கனவுசீன் கதவில் மாறும் திருவாழியின் காட்சிகள்

கனவுசீன் கதவில் மாறும் திருவாழியின் காட்சிகள்

நூல் அறிமுகம்: சேலம் ராஜா எதையாவது ஓரிரு வார்த்தைகளை எழுதுவதும் பின்பு அழித்துவிடுவதுமாக, திருவாழியை வாசித்ததிலிருந்து மனம் ஓர் உள்ளே வெளியே விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. காரணம் அது வாசக நெஞ்சின் இருண்ட பகுதிகளையும்  தன்னுடைய பொருள் புதைந்த, கருணைமிக்க, எளிய மனங்களின் ஏகபோக அன்பினால் ஒரு வெளிச்சத்தை இழையோட விட்டிருப்பதுதான். இன்றெல்லாரும் நவீன காலத்தின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் பழைமையான உணவு வகைகள், மண்பாண்ட சமையல், இயற்கைமுறை விவசாயம், பசுமை நடை, ஆற்றுக்குளியலென காலத்தில் பின்சென்றவற்றைத் தேடி ஓடுபவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இதுவொரு உணவுச்சங்கிலித் தொடர்போலத்தான். கற்காலத்திலிருந்து தொடங்கி நவீனமயப்பட்டு பிற்பாடு கற்காலத்தை நோக்கியே திரும்புவது. இதுதான் என்றுமே மாற்றமுடியாத நியதியும்கூட. இன்னும் ஒரு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இவ்வுலகம் எப்படி இருக்குமென்பது இப்பொழுது இருக்கும் நமக்குத் தெரியப்போவதில்லை. ஆனால் இந்தக் காலச் சுழற்சியில் நாமும் சிறு துரும்பாகச் சுழன்றுகொண்டிருப்போம் என்பது உண்மை. இதிலுள்ள ஆச்சரியப்படும் ஒருசில உண்மைகள் என்னவென்றால், திடீரென திருவிழாக்கூட்ட நெரிசலில் நாம் தொலைத்துவிடுபவை / விடுபவர்களை இந்தக் காலம் மீண்டும் ஒரு புள்ளியில் நம்மிடமே அல்லது தொலைந்துபோன இடத்திலேயே வீசிச் செல்வதுதான். அப்படியாக, ஒருசிறு நிலத்தில் வாழும் சில மனிதர்களின் பெருவாழ்வே இந்தத் திருவாழி.  இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் என்பவன் சிறு துரும்பில் கால்பகுதிகூட இல்லை. ஆனால் மனிதகுலத்திலிருந்து  எதிர்கொண்டு பார்க்கையில் அவனுடைய வாழ்வென்பது எவ்வளவு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் எத்தனையெத்தனைத் திருப்பங்கள் பொதிந்துகிடப்பதாகவும் இருக்கிறது! திருவாழி என்பது வளர்ந்துவரும் ஒரு சிறு நகரிலுள்ள ஏழு கடைகள் அடங்கிய வணிகக் கட்டிடம். இத்தனைக்கும் அந்தப் பெயர் அதற்கெனப் பிரத்யேகமாக வைக்கப்பட்ட பெயரல்ல. அது அதனுடைய உரிமையாளரின் பெயர். அவர் வசிப்பது வேறொரு ஊராக இருப்பினும் தன்னுடைய மாமியார் வீட்டுவழி கிடைத்த நிலத்தில் அந்த வணிக வளாகத்தை நிறுவுகிறார். பிறகு அதில் கடை வைத்துத் தொழில் செய்து பிழைக்க வரும் மனிதர்களும் அவர்தம் வாழ்வுமே இந்த நாவல் முழுக்க விரியும் பிரதானக் கதைக்களம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் தொடங்கி இரண்டாயிரத்துப் பதினைந்து வரை, உத்தேசமாக நாற்பத்தி ஐந்தாண்டு காலம், பல்வேறு மனிதர்களினுடைய வாழ்வை உள்ளடக்கியது. ஒரு தனி மனிதனின் பாதி ஆயுள்; அதைச் சுணக்கமில்லாது சொல்லி முடிப்பதே ஒரு பெரிய வேலை. ஆனால் இந்த நாவலில் பிரவேசிக்கும் இருபதிற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வியலை அன்போடும் பரிகாசத்தோடும் அதேசமயம் சலிப்பேதும் வந்துவிடாதபடி நாஞ்சிலின் பச்சையான புழங்குமொழியில் ஐந்தாறு வருடப் பார்வையாளனாக விவரித்திருக்கிறார் மீரான் மைதீன்.  காட்சிகளாக விரிவடைகையில், மேற்கிலிருந்து கிழக்காக ஐந்து கடைகளும்  கிழக்கிலிருந்து தெற்காக இரண்டு கடைகளுமாக ஒரு ‘எல்’ வடிவத் தோற்றமுடையது திருவாழி கட்டிடம். பின்புறமாக பொன்னம்மா மனையும் எதிர்ப்புறமாக  கிருஷ்ணனின் டீக்கடையும் அதையொட்டி நீளும் பிள்ளையின் மனையுமாக, ஒரு வட்டாரத்தை உள்ளடக்கியது அவ்விடம். இதில் கிருஷ்ணன் கடையின் பக்கவாட்டில் உள்ள சிமெண்ட் பெஞ்சும் சில டிராக்டர் டயர்களுமே பல முக்கிய முடிவுகளெடுக்கப்படும் இடம். கதையின் தினசரி தொடங்குவது கிருஷ்ணணின் டீக்கடையிலிருந்துதான். திருவாழி கட்டிடம் எழும்பிய புதிதில் ஐந்தாம் எண் கடை பட்டணம் சாயிப்புக்காக ஓட்டல் நடத்தத் தரப்படுகையில், அதில் வேலை செய்தவர்தான் இந்தக் கிருஷ்ணண். அப்போது அவருடன் வேலைபார்த்து மரித்துப்போன மைதீன் கண்ணுவின் மகன் அன்சாரிதான் திருவாழி கட்டிடத்தின் மேற்பார்வையாளன்.  அனைத்துக் கடைகளிலும் மாத வாடகை வசூலிப்பது, வருட ஒப்பந்தப் பத்திரத்தைப் புதுப்பிப்பது, திருவாழி வருகிறார் என்றால் அவரை அழைத்துவர, பின்பு போய் பஸ் வைத்துவிட என்கிற பணி அன்சாரிக்கு. ஓர் இருபத்தைந்து வயதுடைய இளைஞன், அறுபதிலுள்ள கிருஷ்ணண் ஆகிய இருவரைத் தொட்டுதான் தினசரி கதைக்களம் விரியும். உடன் வேலை பார்த்த மைதீன் கண்ணுவின் மகன் என்பதால் தன்னுடைய மகன் போலவே கிருஷ்ணன் பரிகாசம் காட்டுவார். அன்சாரியும் எல்லாருக்கும் இணங்கிப்போகிற குணமுடையவன்தான்.   பட்டணம் சாயிபு, ஓட்டல் நடத்திய காலத்தில் கணவனால் கைவிடப்பட்டு இரு குழந்தைகளோடு சூளாமணி என்கிற  பெண் சாயிபின் கடைக்கு வேலை கேட்டு வருகிறாள். சாயபு யாருக்கும் தவறுதலாகக்கூடத் தீங்கிழைக்காத நபர். வேலையும் தருகிறார். எல்லாம் நல்லபடியாகச் செல்லும்போது சாயிபின் மனைவிக்கு சூளாமணி மீது சந்தேகமெழ, அவளை விளக்குமாற்றால் அடித்துத் தூற்றி, இல்லாத வசவுகளைப் பேசி வெளியே அனுப்பிவிடுகிறாள். அதன்பிறகு தண்ணீர் பிரச்சனையென எதேச்சையாக சாயிபினாலும் ஓட்டலை நடத்தமுடியாமல் போய்விட,  அதிலிருந்து அந்த ஐந்தாம் எண் கடையை எடுத்தவர்களுக்குத் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு இடது கால் முறிய, அந்தக் கடையில் ஏதோவொரு அமானுஷ்யம் இருக்கிறதென ஒரு பேச்சு உலவத்தொடங்குகிறது. ஆறேழு இடது கால்களின் முறிவுக்குப் பிறகு, ஏரியாவில் ஐந்தாம் எண் கடையின் பேச்சுக்கு இறக்கை முளைத்துப் புற்றீசல் கூட்டாமாகி அவ்வூர் கடந்தும் ஐந்தாம் எண் கடையின் கட்டுக்கதைகள் பிரபல்யமடைகின்றன. என்னதான் நாகரீகத்தில் மனிதன் தெளிவான சிந்தனையாளனாக ஆகிவிடினும் உருவமற்றும் இலக்கற்றும் பறந்துகொண்டிருக்கும் இதுபோன்ற கதைகள், லேசாக அசைத்துதான் பார்க்கின்றன. நெடுங்காலமாக அங்கேயே திருவாழிக் கட்டடத்தின் ஒவ்வொரு மாறுதல்களையும் பார்த்துவந்த கிருஷ்ணண்கூட, இது முன்பு வேலை பார்த்த சூளாமணியின் சூழ்ச்சியாகத்தான் இருக்குமென நம்பிவிடும் ஆளாகிறார்.  எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனும் திராணி உடையவனாக ஆறேழு இடது கால்களுக்குப்பின் சிலாங்கா என்பவன் வந்து அன்சாரியிடமும் திருவாழியிடமும் பேசி, தாரை தப்பட்டையோடு தடபுடலாக ஐந்தாம் எண் கடையில் ஒரு எலக்ட்ரிக்கல் கடையைத் தொடங்குகிறான். கடை தொடங்கிய அன்றே அவனுக்கும் விபத்து நேர்ந்து இடதுகால் முறிகிறது. அக்கடை பற்றிய புற்றீசல் பேச்சுக்கு அது மேலும் பெட்ரோல் ஊற்றியதுபோல ஊரெங்கும் பறந்து பற்றி எரிகிறது. அன்சாரியும் கிருஷ்ணணும் திருவாழியும்கூட, அந்தக் கடையில் ஏதோ மாந்ரீக சக்தி உள்ளதாக நம்பத் தொடங்குகிறார்கள். பின்பு  கிருஷ்ணணின் ஏற்பாட்டால் ஒரு மாந்ரீகன் வருகிறான்; கழிப்பு செய்து சூன்யம் நிவர்த்தியாக்கப்படுகிறது. பிறகு அக்கடைக்கு ஜீனா வருகிறான். இப்படியாக இறந்தகாலம் முதல்  நிகழ்காலம் வரை ஊடாடி ஊடாடி கதைக்களம் விரிகிறது.   முதலாம் எண் கடை பூபாலன் என்பவனுடைய ஜெராக்ஸ் கடை. இரண்டாவதாக பேபி குட்டியின் நகை அடகுக் கடை, மூன்றாவதாக வேலுமயிலின் டிரம்ப்பட், நான்காவது சிந்துவின் பியூட்டி பார்லர், ஆறாவது ராஜகுமார் அண்ணாச்சியின் மளிகைக் கடை, ஏழாவது சலாமின் டெய்லர் கடை. இப்படியாக, பல மனிதர்களுடைய வாழ்க்கைப் பாடுகளைத் தாங்கியிருக்கிறது திருவாழி கட்டிடம். இதிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் பல கதைகள் இருக்கின்றன. இதில் சிந்து, விவாகரத்தான பேரிளம் பருவத்துடையவள். அவளுக்கு அன்சாரி மீது இன்னதென வரையறுக்கவியாலத ஒரு மோகம் இருக்கிறது. அவனுக்கும்தான். ஆனால் அதுவெல்லாம் தூரத்துப் பச்சையின் அளவுதான். வண்டிச்சக்கரம்போலச் சுழலும் இந்தக் காலம், தன்னகத்தே வைத்துக்கொள்ள மனிதன் நினைப்பவற்றைத் தொலைவில் விசிறிவிடுகிறது. தொலைக்க நினைப்பதை அருகிலேயே இருக்குமாரு பார்த்துக்கொள்கிறது. ஆனாலும் மிக விசித்திரமானது. எங்கெங்கோ அலைக்கழிக்க வைத்தபின் அவன் விரும்பியதை அல்லது அவனுக்குச் சேரவேண்டிய ஒன்றை அவனுக்கே இறுதியில் தந்துவிடும் என்பதே நிதர்சனம். ஐந்தாம் எண் கடையின்படி பார்த்தால் இது மாய மந்திர சித்துவிளையாட்டின் கதையாகத் தோன்றும். ஆனால் உண்மை வேறு. மனிதனின் பெருவாழ்வில் அவையெல்லாம் வந்துபோவதும் பலரும் அவற்றைக் கடந்து வருவதும் இயல்புதானே. அப்படி மிக இலகுவாகக் கடந்துவிடும் இடங்கள் அவை. அதன்பிறகு பார்த்தால், மனிதர்கள் தங்களின் இருப்பை இவ்வுலகில் தக்கவைக்கப் படும்பாடுகளே அதிகமாக நிறைந்திருக்கின்றன.   அன்சாரி தொடங்கி அவ்வப்போது பெரிதும் பின் விவரணைகளற்றுத் தொலைந்துபோகும் குச்சான் வரை, எல்லாருக்குப்பின்னும் வாசிப்பவர்கள் யாரும் எதிர்பாராத துயரமான நிகழ்வுகள் ஆலைக்கழிவுகளைப்போலக் குவிந்து கிடக்கின்றன. அதுபோலவே மிக இயல்பாக நம்மோடு ஒட்டிக்கொண்டு வரும் மனிதரிடத்தும் உள்ளுக்குள் பொறாமையும் பகைமையும் நிறைந்திருக்கின்றன என்பது வாழ்வின் அபத்தமான விசித்திரம். இப்படிப் பலவாறான ஏற்ற இறக்கமுள்ள கதை மாந்தர்கள் இருப்பினும், எங்கோ இருந்தபடி எல்லாரின் குணங்களையும் பிரித்து அறிந்து வைத்திருப்பவராக இருக்கிறார் திருவாழி. ஏகபோக சொத்துக்கள் இருந்தும் அதை இவ்வூரிலிருந்தபடியே ஆண்டு அனுபவிக்க மகன்கள் ஒத்துழைக்காத வேதனையே அவரை உருக்குகிறது. அவரைப் பொறுத்தவரை இந்த நிலமும் இங்கிருக்கும் மக்களும்தான் அவருக்கு நகமும் சதையும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிப்போக இஷ்டப்படவில்லை மனது. தனக்குப் பிறகு பிடிமானற்று நிற்கும் அன்சாரி தடுமாறிவிடக்கூடாது; அவனுக்கு ஏதாவது நல்லது செய்து கரையேற்றிவிட வேண்டுமென்கிற எண்ணம் ஒருபுறம் அவரை மேலும் வதைக்கிறது. அதுபோலவே அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை; அதில் பகுதி ஆசைகள் இந்த மீதமுள்ள ஜீவிதத்தைக் கடத்த பொருள் சேர்த்திவைப்பதாக இருப்பதுவே. அதற்குள்ளாக சாதி நிமித்தமும் மதத்தின் நிமித்தமும் ஏழ்மையின் நிமித்தமும் ஒருவன் உயிர்வாழ எவ்வளவோ முட்டுக்கட்டைகள் வந்துவிடுகின்றன. மொத்தமாகச் சொல்லப்போனால் வாழும் இந்தச் சிறிய வாழ்வில் கதைகள் இல்லாத மனிதனுமில்லை; ஆசையில்லாத மனிதனுமில்லை என்பது மட்டுமே உண்மை. ஆனால் அதை அன்போடும் கருணையோடும் முன்கொண்டு செல்வதில்தான் இவ்வுலகின் சக்கரம் இயங்குகிறது. அதன்படி அறத்தின்பால் ஒருவன் நடந்துகொள்ளும்போது அவன் முன்பு இழந்தவற்றை வேறு வடிவிலோ எப்படியோ மீண்டும் இயற்கையின் நியதி அவனிடமே அதை ஒப்படைத்துச் செல்கிறது. அன்சாரியும் பட்டிணம் சாயிபும் கிருஷ்ணணும் சிலாங்கா, மனோகரன் வாத்தியார் போல சுயநலத்தோடில்லாமல் அகமனதோடு உரையாடியபின் நல்லவற்றின் பக்கமே நிற்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் போட்டியான வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் அன்சாரி துவண்டுபோகும்போதெல்லாம் அவனுடைய உம்மாவின் வார்த்தைகள் அவனைத் தேற்றிக்கொண்டுவருபவையாக இருக்கின்றன.   ஒரு தனி மனிதனின் வாழ்வில் நடப்பதை எழுதுவது ஓரளவுக்கு சுலபம். ஆனால் இந்த ஏழு கடையின் மனிதர்கள் மட்டுமின்றி இவர்களுக்கு முன் அங்கிருந்தவர்கள், அவர்களின் சுற்றப்பாடுகள் தொடங்கி இடையில் வந்துபோவோர் முதற்கொண்டு அந்நிலத்தின் தகவமைப்பு, இயற்கை,  மலை, மரம் என அப்படியே கண்முன் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் மீரான் மைதீன். அங்குள்ள ஏழு கடைகளை வர்ணித்திருப்பதிலேயே வாசகன் மனதில் காட்சிகள் விரிவடையத் தொடங்கிவிடுகின்றன. அதிலேயே ஒட்டுமொத்தக் கட்டடத்தின் வரைபடமும் மனத்தில் பதிந்துவிடும். மேலும் மைனர் சலீம் கடை சிந்தியாவிற்கும் அண்ணாச்சிக் கடை அகிலனுக்கும் டிரம்பட் கடை பிலிப்பிற்கும் சிந்துவிற்குமென நாவல் முடிந்தபிறகும் பெருங்கதைக்கான கிளைகள் நீண்டிருக்கின்றன. அதுவொரு வாசகப் பார்வைக்கான வெளியாக ஆசிரியர் திறந்துவிட்டிருக்கிறார் போலும்.   சிந்துவின் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பியூட்டி பார்லரை மிக உவமையோடு விவரித்திருப்பார். அதிலொன்றுதான் அழகிய வேலைப்பாடு மிகுந்த உள்அறைக் கதவு. அதை ‘கனவுசீன்’ கதவு எனும் சொல்லாடலில் குறிப்பிட்டிருப்பார். படிக்கும்போது ஒருமாதிரி சிரிப்பு வந்தாலும் பிறகு அதுவொரு பரஸ்பர அடையாளமாக ஒட்டிக்கொள்ளும். ஒட்டுமொத்த நாவலில் சிந்து

கருடன்

கருடன்

திரை விமர்சனம்: மது ராஜேந்திரன் நேர்மையான காவல்துறை துணை ஆணையருக்கும் மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு இலக்கான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கும் இடையில் நடைபெறும் சட்டப் போராட்டம்தான், அருண் வர்மாவின் அறிமுக இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகி ஆங்கிலத் திரை வசனங்களுடன் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம். விசாரணை அலுவலராக டிசிபி ஹரிஷ் மாதவ் (சுரேஷ் கோபி) இந்த வழக்கில் திறம்படச் செயல்பட்டு, ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து, அரசு வழக்குறிஞர் தாமஸ் ஐப் (சித்திக்) கல்லூரி பேராசிரியர் நிஷாந்த் ( பிஜு மேனன் ) குற்றவாளி என்று நிரூபித்து, ஆயுள் தண்டனை பெற்றுத் தருகிறார். பலாத்காரத்திற்கு உள்ளான மாணவி தெரசா ஃபிலிப் (சைதன்யா பிரகாஷ்) நினைவிழந்து ‘கோமா’ நிலைக்குச் சென்றுவிட்டார். ஏழு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளிவரும் நிஷாந்த், ஹரிஷ் மாதவ் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில், தனது