சங்கநாதம் ஓய்ந்தது

சங்கநாதம் ஓய்ந்தது

தோழர் சங்கரய்யா அவர்களின் 99ஆவது பிறந்தநாளையொட்டி, தோழர் 99 என்ற தலைப்பில் சுவடு மின்னிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை, இன்று அவரின் மறைவையொட்டி மீள்பதிவு செய்கிறோம். தோழர் சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம். தோழர் 99 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தோழர்.சங்கரய்யாவின் மூதாதையர்கள். இவரது முன்னோர்கள் பரம்பரையாக கிராம அதிகாரிகளாக இருந்தவர்கள். இவரது தந்தை நரசிம்மலு கிராம அதிகாரியாக வேலை செய்ய விருப்பமில்லாமல் பொறியாளர் பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் ஜப்பான் கம்பெனியில் மெக்கானிக்கல் இஞ்சினியராக வேலை பார்த்த போது 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தார் தோழர் சங்கரய்யா. பிரதாப சந்திரன் என்று மகனுக்குப் பெயர் சூட்டினார் நரசிம்மலு. ஆனால் நரசிம்மலுவின் அப்பா எல்.சங்கரய்யா தனது பெயரைப் பேரனுக்கு வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் பிரதாப சந்திரன் என்ற பெயர் சங்கரய்யாவாக மாறியது. தோழர் சங்கரய்யாவோடு சேர்த்து உடன் பிறந்தவர்கள் 9 பேர். அண்ணன் இராஜமாணிக்கம். தம்பிகள் இராமசாமி, இராமகிருஷ்ணன், இராசேந்திரன். தங்கைகள்  லட்சுமி காந்தம்மாள், ஞானாம்பாள், மீனாட்சி, அங்கம்மாள். தூத்துக்குடி மேலூர் சி.வ. பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார் சங்கரய்யா. அவரது தந்தை நரசிம்மலு பம்பாய் சென்று பாய்லர் பொறியியல் படித்து, மதுரை நகரசபையில் நீரேற்று நிலைய சூப்பிரெண்டாக பணி ஏற்றதால் அவரது குடும்பமும் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளியில் 9 ம் வகுப்பும், மதுரை யூனியன் கிறிஸ்தவப் பள்ளியில் 10,11 வகுப்புகளும் படித்து 1937ல் தேர்ச்சி பெற்றார்.  மதுரை அமெரிக்கன் கல்லுரியில் வரலாறு பாடத்தை விருப்பமாகத் தேர்வு செய்து 1939 ல் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். அதே கல்லூரியில் பி.ஏ. கடைசி ஆண்டு வரை படித்தார். சுயமரியாதை இயக்கத்தின் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டினார். 1939இல் மதுரையில் தாழ்த்தப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டம் அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கன் கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக செயல்பட்டு, 1940 ல் தோழர். ஏ.கே.கோபாலனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். மதுரை மாணவர் சங்க செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா 1941 மார்ச் மாதம் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதானார். அதனால் அவரது படிப்பே நின்றுபோனது. மகனை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையும் நிராசையானது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சங்கரய்யா. சிறையில்தான் காமராசர், கே.பாலதண்டாயுதம், பட்டாபி சீதாராமையா, அப்துல் ரஹ்மான் சாகிப் ஆகியோரோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. சிறைக் கொடுமைகளுக்கு எதிராக 19 நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததால், 1941 ஜூலையில் இராஜமகேந்திரபுரம் சிறைக்கு மாற்றப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். காமராஜர் பிரதம செயலாளருக்கு விண்ணப்பக் கடிதம் எழுதியதன் பேரில் மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 1942 ஜூன் வரை சிறையிலிருந்து பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் சேலத்தில் நடைபெற்ற சென்னை மாகாண மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு, மாகாணத்தின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மாணவர்களை ஒன்று திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டதோடு, திருநெல்வேலியில் நடைபெற்ற மாணவர்கள் ஊர்வலத்திற்கும் தலைமை ஏற்று போலீஸ் தடியடியில் காயமடைந்தார். மாணவர் இயக்க வேலைகளைத் திட்டமிட விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம் கிராமத்தில் மாகாண மாணவர் பயிற்சி முகாம் நடத்தியபோது, 1942 அக்டோபரில் போலீஸ் முகாமைச் சுற்றி வளைத்தது. மாணவர்களை போராடத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் நடந்ததால், கேரளத்தின் கண்ணனூர் சிறைக்கு வெள்ளை அரசு அவரைக் கொண்டு சென்று அடைத்தது. கண்ணனூர் சிறையில் அவர் இருந்த போதுதான் கையூர் தோழர்கள் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அதைத் தொடர்ந்து சிறையில் தோழர்களுடன் உண்ணாவிரதம் இருந்ததால், அங்கிருந்து தஞ்சாவூர் சிறைக்கு மாற்றப்பட்டார். தஞ்சாவூர் சிறையில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஆர்.வெங்கட்ராமன், மதுரை வைத்தியநாதய்யர் ஆகியோரும் உடன் இருந்தனர். 1944 மே மாதம் விடுதலை செய்யப்பட்ட சில காலத்தில் அவரது தந்தை நரசிம்மலு உயிரிழந்தார். அதனால் குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்கும் நிலைக்கு ஆளானார் சங்கரய்யா. அப்போது அவருக்கு வயது 22. சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளி வந்தவுடன் மாணவர் அமைப்பின் பொறுப்பிலிருந்து விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார். நேதாஜியின் ஐ.என்.ஏ இராணுவத்தினரைக் கைது செய்யும் வெள்ளை அரசைக் கண்டித்தும், ஜவஹர்லால் நேரு காஷ்மீருக்குள் நுழையத் தடை விதித்ததைக் கண்டித்தும் அப்போது பெரும் போராட்டங்கள் நடந்தன. 1946 பம்பாய் கப்பல் மாலுமிகள் நடத்திய புரட்சிக்கு ஆதரவாக மதுரையில் பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் தோழர் சங்கரய்யா. அதே ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் பி.ஜி.ஜோசி பங்கேற்ற பெரும் பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தினார். சதி செய்து அரசை வீழ்த்த முயற்சி செய்ததாக 1946 ல் மதுரை சதி வழக்கைப் போட்டது வெள்ளை அரசு. பி.இராமமூர்த்தி, சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறப்பு நீதிபதி ஹசீன் என்பவரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என அறிவிக்கப்பட்டு 1947 ஆகஸ்ட் 14 ம் தேதி மாலை 6 மணிக்கு அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாசலில் பிரமாண்ட வரவேற்பு நடந்தது. மறுநாள் இந்தியா விடுதலை பெற்றது. கம்யூனிஸ்ட் தோழர் பொன்னுச்சாமியின் மகள் நவமணியை 1947 செப்டம்பர் 18-ள் திருமணம் செய்தார். நவமணியின் சகோதரரும் சகோதரியும் கம்யூனிஸ்ட் இயக்க நாடகத்தில் நடித்தவர்கள். நவமணி கிறிஸ்தவர் என்பதால், குடும்பத்தில் சிலர் எதிர்த்தாலும் சங்கரய்யா திருமணத்தில் உறுதியாக நின்றார். 1948 மார்ச்சில் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதால், அந்த மாநாட்டில் பங்கேற்ற சங்கரய்யா தலைமறைவாகத் தமிழகம் திரும்பினார். 1948 முதல் 1951 வரை தலைமறைவாகவே சங்கரய்யா செயல்பட்டார். சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். தோல் நோய்கள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம்கூட போக முடியாத நிலையையும் சந்தித்திருக்கிறார்.  கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை விலக்கப்பட்ட பிறகு 1952 தஞ்சை மாவட்டம் வள்ளுவக்குடியில் நடைபெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் மாநில செயற்குழு மற்றும் மாநில நிர்வாக குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 1967ல் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1977, 1980 ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957, 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.  ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார். 1962இல் இந்திய-சீன யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் ஓராண்டு காலம் இருந்தார். அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டு விடுதலையானார். 1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது 35 தேசியக் கவுன்சில் உறுப்பினர்கள் பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். அந்த 35 பேரில் தோழர் சங்கரய்யாவும் ஒருவர். அவர்களில் கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர்.வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் தோழர். சங்கரய்யா ஆகிய இருவர் மட்டுமே தற்போது நம்மோடு வாழ்கிறார்கள். சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப் பணியாற்றினார். 1998இல் கோவையில் மதநல்லிணக்கப் பேரணியை நடத்தினார். மதவாத சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினரையும், தேச நலன் நாடுவோரையும் பக்தர்களும் கடமையாற்ற அழைத்தார். 1997-ல் மதுரையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீவிர நிலச் சீர்திருத்தமே தீர்வு என்று முழங்கினார். கல்லூரி மாணவராக இருக்கும்போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை, 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, 15 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர், இந்திய இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவர், மகத்தான வழிகாட்டி என தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்த மக்கள் தலைவர், தோழர் என்.சங்கரய்யா இன்னும் பல நூறாண்டுகள் நீடூழி வாழ வாழ்த்துவோம். சங்கரய்யா என்பது வெறும் பெயரல்ல. அது சமதர்மத்தின் சங்கநாதம். நன்றி: CPIM, நெல்லை

விடுதலையின் வரலாறுகள்

விடுதலையின் வரலாறுகள்

நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழா சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல் – என்பது வள்ளுவர் வாக்கு. வாசிப்புப் பழக்கம் உள்ள எல்லாரும், ஏதோ ஒரு நாளில் எழுதவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். சில சமயம் அதை வெளியே சொல்வதும் உண்டு. சொல்பவர்கள் எல்லாரும் செயல்படுத்திவிடுகிறோமா என்ன? கடந்த ஜூலை 2 அன்று, தாம்பரத்தில் நடைபெற்ற சென்னை வாசிப்பாளர்கள் சந்திப்பில், தான் ஒரு நாடகத்தை எழுதவிருப்பதாக அறிவித்தார் தோழர் கோமதிசங்கர். யாரைப்பற்றி, எந்தக் கருவை மையமாகக் கொண்டு அந்த நாடகம் அமையப்போகிறது என்கிற எந்த விவரமும் அன்று அவர் குறிப்பிடவில்லை. இன்று, அக்டோபர் 2. மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள். சிறப்புமிக்க இன்றைய தினத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், கோமதிசங்கர் தோழர் எழுதிய நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழா சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று கூறியது போலவே, ஆகஸ்டு 15, இந்திய சுதந்திர தினத்தன்று நீலகண்ட பிரம்மச்சாரி பற்றிய வரலாற்றுத் துளிகளை, நாடக வடிவில் தினசரித் தொடராக நமது சுவடு வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினார். 24 காட்சிகளாக, நாள் தவறாது சுவடு இணைய இதழில் வெளிவந்தது. வெளிவரும் நாட்களிலே நாடகத்திற்குப் பரவலான வரவேற்பு இருந்தது என்பதை சுவடு வாசகர்கள் நன்கறிவர். அறிவிப்பு வெளியான நாளிலிருந்து மிகச் சரியாக 90 நாட்களில் இந்த நாடகம் நூலாக்கம் பெற்று சுவடு பதிப்பக வெளியீடாக வந்துவிட்டது. இன்று, காலை 10 மணியளவில் சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில், புத்தகத்தின் வெளியீட்டு விழா மிக விமர்சையாக, நூற்றுக்கணக்கான தோழர்கள் மற்றும் வாசகர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு அவர்கள் நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர். மு.வீரபாண்டியன் மற்றும் தோழர். ஜீவபாரதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர் கணபதி இளங்கோ அனைவரையும் வரவேற்றார். நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய தோழர் முத்தரசன், பெயரே தெரியாத, தமிழகத்தின் ஏதோ ஒரு கடைக்கோடியில் வாழ்ந்த ஒரு சவரத் தொழிலாளியின் தேசப்பற்றையும் தன்மானத்தையும் பறைசாற்றும் செயலை மிகச் சுருக்கமாகவும் அவரின் எளிமையான கம்யூனிச சித்தாந்தத்தையும் எடுத்துரைத்தார். இந்த நாடகம் தமிழ்நாடு முழுவதும்  நிகழ்த்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். தோழர் ஜீவபாரதி அவர்கள் தனது தலைமை உரையில், விடுதலைப் போராளியை அவமதிக்கும்விதமாக, ஆங்கிலேய அதிகாரி அவருக்கு மொட்டை அடிக்கச் சொன்னபோது, தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு முடி திருத்துநரின் தியாகத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். தோழர் வீரபாண்டியன் அவர்களுடைய உரையில், இந்த நூல் குறித்து முழுமையானதொரு ஆய்வரங்கம் இதே அரங்கில் நிகழ்த்தப்பட வேண்டும் என்றார். அவரைத் தொடர்ந்து இந்த நாடகப் பனுவலை முன்வைத்து உரையாற்றிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர். ஆ. பாஸ்கர் அவர்கள் தனது மதிப்பீட்டு உரையைச் சிறப்பாக முன்வைத்தார். நாடக வடிவத்தின் தாக்கம் குறித்துத் தொடங்கிய அவர், புத்தகத்தின் சாராம்சத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் மிகச்சிறப்பாகவும் சற்று விரிவாகவே கூறியதுடன், இந்த நாடகத்தை மேடையேற்ற வேண்டும் என்று கூறி முடித்தார். அடுத்ததாக புத்தகத்தின் ஆசிரியர் தோழர் கோமதிசங்கர், தனது ஏற்புரையை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார். ஏன், எதனால், எதன்பால் இந்த நாடகம் தொடங்கப்பட்டு இவ்வளவு விரைவாகப் புத்தகமாகப் வெளியிடப்பட்டது என்ற விவரங்களோடு, நூலில் இடம்பெற்றுள்ள தரவுகளுக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றியுரைத்து தனது ஏற்புரையை நிறைவு செய்தார். இறுதியாக சுவடு பதிப்பாசிரியர் தோழர் நல்லு இரா. லிங்கம் ரத்தினத்தைவிடச் சுருக்கமாக நன்றியுரை நல்கினார். இன்றைய நாளின் அதிசிறப்பு, ஒரு விடுதலைப்போராட்ட வீரரின் வரலாற்றுப் பக்கங்களை வாழும் விடுதலைப் போர் வீரர் தோழர் நல்லகண்ணு அவர்கள் வெளியிட்டதுதான். தனது 98 ஆம் அகவையிலும் காந்தி பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் கட்சிக் கூட்டத்திற்கும் பதிப்பகத்தார் மற்றும் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்த அவருக்கு நன்றி என்ற ஒரு சொல் காணாது. நூலைப்பற்றியும் நூலாசிரியர் பற்றியும் வயது மூப்பு காரணத்தால் பேசமுடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த அந்த உள்ளத்தை என்னவென்று சொல்ல! அவரைப் பார்த்ததே பேறு என்று உணர்கையில், நூலாசிரியருக்கோ அது வாழ்நாளுக்கான வரலாறு அல்லவா?!

பொது சிவில் சட்டம்தேவையா?

பொது சிவில் சட்டம்தேவையா?

ஆய்வரங்க நிகழ்வுத் தொகுப்பு சுவடு இணைய இதழ் மற்றும் இந்திய சமூக நீதி ஊடக மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பொது சிவில் சட்டம் தேவையா?’ என்ற ஆய்வரங்கம், கடந்த ஆகஸ்டு 12, சனிக்கிழமையன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள MEET அரங்கத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியர் அரிபரந்தாமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், சமூக சமய ஆய்வாளர் ஹமீது ஹுசைன் ஆகியோர் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய தோழர் ஹமீத் ஹூசைன், இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்ட வரலாறு, அதன் பின்னணி, பொது சிவில் சட்டம் என்று கூறப்படுவதன் அரசியல் நோக்கங்கள், பசுவதைத் தடுப்புச் சட்டம், முத்தலாக், பாபர் மசூதி, ஞானவாபி மசூதி போன்ற பிரச்சினைகளைப் பற்றியும் சமகாலத்தில் முஸ்லீம்கள் சந்தித்து வரும் ஒடுக்குமுறைகள் பற்றியும் ஒன்றிய அரசு இசுலாமிய மக்களைக் குறிவைத்துத்தான் இந்த மாதிரியான சட்டங்களைக் கொண்டுவருகிறது, சில சட்டங்களைத் திருத்துகிறது என்றும் இத்தகைய வேலைகளில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்று தமது உரையில் குறிப்பிட்டுப் பேசி, இன்றைய சூழலில் பொது சிவில் சட்டத்தை எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது என்ற கருத்தை முன் வைத்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து தோழர் வாலாசா வல்லவன் பேசும்போது, 1939ஆம் ஆண்டு முதல், சுதந்திர இந்தியாவில் அண்னல் அம்பேத்கர் ஆற்றிய சட்டச் செயல்முறைகள் பற்றிய செய்திகளையும் அன்றைய காலகட்ட நிகழ்வுகளின் வரலாறுகளையும் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கான சட்டங்களை இயற்றுவதற்கு அம்பேத்கர் முன் நின்ற பெரும் சவால்கள், அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகியது வரை பல வரலாற்றுச் செய்திகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிப் பேசியதுடன், பாஜகவின் மூன்று முக்கிய நோக்கங்களான காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, ராமர் கோயில் கட்டுவது ஆகிய இரு நோக்கங்களை நடைமுறைப்படுத்திவிட்டார்கள் என்பதையும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து அவர்களின் மூன்றாவது நோக்கமான பொது சிவில் சட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார். அடுத்து உரையாற்றிய தோழர் தியாகு, இந்து கூட்டுக் குடும்பச் சட்டம், அதனை முன்வைத்து நிகழ்த்தப்படும் வரி ஏய்ப்புகள் என பொருளியல் பின்புலத்தில் இயங்கும் சட்ட நடைமுறைகள் மீதான விமர்சனத்துடன் தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து, பிற மதத்தினருக்கு கூட்டுக் குடும்பச் சட்டம் இல்லாமை, குற்றவியல் சட்டங்களும் திருமணம், சொத்துரிமை தவிர்த்த இதர சிவில் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இருப்பதையும் சட்டம் குறித்த கருத்து கேட்கும்போதே பழங்குடிகளுக்குச் சட்ட விலக்கு என்ற உள்துறை அமைச்சரின் வாக்குறுதி ஆகியவற்றையும் சுட்டிக்காட்டிக் காட்டியதுடன் இதைப்போன்ற செயல்பாடுகளின் பின்னணியில் உள்ள, சமூகப் பொருளியல் அழுத்த விளைவுகள் ஆகியவற்றையும் அழுத்தமாக எடுத்து வைத்து, இசுலாமியர்களின் வாழ்க்கையையும் இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பேசி, இந்து ராஜ்ஜியம் என்ற நோக்கத்தின் வெளிப்பாடே இந்தப் பொதுசிவில் சட்டம் என்று பேசினார். நிறைவாகப் பேசிய நீதியர் அரிபரந்தாமன், பொது சிவில் சட்டம் குறித்துத் தொடர்ந்து பேசுபவர்கள், அதற்கான வரைவுகூட முன்வைக்கபடாத நிலையிலேயே விலக்கு குறித்துப் பேசுவதையும் வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் இசுலாமியர்கள் மீது மட்டும் பாகுபாடு காட்டப்படுவதையும் சிறுபான்மை மக்களுக்குள்ளும் இசுலாமியர்கள் தனித்துக் குறி வைக்கப்படுவதையும் குடும்பம், சொத்து தொடர்பான வழக்குகளிலும்கூட நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகள் பொதுச் சட்டங்களின் அடிப்படையிலேயே விசாரிக்கப்படுகின்றன என்பதையும், சிறுபான்மையினர் தொடர்பான சில வழக்குகளில் பெரும் முரண்பாடாக மனுநீதி கோலோச்சுவதையும் அம்பலப்படுத்திப் பேசினார். திருமணச் சட்டங்களில்கூட வயது வரம்பு, வரதட்சணை போன்ற அம்சங்கள் ஒப்பீட்டளவில் இந்துக்களால்தான் அதிகம் மீறப்படுகின்றன என்ற புள்ளிவிவரங்களையும் முன்வைத்தார். உலகின் பல்வேறு நாடுகளிலும் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட நடைமுறைகளையும் குறிப்பிட்டு, சிறுபான்மையினருக்கு இருக்கும் அச்ச உணர்வுகள் நீங்கி, காலப்போக்கில் உருவாகும் சமூக மாற்றங்களால், அனைத்து சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய (inclusive) சமூகமாக இந்தியச் சமூகம் மாறும் காலத்தில், பொது சிவில் சட்டம் இயல்பாகவே நடைமுறைக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, நமது இலக்கு அத்தகைய நல்லிணக்கச் சமுதாயத்தை உருவாக்க வேண்டியதாக இருக்க வேண்டுமேயன்றி, வலிந்து திணிக்கும் சர்வாதிகாரத்தால் பொது சிவில் சட்டம் என்ற கருத்துக்குக்கூட ஆதரவு பெற முடியாது என்று கூறி முடித்தார். சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவையின் தலைவரும் சுவடு இணைய இதழின் நிர்வாக ஆசிரியருமாகிய சுவடு மன்சூர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். சுவடு இணைய இதழின் ஆசிரியர் நல்லு இரா. லிங்கம், இந்திய சமூக நீதி ஊடக மையத்தின் நிறுவனத் தலைவர் பவா சமத்துவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் ஆர்க்காடு ராஜா முஹம்மது நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். பத்திரிகையாளர் பீட்டர் பால்ராஜ் நன்றிகூறி நிகழ்வை நிறைவு செய்தார். நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

தோழர் ஜீவானந்தம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் களங்களில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை நோக்கிச் செல்வதையே இலக்காகக் கொண்ட, காலத்தால் உருவாக்கப்பட்டவர்தான் தோழர் ஜீவா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தோழர் ஜீவானந்தம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907 ஆகஸ்ட் 21ஆம் தேதி பிறந்தார் ஜீவா. ஜீவாவின் பெற்றோர் பட்டம் பிள்ளையும் உமையம்மையும் அன்றைய ஆதிக்க ஜாதியைச் சார்ந்தவர்கள். பொருளாதார வசதியில் குறைந்திருந்தாலும் பட்டம் பிள்ளையின் பொதுப்பணித்துறைக் காவலர் பணி அவரை அரசு விசுவாசியாக வாழ நிர்ப்பந்தித்திருந்தது. தென்பாண்டிச் சீமையில் நிரம்பி வந்த வழக்கத்தின்படி நான்காவதாகப் பிறந்த இந்தக் குழந்தைக்கு மூக்காண்டி என்ற பெயரைச் சூட்டினர். இது அங்கு நிலவி வந்த ஒரு பழக்கம். குலதெய்வமான சொரிமுத்தையன் பெயரைச் சூட்டும் வகையில் சொரிமுத்து என்ற பெயரையும் ஜீவாவிற்கு இட்டனர். பங்கிம் சட்டர்ஜியின் நாவலான ஆனந்த மடத்தில் வரும் ஜீவானந்தர் என்ற பெயரின் தாக்கத்தாலும் விவேகானந்தரின் மீது கொண்ட ஈடுபாட்டாலும் சிராவயல் காந்தி ஆசிரமத்தை அமைத்து நடத்தத் தொடங்கியபோதுதான் தன் பெயரை மாற்றிக்கொண்டார். ஐந்தாவது படிவத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே 80 வெண்பாக்களை இயற்றியவர். இளமைப் பருவத்திலேயே மகாத்மா காந்தி வாசகசாலை அமைத்தார்; நாடகக் குழுக்களை உருவாக்கினார்; கிராமங்களில் மாணவர் அமைப்புகளை உருவாக்கி, கிராமச் சேவைகளில் நிவாரப் பணிகளில் ஈடுபட்டார். ஐந்தாம் படிவம் படித்துக்கொண்டிருந்தபோது சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாவலையும் ஞான பாஸ்கரன் என்ற நாடகத்தையும் எழுதினார். ஞான பாஸ்கரன் நாடகத்தை அவரே தயாரித்து அரங்கேற்றி, அதில் நடிக்கவும் செய்தார். எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பிற்குக் கோட்டாறு அரசுப் பள்ளியில் சேருகிறபோது வட கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுத்தார். கவிஞர் ஜீவா ஒருபக்கம் தேச விடுதலை, மறுபக்கம் சுயமரியாதை, மூன்றாவது பக்கம் தொழிலாளி வர்க்க விடுதலை என்று முப்பரிமாணம் கொண்ட ஜீவா, சின்னஞ்சிறு வயதிலேயே தேச விடுதலைப் பாடல்களை எழுதியவர் காரைக்குடி வட்டார வாழ்வில் ஒரு பெண்விடுதலைக் கவிஞராகவும் தலித் விடுதலைக் கவிஞராகவும் புகழ்பெற்றவர். மார்க்சியத்தோடும் தொழிலாளி வர்க்கத்தோடும் கொண்ட தொடர்பால் அவரது பாடல்களில் சோசலிசம், ஜனநாயகம், தொழிலாளர் விடுதலை ஆகியவை பாடுபொருளாக அமைந்தன. சிறந்த ஜெர்மனி ஆசிரியரான ரெணி புலாப் மில்லர் எழுதிய போல்ஸ்விசம் அகமும் முகமும் என்ற நூலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து, அந்தப் பாடலைத் தழுவி 1934இல் கோடி கால் பூதமடா என்ற பாடலை எழுதினார். ஏங்காதெழுந்திருடா என்ற தலைப்பில் அவர் எழுதிய வீரச் சுவை மிக்க பாட்டு, பொதுமையாகக் கடமையை வற்புறுத்தும் பாட்டாகும். செயலில் குதிக்கக் கொதிப்பேறி ஓடும் குருதியில் தெம்பு பாய்ச்சும் பாட்டாக அது இன்றும் விளங்குகிறது. 1938இல் பாசிசம் என்ற தலைப்பில், பாசிச எதிர்ப்பை முன்வைத்து,   பாசிசமே பாசிசமேபாதக ஏகாதிபத்தியத் தீதின் அகோரத்தன்மைநீசத்தனத்தின் எல்லை நிட்டூர ரூபம்நெறியில் சர்வாதிகார வெறி மகாபாபம் என்ற பாடலை எழுதினார். பட்டிமன்றப் பேச்சாளர் ஜீவா கம்பன் விழாவின் ஒருபகுதியாக நடந்த பட்டிமன்றத்தில், கூற்றினும் கொடியவள் கூனியா? சூர்ப்பநகையா? கைகேயியா? என்ற தலைப்பில் ம.பொ.சி, எஸ்.ராமகிருஷ்ணன், தோழர் ஜீவா ஆகியோர் பேசினர். கைகேயியே என்ற தலைப்பில் ஜீவா பேச எழுந்து, 20 நிமிடங்கள் முன்னுரையாகப் பேசினார். பின்பு, ‘கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்கிறாள். ஒன்று, ராமன் காட்டுக்குப் போக வேண்டும்; இரண்டு, பரதன் நாட்டை ஆள வேண்டும். இவற்றைக் கேட்டதும் தசரதன் மயங்கி விழுந்துவிடுகிறான். இதைக் கண்ட கைகேயி, ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள். ராமன் வருகிறான். தசரதன் மயங்கிக் கிடக்கிற அந்த நிலையிலேயே ராமனிடம் கைகேயி, ‘நீ காட்டுக்குப் போக வேண்டும்; பரதன் நாட்டை ஆள வேண்டும். இது மன்னனின் கட்டளை’ என்கிறாள். ராமன் உடனே காட்டுக்குப் புறப்படுகிறான். மயக்கம் தெளிந்து தசரதன், ‘ராமன் எங்கே?’ என்று கேட்க, கைகேயியோ அவன் காட்டுக்குப் போய்விட்டான் என்கிறாள். அதைக் கேட்டதும் வருத்தம் தாளாமல் தசரதன் செத்து விடுகிறான். கணவன் இறந்ததைப் பார்த்த கைகேயி தூங்கப் போகிறாள். ராமன் காட்டுக்குப் போயாச்சு; தன்மகன் நாடாள வந்து விடுவான்; தன் கணவனும் இறந்தாச்சு என்று நிம்மதியில் தூங்குகிறாள் என்று கூறிவிட்டு, ஜீவா கூட்டத்தைப் பார்த்து, கூற்றினும் கொடியவள் யார்?  நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்’ என்று கூற, கூட்டமே கொந்தளித்து ஆரவாரித்தது. 22ஆவது கம்பன் விழாவின் இறுதி நாளில், இதுவரை வழக்கில் இல்லாத வகையில் தனது பேச்சால் கம்பன் அடிபொடி ச. கணேசனின் மனத்தைப் பூரிப்படையச் செய்கிறார். ச.கணேசன் தனது நன்றியுரையில், இதுவரை கம்பன் விழா நடத்திய பயன் முழுவதையும் இன்றுதான் பெற்றேன் என்று கூறி முடிக்கிறார். இவ்வாறுதான், ஜீவா என்ற மார்க்சியவாதி கம்பனைப் பார்த்தார். பாரதியைப்பற்றி சரியான முறையில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜீவாதான். ஒருமுறை பாரதியைப்பற்றிப் பேசிவிட்டு இறங்கியபோது, பாரதியின் மகள் சகுந்தலா பாரதி ஓடிவந்து, அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு நா தழுதழுக்க, ‘என் தந்தையின் பெருமையை இன்றுதான் நிஜமாக உணர்கிறேன்’ என்றாராம். அதேபோன்று, தாகூர் விழாவில் அவர் பேசி முடித்ததும், தாகூரின் பேத்தி ஓடிவந்து ஜீவாவைப் பாராட்டி, ‘என் தாத்தாவின் கவிதைகள் எவ்வளவு ஆழமானவை என்பதை இன்றுதான் உணர்ந்தேன்’ என்றாராம். இவையெல்லாம் ஜீவா ஒரு மாபெரும் கொள்கையாளர்; எதார்த்த இலக்கிய நெறியைத் தமிழ் மக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தியவர் என்பதைக் காட்டுகின்றன. போராளி ஜீவா மேடையில் ஓர் வேங்கை பாயுமேகைகளை விண்ணோக்கி வீசி வருமேவீறு கொண்டு ஓர் யானை போரில் கிளம்புமேவெஞ்சேனை முறுக்கேறுமேகோடையின் இடி கொண்டு கொட்டுமேவார்த்தையில் கொஞ்சு தமிழ் விளையாடுமே என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கையோடு மல்லுக்கட்டிய தோழர் ப. ஜீவானந்தம், நாடக உலக தேசபக்தரான விஸ்வநாததாஸ் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவருக்கு சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாடகத்தை எழுதித் தந்தவர். ஜீவா பத்தாம் வகுப்பு படிக்கும்போது காந்திஜியைப் பற்றியும் கை ராட்டினத்தைப் பற்றியும் எழுதியபாடல், அந்த நாடகத்தில் முதல் பாடலாக இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியன ஜீவாவை தேசிய இயக்கத்தின்பால் ஈர்த்தன. கதர் ஆடை அணியும் வழக்கத்தை அவர் கடைசிவரை கைவிடவில்லை. அவருடைய அன்னை இறந்தபோதுகூட கதர் ஆடை கிடைக்காததால் கொள்ளி வைக்கவே மறுத்துவிட்டார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்திய பரத்வாஜர் ஆசிரமத்தில் ஏற்பட்ட சாதியப் பாகுபாடு, ஜீவாவைப் பொதுவுடைமையை நோக்கி நகரச் செய்தது என்பதில் இருவேறு கருத்து கிடையாது. சிராவயல் ஆசிரமத்தில் வர்ணாசிரம தர்மம் பற்றிக் காந்தியிடம் விவாதித்தார். காந்திஜியின் வர்ணாசிரமக் கருத்துக்கள் முற்போக்கானவை அல்ல என்பதை உணர்ந்தார். உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகக் கொடுமைகள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகச் சீர்திருத்தம் மட்டும் போதாது;  சமூகப் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும்; அதைச் சமதர்ம அஸ்திவாரத்தில் கட்ட வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். காந்தியத்திலிருந்து விலகி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து, வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு, தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, அவரைச் சங்கிலியில் கட்டி அடித்து இழுத்து வந்தனர் அன்றைய ஆங்கிலேயக் காவலர்கள். வர்ண பேதங்களுக்கு எதிராக மட்டுமல்லாது வர்க்க பேதங்களுக்கு எதிராகவும் போராடவேண்டும் என்று பெரியாரிடம் வாதிட்டார். 08.01.1932இல் கோட்டையூரில் தடை உத்தரவை மீறிப் பேசிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுச் சிறை புகுந்தார். சிறை வாழ்க்கையின்போது பகத்சிங்கின் தோழர்களான பூதேஸ்வர் தத், குந்தர் லால், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி போன்றோரைச் சந்தித்ததன் மூலம், 1932இல் ஒரு காங்கிரஸ்காரராகச் சிறை புகுந்து, அதே ஆண்டு நவம்பரில் ஒரு கம்யூனிஸ்டாக சிறையிலிருந்து வெளிவந்தார் ஜீவா. பின்னர் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் சென்னை மாகாணச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. அதன்பிறகு 1936இல் தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவா உறுப்பினராக இருந்தார். தமிழ்ப் பற்றாளர் ஜீவா மறைமலை அடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, தனித்தமிழ்ப் பற்றாளராக, ஜீவா என்ற தன் பெயரை உயிர் அன்பன் என்று மாற்றிக்கொண்ட அவர், மிகப்பெரும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டவர். ஜீவாவின் நடவடிக்கைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு, வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு, ஜீவா தமிழ்நாட்டில் நடமாடத் தடை விதித்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், நேரு தலைமையிலான அரசு 1948 முதல் 1951 வரை கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்த காலத்தில் சிறை சென்று திரும்பினார். 1952இல் அன்றைய வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்றம் சென்றார். திமுக சட்டமன்றத்துக்குள் நுழையும் முன்பாகவே, தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டுமென்று சட்டமன்றத்தில் பேசியவர் தோழர் ஜீவானந்தம். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். கல்வி, நீதிமன்றம், நிர்வாகம் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் என்று 1952 செப்டம்பர் 29இல் சட்டமன்றத்தில் முழங்கினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த அவர், மேற்குத் தாம்பரத்தில் ஒரு சிறிய குடிசையிலேயே கடைசிவரை வாழ்ந்தார். இதைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் காமராஜர், அவருக்குத் தனியே வீடு ஒதுக்க முன்வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்ட மாமனிதர் அவர். 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் உடல்நலக் குறைவால் அவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது இறுதிச் சடங்கில் பாவலர் வரதராஜன் கண்ணீர் மல்கப் பாடிய வரிகள் இவை. சிங்கமென முரசறைந்த குரலும் எங்கே?செந்தமிழை ஆய்ந்து சொன்ன உருவம் எங்கே?செங்கொடி ஈன்றெடுத்த ஜீவா எங்கே?இனி எங்கள் குறை ஈடு செய்ய யார்தான் இங்கே?

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அபத்தமான பதில்கள் அளிக்கப்பட்டுவிட்டன. எனக்குத் தெரியாதெனினும் உயிரின் கீற்றினைப் போல் நான் இறுகப் பற்றியுள்ளேன். என் சகோதரியின் கணவரும், கவிதை எழுதுவதைவிட செத்துப்போவதையே விரும்புவார். இது ஏற்கனவே இருக்கும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது. எனது சொந்தக்காரர்கள் கவிதை எழுதுவதில்லை. கவிதை எழுதாமல் இருக்கும் அபத்தத்தைப் போக்கத்தான் நான் கவிதை எழுதும் அபத்ததத்தைச் செய்கிறேன் – விஸ்லாவா சிம்போர்ஸ்கா கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா, 1923ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் நாள் மேற்கு போலந்தில் கார்னிக் எனும் நகரத்தில் பிறந்தார். இவரது இளமைக்காலக் கல்வி ஜெர்மானிய ஆதிக்கத்தின் கீழ் அமைந்தது. 1953ஆம் ஆண்டிலிருந்து 1981 வரை போலந்தின் புகழ்பெற்ற இலக்கிய சஞ்சிகையான லிட்டராஸி ஜஸியில் பணியாற்றினார். வர்க்க ஏற்றதாழ்வுகளும் தனியுடமையும் அரசு அதிகாரமும் தோன்றாத வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பிளவுபடாமல் இருந்தான். தனகுள்ளும் பிளவு இல்லை. இவையெல்லாம் தோன்றியபின், அவை ஒழிந்தால் மட்டுமே மீண்டும் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றிய நிலையில் நிறைவான வாழ்வைப் பெறுவான். இதைக் கம்யூனிச சமுதாயம் என கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டார். நகரமோ கிராமமோ, மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இயந்திரங்கள் எல்லா உழைப்புகளையும் எடுத்துக்கொண்ட பிறகு, உடல்நலத்திற்காக மனிதன் காலையில் தோட்ட வேலை செய்வான். பிற்பகலில் மீன் பிடித்தலிலும் மாலையில் இசையிலும் நடனத்திலும் ஈடுபடுவான் என்று ஒரு அழகிய சித்தரிப்பை மார்க்ஸ் தந்தார். போலந்தை உள்ளடக்கிய ஐரோப்பியச் சூழலிலும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஆசியச் சூழலிலும் கம்யூனிசக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் யதார்த்த நிலைமை மார்க்ஸ் கூறிய தீர்க்கதரிசனமாக இல்லை என்பதே சிம்போர்ஸ்க்காவின் கவிதையின் வெளிப்பாடு. சிம்போர்ஸ்க்கா எப்போதுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். போர் முடிந்துவிட்டது; இனி சம்பவங்கள் நடக்காது. அமைதியான சூழலில் பிணங்களை எடுத்துச் செல்லும் தள்ளுவண்டி செல்ல, பாதையைச் சீர்படுத்துங்கள் என்ற கவிதை கனமான ஒன்று. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உறவினர் ஒருவரை, குடும்பத்தில் ஒருவர் போய்ப் பார்க்க வேண்டும். அதற்கு சீட்டு குலுக்கிப்போட்டு யார் போக வேண்டும் என்று முடிவு செய்யவதைப் போல ஒரு கவிதை ஆரம்பமாகிறது. ஆரம்பமும் முடிவும் அதிரவைக்கும் இவரது கவிதைகளில், வியட்நாம் என்ற கவிதையில் வரும் இறுதி வார்த்தையைப் பாருங்கள். பெண்ணே உனது பெயரென்ன?எனக்குத் தெரியாதுஉனக்கு எத்தனை வயது? நீ எந்த ஊர்க்காரி?எனக்குத் தெரியாதுஅக்குழியினை நீ எங்கு தோண்டினாய்?எனக்குத் தெரியாதுஎத்தனை நாட்களாக நீ இங்கு ஒளிந்திருக்கிறாய்?எனக்குத் தெரியாதுஎன் விரலை நீ ஏன் கடித்தாய்?எனக்குத் தெரியாது.உனக்குத் தெரியாதா, நாங்கள் உனக்குத் தீங்கிழைக்கமாட்டோமென்று?எனக்குத் தெரியாதுஇது போர், நீ ஒரு பக்கத்தைச் சார்ந்தாக வேண்டும். நீ யார் பக்கம்?எனக்குத் தெரியாதுஉனது கிராமம் இன்னும் உள்ளதா?எனக்குத் தெரியாதுஇவர்கள் உனது குழந்தைகளா?ஆம்..! கவிதையின் இறுதி வார்த்தையில்தான் எல்லாமே உள்ளது. அதிகம் படித்த அப்பாவிடமிருந்து என்பதைவிட, அதிகம் படிக்காத அம்மாவிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம். விஸ்வரூபம் என்ற தமிழ் திரைப்படத்தில்கூட போர்ச் சூழலில், ‘ஒரு அணு விதைத்த பூமியிலே’ பாடலில் “நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா” என்ற வரி வரும்.தமிழ் இலக்கிய எழுத்தாளர் லா.ச.ரா. ‘நான் இசையின் குறிப்பைப்போல எழுதுகிறேன். இசையைப் போலப் பேச முயற்ல்கிறேன்’ என்று சொல்வார்.‘சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள் பீத்தோவெனின் சங்கீதத்தில் உள்ள வெம்மையை கொண்டிருக்கின்றன’ என்கிறது நோபல் கமிட்டி. மேலும் ‘மிகச் சரியான, கறாரான, வஞ்சப் புகழ்ச்சி நடையில் வரலாற்று ரீதியானதும் உடலியல் ரீதியானதுமான உள்ளடக்கத்துடன் மனித யதார்த்தின் முறிந்த பகுதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்’ என்று சொல்லி நோபல் பரிசை அறிவித்தது.இலக்கியத்திற்கான நோபல் பரிசு கடந்த இருபது ஆண்டுகளாக உலகின் மிகக் கொந்தளிப்பான அரசியல் சூழலில் வாழ்ந்த எழுத்தாளர்களுக்கு வழங்கபட்டது. 1996ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, “கவிதை என்பது ஒரு சிறப்புப் படிப்பு. வழக்கமான பாடங்கள், அடிக்குறிப்புகள் இணைக்கப்பட்ட தத்துவார்த்தக் கட்டுரைகள், தேர்வுகள், இறுதியாக, சம்பிரதாயப்படி பட்டயப் பட்டங்கள் தேவைப்படும் ஒரு தொழிலாகும். ஒரு கவிஞராக மாறுவதற்கு, மிக நேர்த்தியான கவிதைகளைக் கொண்ட பக்கங்களை மறைப்பது போதாது என்பதை இது குறிக்கும். அதன் முக்கிய அம்சம், அதிகாரப்பூர்வ முத்திரையைத் தாங்கிய சில காகிதச் சீட்டு. தற்காலக் கவிஞர்கள் தங்களைப்பற்றி சந்தேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் வெட்கப்படுவதைப்போல, தயக்கத்துடன்தான் தங்களைக் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் எங்களின் ஆரவாரமான காலங்களில் உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது மிகவும் எளிதானது. அவை கவர்ச்சிகரமான முறையில் தொகுக்கப்பட்டிருந்தால், சொந்தத் தகுதிகள் ஆழமாக மறைக்கப்பட்டிருப்பதால், அவற்றை அடையாளம் கண்டுகொள்வதற்கு பதிலாக, அவர்கள் அவற்றை ஒருபோதும் நம்புவதில்லை. நான் எழுதுகிற அனைத்தும் தெளிவானதாகவும் புரியக்கூடியதாகவும் இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஏதேனும் ஒரு வாசகனுக்கு எனது கவிதைகள் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கமெனத் தோன்றினாலும், நான் மிகுந்த சஞ்சலமடைகிறேன். இது எனக்கு மிகவும் சங்கடமான காலம். நான் இயல்பில் மிகவும் தனிமை விரும்பி; ஒதுங்கி வாழ விரும்பும் மனுஷி. இந்தப் பரிசின் மூலம், எனக்குக் கொஞ்சம் அசௌகரியமாக இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று உரையாற்றினார். மிக உயரிய ஒரு பரிசு, தனிமனிதனுக்கு எவ்வளவு சங்கடம் தருவதாக இருக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். போலந்து மக்களின் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் அவரது கவிதைகளில் முக்கியத்துவம் பெற்றன. முதல் வாசிப்பில் உடனடிப் பற்றுதலும் ஆழமான வாசிப்பில் கடலின் சூட்சமும் கொண்ட கவிதைகள் அவை. (கவிதை மற்றும் சில குறிப்புகள், யமுனா ராஜேந்திரன், ஆர். பாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து தமிழில் மொழிபெயர்த்த ஹிட்லரின் முதல் புகைப்படம் என்ற சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன).

புரட்சியின் மறுபெயர்

புரட்சியின் மறுபெயர்

இன்றைய இளைஞர்கள் பலரின் டி-சர்ட்களில் பரட்டைத் தலையும் வாயில் சுருட்டும் இதழ்களில் புன்னகையும் தாங்கிய ஒருவரின் படத்தைக் காணலாம். அவர்களில் எத்தனை பேர் அவருடைய வாழ்க்கையை, வரலாற்றை அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறியோம். என் நாடு, என் மக்கள், என் இனம் என்று நம்மில் பலரும் பற்றோடு இருக்கிறோம். ஆனால், ஏகாதிபத்தியமும் சர்வாதிகாரமும் தலை தூக்கிய இடங்களிலெல்லாம் இன்று டி-சர்ட்களில் காணப்படும் தலை உயர்ந்தது. ஆம், அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு எதிராக, அயல் நாடுகளுக்கும் சென்று ஆயுதம் ஏந்திய புரட்சிகரப் போராளி, அமெரிக்கக் கண்டத்தில் கம்யூனிச விதைகளைத் தூவியவர். கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின் பொதுவுடமை அரசு வளர்வதற்கு அடித்தளம் அமைத்தவர் என்று பலப்பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான சே குவேராதான் அவர். இன்று சே குவேராவின் பிறந்தநாள். எர்னஸ்டோ சே குவேரா, அர்ஜென்டினாவின் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் 1928 ஜூன் 14ஆம் தேதி குறைப் பிரசவக் குழந்தையாகப் பிறந்தவர். மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார். கௌதமாலா நாட்டில் நடந்துவந்த ஓர் ஆட்சியை அமெரிக்க அரசாங்கம் தனது சுயநலத்துக்காகத் தூக்கி எறிந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார். தங்களின் அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கி எறிந்ததைக் கண்டு பதற்றப்படாத, துணுக்குறாத கௌதமாலா மக்களின் மௌனம் மேலும் சே குவாராவை துடிக்கச் செய்தது. இந்நிகழ்வு அவரைப் புரட்சியின் பக்கம் திருப்பியது. அமெரிக்காவின் இந்த அநியாயத்தை விவரித்து, புரட்சியைத் தூண்டிப் பேசலானார். அதனால் அவருக்கு ஆபத்து வர மெக்ஸிகோவிற்கு தப்பிச் சென்றார். அந்த நேரத்தில், கியூபா நாட்டில் அமெரிக்காவின் ஆதரவில் பொம்மை ஆட்சியை நடத்திவந்த சர்வாதிகாரி பாடிஸ்டாவிற்கு எதிராக, கொரில்லா படை திரட்டிப் போராடி வந்த பிடல் காஸ்ட்ரோவை 1955இல் தனது 27 ஆவது வயதில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இருவருக்கிடையே ஒரு நட்புப் பாலத்தை வளர்த்தது. சேவின் வீரமும் கொரில்லா படை சாகசங்களும் அவரை பிடல் காஸ்ட்ரோவின் தலைமைத் தளபதியாக மாற்றின. கியூபாவை ஆண்ட பாடிஸ்டாவை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்பை பிடல் காஸ்ட்ராவின் கைகளில் ஒப்படைத்தார். தனது 31ஆவது வயதில் கியூபா தேசிய வங்கியின் தலைவராகி, கியூபாவின் பணத்தாளில் கையெழுத்திட்டார். தனது 33ஆவது வயதில் அமைச்சராக இருந்தபோதும் கரும்புத் தோட்டத் தொழிலாளியாகப் பல நாட்கள் கரும்பு வெட்டினார். தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். கியூபாவைப் பன்நெடுங்காலமாகச் சுரண்டிவந்த அமெரிக்க நிறுவனங்களை கியூபாவின் தேச உடமையாக்கினார். கியூபா சார்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பங்கேற்க சே சென்றபோது, பல மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் 36 வயதே ஆன இளந்தலைவரின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருந்தனர். 1959இல் இந்தியாவிற்கு வந்திருந்த சே, அன்றைய நமது பிரதமர் நேருவுடன் நல்லெண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதை மகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார். அதன்பின்னர், விடுதலைக்காகப் போராடிய லத்தீன் அமெரிக்க நாடுகளின்பால் அவரது பார்வை திரும்பியது. அமைச்சர் பொறுப்பை, கட்சிப் பொறுப்பை, கியூபா நாட்டுக் குடியுரிமையை உதறிவிட்டு, காங்கோ மக்களின் விடுதலைக்காக இரண்டு ஆண்டு காலம் பாடுபட்டார். இறுதியாக பொலிவியக் காடுகளில் 16 மாத காலம், அங்கே ஆட்சி செய்துவந்த அமெரிக்காவின் பினாமி அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தினார். அமைச்சராக இருந்த ஒருவர், மீண்டும் போராளியாக மாறி யுத்தம் செய்த வரலாறு சே குவேராவிற்கு மட்டுமே உண்டு. சேகுவேராவால் ஈர்க்கப்பட்ட சின்சினா அவர் மீது காதல் கொண்டார். சே குவேராவும் காதல் வயப்பட்டார். அவர்கள் சந்தித்த போதெல்லாம் புத்தகங்களைப்பற்றிப் பேசியே பொழுதைக் கழித்தனர். சேயின் புரட்சிகர மனநிலையோடு சின்சினா தொடர முடியாத சூழலில், அவர்களது காதல் வாழ்க்கை பிரிவில் முடிந்தது. தன்னுடன் கொரில்லாப் படையில் இணைந்து போராடிய போராளி ஹில்டாவை சே மணந்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். சேகுவேரா தனக்கு ஒரு மகன் பிறந்தால் விளாடிமிர் இலியச் லெனின் என்று பெயரிட வேண்டும் என்று நினைத்திருந்தார்.ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை. பின்னர் முதல் மனைவியின் சம்மதத்தோடு அலெய்டா மார்ச்சை மணந்தார். ஒரு ஆண் குழந்தையும் நான்கு பெண் குழந்தைகளும் அத்தம்பதியினருக்குப் பிறந்தன. நான்காவதாகப் பிறந்த மகனுக்கு உமர்கய்யாம் என்று பெயரிட்டார் சே. சே மிகுந்த அன்புள்ளம் கொண்டவர். நாள்தோறும் மக்கள் சுரண்டப்படுவதை, அவர்கள் ரத்தம் உறிஞ்சப்படுவதைக் கண்டு கொதித்தது அவரது மனம். தன்னுயிரைத் தந்து கோடானகோடி மக்களை விடுவிக்க, தன் ரத்தத்தைச் சிந்தியவர். ஏகாதிபத்தியத்தை முற்றிலுமாக முறியடிக்க எதையும் செய்ய வேண்டும் என்ற அசையாத கொள்கை கொண்டவர். மக்களை விடுவிப்பதற்காக நிற்கும் கட்சிகள், கட்சி உறுப்பினர்களுக்குப் போர்ப் பயிற்சி தரவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. சே குவாராவின் வாழ்க்கை தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையாக வாழப்படவில்லை. அவர் மரணத்திற்கே சவால் விட்டவர். இந்த மாவீரனின் மார்பு தோட்டாக்களால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டபோதும் அவர் தன் இமைகளை மூடிக்கொள்ளவில்லை. கண்களைத் திறந்தபடியே மரணத்தை எதிர்கொண்டார் சே. சே குவேராவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முக்கியப் பாடம், ஆதிக்கத்தை அதன் எல்லைவரை சென்று எதிர்க்கவேண்டும் என்பதும் அந்த ஆதிக்கம் நம்மீது மட்டுமல்லாமல் எவர்மீது செலுத்தப்பட்டாலும் அங்கே நாம் நிற்க வேண்டும் என்பதுமே.

மெழுகாய் உருகும் மனங்கள்

மெழுகாய் உருகும் மனங்கள்

தீக் கானல் பற்றிய நேர்காணல்                                                      விபத்துகள் நம்மை உலுக்கி எடுப்பவை. இயற்கைப் பேரிடர்களால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுப்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் மனிதத் தவறுகளால் நேரிடும் விபத்துகள் தரும் இழப்புகளும் வலிகளும் வாழ்நாள் வடுக்களாக மாறிவிடுகின்றன. கும்பகோணம் பள்ளித் தீ விபத்து சமகாலத்தில் நாம் சந்தித்த கொடூரங்களில் ஒன்று. தீயில் சிக்கி 94 குழந்தைகள் பொசுங்கிப்போயினர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அந்தத் தீ விபத்தில் உயிர்தப்பிய பெண் ஒருவருடனான நேர்காணல் இது. தற்செயலாக நடந்த உரையாடல் ஒன்றில்தான் அவர் கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பியவர் என்ற செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து சம்பிரதாயமான பேட்டியாக இல்லாமல், இயல்பாக அவருடன் நடந்த உரையாடல்தான் இது. அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க பெயர் குறிப்பிடப்படவில்லை. விபத்து நடந்தது 2004ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று. 20 ஆண்டுகள் முடியவுள்ள இந்தத் தருவாயிலும் மனதளவில் இன்னும் தீயின் தாக்கம் அவரிடம் இருப்பதைக் காணமுடிகிறது. அந்தக் கோர நாளின் நினைவுகளையும் அதன் பிறகான தனது மனநிலையையும் அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.   தென்னிந்தியாவில் ஏற்பட்ட மோசமான தீ விபத்து கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து. அப்போது நீங்கள் எந்த வகுப்பு? சென்னைவாசியான நீங்கள் அந்தப் பள்ளியில் படிக்க என்ன காரணம்? அப்பா மட்டும்தான் அப்போது சென்னையில் இருந்தார். நானும் தம்பியும் கும்பகோணத்தில் பாட்டி வீட்டில் இருந்தோம். பாட்டி வீட்டுக்குப் பக்கம்தான் அந்தப் பள்ளிக்கூடம். அதனால் பக்கத்துலேயே படிக்கட்டும் என்று சேர்த்துவிட்டார்கள். நான் அப்போ 3ஆம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தேன். தம்பி அப்போது எல்.கே.ஜி. அந்த நாளில் என்ன நடந்தது என்று நினைவிருக்கிறதா? எத்தனை நண்பர்கள் உயிர் தப்பினார்கள்? உங்கள் தம்பி என்ன ஆனார்? என் தம்பி அன்று பள்ளிக்கு லீவ் போட்டிருந்தான். அதனால் அதிர்ஷ்டவசமாக அவன் பிழைத்தான். ஒருவேளை அன்று அவன் பள்ளிக்கு வந்திருந்தால், அவன் ரொம்ப சின்ன பையன் என்பதால் தப்பிப்பது கஷ்டமாக இருந்திருக்கும். அன்று  கணித வகுப்பு நேரம். ஆசிரியர் வரவில்லை என்பதால்  எல்லாருமே கத்திக்கொண்டும் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தோம். அதுவும் வழக்கமான ஒரு நாளாகத்தான் இருந்தது, தீ விபத்து ஏற்படும் வரை. அதன்பிறகு கத்தி வீசியதைப்போல ஒரே அலறல் சத்தம். எல்லாருமே கத்தியபடி ஓடிக்கொண்டிருந்தனர். எங்கும் ஒரே புகைமூட்டமாக இருந்தது. ஒரு அண்ணாதான் என்னை தூக்கிக்கொண்டு போனார். நான் பாதியிலே மயக்கம் அடைந்தேன். விழித்துப் பார்க்கும்போது மருத்துமனையின் மேற்கூரை தெரிந்தது. அருகில் சில மாணவர்கள் வாழையிலையில் போர்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள். அது மட்டுமே நினைவில் உள்ளது. மற்ற நண்பர்கள் பற்றி நினைவு இல்லை. அது ஆடி மாதம் என்பதால் பக்கத்தில் கூழ் ஊற்றும் சத்தம் போலத்தான் இருந்தது. தாமதமாகத்தான் எங்களுக்கு தீ பற்றிக்கொண்டது தெரிந்தது. மேலும் கோயிலில் இருந்துதான்  தீ பிடித்திருக்கும் என்று நாங்க நினைத்தோம். பிறகுதான் உணவுக் கூடத்திலிருந்து தீ பரவியது தெரிந்தது. மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்புகளில் ஒன்று நெருப்பு. இந்தச் சமூகத்தில் பெண்களே நெருப்போடு அதிக நேரம் நெருங்கி வாழ்கிறார்கள். விபத்தில் பாதிக்கப்பட்ட உங்களுக்கு நெருப்பை அணுக இன்னும் தயக்கம் உள்ளதா? ஆண், பெண் என்ற பேதமில்லை. பசித்தால் சமைத்துதான் சாப்பிட வேண்டும். தொடக்கத்தில் எனக்கு மிகவும் பதட்டமாகத்தான் இருந்தது. தீக்குச்சி பற்றவைக்கும்போதுகூட நடுக்கமாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது பழகிவிட்டது. இருட்டு அறையில விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மட்டுமே தனியாக இருக்க வைத்தார்கள். அது ஒருவகை உளவியல் சிகிச்சை. அப்படியே பழகிப் பழகி, நெருப்பு நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுதான் என்கிற இயல்புநிலை புரிய ஆரம்பித்தது. வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தைப் பார்க்கும்போது எப்படி உணர்வீர்கள்? இப்போதும்கூட கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். சத்தம் இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். திருவிழாக்களில் தீச்சட்டி எடுப்பது, வாயில் நெருப்பை ஊதி வேடிக்கை காட்டும் நிகழ்ச்சி போன்றவற்றையெல்லாம் பார்ப்பதுண்டா? கோயிலில் தீபம் காட்டுவதுகூட பயமாகத்தான் இருக்கும். என்ன செய்ய? அங்கேதானே அழுது தீர்க்க முடிகிறது?!  தீ விபத்து ஏற்பட்ட அதே ஆண்டில்தான் சுனாமி வந்தது. அதற்காக பயந்துகொண்டு யாருமே கடலுக்குப் போகாமல் இருக்கவில்லையே! புயல் வருவதால் காற்றை நாம் வெறுக்கிறோமா என்ன? பஞ்சபூதங்கள் நம்ம வாழ்க்கையில் முக்கியமானவை என்ற புரிதல் நாளடைவில் வந்துவிட்டது. தீயினால்  சுட்டபுண் உள்ளாறும் என்று சொல்வார்கள். ஆனாலும் உங்கள் மனத்திலும் உடலிலும் ஏற்பட்ட பக்கவிளைவுகள்? தீ விபத்துக்குப் பிறகு நிறைய நாக்குகள் தீயை உமிழ்ந்திருக்கின்றன, அப்பா உட்பட. பெண் பார்க்கும்போது நிறைய தவிர்ப்புகள். முகத்தை உற்றுப் பார்ப்பார்கள். எனக்கு மேக் அப் போடப் பிடிக்காது. ஆனாலும் (முகத்தில் உள்ள தழும்பைக் காட்டி) இதை மறைக்க மேக் அப் போடுவேன். கூட்டத்தில் நான் இருக்கும்போது ராசியில்லாத பொண்ணு என்று சொல்வார்கள். பக்கவிளைவாக முடக்கு வாதம் இருந்தது. சிகிச்சைக்குப் பிறகு ஓரளவுக்குப் பரவாயில்லை. என்னை உற்றுக் கவனித்தால் நான் நான் கொஞ்சம் இழுத்து இழுத்து நடப்பது தெரியும். இப்போது நன்றாகவே நடக்கிறேன். அலுவலகத்தில் தீத் தடுப்புப் பயிற்சிகள் வழங்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எல்லாரும் அதைப் பாடமாக மட்டுமே கவனிப்பதால் தைரியமாக  இருப்பார்கள். அதுவே விபத்தாக இருந்தால் அவரவர் தப்பிக்கவேண்டும் என்றவொரு பதற்றம் இருக்கத்தான் செய்யும். எனக்கு இருவிதமான மனநிலையும் இருக்கும். தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகள் பற்றி? எனக்கு தீபாவளி பிடிக்காது. பட்டாசுச் சத்தம் கேட்டால் ஒரு பூனைக்குட்டி எப்படிப் பதுங்குமோ அப்படி அறைக்குள் பதுங்கிக்கொள்வேன். பறவைகள் எப்படிப் பதறிப் பறக்குமோ அப்டியொரு பயம் இருக்கும். பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்படும் தீ விபத்து குறித்த செய்திகளைக் காணும்போது எப்படி உணர்வீர்கள்? மீண்டும் நெருப்புக்கு பயந்த அந்த அலறல் சத்தம்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு தத்துவம் இருக்கிறது, இயற்கை ஒரு குழந்தை; நாம் எல்லாருமே அதன் பொம்மைகள். (விரக்தியான சிரிப்பு) நாடு நன்கறிந்த கோவை குண்டுவெடிப்புகள் குறித்த உங்கள் கருத்து? கண்மூடித்தனமான, தெளிவில்லாத கடவுள் நம்பிக்கையினால் வந்த விளைவு. தீக்காயம் அல்லது தழும்பு உள்ளவர்களைச் சந்திக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்? என்னைத் தூக்கிச் சென்று காப்பாற்றிய அந்த அண்ணாவை ஒருமுறையாவது பார்க்கமாட்டோமா என்ற ஏக்கம் எழும். அவரைப் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பு உள்ளதா? ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரை அடையாளம் காட்டலாம் என்ற நம்பிக்கை உள்ளது. (சிறிது மௌனம்) தீ வாடை, தீயணைப்பு வண்டிச் சத்தம் போன்றவற்றை உணரும்போது உங்கள் மனநிலை? தீயணைப்பு வண்டிச் சத்தம், ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே எனக்கு அன்று கண்கள் மூடிய அலறல் சத்தம்தான் காதில் கேட்க ஆரம்பிக்கும். இயல்பாக என்னை நானே சமாளிப்பது கடினம். அனைத்தையும் உடைத்து வெளியே வந்துகொண்டு இருக்கிறேன். சிகரெட் பிடிப்பவர்களைப்பற்றி? அது அவர்கள் விருப்பம். உடன்கட்டை ஏறுதல்,  புராணங்களில்  வரும் ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னது, கண்ணகி மதுரையை எரித்தது போன்ற சம்பவங்கள் பற்றி? எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் இந்த ஒரு விசயதுக்காக ராமரைப் புனிதப்படுத்தத் தேவையில்லை. கண்ணகி மதுரையை  எரித்தது உண்மை சாகடிக்கப்பட்ட கோபத்தில்தானே?! உடன்கட்டை ஏறுதல் நடைமுறையில் இல்லாவிட்டாலும் இன்றளவும் சமூகத்தில் ஏராளமான பிற்போக்குச் சிந்தனைகள் இருக்கத்தான் செய்கின்றன. நேர்காணல் முடித்து இருவரும் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது, “நாம ஒருநாள் அந்த கும்பகோணம் ஸ்கூலுக்குப் போகலாம்” என்றார். நான் வியப்போடு நிமிர்ந்து பார்த்தேன். தேநீர்க்கடை சுவற்றில் Every sip has a story என்று எழுதியிருந்தது.

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கலைஞர் 100 – சிறப்புப் பதிவு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது நூறாவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவருடைய எழுத்தாற்றல் பற்றி நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் கலைஞரைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரலாறு எழுதவியலாது. அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் இன்றியமையாதவையாக நிலைத்திருக்கின்றன. தனது தூக்குமேடை நாடகம் அரங்கேற்றத்தின் முடிவில் நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களால் கருணாநிதியைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டம்தான் கலைஞர். அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல, தமிழ்கூறும் உலகம் இருக்கும்வரை கலைஞர் என்று உச்சரித்தால் அது கருணாநிதியை அழைப்பதாகவே இருக்கும். அவர் தனது வாழ்நாள் முழுவது தமிழ் இலக்கியத்துக்காக பணியாற்றினார் என்று கூறினால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு அரசியல் உலகில் எந்த அளவுக்கு அவர் பணியாற்றினாரோ அதையும் விஞ்சும் அளவுக்கு தமிழிலக்கியத்திற்கும் பணியாற்றினார் என்பதும் உண்மையே. அவருடைய மாணவப்பருவத்திலேயே தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் கொண்டதின் காரணமாக ‘மாணவ நேசன்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி அதில் அவருடைய எண்ணங்களைப் படைத்து மாணவர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்க முயன்றிருக்கிறார். பத்திரிகைப் பணிகள் 1942இல் முரசொலி எனும் துண்டு பிரசுரத்தை எழுதி வெளியிட்டுவந்தார்.  அவ்வெளியீடு சில மாதங்களிலேயே நின்றுபோனது. 1946இல் மீண்டும் முயற்சித்து அதை மாத இதழாக வெளியிட்டார். 1948இல் மீண்டும் அது நின்றுபோனது. கருணாநிதி அவர்கள் தனது முயற்சியைக் கைவிடாமல் 1953இல் மீண்டும் முரசொலியை மாத இதழாகக் கொண்டுவந்தார். முரசொலியின் மூலம் தனது கருத்துகளை, தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை மிகத்தெளிவாக மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் மாணவர்களும் இளைஞர்களும் திராவிடர் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற உந்துதலாக இருந்திருக்கின்றன. 1960இல் மாத இதழாக இருந்த முரசொலி, நாளிதழாக வெளிவரக் காரணமாயிருந்தவரும் அவரே. அன்று முதல் இன்று வரை திமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக முரசொலி வெளிவந்துகொண்டிருக்கிறது. திரையுலகப் பயணம் கலைஞரின் எழுத்தில் வெளிவந்த திரைப்படங்களும் ஏராளம். சுமார் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றோடு சில திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1952இல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. தனது 20ஆம் வயதிலேயே ஜூபிடர் பிக்சர்ஸ் எனும் படக் கம்பெனியில் அவர் பணியாற்றியபோது அவருடைய வசனத்தில் வெளியான முதல் திரைக் காவியம் ராஜகுமாரி. திரும்பிப்பார், மனோகரா போன்ற திரைப்படங்கள் அவரைத் திரையுலகில் ஜொலிக்க வைத்தன. நாடக உலகில் கலைஞர் பல்வேறு நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதி அவற்றில் அதில் நடித்தும் இருக்கிறார். 1947 தொடங்கி 1979 வரையிலும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் மணிமகுடம், மகான் பெற்ற மகன், மந்திரி குமாரி, தூக்குமேடை ஆகிய சில நாடகங்கள் அவரை நாடக்கலையிலும் வல்லுநராகப் பார்க்க வைத்தன. இலக்கிய உலகில் நீங்கா இடம் புதிய கோணங்களில் புதினங்களைப் படைப்பதிலும் கருணாநிதி கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார். அரும்பு, இரத்தக் கண்ணீர், சுருளி மலை, நடுத்தெரு நாராயணி, புதையல், பெரிய இடத்துப் பெண், ஒரே இரத்தம் ஆகிய புதினங்கள் மிகச்சிறப்புப் பெற்றவை. கலைஞரின் சிறுகதைகள், பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் அரசியல் மற்றும் கட்சித் தலைமைப் பண்பையும் விவரிக்கும் படைப்பாகவே அமையப்பெற்றிருப்பது அவருடைய கொள்கைப் பற்றையும் அரசியல் தெளிவையும் நமக்குச் சொல்வதாகவே காணப்படுகின்றன. பாலைவன ரோஜா, விஷம் இனிது, வேணியின் காதலன், நளாயினி, நுனிக் கரும்பு ஆகிய சிறுகதைகள் படிக்கும்போதே நம்மை மெய் சிலிர்க்கச் செய்யும். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவருடைய படைப்பில் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் கண்ணடக்கம், ஒரு மரம் பூத்தது, கிழவனின் கனவு, சங்கிலிச் சாமியார் ஆகிய அனைத்துமே கொள்கைக் களஞ்சியமாக, பெட்டகமாக வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தொகுப்புகள். அவருடைய இலக்கியப் படைப்புகள் இத்தோடு நின்றுவிடவில்லை. கலைஞரின் கவிதைகள், திரையிசைப் பாடல்கள் ஆகியவற்றோடு திருக்குறள் உரை, சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா, குரளோவியம், சிலப்பதிகாரம், தாய், பூம்புகார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார். தமது வாழ்க்கையைத் தன்வரலாறாக எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற நூலாக வெளியிட்டுள்ளார். 4000க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட நெஞ்சுக்கு நீதி 6 பாகங்களாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கில் விற்னையாகியுள்ளது. கலைஞரின் சொற்பொழிவுகள், பத்திரிகைப் பேட்டிகள் மட்டுமே 5 தொகுப்புகளாக உள்ளன என்பதை மெச்சாமல் இருக்கமுடியுமா!? கட்டுரைத் தொகுப்புகள் 30 தலைப்புகளிலும் சிறு குறிப்புகள் 20 தலைப்புகளிலும் வெளிவந்துள்ளன. கலைஞர் கடிதங்கள் 12 தொகுப்புகள், குடியரசு கட்டுரைகள், கரிகாலன் பதில்கள் என்று அவரது எழுத்துகள் எங்கெங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏராளமான பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1957 முதல் 2018 வரை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய சட்டமன்ற உரைகளின் தொகுப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. அவருடைய மொத்தப் படைப்புகளையும் வாசித்து முடிக்க நமக்கு ஒரு வாழ்நாள் போதாது என்றால் மிகையில்லை. கலைஞரின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் விதமாக வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் தற்போதைய திமுக தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகிறது. ஆனால் கலைஞரின் படைப்புலகப் பங்களிப்புகளை இன்றைய திமுகவினர் பெரும்பாலானவர்கள் சிறிதளவுகூட வாசித்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மையே. கலைஞரின் நூற்றாண்டு தொடங்கும் இந்த வேளையில், அவருடைய படைப்புகள் பொதுமக்களைப் பரவாலாகச் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதே அவருடைய இலக்கியப் பங்களிப்பை நிலை நிறுத்த உதவும். இல்லையேல் அது வெறும் அடையாளமாகவே நின்றுவிடும்.   முகப்புப் படம்: இணையத்திலிருந்து

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

உலகக் கவிதை நாள் /உலக வன நாள் / மார்ச் 21 புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் ‘புலிகள் தினமா’கக் கொண்டாடுகிறது உலகம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்? ஏனெனில் உலகச் சூழலியல் வட்டத்தின் மையமாகப் புலிகள் இருக்கின்றன. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அவற்றுக்கு உணவான மானும் கால்நடைகளும் அங்கு இருக்கவேண்டும். மான் இருந்தால் மானுக்கு உணவான புல் மற்றும் தாவரங்கள் அங்கு இருக்க வேண்டும். தாவரங்கள் வளர வேண்டுமென்றால் அங்கு நீர்நிலைகள் இருக்க வேண்டும். ஒரு காட்டில் நீர்நிலைகள் இருக்கின்றன என்றால் அங்கு தொடர்ந்து மழை பொழிகிறது என்று பொருள். ஓர் இடத்தில் தொடர்ந்து மழை பொழிகிறது என்றால் அங்கு வனச் சூழலும் , வானலாவிய உயர்ந்த மலைகளும் இருக்கின்றன என்று பொருள். இப்படி வளமான ஒரு சூழலுக்கு அடுத்தாற் போல்தான்அதைச் சார்ந்து வாழும் ஊர்களும் இருக்க முடியும். இந்த உலகில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் ஏன் ஒவ்வொரு உயிரும் அவற்றுக்குத் தேவையான உணவு, உடை ,உறைவிடம் ஆகியவற்றோடு நிம்மதியோடு வாழ இந்த சூழலியல் சங்கிலி சமநிலையோடு இருந்தாக வேண்டியது அவசியம். அதைப் பாதுகாக்கிற மையப் புள்ளியாக புலிகள் இருப்பதனால்தான் புலிகளுக்கு முக்கியத்துவமும் புலிகள் தினக் கொண்டாட்டமும். காட்டுக்குப் புலிகள் எப்படி அவசியமோ அப்படித்தான் நாட்டுக்குக் கவிஞர்களும். கவிஞர்கள் இயற்கையின் அழகுகளைப் பாடுகிறவர்களாகவும், சமுதாயச் சமநிலையை நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஓடும் நதிகளும், உயர்ந்த மலைகளும், பூத்துக் குலுங்கும் செடிகொடிகளும், வான் நோக்கி வளரும் மரங்களும், துள்ளி ஓடும் மான்களும், துதிக்கை உயர்த்தும் யானைகளும், கர்ஜனை புரியும் சிங்கங்களும்,பாடும் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும், தட்டான்களும், புல் பூண்டுகளும், புழு பூச்சிகளும் அவ்வளவு ஏன் சிறு கூழாங்கற்கள் கூடஅவர்கள் கண்களுக்கு அற்புதங்களாகவும் அதிசயங்களாகவும் தெரிகின்றன. அவற்றைத் தங்கள் கவிதைகளில் அழகியலோடு பாடி வைக்கிறார்கள். மேலும் அவர்கள் உலகின் ஆதாரமான அறத்தைப் பாடுகிறார்கள். நீதியைத் தங்கள் கவிதைகளில் போற்றி வழிபடுகிறார்கள். அநீதிக்கு எதிரான குரலை எழுப்புகிறார்கள். கனிம வளங்களுக்காக ஒரு மலை உடைக்கப்படுகிறது என்றால், மணல் கொள்ளைக்காகஒரு நதியின் சுரண்டப்படுகிறது என்றால், மரங்களுக்காக ஒரு வனம் மொட்டையடிக்கப்படுகிறது என்றால் அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புகிற முதல் மனிதனாகக் கவிஞன் இருக்கிறான். அவற்றைத் தன் சொந்தச் சொத்தாகவே அவன் நினைக்கிறான். அது மட்டுமல்ல..சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுகிறவர்களின் குரலாக அவன் இருக்கிறான். கண்ணீரைத் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் ஏந்த முடியாதவர்களுக்காகத் தன் சொற்களை ஆயுதமாக ஏந்துகிறான். விவசாயம் அழிக்கப்படும்போதுஉழவர்களின் குரலாக மட்டுமல்ல…. எதிர்காலச் சந்ததியினருக்காக அவன் அறச்சீற்றம் கொள்கிறான். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் மலிந்து வரும் சூழலில் அவர்களின் சார்பாக அவன் கொதித்தெழுகிறான். வருங்காலத் தலைமுறைகளுக்காக வாதாடும் வழக்கறிஞன் அவன். சூரியனுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்திக்கிற சிந்தனையாளன் அவன். அவை ஒன்றோடு ஒன்று கொண்டிருக்கும் இயைபை உணர்ந்து அவை ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் காவலனாகத் தன்னைத் தானே நியமித்துக் கொள்கிறான். அவை மீறப்படும்போது நீதிபதியாகவும் மாறி வாழ்வியல் சட்டங்களை வகுக்கிறான். அவை அற நூல்களாகி காலத்தின் கல்வெட்டுகளாக நிலைக்கின்றன. ஆகவேதான் “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்றான் நம் பாட்டன் மகாகவி பாரதியும். ஒரு கவிஞன் எழுதும் அழகியல் பாடல்கள் அவற்றை வாசிப்பவர்களின் இதயங்களில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன. ஆகவேதான் கவிஞன் வாழ்கின்ற நாடுவளமான பண்பட்ட சமுதாயமாக போற்றப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைப் பாரம்பரியத்துடன் தொடரும் ஒரு சமுதாயமாக தமிழகம் இருந்து வருகிறது. அதுதான் அதன் வரலாற்றுப் பெருமை. அந்தச் சங்கிலி இன்றும் தொடர்கிறது. ஆங்கில வழிக் கல்வி எனும் மொழிக் கொலையினையும் தாண்டி இந்தச் சங்கிலி உயிர்ப்புடன் தொடர்கிறது. ஆரம்ப நிலைகளில் கவிதை எழுதும் ஒரு கவிஞன் கூட மொழியைப் பாதுகாக்கிறவன் என்ற முறையில் போற்றப்பட வேண்டியவனே. ‘உலகக் கவிதை நாள்’ கொண்டாடப்படும் (மார்ச் 21) இன்று ‘உலக வன நாளா’கவும் கொண்டாடப்படுவது எவ்வளவு பொருத்தம்! worldpoetryday internatonaldayofforests

காந்திப் பசுவும் ஏகாதிபத்தியப் புலியும்

காந்திப் பசுவும் ஏகாதிபத்தியப் புலியும்

‘வாழ்க நீ! எம்மான் இந்த வையத்து நாட்டி லெல்லாம்தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னைவாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க! பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்அதனிலுந் திறன் பெரிதுடைத்தாம்அருங்கலைவாணர் மெய்த்தொண்டர் தங்கள்அறவழி யென்று நீ அறிந்தாய்நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை!நெறியினால் இந்தியாவிற்குவருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்துவையகம் வாழ்க நல்லறத்தே!’ என்று தமிழ்நாட்டு மகாகவி பாரதி காந்தியடிகளைப் புகழ்ந்துரைத்தான். இந்தப் பாடலில் ‘ஒத்துழையாமை ‘ என்று காந்தியப் போர் நெறியை பாராட்டிக் குறிப்பிடும் பாரதியார் தனது இந்தியா பத்திரிகைக் கட்டுரைகளில் காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கப் போர்முறையை பாரதி வெகுவாக ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் உரிமைகளுக்காகக் காந்தியடிகள் நடத்தும் போராட்டங்களைத் தமிழ்நாட்டு மகாகவி ஆதரிக்கிறான். ஆனாலும் இந்தப் புதிய அமைதிப் போர்முறைக்கு அவன் பழகாதவன் ஆயிற்றே! ஆகவே காந்தியைப் பசுவாகவும் தென்னாப்பிரிக்க ஏகாதிபத்திய அரசைப் புலியாகவும் சித்தரித்து இந்தியா பத்திரிகையில் கேலிச் சித்திரம் எழுதுகிறான். 1859இலேயே இந்தியர்களின் தென்னாப்பிரிக்கக் குடியேற்றம் தொடங்கியிருக்கிறது. காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க விஜயம் 1893இல்தான். முப்பதாண்டுகளில் ஏகாதிபத்தியம் இறுகிப்போய் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் உரிமைகளின்மீது கோடரி வைக்கும் காலத்தில்தான் காந்தியடிகளின் வருகை நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்த அவரது ஒத்துழையாமை, சட்டமறுப்புப் போர்களும் அவற்றில் அவர் அடைந்த வெற்றிகளும் உலகம் முழுதும் பிரசித்தி பெற்றன. ஒப்பந்தக் கூலிகளாக வந்து முப்பது ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவையே தங்கள் வாழ்நிலமாக மாற்றிக்கொண்ட அந்த எளிய மக்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் சட்டங்களை ஏகாதிபத்திய அரசு அவர்கள் தலையில் இறக்கியது. இந்தக் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்ற காந்தியடிகளையே அந்த எளிய மக்கள் நம்பினர். 1909இல் இந்த மக்களின் பிரதிநிதியாகக் காந்தியடிகள் லண்டன் வரை சென்று ஏகாதிபத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச்சென்று வெறுங்கையுடன் திரும்பினார். நியாயத்தின் குரல்களுக்கு ஏகாதிபத்தியம் அத்தனை எளிதில் செவி சாய்க்குமா என்ன? தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி திரும்பியவுடன் காத்திருந்து காலனி அரசு அவரைக் கைது செய்தது. அவ்வளவுதான், மக்களின் கொதிநிலை வெடித்தது. மிகப்பெரிய மக்கள் எழுச்சி கிளர்ந்து எழுந்தது. இந்த மக்கள் பேரலையின் சீற்றம் இந்தியாவுக்கும் தெரிந்த வேளையில் தமிழ்நாட்டு மகாகவி இந்தக் கேலிச் சித்திரத்தை எழுதுகிறான். போராட்டத்தை ஆதரித்து கட்டுரையில் சீறுகிறான். போராட்டத்திற்கு வீதியிலிறங்கி நிதி திரட்ட முனைகிறான். தன் பங்களிப்பாக ஐந்து ரூபாய் என்கிறான்.கேலிச் சித்திரத்துக்கு விளக்கத்தை ஒரு உருவகக் கதையின் தொனியில் எழுதுகிறான். பழைய புராணக் கதையை எடுத்துக்கொண்டு வருகிறான். காட்டு வழியில் ஒரு கொடும் புலியிடம் அகப்பட்ட பசுவானது, ‘ என் கன்றுக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டேன். அது பசியால் தவித்து நிற்கும். என் கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன். அதுவரை என்னை விட்டுவைக்க வேண்டும். சத்தியமாக நான் என் கடமை முடித்து உன்னிடம் திரும்பிவருவேன்’ என்றது. சொன்னபடி திரும்பியும் வந்தது. இதைத் தன் பாணியில் பாரதி சொல்லிவிட்டு இப்படி முடிக்கிறான். “பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு அதைத் தன்னுடைய சிநேகிதியான மற்றொரு பசுவிடத்தில் ஒப்புவித்துவிட்டு, புலியினிடத்தில் வந்து, ‘என்னுடைய தர்மத்தைச் செய்துவிட்டு வரும்படி உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன். என்னைப் புசியும்’ என்றது. இதைக் கண்ட புலி ஆச்சர்யப்பட்டு ‘அம்மா, ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீச கதிக்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்!’ என்று சொல்லிப் பட்டினியிலிருந்து பிராணனை விட்டது. இப்பசுவைப் போல் நடந்து கொண்ட நமது ஸ்ரீகாந்தி பிரபுவைத் தென்னாப்பிரிக்கப் புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா? தென்னாப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்த புலியைப் பார்க்கிலும் கொடுமையாக (தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்களை இக்கலிகாலத்தில்தான் காணலாம்.” காந்தியடிகள் ஒத்துழையாமையிலோ சட்ட மறுப்பிலோ அரசை எதிர்க்காத காலங்களில் அரசுடன் ‘நல்லுறவு பேணிய பசு’ என்பதை ‘ஏகாதிபத்தியப் புலிகள்‘ நினைவில் கொள்ளமாட்டார்கள் என்பதைப் பாரதி உணர்த்துகிறான்.1909இல் பாரதி, தான் பசுவாக சித்தரித்த காந்தியடிகளை 1919இல் நேரில் சந்தித்து அவரது ஒத்துழையாமையை ஆசிர்வதிக்கிறான். காந்தியடிகள் நமது புராதன தேசத்து மக்களின் விடுதலையில், புனரமைப்பில், நல்லிணக்கத்தில் தளர்வில்லாத அக்கறை கொண்டிருந்தார். தனது கருத்துக்களின் வழியாகவும் செயல்பாடுகளின் ஊடாகவும் அந்த அக்கறையை உறுதியுடன் நிரூபித்துக்கொண்டே இருந்தார். அதுவரை இருந்த போராட்ட முறைகளில் அறிவுஜீவிகளும் மேல்தட்டு நபர்களுமே பங்களித்தனர். காந்தி யுகத்தில்தான் தேசத்தின் மொத்த மக்களும் தேசிய இயக்கத்தில் வந்தனர். விடுதலை இயக்கத்தில் முழுமையான அர்ப்பணிப்பைத் தந்தனர். இத்தனை மக்கள் அவரைத் தொடர்ந்தபோதும் அவர் மீதான எதிர் விமர்சனங்களும் தொடர்ந்தன. அவர் விரும்பியும் சொல்லியும் வந்தபடியே அவர் நெடிய வாழ்வு வாழ்வதையே நிறுத்திவிடலாம் என்று அவரது சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் நினைத்ததை முடித்தார்கள். அந்தத் துன்பகரமான சம்பவம் நடந்து இன்றுடன் முக்கால் நூற்றாண்டு முடிந்து போனது. ஆனால் அண்ணலின் இருப்பு எத்தனை நியாயமானது என்று இன்றைக்கு நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

எப்போதும் தேவைப்படும்  பெரியார்

எப்போதும் தேவைப்படும் பெரியார்

பெரியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை 1931ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. தோழர் ம.வெ. சிங்காரவேலுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர்களுக்கிடையே 1919 முதலே தொடர்பு இருந்தாலும் குறிப்பாக பின்னாளில் ஏற்பட்ட தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மூடநம்பிக்கைகள், அதை ஒட்டிய சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றை வேரறுக்க விரும்பிய ஈ.வெ.ரா. அதற்கான சரியான மனிதர் சிங்காரவேலு என்பதைக் கண்டறிந்தார். ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளிலும் அறிஞராகத் திகழ்ந்த சிங்காரவேலுவே அதற்குச் சரியானவர் என நினைத்தார்; மதித்தார். அறிவியல் அறிவு பெரிதும் இல்லாத அந்தக் காலத்தில் விஞ்ஞானம் தொடர்பான புத்தகங்களைப் படித்ததுடன் கட்டுரையும் எழுதி மக்களுக்கு அறிவுறுத்தி வந்த சிங்காரவேலுவைப் பெரியார் பயன்படுத்திக்கொண்டார். ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற பன்மொழி அறிஞரான சிங்காரவேலுவின் பன்மொழி அறிவைத் தமது பணிக்குப் பயன்படுத்திக்கொண்டார் பெரியார்.பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க கடவுளைப்பற்றியும் சாதி மதங்களைச் சாடியும் அறிவியல் ரீதியான கட்டுரைகளை பெரியாரின் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். பெரியாருக்கு உவப்பான இப்பணி 1931 முதல் 1935 வரை சிறப்பாக நடைபெற்றது. சிங்காரவேலின் தொடர்பால் பெரியார் முழுக்க முழுக்கப் பொதுவுடமைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இதற்கு முழு முதல் காரணம் தோழர் சிங்காரவேலு. தந்தை பெரியார் ரஷ்யாவுக்குப் போய்விட்டு இந்தியா திரும்பிய பிறகு சுயமரியாதை சமதர்ம இயக்கத்தைத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். செல்லுமிடமெல்லாம் குழந்தைகளுக்கு லெனின், ஸ்டாலின், மார்க்ஸ், மாஸ்கோ, ரஷ்யா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார. இவருடன் சேர்ந்து தோழர்கள் ஜீவா, கிசன் போன்றவர்கள் இயங்கி வந்தனர். ஈ. வெ. ராமசாமி நாயக்கர் என்று அறியப்பட்டவர் 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் புறக்கணித்துப் புறம் தள்ளினார். இவரைப் பெரியார் என்று முதலில் அழைத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமானவர்களின் ஒருவரான வழக்கறிஞர் நாகர்கோயில் பி. சி. சிதம்பரம் பிள்ளை ஆவார். அவர் தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஐந்தாவது நிர்வாகியாவார். 1930களில் அவர் எழுதிய ஆலயப் பிரவேசம் என்ற ஆங்கில நூல் பின்னால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் பெரியார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் பற்றி மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, சாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் விளக்கி 1929இல் செங்கல்பட்டில் நடந்த இயக்கத்தின் முதல் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களில் முக்கியமான ஒன்று பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்கவேண்டும் என்பதாகும். எலியின் விடுதலைக்குப் பூனைகள் எங்காவது முயற்சி செய்யுமா? என்று வேடிக்கையாகப் பெரியார் குறிப்பிட்டு, பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதைவிடத் தங்கள் விடுதலைக்காக, சுயமரியாதைக்காக பெண்களே முன் நின்று உழைப்பதே சிறந்தது என்பார். 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் முற்போக்குப் பெண்கள் சங்க மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்வின்போது ஈ.வெ.ரா.வுக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் பெரியார். அந்தப் பட்டத்தை அவர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். தம் வாழ்நாளில் தாம் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால் பெண்களின் கல்விக்காக மட்டுமே பணத்தைச் செலவழிப்பேன் என்று பேசியுள்ளார். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் தன் வாழ்நாளில் அவர் பங்கேற்கவில்லை. பெண் ஏன் அடிமையானாள் ? என்ற புரட்சிகரமான நூலில் பெரியார் கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும், கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாற வேண்டும். கற்புக்காக மனதில் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமை அழிய வேண்டும் என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்துகிறார். தமிழ்மீது தீராக் காதல் கொண்ட பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதை நாம் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றுமில்லை; மிகப் பழைய பாஷை, சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்று இல்லை. நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன் என்கிறார். விஞ்ஞானப் பெருவெளியில் உலகம் விரிந்து விரைந்து கொண்டிருக்க தமிழைப் பிற்போக்குப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக்கொள்ள பெரியார் விரும்பவில்லை. துருப்பிடித்த கருத்துக்களைத் துடைத்து வைத்துக் கொண்டிருப்பதா தமிழ்? எல்லாவற்றையும் சொல்லி முடித்தாகிவிட்டது என்று முற்றுப்புள்ளி வைப்பதற்கா தமிழ்? பக்தியைக் கழித்துவிட்டால் தமிழில் என்ன இருக்கிறது? இந்தப் பழஞ்சரக்கை வைத்துக்கொண்டு உலகச் சந்தையில் எப்படி நிற்பது, விற்பது என்ற அறிவுத் துயரத்தால்தான் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறினார். ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக, தமிழ்ப் புலவராக இருக்க நேர்ந்துவிட்டால் அவர்கள் உலகம் அறியாப் பாமரர்களாகவே இருப்பார்கள். தமிழ் மொழி மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதைத் தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாக கூறுகிறேன் என்றார். எழுத்து, சொல், கருத்து, அறிவு, பயன்பாடு, படைப்பிலக்கியம் போன்றவற்றைக் காலந்தோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படி புதுப்பித்துக்கொள்ளாத மொழி காட்டுமிராண்டி மொழிப் பட்டியலில் சேர்ந்து விடுமே என்று கவலை கொண்டார். தமிழ் எழுத்துக்கள் ஒலி வடிவம் சார்ந்தவை. 247 ஒலி வடிவங்களோடு வழங்கி வரும் தமிழ், எழுத்துக்கள் மிகுதியான ஒரு மொழி என்பதால் கற்பதற்குக் கடினம். அறிவியல் கருவிகளில் ஏறுவதற்கு இடர்ப்படுகிறது. சுமைகள் குறைந்த பயணம் எளிதாக இருப்பது போல எழுத்துக்கள் குறைந்த மொழி, பறவைப் பாய்ச்சலில் பயணம் ஆகலாம். தமிழில் 247 ஒலி வடிவங்களை 131ஆகக் குறைத்த பெருமைக்குரிய பெரியார் குடியரசு, பகுத்தறிவு, விடுதலை, உண்மை ஆகிய தமது பத்திரிகைகளில் சீர்திருத்த எழுத்துக்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். பண்டிதர்களோ பல்கலைக்கழகமோ செய்யத் துணியாத இந்தச் சீர்திருத்தத்தைச் செய்தவர் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத பாமர மேதை பெரியார். பல துறைகளில் தடம் பதித்த பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாட்கள். 8200 நாட்களை சுற்றுப்பயணத்திற்குச் செலவிட்டார். அது 8 லட்சத்து 20ஆயிரம் மைல்கள் பயணத்திற்குச் சமமாகும். அதாவது பூமியின் சுற்றளவைப் போல 33 மடங்கு சுற்றி வந்ததற்கு ஈடாகும். 21,400 மணி நேரம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை ஒலிப்பதிவு செய்து ஓட விட்டால் இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் பதினோரு நாட்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இயற்கை நமக்குத் தேவைப்படுவதுபோல எப்போதும் நமக்குத் தேவைப்படுபவர் பெரியார். தமிழ்வெளியில் பெரியார் என்ற பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது

காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது

முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்களின் காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்கள் பாண்டியர்¸ சேரர் மற்றும் பல்லவர் காலச் செப்பேடுகள் குறித்து மூன்று நூல்களையும் வடகரை, பாதாளி, மதாம் உள்ளிட்ட படைப்புகளையும் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களுடன் இணைந்து வந்தவாசிப் போர் மற்றும் கம்பலை முதல் என்ற வரலாற்றுக் கட்டுரை  நூல்களையும் தந்துள்ளார். முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்களை ஆனந்த ரங்கப்பிள்ளையின் தினப்படி சேதிக் குறிப்பு என்ற மகத்தான பதிப்பு முயற்சியின் பதிப்பாசிரியர்களில் ஒருவராக அறிந்துகொண்ட தருணத்தில்¸ அவரது 1801 நாவலை வாசித்தேன். தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டில் முடிவுக்கு வந்த எல்லாவிதமான சுதந்திர முயற்சிகளையும் அதாவது குறிப்பாக, தென் தமிழகத்தில் சென்ற 18ஆம் நூற்றாண்டின் இறுதி இரு ஆண்டுகளில் மையம் கொண்டிருந்த புரட்சிகரப் போராட்டங்களின் முடிவுக் காலத்தை இத்தனை விரிவாகப் புனைவாக்கம் செய்த முயற்சி இதற்கு முன்பு எனக்குத் தெரிந்து இல்லை. ‘1857இல் நடந்த சிப்பாய்க் கலகத்தை இந்திய அரசு இந்தியாவின் முதல் சுதந்திரக் போர் என ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. அப்படிப் பார்த்தால் டெல்லி சிப்பாய்க் கலகம் நடப்பதற்கு ஐம்பத்து ஓரு வருடங்களுக்கு முன்பே 1806இல் வேலூர்ப் புரட்சி நடந்தது. அதுவும் சிப்பாய்களால் நடத்தப்பட்டதுதான். இந்தியா போன்ற பெரும் ஜனநாயக நாட்டில் மக்களின் விடுதலைக்காகச் சிப்பாய்கள் போராடினர் என்று பெருமையுடன் குறிப்பது ஜனநாயக மாண்பிற்கு இழுக்கு. மக்கள் புரட்சியே ஜனநாயகத்தில் மதிப்புமிக்கது. சீருடை அணிந்து மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, சம்பளம் கொடுப்போரை எதிர்ப்பது எந்த நிலையிலும் விடுதலைப் போராட்டம் ஆகாது. மருது சகோதரர்கள் தலைமையில் நடந்த தென்னிந்தியப் புரட்சியை முதல் சுதந்திரப்போராக அறிவிக்க வேண்டும்’ என்று தென்னிந்தியப் புரட்சி என்ற நூலை வெளியிட்டுள்ள வரலாற்று ஆய்வாளர் திரு.ராஜய்யன் குறிப்பிட்டுள்ளதை 1801 நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் நாவலாசிரியர் இராஜேந்திரன். 1801 நாவலும் அதன் தொடர்ச்சியான காலா பாணி நாவலும் தமிழ்நாட்டின் மகத்தான புரட்சிகர விடுதலைப்போரின் வரலாற்றையும் அதன் பின்விளைவுகளையும் பேசுபவை. 1801 நாவல், 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சாகித்ய அகாதமி விருதுக்கு இறுதிவரை போட்டியில் இருந்தது. அந்த நாவலின் தொடர்ச்சியாக அவர் எழுதிய காலா பாணி நாவலுக்குத்தான் இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. 1799 -1801 புரட்சியின் அடுத்த கட்டத்தைச் சொல்லுகிற நாவல்தான் காலா பாணி. அந்த வகையில் தகுதிமிக்க நாவலுக்கே விருது கிடைத்திருக்கிறது. வரலாற்று நாவல் என்பது வெறும் சாகசக் கதைகள், போர்க்கள வருணனைகள் என்பதாக மட்டுமே அறியப்பட்டிருக்கிற தமிழ்ச் சூழலில், தென் தமிழகத்தில் நடந்த மகத்தான காளையார் கோவில் போரின் முடிவில் வெள்ளையர்களிடம் கைதிகளாகி நாடுகடத்தப்பட்டவர்களின் கதையைச் சொல்கிற காலா பாணி நாவல் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. விருது பெற்ற காலா பாணி நாவலையும், விருதாளர் மு.இராஜேந்திரன் அவர்களையும் சுவடு இதழின் சார்பிலும் சுவடு பதிப்பகத்தின் சார்பிலும் பாராட்டி மகிழ்கிறேன்.

பேசாத காரியம்

பேசாத காரியம்

பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பாரதியை எத்தனைமுறை எழுதிப்பார்த்தாலும் சலிக்காது. இன்று அவனது நூற்றுநாற்பதாவது பிறந்தநாளில் அவனுடைய குருமணி நிவேதிதா தேவியுடனும் பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத அவனுடைய பாடல் ஒன்றுடனும் பாரதியைக் கண்டு மகிழ்வோமா? சகோதரி நிவேதிதா அயர்லாந்து தேசத்துப் பெண்மணி. சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக ஆளுமையால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தவர். பெண்களுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்ட விவேகானந்தரின் முயற்சிக்கு உதவியாக இருப்பதற்காக விவேகானந்தரால் அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். 1902இல் விவேகானந்தரின் மறைவுக்குப்பிறகு தேச விடுதலைக்கான புரட்சிகர ரகசிய இயக்கங்களில் அவர் ஈடுபட்டிருந்தார். 1905இல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்த நிகழ்ச்சி வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் தேச பக்தர்களை ஆவேசத்தில் தள்ளியது. சுதேசி இயக்கம் வங்கத்தில் தொடங்கி தேசம் முழுவதும் பரவியது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தளபதியாக வ.உ.சி.யும் இயக்கத்தின் பரப்புரையாளனாக மகாகவி பாரதியும் விளங்கினர். 1905 டிசம்பரில் காசி நகரில் நடந்த காங்கிரசுக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேசபக்தனாகவும் பத்திரிகையாளனாகவும் பாரதி சென்றிருந்தான். திரும்பும்வழியில் கல்கத்தாவில் டம்டம் பகுதிக்கு வந்திருந்த நிவேதிதாவை முதன்முதலாகச் சந்தித்தான். இந்த நிகழ்ச்சியை பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் தங்கள் படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரதி தனது வாழ்நாளில், தானே அச்சிட்டு வெளியிட்ட நூல்களில் முதல் நான்கு நூல்களை நிவேதிதா தேவிக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியார் வரலாற்றை ‘பாரதியார் சரித்திரம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் அவரது மனைவி செல்லம்மா பாரதி. தமது குருமணியாக பாரதியார் வரித்துக்கொண்ட சகோதரி நிவேதிதாவைப்பற்றியும் அவரை பாரதி சந்தித்த வரலாற்றையும் சொல்லவந்த செல்லம்மா பாரதி அந்தக் கட்டுரைக்கு ‘குரு உபதேசம்’ என்று தலைப்பிட்டதோடு அக்கட்டுரையின் முடிவில், அந்தச் சந்திப்பை ‘ஆனந்தக் களிப்பு மெட்டில்’ பாரதியார் பாடியிருப்பதாகச் சொல்லி இந்தக் கவிதையை நமக்குத் தந்துள்ளார். ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் – எனைச்சூதாய் தனிக்கவே சும்மா யிருத்திமுன்னே ஏதுமில்லாதே – சுகமுற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப்பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தேபெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்பேசாத காரியம் பேசினார் தோழி’ செல்லம்மா பாரதி எழுதிய ‘பாரதியார் சரித்திரம்’ நூலில் அவர் தந்திருக்கிற இந்தக் கவிதை, பெரும்பாலான பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக்கிடைக்கவில்லை. ஒருவேளை நம் கவனத்திற்கு வராத தொகுப்பு வேறெதிலும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.   இந்தக் கவிதையில் ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்?’ என்று செல்லம்மாவிடம் வியப்போடு தொடங்குகிற பாரதி, ‘பெற்றதை ஏதென்று சொல்வேன்?’ என்ற மர்மத்துடன் தொடர்ந்து, ‘பேசாத காரியம் பேசினார் தோழி’ என்று முடிக்கிற அழகைப்பாருங்கள். மனைவியைத் ‘தோழி’ என்றழைக்கிற சமத்துவப் பாங்கினை பாரதியார் கற்ற இடம் சகோதரி நிவேதிதாவின் சந்நதியில்தான். காரியம் என்ற சொல்லுக்குச் செயல் என்றோ வேலை என்றோ பொருள் கொள்கிறோம். ‘பேசாத காரியம்’ என்பதும் அந்தச் சொல்லாடலைப் ‘பேசினார்’ என்று முடிப்பதும் எங்ஙனம்? தனது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலை (1909 ஜனவரி) சமர்ப்பணம் செய்கிறவேளையில் அந்தப் ‘பேசாத காரிய’த்தின் சாயல் தொனிக்க பாரதி எழுதுவதைப் பார்க்கலாம். ‘எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு’ என்று எழுதுகிறார். ‘பேசாத காரியம்’ எதுவென்று மேற்கண்ட வரிகளில் நமக்குப் புலனாகிவிடுகிறது. அது ‘சொல்லாமல் உணர்த்துவதாம்’. மீண்டும் செல்லம்மா பாரதியிடம் வருவோம். பாரதியார் நிவேதிதா தேவியிடத்து என்ன உபதேசம் பெற்றார் என்பதைத் தன்னிடம் ‘ரொம்பவும் உணர்ச்சியுடன்’ விவரித்ததாகவும் ஆனால் அச்சம்பவத்தைத் தன்னால் ‘விரித்துக்கூற முடியவில்லை’ என்றும் செல்லம்மா எழுதியிருக்கிறார். நிவேதிதாவிடம் பாரதி பெற்ற உபதேசம் எத்தகையது என்றும் அவரது வாக்கின் மூலமாகவே அறியலாம். 1908 ஜனவரியில் தனது முதல் நூலை வெளியிட்டு, அதனைச் சகோதரி நிவேதிதா தேவிக்குச் சமர்ப்பிக்கிறபோது, ‘ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதற்கொப்ப, எனக்கு பாரத தேவியின் சம்பூர்ண ரூபத்தைக்காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று உணர்ச்சி பொங்க எழுதுகிறார். நாம் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கவிதையில், ‘முன்னே ஏதுமில்லாதே – சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார். பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப் பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற வரிகளில் அடங்கியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தின் பொருளை இப்போது தெரிந்துகொள்ளமுடிகிறது. பாரதி, தனது குருமணி சந்திப்பின் வருணிப்பில் அதைக் கீதைக் காட்சியுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கும் ‘பாரத மாதாவின் சம்பூர்ண ருபத்தைக் காட்டி’ என்ற சொல்லாட்சியையும் நாம் தேர்ந்துகொண்ட கவிதையின் ‘பார்த்த விடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொற்றொடரையும் இணைத்துப் பார்க்குமிடத்து அந்தக் காட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. அந்தச் சந்திப்பை, பாரதியார் பற்றிய ஆய்வு நூல்களில் ஆங்காங்கே பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் எடுத்தாண்டிருக்கிற செய்திகளின் அடிப்படையில் நாம் இந்த கட்டுரைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கவிதை வரிகளின் பேசுபொருளைத் தாண்டிவிடாத எல்லைக்குள் நின்றுகொண்டு சுவைத்துப் பார்க்கலாம். சமூகப் பிரக்ஞைமிக்க கவிஞன், தான் வாழ்ந்தகாலத்தின் பிரதியைத் தனது படைப்புகளில் பதிந்துவைக்கின்றான். தனது காலத்தில், தான் இயங்கும் கருத்துவெளியில் துலங்கித்தெரிந்த தன் சமகால ஆளுமையான சகோதரி நிவேதிதாவால் பாரதி ஆகர்சிக்கப்பட்டிருந்ததை இந்தக் கவிதையும் நிவேதிதாவுக்கு பாரதியின் ஆக்கங்களில் செய்யப்பட்டிருக்கும் சமர்ப்பணங்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்தக் கவிதை, உள்ளடக்கத்தில் ஒரு சம்பவத்தை விவரிப்பதுபோலத் தோன்றுவதைத் தாண்டி, பாரதி என்ற ஆளுமை செதுக்கப்பட்டதின் வரலாற்றையே பிணைத்துக்கொண்டுள்ள கதையை பாரதியே சொல்வதாகும்.  அது என்ன? 1903லேயே தேசபக்த இயக்கத்திற்கு பாரதி வந்துவிட்டதை அவன் வார்த்தைகளாலேயே அறிகிறோம். 1909இல் தான் வெளியிட்ட ‘ஜென்ம பூமி’ நூலுக்கு அவன் எழுதிய முகவுரையில் ‘சென்ற சுபகிருது வருஷத்திலே’ தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியதாகவும் தான் அதில் ஈடுபட்டதாகவும்’ கூறுகிறான். சென்ற சுபகிருது வருஷம் என்று அவன் குறிப்பிடுவது 1902 ஏப்ரல் முதல் 1903 மார்ச்வரையிலான காலமாகும். இந்தக் காலத்தில் 1902 ஜனவரிவரை பாரதி காசியில் இருந்தார். ஆகவே இந்த நவீனமார்க்கத்தில் 1903 முதலே ஈடுபட்டிருந்த தேசபக்தன் பாரதி, 1905இல் வங்கத்தில் தொடங்கிய சுதேசிய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த விவேகானந்தரின் சீடர்கள் உள்ளிட்ட பல தேசபக்தத் தலைவர்களை நேரடியாகவும் பத்திரிகையாளனாகவும் அறிந்திருந்தான். தமிழகத்தில் அந்த சுதேசிய இயக்கத்தின் பரப்புரையாளனாக பாரதி மாறியிருந்த காலத்தில் வங்கத்தில் அந்தத் தலைவர்களில் ஒருவராக இயங்கிய நிவேதிதா தேவியை ஆர்வமுடன் சந்தித்திருக்கிறான். அந்தச் சந்திப்புபற்றி செல்லம்மா பாரதியின் கருத்துக்களை ஒட்டியே பாரதியார் வரலாற்றை எழுதிய இரா.அ.பத்மநாபன் தனது ‘சித்திர பாரதி’யில் குறிப்பிடுகிறார். பாரதியே தம்மிடம் சொன்னதாக திரு.வி.எஸ்.குஞ்சிதபாதம் என்ற பாரதி அன்பர், பாரதி – நிவேதிதா சந்திப்பை ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இவரது கட்டுரை திரு.கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்கள் பதிப்பித்த ‘பாரதி விஜயம்’ தொகுப்பில் படிக்கக்கிடைக்கிறது. 1905 காசிக் காங்கிரசிலும் 1906 கல்கத்தா காங்கிரசிலும் சகோதரி நிவேதிதா அழைக்கப்பட்டு பார்வையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஏனெனில் தீவிர இரகசிய இயக்கங்களில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு காங்கிரசில் நேரடிப் பங்கேற்பு அக்காலத்தில் அனுமதிக்கப்படவில்லை. டம்டம் நகரில் ஒரு மாளிகையில் இரகசியக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்குச் சகோதரி நிவேதிதாவும் வந்திருந்து பேசுகிறார். பாரதியும் அவரது நண்பர்களும் அவரைச் சந்திக்கின்றனர். பாரதி சில பாடல்களைப் பாடுகிறார்.  நிவேதிதாவும் பாரதியும் உரையாடுகின்றனர். பாரதி திருமணமானவர் என்று தெரிந்துகொண்டதும் மனைவியை அழைத்து வராததன் காரணத்தைக் கேட்கிறார் நிவேதிதா. ‘அவ்விதம் பொது இடங்களில் சரிசமமாக மனைவியை அழைத்துவரும் வழக்கம் இல்லை’ என்றும் அவ்வாறு ‘மனைவியைக் காங்கிரசுக்கு அழைத்துவருவதால் பயன் என்ன கிடைக்கப்போகிறது?’ என்றும் பாரதி மிக இயல்பாகப் பதிலளிக்கிறார்.  சகோதரி நிவேதிதா கொதித்துப்போகிறார். ‘சமூகத்தில் பாதியான பெண்களை அடிமையாக வைத்துக்கொண்டே மறுபாதிமட்டும் விடுதலைபெறமுடியாது. உன்னைப்போன்ற படித்தவர்களே பெண்களோடு சமத்துவம் பேணவில்லையெனில் எப்படி இந்தத் தேசத்தில் சமூகச் சீர்திருத்தங்கள் மலரும்? பெண்களும் ஆண்களுக்கு நிகராகப் பொது இயக்கங்களில் வராதவரை இந்தத் தேசத்தின் விடுதலை சித்திக்கப் போவதில்லை’ என்றெல்லாம் பாரதியைக் கண்டித்துப் பேசுகிறார். ‘இனியேனும் மனைவியை உன் இடதுகையெனக் கருது. மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி வா’ என்கிறார். இதைத்தான் பாரதி, ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்’ என்று குறிப்பிடுகிறார். பிறகு நடந்ததை திரு.குஞ்சிதபாதம், பாரதி தம்மிடம் கூறியதாகத் தாம் எழுதிய கட்டுரையில் விவரிக்கிறார். ஒரு தருணத்தில் பாரதியைக் கைப்பிடித்து மாளிகைக்கு வெளியே தனியே அழைத்து வந்த நிவேதிதா, பாரதியை அங்கிருந்த ஒரு ஆலமரத்தடியில் நிறுத்தி பாரதியிடம், ‘அதோபார், பாரதமாதாவின் அற்புத தரிசனத்தை’ என்றாராம். பாரதியார் அவர் காட்டிய திசையில் பார்க்கிறார். நிவேதிதாவின் வார்த்தைகள் அத்தனைச் சக்தி மிக்கவையா என்ன! பாரதி பாரதமாதாவின் சம்பூர்ண ரூபத்தைக் காண்பதாகப் பிரமை கொள்கிறார். ‘எனைச் சூதாய் தனிக்கவே சும்மா யிருத்தி முன்னே ஏதுமில்லாதே –  சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்.’ ‘பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொல்லாடல் இந்த ஆவேசப் பரவசத்தையே நம் கண்முன் நிறுத்துகிறது. ‘பாரத மாதாவின் ஆணையைக் கேட்டுக்கொள். உன் கவியாற்றலை அன்னையின் சேவைக்கே அர்ப்பணிப்பாயாக’ என்ற நிவேதிதாவின் குரல் பாரதியின் உள்ளத்தின் உள்ளே ஒலிக்கிறது. சகோதரி நிவேதிதா பாரதியைத் தொட்டுப் பிரமை கலைக்கிறார். அந்த ஆலமரத்தின் இலை ஒன்றைப் பறித்து பாரதியிடம் கையளித்தார். தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரததேவியின் தொண்டிற்கே என்ற சங்கல்பம் போல பாரதி அதை வாங்கிக்கொண்டார். அந்த ஆலிலைப் பிரசாதத்தை வெகுகாலம் பாரதி பொக்கிஷம்போல் பாதுகாத்துவந்தார் என்று செல்லம்மா கூறுகிறார். ‘சற்றும் பேசாத காரியம் பேசினார் தோழி’ என்ற சொற்றொடரால் பாரதி ‘குருமணியின் தரிசன’த்தைப் பேசுகிறார். ‘அதன்பிறகு தம் உள்ளத்திலிருந்து தேசபக்தி ததும்பிக்கனிந்த பாடல்கள் வெள்ளமாய்க் கொட்டலாயிற்று’ என்றாராம் பாரதியார். நிவேதிதா தேவியுடனான சந்திப்புக்குப்பிறகு மகாகவி பாரதி தனது பாடல்களிலும் கட்டுரைகளிலும் பெண்ணியக் கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். 1906இல் அவர் பேசியதன் வீச்சு பின்னாளில் 1920களில் பெரியாரியத்தில் பூரணம்பெற்றது என்பதை அறிகிறோம். சாதி மறுப்பு மற்றும் பெண்ணியக் கருத்துகளின் ஆரம்பம் இந்தச் சந்திப்பு என்பதை இந்தத் தருணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்.

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

மனிதர்களை அடிமைப்படுத்தி, சந்தையில் அவர்களை நிறுத்தி விற்பனை செய்த வரலாறுகளைப் படித்திருக்கிறோம். கிளர்ந்தெழுந்த அடிமைகள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட கதைகளைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அடிமை வணிகங்கள் இல்லாததாக இன்றைய உலகம் மாறிவிட்டது என்று நிம்மதியாகப் பெருமைப்படுகிறோம். ஆனால் உண்மையில் அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா? நவீன காலத்து அடிமைமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு பதிவு செய்திருக்கிறது. பாலியல் தொழில், கொத்தடிமை, கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை இவற்றில் குறைந்தது 4 கோடிப் பேர் சிக்கியிருக்கிறார்கள். நாடுவிட்டு நாடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டுக்குள்ளேயே மனிதக் கடத்தல் நடக்கிறது. இவற்றுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதில் பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. உலக அளவில் சுமார் 12.16 லட்சம் கோடி ரூபாய் லாபம் குவிக்கப்படுகிறது. உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்மம் மட்டுமின்றி இவர்கள் அனுபவிக்கிற உடல் நோய்கள் உள்ளிட்ட துயரங்களும் அவமதிப்புகளும் ஏராளம். மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையாக இருக்கக்கூடிய பழங்குடியினர், பூர்வ குடியினர், ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட, வஞ்சகங்களுக்கு எளிதில் இரையாகக்கூடிய மக்கள் நவீன அடிமை வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், மனநலம் குன்றியோர், உடல் ஊனங்களுக்கு உள்ளானோர் போன்ற எதிர்த்துநிற்க முடியாதவர்கள் வலுக்கட்டாயமாகவோ, பணத்தைக் காட்டியோ, சூழ்ச்சி செய்தோ கடத்தப்படுகிறார்கள். குழந்தைகளில் நான்குக்கு ஒரு குழந்தை வீதம் கடத்தப்படுகிற தகவல் நெஞ்சை உறைய வைக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? அடிமைத்தனத்தை ஒழிப்பது என்பது அ, டி, மை என்ற மூன்று எழுத்துக்களை அழிப்பதல்ல. நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கச் செயல்படுவோம். அவ்வாறு செயல்படுகிறவர்களோடு சேர்ந்தாவது நிற்போம். இந்தத் தகவல்களை சக மனிதர்களுக்குச் சொல்வோம். நவீன பொருளாதார அடியாட்களான அரசாங்கங்களின் கொள்கைகளும் பாராமுகங்களும் இதற்கொரு காரணம் என்பதையும் சேர்த்தே சொல்வோம். அழகுக்கு அடிமை, அன்புக்கு அடிமை, கவிதைக்கு அடிமை, காதலுக்கு அடிமை… என்பதாகவெல்லாம் உணர்ச்சி மிகுந்து பேசுவோமே, அதை நிறுத்திக்கொள்வோம். எதற்காகவும் யாரும் யாருக்கும் அடிமையாவதை மறுப்போம். இன்று (டிசம்பர் 2) உலக அடிமைத்தன ஒழிப்பு தினம்.

தொலைந்த நூலகம்

தொலைந்த நூலகம்

அறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அஞ்சலி ஒரு பல்கலைக் கழகம் கலைந்துவிட்டதுஒரு நூலகம் தொலைந்துவிட்டது ஓர் அவை ஒரு சபை என்றால்அதில் ஔவை இருந்தால்அதற்கு ஒரு கௌரவம் கடற்கரையோபுகைவண்டி நிலையமோஅவர் இருக்கும் இடம்தமிழ்ச்சங்கம் ஆகிவிடும் அங்கே தமிழ் விளையாடும்அங்கே கவிதை பூத்துக்குலுங்கும்கலைகள் அங்கே களைகட்டும் அறிஞர்களின் அறிஞரைஇழந்துவிட்டது தமிழ்புலவர் கோபோய்விட்டார் நம்மை விட்டு ஒரு பாடலுக்கு அவர் உரை சொல்வதைமூல ஆசிரியன் நேரில் கேட்டால்நிச்சயம் அவரைமுத்தமிட்டு உச்சிமுகர்வான் இயல் இசை நாடகம்மூன்று தமிழும் அறிந்தவர் தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கியம்அவரது நுனிநாக்கில் இருந்தது ஆங்கில இலக்கியம்தோதறிந்துதுணைவரும் அவருக்கு தரையே மேடை, பேச்சே உரைமேடை தேவை என்றால்சம்பிரதாயத்துக்காகப் போடலாம் 24 மணி நேர அறிஞர்உலக வரலாறு, தமிழ்ப் பண்பாடுஇரண்டும் இணையும் புள்ளியைத்துல்லியமாக ஆய்ந்தறிந்த பேராசிரியர் இலக்கணம் எனும் இரும்புக் கடலைஇவருக்கு மட்டும்பஞ்சு மிட்டாயாக இளகும்திருக்குறளும் சிலம்பும்அந்நியோனியமாய் அவர் நாவில் பழகும் மேடையேறிப் பேசும்போதுஎங்கிருந்தோ யார் யாரோபொருத்தமான நூல்களைநம் கண்ணுக்குத் தெரியாமல்அவருக்கு நீட்டுவார்கள்அபூர்வமான மேற்கோள்களைஅவர் கண்களில் காட்டுவார்கள் கம்பனோடு ஷேக்ஸ்பியரைக்கைகுலுக்க வைப்பார்கபிலரையும் கீட்சையும்தோளோடு தோள்கைபோட்டு நடக்கவைப்பார் தொல்காப்பியர் திருவள்ளுவர் எல்லாம்அவரது தோழர்களோகம்பன் இளங்கோ பாரதி எல்லாம்அவருக்கு நண்பர்களோஎன்று நினைக்கத் தோன்றும் நேற்றைய பெருமையை மட்டும் அல்லஇன்றின் அருமையும் அறிந்தவர் இன்றைய இலக்கியம் வரைக்கும்அவரது பார்வை படர்ந்ததுஆனால் இந்த நாள்ஏன் இப்படி முடிந்தது? எங்கு காண்போம் இனிஇவர் போல் ஒருவரை?எக்காலம் அடைவோம்இவர் போல் ஓர் அறிஞரை?

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

வ. உ. சி. நினைவுநாளில் அவர் புகழ் பாடும் கவிதை நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனகடலிலும் நீசுதந்திரக் கொடிபறக்கவிட்டாய் கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்இன்னும் பட்டொளி வீசிப்பறக்கிறது பாரெங்கும் நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீபொருள் ஈட்டியிருக்கலாம் மக்கள் மன்றம் வந்துஉரிமைக் குரல் கொடுத்ததால்நீதிமன்றம் கொண்டுபோய்நிறுத்தினார்கள் உன்னை ஆம்…வழக்கறிஞராகப் போகவேண்டியநீதிமன்றத்துக்குகுற்றவாளியாகக் கொண்டு போய்நிறுத்தியது காலம் கண்ணை மூடிக்கொண்டுதண்டனையும் கொடுத்தாள்அன்று கோலோச்சியஆங்கில நீதி தேவதை நீதி தேவதையா?அநீதி தேவதையானஅவள் வழங்கியதோஇரட்டை தீவாந்திரம் அத்தோடு மூழ்கியதுஉன் வாழ்க்கைக் கப்பல் முள்ளை முள்ளால்தான்எடுக்க வேண்டும் என்பதால்கப்பலில் வந்த வெள்ளையனைகப்பலோட்டியே கப்பலேற்றலாம்என நீ நினைத்தாய் சட்டம் படித்த உன் நெஞ்சில்இருந்தது நீதிஅதனால் உன் முள் கூடதராசு முள்ளாகத்தான் இருந்தது வணிகம் செய்ய வந்துஆட்சியைப் பிடித்தவெள்ளையன் வைத்திருந்ததோவிஷம் தடவிய முள் ஆயுள் தண்டனை விதித்துசிறையில் அடைத்துஉன் சிறகுகளைப் பிய்த்து எறிந்ததுஆங்கில ஏகாதிபத்தியம் செக்கிழுத்து செக்கிழுத்துசிறையிலேயே நீசிதைந்து போனாய் விடுதலை அடைந்து வெளியே வந்ததும்உன் துடுப்புகளையும்உடைத்துப் போட்டதுஎமது அலட்சியம் ஏற்கனவே உடல் தேய்ந்திருந்த நீஅதனால் உள்ளமும்ஓய்ந்து போனாய் அடியோடு வீழ்ந்துபோனதுஅரசோடு போட்டி போட்ட உன்அகண்ட பொருளாதாரம் அன்றாட வாழ்க்கைக்கேதள்ளாடும் நிலைக்குப் போனதுஉன் வாழ்வாதாரம் பின் உயிர் வாழ்ந்த நாளெல்லாம்கொடும் வெயிலானதுகடன்காரர்கள் பட்டியலேஉன் உயிலானது கடிதம் எழுதி எழுதியேகாலாவதி ஆனதுன் காலம் கணக்குப் பார்த்தாதீர்க்க முடியும் உன் தியாகத்தை? கடலில் கரைத்த பெருங்காயமானதுஉன் தியாகம்கண்ணீராலும் ஆறாத பெருங்காயமானதுஎங்கள் இயலாமை காந்தி கணக்கானதுஉன் வாழ்வு மன்னிக்கச் சொல்லிஉன் முன் மன்றாடுவதன்றிவேறொன்று தோன்றவில்லை எனக்கு இவ்வளவு நெருக்கடிகளுக்கிடையேஎப்படி உனக்குள்அப்படி ஒரு இலக்கிய தாகம்? கடலையே குடித்துவிடுவதுபோல்எழுதித் தள்ளியிருக்கிறாய்! பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தாய்ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தாய்கவிதை எழுதினாய்உரை எழுதினாய்சிறையிலும் எழுதினாய் எங்கள் பாரதியின் தோழனேஉன்னை எழுதாமல் இன்று நான்வேறு யாரை எழுதிஎன்ன பயன்? கப்பலால் கவிழ்ந்தகலங்கரை விளக்கேஒன்றை மட்டும் யாரும்மறைக்கமுடியாது எங்கே எப்போதுகப்பலைப் பார்த்தாலும்உன் ஞாபகம்தான்எங்கள் நெஞ்சில் எழுகிறது ஏனெனில்தேசத்தின் முதல் சுதந்திரக் கப்பல்உன்னுடையதல்லவா?அதில் பட்டொளி வீசிப் பறந்ததுஇந்த மண்ணின் மானம் அல்லவா? அதிகாரத்துக்கு அஞ்சாமல்நெஞ்சு நிமிர்த்திய வீரனேசட்டத்தால் போராடிய சூரனே சதி காரத்தால் நீ வீழ்ந்திருந்தாலும்இந்திய விடுதலை வரலாற்றில்என்றென்றும் ஒளிவீசும் அத்தியாயம்உன் சரித்திரம் காலக் கடலில் கரைந்து போகும்எத்தனையோ மனித வாழ்க்கையில்என்றென்றும் கரையாமல் வாழும்கப்பல் ஓட்டிய உன் கம்பீரம் இந்தியப் பெருங்கடல் அலைகள்உன் பெயரை ஓயாமல்பாடிக்கொண்டே இருக்கும் எங்கள் நெஞ்சின் அலைகளும்.

எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்

எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்

ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த எழுவரும் இன்று (11.11.2022) உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு போன்றவற்றில் நம்மைப் பின்னோக்கி இழுக்கும் அதே நீதிமன்றம், இப்படியான தீர்ப்புகளையும் அவ்வப்போது வழங்குவதே நமக்கான ஆறுதலாகவும் நீதிமன்றத்தின் மீதான பிடிப்பாகவும் இன்னும் நீடிக்கிறது. எழுவர் விடுதலையின் கிரெடிட்டை எடுத்துக்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், தனி நபர்கள் இப்படி ஏராளனமானோர் வரிசையில் இருக்கிறார்கள். ஆனாலும்கூட, இந்த விடுதலைக்கு – தீர்ப்புக்கு ஒட்டுமொத்தமாக எவரொருவரும் உரிமை கோர முடியாது. இருப்பினும், எந்த ஒன்றுக்கும் தொடக்கப்புள்ளி என்ற ஒன்று வேண்டுமல்லவா? ஒரு கட்டடம் கட்ட முதல் கல், ஒரு கோலம் போட முதல் புள்ளி, ஒரு காடு வளர்க்க முதல் விதை.. இந்த வரிசையில், எழுவர் விடுதலைக்கு முதல் விதை போட்டவர் யார்? ஒருவேளை,  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்குத் தூக்கு உறுதி செய்யப்படாமல், அவர்களின் கருணை மனு ஜனாதிபதியால் ஏற்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டிருந்தால், இந்த ஏழு பேரும் வாழ்நாள் முழுக்க சிறையிலே கிடந்துக்கூட மரணம் எய்தியிருக்கக்கூடும். ஆனால், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டி, ராம் ஜெத்மலானியை அழைத்துவந்து வாதாடி, அவர்கள் தூக்கிலிடப்படுவதைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் நடத்தி, உச்சநீதிமன்றத்தின் வழியே நிரந்தரமாக அவர்களின் தூக்குக் கயிற்றை அறுத்தெறிந்தவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ. மூவரின் தூக்கை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்யும் முடிவையும் மாநில அரசே எடுக்கலாம் என்றும் கூறியது. அந்தத் தீர்ப்புதான்  பேரறிவாளன் முதலான எழுவரின் விடுதலைக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது. அந்தத் தீர்ப்பை முன்வைத்துதான் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன; அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பியது. அம்முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்ததால்தான், இன்றைய தீர்ப்பில், ஆளுநர் தன் கடமையைச் செய்யத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதை முன்வைத்தே இன்று அறுவர் விடுதலை பெற்றுள்ளனர். இதில் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சியாக, மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் விதமாக, சட்டமன்றமும் அமைச்சரவையும் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல், சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்ளும் ஆளுநர்களுக்கும் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி மட்டுமன்று. எதிர்காலத்தில் எந்த ஒரு ஆளுநரும் இவ்வாறு நடந்துகொண்டால், அதை முறியடிக்க உதவும் வழிகாட்டுதலாகவும் அமைந்துள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டப் போராட்டங்களுமே இன்றைய விடுதலையைச் சாத்தியப்படுத்தியுள்ளன. நளினியின் தாயார் தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதைப் போல, இந்த விடுதலையானது ஒரு கூட்டு முயற்சியே. அந்த முயற்சியில் மேலே குறிப்பிட்டதைப்போல, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், பொருளாதார ரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் உதவியவர்கள் என்று அனைவரின் பங்களிப்பும் உள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடியவர்கள் விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மூவர் தூக்கை எதிர்த்து மீண்டும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியதன் வழியே, ‘இன்றைய மகிழ்ச்சிக்கான விதையை அன்றே ஊன்றியவர் வைகோ’ என்பதை யாரும் மறுத்துவிட முடியாது என்பதே உண்மை, தேவர் மகன் திரைப்படத்தில், “நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ; பிறகு உன் மகன் சாப்பிடுவான், அதன்பிறகு அவன் மகன் சாப்பிடுவான். ஆனா விதை.. நான் போட்டது” என்று சொல்வாரே அதைப் போல.   

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து, எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 4, 5 தேதிகளில் மழைக்கு ஊடாகவும் சிறப்பாக நடத்தின. அகிலனின் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் அவரது பன்முகப் படைப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. அவற்றுள், திரையில் அகிலனின் நாவல்கள் என்ற அமர்வில் கலந்துகொண்ட கவிஞரும் திரை இயக்குனருமான பிருந்தா சாரதி ஆற்றிய உரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.   ஒரு எழுத்தாளன் என்பவன் வாசக மனங்களில் கனவுகளை விதைக்கிறவன். அதுவும் பெருந்திரளான மக்களால் வாசிக்கப்படும் ஓர் எழுத்தாளனால் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்கள், சமூக மனதில் ஆழமாக விதைக்கப்பட்டு பெரும் விளைச்சலை வழங்குகின்றன. இங்கே நேற்றைய அமர்வில் பேசிய எழுத்தாளர் திலகவதி அவர்கள், தான் மாணவப் பருவத்தில் படித்த அகிலனுடைய பெண் கதாபாத்திரங்கள் தன்னை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்று கூறினார். அதேபோல, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில், தான் அவரைச் சந்தித்தபோது, அகிலனின் ‘பொன்மலர்’ நாவலை வாங்கி வருமாறு கேட்டதைக் குறிப்பிட்டார். பிறகு கலைஞரை மருத்துவமனையில் சந்தித்தபோதும் தலைமாட்டில் அந்நூலைக் கண்டதாகக் கூறினார். ஒரு முதலமைச்சர் முதல் சிற்றூரில், கிராமத்தில் படிக்கிற மாணவி வரை அகிலனின் எழுத்துக்களால் கவரப்பட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் அகிலன் அவர்கள், ஏறக்குறைய 20 நாவல்கள், 200 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள்,  சிறுவர் கதைகள், நாடகம், வாழ்க்கை வரலாறு, திரைக்கதை என, தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். சாதாரண மனிதர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு, எதார்த்தமான கதைகளை, மானுடத்தின் மாபெரும் லட்சியமான அன்பை முன்வைத்து காந்திய வழியில் தன் கதைகளை எழுதியவர் அகிலன். எளிய மொழி அவரது மொழி. கதை கூறும் முறையிலும் பெரிய சிக்கல் எதுவும் அற்றவை அவரது கதைகள். ஆனந்த விகடன், கலைமகள், கல்கி முதலான பெரும் பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளிவந்தபோது, பலரும் வாசித்து அதன்மூலம் தங்கள் வாழ்க்கையையே சீரமைத்துக் கொள்ளும் உந்துவிசை பெற்றதைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவருடைய கதைகளின் நாயகர்கள், நாயகிகள் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். ஏன், அவர் பெயரையே குழந்தைகளுக்குச் சூட்டியவர்களும் உண்டு. அந்த அளவிற்கு ஆக்கபூர்வமான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கியவர் அவர். அகிலனின் கதைகள் ஒரு காலகட்டத்தின் முகம் என்றும் கூறலாம். சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமான 50 ஆண்டுகளின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களைத் தன் கதைகளில் எழுதினார் அகிலன். பெண்ணுரிமை, பொருளாதாரச் சமத்துவம்,  போலித்தனங்களைத் தோலுரித்து உண்மையைத் தேடுதல் போன்ற கருப்பொருட்களை காந்திய நெறியில் எழுதியவர். தமிழில் முதன்முதலாக ஞானபீட விருது பெற்றவர். சாகித்திய அகாடமி, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்றவர். கவிஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற சமூகம்தான் வளர்ச்சி பெறுகிற ஒரு சமூகமாக முன்னேற முடியும் என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். ஆகவே எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டை, குறைந்தபட்சம் 100 இடங்களிலாவது கொண்டாட வேண்டும் என்று இக்கருத்தரங்கின் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். சாகித்ய அகாடமி தொடங்கி வைத்து விட்டது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற இலக்கிய அமைப்புகள் அகிலனின் படைப்புகள் குறித்துக் கூட்டங்கள் நடத்தி விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இளைய மனங்களில் நல்ல நெறிகளையும் நம்பிக்கையையும் விதைப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு

கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த நாளான செப்டம்பர் 26 , அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி- தமிழ்நாடு சார்பாகக் கல்வி பாதுகாப்பு தினமாக செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்பட்டது. அத்தருணத்தில் இரண்டு நிகழ்வுகள் பிரதானமாக இடம் பெற்றன. நிகழ்வில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக பேராசிரியர் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் (AUT, TNGCTA)பலரும் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களும் (AIFETO) கலந்து கொண்டு சிறப்பித்தனர். அது மட்டுமன்றி தேசியக் கல்விக் கொள்கை வரைவு வந்தபோதும் (2019), அடுத்து கொள்கை விளக்கக் குறிப்பு வந்த போதும் தமிழில் மொழிபெயர்ப்புப் பணியை தன்னார்வக் குழுவினருடன் முன்னெடுத்த சிறார் எழுத்தாளர் விழியன் கலந்து கொண்டார். இந்திய விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, அதற்காக தமிழகத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்த தோழர் பாலகிருஷ்ணன் (சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு ) தோழர் மேரி , அகில இந்திய விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மேனாள் தமிழ்நாடு தலைவர் தோழர் ரங்கசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் அறம் இணைய இதழின் ஆசிரியர் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், சுவடு இதழின் நிர்வாக ஆசிரியர் அஹமது மன்சூர், தமிழர் எழுச்சிக்குரல் ஆசிரியர் நாஞ்சில் நாட்டான், சமூக செயற்பாட்டாளர் சௌந்திரராஜன், ஊடகவியலாளர் நெய்வேலி பாலு, அறிவியல் விஞ்ஞானி வெங்கடேசன் , அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு கிளை உறுப்பினர்கள் திரு சுதாகர், திரு லேனா குமார், திரு மருதநாயகம், திரு கோமல் தமிழமுதன், திரு சதாசிவம் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திலகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். சென்னையில் எழும்பூர் மியூசியம் எதிரில்‌ அமைந்துள்ள இக்சா (ICSA) அரங்கத்தில் செப்டம்பர் 25, ஞாயிறன்று, மாலை 4 -7 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது . ஈஸ்வர சந்திர வித்யாசாகரர் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு முதல் நிகழ்வாக, மேற்கு வங்காளத்தில் தோன்றி, இந்திய மறுமலர்ச்சியின் முன்னோடியாகத் திகழ்ந்த மாமனிதர் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நிகழ்ந்தது. சுவடு பதிப்பகத்தை நடத்தி வருபவரும் சமூக மாற்றத்தை முன்வைத்து வாசிப்பு இயக்கத்தை பரவலாக்குவதன் பொருட்டு, நுழைபுலம் என்ற அமைப்பை நடத்தி வருபவருமான தோழர் நல்லு ஆர் லிங்கம் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்.மிகச் சிறப்பாக பணியாற்றி இக்காலத்தின் தேவையை கணக்கில் கொண்டு இப்புத்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது. பேரா மருதநாயகம் அவர்கள் நூலை வெளியிட ஆசிரியர் கோமல் தமிழமுதன் பெற்றுக் கொண்டார்.அதோடு கோமல் தமிழமுதன் அவர்கள் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் குறித்து சிறப்பானதொரு சிற்றுரையையும் நிகழ்த்தினார். உரையானது ஏன் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என வந்திருந்தவர்களுக்கு எழுச்சியூட்டும்படி இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாகக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதன் பொருண்மையானது அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் விதமாக அமைந்தது. கல்வியில் பெரும் அழிவினை விளைவிக்கின்ற தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் தாக்கம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அறிவியல்பூர்வக் கல்வியின் தேவை குறித்து மிகப்பெரிய கருத்துரையாடல் நடைபெற்றது. சு.உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3), உறுப்பினர், AISEC தமிழ்நாடு கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்ற சு.உமாமகேஸ்வரி அவர்கள் தனது தலைமை உரையில் , தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வியில் தற்போது நடைமுறையில் பின்பற்றப்படும் திட்டங்கள் பலவும் (இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உட்பட பல திட்டங்கள்) எவ்வாறு தேசியக் கல்விக் கொள்கையின் சரத்துகளாக இருக்கின்றன, ஆசிரியர்கள் நியமனமின்மை , உட்கட்டமைப்பு வசதியின்மை, ஓராசிரியர் பள்ளிகளில் உள்ள பிரச்சனைகள் என தனது அனுபவத்தின் வழியாக கல்வி சார்ந்த சிக்கல்கள் குறித்துப் பேசினார். உயர்கல்வியில் நான் முதல்வன் திட்டம் உட்பட அனைத்தும் தேசிய கல்வி கொள்கையின் வடிவங்களே. ஆனால் முதல்வர் தனது கனவுத் திட்டம் என்று கூறி வருகிறார். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை கல்விப் புரட்சி என்கிறார். கல்வித் துறை அவலத்தில் சிக்கி சீரழிகிறது எனப் பகிர்ந்தார். திரு V.அண்ணாமலைAIFETO பொதுச்செயலாளர் தனது ஐம்பது ஆண்டுகால அனுபவத்தில் கல்வி எத்தனையோ மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் தற்போது தமிழக அரசின் கல்விக் கொள்கை ஆசிரியர்களைப் பணியாற்ற விடாமல் எமிஸ் (EMIS) உள்ளிட்ட கற்பித்தல் அல்லாத பணிகளை செய்ய வைத்து உளவியல் ரீதியாக ஆசிரியர்களை பாதிக்க வைத்து வருகிறது. கல்வித்துறையினாது பொறுப்பு ஆணையர்கள் கைகளில் சென்றுள்ளது ஒரு முக்கியமான பிரச்சனை. அவர்கள் அன்றாடம் ஒரு அறிக்கையும் ஆணையும் அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா காலத்தில் ‌‌சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். ஆனால் ஆசிரியர்கள் நியமனம் என்பதே இதுவரை இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டே அதில் உள்ள எல்லா திட்டங்களையும் திமுக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. பாடநூல் அச்சடித்து வகுப்பறைகளில் பயன்படுத்தப்படாமலேயே வீணாகிறது. தீவுத்திடலில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் முதல்வர் தங்களுக்கு ஏதேனும் நல்ல திட்டங்களை அறிவிப்பார் எனக் காத்திருந்து ஏமாற்றத்தால் கண்ணீர் விட்டுக் சென்றனர். மாணவர்கள் தவறு செய்தாலும் ஆசிரியர்களின் மீதே நடவடிக்கை, மண்டல ஆய்வு என பாடம் நடத்தவிடாமல் அதிகாரிகள் செய்யும் போக்கு தமிழக அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமோ என அச்சமாக உள்ளது. பள்ளிகளை இணைக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் எந்தப் பள்ளியிலும் இல்லை ஆனால் மாதிரிப் பள்ளிகளை அமைக்க முடிவு செய்துள்ளனர். வகுப்புக்கு ஓராசிரியர் இல்லாமல் மூன்றாம் வகுப்பு வரை பாடநூலை நடத்த விடாமல் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கட்டாயப்படுத்துவது உள்பட தேசிய கல்வி கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் மக்களிடம் நாங்கள் தமிழ்நாட்டில் அதனை உள்நுழைய விடமாட்டோம் என பொய்பேசி வருகின்றனர்.இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும் என்று உரைத்தார். பேராசிரியர் ஜெ.காந்திரராஜ்தலைவர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) தொடர்ந்து பேச வந்த பேராசிரியர் ஜெ.காந்திரராஜ் தனது அனுபவத்தையே முன்வைத்து உரையாட ஆரம்பித்தார். நான் கல்லூரியில் சேர்ந்து படித்ததற்குக் காரணம் இட ஒதுக்கீடு தான். ஆனால் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் இட ஒதுக்கீடு என்ற பதமே ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை. அப்படியென்றால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே கல்வி கிடைக்க வேண்டும் என்று புதிய தேசியக் கல்விக் கொள்கை உறுதியாகத் திட்டமிட்டுள்ளது. நமக்கென்று ஒரு கல்விக் கொள்கை வகுக்க வேண்டும் என அனைவரும் கேட்டதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 14 பேர் அடங்கிய கல்விக் குழுவை தமிழக அரசு நியமித்தாலும் குழு உறுப்பினர்கள் யாவரும் அமர்ந்து பணியாற்றுவதற்கென ஒரு இடத்தைக் கூட தரவில்லை என்பதையும் அக்குழு பெயரளவுக்கு செயல்பட்டு வருகிறது என்பதையும் அனைவர் முன்பும் இந்த அரங்கத்தில் பதிவு செய்கிறேன் என்றார். உயர்கல்வி முழுவதும் தேசிய கல்வி கொள்கை ஊடுருவி வருகிறது. திறன் மேம்பாடு என்ற பெயரில் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாக உயர்கல்விப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. இது தேசிய கல்விக் கொள்கையில் உள்ள கல்வி கிரெடிட் பேங்க் முறையை அடிப்படையாக க் கொண்டு (ABC) நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திறன் மேம்பாடு கல்வி உயர்திறன்கள் அன்றி சாதாரண திறன்களையே மையப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ளது ஆன்லைன் கல்வி வழியாக கொண்டு வரப்படும் இது கல்வி தரத்தை மிகவும் சீரழிக்கவே விளைகிறது. மாணவர்கள் எண்ணிக்கை அளவின் அடிப்படையில் கல்லூரிகளை மூடவும் திட்டமிட்டு வருகின்றனர். 45000 எண்ணிக்கையுள்ள கல்லூரிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில், அவற்றை சில நூறு பல்கலைக்கழகங்களாக அல்லது தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். உயர்கல்வி இன்னும் சில வருடங்களில் எட்டாக்கனியாகிட வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. கல்வியை முழுமையாக வியாபாரமயமாக்கிடவே இக்கல்வி கொள்கை வழிகாட்டுகிறது.மத்திய அரசின் வழியில் மாநில அரசு தேசிய கொங்கு கொள்கையின் பல அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதால் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பையும் உருக்குலையும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றின் அபாயத்திலிருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் காக்கப்பட வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார். அதோடு, தான் சார்ந்த அமைப்புகள் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியுடன் இணைந்து களத்தில் நின்று போராடத் தயாராக இருக்கிறோம் என்றும் பதிவு செய்தார். பேராசிரியர் P.சிவக்குமார்மேனாள் முதல்வர் , குடியாத்தம் கலைக் கல்லூரி தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் பாதகங்கள் இன்று புதியதாக உருவானவை அல்ல. ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 1986இல் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை அன்றே விமர்சித்து கூட்டங்கள் நடத்தினோம் என்று தனது மாணவர் பருவம் முதல் இன்று வரை கல்விக் கொள்கை குறித்தான பல பாதகங்களை முன்வைத்தார். உயர்கல்வியின் வியாபாரமயமாக்கல், அரசு உதவி பெறும் தனியார் நிறுவனக் கட்டணக்கொள்ளை எனத் தோலுரித்ததுடன் சுயநிதிக் கல்லூரிகளின் நிலை குறித்து விரிவாகப் பேசினார். சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் நிலை எவ்வளவு பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது என்றும் புரிய வைத்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பே அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி தேசிய கல்விக் கொள்கை 1986ஐ எதிர்த்து கொண்டு வந்த புத்தகத்தை அவையோருக்குக் காண்பித்தார். மேலும்பல புத்தகத் தரவுகளுடன் இன்றைய தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துக்காட்டினார். ஆகவே ஒன்றிணைந்து இந்த கல்விக் கொள்கையின் அபாயங்களைக் களைய முற்படவேண்டும் என்று பகிர்ந்தார். பேராசிரியர் T.வீரமணிமாநிலத்தலைவர் TNGCTA தேசிய கல்விக் கொள்கை வரைவு வந்த காலத்தில் இருந்து பேசி வருகிறோம். ஆனால் மிக சாமர்த்தியமாக மத்திய அரசின் போக்குக்கு ஏற்ப மாநில அரசு எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்றோம், ஆனால் ஒரு பக்கம் அதற்கு தயாராகிக் கொண்டே இருக்கிறோம். ‘நான் முதல்வன்’ திட்டம் வழியாக திறன் மேம்பாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எதையாவது நிறுத்த முடிகிறதா? இவற்றின் பாதிப்பு நமக்கு இப்போது தெரியாது. ஆனால் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் அனைத்தையும் இழந்திருப்போம். நம் மாணவர்கள் அத்தனை பேரும் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். காரணம் நுழைவுத்தேர்வில் தேறி வருவதற்கான வாய்ப்புகள்

உன்னதம் இலக்கிய விழா

உன்னதம் இலக்கிய விழா

எழுத்தாளரும் ஆலா இலக்கியச் செயலி நிறுவனரும் டிஹேஷ் கண்டுபிடிப்பாளருமான கௌதம சித்தார்த்தன் தன்னுடைய பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று, ஈரோடு மாவட்டம் பவானியில் ஒரு இலக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். முழுநாள் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நூல் வெளியீடு, நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் ஆகிய அமர்வுகள் இடம்பெறுகின்றன. முற்பகல் அமர்வில், கௌதம சித்தார்த்தன் எழுதியுள்ள காலப்பயண அரசியல் நூல் வெளியீடும், இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை? நூல் அறிமுகமும் பார்வையாளர்கள் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன. பிற்பகல் அமர்வில், மொழிபெயர்ப்பாளர் ஏ. வி. தனுஷ்கோடி அவர்களின் உருவப்படத் திறப்பு (ஓவியம்: சுந்தரன்), அவருடைய விசாரணை நாவல் வாசிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனுடனான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் குதிரைவால் படக் கதாசிரியர் ராஜேஷ், துறையூர் சரவணன், கவிஞர் மனுஷி, மொழிபெயர்ப்பாளர் எஸ். பாலச்சந்திரன், ஓவியர் சுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கிறார்கள். நிகழ்விடம்:நியூ டெக் எஜுகேசன் சென்டர்,காளிங்கராயன் பாளையம்,சங்கமேஸ்வரர் கோயில் அருகில்,பவானி.நாள்: 17.09.2022 சனிக்கிழமைநேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரைதொடர்புக்கு:9976951585,9500384307,9940786278