அவள் பெயர் சக்தி

மேடை நாடக விமர்சனம்

திருமணமாகி ஏழு ஆண்டுகளான நிலையில், ஜனனி கார்த்திக் தம்பதியருக்குள் குழந்தைப் பராமரிப்பு, வீட்டு வேலைகளைப்  பகிர்தல், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றில் எழும் பிரச்சனைகளின் உச்சமாக, குழந்தை ஆர்த்தியை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விடுகிறாள் ஜனனி. சராசரி அப்பாவாக பரமேஸ்வரன், கொஞ்சமே புரிந்த அம்மாவாக சாந்தி, அவர் காலத்திலேயே உறைந்து போனவளாக கொள்ளுப்பாட்டி, தனித்துவத்தில் அக்கறையும், ஊசலாட்டமும் ஒருங்கே கொண்ட தங்கையாக ஹரிணி ஆகியோர் ஜனனியின் ஊடாகவும், அவளுடன் சேர்ந்தும் வாழ்க்கையை அவரவர்  கோணத்தில் அலசுகிறார்கள்; வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. என்னதான் முடிவு என்பதும், அந்த முடிவை எட்டுவதற்கான காரணங்களாக அவர்கள் எவற்றை நிறுவுகிறார்கள் என்பதும்தான், தாரிணி கோமல் எழுதி இயக்கியுள்ள, கோமல் தியேட்டரின் ‘அவள் பெயர் சக்தி’ நாடகத்தின் கதைக்கரு.

நாடகாசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், நாடக இயக்குநர் என்கிற பன்முகத் திறமை கொண்ட, நினைவில் வாழும் கோமல் சுவாமிநாதன் அவர்களின் புதல்வி தாரிணி கோமல் இந்த நாடகத்தை மிகச் சிறப்புற எழுதி இயக்கியுள்ளார். கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவில் சிறந்த நாடகமாகப் பரிசு பெற்றது. சிறந்த கதை இயக்கத்திற்காகத்  தாரிணி கோமல் விருது பெற்றுள்ளார்.

நான்கு தலைமுறைப் பெண்களின் வளர்சிதை மாற்றங்களைப் பதிவு செய்ய முனைந்திருக்கிறார் தாரிணி. ஒரே குடும்பத்தில் உள்ள அந்த நான்கு பெண்களின் தலைமுறை முன்னேற்றத்தை வேறுபடுத்திக் காட்டுவதில் பெறும் வசதியை, அது ஒரே குடும்பமாக உள்ளதாலேயே, இயல்பாகப் பரிணமிக்கும் எந்த ஒரு மாற்றத்தையும் நிலைநிறுத்திக் கொள்வதில், உணர்வுபூர்வமான குறுக்கீடு இல்லாது நேர்மறையான வாய்ப்பைப் பெற இயலாமல் போவது ஏமாற்றமே! பல்வேறுபட்ட குடும்பங்களில் இருக்கும் நான்கு தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையைத் தெரிவு செய்திருந்தால், தலைமுறை மாற்றத்தைப் பதிவு செய்வது சற்று சவாலாக இருந்தாலும், எதார்த்தமாக இருந்திருக்கக் கூடும்.

கல்வி, பொருளாதார வகையில் சௌகரியமான ஒரு குடும்பச் சூழலில் நிகழக்கூடிய தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைவிட, இவை அல்லாத ஒரு குடும்பத்தில் கண்ணெதிரே காணும் (அவ்விதம் கவனிக்க விழைந்தால்)  குடும்பத்தின் பொருட்டான  ஒரு பெண்ணின் தியாகம், அர்ப்பணிப்பு அதனினும் உயர்வாகத் தெரிய, கொண்டாட வாய்ப்புண்டு. அந்தக் கொள்ளுப் பாட்டியிடம், அன்றாடம் நடக்கும் தன் சோகக் கதையைக் கூறும் அக்குடும்பப் பணிப்பெண் சுகுணாவின் கதையும், அப்படித்தானே!

இந்த நான்கு தலைமுறைப் பெண்களின் தனிமனித சுதந்திரம், ஆசாபாசங்கள், ஆதங்கங்கள், பிரச்சனைகள், ஐயத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பின்மை ஆகியவற்றை அலசும் அக்கறையில் கொஞ்சம், அவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக அமைந்துள்ளவர்கள், ஆண்கள்தான் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக் காட்டி இருக்கலாம். என்ன, கைத்தட்டு கிடைப்பதென்பது சற்றுச் சிரமம்தான்!

குடும்பத்திற்காக, இட மாறுதலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் விதமாக, தனது பதவி உயர்வை அம்மா சாந்தி துறந்ததை வருத்தத்தோடு வெளிப்படுத்துவதும், விருப்ப ஓய்வு கொடுப்பதற்குத்  தடையாக இல்லாமல், தான் ‘அனுமதி’க்கவேதானே செய்தேன் என்று சங்கரன் கூறுவதும்,  அதேபோன்று, தன் வேலை, தனது பதவி உயர்வு, நிறுவனத்தில் தமக்குள்ள இருப்பு என்று, சுயநலமாக தன்னைப் பற்றியே சிந்திக்கும் கார்த்திக் பேசுவதும் கவனிக்கத்தக்கவை.