வழக்கை மீண்டும் விசாரணை செய்ய கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது, வழக்கில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட, நிஷாந்த் குற்றவாளி என  நிரூபிக்க காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி, தாமே முன்னின்று வாதாடி, குற்றமற்றவன் என்று விடுதலையாகி வெளியே வருகிறான், நிஷாந்த். தவிர, விசாரணை அலுவலர் மீதான அவனது அவதூறு வழக்கில், டிசிபி ஹரிஷ் மாதவ் நஷ்ட ஈடாக 70 லட்சம் அவனுக்குத் தரும்படி உயர்நீதிமன்றம் ஆணையிடுகிறது. நிலைகுலைந்து போன ஹரிஷ் மாதவ், அரசு வழக்குறிஞர் தாமஸ் ஐப்பிடம் இந்த வழக்கில் நான் தவறு ஏதும் செய்யவில்லை என்பதைத் திடமாக நம்புவதாகவும் தெரிவித்து, புத்திசாலியான நிஷாந்த் திட்டமிட்டு நடத்திய நாடகத்தை வெளிக்கொணர்வதாக உறுதியளிக்கிறார். அதை அவர் நிறைவேற்றுகிறாரா என்பதுதான் ‘கருடன்’ படத்தின் மீதிக் கதை. காவல்துறை உயரதிகாரியாக சுரேஷ் கோபியும் கல்லூரிப் பேராசிரியரும் ஒரு பாலியல் குற்றவாளியுமாக பிஜூ மேனனும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பில் திறமை காட்டுகின்றனர். தொழில் நேர்த்தியையும் முயற்சியில் வெற்றி பெறும்போது அதீதமாக இல்லாமல் அழுத்தமான ஒரு புன்முறுவலையையும்  தோல்வியடையும்போது அதை ஜீரணிக்க இயலாத நிலையிலும் தான் தவறு ஏதும் செய்யவில்லை என நிற்பதில் காட்டும் உறுதியையும் சுரேஷ்கோபி துல்லியமாக வெளிப்படுத்தும் பாங்கு ரசிக்கத்தக்கது. அதேபோன்று கண்ணியமான பேராசிரியர் பதவிக்கே இழுக்கு நேரும் நிலையில் குறுகிப்போவதும் நீதிமன்றத்தில் குற்றவாளி என உறுதி செய்யப்படும் நிலையில் உடைந்து போவதும் தண்டனை முடிந்து வெளியே வரும்போது மகளுடன் வரும் மனைவி தன்னை உதாசீனப்படுத்தும்போது தவித்துப் போவதும் பின்னர் ஹரிஷ் மாதவ்விடம் வெளிப்படும்போதான மாறுபாடான முக பாவமுமாக எதிர்மறையான பாத்திரமாக இருந்தாலும் அதன் தன்மையை முழுதுமாக உள்வாங்கி பிஜு மேனன், தன் பங்களிப்பை அற்புதமாக வழங்கியுள்ளார். கதையில் அவர்களுக்குள்ள இடமும் கண்ணாமூச்சி விளையாட வசதியாக இருக்கின்றது. ஜெகதீஷ் (சலாம்), அபிராமி (ஸ்ரீதேவி), திவ்யா பிள்ளை (ஹரிதா), தலைவாசல் விஜய் (கார்னல் ஃபிலிப் ஜார்ஜ்), திலீஷ் போத்தன் (ஐ ஜி பி சிரியா ஜோசப்), நிஷான் சாகர் (நாரி சுனி), மாளவிகா (அருனிமா) போன்ற ஏராளமான துணைப் பாத்திரங்களும் அவரவர்களுக்கு உரிய பங்கை சிறப்புறவே செய்துள்ளனர். ஜினேஷின் கதைக்கு, மிதுன் மேனுவல் தாமஸ் தெளிவான திரைக்கதை எழுதியுள்ளார். அஜய் டேவிட் கச்சபில்லியின் கண்கவர் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜய்யின் கதைக்கு இணக்கமான இசையும் ஸ்ரீஜித் சரங்கின் கச்சிதமான படத்தொகுப்பும் அறிமுக இயக்கத்திற்கு வலு கூட்டுகின்றன. ஏழு கோடியில் எடுக்கப்பட்ட படம் 27 கோடி வசூலைக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிஷாந்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர விசாரணை அதிகாரி மேற்கொண்ட முயற்சிகளைக் காட்டிய அளவில், அவனது விடுதலைக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்ற நிலைக்கு பிந்தைய காலத்தில் காட்டப்படாதது குறையே.  அவ்வாறே, அமைச்சரின் டாலர்ஸ் ஸ்மக்லிங் வழக்கு, ஒட்டாத வாலாகத் தனித்து ஆடுகிறது; தவிர்த்திருக்கலாம். இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், சுரேஷ்கோபி, பிஜு மேனன், சித்திக் கூட்டணியின் சிறப்பான பங்களிப்பு, அறிமுகச் சுவடே தெரியாத இயக்கம், படத்தை இரண்டு மணி நேரமும் தொய்வின்றி விறுவிறுப்பாகக் கொண்டுசென்றது என்கிற வகையில், அருண் வர்மாவின் ‘கருடன்’  உயர்ந்தே பறக்கிறது. மதிப்பெண் : 7/10

