புரட்சியின் மறுபெயர்

இன்றைய இளைஞர்கள் பலரின் டி-சர்ட்களில் பரட்டைத் தலையும் வாயில் சுருட்டும் இதழ்களில் புன்னகையும் தாங்கிய ஒருவரின் படத்தைக் காணலாம். அவர்களில் எத்தனை பேர் அவருடைய வாழ்க்கையை, வரலாற்றை அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறியோம்.

என் நாடு, என் மக்கள், என் இனம் என்று நம்மில் பலரும் பற்றோடு இருக்கிறோம். ஆனால், ஏகாதிபத்தியமும் சர்வாதிகாரமும் தலை தூக்கிய இடங்களிலெல்லாம் இன்று டி-சர்ட்களில் காணப்படும் தலை உயர்ந்தது. ஆம், அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு எதிராக, அயல் நாடுகளுக்கும் சென்று ஆயுதம் ஏந்திய புரட்சிகரப் போராளி, அமெரிக்கக் கண்டத்தில் கம்யூனிச விதைகளைத் தூவியவர். கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின் பொதுவுடமை அரசு வளர்வதற்கு அடித்தளம் அமைத்தவர் என்று பலப்பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான சே குவேராதான் அவர். இன்று சே குவேராவின் பிறந்தநாள்.

எர்னஸ்டோ சே குவேரா, அர்ஜென்டினாவின் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் 1928 ஜூன் 14ஆம் தேதி குறைப் பிரசவக் குழந்தையாகப் பிறந்தவர். மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார். கௌதமாலா நாட்டில் நடந்துவந்த ஓர் ஆட்சியை அமெரிக்க அரசாங்கம் தனது சுயநலத்துக்காகத் தூக்கி எறிந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார். தங்களின் அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கி எறிந்ததைக் கண்டு பதற்றப்படாத, துணுக்குறாத கௌதமாலா மக்களின் மௌனம் மேலும் சே குவாராவை துடிக்கச் செய்தது.

இந்நிகழ்வு அவரைப் புரட்சியின் பக்கம் திருப்பியது. அமெரிக்காவின் இந்த அநியாயத்தை விவரித்து, புரட்சியைத் தூண்டிப் பேசலானார். அதனால் அவருக்கு ஆபத்து வர மெக்ஸிகோவிற்கு தப்பிச் சென்றார். அந்த நேரத்தில், கியூபா நாட்டில் அமெரிக்காவின் ஆதரவில் பொம்மை ஆட்சியை நடத்திவந்த சர்வாதிகாரி பாடிஸ்டாவிற்கு எதிராக, கொரில்லா படை திரட்டிப் போராடி வந்த பிடல் காஸ்ட்ரோவை 1955இல் தனது 27 ஆவது வயதில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இருவருக்கிடையே ஒரு நட்புப் பாலத்தை வளர்த்தது.

சேவின் வீரமும் கொரில்லா படை சாகசங்களும் அவரை பிடல் காஸ்ட்ரோவின் தலைமைத் தளபதியாக மாற்றின. கியூபாவை ஆண்ட பாடிஸ்டாவை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்பை பிடல் காஸ்ட்ராவின் கைகளில் ஒப்படைத்தார். தனது 31ஆவது வயதில் கியூபா தேசிய வங்கியின் தலைவராகி, கியூபாவின் பணத்தாளில் கையெழுத்திட்டார். தனது 33ஆவது வயதில் அமைச்சராக இருந்தபோதும் கரும்புத் தோட்டத் தொழிலாளியாகப் பல நாட்கள் கரும்பு வெட்டினார். தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். கியூபாவைப் பன்நெடுங்காலமாகச் சுரண்டிவந்த அமெரிக்க நிறுவனங்களை கியூபாவின் தேச உடமையாக்கினார்.

கியூபா சார்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பங்கேற்க சே சென்றபோது, பல மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் 36 வயதே ஆன இளந்தலைவரின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருந்தனர்.

1959இல் இந்தியாவிற்கு வந்திருந்த சே, அன்றைய நமது பிரதமர் நேருவுடன் நல்லெண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதை மகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார்.