கதைக்கருவை ஒட்டிய வசனங்கள் கூர்மையானவை. குறிப்பாக, ஜனனி, தினேஷ், அர்ஜுன், ஹரிணி பேசும், தாரிணி கோமலின் வசனங்கள் சிந்தனைக்கு உரியவை! 

ஜனனியாக வரும் கிருத்திகா சுர்ஜித், ஹரிணியாக வரும் மயூரா பாலகுருநாதன் இருவரும் நாட்டியக் கலைஞர்கள் என்பதால், மெருகேறிய நடிப்பைக் காண முடிகிறது. அறிமுக நடிப்பிலேயே அசத்திய பேபி இயல், உஷா ரவிச்சந்திரன் (கொள்ளுப்பாட்டி), அனுராதா கண்ணன் (சாந்தி), சித்தார்த் (கார்த்திக்), பரமேஸ்வரன் ஹரிஹரன் (சங்கரன்), சாய் ஸ்ரீனி (அர்ஜுன்), ஸ்ரீகிருஷ்ணன் (தினேஷ்), சுதா, சுகுணா (வீட்டுப் பணிப்பெண்கள்) தத்தம் பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி, சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவர்களில் சிலர் விருதுகளையும் பெற்றுள்ளனர் என்பது சிறப்பு.

ஜனனி எதிர்கொள்ளும் பிரச்சனை வேண்டுமானால், விவாகரத்து வரையில் போவதற்கான கடுமையான பிரச்சனையாக, அந்தக் குடும்பத்திற்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக விவாகரத்து என்பதே படுபாதகமான ஒன்று என்று நிறுவுவதும், இழிவும், அவமரியாதையும், பாலியல் வன்முறையும் நிகழ்த்தும், நிகழ்த்த முயற்சிக்கும் ஆண்களைப் பற்றி அணுவளவும் கண்டிக்காமல், பெண்களை மட்டும் கட்டுப்படுத்த முனைவதும், ஆங்காங்கு வாரி இறைக்கும் முற்போக்குக் கருத்துகளை இரக்கமே இல்லாமல் மீண்டும் வாரி எடுத்து ஒரு மூலையில் கொட்டுவதற்கு ஒப்பாகி விடுவதைத் தவிர்த்திருக்கலாம்.

நல்லவேளை, அக்குடும்பத்தினர் கலாச்சாரக் காவலர்களாகவும் அவதாரமெடுத்து, ஜனனி ஹரிணியைப் பார்த்து, ‘இதென்ன கர்மமோ, ஆம்பள பொம்பளங்கற வித்தியாசமில்லாம, புருஷா மத்தியில இப்படித்தான் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட்டை போட்டுண்டு’ என்று சொல்லாமல் விட்டதும், அமெரிக்கா செல்வதற்கு கார்த்திக் பின்னர் ‘அனுமதி’ தந்ததும், ‘ கிரகாச்சாரம், கடல் தாண்டறதா? இதெல்லாம் பாத்துண்டு இன்னும் நான் உசுரோட இருக்கனுமாடா சங்கரா!’ என்று அரற்றாமல் விட்டதும் கொஞ்சம் ஆறுதல்தான்!

எந்த ஒரு நிறுவனத்திலும், தகுதி இல்லாமல் பணி நியமனம், பதவி உயர்வு அளிப்பதில்லை. குடும்பச் சூழல் காரணமாகவே, பதவி உயர்வுக்கு உரிய தேர்வை எழுதாத காரணத்தினால்தான், தமக்கு அதிகாரியாகப் பதவி உயர்வு கிடைக்கவில்லை, எழுத்தராகவே விருப்ப ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது என்று ஒப்புக் கொண்டு கூறும் சாந்தி, இன்று தன்னைவிடப் பணி நிலையில்  இளையவர்களும்  தகுதியே இல்லாதவர்களும் (!) உயர் அதிகாரிகளாக உள்ளதாக வெறுப்பை உமிழ்வது போன்று பேசுவது அபத்தம் அல்லவா!

பத்மா ஸ்டேஜ் கண்ணனின் நாடக அரங்கம் அருமை. தங்கபாண்டியன் மற்றும் சிவா, ராஜேந்திரன், செல்வனின் மேடை நிர்வாகம் சிறப்பு. மைலை பாபுவின் ஒளியும், விருது பெற்ற பெரம்பூர் குமாரின் ஒப்பனையும்,  முத்தாய்ப்பாக  குஹபிரசாத்தின் பின்னணி இசையும், ஸ்ரீஜித்தின் ஒலிக் கோர்ப்பும், பாடலைப் பாடிய அனந்துவின் குரலும் நாடகத்தின் பின்புலத்தில் பக்கபலமாக அமைந்துள்ளது சிறப்பு!

சில குறைகள் இருந்தாலும், போதிய அளவு ஆழ்ந்து இல்லாது மேம்போக்காகத்தான் என்றாலும், முன் முயற்சியாக பெண்களின் தலைமுறை இடையேயான பல்வேறுபட்ட மனநிலைகளை, பிரச்சனைகளை முன்னெடுத்துக் கதைக் கருவாக்கி, சிறந்த கலைஞர்களைக் கொண்டு, திறம்பட ‘அவள் பெயர் சக்தி’ என்கிற நாடகமாக இயக்கி வழங்கியுள்ள தாரிணி கோமல் சந்தேகமின்றி, பாராட்டுக்குரியவரே!

  • மது ராஜேந்திரன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *