ஆன்டி இண்டியன்

ஆன்டி இண்டியன்

திரை விமர்சனம் வழக்கமான கதை, திரைக்கதை இல்லை. வழக்கமான நடிகர், நடிகைகள் இல்லை. வழக்கமான காதல், சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. வழக்கமான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு இல்லை. வழக்கமான திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. வழக்கத்திலிருந்து வேறுபட்டுத் தனித்து, விறுவிறுப்புடன் ரசிகர்களைச் சுவைக்கவும் சிந்திக்கவும் கொஞ்சம் வருந்தவும் செய்து, இறுதிவரை இருக்கையில் இறுத்திப் பார்க்க வைத்து விடுகிற படம்தான், மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து, ப்ளூ சட்டை சி இளமாறன் கதை, திரைக்கதை, வசனம், இசை பொறுப்பேற்று, அறிமுக இயக்கம் என்கிற சுவடே தெரியாமல் அருமையாக இயக்கி வெளிவந்துள்ள ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படம். சென்னை மயிலாப்பூர் இடைத் தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, அத்தொகுதியைச் சேர்ந்த சுவர் ஓவியர் பாஷா (ப்ளூ சட்டை இளமாறன்) யாது காரணத்தாலோ, யாராலேயோ வெட்டிக் கொல்லப்பட்டு விடுகிறார். ஒரு பக்கம் காவல்துறை விசாரணை நடத்த, மறுபக்கம் கட்சிகளின் தேர்தல் வியூகம் நடைபெற்றுக் கொண்டிருக்க, அவரை எரிப்பதா, புதைப்பதா, அடக்கம் செய்வதா என்பதில் துவங்கும் பிரச்சனை, எவ்விதம் முடிவுக்கு வருகிறது என்பதுதான் ‘ஆன்டி இந்தியனி’ன் மொத்தக் கதை. தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் புறா கதை, ப்ளூ சட்டை மாறன் துணிச்சலுடன், இப்படி ஒரு படத்தை நேர்த்தியாக எடுத்துத் தருவதற்கு அடிப்படை என்பது, சுவையான ஒரு செய்தி !ஆரம்பத்தில் சொல்லும் இக்கதையை மாறன் இறுதியில் வைத்து முடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். “மதத்த நம்பறவன் கோச்சுக்க மாட்டான்… மதத்தை வெச்சு பொழப்பு நடத்தறான் பாத்தியா, அவன்தான் கோச்சுப்பான்”, “நம்ம மக்களப் பத்தி நமக்கு தெரியாதா? செருப்பால அடிச்சிட்டு… கைல கருப்பட்டி கொடுத்தா, நக்கிக்கிட்டே போயிடுவாங்க” செத்தவன் பேரு பாஷா, அப்பன் பேரு இப்ராஹிம், உங்க பேரு?, என்ன, சரோஜாவா?, நம்ம புள்ளைங்கங்ற நம்ம அடையாளமே இல்லீயேப்பா…, இந்துக்களுக்கு என்ன ஒரு பிரச்சனையானாலும் அங்க நாங்க இருப்போம், நார்த் மாதிரி இல்ல தலைவரே, இங்கே எல்லாமே கஷ்டம், அவரு 25 வருஷமா இதோ வரேன் அதோ வரேன்னு சொல்லி, அவர் ரசிகர்களை ஏமாத்திட்டிருக்காரு, செத்தவனை வச்சு பொழப்ப நடத்தி, வாழ்ந்தவங்கதானே நம்ம அரசியல்வாதிக, இவங்க பொணத்த வெச்சிகிட்டு வெளயாட்டு காட்டிட்டிருக்காங்கண்ணா, முன்னாடி எல்லாம் தூர்தர்ஷன்னு ஒரே ஒரு சேனல் இருக்கும், அதுல ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கும். இன்னிக்கு ஊர்பட்ட சேனல்ஸ் இருக்கு, எல்லாத்திலும் வெறும் பஞ்சாயத்து மட்டும்தான் ஓடிட்டு இருக்கு, -இப்படிப் படம் முழுவதும் ‘பஞ்ச் டயலாக்’ ஸாக இல்லாது, ரசிகர்களின் மனதைப் ‘பன்ஞ்’ செய்து விடுகிற டயலாக்குகளாக விரவி இருக்கின்றன. இந்தப் படம் எந்த ஒரு தரப்பையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டிடவில்லை; மதவாதிகள், அரசியல்வாதிகள், ஊடகவாதிகள், ஏன் மக்களையும் சேர்த்து, எல்லோரையுமே அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. என்னதான் இயல்புத் தன்மையைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும், படம் முழுவதுமாகத் தொடரும் கெட்ட வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம். இறந்த உடலுக்குச் சுன்னத் செய்ய, மார்க்கம் அனுமதிக்குமோ ! படத்தின் பெயரும் கதைக்கருவோடு ஒட்டவில்லை. ராதாரவி (முதல்வர் செங்குட்டுவன்), ஆடுகளம் நரேன் (காவல்துறை துணை ஆணையர்), வழக்கு எண் முத்துராமன் (காவல் ஆய்வாளர்) ஜெயராஜ் (ஏழுமலை) வேலு பிரபாகரன் (ஹாஜியார்) விஜயா (சரோஜா), பசி சத்யா (சரோஜாவின் தோழி) உட்பட அனைத்துக் கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். கதிரவனின் ஒளிப்பதிவும், சுதர்சனின் படத்தொகுப்பும், மாறனின் பின்னணி இசையும், உறுத்தாமல் படத்தின் தேவையை நிறைவு செய்கின்றன. இடையிடையே கானா பாடல், இனிமை சேர்க்கிறது. “பேசாம பாடிய எடுத்துட்டு போய் மெடிக்கல் காலேஜிலாவது போடுங்க சார், பசங்கலாவது அதை வெச்சி படிக்கட்டும்” என்று கருஞ்சட்டை மனிதர் (கில்லி மாறன்) மூலம் துணிச்சலுடன் சொல்லிய இயக்குனர் மாறன், படத்தின் இறுதிக் காட்சியையும் அதே துணிச்சலுடன், மதச் சார்புத் தன்மையை மறுக்கும் விதத்தில், அவ்விதமே அமைத்திருந்தால், ‘ஆன்டி இந்தியன்’ கூடுதல் சிறப்புப் பெற்றிருக்கும். மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஜீவன் சந்தியா

ஜீவன் சந்தியா

திரை விமர்சனம் அங்கிங்கு என்று இல்லாமல், இந்தியச் சமூகத்தில் எங்குமே எப்போதுமே நிலவும் ஒன்றுதான், ‘காதல் கசக்குதையா’. ஜீவன் அபயங்கர், சந்தியா ஜோஷி விஷயத்திலும் அதே நிலைதான். அவரவர் குடும்பங்கள் அவர்களது நட்புக்கு, காதலுக்கு, வாழ்க்கைக்கு, தோழமைக்கு குறுக்கே நிற்கின்றன. தடைகளைத் தாண்டி, அவர்கள் இணைந்தார்களா? வாழ்ந்தார்களா? என்கிற கேள்விகளுக்கு விடைதான், தீபக் பிரபாகர் மாண்டே எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மராத்தி மொழி குடும்பச் சித்திரம்,  ஜீவன் சந்தியா. காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டும் இல்லை, வயதும் இல்லை; தேவை மட்டுமே உண்டு. என்ன ஒன்று, ஜீவன் அபயங்கர் (அசோக் சரப்) சந்தியா ஜோஷி (கிஷோரி சஹானே) ஜோடி, அவர்களின் தேவையை உணரும்போது கொஞ்சம் வயதாகி விடுகிறது;  அறுபதுகளில்தான் அவர்களிடத்தில் காதல் வாய்க்கிறது. அதனால் ஒன்றும் அது சுலபமாகி விடவில்லை. வாழ்க்கையில் போராட்டமாகவும், போராட்டமே வாழ்க்கையாகவும் தொடர்கிறது, பரஸ்பரம் கைத்தலம் பற்றியே என்பதால், சுமையும் சுகமுமாக. மர்ம முடிச்சுகள் இல்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. கிளுகிளுப்பான காட்சிகள் இல்லை. சண்டை சர்க்கஸ் இல்லை. கிளாமருக்கு இடமில்லை. விரசம் இல்லை. காமெடி டிராக் இல்லை. இத்தனை ‘இல்லை’ என்றாலும், நிறைவும் இல்லாமல் இல்லை. நடுங்கும் கையைப் பற்றிக் கொண்டு, “மிஸ்டர் அபயங்கர், எனக்கு நீங்க கைய கொடுக்கறீங்களா? இல்ல, பிடிமானத்துக்காக என் கைய  புடிச்சுக்கிறீங்களா?” எனக் கேட்கும் சந்தியாவிடம், “கைய நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் இந்த வயசுல நம்ம ரெண்டு பேருக்குமே பிடிமானம் தேவைப்படுதே, மிஸஸ் அபயங்கர்” என்பதும்,  ஆட்டோவில் அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகம், ரெஸ்டாரண்டில் ஜோஷியின் அழகை ஆராதித்து, ஜீவன் அபயங்கர் வண்ணத்துப்பூச்சியை வாழ்க்கைக்கு ஒப்பீடு செய்தலும், சந்தியா மகளிடம் பேச முனையும்போது முடியாமல் போவதும், பின்னர் மகள் பேச முனையும்போது பேச்சை முடித்து விடுவதும், பூங்காவில் அபயங்கர், ஜோஷி பூவைச் சூடிக் கொள்ளச் சம்மதிக்க அந்த மலர் பற்றி எடுத்து விளக்குவதும், கண்ணாடியைப் பார்க்கச் சொல்ல, அவள் பார்ப்பதும், நட்பு காதலாகித் திருமணத்தில் வந்து நிற்கும் நிலையில், பூங்காவில் அவர்களுக்குள்ளான உரையாடலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அபயங்கரோடு சந்தியாவின் பேச்சும், அப்பாவின் வாழ்க்கை குறித்து எடுத்த முடிவை மகன் அங்கூர் சொல்ல, “உன்னுடைய சந்தோஷத்துக்காக வேண்டுமானால் அந்த பேப்பரில் கையெழுத்துப் போடுகிறேன். ஆனா ஒரு விஷயம் ஞாபகத்தில வெச்சுக்கோ, பேப்பர்ல போடற கையெழுத்து நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறத நிறுத்தப் போறதில்ல” என்று சொல்வதும், நர்ஸ் மமதா கரே வாக அபயங்கர் குடும்பத்தினருடன் அளவளாவதும், ரசிக்கத்தக்க  நயமான காட்சிகள். தொலைபேசியிலோ செல்பேசியிலோ அனைத்துப் பாத்திரங்களும் ஒரு முறை பேசி விடுகிற காட்சி தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. சந்தியா ஜோஷியை சந்திக்கக்கூட மறுக்கும் அளவிற்கு, மகன் அங்கூர் அபயங்கரின் அதீத வெறுப்புக்கு வலுவான காரணம் இல்லை. பாத்திரத்தின் தன்மையால் அசோக் சரப்பும், கிஷோரி சஹானாவால் பாத்திரமும் மெருகேறி நிற்பது சிறப்பு. ஜீவன் அபயங்கராக முற்பகுதி நடிப்பில் இருந்த இயல்பு, பிற்பகுதியில் சற்று தொய்வடைந்து விடுகிறது. சந்தியா ஜோஷியாக  ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்கிறது நடிப்பில் சரிவே இல்லாத செறிவு. சமீர் தர்மாதிகாரி (அங்கூர் அபயங்கர்),  பிரதீபா அபயங்கர் (ருசிதா ஜாதவ்), ரவீந்திர மக்கானி (டாக்டர் தாமலே), ரமேஷ் தியோ (சந்தீப்), சீமா தியோ (சினேகா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பை, ஏற்ற பாத்திரங்களுக்குப் பழுதில்லாமல்  வழங்கியுள்ளனர். அதுல் பாலச்சந்திர ஜோஷியின் இசையில் இனிமையான  பாடல்களும், பின்னணி இசையும், மங்கேஷ் அஷோக் கடேக்கர் கண்கவர் ஒளிப்பதிவும் மனதைக் கவர்கின்றன. மஹந்தேஷ்வர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். இரண்டு மணி 15 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை, இயக்குனர் உடன் இணைந்து பேசி, இருபது நிமிடங்களைக் குறைத்திருந்தால், இன்னும் நிறைவாக இருந்திருக்கும். காதல் என்பது எதுவரை என்கிற கேள்விக்கு, இறுதிச் சுவாசம் உள்ளவரை என்கிற பதிலை, அறுபது வயதிற்கு மேற்பட்டவருக்கு என்று இல்லாமல், எல்லா வயதினர் மனதிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது, ‘ஜீவன் சந்தியா’. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஹோம்

ஹோம்

திரை விமர்சனம் கால் வலி இருந்தாலும் பொருட்படுத்தாமல்,  வழமையான வேலைகளைச் செய்யும் குட்டியம்மா (மஞ்சு பிள்ளை), உழைத்துத் தேய்ந்த நிலையில், அவ்வப்போது நினைவுகளும் தப்பும் பெரியவர் அப்பச்சன் (கயினிகரி தங்கராஜ்), டீ குடித்த கப்புகளைக்கூட கீழே திருப்பி எடுத்துச் செல்லாமல், சுழலும் மின் விசிறியை நிறுத்தக்கூட கீழே இருக்கும் அம்மாவை, மாடி அறைக்கு அழைக்கும் இளைஞன் சார்லஸ் ஆலிவர் (நேஸ்லன் கே கபூர்), அறியாமல் சிறுநீர் கழித்துவிடும் அப்பாவை நொந்து கொள்வதும் உடன் அப்படி நொந்துகொண்ட தன்னையே அதற்கு நொந்து கொள்வதும், மாடித் தோட்டத்தை மட்டில்லா மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொள்வதுமான குடும்பத் தலைவன் ஆலிவர் ட்விஸ்ட் (இந்ரன்ஸ்), அந்த இல்லத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தள்ளி, தனது அடுத்த படத்திற்கான ஆயத்த வேலையில் மூழ்கி இருக்கும் திருமணமாகாத இளம் இயக்குனர் அந்தோனி டிவிஸ்ட் (ஸ்ரீநாத் பாஷி), இவர்களுக்குள் நிலவும் உறவை, உரிமையை, உயர்வை, உரசலை ஆழமாகவும் அதே அளவுக்கு மெதுவாகவும் சித்தரிக்கும் மலையாள மொழித் திரைப்படம்தான், ரோஜின் தாமஸ் எழுதி இயக்கி, அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஹோம்’. “பாரு, இந்த இடம் எவ்ளோ அழுக்கா இருக்கு? இது உன்னோட அறை அல்ல, மனசு. ஒரு வேலை செய். இங்கிருந்துட்டு கிளைமாக்ஸ் எழுதாதே. உன்னோட முதல் படத்தோட கதைய எங்கிருந்து  எழுதின?” புரொடியூசர் பேபி கேட்க, பதிலாக செல்போன் அழைத்து அந்தோணி எடுத்துப் பார்க்க,  படத்தின் தலைப்பு வருவது நயம். அந்தோணி வீட்டுக்கு வந்தும் அப்பாவின் நேசம் அவன்மீது படராமல், அவரின் நெருக்கம் தொடராமல், அவ்வப்போது அவன் ஸ்மார்ட்போனும்  அதில் வரும் காதலி பிரியாவும் இடையூறாகவே இருக்கின்றனர். இது, “வழக்கமா வீட்ல இருக்கும்போது அவன் படுக்கப்போகும் முன்னே நம்மள முத்தமிட்டு குட் நைட் சொல்வான்” என்று குட்டியம்மா ஆலிவரிடம் அன்று இல்லாததைக் கூறி வருந்துவதில் பளிச்சிடும். அந்தோணி படித்துக் கொண்டிருந்த ஜோசப் லோபஸின் வாழ்க்கை வரலாறு பற்றி விசாரித்த ஆலிவர், தாமும் ஏன் இப்படி எழுத முடியாது? என்று கேட்க, “வாழ்க்கையில் அசாதாரணமானவை நிகழணும். அதுக்கப்புறம்தான் ஒரு புத்தகம் எழுத முடியும். இந்தப் பக்கத்திலே அவரோட சாதனைகள பாருங்க. உங்க சுயசரிதை அரைப் பக்கம்கூட வராது. ‘நான், ஆலிவர் ட்விஸ்ட்’ ன்னு அதுக்கு ‘பளிச்’சுன்னு பேரு தரலாம். நான் கடை நடத்தனேன், காலத்துக்கு ஏத்த மாதிரி மாற முடியாமல் அதை மூடிட்டேன். இப்போ மாடித் தோட்டத்தப் பராமரிச்சுகிட்டு சும்மாவே உக்காந்திருக்கேன். வேற எழுத என்ன இருக்கு? இது அரைப் பக்கம்கூட வராது”. அந்தோணியின் இந்த வார்த்தைகள் ஆலிவர் ட்விஸ்ட்டிடம் பல ட்விஸ்ட்களை ஏற்படுத்தி விடுவதை விவரிக்கும் சுவாரசியம்தான், ஹோம் படத்தின் மீதிக் கதை. வருங்கால மாமனாருக்குதான் மகன் ஸ்மார்ட் போன் வாங்கவிருக்கிறான் என்றறிந்து, தானே குறைந்த விலையில் ஒரு போன் வாங்கி வந்து இருக்க, எதிர்பாராதவிதமாக மகன் அந்தோணி அவருக்காக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்ததை அறிந்து, ஆலிவர் மகிழும் போதே பாக்கெட்டில் இருந்த செல்போன் ஒலித்ததை அடுத்து, அவர் சங்கடத்தில் நெளிவதும் சின்ன மகன் சார்லஸ்சிடம்  செல்போனைப் பயன்படுத்துவது குறித்துப் பாடம் எடுத்துக் கொள்வதும் ஜோசப் லோபசைப் படமெடுக்க இயலாமல் தவிப்பதும் நடிகர் விஷாலிடம் சகஜமாகப் பழகிப் பேசுவதிலும் உளவியல் மருத்துவரிடம் விவாதிப்பதிலும் அங்கு டாக்டர் அவரிடம் கேட்டது போல சார்லஸிடம் கேட்டு, எதிர்பாராதவிதமாகப் பதில் வந்து விடுவதிலும்  ‘எல்லாம் போனில் இருக்கிறது’ என்று சொல்லும் ஜோசப்பிடம், ‘போனில் இருக்கலாம். ஆனா, மனசுல இல்ல’ என்று சொல்வதிலும் ஆலிவராக இந்ரன்ஸ் மிளிர்கிறார். பாசத்தைக் காட்டிட முனைவதிலும் மாறிவரும் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதில் ஏற்படும் பரவசத்தையும் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் ஒருசேர அற்புதமாகப் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒரு பக்கம் தொழில், இன்னொரு பக்கம் காதல் என்று ஆதங்கமும் அவதியுமாக ஸ்ரீநாத் பாஷியின் நடிப்பும் அருமை. மஞ்சு பிள்ளை, நேசலன் கே கபூர், கயினிகரி தங்கராஜ், தீபா தாமஸ் (பிரிய ஜோசப்), விஜய் பாபு (டாக்டர். பிராங்கிளின்), ஜானி அந்தோனி (சூரியன்), மணியன்பில்லா ராஜு (பேபி), அனுப் மேனன் (நடிகர் விஷால்), கே.பி.ஏ.சி. லலிதா (அன்னம்மா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். ராகுல் சுப்பிரமணியம் இசையின் இனிமையும் நீல் டி குன்ஹாவின் கண்கவர் ஒளிப்பதிவும் படத்தின் மெதுவான நகர்வையும் பொருட்படுத்தாமல் செய்துவிடுகின்றன. படத்தொகுப்பைக் கவனித்துள்ள பிரிஜிஷ் பிரகாஷ், இன்னும் கடுமையாகக் கவனித்து, படத்தின் வேகத்தைச் சற்று கூட்டி இருக்கலாம் அல்லது அதன் நீளத்தையாவது குறைத்திருக்கலாம். எல்லோரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சாதனை இருக்கத்தான் செய்கிறது. அதைக் கண்டறியக்கூட இயலாத வகையில்தான், அவரவர் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதனை வெளிக்கொணர்ந்து அங்கீகரிக்க உறவுகள் உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் அது உறவு என்பதையும் எங்கு கோபப்பட மாட்டார்களோ, சந்தோஷப்படுத்துவார்களோ, தவறிழைத்தால் கண்டிப்பார்களோ, தவறு எனில் திருத்துவார்களோ, அதுதான் ‘இல்லம்’ என்பதையும், எத்தனை நவீன தொழில்நுட்பங்களுக்கு நாம் அறிமுகமானாலும், அடிப்படையான மனிதப் பண்புகளை மட்டும் இழந்து விடக்கூடாது என்பதையும் அழகாகவும் அன்பாகவும் அழுத்தமாகவும்கூட எடுத்துச் சொல்லும் படம்தான், ஹோம். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

வைகைப் புயலே வருக!

வைகைப் புயலே வருக!

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதற்குத் தடை விதித்து போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அவர் களம் இறங்கவிருக்கிறார் என்பது மகிழ்வான செய்தி. ரெட் கார்டு நீக்கப்பட்டது குறித்துப் பேட்டியளித்த அவர், “இது என்னுடைய மறுபிறவி” என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். ரெட் கார்ட் வழங்கப்பட்ட காலத்தில், திரைப்படங்களில்தான் வடிவேலு நடிக்கவில்லையே தவிர, தொலைக்காட்சிகள் வழியாகவும் மீம்கள்  வழியாகவும் அன்றாட வாழ்வில் அவரது வசனங்கள் வாயிலாகவும் நம்மைத் தொடர்ந்து சிரிக்க வைத்துக்கொண்டேதான் இருந்தார் என்பதுதான் உண்மை.  தனி மனிதன் என்பது வேறு. ஒரு கலைஞனாக இருப்பது என்பது வேறு. தனிமனிதனின் கருத்து சுதந்திரத்திற்காக ஒரு துறை அவனது கலை வாழ்வை முடக்கி வைத்திருந்தது. இப்பொழுதாவது அந்தத் தடை நீங்கியிருப்பது நல்லது.  ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு பருவம் உண்டு. SEASON என்று சொன்னால் சிலருக்கு எளிதில் புரியும். அதேபோல, ஒரே மாதிரியான தொனி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேசப்படும். நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், ஜனகராஜ் , கவுண்டமணி, செந்தில், விவேக், சூரி என இப்பொழுது இருக்கும் யோகிபாபு வரை நீண்ட நெடிய பருவங்கள் உண்டு. நாகேஷ் ஒரு ட்ரெண்ட் செட் செய்தார். அவர் காலத்தில் அல்லது அவரது காலத்தைத் தொடர்ந்த  சிலர் அவரவர் பாணியில் ட்ரெண்ட் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுக்கென ஒரு பாணியை உருவாக்குவதற்குள் நிலைத்தன்மை பெறாமல் பல நல்ல கலைஞர்கள் காணாமல் போனார்கள். அது தான் நிதர்சனம். ஆனால் எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் வகையான இசை இருப்பது போல் சில நகைச்சுவைகளை நாகேஷ் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.  கவுண்டமணி – செந்தில் காம்போவும் சரி, கவுண்டமணியின் சிங்கிள் ட்ராக் காமெடிகளும் சரி, நகைச்சுவையில் புது ட்ரெண்ட்டை உருவாக்கினாலும் அதைத் தொடர்ந்து வந்த வடிவேலு, விவேக் பருவங்கள் முக்கியமானவை. அதில் நிலைத்து தனக்கென்று தனிப்பட்ட முத்திரையை இன்றளவும் பதித்துக்கொண்டிருப்பவர் வடிவேலு.  வடிவேலுவின் மகத்தான வெற்றிக்கு சில காரணங்களைப் பட்டியலிட்டுச் சொல்ல முடியும்.  முதலில் திகட்டவே திகட்டாத தென் தமிழகத்தின், முக்கியமாக மதுரை வட்டார வழக்குமொழி.  சொற்களைப் பிரயோக்கிக்கும் அலைவரிசை மற்றும் அதற்கேற்றபடி உடல் மொழியை, முக பாவனைகளைக் கோர்க்கும் நடிப்புத்திறமை.  ஒரு சாமான்யனாக, மனதில் தோன்றும் அசரீரிகளை அசரீரிகளாகவே ஒலிக்கவிட்டு, அதையும் வடிவேலுவின் குரலாக ஒலிக்கவிட்டு எல்லா மூலைகளிலும் வடிவேலுவைப் பயன்படுத்தத் தெரிந்த, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த கன்டென்ட் ரைட்டர்ஸ் மற்றும் இயக்குனர்கள்.  இவை எல்லாம் ஒன்று சேர்ந்த கலவைதான் வடிவேலுவின் வெற்றி.  குழந்தைகளை ஈர்க்கும் முக பாவனைகள் வடிவேலுவிடம் உண்டு. ஒரு படத்தில் ஒரு குழந்தை பலூன் ஊதச்சொல்லும், அவரும் ஊதுவார்.  பலூன் உடையும். உடைந்ததும் முகத்தில் ஒரு பாவனை காட்டுவார். குழந்தை அழும்போது குழந்தையை மிரட்டும் தொனியாக மாற்றுவார். ஆனால் குழந்தையிடம் தோற்கும் முகத்தை நகைச்சுவைக்காக மாற்றுவார்.  எந்த வார்த்தையை எப்படிச் சொன்னால் அது விகாரமாக மாறும் என்று தெரியாமல் பயன்படுத்தி சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். ஆனால் வடிவேலுவிடம் இருக்கும் தனித்திறமை, எந்த வார்த்தையை எப்படிச் சொன்னால் மக்கள் சிரிப்பார்கள் என்பதைப் புரிந்து வைத்திருப்பது. இது அனைவருக்கும் வராது. உதாரணத்திற்கு, ‘உயிரே.. உயிரே.. தப்பித்து எப்படியாவது ஓடிவிடு… ஐயயோ வருதே… மூதேவி வருதே…” என்று வடிவேலுவின் குரலில் ஒலிக்கும்பொழுது திரையில் வடிவேலுவின் முகமும் உருவமும் பர்தாபோட்டு மூடியிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். ஆனாலும் நம்மால் அந்தக் குரலைக் கேட்டவுடன் வரும் வெடிச்சிரிப்புக்குத் தடை போட முடியாது. நகைச்சுவையில் தனித்து நின்ற உச்சரிப்புகளில் அதுவும் ஒன்று.  வடிவேலு பற்றி சமூக வலைத்தளங்களில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருந்தாலும் நுணுக்கமான விசயங்களை மட்டுமின்றி வெகுஜனக் காமெடிகளில் பரவலாக அறியப்பட்ட காமெடிகளைச் சொல்லாமல் கட்டுரை நிறைவு பெறாது என்பதுதான் வடிவேலுவின் வெற்றி.  ஒரு தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வரும் வாக்காளர் இன்னொரு கட்சி பூத்தில் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்றும் வடிவேலுவின் பூத்திற்கு வந்து உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன் என்றும் கூறுவார். “அவன்ட்ட வாங்குன காசுக்கு ஏணியில ஒரு குத்து, உன்ட்ட வாங்குன காசுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து” என்றும் சொல்வார். “மூன்றாவது குத்த நான் குத்தவா?” என்று வடிவேலு சொல்வதற்கு முன், எழுத்தால் எழுத முடியாத ஒரு சத்தத்தை (ஜங்……) எழுப்பி, “ங்கொய்யாலே” என்று அவனை அடிப்பார். உண்மையில் அந்தக் காமெடிக்கான சிரிப்பின் ஆதிப்புள்ளி முத்துக்காளை வசனத்தைச் சொல்ல ஆரம்பிக்கும்போது உருவானாலும் வடிவேலு உச்சரிப்பில் மொழியும் சொல்லும் அற்ற அந்த ஒலிதான் சாமான்யனையும் தன்னை மறந்து சிரிக்க வைக்கும் அல்லது வெடிக்க வைக்கும் பெரும்புள்ளி. அதே காட்சியில் அடுத்து வரும் நபர், அவர் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று சொல்வதை வடிவேலு நம்ப மறுப்பார். அதற்கு அவர் “நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரிஞ்சுதான் ஓட்டு போட்ட சீட்டைக் கொண்டு வந்திருக்கேன்” என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து சீட்டை வெளியே எடுத்துக் காண்பித்து, 17 வருசமா உங்களுக்குத்தான் ஓட்டு போடறேன்” என்று சொல்வார். “அப்படின்னா 17 வருசமா கொண்டு போய்ட்டுதான் இருக்கியா?!!” என்று சொல்லி, முதல் நபருக்குக் கோபத்தைக் காண்பித்தவர், இரண்டாவது நபருக்கு முகத்தில் அதிரிச்சியையும் குரலில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் அந்த நகைச்சுவையின் நீட்சி. ஒரு நெடிய காட்சியைத் திரைப்படுத்தும்பொழுது இரண்டு சவால்கள் உள்ளன. அந்தக் காட்சிக்கென்று இருக்கும் உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவது. இரண்டாவது, காட்சி தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கும் பொழுது, பார்வையாளனை அந்த உணர்வுக்குள்ளேயே தக்க வைப்பது. ஆனால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் நெடிய காட்சிகளாகப் படமாக்கப்படும்பொழுது, அவை அதே உணர்வில் இருப்பதோடு அல்லாமல், உணர்வு மோலோங்கவும் செய்யும். அதாவது நகைச்சுவையின் வீச்சு அதிகமாகவும் செய்யும்.  அதே திரைப்படத்தில் ஒரு நபரிடமிருந்து ஃபோன் வரும், இவர் சொல்ல வருவதற்குள் எதிர்முனையில் இருப்பவர் இவரைப் பேசவே விடாமல் ஏதோ பேசுவார். அந்த ஒலி திரையில் வராது. ஆனால் எதிர்முனையில் இருப்பவன் தன்னைப் பேச விடாமல் பேசுவதைத் தன் குரல் சமிக்ஞைகள் மூலமாகவே எதிரொலிப்பார், எதிரொளிப்பார்.  வடிவேலுவின் வெற்றிக்கு அவரது வட்டாரமொழி என்று இந்தக் கட்டுரையை ஆரம்பித்தாலும் வெறுமனே சமிக்ஞைகளைக் கொண்டு மனதில் நின்ற கலைஞனாகவே வடிவேலுவை நிலை நிறுத்த விரும்புகிறேன்.  பல ஐ.டி நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வடிவேலுவின் பிரபல மீம்களும், அவர் பேசிய உரையாடல்களும் பேசப்படுகின்றன. வடிவேலுவின் நகைச்சுவைகள் A B C  என்று சென்டர் பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமாய் இருந்தது என்பதுதான் உண்மை.  நகைச்சுவையோடு இசையையும் இணைத்து அதற்குத் தன் குரலையும் நடனத்தையும் ஒருசேர ஒப்புக் கொடுத்தவர் வடிவேலு. பல பாடல்கள் வடிவேலுவிற்கென்றே நடன அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டன. நடன அமைப்பாளரின் தொனியை வடிவேலுவிற்கு ஏற்றுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த நடனக் கலைஞர்களும் வடிவேலுவின் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும் பாடல் காட்சிகளும் உண்டு. பிரபுதேவாவுடன் இணைந்து ஆடிய ‘ஆல் டே ஜாலி டே’, விஜய்யுடன் இணைந்து ஆடிய ‘வாடி வாடி வாடி, கை படாத ஜோடி’ உள்ளிட்ட பல பாடல்களில் திறமையான நடனக் கலைஞர்களுக்கு சவால் விடும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருக்கும்.   வாடகைக்கு சைக்கிள் எடுக்கும் எளிய நகைச்சுவையில், ‘எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை” எனக் காந்தர்வக் குரலிசையை ஒலிக்கச் செய்திருந்தார். “இந்த ஊரே என் பாட்டைப் பாடும்” என்ற குரல் பாடகர் வடிவேலுவிற்கானது.  என்.எஸ்.கே., சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிகர் பாடகராக வலம் வருவதும் அந்தக் குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாடுவதும் வடிவேலுவின் குரல்தான். மிகவும் சாமானியர்களில் ஒருவனாக பல படங்களில் நடித்த வடிவேலு, 23ஆம் புலிகேசியாக நகைச்சுவையை மிக இயல்பாக வெளிப்படுத்தினாலும் ஒரு மன்னனுக்கு உண்டான அந்த கெத்துடன் வாழ்ந்து காட்டினார் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒவ்வொரு நடிகனும் ஒவ்வொரு காலகட்டத்தில் தேங்கி நின்றுவிடுவான்.  அதற்கு திரைக்காட்சியின்மீது ஏற்படும் அயற்சியும் தலைமுறையினர் மாறுவதால் ரசனையின் வீச்சு மாறுவதாலும்தான். ஆனாலும் அனைத்துத் தலைமுறையையும் கவரும் ரஜினி போல தன்னைத் தலைமுறைகள் கடந்து தக்க வைத்துக்கொண்டவர் வடிவேலு.  கலைத்துறையில் கலைஞனுக்கும் சரி, ரசிகனுக்கும் சரி சலிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. இருவரில் ஒருவருக்குச் சலிப்பு ஏற்பட்டாலும், அந்தக் கலைஞன் தன் சந்தையைத் தவறவிடுவான். வடிவேலுவின் வளர்ச்சியில் பல முட்டுக்கட்டைகள் வந்தாலும், அவருக்குக் விதிக்கப்பட்ட தடைக் காலத்தில் அவருடைய இருப்பை பல ரசிகர்கள் தவறவிட்டார்கள். சூரி யோகிபாபு போன்ற நகைச்சுவை நடிகர்கள் அந்த இடங்களைப் பூர்த்தி செய்தாலும் புது ரகங்களைக் கொண்டுவந்தாலும் வடிவேலுவின் வசனங்களும் சமிக்ஞைகளும் பார்வைகளும் மக்களின் வாழ்வியலில் ஒன்றாகிவிட்டன.  நேசமணி காண்ட்ராக்டருக்குத் தலையில் அடிபட்ட நகைச்சுவை வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, #PrayForNesamani ஹேஷ் டேக் உலக அளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களிலும் மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலும் பேசுபொருளாய் ஆனது.  கமலஹாசனின் விக்ரம் பட போஸ்டரில் வடிவேலுவை போட்டும், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் அவரைப் போட்டும் வலைதளங்கள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. பொன்னியின் செல்வன் போஸ்டர்கள் வெளியான சில மணி நேரங்களில் அனைத்து கதாபாத்திரங்களிலும் வடிவேலுவின் முகத்தைப் பொருத்தி அதிரச் செய்தார்கள் மீம் கிரியேட்டர்கள். ஒரு கலைஞன், தன் தொழிலுக்கு நேர்மையாக தியாக மனப்பான்மையுடன் உழைக்கும்பொழுது வெற்றி பெறுகிறான். மக்களை மகிழ்விக்கும் கலையை அவன் நேசிக்கும் விதமே, அவனை மக்கள் மத்தியில் நிறுத்துகிறது.  இவ்வளவு ஆண்டுகால தடைக்குப் பின்னும் வடிவேலுவின் நடிப்பும் பாணியும் மக்களிடம் புழங்குவதன் மையச்சரடு, வடிவேலு சாமான்யர்களின் கலைஞன் என்பதும் அவரது நகைச்சுவைகள் வாழ்வியல் எதார்த்தங்களைப் பிரதிபலிக்கின்றன என்பதும்தான்.  எவ்வளவு கடினமான மனநிலையிலிருந்தும் வெளிவர, ஒற்றை வீரபாகுவின் பார்வையோ, ஏட்டு ஏகாம்பரத்தின் ‘மல…’ என்ற சிரிப்போ, ‘வேணாம், வலிக்குது, அழுதுருவேன்’ என்ற கைப்புள்ளயின் குரலோ, ‘ஒய் பிளட், சேம் பிளட்’ என்ற வார்த்தையோ போதுமானது. பல குழப்பங்களுக்கு மத்தியில் ‘என்னடா நடக்குது இங்க…?’ என்ற விசித்திர குரலும், ‘தம்பி, டீ இன்னும் வரல’, ‘இது வாலிப வயசு’ போன்ற கெத்தும்தான் வாழ்வியல் முறைகளுக்குள் ஊடுருவிவிட்ட வெற்றியின் தடயம்.  யாராலும் தடைசெய்ய முடியாத வைகைப் புயல் மீண்டும் வருகிறது, பலரின் சுமைகளைத் தீர்க்க. தயாராகவே இருப்போம். இனி, “Sing in the rain….” கட்டுரையாளர்: பழனிக்குமார்,

பூமிகா

பூமிகா

திரை விமர்சனம் அறிவியல் ரீதியாகச் சொல்லும் கதைகளை விட, திரைக் கலைஞர்களுக்குச் சுலபமானதும், பெருவாரியான ரசிகர்களுக்குச் சுவையானதுமானவை, அமானுஷ்யம் கலந்து  சொல்லும் கதைகளே. நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாது, தகவல்களைக் கடத்தினால் மட்டும் போதும் என்கிற நிலையில், திரைமொழியில் இது ஒரு புதிய உத்தி.  இந்த உத்தியில் உதித்ததுதான், ரவீந்திரன் ரா. பிரசாத் எழுதி இயக்கி, நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள பூமிகா. ‘புவியை நாம் பாதுகாத்தால், அது நம்மைப் பாதுகாக்கும்’ என்கிற கருத்தைக் கொண்ட ஒற்றை வரிதான் மொத்த கதையும்.  ஒரு நள்ளிரவில் கர்ப்பிணி மனைவியுடன் பேசிக்கொண்டே காரைச் செலுத்தும் கேப் டிரைவர் கிருஷ்ணா (ஈஸ்வர் கார்த்திக்) விபத்தில் இறக்கிறான். மறுநாள் மலைப்பாங்கான பகுதியில், மரம் செடி கொடிகள்  அடர்ந்த வெளியை வெட்ட வெளியாக்கி, அமைச்சரின் ஒரு திட்டத்தை நிறைவேற்ற கௌதம் (விது), சம்யுக்தா (ஐஸ்வர்யா ராஜேஷ்), குழந்தை சித்து (அய்யன் அபிஷேக்), காயத்ரி (சூர்யா கணபதி), அதிதி (மாதுரி) காரில் அங்குள்ள கைவிடப்பட்ட ஒரு கட்டடத்திற்கு வந்து, தங்குகின்றனர். உதவிக்குக் காவலாளி தர்மன் (பாவெல் நவகீதன்). அந்த நிமிடத்தில் இருந்து துவங்குகின்றன, திடுக்கிட வைக்கும் அசாதாரண நிகழ்வுகள், தேடல்கள். அமானுஷ்யம் கலந்த திரில்லர் உத்தியில் வெளியான, இயக்குனரின் ‘இன்மை’ படத்தைப் போன்றே, இதிலும் மர்ம முடிச்சுகளைப் படிப்படியாக அவிழ்த்துக் கொண்டே, நிகழ்விலும் பிளாஷ்பேக்கிலுமாகக் கதையை இறுதிவரை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நகர்த்திச் செல்லும் விதம் பாராட்டத்தக்கது. இயக்குனரின் இந்த உத்தி அவரின் பாணியாகவே தொடராமல் இருந்தால், முத்திரைக்கு  இலக்காவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வழக்கம்போல் இயக்குனர் ரதீந்திரன் இதிலும், ஜேம்ஸ் லவ்லாக் எனும் பிரிட்டன் விஞ்ஞானியின் ‘கையா ஹிப்போதீசிஸ்’ எனும் சயின்டிஃபிக் தியரியை, புதிய விஷயமாக அறிமுகம் செய்து, ரசிகர்களின் சிந்தனைக்குத் தீனி இடுகிறார்.   அவந்திகா வந்தனாபு ஆட்டிஸ சிறுமியாக, படு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். உடல் மொழியே முழு மொழியாக, பூமிகா பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே தெரியாத அளவிற்கு இயல்பாக மிளிர்கிறார். கதை நடிகர்களைத் தேர்வு செய்துள்ளதால்,  ஐஸ்வர்யா ராஜேஷ், பாவெல் நவகீதன் தவிர மற்றவர்கள் அறிமுகக் கலைஞர்களாக இடம்பெற்றுள்ளது, எந்த விதத்திலும் கதை நகர்வுக்கு இடறலாக இல்லை. அடுத்து, பூமிகாவின் கதையை ஒட்டி, பூமியை அழகாகவும் அழுத்தமாகவும் உருவகிக்கும் காவல்காரர் தர்மன் கவனத்தைக் கவருகிறார்.  ஒரு சைக்காலஜிஸ்ட் என்கிற மனநிலையோடு, உறுதியுடன் பிரச்சனைகளை அணுகும் பாத்திரத் தன்மையை அழகுற வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ், பேசிய வார்த்தைகளில் அதிகமாக உச்சரித்தது, ‘என்னாச்சு? ஏன், என்னாச்சு? சூர்யா கணபதி, விது அந்தச் சூழலுக்கு இன்னும் கூடுதலான அளவு ரியாக்ட் செய்திருக்கலாம். அதிதியின் ரியாக்சன் சற்று அதீதம். பிரித்வி சந்திரசேகரனின் இசை, கதைக்குப் பக்கபலம் மட்டுமல்ல, பக்கா பலமும் கூட. இதற்குச் சற்றும் குறையாத உழைப்பை ஒளிப்பதிவாளர் ரோபோர்டோ ஜஜ்ஜாரா வழங்கியுள்ளார். பூமிகா வரையும் ஓவியங்களாகட்டும்,  அவள் உலவும் இயற்கை அழகு ததும்பும் இடங்களாகட்டும், ஒளியும் வண்ணமும்  தெறித்து விழுகின்றன. ஓவியங்கள் அத்தனையும் அருமை. கலை இயக்குநருக்கும் ஓவியர்களுக்கும்  பாராட்டுகள். ஆனந்த் ஜெரால்ட்டின் படத்தொகுப்பு சற்று சவாலானதுதான். படத்தின் முன் பகுதியில் சற்று வேகத்தைக் கூட்டி இருக்கலாம் அல்லது நீளத்தைக் குறைத்திருக்கலாம். “பூமிகா யாரு? அது பூமிங்க. இந்த பூமி கிதே பூமி, அது ஒவ்வொரு நிமிஷமும் நம்ம கிட்ட பேசுது. அது தெளிவா சொல்லுதுங்க, என்ன தெரியுங்களா? ‘என்ன காப்பாத்திக்க எனக்குத் தெரியும், முடிஞ்சா எங்கிட்ட இருந்து உங்கள காப்பாத்திக்குங்க’. அவ கொஞ்சம் சிலிர்த்தாலும் ஒருத்தரும் தாங்க மாட்டீங்க ” என்று சொல்லும், தெள்ளத்தெளிவாக அந்தப் பகுதியின் வரலாறு தெரிந்த தர்மனிடம், இவர்கள் எதையும் விசாரிக்காதது, சற்று வியப்பைத் தருகிறது . அமானுஷ்யம் என்று வந்து விட்டாலே, ‘லாஜிக்’ பார்க்க முடியாதுதான். என்றாலும் அதற்குள்ளாகவே, அதற்கென்று இருக்கக்கூடிய லாஜிக்கும் கூட ஆங்காங்கே சறுக்குகிறது.  மீண்டும் இடைஞ்சல் தருவதாகக்  கருதி, அவர்களை அங்கிருந்து விரட்ட முனையும் பூமிகா, அவர்கள் காரில் கிளம்பிச் செல்ல முடிவெடுத்தபின் நிறுத்துவானேன்? அப்படி காரை நிறுத்த முடிந்த பூமிகாவால், ஐஸ்வர்யா ராஜேஷ் செல்லும்போது, அவ்விதம் நிறுத்த முடியாமல் பின்தொடர்ந்து ஓடுவானேன் . அப்பள்ளத்தாக்கில் கட்டுமானப்  பணியில் இருந்தவர்களைத் தவிர்த்து, மாணவர்களையோ ஆசிரியர்களையோ பூமிகா பாதிக்காத நிலையில், மவுண்ட் ரோஸ்யார்ட்  பள்ளியை மூட வேண்டிய அவசியமோ, அப்பகுதி மக்கள் இடம்பெயர வேண்டிய அவசியமும்தான் ஏனோ? ‘பாராநார்மல்’ செயல்பாடுகளுக்கு,  மிதமானது முதல் மிக அதிகமானது வரையிலான நிலநடுக்கம், நிலச்சரிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இருந்தால், அவரவர்கள் பார்வையில் அவை அமானுஷ்ய நம்பிக்கையாகவும், அறிவியல் பூர்வ உண்மையாகவும், ஏற்புடையதாக அமைந்திருக்கக் கூடும். ஒரு உத்தியாகக்  கொண்டுள்ள அமானுஷ்யத்தில், இந்த லாஜிக் தேடல்களை எல்லாம் சினிமா லிபர்டியாகக் கொண்டு விட்டுவிட்டு, புவி சமநிலையை வலியுறுத்தும் அக்கறையுடன், “என்னிக்குப்  பாலை மட்டுமே குடிக்க வேண்டிய குழந்தை, பெத்தவ மார்பைத் தின்ன ஆரம்பிக்குதோ, அன்னிக்குத் தாய்,  பேயா மாறிடுவா” என்கிற கலை வடிவான, அழுத்தமான, திரை வடிவச் செய்திக்காகவே ரதீந்திரனின் பூமிகாவை வரவேற்கலாம். விமர்சனம்: மது ராஜேந்திரன் மதிப்பெண் : 7/10

குருதி

குருதி

திரை விமர்சனம் இன்றுள்ள நிலையில், மதச் சார்பாக அன்றி, அதனைப் புறந்தள்ளி, மனிதத்தைத் தூக்கிப் பிடித்து, வலியுறுத்துவதற்குத்தான் துணிச்சல் வேண்டும். கத்தி மேல் நடக்கும் லாவகமாக அந்தத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் அனிஷ் பல்யல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, மனு வாரியார் திறம்பட இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான் ‘குருதி’ (சடங்கு படுகொலை). மலையும் காடும் சூழ்ந்துள்ள பகுதியில் ஏற்பட்ட ஒரு மோசமான  நிலச்சரிவில், பலர் உயிரிழந்து, எஞ்சியவர்கள் இடம்பெயர்ந்து செல்ல, இரண்டு குடும்பம் மட்டுமே அப்பகுதியில் வசிக்கின்றன. வயதான காதர் மூசா (மம்முகோயா), நிலச்சரிவில் தனது மனைவியையும் மகளையும் இழந்த அவரது மூத்த மகன் இப்ரஹிம் (ரோஷன் மேத்யூ), இளையவன் ரசூல் (நேஸ்லன்) உள்ளடக்கிய குடும்பத்திற்கு அருகிலுள்ள வீட்டில், பேரமன்(மணிகண்டராஜன்), அவனது சகோதரி சுமதி (ஸ்ரீரிந்தா).  இப்ரஹிமின் சமையல் பிடிக்காத மூஸாவுக்கு, பெரும்பாலும் சுமதியின் சாப்பாடுதான். வேலைக்குச் செல்லாமல் சதாசர்வகாலமும் கேரம் ஆடுவதும், கரீமுடன் (ஷைன் டாம் சாக்கோ) சுற்றுவதுமான ரசூலுக்கும், ஒரு வேலைக்குச் செல் என்று வற்புறுத்தும்  மூஸாவுக்கும் இடையே, அவ்வபோது சிறுசிறு தகராறுகள் முற்றும்போது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பவளும் சுமதிதான். தனியாளாகச் சிரமப்படும் இப்ராஹிமை,  மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தும் உரிமையும் அந்த வீட்டில் சுமதிக்குத்தான் இருக்கிறது. சகோதரிக்கும் தமக்கும் இடையேயான பஞ்சாயத்திற்குப் பேரமன் துணைக்கு அழைப்பது இப்ராஹீமைத்தான். இரு குடும்பத்திற்குள்ளும் அப்படி ஒரு அன்னியோன்யம். இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில், அன்றிரவு இப்ரஹிம் வீட்டின் கதவு தட்டப்பட்டுத் திறக்க, அதிரடியாக உள்ளே நுழைந்தவர்கள் ஒரு காவல் உதவி ஆய்வாளரும்,  கைவிலங்கிடப்பட்ட கைதியும். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஷ்ணு (சாகர் சூர்யா)வை, எஸ்.ஐ. சத்யன் (முரளி கோபி) காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் சிலரால் தாக்கப்பட, தப்பித்து ஓர் இரவு தங்க அந்த வீட்டிற்கு வருகிறார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அதே வீட்டில் அடுத்தடுத்துப் பலவந்தமாக நுழைபவர்கள் ரசூலின் நண்பன் கரீம், இளைஞன் லாயிக் (பிரித்திவிராஜ் சுகுமாரன்),  அவர்கள் இருவருக்கும் அறிமுகமான இன்னொருவர். தான் தேடிவந்த தனது தந்தையைக் கொன்ற விஷ்ணுவைத் தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தும் லாயிக்கிற்கும்,  காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே நடைபெறும் வாதம் கைகலப்பாகி, சத்யன் கத்தியால் கடுமையாகத் தாக்கப்படுகிறார். உயிருக்குப் போராடும் எஸ்.ஐ., இப்ரஹிமிடம், ‘விஷ்ணுவை போலீசைத் தவிர யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன்’ என்று,  குர்ஆன் மீது சத்தியம் பெற்று விடுகிறார். மூசா, இப்ரஹிம், ரசூல் கொண்ட குடும்பத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நம்பி, இப்ரஹிம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியால் அது இல்லாமல் போக, வெறிபிடித்தவன் ஆகிறான் லாயிக். அதன் உக்கிரம் எவ்வாறு இருக்கும் என்பதும் அது எவ்விதமாக முடிந்தது என்பதும்தான், குருதி திரைப்படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை. “ஆண்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு பெண்ணுக்கு என்ன வேலை?” என்று கேள்வி எழுப்பும் சுமதியை ஒரு பெண்ணாக சகியாத லாயிக், “உன் நம்பிக்கையைக் கைவிடப் போறியா?” என்று இப்ரஹீமைப் பார்த்துக் கேட்கும் லாயிக்கிடம், “ஒரு மனித உயிரைப் பலிகொடுத்து, அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமா?” என்கிறார் மூசா. “நான் செய்யறது சரி இல்லன்னா, கடவுள் என் விதியைத் தீர்மானிக்கட்டும்” என்று கூறும் இப்ராஹிம், “அதே கடவுளின் மகிமையைக் காப்பாத்தத்தான்  நான் இங்கே இருக்கேன். என்னைத் தடுத்தால்  வெட்டிக் கொல்வேன், உங்க எல்லோரையும்” என்று கர்ஜிக்கும் லாயிக், இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமை, சட்டம் நீதி, முகலாயர் ஆட்சி காலச்  செயல்பாடுகள், வரலாறு போன்றவற்றில் அடிப்படைப் புரிதல் இல்லாமல் விஷ்ணு செய்யும் அறிவுப் பூர்வமற்ற விவாதங்கள், அதற்குச் சற்றும் குறைவில்லாதவாறு, மத நூல்களை மேற்கோள் காட்டியும், பிற மதத்தினர் மீது வெறுப்பைக் கூட்டியும், இப்ரஹிமிடமும் இறுதியில் ரசூலிடமும் மூளைச்சலவை செய்யும் விதமாக அமையும் லாயிக்கின் குரூரமான வார்த்தை வித்தகம், “ஏழைகளான எங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது? இறந்து போன அந்த ராஜாக்களால்  எங்களுக்கு என்ன பிரயோஜனம்? ஒரு பஞ்சத்துக்கும் அடுத்த வெள்ளத்துக்கும் இடையே உயிரை விட்டுடாம வாழ முயற்சி செஞ்சுட்டு இருக்கோம்”  “எப்ப மனுஷன் ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சானோ, அன்னிலிருந்து இன்னிவரைக்கும் நிறுத்தாத ஒரு விஷயம், சண்டை போடுவதும், கொல்வதும்தான். காரணம் வெறுப்பு. மனுஷனுக்கு வெறுக்க, எப்போதும் ஒன்னு தேவைப்படுது. அதுக்கு நமக்குள்ள தேவைப்பட்றது, ஒன்னு,  ‘அவங்க’ (them) இன்னொன்னு ‘நாம’ (us). அந்த நெருப்பைப் பத்த வைக்கப் பகை ஒன்னு போதும், அது கொழுந்து விட்டு எரியற வரைக்கும் வெறுப்பும் சாகாம இருக்கும். இறுதியில நாம ஜெயிச்சுட்டோம்னு நம்மள நாமே முட்டாள்தனமா ஏமாத்திகிட்டு அதே நெருப்பில விழுந்து எரிஞ்சும் போவோம் ”   “ஒருத்தன் தன் குழந்தைகளுக்குப்  படிக்கக் கத்துக் கொடுக்கலேன்னாலும், யாரை வெறுக்கணும்னு கத்துக் கொடுக்கறான். வர்ற தலமுறையும் இந்த ஏரியற வெறுப்பு நெருப்புல எரிஞ்சுதான் போகும். மனுஷன் செத்தாலும் அவனுக்குள்ள இருக்கற வெறுப்பு மட்டும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்” இடையிடையே பதட்டம் இல்லாமல் காத்திரமாகப் பேசுகிற மூசா, இவ்விதம், கிடைத்த வாய்ப்பில் எல்லாம், அவரவர் மத நிலையிலான மனநிலைக்கேற்பக் கடவுளின் பெயரால், ‘புனித’ நூல்களின் பெயரால் மதத்தையும் அதையொட்டி அவர்களின் ‘நியாய’த்தையும் அவற்றைத் தாண்டிய மனிதத்தையும் கூடத் தூக்கிப் பிடிப்பதில், புரிந்து தெளிய வேண்டியவை ஏராளம்.  அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான சம்பவங்களின் இடையிடையே, இவ்விதம் வலிமையான வசனங்களால் நெய்யப்பட்ட அக்காட்சிகள் யாவும், சலிப்பைத் தரவில்லை. மாறாக, சமகால அரசியலை, அடிப்படைவாதத்தை பேசாமல் பேசி,  சிந்திக்கவும் எச்சரிக்கை கொள்ளவும் இடமளிக்கின்றன. ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் கூட, மூசா குறிப்பிடும் ஆதி பாவமான காபில் காலத்துப் பகையும் கொலையும், அந்த இனம் சார்ந்ததே தவிர, பிறர் மீதான தொடுப்புக்கான  நியாயமோ, ஏன், அவர்களுக்குள்ளேயே கூட அதையே சொல்லி அன்றிலிருந்து இன்றுவரை தொடர்வதற்கான அவசியமோ என்ன இருக்கிறது? விஷ்ணுவின் சிந்தனை முழுவதும் வன்மம் நிறைந்து இருப்பதற்கும் லாயிக் ரசூலிடம் கத்தியைத் தருவதன் மூலம் பகை வெறியைக் கடத்துவதற்கும் பகுத்தறியும் குறைபாடே தவிர, வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்? பிரித்திவிராஜ் சுகுமாரன், ரோஷன் மேத்யூ இருவரும் நடிப்பில், சளைக்காமல்  போட்டி போட்டுக்கொண்டு ஜமாய்த்திருக்கிறார்கள். மம்முகோயாவின் பக்குவப்பட்ட பங்களிப்பும் ஸ்ரீரிந்தாவின் உணர்வுபூர்வமான நடிப்பும் மனதில் நிற்கின்றன. முரளி கோபி, நெஸ்லன், சாகர் சூர்யா, மணிகண்டராஜன், ஷைன் டாம் சாக்கோ தத்தம் பங்களிப்பை நிறைவாகவே செய்துள்ளனர். காடு மலை பகுதியிலும் சிறிய வீட்டிலும், இரவிலும் குறைந்த ஒளியிலும், உள்ளேயும் வெளியேயும், பனிபடர்ந்த சூழலிலும் ட்ரோன் ஷாட்ஸ் உட்பட, அற்புதமாக காட்சிகளை, பாத்திரங்களின் முகபாவங்களை நுட்பமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அபிநந்தன் ராமானுஜம். அதற்கு இணையாக வெளுத்து வாங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்.  அகிலேஷ் மோகனின் படத்தொகுப்பில் பழுதில்லை என்றாலும், இரண்டு மணி நேரத்திற்கு ஓடும் திரைப்படத்தின் முற்பகுதியில் இருந்த விறுவிறுப்பின் வேகம், பிற்பகுதியில் குறைந்து இருப்பதைத் தவிர்க்க, நீளத்தைச் சற்றுக் குறைத்திருக்கலாம். பாம்பு கடித்து உடலில் நீலம் பரவிவிட்ட நிலையில், அதைப் பற்றிப் பொருட்டே இல்லாமல் அத்துணை  மணி நேரம் பேரமனும் மற்றவர்களும் வாளா இருப்பதும், ஒரு கையையும் காலையும் லாயிக் உடைத்த பின்பும், அந்த உணர்வோ வலியோ இல்லாமல் சற்றும் பிரதிபலிக்காமல், தாங்கியபடி நடப்பதைத் தவிர மிக இயல்பாக இருப்பதுமான காட்சிகள், ஜீரணிக்க முடியாத சினிமா லிபர்ட்டி போலும். படத்தைப் பார்த்து முடித்ததும் மனதில்  பளிச்சென்று மின்னல் வெட்டாக மின்னுவது பெரியாரின் ‘மதம் உள்ளே போனால், மதி வெளியே போகும்’ என்கிற அழுத்தமான வார்த்தைகளே. வாழ்க்கையில் மனிதத்தை முதன்மையாகக் கொள்ளும்  எவர் மனதிலும் இப்படி மின்னுவதும்  இயல்புதான். மதிப்பெண்: 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

மிமி (Mimi)

மிமி (Mimi)

திரை விமர்சனம் மராத்தி மொழியில் வந்த ‘மாலா ஆயி வஹச்சே’ திரைப்படத்தின் மறுஆக்கம்தான், ரோஹன் சங்கருடன் இணைந்து எழுதி, லக்ஷ்மன் உடேக்கர் இயக்கி, க்ருத்தி சனன்,  பங்கஜ் திரிபாதியுடன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து,  நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஹிந்தித் திரைப்படம் ‘மிமி’. ராஜஸ்தான் மாநிலத்தின் சிறுநகரில், பானுபிரதாப் பாண்டே (பங்கஜ் திரிபாதி) ஓட்டும் வாடகைக் காரில் பயணிக்கும், ஜான் (ஹைடன் வைட்டக்) சம்மர் (ஏவலின் எட்வர்ட்) அமெரிக்கத் தம்பதிகளின் பேச்சினூடே அவர்களின் தேவையைத் தெரிந்து கொண்ட பின்பு, நாட்டியக்காரி மிமி ரத்தோரை (க்ருத்தி சனன்) சந்தித்து, பல முயற்சிகளில் பேசி அவளை, அதற்கு இணங்க வைக்கிறான். மும்பை சென்று நடிகையாகும் லட்சியக் கனவில் இருக்கும் மிமியும், அதற்கு ஒப்புக் கொள்கிறாள். குழந்தையில்லாத அமெரிக்கத் தம்பதிக்கு அவள் ‘வாடகைத் தாயாக’ இருந்து, குழந்தை பெற்றுத் தர வேண்டும். குழந்தைப் பேறுக்குப் பிறகு, அவளுக்கு அவர்கள் இருபது லட்ச ரூபாய் தருவதாக ஒப்பந்தம். பானுவுக்கும் கணிசமாகப் பணம் கிடைக்கும். மிமியின் சினேகிதி ஷாமா (சாய் தமான்கர்) ஆதரவுடன் மருத்துவப் பரிசோதனையும், தொடர்ந்து சிகிச்சையும் ஆரம்பிக்கிறது. டாக்டர் ஆஷா தேசாய் (ஜெயா பட்டாச்சாரியா) மிமி கருவுற்றதை உறுதி செய்ய, அனைவருக்கும் மகிழ்ச்சி. தவணைகளில் அவளுக்குப் பணத்தைத் தருவதாக ஒப்புக்கொண்ட தம்பதியர், முதல் தவணையை அவளுக்கும், உடனிருந்து பார்த்துக் கொள்ள பாண்டேவுக்குக் கொஞ்சம் பணமும் தருகின்றனர். இந்த விவகாரம், மிமியின் அப்பா மான்சிங் ரத்தோர் (மனோஜ் பாவா) அம்மா ஷோபா ரத்தோர் (சுப்ரியா பதக்) இருவருக்கும் தெரியாது. படத்தில் நடிக்க மும்பை செல்வதாகக் கூறிவிட்டு, ஷாமாவின் வீட்டிற்குச் சென்று தங்குகிறாள் மிமி. கரு வளர ஆரம்பிக்கிறது. ஓட்டலில் தங்கியிருந்த தம்பதியர் அவ்வப்போது வந்து,  அவளை சிகிச்சை எடுக்கும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று காட்டுகின்றனர். அப்படி ஒரு முறை சென்றபோது, அவளைப் பரிசோதித்த டாக்டர் ஆஷா சொன்னதைக் கேட்டு, அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர். கலங்கி நின்ற மிமி, அடுத்து அமெரிக்கத் தம்பதியர் சொன்னதைக் கேட்டுத் துடிதுடித்துப் போகிறாள். பாண்டேவும், ஷாமாவும் திக்பிரமையாகி நிற்கின்றனர்.  இதன் பின்னர், மிமி குழந்தை பெற்றாளா, அவளது நடிகையாகும் கனவு நிறைவேறியதா, மிமியின் பெற்றோர்கள் அதை அறிந்தார்களா, பானுபிரதாப்  பாண்டேவின் நிலை, ஷாமாவின் ஆதரவு தொடர்ந்ததா என்கிற கேள்விகளுக்கெல்லாம், விறுவிறுப்பும் சுவாரசியமான விடைகள்தான் ‘மிமி’ படத்தின் பிற்பகுதி. ஆட்டமும் பாட்டமுமாக மும்பை திரைப்பட நடிகையாகும் இலட்சியக் கனவுடன் மிமி, கருவுற்று தாய்க்குரிய  அனுபவத்தைப் பெறும் மினி, டாக்டர் ஆஷாவும் தொடர்ந்து அமெரிக்கத் தம்பதியரும் சொன்னதைக் கேட்டுத் துடித்துத் துவளும் மிமி, பின்னர் எதிர்பாராத திருப்பத்தால், பேரலையில் இருந்து தப்பிப் பிழைத்துக் கரைசேரும் நிம்மதியும், நெகிழ்ச்சியுமான மிமி, நான்காண்டுகளுக்குப் பிறகு தன்னைச் சந்திக்கும் அமெரிக்கத் தம்பதியரிடம் வெடித்துச் சீறும் மிமி என்று, நடிப்பில் பன்முகத் தன்மையுடன் மிளிர்கிறார், க்ருத்தி சனன். ‘இருதலைக் கொள்ளி’ பானுபிரதாப் பாண்டேவாக, பங்கஜ் திரிபாதி அட்டகாசமாக நடித்து அசத்தியுள்ளார். தோழி சாய் தமன்கர், பெற்றோர் மனோஜ் பாவா, சுப்ரியா பதக், அமெரிக்கத் தம்பதியர் ஹைடன் வைட்டக், ஏவலின் எட்வர்ட், தத்தம் பங்கை நிறைவாகச் செய்துள்ளனர். படத்தின் முதல் காட்சியாக விரியும் ஷ்ரேயா கோஷல் பாடிய ‘பரம் பரம்  பரமசுந்தரி’ தாளமிட்டு ஆட உந்தித் தள்ளுகிறது, ஏ ஆர் ரகுமானின் அட்டகாசமான இசை, கண்கவர்  ஒளிப்பதிவு ஆகாஷ் அகர்வால். மணிஷ் பிரதான் படத்தொகுப்பு. படத்தின் பின்பகுதியில் சற்று அயர்ச்சியைத் தரும் தொய்வைச் சரி செய்திருக்கலாம். முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனையில், இவ்விதமான தவறு ஏற்பட வாய்ப்பு இருக்குமா என்பதும், வாடகைத் தாய் ஒப்பந்தத்தில் எதிர்பாராதவை நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ளும் விதம் குறித்துக் குறிப்பிடப்படாமல் போவதும், திரைப்படமாக இருந்தாலும்கூட ஏற்கும்படியாக இல்லை. என்றாலும், உணர்வுபூர்வமான இக்குடும்பச் சித்திரத்தில் க்ருத்தி சனன், பங்கஜ் திரிபாதியின் நேர்த்தியான பங்களிப்பிற்காக ‘மிமி’யை அவசியம் பார்க்கலாம். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

மாலிக் – விமர்சனம்

மாலிக் – விமர்சனம்

திரை விமர்சனம் சமூகத்தில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று சட்ட நீதி, மற்றொன்று நியாய தர்மம். ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் அவற்றின் செயல்களுக்கான நியாயத்தைக் கற்பித்துக் கொள்கின்றன. இரண்டு பக்கங்களிலும் தவறுகள் இருக்கின்றன. அதில் மன்னிக்க முடியாத தவறு, பாதுகாக்க வேண்டிய அரசே மக்களைப் பகடைக் காய்களாக ஆக்கி, தாம் ஏற்படுத்திய சட்ட நடைமுறைகளைக்கூட அலட்சியம் செய்து, முன்னெடுக்கும் அரச பயங்கரவாதம்தான். இதனை உள்வாங்கிக் கொண்டு பார்த்தால், மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி, பகத் பாசில் (அகமது அலி சுலைமான்) நிமிஷா சஜயன் (ரோசலின்), வினய் போர்ட் (டேவிட் கிறிஸ்துதாஸ்), திலீஷ் போத்தன் (அபுபக்கர்), ஜோஜூ ஜார்ஜ் (அன்வர் அலி), ஜலஜா (ஜமீலா), இந்திரன்ஸ் (ஜார்ஜ் சக்காரியா), சனால் அமன் (ப்ரெட்டி) பிரதான பாத்திரங்களில் சிறப்புற நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘மாலிக்’ திரைப்படத்தின் நியாய அநியாயங்கள் தெளிவாகும். ரமதப்பள்ளி இஸ்லாமியர்களும் எடவத்துரா கிறிஸ்தவர்களும் மத பேதமின்றி வாழும் கேரள கடற்கரைக் கிராமம். மத நல்லிணக்கத்தின் உச்சம்தான் சுலைமான் ரோசலின் காதலும் எதிர்ப்பு இல்லாத திருமணமும். அந்தக் கடலோரக் கிராமத்தின்மீது, துறைமுகம் இணைப்புச் சாலை அமைக்கவிருக்கும் அரசுக்கும் அதில் ஆதாயம் தேட முனையும் அரசியல்வாதிக்கும் ஒரு கண். மண்ணின் மைந்தராகச் சுலைமான், அத்திட்டத்திற்கு எதிராக இருக்க, அவனைத் தங்களின் பாதுகாவலனாகக் கருதும் அந்த கிராமத்தின் ரமதப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் எடவத்துரா பகுதியைச் சேர்ந்த கிறித்தவர்களும் அவனுடன் அணியமாகி நிற்கின்றனர். இதற்கிடையில், ஒரு கொலை வழக்கில் சுலைமான் சிக்குகிறான். அந்தப் பகுதியின் உதவி ஆட்சியர் அன்வர் அலி, அவனைக் காவல்துறையில் சரண்டர் ஆகும்படி வற்புறுத்த, அவன் மறுக்கிறான். பல விதங்களில் காவல்துறையும் அவனை நெருக்குகிறது. இறுதியில் சுலைமான் கைது செய்யப்பட்டனா இல்லையா என்பதுதான் பற்பல சம்பவங்களை உள்ளடக்கிய ‘மாலிக்’ திரைப்படத்தின் கதை. 2009 ஆம் ஆண்டில் கேரளாவில் நடந்த பீமப்பள்ளி காவல்துறைத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், பகத் பாசில் பல்வேறு பரிமாணங்களில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரதான பாத்திரங்களைத் தாண்டி, துணைப் பாத்திரங்களை ஏற்ற அத்தனை கலைஞர்களும் அளவான அழகான பங்களிப்பை வழங்கவே செய்துள்ளனர். மலையாளப்படக் கலைஞர்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு நேர்மையான பங்களிப்பைத் தரவேண்டும் என்பதைத் தவிர்த்து எந்தவிதமான தன்முனைப்போ, ரசிகர்களின் முன்னிலையில் தங்களது பிம்பம் பாதிக்கப்படும் என்கிற உணர்வோ இன்றி, செயல்படும் பாங்கு வெகுவாகப் பாராட்டுக்குரியது. பகத் பாசில், சுலைமான் பாத்திரமேற்று இருப்பதும், நிமிஷா சஜயன் வயதான தோற்றத்தில் நடித்திருப்பதும், இதன் அடிப்படையில்தான். இசையும் (சுஷின் ஷான்) ஒளிப்பதிவும் (ஷானு வர்கீஸ்) படத்திற்கு உறுதுணை. படத்தொகுப்பை இயக்குனரே கவனித்துள்ளார். கதை முழுவதும் பிளாஷ்பேக்கில் சில பாத்திரங்கள் வாயிலாக சொல்லப்படுவதால், அதைப் பின்தொடர்வது சற்றுச் சிரமமாகவும் இருக்கிறது. உன்னிப்பாக கவனிக்கவில்லை என்றால், போதிய அவகாசம் இன்றி, காட்சிகளும் மனதில் பதியும் முன்பே சடுதியில் கடந்து போய் விடுகின்றன. குறிப்பாக, எதிர்பாராத கிளைமாக்ஸ். ரோசலினை மணக்க விரும்பும் சுலைமான், ‘நீ உன் நம்பிக்கையிலேயே இருக்கலாம்’ என்று கூறிவிட்டு, வரும் வாரிசு ஆணாக இருந்தால் அமீர் என்று பெயர் வைத்து, ஒரு இஸ்லாமியனாக வளர்க்க வேண்டும் என்று கூறுவதும், தனது தங்கையையே மறுப்பேதும் இல்லாமல் சுலைமானுக்கு மணமுடிக்க சம்மதித்த டேவிட், பேப்டிஸம் நிகழ்வில் குறுக்கிட்டு ஆட்சேபித்து, அந்தக் குழந்தையுடன் மனைவியையும் அழைத்துச் சென்றுவிடுவதை அடுத்து, அவன் மீது வன்மம் பாராட்டுவதும் உள்ளார்ந்த மத உணர்விலிருந்து அவர்கள் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. குழந்தை பற்றிச் சுலைமானிடம் ஏற்கனவே சொல்லி இருந்தும், அவள் அதை டேவிட்டிடம் சொல்லாமல் போனது ஏனோ? ஒன்றரை மணி நேர அளவிலேயே நேர்த்தியான படங்கள் வந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஏறக்குறைய இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் மாலிக், நீளம் காரணமாக சோர்வு தருவதைத் தவிர்த்திருந்தால் இன்னும் ரசித்திருந்திருக்க முடியும். மதிப்பெண்: 7.5/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்