திரை விமர்சனம்

கொரோனா பேரிடர் காலத்தில் தனிமைப்படுத்தலின் துயரத்தை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அனுபவித்திருப்போம். அத்துடன், தனிப்பட்ட துயரங்கள் கூடுதலாகச் சேர்ந்து கொள்ளுமாயின், அக்கடுந்துயரின் உச்சம் ஒரு மனிதனை எவ்விதமாகவெல்லாம் ஆட்டுவிக்கும் என்பதை, வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தியிருக்கும் படம்தான் ‘சன்னி’.
ரஞ்சித் சங்கர் எழுதி இயக்கி, ஜெய சூர்யாவுடன் இணைந்து தயாரித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள 93 நிமிடங்களே ஓடும் மலையாளத் திரைப்படம்.

வளைகுடா நாட்டில் இருந்து திரும்பும் சன்னி (ஜெயசூர்யா), கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தலின் பொருட்டு ஹயாத் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வந்து சேர்கிறார். ஹோட்டலின் வரவேற்பாளர் ( பூர்ணிமா கிருஷ்ணன் ) குவாரண்டைன் விதிகளைக் கூறி, அறையின் சாவியை வழங்குகிறார். இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் ஒரு முறை தங்கியிருந்த ‘சூட்’ தான், சன்னியின் அறை.

அந்த அறையில் சன்னியுடன் இருப்பது அவனது செல்போன் மட்டுமே. நண்பன் கோஷி ராஜேஷ் (அஜு வர்கீஸ்) துவங்கி, ‘பழக்க’மான டாக்டர் அனுராதா (மம்தா மோகன்தாஸ்), கேப் டிரைவர் (கேஜி பினாய்), மணிலெண்டர் ஜேக்கப் (சித்திக்), எஸ்.ஐ. சதாசிவன் நாயர் (விஜயராகவன்), டாக்டர் ஈரலி (இன்னொசென்ட்), பிரிதொரு அறையில் குவாரன்டைனில் இருக்கும் அதிதி (ஸ்ரீதா சிவதாஸ்), அட்வகேட் பால் (விஜய் பாபு), விவாகரத்து கோரும் கருவுற்ற மனைவி நிம்மி (ஷிவதா) என்று பேசி முடிப்பதுதான் படம். இதில், சன்னியுடன் தெரிவது கேப் டிரைவர், அதிதி மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் ஏற்ற இறக்கங்களுடனான அசரீரிகள்தான். படம் முழுவதும் தொடர்ந்து நிறைந்திருக்கிற ஒரே முகம், சன்னிதான்.

அறைக்குள் ஒரு ‘முடிவு’டன் நுழைந்து, மணிலெண்டரிடம் அதையும் வெளிப்படையாகவே தெரிவித்து முயற்சித்த சன்னியை, அவனது உடல் நிலையை விசாரிக்கும் எஸ்.ஐ. ஏற்பாடு செய்த உளவியல் மருத்துவர் ஈரலியின் தொடர் ஆலோசனைகளும், நேரான மேல் அறையில் இருந்து பறந்து வந்த துப்பட்டா மூலம், பாதி முகமாக அறிமுகமான அதிதியின் அவ்வப்போதான பேச்சும், அவனின் ‘அந்த’ முயற்சியைச் சற்று நிதானப்படுத்த, அவனது அட்வகேட்டிடம் இருந்து வந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளும், முற்றிலும் எதிர்பாராத விதமாக நிம்மியின் அழைப்பும், எந்த ‘முடிவு’க்கு இட்டுச் சென்றன என்பதுதான், ‘சன்னி’யின் மொத்தக் கதை.

படம் முழுவதும் ஜெயசூர்யா, தன்னம்பிக்கையுடன் சன்னி பாத்திரத்தில் தனி ஆவர்த்தனமாக, அற்புதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார். விரக்தி, வேதனை, பரவசம், கோபம், துக்கம், அழுகை, நிம்மதி, நம்பிக்கை என பல உணர்வுகளை, முகபாவங்களாக அழுத்தமாகப் பதிவு செய்து, மனதில் நிற்கிறார்.

ஹோட்டல் அறை, மிஞ்சிப் போனால் வெளியே கடல்வெளி தவிர, பயணிக்க வாய்ப்பு இல்லாத ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன், அத்தனை உழைப்பையும் ஜெயசூரியாவின் முகபாவனைகளை நுட்பமாக ஒற்றி எடுத்துக் கொள்வதில் கொட்டியுள்ளது சிறப்பு. கதைக் கருவுக்கு நெருக்கமாகவும், சன்னி கதாபாத்திரத்தின் மன உணர்வுகளுக்கு இயைபாகவுமான இசையை, சங்கர் சர்மா வழங்கியுள்ளது அருமை. சமீர் முகமதுவின் படத்தொகுப்பு கச்சிதம்.

தனித்துவமாக இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கவும், சன்னியின் ஆரம்ப ‘மனோநிலை’யில் இருக்கும் எவரும் அதிலிருந்து வெளிவரவும் தேவை, துணிச்சல். அதற்காகவே, ‘சன்னி’யைத் தவறாது சந்திக்கலாம்.

மதிப்பெண் : 6.5/10

விமர்சனம்: மது ராஜேந்திரன்

படங்கள்: இணையத்திலிருந்து


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *