திரைவிமர்சனம்

உள்ளார்ந்த அர்த்தத்தில் ஒரு சிலர் சற்று ஆணவமாகக்கூட “என் வெயிட் தெரியாம பேச வேண்டாம்” என்று கூறுவதைக் கேட்டு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் தெரியாத ஒன்றுதான், அவர்களுடைய உயிரின் வெயிட்! அதைக் கண்டுபிடித்து, மர்ம முடிச்சுகளுடன் கூடிய விறுவிறுப்பான கதையை, பிபின் கிருஷ்ணா அறிமுக இயக்கத்தில் பெயரிட்டு, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான்,  ‘இருபத்து ஒரு கிராம்’.

பெருநிறுவன மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் அஞ்சலி (மானசா ராதாகிருஷ்ணன்) கொலை செய்யப்படுகிறார். வழக்கு விசாரணை கிரைம் பிரான்ச் டி.எஸ்.பி நந்த கிஷோர் (அனூப் மேனன்) வசம் வருகிறது. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சன்னி (அனு மோகன்) தலைமையிலான சிறப்புப் படையுடன் விசாரணை சென்று கொண்டிருக்கும் போதே, அயல்நாட்டில் இருந்து திரும்பும் அஞ்சலியின் சகோதரன் மார்ட்டின் (சந்து நாத் ஜி நாயர்) எரித்துக் கொல்லப்படுகிறார்.

சந்தேக ரேகை படிந்த மார்ட்டின் நண்பன் ஜிம்மி (அஜி ஜான்), ஃபாதர் ஜோசப் (நந்து) தவிர்த்து,  டிப்பர் டோனி (பினெஷ் பாஸ்டின்)  நிகில் (ஜீவா ஜோசப்) அடுத்தடுத்து கொலை செய்யப்பட, வழக்கு முட்டுச் சந்தில் நிற்க, எதிர்பாராமல் கிடைத்த ஒரு துப்பில், வேகமெடுத்துக் குற்றவாளியை நெருங்க, அவனே கொலையாகி வழக்கு மீண்டும் இடியாப்பச் சிக்கலாகி விடுகிறது. என்றாலும் சலைக்காமல், நுணுக்கமாக ஆய்ந்து, விடாமல் துரத்தும் நந்த கிஷோர், குற்றவாளியைப் பிடித்தாரா, குற்றவாளியைத்தான் பிடித்தாரா என்பதுதான், திருப்பங்களோடு சுவையாகச் செல்லும், ‘இருபத்து ஒரு கிராம்’ படத்தின் கதை.

அருமையான மகளை இழந்து, விளைவாக மனைவியை (லினா லிஷாய்) இழந்து விடக்கூடாது என்கிற சோகம் ஒரு புறம் இருக்க, சவாலான இந்தத் தொடர் கொலை வழக்கைக் கையாள வேண்டிய நந்த கிஷோர் பாத்திரத்தில் அனூப் மேனன் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஷூட்டிங், சேசிங், பைட்டிங் இல்லாமல், விசாரணை, துப்பு, தடயவியல் முடிவுகள், நுணுக்கமான புலனறிவு என அப்பாத்திரமாக இயங்குவதில் அனூப்  தனது பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்குகிறார்.

மானசா ராதாகிருஷ்ணன், அனு மோகன், லினா லிஷாய், அஜி ஜான், ஜீவா ஜோசப், லினா, நந்து, ரஞ்சித், ரெஞ்சி பணிக்கர், விவேக் அனிருத் ஆகியோரும் ஏற்ற  பாத்திரங்களில் நேர்மையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

குழப்பமில்லாத திரைக்கதை. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவும், தீபக் தேவ் இசையும், அப்பு என் பட்டாத்ரி படத்தொகுப்பும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, இயக்குநருக்குப் பக்க பலமாக உள்ளன.

ஒரு வழக்கில் சந்தேகத்திற்கு உள்ளான ஒருவரை, குற்றவாளியாக  நிறுவுவதற்கு அடிப்படைத் தேவை, குற்றத்தின் நோக்கம். அதனைச் சந்தேகத்துக்கிடமின்றி அணுகுவதிலுள்ள காவல்துறையினரின் பல்வேறு கஷ்டநஷ்டங்களையும், சிரமங்களையும், ஏன், அழுத்தங்களையும்கூட உணரச் செய்யும் விபின் கிருஷ்ணாவின் ‘இருபத்து ஒரு கிராம்’,  இன்வெஸ்டிகேஷன் திரில்லர் விரும்பிகளுக்கு விருந்துதான்.

மதிப்பெண்: 7/10

  • மது ராஜேந்திரன்


Comment (1)


Mohan Raja
Mohan Raja
June 23, 2022

பார்க்க தூண்டும் விமர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *