கருடன்

கருடன்

திரை விமர்சனம்: மது ராஜேந்திரன் நேர்மையான காவல்துறை துணை ஆணையருக்கும் மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு இலக்கான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கும் இடையில் நடைபெறும் சட்டப் போராட்டம்தான், அருண் வர்மாவின் அறிமுக இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகி ஆங்கிலத் திரை வசனங்களுடன் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம். விசாரணை அலுவலராக டிசிபி ஹரிஷ் மாதவ் (சுரேஷ் கோபி) இந்த வழக்கில் திறம்படச் செயல்பட்டு, ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து, அரசு வழக்குறிஞர் தாமஸ் ஐப் (சித்திக்) கல்லூரி பேராசிரியர் நிஷாந்த் ( பிஜு மேனன் ) குற்றவாளி என்று நிரூபித்து, ஆயுள் தண்டனை பெற்றுத் தருகிறார். பலாத்காரத்திற்கு உள்ளான மாணவி தெரசா ஃபிலிப் (சைதன்யா பிரகாஷ்) நினைவிழந்து ‘கோமா’ நிலைக்குச் சென்றுவிட்டார். ஏழு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளிவரும் நிஷாந்த், ஹரிஷ் மாதவ் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில், தனது வழக்கை மீண்டும் விசாரணை செய்ய கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது, வழக்கில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட, நிஷாந்த் குற்றவாளி என  நிரூபிக்க காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி, தாமே முன்னின்று வாதாடி, குற்றமற்றவன் என்று விடுதலையாகி வெளியே வருகிறான், நிஷாந்த். தவிர, விசாரணை அலுவலர் மீதான அவனது அவதூறு வழக்கில், டிசிபி ஹரிஷ் மாதவ் நஷ்ட ஈடாக 70 லட்சம் அவனுக்குத் தரும்படி உயர்நீதிமன்றம் ஆணையிடுகிறது. நிலைகுலைந்து போன ஹரிஷ் மாதவ், அரசு வழக்குறிஞர் தாமஸ் ஐப்பிடம் இந்த வழக்கில் நான் தவறு ஏதும் செய்யவில்லை என்பதைத் திடமாக நம்புவதாகவும் தெரிவித்து, புத்திசாலியான நிஷாந்த் திட்டமிட்டு நடத்திய நாடகத்தை வெளிக்கொணர்வதாக உறுதியளிக்கிறார். அதை அவர் நிறைவேற்றுகிறாரா என்பதுதான் ‘கருடன்’ படத்தின் மீதிக் கதை. காவல்துறை உயரதிகாரியாக சுரேஷ் கோபியும் கல்லூரிப் பேராசிரியரும் ஒரு பாலியல் குற்றவாளியுமாக பிஜூ மேனனும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பில் திறமை காட்டுகின்றனர். தொழில் நேர்த்தியையும் முயற்சியில் வெற்றி பெறும்போது அதீதமாக இல்லாமல் அழுத்தமான ஒரு புன்முறுவலையையும்  தோல்வியடையும்போது அதை ஜீரணிக்க இயலாத நிலையிலும் தான் தவறு ஏதும் செய்யவில்லை என நிற்பதில் காட்டும் உறுதியையும் சுரேஷ்கோபி துல்லியமாக வெளிப்படுத்தும் பாங்கு ரசிக்கத்தக்கது. அதேபோன்று கண்ணியமான பேராசிரியர் பதவிக்கே இழுக்கு நேரும் நிலையில் குறுகிப்போவதும் நீதிமன்றத்தில் குற்றவாளி என உறுதி செய்யப்படும் நிலையில் உடைந்து போவதும் தண்டனை முடிந்து வெளியே வரும்போது மகளுடன் வரும் மனைவி தன்னை உதாசீனப்படுத்தும்போது தவித்துப் போவதும் பின்னர் ஹரிஷ் மாதவ்விடம் வெளிப்படும்போதான மாறுபாடான முக பாவமுமாக எதிர்மறையான பாத்திரமாக இருந்தாலும் அதன் தன்மையை முழுதுமாக உள்வாங்கி பிஜு மேனன், தன் பங்களிப்பை அற்புதமாக வழங்கியுள்ளார். கதையில் அவர்களுக்குள்ள இடமும் கண்ணாமூச்சி விளையாட வசதியாக இருக்கின்றது. ஜெகதீஷ் (சலாம்), அபிராமி (ஸ்ரீதேவி), திவ்யா பிள்ளை (ஹரிதா), தலைவாசல் விஜய் (கார்னல் ஃபிலிப் ஜார்ஜ்), திலீஷ் போத்தன் (ஐ ஜி பி சிரியா ஜோசப்), நிஷான் சாகர் (நாரி சுனி), மாளவிகா (அருனிமா) போன்ற ஏராளமான துணைப் பாத்திரங்களும் அவரவர்களுக்கு உரிய பங்கை சிறப்புறவே செய்துள்ளனர். ஜினேஷின் கதைக்கு, மிதுன் மேனுவல் தாமஸ் தெளிவான திரைக்கதை எழுதியுள்ளார். அஜய் டேவிட் கச்சபில்லியின் கண்கவர் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜய்யின் கதைக்கு இணக்கமான இசையும் ஸ்ரீஜித் சரங்கின் கச்சிதமான படத்தொகுப்பும் அறிமுக இயக்கத்திற்கு வலு கூட்டுகின்றன. ஏழு கோடியில் எடுக்கப்பட்ட படம் 27 கோடி வசூலைக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிஷாந்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர விசாரணை அதிகாரி மேற்கொண்ட முயற்சிகளைக் காட்டிய அளவில், அவனது விடுதலைக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்ற நிலைக்கு பிந்தைய காலத்தில் காட்டப்படாதது குறையே.  அவ்வாறே, அமைச்சரின் டாலர்ஸ் ஸ்மக்லிங் வழக்கு, ஒட்டாத வாலாகத் தனித்து ஆடுகிறது; தவிர்த்திருக்கலாம். இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், சுரேஷ்கோபி, பிஜு மேனன், சித்திக் கூட்டணியின் சிறப்பான பங்களிப்பு, அறிமுகச் சுவடே தெரியாத இயக்கம், படத்தை இரண்டு மணி நேரமும் தொய்வின்றி விறுவிறுப்பாகக் கொண்டுசென்றது என்கிற வகையில், அருண் வர்மாவின் ‘கருடன்’  உயர்ந்தே பறக்கிறது. மதிப்பெண் : 7/10

சுலைகா மன்சில்

சுலைகா மன்சில்

திரை விமர்சனம் ஒருவரது இதயத்திலிருந்து  வரும் ஒரு சில வார்த்தைகளும்கூட,  இன்னொருவரது வாழ்க்கையின் பிடிமானமாகி, சடுதியில் தெளிவை ஏற்படுத்தும் என்பதன் அழகான திரை வடிவம்தான், அஷ்ரப் ஹம்சா எழுதி இயக்கி, மலையாளத்தில் உருவாகி, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ‘சுலைகா மன்சில்’. சுலைகாவின் ஒரே மகள் ஹாலா. அவள் விரும்பும் ஆஷிக்கிடம் தான் எதிர்பார்க்கும் தகுதியில்லை என்று மூத்த சகோதரன் சமீர் மறுக்க, எதிர்பாராமல் விபத்தில் அவன் உயிர் இழக்கிறான்.  பிறகு சகோதரன் பார்க்கும் வரன்களையெல்லாம் ஏதோ ஒரு காரணம் கூறி, ஐந்தாண்டுகளாக மறுத்துவரும் ஹாலா, ஒரு கட்டத்தில் அமீனை மணக்கச் சம்மதம் தெரிவிக்கிறாள். நிச்சயதார்த்த நிகழ்வுக்கு முன்னதாக, வளைகுடா நாட்டிலிருந்து வந்திருக்கும் அமீன், ஹாலாவைத் தொடர்புகொண்டு பேச முயல்கிறான். விருப்பம் இருந்தும் வீட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் அவளால் பேச இயலாத நிலை. அதைப் புரிந்து கொள்ளாத அமீன் அவளிடம் கடுமையாகப் பேசிவிடுகிறான். நண்பன் அன்வர் எடுத்துக் கூற, அவளிடம் மன்னிப்புக் கோருகிறான். அன்றிரவு அவளது வீட்டின் பின்புறம் சந்திக்கிறான். பேச்சு வாக்குவாதமாகிவிட, திருமணத்தை நிறுத்திவிடுவதாக அவன் முடிவு செய்கிறான். திருமணம் பிரச்சனையில் முடிந்ததா, பிரச்சனை தீர்ந்து திருமணம் முடிந்ததா என்பதுதான் ‘சுலைக்கா மன்சில்’ படத்தின் மீதிக் கதை. ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் நிகழும் எளிமையான சம்பவங்களின் தொகுப்பாக, படம் முழுவதும் ஒரே சீராக, கலகலப்பாகச் செல்ல மாப்பிள்ளை, மணப்பெண் உள்ளங்களில் மட்டும் ஏற்றமும் இறக்கமுமான உணர்ச்சி அலைகள். இரு வேறு நிலைகளையும் அழகியலுடன் வழங்கியிருக்கிறார் இயக்குநர் அஷ்ரப் ஹம்சா. ஹாலாவாக அனார்கலி மரிக்கர், குதூகலக் காதலையும் கொஞ்சம் வெறுமையையும் வரப்போகும் புதிய உறவில் தெளிவையும் உறுதியையும் அவற்றுக்கு ஏற்ற முகபாவங்களுடன், அழகுற வெளிப்படுத்தும் பாங்கு பாராட்டுக்குரியது. லக்மேன் அவரன் அமீன் பாத்திரத்தின் அவசரத்தன்மை கொண்ட, உணர்ச்சிவயப்பட்ட, சற்றுக் குழப்பமான தன்மையை நடிப்பில் குழப்பம் இல்லாமல் செய்துள்ளது சிறப்பு. செம்பொன் வினோத் ஜோஸ் (சமீர்), ஆமல்டா லிஸ் (பத்துல்), சபரீஷ் வர்மா (ரம்ஜான்), தீபா தாமஸ் (டாக்டர் அமீனா), நவ்ஷத் அலி (அன்வர்), அர்ச்சனா பத்மினி (ஹவ்வா), மம்மு கோயா (அப்துல் ரகுமான்),  சுபா ஸ்ரீதரன் (சுலைகா), ஷெபின் பென்சன் (ஆஷிக் மலியெக்கல்) உட்பட துணைப் பாத்திரங்களை ஏற்ற அனைவரும் தத்தம் பங்களிப்பை  நிறைவாகவே வழங்கியுள்ளனர். “ஜென்னத்துக்கே வந்துட்ட மாதிரி இருக்கு…”“ஜென்னத்துன்னா… சொர்க்கம்னு அர்த்தம்”“அப்பா.. சொர்க்கத்துல இப்படியெல்லாம்தான் லைட் போட்டுருப்பாங்களா?” “முறையா என்ன கூப்பிடல.. எனக்குத் தன்மானம்தான் முக்கியம்”“என்னால நடக்கிற கல்யாணத்துக்கு என்னையே கூப்பிட வருவியா? நாங்க அங்க வர்றதுக்குத்தான் கிளம்பிட்டு இருக்கோம்” “என்னடா தலை மட்டும் தனியா வருது?”“உடம்பும் இருக்கு” “செருப்பு இல்லாம கபரஸ்தான் வழியா போனா, கல்லு இல்ல, பாம்புகூட குத்தும். எப்பவும் ‘சென்டிமென்ட்ஸ்’சோட சுத்தனா இப்படித்தான் நடக்கும்” “படா பையாவா இருக்கறது ரொம்பக் காம்ப்ளிகேட்டட் பொசிஷன் இல்ல?” “பார்லர்க்கா? ஏற்கனவே அங்க இருந்து வந்த மாதிரிதான் இருக்கீங்க. திரும்ப பெயிண்ட் அடிக்கப் போறீங்களா?” “கொஞ்ச நேரத்துல அப்படி என்ன பேச முடியும்?”“காலைல எழுந்து சுலைமானி டீ குடிப்பியா? இல்ல.. பிளாக் காபி குடிப்பியான்னு கூடத் தெரியாதே!” “இது நல்லா இருக்காதுன்னு எனக்குத் தெரியும். இத போட்டுக்க வேண்டாம், போட்டுக்கறேன்னு அவர்கிட்ட ஒரு வார்த்த மட்டும் சொன்னா போதும், மத்தத நான் பாத்துக்கறேன்” “உங்களுக்கிருக்கற சாய்சும் பெர்சனாலிட்டியும் எனக்கும் இருக்குமில்ல?”“நீங்க ஹேப்பியா இல்லன்னா எங்க பைய்யாகிட்ட வந்து பேசுங்க, பொறுமையா டைம் எடுத்துட்டு லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கலாம்” “நான் வீட்டுக்குப் போய் சொல்லட்டுமா, ஹாலா?”“அப்போ அவங்க சந்தோஷம் முடிஞ்சு போயிடும்”“உங்களுக்கு இத்தனை பேரோட சந்தோஷத்தக் கெடுக்கணும்னு தோணல இல்ல.. இதவிடப் பெரிய குவாலிட்டி உள்ள லைஃப் பார்ட்னர் எனக்கு வேணும்னு நான் ஆசைப்பட்டதில்ல” ~இவை ரசிக்கத்தக்க, அர்த்தபூர்வமான வசனங்களில் சில. “நாளைக்குதானே உங்க அண்ணனோட கல்யாணம்?” என்று இளநீர்க் கடைக்காரர் அமீனிடம் கேட்பதும் அதற்கு அமீன் மறுப்பேதும் சொல்லாததும் நம்மைக் குழம்பச் செய்கிறது.   கண்ணன் பட்டேரியின் ஒளிப்பதிவு, கண்களுக்குக் குளுமை. பாடல் காட்சிகளைப் படமாக்கிய விதமும் அருமை. பாடல்களுக்கான விஷ்ணு விஜயின் துள்ளலான இசை தாளம் போட வைக்கின்றது. பின்னணி இசையும் அருமை. நவ்புல் அப்துல்லாவின் படத்தொகுப்பு கச்சிதம். வெறும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை கலந்து கலகலப்பாகவும் இளைய தலைமுறைக்கு ஒரு ‘பிரீ வெட்டிங் கவுன்சிலிங்’ போலவும் ‘சுலைகா மன்சில்’ படத்தை வழங்கியுள்ள இயக்குநர் அஷ்ரப் ஹம்சாவுக்கு ஒரு சபாஷ் போடலாம். மதிப்பெண் : 7.5/10

சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும்

சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும்

நூல் அறிமுகம் மகாபாரதம், ராமாயணம், பாகவதம் எனும் வார்த்தைகள் பார்வையிலும் காதுகளிலும் விழும்போதெல்லாம் அவை சட்டென்று என் மனதில் துலக்கும் முகங்கள் சில உண்டு. கிராமத்தில் பொட்டுத் தாத்தா, அம்மா வழித் தாத்தா சின்ன ராமசாமி (நாங்கள் ‘வண்டித் தாத்தா’ என்று கூப்பிடுவோம்), பெரியப்பா வெங்கடாஜலபதி, பெருமாள் கோவில் அர்ச்சகர் ராஜர் (நம்பியின் அப்பா), சீனிவாசன் மாமா (தமிழாசிரியர்; மாமாவின் பெண் விஜயராணி என் வகுப்பு), திருமங்கலத்தில் உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் நண்பன் நாராயணமூர்த்தி மூலம் அறிமுகமாகி அன்பின் நெருக்கமான சாமிப் பாட்டி அனைவரும் அப்புராணக் கதைகளை என் மனதிற்கு அறிமுகப்படுத்தி, ஆழ் மனத்தில் பதியச் செய்தவர்கள். பால்யத்தில் எத்தனை நூறு கதைகள் கேட்டிருப்பேன் அவர்களிடம்! கிராமத்தில் வண்ணமயில் கடைக்கு முன்னாலிருக்கும் காளியம்மன் கோயிலில், முன்னிரவுகளில் சுற்றிலும் கிராமத்து ஜனங்கள் அமர்ந்திருக்க தமிழ் பண்டிட் சீனிவாசன் மாமா சத்தமாய் ராகமாய் சுந்தரகாண்டம் படிக்கும் காட்சி இன்னும் பசுமையாய் நினைவுகளில் இருக்கிறது. நம்பியின் வீடு, வசந்தா அத்தையின் வீட்டிற்கு முன்னால். நம்பியின் அப்பா ராஜர் தினமும் பாரதம் தொடர்ந்து சொல்ல (பாரதக் கதை சொல்லத் தொடங்கிய நாளிலும் முடிக்கும் நாளிலும் பூஜை செய்து பிரசாதங்கள் தருவார்), நாங்கள் சிறுவர்களும் அத்தையும் பாட்டியும் (வசந்தா அத்தையின் அம்மா) இன்னும் பலரும் சுற்றி உட்கார்ந்து கேட்போம். தேவி பாகவதத்தை எனக்கு நெருக்கமாக்கியது பொட்டுத் தாத்தாவும் திருமங்கலம் சாமிப்பாட்டியும். பாரதமும் பாகவதமும் என்றும் வற்றாத கதைகளின் ஊற்று. இன்றும் வியப்பளிக்கும் பிரம்மாண்டம். பி.கே.வின் இனி ஞான் உறங்கட்டே – கனவுகளில்/முன் வெளிகளில் உலாவச் செய்யும், மயக்கும், சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்த அபாரமான நாவல். ஆ.மாதவனின் அற்புதமான மொழிபெயர்ப்பு. மொழியின் இனிப்பிலும் அந்த எழுத்தின் வசீகரத்திலும் இன்னும் கட்டுண்டுதான் கிடக்கிறேன்! ஆரம்பத்தில் விலகி நின்று புன்னைகத்த மொழியிடம் மனம் குவித்து வேண்டிக் கொண்டேன், “என்னை உடன் அழைத்துப் போ” என்று. அதன்பின் அது கைப்பிடித்துக் கொண்டது. பிரமாதமான, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, மனம் நெகிழ்த்தும் பயணம். செவ்வியல் (கிளாஸிக்) நாவல்களுக்கு வாசிப்பனுபவம் எழுதுவது இடர் தருவது. என்ன எழுதினாலும், எத்தனை எழுதினாலும் மனம் திருப்தி அடையாது. மனம் அந்நாவலின் ஆழத்தில், ஆன்மாவில் திளைத்துக் கிடக்கும். அது குறித்து எழுதுவதெல்லாம் மேலோட்டமாகவே அமைந்து/உணர்ந்து விசனப்பட வைக்கும்; எழுதாமல் தப்பிக்கலாம் என்றாலும் விடாது. அந்த எழுத்திலிருந்து கிடைத்தவற்றைத் தொகுத்துக் கொள்ள, சுவையின் ஒரு துளியையாவது பற்றிக்கொள்ள, பதிந்துவைக்க மனம் விழையும். *** ‘இனி ஞான் உறங்கட்டே’ நாவலில் மகாபாரதத்தின் முக்கியப் பாத்திரங்கள் பெரும்பாலானோர் வந்தாலும், முக்கியமாய் இது கர்ணனின் கதை; திரௌபதியின் கதையும் கூட. மனக் கொந்தளிப்புகளின் நாவல் என்று இந்நாவலைச் சொல்லலாமா? மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகளின்போது மனதில் உருவாகும் தவிர்க்க முடியாத கேள்விகளை நாவலுக்குள் எழுப்பி, அதற்கான விடைகளை அதன் பாத்திரங்கள் வாயிலாகவே எழுத்தினூடே கண்டடையும் ஒரு கவித்துவ நவீன மனத்தின் படைப்பு ‘இனி ஞான் உறங்கட்டே’. யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரையும் போர்க்களத்தில் கொல்லும் வாய்ப்புகள் கிடைத்தும், தான் தாய்க்குத் தந்த வாக்குறுதியால் அவர்களைக் கொல்லாமல் விடுகிறான் கர்ணன். கர்ணனிடம் நால்வரும் தோற்று, போரில் உயிர்ப் பிச்சை பெற்றுப் பின்வாங்கும் காட்சிகள் நாவலில் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. நாவலில் வரும் ஹஸ்தினாபுரத்தின் ஆயுத வித்தை அரங்குக் காட்சிகள், நாரதர்-யுதிஷ்டிரன் சந்திப்பு, குந்தி-கர்ணன் சந்திப்பு, கர்ணன்-கிருஷ்ணன் சந்திப்பு, இந்திரன்-கர்ணன் சந்திப்பு, சபையில் கிருஷ்ணையின் துகிலுறியப்படும் காட்சிகள், போர்க் களத்தில் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கர்ணன் சந்திக்கும் காட்சி,  பீமனின் துச்சாதன வதம், அர்ஜுனனின் கர்ண வதம் அனைத்தும் மிக அபாரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. போர்க்களக் காட்சிகள் ஒரு விஷூவல் ட்ரீட். நாவலில் எனக்குப் பிடித்த காட்சிகளைச் சொல்லவேண்டுமென்றால் பல பதிவுகள் எழுதவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு ஒன்று மட்டும். போர்க்களத்தில், போரின் நடுவில், அர்ஜுனனைப் பார்த்துவரும்படி யுதிஷ்டிரன் சொல்ல, பீமன் கௌரவர் சேனை நடுவே ரதத்தில் பாய்ந்து விரைகிறான். எதிரில் கர்ணன். உக்கிரமான போர் இருவரிடையிலும். வெற்றிக் களிப்பில் மனதைக் கட்டுப்பாட்டில் நிறுத்திய ராதேயன் கர்ணன் சின்ன சின்ன சரங்களைத் தொடுத்துவிட்டு பீமனை வேடிக்கையாக கிச்சுக்கிச்சு மூட்டினான். தாயிடம் செய்துகொண்ட ஒப்பந்தம் நினைவில் வரப்பெற்றவனானான். வீமன் அருகே போய் வில்முனையால் தொப்பையில் கிசுகிசுப்பு மூட்டி வாய்விட்டுச் சிரித்தான். சகிக்கவொன்னாத அவமானத்தால் சிலிர்த்த வீமன், அந்த வில்லினைப் பறித்தெடுத்து, கர்ணனது உச்சிமேல் அடித்தான். விலகிக்கொண்ட கர்ணன் கேலியாக பின்னும் நகை செய்தான். “தொப்பை வயிற்றுக்காரனாகிய அடேய் கௌந்தேயா, விருந்து மண்டபம்தான் உனக்குத் தகுதியான இடம். நீ எதற்காகப் போர்க்களம் வரவேண்டும்? வில் வீரத்தில் அஞ்ஞானி நீ. மரத்தைப் பிடுங்கி அடித்துக் கொன்றிட இது, கிர்மீரனும், பகனுமல்ல. இது கர்ணன் என்பதை நன்றாக நினைவில் வை. கானகத்தில் அலைந்து திரிந்து காய்கனிகளைத் தின்று வயிற்றை நிரப்புவதல்ல போர் என்பதை அறியவில்லை நீ. உனக்குப் போரிட ஆசையாயின் உனக்குத் தகுந்தவரிடம் போய்ப் போரிடு. அல்லது கிருஷ்ணார்ஜுனர்களின் நிழலில் போய் மறைந்துகொள். அவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள். அல்லது வேகமாக வீட்டை நோக்கி ஓடிவிடு. அதுதான் உனக்கு நல்லது…” மாஸ்டர் பி.கே.விற்கும் தமிழில் தந்த ஆ.மாதவனுக்கும் நன்றியும் வணக்கங்களும் என்றென்றும் அன்பும். இனி நான் உறங்கட்டும் – நாவல்மலையாள மூலம்: பி.கே.பாலகிருஷ்ணன்தமிழில்: ஆ.மாதவன்வெளியீடு : சாகித்ய அகாடமி

ச ன் னி

ச ன் னி

திரை விமர்சனம் கொரோனா பேரிடர் காலத்தில் தனிமைப்படுத்தலின் துயரத்தை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அனுபவித்திருப்போம். அத்துடன், தனிப்பட்ட துயரங்கள் கூடுதலாகச் சேர்ந்து கொள்ளுமாயின், அக்கடுந்துயரின் உச்சம் ஒரு மனிதனை எவ்விதமாகவெல்லாம் ஆட்டுவிக்கும் என்பதை, வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தியிருக்கும் படம்தான் ‘சன்னி’.ரஞ்சித் சங்கர் எழுதி இயக்கி, ஜெய சூர்யாவுடன் இணைந்து தயாரித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள 93 நிமிடங்களே ஓடும் மலையாளத் திரைப்படம். வளைகுடா நாட்டில் இருந்து திரும்பும் சன்னி (ஜெயசூர்யா), கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தலின் பொருட்டு ஹயாத் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வந்து சேர்கிறார். ஹோட்டலின் வரவேற்பாளர் ( பூர்ணிமா கிருஷ்ணன் ) குவாரண்டைன் விதிகளைக் கூறி, அறையின் சாவியை வழங்குகிறார். இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் ஒரு முறை தங்கியிருந்த ‘சூட்’ தான், சன்னியின் அறை. அந்த அறையில் சன்னியுடன் இருப்பது அவனது செல்போன் மட்டுமே. நண்பன் கோஷி ராஜேஷ் (அஜு வர்கீஸ்) துவங்கி, ‘பழக்க’மான டாக்டர் அனுராதா (மம்தா மோகன்தாஸ்), கேப் டிரைவர் (கேஜி பினாய்), மணிலெண்டர் ஜேக்கப் (சித்திக்), எஸ்.ஐ. சதாசிவன் நாயர் (விஜயராகவன்), டாக்டர் ஈரலி (இன்னொசென்ட்), பிரிதொரு அறையில் குவாரன்டைனில் இருக்கும் அதிதி (ஸ்ரீதா சிவதாஸ்), அட்வகேட் பால் (விஜய் பாபு), விவாகரத்து கோரும் கருவுற்ற மனைவி நிம்மி (ஷிவதா) என்று பேசி முடிப்பதுதான் படம். இதில், சன்னியுடன் தெரிவது கேப் டிரைவர், அதிதி மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் ஏற்ற இறக்கங்களுடனான அசரீரிகள்தான். படம் முழுவதும் தொடர்ந்து நிறைந்திருக்கிற ஒரே முகம், சன்னிதான். அறைக்குள் ஒரு ‘முடிவு’டன் நுழைந்து, மணிலெண்டரிடம் அதையும் வெளிப்படையாகவே தெரிவித்து முயற்சித்த சன்னியை, அவனது உடல் நிலையை விசாரிக்கும் எஸ்.ஐ. ஏற்பாடு செய்த உளவியல் மருத்துவர் ஈரலியின் தொடர் ஆலோசனைகளும், நேரான மேல் அறையில் இருந்து பறந்து வந்த துப்பட்டா மூலம், பாதி முகமாக அறிமுகமான அதிதியின் அவ்வப்போதான பேச்சும், அவனின் ‘அந்த’ முயற்சியைச் சற்று நிதானப்படுத்த, அவனது அட்வகேட்டிடம் இருந்து வந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளும், முற்றிலும் எதிர்பாராத விதமாக நிம்மியின் அழைப்பும், எந்த ‘முடிவு’க்கு இட்டுச் சென்றன என்பதுதான், ‘சன்னி’யின் மொத்தக் கதை. படம் முழுவதும் ஜெயசூர்யா, தன்னம்பிக்கையுடன் சன்னி பாத்திரத்தில் தனி ஆவர்த்தனமாக, அற்புதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார். விரக்தி, வேதனை, பரவசம், கோபம், துக்கம், அழுகை, நிம்மதி, நம்பிக்கை என பல உணர்வுகளை, முகபாவங்களாக அழுத்தமாகப் பதிவு செய்து, மனதில் நிற்கிறார். ஹோட்டல் அறை, மிஞ்சிப் போனால் வெளியே கடல்வெளி தவிர, பயணிக்க வாய்ப்பு இல்லாத ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன், அத்தனை உழைப்பையும் ஜெயசூரியாவின் முகபாவனைகளை நுட்பமாக ஒற்றி எடுத்துக் கொள்வதில் கொட்டியுள்ளது சிறப்பு. கதைக் கருவுக்கு நெருக்கமாகவும், சன்னி கதாபாத்திரத்தின் மன உணர்வுகளுக்கு இயைபாகவுமான இசையை, சங்கர் சர்மா வழங்கியுள்ளது அருமை. சமீர் முகமதுவின் படத்தொகுப்பு கச்சிதம். தனித்துவமாக இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கவும், சன்னியின் ஆரம்ப ‘மனோநிலை’யில் இருக்கும் எவரும் அதிலிருந்து வெளிவரவும் தேவை, துணிச்சல். அதற்காகவே, ‘சன்னி’யைத் தவறாது சந்திக்கலாம். மதிப்பெண் : 6.5/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

ஹோம்

ஹோம்

திரை விமர்சனம் கால் வலி இருந்தாலும் பொருட்படுத்தாமல்,  வழமையான வேலைகளைச் செய்யும் குட்டியம்மா (மஞ்சு பிள்ளை), உழைத்துத் தேய்ந்த நிலையில், அவ்வப்போது நினைவுகளும் தப்பும் பெரியவர் அப்பச்சன் (கயினிகரி தங்கராஜ்), டீ குடித்த கப்புகளைக்கூட கீழே திருப்பி எடுத்துச் செல்லாமல், சுழலும் மின் விசிறியை நிறுத்தக்கூட கீழே இருக்கும் அம்மாவை, மாடி அறைக்கு அழைக்கும் இளைஞன் சார்லஸ் ஆலிவர் (நேஸ்லன் கே கபூர்), அறியாமல் சிறுநீர் கழித்துவிடும் அப்பாவை நொந்து கொள்வதும் உடன் அப்படி நொந்துகொண்ட தன்னையே அதற்கு நொந்து கொள்வதும், மாடித் தோட்டத்தை மட்டில்லா மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொள்வதுமான குடும்பத் தலைவன் ஆலிவர் ட்விஸ்ட் (இந்ரன்ஸ்), அந்த இல்லத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தள்ளி, தனது அடுத்த படத்திற்கான ஆயத்த வேலையில் மூழ்கி இருக்கும் திருமணமாகாத இளம் இயக்குனர் அந்தோனி டிவிஸ்ட் (ஸ்ரீநாத் பாஷி), இவர்களுக்குள் நிலவும் உறவை, உரிமையை, உயர்வை, உரசலை ஆழமாகவும் அதே அளவுக்கு மெதுவாகவும் சித்தரிக்கும் மலையாள மொழித் திரைப்படம்தான், ரோஜின் தாமஸ் எழுதி இயக்கி, அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஹோம்’. “பாரு, இந்த இடம் எவ்ளோ அழுக்கா இருக்கு? இது உன்னோட அறை அல்ல, மனசு. ஒரு வேலை செய். இங்கிருந்துட்டு கிளைமாக்ஸ் எழுதாதே. உன்னோட முதல் படத்தோட கதைய எங்கிருந்து  எழுதின?” புரொடியூசர் பேபி கேட்க, பதிலாக செல்போன் அழைத்து அந்தோணி எடுத்துப் பார்க்க,  படத்தின் தலைப்பு வருவது நயம். அந்தோணி வீட்டுக்கு வந்தும் அப்பாவின் நேசம் அவன்மீது படராமல், அவரின் நெருக்கம் தொடராமல், அவ்வப்போது அவன் ஸ்மார்ட்போனும்  அதில் வரும் காதலி பிரியாவும் இடையூறாகவே இருக்கின்றனர். இது, “வழக்கமா வீட்ல இருக்கும்போது அவன் படுக்கப்போகும் முன்னே நம்மள முத்தமிட்டு குட் நைட் சொல்வான்” என்று குட்டியம்மா ஆலிவரிடம் அன்று இல்லாததைக் கூறி வருந்துவதில் பளிச்சிடும். அந்தோணி படித்துக் கொண்டிருந்த ஜோசப் லோபஸின் வாழ்க்கை வரலாறு பற்றி விசாரித்த ஆலிவர், தாமும் ஏன் இப்படி எழுத முடியாது? என்று கேட்க, “வாழ்க்கையில் அசாதாரணமானவை நிகழணும். அதுக்கப்புறம்தான் ஒரு புத்தகம் எழுத முடியும். இந்தப் பக்கத்திலே அவரோட சாதனைகள பாருங்க. உங்க சுயசரிதை அரைப் பக்கம்கூட வராது. ‘நான், ஆலிவர் ட்விஸ்ட்’ ன்னு அதுக்கு ‘பளிச்’சுன்னு பேரு தரலாம். நான் கடை நடத்தனேன், காலத்துக்கு ஏத்த மாதிரி மாற முடியாமல் அதை மூடிட்டேன். இப்போ மாடித் தோட்டத்தப் பராமரிச்சுகிட்டு சும்மாவே உக்காந்திருக்கேன். வேற எழுத என்ன இருக்கு? இது அரைப் பக்கம்கூட வராது”. அந்தோணியின் இந்த வார்த்தைகள் ஆலிவர் ட்விஸ்ட்டிடம் பல ட்விஸ்ட்களை ஏற்படுத்தி விடுவதை விவரிக்கும் சுவாரசியம்தான், ஹோம் படத்தின் மீதிக் கதை. வருங்கால மாமனாருக்குதான் மகன் ஸ்மார்ட் போன் வாங்கவிருக்கிறான் என்றறிந்து, தானே குறைந்த விலையில் ஒரு போன் வாங்கி வந்து இருக்க, எதிர்பாராதவிதமாக மகன் அந்தோணி அவருக்காக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்ததை அறிந்து, ஆலிவர் மகிழும் போதே பாக்கெட்டில் இருந்த செல்போன் ஒலித்ததை அடுத்து, அவர் சங்கடத்தில் நெளிவதும் சின்ன மகன் சார்லஸ்சிடம்  செல்போனைப் பயன்படுத்துவது குறித்துப் பாடம் எடுத்துக் கொள்வதும் ஜோசப் லோபசைப் படமெடுக்க இயலாமல் தவிப்பதும் நடிகர் விஷாலிடம் சகஜமாகப் பழகிப் பேசுவதிலும் உளவியல் மருத்துவரிடம் விவாதிப்பதிலும் அங்கு டாக்டர் அவரிடம் கேட்டது போல சார்லஸிடம் கேட்டு, எதிர்பாராதவிதமாகப் பதில் வந்து விடுவதிலும்  ‘எல்லாம் போனில் இருக்கிறது’ என்று சொல்லும் ஜோசப்பிடம், ‘போனில் இருக்கலாம். ஆனா, மனசுல இல்ல’ என்று சொல்வதிலும் ஆலிவராக இந்ரன்ஸ் மிளிர்கிறார். பாசத்தைக் காட்டிட முனைவதிலும் மாறிவரும் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதில் ஏற்படும் பரவசத்தையும் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் ஒருசேர அற்புதமாகப் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒரு பக்கம் தொழில், இன்னொரு பக்கம் காதல் என்று ஆதங்கமும் அவதியுமாக ஸ்ரீநாத் பாஷியின் நடிப்பும் அருமை. மஞ்சு பிள்ளை, நேசலன் கே கபூர், கயினிகரி தங்கராஜ், தீபா தாமஸ் (பிரிய ஜோசப்), விஜய் பாபு (டாக்டர். பிராங்கிளின்), ஜானி அந்தோனி (சூரியன்), மணியன்பில்லா ராஜு (பேபி), அனுப் மேனன் (நடிகர் விஷால்), கே.பி.ஏ.சி. லலிதா (அன்னம்மா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். ராகுல் சுப்பிரமணியம் இசையின் இனிமையும் நீல் டி குன்ஹாவின் கண்கவர் ஒளிப்பதிவும் படத்தின் மெதுவான நகர்வையும் பொருட்படுத்தாமல் செய்துவிடுகின்றன. படத்தொகுப்பைக் கவனித்துள்ள பிரிஜிஷ் பிரகாஷ், இன்னும் கடுமையாகக் கவனித்து, படத்தின் வேகத்தைச் சற்று கூட்டி இருக்கலாம் அல்லது அதன் நீளத்தையாவது குறைத்திருக்கலாம். எல்லோரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சாதனை இருக்கத்தான் செய்கிறது. அதைக் கண்டறியக்கூட இயலாத வகையில்தான், அவரவர் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதனை வெளிக்கொணர்ந்து அங்கீகரிக்க உறவுகள் உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் அது உறவு என்பதையும் எங்கு கோபப்பட மாட்டார்களோ, சந்தோஷப்படுத்துவார்களோ, தவறிழைத்தால் கண்டிப்பார்களோ, தவறு எனில் திருத்துவார்களோ, அதுதான் ‘இல்லம்’ என்பதையும், எத்தனை நவீன தொழில்நுட்பங்களுக்கு நாம் அறிமுகமானாலும், அடிப்படையான மனிதப் பண்புகளை மட்டும் இழந்து விடக்கூடாது என்பதையும் அழகாகவும் அன்பாகவும் அழுத்தமாகவும்கூட எடுத்துச் சொல்லும் படம்தான், ஹோம். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

குருதி

குருதி

திரை விமர்சனம் இன்றுள்ள நிலையில், மதச் சார்பாக அன்றி, அதனைப் புறந்தள்ளி, மனிதத்தைத் தூக்கிப் பிடித்து, வலியுறுத்துவதற்குத்தான் துணிச்சல் வேண்டும். கத்தி மேல் நடக்கும் லாவகமாக அந்தத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் அனிஷ் பல்யல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, மனு வாரியார் திறம்பட இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான் ‘குருதி’ (சடங்கு படுகொலை). மலையும் காடும் சூழ்ந்துள்ள பகுதியில் ஏற்பட்ட ஒரு மோசமான  நிலச்சரிவில், பலர் உயிரிழந்து, எஞ்சியவர்கள் இடம்பெயர்ந்து செல்ல, இரண்டு குடும்பம் மட்டுமே அப்பகுதியில் வசிக்கின்றன. வயதான காதர் மூசா (மம்முகோயா), நிலச்சரிவில் தனது மனைவியையும் மகளையும் இழந்த அவரது மூத்த மகன் இப்ரஹிம் (ரோஷன் மேத்யூ), இளையவன் ரசூல் (நேஸ்லன்) உள்ளடக்கிய குடும்பத்திற்கு அருகிலுள்ள வீட்டில், பேரமன்(மணிகண்டராஜன்), அவனது சகோதரி சுமதி (ஸ்ரீரிந்தா).  இப்ரஹிமின் சமையல் பிடிக்காத மூஸாவுக்கு, பெரும்பாலும் சுமதியின் சாப்பாடுதான். வேலைக்குச் செல்லாமல் சதாசர்வகாலமும் கேரம் ஆடுவதும், கரீமுடன் (ஷைன் டாம் சாக்கோ) சுற்றுவதுமான ரசூலுக்கும், ஒரு வேலைக்குச் செல் என்று வற்புறுத்தும்  மூஸாவுக்கும் இடையே, அவ்வபோது சிறுசிறு தகராறுகள் முற்றும்போது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பவளும் சுமதிதான். தனியாளாகச் சிரமப்படும் இப்ராஹிமை,  மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தும் உரிமையும் அந்த வீட்டில் சுமதிக்குத்தான் இருக்கிறது. சகோதரிக்கும் தமக்கும் இடையேயான பஞ்சாயத்திற்குப் பேரமன் துணைக்கு அழைப்பது இப்ராஹீமைத்தான். இரு குடும்பத்திற்குள்ளும் அப்படி ஒரு அன்னியோன்யம். இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில், அன்றிரவு இப்ரஹிம் வீட்டின் கதவு தட்டப்பட்டுத் திறக்க, அதிரடியாக உள்ளே நுழைந்தவர்கள் ஒரு காவல் உதவி ஆய்வாளரும்,  கைவிலங்கிடப்பட்ட கைதியும். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஷ்ணு (சாகர் சூர்யா)வை, எஸ்.ஐ. சத்யன் (முரளி கோபி) காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் சிலரால் தாக்கப்பட, தப்பித்து ஓர் இரவு தங்க அந்த வீட்டிற்கு வருகிறார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அதே வீட்டில் அடுத்தடுத்துப் பலவந்தமாக நுழைபவர்கள் ரசூலின் நண்பன் கரீம், இளைஞன் லாயிக் (பிரித்திவிராஜ் சுகுமாரன்),  அவர்கள் இருவருக்கும் அறிமுகமான இன்னொருவர். தான் தேடிவந்த தனது தந்தையைக் கொன்ற விஷ்ணுவைத் தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தும் லாயிக்கிற்கும்,  காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே நடைபெறும் வாதம் கைகலப்பாகி, சத்யன் கத்தியால் கடுமையாகத் தாக்கப்படுகிறார். உயிருக்குப் போராடும் எஸ்.ஐ., இப்ரஹிமிடம், ‘விஷ்ணுவை போலீசைத் தவிர யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன்’ என்று,  குர்ஆன் மீது சத்தியம் பெற்று விடுகிறார். மூசா, இப்ரஹிம், ரசூல் கொண்ட குடும்பத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நம்பி, இப்ரஹிம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியால் அது இல்லாமல் போக, வெறிபிடித்தவன் ஆகிறான் லாயிக். அதன் உக்கிரம் எவ்வாறு இருக்கும் என்பதும் அது எவ்விதமாக முடிந்தது என்பதும்தான், குருதி திரைப்படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை. “ஆண்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு பெண்ணுக்கு என்ன வேலை?” என்று கேள்வி எழுப்பும் சுமதியை ஒரு பெண்ணாக சகியாத லாயிக், “உன் நம்பிக்கையைக் கைவிடப் போறியா?” என்று இப்ரஹீமைப் பார்த்துக் கேட்கும் லாயிக்கிடம், “ஒரு மனித உயிரைப் பலிகொடுத்து, அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமா?” என்கிறார் மூசா. “நான் செய்யறது சரி இல்லன்னா, கடவுள் என் விதியைத் தீர்மானிக்கட்டும்” என்று கூறும் இப்ராஹிம், “அதே கடவுளின் மகிமையைக் காப்பாத்தத்தான்  நான் இங்கே இருக்கேன். என்னைத் தடுத்தால்  வெட்டிக் கொல்வேன், உங்க எல்லோரையும்” என்று கர்ஜிக்கும் லாயிக், இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமை, சட்டம் நீதி, முகலாயர் ஆட்சி காலச்  செயல்பாடுகள், வரலாறு போன்றவற்றில் அடிப்படைப் புரிதல் இல்லாமல் விஷ்ணு செய்யும் அறிவுப் பூர்வமற்ற விவாதங்கள், அதற்குச் சற்றும் குறைவில்லாதவாறு, மத நூல்களை மேற்கோள் காட்டியும், பிற மதத்தினர் மீது வெறுப்பைக் கூட்டியும், இப்ரஹிமிடமும் இறுதியில் ரசூலிடமும் மூளைச்சலவை செய்யும் விதமாக அமையும் லாயிக்கின் குரூரமான வார்த்தை வித்தகம், “ஏழைகளான எங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது? இறந்து போன அந்த ராஜாக்களால்  எங்களுக்கு என்ன பிரயோஜனம்? ஒரு பஞ்சத்துக்கும் அடுத்த வெள்ளத்துக்கும் இடையே உயிரை விட்டுடாம வாழ முயற்சி செஞ்சுட்டு இருக்கோம்”  “எப்ப மனுஷன் ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சானோ, அன்னிலிருந்து இன்னிவரைக்கும் நிறுத்தாத ஒரு விஷயம், சண்டை போடுவதும், கொல்வதும்தான். காரணம் வெறுப்பு. மனுஷனுக்கு வெறுக்க, எப்போதும் ஒன்னு தேவைப்படுது. அதுக்கு நமக்குள்ள தேவைப்பட்றது, ஒன்னு,  ‘அவங்க’ (them) இன்னொன்னு ‘நாம’ (us). அந்த நெருப்பைப் பத்த வைக்கப் பகை ஒன்னு போதும், அது கொழுந்து விட்டு எரியற வரைக்கும் வெறுப்பும் சாகாம இருக்கும். இறுதியில நாம ஜெயிச்சுட்டோம்னு நம்மள நாமே முட்டாள்தனமா ஏமாத்திகிட்டு அதே நெருப்பில விழுந்து எரிஞ்சும் போவோம் ”   “ஒருத்தன் தன் குழந்தைகளுக்குப்  படிக்கக் கத்துக் கொடுக்கலேன்னாலும், யாரை வெறுக்கணும்னு கத்துக் கொடுக்கறான். வர்ற தலமுறையும் இந்த ஏரியற வெறுப்பு நெருப்புல எரிஞ்சுதான் போகும். மனுஷன் செத்தாலும் அவனுக்குள்ள இருக்கற வெறுப்பு மட்டும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்” இடையிடையே பதட்டம் இல்லாமல் காத்திரமாகப் பேசுகிற மூசா, இவ்விதம், கிடைத்த வாய்ப்பில் எல்லாம், அவரவர் மத நிலையிலான மனநிலைக்கேற்பக் கடவுளின் பெயரால், ‘புனித’ நூல்களின் பெயரால் மதத்தையும் அதையொட்டி அவர்களின் ‘நியாய’த்தையும் அவற்றைத் தாண்டிய மனிதத்தையும் கூடத் தூக்கிப் பிடிப்பதில், புரிந்து தெளிய வேண்டியவை ஏராளம்.  அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான சம்பவங்களின் இடையிடையே, இவ்விதம் வலிமையான வசனங்களால் நெய்யப்பட்ட அக்காட்சிகள் யாவும், சலிப்பைத் தரவில்லை. மாறாக, சமகால அரசியலை, அடிப்படைவாதத்தை பேசாமல் பேசி,  சிந்திக்கவும் எச்சரிக்கை கொள்ளவும் இடமளிக்கின்றன. ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் கூட, மூசா குறிப்பிடும் ஆதி பாவமான காபில் காலத்துப் பகையும் கொலையும், அந்த இனம் சார்ந்ததே தவிர, பிறர் மீதான தொடுப்புக்கான  நியாயமோ, ஏன், அவர்களுக்குள்ளேயே கூட அதையே சொல்லி அன்றிலிருந்து இன்றுவரை தொடர்வதற்கான அவசியமோ என்ன இருக்கிறது? விஷ்ணுவின் சிந்தனை முழுவதும் வன்மம் நிறைந்து இருப்பதற்கும் லாயிக் ரசூலிடம் கத்தியைத் தருவதன் மூலம் பகை வெறியைக் கடத்துவதற்கும் பகுத்தறியும் குறைபாடே தவிர, வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்? பிரித்திவிராஜ் சுகுமாரன், ரோஷன் மேத்யூ இருவரும் நடிப்பில், சளைக்காமல்  போட்டி போட்டுக்கொண்டு ஜமாய்த்திருக்கிறார்கள். மம்முகோயாவின் பக்குவப்பட்ட பங்களிப்பும் ஸ்ரீரிந்தாவின் உணர்வுபூர்வமான நடிப்பும் மனதில் நிற்கின்றன. முரளி கோபி, நெஸ்லன், சாகர் சூர்யா, மணிகண்டராஜன், ஷைன் டாம் சாக்கோ தத்தம் பங்களிப்பை நிறைவாகவே செய்துள்ளனர். காடு மலை பகுதியிலும் சிறிய வீட்டிலும், இரவிலும் குறைந்த ஒளியிலும், உள்ளேயும் வெளியேயும், பனிபடர்ந்த சூழலிலும் ட்ரோன் ஷாட்ஸ் உட்பட, அற்புதமாக காட்சிகளை, பாத்திரங்களின் முகபாவங்களை நுட்பமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அபிநந்தன் ராமானுஜம். அதற்கு இணையாக வெளுத்து வாங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்.  அகிலேஷ் மோகனின் படத்தொகுப்பில் பழுதில்லை என்றாலும், இரண்டு மணி நேரத்திற்கு ஓடும் திரைப்படத்தின் முற்பகுதியில் இருந்த விறுவிறுப்பின் வேகம், பிற்பகுதியில் குறைந்து இருப்பதைத் தவிர்க்க, நீளத்தைச் சற்றுக் குறைத்திருக்கலாம். பாம்பு கடித்து உடலில் நீலம் பரவிவிட்ட நிலையில், அதைப் பற்றிப் பொருட்டே இல்லாமல் அத்துணை  மணி நேரம் பேரமனும் மற்றவர்களும் வாளா இருப்பதும், ஒரு கையையும் காலையும் லாயிக் உடைத்த பின்பும், அந்த உணர்வோ வலியோ இல்லாமல் சற்றும் பிரதிபலிக்காமல், தாங்கியபடி நடப்பதைத் தவிர மிக இயல்பாக இருப்பதுமான காட்சிகள், ஜீரணிக்க முடியாத சினிமா லிபர்ட்டி போலும். படத்தைப் பார்த்து முடித்ததும் மனதில்  பளிச்சென்று மின்னல் வெட்டாக மின்னுவது பெரியாரின் ‘மதம் உள்ளே போனால், மதி வெளியே போகும்’ என்கிற அழுத்தமான வார்த்தைகளே. வாழ்க்கையில் மனிதத்தை முதன்மையாகக் கொள்ளும்  எவர் மனதிலும் இப்படி மின்னுவதும்  இயல்புதான். மதிப்பெண்: 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

மாலிக் – விமர்சனம்

மாலிக் – விமர்சனம்

திரை விமர்சனம் சமூகத்தில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று சட்ட நீதி, மற்றொன்று நியாய தர்மம். ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் அவற்றின் செயல்களுக்கான நியாயத்தைக் கற்பித்துக் கொள்கின்றன. இரண்டு பக்கங்களிலும் தவறுகள் இருக்கின்றன. அதில் மன்னிக்க முடியாத தவறு, பாதுகாக்க வேண்டிய அரசே மக்களைப் பகடைக் காய்களாக ஆக்கி, தாம் ஏற்படுத்திய சட்ட நடைமுறைகளைக்கூட அலட்சியம் செய்து, முன்னெடுக்கும் அரச பயங்கரவாதம்தான். இதனை உள்வாங்கிக் கொண்டு பார்த்தால், மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி, பகத் பாசில் (அகமது அலி சுலைமான்) நிமிஷா சஜயன் (ரோசலின்), வினய் போர்ட் (டேவிட் கிறிஸ்துதாஸ்), திலீஷ் போத்தன் (அபுபக்கர்), ஜோஜூ ஜார்ஜ் (அன்வர் அலி), ஜலஜா (ஜமீலா), இந்திரன்ஸ் (ஜார்ஜ் சக்காரியா), சனால் அமன் (ப்ரெட்டி) பிரதான பாத்திரங்களில் சிறப்புற நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘மாலிக்’ திரைப்படத்தின் நியாய அநியாயங்கள் தெளிவாகும். ரமதப்பள்ளி இஸ்லாமியர்களும் எடவத்துரா கிறிஸ்தவர்களும் மத பேதமின்றி வாழும் கேரள கடற்கரைக் கிராமம். மத நல்லிணக்கத்தின் உச்சம்தான் சுலைமான் ரோசலின் காதலும் எதிர்ப்பு இல்லாத திருமணமும். அந்தக் கடலோரக் கிராமத்தின்மீது, துறைமுகம் இணைப்புச் சாலை அமைக்கவிருக்கும் அரசுக்கும் அதில் ஆதாயம் தேட முனையும் அரசியல்வாதிக்கும் ஒரு கண். மண்ணின் மைந்தராகச் சுலைமான், அத்திட்டத்திற்கு எதிராக இருக்க, அவனைத் தங்களின் பாதுகாவலனாகக் கருதும் அந்த கிராமத்தின் ரமதப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் எடவத்துரா பகுதியைச் சேர்ந்த கிறித்தவர்களும் அவனுடன் அணியமாகி நிற்கின்றனர். இதற்கிடையில், ஒரு கொலை வழக்கில் சுலைமான் சிக்குகிறான். அந்தப் பகுதியின் உதவி ஆட்சியர் அன்வர் அலி, அவனைக் காவல்துறையில் சரண்டர் ஆகும்படி வற்புறுத்த, அவன் மறுக்கிறான். பல விதங்களில் காவல்துறையும் அவனை நெருக்குகிறது. இறுதியில் சுலைமான் கைது செய்யப்பட்டனா இல்லையா என்பதுதான் பற்பல சம்பவங்களை உள்ளடக்கிய ‘மாலிக்’ திரைப்படத்தின் கதை. 2009 ஆம் ஆண்டில் கேரளாவில் நடந்த பீமப்பள்ளி காவல்துறைத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், பகத் பாசில் பல்வேறு பரிமாணங்களில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரதான பாத்திரங்களைத் தாண்டி, துணைப் பாத்திரங்களை ஏற்ற அத்தனை கலைஞர்களும் அளவான அழகான பங்களிப்பை வழங்கவே செய்துள்ளனர். மலையாளப்படக் கலைஞர்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு நேர்மையான பங்களிப்பைத் தரவேண்டும் என்பதைத் தவிர்த்து எந்தவிதமான தன்முனைப்போ, ரசிகர்களின் முன்னிலையில் தங்களது பிம்பம் பாதிக்கப்படும் என்கிற உணர்வோ இன்றி, செயல்படும் பாங்கு வெகுவாகப் பாராட்டுக்குரியது. பகத் பாசில், சுலைமான் பாத்திரமேற்று இருப்பதும், நிமிஷா சஜயன் வயதான தோற்றத்தில் நடித்திருப்பதும், இதன் அடிப்படையில்தான். இசையும் (சுஷின் ஷான்) ஒளிப்பதிவும் (ஷானு வர்கீஸ்) படத்திற்கு உறுதுணை. படத்தொகுப்பை இயக்குனரே கவனித்துள்ளார். கதை முழுவதும் பிளாஷ்பேக்கில் சில பாத்திரங்கள் வாயிலாக சொல்லப்படுவதால், அதைப் பின்தொடர்வது சற்றுச் சிரமமாகவும் இருக்கிறது. உன்னிப்பாக கவனிக்கவில்லை என்றால், போதிய அவகாசம் இன்றி, காட்சிகளும் மனதில் பதியும் முன்பே சடுதியில் கடந்து போய் விடுகின்றன. குறிப்பாக, எதிர்பாராத கிளைமாக்ஸ். ரோசலினை மணக்க விரும்பும் சுலைமான், ‘நீ உன் நம்பிக்கையிலேயே இருக்கலாம்’ என்று கூறிவிட்டு, வரும் வாரிசு ஆணாக இருந்தால் அமீர் என்று பெயர் வைத்து, ஒரு இஸ்லாமியனாக வளர்க்க வேண்டும் என்று கூறுவதும், தனது தங்கையையே மறுப்பேதும் இல்லாமல் சுலைமானுக்கு மணமுடிக்க சம்மதித்த டேவிட், பேப்டிஸம் நிகழ்வில் குறுக்கிட்டு ஆட்சேபித்து, அந்தக் குழந்தையுடன் மனைவியையும் அழைத்துச் சென்றுவிடுவதை அடுத்து, அவன் மீது வன்மம் பாராட்டுவதும் உள்ளார்ந்த மத உணர்விலிருந்து அவர்கள் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. குழந்தை பற்றிச் சுலைமானிடம் ஏற்கனவே சொல்லி இருந்தும், அவள் அதை டேவிட்டிடம் சொல்லாமல் போனது ஏனோ? ஒன்றரை மணி நேர அளவிலேயே நேர்த்தியான படங்கள் வந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஏறக்குறைய இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் மாலிக், நீளம் காரணமாக சோர்வு தருவதைத் தவிர்த்திருந்தால் இன்னும் ரசித்திருந்திருக்க முடியும். மதிப்பெண்: 7.5/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்