புத்தம் புதிதாய்ச் சந்திப்போம்

புத்தம் புதிதாய்ச் சந்திப்போம்

மிகுந்த படபடப்புடன் காணப்பட்டார், மகனால் மனநல மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்த அந்த ஐம்பது வயதுப் பெண்மணி. உடல் முழுக்க வியர்த்துப் போயிருந்த அவரை ஆசுவாசப்படுத்தி அமரச்செய்து, பிரச்சினையை விசாரித்தேன். தனக்கு தூக்கம் பிடிக்கவில்லை, கைகள் நடுங்குகின்றன, தலை ஒரு பக்கமாக வலிக்கிறது, என்னாகுமோ ஏதாகுமோ என்று எப்பொழுதும் பயமாகவே இருக்கிறது. அதற்கெல்லாம் காரணம் தன்னுடைய இளைய மகளின் செயல்பாடுகள்தான் என்றார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் தன் மகள், தன் வயதுக்குரிய பக்குவம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும், காரணமில்லாமல் எரிச்சலும் கோபமும் கொள்வதாகவும், தான் நினைத்தது மட்டுமே சரி என்று பிடிவாதமாகத் தன்னிடம் சண்டையிடுவதாகவும் கூறினார். மகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் கூறிய அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கு மனப் பதட்ட நோய் இருப்பதாக அறிய முடிந்தது. அவர் அதில் இருந்து குணமடையத் தேவையான மருந்துகளைப் பரிந்துரைத்தேன். மருமகளைக் குறை சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்கலாம், ஆனால் மகளைப் பற்றி ஒரு தாய், புதியவரிடம் குறை சொல்கிறார் என்றால் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கும் என்று அவர் மகளையும் ஒரு முறை ஆலோசனைக்கு அழைத்து வரச் சொன்னேன். பத்து நாட்கள் கழித்து தொடர் சிகிச்சைக்காக என்னைச் சந்திக்க வந்த அவர், தன் கணவருடன் வந்திருந்தார். தனக்கு இருந்த மனப் பதட்ட அறிகுறிகள் எல்லாம் சரியாகி, தற்போது நலமாக இருப்பதாகவும் தன் கணவர்தான் மிகவும் சோர்ந்து காணப்படுவதாகவும் கூறினார். அவர் கணவரிடம் ‘என்ன செய்கிறது?’ என்று நான் கேட்க, மிகவும் களைப்பாக சக்தியே இல்லாதது போல் உணர்வதாகவும், காலையில் எழுந்தவுடன் மனம் மிகுந்த இறுக்கமாக இருப்பதாகவும், எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பதாகவும் கூறினார். மேலும் அவரும், தன்னுடைய பிரச்சினைகளுக்கு தன் மகள்தான் காரணம் என்று தன் மனைவியைப் போலவே கூறினார். எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக தன் மகள் இருப்பதாகவும், சிறிய பிரச்சினைகளைக் கூட மிகப் பெரியதாகப் பார்ப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார். ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று மகளை நோக்கி ஆனந்தமாகப் பாட வேண்டிய தந்தையே, மிகவும் மனம் நொந்து தன் மகளின் செயல்பாடுகள் பற்றி சொல்லி வருத்தப்பட்டது, உண்மையில் அவர் மகளுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருப்பதைப் புரிய வைத்து, அதில் இருந்து மீண்டு வர சில மருந்துகளைப் பரிந்துரைத்து விட்டு, கண்டிப்பாக அவர்களின் மகளையும் சிகிச்சைக்கு அழைத்துவரும்படி கூறினேன். அவரிடம் சொல்லி அழைத்து வருவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறினார்கள் இருவரும். அவர்கள் சென்று சரியாக ஒரு வாரம் கழித்து, அவர்களின் மூத்த மகன், தன் இளைய சகோதரி தன்னுடன் தொடர்ந்து சண்டையிடுவதால் தன்னுடைய நிம்மதி எல்லாம் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டு வந்தார். வீட்டிலிருந்தபடி ஐ.டி.யில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டார். அவருக்கான ஆலோசனைகளை வழங்கிவிட்டு, அவரிடமும் அவர் சகோதரியை ஒரு முறை என்னிடம் அழைத்து வரும்படி கூறி அனுப்பி வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஒரு நாள் அவர், தன் சகோதரி திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்துவிட்டு பின் மறுப்பதால் வீட்டில் உள்ள  அனைவரும் மிகக் குழப்பமான மனநிலையில் இருப்பதாக என்னிடம் வந்து கூறினார். வீட்டில் ஒருவருக்கு ஏற்பட்ட மனநலப் பிரச்சினை, எப்படி மற்ற மூவரின் மனநிலையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. இதற்கெல்லாம் காரணமான அவரை,  ‘எனக்கே அவரைப் பார்க்கனும் போல் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அவருடைய தங்கையை ஒரு வழியாகப் பேசி அழைத்து வந்து விட்டதாகவும், வெளியில் காத்திருப்பதாகவும் கூறினார். குடும்ப உறுப்பினர்கள் மூவர் மூலம் எதிர்மறையான குணங்களால் மட்டுமே அறியப்பட்ட ஒருவரை முதலில் சந்திக்கும் போது, நான் கேள்விப்பட்ட மோசமான சுபாவங்களுடன் கூடிய ஒரு  நபரைப் பார்க்கப் போவதாக நினைப்பது சரியாக இருக்காது. அவரைப் பற்றி என் மனதில் ஏற்பட்ட முன்முடிவுகளையும், தீர்மானங்களையும் முற்றிலும் ஒதுக்கி விட்டு, திறந்த மனதுடன் எந்த வித கண்டனம் செய்யும் மனப்பான்மையுமின்றி, குறை காணும் மனமற்று, புதியதொரு நபரைச் சந்திப்பது போல் சந்தித்தால் மட்டுமே அவர் பிரச்சினைகளை முழுவதுமாகப் புரிந்து கொண்டு அவருக்கு உதவி செய்ய முடியும். தன்னிடம் உள்ள குறைகளையெல்லாம் கண்டுபிடித்து அதை மாற்றிக் கொள்ள அறிவுரை சொல்வார்களோ என்ற பயத்துடன் வரும் அந்தப் பெண்ணை, சிறு புன்னகையுடன்  வரவேற்று அமரச் செய்து, அவரைப் பற்றிய எந்தவித முன் முடிவுகளும் எனக்கில்லை என்பதை முதலில்  அவருக்குப் புரிய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, அவரும் தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் ஒரு இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று நம்பிக்கை கொண்டு தன் மனதினைத் திறப்பார். அந்த மனநிலையுடனே நான் அவரைச் சந்திக்க, அவரும் தன் பிரச்சினைகளை அழுதுகொண்டே சொல்லத் தொடங்கினார். தன் கல்லூரிக் காலத்தில் தனக்கு நேர்ந்த சில துயரமான சம்பவங்கள் தன் மனதை பாதித்தது முதல் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். முழுமையாக அவர் பிரச்சினைகளைக் கேட்டதில் அவருக்கு மாதவிடாய்க்கு முன் ஏற்படும் மனச்சோர்வு நோய் இருப்பது கண்டறியப்பட்டு அதில் இருந்து மீண்டு வருவதற்குத் தேவையான சிகிச்சை அளித்தேன். ‘நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு புத்தகமே. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏதாவது ஒரு விஷயம்  இருக்கும்’ என்று  மனநலப் பிரிவு பேராசியர் எனக்கு சொல்லிக் கொடுத்தது ஞாபகத்திற்கு வந்து சென்றது. முன்முடிவுகளின்றி புத்தம் புதிதாக ஒவ்வொருவரையும் சந்திப்பது மட்டுமே, அந்த மனிதரையும்  சூழலையும் முழுமையாக உணர்வதற்கு உதவும்  என்பதே அவரிடம் நான் கற்ற பாடம். நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை, அவர்கள் பற்றிய நம் கருத்துக்களுடனும், முன் முடிவுகளுடனும், அபிப்ராயத்துடனும் பார்க்கிறோம். உண்மையில் ஒரு மனிதனுடைய குணங்கள் என்பது நிலையானவை அல்ல. மாறாக, மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது என்பது போல மனிதனின் குணாதிசயங்களும் பல மாற்றங்கள் கண்டு மாறிக் கொண்டேயிருக்கும் என்றுதான் அறிவியலும்  நமக்குச் சொல்கிறது. ஒரே நதியில் ஒருவர் இருமுறை கால் நனைத்திட முடியாது என்ற ஹெராக்லிடஸ் உடைய புகழ் பெற்ற சொற்றொடர் போல் நாமும், நாம் சந்திக்கும் மனிதர்களும் மாறிக்கொண்டேதான் இருக்கிறோம். ஒரு முறை நாம் சந்தித்த மனிதரை மீண்டும் மறுமுறை நாம் சந்திப்பதேயில்லை. நாமும் மாறியிருப்போம், மற்றவரும் மாறியிருப்பார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பிறர் பற்றிய நம் அபிப்ராயங்களை, முடிவுகளை, கருத்துக்களை முற்றிலும் மறந்துவிட்டு, நம் நண்பரோ, உறவினரோ யாராக இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் திறந்த மனதுடன் புத்தம் புதிதாய்ச் சந்திக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டால்,  நாம்  வாழும் சிறியதொரு வாழ்க்கை புதியதாகவும் மகிழ்ச்சியாகவும் மிக அழகானதாகவும் இருக்கும். இப்படித்தான் ஒரு முறை என் அருமை  நண்பர் ஒருவரிடம் புத்தம் புதிதாய்ச் சந்திப்பது பற்றிய என் புரிதலை, நுண்ணர்வைப்  பகிர்ந்து கொண்டேன். அதைக் கேட்டு நன்றாகப் புரிந்துகொண்ட அவர், அதற்கு முன்பாக  என்னிடம் வாங்கிய பழைய கடன்களை எல்லாம் முற்றிலும்  மறந்துவிட்டு, தினமும் திறந்த மனதுடன், புத்தம் புதிதாய் என்னை வந்து சந்தித்து புதியதாகக் கடன் கேட்கத் தொடங்கி விட்டார். 😃😃 கட்டுரையாளர்: Dr. ர. நிஷாந்த், D.P.M,மனநல மருத்துவர்,அருப்புக்கோட்டை,தொடர்புக்கு: 9486496169ravi.nishanth79@gmail.com படங்கள்: இணையத்திலிருந்து

தலைவி

தலைவி

திரைவிமர்சனம் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையிலோ சுய வரலாற்று அடிப்படையிலோ அல்லாது, அஜயன் பாலா எழுதிய நூலைத் தழுவி, அதே பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘தலைவி’. பதிவாகியுள்ள அரசியல் வரலாற்று நிகழ்வுகளுடன், யூகங்கள் மற்றும் செவிவழி அடிப்படையிலான சில செய்திகளையும் தொகுத்து, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியைச் சுவையாக இயக்குனர் விஜய் காட்சிப்படுத்தியிருக்கிறார். எனவே, இதிலுள்ள உண்மைத்தன்மை நூறு விழுக்காடும் உத்தரவாதத்திற்கு உரியது அல்ல. விருப்பமில்லாமல் வந்த திரைத்துறையிலும் விருப்பமில்லாமல் வர நேர்ந்த அரசியலிலும் அப்போது நிலவிய ஆணாதிக்கத்தைத் துணிவுடன் எதிர்த்து, சுயமரியாதையுடன் கூடிய பெண்ணாக, வெற்றியும் பெற்ற ஜெயலலிதாவின் வாழ்க்கைதான் ‘தலைவி’யில் விவரிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையும் அரசியலும் பின்னிப்பிணைந்த தமிழக வரலாற்றின் தலைவி அத்தியாயத்தில், ஜெயலலிதாவாகட்டும், ஆர் எம் வீரப்பனாகட்டும், வி.என்.ஜானகியாகட்டும், அத்தனை பேரும் சுற்றிவரும் மையப்புள்ளி எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆரின் விருப்பம் என்னவாக இருந்தாலும், இவர்கள் அனைவரது விருப்பமும், அவர் ஒருவராகத்தான் இருந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்திய விதம் அவரவர்களுக்கு ஏற்ப, மாறுபட்டும் இருந்திருக்கிறது, அவ்வளவுதான். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியதே கலைஞர்தான் என்றாலும், அதன் பிறகு அவரது அரசியலும் அவரைச் சுற்றியேதான் தொடர்ந்தது என்பதும் உண்மையே. இப்படத்தின் கதை ஜெயலலிதாவை நோக்கியது என்கிற வகையில், எம்ஜிஆரின் அரசியல் செயல்பாடுகள், அவரது காலத்தில் கலைஞரின் அரசியல் எல்லாம் ஒரு வரையறைக்குள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஜெயாவாகக் கங்கனா ரனாவத் நிறைவாகவே தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே ஆர். எம்.வீரப்பன் உடனான மோதல், சீண்டல், அலட்சியம், கிண்டல், எகத்தாளம், எம்.ஜி.ஆர். மீதான அதீத அன்பு, அவ்வப்போதான பிணக்கு, சமயோசித அறிவு, திறன், கோபம், கண்டிப்பு, உணர்ச்சி வயப்படுதல் என ஜெயாவின் பன்முகத் தன்மையை, படத்தில் கிடைத்த வாய்ப்பில் வெளிப்படுத்தியுள்ளது சிறப்பு. அரவிந்த் சுவாமிதான் எம்.ஜி.ஆர். கனப்பொருத்தம். அவரிடமே வெளிப்பட்டிராத முக பாவங்களைக்கூட, இதில் இவர் வெளிப்படுத்தி இருப்பது அருமை. நாசர் (கலைஞர் கருணாநிதி), சமுத்திரக்கனி (ஆர் எம் வீரப்பன்) இருவரும் ஏற்ற பாத்திரத்தைப் பழுதில்லாமலும் அட்டகாசமாகவும் செய்துள்ளனர். உடல்மொழியுடன் குரலும் நாசருடையதே என்றால், அவருக்குக் கூடுதல் பாராட்டு. பாக்யஸ்ரீ (சந்தியா), ரெஜினா கஸன்ட்ரா (சரோஜாதேவி), மதுபாலா (வி என் ஜானகி), தம்பி ராமையா (மாதவன்), ஷாம்னா காசிம் (வி.கே. சசிகலா), ராதாரவி (எம்.ஆர்.ராதா) தத்தம் பாத்திரத்தில், உரிய பங்களிப்பைக் குறைவின்றி வழங்கியுள்ளனர். ‘அறிந்தேன் ஆண்மையினை… உண்மையைத்தான் சொன்னேன்’ ‘செட்’டில் எம்.ஜி.ஆரிடம் சரோஜாதேவி, ‘செட்டுக்குள்ள நடிக்கறதுக்கு மட்டும்தான் நீங்க சம்பளம் தர்றீங்க. வெளியே வந்து நீங்க எடுக்கிற பாடத்த கேட்டுக்கறதுக்கு இல்ல..’ ஆர்.எம்.வீ.யிடம் சரோஜா தேவி, ‘தப்பில்லம்மா, அம்மா பண்ணதான், தப்பு’ அம்முவிடம் மாதவன், ‘இப்ப மரியாதை மனசுல வந்துருச்சு’ மாதவனிடம் அம்மு, ‘காப்பாத்தினது கடவுள் இல்லை. இதோ, இந்த மருத்துவரும் மருத்துவமும்தான். அறிவுதான் கடவுள்’ கலைஞர், ‘நல்லா இருக்கு; நான் உங்கள ரெஸ்ட் எடுக்க சொன்னா, நீங்க என் நிம்மதிய கெடுக்கப் பாக்கறீங்களா?’ எம்ஜிஆரிடம் ஜெயா, ‘இது என் படம். என் பணம். யார் வாழணும், யார் சாகணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன். டென்ஷனா இருந்துச்சுன்னா மெதுவடை சுட்டு மெதுவா சாப்பிடு’ ஜெயாவிடம் ஆர்.எம்.வீ. ‘உண்மையைச் சொல்லுங்க; ரெண்டு பேர்ல யாரு பெஸ்ட் ஆக்டர்?’ கேட்கும் மாதவனிடம் ‘அது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? யார் பெஸ்ட் ஆக்டர்ன்னா, அது நான்தான்’ என்று சொல்லும் ஜெயா, ‘விரும்பறவங்களோட மனச கோபப்படுத்தலாம், காயப்படுத்தக் கூடாது’ அம்முவிடம் சந்தியா, ‘என்னைத் தவிர என் வாழ்க்கைக்கு எல்லாரும் முடிவெடுக்கிறாங்க, எனக்கு ஒரு வேலையும் இல்ல’, ‘இது விட்ட மாதிரி தெரியல, வேணான்னு வெட்ன மாதிரி தெரியுது’ ‘நாம விரும்பறவங்க நம்ம பக்கத்துல நிற்கும்போது எப்படி சந்தோஷம் இல்லாம இருக்க முடியும்? அது நிஜமல்ல, வெறும் பிம்பம்தான்னு நினைக்கும்போது எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?’ ஜெயா, ‘நாம மக்கள விரும்பினா மக்கள் நம்மள விரும்புவாங்க. அதான் அரசியல்’, எம்ஜிஆர், ‘ஜானகி அம்மாதான் எம்.ஜி.ஆரோட மனைவி, அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, மனைவி தலைவியாக முடியாது’ ஜெயா. இப்படி வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்; பலே, மதன் கார்க்கி. காமிரா கோணங்கள், லைட்டிங், ஏரியல் ஷாட்ஸ், பாடல்களைப் படமாக்கிய விதம் என விஷால் விட்டலின் ஒளிப்பதிவு அருமை. இணையாக, ஜி வி பிரகாஷ் குமாரின் அந்தந்தக் காலகட்டத்திற்கான திரை இசை உட்பட, உணர்வுபூர்வமான பொருத்தமான பின்னணி இசையும் அருமை. படத்தொகுப்பு அந்தோணி. தொலைக்காட்சித் தொடராகவோ, திரைப்படமாக இருந்தால் பாகங்களாகவோ எடுக்க வேண்டிய அளவிற்கு விரிவாக்கம் தேவைப்படுகின்ற இக்கதையை, இரண்டரை மணி நேரத்தில் சுருக்குவது என்பது மிகவும் சிரமம்தான். விளைவு, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்கிற விதத்தில், நிகழ்வுகளின் ஓட்டத்தில் தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் இயலாத திடீர்த் தாவல்கள் நிறைய. எம்.ஆர்.ராதா ஓர் இரவில் எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் செல்கிறார். சுடும் சத்தம் கேட்கிறது. அடுத்து எம்.ஆர். ராதா காயத்தோடு வெளியேறுகிறார்; எம்ஜிஆர் ரத்தவெள்ளத்தில் தரையில், என்று துண்டு துண்டாகக் காட்சிகள். டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசி, எடுத்த முடிவை உடனடியாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்காத ஜெயலலிதா, ‘இதை எப்போ, எங்க சொல்லனும்னு எனக்குத் தெரியும், நான் சொல்லிக்கிறேன்’ என்கிறார். ஆனால், அதை இறுதி வரை சொல்லாமல் போனதாகத்தான் படத்தில் தெரிகிறது. அதே போன்று, சிகிச்சை பெற்று இந்தியாவுக்குத் திரும்பியதில் இருந்து, இறக்கும்வரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைச் சந்திக்காதது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திரைத்துறையிலும் அரசியல் துறையிலும் தவிர்க்க இயலாத பிரமுகர்களாகத் திகழ்ந்த, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எம். வீ சார்ந்த நிகழ்வுகளும் செய்திகளும், ஏறக்குறைய அனைத்தும் அறிந்தவைதான் என்கிற வகையில், இந்தக் கதையில் புதுமை இல்லைதான். என்றாலும், பிந்தைய ஆட்சி அதிகாரம், வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எழக்கூடிய எந்தவிதமான மதிப்பீடையும் தவிர்த்த மனநிலையுடன், ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் நுழைந்த ஜெயலலிதா அங்கும், அதற்குப் பின்னர் பல இடர்ப்பாடுகளைத் தாண்டி, ‘தலைவி’யாக அவதாரமெடுத்த அதே ஆணாதிக்கம் மிகுந்த அரசியலிலும் சுயமரியாதையுடன் கூடிய பெண்ணாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதான நிகழ்வுகள் அனைத்தையும் ஒருசேர ‘மலரும் நினைவு’ களாக, இப்பாத்திரங்களை ஏற்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பில், மீண்டும் திரையில் காண்பது, சுவைதரும் அனுபவமே. மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

ச ன் னி

ச ன் னி

திரை விமர்சனம் கொரோனா பேரிடர் காலத்தில் தனிமைப்படுத்தலின் துயரத்தை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அனுபவித்திருப்போம். அத்துடன், தனிப்பட்ட துயரங்கள் கூடுதலாகச் சேர்ந்து கொள்ளுமாயின், அக்கடுந்துயரின் உச்சம் ஒரு மனிதனை எவ்விதமாகவெல்லாம் ஆட்டுவிக்கும் என்பதை, வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தியிருக்கும் படம்தான் ‘சன்னி’.ரஞ்சித் சங்கர் எழுதி இயக்கி, ஜெய சூர்யாவுடன் இணைந்து தயாரித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள 93 நிமிடங்களே ஓடும் மலையாளத் திரைப்படம். வளைகுடா நாட்டில் இருந்து திரும்பும் சன்னி (ஜெயசூர்யா), கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தலின் பொருட்டு ஹயாத் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வந்து சேர்கிறார். ஹோட்டலின் வரவேற்பாளர் ( பூர்ணிமா கிருஷ்ணன் ) குவாரண்டைன் விதிகளைக் கூறி, அறையின் சாவியை வழங்குகிறார். இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் ஒரு முறை தங்கியிருந்த ‘சூட்’ தான், சன்னியின் அறை. அந்த அறையில் சன்னியுடன் இருப்பது அவனது செல்போன் மட்டுமே. நண்பன் கோஷி ராஜேஷ் (அஜு வர்கீஸ்) துவங்கி, ‘பழக்க’மான டாக்டர் அனுராதா (மம்தா மோகன்தாஸ்), கேப் டிரைவர் (கேஜி பினாய்), மணிலெண்டர் ஜேக்கப் (சித்திக்), எஸ்.ஐ. சதாசிவன் நாயர் (விஜயராகவன்), டாக்டர் ஈரலி (இன்னொசென்ட்), பிரிதொரு அறையில் குவாரன்டைனில் இருக்கும் அதிதி (ஸ்ரீதா சிவதாஸ்), அட்வகேட் பால் (விஜய் பாபு), விவாகரத்து கோரும் கருவுற்ற மனைவி நிம்மி (ஷிவதா) என்று பேசி முடிப்பதுதான் படம். இதில், சன்னியுடன் தெரிவது கேப் டிரைவர், அதிதி மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் ஏற்ற இறக்கங்களுடனான அசரீரிகள்தான். படம் முழுவதும் தொடர்ந்து நிறைந்திருக்கிற ஒரே முகம், சன்னிதான். அறைக்குள் ஒரு ‘முடிவு’டன் நுழைந்து, மணிலெண்டரிடம் அதையும் வெளிப்படையாகவே தெரிவித்து முயற்சித்த சன்னியை, அவனது உடல் நிலையை விசாரிக்கும் எஸ்.ஐ. ஏற்பாடு செய்த உளவியல் மருத்துவர் ஈரலியின் தொடர் ஆலோசனைகளும், நேரான மேல் அறையில் இருந்து பறந்து வந்த துப்பட்டா மூலம், பாதி முகமாக அறிமுகமான அதிதியின் அவ்வப்போதான பேச்சும், அவனின் ‘அந்த’ முயற்சியைச் சற்று நிதானப்படுத்த, அவனது அட்வகேட்டிடம் இருந்து வந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளும், முற்றிலும் எதிர்பாராத விதமாக நிம்மியின் அழைப்பும், எந்த ‘முடிவு’க்கு இட்டுச் சென்றன என்பதுதான், ‘சன்னி’யின் மொத்தக் கதை. படம் முழுவதும் ஜெயசூர்யா, தன்னம்பிக்கையுடன் சன்னி பாத்திரத்தில் தனி ஆவர்த்தனமாக, அற்புதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார். விரக்தி, வேதனை, பரவசம், கோபம், துக்கம், அழுகை, நிம்மதி, நம்பிக்கை என பல உணர்வுகளை, முகபாவங்களாக அழுத்தமாகப் பதிவு செய்து, மனதில் நிற்கிறார். ஹோட்டல் அறை, மிஞ்சிப் போனால் வெளியே கடல்வெளி தவிர, பயணிக்க வாய்ப்பு இல்லாத ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன், அத்தனை உழைப்பையும் ஜெயசூரியாவின் முகபாவனைகளை நுட்பமாக ஒற்றி எடுத்துக் கொள்வதில் கொட்டியுள்ளது சிறப்பு. கதைக் கருவுக்கு நெருக்கமாகவும், சன்னி கதாபாத்திரத்தின் மன உணர்வுகளுக்கு இயைபாகவுமான இசையை, சங்கர் சர்மா வழங்கியுள்ளது அருமை. சமீர் முகமதுவின் படத்தொகுப்பு கச்சிதம். தனித்துவமாக இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கவும், சன்னியின் ஆரம்ப ‘மனோநிலை’யில் இருக்கும் எவரும் அதிலிருந்து வெளிவரவும் தேவை, துணிச்சல். அதற்காகவே, ‘சன்னி’யைத் தவறாது சந்திக்கலாம். மதிப்பெண் : 6.5/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

வெளிச்சத்துக்கு வரும் பார்ப்பனியப் படுகொலை

வெளிச்சத்துக்கு வரும் பார்ப்பனியப் படுகொலை

ராம்குமார் – இந்தப் பெயரை நம்மில் பலர் மறந்தே போயிருப்போம். நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில், ஜெயிலில் கரண்ட் கம்பியைக் கடித்துச் செத்த ராம்குமார் என்று சொன்னால் பலருக்கும் நினைவு வரும். ராம்குமார் தற்கொலை?! வழக்கை, ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் சூ மோட்டோ வழக்காக எடுத்து விசாரித்தது. விசாரணையில், ‘ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்று கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் Pathology துறைப் பேராசிரியர் டாக்டர் ஆண்டாள் பழனி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் வேணு ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர். போகிற போக்கில் அவர்கள் இதைச் சொல்லவில்லை. ராம் குமாரின் மூளை, சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், நாக்கு, உதடு உள்ளிட்ட பல பாகங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ததில், எந்த பாகத்திலும் எந்தத் திசுவிலும் மின்சார பாதிப்புக்கு ஆளானதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் அப்துல் காதர், ராம்குமாரின் உடலோடு சிறை மருத்துவரும் வந்திருந்ததாகவும், சிறையில் என்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன என்று கேட்டறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குறுக்கு விசாரணையின்போது, ‘ராம்குமாரின் உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதன் அடையாளம் அல்ல. உடலை மார்ச்சுவரிக்கு அனுப்ப வேண்டியிருந்ததால், நான் அவரது உடலில் இருந்த புறக்காயங்களை சோதிக்கவில்லை. அவரது உடலின் திசுக்களை ஆய்வு செய்தால்தான் மின்சாரம் தாக்கியதா என்று தெரியவரும். ஆனால், முந்தைய அறிக்கையில், மின்சாரம் தாக்கிய காயம் இருந்ததாக, தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார். முன்னதாக, ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் மறுவிசாரணை கோரித் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சியில், பார்ப்பனியம் நடத்திய படுகொலைகளில் ராம்குமார் மரணமும்! ஒன்று என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய காவல்துறை, உயிர்காக்க வேண்டிய மருத்துவத்துறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதித்துறை, அனைத்துக்கும் பொறுப்பான அரசு ஆகிய அனைத்துமே கூட்டாக இந்தச் சதியில் பங்கெடுத்துள்ளன. இது மட்டுமல்லாது, சுவாதி வழக்கில் உண்மையான குற்றவாளியைத் தப்ப வைக்க இவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டுள்ளார்கள் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வரும். அதற்காக பலியிடப்பட்ட அப்பாவிதான் ராம்குமார் என ஒருநாள் நிரூபிக்கப்படலாம். தற்போது அமைந்துள்ள அரசு, ராம்குமார் மரணம்!, சுவாதி கொலை ஆகிய இரண்டு வழக்குகளையுமே மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டால், பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ராம்குமார் சாவுக்கும் நீதி கிடைக்கலாம். செய்யுமா புதிய அரசு? பொறுத்திருந்து பார்ப்போம்.

சுந்தரி

சுந்தரி

திரை விமர்சனம் ‘இப்படியெல்லாம் நடக்குமா!’ என்று வியக்க வைக்கும், ஏன், அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்கள் நடைமுறையில் நடக்காமலும் இல்லை என்பதே உண்மை, ஆம், கசப்பான உண்மை. அப்படியான ஒரு கதைதான், கல்யாண்ஜி கோகனா எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘சுந்தரி’. ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள அந்தக் கிராமத்திற்கு வந்த பிரபு (அர்ஜுன் அம்பட்டி), தற்செயலாக அங்கு காண நேர்ந்த சுந்தரி (ஷாம்னா காசிம்/பூர்ணா) மீது மையல் கொண்டு, மணமும் செய்து கொள்கிறான். மாதம் ஒரு லட்சம் ஊதியத்தில், மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் அனாதையான பிரபுவின் நவநாகரிகமான இல்லத்தில் அடியெடுத்து வைக்கும் கிராமத்துச் சுந்தரிக்கு அந்த நகரச் சூழல் வியப்பையும் கொஞ்சம் அச்சத்தையும் தருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவை தெளிந்து வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பிரபுவுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அதற்கான காரணத்தை அவன் சொல்லவில்லை; அவளும் கேட்கவில்லை. தொடர்ந்து பல இடங்களில் தேடியும், வேலை கிடைக்கவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் விற்கும் நிலை. பிரபுவின் குடிப்பழக்கமும் குடும்பத்தில் சச்சரவும் தொடர்கின்றன. பெற்றோர் இருந்து, ஜாதகம் பார்த்து அவளை மணம் முடிக்காததாலேயே, அவளது ‘ராசி’யால்தான் இவையெல்லாம் என்று, சுந்தரி மீது வீசிய பிரபுவின் வார்த்தைகள் திராவகமாகத் தகிக்கச் செய்கின்றன. இதற்கு ஒரு ‘முடிவு’ காண அவள் மேற்கொண்ட முயற்சி, அறிந்த பலன், முயன்ற விபரீதப் பரிகாரம், கிடைத்த அதிர்ச்சியான உண்மைகள், எடுத்த தீரமான முடிவுதான் சுந்தரி திரைப்படத்தின் மொத்தக் கதை. சுந்தரியாக, ஷாம்னா காசிம் என்கிற பூர்ணா, மிகவும் பொருத்தமே. அவரது காஸ்ட்யூம் டிசைனர் பாராட்டுக்குரியவர். அமைதியான கிராமத்துப் பெண்ணாக, தாம்பத்திய வாழ்க்கையில் காதலில் கட்டுண்ட மனைவியாக, நகர வாழ்க்கையில் நிலவும் நரகச் சூழலில் தகிக்கும் அழகியாக, கேள்வியே இல்லாது கணவனை, ஜோசியத்தை, ஜோதிடனை நம்பும் வெள்ளந்தியாக, உண்மைகளை உணர்ந்து தெளிந்து, வெடிக்கும் அறிவார்ந்த மனுஷியாக, பூர்ணா பல பரிமாணங்களில் வெளுத்து வாங்குகிறார். ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என ஆரம்பித்த அர்ஜுன் அம்பட்டி, பீரும் குடிக்கும் என்கிற வகையில் தனது பங்களிப்பை, அளவோடு வழங்கியிருக்கிறார். சுரேஷ் பொப்ளி இசையும், அளவான பின்னணி இசையும் அருமை. பால் ரெட்டியின் ஒளிப்பதிவு, கிராமம் நகரம், உள்ளே வெளியே எல்லாவற்றிலும் ‘பளிச்’சென்று கவர்கின்றது. மணிகாந்தின் படத்தொகுப்பும் கச்சிதம். பாமரர்கள், படித்தவர்கள் என்ற வேறுபாடில்லாமல், பேராசையால், அறியாமையால்,  அச்சத்தால், சுய சிந்தனை இல்லாமல், மூடத்தனமான நம்பிக்கைகளில் கண்மூடித்தனமாக வீழ்ந்து, உயிரை, உடைமையை, உயிருக்குயிரானவர்களை, ஏன் மானத்தையும் கூட இழந்து, பரிதாப நிலைக்கு உள்ளான நிகழ்வுகளின் பின்னணியில், இந்த சுந்தரி ஒரு விழிப்புணர்வு தரும் எச்சரிக்கை. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து