ஒரு மரணத்தின் கதை

ஒரு மரணத்தின் கதை

சிறுகதை: ஆண்டன் பெனி நான் தவசி தாத்தா. இன்னைய தேதிக்கு ரொம்பப் பழைய மனுச உசுரு. ஏன்னா, எனக்கு இப்போ நூத்தி அம்பத்து நாலு வயசு ஆகுது. நீங்க நம்பலன்னாலும் அதுதான் நெசம். இந்த வயசுக்கும் என்கிட்ட கணக்கு இருக்கு. பென்சன் புக்கையும் வேலைக்குச் சேர்ந்த ஆர்டரையும் பத்திரமா வச்சிருக்கேன். எனக்கு இவ்ளோ வயசு ஆகுதுன்னு நிரூபிக்க, இன்னைய தேதிக்கு என்கிட்ட இருக்கிற ஆதாரம் அது ரெண்டும்தான். இதைத் தொலைச்சிட்டேன்னா, நான் உசுரோட இருக்கிறதுல அர்த்தமில்லங்கிறதும் உண்மை. வாரிசுபோல கூடயே இருக்குதுங்க. ஆறேழு தலைமுறைக்குப் பிறகும் உசுரோட இருக்கிறவனுக்கு, ஆதரவுன்னு ஒன்னு வேணுமில்ல? அதான். இதுபோக, நாலு வேட்டி சட்டை, ரெண்டு துண்டு, ஒரு தகரக் கட்டில். இதுவும் எப்பவோ வாங்கினது. என் நேரம்னு நெனைக்கிறேன், இன்னமும் பழுதாகாமக் கெடக்கு. இந்தத் தலைமுறை சனங்களுக்கு என்னையப் பத்தித் தெரிஞ்சதெல்லாம், கீழ்வீட்டுத் தாத்தா, இல்லனா காரை வீட்டுத் தாத்தா. நூறு வயசு முடிஞ்சி ஒரு பத்து வருசம் வரைக்கும், நான் பரபரப்பாத்தான் இருந்தேன். வேடிக்கை பார்க்க வர்றதும் பேட்டி எடுத்துப் போடுறதும்னு ரொம்பப் பரபரப்பாவே இருந்தேன். கொஞ்ச காலத்துக்குப் பிறகு நின்னுடுச்சி. இப்பவும் யாராவது பார்க்க வர்றாங்கன்னாலும், அடிக்கடி இல்ல. வீடே கதின்னு ஆகிருச்சி. வீட்டுக் கூரையும் எப்படி இன்னமும் விழாம இருக்குதுன்னு தெரியல. பக்கத்துல இருக்கிற வீடுகளும் பெருசு பெருசா வளர்ந்திருச்சி. இடிச்சிட்டு, புதுசா கட்டணும்னு தோனினது. பிறகு எதுக்குன்னு விட்டுட்டேன். எனக்கு படிப்புன்னு எதுவுமில்ல. ஆனாலும் கவர்மெண்ட் வேலை கிடைச்சது. பெரிய வேலைன்னு நினைக்க வேண்டாம். வெள்ளைக்காரத் துரைக்கு விசிறிவிடுற வேலை. அப்போ உடம்பு சும்மா கிண்ணுன்னு இருக்கும். கையும் காலும் இரும்புத்தூண் மாதிரின்னு சொல்லுவாங்க. அதனாலயே வேலை கிடைச்சது. தொடர்ச்சியா என்னால ரெண்டு மணி நேரம் விசிறிவிட முடியும். துரைக்கும் என் வேலை ரொம்ப பிடிச்சிப் போயிருச்சி. ஆபீஸ் வேலை மட்டும்தான். அதுவும் துரை ஆபீஸ்ல இருந்தா. வெளியில, வெளியூருக்கெல்லாம் கூட்டிட்டுப் போறதில்ல. ராயல் கமிசன்னு ஒன்னு, அரசாங்க வேலையில இருக்கிற எல்லோருக்கும் பென்சன்னு சொல்லிருச்சி. அப்படித்தான் எனக்கும் இந்தப் பென்சன் வருது. வெள்ளைக்காரங்க நாட்டைவிட்டுப் போனதுமே பென்சன் இல்லன்னு சொல்லிட்டாங்க. அரசாங்கத்துக்கு மனு மேல மனுப்போட்டு மினிமம் பென்சன் வாங்கினேன். துரைமாருங்க வீட்லயே இருந்ததால, கொஞ்சமா இங்கிலீசு வார்த்தைகள் தெரியும். பென்சன் பணம் ரெண்டாயிரத்துச் சொச்சம்னாலும் அப்பப்ப அதுக்கு அரியர்னு ஒன்னு கொடுப்பாங்க. அதுல வந்த காசுலதான் இந்த வீட்டு வேலைகளைச் செய்ய முடிஞ்சது. ரெண்டு துணிமணிகளும் வாங்கினேன். ஆனாலும், எனக்கு முன்னாடியே இந்த வீடு ஆயுச முடிச்சுக்கும்போல. இந்த வீடும் இல்லனா, இச்சி மரத்தடியிலதான் சின்னதா குடிசை போட்டு இருக்கணும். எனக்குன்னு யாரு வீடு கட்டிக்கொடுப்பா? இல்ல, வீட்டுலதான் சேத்துக்குவாங்க? இதுக்குப் பிறகு கட்டின எத்தனையோ வீடுக இப்ப இல்ல. என்கூடவே ஆயுச முடிச்சிக்கணும்னு இருக்குதுபோல. இப்ப கட்டுற கட்டடங்களுக்கு ஆயுசே அம்பது அறுபது வருசம்தான்கிறாங்க. இந்தக் கூரை எந்தலையில விழுந்துதான் ஆயுசு முடியும்னா, அத யாரால மாத்த முடியும்? சாப்பாட்டுக்குப் பென்சன் பணமே போதும். என்ன பெருசா சாப்பிடப் போறேன்? காலையில ராயல் டிபன் சென்டர்ல ரெண்டு இட்லி, ஒரு காபி. மதியம் அளவு சாப்பாடு. ராத்திரிக்கி எதுவும் சாப்பிடுறதில்ல. மதியச் சாப்பாடு செரிமானம் ஆகுறதுக்குள்ள விடிஞ்சிரும். நிறைய சாப்பாடுக் கடைகள் ஊருல இருந்தாலும் ரொம்பக் காலமா எனக்கு இதே கடைதான். அறுபது வருசம் முன்னாடி பொன்னாத்தா இட்லிக் கடைன்னு இருந்தது. காலம் மாற, சரவணன் சிற்றுண்டிக் கடைன்னு மாறி, இப்போ ராயல் டிபன் சென்டர்.  சாப்பிடுறதுக்கு உயிர் வாழ்றேனா, உயிர் வாழ்றதுக்கு சாப்பிடுறேனான்னு தெரியல. வேகமா நடக்க முடியலனாலும் மெதுமெதுவா குச்சிய ஊனிக்கிட்டு இச்சி மரத்துக்கு வந்துருவேன். வீட்டுக்கு வெளியில எனக்குன்னு இருக்கிறது இந்த மரமும் சாப்பாட்டுக் கடையும். கடைக்கு லீவு விடுறதுன்னா, மொத நாளே சொல்லிடுவாங்க. அன்னைக்கு மட்டும் வேற கடை. இச்சி மரத்துலேருந்து பெரிய அளவுல நிழல் இல்லனாலும் ஓய்வு நேரங்கள்ல ஊர்கூடி நிக்க அதவிட்டா வேற வழியும் இல்ல. இதுக்கு முன்னால ஊர் மந்தைவெளியில ஒரு பெரிய ஆலமரம் இருந்துச்சி. பெருசுனா அப்படியொரு பெருசு. ஒரு சின்ன மழைக் காத்துக்கே விழுந்திருச்சி. அப்ப எனக்கு ஒரு எழுபது எழுபத்தஞ்சி வயசிருக்கும். அது இருந்தவரைக்கும் வெயில்தாழ சிறுசு பெருசுகெ எல்லாரும் அங்கதான் கெடப்பாங்க. ஒரு தெரு நீளத்துக்கு இருக்கும். ஊர் பஞ்சாயத்துலேருந்து சிறுசுகெ விளையாடுறதுவரைக்கும் அது நிழல்ல ஆளரவம் இருந்துக்கிட்டே இருக்கும். அது இல்லேன்னு ஆனபிறகு, வேற கதியில்லாம இந்த இச்சி மரத்துல கெடக்க வேண்டியதாப் போச்சி. ஆலமரத்தை நினைக்கும்போதெல்லாம் என் உசிர சாய்க்க அதுமாதிரி ஒரு சின்ன காத்து மழைதான் வரும்போலன்னு நினைச்சுக்குவேன்.   எனக்கு சாவு பயம் அதிகம். தூங்குற நேரம் தவிர, சாவு நினைப்புதான் எப்பவும். சாவு பயத்தையும் தாண்டி எனக்குன்னு இருக்கிற வேலை, சாப்பிடப் போக வேண்டியது, முடிச்சிட்டா திண்ணையில உக்காந்து வேடிக்கை பாக்க வேண்டியது, தூங்க வேண்டியது.  ஆரம்பத்துல என்கிட்ட, அந்தக் காலத்துப் பழைய கதைகளைக் கேட்டவங்களுக்கு, இப்ப நல்லது கெட்டது எல்லாமே போன்ல கிடைக்க, என் பக்கம் யாருமே வர்றதில்ல. எப்போ பேசுறதுக்குக்கூட எனக்கு யாரும் இல்லனு ஆச்சோ, அப்பவே எனக்கு சாவு பயம் போயி, இதுக்கு மேலயும் இருந்துதான் ஆகணுமான்னு மனசு நினைக்கத் தொடங்கிருச்சி.   வெறுமனே எல்லாத்தையும் வேடிக்கை பாத்துக்கிட்டே எப்படி இருக்கிறது? ஒரேமாதிரியா வாழ்க்கை போகுதுனாலும், பெருசா உடம்புக்கு முடியாமப் படுத்ததில்ல. உடம்பு சூடா இருக்குதுன்னு தெரிஞ்சாலே, ஊர் நர்சம்மாகிட்ட மாத்திரையும் மருந்தும் வாங்கிக்குவேன். அம்பது வருசமா அதே மாத்திரைதான். போட்டுட்டு படுத்தா நாள் முழுக்க படுத்தே கிடப்பேன். எங்க பெருசு நடமாட்டம் இல்லயேன்னு, ஒருநாளும் யாரும் கதவத் தட்டி என்னான்னு கேட்டதில்ல. செத்தா பொண நாத்தம் அடிக்குமில்ல, அப்பப் பாத்துக்கலாம்னு இருப்பாங்கபோல. இத்தன வயசுவரைக்கும் உசுரோட இருக்கிறது எம்மாம் பெரிய ஆச்சர்யம்ங்கிறது ஒரு பத்துப் பதினைஞ்சி வருசத்துக்கு முன்னமே முடிஞ்சிருச்சி. தவறாம பத்திரிக்கைக்காரங்க வர்றதும் டி.வி.காரங்க வர்றதுமா இருந்தது. மெடிக்கல் காலேஜ்காரங்ககூட என்னயக் கூட்டிட்டுப் போயி ஒருமாசம் வச்சி ஆராய்ச்சி பண்ணினாங்க. என்ன கண்டுபிடிச்சாங்கன்னு தெரியல, கொண்டுபோன கார்லயே திரும்பக் கொண்டாந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. வெளிநாடு, வெளிமாநிலக்காரங்களுக்கும் கண்காட்சிப் பொருளா இருந்த காலம் கடந்திருச்சி. இப்ப அவங்களுக்கும் நான் சலிச்சிப்போக, ஊரு உலகத்தைப் பொறுத்தவரைக்கும் இப்பெல்லாம் நானொரு வேண்டாத உசுரு. அவங்களுக்கெல்லாம் என்னோட சாவுக்குக் காத்திருக்கிற மாதிரி ஒரு பார்வை. சாதாரணமா கடந்து போயிடுறாங்க. அதனாலயே, நானே என்னை ஒரு அதிசயமான உசுரா பாக்கிற மனநிலை குறைஞ்சிக்கிட்டே போயி, இப்போ அப்படி எதுவும் இல்லேங்கிற நிலமைக்கு வந்திருச்சிங்கிறது என்னவோ உண்மைதான். ஆறு புள்ளைங்கள பெத்தேன்.  அதுங்களும் இல்ல, அதுங்க பெத்தது, அதுங்க பெத்ததுங்க பெத்ததுன்னு, ஒரு ஆறேழு தலைமுறைகூட இந்நேரம் கடந்திருக்கும். வாரிசுகள்ல யாருமே எழுபதைத் தாண்டல. எம்புள்ளைங்க காலத்துலயே, சின்ன மகன் தவிர மத்தவங்க, படிப்பு வேலைன்னு வெளியூர், வெளிமாநிலம்னு போயித் தங்கிட்டாங்க. நல்லது கெட்டதுன்னு வர்றப்போ பாக்கிறதுதான். பொறவு பேரன் பேத்திகெ நெனப்புல இருந்தது, அதுங்களுக்குப் பொறந்ததுகெ யாரையுமே நான் பார்த்ததில்ல.  சின்ன மகன் செத்த பிறகு, அவன் புள்ளைங்களும் வேலை அது இதுன்னு வெளியெடம் போயிட்டாங்க. அததுகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நாலு தலைமுறைக்கு முன்னால நம்ம கிளை எதுன்னு கண்டுபிடிக்கிற பொறுமை யாருக்கு இருக்கப்போகுது? தேடவும் அப்படியென்ன தேவை?  பாவம், இந்தக் கிராமத்துல வந்து என்ன செய்யப் போகுதுகெ? ஊரும் கிராமத்துக்கான அடையாளத்த தொலைச்சி, கிட்டத்தட்ட டவுன் மாதிரி ஆகிருச்சி. ஏரியில தண்ணி பார்த்து வருசமாச்சி. ஆறு இருக்கா இல்லையான்னே தெரியல. சாயங்காலமானா ஒரு மணி நேரத்துக்கு பறவைங்க அடையுற சத்தமே அப்படி சந்தோசமாயிருக்கும். இப்ப அப்படி எதுவுமே இல்ல. வெளியூருக்குப் பொழைக்கப் போன சனங்க ஒன்னு கூடுறதுக்குன்னு இருந்த திருவிழாவும் இப்ப இல்ல. ஊரு ரெண்டுபட்டதுல போட்ட பூட்டு, இன்னும் கோயில் நடைவாசல்ல தொங்குது. நானும் எந்தக் காரியத்துக்கும் தெருக்குள்ள போறதில்ல. வீடு, வீட்டவிட்டா இந்த மரம். சாவுக் காரியத்துக்குப் போனா, சிறுசுகெ, பொணத்தைப் பார்த்துட்டு, ‘அடுத்து நீதானே’ங்கிற மாதிரி என்னையப் பாக்குதுகெ. கல்யாணக் காரியங்களுக்குப் போனா, ’எங்கே நடுவாலே நான் செத்து, நல்ல காரியம் கெட்டிருமோ’ன்னு பயப்படுறாங்க. வருசா வருசம், உசுரோடதான் இருக்கேன்னு நிரூபிக்கப் பென்சன் ஆபீசுக்குப் போனா, ’அடுத்த வருசமும் வருவியா தாத்தா’ன்னு கேக்கும்போது கஷ்டமா இருந்தாலும், எதுவும் சொல்லாம திரும்பி வந்துருவேன். சாவுக்குப் பயந்த எனக்கு, நாளும் ஒருத்தராவது சாவை கண்ணு முன்னால கொண்டுவந்து நிறுத்துறாங்க. நான் வேண்டாம்னு ஒதுக்குன சாவு, இப்ப எங்கயோ தூரமா போயிருச்சி. இவங்க கேக்குறாங்கன்னு சுயமாவா சாகமுடியும்? எனக்கு வெவரம் தெரிஞ்சதலேருந்து சாவுன்னா பயம். சாகாமலே இருந்திடணும்னு நெனப்பேன். அப்படியே செத்துட்டாக்கூட, ஒரு நூறு எறநூறு அடி ஒசரத்துல ஆவியா மெதந்துக்கிட்டு, இங்க நடக்குற எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருக்கணும்னு ஒரு யோசனை இருக்கும். சொந்தமா செத்துப் போறவங்கள நினைச்சா ஆச்சர்யமா இருக்கும், ‘ஏன் இப்படி பொசுக்குன்னு போயிடுறாங்க? திரும்பி வரவே முடியாதுன்னா எதுக்கு தற்கொலை பண்ணிக்கணும்?’னு. ஒருகட்டத்துல சாவு பயம் அதிகமாகி, சைக்கிள்ல போறதயும் நிறுத்திட்டேன். சைக்கிள்ல போறதே அப்டீன்னா, கார், பஸ் இன்னும் பயம். நூறு வயசத் தாண்டும் முன்னாடியே “தாத்தா, உம்மோட உசுர, எமன் மொளகா வத்தல் பானையில வச்சிட்டானோ?”ன்னு ஊர்க்காரங்க பேசும்போது கோவம் வந்தாலும் ’போங்கடே’ன்னு வெரட்டி விட்டுருவேன். எதிர்பார்க்க ஆயிரம் விசயம் இருந்தாலும் அதெல்லாம் விட்டுட்டு, நான் எப்ப சாவேன்னு காத்துக் கெடக்குதுங்க சவங்கெ. நடமாட்டம் இருந்தா, நமக்குத் தேவையானத நாமே செஞ்சிக்கிட்டா, வயசானவங்கள யாரும் பாரமா நினக்கிறதில்லதானே? அதுலயும், பென்சன் பணம் வந்ததால யாரும் என்னய அப்படி நினைக்கல. மருமகெமாருங்க அப்படி இப்படின்னு பேசினாலும், மகன்களும் மகள்களும் என்னைய எப்பவும் விட்டுக் கொடுக்கல. அதுலயும், மூத்த மருமகனுக்கு நான்னா அம்புட்டு இஷ்டம். ‘மாமா மாமா’ன்னு கைக்குள்ளயே இருப்பாரு. ஊருலேருந்து வரும்போது எனக்குன்னு தீனி வாங்கியாருவாரு. புள்ளைங்க,

ஷ்யாமா போகா

ஷ்யாமா போகா

சிறுகதை காலையிலிருந்து எல்லாமே வித்தியாசமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் செர்வர் கனெக்ட் ஆகவில்லை. மற்றொன்று கனெக்ட் ஆன அடுத்த நொடி, ஆட்டோ எக்ஸிட் ஆகிக்கொண்டிருந்தது. அனைத்தும் விர்ச்சுவல் செர்வர்கள். என்னளவில் எல்லா முயற்சியும் செய்துபார்த்துவிட்டு, அடுத்து இதை க்ளவுட் டீம்தான் சரி பண்ண முடியும் என்கிற புரிதலுக்கு வந்தவுடன், சர்வீஸ் டெஸ்க் இணையதளத்தில்  ஒரு கம்ப்ளெயிண்ட்டை புக் செய்தேன். இனி டீம் அனுப்புகிற பதிலைப் பொறுத்துதான் அடுத்த வேலை. எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். மெயிலைத் திறந்து ஏதாவது வேலை மிச்சமிருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. டைரியைத் திறந்து இன்று செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை ஒரு பார்வை பார்த்தேன். அனைத்தும் செர்வரில் மேற்கொள்ள வேண்டிய வேலைகள். டீமின் பதில் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை..?  ஓய்வு.   சாட்டை சுழற்றின பம்பரம் போலச் சுழன்றுகொண்டே இருந்துவிட்டு, சுழற்சியைத் திடீரென்று நிறுத்துவது எப்படி? ராட்டினம் தன் அதிவேகச் சுழற்சியைத் திடீரென நிறுத்தினால், அதில் அமர்ந்திருப்பவர் என்ன ஆவார்? மண்டை பரபரத்தது. இன்றென்றில்லை. பரபரப்பான வேலைக்கு நடுவே வரும் இடைவெளியை, ஓய்வு நேரத்தை என்ன செய்வதென்று எப்போதுமே தெரிந்ததில்லை. வெகுகாலம் நின்றிருந்த பெரிய மரத்தை வெட்டிய பிறகான வெற்றிடம் போல உறுத்தும்; துன்புறுத்தும். முன்பில்லாத அளவு இடம் கிடைத்திருக்கிறது, வெளிச்சம் கிடைக்கிறது என்றெல்லாம் மகிழாது.   கொஞ்சநேரம் நெற்றியைத் தேய்த்தபடி அமர்ந்திருந்தேன். நான் வேலைப் பளுவிற்குப் பழகியவள். ஒருவிதத்தில் அதற்கு அடிமைப்பட்டிருந்தேன். இப்போது சும்மா இருப்பதின் அழுத்தம் தாளாது ஒரு பதற்றம் உருவானது. அதைச் சரி செய்ய, அலுவலக அறையைவிட்டு உடனே எழுந்து, வெளியே போகவேண்டும் போலத் தோன்றியது. ஆணாக இருந்திருந்தாலோ இன்றைய  தலைமுறையாக இருந்திருந்தாலோ தம் அடிக்கப் போயிருப்பேனோ என்னவோ..  எனக்கு ஏதாவது ஒரு மரத்திடம் போக வேண்டும். குனிந்து அதனடியில் இருந்து எதையாவது பொறுக்க வேண்டும். செருப்பைக் கழற்றிவிட்டு வெறும் காலோடு இலைகள், சருகுகள், கற்கள் குத்தும்படி மரத்தடித் தரையில் நிற்கவோ நடக்கவோ வேண்டும். அதன் மரப்பட்டைகளில் அல்லது புதர்ச்செடிகளில் விரல் முட்டிகளை வலிக்கும்படியாகத் தேய்க்க வேண்டும். When I’m among the Trees-இல் மேரி ஆலிவர் சொல்வதுபோல, ’என்னைப்போல நீயும் ஒளி ஊடுருவவும் பிரதிபலிக்கவும் உருவானவள்தான்’ என்று மரங்கள் என்னிடம் சொல்ல வேண்டும். சிஸ்டமை லாக் செய்துவிட்டு, லிப்ட்டைத் தவிர்த்துப் படிகளின் வழியாக நான்கு மாடிகள் வளைந்து வளைந்து இறங்கி, ஆபீஸ் கேம்பஸின் வெளிப்பிரகாரத்திற்கு வந்தபோது வெயிலில் கண் கூசியது. கடைசியாக உடலை வெயில் சுட்டது எப்போது? தூரத்தில் கதலி மரம். இன்னும் பூக்கவில்லை. அருகே ஏழிலைப்பாலைகள். இப்போதுதான் மொட்டுவிடத் தொடங்கியிருக்கின்றன. இன்னும் சில வாரங்களில் தில்லியின் அத்தனை ஏழிலைப்பாலை மரங்களும் பூத்து, மொத்த தில்லியும் நறுமணத்தால் நிறைந்திருக்கும். மரத்தடியெங்கும் பூக்கள் உதிர்ந்து தரை மூடிக் கிடக்கும். பூக்கள் உதிர்ந்து கிடக்கிற காட்சியை நினைத்தபோது, நேற்று வீடு முழுக்க அதேபோல, ஆனால் பூக்களுக்குப் பதிலாக பூச்சிகள் நிறைந்து கிடந்த  காட்சி தோன்றியது. நேற்றிரவு நான் வழக்கம்போல இரவு உணவை முடித்துவிட்டு ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ பறக்க ஆரம்பித்தது. முதலில் ஒன்று இரண்டு என்று ஆரம்பித்தது; பிறகு மெதுமெதுவாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. தூசியா, சாம்பலா, ஈக்களா? ஏதோவொரு பூச்சியின் படையெடுப்பு என்று புரிந்துகொள்வதற்கு எனக்குச் சில நிமிடங்கள் பிடித்தது. அவை வெட்டுக்கிளிகளைப்போல இருந்தன. கடுகைவிடச் சற்றே பெரிய வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகள். அவை மட்டும் சற்றுப் பெரியதாக இருந்திருந்தால் பைபிளில் வருகிற வெட்டுக்கிளிகளின் படையெடுப்புபோல இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அதிகாலை வேலைக்குப் போய், இரவு வீடு திரும்புவள் என்பதால் ஜன்னலைத் திறப்பதே இல்லை. வாசற்கதவையும் வீடு திரும்பியதும் அடைத்துவிடுபவள். எதுவும் திறந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் நான் எழுந்துபோய் ஜன்னல்களையும் கதவையும் சரி பார்த்தேன். அனைத்தும் பூட்டியே இருந்தன. ‘விளக்கை அணைத்தால் பூச்சிகள் போய்விடும்’ என்று நினைத்து, விளக்கை அணைத்தேன். சிறிது நேரத்தில் அத்தனையும் தரையில் விழுந்து இறந்தன. படுக்கையை உதறி வீட்டைப் பெருக்கி அள்ளிக் குப்பையில் கொட்டிய பிறகும் படுக்கைக்குத் திரும்பியபோது நிறைய பூச்சிகள் காணக் கிடைத்தன. நான் களைப்பில் அப்படியே உறங்கிப்போயிருந்தேன். காலை எழுந்தபோது வீடெங்கும் பூச்சிகள் இறந்து கிடந்தன, கறுப்பும் வெள்ளையுமாக, எள்ளை வாரி இறைத்தாற்போல. அப்படியென்றால் விநோத நிகழ்வு இன்று காலை அல்ல,  நேற்றிரவே ஆரம்பித்திருக்கிறது. ஏழிலைப்பாலை மரத்தடியில் நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. இந்த மரத்தடிப் பகுதிக்கு அலுவலர்கள் யாரும் வருவதில்லை. சற்றுத் தொலைவில்  கொத்துக்கொத்தாக வெள்ளைப் பூக்களோடு அந்த மரம்.  அதன் ஒரு பெரிய கிளை ஒடிந்து, அதே நேரம் முற்றிலும் உடையாமல்  தொங்கிக்கொண்டிருந்தது. உடைத்தது, இங்கே குடும்பம் குடும்பமாக, நாள் முழுக்க  சேட்டை பண்ணிக்கொண்டுத் திரியும் குரங்குகளாகக்கூட இருக்கலாம். மரத்தில் பாதி இதய வடிவமும் ஒடிந்து கீழே தொங்கிக்கொண்டிருந்த கிளையில் பாதி இதய வடிவமுமாக, அக்கிளை ஒடிந்திருந்து. மரத்தை நோக்கி நடக்க நடக்க, அம்மரத்தில் ஒரு உடைந்த இதயம் சேர்வதும் பிரிவதுமாகக் காட்சிப்பிழையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. முடிந்தவரை சேர முயற்சித்து எல்லா முயற்சிகளும் தோல்வியுற்ற பிறகே உடைவதென்பது இதயத்தின் விதி போல; அது மரத்தாலானதென்றாலும்.   மரத்தருகே வந்திருந்தபோது அதனடியில் நிறைய மலர்கள் உதிர்ந்தன. எனக்குத் தாகூரின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. பெண் குழந்தை ஒன்று அதன் அம்மாவிடம் பேசுவதுபோல அமைந்தது. சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, உதிர்ந்து கிடந்த மலர்களை எல்லாம் பொறுக்கியெடுத்து உள்ளங்கைகளில் வைத்து, ஆழ முகர்ந்து பார்த்தேன். அதன் வாசம் சற்றே தீவிரமானது. ஒரே நேரத்தில் ஈர்க்கவும் விலக்கவும் செய்ய வைக்கும் தனித்துவமானது. சற்றுத் தொலைவில், கீழே புல் தரையில் ஒரு சிறிய வெட்டுக்கிளி. எனக்கு மீண்டும் வெட்டுக்கிளிகளைப் போன்ற அந்தப் பொடிப் பூச்சிகள் நினைவுக்கு வந்தன. அவற்றைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும்போலத் தோன்றியது. ஆபீஸ் வருகிற வழியில், சிறிய பூச்சிகள், பச்சைப் பூச்சிகள் என்று பல்வேறு விதமான வார்த்தைகளில் அவற்றை விவரித்து கூகுளில் தேடியபிறகு உத்தேசமாகக் கிடைத்திருந்த அதன் பெயரை, ‘கோகுல் பையா ஜிந்தாபாத்’ என்று என் வழக்கமான கோஷத்தை மனசுக்குள் ஒரு சிரிப்புடன் சொல்லிக்கொண்டு, குனிந்து போனில் கூகுளைத் திறந்து அந்த வார்த்தையை டைப் செய்யப் போனபோதுதான், சத்தமாக ஒரு ஆண் குரல் கேட்டது. “ஷ்யாமா போகா” நான் அதிர்ந்தேன். திடுக்கிட்டதில் என் கையிலிருந்து நழுவிக் கீழே விழப்போன போனை இறுகப் பற்றிக்கொண்டு திரும்பிப் பார்த்தேன். வழக்கமாக ஆண்கள் அணிகிற சட்டையின் காலர் போலில்லாமல், குர்தா ஜிப்பாவில் இருப்பது போன்ற வட்டமான காலர் வைத்த, சட்டையென்றோ குர்தா என்றோ சொல்ல முடியாத ஒரு கதர்ச் சட்டையில், தானும் அந்த வெட்டுக்கிளியைப் பார்த்தபடி ஒருவர். இல்லை; இவர் வேறு ஏதோ கூறியிருக்க வேண்டும். “ஷ்யாமா போகா”  மீண்டும் அருகில் இருந்தவர். விசித்திர நாளின் தொடர்ச்சியா இது? இது, நான் இப்போது தேட இருந்த வார்த்தை. இன்று காலைதான் முதன்முதலில் தெரிந்துகொண்ட வார்த்தை; நீங்கள் மனத்தில் நினைத்துக்கொண்டிருந்த, நீங்கள் ம‌ட்டுமே அறிந்த அல்லது நீங்கள் அப்போதுதான் எதிர்கொள்ள நேர்ந்த அபூர்வமான ஒரு  விஷயத்தை, நீங்கள் முன் பின் அறியாத ஒருவர் உங்களிடம் வந்து உரக்கச் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? Coincidence, Synchronicity, Carl Jung, Serendipity, Kate Beckinsale, John Cusack. என் மூளை malfunctioning பண்ணுகிற கம்ப்யூட்டர் போல, நிறைய வார்த்தைகளைச் சம்பந்தமில்லாமல் துப்பியது. இன்னும் சற்று நெருங்கி நின்றிருந்தாலும் இருவரின் உடைகளும் தொட்டுக்கொள்ளும்படியான அருகில் நின்றுகொண்டிருந்தவரிடம், ‘ஏன் ஷ்யாமா போகா என்று  சொன்னீர்கள்’ என்று கேட்கலாமா? நான் கேட்க நினைத்ததைப் புரிந்துகொண்டாற்போல, அவரே சொன்னார். “இந்த வெட்டுக்கிளியைப் போன்ற மிகச் சிறிய ஷ்யாமா போகா  இந்நேரம் வந்திருக்க வேண்டும்” ‘வந்துவிட்டதே’ சொல்ல நினைத்தேன்; சொல்லவில்லை. “உங்களுக்கு அந்தப் பூ பிடிக்குமா?” “சம்பா?” என் மனத்துக்குள் மீண்டும் தாகூரின் வரிகள். “நீ என்னை அறிந்துகொள்வாயா?” மீண்டும் அவரது உரத்த, ஆனால் சோர்வுற்ற குரல். ‘இவர் மீண்டும் என் மனத்தைப் பிரதிபலிக்கிறார். திஸ் இஸ் டூ மச்’ மனத்துக்குள் முணுமுணுத்தேன். “யெஸ்.. நீ என்னை அறிந்துகொள்வாயா?” அவரைப் பார்த்து முகம் மலரச் சிரித்தேன். அவர் சிரிக்கவில்லை. ஒரு சின்ன தடுமாற்றத்தோடு பார்வையை விலக்கி, மீண்டும் அந்த வெட்டுக்கிளியைப் பார்த்தார். “இது ஷ்யாமா போகாக்கள் வருகிற பருவம். அவை நவராத்திரியின் வருகையை அறிவிப்பவை” நான், திறந்திருந்த கூகுளில் நவராத்திரி 2023 என்று டைப் செய்தேன். நாளை நவராத்திரி. ஹா! அடுத்த வியப்பு. என் மனத்தின் இறுக்கங்கள் எல்லாம்  மெல்ல மெல்லத் தளர்ந்துகொண்டிருப்பதும் நான்  வேறொன்றாக மாறிக்கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். இன்னும் சிறிது நேரம் இவருடன் நின்றாலும் நான் பேச ஆரம்பித்துவிடுவேன். என் இயல்பிற்கு அது வினோதமாகப் பட்டது. நான் அவரிடமிருந்து சற்று விலகி மரத்தின் அந்தப்பக்கமாக நகர்ந்தேன் “போகா என்றால் பூச்சி. ஷ்யாமா என்றால் கறுப்பு. கறுப்பு, காளியின் வண்ணம். காளி மாதாவின் வருகையை அறிவிக்க வருபவை என்று நம் ஊரில் பெரியவர்கள் சொல்வார்களே.. உனக்குத் தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா?” ‘உனக்கு?! நம் ஊரில்?!’ எனக்குப் புரிந்துவிட்டது. அவர் என் அருகில் வந்து நின்றது, பழகிய நபர் போலப் பேசுவது, தாகூர், காளி என்றெல்லாம் சொல்வது , எல்லாவற்றுக்கும் இப்போது  விடை கிடைத்தாற்போல இருந்தது. இவர் என்னை வேறு யாரோ என்று நினைத்திருக்கிறார். இங்கே இப்படி அடிக்கடி நடக்கும். என்னை பெங்காலி என்றோ  மலையாளி என்றோ நினைத்துக்கொண்டு நிறைய பேர் பழக நெருங்குவது. “நீங்கள் என்னை வேறு யாரோவென நினைத்துக்கொண்டீர்கள் போல. நான் தமிழ். பெங்காலி இல்லை” “தமிழென்றால், பிறகு நீங்கள் அந்த மலரை சம்பா என்று ஏன் அழைத்தீர்கள்?” உண்மைதான். தமிழிலிலோ ஆங்கிலத்திலோ இல்லாமல், இதை சம்பா என்று ஏன் சொன்னேன்? எனக்கே தெரியவில்லை. ‘இன்று ஒரு வினோதமாக நாள். அதனால்தான்’ மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார் போலப் பட்டது. திரும்பி அவரை ஏறிட்டபோது, அவர் அவசர அவசரமாகப் பார்வையை அந்த முறிந்த மரக்கிளையின்புறம் திருப்பினார். இப்போதுதான் கவனித்தேன்.  கலைந்த