அதன்பின்னர், விடுதலைக்காகப் போராடிய லத்தீன் அமெரிக்க நாடுகளின்பால் அவரது பார்வை திரும்பியது. அமைச்சர் பொறுப்பை, கட்சிப் பொறுப்பை, கியூபா நாட்டுக் குடியுரிமையை உதறிவிட்டு, காங்கோ மக்களின் விடுதலைக்காக இரண்டு ஆண்டு காலம் பாடுபட்டார். இறுதியாக பொலிவியக் காடுகளில் 16 மாத காலம், அங்கே ஆட்சி செய்துவந்த அமெரிக்காவின் பினாமி அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தினார்.

அமைச்சராக இருந்த ஒருவர், மீண்டும் போராளியாக மாறி யுத்தம் செய்த வரலாறு சே குவேராவிற்கு மட்டுமே உண்டு.

சேகுவேராவால் ஈர்க்கப்பட்ட சின்சினா அவர் மீது காதல் கொண்டார். சே குவேராவும் காதல் வயப்பட்டார். அவர்கள் சந்தித்த போதெல்லாம் புத்தகங்களைப்பற்றிப் பேசியே பொழுதைக் கழித்தனர். சேயின் புரட்சிகர மனநிலையோடு சின்சினா தொடர முடியாத சூழலில், அவர்களது காதல் வாழ்க்கை பிரிவில் முடிந்தது.

தன்னுடன் கொரில்லாப் படையில் இணைந்து போராடிய போராளி ஹில்டாவை சே மணந்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். சேகுவேரா தனக்கு ஒரு மகன் பிறந்தால் விளாடிமிர் இலியச் லெனின் என்று பெயரிட வேண்டும் என்று நினைத்திருந்தார்.
ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை. பின்னர் முதல் மனைவியின் சம்மதத்தோடு அலெய்டா மார்ச்சை மணந்தார். ஒரு ஆண் குழந்தையும் நான்கு பெண் குழந்தைகளும் அத்தம்பதியினருக்குப் பிறந்தன. நான்காவதாகப் பிறந்த மகனுக்கு உமர்கய்யாம் என்று பெயரிட்டார் சே.

சே மிகுந்த அன்புள்ளம் கொண்டவர். நாள்தோறும் மக்கள் சுரண்டப்படுவதை, அவர்கள் ரத்தம் உறிஞ்சப்படுவதைக் கண்டு கொதித்தது அவரது மனம். தன்னுயிரைத் தந்து கோடானகோடி மக்களை விடுவிக்க, தன் ரத்தத்தைச் சிந்தியவர். ஏகாதிபத்தியத்தை முற்றிலுமாக முறியடிக்க எதையும் செய்ய வேண்டும் என்ற அசையாத கொள்கை கொண்டவர். மக்களை விடுவிப்பதற்காக நிற்கும் கட்சிகள், கட்சி உறுப்பினர்களுக்குப் போர்ப் பயிற்சி தரவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.

சே குவாராவின் வாழ்க்கை தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையாக வாழப்படவில்லை. அவர் மரணத்திற்கே சவால் விட்டவர். இந்த மாவீரனின் மார்பு தோட்டாக்களால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டபோதும் அவர் தன் இமைகளை மூடிக்கொள்ளவில்லை. கண்களைத் திறந்தபடியே மரணத்தை எதிர்கொண்டார் சே.

சே குவேராவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முக்கியப் பாடம், ஆதிக்கத்தை அதன் எல்லைவரை சென்று எதிர்க்கவேண்டும் என்பதும் அந்த ஆதிக்கம் நம்மீது மட்டுமல்லாமல் எவர்மீது செலுத்தப்பட்டாலும் அங்கே நாம் நிற்க வேண்டும் என்பதுமே.

  • அக்ரி பரத்வாஜ்

Comments (4)


Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
June 14, 2023

சிறப்பு..

ஆறுமுகம்
ஆறுமுகம்
June 14, 2023

சிறப்பான கட்டுரை. கட்டுரையின் முதல் பத்தி வரவேற்கப்பட வேண்டியது.

பானுரேகா
பானுரேகா
June 14, 2023

சிறப்பு 💐

சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *