்தா (ரோபோ சங்கர்) ஆகியோர் துணைப் பாத்திரங்களாக மட்டுமல்லாது, நந்துவின் பாத்திரப் படைப்புக்கு உறுதுணையாகவும் நிற்பது சிறப்பு. சிலக்கம்மா (பிரீகிடா சகா) கலக்கலம்மா ! பொதுவாக, விருப்பப்பட்ட வாழ்க்கை எவருக்கும் அமைவதில்லை என்பதுதான் உண்மை. அமைந்த வாழ்க்கையை, கிடைத்த வாய்ப்புக்கேற்ப செப்பனிட்டுக்கொண்டு, அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்வதுதான், எல்லோருக்குமான வாழ்க்கையாக இருக்கின்றது.  நந்துவின் வாழ்க்கையும் அப்படித்தான். கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், அவன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை ; அப்படியான வாழ்க்கைக்குத்தான்,  நந்து தேர்வானான். பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும் விரட்ட முடியாத இடத்தை அவன் அடைந்து, மனதில் குற்ற உணர்வும் அன்பு மயமான வாழ்க்கையும் ஒருங்கே முகிழ்த்து, நடக்கும் போராட்டத்தில் பலியாவது நந்து, பிழைத்து நிற்பது மனிதம். இவற்றை ‘செல்லுலாய்ட்’டில், நான்-லீனியர் சிங்கிள் ஷாட் மூலம், தொய்வில்லாமல் வழங்க பார்த்திபன் மிகவும் மெனக்கெட்டு இருப்பதை உணர முடிகிறது. வெற்றியும் பெற்றுள்ளார். நான்-லீனியர் சிங்கிள் ஷாட் குறித்த புரிதலை ஏற்படுத்த, படத்தின் முதல் அரை மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது. அதிலும் படத்திற்கான வாய்ஸ் ஓவர் தவிர்த்து, அந்தத் தொழில்நுட்பத்தை விளக்குவதற்கான வாய்ஸ் ஓவராக அமைந்திருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும். படத்திலும்கூட வாய்ஸ் – ஓவர்தான்; என்றாலும், இதில் காட்சிகளின் நீள அகலங்களுக்கு வாய்ப்பில்லாததைக் கணக்கில் கொண்டால்,  இதைத் தவிர்க்க முடியாதுதான் என்பதையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். பாவம் என்கிற ஒரு வட்டத்துக்குள்தான்  நந்துவின் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டது போல, மீண்டும் மீண்டும் அவனது காரியம் ஒவ்வொன்றையும் பாவமாகவே வரித்துக் கொண்டு வருகிறது, கதை. நாய் விற்ற காசு குறைக்காது என்பது போல, அவன் விற்கும் கஞ்சா காசுதான், அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை சுகபோக வாழ்க்கை வாழ வழி வகுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம். ஏசியா புக் ஆப் ரிகார்ட்ஸ், இண்டியா புக் ஆப் ரிகார்ட்ஸ் இரண்டிலும், ‘இரவின் நிழல்’ ‘முதல் ஏசியன் நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ படமாக முத்திரை பதித்த பார்த்திபனின் இந்தச் சாதனைக்கான கடும் உழைப்புக்கு,  ஏ ஆர் ரகுமானின் அட்டகாசமான இசையும், ஆர்தர் வில்சனின் பிரமிப்பான ஒளிப்பதிவும் பக்கா பலம். கலை இயக்குநர் விஜய் முருகனின் உழைப்பும் வீண் போகவில்லை. ‘நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ குறித்த புரிதலுடனான அனுபவத்திற்கும்,  வாலிபக் கவிஞர் வாலி போன்று, பார்த்திபனின் வார்த்தை ஜாலத்தைச் சுகிக்கவும், பொதுவாக எலைட் சமூகம் முகம் சுளிக்கும் ஒரு வாழ்க்கையைப் பற்றிய ஆபாசம் உட்பட ஆசாபாசங்களை, வலிகளை உணரவும், தூக்கம் தொலைத்த ஓர் இரவு வாய்க்கவும் வாய்ப்பளிக்கிறது, பார்த்திபன் இராதாகிருஷ்ணனின்  ‘இரவின் நிழல்’. மதிப்பெண் : 8.5/10 மது ராஜேந்திரன்

விராட பருவம்

விராட பருவம்

திரை விமர்சனம்வர்க்க பேதம், சாதி பேதம் இவற்றின் அடிப்படையில், ஆதிக்க வர்க்கமும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து, ஆண்டாண்டு காலமாக நடத்தி வரும் கொடுமைதான், அப்பாவி மக்களின் மீது பல்வேறு வகையில் தொடரும் தாக்குதல். சுதந்திரத்திற்குப் பின்பும், அதற்கான தீர்வு முழுமையாகக் கிடைத்திராத நிலையில், அவர்களின் இரட்சகர்களாக ஆங்காங்கே மக்களின் போர்க் குழுக்கள். அக்குழுக்களின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், எதிர்பார்க்கும் தீர்வுகள்,  நடைமுறைக்குச் சாத்தியமா என்பதெல்லாம், இன்னமும் விமர்சனத்துக்குரியவைதான். இது ஒருபுறம் இருக்க, இந்த யுத்தப் பின்னணியில் முகிழ்த்த அழகான காதல் கதைதான், வேணு உடுகுலா இயக்கத்தில்,  நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் வெளியாகி உள்ள தெலுங்குத்  திரைப்படம்,  ‘விராட பருவம்’ . ஒரு கூத்துக் கலைஞனின் (சாய் சந்த்) மகள் வெண்ணிலா (சாய் பல்லவி). அப்பாவின் அன்பு மட்டுமல்ல, அவரது  பாடல்களும்கூட  அவளை வளர்த்தன.  சமூக அக்கறை கொண்ட கவிதைகளை எழுதிய ‘ஆரண்யன்’ மீது அவளுக்கு  ஈர்ப்பு. அப்பாவி கிராம மக்களின் மீது  அராஜகத்  தாக்குதலை ஏவிய காவலர்களைத் துவம்சம் செய்த ரவி தோழர்தான் (ரானா டகுபதி) ஆரண்யன் என்று அறிந்ததில், ஈர்ப்பு காதலாகக் கனிந்தது. அவளுக்கு அப்பாவும் அம்மாவும் (ஈஸ்வரி ராவ்) மணமுடிக்க முயற்சித்தபோது, அந்த உறவுக்கார மாப்பிள்ளையை (ராகுல் ராமகிருஷ்ணா) மறுதலித்து, வீட்டை விட்டு வெளியேறி,  ரவி குறித்த வெண்ணிலாவின் தேடல் துவங்குகிறது. அந்தப் பயணத்தின் இடையே சந்திக்கும் ரவியின் தாய் (ஜரினா வஹாப்), சமூகச் செயற்பாட்டாளர் சகுந்தலா டீச்சர் (நந்திதா தாஸ்), பின்னர் தோழர் பரதக்கா (பிரியாமணி), தோழர் ரகு (நவீன் சந்திரா), காவல்துறையின் அடக்குமுறை என இவை எல்லாவற்றையும் தாண்டி, வெண்ணிலாவின் தேடல் முற்றுப் பெற்றதா, முழுமையும் பெற்றதா என்பதுதான், இப்படத்தின் மொத்தக் கதை. மக்கள் போர்க் குழுவின் ஈடுபாட்டில், செயல்பாட்டிலான உறுதி, தீவிரத் தன்மை, ராணா டகுபதியின் நடிப்பில் தத்ரூபமாகப்  பிரதிபலிக்கின்றது. அதையும் தாண்டி மிளிருகிறது, சாய் பல்லவிக்குள் ஏற்படும் காதலின் பரிணாம மாற்றமும்,  அதன் வெளிப்பாடும்! ‘ஷாம் சிங்கா ராய்’ மைத்ரேயியைத் தொடர்ந்து, ‘ விராட பருவம்’ வெண்ணிலாவும், சாய் பல்லவியின் நடிப்புத் திறமைக்கு அணி சேர்ப்பாள். துணைப் பாத்திரங்களில் இடம்பெற்ற கலைஞர்கள், கிடைத்த வாய்ப்பில் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியுள்ளதன் வாயிலாக, இணைப் பாத்திரங்களாகவே நிமிர்ந்து நிற்கின்றனர். ‘அம்மாவோட வார்த்தை எனக்குப் பிடிவாதத்த கத்து கொடுத்துச்சுன்னா, அப்பாவோட பாட்டு,  வாழ்க்கைப் பாடத்த கத்துக் கொடுத்துச்சு’; ‘ஒரு சில விஷயத்துக்குக் காரணம் இருக்காது மாமா, காரியம் மட்டும்தான்’; ‘காதலோட ஆழத்தைப் புரிஞ்சுக்க முடியாதவங்க, உயிரோடு இருந்தாலும் பொணத்துக்குதான்  சமம்’; ‘ஒரு மனுஷன காதலிக்கறதுக்குக்  காரணம் வேணுமா டீச்சர்? பசி, தூக்கம், தாகம், கண்ணீர் இதெல்லாம் எப்படி உள்ளுக்குள்ள இருந்து, தானா வெளியே வருதோ, அதே மாதிரிதான் காதலும் டீச்சர்’; ‘அப்போ, காதல்ங்கறது சீர்கேடா, அப்போ ஜெனிய காதலிச்ச காரல் மார்க்ஸ், ஜியாங்க காதலிச்ச மாவோ, க்ருப்பாஸ்கய காதலிச்ச லெனின்.. அவங்களோடதும் சீர்கேடுதானா?’ (வெண்ணிலா) ‘அதிகார வர்க்கத்த கேள்வி கேட்டா போதும், தடா சட்டத்தில போடுவாங்க, அப்பாவிகள என்கவுண்டர் செய்வாங்க, தேர்தலுக்காக வாக்குறுதிகள அள்ளி வீசி அடிமை ஆக்குவாங்க… ஞாபகம் வச்சுக்கோங்க, இந்த இயற்கையோட மண்ணின் வளம் ஒங்களோடது’; ‘எழுது, எந்தப் பெண்ணுக்கு அநியாயம் நடந்தாலும், எனக்குக் கிடைத்த தண்டனைதான்  கிடைக்கும்’ (தோழர் ரவி) ‘மனித உரிமை பற்றிப்  பேசினா போதும், கொன்ன பொணம்கூடக் கிடைக்காத மாதிரி பண்ணிடறாங்க..’ (சகுந்தலா டீச்சர்) ‘நாமகூட,  மக்களுக்காகத்தான் வேலை செய்றோம். நாம வாழ்வதற்காக வேலை செய்கிறோம், அவங்க சாகறதுக்கும் துணிஞ்சு  போராடிட்டு இருக்காங்க’ (காவல்துறை அதிகாரி) -ஆங்காங்கு நறுக்குத் தெறித்தது போலான,  சிந்தனைக்குரிய வசனங்கள் ! ஆந்திரா, தெலுங்கானா, கேரளா எனப் பல மாநிலங்களில் அலைந்து திரிந்து அசத்திய, டேனி சான்சேஸ் லோபஸ், திவாகர் மணி ஆகியோரின் கண்கவர் ஒளிப்பதிவும், சுரேஷ் பொப்லியின்  கதையோட்டத்திற்கு நெருக்கமான இசையும், பட இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. குழந்தைக்குப் பெயர் வைத்து ‘லால் சலாம்’ சொன்ன நொடியில், துப்பாக்கி ரவையால் அந்தப் பெண் போராளியின் தலை சிதறிப் போவது, மயிர்க்  கூச்செறியும் காட்சி.  பாடல்கள் அத்தனையும் பொருள் பொதிந்தவை, இனிமையானவை ! ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. முற்றிலும் மாறுபட்டதொரு பின்னணியில், சாய் பல்லவியின் அழகும் நடிப்புத் திறமையிலுமான வண்ணத் தூரிகையால், இயக்குனர் வேணு உடுகுலா வரைந்த அழுத்தமான, அழகான ஒரு காதல் ஓவியம்தான், ‘விராட பருவம்’. மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

அடடே சுந்தரா

அடடே சுந்தரா

திரை விமர்சனம் நானி, தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா நசீமுடன் இணைந்து  அட்டகாசமாக நடித்து, விவேக் ஆத்ரேயா எழுதி சிறப்பாகவும், சிரிப்பாகவும் இயக்கியுள்ள காதல் கதைதான், சுந்தரத் தெலுங்கில்  ‘அண்டே சுந்தரநிக்கி’, மொழி மாற்றத்தில் தேன் தமிழில் ‘அடடே சுந்தரா’. காதல் என்றாலே, வழக்கமாகச் சாதியோ மதமோ ‘கேட்’டைப் போடும்தானே! இந்தப் படத்தில் மதம்! எதற்கெடுத்தாலும் ஹோமம் செய்யும் விஸ்வநாத ஐயரின் (நரேஷ்) ஒரே மகன் சுந்தர பிரசாத் (நானி), ஊரறிந்த இந்து. பாயசமே கசப்பான முன் அனுபவத்தால், இந்து மதமும் கசந்த தாமஸின் (அழகம் பெருமாள்) இரண்டாவது மகள் லீலா தாமஸ் (நஸ்ரியா நசீம்). அவர்களுக்குள் லேசுப்பட்ட காதல் இல்லை. பள்ளி நாடகத்தில் வேஷமிட்டு நடித்தபோது துவங்கிய 100% உண்மையான காதல். நடுவிலே சுந்தரன் தொடர்பற்றுப்  போக, பருவமடைந்த லீலா கொஞ்சம் டைவர்ஷன் ஆகி, பின் சற்றுச் சுதாரித்து, இப்போது மீண்டு(ம்) சுந்தரனின் பாதையில்! 180 டிகிரி எதிரும் புதிருமாக உள்ள குடும்பத்தில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு எதிரான நிலையைக் கடந்து,  காதலை நிறைவேற்றிக் கொள்ளத்தான், எத்தனை பாடுகள், பொய்கள், தந்திரங்கள், கோபதாபங்கள், உணர்ச்சிப் பிரவாகங்கள், மௌன யுத்தங்கள், சரணாகதிகள்…!!! இத்தனையையும் தாண்டி, அவர்களின் காதல் கைகூடியதா என்பதுதான், ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் மொத்தக் கதை. நகைச்சுவை கலந்த திரைப்படம், நானி, நஸ்ரியாவின் அசத்தலான தலைமையில், நரேஷ், ரோகிணி, பாட்டி அருணா பிக்‌ஷு,  அழகம் பெருமாள், நதியா, தன்வி ராம்,  மேனேஜர் ஹர்ஷவர்தன் பலமான கூட்டணியில்,  தங்குதடையின்றி ‘கலகல’வென்று செல்வது, இனிமை, சிறப்பு. மனிதத்தை மறுக்கும் மதவாதக் கருத்தியல்கள், சடங்கு சம்பிரதாயங்கள் மீது, ஆங்காங்கே அழுத்தமாகக் குட்டு வைப்பதும் பாராட்டத்தக்கது. பிராமணன், சமுத்திரத்தைத் தாண்டக்கூடாது என்கிற சம்பிரதாயம், அவசியத்திற்கும் அவசரத்திற்குமேற்ப மீறவும், அதற்கான பரிகாரமும்  படிப்படியாக நீர்த்துப்போய், நாக்கிலே ஒற்றைத் தர்ப்பையைக் கொளுத்தி, குறுக்கில் இழுத்து விடுவதில் குறுகிப் போவதையும், சுயநலத்தோடு ஒரு சமயம் மதத்தைப் பொருட்படுத்தாததையும், பிறிதொரு நிலையில் மதத் துவேஷத்தில் உக்கிரத்துடன் நிற்பதையும் இயக்குனர் பதிவு செய்திருப்பது, அவர்களை ஒருவேளை சிந்திக்க வைக்கக்கூடும். லேடிஸ் பை-சைக்கிளை எதிர்க்கும் சுந்தரனிடம் அப்பா, சிலதைக் காப்பாத்தணும்னா, சிலதை இழந்துதான் தீரணும்; விதவிதமான ரீசன் எல்லாம் உங்களாலதான் சார் சொல்ல முடியும்; என்னது! நல்ல குடும்பம்னு சொல்லி, சம்மதிக்க வெச்சியா? அப்ப, நம்ம குடும்பம் நல்ல குடும்பம் இல்லியா? போன்ற வசனங்களும், சுந்தரனுக்கும் அவனது மேனேஜருக்குமான  உரையாடல்களும் சுவையானவை. மேலும் இப்படத்தில், கருத்தரித்தது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும், ‘டிஸ்ஜெர்மினொமா’ எனும் கொடிய கருப்பைப் புற்று நோயின் அடையாளத்தை மறைத்துவிடும் கொடுமை குறித்து விழிப்புணர்வு கொள்ள வழிவகுத்த இயக்குனரை வெகுவாகப் பாராட்டலாம். சிறுவன் சுந்தரன் (வினய்) மற்றும் சிறுமி லீலா தாம்ஸன் (ஹரிகா கோயிலம்மா) போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். சௌமியா (அனுபமா பரமேஸ்வரன்),  ஜோதிடர் ஜோகராவ் ( ஸ்ரீகாந்த் ஐயங்கார் ), சுந்தரின் மாமா (பிரித்வி ராஜ்), ஜோசப் (வெங்கடேஷ் மஹா), டாக்டர் குரு (ராகுல் ராமகிருஷ்ணன்), கைனகாலஜிஸ்ட் (பவித்ர லோகேஷ்), வம்சி (சாய் ரோனக்), பட இயக்குநர் (அலி) எனத் துணைப் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களும், நடிப்பில் சோடை போகவில்லை. விவேக் சாகரின் பின்னணி இசையும் பாடல்களும் இனிமை. நிகேத் பொம்மியின் கண்கவர் ஒளிப்பதிவு ‘பளிச்’. குறிப்பிடத்தகுந்தது, ரவி தேஜா கிரிஜாலாவின் படத்தொகுப்பு. குறிப்பாக, ‘கட் டயலாக்ஸ்’  காட்சிகளை குழப்பமில்லாமல், விறுவிறுப்பு குறையாமல் ‘கட்’ செய்தது. படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க, நிறைய நியாயம் இருக்கிறது. முன் பாதியில் கணிசமாகக்  குறைக்க வாய்ப்பும் இருக்கிறது. படத் தொகுப்பாளரை இயக்குநர் அனுமதித்திருக்கலாம். சமூகத்தில் முதன்மை பெற வேண்டியது, மதம் தாண்டிய மனிதக் காதலே என்பதை, அழுத்தந்திருத்தமாகவும் நகைச்சுவையுடனும் வழங்கும் விவேக் ஆத்ரேயின் ‘அடடே சுந்தரா’, பலே சுந்தராதான். மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

O2

O2

திரை விமர்சனம் ஆக்சிஜன்,  பிராணவாயு என்றெல்லாம் குறிப்பிடப்படும் உயிர்க்காற்று, உயிரைக் கொடுப்பதற்கு மட்டுமல்ல,  எடுப்பதற்கும்கூடக் காரணமாக அமையலாம் என்பதை,  ‘சீட் ஏஜ் திரில்லர்’ திரைக்கதையாக அறிமுக இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ்,  ‘ஓ2’ திரைப்படத்தின் மூலமும் நயன்தாரா வழியாகவும் வழங்க முனைந்திருக்கிறார். ‘சிஸ்டிக் ஃபைரோசிஸ்’ எனும் சுவாச பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் சுவாசிக்க முடியாத வீராவுக்கு (ரித்விக்) அறுவைச் சிகிச்சை செய்யும் பொருட்டு, கோவையிலிருந்து கொச்சி நகருக்குத் தனியார் பேருந்தில் அழைத்துச் செல்லும் அம்மா பார்வதி (நயன்தாரா). இவரைப் போன்று அவரவர் பிரச்சனைகளுடன் ஒருங்கே பயணிக்கும் சில பயணிகள். போக்குவரத்து நெரிசல் காரணமாக, வழக்கமான பாதையை விட்டு குறுக்கு வழியில் செல்லும் பேருந்து, எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் பூமியில் புதைந்து, நம்மையும் பயத்தில் புதைய வைத்து விடுகிறது. அம்மா, குழந்தை, பேருந்து ஓட்டுநர் உட்பட பயணிகளின் கதி என்ன என்பதுதான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள இரண்டு மணிநேரப் படத்தின் மொத்தக் கதை. தாவரங்களின் வகை, தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் உயிர்க்காற்றின் முக்கியத்துவம் ஆகியவை குறித்த புரிதலைக் கொண்ட தாய் பார்வதியாக நயன்தாரா, ‘எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துன்னா, அத பார்த்துகிட்டு சும்மா இருக்கமாட்டா; தட் அப்ளைஸ் டு மதர் நேச்சர் டூ’, ‘உண்மைய சொல்லனும்னா நாமெல்லாம் ஒரு சவப்பெட்டியில் புதஞ்சிருக்கோம்’, ‘ஒரு மனுஷன் சும்மா இருந்தாலே ஒரு நிமிஷத்துக்கு 16 லிட்டர் காத்து தேவைப்படுது; கண்ணுக்குத் தெரியாத பிரச்ன ஆக்சிஜன்’ என்று சொல்வதும், குழந்தையைக் காப்பாற்ற நடத்தும் துணிச்சலும் உணர்வுப்பூர்வமுமான போராட்டங்களும், அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகின்றன. அம்மாவுடன் பாசத்தைப்  பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளிலும், ஆக்சிஜன் வேண்டி, ஜோம்பிகள் போன்று எல்லோரும் தம்மை வெரித்துப்  பார்க்கும்போது, ஒருவித அச்சத்துடன் அவர்களை நோக்கும் போதும், குழந்தை ரித்விக்கின் நடிப்பு பளிச்சிடவே செய்கிறது. எதிலும் எப்போதும் சுயநலமாக நடந்து கொள்ளும், சட்டத்திற்குப் புறம்பான காரியத்தைச் செய்யும், தண்ணீர் கொடுத்தவனையே ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லவும் செய்கின்ற, கொடுமையே உருவான போலீஸ்காரர், ‘கடவுளே ஒரு குறை வச்சாலும், ஒரு தாய் நெனச்சா அத சரியாக்க முடியும் தாயி ‘ என்று கூறும் குற்றமே செய்யாமல் தண்டனை அனுபவித்த கைதி, அரசியல்வாதி ஆர். என். ஆர். மனோகர்,  பேருந்து ஓட்டுநர் ஆடுகளம் முருகதாஸ், ‘உன் தகுதிக்கேத்த ஸ்கூல்ல சேக்கோணும்’ என்று கூறும் பஸ் முதலாளி கவிதா பாரதி, அப்பா இடிக்கி பாஸ்கர், மகள், மருத்துவப் படிப்பை முடித்த இளைஞர் எனத் துணைப் பாத்திரங்களை ஏற்ற கலைஞர்களும் கவனம் பெறுகிறார்கள். யாராலேயோ அலட்சியமாக வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பை, எங்கெங்கோ பயணித்து இறுதியில் காற்றாடியின் இயக்கத்தையே நிறுத்தி விடுவதான குறியீடு, காரில் போனால் கண்டம் என்று சொன்ன ஜோசியக்காரர், நடக்கப் போகிற விபரீதத்தைச் சொல்லாத அங்கதம், எதற்கெடுத்தாலும் ‘பேட் டே’ என்று சொல்லிக் கொண்டு வரும் இளைஞன், பஸ் என்ன ஆகியிருக்கும் என்று உணர்ந்த வினாடி ‘மை குட் டே’ என்று கூறுவதிலான நகைமுரண் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. குழந்தை வீராவை அத்துணை நிர்பந்தப்படுத்தி, மீண்டும் பேருந்தில் மின்சாரத்தைப் பெறக் கீழே இறக்குவது, மூச்சுத் திணறலுக்கு ஆக்சிஜன் பெற முயல்வதைவிட அவசியமானதோ! நிலச்சரிவு நிகழக்கூடிய மலைப்பாங்கான மாநிலத்தில் இல்லாது, புதைந்திருக்கும் பேருந்தில் சரியான இடத்தை அறிந்துகொள்ள உதவும் கருவியை அரக்கோணத்தில் இருந்துதான் பெறவேண்டுமென்று கூறுவதை ஜீரணிக்க இயலவில்லை. இதுபோன்ற கதைக்கரு கொண்ட படத்திற்குப் பக்கபலமாக இருக்க வேண்டியது இசை. விஷால் சந்திரசேகர் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பில் ஓரளவு நிறைவைத் தந்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். ஆர் கே செல்வா படத்தொகுப்பை இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கலாம். நயன்தாரா முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்தும், கதைக்கரு வித்தியாசமாக இருந்தும், வாய்ப்பிருந்தும் அதனைப் படமாக்கிய விதத்தில் செழுமை இல்லாது, இந்த பட்ஜெட்டுக்குள் எடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் எடுத்தது போன்று, போதிய விறுவிறுப்பு இல்லாமல் போனதும், சில காட்சிகள் ‘அமெச்சுரிஸ்ட்’டாகவும்கூட அமைந்து விட்டது, சோகமே. மதிப்பெண் : 6/10 மது ராஜேந்திரன்

அவள் பெயர் சக்தி

அவள் பெயர் சக்தி

மேடை நாடக விமர்சனம் திருமணமாகி ஏழு ஆண்டுகளான நிலையில், ஜனனி கார்த்திக் தம்பதியருக்குள் குழந்தைப் பராமரிப்பு, வீட்டு வேலைகளைப்  பகிர்தல், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றில் எழும் பிரச்சனைகளின் உச்சமாக, குழந்தை ஆர்த்தியை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விடுகிறாள் ஜனனி. சராசரி அப்பாவாக பரமேஸ்வரன், கொஞ்சமே புரிந்த அம்மாவாக சாந்தி, அவர் காலத்திலேயே உறைந்து போனவளாக கொள்ளுப்பாட்டி, தனித்துவத்தில் அக்கறையும், ஊசலாட்டமும் ஒருங்கே கொண்ட தங்கையாக ஹரிணி ஆகியோர் ஜனனியின் ஊடாகவும், அவளுடன் சேர்ந்தும் வாழ்க்கையை அவரவர்  கோணத்தில் அலசுகிறார்கள்; வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. என்னதான் முடிவு என்பதும், அந்த முடிவை எட்டுவதற்கான காரணங்களாக அவர்கள் எவற்றை நிறுவுகிறார்கள் என்பதும்தான், தாரிணி கோமல் எழுதி இயக்கியுள்ள, கோமல் தியேட்டரின் ‘அவள் பெயர் சக்தி’ நாடகத்தின் கதைக்கரு. நாடகாசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், நாடக இயக்குநர் என்கிற பன்முகத் திறமை கொண்ட, நினைவில் வாழும் கோமல் சுவாமிநாதன் அவர்களின் புதல்வி தாரிணி கோமல் இந்த நாடகத்தை மிகச் சிறப்புற எழுதி இயக்கியுள்ளார். கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவில் சிறந்த நாடகமாகப் பரிசு பெற்றது. சிறந்த கதை இயக்கத்திற்காகத்  தாரிணி கோமல் விருது பெற்றுள்ளார். நான்கு தலைமுறைப் பெண்களின் வளர்சிதை மாற்றங்களைப் பதிவு செய்ய முனைந்திருக்கிறார் தாரிணி. ஒரே குடும்பத்தில் உள்ள அந்த நான்கு பெண்களின் தலைமுறை முன்னேற்றத்தை வேறுபடுத்திக் காட்டுவதில் பெறும் வசதியை, அது ஒரே குடும்பமாக உள்ளதாலேயே, இயல்பாகப் பரிணமிக்கும் எந்த ஒரு மாற்றத்தையும் நிலைநிறுத்திக் கொள்வதில், உணர்வுபூர்வமான குறுக்கீடு இல்லாது நேர்மறையான வாய்ப்பைப் பெற இயலாமல் போவது ஏமாற்றமே! பல்வேறுபட்ட குடும்பங்களில் இருக்கும் நான்கு தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையைத் தெரிவு செய்திருந்தால், தலைமுறை மாற்றத்தைப் பதிவு செய்வது சற்று சவாலாக இருந்தாலும், எதார்த்தமாக இருந்திருக்கக் கூடும். கல்வி, பொருளாதார வகையில் சௌகரியமான ஒரு குடும்பச் சூழலில் நிகழக்கூடிய தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைவிட, இவை அல்லாத ஒரு குடும்பத்தில் கண்ணெதிரே காணும் (அவ்விதம் கவனிக்க விழைந்தால்)  குடும்பத்தின் பொருட்டான  ஒரு பெண்ணின் தியாகம், அர்ப்பணிப்பு அதனினும் உயர்வாகத் தெரிய, கொண்டாட வாய்ப்புண்டு. அந்தக் கொள்ளுப் பாட்டியிடம், அன்றாடம் நடக்கும் தன் சோகக் கதையைக் கூறும் அக்குடும்பப் பணிப்பெண் சுகுணாவின் கதையும், அப்படித்தானே! இந்த நான்கு தலைமுறைப் பெண்களின் தனிமனித சுதந்திரம், ஆசாபாசங்கள், ஆதங்கங்கள், பிரச்சனைகள், ஐயத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பின்மை ஆகியவற்றை அலசும் அக்கறையில் கொஞ்சம், அவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக அமைந்துள்ளவர்கள், ஆண்கள்தான் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக் காட்டி இருக்கலாம். என்ன, கைத்தட்டு கிடைப்பதென்பது சற்றுச் சிரமம்தான்! குடும்பத்திற்காக, இட மாறுதலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் விதமாக, தனது பதவி உயர்வை அம்மா சாந்தி துறந்ததை வருத்தத்தோடு வெளிப்படுத்துவதும், விருப்ப ஓய்வு கொடுப்பதற்குத்  தடையாக இல்லாமல், தான் ‘அனுமதி’க்கவேதானே செய்தேன் என்று சங்கரன் கூறுவதும்,  அதேபோன்று, தன் வேலை, தனது பதவி உயர்வு, நிறுவனத்தில் தமக்குள்ள இருப்பு என்று, சுயநலமாக தன்னைப் பற்றியே சிந்திக்கும் கார்த்திக் பேசுவதும் கவனிக்கத்தக்கவை. கதைக்கருவை ஒட்டிய வசனங்கள் கூர்மையானவை. குறிப்பாக, ஜனனி, தினேஷ், அர்ஜுன், ஹரிணி பேசும், தாரிணி கோமலின் வசனங்கள் சிந்தனைக்கு உரியவை!  ஜனனியாக வரும் கிருத்திகா சுர்ஜித், ஹரிணியாக வரும் மயூரா பாலகுருநாதன் இருவரும் நாட்டியக் கலைஞர்கள் என்பதால், மெருகேறிய நடிப்பைக் காண முடிகிறது. அறிமுக நடிப்பிலேயே அசத்திய பேபி இயல், உஷா ரவிச்சந்திரன் (கொள்ளுப்பாட்டி), அனுராதா கண்ணன் (சாந்தி), சித்தார்த் (கார்த்திக்), பரமேஸ்வரன் ஹரிஹரன் (சங்கரன்), சாய் ஸ்ரீனி (அர்ஜுன்), ஸ்ரீகிருஷ்ணன் (தினேஷ்), சுதா, சுகுணா (வீட்டுப் பணிப்பெண்கள்) தத்தம் பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி, சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவர்களில் சிலர் விருதுகளையும் பெற்றுள்ளனர் என்பது சிறப்பு. ஜனனி எதிர்கொள்ளும் பிரச்சனை வேண்டுமானால், விவாகரத்து வரையில் போவதற்கான கடுமையான பிரச்சனையாக, அந்தக் குடும்பத்திற்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக விவாகரத்து என்பதே படுபாதகமான ஒன்று என்று நிறுவுவதும், இழிவும், அவமரியாதையும், பாலியல் வன்முறையும் நிகழ்த்தும், நிகழ்த்த முயற்சிக்கும் ஆண்களைப் பற்றி அணுவளவும் கண்டிக்காமல், பெண்களை மட்டும் கட்டுப்படுத்த முனைவதும், ஆங்காங்கு வாரி இறைக்கும் முற்போக்குக் கருத்துகளை இரக்கமே இல்லாமல் மீண்டும் வாரி எடுத்து ஒரு மூலையில் கொட்டுவதற்கு ஒப்பாகி விடுவதைத் தவிர்த்திருக்கலாம். நல்லவேளை, அக்குடும்பத்தினர் கலாச்சாரக் காவலர்களாகவும் அவதாரமெடுத்து, ஜனனி ஹரிணியைப் பார்த்து, ‘இதென்ன கர்மமோ, ஆம்பள பொம்பளங்கற வித்தியாசமில்லாம, புருஷா மத்தியில இப்படித்தான் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட்டை போட்டுண்டு’ என்று சொல்லாமல் விட்டதும், அமெரிக்கா செல்வதற்கு கார்த்திக் பின்னர் ‘அனுமதி’ தந்ததும், ‘ கிரகாச்சாரம், கடல் தாண்டறதா? இதெல்லாம் பாத்துண்டு இன்னும் நான் உசுரோட இருக்கனுமாடா சங்கரா!’ என்று அரற்றாமல் விட்டதும் கொஞ்சம் ஆறுதல்தான்! எந்த ஒரு நிறுவனத்திலும், தகுதி இல்லாமல் பணி நியமனம், பதவி உயர்வு அளிப்பதில்லை. குடும்பச் சூழல் காரணமாகவே, பதவி உயர்வுக்கு உரிய தேர்வை எழுதாத காரணத்தினால்தான், தமக்கு அதிகாரியாகப் பதவி உயர்வு கிடைக்கவில்லை, எழுத்தராகவே விருப்ப ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது என்று ஒப்புக் கொண்டு கூறும் சாந்தி, இன்று தன்னைவிடப் பணி நிலையில்  இளையவர்களும்  தகுதியே இல்லாதவர்களும் (!) உயர் அதிகாரிகளாக உள்ளதாக வெறுப்பை உமிழ்வது போன்று பேசுவது அபத்தம் அல்லவா! பத்மா ஸ்டேஜ் கண்ணனின் நாடக அரங்கம் அருமை. தங்கபாண்டியன் மற்றும் சிவா, ராஜேந்திரன், செல்வனின் மேடை நிர்வாகம் சிறப்பு. மைலை பாபுவின் ஒளியும், விருது பெற்ற பெரம்பூர் குமாரின் ஒப்பனையும்,  முத்தாய்ப்பாக  குஹபிரசாத்தின் பின்னணி இசையும், ஸ்ரீஜித்தின் ஒலிக் கோர்ப்பும், பாடலைப் பாடிய அனந்துவின் குரலும் நாடகத்தின் பின்புலத்தில் பக்கபலமாக அமைந்துள்ளது சிறப்பு! சில குறைகள் இருந்தாலும், போதிய அளவு ஆழ்ந்து இல்லாது மேம்போக்காகத்தான் என்றாலும், முன் முயற்சியாக பெண்களின் தலைமுறை இடையேயான பல்வேறுபட்ட மனநிலைகளை, பிரச்சனைகளை முன்னெடுத்துக் கதைக் கருவாக்கி, சிறந்த கலைஞர்களைக் கொண்டு, திறம்பட ‘அவள் பெயர் சக்தி’ என்கிற நாடகமாக இயக்கி வழங்கியுள்ள தாரிணி கோமல் சந்தேகமின்றி, பாராட்டுக்குரியவரே! மது ராஜேந்திரன்

இருபத்து ஒரு கிராம்

இருபத்து ஒரு கிராம்

திரைவிமர்சனம் உள்ளார்ந்த அர்த்தத்தில் ஒரு சிலர் சற்று ஆணவமாகக்கூட “என் வெயிட் தெரியாம பேச வேண்டாம்” என்று கூறுவதைக் கேட்டு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் தெரியாத ஒன்றுதான், அவர்களுடைய உயிரின் வெயிட்! அதைக் கண்டுபிடித்து, மர்ம முடிச்சுகளுடன் கூடிய விறுவிறுப்பான கதையை, பிபின் கிருஷ்ணா அறிமுக இயக்கத்தில் பெயரிட்டு, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான்,  ‘இருபத்து ஒரு கிராம்’. பெருநிறுவன மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் அஞ்சலி (மானசா ராதாகிருஷ்ணன்) கொலை செய்யப்படுகிறார். வழக்கு விசாரணை கிரைம் பிரான்ச் டி.எஸ்.பி நந்த கிஷோர் (அனூப் மேனன்) வசம் வருகிறது. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சன்னி (அனு மோகன்) தலைமையிலான சிறப்புப் படையுடன் விசாரணை சென்று கொண்டிருக்கும் போதே, அயல்நாட்டில் இருந்து திரும்பும் அஞ்சலியின் சகோதரன் மார்ட்டின் (சந்து நாத் ஜி நாயர்) எரித்துக் கொல்லப்படுகிறார். சந்தேக ரேகை படிந்த மார்ட்டின் நண்பன் ஜிம்மி (அஜி ஜான்), ஃபாதர் ஜோசப் (நந்து) தவிர்த்து,  டிப்பர் டோனி (பினெஷ் பாஸ்டின்)  நிகில் (ஜீவா ஜோசப்) அடுத்தடுத்து கொலை செய்யப்பட, வழக்கு முட்டுச் சந்தில் நிற்க, எதிர்பாராமல் கிடைத்த ஒரு துப்பில், வேகமெடுத்துக் குற்றவாளியை நெருங்க, அவனே கொலையாகி வழக்கு மீண்டும் இடியாப்பச் சிக்கலாகி விடுகிறது. என்றாலும் சலைக்காமல், நுணுக்கமாக ஆய்ந்து, விடாமல் துரத்தும் நந்த கிஷோர், குற்றவாளியைப் பிடித்தாரா, குற்றவாளியைத்தான் பிடித்தாரா என்பதுதான், திருப்பங்களோடு சுவையாகச் செல்லும், ‘இருபத்து ஒரு கிராம்’ படத்தின் கதை. அருமையான மகளை இழந்து, விளைவாக மனைவியை (லினா லிஷாய்) இழந்து விடக்கூடாது என்கிற சோகம் ஒரு புறம் இருக்க, சவாலான இந்தத் தொடர் கொலை வழக்கைக் கையாள வேண்டிய நந்த கிஷோர் பாத்திரத்தில் அனூப் மேனன் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஷூட்டிங், சேசிங், பைட்டிங் இல்லாமல், விசாரணை, துப்பு, தடயவியல் முடிவுகள், நுணுக்கமான புலனறிவு என அப்பாத்திரமாக இயங்குவதில் அனூப்  தனது பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்குகிறார். மானசா ராதாகிருஷ்ணன், அனு மோகன், லினா லிஷாய், அஜி ஜான், ஜீவா ஜோசப், லினா, நந்து, ரஞ்சித், ரெஞ்சி பணிக்கர், விவேக் அனிருத் ஆகியோரும் ஏற்ற  பாத்திரங்களில் நேர்மையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குழப்பமில்லாத திரைக்கதை. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவும், தீபக் தேவ் இசையும், அப்பு என் பட்டாத்ரி படத்தொகுப்பும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, இயக்குநருக்குப் பக்க பலமாக உள்ளன. ஒரு வழக்கில் சந்தேகத்திற்கு உள்ளான ஒருவரை, குற்றவாளியாக  நிறுவுவதற்கு அடிப்படைத் தேவை, குற்றத்தின் நோக்கம். அதனைச் சந்தேகத்துக்கிடமின்றி அணுகுவதிலுள்ள காவல்துறையினரின் பல்வேறு கஷ்டநஷ்டங்களையும், சிரமங்களையும், ஏன், அழுத்தங்களையும்கூட உணரச் செய்யும் விபின் கிருஷ்ணாவின் ‘இருபத்து ஒரு கிராம்’,  இன்வெஸ்டிகேஷன் திரில்லர் விரும்பிகளுக்கு விருந்துதான். மதிப்பெண்: 7/10 மது ராஜேந்திரன்

வாழ்க்கையை உருட்டும் பகடைகள்

வாழ்க்கையை உருட்டும் பகடைகள்

ஒருவன் தானாகவே இருத்தல் என்பது பெரிய விசயம். தான் தானாய் இருத்தல் என்பது ஒருவகை லயித்தல். சூழல் மாறலாம், வாய்ப்புகள் வந்து போகலாம். ஆனால் எப்பொழுதும் தன்னியல்பில் இருந்துகொள்தல் என்பது ஒரு பாதுகாப்பு. அல்லது தன் நிலையைத் தக்கவைத்தல், நியாய அநியாய தர்க்கங்களுக்கு வெளியே நின்று தன் நிலையில் தானாகக் கரைந்துவிடுதல் அது. அந்நிலை அனைவருக்கும் வாய்க்காது. படைப்பாளிகளுக்கு – சித்திரம் வரையும் – செதுக்கும் படைப்பாளிகளுக்கு வாய்க்கலாம். தன் இரசனையை மாற்றிக்கொள்ளாமல் அதிலேயே லயித்துச் சாகுதல் என்பது ஒரு கவி நிலை. அப்படியாய் கவிஞர்கள் – கவித்துவ மனநிலை கொண்டவர்கள் லயித்துப்போவார்கள். கவித்துவ மன நிலை கொண்ட எல்லோரும் கவிதை எழுதிவிடுவதில்லை. ஆனால், கவிதைகளை ரசித்துவிடுவார்கள். அவர்களுக்கு ‘லயித்தல் மனநிலை’யில் தன்னைத் தக்க வைக்கும் கால அளவு மாறுபடலாம். ஆனால், கவிஞர்களுக்கு அது கைக் கொள்ளும். கவிஞர்கள் கவிதை எழுதலாம், ஓவியம் வரையலாம், புகைப்படம் எடுக்கலாம், சிறுகதை எழுதலாம், நாவல் கூட எழுதலாம். ஆனால் எல்லா இடத்திலயும் தன்னை மீறி ஏதேனும் ஒரு வரியில், ஒரு நிலையில் தன்னை மறந்து ஏதாவது ஒரு நினைவில் லயித்து, தான் கவிஞன் என்ற அடையாளத்தைக் காட்டிவிடுவான். கவிஞர்கள் சிறுகதை எழுதினால் இதைத்தான் தேடிப்பிடிப்பேன் – என்ற ஒற்றை வரிக்கு மேற்சொன்ன இத்தனை வரிகள் எழுத வேண்டியுள்ளது. அமிர்தம் சூர்யா ஒரு நல்ல மேடைப்பேச்சாளர். கணேசகுமாரன் எழுதிய ‘மெனிஞ்சியோமா” வை அவரைப் பேசவிட்டு கேட்கவேண்டும். நல்ல விமர்சகர். இணையதளக் காணொளி வெளியிடுகிறார். இந்த “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” சிறுகதை எழுதியுள்ளார். எல்லாவற்றிலும் மேலாக இவர் ஒரு கவிஞர். சிறுகதைகளைப் படித்துவிட்டு அதன் நுணுக்கங்களை, கதை தவறும் கணங்களை அல்லது கதையின் உச்சங்களைக் குறுக்குவெட்டு செய்து பார்ப்பதை விட, ஒரு சிறுகதைத் தொகுப்பு வாசகனின் மனத்திற்குள் ஏதேனும் பழைய அனுபவத்தை மீட்டெடுக்கச் செய்வதை அல்லது புது அனுபவத்திற்கு அவனைப் பாத்தியப்படுத்துவதைப் பற்றிப் பேசவேண்டும் என்பதே என் கருத்து. ஒரு படைப்பின் நோக்கம் அதுவாகத்தானே இருக்கவேண்டும்?! “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” அதைத்தான் செய்கிறது. ஒரே மாதிரியான கதை மாந்தர்கள் அல்லது ஒரே பெயரில் வரும் கதை மாந்தர்கள் ஒரு வித அயற்சியைத் தரும் என்ற நிலைப்பாட்டை அமிர்தம் சூர்யா சுக்குநூறாக உடைக்கிறார். எல்லாக் கதைகளிலும் கிருஷ்ணன் வருகிறான், வியாசர் வருகிறார், சார்வாகன், த்ரௌபதி இப்படி வருகிறார்கள் . படித்து முடித்து விட்டு “RECALLING CUE” குறைவாய் இருக்கும் என்னைப் போன்றோருக்கு ஒரு சவால் இருக்கிறது. சாதிக்குப் பயந்து பெயரை மாற்றிக்கொண்ட ‘ராமண்ணா’ என்ற கிருஷ்ணன்தான் தாமரைக் காட்டைத் தேடி அலைந்து பைத்தியம் ஆகிறான் என்று கதை கட்டிவிடும் சவால் அது. ஒரு கதையில் இருக்கும் கதாபாத்திரம் இன்னொரு கதையில் உள்ள கதாபாத்திரத்தின் வேலையைச் சீர் செய்வது போல். அது சரி, ஒரு கதை இன்னொரு கதையை உண்டாக்கினால்தான் என்ன?! அமிர்தம் சூர்யா உருட்டிவிட்ட ‘சகுனிப் பகடையாய்’ அந்தக் கதை சொல்லும் தொனி எங்கும் அயற்சியை ஏற்படுத்தவில்லை. நிறைய மாதிரிகளை “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” மூலமாக நமக்குத் தருகிறார் அமிர்தம் சூர்யா. ‘மாதிரி’கள் என்பவை இங்கு ஒன்றைப் போல இன்னொன்று என்றும் எடுக்கலாம். உவமை என்று இலக்கிய ஆர்வலர்களாயும் எடுக்கலாம். சில மாதிரிகள்: “தமிழ் சினிமால வர்ற குழந்த நட்சத்திரம் ஷாலினி மாதிரி ஓவர் ஆக்டிங்கா இருந்தாலும் கிருஷ்ணன் ……” “மூளை செவிடான மாதிரி…” “காதலும் கவிதை மாதிரிதான்…” “இரட்டைச் சகோதரர்கள் மாதிரி இருந்தது அந்த வீடு”. கதையின் போக்கைத் துரிதப்படுத்துவது என்பது வார்த்தைகளில் வெளிப்படுவது. உரையாடலில், கதைசொல்லியின் குரலில், இரண்டையும் விட வாசகனின் கற்பனைக்குள் அமர்ந்துகொண்டு, அவனைத் தன் வயப்படுத்தி, கதையைக் காட்சி வடிவில் அரங்கேற்றம் செய்து காண்பிப்பது. புனைவையோ அபுனைவையோ வாசகனோடு ஒன்றச் செய்யும் இந்த வகையான ரசவாதம் என்பது கிட்டத்தட்ட பூக்களை ஒரே நாரில் வைத்துக் கோர்த்துக்கொண்டே வருவதுதான். சில கதைகளில் பூக்கள் முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு விழுகின்றன, சில கதைகளில் கற்பனை செய்த மாதிரியே ஒரு பூ மாலையாக உருப்பெறுகின்றன. ஆனால் அடிப்படை, வாசகனின் மனதிற்குள் காட்சிப்படுத்த எடுக்கப்படும் ப்ரயத்தனம்தான். அமிர்தம் சூர்யாவின் காட்சிப்படுத்துதலில் எந்த விதிகளும் அல்லாது, கட்டுப்பாடுகளற்ற, வாசகனுக்கு எந்த வழிகாட்டுதலுமில்லாத, எந்த வரையறைக்குள்ளும் சிக்கிவிடாத அல்லது சிக்கத்தோன்றாத, இப்படித்தான் என்ற உருவாக்க நுணுக்கங்களுமில்லாத மேலும் தனி பாணி என்ற முத்திரையும் இல்லாது ஒரு நிகழ்வை அப்படியப்படியே வர்ணிக்கிறார். காட்சிப்படுத்துதலை ஓர் எழுத்தாளன் செய்துவிடுவதுதான் செய்ய வந்த வேலையில் பாதி. அது சிறப்பாய் முடிந்துவிட்டால் மீதியை வாசகன் முடித்துக்கொள்வான். “இருளின் முகம் மெல்ல வெளிறும்படி இலையுதிர்க் காலத்தால் வந்த இடைவெளிகளில் ஆதவனின் ஒளிக்கற்றை இறங்கி, புதர் மண்டிய அந்தக் கற்குகை வாசலில் நிரம்பித் ததும்ப ஆரம்பித்தது”. கவிஞர் அமிர்தம் சூர்யா ஒரு சிறுகதையில் இப்படி எழுதியிருக்கிறார். கதையின் போக்கில் களத்தைச் சொல்வதில் “கடவுளைக் கண்டுபிடிப்பவன்”-இல் எந்தச் சிக்கலும் இல்லை. கிருஷ்ணன், சார்வாகன், வியாசர், த்ரௌபதி போன்ற கதாபாத்திரங்கள் போக, காற்றையும் பெரும்பாலான கதைகளில் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில், காற்று ஒரு மேகத்தை அழைத்துச்செல்கிறது, போரில் தோல்வி பெற்றவர்களின் தபோவனத்தின் வாசலில் காற்று வறட்சியாய் இருக்கிறது, பூவரசம் பூக்களுடன் கைகலப்பில் காற்று ஈடுபடுகிறது, ஓங்காரச் சிரிப்பைக் காற்று ஒரு குளமாக மாறி, கல் மூலம் அதிர்வு பெறுகிறது, காற்றை மட்டும் சாப்பிட்டு சித்தர் ஆகும் முறையைச் சொல்கிறது, மாம்பழத்தின் வாசனையை இரயில் நிலையத்தில் மூக்கு முன்னால் போட்டு விட்டுச் செல்கிறது ஒரு காற்று, மயானத்தில் அப்பாவின் சமாதி தேடும் ஒருவன் முன் காற்று கனம் கூடி வீசுகிறது. சிறுகதையாளர்களால் காற்றைக் கதைக்குள் கொண்டுவர முடியும். கவிஞர்களால் மட்டும்தான் காற்றை ஒரு வரிக்குள் கொண்டுவரவும் முடியும், ஒரு வரியைக் காற்றுக்குள்ளும் கொண்டுவர முடியும். ஒரு படைப்பு ஏற்படுத்தும் அனுபவம்தான் வாசகனுக்கு முக்கியம். படைப்பை ஆராய வேண்டிய தேவை வாசகனுக்கு இல்லை. அது எழுத்தாளர்களின் வேலை. வாசகன், ஒரு படைப்பிற்குள் தன்னைப் பார்ப்பதும், தன் அனுபவத்தை உணர்வதிலுமே அந்தப் படைப்பு, வாசகனுக்கானது என்று ஆகிறது. அழகியல், எதார்த்த அனுபவங்கள் சொல்லப்படும் விகிதங்களில் “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” வாசகனுக்கானத் தொகுப்பு. அழகியல் நோக்கில் இந்தப் படைப்பை அணுகுவது தவிர்த்து, விமர்சனப் பார்வையில் எழுதிவிடுவதுதான் இலக்கிய ஆர்வலர்களுக்கான விசயம். படைப்புகளில் “நிறைவுறாத்தன்மை” என்பதும்கூட ஒரு வகையான அழகுதான். ஆனால், வெகுஜனக் கதைகளில் புகுத்தப்படும் “நிறைவுறாத்தன்மை” என்பது, அமிர்தம் சூர்யாவின் மொழியில் சொல்லப்பட வேண்டுமென்றால், சக்கரவியூகத்தில் நுழைந்த அபிமன்யூவின் வீரம் போன்றது. தன் சாதி காரணமாகப் பெயரை மாற்றிக்கொள்ளும் கிருஷணன் ஆகட்டும், சாதி மாறித் திருமணம் முடித்து ஊர் திரும்பும் ஒருவனாகக் கனவு காணுவதாக இருக்கட்டும், அமிர்தம் சூர்யா என்ற ஆகச்சிறந்த ஊடகம் மிகப்பெரிய விசயத்தைச் சொல்லவருகிறது என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் கதை வெகு ஜாக்கிரதையாக அந்தச் சிக்கலில் இருந்து வெளியேறி “சுபம்” போடுகையில் அபிமன்யூ குறி வைக்கப்படுகிறான். அப்பாவைச் சாந்தப்படுத்த சமாதி தேடுபவனுக்கு மனைவி பிரிந்து போயிருக்கிறாள். உயிரோடு இருப்பவளைத் தேடாமல், செத்த ஒருவனைத் தேடி அலையும் ஒருவனது கதையில் “நிறைவுறும் தன்மை” நிராயுதபாணியாய் நிற்கும் அர்ஜூனனைத் தவிக்க விட்டு ஓடும் பரமாத்மாவாய் நிற்கிறது. தன்னிலை அறிக்கையில் இவை எல்லாம் அனுபவங்கள் சார்ந்து புனையப்பட்டவை அல்லது செய்யப்பட்டவை என்ற எழுத்தாளரின் கூற்றோடு கதையைப் படிக்கும்பொழுது எதார்த்தம் வெளிப்படுகிறது. வாழ்வின் வெளி இப்படித்தானே இருக்கிறது?! நிறைவுறாத்தன்மையும் நிறைவுறும் தன்மையும் கிட்டத்தட்ட ஒரு மனநிலைதானே?! எதார்த்தங்கள் சுவாரஸ்யங்களைத் தந்துகொண்டே இருப்பதற்கு அடிப்படை, நாம் நினைப்பது நடக்காமல் இருப்பதும், நாம் நினைக்காதது நடப்பதிலும்தான். வாழ்க்கை நமக்கு உருட்டிவிடும் பகடைகள் எப்பொழுதும் நமக்குச் சாதகமாய் இருப்பதில்லை. அந்தந்த நேரத்து உருட்டல்களை அந்தந்த நேரத்துச் சூழ்நிலைகளில் அந்தந்த நேரத்து மனநிலையில் மனிதர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள். “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” அந்தப் பகடைகளை உருட்ட, வந்து விழுந்த சில கதாபாத்திரங்கள்தான். கடவுளைக் கண்டுபிடிப்பதை விட உணர்வது சுவாரஸ்யமானது. “கடவுளைக் கண்டுபிடிப்பவன்”ஐ நீங்கள் உணரலாம். பழனிக்குமார், மதுரை.

ஷாம் சிங்கா ராய்

ஷாம் சிங்கா ராய்

திரை விமர்சனம் சமீப காலங்களில் திரையுலகம் சமூக இழிவுகளை, மனித அவலங்களைத் துணிச்சலுடன் திரும்பிப் பார்க்க விழைந்துள்ளதும் சராசரி ரசிகர்களையும் அக்கறையுடன் அவற்றைக் கவனிக்கச் செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது, பாராட்டவும் தக்கது. அந்த வகையில், ஜங்கா சத்யதேவ் கதைக்கு, ராகுல் சாங்கிருத்தியன் அருமையாக திரைக்கதை எழுதி இயக்கி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் உடன் இரட்டைவேடங்களில் நானி  நாயகனாக நடித்து, தெலுங்கில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘ஷாம் சிங்கா ராய்’. தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு. அறிமுக இயக்குனர் வாசுதேவ் கந்தா (நானி) மீது கதைத் திருட்டு வழக்காகத் துவங்கி, அந்தக் குற்றச்சாட்டை அறவே மறுக்கும் அவன், அதிலிருந்து மீண்டு வர  மேற்கொள்ளும் முயற்சிகளாக விரிந்து, எதிர்பாராத முடிவாக முடிவது, அவனுக்கு மட்டுமல்ல; ரசிகர்களுக்கும் கூடத்தான். “நாங்க கேணிகிட்ட போ கூடாதுங்கய்யா” – “அப்படின்னு கேணி சொல்லுச்சா? உன் குடம் நிறையனும்னா உடனே மழை வரணும்; இல்லன்னா உனக்குள்ள தைரியம் வரணும்”,  “அவங்கள்லாம் தாழ்த்தப்பட்டவங்க” – “அதுக்காக தாகமும் தாழ்ந்து போயிடுமா? அவன் தீண்டத்தகாதவன்னா, அவன் நடந்து போற பாதையில நீங்க ஏன் நடந்து போறீங்க? அவன்  சுவாசிச்சு விடற காத்த நீங்க ஏன் சுவாசிக்கிறீங்க? நிறுத்திக்க வேண்டியதானே? காற்றுக்கும் நீருக்கும் நிலத்துக்கும் காப்பாற்றுகிற குணம் இருக்குமே தவிர, காவு வாங்கற குணம் இருக்காது. இது குலத்தோட காலைப்பிடித்துத் தொங்கிட்டு இருக்கறதுக்கு ரிக்வேதம் காலம் கிடையாது, சுதந்திர பாரதம்”, “இப்போ இந்தக் கேணியும் தாழ்த்தப்பட்டதுதான், அவனுக்கே சொந்தம். தாகம் இருக்கிறவங்க மொண்டு குடிங்க, சாதி இருக்குங்கிறவன் நாவறண்டு சாவுங்க. அவன் குடிசையை எரிக்கப் போனீன்னா, உன் வீடு எங்கிருக்குன்னு ஷாம் சிங்கா ராய்க்கு நல்லாத் தெரியும்” “மனுஷன மனுஷனா பார்க்காதவன் ஊரா இருந்தா என்ன, வீடா இருந்தா என்ன, என்னால இருக்க முடியாது”, ” சமுதாயத்தை மாத்தற சக்தி எழுத்தாளனுக்கு மட்டும்தான் உண்டு, நான் போகணும், நான் எழுதணும்”, “பண்டிகை ஒவ்வொரு வருஷமும் வரும், என் காலம் போனால் திரும்பி வராது” போன்ற அர்த்தபூர்வமான காட்சிகளும் வசனங்களும் அசத்தல். “இந்த உலகத்ல ஒவ்வொரு வேலையையும் ரெண்டு விதமா செய்யலாம். ஒண்ணு பயத்தோட, இன்னொன்னு காதலோட”,  “தெய்வத்தின் துரோகத்தால் தேகமெங்கும் முள்ளாகி, மனமெல்லாம் தெய்வீகம் நிரம்பிய ரோஜாமலர்”, “பெண் யாருக்கும் தாசி இல்லை; தனக்குத் தாசி வேணும்னு  நெனக்கிறவன் கடவுளே கிடையாது”, “ஆத்ம அபிமானத்தவிட, எந்த ஆகமும் தப்பு கிடையாது. தப்புன்னு தெரிஞ்சா கடவுளே ஆனாலும் எதிர்க்கறதுல தப்பே கெடையாது. பயந்தவங்கதான் கர்மா சித்தாந்தம் பேசுவாங்க”, “எம்.எஸ். சுப்புலட்சுமி பேரை கேள்விபட்டிருக்கியா, ஒரு காலத்தில் தேவதாசி, இப்ப பத்மபூஷன் அவார்டு வாங்கி இருக்காங்க. பரதநாட்டியத்தில் பாரத தேசத்தில் மிகப் பெரிய டான்சர் பாலசரஸ்வதி, தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்”,“பெண் யாருக்கும் தாசி அல்ல; அந்தக் கடவுளுக்கும் கூட” எந்த ஒரு சமூகத்திலே தன் பசியைப் போக்கிக்கறதுக்கு ஒரு பெண் மேலேயும் கீழேயும் இருக்கற அவயங்கள விற்கிறாளோ, அந்தச் சமூகத்தில இருக்கிற ஆம்பளைங்க, ஆம்பளைங்களே கிடையாது, பெண்கள் விற்பனைப் பொருள்கள் அல்ல” இப்படி மனதை வருடும், சிந்தையில் அறையும் வசனங்கள் படமெங்கும். காளி கோவிலில் உள்ள தேவதாசிகளில் தினமொருவளை சுகித்து வரும் தலைமை அர்ச்சகர் மஹந்தாவிடம், “யார் வேணா தொட்டுப் பார்க்கறதுக்கு நாங்க கோயில்ல உள்ள தூண்கள் கெடயாது, மானமுள்ள மனுஷிங்க. எங்க மேல யாருக்கும் உரிமை கெடயாது, அந்த தெய்வத்துக்கும் கூட” என்று ரோஸி சொல்ல, “நீ கடவுளுக்குத் தாசி கிடையாது; எனக்குதான் தாசி” என்று சொல்லி, ரோஸியைப் பல பெண்களுக்கு மத்தியில் கடுமையாகத் தாக்கி, மனுசாஸ்திரம் பாதுகாப்பில் பூணூலைக் காதிலே சுற்றி, அவள்மீது சிறுநீர் கழித்து அவமதித்த மகாதேவ் மஹந்தாவின் ஆணுறுப்பை, காளி சிலை கையில் இருந்த அரிவாளைக் கொண்டு அறுத்தெறிந்து, அவனை நெருப்புச் சட்டியில் ஷாம் சிங்கா ராய் எறியும் காட்சி புல்லரிக்கச் செய்கிறது. வித்தியாசமான உருவ அமைப்பில்,  உடல் மொழியில், இருவேடங்களில் நானியும், வயது வித்தியாசங்களில் சாய்பல்லவியும், பக்குவப்பட்ட சிறப்புக்குரிய நடிப்பை வழங்கியுள்ளது அருமை. இருவருக்குமே திரை வாழ்க்கையில் இப்படம், குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமையலாம். க்ருத்தி ஷெட்டி (காதலி கீர்த்தி), மடோனா செபாஸ்டியன் (லாயர் பத்மாவதி), நண்பன் பிரமோத் (அபிநவ் கோமடம்), உளவியல் நிபுணர் (லீலா சாம்சன்), ஜிசு சென்குப்தா (தேபேந்திர சிங்கா ராய்), ராகுல் ரவீந்திரன் (மனோஜ் சிங்கா ராய்), முரளி சர்மா (அட்வகேட் கிருஷ்ணமூர்த்தி), மனீஷ் வத்வா (மகாதேவ் மஹந்த்), சுபலேகா சுதாகர் (நீதிபதி) ஆகிய கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே செய்துள்ளனர். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக, சாய் பல்லவி நடனக் காட்சிகள், நானியின் சண்டைக் காட்சிகள்,  பரந்த கங்கை நீர் நிலை, கொல்கத்தா காளிகாட் (செட்) நகரம். மிக்கி ஜே மேயரின் பின்னி எடுக்கும் பின்னணி இசையும், ஈர்க்கும் பாடல்களும் சிறப்பு. பழுதில்லாத படத்தொகுப்பு, நவீன் நூலி. கதைத் திருட்டு புகாரின்பேரில் கைது செய்வது எல்லாம், சற்று அதீதம். அறிவியல் ரீதியான பாலி கிராப் முறையை ஏற்கும் சாட்சிகள் சட்டம், அதே ரீதியிலான உளவியல் நிபுணரின் ஹிப்னாஸிஸ் அறிக்கையை ஏற்காதது, வினோதம். ரோஸி குழந்தை பெற வாய்ப்பில்லை என  போகிற போக்கில் மருத்துவர் சொல்வதுபோல் சொல்வது, தெளிவில்லை. மறு ஜென்மத்திற்கு அறிவியல் ரீதியான சாட்சி இல்லை என்கிற வாதத்தை மறுப்பதற்கு, விஷ்ணு மறு ஜென்மத்தில் ராமராக வந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ( ! )  மேற்கோள்காட்டி நிறுவ முற்படுவது, அபத்தமானது; கதைக் கருவுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கக் கூடியது. நல்லவேளை, இந்த நீதிமன்றம் இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்காதது! திரை உத்திக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்பட்ட, படத்தில் அறிவியலுக்குப் புறம்பான சிலவற்றை, சினிமா லாஜிக்,  லிபர்டி என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப,  ஏற்றுக் கொள்வதோ, தள்ளுவதாகவோ இருந்தாலும் அதையும் தாண்டி புரிய வேண்டியவர்களுக்கு, அவரவர்களுக்குப் புரிகிற மொழியில், உத்தியில் கதைக்கருவும் வசன – காட்சி அமைப்புகளால் அதனை அழுத்தம் திருத்தமாக மனதில் உறைக்கும்படியும் பதியும்படியும் கட்டமைத்தும் வழங்கப்பட்டிருப்பதில் இயக்குனரின் திறமையையும் நேர்த்தியையும் பாராட்டித்தான் ஆகவேண்டும். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்