கத்தாழைப் பள்ளிக்கூடம்

கத்தாழைப் பள்ளிக்கூடம்

சிறுகதை இரண்டு மைலுக்கு முன்னும் பின்னும் கறுப்பு மை தடவிய கரிசல் மண் எங்கள் பூமி. அதைத் தாண்டிய நிலம் எல்லாம் செவக்காடு என்ற செம்மண்தான். காலால் உரசி அந்தச் செம்மண்ணை மழைக்காலத்தில் ரசிக்கும் விருப்பம் கரிசலில் வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும். என்ன நட்டுவைத்தாலும் முளைக்கும் மண் அது. ஆனால் கரிசல் மண் அப்படி இல்லை. ஒவ்வொரு துகளும் சூரியனிலிருந்து உதிர்ந்தது போன்ற வெப்பத்தைத் தனக்குள் வைத்து, எப்போதும் எங்களுக்குக் கடத்திக்கொண்டிருக்கும். ஆவணி மழையில்தான் கரிசலை நாங்கள் மிகுதியாகக் கொண்டாடுவோம். சரசரவென்று பெய்யும் மழையில் முழுவதும் சகதியாக, கருமையில் பிறந்த குழந்தையின் கன்னம் போன்று எங்கள் உடலெல்லாம் அந்த மண் ஊரும். சிறுவனாக அந்த மண்ணில் உழன்ற கைகளை எவ்வளவு நாள் கழித்துப் பார்த்தாலும் பிசுபிசுப்பு மாறாத ஞாபகம் எல்லாருக்கும் இருக்கும். சரியாக் ஒன்றிரண்டு நாட்களை மட்டும் கழித்துவிட்டப் பார்த்தால், எனக்கும் ஊருக்கும் இடைவெளி இருபத்தியோரு வருடங்கள். எல்லாத் தேடலும் முடிந்தது என்று தொடங்கிய இடத்திற்கே வந்திருந்தேன். நிறைய கணங்களுக்கு மத்தியில் வாழ்ந்த ஊர், ஒரு ஆசுவாசமான பிரியத்தைத் தந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நிஜம்தான்; அன்றைய நாளும் எனக்கு அப்படித்தான் இருந்தது. விட்டுச் சென்ற இடமல்ல இது. நானாக விலகிச் சென்ற ஒவ்வொன்றையும் தேடினேன். ஆனால் கிடைக்காத ஒன்றைப் பற்றிய கவலை இன்னும் இருக்கிறது. கத்தாழை முளைக்கும். அதுவும், செழித்துப் பழம் விடும் கத்தாழையை நீங்கள் கடைசியாக எங்காவது பார்த்ததுண்டா? நான் பார்த்திருக்கிறேன், கடைசியாக எங்கள் ஊரில். கத்தாழை என்றதும் சப்பாத்திக் கத்தாழை என்ற வட்ட வடிவக் கத்தாழை அல்ல இது. தென்னங்கீற்றின் சாயலில் வளரும் குருத்துக் கத்தாழை.   எவ்வளவோ ஓடைகள் இருந்தாலும் அணைக்கட்டு மேட்டில் மட்டும் மேற்குக் கால்வாய் ஓரத்தில் வேலிக்கம்பி வலைபோல் ஒரே உயரத்தில் நெடுந்தூரத்திற்குக் கத்தாழைதான். பச்சைப் பசேரென்று கரிசல் மண்ணில் இரண்டு செடிகளைப் பார்க்கலாம், ஒன்று, கருவேலம் இன்னொன்று கத்தாழை.   காலையில் எங்களுக்கு அந்த ஓடைதான் எல்லாமும். எல்லாமும் என்பதன் அர்த்தம், அரிய அந்தக் கத்தாழையின் இரண்டு பக்க முட்களுக்கு நடுவில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் பார்த்தால் அறியலாம். கூரிய கருவேலம் முள்ளை வைத்துக் கத்தாழை நடுவில் எழுதலாம்; படம் வரையலாம்; வெட்டிப் பாதியை எடுத்தும் விடலாம். மருந்துக்காக அப்படி வெட்டிய கத்தாழையை நாங்களும் பார்திருக்கிறேம். சுண்ணாம்பு அடிக்க இப்போது வந்திருக்கும் பிரஸ்க்கு முன்பாகக் கத்தாழை நார்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் எங்களுக்கு எழுதத்தான் பிடிக்கும். அப்போதைய போதையான வார்த்தைகளை எங்களுக்கு அந்தக் கத்தாழைதான் கற்றுத் தந்தது. இரண்டாவது வார்த்தைப் பள்ளிக்கூடம் அந்தக் கத்தாழைக் காடு. அடுத்த தலைமுறை கழிப்பறையில் எழுதிய சொற்களை நாங்கள் கத்தாழையில் அதற்கு முன்பாகவே எழுதியிருந்தோம். முதலில் எழுதி, பின்பு அந்தரங்கப் படம் வரைதலைப் பார்த்துக் குதூகளித்த கூட்டம் நாங்கள். காலையில் ஒன்பது மணிக்குப் பள்ளி நேரம் என்றால், சரியாக ஆறு மணியில் இருந்து எட்டரை வரை அந்த ஓடைதான். அப்போதுதான் தொடர்கதை ஒன்று எங்களுக்கு அதில் கிடைத்தது. பரிச்சயமான பெயர் உள்ள பெண்ணின் பெயரோடு, இன்னொரு பெயரும் அதில் இருந்ததை முதலில் முருகேசன்தான் கண்டுபிடித்தான். முருகேசனுக்குத் தெரியாமல் கத்தாழை ஓடையில் ஒன்றும் நடக்காது. ஓடைக்கும் அவன் வீட்டுக்கும் இருக்கும் தூரம் எங்களைவிடக் குறைவு. ஆனால் அதிகாலை வேளையில் எங்களால் மட்டுமல்ல; முருகேசனால்கூடக் கத்தாழைப் பக்கம் போக முடியாது. பாம்பின் தடமும் அதுதான். எந்தப் படம் யார் வரைந்திருக்கக் கூடும். அந்த இரண்டெழுத்து யாருடைய பெயர். இந்தக் குறியீடு, உறுப்புகளில் எதைக் குறிக்கிறது என்பது வரை எங்களுக்குக் கத்தாழை ஆசான் முருகேசன்தான். எவ்வளவோ வற்புறுத்தியும்கூட, அந்த இரண்டு பெயர்களுக்கான மனிதர்களை முருகேசன் எங்களுக்குச் சொல்லவே இல்லை. நாங்களாக யூகித்துச் சொன்ன எல்லா மனிதர்களையும் அவன் நிராகரித்தான். நிச்சயமாக அந்தப் பெயர்கள் எங்களுக்கு முன்பான தலைமுறையுடையது. அந்தத் தலைமுறைக்கும் எங்களுக்கும் இடைப்பட்ட பையன் முருகேசன். பெயருக்குக்கூட அண்ணன் என்று அழைக்கமாட்டோம். ஆனால் எல்லா சேட்டை, சச்சரவுக்கு அவன்தான் மூலதாரி. மணி ஐஸ் வாங்கித் தின்னும்போது முருகேசனுக்கு ஒன்றும் வாங்கிப் பள்ளி மைதானைத்தில் அவனுக்குக் கொடுத்தேன். அவனுக்குத் தெரியும், ஏதோ ஒன்றை வாங்குவதற்கான கொடுக்கல் இது என்று. “என்னடா… புதுசா..” என்றான். என்னால் அந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை. “சும்மாண்ணா…” என்று சமாளித்தேன். அவனாகவே சொல்லத் தொடங்கினான். “அது யாருன்னு தெரியலடா. ஆனா காலைல எழுதுற ஆளு, சாயங்காலம் அதைக் கீறி வச்சிடறாரு. இதுக்காகவே காலைல மொத ஆளா நான் பாக்கப் போயிர்றேன்..” என்ற மழுப்பிய சொல்லை முருகேசன் உதிர்த்தான். ஆனால் அது நிஜமல்ல. முருகேசன் பார்த்த எல்லாக் கத்தாழைப் பெயர்களும் அங்கேயே இருந்தன. எதுவும் அழிக்கப்படவில்லை. எங்களுக்குள்ளகப் பேசி முடிவு செய்த பெண்ணொருத்தியின் திருமணம் மிக வேகமாக நடந்தது. அந்தத் திருமண பற்றிய தகவலில்கூட, நாங்கள் கத்தாழைப் பக்கம்தான் தேடினேன். ஆனால் முருகேசன் அங்கு இரண்டு மூன்று நாட்களாக வரவில்லை. பெருசுகள் பெரும்பாலும் கத்தாழை ஓடைக்குள் வரமாட்டார்கள். அது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம். ஒரு மைல் தொலைவில் காலைக் கடனை முடித்துவிட்டு, ஏதாவது ஒரு பம்பு செட் பக்கம் ஒதுங்கி, வேப்பங்குச்சியைப் பல் இடுக்கில் வைத்தவாறு வந்துவிடுவார்கள். நாங்கள் முருகேசன்தான் இதற்குக் காரணம் என்று நினைத்திருந்தோம். நிச்சயமாக அதற்கு நேர் எதிரான மனிதர், நிறைய குடியில் விழுந்து மீள முடியாத மனிதராக இருந்தார். ‘சரி சமமான பொருத்தம்’ என்ற எங்கள் மனது, அப்போது கரிசலைப்போல ஊமையானதுதான். நிலத்தோடு மல்லுக்கட்டும் மனிதர்களுக்கான வீம்பு, அந்த இரண்டு பேரைப் பிரித்தது. சந்தேகங்களைப் பொருத்திப் பார்த்துக்கொண்டோம். பொது நிகழ்ச்சியில் விழுந்த புன்னகையைப் பார்த்தாகவும் நானே கோடு போட்ட ஒரு பக்கத் தாளைத் தந்ததாகவும் கத்தாழைக் கூட்டணியில் விஷயம் வந்தது. கடைசியாக, கத்தாழையைத் தேடிக் கிடைக்காதபோது, அவரைப் பற்றிய சேகரிப்பு எனக்கு வேண்டும் எனத் தோன்றியது. ஊரைவிட்டு சற்றுத் தள்ளி, ஆனால் செம்மண் தளத்தில் இரண்டு குழந்தைகளோடு இருக்கிறார் எனத் தகவல் வந்தது. அத்தோடு நானும் நின்றிருக்கலாம். கற்றாழையோடு அதே ஊரில் இரண்டாவது பெயர் இன்னும் இங்குதான் இருக்கிறது. நானாக ஊகித்த பெண், என் முன்னால் இன்னும் நடமாடுகிறாள். துயரங்களை மென்று விழுங்கி, அவள் போக்கில் போகும் பெண்ணொருத்தியை அந்தக் கத்தாழை விழுங்கிவிட்டதாகவே இன்று நினைக்கிறேன். எழுத்து என்னவாக வேண்டும் என்பதற்கான சாட்சி அவள். எந்தத் தவறையும் குற்றம் காணாமல் எல்லாவற்றையும் மறைத்து வாழ முடிந்த ஒற்றை மனுசியாக இன்னும் இருக்கிறாள். நல்லவேளையாக, இன்னோரு தெய்வமாக மாறாமல் உயிரோடு இருக்கிறாள் என்பதே என்னுடைய ஆசுவாசம். ஆனால், இப்போது எங்கள் ஊரில் கத்தாழை எங்குமில்லை. முருகேசனும் இப்போது அவ்வளவாக யாருடனும் பேசுவதில்லை.

அகாலம்

அகாலம்

சிறுகதை அந்தக் கால்கள் அப்படித் தொங்கிக் கிடக்கும் என்று யாரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். அவளுக்கு சாக்காலம் என்பது இப்படித்தான் வர வேண்டுமா? அத்தெருவே அதிர்ச்சியில் குழம்பியிருந்தது. தினமும் அரை லிட்டர் பால் காய்ச்சிக் குடிப்பவளுக்கு என்ன பிரச்சனை இருந்துவிடப் போகிறது? போதாக் குறைக்கு மூத்த மகன் மாதாமாதம் வந்து, அவளுக்குத் தேவையானதை வாங்கிக்கொடுத்துவிட்டு, கையில் இரண்டாயிரம் பணத்தையும் கொடுத்துவிட்டுச் செல்வார். காலையில் எழுந்து கருக்கல் கரையும்வரை, சாவடிச் சண்டையில் முதல் ஆளாய் நிற்பவள். அய்ந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தவள். பெரிய வீட்டில் நடுத்தர வசதியோடு வாழ்ந்தவளுக்கு இந்த நிலை; வேதனைதான். ‘ஒருவேளை அடித்துக் கொன்றிருப்பார்களோ’ என்றுகூட வள்ளிக்குத் தோன்றியது. அவளுக்கு வந்த சந்தேகம் அங்கு வசிப்பவர்களுக்கும் எட்டிப் பார்த்தது. அந்தச் சந்தேகத்தோடே வானத்தைப் பார்த்தாள். வானம் எப்போதும் மெய்மையைப் பிறப்பிக்காது; சிலநேரம் ஏமாற்றிவிடும். அதற்காக வருத்தப்படவும் செய்வாள். வாய்க்காலில் தண்ணீர் வராதபோது, வானம் சிரிக்கும். இது பழக்கமானதுதான் என்றாலும் அதை மன அலுப்பாக உதறிவிடுவாள். இன்று உதறுவதற்கு வாய்ப்பில்லை. அந்தளவிற்கு வானம் மப்பும் மந்தாரமுமாக மாறிவிட்டதை எண்ணிக் கவலையொன்றும் கொள்ளவில்லை. மழை பெய்தால் திரும்பவும் பிறக்கி நடவேண்டும். இன்றும் அம்மாதிரியான பிறக்கி நடும் வேலைதான். ஒவ்வொருமுறையும் பிடுங்கி – புதைத்து, பிடுங்கி – புதைத்து, அதே செய்முறை தொடரும்போதெல்லாம், குறுக்கு வலி நொய்யப்புடைத்துவிடும். ஆகவே, தனியாக வரவேண்டாமென்று உடன் ஒருவளையும் அழைத்து வந்திருந்தாள். வடமேற்கு மூலையிலும் தெற்கிலும் உரசலின் இணைவால் இடிகளின் பெரும் உறுமல், அப்பொழுதை ரணகளமாக்கியது. வள்ளி நிமிர்ந்த மேனிக்கு வந்து, சுற்றுப்புற வயக்காட்டைக் கண்களால் சுழற்றினாள். எங்கும் பச்சைக் கொழுந்தாக, மிதமான காற்றில் ஆடிக்கொண்டிருந்தன இளவட்ட நாற்றுகள். சிலர் முன்னரே நட்டுவிட்டிருந்தனர். இன்னும் சில வயல்கள் கீறிப்போட்டதோடு சரி; நடப்படாமல் அப்படியே கிடந்தன. இதமான குளிர் அவர்களை வாட்டத்தொடங்கியவுடன், கூட வந்தவளும் நிமிரத் தொடங்கினாள். “இந்த பெயவுள்ள மழைக்கு வெவஸ்தையே கெடையாதுபோல. இப்போ அடிச்சா நாளைக்கும்லா வரணும்?” “ஏ… ச்சி… என்ன பேச்சி பேசுற? வந்தா வந்துட்டு போவுது. நான்தான சம்பளந் தாரன். பெறகென்ன?” “ஆமா நீ சொல்லுவ. ஒம்மவன்  வேலபாக்கா. நாங்கென்ன அப்படியா?” “அட சும்மா கெட. யாருமே வயக்காட்டுல இல்ல. ஒரு ஈ காக்காகூட இல்ல” “எனக்கென்ன தெரியும்? நானும் ஒங்கூடத்தான புடுங்கி நடுற..” என்று சொல்லித் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். பிடுங்கி நடுதல் வயலின் பாதியைத் தாண்டவில்லை. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் தூறல் பட்டுக் குமிழிகளாக உருவாகித் தெறித்தது. லேசான துளிகள் கனமானதாக மாறியவுடன் வள்ளி வரப்பிற்குச் சென்று கொங்காணித் தாளினைப் போட்டுக்கொண்டாள். காலையில் அவசரப்படுத்தியதால், அவள் கொண்டு வரவில்லை. சில நிமிடம் நின்றவளுக்கு உடம்பு உதற, பேசாமல் வரப்பிற்கே வந்துவிட்டாள். நல்லவேளையாக, வயலின் வடகிழக்கு மூலையொன்றில் சிறிய அளவிலான குடிசையொன்று போடப்பட்டிருந்தது. அதற்குள் அவள் குத்தக்கால் வைத்து வள்ளியை வேடிக்கை பார்த்திருந்தாள். “இங்கிட்டு வாக்கா. மழெ நின்னதுக்கு அப்புறம் நடலாம். ஒலுங்கா இங்கிட்டு வா. நாளைக்கு வேற பாஞ்சாயித்து ஆபிசுக்குப் போகணும்முன்னு சொன்ன… பாத்துக்க” இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன், பிஞ்சு நாற்றுகளில் சிதைவுகள் ஏற்படாதவாறு வடக்கு ஓரத்திற்கு வந்து, வரப்பு வழியாக உள்ளே புகுந்திருந்தாள். கொங்காணித்தாள் போட்டதால் நனைதலில் தப்பித்திருந்தாலும், பஞ்சாயித்தைப் பற்றி அவள் சொன்னவுடன், கவுன்சிலர் மல்லிகாதான் வள்ளியின் நினைவுக்கு வந்து நின்றாள். “என்னக்கா..? வந்து குத்தவச்சதும் என்ன யோசன?” “இல்ல… மல்லிகா அன்னைக்கு சொன்ன மாதிரியே நடந்துப்பாளா?” “திடீர்ன்னு என்ன பெருத்த சந்தேகம்?” “அவளப்பத்தி நேத்துதான் கேள்விப்பட்டன். அது உண்மையா இருந்துச்சுன்னா அவ்ளோதான். நமக்கு நாமத்தப் போட்ருவா?” “என்ன… நாமத்த போட்ருவாளா? அந்த எடத்துக்கு வர அஞ்சு லெட்சம் செலவு பண்ணிருக்கா. சும்மாவா? அதுக்கு மேலயும் பண்ணியிருக்கலாம், யாரு கண்டா?. நம்மூர்ல வீடு கட்டி இருந்தாலும் அவ என்ன நம்மாளா? எந்தூர்க்காரியோ?” என்று இழுத்திழுத்து, பேச்சை நிறுத்தாமல் அவளைப் பற்றிய விவரத்தைப் போட்டுடைத்துக்கொண்டே சென்றாள். ஆளும் கட்சியின் உறுதுணையோடு கவுன்சிலர் பதவிக்கு நின்றிருந்தாள். அவளின் கணவன் சரியான வெத்துவேட்டு; மற்றவர்களுக்கு அப்படித்தான் தோற்றமளித்தான். எதிர்த்து நின்று கேள்விக்கேட்கும் அளவிற்கு, பயந்தவன் என்று எண்ணாமல் அவளின் அழகிற்கு அடிமைப்பட்டு போன நிலை. தெரிந்த ஒரு நண்பரின் கோயில் கொடை விழாவிற்குச் சென்றிருந்தபோதுதான் மல்லிகாவைச் சந்தித்திருக்கிறான். காதலுக்குக் கண்ணுமில்லை, சாதியுமில்லை என்றகராதியில் தாலி கட்டிக்கொண்டு வந்தவனுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும். கடைசியில் பிறந்தவனுக்கு மட்டும்தான் திருமணமாகவில்லை. அதற்குள் இப்பதவியை வைத்து பேங்க் அக்கவுண்டைத் தேற்றிவிடும்படியான செயல்களில் மும்முரமாக இறங்கியிருக்கிறாள். புதிதாக டிராவல்ஸ் ஒன்றையும் தொடங்கி, மூன்று நவீனக் கார்கள் நேற்றுதான் இறக்குமதி செய்ததாக வள்ளியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். வெள்ளை நிறம், நல்ல உடல்வாகு கொண்டவளுக்கு எல்லாம் கிட்டும். கட்சி சார்ந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுவந்தால், அய்ந்தாறு நாட்கள் வீட்டின் கதவு மூடியேதான் கிடக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கேட்டால், காய்ச்சல் என்றுதான் பதில் வரும். அவள் அந்தமாதிரி இருந்துதான், புதிய புதிய கார்கள் வீட்டு வாசலின் முன் எட்டிப்பார்க்கின்றன என்றும் அரசல் புரசலாகச் செய்திகள் வரும். எல்லாம் ரகசியம் என்றே தொடர்ந்தாள். “ச்சி… என்ன இவ இவ்ளோ மோசமாலா இருக்கா? இவளுக்குப் போயா அன்னைக்கு ஓட்டுக்கேக்க கூடப் போனன்” அவள் சிரித்திருந்தாள். “என்னடி சிரிப்பு வேண்டிக் கெடக்கு?” “பின்னென்னக்கா… யோசிக்கணும். அவளாம் எத்தன வாழத்தோப்புக்கு போனவ? அப்டி இருந்தவதான் இன்னைக்கு ஆளப் புடிச்சிப் புடிச்சி, கட்சிக்கு வந்து கவுன்சிலரா ஆயிட்டா” வள்ளி எதுவும் பேசாமல் வயலையே பார்த்திருந்தாள். பெருமழை, அடர்ந்த பனிக் காட்சிகளை மூடி மறைப்பதுபோல், அம்மழை மறைக்கத் தொடங்கியிருந்தது. இம்மழைக்கெல்லாம் அஞ்சாதவளாக இன்னும் அதிகமாகவே அவளிடத்தில் சொல்லியிருந்தாள். அந்த வயதானவள் இறப்பின் பின்னணியிலும் இவள்தான் இருப்பதான ஒரு பெரும் சந்தேகத்தையும் வள்ளியின் முன் வைத்தாள். “என்ன சொல்ற?” “ஆமாக்கா. அந்தக் கெழவியோட பேரன் ஆவாதவன்கூட சேந்துட்டு சுத்திட்டுக் கெடக்கான். இருபது வயச தாண்டல. குடிச்சிட்டு கெடக்கான். நீயே பல தடவ பாத்துருப்ப. தெருவே பாத்துருக்கு… கெழவியோட சண்ட போட்டதெல்லாம்” என்று சொல்லியவுடன், முன் நடந்த சில நிகழ்வுகளை வள்ளி தன் மனத்தில் அலசத் தொடங்கியிருந்தாள். • சரியாகக் காலை பத்து மணி இருக்கும். பீடிக் கடையில் கூட்டம் அலைமோதியது. வந்திருந்த சேலைகளெல்லாம் பீடிக்கட்டுகளை சைஸ் வாரியாகப் பார்த்து எண்ணிக்கொண்டிருந்தார்கள். அதில் இருந்தவர்கள் பெரும்பாலும் மேற்கில் குடியிருக்கும் இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர்கள். வள்ளியின் வீடு கிழக்கு வாக்கில் ஒரு கிலோமீட்டர் தூரம். நடந்துதான் வருவாள். அவளும் ஓரமாக அங்கு நின்றிருந்த சீத்தா மர நிழலில் உட்கார்ந்து சைஸ் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் பேச்சுவாக்கில் ஒருவள் சொல்லியதைக் கேட்டிருந்தாள். “நம்ம பஞ்சாயத்து போர்ட்ல வேல பாத்த சிலபேர மாத்தப் போறதா கேள்விப்பட்டன். உண்மையா?” “ஆமா… ஆனா எனக்கு சரியாத் தெரியல. அப்படித்தான் கேள்விபட்டன். இதுக்கு முன்னாடி இருந்த ஆட்சிலயும் அவங்களுக்குத் தெரிஞ்ச ஆளாத்தான் வேலைல போட்டாங்க. நம்ம கருப்பசாமி மவனையும் போட்டாங்கலா.. வீடு வீடா மருந்தூத்துற வேல, மாசம் அஞ்சாயிரம் சம்பளத்துல” “இப்பம் அந்த வேலைக்குத்தான் ஒல வச்சிட்டாங்களே. அய்யெல்லாத்தையும் தூக்கிட்டு, அந்தக் கவுன்சிலருக்குத் தெரிஞ்ச ஆளத்தான் போடப்போறதா கேள்விப்பட்டன்” “அது உண்மதா. அந்த வேலைக்கே ரெண்டு லட்சம் ரூவாயா? அஞ்சு வருசத்துல நீயே கணக்குப் போட்டுப் பாத்துக்க. ஏமாத்து வேல. லைப்ரரி கட்டித் தாரன்னு சொன்னா. அது இதுன்னு இப்பம் பேச்ச மாத்துதா” இப்பேச்சின் தொடர்ச்சி நிலை எல்லையில்லாமல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனால் அவளுக்கான நேரம் வரவும் பீடிகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறினாள். உச்சி வெயில் பலமாக அடித்துக்கொண்டது. முந்தானையால் தலையில் முக்காடு போட்டாள். வீட்டில் பழையதுதான் கிடக்கும். மதியம் புதிதாக எதையும் வதக்க வேண்டாமென்று, போகிற வழியில் வடையினை வாங்கிக்கொண்டு போனால், சாப்பிடத் தோதுவாக இருக்கும். அதன்படியே, சிறிது தொலைவில் இந்தியன் பேங்க் எதிர்ப்புறத்தில் முருகையன் டீக்கடை இருந்தது. கடை எப்போதும் திறந்தேதான். முன் கடை என்றால் பின் வீடு. அதனருகில் விறகுக்கடை ஒன்றும் இருந்தது. அதற்குள் அய்ந்தாறு பேர் எதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். சத்தம் பலமாகக் கேட்டது. ‘ஒருவேளை சண்டை போடுகிறார்களோ’ என்றுகூட டீக்கடையில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்தது. முருகையன் எதைப்பற்றியும் கண்டுகொள்ளவில்லை. பிரச்சனைகளுக்குள் போக வேண்டாமென்று, வந்தவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தார். “அண்ணா… நாலு உளுந்தவட” “அதில்லமா… பருப்பு வட தரட்டுமா?” “சரி கொடுங்க” என்று பேப்பரில் பொதிந்து கொடுத்ததைக் கூடைக்குள் பத்திரப்படுத்தினாள். இந்தக் கொடுக்கல் வாங்கல் உடனே நடந்திருக்கவில்லை. சில நிமிடங்கள் பிடித்தன. அப்பிடித்தலுக்குக் காரணம் கூச்சல்தான். அவளின் மகன் இரண்டு மூன்று பேரிடம் வாக்குவாதம் செய்திருந்தான். “எங்கள வெளியே தள்ளிட்டு, புதுசா ஒங்கம்மா ஆள போடப் போறாளாம். இதுலாம் தேவயில்லாத வேல. ஏறுக்குமாறா போனா நடக்குறதே வேற” என்று அவர்களின் மிரட்டும் உடல்மொழி, அருகில் நின்றிருந்த குமாருக்கும் பீதியைக் கிளப்பியது. மிரட்டிவிட்டு தகரக் கதவை ‘டபார்…’ என்று தள்ளிவிட்டுச் சென்றனர். நின்றிருந்த இருவரும் மாறி மாறி முகத்தைப் பார்த்துக்கொண்டனர். பேசாமல் அம்மாவிற்கு போன் பண்ணிச் சொல்லிவிடலாம் என்று, நடந்ததைச் சொன்ன பிறகு பதட்டம் கலைந்து பெருமூச்சு விட்டான். “குமாரு… எங்கம்மாட்ட சொல்லிட்டென். நான் பாத்துக்குறன்னு சொல்லிட்டாங்க. ஒன்னப்பத்தியும் கேட்டாங்க. எப்பம் ரூவா கொண்டுவாரன்னு கேட்டாங்க” அவன் முழித்தான். ‘பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம்?’ என்கிற கேள்வி அவனை வாட்டி வதைத்தது. பெரியப்பாக்களிடம் கேட்டாலும் கிடைக்கப் போவதில்லை. பள்ளிக்குப் போகாமல் ஊர் சுத்திய நம் நடத்தை அப்படி. இப்போது ஒரே பதில் ஆச்சிதான். அவளிடம் கேட்டால் கிடைக்குமா? இதுவும் கேள்விதான். இதே கேள்வியோடு மூன்று, நான்கு நாட்கள் கழிந்தன. கடந்திருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினைதான் தலையில் விடிந்து மறைந்தது. பெருத்த எரிச்சல் – மனச் சலனம் – ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு சண்டை சச்சரவுகள். ஒரு மாதத்திற்கு முன்தான் எல்லோருக்கும் சரிசமமாகச் சொத்துபத்துகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆனால், அருகிலுள்ளர்கள் கரிந்து பேசினார்கள். ‘எதுக்கு இப்பமே பிரிக்கியா? கெழவிக்கு எழுவதத் தாண்டுது. அவ மண்டைய போட்டதுக்கப்புறம் பிரிச்சா என்ன? அப்படி என்ன அவசரம் வேண்டிக் கெடக்கு?’ இந்த வார்த்தைகளெல்லாம் அவர்களின் காதிற்கு எட்டவில்லை.

வெளியேறு

வெளியேறு

சிறுகதை தயங்கி தயங்கித் தன்னுடைய இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்கக் காத்திருக்கும்போதுதான் ஜான்சியைப் பார்த்தேன். பத்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊருக்குத் திருமணமாகி வந்தவள். வேறு எங்கும் அவள் நின்று பார்த்ததில்லை. ஓரிரு முறை வாகனப் பயணத்தில் எதிரில் பார்த்திருக்கிறேன். ஒல்லியான தேகத்தோடு பயத்தைச் சதையாகக் கொண்டு நடமாடும் மாந்தர் ஒன்றில், நிழல் அவள். மிக மெத்த ஒப்பனை ஒன்றும் இல்லாமல் ஊடுருவும் காலை வெயிலைப்போல, எப்போதும் மெல்லியதாகவே இருப்பாள். ஊரே கூடியிருக்கும் அம்மன் கோவில் கும்மி ஆட்டத்தில் பார்வையாளர் பகுதியில்கூட அவளைப் பார்க்கமுடியாது. இயேசுவின் பிள்ளைகளும் கும்மி ஆடும் பழக்கம் எங்கள் ஊரில் உண்டு. நானூறு குடும்பம் உள்ள ஊரில், அவளைப் போலவே பலர் இருக்கக்கூடும். எனக்கு அவளைத்தானே தெரியும்..?! மவுனமாக இருவர்கள் எப்போதும் மவுனமானவர்கள் கிடையாதுதான். தன் வயதை ஒத்த பெண்கள் இருக்கும் இடத்தில் சட்டென்று பூத்துவிடுவார்கள். விரல்களைக் கோர்த்து, தோள்கள் உரசி, கன்னம் தொட்டுப் பேசுபவர்களை நீங்களும் நானும் பெண்களாகத்தான் பார்க்கமுடியும். பிடுங்கி நட்டுவைத்த மரம் போலவோ அல்லது பருவம் தவறிய பயிர் போலவோ, திருமணம் முடிந்த சில பெண்கள் மெதுவாகத்தான் நகருகிறார்கள். ‘என்ன பிரச்னை..?’ என்று கேட்டதற்கு, எனக்குக் கேட்கும்படியான பதில் அவள் சொல்லவில்லை. ஆயில் கேன் கொண்டுவந்து அமர்ந்த மெக்கானிக் எனக்கு நல்ல பழக்கம். சொல்லவேண்டும் என்றுதான் நினைத்தேன், ‘எங்க ஊர்ப் பெண்… நல்லா பார்த்து அனுப்புங்க’ என்று. ஆனால் தயக்கம். உடைக்கப்படுகிற மவுனம் ஒன்று, அதீத வேறுபாடாவோ அல்லது விளக்கமுடியாத பற்றாகவோ மாறிவிடக்கூடும் என்று நினைக்கிறேன். அவள் அப்படியே இருக்கட்டும். மேல்வீதி பஜனைக் கோவிலுக்கு முன்பாக இருக்கும் ஒரு பாட்டியை நான் பார்த்திருக்கிறேன். கிருஷ்ணஜெயந்தி அன்றுதான் நான் கவனித்திருக்கவேண்டும் அல்லது புரட்டாசி சனிக்கிழமை பஜனையில் இருக்கலாம். அழகாகப் பாடும் என்றில்லை. சக்கரைப் பொங்கலுக்குக் காத்திருக்கும் எங்களுக்கு என்ன சங்கீதம் தெரியும்? ஆனால் அந்தப் பாடல் ஏதோ செய்யும். மிக வேகமாக, மிக சத்தமாகப் பேசி விளையாடிய எங்களை, அந்தப் பாடல் மெதுவாகத் திருணையில் அமர்த்தி, வேடிக்கை மட்டும் பார்க்கச் சொல்லும். அந்தக் குரலை நாங்கள் வேறு எங்கேயும் எப்போதும் கேட்டிருக்க முடியாது. நாமம் இட்ட அந்தப் பாட்டியை அதற்குப் பின்பாக எத்தனையோ முறை பார்த்தாலும் அவளிடமிருந்து எங்களுக்கு எந்தச் சத்தமும் சொல்லும் வந்ததில்லை. கடைசியாகப் பாட்டி இறந்தபோது அதே பஜனை பாடப்பட்டது. ஆனால் அது அவள் பாடியதுபோல் இல்லை. இருபது ரூபாயை வாங்கிக்கொண்டு என்னிடம் நகர்ந்தார் மெக்கானிக். நிறைய பேசிக்கொண்டோம். ஆனால் எனக்குள் இரண்டு சொற்கள்தான் இருந்தன. ஒரு பாடலும் ஒரு மவுனமும் ஒன்றா? இரண்டும் வேறு வேறல்லவா? தன் துயரை, மகிழ்வை ஒரு பாடலால் வெளிப்படுத்த முடியும் என்றால். மவுனமானவர்களின் துயர் எது? மவுனம் ஒரு துயர்தானா..? அது இயல்பு இல்லையா..? அல்லது மகிழ்வை எப்படி மவுனமானவர்கள் கொண்டாடுகிறார்கள்? பஜனைப் பாட்டியின் பாடலில் துயர் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஆசுவாசம் என்று எனக்குத் தோன்றியதுண்டு. ஜான்சியைத்தான் என்னால் ஊடுருவ முடியவில்லை. சில நாட்களில் எனக்குத் தோன்றியதுண்டு, இரண்டு பேருக்கும் குழந்தைகள் இல்லை என்ற ஒற்றுமை உண்டென்று. ஆனால் விஜயா அப்படி இல்லை. எல்லா நேரங்களிளும் ஒரே குரல் அளவோடு பேசுவாள். பேசுவாள் என்பது அத்தோடு முடிவது இல்லை, அவளாக நிறுத்த வழியில்லை. நாமாக விடுவித்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் எனக்கு அவள் குழந்தையாகத் தெரிவாள். தனக்குக் கிடைக்காத ஒன்றாக இருக்கும் குழந்தையை மனத்தால் வளர்க்கத் தொடங்கியவள் அவள். எல்லாக் குழந்தைகள் மீதும் அவளுக்கு அன்பு மட்டுமில்லாமல் உரிமையும் இருக்கும். குழந்தையின் தாய் மட்டும் செய்யும் செயலைக்கூட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வாள். ‘உனக்கு அந்தக் கவலை இல்லையா?’ என்று எனக்குக் கேட்கத் தோன்றும். ஆனால் அதற்கும் அவள் சிரித்துக்கொண்டேதான் பதில் சொல்லுவாள் என்பதால், இதுவரை கேட்கவில்லை. ஒரே ஊருக்குள் நான் பார்க்கும் இந்த மூன்று முகங்களில் பஜனைப் பாட்டி இல்லை. இனி அவள் மவுனமும் பாடலின் அர்த்தமும் தேவையில்லை.  ஆனால், ஜான்சியின் மவுனத்தை உடைக்க ஒரு குழந்தையால்தான் முடியுமென்றால் இரண்டு தெய்வங்களில் ஒன்று விஜயாவைவிட முதலில் ஜான்சிக்கு அருளட்டுமே!

நூற்று நாற்பது

நூற்று நாற்பது

சிறுகதை வாசு அந்த இரும்பு ஜன்னலில் கை நிறைய சில்லறையுடன் கூடிய பணத்தை நீட்டினான். அது ஒரு டாஸ்மாக் கடை. உள்ளே இருந்த பணியாள், வாசு கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப்  பார்த்தான். சில கசங்கிய  நோட்டுகளும் குறிப்பாக அதிகமான அளவில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் காசுகளும் இருந்தன. அந்தப் பணியாள் வாசுவை நிமிர்ந்து  பார்த்தான். அவன் பார்வை ஒரு சொரி நாயைப் பார்ப்பதுபோல் இருந்தது.  **** வாசுவுக்கு  நேரம் ஆக ஆகக் கைகள் மெலிதாக நடுங்க ஆரம்பித்தன. பன்னிரெண்டு  மணிக்குக் கடையைத் திறந்துவிடுவார்கள். அதற்குள் காசு ரெடி பண்ண வேண்டும். அங்கே இங்கே என்று தேடி எடுத்ததில் நூற்றிப் பத்து ரூபாய் கிடைத்துவிட்டது.  மனைவி வழக்கமாகப் பணம் வைத்திருக்கும் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் ஒரு ரூபாய்கூடக் கிடைக்கவில்லை. ‘எப்படிக் கிடைக்கும்? அவள் வைக்கிற எல்லாவற்றையும் லவட்டிக் கொண்டால்..’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். இனி அவளிடம்தான் தஞ்சமடைய வேண்டும். எங்கேனும் நமக்குத் தெரியாத இடத்தில் வைத்திருப்பாள்.  மெதுவாக “உஷா… உஷா…” என்று அழைத்துப் பார்த்தான். அவள் உள் அறையில் இருப்பது தெரிந்தது. பதில் ஏதும் கிடைக்காததால் மெதுவாக எட்டிப் பார்த்தான். இளம் காலையில் குளித்து, தன் அழகிய கேசத்தை மெதுவாக மேலே சுற்றும் பேனில் அலையவிட்டு, நெற்றியில் மெரூன் கலர் பொட்டினை வைத்து, சொல்லச் சொல்லக் கேட்காது இழைத்த மஞ்சளைப் பூசிய முகத்துடன் அவள் கட்டிலில் படுத்திருந்தாள்.  ‘இவள் தேவதைக் குலம். அதுதான் இவ்வளவு அழகாக இருக்கிறாள்’ என்று நினைத்துக்கொண்டான். மெதுவாக உள்ளே நுழைந்து அவள் அருகில் சென்று, அவளது இதழின் மேல் மெதுவாகக் கை வைத்து, “இந்த சப்பட்ட  வாய் ரொம்ப அழகுடி உனக்கு…” என்று கூறினான்.  “ஆமா… இந்த டயலாகை இன்னும் எத்தனை வருசத்துக்கு சொல்லுவிங்க.. ரொம்ப போர்” என்ற உஷாவைப் பார்த்து, “சரி… இன்னைக்கு புதுக் கவிதையில்  உன்னைப் புகழட்டுமா?” என்று வாசு கேட்டான்.  தன் கணவன் ஒரு கவிஞன் என்ற பெருமை மிக அதிகம் உஷாவுக்கு. ஆனால் வீட்டின் நிலைமையைப் புரிந்துகொள்ளவே இயலாத கவிஞனை  எப்படிப் பாராட்டுவது என்றுதான் திகைப்பாள்.  “கவிதை வேண்டாம். அதான் நீங்க எழுதிக் குவிச்சு வச்சிருக்கிங்களே.. சின்னதா ஒரு முத்தம் கொடுத்துட்டு விலகுங்க” “முத்தம் அப்புறம். முதல்ல கவிதைதான்” “சரி, ஆரம்பிங்க..” “அதுக்கு முன்னாடி..” “என்ன அதுக்கு முன்னாடி?” “இல்ல.. கவிதை பிடிக்கலைன்னு நீ முத்தம் கொடுக்காம விட்டுட்டா?” “எப்போ உங்க கவிதை எனக்குப் பிடிக்காம போயிருக்கு?” “சரி சரி, ஒத்துக்கறேன். இப்போது முதல்ல முத்தமா, இல்ல கவிதையா?” “ம்ம்.. சரி, கவிதையவே சொல்லுங்க” “சரி, கொஞ்சம் இடம் விடு. நானும் பக்கத்தில படுத்துக்கறேன்” உஷா மெதுவாக நகர்ந்து அவனுக்கு அந்தப் பெரிய கட்டிலில் சிறிது இடம் கொடுத்தாள். வாசு அவளை உரசியபடியே படுத்துக்கொண்டான். அவளது வலதுபுறம் முழுதும் அவன் மேல் மெதுக்மெதுக்கென்று உரசியது.  “போ.. நான் கவிதைய மறந்துடுவேன் போல இருக்கு” “ஏன்? என்ன ஆச்சு?” “நீ இப்படி மெதுக் மெதுக்ன்னு இருந்தா..” உஷா சிரித்தாள்.  “போதும்.. கவிதைய சொல்லுங்க..” “மான் கொஞ்சிப் புலி நாணும் குற்றாலக் குறிஞ்சி இவள்” “ஆ..” என்றாள் உஷா.  “ஒரு வரிதானா?” “இல்ல, இன்னும் இருக்கு.. சொல்லட்டுமா?” “வேணாம். இந்த ஒரு வரியே போதும். இந்த வரியில என் இனத்தைச் சொல்லி, வாழும் இடத்தின் சமத்துவ அன்பைச் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இருங்க, நானே உங்களுக்கு முத்தம் தரேன்” “இல்ல, இப்போ வேணாம். நான் முழுக் கவிதையையும் சொல்லிட்டு, முழுசா ராத்திரிக்கு வாங்கிக்கறேன். இப்போதைக்கு.. “ “சொல்லுங்க. இப்போது என்ன?” “ஒரு முப்பது ரூபா வேணும்” “அதானே.. எனக்குத் தெரியும். மணி பன்னெண்டுதானே ஆகுது?” காசு வைக்கும் இடம் எல்லாம் அவள் தேடி எடுத்ததில் இருபது ரூபாய் மட்டுமே கிடைத்தது.  “நான் நூறு ரூபாய் கிட்ட வச்சிருந்தேனே… நீங்க எடுத்திங்களா?” “இல்லையே.. நான் எடுக்கல..” வாசு பொய் சொன்னான். “அதுபத்தி எனக்குக் கவலை இல்ல. குடிகாரங்க எப்பவும் குடிக்கிறதுக்கு முன்னாடி பொய் பேசுவாங்க. குடிச்ச பின்னாடி உண்மைக்கு மாறிடுவாங்க..” “இந்தாங்க.. இருபது ரூபாதான் இருக்கு”  என்று கொடுத்தாள்.  கால் பாட்டில் விலை நூற்று முப்பது ரூபாய்தான். ஆனால் கடைக்காரனிடம் பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்தால்தான் சரக்கு தருவான். நூற்று முப்பது  ரூபாய்க்குப் பத்து ரூபாய் லஞ்சம். பால் விலையை மூன்று ரூபாய் குறைக்க முடிந்த அரசால் இந்த லஞ்சத்தை கட்டுப்படுத்த இயலாது போய்விட்டது போலும்.  வாசு எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டான். அவன் கைகள் மெதுவாக நடுங்கியபடி இருந்தன.   “சே..” கைகளை உதறியபடி சாலையில் நடக்க ஆரம்பித்தான். தெரிந்தவர் யாரேனும் வந்தால் பத்து ரூபாய் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அப்படி யாரும் அகப்படவில்லை.  கடை அப்போதுதான் திறக்கப்பட்டிருந்தது. அதன் இரும்புக் கதவினைப் பிடித்தபடி பத்து பேருக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தனர்.  ‌வாங்கி வைத்துக்கொண்டிருந்தவர்களில் சிலர், கூட்டணி அமைத்து கால் பாட்டிலுக்கு பாகப்பிரிவினை நடத்திக்கொண்டிருந்தனர்.  ‌அந்த இடத்தில் தரையெங்கும் தண்ணீர்  நிரம்பியிருந்தது. ‌உள்ளே சென்று குடிக்கும் ‘பார்’ வசதி முடக்கப்பட்டிருந்தது. அதனால் பாட்டில் வாங்கியவர்கள் அந்தக் குறுகலான கடையின் முன்னேயே குடித்துக்கொண்டிருந்தனர்.  ‌வாசு சுற்றிலும் பார்த்தான், ‘யாராவது பத்து ரூபாய் கொடுக்கும் நண்பர்கள் இருந்தால் நலமாயிற்றே’ என்று. அப்படி யாரும் ‌இல்லை. ‘சரி.. இருப்பதைக் கொடுப்போம்’ என்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த பணத்தைக் கொடுத்தான். மூன்று பேர் அவனை நசுக்கிக்கொண்டிருந்தனர். அவர்களும் இவனைப்போலவே கை நடுக்கக்காரர்களாக இருக்கக்கூடும். *** ‌”யோவ்..” இந்த வார்த்தை வாசுவின்  ‌காதில் விழுந்து திடுக்கிட வைத்து. எதிரிலிருந்த டாஸ்மாக் பணியாளரைப்  பார்த்தான்.  “எவ்வளவு குடுத்துருக்கிற?” ‌”நூத்து முப்பது ரூவா” ‌”தெனந்தான குடிக்கிற? நுத்து நாப்பதுன்னு உனக்குத் தெரியாதா?” ‌”தெரியும். ஆனா இவ்வளவுதான் இருக்கு.. குடுய்யா.. கை நடுங்குது” ‌”ஏன்யா கடை தொறந்ததும் வந்து உசுர எடுக்கிற?” ‌”சாவு கிராக்கிங்க.. அதோ இன்னும் மூனு நிக்குது”  ‌இது உள்ளே இருந்த வேறொரு பணியாளர்.  ‌வாசுவுக்குக் கோபம் தலைக்கேறியது.  ‌”கால் பாட்டில் எவ்வளவு?” ‌”நூத்து நாப்பது ரூபாதான்.. இந்தா உன் காசு” என்று தூக்கி அவன் எதிரிலிருந்த மேசை மேல் வீசினான். ‌சில்லறையும் நோட்டுமாக வாசுவின் காசு அந்த மேசையின் மேல் சிதறியது.  ‌இரண்டு நாணயங்கள் வெளியில் இவன் இருக்கும் இடத்தில் விழுந்தன. வாசு உடனே அந்தக் காசினைப்  பொறுக்கக் குனிந்தான். ‌அதே நேரத்தில் பாட்டில் வாங்க வந்த இன்னொவன் அவனைக் காலால் முட்ட, வாசுவின் தலை அந்த இரும்பு கேட்டில் ‘நங்’கென்று  மோதியது.  கீழே விழுந்த காசினைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவன் மேசை மேல் இருந்த காசை நடுங்கும் கரங்களால் சிரமப்பட்டு எடுத்தான். ‌மொத்தமாக எடுத்ததும் மீண்டும் பணியாளனைக் கேட்டான்.  “குடுப்பியா, குடுக்க மாட்டியா?”  ‌”யோவ். வழிய விடுயா” ‌பணியாளர்கள் மூவரும் ஒன்றாகக் கத்தினர். ‌வாசு அவர்களை உற்றுப் பார்த்தான். ‌அந்த இரும்பு கேட்டினை விடுத்து, சிறிது பின்பக்கம் நகர்ந்தான். ‌தன் வலதுகையில் வைத்திருந்த காசினைப் பிரித்துப் பார்த்தான்.  ‌நடுங்கும் கையை உயர்த்தி அந்தப் பணியாளர்களை நோக்கிக் காசை வீசினான்.  “இதையும் வச்சிக்கங்கடா.. உங்க பெண்டாட்டி தாலியில தங்கம் கோக்க” ‌பணியாளர்கள் அவனைக் கோபத்துடன் உற்றுப் பார்த்தனர்.  ‌”யோவ். இங்கதான மறுபடி வருவ.. இரு” என்றான் ஒருவன்.  ‌வாசு ஏதோ வித்தியாசம் உணர்ந்தவனாய்த் தன் கைகளைப் பார்த்தான். அந்தக் கைகள் இப்போது நடுங்காது  இயல்பாய் இருந்தன. *** ‌மறுநாள் காலை உஷாவிடம் தாஜா செய்து நூற்று நாற்பது ரூபாய் பெற்றுக்கொண்டு, வேறு ஒரு டாஸ்மாக் கடையின் முன் , ‘எப்போது திறப்பார்கள்’ என்று கை நடுங்க நின்றுகொண்டிருந்தான். ‌

கருவாட்டு வாசம்

கருவாட்டு வாசம்

சிறுகதை எல்லாவற்றையும் பகிர்ந்து அளிக்கக்கூடிய நிலையில்தான் இருந்தேன். என்னளவில் இந்த வாழ்வு எனக்கான ஒன்று மட்டுமல்ல. பரந்த தியாகமாகத்தான் பிள்ளை வளர்ப்பைக்கூடப் பார்க்கக்கூடிய பக்குவத்தில் இருந்தேன். அப்பாவின் வயது எழுபது இருக்கும். இன்னும் இரண்டு மாதத்தில் எனக்கும்கூட நாற்பத்து நான்கு முடியப் போகிறது. வராண்டாவின் வெளிச்சம் உறுத்த, மெதுவாக நடக்கலாம் என்று படி இறங்கும்போது செல்வனின் அழைப்பு வந்தது. சந்தர்ப்பங்களைத் தேடாதவன். எது வாழ்வின் எல்லை என்று எனக்கு வந்த கனவு, ஒருபோதும் அவனுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. மிகச் சோர்வாக, அவனன் அழைப்பை எடுக்கச் சந்தர்ப்பம் வாய்த்தபோதும்கூட, திருவிழா கலை நிகழ்ச்சியின் மூன்றாவது பாடல் போலப் பேசத் தொடங்குவான். இவனுக்குக் கவலை என்பது என்னவாக இருக்கும் என்று சிலநேரம் நானாகவே நினைத்து, இன்னும் காலம் இருக்கிறது என்று சமாதானத்திற்குள் புகுந்துவிடுவேன். மருத்துவ வாசனை என்று ஒன்று இன்னும் விற்கப்படாமல் உலவுகிறது. நடுத்தர வர்க்கத்தின் ஊடாக நடக்கத் தொடங்கினேன். கையும் காலும் வாயும் உள்ளவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லை. மனிதர்கள் என்பவர்கள் அவரவருக்கு உரிய தனித்த உருவம் என்பதை நான் அவன் மூலமாக அறிவேன் என்பதைச் சொன்னபோது, அதை உன் அப்பாவின் வழியாகக் கண்டேன் எனச் சொன்னவனும் அவன்தான். எல்லாவற்றிலும் நிதர்சனமான உண்மை என்று ஒன்று உண்டு என்பதை அவன் வாயிலாகக் கண்டபோது, நான் வாங்கும் சம்பளம் எதற்கானது என்ற அருவருப்புகூட எனக்கு வந்ததுண்டு. பூ வாங்கும் கடையில் இருக்கும் நாட்காட்டி பற்றி, செல்போன் கடையில் இருக்கும் உடைந்த பாகத்தின் பின் இருக்கும் மனிதரைப் பற்றியெல்லாம் இவனுக்கு என்ன அக்கறை என்று நினைக்கத் தோன்றும். சுவரசியம் நிறைந்த சிறுகதை ஒன்றைச் சேகரிக்கத் தெரிந்தவன் செல்வம். அப்பாவை ஊரில் நிறுத்திவிட்டு, கடந்து போன பத்து வருடத்தில், செல்வம், அப்பாவிற்கான முதல் துணை என்றுதான் நினைத்தேன். மிக அருகில் இருப்பது இருப்பு மட்டும்தான். மிக நெருக்கமாக இருப்பதுதான் உணர்வை அறியக்கூடியது என்று எங்கள் இருவரில் எனக்கு மெதுவாகத்தான் தெரிந்தது. தனிமை ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்று என்னிடம் கேட்ருந்தால், தவறு செய்யச் சொல்லும் என்றுதான் சொல்லியிருப்பேன். எனக்கும் தனிமைக்குமான தூரம் அவ்வளவுதான். அதுவும், கை நிறைய வந்த இந்தத் தொலைபேசி, தனிமையை ஒரு தொடர்வண்டி வேகத்தில் விரட்டியது. ‘அங்கேயேதான் இருக்க?’ என்றதற்கு, ‘ஆமாம்..’ என்றேன். ‘இரு வந்துர்றேன்’ என்றவனின் உருவம் வாசலில் யாருடனோ பேசிகொண்டிருந்தது. என்னிடம் ஏதும் விசாரிக்கவில்லை. அவனாகவே அப்பாவின் உடல்நிலை குறித்த வரைபடத்தைச் சேகரித்துக் கொண்டான். எப்போதும்போல, ‘வா,, டீ சாப்ட்டு வரலாம்’ என்று இருவரும் நடந்தோம். இருபுற மரங்களின் நிழலின் வழியாக விழுந்த வெளிச்சம், பாதையின் ஊடாக எதையும் பேசச் செய்யவில்லை. அவனாகப் பேசுவான். \ ‘அப்பாக்கு உடம்பு முடியல.. நீ எதுக்கும் வந்துட்டுப் போ…’ என்றபோது தட்ட முடியவில்லை. மாதம் இவ்வளவு என்று அனுப்பிப் பழக்கப்பட்ட பின்பாக, அப்பாகூட இஎம்ஐ கணக்கில்தான் வந்தார். சில மாதங்களில், செய்தி வழித் தொடர்பில் சின்ன சஞ்சலம் எனக்கும் அப்பாவிற்கும் உண்டு என்பது அவனுக்கும் தெரியும். இதுவரை எதுவும் அதைப்பற்றி செல்வம் பேசியதில்லை. எல்லாவற்றையும் மிகச் சாதாரணமாகப் பேசும் தெருச் சண்டை வார்த்தைகள் போலானவன் என்ற பிம்பத்தை, செல்வம் அப்போதுதான் உடைத்தான். நிச்சயமாக அவனுக்குத் தெரியாமல் இருக்காது. அப்பா பேசும் எதையும் காதில் வாங்காமல் கழிந்த இரண்டு வருடத்தில். ஒரு குற்றசாட்டுகூட செல்வத்திடமிருந்து வந்ததில்லை. நானாகவே ‘சாயங்காலம் பேசுறேன், ஃபிரீயா இருப்பல்ல..?’ என்றபோது ஆமோதித்துக் காத்திருந்தவனிடம் என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று நினைத்தேனோ, அத்தனையையும் ஒரே சொல்லில் மறுத்தான். ‘உனக்கு எது சரிந்னு படுதோ அதைச் செய். அவருக்கு எது சரின்னு படுதோ அதை அவர செய்யவிடு.. ஒருபக்கம்தான, அடைச்சிடலாம்னு மட்டும் நினைக்காத. வயசானவங்க கோபம் கொலையைவிட மூர்க்கமானது’ என்றான். எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. நானாகவே பேசிகொண்டிருக்கத் தொடங்கிய அழைப்பு, கேட்டுக்கொண்டிருக்கும் அழைப்பாக மாறியது. அம்மா விட்டுச் சென்ற பின், அப்பாவிற்கு இப்படியான ஆசை இருந்திருக்கும் என்று நினைக்கவில்லை. மிகக் குறைவாகப் பேசி, தன்னுடைய வார்த்தைகளைச் சுருக்கிகொண்டார். ஆனால் அதற்கு எதிர்மாறாக இப்போது எல்லாவற்றையும் பேசியே தீர வேண்டும் என்கிறார். எப்போது அலைபேசியை வைப்பார் என்று காத்திருந்து சில நேரம், நானாகவே தூண்டித்தது உண்டு. அப்பாவிடம் மகன் கேட்க முடியாததையும் மகனிடம் அப்பா சொல்லமுடியாததையும் ஊர் மிக விரைவாகச் சொல்லிவிடுகிறது. அப்பாவிற்கு வேறொரு தொடர்பு உண்டு என்ற செய்தி மெல்ல என்னை அரிக்கத் தொடங்கி, அவருடனான பேச்சை நிறுத்திக்கொள்ளத்தான் முடிந்தது என்னால். அதற்குப் பின்பாக நிறைய தகவல்கள். பகல் முழுவதும் அங்குதான் இருக்கிறார். வண்டியில் ஒருநாள் பார்த்தேன். உங்க அப்பா வயசு இருக்கும் என்று நிறைய வந்தன. இந்த வயதில் எதற்காக இவர் இப்படி இருக்கிறார் என்று நானும்கூடக் கூசிப் போனேன். கடந்தமுறை ஊருக்கு வந்து திரும்பியபோது சொத்துப் பத்திரத்தைக்கூட எடுத்து வந்துவிட்டேன். என்னால் இவ்வளவுதான் யோசிக்க முடிந்தது. மனைவிக்கு அவரை வெறுக்க மிக எடை கூடிய காரணம் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியும் அமைந்தது. செல்வம் டீயை முடித்து வழக்கம்போலப் பேசிகொண்டிருந்தான். ‘போலாம் வா…’ என்றதும் அவ்விடத்தில் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியேற ஆட்கள் இருந்தார்கள். ‘யாருடா அவரு…?’ ‘தெரியாது மாப்ள… இப்போதான் பழக்கம். அவங்க சொந்தக்காரப் பொண்ணு ஒன்னு நம்ம ஊருக்கு வாக்கப்பட்டு வந்து, இப்போ வெளியூர்ல இருக்காங்களாம்…’ என்றான். விசாரிக்க எனக்கு நேரம் இல்லை. அப்பாவின் நிலை தெரிந்ததால், அடுத்து என்ன செய்யலாம் என்ற அவசரத்தில் இருந்தேன் நான். ‘என்ன சொல்றாங்க செல்வம்? எப்போ டாக்டர பாக்கலாம்…?’ ‘என்ன மாப்ள.. அவசரமா போகணுமா?’ ‘சே… அதெல்லாம் இல்லடா… புள்ளைங்க வர வேண்டியது இருந்தா, சொல்லணும்ல…’ ‘சொல்லிரு மாப்ள… நைட் முடிஞ்சிரும்…’ …….. மருத்துவமனை வாசனை நாசியில் நிறைந்திருந்தது.   ‘கொண்டுவரும்போதே ஒன்னும் இல்ல. நம்மளும் பாவம் பண்ணிறக் கூடாதுன்னுதான பெரும்பாலும் வயசானவங்களைக் கொண்டுவந்து போடுறோம்?! உங்க அப்பாவும் அப்படித்தான்’ எல்லாம் முடியும் வரை, எனக்குப் பழக்கபட்ட மவுனம் கையிருப்பில் இருந்தால் போதும் என்றிருந்தேன். செல்வம், எல்லாம் பேசிவிட வேண்டிய முடிவில் இருந்ததும் தெரிந்தது. ‘வா அப்டி உக்காரலாம்..’ என்று மரத்தைச் சுற்றிய நாற்காலி ஒன்றில் அமர்ந்தோம். ‘உங்க அப்பாவை நினைக்கும்போதல்லாம் உனக்கு வேறொரு மனுஷியும் ஞாபகம் வருதுல்ல மாப்ள?’ இல்லை என்று சொல்லாமல் அவன் முகத்தைப் பார்த்தேன். ‘தப்புன்னு நாம நினைக்கிற ஒன்னு, எப்பயும் நம்ம கூடயே வருதுல்ல.. நாம சரியா இருக்கிறோம் என்ற திமிருக்கு நாமதான சாட்சி?’ ‘நீ எங்க வரேன்னு எனக்குத் தெரியும் செல்வம். எனக்கு அந்த விளக்கம் இனி தேவை இல்லைடா…’ ‘நமக்கு எதுதான் தேவை? வசதியான வாழ்வு. அவ்ளோதான…. அதுக்காக இன்னும் எவ்ளோ தூரம் ஓட முடியுமோ அவ்ளோ ஓடலாம். நமக்கு அந்த இலக்கை நோக்கி ஓடச் சொல்லிக் குடுத்தவங்க செஞ்ச தப்பும் அதுதான். இப்போ உங்க அப்பாவுக்கு சாப்பாட்டுக்குக் காசு குடுத்ததும் உன் கடமை முடிஞ்சி போச்சுல்ல… இதையே உங்க அப்பா, இருவது வருசத்துக்கு முன்னாடி செஞ்சிருந்தா அவருக்குப் பேரு என்ன?’ ‘நீ நடைமுறைக்கு இல்லாதத பேசுறடா. நானும் எங்க அப்பா எனக்கு என்ன செஞ்சாரோ அதையேதான என் புள்ளைக்கும் செய்றேன்? இதுதான உலக வழக்கம்? வெட்டி நியாயம் பேசி அவரு செஞ்ச தப்ப நியாயப் படித்துற நீ…’ ‘சரிதான் மாப்ள.. தியாகம் என்ற வார்த்தையை நாமல்லாம் மறந்து எவ்ளோ நாள் ஆச்சு.. நாம யாருக்காவது அதைச் செஞ்சி ஏமாறும்போது மட்டும்தான் ஞாபகம் வருது. நமக்காக அதைச் செய்பவங்களை நாம கண்டுக்கிறதே இல்லைல… உங்க அப்பா பண்ணுனது தப்புன்னு நீ நினைக்கிறல்ல… நாம செஞ்சது எல்லாம் சரியா? வயசானவங்க பேசுற வார்த்தைகளையும் நடந்துக்குற முறையையும் நம்மாள தடுக்க முடியலங்குற கோபம்தான நமக்கு இருக்கு…? கடைசிவரை நீ அனுப்புற காசுல சாப்பாடு மட்டும் சாப்ட்டு வாழ்ந்து செத்திருந்தா, நீ இப்போ செய்றத விட வேறென்னா செஞ்சிருப்ப உங்க அப்பாவுக்கு…?’ ‘வேறென்ன செய்யணும்டா?’ ‘உறவுதான் மாப்ள மனுசனோட பலம். ஒரு மாசம் யாரும் இல்லாம ஒரு உலகத்துல நீயும் நானும் வாழ முடியாதுடா. வீட்டுச் சுவரும் ஓட்டுற வண்டியும் பதில் பேசுற மாதிரி வந்துட்டா, உங்க அப்பாவுக்கு வேற ஒரு மனுஷி தேவைப்பட்டுருக்காது. ‘இவ்வளவு நடந்த பின்னாடியும், ‘எனக்கு வந்த தகவல் இதுதான். நீ என்னப்பா சொல்ல வர்ற?’ன்னு உன்னால கேட்க முடியலைல.. அதுக்கான பதில் அவருகிட்ட இல்லாமலா இருந்துருக்கும்..?’ ‘வேறொரு பொம்பளகிட்ட நம்ம அப்பா பேசுறாரு… அவங்க வீட்டுக்குப் போய் வர்றாருன்னு செய்தி வந்ததும் நமக்கு சபலம்தான நினைவுக்கு வருது… ஏன்? அவரு வயசுகூட நமக்கு மறந்து போகுது, இல்லையா? அவ்ளோ அடி முட்டாள்களா மாப்ள நாம…? என்னை விடு. உனக்கு அப்படி யாருமே இல்லையா…? ஒரு மாசம் கூடுதலா காசு கேட்டதும் உனக்கு வேற என்ன ஞாபகம் வந்துருக்கும் உங்க அப்பா மேல…? இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல எவ்ளோ தவிச்சிருப்பாரு? அதுக்காகவே அவரு அந்தக் காசைச் செலவு பண்ணிருந்தாலும் அது உன் கடமைதானடா மாப்ள? அவருகிட்ட இருந்து வந்ததுதான உனக்கானது எல்லாம்..! ரொம்பப் பெருமையா சமத்துவம் பத்திப் பேசறோம். ஆனா, அதை முந்தைய தலைமுறை செய்தா நம்மளால ஏத்துக்க முடியல. நாமதான மாப்ள பிற்போக்குவாதிங்க…?’ ‘இப்பயும்கூட உங்க அப்பாங்குற ஒரு ஆணுக்காகத்தான மாப்ள பேச முடியுது? இதே இடத்துல உங்க அப்பாகூட பேசப்பட்ட மனுசிக்கு நாம வேற பேருதான வச்சிருக்கோம்?’ செல்வத்தின் வார்த்தைகளிலிருந்து என்னால் மீள முடியவில்லை. சுதந்திரத்தை அனுமதிக்காத மனிதர்களாகத்தானே நம் வாழ்வு நீள்கிறது? அப்பாவின் பெயர் சொல்லி என்னை அழைத்ததும், இருவரும் போனோம். நாளை காலை பத்து மணிக்குக் கிடைச்சிடும். இன்னும் சில ஆதாரங்களைக் கொண்டுவரச் சொன்னர்கள். ‘நான் போய்ப் பாக்குறேன். நீ இங்க எங்கயாவது தூங்கு’ என்று சொல்லிவிட்டுப் போனான் செல்வம். அதற்கு முன்பாக ஒரு கேள்வி வைத்தான். ‘உங்க அப்பாவுக்குக் கருவாடு பிடிக்கும்ல..?’ ‘உனக்கு எப்டித் தெரியும்?’ என்றேன். ‘மிச்சக் கருவாட மொத்தமா விக்க அந்த வீட்டுக்குதான் போறேன்’னு சொன்னன்