ஆழ்ந்தடங்கிய அறிவாற்றலின் ஊற்றுக்கண்  

ஆழ்ந்தடங்கிய அறிவாற்றலின் ஊற்றுக்கண்  

பேராசிரியர் நா. வானமாமலை பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை கட்டுரையாளர் : அக்ரி பரத்வாஜ் தொழிற்சங்க எல்லைக்குள்ளோ, அரசியல் எல்லைக்குள்ளோ நின்றுவிடாத பொதுவுடைமைவாதிகளில் வித்தியாசமானவர் பேராசிரியர் நா. வானமாமலை. ஒரு சிறந்த மார்க்சிய சித்தாந்தவாதியாக விளங்கிய அதே நேரத்தில், தமிழக நாட்டுப்பாடல், கிராமியக் கலாச்சாரம் பற்றிய ஆய்வாளராகவும் திகழ்ந்தார். தமிழ் இலக்கிய வரலாறு, தமிழக நாட்டார் வரலாறு, வழக்காற்றியல் எனப் பல துறைகளில் முத்திரை பதித்தவர். பேராசிரியர்கள் எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா. ராகவையங்கார், டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் ஆகியோரது வரிசையில் வைத்து எண்ணிப் போற்றத்தக்கவர் பேராசிரியர் நா. வானமாமலை. உத்தியோக ரீதியில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக விளங்காவிடினும் பேராசிரியர் என்ற அடைமொழி அவருடைய பெயருடன் மதிப்பர்த்தத்துடன் இணைக்கப்பட்டதற்கான காரணம், தொன்மைச் சிறப்புமிக்க மக்களின் வரலாற்றை, பண்பாட்டை, இலக்கியத்தை, வாழ்வியலை அறிவியல் முறையிலான சமூகவியல் நோக்கில் பல்கலைக்கழக நிறுவனங்களுக்கு வெளியே இருந்து அறிவுப்பூர்வமாக ஆய்வினை மேற்கொண்டதுதான். நா.வா. தனது பிறந்த ஆண்டைப்பற்றிக் குறிப்பிடும்போது ரஷ்யப் புரட்சி நடந்த அதே ஆண்டில் பிறந்தவன் என்று பெருமையாகக் கூறும் விதத்தில் 07.12.1917இல் நாங்குநேரியில் நாராயணன் –  திருவேங்கடத்தம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். டால்ஸ்டாய், டிக்கன்ஸ், வால்ட் விட்மன், ஹியூகோ ஆகியோரின் எழுத்துகளால் கவரப்பட்ட அவர், மனிதனை உயர்த்தும் எழுத்தோவியங்களைத் தமிழில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் டால்ஸ்டாயின் கதைகளையும் குறுநாவல் நாடகம் ஒன்றையும் மொழிபெயர்த்தார். கல்லூரி நாட்களில் இவர்களது படைப்புகளைப்பற்றிக் கட்டுரை ஒன்றை எழுதினார். இவரது எழுத்துப் பணியை இலக்கிய நூல்களின் மொழிபெயர்ப்பு, விஞ்ஞான நூல்களின் மொழிபெயர்ப்பு, தமிழ்நாட்டு வரலாறு – பண்பாடு பற்றிய ஆய்வு, பாடல் தொகுப்பு – ஆராய்ச்சி, இலக்கிய விமர்சனம் எனப் பிரிக்கலாம். விஞ்ஞான உண்மைகளைத் தமிழில் எழுதவேண்டும் என்ற எண்ணம் எளிய முறையில் ஹால்டேன் எழுதிவந்த கட்டுரைகளைப் படித்தபோது அவருக்கு உதயமானது. அவருடைய கட்டுரைகள் சிலவற்றை மொழிபெயர்த்து சக்தி இதழில் வெளியிட்டார். ஐன்ஸ்டீன் தத்துவம், லைசெய்கோ தத்துவம், இரசாயனத் தத்துவங்கள் ஆகிய பொருள்கள்பற்றி எளியமுறையில் தமிழில் எழுதி, பல பத்திரிக்கைகளில் வெளியிட்டார். சிறுவர்களிடம் அறிவியல் மனப்பாங்கை ஏற்படுத்திடும் வகையில்  இரப்பரின் கதை, காகிதத்தின் கதை, இரும்பின் கதை ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டார். எஸ்.தோத்தாத்ரியுடன் இணைந்து எழுதிய இரப்பரின் கதை 1962இல் இந்திய அரசின் பரிசினைப் பெற்றது. தாத்தா பேரப்பிள்ளைகளுக்குக் கதை கூறுகிற முறையில் இந்நூல்கள் அமைந்துள்ளன. தமிழகம் வந்த பி.சி.ஜோஷி, நா.வா.வை அழைத்து “இந்திய நாட்டுப் பாடல் செல்வம்” என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதப்போவதாகவும் அதற்கு தமிழ்நாட்டு – நாட்டுப் பாடல்களில் சிலவற்றைச் சேகரித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தருமாறும் உரிமையுடன் கேட்டுக்கொண்டார். அவரைச் சந்தித்த பிறகு இத்துறையில் ஈடுபடுவது தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் ஆராய்பவருக்கு அவசியமானதொன்று என்ற முடிவுக்கு வந்தார் பேராசிரியர். நாட்டுப்பாடல்கள், நூற்றுக்கணக்கான எழுதப் படிக்கத் தெரியாத கிராம மக்களது கலைப் படைப்புகள், அவர்களது உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் இப்பாடல்கள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளனவென்றும் வரலாற்று நிகழ்ச்சிகளைப்பற்றிய கண்ணோட்டம் அவர்கள் பாடும் கதைப் பாடல்கள் மூலம் வெளிப்படுகின்றனவென்றும் உணர்ந்த பேராசிரியர், இவற்றைச் சேகரித்து வெளியிடுவதும் ஆராய்வதும் தமிழிலக்கியத்தின் துறைகளில் மிக முக்கியமானதென்றறிந்தார். நாட்டுப் பாடல்களைச் சேகரித்து வெளியிட முடிவு செய்து பல பாடல்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை, ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ (1960), ‘தமிழ்நாட்டுப் பாடல்கள்’ (1964) என இரு தொகுதிகளாக வெளியிட்டார். இவ்விரு தொகுப்புகளிலும் பாடல்களில் உள்ள கொச்சைச் சொற்களைத் திருத்தாமல் அப்படியே எழுதியுள்ளார். மேலும் பாடல்களைப் பகுதி பகுதியாக வரிசைப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். நா.வா. எழுதியிருக்கும் முன்னுரை நாட்டுப்பாடல்களின் சிறப்பை அறியப் பெரிதும் துணை செய்கிறது. நண்பர்களின் (சிவகிரி S.M.கார்க்கி, ராமச்சந்திரன், இரா.நல்லகண்ணு, டி.மங்கை, S.S.போத்தையா ஆகியோர்) உதவியைக்கொண்டு பேராசிரியர் இத்தொகுப்புகளைச் செய்து முடித்தார். பாடல்களில் இடம்பெற்றுள்ள சொற்களுக்குப் பாடலின் இறுதியில் பொருள் குறிப்பிட்டுள்ளார். பாடலின் இறுதியில் பாடலைச் சேகரித்தவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது சிறப்பம்சமாகும். பேராசிரியர் இலக்கியம் பற்றிய அணுகுமுறையில் ரசனை முறை, மார்க்சிய முறை என இருநிலைகளைக் கொண்டிருந்தாரென்று கூறலாம். தொடக்கக் காலத்தில் அவர் கொண்டிருந்த அணுகுமுறை ரசனை முறையாகும். பின்னர் முற்போக்கு இயக்கங்களுடன் இணைத்துக்கொண்ட பிறகு உருவான முறை மார்க்சிய அணுகுமுறை. பிந்திய இம்முறையை அவர் தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்தார். தொ.மு.சி. ரகுநாதன், தி. க.சிவசங்கரன் ஆகியோரோடு அவர் அமைத்த நெல்லை இலக்கியச் சங்கம், விவசாயச் சங்கம், பீடித் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றில் ஏற்பட்ட ஈடுபாடு, இவற்றின் விளைவாக மார்க்சியத்தைக் கற்கும் வாய்ப்பு ஆகியன அவருடைய இலக்கிய நோக்கத்தினை மார்க்சிய அணுகுமுறைக்கு மாற்றியது. மகாகவி பாரதியின் வசன கவிதைபற்றிக் குறிப்பிடும்போது, “உணர்ச்சிமிக்க சிந்தனைப் பிரச்சாரத்திற்கு ஏற்ற கருவி வசன கவிதை; உரைநடை போல விளக்கும் சக்தியும் கவிதை போல உணர்ச்சியைப் பாய்ச்சும் சக்தியும் அதற்கு உண்டு என்பதை, நிறவெறியை எதிர்த்து மனித குல ஒருமையை நிலைநாட்ட வசன கவிதை எழுதிய வால்ட் விட்மன்,  ஏகாதிபத்திய வெறியையும் தேசிய வெறியையும் எதிர்த்து மனித குல ஒற்றுமையை உருவாக்க வசன கவிதை எழுதிய எட்வர்ட் கார்பெண்டர், மேலைநாட்டுப் பண்பாட்டையும் கீழை நாட்டுப் பண்பாட்டையும் இணைத்து ஒருவகைப் பண்பாட்டை நிறுவ வசனகவிதை எழுதிய இரவீந்திரநாத் தாகூர் ஆகிய தத்துவாசிரியர்களைக் கற்றுணர்ந்த பாரதி, தனது தத்துவ தரிசனத்தை வெளியிட வசன கவிதையைத் தேர்ந்தெடுத்தான் என்பதை மார்க்சிய வழியில் அணுகியுள்ளார் பேராசிரியர். நின்னைப் போல் எமதுயிர் நூறாண்டுவெம்மையும் சுடரும் தருக. தீயே, நின்னைப்போல எமதறிவு கனலுக இவ்வாறு சூரியனது இயல்புகள் மனிதனுக்குக் கிட்டவேண்டும் என்று  சூரியனிடம் வரம் கோருகிறான். ‘உள்ளக் கவலை யறுத்துஊக்கம் தோளிற் பொருத்து’ என்கிறான் பாரதி. மண்ணுக்குள்ளே அமுதைக் கூட்டிகண்ணுக்குள்ளே கவியைக் காட்டிஎண்ணுக்குள்ளே இன்பத் தெளிவாய்வாராய் நிலவே வா!அச்சப் பேயைக் கொல்லும் படையாம்வித்தைத் தேனில் விளையுங் கனவாய்வாராய் நிலவே வா! பாரதியின் தத்துவ தரிசனத்தைப் பலர் பல பெயர்களிட்டு அழைக்க முயலுகிறார்கள். பாரதி காற்றையும் சூரியனையும் நிலவையும் தீயையும் வணங்குவதால் அவனை வேதக் கடவுளரை வழிபடுபவன் என்றும் கிரேக்க இயற்கை வழிபாட்டு மதமான ‘ஹெலனிக்’ வழிபாட்டை மேற்கொண்டவன் என்றும் கூறுகிறார்கள். ‘எல்லாம் தான்’ என்று கூறுவதால் அத்வைதி என்றழைக்கிறார்கள். நாயகி – நாயக பாவத்தைக் கையாண்டிருப்பதால் வைஷ்ணவ பக்தன் என்கிறார்கள். மகா சக்தியை வழிபடுவதால் சித்தன் என்கிறார்கள். காண்பன யாவும் உண்மை என்பதால் உலோகாயதன் என்கிறார்கள். இவையாவும் உண்மையாக இருக்க முடியாது. இவற்றுள் ஒவ்வொன்றும் உண்மையுமல்ல. வேதக் கடவுளை வழிபடும் பாரதி, நாடோடித் தெய்வங்களையும் வழிபடுகிறான். இயற்கை வழிபாட்டில் ஈடுபடும் அவன், தான் என்னும் பிரம்மமாக நாம் மாற வேண்டும் எனவும் கூறுகிறான். அத்வைதம் பேசும் அவன் மாயையை நிராகரிக்கிறான். காண்பனவெல்லாம் உண்மை என்று உலோகாயதம் பேசும் பாரதி ஆன்மிகமும் பேசுகிறான். பாரதி தத்துவம், ஒவ்வொரு மதக் கொள்கையிலும் ஓர் அகப்பை அள்ளிக்கொண்ட கூட்டுச் சரக்காகும். ஆகவே நிவர்த்திக்க முடியாத முரண்பாடுகள் அதனிலுண்டு. ஆனால் இவை அனைத்தையும் நவரத்தின மாலையாக இணைக்கும் பொற்சரடு அவனுடைய மனிதத்துவம், வாழ்க்கை மீது விடாப்பிடியான ஆர்வம், பரந்த நோக்கு, மனிதன் இன்பமுற்று அமர நிலைபெற்று வாழ வேண்டும் என்ற பெருவிருப்பு முதலியன. இவையே முரண்பாடுகளை மீறி – பாரதியின் வசன கவிதையில் ஒளிவிடும் உணர்ச்சிகள் என மதிப்பிடுகிறார் பேராசிரியர் நா.வா. ஆய்வும் அறிவும் தன்னோடு மட்டும் நின்றுவிடாமல் இத்துறையில் ஆர்வம் உள்ளவர்களை ஒன்றாக இணைத்துப் பயிற்சி கொடுத்து ஆய்வு முறைகளை எழுதத் தூண்டும் முயற்சியில் வெற்றி கண்டவர் பேராசிரியர், சிந்தனையாளர் நா.வா. எழுத்தாளர் சுஜாதா பேராசிரியரைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘வானமாமலை அவர்கள் சாகித்திய அகாதமியின் பார்வையில் சிக்காதது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. அதற்கு அவருடைய இடதுசாரிச் சிந்தனைகள் காரணமாக இருக்கலாமோ என விசனப்படுகிறேன்’ என்கிறார். சீரிய கல்வியும் பண்பும் அமைதியும் பொருந்திய நா.வா.வின் பிறந்த தினம் 07.12.1917.