மாலிக் – விமர்சனம்
திரை விமர்சனம்
சமூகத்தில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று சட்ட நீதி, மற்றொன்று நியாய தர்மம். ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் அவற்றின் செயல்களுக்கான நியாயத்தைக் கற்பித்துக் கொள்கின்றன. இரண்டு பக்கங்களிலும் தவறுகள் இருக்கின்றன. அதில் மன்னிக்க முடியாத தவறு, பாதுகாக்க வேண்டிய அரசே மக்களைப் பகடைக் காய்களாக ஆக்கி, தாம் ஏற்படுத்திய சட்ட நடைமுறைகளைக்கூட அலட்சியம் செய்து, முன்னெடுக்கும் அரச பயங்கரவாதம்தான்.
இதனை உள்வாங்கிக் கொண்டு பார்த்தால், மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி, பகத் பாசில் (அகமது அலி சுலைமான்) நிமிஷா சஜயன் (ரோசலின்), வினய் போர்ட் (டேவிட் கிறிஸ்துதாஸ்), திலீஷ் போத்தன் (அபுபக்கர்), ஜோஜூ ஜார்ஜ் (அன்வர் அலி), ஜலஜா (ஜமீலா), இந்திரன்ஸ் (ஜார்ஜ் சக்காரியா), சனால் அமன் (ப்ரெட்டி) பிரதான பாத்திரங்களில் சிறப்புற நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘மாலிக்’ திரைப்படத்தின் நியாய அநியாயங்கள் தெளிவாகும். 
ரமதப்பள்ளி இஸ்லாமியர்களும் எடவத்துரா கிறிஸ்தவர்களும் மத பேதமின்றி வாழும் கேரள கடற்கரைக் கிராமம். மத நல்லிணக்கத்தின் உச்சம்தான் சுலைமான் ரோசலின் காதலும் எதிர்ப்பு இல்லாத திருமணமும். அந்தக் கடலோரக் கிராமத்தின்மீது, துறைமுகம் இணைப்புச் சாலை அமைக்கவிருக்கும் அரசுக்கும் அதில் ஆதாயம் தேட முனையும் அரசியல்வாதிக்கும் ஒரு கண். மண்ணின் மைந்தராகச் சுலைமான், அத்திட்டத்திற்கு எதிராக இருக்க, அவனைத் தங்களின் பாதுகாவலனாகக் கருதும் அந்த கிராமத்தின் ரமதப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் எடவத்துரா பகுதியைச் சேர்ந்த கிறித்தவர்களும் அவனுடன் அணியமாகி நிற்கின்றனர்.
இதற்கிடையில், ஒரு கொலை வழக்கில் சுலைமான் சிக்குகிறான். அந்தப் பகுதியின் உதவி ஆட்சியர் அன்வர் அலி, அவனைக் காவல்துறையில் சரண்டர் ஆகும்படி வற்புறுத்த, அவன் மறுக்கிறான். பல விதங்களில் காவல்துறையும் அவனை நெருக்குகிறது. இறுதியில் சுலைமான் கைது செய்யப்பட்டனா இல்லையா என்பதுதான் பற்பல சம்பவங்களை உள்ளடக்கிய ‘மாலிக்’ திரைப்படத்தின் கதை.

2009 ஆம் ஆண்டில் கேரளாவில் நடந்த பீமப்பள்ளி காவல்துறைத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், பகத் பாசில் பல்வேறு பரிமாணங்களில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரதான பாத்திரங்களைத் தாண்டி, துணைப் பாத்திரங்களை ஏற்ற அத்தனை கலைஞர்களும் அளவான அழகான பங்களிப்பை வழங்கவே செய்துள்ளனர்.
மலையாளப்படக் கலைஞர்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு நேர்மையான பங்களிப்பைத் தரவேண்டும் என்பதைத் தவிர்த்து எந்தவிதமான தன்முனைப்போ, ரசிகர்களின் முன்னிலையில் தங்களது பிம்பம் பாதிக்கப்படும் என்கிற உணர்வோ இன்றி, செயல்படும் பாங்கு வெகுவாகப் பாராட்டுக்குரியது. பகத் பாசில், சுலைமான் பாத்திரமேற்று இருப்பதும், நிமிஷா சஜயன் வயதான தோற்றத்தில் நடித்திருப்பதும், இதன் அடிப்படையில்தான். 
இசையும் (சுஷின் ஷான்) ஒளிப்பதிவும் (ஷானு வர்கீஸ்) படத்திற்கு உறுதுணை. படத்தொகுப்பை இயக்குனரே கவனித்துள்ளார். கதை முழுவதும் பிளாஷ்பேக்கில் சில பாத்திரங்கள் வாயிலாக சொல்லப்படுவதால், அதைப் பின்தொடர்வது சற்றுச் சிரமமாகவும் இருக்கிறது. உன்னிப்பாக கவனிக்கவில்லை என்றால், போதிய அவகாசம் இன்றி, காட்சிகளும் மனதில் பதியும் முன்பே சடுதியில் கடந்து போய் விடுகின்றன. குறிப்பாக, எதிர்பாராத கிளைமாக்ஸ்.
ரோசலினை மணக்க விரும்பும் சுலைமான், ‘நீ உன் நம்பிக்கையிலேயே இருக்கலாம்’ என்று கூறிவிட்டு, வரும் வாரிசு ஆணாக இருந்தால் அமீர் என்று பெயர் வைத்து, ஒரு இஸ்லாமியனாக வளர்க்க வேண்டும் என்று கூறுவதும், தனது தங்கையையே மறுப்பேதும் இல்லாமல் சுலைமானுக்கு மணமுடிக்க சம்மதித்த டேவிட், பேப்டிஸம் நிகழ்வில் குறுக்கிட்டு ஆட்சேபித்து, அந்தக் குழந்தையுடன் மனைவியையும் அழைத்துச் சென்றுவிடுவதை அடுத்து, அவன் மீது வன்மம் பாராட்டுவதும் உள்ளார்ந்த மத உணர்விலிருந்து அவர்கள் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. குழந்தை பற்றிச் சுலைமானிடம் ஏற்கனவே சொல்லி இருந்தும், அவள் அதை டேவிட்டிடம் சொல்லாமல் போனது ஏனோ? 
ஒன்றரை மணி நேர அளவிலேயே நேர்த்தியான படங்கள் வந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஏறக்குறைய இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் மாலிக், நீளம் காரணமாக சோர்வு தருவதைத் தவிர்த்திருந்தால் இன்னும் ரசித்திருந்திருக்க முடியும்.
மதிப்பெண்: 7.5/10
விமர்சனம்: மது ராஜேந்திரன்
Comments (0)