அகப்படாத ஒன்று

அகப்படாத ஒன்று

சிறுகதை சில மாதங்களாக இப்படித் தூக்கமில்லாமல் தவிப்பது, பெரும் ரோதனையாகவே பட்டது. வாழ்க்கை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று தெரியாமல், கண்களை இறுக்கிக் கட்டிவிட்டதுபோல் அல்லாடியது மனது. ஏதோவொரு கோபம். பல நினைவுகளையெல்லாம் ஒன்றுதிரட்டி, அவை ஏளனமாகச் சிரிக்கும்போதெல்லாம் அறைக்குள்ளிருக்கும் டேபிள், முகம் பார்க்கும் கண்ணாடி, டம்ளர், தலகாணி, போர்வையென்று, கையில் கிடைக்கும் பொருட்களெல்லாம் தூக்கியெறியப்படும். அதில் ஒருசில மதுபாட்டில்களும் அடங்கும். முன்பைவிடவும் இப்போதெல்லாம் பாட்டில்கள் அதிகமாகச் சிதறுகின்றன. அதொருவகையில் ஆறுதல் கொடுத்தாலும் போதாமையாகவே ஆட்டிப் படைக்கிறது. சத்தம் போட்டு ‘ஓ..’வென்று கத்த வேண்டும்; அலற வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை. தன்னுடைய இருக்கைகளையும் மூர்க்கத்தனமாக இறுக்கிக்கொண்டான். விரல்கள் சுடக்கு விட்டுக்கொண்டன. நடுராத்திரியில் ஏன் இவன் வெறி பிடித்தவனாகக் கத்துகிறான் என்று எண்ணி பக்கத்து அறையிலிருந்து ஆட்கள் வந்தால் என்ன செய்வது – சொல்வது? தன் நடவடிக்கையின் மீது யாருக்காவது சந்தேகம் வந்துவிடுமோ? என்கிற பயம், உள்ளூர பூதமாகவே வளர்ந்து, விரவிக்கிடக்கிறது. பேய் பிடித்ததுபோல், கட்டிலில்மேல் எழுந்து நின்றான். பின் சம்மணம் போட்டு உட்கார்கிறான். கால்நீட்டி மல்லாக்கப் படுத்துக்கொள்கிறான். திரும்பவும் எழுந்து உட்கார்கிறான்; நிற்கிறான். ஏதோ சைகை செய்து, தனக்குத்தானே பேசிக்கொள்கிறான். சன்னலுக்கருகில் வந்து வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்துத் திகைக்கிறான்; சிரிக்கிறான். அதொரு அற்புதமான இயற்கைச்சூழல் மிகுந்த மலைப்பகுதி. கிராமப்புறக் குடியிருப்பு என்றாலும் இருட்டு – சுடுகாட்டுத்தனமான அமைதி – இரவு நேரங்களில் மட்டும் அதற்கு அடிமையாகிப் போகிறான். ஆங்காங்கே, தெருவில் நடபட்டிருக்கும் சிற்சில போஸ்ட் விளக்குகள் மட்டும் மஞ்சள் நிற வெளிச்சத்தை வெளிக்காட்டிக்கொண்டாலும் அதெல்லாம் அவன் மூளையில், பிணத்தை எரிக்கும்போது மேலெழும்பும் கருஞ்சிவப்பு மஞ்சள் நிற தீ ஜுவாலையாகத்தான் பீடித்திருந்தது. அப்பீடித்தலின் காட்சிக்குள் மூழ்கிப்போனதால், உடல் முழுவதும் வியர்த்தொழுகியது. கண்கள், முகமென்று வடிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, மீண்டும் – மீண்டும் அதே காட்சியை அழுந்தப் பார்த்தான். வெளிச்சத்தில் தெரிந்த மரங்கள், தற்சமயம் பெண்களாக மாறிக்கொண்டன. அந்தப் பெண்கள் அவனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அதற்குப் பதிலாக அவனும் சிரிக்கிறான். சிரித்துக்கொண்டே அழவும் – பின் சிரிப்பும். இதே நிகழ்வுதான் மாறி மாறி நகர்கிறது, சிலமணி நேரமாக. அதில் இடம்பெறும் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. வெவ்வேறு வயது வித்தியாசத்தில், வெவ்வேறு முக அடையாளத்தில், தோள், நிறம், சிரிப்பு, கோபம், முகபாவனைகளைக் காட்டும் விதம், தோற்றம் என்று வகைப்படுத்தித் தோன்றினாலும் அவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் எந்தவொரு உறவோ, தொடர்போ கொண்டவர்கள் இல்லை. ஆனால், அப்பெண்களெல்லாம் அவனுக்கு ஒருவகையில் தெரிந்த, பழகிய முகங்களாகவே உணர்வுகளுக்குள் ஊடுருவியிருந்தார்கள். அதில், முதலில் நிற்பவளின் பெயர் செரின். அவளைப் பற்றி நிறையவே சொல்லியாக வேண்டும். அவள் வசித்த ஊரில் பிரச்சனை இருந்திருக்கிறது போலும். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே குடிவந்து விட்டார்கள். அவன் வீட்டிற்கு நேரெதிர் வீடுதான். அவளை முதன் முதலில் சந்தித்தது, அந்த மெடிக்கல் ஷாப்பில்தான். ஏதோ வாய்க்குள் நுழையாத பெயர்கொண்ட மாத்திரைகளை வாங்கிக்கொண்டிருந்தாள். பார்த்தவுடன் ஒரு மெல்லிய மென்முறுவல். அவ்வளவுதான், நகர்ந்துவிட்டாள்.அதன் பின்பு ஒருவாரம் கண்ணில் படவில்லை. திடீரென்று ஒருநாள் அவளே நேரடியாக வந்து பேசினாள். “ஒரு வாரமா என்னைத் தேடுனீங்களோ?” “இல்லையே.. அப்டிலாம் ஒன்னுமில்லை. யாரு சொன்னது?” “யாருமில்ல. ஆனா உங்க மொகத்தப் பாத்தா உண்மைய முழுங்குன மாரிலாயிருக்கு..” இப்படிக் கேட்டவளிடத்தில், அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், அவளின் முகத்தை நேராகப் பார்க்காமல் தவிர்த்திருந்தான். “திரும்பிட்டா என்ன அர்த்தம்?” என்று சொல்லிக்கொண்டே நெருக்கத்தில் வந்திருந்தாள். அவன் மௌனமாக நின்றிருந்தான். அந்த மௌனத்திற்கு விடை எங்கு ஒளிந்துகொண்டிருக்கும்? அதைத் தேடிப் பிடிப்பதற்குள், வலது கையை இறுக்கிப் பிடித்திருந்தாள். உடல் சிலுப்பிக் கொண்டது. மென்மையான குளிர்ந்த உள்ளங்கைகள், அவனது ரோமங்களை விளையாடிப் பார்க்க அழைப்பு விடுப்பதுபோல் அரவணைத்திருந்தது. “இதுதான் உங்களுக்கு ஃபஸ்ட் டைமா?” அந்தச் சிலிர்ப்பிலிருந்து இன்னும் விடுபடாதவனாகவே, அக்குளிரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தான். பேசாமல், நடுரோட்டில் ஒரு மூலையில், மரத்துக்கடியில் நின்றுபேசுவது எதுவும் சரியிருக்காதென்று, விறுவிறுவென அவளின் வீட்டிற்கே அழைத்துச் சென்றாள். அய்ந்தாயிரம் கொடுக்கும் அளவிற்கு நடுத்தரமான வீடுதான். தைரியமாக அழைத்துவரும்போதே வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்தது உண்மையாகவே இருந்தது. உள்ளே வந்ததும் மேலே போட்டிருந்த ஷாலைக் கழட்டி எறிந்துவிட்டாள். “இந்தச் சேர்ல உட்காரு. நான் இப்பம் வந்துர்றன்” என்று சொல்லிவிட்டு நேராக பெட்ரூமிற்குச் சென்றாள். முதல்முறை என்பதால், ஓர் அச்சம் கலந்த பதற்றம் உள்ளூர ஊறிக்கொண்டே முட்டி மொனங்கியது. “நீ இப்பம் எங்க போற?” என்று கேட்டதற்கு, “ட்ரெஸ்ஸ மாத்திட்டு வாறன். நீ வேணா டிவி போட்டு பாத்துட்டு இரு” என்று சொன்னவளுக்கு, கதவைப் பூட்ட வேண்டுமென்ற நியாபகம் வரவில்லை. அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கதவை ‘டமால்’ என்று சத்தத்துடன் அழுந்தத் தள்ளிவிட்டுச் சென்றாள். ‘எதுக்கிப்படி தேவையில்லாம கதவ ஓங்கி அடைக்கணும்?’ திரும்பிப் பார்த்தவனுக்கு, அச்சிறிய இடைவெளியில் எல்லையில்லா ஓர் ஆனந்தக் கிளுகிளுப்பு உடலில் தொற்றிக்கொண்டது. ஓர் இளம் பெண்ணை அரைநிர்வாணமாகப் பார்த்தது அதுவே முதல்முறை. கண்ணாடியின் முன் தன்னழகை ரசித்துக் கொண்டாள். நீளமான கருநிறக் கூந்தலைக் கலைத்துக் கோதிவிட்டு, ஒவ்வொன்றாகத் தன் ஆடைகளைக் களைந்தாள். ஜீவா தன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறான் என்பதைத் தனக்கு முன்னாலிருக்கும் கண்ணாடியின் வழியாக பார்த்துத் தெரிந்துகொண்டாள். இதுபோதும் என்றவளுக்கு, தன் மேனியைப் பலவாறு நெளித்து, கோவில்களில் வடித்திருக்கும் சிற்பங்களின் இணக்க நெளிவுகளையெல்லாம் தன் மேனிக்குள் கொண்டுவந்திருந்தாள். அதொருவிதமான நிர்வாண நடனமாகவே காட்சிப்படுத்தியிருந்தது. ஒரேயடியாக, நேரே சென்று லேசாகத் திறந்திருந்த கதவை முழுமையாகத் திறந்து அந்நடனத்தில் தானும் பங்கெடுத்துக் களைப்படைய வேண்டும்; அவளை இறுக்கியணைத்து, அகல விரிந்த முதுகினை நுனி நாவால் வருடி, காதுமடல், கழுத்துப்பகுதியை வெடுக்கென்று ஆப்பிளைக் கடித்துச் சுவைப்பதுபோல் சுவைக்க வேண்டும்; ஒடுங்கிய இடைமடிப்பு மட்டுமல்லாது, மேல் ஏறியிருந்த பிட்டமும் வெகுவாக நிலைகுலைய வைத்தது. ஆனால், அவனால் ஒரு அடிகூட முன் எடுத்து வைக்கமுடியவில்லை. பதற்றம் கலந்த ஒருவித பயம், நிலை தடுமாற வைத்தது. அது ஏன் என்றும் அவனுக்கு விளங்கவில்லை. அவள் கழட்டிப் போட்ட ஷாலை மடியில் வைத்து அமுக்கிக்கொண்டான். சிறிது நேரத்தில் ஈரமாகிப் போனது மட்டுமல்லாமல், என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. அங்கிருந்து கிளம்பிவிட்டான். மறுநாள் காலையில் ஓர் ஆர்வத்தோடு வாசலைப் பார்த்தே, கண்கள் தவம் கிடந்தன. ஒரு பேப்பரைக் கையில் எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றால், எதிர் வீட்டின் வாசல் அழகாய்த் தென்படும். காலை மற்றும் மாலையில்தான் தலை காட்டுவாள். அவள் வீட்டின் மாடியிலும் தோட்டம் போட்டிருந்தார்கள். அது ஏற்கனவே முன்னிருந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. செடிக்குத் தண்ணீர் ஊற்றி, கொஞ்சநேரம் அக்காலைப் பொழுதை இதமானக் காற்றோடு அனுபவிக்க இசைவாள். அப்போது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே, ஓரக் கண்ணால் பார்த்தும் பார்க்காததுபோல் பார்த்துவிட்டு நகர்வாள். அவனுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. மனத்தில் கதாநாயகனாகவே உருவகித்துக் கொள்வான். அவளும் ஓரக்கண்ணால் பட்டும் படாமலும் சிரிக்கும் விதமென்று, ஓர் ஆழமான எண்ணவோட்டத்தையே, பெரும் ஆலமரமாக உரம்போட்டு வளர்க்கத் தொடங்கினான். அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டாலும், தான் அப்படிச் செய்திருக்கக்கூடாது. வெளியேயும் வந்திருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். கதவினைத் திறந்துகொண்டு, வசந்தகாலத்தில் தன் மூர்க்கத்தனங்களையெல்லாம் வெளிக்காட்டி, பயம், பதற்றத்தைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும். இருந்தாலும் ஒரு சந்தேக மனநிலை வந்திருக்கிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில்தான் சந்தித்திருக்கிறோம். பார்வைகள் ஏராளம். பேச்சுவார்த்தைகூட அந்தளவிற்கு நீளாத காலம். அப்படியிருக்கையில், எடுத்தவுடனே இந்த நடவடிக்கைக்கெல்லாம் உடன்படுவது, சற்று கலக்கத்தையே கொடுத்தது எனலாம். தொடக்கத்தில் அவளைப் பார்த்தவுடன், திருமணம் செய்துகொண்டு நிம்மதியான வாழ்க்கையினை வாழ வேண்டும் என மனத்திற்குள் திட்டம் தீட்டியிருந்தான். அந்தத் தீட்டலே அவனை ஒரு நிமிடம் தடுத்து நிறுத்தியது. தடுத்து நிறுத்துதலுக்குப் பின்னாகப் பல நெறிமுறைக் காரண வழியினைக் கடைபிடித்திருந்தான். நான் இப்படித்தான் இருக்க வேண்டும். எனக்காக ஒருத்தி இவ்வுலகில் காத்துக்கொண்டிருப்பாள். அவளின் மனத்தை நான் காயப்படுத்துவது, ஏற்றுக்கொள்ளமுடியாத வடுவாகவே படிமமாகிப் போய்விடும். அப்படிமம் என் வாழ்நாளை நிம்மதியில்லாமல் அலைக்கழிக்கும். மனபாரமாகச் சுரண்டிக்கொண்டேயிருக்கும். இரண்டு வாரத்திற்குள்ளே இதெல்லாம் நடந்திருப்பதுதான் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அவள் பார்த்த பார்வை, நடந்துகொண்ட விதம், எல்லாமே மாயக் கனவாகவே, தினமும் இரவுகளில் எட்டிப் பார்த்துச் செல்லும். நல்லவேளை, தப்புத்தண்டாவிற்கு இடம் கொடுக்கவில்லை. எனக்காக, என் வாழ்க்கையில் பகிரயிருப்பவளுக்கு நேர்மையாக, அவ்வீட்டிலிருந்து வெளியேறியது மகிழ்ச்சியென்று ஒருபுறம் நினைத்தாலும், நீண்ட இடைவெளிக்குப்பின், செடிகளைக் காண வந்திருந்தவளைக் காண நேர்ந்தது. ஏனோ பூக்களெல்லாம் வாடிப்போய் கிடந்தன. தலை நிமிரவே இல்லை. தினமும் சூரியனைப் பார்த்து, இதமாக உடல் ரோமங்களை முத்தமிடும் தென்றலை உள்வாங்கி, யோகாசனமெல்லாம் செய்வாள். இன்று அக்காட்சி விடுமுறையாக மாறிப்போனது. வேகவேகமாக எல்லாவற்றிற்கும் ஊற்றிவிட்டுப் படிகளில் இறங்கும்போது, நான் மாடியில் இருப்பேனென்று முழுமையாகத் தன் முகத்தைத் திருப்பிக் காட்டினாள். ‘குற்றவுணர்ச்சி கலந்த கோபக் கனல் முகத்தில் பயங்கரமாகக் காட்சிக்கொடுத்தது. அந்தப் பார்வையை மனத்திற்குள் உள்வாங்க முடியாமல், சீரணிக்க முடியாமல் தலை குனிந்து தவித்துப்போனான். பெரும் குற்றமொன்றைச் செய்துவிட்டதாக மனம் இப்போது பதபதைத்து என்ன பயன்? என்னைத் தவறாக நினைத்திருப்பாளோ? இல்லை; அப்படியொன்றும் நினைத்திருக்கமாட்டாள். ஒருவேளை நினைத்திருக்கலாம். மாறி மாறித் தோன்றக்கூடிய சிந்தனைகளெல்லாம் அவனைத் தனியாக நின்று பேசிக்கொள்ளும் செயலைத் செய்யத் தூண்டின. குழப்பம் முழுமையாக அவனை ஆக்ரமித்திருந்தது.இந்நேரத்தில் சுகுமாரும் உடனில்லை. அவனிடம் சொல்லியாவது, இதற்கு விடையை எதிர்பார்த்திருக்கலாம். அவன் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. இந்தக் கல்லூரி அப்பாவிற்கு செட்டாகவில்லை என்பதால் சொந்த ஊருக்கே செல்லவிருப்பதாகவும் அங்கிருக்கும் கல்லூரியொன்றில் அப்பாவுக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் போனில் முன்பு சொல்லியிருந்தான். அந்நம்பரைத் தொடர்புகொண்டால் எந்த பதிலும் இல்லை. முயற்சி வீணென்றாகிப்போனது.•அடுத்த நாள் அதிகாலையிலேயே பெரிய வண்டியொன்று தெருவில் சத்தம்போட்டுச் சென்றதைக் காதுகள் உணர்ந்துகொண்டாலும் எழும்பாமலேயே கிடந்தவன், போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான். தூக்கம் வரவில்லை. அவளை எப்போது பார்க்கிறேனோ அப்போது, மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். ‘ஐயம் வெரி சாரி. எனக்கு இதுதான் முதல் தடவ. அதான்’ என்று சொல்லிவிடலாம். ஆனால் அதற்கவள், ‘சரி ஓகே. ஆனா எனக்கு மட்டும் இது பழக்கமோ?’ என்று எதிர்க்கேள்வி கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது? குழப்பமே முகத்தின் முன் வந்து நின்றது. என்ன ஆனாலும் சரி. ஒரு

மூன்றாம் விதி

மூன்றாம் விதி

சிறுகதை பாதி பூச்சு வேலை இன்னும் பாக்கி இருக்கு. ஷோகேஸ் வேலை, அடுப்படில கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லாம வீடு கிரகபிரவேசம் நடத்தி, அதில இருந்து வசூலாகுற பணத்துலதான் பாக்கி வைச்ச கொத்தனார் கூலியைக் குடுக்கணுமுனு முடிவு பண்ணீட்டேன். பேங்குல வாங்குன வீட்டுக் கடனுக்கு மேல பிரசனல் லோன், நகைக் கடன் எல்லாம் வாங்கியும் வீட்டை முழுசா கட்டி முடிக்க முடியல. இதுல சில சவரன் நகை ஏலம் போயிருச்சு. கொஞ்சத்த வித்துப்புட்டேன். மொபைல்ல நம்பர் இருக்குற அத்தனை பேருட்டையும் முடிஞ்சளவு கறந்துட்டேன். ஒரு ஹால், ஒரு ரூம் இருக்கிற மாதிரி ஒன்னேமுக்கா செண்ட்டுல அரைகுறையா இந்த வீடு கட்டவே எனக்கு நாலு வருசம் ஆச்சு. அதுக்குள்ள பேங்குக்கு இ.எம்.ஐ வேற கட்ட வேண்டியதாயிருச்சு. இப்படி, இந்த வீட்ட இப்ப கட்டித்தான் ஆகணுமான்னு நினைக்காத நாளே இல்ல. “வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார்”ன்னு பெரியவுக சும்மாவா சொன்னாங்க?! பாதி உசுரும் பாதி உடம்பும் மொத்தமா போயும் முழுசா முடிக்க முடியல. கல்யாணத்தப் பண்ணி பொஞ்சாதியக் கூட்டிக்கிட்டு வந்த உடனேயே, நம்மல திருத்தி வழிநடத்த ஆரம்பிச்சுடறாளுக. என்னமோ நாமலாம் தறிகெட்டுத் திரியுற மாதிரியும் இவளுக வந்துதான் நமக்கு வாழ்க்கைய கத்துக் குடுக்குற மாதிரியும் நம்மல முழுசா வேற ஆளாவே மாதிப்புடுறாளுக. எப்படியாவது சொந்தமா ஒரு வீட்ட கட்டிப்புடணுமுன்னு மண்டைக்குள்ள இறங்கி வெதச்சுப்புட்டா மகராசி. ஆனா நம்ம முடிவெடுத்தா மட்டும் எதுவும் நடந்துடுமா என்ன? புள்ளைய இரண்டுக்கு மொட்டை போட்டு, குலதெய்வம் கோயில்ல கயறு கட்டி, வர்றவன் போறவன் சொல்லுற வேண்டுதலை எல்லாம் அவனவன் சொல்லுற மாதிரியே அப்படியே செஞ்ச பொறவுதான் பேங்கு லோன் சாங்சனே ஆச்சு. அதுவும் அந்த அழகர் கோயில் மலை மேல இருக்குற ஆறுபடை வீடுகள்ல ஒன்னான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலுக்குப் போயி, அங்க பக்கத்துல ஏழு கல்லை எடுத்து அடுக்கி வைச்ச பிறகுதான் கிரீன் லைட்டே எரிஞ்சுது, இந்த ஆபரேசன் ஓன் ஹவுஸ் திட்டத்துல. பத்தாயிரம் ரூபா வாடகை கொடுத்து, ரெண்டு பெட்ரூம் இருக்குற வீட்டுல எல்லா வசதியோட, ஊருக்குள்ளேயே பஸ் ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி, புள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம், எல்லாமே பக்கத்துலேயே இருக்குற மாதிரி ஒரு இடத்துல சௌக்கியமா இருந்துக்கிட்டு இருந்த நாங்க, இப்ப ஊருக்கு வெளியே ரிங் ரோட்டோரம், எந்த வசதியும் இல்லாத, என்ன வேணுமின்னாலும் ஒரு பத்து பதினஞ்சு கிலோமீட்டர் தூரம் போய் வரவேண்டி இருக்கிற இந்த இடத்துல வீட்ட கட்டி, அதுல நம்ம பேர எழுதி சொந்த வீடுனு மார் தட்டிக்கணுமாம். இதுல இந்த இ.எம்.ஐ. மட்டும் பதினஞ்சாயிரம் மாசம் அஞ்சாம் தேதி வந்தா கட்டணும். வாழ மரத்துல இருந்து சாப்பாடு வரைக்கும் வெறும் அட்வான்ஸ் மட்டுமே குடுத்து கிரகப்பிரவேசத்துக்கான வேலைய ஆரம்பிச்சிட்டேன். என் ராசிக்கு ஒம்போது ராசியும் எதிர்த் திசையில இருக்கறதால சிறப்புப் பரிகாரம் பண்ணணுமுன்னு நாலு பக்கத்துக்கு பூசை சாமான் வாங்க லிஸ்ட் வேற தந்தான் அந்த புரோகிதரு. நெருப்புல கொட்டி எரிக்கிறதுக்கு வாங்குன நெய் மட்டுமே ஐநூறு ரூவா. எனக்கு வந்த ஆத்திரத்துல அந்த புரோகிதரையே தூக்கி அந்தத் தீயில போடணுமுன்னு தோனுச்சு. அதுக்கு, எம்பொஞ்சாதி நான் கட்டுன தாலிய எடுத்து அவ கண்ணுல ஒத்திக்கிட்டா. எதிர்பார்த்த மாதிரி ஐநூறு பேத்துக்கு மேல கூட்டம் வந்துருச்சு மதியத்துக்குள்ளேயே. தலைக்கு கொறஞ்சது இருநூறு ரூவா மொய் செஞ்சாலும் இன்னைக்கு ஆகுற செலவுக்கு ஈடாகிருமுன்னு நிம்மதி வந்துருச்சு. கிரகப்பிரவேசத்துக்காக வீட்டு வாசல்ல பந்தல் போட இடஞ்சலா இருந்த அந்த மரத்துக் கிளைகளை வெட்டிப்போட்ட கொப்பு ஒன்னுல காக்கா கூடு ஒன்னு இருந்திருக்கு. வெட்டுனவன் அதைப் பாக்காம வெட்டிட்டான். வாசல்ல இருந்த அந்த மரத்துல ரெட்டைக் கிளை இருந்தா பக்கத்து வீட்டுக்கும் நமக்கும் சண்டை வருமுன்னு அவன் சொன்ன காரணம் ஏத்துகிற மாதிரி இருந்ததால, ஒரு கொப்பை வெட்ட அனுமதிச்சேன். இப்ப அந்தக் காக்கா பாவமுன்னு மனசு வலிக்க அதைப் பாத்தா, அது ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடாம அடுத்த கொப்புல புதுக் கூடு ஒன்ன கட்டி முடிச்சு குடியேறிடுச்சு ஒரே நாள்ல. காக்காவுக்குலாம் எப்படித்தான் அதுக்குள்ள எல்லா லோனும் கிடைக்குதோ! இந்த லோன் வாங்குற கஷ்டத்தைவிடப் பெரிய கஷ்டம் ஒன்னு இருக்குன்னா, அது அந்த கவர்மெண்டு ஆபீஸ்ல அப்ருவல் வாங்குறதுதான். யாராருக்கு எவ்வளவு கொடுக்கணுமுன்னு ஒருத்தன் சொல்லுவான். அவன் யாருன்னு அந்த ஆபீசுல கண்டுபிடிக்கவே நான் நாலு பேத்துக்கு கத்தை கத்தையா செலவழிச்சது போக, டீ வாங்கிக் குடுக்கவே தனியா ஒரு லோன் போட வேண்டியிருந்துச்சு. அங்க இருக்கிறவன் கால்ல விழுந்து கெஞ்சி, காசையும் கொடுத்தாதான் காரியம் கொஞ்சமாவது நடக்கும். ஒவ்வொரு முறை இந்த இடம் ஒருத்தருட்ட இருந்து அடுத்தவனுக்குக் கைமாறும் போதும், இடத்தோட மதிப்புல பத்துல இருந்து இருவது சதவீதம் கவர்மெண்ட்க்கு வரி கட்டிதான் நம்ம பேருக்குக் கிரயம் பண்ணமுடியும். அப்படி இருந்தாலும் அதுல நம்ம இஷ்டப்படி ஒரு வீட்டக் கட்ட நம்மால முடியாதாம். அதைவிட ஒரு கொடுமை என்னன்னா, தண்ணிக்குன்னு போர் ஒன்னு போட்டேன். அதுக்கு கரண்டு கனெக்சன் வாங்கப் போனா, அம்பது மீட்டர் தூரத்துல வாய்கால் ஒன்னு இருக்குன்னு சொல்லி, பி.டபுல்யூ.டி ஆப்பீசுல நோ அப்சக்சன் சர்டிபிக்கேட்டு ஒன்னு கேட்டான். இதுல காமெடி என்னன்னா, அவன் வைச்சுருக்கிற மேப்ல இருக்கிற வாய்கால் நிஜத்தில எங்க இருக்குன்னு அந்த ஏரியாவுல இருக்கிற யாருக்குமே தெரியல. வேலூர்ல இருக்குற வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் போய், பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசி வாங்குன பின்னாடிதான் இந்த தோசம் தீர்ந்து, அந்த அப்ரூவல் கிடைச்சுது எனக்கு. ஏழாவது பந்தி சாப்பாடு போய்கிட்டு இருக்கும்போது பாயாசம் தீர்ந்து போச்சுன்னும் அதுக்கு பதிலா சாப்பிட வர்ர எல்லாருக்கும் ஐஸ்கிரீம் கொடுக்கணுமுன்னும் அவ வந்து மூக்க உறிஞ்ச, இல்ல இல்ல, என் ரெத்தத்த உறிஞ்ச ஆரம்பிச்சுட்டா. பக்கத்தில கடை எதுவும் இல்லாததால மாப்ளைய கூப்ட்டு வண்டியக் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கிவர அனுப்ப, அந்த நேரத்துல கவர்மெண்டு வண்டி ரெண்டு வந்து நின்னுச்சு. அதில இருந்து இறங்குன ஆபீசர்களை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. கிரகப்பிரவேசப் பத்திரிக்கையும் கொடுக்கல. வந்தவங்கள்ல நாலு பேர் அளக்கிற டேப் ஒன்ன எடுத்து, ரோட்டுல இருந்து என் வீடு வரைக்கும் அளந்து பார்த்துட்டு, பின்னாடி இருக்கிற அடுப்படி வரைக்கும் இடிக்கணும், ரிங்ரோடு அகலப்படுத்துறதுக்கு ஆடர் வந்துருச்சு, அடுத்த மாசம் வேலை ஆரம்பிக்கப் போகுது, ஆபீஸ்க்கு வந்து என்னைப் பாருங்கன்னு சொன்னாங்க. மூக்க உறிஞ்சுகிட்டு பக்கத்துல நின்னவ, மூச்சப் பிடிச்சுக்கிட்டு அப்படியே சரிஞ்சுட்டா. எனக்கு ரெண்டு மணி நேரம் என்ன நடந்துச்சுனே தெரியாது. முழிச்சுப் பாக்கும்போது ஏதோ எழவு வீட்டுல இருக்குற மாதிரி ஒப்பாரிச் சத்தம் கேட்டுக்கிட்டு இருந்துச்சு. நாலு வருசத்துக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு அப்ரூவல் கொடுக்கும்போது இந்தமாதிரி பிராஜெக்ட்லாம் இல்லையாம். இப்ப கவர்மெண்ட்டே மாறிருச்சு, சிட்டியும் பெருசாயிருச்சுன்னு ஏதேதோ சொல்ல, எத்தன சாமிக்கு என்னென்ன பரிகாரமெல்லாம் செஞ்சு ஒழுங்கா நியாயமா ஒழச்சுக் கட்டுன வீட்டுல முழுசா ஒருநாள்கூட இன்னும் குடிபோகல. அதுக்குள்ள இந்த மாதிரி நடக்குதுன்னு அத்தனை சாமி மேலயும் கொலவெறி வந்துருச்சு. ஓன் ஹவுஸ்க்கு கிரீன் சிக்னல் போட்டு ஆரம்பிச்சு வச்ச, அந்த அழகர்கோயில் மலை மேல ஒய்யாரமா உக்கார்ந்து இருக்குற பழமுதிர்ச்சோலை முருகன நேருக்கு நேர் பார்த்து, நறுக்குன்னு நாலு வார்த்தை கேக்கணுமுன்னு பொஞ்சாதி புள்ளைகள கூட்டிகிட்டு வந்து சேர்ந்தேன். அங்கே ரோடுலாம் புதுசா, அகலமா, வண்டிங்க வசதியா போய் வர்ற மாதிரி போட்டிருந்தாங்க. நாங்க வேண்டுதலுக்காக அடுக்கி வைச்ச அந்த ஏழு கல்லு எங்கன்னு தேடினோம். எல்லாரும் வேண்டுதலுக்கு கல்லு அடுக்கி வைக்கிற இடத்தை எல்லாம் எடுத்துதான் இங்கயும் ரோட்ட அகலமா போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுது. நிரந்தரமா குடி இருக்கறவங்களவிட அப்பப்ப வந்து போறவங்களோட வசதிதான் கவுருமெண்ட்டுக்கு முக்கியம்னு அப்பத்தான் எங்களுக்குப் புரிஞ்சுச்சு.

சிறுகதைகளின் பேரரசன்

சிறுகதைகளின் பேரரசன்

ஆன்டன் செகாவ் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சுவை, பயன், காலத்தை வெல்லும் தன்மை, பிறந்த இடத்திலே மட்டுமல்லாமல் செல்லும் இடமெங்கும் சிறப்பும் புகழும் பெறுகின்ற தன்மை ஆகிய பண்புகள் ரஷ்ய இலக்கியத்திற்கு உண்டு. மாளிகையிலே மதோன்மத்தராக இருந்தவர்களுக்கு, மாளிகை வாசம் பெற்ற பேனா தூக்கித் தந்த களிப்பு பானம் அல்ல ரஷ்ய இலக்கியம். பசியுடனும் பட்டினியடனும் பாதகருடனும் பாதிரியுடனும் போராடிச் செத்துக்கொண்டிருந்தவர்களுக்காகத் தீட்டப்பட்டது தான் ரஷ்ய இலக்கியம். புதியதோர் உலகு எழ, விழிப்புறச் செய்ததன் மூலம் உலகெங்கும் உயரிய இடம் கிடைத்தது ரஷ்ய இலக்கியத்திற்கு. அந்த வகையில் உலகச் சிறுகதை எழுத்தாளர்களில் முன்னணியில் நிற்பவன் ஆன்டன் பாவ்லோவிச் செகாவ் ஆவான். பிரெஞ்சு இலக்கியத்தை மாப்பசான் எந்த அளவிற்கு அலங்கரிக்கிறானோ அதற்கும் மேம்பட்ட அளவிற்கு ரஷ்ய இலக்கியத்தை அழகு செய்பவன் செகாவ். ரஷ்ய இலக்கியத்தின் பூர்த்தி செய்யப்படாத சிறுகதை மண்டபத்தை ஆடம்பரமாக, கம்பீரமாக எழச் செய்தவன் அவனே. தென் ரஷ்யாவில் உள்ள டாகன் பெர்க் என்ற நகரத்தில் 1860ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிறந்தான் செகாவ். அவனது தந்தை பால் செகாவ், ஒரு பலசரக்குக் கடைக்காரர். அவனது தந்தை வணிகம் செய்ததோடு, உலகைப் பற்றிய நல்ல அறிவையும் பெற்றிருந்தார். பரந்த மனப்பான்மையோடு இருந்த தன் தந்தையின் எண்ணம் நிறைவேறும் வகையில், நன்கு படித்துப் பள்ளி வாழ்க்கையில் வெற்றி கண்டான் செகாவ். வணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக, செலவுக்கு ஏற்ற வருமானம் இல்லாது போயிற்று. ஆகவே, 1876இல் அவனது தந்தை மாஸ்கோவிற்கு இடம்பெயர்ந்தார். மீதி இருந்த பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு 1879இல் ஆன்டன் செகாவும் மாஸ்கோ சென்றான். அங்கே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, 1884இல் மருத்துவரானான். மாஸ்கோவில் மருத்துவராகப் பணிபுரிந்தாலும் அறியாமை நிரம்பிக் கிடந்த ரஷ்யாவில், அறிவின் மதிப்பை உணர்ந்து, இடையறாத தொல்லைகளைச் சமாளித்துக்கொண்டு, தன்னை அறிஞனாக்கிய பெற்றோர்களுடனே வாழ்ந்தான். மாஸ்கோ வந்தது முதலே எழுதுவதில் ஆசை கொண்டு, அவ்வேலையை ஆரம்பித்துவிட்டான். கிட்டத்தட்ட, 1884இல் மருத்துவராக வெளிவரும் பொழுது அவன் முழு வளர்ச்சியடைந்த பத்திரிக்கையாளனாக ஆகி இருந்தான். சில பொழுதுபோக்குப் பத்திரிகைகளுக்குக் கேலிச் சித்திரங்களை வரைந்து வந்தான். அதனால் ஓரளவு வருமானம் கிடைத்தது. 1886இல் அவனுடைய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து, சேர்த்து ஒரு நூல் வெளிவந்தது. அந்த நூல் மக்களின் மனதைக் கவர்ந்தது. அதிகமான பிரதிகளை அச்சேற்றிய மாஸ்கோவின் தினசரிப் பத்திரிக்கையின் ஆசிரியர்களான கிரி கரோவிச், சுவோரின் என்கிற இரண்டு இலக்கியத் தலைவர்களின் கண்களில் அது பட்டு கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு செகாவின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாறுதல் ஏற்பட்டது. அவ்விரு பத்திரிக்கை ஆசிரியர்களும் செகாவைத் தங்கள் தினசரிப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டனர். செகாவின் கதைகளைப் பிரசுரிப்பதற்கு வார இலக்கிய ஏடு ஒன்றை ஆரம்பித்தனர். இவ்வாறாக, பொழுதுபோக்கு இலக்கியத்திலிருந்து உண்மை இலக்கியத் தளத்திற்கு வந்து சேர்ந்தான் செகாவ். 1886 – 1887 ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடைந்த நிலையில், அருமையான சிறுகதைகளை எழுத ஆரம்பித்துவிட்டான் செகாவ். இதே ஆண்டுகளில் நல்ல முறையிலே ஓரங்க நாடகங்களும் எழுதினான். இதனால் அவனது புகழ் வெகு விரைவில் ஓங்கியது. அவனுடைய இலக்கிய வருமானம் அவன் குடும்பம் முழுவதையும் நல்ல நிலையில் வைக்கும் அளவிற்கு வளர்ந்தது. 1890இல், செகாவ் சைபீரியாவை நோக்கிப் பயணம் செய்தான். அந்தக் காலத்தில், பெரிய சைபீரிய ரயில்வே கிடையாது. இருப்பினும் மிகுந்த சிரமத்துடன் ஆவலோடு பிரயாணம் செய்தான். திரும்பி வரும்போது சீனக் கடல் வழியாக இலங்கையைச் சுற்றி வந்து, ரஷ்யாவை அடைந்தான். ரஷ்யாவிற்கு வந்தவுடன் சைபீரியாவிலும் கீழ்க் கோடியிலும் குற்றவாளிகள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்பங்களைத் தனது எழுத்தில் வடித்து, அவற்றைப் போக்க சீர்திருத்த யோசனைகளையும் கூறி ஒரு புத்தகம் எழுதினான். இந்த எழுத்தின் காரணமாக 1892இல் சிறைச் சீர்திருத்தங்கள் பல செய்யப்பட்டன. அவனது எழுத்து வன்மை, நிறைய பணத்தை அள்ளித்தந்தது கைக்கு வந்த பணத்தை எல்லாம் பொதுநலம் குறித்துச் செலவு செய்தான். தான் பிறந்த ஊரான டாகன் பெர்கில், ஒரு நூல் நிலையம் மற்றும் பொருட்காட்சிச் சாலை அமைப்பதற்குப் பொருளுதவி செய்தான். 1892 – 1893 இல் காலராவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக இலவசமாக மருத்துவம் பார்த்தான். 1897இல் காசநோயால் பாதிக்கப்பட்டான். நோய் குணமாவதற்காக, அந்த ஆண்டே காகசஸ் மலைப் பகுதிக்குச் சென்றான். அன்று முதல் அவன் சாகும் வரை காகசஸிலும் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் வாழ்ந்தான். மக்களின் ஊழல்கள், போலி வாழ்க்கை, சிறுமை முதலியவற்றை எல்லா இடங்களிலும் பார்த்து வந்ததால், இவருக்கு மனித சுபாவத்திலேயே நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. இந்த அவநம்பிக்கை அவருடைய இலக்கியம் முழுவதும் பிரதிபலிக்கிறது. புஷ்கின், துர்கனேவ், செகாவ் ஆகியோரால் ரஷ்ய மொழி வளர்ச்சி அடைந்தது. ரஷ்ய மொழி இவர்களால்தான் சிருஷ்டிக்கப்பெற்றது என்று எதிர்காலத்து இலக்கிய, சரித்திர ஆசிரியர்கள் சொல்வார்கள் என்று மாக்ஸிம் கார்க்கி செகாவைப் பற்றிப் புகழாரம் சூட்டுகிறார். ரஷ்ய வசன இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா, உண்மை ரஷ்யாவை மக்கள் முன் வைத்தவனான நிக்கோலி வாஸ்ஸிலி விச் கொகேல், காந்தியின் குரு, உலகம் முழுவதும் உயர்ந்த எழுத்தாளன் லியோ டால்ஸ்டாய், விடுதலை கீதத்தை பரப்பிய தியோடர் டாஸ்டாவஸ்கி ஆகியோர் இவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். 400க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் செகாவ். சொந்த வாழ்க்கையிலும் படைப்பிலும் காதலே அவரது ஆதாரப் புள்ளியாக இருந்தது. ‘பிணத்திற்குத்தான் ஆறடி நிலம் வேண்டும்; மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது. உயிருள்ள மனிதனின் தேவையும் இறந்தவனின் தேவையும் ஒன்றில்லை’ என்ற இந்த வார்த்தைகள், வாழ்வின் மீதான செகாவின் பற்றுதலின் வெளிப்பாடாக உள்ளன. உப்புச் சப்பற்ற, சலிப்புமிக்க, அர்த்தம் புரியாத, துயரம் நிறைந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை, தனது கதைகளில் சுவாரசியமாக வர்ணிக்கும் திறன் மிகுந்தவர். வேறு எந்த எழுத்தாளனாலும் இவரைப் போல் வர்ணிக்க இயலாது. வாழ்வின் அத்தனை அம்சங்களையும் தனக்கே உரிய மாறுபட்ட கோணத்தில் அவரது கதைகள் கொண்டிருக்கின்றன. லியோ டால்ஸ்டாய், தியோடர் டாஸ்டாவஸ்கி ஆகியோர் நாவல்களில் செய்திருக்கும் சாதனையை, இவர் தனது சிறுகதைகளில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். தன் எழுத்தை நம்பகத் தன்மையுடனும் துல்லியத்துடனும் கட்டமைக்கும் ஒரு தொழில்நுட்ப நிபுணன் எழுத்தாளன் என்ற சித்திரத்தை இலக்கிய உலகிற்கு அளித்தவர். செகாவ் தனது கதைகளின் மீதான விமர்சனத்தை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. அதுபற்றிக் கூறும்போது, ‘உழுதுகொண்டிருக்கும் குதிரையை அனாவசியமாகத் தொல்லைப்படுத்தும் ஈயைப் போல விமர்சகர்கள் இருக்கின்றனர்’ என்கிறார். சிக்கலான மனித உணர்ச்சிகளை விவரிப்பதில், மக்களின் உருவ அமைப்புகளை அப்படியே ஓர் ஓவியர் போலச் சித்தரிப்பதில் கைதேர்ந்த ஆன்டன் செகாவ் நினைவு தினம்  (15. 07. 1904) இன்று.

யாவரும் கேளிர்?!

யாவரும் கேளிர்?!

சிறுகதை “குழந்தைக்குக் காய்ச்சல் கொதிக்குது. மருந்து கொடுத்தியா.. இல்ல சீரியல் பாத்துட்டு மறந்துட்டியா?” கேட்டுக்கொண்டே உடை மாற்றும் வேலையில் மும்முரமானார் ரவி. “ரொம்பத்தான் அக்கறை.. மில்லுக்குப் போனா குடும்பத்தை மறக்கற ஆளு.. என்னைய சொல்லாதீங்க. எல்லாம் என்னோட கிரகம். அப்புறம் பேசி என்ன பிரயோசனம்..” பதிலுக்குப் பொருமினார் மங்களம். “அடேங்கப்பா! கரடிவாவிகாரிக்கு வாயப்பாரு.. உன்கிட்ட போட்டி போட முடியுமா? ஊருக்குள்ள நடக்கிற அத்தன கூட்டத்துலையும் பேச்சால துவம்சம் செய்யும் எனக்கு, வீட்ல நேர் எதிர்தா போ..” என்று, ஆரம்பிக்க இருந்த சண்டையை விளையாட்டாக மடைமாற்றிவிட்டு, நிற்காமல் மெல்ல நழுவினார் கொல்லைப்பக்கம். ரவிக்கு திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணி. கம்பீரமான தோரணையும் தெள்ளத் தெளிவான பேச்சும் நேர்மையான நடத்தையும் ரவியைத் தொழிற்சங்கத் தலைவராக உயர்த்தின. ஊதிய உயர்வு, பணி நீட்டிப்பு, போதாக்குறைக்கு வடமாநிலத் தொழிலாளர்களால் பணியிழப்பு என, போராடக் காரணங்களா இல்லை?! போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் முழக்கங்களும் முதலாளிகளுடனான மோதல்களும் தொழிற்சங்கத் தலைவர் ரவியை, சக தோழர்களுக்குப் போராளியாய் அடையாளம் காட்டின. குறிப்பாக, வடமாநிலத்தவரைப் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு சிம்ம சொப்பனமாகினார் ரவி. எல்லாரிடமும் இனிமையாகப் பழகும் பண்புடையவர். ஆனால் வடமாநிலத்தவரைக் கண்டால் அத்தனை வெறுப்பு அவருக்கு. “இந்த வடக்கனுங்க குறைஞ்ச கூலிக்கு வேலை செய்றதால, நம்மாளுக எத்தன பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க?! நம்ம கோட்டியப்பன், தொழில்ல அனுபவமிக்க ஆளு. பழைய ஆளுக்கு சம்பளம் அதிகமா கொடுக்கணும்னு நிறுத்திட்டு, அவரு சம்பளத்துக்கு இரண்டு பேர வேலைக்கு வைச்சுட்டான் இந்த பாழாப்போன கம்பெனிக்காரன். வேலை போன கவலையில, ஆளே போயிட்டாரு. அவருகூட வயசான ஆளு.. நம்ம பீட்டர் பொண்டாட்டி.. வேலையில்லாதவன்கூட வாழ மாட்டேன்னு, குழந்தைய தூக்கிட்டுப் போயிடுச்சு. நம்ம மில்லு வேலைனுதான்னு இல்ல; தமிழ்நாட்டுக்குள்ள எந்த வேலைக்குப் போனாலும் இவனுகதா இருக்கானுங்க. தொழிற்சங்கத்துக்குப் போனா தொழிலாளிகளோட புலம்பல கேக்கவே அத்தன விசனமா இருக்கு. அவங்க ஊர்லயே இருக்க வேண்டியதுதான? இங்க வந்து உயிரெடுக்குறானுங்க பீடா வாயானுங்க.. ச்சே! அவுங்க ஊர்ல யோசிக்காம ஓட்டுப்போட வேண்டியது; அப்புறம் வேலையில்ல, தண்ணியில்ல,பஞ்சம்னு இங்க வந்து நம்ம வேலைக்கு ஆப்பு வைக்க வேண்டியது..” என நார்த் இண்டியன்களை நாறுநாறாய் கிழிப்பார். இத்தனைப் பிரதாபங்கள் கொண்ட நம்ம மாவீரர்தான், இப்போது பொஞ்சாதிக்குப் பயந்து கொல்லைப்பக்கம் ஓடியுள்ளார். சரி.. ‘ஊருக்கு பருப்பா இருந்தாலும் வீட்டுக்குத் தொடப்பக்கட்டதானே?!’ “ஐயோ.. என்னங்க.. ஓடியாங்க. குட்டியப் பாருங்க..” என மரகதம் போட்ட கூச்சலில், தெருவே கூடியது. வலிப்பால் துடித்துக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். “அதிகக் காய்ச்சலால் குழந்தைக்கு வலிப்பு வந்துள்ளது. ஈரத்துணியால் சுற்றப்பட்டு குழந்தை நலமாக உள்ளது. ஊசி போடப்பட்டுள்ளது. இன்று இரவு மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவிட்டு, காலையில் போய்க் கொள்ளலாம்” என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவசர அலாரம் மருத்துவரின் அறையில் ஒலித்தது. பேசிக்கொண்டிருந்த மருத்துவர் அறையைவிட்டு வெளியே ஓட, ரவியும் பின்தொடர்ந்தார். தலையிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட, பதின்ம வயது இளைஞன் ஒருவன் ஸ்டெச்சரில் கிடத்தப்பட்டு, பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது ரவிக்கு. உடன் வந்தவர், “சார், சீக்கிரம் பாருங்க சார்” என பதைபதைத்தார். அவசர சிகிச்சை அறைக்குள் அந்த இளைஞனோடு உள் சென்றார் மருத்துவர். அந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் பாதியில் விட்டுச் சென்ற மருத்துவருக்காகக் காத்திருந்தார் ரவி. வரவேற்பறைக்கு நேர் எதிராக அமைந்த அவசர சிகிச்சை அறையின் கதவைத் திறந்து மூடும்போது உள்ளே நடப்பவற்றையும் பேசுவதையும் ரவியால் தெளிவாகக் கேட்க முடிந்தது. இதற்கிடையில் அந்த இளைஞனை அழைத்து வந்தவர், மதுபோதையில் இருந்த சில இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்வதைக் கவனித்த ரவி, அவருக்கு உதவ அருகில் சென்றார். “என்னங்க பிரச்சனை? என்ன ஆச்சு?” என ரவி கேட்கத் தொடங்கியபோது, மருத்துவர் இவர்களை நோக்கி வேகமாக வந்தார். “அந்தப் பையன் கூட வந்தது யாரு? காயங்களைப் பார்த்தா ஆக்ஸிடண்ட் மாதிரி தெரியல. என்னாச்சுனு அவனைக் கேட்டா இந்தில என்னமோ சொல்றான்..” என்றார். “சார் இந்த நாலு பேரும் அந்தப் பையன அடிச்சுட்டாங்க. நான்தான் தடுத்து இங்க கொண்டு வந்தேன்.” “அப்போ போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாமா?”டாக்டர் கேட்டவுடன் அந்தக் குடிபோதை ஆசாமிகள் காலில் விழுந்து கதறத் தொடங்கினர். “சரி.. நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு, டாக்டர் திரும்ப அறைக்குத் திரும்பினார். ரவியை நோக்கித் திரும்பிய அவர், “அடிபட்ட பையன் வேலை செய்யுற ஹோட்டல்ல நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்; இவங்க நாலு பேரும் வந்ததுலயிருந்து குடிபோதையில பிரச்சனை பண்ணிட்டுதான் இருந்தாங்க. தமிழ் தெரியாத இந்திக்காரப் பையனைக் கூப்பிட்டு, தமிழ்ல ஏதோ சொல்லச் சொன்னாங்க. அவனுக்கு புரியல; திருதிருன்னு முழிச்சான். அவனை கையில் கிடைத்ததை வச்சு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க சார். நல்லவேளையா நான் போய்த் தடுத்தேன். இல்லைன்னா குடிபோதையில் இருந்த இவனுக, அடிச்சே கொன்னுருப்பானுக, பாவம். மொழி தெரியாதனால இவங்க சொன்னதுக்கு பதில் சொல்ல முடியாம இருந்த பையன, ‘பதில் சொல்ல மாட்டியா?’ன்னு கேட்டுக் கேட்டு அடிச்சத பார்க்கவே கொடுமையா இருந்தது சார். என்ன கஷ்டமோ.. சொந்த ஊரு, சொந்த பந்தங்களை விட்டு நம்ம ஊரை நம்பி வராங்க. அவங்களுக்கு உதவி செய்யாட்டியும் பரவால்ல. கஷ்டம் கொடுக்கக் கூடாதில்ல சார்.. இவனோட முதலாளிக்கு இவனோட பேருகூடத் தெரியல. குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ற அடிமையாகத்தான் நினைக்கிறாங்க, பாவம். இதுல, ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ன்னு சொல்லிப் பெருமைப்பட்டுக்கிறோம்.” அவர் சொன்னது, ரவிக்கு நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற உண்மை மெல்லப் புரிந்தது, தொழிற்சங்கத் தலைவர் ரவிக்கு.

தவி:ப்பு

தவி:ப்பு

ஜூன் மாத மஞ்சள் நிற கொதிக்கும் வெயிலின் வெம்மையிலிருந்து விலகி, பயணம் செய்வதற்கு  சாலையோரங்களின் அஸ்திவாரத்தில் அமைந்த இருண்ட படிக்கட்டுக்களைக் கொண்ட தேனாம்பேட்டை மெட்ரோ நிலையத்திற்குள் இறங்கியபடி பலர் சென்றுகொண்டிருந்தார்கள். அந்த இருண்ட பாதாள வளிமண்டல அறைக்குள் நுழையும்போது, நீண்ட அறையெங்கும் எதிரொலிக்கும்படி கணினி ஒலிப்பெருக்கியின் குரல். “விமான நிலையம் செல்லும் அடுத்த ரயில், இன்னும் எட்டு நிமிடங்களில் முதலாம்  நடை மேடையில் வந்தடையும்“ என்று அறிவிப்பு ஒலிக்கிறது. தற்போது ரயில்வே நேரப்படி மணி 14:45. மேற்கூரையிலிருந்து தொங்கும் ஒளித்திரை அறிவிப்பு, ரயில் வரும் நேரம், செல்லுமிடம் போன்ற தகவல்களாக நகர்ந்துகொண்டிருந்தது. பயணச்சீட்டு வழங்கும் கண்ணாடி அறையில் சீருடையணிந்த பணிப்பெண், கணினியின் தொடுதிரையைப் பார்த்தவாறு பணியாற்றுகிறார். அவரது வலதுபுறத்தில் காகிதத்தில் செய்த கப்பல் ஒன்று செய்துவைக்கப்பட்டிருந்தது. அது நீர்மூழ்கிக் கப்பலைப் போன்று அடியாழத்தில் பயணம் செய்வதையும் சில இடங்களில் நகரத்தையே கடலாக்கி அதன் மேல் மிதப்பதைப் போலவும் மேலே பறந்தபடி பயணம் செய்வதைக் குறித்துக்கொண்டிருந்தது. சில்வர் நிறத்தாலான தானியங்கிப் பயணக் கட்டணப் பரிசோதனை வாசலில், பயணிகள் தங்களது பயணச் சீட்டை ஸ்கேன் செய்து உள்ளே சென்றவாறும் வெளியே வந்தபடியும்  இருந்தனர். மனிதன் செவ்வக வடிவமுடையவன். மனிதனால் தன் தேவைக்கு வடிமைக்கப்பட்ட அனைத்து நுழைவாயில்களும் செவ்வக வடிவில்தான் இருக்கும். ஆனால் பயணச்சீட்டு வழங்கும் கண்ணாடி அறையில், கை மட்டும் உள்நுழைய அரைவட்ட வடிவ நுழைவாயில் இருந்தது. அதனுள் டிக்கெட் கொடுக்கும் ஒற்றைக் கையும் அதனைப் பெறும் பல கைகளும் நுழைந்தும் பெற்றும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தன. பயணச்சீட்டு வழங்கும் பெண், தட்டச்சு செய்தபடியே பயணச்சீட்டுகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். தற்போதுதான் பணிக்கு வந்ததைப் போலிருந்தார். காலையிலிருந்து இந்தப் பணியைச் செய்து வந்த  மற்றொரு பெண், ஷிப்ட் முடிந்து வெளியேறும் முனைப்புகளுடன் அந்த அறைக்குள்ளே நின்றவாறிருந்தார். வரிசையில் ஒரு எட்டுப் பேர் நின்றிருந்தனர். முதலில் நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், “கிண்டிக்கு ஒரு டிக்கெட்“ என்றார். “சார், 20 ரூபாய் கொடுங்க“ என்று கணினியைப் பார்த்தவாறு கூறினார். அவர் 100  ரூபாய் கொடுத்தார். அதை வாங்க மறுத்து, “சில்லறை இல்ல சார்“ என்றார். அந்தப் பெரியவருக்கு இரண்டு ஆட்களுக்குப் பின்னால், ஒரு பெண் தனது  ஆறு வயது மகனோடு நின்றுகொண்டிருந்தார். ஒட்டுமொத்தக் காத்திருப்பு வரிசையில் சிறுவனின் இருப்பு, பொருந்தாத அளவில் உயரம் குறைவாக க் காணப்பட்டது.  அவனது தாயின் முகத்தில் ஒரு அவசரப் பார்வை தென்பட்டது. இந்த 50  வயது மதிக்கத்தக்க ஆண், “என்கிட்டயும் சில்லறை இல்லமா“ என்றார். பயணச்சீட்டு வழங்கும் பெண், இப்போது அவர் தந்த நூறு ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டவாறே அவரைப் பார்க்கிறார். பின்னால் நின்றிருந்த அந்தப் பெண் வரிசையில் இருந்து வெளிவந்து, டிக்கெட் கவுண்ட்டருக்குள் பார்த்து  சிடுசிடுப்பான குரலில், “கொஞ்சம் சீக்கிரம்  டிக்கெட் கொடுங்க. என்  பையனுக்கு அவசரமா பாத்ரூம் போகணும்“ என்றார். அவசரத்தை அடக்கும் முயற்சியில் சிறுவனின் முகத்தில் ஒப்பனைக்காகப் பூசிய பவுடரில் வியர்வை வழிந்து, திட்டுத் திட்டாகப் படிந்திருந்தது. “சார், சில்லறை இல்லன்னா ஸ்கேன் பண்ணுங்க சார்” என்றார் பணிப்பெண். மேலும் பயணிகளின் முகத்தை வெறும் சில்லறையாகவே மட்டும் பார்த்துக்கொண்டு, எதையும் காதில் வாங்காமல் விடாப்பிடியாக, மீண்டும் மீண்டும் ஸ்கேன் செய்யும்படி சொன்னதேயே அலட்சியமாகச் சொன்னார். “என்கிட்டே ஸ்கேன் பண்ற வசதி இல்லமா“ என்றார் அவர். வரிசையில் நிற்கும் ஒருவர் தன் கால் சட்டைப்பையில் சில்லறைகளைத் துழாவினார்.  கூடி நிற்கும் பயணிகளின் காத்திருப்பு வரிசையைக் கடந்து சென்று, புதியவர் ஒருவர் கண்ணாடி அறையிலிருக்கும் இன்னொரு பணிப்பெண்ணிடம் பேசுகிறார். “ஒரு வாரத்துக்கு மட்டும்  ட்ராவல் பண்ற மாதிரி டிக்கெட் வேணும்“ என்றார். “நீங்க மெட்ரோ கார்டு வாங்கி யூஸ் பண்ணிக்கோங்க சார்“ என்று அந்தப் பெண் சொல்லக் கேட்டு அவர் விலகிச் செல்கிறார். சிறுவன் அந்தக் காகிதக் கப்பலை வினோதமான கண்களுடன் வரிசையில் நின்றபடி பார்த்தான். நகராத இந்த நீண்ட வரிசை, மூச்சுத் திணறலைக் கொண்ட நோயாளி ஒருவன், நீரில்  மூழ்கி நீர்க்குமிழ்களை எதிர்த்துக் கடினமாக சுவாசித்து மூச்சுக்கு முட்டுவதைப் போல உணர்த்தியது. ஐந்தாவது ஆளாக நிற்கும் 50 வயதுடைய சர்க்கரை பாதிப்புள்ள நபர் ஒருவர் போனில், “சமைச்ச சாப்பாட்ட வீணாக்க வேண்டாம். நான் வீட்ல வந்து சாப்பிட்டுக்கறேன்” என்றார். கணினி, தனது பெண் குரலில் அறிவிப்பை வெளியில் நிரப்புகிறது. “முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக நிலையத்தின் அனைத்து நிலைகளிலும் மின்தூக்கிக்கள் உள்ளன” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒலித்துக்கொண்டிருந்த நேரத்தில், அச்சிறுவன்  அநாதரவான மனநிலையில் புதையுண்டபோது, தன் கால்சட்டையை இரண்டு கைகளாலும் இறுக்கிப் பற்றிக்கொண்டான். அவனுடைய ஒட்டு மொத்தப் புலனடக்கமும் அந்த இறுக்கமான பற்றுதலிலும் முகத்தின் சுழிப்பிலும் இருந்தது. அவன் தன் கண்களை மூடி முகத்தைப் பொத்தினான். அந்த மின்னொளி பரந்த இருண்டஅறை மேலும் இருட்டியது. உறக்கத்தில் நடப்பவன்போல ஒரு அடி முன்னோக்கி வைத்தான். பெரிய மனிதனின் வலிமையான குரலில்லாததால், சிறுவன் தன் அம்மாவின் அனுமதிக்காகக் காத்திருந்தான். புது இடம் என்பதால், அம்மா சிறுவனைத் தன் பார்வையிலிருந்து அகலவிடாமல் பார்த்துக்கொண்டாள். அவசரத்தின் நிர்க்கதியில்  நிற்பதால், இந்த நீண்ட அறை அவனுக்கு வினோதமாகவும் அச்சமூட்டுவாதகவும் இருந்தது. அவன் குரல் அவனுக்குள் மூழ்கியது. ஒரு கட்டத்தில் அவன் வாயிலிருந்து முனகல் சத்தம்கூட வரவில்லை. அவன் உடலிலிருந்து உடனே வெளிவர வேண்டியது அவன் அடக்கி வைத்திருக்கும் சிறுநீர் மட்டுமே. அவனுக்கு இந்த நரக வேதனை அனுபவிக்கும் நீண்ட அறை தேவையில்லை. உடனடித் தேவை கழிவறை. அதுதான் சொர்க்கம். கணினியின் அடுத்த ஒலிபெருக்கி அறிவிப்பு: “விமான நிலையம் செல்லும் அடுத்த ரயில், முதலாம் நடைமேடையில் இன்னும் 5 நிமிடத்தில் வந்து சேரும்.“ அறிவிப்பில் வண்டி வரும் நேரம், ஒவ்வொரு நிமிடமாகக் குறைந்துகொண்டிருந்தது. அவன் சிறுநீரை அடக்கிக் காத்திருக்கும் நேரம், ஒவ்வொரு நிமிடமாகக் கூடிக்கொண்டிருந்தது. அந்த பணிப்பெண்ணிடம் அனைவருக்கும் தரக்கூடிய அளவில் ஆடம்பரமாகவே சில்லறை இருந்தது. ஆனாலும் அவள் கையில் அவர் தந்த 100 ரூபாய்த் தாளைப் பிடித்தபடி, அவரையும்  மேஜை ட்ராயரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். காத்திருப்பின் அளவுகோல் நிமிட நேரத்திலும் மாறாமல் அப்படியே நீடித்துக்கொண்டிருந்தது. சிறுவனுடைய அவசரத்திற்குள் உலகம் மெதுவாக இயங்குவதாகத் தோன்றியது. அறிவிப்பு, ஒவ்வொரு நிமிடமாகக் குறைந்து, ரயில் வரும்  நேரத்தை அறிவிக்க, கடிகார நேரம் கூடிச் செல்லச் செல்ல, மிகவும் குளிரூட்டப்பட்ட அறையிலும் பவுடர் வாசம் கலந்த வியர்வையில் சிறுவனின் குறு மயிர்கள் சிலிர்த்துக்கொண்டிருந்தன. சிறுநீரை வெளியேற்ற விடாமல் சூழல் தடுக்க, உள்ளுக்குள் அடக்கமுடியாமல் அவனும் தடுமாறினான். பதற்றமான கோணத்தில் அவன் கண்கள் உருமாறி, அங்கிருந்து கழிவறை நோக்கி ஓட முயன்றபோது,  இறுக்கிய அம்மாவின் பிடியை உறுவிக்கொள்ள முனைந்தான். அவனது அம்மா தடுக்கிறார். உடம்பில் ஊசி குத்துவதைப் போன்ற ஒரு தவிப்பு. டாக்டரிடம் ஊசி போட்டுக்கொள்ளும்போது, அவன் திமிறினால் அம்மா எப்படிப் பிடிப்பாரோ, அப்படியிருந்தது சிறுவனுக்கு. மனிதன் பழக்கத்திலும் பழக்கத்திற்காகவும் வாழ்பவன். கட்டுப்பாடுகள் தனிநபரின் பழக்கவழக்கத்தை எப்படியெல்லாம் அடிமைப்படுத்துகிறது! பழக்கத்தை ஒதுக்கித் தள்ள முடியாமலும் பழக்கவழக்கம் நடைமுறைச் சட்டங்களால் பாதிக்கப்படும்போதும் மனிதன் குழப்பமடைந்து தோல்வியடைகிறான். ஆகவே சட்டம் தடுக்கும்போது பழக்கவழக்கமே ஆட்கொள்ளும். வாழ்க்கையில் தனிநபரைவிட, சமூக நிர்ப்பந்தம் உயர்ந்த அலகு இல்லை. “கொஞ்சம் பொறுடா.. ஏன்டா இந்த அவசரம் உனக்கு?“ என்று அவனது அம்மா இயற்கைக்கு மாறாகக் கேட்டார். அதிலும் மூன்றாம் மனிதர்கள் முன் எச்சரிக்கப்பட்டது அவனுக்கு எரிச்சலூட்டியது. பொறுமையிழப்பதற்கு பதிலாக, குறைந்தபட்ச யதார்த்தத்தை உணர ஆரம்பித்தான். இதென்ன பெரிய விசயம், இதெல்லாம் சாதாரணம் என்பதுபோலப் பணிபெண்ணின் அலட்சியம் இருந்தது. சிறுவன் எந்த சுயவிருப்பமுமின்றி இருந்தான். அச்சிறுவனின் அப்பாவித்தனமும் வெளிப்படையான குணமும் சுற்றியிருப்பவர்களின் நெஞ்சைக்கூடக் குத்தவில்லை. தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளாமல் அவரவர் தங்கள் அவசரத்திலேயே, கவணின் உச்சியைத் தொட்ட கல்போல இருந்தனர். அவசரம், பயணிகளுக்குத்தானேயொழிய, பணிப்பெண்ணுக்கு அல்லவே. சிறுவனின் அம்மா, “சீக்கிரம் கொடுங்கன்னு சொல்லிட்டே இருக்கேன்ல.. அவசரமா போகணும்“ என்று பொரிந்தாள். தற்போது சாப்பிட்டு முடித்த மயக்கத்தோடு, சோம்பலின் பலமான கொட்டாவியை விட்டபடி, முன்னால் நின்ற பயணிக்கு சில்லறையும் டிக்கெட்டும் கொடுத்தார். மனிதனின் அவசரத்திற்குக் குறைந்தபட்ச உதவி செய்யாவிட்டாலும் சிறுவனிடமோ அம்மாவிடமோ, தன் தவறை உணர்ந்ததாக ஒரு புன்னகைகூட முகத்தில் காட்டவில்லை. சிறுவனின் சித்ரவதைக்குள்ளான காத்திருப்பும் ஏறக்குறைய நம்பிக்கையற்ற எதிர்பார்ப்பும் கடந்தன. அந்த அம்மா டிக்கெட் பெறும் கணத்தில்கூட, அவனது அவசரத்திலும் அங்குள்ள காகிதக் கப்பலை ரசித்துக்கொண்டிருந்தான். டிக்கெட் பெற்றவுடன், காத்திருப்பின் நேரத்தையும்  வலியையும் ஒருசேரத் தன் பாதத்தில் கடத்தி மிதித்தபடி, சற்று வேகமாக, ஆசுவாசம்  நிறைந்த கழிவறை நோக்கி அம்மாவும் சிறுவனும் விரைந்தனர்.

வேர்

வேர்

சிறுகதை ஆறு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. கைப்பையை விரித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். இந்தப் பயணம் மூன்றாவது முறை. மிக நீண்ட பயணம் ஒன்று பள்ளிக்காலத்தில் கிடைத்தது. இப்போது இருக்கும் வாந்தி மாத்திரைகள் இல்லாத காலம். எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்து பசுமையை அதற்குண்டான இளம் சாரளைக் கொண்டு நகர்த்திய நாள் அது. சுமை என்ற ஒன்று இல்லாத காலம் இருந்ததில்லை அப்பாவிற்கு. ‘அவளுக்கு இல்லாம என்ன?’ என்ற வார்த்தைகளைத் தவிர வேறெதையும் பகிராத குணம் அது. அப்பாவும் அம்மாவும் சிரித்துப் பேசிப் பார்த்ததில்லை. இத்தனைக்கும் ஒரே பெண்தான் நான் அவர்களுக்கு. பெரியதாக சண்டை ஏதும் நடந்ததாக ஞாபகம் இல்லை. ‘இன்றைக்கு ஏன் இத்தனை ஆராய்ச்சி?’ என்று தோன்றிய நொடியில், காரின் சத்தம் கேட்டுக் கலைந்து கைப்பையோடு வெளியேறி தொற்றிக்கொண்டேன். பழைய வீட்டிலிருந்து இந்தப் பயணம் தொடங்கியிருந்தால் இந்நேரம் அப்பா கதவருகில் வந்து நிற்பார். எல்லா தைரியங்களை கற்றுத் தந்துவிட்டாலும் இன்னும் ஏதோ ஒன்று மிச்சமிருப்பதற்கான சந்தேகமது. ‘என்ன பார்த்தாலும் எல்லாம் பார்க்க முடியாது’ என்பதை அம்மா ஒருமுறை வேறொரு மொழியில் சொல்லும்போது அவருக்கு இன்னும் இரக்கம் வந்தது. பெண் பார்த்துவிட்டுப் போனவர்களைப் பற்றித் தனியாகக் கட்டுரை ஒன்றைத் தயார் செய்துகொண்டு வந்து சமர்ப்பித்தார். தேர்வுத் தாளில் என் மதிப்பெண்ணைக் கூட்டி சரி பார்க்கும் மனநிலையில் வளர்த்தவருக்கு வேறென்ன தெரியும்! ஒன்று நூறு அல்ல; ஆயிரம் முறை எந்த அர்த்தத்தில் கேட்டாலும் எனக்கென்று எந்தத் தனிப்பட்ட விருப்பமுமில்லை என்று நானாகவே நேரடியாகச் சொன்ன பின்புதான் திருமணத்தின் அடுத்த பக்கத்தைப் பார்க்கப் போனார். அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. “நீ சாப்பிடல.. என்ன பண்ணப் போற…?” அவளுக்கு வேறென்ன கேட்கத் தெரியும்? நிழலில் வளர்ந்த செடி அவள். புதிதாக எதையும் அனுமதிக்காத பூங்காச் செடி. அப்பாவையும் என்னையும் தவிர வேறொரு உலகம் அறியாதவள். ஒருவேளை நானும் அம்மாவை ஒத்திருந்தால், இந்தப் பயணத்திற்குத் தேவை இருந்திருக்காதுதான். பறக்கத் தொடங்கி, பேசும் நேரம் நீண்டு, ஒரே மாதத்தில் இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டோம் என்ற முதல் பொய் வானம் போல நீலமாய் இருந்த நாள் அது. என்னுடைய வருமானத்தையும் இன்ன பிற சாகச விருப்பங்களையும் சொல்லிகொண்டிருந்தேன் அப்போது. எதிரிலிருந்து வரும் வார்த்தைகளின் கனத்தைக் கூர்ந்து கவனிக்கும் சாகசத்தை அப்பா எனக்குக் கற்றுகொடுக்கவில்லை. துணை என்ற ஒன்றை இருபாலரும் இவ்வளவு உணர்வுகளைக் கொண்டு அணுகவேண்டிய அவசியமில்லை என்பதை நான் புரிந்துகொள்ள இருபது மாதங்களாயின. ‘நடுவில் அறுத்தாலும் வளரும் மரம் உள்ளபோது, மனிதனுக்கு வேர் இல்லாமலா போகும்?’ என்ற சொலவடை எதன் வழியாக வந்ததோ?! இதோ, இந்தப் பயணமும் அதன் வழியாகத்தான் நிகழ்ந்தது. எனக்காக இளையராஜாவை நிறுத்தி வைத்துவிட்டு, உணவகம் ஒன்றில் நுழைந்தார் ஓட்டுநர். பசிக்கிறது. எதையாவது விழுங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். “நான் வீட்டுல சாப்பிட்டு வந்துட்டேன்… நீங்க சாப்பிடுங்க” என்று விலகிக்கொண்டார். மணி பத்தைத் தாண்டியிருந்தது. மாநகரத்தை நோக்கிய சாலையில் இருக்கும் உணவகம் அது. மென்சூட்டில் வந்த சப்பாத்தியை, அன்றொரு நாள் மாத்திரை விழுங்கியதைப் போல விழுங்கினேன். ‘நீ அப்படியேதான் இருக்கிறாய் ‘என்ற குற்றவுணர்வும் வந்து போனது. வெகுவிரைவாக வாகனம் ஏறி அமர்ந்து பயணமானோம். கடைசியாக, அடம்பிடித்த குழந்தையின் வாயில் திணித்த மிச்சச் சோற்றோடு ஒரு தகப்பன் அங்கிருந்தான். எனக்கு அப்பாவைத் தவிர வேறொருவரை அங்கு நிறுத்தி ஒப்பிட முடியவில்லை. ‘இனி உன்னோடு வாழ முடியாது’ என்ற வாக்கியம் நேரடியாக வரும்வரை காத்திருக்கப் பழகியவள் எவ்வளவு முட்டாளாக இருப்பாள்?! ஆம், நான் முட்டாள்தான். இல்லையென்றால் அப்படிக் கேட்டிருப்பேனா? ‘இந்தப் புகைப்படத்தில் இருப்பவள் யார்?’ பரவலாக திருமணத்திற்கு முன்பு பேசிய பொய்யைப் போல, ஏதாவது சொல்லியிருக்கலாம். ‘மவுனம் பொய்யைவிடக் கனமானது’ என்று யார் எனக்கு சொல்லித் தந்தார்கள்?! இரண்டாம் நாள் இரவில், இருவரில், எனக்கு எந்த நெருடலும் இல்லைதான். மிக வேகமாக வெளியேறிப்போன உன் குற்றவுணர்வு, என்னுடன் படுக்கையில்தான் இருந்தது. நீ மறந்து, விட்டுச் சென்றுவிட்டாய். ஒரு கேள்வியில் இத்தனை பதில் கிடைக்கும் என்று எனக்கு அப்போது தெரியாது. என் அப்பாவை நீ, ‘வா’ என்றாவது அழைத்திருக்கலாம். மகளைப் பெற்ற அப்பாக்கள் பெரும்பாலும் மரியாதையைக்கூட எதிர்பார்ப்பதில்லை. ‘எனக்கு வெளியில் வேலை இருக்கிறது. நீ உன் வீட்டில் இரு’ என்று சொன்ன நீ, ரயில் நிலைய வாசல் வரை ஏன் எதுவும் சொல்லவில்லை? எல்லா அழைப்புகளிலும் விருப்பமில்லாமல் பேசிய உன் வார்த்தைகள் என் வீட்டுச் சுவற்றில்கூட இல்லை. ஆண்கள் என்றால் தைரியசாலிகள் என்ற மனநிலையை, கண்டிப்பாக நான் என் அப்பாவிடம் கற்றுக்கொள்ளவில்லை. அவர் வாழ்வில் தைரியம் என்பது வேறொன்று. இருபுறமும் காவேரி, எந்த இரைச்சலும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தாள். சொல்லப்போனால், நதியின் வாழ்வுதானே பெண்ணின் வாழ்வு! வேறு வழியில்லாமல் இருவரும் தானாக உருவாக்கியதைப் பெருமையாகக் கருதாமல் கரைந்துபோகிறார்கள். நதிதானே இங்கே கடலை உருவாக்கியது?! வேறு காட்சி வேண்டாம் என்று கண்ணாடியை ஏற்றிக்கொண்டேன். “முதல்ல அவருக்கு சொல்லு. இல்ல.. நான் சொல்லட்டா?” அம்மாதான் தொடங்கினாள். சில சம்பவங்களை உடனடியாகக் கடத்திவிடுவதுதான் சரி எனப் புரிந்துகொண்ட சந்தர்ப்பமது. “அதுக்கு என்ன…?” என்ற உன் கேள்வி, திருமண வாழ்வில் முதன்முறையாக எனக்கு கண்ணீரைத் தந்தது. “நான் ரெண்டு நாள்ல வந்துருவேன்… அப்படியே இரு” என்பதன் அர்த்தம், ‘எந்தக் கற்பனையும் என் கற்பமும் வேண்டாம்’ என்ற அறிகுறியாக எனக்குத் தென்படவில்லை. அம்மாவை வெளியில் அமர்த்திவிட்டுதான் பேசத் தொடங்கினோம். எனக்கு உன்னோடு வாழ விருப்பமில்லை என்கிற வார்த்தைகளை மிக நாசூக்காக வெளியில் கொட்டிக் கிளறிக்கொண்டிருந்தாய். மீண்டும் ஒருமுறை நான் அழத் தயாராக இல்லை என்பதே உனக்கு அதிர்ச்சியாகவும் ஆசுவசமாகவும் இருந்திருக்கலாம். எனக்கு அங்கேயும் ஒரு ஆறுதல் இருந்தது. என் அப்பாவின் தேர்வு தவறானது என்பதை, அவர் அறியாமலே இறந்து போனது. குழந்தை எனக்கு வேண்டாம் என்பதை, எவ்வளவு அழகாக உன்னால் சொல்ல முடிந்தது?! ‘உன் வாழ்வு எதிர்காலம் இல்லாமல் போகும்’ என்று எனக்கு நீ தந்த அறிவுரை, தேவையான ஒன்றுதான். அதனால்தான் உன் கையெழுத்து கொண்டு கரு கலைத்தேன். நாளை அது கேட்கும் கேள்விகளுக்கும் உன்னிடம் மவுனம்தானே இருக்கும்? இதோ, மாநகர எல்லை வந்துவிட்டது. நாளைய இறுதித் தீர்ப்பில் எல்லாம் முடிந்துபோகும். என்னிடம் எல்லாப் பெண்கள் முன்வைக்கும் கேள்வி இருக்கிறது. ‘என்னைவிட எதில் அவள் உயர்ந்தவள்?’ என்ற கேள்வி. நிச்சயமாக நான் அதைக் கேட்கமாட்டேன். உன்னைவிட நானும் தாழ்ந்துவிடவில்லை என்ற நம்பிக்கை வந்த பின்பு, உன் மவுனத்தைவிட இந்த வாழ்வு பெரியதாகத் தெரிகிறது. அன்பைச் சுமந்து வளர்ந்தவளிடம் வேறென்ன வெளிவரும்? எப்படி எல்லாப் பெண்களும் உனக்கு ஒன்றுபோல் இல்லையோ, அப்படியே எனக்கும் எல்லா ஆண்களும் ஒன்றுபோல் இல்லை. ‘நீ வெட்டியது மேல் கிளைதான். எனக்கு இன்னும் வேர் இருக்கிறது’ என்ற எண்ணம் வந்தபோது அனிச்சையாக இளையராஜா பாடிக்கொண்டிருந்தார். நன்றாகத் தூக்கம் வந்தது.

இலக்கியம் ஒரு தொழில் அல்ல

இலக்கியம் ஒரு தொழில் அல்ல

புதுமைப்பித்தன் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சமூக விமர்சனத்தையே முனைப்பாகக் கொண்டு எழுதிய படைப்பாளி புதுமைப்பித்தன். கூர்மையான சமூக விமர்சனங்களை, பகடியுடனும் முற்போக்குச் சிந்தனையுடனும் இலக்கியச் சுவை பொலிந்திட எழுதியவர். இவரது இயற்பெயர் சொக்கலிங்கம் விருத்தாச்சலம் (சொ.வி) ஆகும். 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25இல் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் தனது தொடக்கக் கல்வியைப் பெற்றார். இவரது தந்தை நிலப்பதிவுத் தாசில்தாராகப் பணிபுரிந்து 1918இல் ஓய்வுபெற்ற பிறகு திருநெல்வேலிக்குத் தனது குடும்பத்துடன் திரும்பினார். புதுமைப்பித்தனின் தாயார் பெயர் பர்வதத்தம்மாள். பின்னாளில் அவரது பெயரில் பர்வதக்குமாரி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, திரைப்படத் தயாரிப்பில் இறங்கினாலும் அதில் அவரால் வெற்றி பெற இயலவில்லை. பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் திருநெல்வேலியில் முடித்த இவர் 1931இல்தான் பி.ஏ. பட்டம் பெற முடிந்தது. 1932 ஜூலையில் புதுமைப்பித்தனுக்கும் திருவனந்தபுரம் பி.டி. சுப்பிரமணியப் பிள்ளை மகள் கமலாவிற்கும் திருமணம் நடந்தது. இவரது முதல் படைப்பான குலோப்ஜாம் காதல் 1933 அக்டோபர் 18இல் காந்தி இதழில் வெளிவந்தது. 1934 ஏப்ரல் முதல் இவரது படைப்புகள் மணிக்கொடி இதழில் வெளிவரத் தொடங்கின. மணிக்கொடியில் வெளியான முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். 1934 முற்பகுதியில் சென்னைக்குக் குடிவந்த புதுமைப்பித்தனது படைப்புகளில் அவர் வாழ்ந்த இடங்களின் வட்டாரத் தமிழ் இடம் பெற்றிருப்பதை வாசகர்கள் காண இயலும். குறிப்பாக, திருநெல்வேலியும் வண்ணாரப் பேட்டையும் திருநெல்வேலி வட்டார மொழியில் அவரது படைப்புகளில் துலங்கும். கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணி ஆண்டுமலர், நந்தன் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றிருந்தன. எழுத்துலகப் பணியில் 15 ஆண்டு காலம் இவரது எழுத்துக்கள் புதிய வழித்தடத்தை உருவாக்கின. இவரது படைப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிப்பதைக் காண முடியும். புதிய பரிசீலனைகளுக்கு இ டம் கொடுக்கும், உற்சாகமூட்டும், வரவேற்கும் பத்திரிக்கையாகத் திகழ்ந்த மணிக்கொடியில், இவரது 45 படைப்புகள் வெளிவந்துள்ளன. அவர் தனது கடைசிக் காலத்தில் ஏற்பட்ட கடும் பண நெருக்கடியின் காரணமாக, பல பத்திரிகைகளுக்குத் தமது கதைகளை வெளியிடக் கொடுத்திருக்கிறார். தமக்கே உரிய வைரம் பாய்ந்த சொல்லாட்சித் திறன், எழுதும் கதைகளின் காலம், களம், பாத்திரங்கள் ஆகியவற்றுக்கேற்பக் கையாளுகின்ற மொழிநடை, கதைக் கருத்துக்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தனித்தன்மை, சமுதாயச் சிறுமைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராகச் சாட்டையடிபோல் எழுப்பும் கலகக் குரல், நகைச்சுவைத் திறன், வாழ்க்கையை எதார்த்தபூர்வமாகவும் விமர்சனப் பார்வையோடும் சித்தரிக்கும் பாங்கு, கதையின் வடிவமைப்பில் பலப்பல புதுமைகள் முதலிய பல்வேறு சிறப்புகளால் தமது காலத்தைச் சார்ந்த ஏனைய சிறுகதை எழுத்தாளர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்ட, மாறுபட்ட ஈடு இணை இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தவராக விளங்கியவர் புதுமைப்பித்தன். இவரது படைப்புகளைத் தமிழ்நாடு அரசு 2002இல் நாட்டுடைமையாக்கியது. 1934 ஆகஸ்ட் முதல் 1935 பிப்ரவரி வரை ஊழியனிலும் 1935 ஜூலை முதல் 1943 செப்டம்பர் வரை தினமணியிலும் உதவி ஆசிரியராக இருந்துள்ளார். தினமணி நிர்வாகத்துடனான மோதலில் அதன் ஆசிரியராக இருந்த டி. எஸ். சொக்கலிங்கம் பொறுப்பிலிருந்து விலகியபோது, இதர உதவியாசிரியர்களுடன் சேர்ந்து புதுமைப்பித்தனும் விலகினார். 1944இல் டி. எஸ். சொக்கலிங்கம் தொடங்கிய தினசரியில் சேர்ந்து பணியாற்றினார். வாசிப்பைப் பொறுத்தவரையில் எப்போதுமே புதுமைப்பித்தனுக்கு ஒரு தணியாத தாகம் இருந்தது. சொந்தத்திலேயே ஏராளமான புத்தகங்கள் வைத்திருந்தார். கையில் பணம் புரள்கிற வேளையில், புத்தகக் கடைக்குள் நுழைந்து விலையைக்கூடப் பாராமல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வருவது அவரது பழக்கமாக இருந்தது. வாங்கிய புத்தகங்களை வாங்கிய சூட்டோடு படிக்கவும் செய்தார்; மாதக்கணக்கில் படிக்காமல் போட்டும் வைப்பார். தனியாக இருக்கும் வேளையில் எதையாவது படித்துக்கொண்டுதானிருப்பார். பழைய இலக்கியங்களிலும் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. புதுமைப்பித்தனின் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் மண்டிக் கிடந்தன. இருப்பினும், தான் ஒரு இலக்கிய கர்த்தாவாக ஆக வேண்டும் என்ற தாகமும் வேகமும் அவரிடம் இருந்தன. அந்தப் பிடிப்பு மட்டும் இல்லாது போயிருந்தால், அவர் என்றோ தற்கொலைகூடச் செய்துகொண்டிருக்கக் கூடும். வாழ்க்கையில் அவர் அனுபவித்த கசப்பு, அவரது படைப்புகளிலும் பிரதிபலித்தது. அதனால்தான் அவரது சிறு கதைகளில் நம்பிக்கை வறட்சி தென்படுவதைக் காண இயலும். அதனை அவரே, ‘தம் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சிதான்’ என்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். மணிக்கொடி பத்திரிக்கையில் வேலை பார்த்தபோது, சிறிது காலம் சம்பளம் எதுவும் இல்லாமல் சேவை செய்தார். பத்தாண்டு காலத்திற்கும் மேலாக தினமணி, தினசரி ஆகிய இதழ்களில் மாதச் சம்பளம் பெற்று வேலை பார்த்துவந்தார். தினசரியை விட்டு விலகியதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. வேறு பத்திரிக்கையில் சேர்ந்து வேலை பார்த்தாலும், தினசரி இதழில் வந்த அளவுக்கு வருமானம் வராது போல் இருந்தது. எனவே பொருளாதார நெருக்கடி காரணமாக, திரைப்படத்துறையில் நுழைந்தார். அவருக்கு கலைச் சாதனத்தில் தனித்த ஈடுபாடு எதுவும் கிடையாது. தமது போக்குக்கும் எழுத்துக்கும் அந்தத் துறை ஒத்து வராது என்று தெரிந்திருந்தும் துறையின் போக்குக்கு ஒத்துப்போய் சினிமாவுக்கு எழுத முற்பட்டார். ஜெமினி நிறுவனத் தயாரிப்பான அவ்வை, காமவல்லி ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளார். சினிமாவில் வரும் பணத்தைக்கொண்டு தமது ஆத்ம திருப்திக்காக அவர் ‘சோதனை’ என்ற பெயரில் ஓர் இதழ் தொடங்கிடத் திட்டமிட்டார். ஆனால் அவரது ஆசைக் கனவு கருகிப் போய்விட்டது. பிறமொழிக் கதைகளைத் தழுவி எழுதுவது என்பது புதுமைப்பித்தனுக்குப் பிடிக்காத விஷயம். பிறமொழிக் கதைகளை மொழிபெயர்த்துதான் தர வேண்டும் என்பது அவரது விருப்பம். திருட்டு இலக்கியம் படைப்பவர்களைப்பற்றி புதுமைப்பித்தன் கூறும்போது, ‘இன்னொருவன் கதையைத் திருடி, தன் சொந்தக் கதை என்று கூசாமல் உரிமை கொண்டாடிக்கொள்பவர்களை, சோரம் போன மனைவிக்குப் பிறந்த பிள்ளைக்குத் தானே தகப்பன் என்று கூறிக்கொள்ளும் வெட்கம் கெட்டவர்களுடன்தான் ஒப்பிடலாம்’ என்று ஒருமுறை கூறியுள்ளார். ‘நேர்மையான புகழ்தான் இலக்கியக் கர்த்தாவுக்கு ஊக்கம் அளிக்கும் உணவு. அதைக் கொடுக்கக்கூடிய சக்தியற்ற கோழையாக இந்தச் சமூகம் இருக்கிறது’ என்று அவர் கூறுகிறார். ‘கம்பன்தான் எனக்குத் தமிழ் நடையைக் கற்றுத்தந்தவன்’ என்று கூறும் புதுமைப்பித்தன், தனது உயிர் ஊசலாடும் வேளையிலும் இலக்கியத்தைப் பற்றிதான் நினைத்துக்கொண்டிருந்தார். எண்ணற்ற சிறுகதைகள், சிறந்த கட்டுரைகள், அருமையான கவிதைகள் என்று எழுதி எழுதிக் குவித்தும் சலியாத புதுமைப்பித்தனால், தனது இறுதிக் காலத்தில் ஒரு வரிகூட எழுத முடியாத நிலை ஏற்பட்டது. காச நோயால் உருக்குலைந்த உடலுடன் புனேவிலிருந்து வந்திருந்த புதுமைப்பித்தனைப் பார்த்து அவரது நண்பர் திருவனந்தபுரம் சிதம்பரம், ‘இத்தகைய உடல் நிலையில் இவ்வளவு தூரம் எப்படி வந்தீர்கள்?’ என்று கேட்டார். புதுமைப்பித்தனோ, ‘உணர்ச்சிதான் காரணம். எனது மகள் தினகரியின் நினைவு என்னை இங்கே இழுத்துக்கொண்டு வந்தது’ என்றார். சுகத்தை விரும்பிச் சென்ற புதுமைப்பித்தனது புனே வாழ்க்கை, அவருக்கு வேதனையைத்தான் தந்தது. அவர் எழுதிய ‘மகா மாசானம்’ என்ற சிறுகதையில், சென்னை மவுண்ட் ரோட்டில் யாருடைய கவனிப்புக்கும் ஆளாகாது செத்துக்கொண்டிருந்த துலுக்கப் பிச்சைக்காரனைப்போல, புதுமைப்பித்தன் செத்துக்கொண்டிருந்தார். தான் சாவதற்கு முந்தைய தினம் சிதம்பரத்திடம், தமது பாட்டரி விளக்கைக் கொடுத்து, ‘இதற்குப் பாட்டரி போட்டு அனுப்பு’ என்று சொல்லிவிட்டு, ‘எழுத்தாளனுக்கே ஒளி பேரிலேதான் ஆசை போலிருக்கு. நான் போகிற பாதை எல்லாம் வெளிச்சமாக்க விரும்பினேன். இப்போ இருட்டிலே நடக்க ஒளியை விரும்புகிறேன்’ என்றார். உலகத்திற்குத் தமது இலக்கியத்தால் ஒளி தந்த புதுமைப்பித்தன், தான் மட்டும் இருட்டில் மறைந்து போவதற்கு அஞ்சவில்லை. சாகின்ற காலத்திலேயும் அவர் சிரித்துக்கொண்டுதான் மரணத்தை வரவேற்றார். புதுமைப்பித்தன் செத்துக்கொண்டிருக்கும்போது, ‘கமலா, கடைசியாக இந்த உலகத்துக்கு நான் விட்டுச்செல்வது ‘ராஜ முக்தி’ படமும் தினகரியும்தான். கவலைப்படாதே! உன்னை நல்ல நிலையில் வைக்க விரும்பினேன்; ஆசைப்பட்டேன். ஆனால் விதி என்னை இந்தக் கோலத்துக்குக் கொண்டுவந்துவிட்டது’ என்று பேசினார். அவரது மனைவியும் ‘வானத்து அமரன் வந்தான் கான், வந்தது போல் போனான் கான்’ என்று புலம்பவில்லை. ‘எழுதி எழுதிக் கையும் வீங்கிற்றே! உயிரும் கொடுத்தாயே!’ என்றுதான் புதுமைப்பித்தனின் மனைவி கமலா ஊனுருகக் கதறினார். தமிழுக்காக உழைத்து, தமிழ் வாழத் தம் உயிரை மாய்த்த, விலைமதிக்க முடியாத எழுத்துக்களைத் தந்தவர் புதுமைப்பித்தன். தீ நாக்குகளுக்கு அவர் இரையான இந்த நாளில், “இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டு விடாதே. அது உன்னைக் கொன்றுவிடும்” என்று அவர் சொன்னதை நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

அவன் என்னைப் போலவே இருப்பான்

அவன் என்னைப் போலவே இருப்பான்

சிறுகதை கம்பீரமான சிவப்புக் கட்டடத்தில் பரபரப்பான திருவல்லிக்கேணியில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகவும் பழைமையான மகப்பேறு மருத்துவமனை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை. இப்போதும் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. ஆனால் கோஷா ஆஸ்பிடல் என்றால் சின்ன குழந்தைகூட வழி சொல்லிவிடும். கிட்டத்தட்ட முந்நூறு வருடங்களுக்கும் மேலாக இது ஓய்வின்றி இயங்கிவருகிறது. அன்றைய மெட்ராஸில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் இங்கே பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இது அரசு இலவச மருத்துவமனையாக இருப்பதால் இன்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழைகளுக்கு இந்த மருத்துவமனை ஒரு வரப்பிரசாதம் எனலாம். அந்த கம்பீரமான சிவப்புக் கட்டடத்திற்கு வெளியே உள்ள மேடைகளிலும் பெஞ்சுகளிலும் இரவும் பகலும் தங்கள் பெண்களைப் பிரசவத்திற்காக அனுமதித்துவிட்டு நல்லபடியாகக் குழந்தை பிறக்க வேண்டுமே என்று தங்கள் குலதெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கும் தாய்மார்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். அங்கே பார்வையாளர்கள் நேரம் என்பது காலை ஏழிலிருந்து ஒன்பது, மாலை நான்கிலிருந்து ஆறு என்பது பெயருக்குத்தான். வாசலில் இருக்கும் வாட்ச்மேனிடம் காசைத் திணித்துவிட்டு விடுவிடுவென்று உள்ளே சென்று பார்த்து வருபவர்களும் உண்டு. இரவில் யாரும் பேஷண்டுடன் தங்குவதற்கு அனுமதியில்லை. ஆனாலும் வார்டுகளை ஒட்டியுள்ள வராண்டாக்களில் வார்டு ஆயாக்களை கவனித்துவிட்டு ஒளிந்து அமர்ந்து தங்கள் பெண்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் பெண்மணிகளைக் காணலாம்,. அவர்களை விரட்டுவதுபோல் விரட்டிக் காசு வாங்கும் ஆயாக்கள் சரியாக மாலை ஆறு மணிக்கெல்லாம் கையில் ஒரு சிறு கம்பினால் கட்டில்களைத் தட்டிக்கொண்டு வந்து “யாரும்மா அங்கே..? டைம் முட்ஞ்ச்சி போச்சி.. போ..போ.. அட இன்னாமா.. நா சொல்லிகினே கீறேன்.. குந்திகினே கீறே.. டாக்டரு வந்தா நா தான் மாட்டிக்கிவேன். போ..போ..” என்று கூவிக்கொண்டே வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வராண்டா சுவருக்குப் பின்னால் ஒளியும் தாய்மார்களின் அருகில் வந்து, “ஐய.. நீ இங்க ஒளிச்சிகின்னா.. இன்னா.. எனக்குத் தெலியாதா?  எம்மாங் காலமா ஆஸ்பத்திரில குப்பை கொட்டிக்கினு கீறேன்.. கெளம்பு கெளம்பு..” என்றதும் அவர்கள், “எம்மா எம்மா.. பச்சப் புள்ளம்மா.. கொஞ்சம் இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும்..” என்று கெஞ்சிக்கொண்டே தங்கள் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் காசை எடுப்பார்கள். அதைப் பார்த்ததும் “சரி சரி.. பச்சப் புள்ளனு சொல்ற.. பாவமாதான் கீது.. இன்னிக்கி ஒரு தபா மட்டும்தான்.. ராத்திரி டாக்டர் ரவுன்ஸ் வரப்போ கக்கூசுல போயீ டபாய்ஞ்சுக்கோ.. இன்னா பிரிதா..? என்ன மாட்டி வுட்றாத..” என்று சொல்லிவிட்டு 50 ரூபாயைப் பிடிங்கிக்கொண்டு போய்விடும். டெலிவரி வார்டின் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது. ‘டப் டப்’பென்று டியூப் லைட்டுகளை நிறுத்திக்கொண்டே சென்றாள் ஒரு ஆயா. இப்போது மெலிதான நைட் லேம்புகள் மட்டும் ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தன. ஸ்டாப் நர்ஸ் ஒவ்வொரு பெட்டுக்கும் சென்று அதில் மாட்டியிருந்த சீட்டைப் பார்த்து மாத்திரைகளை கொடுத்துக்கொண்டே சென்றாள். “ம்ம்.. மாத்திரையெல்லாம் ஒழுங்கா போட்டுகிட்டு படுங்க” என்று சொன்னபடி நகர்ந்தாள். அந்த வார்டின் கடைசி பெட்டின் அருகில் வந்தவுடன், “ஏம்மா உன் பேரு தானே செவப்பி..” என்றாள். தன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையை அரவணைத்தபடி படுத்திருந்த செவப்பி, “ஆங்.. நா தான் சிஸ்டர்..” என்றதும் “என்ன நீ.. சரியா மாத்திரை போட மாட்டேறேன்னு டே டியூட்டி நர்ஸ் சொல்லிட்டுப் போறா.. இத பாரு.. மாத்திரைதான் குடுக்க முடியும். அதை நீதான் ஒழுங்கா போட்டுக்கணும். அப்பதான் உனக்கும் நல்லது உன் பிள்ளைக்கும் நல்லது.. தெரியுதா? இந்தா மாத்திரை.. எழுந்திரு.. சாப்பிட்டியா . மாத்திரையை என் முன்னாடியே போடு.. உன்னை நம்ப முடியாது” என்று சொல்லிக் கொண்டே மாத்திரையை அவள் கையில் கொடுத்தாள். அதை எழுந்து உட்கார்ந்து வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடித்தவள், சரிந்து தன் குழந்தையின் அருகில் ஒருக்களித்துப் படுத்தாள். அப்போது வார்டின் சுவர்க் கடிகாரம் ‘டங்க்.. டங்க்.. டங்’கென்று பத்து முறை அடித்து ஓய்ந்தது. அந்தக் கடிகாரத்தின் சத்தம் அவளின் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. ஆறு வருடங்களுக்கு முன்னால் சாந்தோம் தேவாலயத்தின் மணி இதேபோல் ஒலிக்க, சர்ச்சின் இசைக் குழுவினர் இசைக்க, அந்த இசை மனத்திலும் உடலிலும் ஒருவித சிலிர்ப்பைக் கூட்ட, நீலப் பட்டுடுத்தி தலையில் வெள்ளை ரீத்தும் மெல்லிய பூக்கள் கோர்த்தது போல் கிரீடமும் அணிந்து, காற்றில் மிதப்பது போல் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வந்து, மைக்கேல் ராஜூவோடு ஃபாதர் செபஸ்டியன் முன் சென்று மண்டியிட்ட காட்சி நெஞ்சில் நிழலாடியது. ‘ஃபாதர் செபஸ்டியன் இருவர் கைகளையும் இணைத்து வைத்துப் புனித நீர் தெளித்து, “இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்று தன் கம்பீரமான குரலில் சொல்லவும், அந்த வார்த்தைகள் சாந்தோம் தேவாலயச் சுவரின் எல்லாப் பக்கங்களிலும் பட்டு எதிரொலித்ததே அது என்னவாயிற்று?!’ என்று நினைத்தவள் கண்களில் வெளிப்பட்ட கண்ணீர் அவள் காதுகளைத் தாண்டித் தலையணையை நனைத்தது. செவப்பி என்று அவளுக்குப் பெயர் வைத்திருந்தாலும் அவள் சற்றே கறுத்த நிறம்தான். ஆனால் வடித்து வைத்த சிலைபோல் அழகான முகமும் மினுமினுப்புக் கூடிய வடிவமும் கொண்டவள். மைக்கேல் ராஜூவும் அப்படியொன்றும் வெளுத்த நிறமுடையவன் இல்லைதான். ஆனால் செவப்பியைவிடச் சற்று வெளுத்த தோலுடன், கடலில் வலைவீசி வீசி இறுகிய கட்டான தேகம் கொண்டவன். அவன் தீவிர எம்,ஜி,ஆர் ரசிகன் என்பதால் எப்போதும் கலர்கலராகப் பூப்போட்ட மினுமினுவென்ற முழுக்கைச் சட்டை போட்டு, அதைத் தன் புடைத்த புஜங்கள் தெரியுமாறு சுருட்டி விட்டுக்கொள்வான். வாத்தியார் ரசிகனாக இருந்துகொண்டு பீடி சிகரெட்டு, குடிப்பழக்கம் எல்லாம் கூடாது என்ற கொள்கை உடையவன். அவனுக்கு அப்பா இல்லை, அம்மா ஆரோக்கிய மேரி மட்டும்தான். மைக்கேலைக் கரம்பிடித்து, சாந்தோம் சர்ச்சின் பின்னால் இருந்த மீனவக் குப்பத்தில் இருக்கும் பழைய ஹவுசிங் போர்டின் மூன்றாவது தளத்தில உள்ள அந்தச் சிறிய வீட்டிற்குக் குடிவந்த பிறகுதான் ‘வாழ்க்கை இத்தனை இனிமையானதா!’ என்று தெரிந்துகொண்டாள் செவப்பி. மைக்கேலும் அவளை ஒருநாளும் கோபமாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. மைக்கேலுக்கு அவள் மேல் கொள்ளை ஆசை. ஆரோக்கிய மேரியும் ஆரம்பத்தில் அவளை மிகவும் அன்பாகத்தான் பார்த்துக்கொண்டாள். கல்யாணமான புதிதில் அக்கம்பக்கத்தார், “இன்னா ஆரோக்கியம்.. உம்புள்ளைக்கி நல்லா வஜ்சிரம்மாட்டம் வெளுப்பா மருமவ கொண்டாருவேனு பாத்தா.. கறுத்த வௌவாலு மாதிரி புட்சாந்து கீறியே..” என்று சீண்டுவார்கள். உடனே ஆரோக்கியத்துக்குக் கோவம் மூக்குக்கு மேல் வந்துவிடும். “அடியேய் செவத்த சிறுக்கிய.. செவப்ப்பு என் காலு பாதத்தில கீதுடி.. என் மருமவ கருப்பு வுங்க கண்ணில கீதுடி.. போங்கடி போக்கத்தவகளே.. போயி வேலையைப் பாருங்கடி.. வந்துட்டாளுங்க என் மருமவள பத்தி பேச.. ஆய்ஞ்சு பூடுவேன் ஆய்ஞ்சி..” என்று வாயடிப்பாள். அப்படி இருந்தவள், ஆண்டுகள் இரண்டு மூன்று நான்கு என்று ஓடியும் செவப்பி உண்டாகாமல் இருக்க, “ஏசப்பா.. இது வுனுக்கே நாயமா கீதா.. நேத்து கண்ணாலம் கட்டிக்கிட்ட சிறுக்கியெல்லாம் கையில ஒன்னு வவுத்துல ஒன்னுனு இஸ்த்துகினு திரியுதுங்க.. எம் மவனுக்கு இன்னாயா கொறச்சலு..? பாவி மவ வவுத்துல ஒரு புழு பூச்சி இல்லியே.. ஏசப்பா.. நீ எப்பதான் கண்ணு தொறப்பியோ..” என்று வாசற்படியில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டாள். “அடியே உன் வவுத்துல இன்னாடி கல்ல கட்டி வைச்சினுகிரியா..? அல்லாரும் இன்னா இன்னுமா உம் மருமவ உண்டாகலனு கேக்கறப்போ அவுமானமா கீதுடி” என்று செவப்பியிடமும் சிடுசிடுப்பாள். ஆனால் அதற்காக ஒருநாள்கூட ஆரோக்கியத்தை எதிர்த்து ஒரு சொல் சொல்லமாட்டாள் செவப்பி. “இன்னாதான் சொல்றுதுனு தெலியல.. எம்மாந் திட்னாலும் கம்முனு பூட்ற.. வேற எவளா இருந்தா இன்னேரம் பிலுபிலுனு புட்சிக்குவாலுங்க.. சட்டிய தூக்கினு தனியா பூட்றனுவாளுங்க..  ஏசப்பா ஏந்தான் வுனுக்கு ஒரு புள்ளைய குடுக்காத சோதிக்கிறாரோ.. தெலியலயே” என்றும் சொல்லுவாள். அதற்கும் மௌனமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, “அயித்த வா.. கொயம்பு கொச்சிட்சி.. சூடா துன்னு வா” என்று கூப்பிட்டு தட்டில் சோற்றைப் போடும்போது அவள் முகத்தைப் பார்த்து அப்படியே கண் கலங்குவாள் ஆரோக்கியம். செவப்பிக்கு மட்டும் பிள்ளை பெற்றுகொள்ள ஆசையில்லையா என்ன? தினமும் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு சர்ச்சுக்குப் போய் தோமையர் கல்லறையில் மண்டியிட்டு ‘ஒரு புள்ளையைக் கொடு’ என்று மனத்தாலேயே மன்றாடுவாள். அப்படித்தான் ஒருநாள் கல்லறையில் கண்ணை மூடிக்கொண்டு நேரம் போவதே தெரியாமல் இருந்துவிட்டாள். அதற்குள் இருட்டிவிட்டது. ‘இவ்வளவு நேரமாகியும் செவப்பி வரலையே..’ என்று கலவரப்பட்ட ஆரோக்கியம், “அடியே சுந்திரி… என் மருமவள பாத்தியா? அடேய் அந்தோணி மவனே.. என் மருமவள காணோம்டா.. ஓடிப்போய் மைக்கேல கூட்டியாடா.. ஐயோ நா என்னா பண்ணுவேன்..” என்று ஒப்பாரி வைத்து குப்பத்தையே கலக்கிவிட்டாள். இவள் போட்ட கூச்சலில் ஆளுக்கொரு பக்கமாக ஓடி செவப்பியைத் தேட ஆரம்பித்தார்கள். சிலர் சர்ச்சுக்கும் ஓடிப்போய்த் தேடினார்கள். ஆனால் யாருக்கும் பின்னால் இருக்கும் கல்லறைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. சேதி கேட்டு ஓடிவந்த மைக்கேலுக்கு, தன் வீட்டின் முன்னால் கூடியிருந்த கும்பலைப் பார்த்ததும் அடிவயிறு கலங்கியது. கும்பலை விலக்கிக்கொண்டு வாசல்படியில் காலை விரித்துக்கொண்டு தலைவிரி கோலமாக அரற்றிக்கொண்டிருந்த ஆரோக்கியத்திடம், “எம்மா.. இன்னாமா ஆச்சி..? ஏம்மா கூவிகினு கீற..?” என்றவனைப் பார்த்து “ஐயோ நா என்னத்த சொல்லுவன்.. செவப்பி எங்கியோ பூட்டாடா.. எல்லா எட்திலயும் தேடிட்டோம்.. எங்கிமே இல்லடா.. ஏசப்பா நீ தாம்ப்பா அவள கண்ணுல காட்டணும்” என்று ஓவென்று புலம்பி அழுதாள். “ஆமா.. அல்லாம் உன்னாலதான்.. எப்பப்பாரு புள்ள பெத்துக் குடுக்கலனு அவள திட்டிக்கினே இருந்தா.. எத்தினி நாளிக்கித்தான் பொறுத்துப்பா.. இப்ப எங்கியோ பூட்டா.. போம்மா” என்றவன் மூளையில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. ஃபாதர் செபஸ்டியனைப் பார்த்தால் ஏதாவது செய்வார் என்ற எண்ணத்தில் வேகமாக சர்ச்சை நோக்கி ஓடினான். ஃபாதர் செபஸ்டியன், அப்போது கல்லறை வாசல் விட்டிறங்கி சர்ச்சை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் அவர் முன் மண்டியிட்டு அவர் கையைப் பிடித்துக்கொண்டு, “ஃபாதர்.. ஃபாதர்.. எஞ் செவப்பி.. எஞ் செவி..” என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் தேம்பினான். அவன் கைகளிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்ட ஃபாதர் செபஸ்டியன், சிரித்துக்கொண்டே “மைக்கேல்.. என்ன ஆச்சு உனக்கு..? அழாம சொல்லு” என்றார். “செவப்பியைக் காணோம் ஃபாதர்..” என்றவனைப் பார்த்து, அவன் தோளைப் பிடித்து எழுப்பி, “மைக்கேல், கர்த்தர்

இரைச்சல்

இரைச்சல்

சிறுகதை நரசிங்கபுரத்தின் கடைக்கோடி மூலையில் இருந்தது சேவல் வீடு. ஊர் ஒன்றும் பெரிதானது இல்லை. ஆள் இல்லாத வீடுகளையும் கணக்கில் கொண்டால் சரியாக நூற்றி இருபது இருக்கலாம். வேலைக்கு என்றும்  பஞ்சம் பிழைக்க என்றும் ஒற்றைப் பெண் குழந்தைகள் பின்னால் வாழப்போனவர்கள் என்றும் மனிதர்கள் ஊரைப்போல் நிற்காமல் நகர்ந்துவிட்டார்கள். சேவலுக்கும் பந்தங்கள் உண்டு. ஆனால் மனுசன் வாய் சும்மா இருக்காது. இரண்டொரு உறவுகள் நிலைத்திருக்க, பொய்யும் வேசமும் அவசியம் என்பதை வார்த்தை அளவுக்குக்கூட சரி என்று ஏற்றுக்கொள்ளாதவர் அருகில் யார்தான் இருப்பார்கள்? கிழவியைக் காடு சேர்த்ததும் தனிமையைத் துணையாக்கிகொண்டு நாள் கடத்தினார். எப்போதாவது பேச்சுச் சத்தம் கேட்கும். இரண்டு மூன்று தடவை எட்டிப் பார்த்தவர்கள், தனியாகப் பேசிக்கொள்கிறார் என்பதறிந்து விலகிக்கொண்டார்கள். லாடம் கட்டும் மேட்டுப்பட்டித் தாத்தாதான் சேவலின் கூட்டாளி. பொடி டப்பாவை நடுவில் வைத்துவிட்டு இருவரும் குத்துக்கால் போட்டு அமர்ந்து பேசத் தொடங்கினால், அடைக்கோழி ஆகிவிடுவார்கள். லாடக் கயிறு முடி அவிழ்ந்து முன்னாங்கால் எலும்பில் சீனிக் காளை விட்ட அடியில், மேட்டுப்பட்டித் தாத்தாவும் இப்போதால்லாம் வருவதில்லை.. எலும்பு முறிவுக் கட்டோடு இரண்டு தரம் காலை இழுத்துக்கொண்டு வந்தவர்தான். பிள்ளைக்கு வாக்கப்பட்டுக் கஞ்சி குடிப்பவர் வேறென்ன செய்யமுடியும்? நடையை நிறுத்திக்கொண்டு அடங்கிப்போனார். சேவலின் கஞ்சிக்கு மூனு குறுக்கு கிணத்து வயக்காடு இருந்தது. வழக்கமான சித்திரை வெயிலைவிட, முன்னதாகப் பங்குனி வெயில் காய்ச்சி எடுத்தது. மூனாவது வாரத் திருவிழாவிற்கு இளவட்டங்கள் ஊர் வசூலுக்குக் கிளம்பினர்கள். வழக்கமான வசூல்தான். பெரிய தலைக்கு ஆயிரம் என்றால் சின்ன தலைக்கு நூறு வரையில்கூட இறங்கும். ஆனால் வசூல் கேட்காமல் வரக்கூடாது என்பது சம்பிராதாயம். ‘சேவல் வீட்டுக்குப் போனீங்களா?’ என்ற கேள்விக்கு, ‘அவரு என்னத்த குடுப்பாரு?’ என்பதுதான் பதிலாக வந்தது. “என்னத்தையும் குடுக்குறாரு.. இல்லைங்குறாரு… நீ போனயாடா.?” “இல்ல மாமா”  என்றான் வண்டி முத்தையா மகன்.  “கூறு கெட்டவனே.. நாள பின்ன ஊரு மந்தையில யாருடா வசவு வாங்குறது..? போங்கடா.. கேட்டுட்டு வாங்க..” என்று அனுப்பிவைத்தார் நல்லசிவம். வண்டிப் பாதையில் இருந்து இறங்கி ஒத்தயடிப் பாதைக்கு வந்ததும் அவ்வளவு அமைதி. “பெருசே…” என்ற வார்த்தைக்கு எந்த பதிலும் இல்லாததால், தட்டியை விலக்கிப் பார்த்தான். மலையைச் சுற்றிய காட்டருவி போல வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு கட்டிலில் கிடந்தார். திரும்ப ஒருமுறை “தாத்தே…” என்றவனின் குரல் அடங்கும் முன் விருட்டென்று எழுந்தவர், தலைக்கு வைத்த துண்டை எடுத்து அவன் முகத்தில் எறிந்தார். “எடுபட்ட பயலே.. எதுக்கு கத்துற..? செத்தா போய்ட்டேன்…” என்றவாறு எழுந்தார். வரி கேட்கப் போன வண்டி முத்தையாவின் மகன் வெலவெலத்துப் போனான். திரும்பிவிடலாம் என்ற எண்ணம் வந்தது. வரி கேட்காமல் போனால் நாட்டாமை பழைய பாட்டு திரும்பப் பாடுவார். ஊரு சோலியில் தலையிடுவது கொள்ளிக்கட்டையில் மண்டையைச் சொரிவது போலத்தான். கிழம் வாயைத் திறப்பதற்கு முன்னால், “’முத்தையா பையன் வந்துருக்கேன்.. கோவில் கொடைக்கு வசூல் கேட்டாக..” “நீ பெரிய மசுரு.. வந்துட்ட வசூல் பண்ண.. என்னைக்கிடா கொடை? சித்திரை பவுர்ணமிக்கு இன்னும் நாள் இருக்குள்ள… அதுக்குல என்ன.?” “அப்போ… நா வேணா போய்ட்டு செத்த நாள் கழிச்சி வர்றேன்..” “ஆமாடா.. முந்நூறு மூட்டை நெல் இருக்கு.. நீ செத்த நாள் கழிச்சி வந்து வண்டி ஏத்து..” மௌனமாக நின்றான். “சரி.. அந்த கோளாய் சத்தம் இந்த வருசமும் உண்டா..?” குழாய் ரேடியோவைத்தான் சொல்கிறார் என்று முத்தையாவின் மகனுக்கு விளங்கியது. போன வருசம் கொடை நடக்கவில்லை. அதுக்கு முந்தின வருசக் கொடையில் சேவல்தான் ஊர் வாயில் நிறைந்திருந்தார். வழக்கம்போல லிங்கம் சீரியலும் ரேடியோவும் கட்ட, அதில் ஒன்று சேவல் வீட்டருகில் இருந்த கரண்டு கம்பத்திலிருந்து வாசலைப் பார்த்துப் பாடியது. வழக்கமான இடமில்லை என்றாலும் அரசாங்கம் ஒரு கம்பத்தை மிச்சப்படடுத்த, லிங்கம் ஒரு குழாய் ரேடியோ வசூலை விட மனமில்லாமல் சேவல் வீட்டுக் கம்பத்தில் கட்டிவிட்டான். ‘விநாயகனே..’ என்ற முதல் பாடல் முடியும் முன்னால் லிங்கத்தை சரவெடியின் நடுவில் நிறுத்தி வெடித்துகொண்டிருந்தார் சேவல். கூட்டத்தில் இருந்த விடலை ஒன்று, “உம்ம சத்தத்தை விடவா அந்த ரேடியா சத்தம் இருக்கப்போகுது?” என்று கேட்ட நொடியில் விறுவிறுவென்று வீடு பார்த்துப் போனவர் சாணியைக் கரைத்துக் குழாய் ரேடியோவில் விசிறி நிறுத்திவிட்டார். ஒருவழியாக லிங்கத்தைச் சமாதானப்படுத்தி திருவிழாச் செலவில் மிச்சம் இருந்ததைத் தந்தனுப்பினர்கள். “ஏ….. அதே.. அதெல்லாம் இருக்கு.. ஆனா இங்கன கட்ட மாட்டாக… போதுமா..?” “அப்போ நாளைக்கு வந்து உன் வசூலை வாங்கிக்கோ…” என்று முத்தையாவின் மகனை அனுப்பிவைத்தார். வம்பிழுத்துப் பழகிய இளவட்டங்களுக்கு விவகாரமான விசயங்கள்தான் முதலில் ஞாபகம் வரும். சேவல் விஷயமும் அப்படித்தான் ஞாபகம் வந்தது. கூடவே அதற்கான திட்டங்களையும் தயார் செய்தார்கள். ‘அம்மன் கண் திறக்கும் நடுச்சாமத்தில் மட்டும் சேவல் வீட்டருகில் ரேடியோவைக் கட்டி அலறவிட வேண்டும். விடியற் காலையில எல்லாரும் பொங்கல் வைக்க மைதானத்தில இருக்கும்போது கழட்டிவிடலாம்’ என்பது யோசனை. இதில் வண்டி முத்தையாவின் மகனுக்குத்தான் அதிகப் பங்கிருந்தது. அதீத குடும்ப உறவுகளுக்குள்ளாக வாழ்ந்து பழக்கப்பட்ட மனிதர்தான் சேவல். ஒரே மகள் தன்னுடைய பங்குதான் முக்கியம் என்று இரட்டைக் காளைகளையும் ஊர் மந்தைக் காட்டையும் எழுதி வாங்கும்போதுகூட மனிதர் கலங்கவில்லை. சாவு முதல் என்று அப்பா வைத்திருந்த நிலம், அவள் நிலம் ஆகும் வரை விடக்கூடாது என்று எல்லாக் கூத்தையும் நடத்திப் பார்த்தாள். ஒன்றும் பலிக்காமல் ஊர் மந்தைக்கு விவகாரம் வந்தபோது சேவல் பேசிய வார்த்தை இதுதான். “வேலை பார்த்த பண்ணையில அவன் வீட்டுச் சொத்தா இருந்த உங்க அம்மையை விரும்பிக் கட்டும்போது எங்களுக்குன்னு ஒரு கன்னுக்குட்டிகூட அவனுங்க அவுக்கல. அதுமாதிரி உன்ன அனுப்பக் கூடாதுன்னுதான் உனக்குப் பங்கு விரிச்சது. இந்தச் சொத்து இல்ல.. நீ வச்சிருக்கிறதும் அவ வேர்வைலயும் என் உழைப்புலயும் வந்ததுதான். நம்ம புள்ளதானன்னு கை ஏந்தித் திங்கிறதுக்கு நான் பழக்கப்படல.. எனக்கு அப்புறமா இந்த மசுரு யார்க்கு வேணாலும் போகட்டும்” என்று சொல்லிவிட்டு வீடு அடைந்தவர், எப்போதாவது வரும் சத்தத்தோடு உலகைச் சுருக்கிக்கொண்டார். வசூல் தந்த நாளைக்கூட மறந்து போனார் சேவல். திடல் பக்கம் கொட்டுச் சத்தம் கேட்பதை மட்டும் காதை ஒருபக்கமாகச் சாய்த்து உறுதிப்படுத்திக்கொண்டார், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைப்போல. இரண்டாம் நாள் இரவுக்கு ஊரே திடலில் இருந்தபோது இளவட்டங்களின் வேலை தொடங்கியது. முளைப்பாரி முடிந்த இரவுதான் இளசுகளுக்கான நேரம். தன்னுடைய சத்தமே பிடிக்காத சேவலுக்கு ஊர்ச் சத்தம் எப்படி ஒத்துப்போகும்? கயிற்றுக் கட்டிலை வீட்டுக்குள் தூக்கிப் போட்டுப் படுத்துக்கொண்டார். கம்பத்தில் இரவில் ஒலித்த ரேடியோ சத்தம் அவரைக் கோபமடையச் செய்யும் என்றுதான் நினைத்தர்கள். ஆனால் எல்லாச் சத்தமும் இரைச்சலாக மாறி ஒருவரை அடையும்போது கொன்றுவிடும் வல்லமை உடையது என்று யாரும் அறியவில்லை. சேவல் அதை உணர்த்திவிட்டு செத்துக்கிடந்தர். ‘கொடை நடக்குறப்பவா சாவு விழணும்..?’ என்று பேசிக்கொண்டார்கள். ஊரே அமைதியாக இருந்தது, சேவலுக்காக.

நிர்பந்தங்கள்

நிர்பந்தங்கள்

சிறுகதை கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம். ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் செண்பகத்திற்கு உண்மையாகவே கதவு தட்டப்படுகிறதா அல்லது பிரம்மையா எனும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் யார் இவ்வளவு வேகமாக கதவைத் தட்டுகிறார்கள்..! இன்னும் சற்று நேரத்தில் தர்காவில் வாங்கு சொல்லிவிடுவார்கள். நான்கு மணிக்கு எழுந்து வேலையைத் தொடங்கினால்தான் ஒன்பது மணிக்குள் சமையல் முடித்து மூன்று குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியும். ‘இப்படி மூன்றுமே பெண்ணாக பிறந்துவிட்டதே, ஒரு ஆண்குழந்தை இருந்தால் கணவனின் டீக்கடைக்கு எத்தனை உதவியாக இருக்கும்!? அதுனாலென்ன? ஊரில் உள்ள பிள்ளைகள் மாதிரியா என் குழந்தைகள் அடம்பிடிகின்றன? எத்தனை பொறுப்பு இந்தக் குழந்தைகளுக்கு! எத்தனை அறிவு! முருகப் பெருமான் தந்தைக்கு உபதேசம் செய்த மாதிரி, எத்தனை விதமாக நான் சோர்ந்திருக்கும் வேளைகளில் என்னைத் தேற்றுகிறார்கள்! மூத்தவள், இதோ இன்றோ நாளையோ, தென்னம்பாளை வெடிப்பதுபோல் சமைந்து உட்கார்ந்துவிடப் போகிறாள். ‘பெண் வளர்த்தியும் பீர்க்கங்காய் வளர்த்தியும் ஒன்னு’ என்பார்களே. அய்யோ! மூத்தவள் வயதுக்கு வந்துவிட்டால் சடங்கு செய்ய வேண்டுமே. பணத்திற்கு என்ன செய்வது? கணவன் குணசேகரனின் டீக்கடை மூலம் கிடைக்கும் வருமானம் மூன்று வேளை சாப்பிடுவதற்கே போதவில்லை.’ கணவனின் நினைவு வந்ததும் அரைத் தூக்கத்தில் ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்தவளின் இதழ்களில் ஒரு புன்னகை மலர்ந்தது. ‘எத்தனை அழகன்! சந்தன நிறமும் அடர்ந்த மீசையும் வறுமையின் சாயல் சிறிதும் தெரியாத முகமும்.. டீக்கடையிலிருந்து இழுத்துக்கொண்டு வந்து முகத்தைத் துடைத்து ஒரு ஜிப்பாவும் செயினும் போட்டுவிட்டால் போதும்; சினிமா கதாநாயகர்களெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். நல்லவேளை.. மூன்று குழந்தைகளுமே அப்பாவின் சாயலில் தங்க விக்கிரங்களாகப் பிறந்திருக்கின்றன’ என்று எண்ணி உடம்பு மகிழ்ச்சியில் பூரித்தது செண்பகத்திற்கு. தீடிரென வீட்டிற்கு நடுவே உள்ள சிறிய முற்றத்தில் கல் வந்து விழுந்த சத்தம் கேட்டது. நன்றாக முழித்துக்கொண்டாள் செண்பகம். அய்யோ! கதவைத் தட்டுவது கணவனாகத்தான் இருக்கும். ஆமாம்.. செண்பகம் என்று கூப்பிடும் குரல் வேறு கேட்கிறது. அவன்தான் ரொம்பத் தாமதமாக வரும் வேளையில், இதுமாதிரி கதவைத் திறக்காமல் செண்பகம் அசந்து தூங்கும் சமயத்தில், முற்றத்தில் கல்லை வீசி எறிவான். அவசர அவசரமாக அவிழ்ந்திருந்த புடவையை ஏனோதானோவென்று உடலில் சுற்றிக்கொண்டு போய் கதவைத் திறந்தாள் செண்பகம். “இல்லேங்க.. ரொம்ப அசதியா இருந்துச்சி. டீக்கடை பாத்திரமெல்லாம் படு கறுப்பா இருந்துச்சி. சபீனா வாங்கக் காசு இல்ல. அதான் செங்கல்லை உடைச்சு கல்தூளைப் போட்டு வெளக்குனேன். அதான்ங்க ரொம்ப அசதியாயிட்டு. தூக்கத்திலேர்ந்து எழும்பவே முடியலேங்க. நீங்க சரக்கெடுக்க வெளியூர் போறதால்ல சொல்லிட்டுப் போனீங்க? திடும்முன்னு வந்து நிக்கிறீங்க? ஏன் மூஞ்செல்லாம் பேயறைஞ்ச மாதிரி இருக்கு?” என்று வினாக்களாகக் கேட்டுக்கொண்டே, பதில் சொல்லாமல் வீட்டிற்குள் நுழையும் கணவனை ஏறிட்டாள் செண்பகம். கைகளில் கொண்டு வந்த மஞ்சள் பைகளையும் சாக்குப் பையையும் தூக்கி ஓரமாக வீசினான் குணசேகரன். அவன் ஒருநாளும் இப்படி வீசி செண்பகம் பார்த்ததே இல்லை. சிறிது தள்ளாடிக்கொண்டே வந்தவன், செண்பகத்தைப் பார்த்துக் கண்களை கீழிறக்கிக் கொண்டு லேசாக எச்சில் வழியுமாறு சிரித்தான். முதன்முதலாக குணாவின் சிரிப்பு வேட்டைக்குப் புறப்படும் விலங்கொன்றின் உறுமுகிற கோரைப்பற்களின் சாயலாகத் தெரிந்தது செண்பகத்திற்கு. அவனுடைய சாம்பல் நிறச் சட்டையின் மேல் அங்காங்கே லேசாக அணைந்த நெருப்பில் பூத்த சாம்பலாய் மணல் திட்டுக்கள் அப்பியிருந்தன. அவன் மேலே சாராய நெடி வீசியது. செண்பகத்திற்கு விவரம் தெரிந்து குணா சாராயம் குடித்து அவள் பார்த்ததே இல்லை. அவனை அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவளின் கைகளைப் பிடித்துத் தரதரவென்று அடுப்படிக்கு இழுத்துக்கொண்டு போனான். அந்தச் சிறிய வீட்டில் படுக்கும் இடத்தையும் அடுப்படியையும் ஒரு மெல்லிய திரைச்சீலைதான் பிரித்துக் காட்டிக்கொண்டிருந்தது. அப்படியே அவளைக் கீழே தள்ளியவன், படுவேகமாக அவளின் மேலேறி இயங்கத் தொடங்கினான். அத்தனை ஆங்காரமாக அவன் இதுவரை நடந்துகொண்டதே இல்லை. மூன்று குழந்தைகள் வந்ததும் அத்திப் பூத்தாற்போல் என்றாகிவிட்டது. ஒருநொடி அதிர்ந்தவள், அவனின் வேகத்தின் ஒத்திசையோடு உடன்படத் தொடங்கினாள். குணா அவள் கூந்தலைப் பற்றிக்கொண்டு கீழே அழுத்த, இதுவரை இப்படி வலியோடு கூடிய உறவை அனுபவித்தேயிராத செண்பகத்திற்குக் கண்களில் கண்ணீர் பெருகியது. மேலும் அவன் மேல் வீசிய சாராய வாடை வேறு வயிற்றைக் குமட்டியது. வலியினால் சிறிது சுருங்கியிருந்த நெற்றியும் இறுக்கி மூடியிருந்த கண்களும் அவனை இறுக்கிப் பற்றியிருந்த விரல்களும் அவனை மேலும் வேகத்தோடு அவளைத் துன்புறுத்தும் நோக்கத்தோடு செயல்படத் தூண்டின. கைகளில் ஈரம் பட்டதும் கண்கள் சொருகியவாறே கிறக்கத்திலும் வேகத்திலும் இருந்தவன், செண்பகத்தின் முகத்தை நோக்கினான். கண்களை மூடியபடியே இருந்த அவளை நோக்கி, “என்னை விட்டுப் போகாதடி.. என்னை விட்டு தயவுசெஞ்சு போயிடாதடி.. அதை என்னால தாங்கமுடியாது” என்று புலம்பியவாறே, வெள்ளம் வடிந்த அருவிக்கரையைப்போல கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வந்த குணா, அவள் மேலிறந்து இறங்கி அப்படியே வயிற்றில் தலைவைத்து செண்பகத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு படுத்திருந்தான். இது அத்தனையும் செண்பகத்திற்குப் புதிது. வலித்த உடலின் பாகங்களைத் தடவித் தடவிப் பார்த்துக்கொண்டாள். இந்த ஆவேசம் அவளுக்குப் பிடித்திருந்தது. இதுவரை இந்த உடலுக்குப் பழக்கமில்லாத ஒன்று இது. எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியான பழக்கம் சுவாரஸ்யம் குறைவுதானே! மூன்று குழந்தைகள் பிறந்தும் ஒவ்வொரு உறவுக்கு முன்பாகவும் உனக்கு உடம்பு நல்லாருக்கா? செய்யலாமா? என உத்தரவு கேட்பவனைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கும் செண்பகத்திற்கு. ‘இது என்ன கேள்வி? உன் மனைவி நான். வாடீ.. படு..ன்னு சொன்னா படுக்கப்போறேன்.’ இன்னமும் உரிமை எடுத்துக்கொள்ளாமல் உத்தரவு கேட்கும் கணவனை எண்ணி மனத்திற்குள் சில சமயம் குமைந்திருக்கிறாள். ‘மாமா பொண்ணு என்ற முறையில் கட்டிவைத்துவிட்டார்களே என வாழ்கிறானோ?! உண்மையில் என்னைப் பிடிக்கவில்லையா? ஆனால் பிடிக்காமல் போயிருந்தால்கூட அதை எந்த விதத்திலும் குறைசொல்ல முடியாது. குணசேகரன் எவ்வளவு அழகாக இருக்கிறான்! கறுப்பாக, நச்சலாக, சிறிது பல் எடுபட்டு இருக்கும் தன்னைப் பார்க்கவந்த இரு மாப்பிள்ளைகளும் வேண்டாமென்று சொல்லிவிட்டுப்போக, எந்தக் குறையும் சொல்லாது, அம்மா சொல்லிவிட்டாள் என்பதற்காக மறுபேச்சில்லாமல் தன்னைக் கல்யாணம் செய்து குடும்பம் நடத்துவதே பெரிது. என்ன பிரச்சினை வந்திருந்தாலென்ன? இது மிகவும் பிடிக்கிறது. இது மாதிரி உரிமையோடு உறவோடு, இது மாதிரி வயிற்றில் தலைவைத்து குணா படுத்திருப்பது மிகவும் பிடிக்கிறது’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டே அவனின் தலையை வயிற்றோடு அழுத்தி, தலைமுடியை அமைதியாகக் கோதிக்கொண்டிருந்தாள். ‘என்ன நடந்திருக்கும் எனத் தெரியவில்லை. குணா குடித்திருக்கிறான். வியாபாரத்தில் ஏதாவது நஷ்டம் வந்திருக்குமோ? இதற்கெல்லாமா நான் விட்டுவிட்டுப் போய்விடுவேன்?! அதென்ன புதிதாக வாடி போடி என்கிறான்?! என்னை அப்படி அழைக்கமாட்டானே! குடித்திருப்பதால் அப்படி அழைக்கிறானோ!?’ என யோசித்துக்கொண்டே வெளியே மழை பொழியும் ஓசையை வெறுமனே நிரம்பிக்கொண்டிருக்கும் கிணறுபோல கவனித்துக்கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு குணா செண்பகத்தைப் பார்த்து, “ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்னு கேக்கமாட்டீயா?” என்றான், அமைதியாக அவளைத் தன்பக்கம் இழுத்துப் பிடித்துக்கொண்டே, “சத்தம் போடாதீங்க, மெதுவா பேசுங்க. புள்ளைங்களுக்கு நீங்க தண்ணி குடிச்சிட்டு வந்திருக்கறது தெரிய வேணாம். எதுக்கு இப்படி குடிச்சிட்டு கீழ விழுந்து எந்திரிச்சி வந்துருக்கீங்க? சட்டையெல்லாம் மண் அப்பிக் கிடக்கு. நிதானம் இல்லாம இருக்கீங்க. கண்ணெல்லாம் கோவைப்பழம் மாதிரி சிவந்து கிடக்கு” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி இரகசியமாகக் கேட்டவளைப் பார்த்து, “நீ நல்லவ செண்பகம். மூனு வேளை சோத்துக்கு மேல ஒரு புடவைக்குக்கூட நீ ஆசைப்பட்டதில்ல. ஆனா நான் அப்படி இல்ல. ஒரு வருசத்துக்கு முன்னாடி காளியம்மன் கோவில் திருவிழா சமயத்துல, நான் திருவிழா கடை போடும்போது கோவிலிலேயே தங்கியிருந்தேன்ல்ல? அவள அங்கதான் முதல்முறையா பார்த்தேன். நான் பொதுவாவே பெண்களை அதிகமாக ரசிப்பவன் இல்லைங்கிறது உனக்கே தெரியும். என் வாழ்வின் வறுமை, அதைத் தீர்க்க நான் படும்பாடு, எனது சுபாவம், எதுவுமே நான் இன்னொரு பெண்ணை ரசிப்பதற்கு இடம் தருவதாக இல்லை. அன்று காலை வழக்கம்போலப் பாலை ஊற்றி சட்டியில் காய்ச்சிக்கொண்டிருந்தபோது முதல்நாள் பெய்த மழையினால் கோவிலுக்கு எதிரே உள்ள இடமெல்லாம் சகதியாகியிருந்தது. அப்பொழுதுதான் கோவிலைத் திறந்து அலசிக் கோலமிட்டுக்கொண்டிருந்தார்கள். நீலநிறக் கருக்கல் மின்னிக்கொண்டிருக்கும் தங்க வளையல்கள் அணிந்த கையொன்றைப் பார்த்தேன். கோவிலின் வாசலைக் கூட்டிக் கோலமிட்டுக்கொண்டிருந்தது. முகத்தைக்கூட நான் சரியாகப் பார்க்கவில்லை. ஏதோ வேண்டுதலென எண்ணிக்கொண்டு வடை போடுவதற்கான வேலையை கவனித்துக்கொண்டிருந்தேன். பழக்கமில்லாத வேலை போல. ‘ஆ..’வென சத்தம் போட்டவாறே அவள் சேற்றில் வழுக்கி விழுந்திருந்தாள். அதிகாலை நேரமாதலால் கோவிலில் யாருமே இல்லை. வயதான பெண்ணொருத்தி அவளைத் தூக்கமுடியாமல் அவளோடு சேற்றில் திணறிக்கொண்டிருந்தாள். சட்டென்று வேட்டியைத் தூக்கிக் கட்டியபடி அங்கே ஓடிச்சென்று அவளைத் தூக்கியவன் அப்படியே நின்றேன் செண்பகம். அவ்வளவு அழகியை நான் அருகில் கண்டதே இல்லை. எத்தனை மென்மை, வழவழப்பு! அதிகாலை வெளிச்சம் பட்டு மின்னும் கன்னங்கள், பதட்டத்தில் ஆடும் ஜிமிக்கி. என்னால் முடியவில்லை. எத்தனை அழுத்தமாக நீரில் அழுத்திவைத்தாலும் அடங்காமல் பீறிட்டெழும் பந்தாய், நான் அவளிடம் மறைக்க முயன்றாலும் முடியாமல் மயங்கி நின்றேன். இவளுக்காகத்தான் இத்தனை வருடம் காத்திருந்ததாகத் தோன்றியது. அவளைப் பார்த்த நிமிடத்திலிருந்து அவளைத்தவிர வேறு எதுவுமே எனக்கு வேண்டாமெனத் தோன்றியது. உன்னை மறந்தேன். நம் குழந்தைகளை மறந்தேன். இந்த உலகில் உள்ள அத்தனையும் மறந்து நின்றேன். அவளை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருந்தது. நெளிநெளியான அலை மாதிரியான கூந்தல். விளக்கு மாவை உருட்டி வச்ச மாதிரி முகம். தீபம் மாதிரி கண்கள். துடைச்சு வச்ச குத்துவிளக்கு மாதிரி அப்படியொரு பிரகாசம். என்னை மறந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்த விநாடியிலேயே அவள் கண்டுபிடிச்சிட்டா, எனக்கும் அவளை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு. திருவிழா நடந்த பத்து நாட்களும் அவள் தொடர்ந்து கோவிலுக்கு வர, கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய கதையும் எனக்குத் தெரியவந்தது. கோவிலூர் பஞ்சாயத்துகாரர் மாணிக்கவேலோட மனைவி அவள். பதினைந்து வயதிலேயே அவளுடைய அழகைப் பார்த்து மாணிக்கத்தின் வீட்டில் பெண் கேட்க, ‘வசதியாக வாழப்போகிறாளே’ என இரண்டாம் தாரமாக வயசு வித்தியாசம் பார்க்காமல் கொடுத்துவிட்டார்கள். முதல் தாரம் குழந்தை இல்லையெனத் தற்கொலை பண்ணிக்கொண்டதாகவும் குழந்தை இல்லையென மாணிக்கமே ஆள் வைத்துக் கொலை செய்துவிட்டதாகவும் பேச்சிருக்கிறதாம். இவளுக்கும் கல்யாணம் ஆகி பத்து வருடங்களாகக் குழந்தை இல்லை. அதனால்தான் கோவிலுக்கு வாசல் கூட்டிக் கோலமிட்டால் குழந்தை பிறக்குமென யாரோ சொல்ல,

திருத்தமுடியாத தீர்ப்புகள்

திருத்தமுடியாத தீர்ப்புகள்

இரவு எட்டரை மணிக்கு காலிங்பெல்லின் ‘டிங்டாங்’ கேட்கவே, ‘இந்த நேரத்தில் யார்?’  என்ற யோசனையுடன் ஜன்னல் வழியே பார்த்தவளுக்கு ஆச்சரியத்தில்  மூச்சடைத்தது. “செந்திலண்ணா.. வாங்க..வாங்க..” என்றபடி கதவைத் திறந்தேன். “நல்லாருக்கியாம்மா.. பையன் எங்க காணும்..?” “டியூஷன் போயிருக்கான். அவரு வாறப்ப கூட்டிட்டு வருவாரு. எல்லோருஞ் சொகந்தானே..?” கேட்டுக்கொண்டே சமையலறையில் நுழைந்தவளிடம், “ஏம்மா.. எதுவும் வேண்டாம்.. இங்க வா.. ஒரு நல்ல சேதியோட வந்துருக்கேன்” என்றபடி கையில் வைத்திருந்த மஞ்சள் பையைப் பிரித்து, அழகான விநாயகர் ரூபம் பதித்த அழைப்பிதழை எடுத்தபடியே.. “தர்ஷிணிப் பாப்பா பெரிய மனுஷியாயிட்டா. சீர் வச்சிருக்கேன். ஒரு வாரந்தான் ஆகுது. மாசம் போறதுன்னால உடனே வச்சுட்டோம். கணபதி மண்டபத்திலதான். மாப்பிள்ள வந்தா சொல்லு. குடும்பத்தோட வந்துரு..” என்றபடியே  நீட்டியவரிடம், “தர்ஷிணியா..! அவ்வளவு பெரிய பொண்ணாயிருச்சா..?!” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டவளிடம், “பின்ன.. வருஷம் பன்னெண்டாச்சே…” என்றபடி  மற்ற கேள்விகள் என் வாயிலேயே இருக்க, சிரித்தபடியே  விடைபெற்றுக்கொண்டார். செந்திலண்ணன் எங்க அம்மா வீட்டுக் குடித்தனக்காரர்களில் ஒருவர். அவர் அங்கே குடி வரும்போதே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. அண்ணா வேலை செய்துகொண்டிருந்த வொர்க் ஷாப்  பக்கத்தில் இருந்ததால், எங்க வீட்டின் முன்புறம் இருந்த ஒற்றை அறையில் தங்கி இருந்தார். ஓரளவுக்கு வசதியான குடும்பம்தான் என்றாலும் அண்ணாவிற்கு பிளஸ் டூவுக்கு மேல் படிப்பு ஏறாததால், எங்கள் ஊரின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் கிரைண்டர் உபரி பாகங்கள் செய்யும் கம்பெனி ஒன்றில் நுழைந்துகொண்டார். தங்கமான குணம். நல்ல உழைப்பாளி என்பதால் நான் அண்ணாவென்று அழைத்தால்கூட, அவர் எங்கள்  சாதியைச் சேர்ந்தவர் என்பதால் எங்கள் அம்மாவிற்கு என் தங்கையை அவருக்குக் கொடுத்து மாப்பிள்ளையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ஒருதடவை அண்ணாவைப் பார்க்க வந்த அவருடைய அம்மா, பேச்சுவாக்கில், அண்ணாவிற்காக அவருடைய அத்தை பெண் காத்திருப்பதாகவும் அந்தப் பெண் ஜீவிதா கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதால் அந்த வருடக் கடைசியில் திருமணம் என்றும் சொல்லவே, அந்த ஆசை எங்கள் மனத்திற்குள்ளாகவே புதைந்து போய்விட்டது. சொன்னது போலவே அந்த வருடத்தின் கடைசியில் அத்தைப் பெண்ணுக்குப் பரிசம் போட ஊருக்குப் போனவர், சோர்ந்த முகத்துடன் திரும்பி வந்தார். பவுன் போடுவதில் பிரச்சினையாகி, பேச்சு வார்த்தை முறிந்துவிட்டதாக சோகத்துடன் சொன்னார். ஆனாலும் அண்ணாவுடைய அம்மாவின் ஆசைக்கேற்ப, அடுத்த வருடமே ‘மலர்கொடி’ நல்ல சொத்துக்காரியாக, பூங்கொடியாக அண்ணனின் கைப்பிடித்தாள். ஊரில் தோட்டத்தில் பெரிய பந்தல் போட்டு ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார்கள். அதற்குப்பிறகு எங்கள் ஒண்டிக்குடித்தனம் எதற்கு? ஊரின் நடுவில் இருந்த பெரியமருத்துவமனையின் காண்டீன் காண்ட்ராக்ட்டைப் பிடித்துக் கொடுத்துவிட்டார் அண்ணாவின் மாமனார். ஒரு பெரிய வீட்டை வாங்கி பெண்ணுக்கு சீதனமாகக் கொடுத்துவிட்டதில்,  மலர்கொடியுடன் மஹாலட்சுமியும் குடிபுகுந்து விட்டாள். வருடங்கள் ஓடியதில், பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில், கடைசியாக என் தங்கையின் திருமணத்தில் பார்த்தபோது என் கண்ணையே நம்ப முடியாமல், மலர்க்கொடி பூங்கொடி சைசில் இருந்து கொடிப்பூசணி சைசுக்கு மாறி இருந்தாள். என் பையன் படிக்கும் பள்ளியிலேயே அவர்கள் மகளும் படித்ததில் அதற்கப்புறமும் இரண்டொரு முறை பார்க்க நேர்ந்தாலும் புன்னகையுடன் தலையாட்டலாகவே  முடிந்தது. அதற்கப்புறம் இன்றுதான் பார்க்கிறேன். என் கணவர் வந்தவுடன் சொன்னதில், “நா எங்கம்மா அங்கெல்லாம் பழக்கமில்லாம.. நீ வேணா உங்கம்மா போனாங்கன்னா போயிட்டு வந்துரு” என்றார் ஆண்களின் அரிச்சுவடிப்படி. சீர் ஏழு மணிக்கு என்று போட்டிருந்தாலும் ஐந்து மணிக்கே  மண்டபத்திற்குப் போய்விட்டேன். அவ்வளவு சீக்கிரம் போகக் காரணம் என் அம்மா வீட்டுப் பழைய குடித்தனக்காரர்கள் சகுந்தலாக்கா, மாலாக்கா வருவார்கள். அவர்களுடன் அரட்டை அடிக்கலாம் என்ற குதூகலம்தான். இப்போது வெவ்வேறு இடங்களில் குடி இருந்தாலும்  ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் அவர்களும் சீக்கிரமே வந்திருந்தார்கள். முன்புறம் செந்திலண்ணன் மட்டுமே வரவேற்பில் நின்றிருந்தார். “எங்கண்ணா.. மலர்கொடி தர்ஷினிக்குப் போட்டியா அலங்காரமா?” என்றேன் சிரித்துக்கொண்டே. “அதையேம்மா கேக்கற.. இந்த ஒரு வாரமா எம் பொண்ணையும் பொண்டாட்டியையும் தேட வேண்டியதா இருக்கு. பேஷியல்ங்கறாங்க, பிளீச்சுங்கறாங்க.. ஒன்னுமே புரியல போ..” என்றார் முகம் மலர. வரிசையாக சகுந்தலாக்கா, மாலாக்கா என்று வந்ததில் சந்தோஷம் குதி போட சிரிப்பும் பேச்சும் களை கட்டின. சரியாக ஆறு முப்பதுக்கு சடங்குகள் ஆரம்பமாகின. பூக்களால் மயில்போல அலங்கரிக்கப்பட்ட மேடையில்  தர்ஷிணி அமர வைக்கப்பட்டு சீர்  தொடங்கியது. பின்னாலேயே அண்ணன் சொன்னது போல உற்றுப் பார்த்தால்தான் அடையாளம் தெரியுமளவிற்குப் பெரிய கரை வைத்த சிகப்புக் காஞ்சிபுரம் தகதகக்க, தலையை நுண்ணிய முறையில் பின்னி பந்துப் பூ வைத்து, கழுத்து கொள்ளா நகைகளில் மலர்கொடி ஜொலித்தாலும் முகம் மட்டும் புன்னகையின்றி இருந்ததோடு, பார்வையும் அவ்வப்போது எங்கேயோ வெறித்துக்கொண்டே இருந்தது. “என்னது இது.. எதாவது உடம்பு சரியில்லையா?” என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டே இருக்கையில், “அம்மா வூட்டு தாத்தா சீருங்க.. வைர நெக்லஸ் ஒரு செட், பட்டுச்சேலை ஐம்பதாயிரம்..” என்று உரக்கச் சொல்லி தர்ஷிணியின் கையில் கொடுத்தார்கள். கீழே விழுந்து வணங்கிப் பெற்றுக்கொண்ட பெண்ணை, உடுத்திக்கொண்டு வர உள்ளே கூட்டிப் போனார்கள். “அண்ணனுக்கு மாமனார் வூடு வாச்சிருச்சு..” என்றேன் சகுந்தலாக்காவிடம். “ஆமா.. போ.. உனக்கு வெசயமே தெரியாதா..? பாவம் செந்திலு.. மலர்கொடிக்கு.. அதென்னவோ சொல்றாங்களே.. ஹிஸீட்டிரியாவோ என்னவோ.. அதாம்மா.. கலியாணத்துக்கு முன்னாடியே ஆடித் தீத்துருவாளாம். ஆசுபத்திரிக்கு அங்கியும் இங்கியும் கூட்டிட்டுப் போயி எதோ கொஞ்சம் கொணப்படுத்தி அலுங்காப்படி மறச்சு செந்திலு தலயில கட்டிட்டாங்களாம். தர்ஷிணி பொறக்கற வர பரவலாம்மா இருந்தது இப்ப ரொம்ப மிகுந்து போச்சாம்.. அதுவும் அவ இப்புடி குண்டடடிச்சுக் கெடக்கறதுல எந்தப் பொண்ணுட்ட பேசினாலும் ரொம்பவே சந்தேகமாம். பேயி புடிச்ச மாரி ஆடுவாளாம். காசுக்கு ஆசப்பட்டு அனுபவிக்கறாங்க. நல்ல வேள.. நாம எல்லாம் தள்ளி வந்துட்டோம்”. “அதுவும் செந்திலோட அத்த பொண்ணு ஜீவிதா, புருஷனோட பொழைக்காம விவாகரத்து வாங்கிட்டு பையனோட தனியா வந்துட்டாளாம். அதுலர்ந்து இன்னும் சந்தேகமாம். சரி.. செந்துலுந்தான் எத்தன நாளு பொறுத்துட்டு இருப்பான். அவம் மட்டும் ஆம்பள இல்லையா என்ன..?! அப்பப்ப போயிட்டு வந்துட்டு இருக்கிறதா கசமுசான்னு பேசிக்கறாங்க..” “சேச்சே.. என்னக்கா..” என்ற  என்னைப் பார்த்து.. ‌”ஆமா.. நீ நம்பு போ.. எந்தப் புத்துல எந்தப் பாம்போ..” என்றார்கள் அக்காக்கள் ஒரு சேர. அவர்கள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று மனத்திற்குள் இரு கூறு இருந்தாலும்  அருமையான விருந்துச் சாப்பாட்டை சாப்பிட்டு, பரிசுப் பொருளைக் கொடுக்கப் போனோம். அண்ணன், மலர்கொடி இருவருமே இல்லை. அண்ணாவின் அம்மாவிடம் சொல்லிவிட்டு இறங்கி வருகையில் கையிலிருந்த மொபைல் தவறி பின்புறமாகக் கீழே இறங்கிய படிக்கட்டில் நழுவிவிட்டது. பரபரப்பாக ஓடி எடுத்துக்கொண்டு வரும்போது மாடிப்படியின் கீழே, “என்ன ஜீவி.. தனியா பேசணும்னு கூப்பிட்ட..” என்றது செந்திலண்ணன் குரல். ‘அங்கே அத்தனை ஜனம் இருக்க, இங்கே இவளிடம் என்ன தனித்த பேச்சு? ஒருவேளை அக்காக்கள் சொல்வதுபோல்..’ “ஒன்னும் இல்ல செந்திலு.. மலருக்கு இப்புடி இருக்குதே.. அதுக்கு சேலத்து பக்கத்துல மலையில ஒரு ஆசிரமம் இருக்குதாம். அங்க கூட்டிட்டுப் போனா ஒரு மண்டலத்தில குணப்படுத்திராங்களாம். ரோசன பண்ணி உம் மாமனாருகிட்டயும் கலந்து சொல்லு. போனுல சொல்லாம்னா அவதான் பொம்பளன்னு  யாருகூட நீ பேசினாலும் ஆடறா.. இதுக்கு பயந்துகிட்டே நீயும் எங்க வூட்டுப் பக்கம் வாரதே இல்ல.. அதான் இங்க வந்து சொன்னேன்..” “சரி பாக்கலாம் ஜீவி.. இந்த சென்மத்துல அவ கொணமானாலோ  ஆகாட்டியோ எம் பொண்டாட்டிதான். தர்ஷிணி மாதிரிதான் அவளும் எனக்கு. என்ன.. ஒவ்வொரு சமயம் இவ பண்றதுல குழந்த சுருங்கிப் போயிறா.. பயத்துல அவ நடுங்கறத பாக்கவே பாவமா இருக்கு. அதான் இது மாத்தி அது, அது மாத்தி இதுன்னு எதோ ஒரு வைத்தியம். இந்த சீருகூட இவ்வளவு ஆடம்பரமா வேண்டாம்னு சொன்னேன். புடிவாதமா ‘ஏன்.. எங்கூட சோடியா நின்னா எளப்பமாயிருமோ..’ன்னு ஒரே சத்தம் போடறா மலரு. அதான் வச்சுட்டாங்க. சரி நீ போ.. தனியா பேசறத யாராவது பாத்து அது வேற அவ காதுக்குப் போச்சுன்னா தொலஞ்சேன்..” கேட்டுக்கொண்டிருந்த நான் சத்தமே இல்லாமல் மேலே வந்தேன். “ஏம் புள்ள.. கெடச்சுருச்சில்ல.. இதுக்குப்போயி கண்ணு கலங்கிருக்க..” என்று அம்மா சொன்னபோதுதான் என் கண்களில் நீர் வழிந்திருந்ததே புரிந்தது. இப்போது மேடையில் மீண்டும் மலர்கொடி நின்றுகொண்டிருந்தாள். யாரையோ பார்த்து சிரித்துக் கையசைத்துக் கூப்பிட்டாள். செந்திலண்ணன்தான் வேகமாக மேடையேறிக்கொண்டிருந்தார். குடும்பமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். புகைப்படம் எடுப்பவர், “இன்னும் கொஞ்சம் ஒட்டி நில்லுங்க..” என்று சொல்லவே, “வாம்மா..” என்றபடி அவள் தோளணைத்துத் தன் பக்கம் நெருக்கமாக நிற்கவைத்துக்கொண்ட செந்திலண்ணனைப் பார்க்கப் பார்க்க, ‘மலர்கொடியைக் கடவுள் சரியான ஆளிடம்தான் ஒப்படைத்திருக்கிறார்’ என்று தோன்றியது. “நல்லாவே நடிக்கிறான் செந்திலு. இல்லன்னா ரவைக்கு ஆடித் தீத்துருவாளே..” என்றனர் என் பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்த அக்காக்கள் இரண்டு பேரும். அவர்களைப் புன்னகையுடன் பார்த்த நான், “சரிக்கா.. கிளம்பலாம்..” என்றபடி மேடையைப் பார்த்தேன். ‘ஓ..’வென்ற கூச்சலுடன் வண்ணக் காகிதங்கள் பறக்க கேக் வெட்டிக்கொண்டிருந்தனர். ஒருகணம் அங்கே இருந்த அத்தனை பேரும் மலர்கொடி போலவே தெரிந்தார்கள் எனக்கு‌.

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து, எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 4, 5 தேதிகளில் மழைக்கு ஊடாகவும் சிறப்பாக நடத்தின. அகிலனின் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் அவரது பன்முகப் படைப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. அவற்றுள், திரையில் அகிலனின் நாவல்கள் என்ற அமர்வில் கலந்துகொண்ட கவிஞரும் திரை இயக்குனருமான பிருந்தா சாரதி ஆற்றிய உரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.   ஒரு எழுத்தாளன் என்பவன் வாசக மனங்களில் கனவுகளை விதைக்கிறவன். அதுவும் பெருந்திரளான மக்களால் வாசிக்கப்படும் ஓர் எழுத்தாளனால் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்கள், சமூக மனதில் ஆழமாக விதைக்கப்பட்டு பெரும் விளைச்சலை வழங்குகின்றன. இங்கே நேற்றைய அமர்வில் பேசிய எழுத்தாளர் திலகவதி அவர்கள், தான் மாணவப் பருவத்தில் படித்த அகிலனுடைய பெண் கதாபாத்திரங்கள் தன்னை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்று கூறினார். அதேபோல, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில், தான் அவரைச் சந்தித்தபோது, அகிலனின் ‘பொன்மலர்’ நாவலை வாங்கி வருமாறு கேட்டதைக் குறிப்பிட்டார். பிறகு கலைஞரை மருத்துவமனையில் சந்தித்தபோதும் தலைமாட்டில் அந்நூலைக் கண்டதாகக் கூறினார். ஒரு முதலமைச்சர் முதல் சிற்றூரில், கிராமத்தில் படிக்கிற மாணவி வரை அகிலனின் எழுத்துக்களால் கவரப்பட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் அகிலன் அவர்கள், ஏறக்குறைய 20 நாவல்கள், 200 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள்,  சிறுவர் கதைகள், நாடகம், வாழ்க்கை வரலாறு, திரைக்கதை என, தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். சாதாரண மனிதர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு, எதார்த்தமான கதைகளை, மானுடத்தின் மாபெரும் லட்சியமான அன்பை முன்வைத்து காந்திய வழியில் தன் கதைகளை எழுதியவர் அகிலன். எளிய மொழி அவரது மொழி. கதை கூறும் முறையிலும் பெரிய சிக்கல் எதுவும் அற்றவை அவரது கதைகள். ஆனந்த விகடன், கலைமகள், கல்கி முதலான பெரும் பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளிவந்தபோது, பலரும் வாசித்து அதன்மூலம் தங்கள் வாழ்க்கையையே சீரமைத்துக் கொள்ளும் உந்துவிசை பெற்றதைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவருடைய கதைகளின் நாயகர்கள், நாயகிகள் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். ஏன், அவர் பெயரையே குழந்தைகளுக்குச் சூட்டியவர்களும் உண்டு. அந்த அளவிற்கு ஆக்கபூர்வமான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கியவர் அவர். அகிலனின் கதைகள் ஒரு காலகட்டத்தின் முகம் என்றும் கூறலாம். சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமான 50 ஆண்டுகளின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களைத் தன் கதைகளில் எழுதினார் அகிலன். பெண்ணுரிமை, பொருளாதாரச் சமத்துவம்,  போலித்தனங்களைத் தோலுரித்து உண்மையைத் தேடுதல் போன்ற கருப்பொருட்களை காந்திய நெறியில் எழுதியவர். தமிழில் முதன்முதலாக ஞானபீட விருது பெற்றவர். சாகித்திய அகாடமி, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்றவர். கவிஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற சமூகம்தான் வளர்ச்சி பெறுகிற ஒரு சமூகமாக முன்னேற முடியும் என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். ஆகவே எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டை, குறைந்தபட்சம் 100 இடங்களிலாவது கொண்டாட வேண்டும் என்று இக்கருத்தரங்கின் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். சாகித்ய அகாடமி தொடங்கி வைத்து விட்டது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற இலக்கிய அமைப்புகள் அகிலனின் படைப்புகள் குறித்துக் கூட்டங்கள் நடத்தி விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இளைய மனங்களில் நல்ல நெறிகளையும் நம்பிக்கையையும் விதைப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

ஜெயிக்க விரும்பியவர்

ஜெயிக்க விரும்பியவர்

சிறுகதை  –  களந்தை பீர்முகம்மது அவர் போகும்போது ஒருமுறை பார்த்துக்கொண்டார்.  அரசமரத்தையும் அதைச் சூழ்ந்திருக்கும் பீடத்தையும்.  அழகாகவும் அடர்ந்த நிழலாகவும் வந்து தலைசாய் என்று சொல்கிற விதமாகவும் நல்ல அரச மரத்தடி.  அந்த மரம் அக்கிராமத்தின் வயதைக் கூறுகிறதுபோல.  அதை ரொம்பவும் அடர்த்தியாகப் பார்த்தார்.  பக்கத்தில் குளம் கிடக்கிறது.  தண்ணீர் அலைவுறும் பாளமாக ஒளிர்கிறது.  சிற்றலைகள் மீன்குஞ்சுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கலாம்.  விளையாட்டு விளையாட்டாயிருக்க,  மேலே ஊர்ந்துசெல்லும் தென்றலோடு இசைந்து அலைகள் ஏதோ பாடல் பாடுகின்றன.  அதனால்தான் இத்தனை குஷாலான அலையடிப்புகள்.  குளம் ஊர்ப்பரப்புக்கு மேலே நான்கைந்து அடி உயரமாக விரிந்துகிடப்பது தெரியவருகிறது புலமாடத் தேவருக்கு. நடந்துகொண்டே இருந்தார்.  ஆனால் அரச மரத்தடியில் உட்கார்ந்து சுகமாகத் தலையைச் சாய்த்துத் தூங்கிவிடுகிறார்.   காற்றும் அலைகளும் இவ்வளவு குதூகலமாய் இருக்கும் கிராமக் குளத்தில் இதை யாரும் ரசிக்காமலோ அனுபவிக்காமலோ எங்கெங்கிலும் அலைந்து திரிகிறார்கள்.  அவர் தன் உடம்பை அங்கே கிடத்தியபடியே நடந்துகொண்டிருக்கிறார்.  திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்.  தான் அங்கே கட்டைபோலச் சாய்ந்துகிடப்பது தெளிவாகத் தெரிகிறது.  கொஞ்சம் புரள்வதும் ஏதோ புலம்புவதுமாக.  அந்தக் காற்றும்  பீடமும் தனக்கு எப்பவும் வேண்டும் என்று விரும்புகிறார்.  உள்மனது அவரை அறியாமல் சொல்லிவிட்டது, ‘நீ அங்கே செல்வாய் கொஞ்ச நேரத்தில்.’ காற்றின் இதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.  வயல் பசுமை கிறங்கச் செய்தது. இவள் இந்தச் சொகுசில்தான் இந்த ஊரிலேயே இருக்கிறாளா என்று கேட்டுக்கொள்கிறார்.  கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை.  அதனால் கொஞ்சம் சத்தமாய்க் கேட்டார், ‘பாதவத்தி, வந்த ஜோருல இப்படியே ஒக்காந்திட்டியே.  என்னை ஒருமுறை கூடவா நீ நெனச்சுப் பாக்கல?’ முன்பு எப்போதோ வந்தது.  மாப்பிள்ளை ஜோர் காலம்.  அதற்குப் பிறகு அவர் இங்கு வரவில்லை.  தலையாரி வேலையில் சாத்தியப்படாது.  ஆனால் அவர் வள்ளியம்மாவிடம் சொல்லிக்கொண்டது இன்னும் கெத்தாக, ‘இந்த மாரி அங்கேயும் இங்கேயும் அலையுற ஜோலி மயிரெல்லாம் இங்கே நடக்காது.  வாய மூடிட்டுக் கெட.’  அன்று முடங்கிவிட்டாள்;  ”அவரு வந்துதான் கிழிக்கப்போறமா?”.  தன்னைப் பார்க்க வந்த அம்மைகிட்டேயும் ஐயாகிட்டேயும் எவ்வளவோ குறை சொல்லி ஒப்பாரி வைத்திருக்கிறாள்.  ஒப்பாரியோடும் முணங்கல்களோடும் வருஷங்களைக் கடத்திவந்தாள்.  புலமாடன் புலமாடத் தேவராக அறியப்பட்ட ஒருநாள் கலவரக்காரி மாதிரி அவரை எதிரே நிற்கவைத்துக் கேள்வி கேட்டாள்.  தலையாரித் தேவர் பயந்துபோய், ‘ போய்த் தொல.’  வள்ளியம்மாள் அந்த ஒரு வாய்ப்பைப் பன்மடங்கு வாய்ப்பாய்ப் பெருக்கினாள்,  வரவும் போகவும்.  என்ன பொல்லாத தூரமா?  ஒரு பதினைஞ்சு கிலோ மீட்டர்.  கணபதி பஸ் போகிற நேரத்தைக் கணக்குவைத்து நேராக ரைஸ்மில் பக்கம்போய் நின்னா போதும்.  வள்ளியம்மை கைகாட்ட வேண்டிய அவசியமில்லை.  அவள் நிற்கிறதைப் பார்த்து பக்கீர் ராவுத்தர் பஸ்ஸை உடன் பிரேக் போட்டு நிறுத்துவார்.  வள்ளியம்மை பூஞ்சை உடம்புக்காரி.  காற்றுபோல ஒரு சொடுக்கொலியில் பஸ்ஸில் ஏறுவாள்.  பஸ் நின்றதும் தெரியாது; புறப்பட்டதும் தெரியாது. ஒருமுறை புலமாடத் தேவர் நூறு, இருநூறடி தூரத்துக்குள் வந்துகொண்டிருக்கும்போதே கணபதி பஸ்ஸை நிறுத்தி ஊருக்கு ஏறிப் போயிட்டாள்.  ‘எளா, ஒன் வீட்டுக்காரரு வாரார, நீ கண்டுக்காம ஏறிட்டே!” ’ஆங்… வந்தா போவாரு…’ இதைப் பார்த்தார் தேவர்.  அவருக்கு ஆத்திரம் வந்து அவள் ஆக்கிவச்ச சோற்றைப் பூனைக்கு அள்ளிக்கொட்டினார்;  அப்புறம் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கிட்டுப்பிள்ளை கிளப்பில் உட்கார்ந்து முட்டைகோஸும் தேநீரும் சாப்பிட்டது ஞாபகத்தில் உண்டு. புலமாடத் தேவர் பீடியை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டார்.  புகை வெளியே வருவதற்குள்ளேயே காற்றில் காணாமல் போயிற்று.  ‘அவதான் அப்படிப் போனா.  இந்தப் படுபாவி இசக்கியுமில்லா அவக்கூட சேந்துக்கிட்டான்.  அவன் எப்படி இந்த ஒண்ணுக்குமில்லாத ஊர்ல வந்து கெடக்கான்?  அவன் சேக்காளிப் பயலுவள் எல்லாம் நம்மகிட்ட எத்தனை முறை கேட்டுட்டானுவோ.  அந்த மீரான் பய கடுதாசி போட்டதா வேற சொன்னான்.  ஆனா இசக்கி பதிலே போடாம ஒக்காந்துட்டான்.  இப்படி சேக்காளிப் பயலுவளயே கைவிட்டுட்டுப் போறவன் எப்படி நம்மள ஏறெடுத்துப் பாப்பான்.” புலமாடத் தேவர் தன் மகனிடம் நாசுக்காகப் பேசி கையோடு இழுத்துட்டுப் போயிரணும் என்று மனசுக்குள் திட்டம் வைத்திருந்தார்.  ’அவன் இங்கே கிடந்து என்ன வேல பாப்பான்.  வயல்ல இறங்கி வேல பாக்குறப் பயலா அவன்?  மூதி….அறிவுகெட்ட மூதி….அவன் அம்மையோடு சேந்துசேந்து அவனுக்கும்லா மூளை மழுங்கிப்போச்சு.’  இத்தனைப் போக்காக அவர் இசக்கியை நினைத்துக்கொண்டிருந்தாலும் சரஸ்வதியைப் பற்றி நினைக்கவே இல்லை.  அவ பெரிய ராங்கிக்காரில்லா.  நல்ல நாள்லேயே நாழிப் பால் கறக்காதவ. இப்போ அவ அம்மைக்குத் துணையா இருக்குறதா சொல்றானுங்கோ.  நம்ம வீட்டுக் காரியம் நமக்குத் தெரியல்ல.  ஊருக்காரப் பசங்கெல்லாம் ஏதோ திருதராஷ்டிரன் கணக்கா எல்லாத்தையும் நேரில பாத்த மாதிரி நம்ம வீட்டுக் கதைய பேசுறானுவோ.’ அவர் வடக்கே நோக்கிப் போகப்போக அவரைக் கடக்கும் வண்டிகளும் வடக்கே இருந்து வருவனவாகத்தான் இருந்தன.  தெற்கே இருந்து யாராவது மாட்டுவண்டி, சைக்கிள்ல வந்தாலும் அவங்களைத் தொத்திக்கிட்டு ஊருக்குள்ளாற போயிரலாம்.  இந்தக் காற்றும் பச்சை வயலும் இல்லேன்னா இந்த வெயில்ல அலையிறது ரொம்பக் கஷ்டமாக ஆகியிருக்கும்.  அந்த மரத்தடியில் தலையைச் சாய்த்திருக்கலாம்.  பிள்ளையார் துணையிருக்கிறார்.  அவர்கிட்டே கதையச் சொல்லிப் பிரார்த்தனையும் செஞ்சிருக்கலாம். ஊரில் அந்த சேக்கு பையன் இருக்கிறான்.  இசக்கியோட முக்கியமான சேக்காளி அவன்.  சேக்கு நிறைய கதை எழுதிக்கிட்டிருக்கான்னு சொல்வானுவோ.  அவன் என் கதையை எழுதிப் பரிசு வாங்கியிருக்கானாம்.  அதைக் கேள்விப்பட்ட நாளிலே இருந்து அவனைக் கண்ணால பாக்கக் கூட முடியல்ல.  என் கதையை அவன் எப்படி எழுத முடியும்?  இப்பத்தான நான் இப்படி லோல்படுறேன்.  இதெல்லாம் படுறதுக்கு முன்னாலேயே ஒருத்தன் எப்படி என்னோட கதைய எழுத முடியும்?  ரொம்பவும் அக்குறும்பால்ல இருக்கு! ‘ஜெயிக்க விரும்பியவர்’ என்ற தலைப்பில் சேக் கதை எழுதினான். அது முக்கியமான சிற்றிதழில் பிரசுரமானது.  அந்த மாதமே அந்தக் கதைதான் சிறந்த கதை என்று தேர்ந்தெடுத்திருந்தது அந்த இலக்கிய அமைப்பு.  ‘ஜெயிக்க விரும்பியவர்’ கதாநாயகரான புலமாடத் தேவர் மிகவும் அணுக்கமாக இருந்தார் சேக்கிற்கு.  அவன் எழுதிய கதை அவனாகக் கற்பனை செய்து எழுதியதல்ல.  இந்தக் கதையில் இப்படி ஓர் அம்சம் இருக்கு என்று எடுத்துக் கொடுத்தவள் மைமூன் பாத்திமா.  இவன் கண் முன்னே வாழும் புலமாடத் தேவரைப் பற்றித் தன் சொந்த மண்ணில் பார்க்க துப்புக்கெட்டு, சென்னையில் மைமூன் பாத்திமாவைப் பார்க்கப்போன இடத்தில் அவள் சொல்லித்தான் சேக்கிற்குத் தெரிந்தது. மைமூன் பாத்திமா தெளிவாகச் சொன்னாள், ‘ஐயோ பாவம் புலமாடத் தேவரு.  அவரு பொண்டாட்டி அவரை வேண்டாம்னு சொல்லிட்டாளாமே,” அவன் கொஞ்சமாய் முழித்தான்.  அந்த முழிகண்டு மைமூன் பாத்திமா மறுபடியும் சொன்னாள்,” உனக்குத் தெரியாதாக்கும் இத்தனை நாளா?  இந்த முழி முழிக்கிற? நீயெல்லாம் என்னடே கதை எழுதுற?” மைமூன் பாத்திமா இப்படிக் கேட்டதும் சேக்கிற்குக் கடும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.  அவன் எதிர்பார்க்கவில்லை;  மைமூன்பாத்திமாவும் எதிர்பார்த்திருக்க முடியாது.  அவளை அடக்க விரும்பி ஆங்காரமாகக் கட்டிப்பிடித்து முத்தங்களாகக் கொடுத்தான்.  அவனுக்கு ஆச்சரியம் என்னவென்றால், மைமூன்பாத்திமா எந்த ஆட்சேபணையும் சொல்லாமல் அவன் கட்டுக்குள் கிடந்தாள்;  எனக்கென்ன என்கிற மாதிரி வசப்பட்டிருந்தாள். இன்னும் ரொம்ப நேரமாய் அவன் தழுவித்தழுவித் தனக்குள் புதைத்துக்கொண்டிருந்தான்.   மைமூன்பாத்திமா எத்தனை பெரியவள்?  இவனுக்கு உண்மையிலேயே அவளை என்றேனும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கவா செய்தது?  அப்புறம் இருவரும் அவரவர் பேச்சைத்தான் பேசி வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.  அவளுடைய ஈர்ப்பான முலைகள் இன்னும் நல்ல திமிரோடு அவன் மார்பில் குத்திக்கொண்டிருந்தது அவனுக்குக் கிளர்ச்சியை ஊட்டியது.  இவளும் தன் உடம்பு அழுந்திவிட்ட இந்த ஒல்லிப்பிச்சான் சேக்கின் உடம்பை ஆச்சரியமாக நோக்கினாள். ‘சேக்கு நீ இந்தக் கதையை எழுது…என்னா….நல்லா வரும் பாரு.  உனக்குப் பரிசும் கிடைக்கும்டே.’  இந்தப் பேச்சை ரொம்ப ரசித்தான். புலமாடத் தேவரை அவரறியாமல் மனம் பின் தொடர விட்டான்.  அவன் இதற்குள்ளாக தேவரைப் பற்றிச் சில விஷயங்கள் தெரிந்துகொண்டிருந்தான். அதையெல்லாம் லெட்சுமணன் சொன்னான்.  இந்த லெட்சுமணன் ஒரு கூறுகெட்ட பய.  இவன் சொல்லை எவ்வளவுக்கு ஆதாரமாகக் கொள்வது? ஊசலாடினான் சேக்.  இருந்தாலும் இப்போது இது ஓர் இடைக்காலக் கொள்முதல் போல கைவசம் இருக்கட்டும் என்று மனத்துக்குள் பூட்டிவைத்தான்.  எவ்வளவு கூறுகெட்ட பயலாயிருந்தாலும் ஒரு கதைக்கு எல்லா தகவல்களும் தேவைதானே? புலமாடத் தேவர் தன் பாரியாள் வள்ளியம்மையைத் தேடிப் போகப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது;  அவருக்கும் தெரியாது.  வயிற்றுப்  பசியும் உணர்ச்சிப் பசியும் அவரை மொய்த்தன.  கிட்டுப்பிள்ளை கிளப்பில் மூணு இட்லியும் ஒரு தேநீரும் சாப்பிட்டு வேலைக்காகவில்லை.  நின்றுகொண்டிருந்த கணபதி பஸ்ஸில் ஏறிக்கொண்டார்.  பல கற்பனைகள்.  வள்ளியம்மா ரொம்பவும் கோபப்பட்டுப் பேசுவாள்.  இம்முறை நாம் சாந்தமாகப் பதில் பேச வேண்டும்.  பாவி மட்டை, சும்மா ஊருக்குப் போயிட்டு வர்ரேன் என்று சொல்லிவிட்டுப் போனவள்தானே,  இப்படியா போய் தன் ஊருக்குள் இருந்துவிடுவது?  கோபத்தை ஆற்றிய பின்னராவது தன் வீட்டுக்கு வந்திருக்கலாமே!  அப்படியென்ன ஊரு உலகத்தில் யாருக்கும் இல்லாத கோபம்? வாயில் வைக்கிற மாதிரி சாப்பாடு செஞ்சாயென்னா என்று கேட்டது ஒரு தப்பா?  அல்லது இதுபோக வேறு எதையாவது என்னையறியாமலேயே நான் சொல்லிட்டேனா?  இல்லே, பழைய கோவத்தையெல்லாம் திரட்டிக்கிட்டு ஒரேயடியா காலிபண்ணிப் போயிட்டாளோ? அவள் போய்விட்டு நாளைக்கு வருவா, நாளை மறுநாளைக்கு வருவா என்று எதிர்பார்த்திருந்தார் புலமாடத் தேவர்.  ஒரு வாரம் ஆகவும் சந்தேகம் வந்தது; அச்சம் வந்தது.  பிறகுதான் தெரிந்தது அவளுடைய ட்ரங்குப் பெட்டியில் எதுவும் இல்லையென்று.  சரஸ்வதியுடைய துணிமணிகளும் ஒன்றும் கிடையாது.  ”எவ்வளவு தந்திரம் இந்தப் பொட்டச்சிகளுக்கு?”.  இவை மனசுக்குள் ஓடஓட வேலையில் கவனம் சிதறித் தேவர் வாங்கிக் கட்டிக்கொண்டதும் உண்டு.  யாரிடத்திலும் துயரைப் பகிர முடியாமலும் போச்சு.  வழக்கமாக இராத்திரி நேரத்தில் அந்த போஸ்ட் ஆஃபீஸ் திண்ணையில கொஞ்சம் குளுமையை அனுபவிச்சுக்கிட்டு, சோவாரிக்கிட்டு,  ஊர்க்கதையைப் பேசிக்கிட்டு இருந்த அந்தப் பொழுதெல்லாம் நரகமாப் போச்சி.  அவர் உடம்பு அங்கு இருக்கும்;  மனதைக் காணோம் என்று ஆகிவிடும்.  சேதுப்பிள்ளை, பேச்சியா பிள்ளை, மூக்கன் செட்டியார், அதாவுல்லா, பாலையா கோனார் இப்படியாக எல்லாரும் சேர்ந்து கிடந்து பேசிக்கிட்டிருந்தப்போது தன்னால் ஒரு வரியும் ஆற்ற முடியாமல் போயிற்று.  பேந்தப் பேந்த அங்குமிங்கும் முழிப்பார்.  தன் முன்னே இப்படி ஊர்க்கதையும் சினிமாகதையும்