மனிதர்களை அடிமைப்படுத்தி, சந்தையில் அவர்களை நிறுத்தி விற்பனை செய்த வரலாறுகளைப் படித்திருக்கிறோம். கிளர்ந்தெழுந்த அடிமைகள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட கதைகளைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அடிமை வணிகங்கள் இல்லாததாக இன்றைய உலகம் மாறிவிட்டது என்று நிம்மதியாகப் பெருமைப்படுகிறோம்.

ஆனால் உண்மையில் அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

நவீன காலத்து அடிமைமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு பதிவு செய்திருக்கிறது. பாலியல் தொழில், கொத்தடிமை, கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை இவற்றில் குறைந்தது 4 கோடிப் பேர் சிக்கியிருக்கிறார்கள். நாடுவிட்டு நாடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டுக்குள்ளேயே மனிதக் கடத்தல் நடக்கிறது. இவற்றுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதில் பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. உலக அளவில் சுமார் 12.16 லட்சம் கோடி ரூபாய் லாபம் குவிக்கப்படுகிறது. உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்மம் மட்டுமின்றி இவர்கள் அனுபவிக்கிற உடல் நோய்கள் உள்ளிட்ட துயரங்களும் அவமதிப்புகளும் ஏராளம்.

மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையாக இருக்கக்கூடிய பழங்குடியினர், பூர்வ குடியினர், ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட, வஞ்சகங்களுக்கு எளிதில் இரையாகக்கூடிய மக்கள் நவீன அடிமை வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், மனநலம் குன்றியோர், உடல் ஊனங்களுக்கு உள்ளானோர் போன்ற எதிர்த்துநிற்க முடியாதவர்கள் வலுக்கட்டாயமாகவோ, பணத்தைக் காட்டியோ, சூழ்ச்சி செய்தோ கடத்தப்படுகிறார்கள். குழந்தைகளில் நான்குக்கு ஒரு குழந்தை வீதம் கடத்தப்படுகிற தகவல் நெஞ்சை உறைய வைக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்? அடிமைத்தனத்தை ஒழிப்பது என்பது அ, டி, மை என்ற மூன்று எழுத்துக்களை அழிப்பதல்ல. நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கச் செயல்படுவோம். அவ்வாறு செயல்படுகிறவர்களோடு சேர்ந்தாவது நிற்போம். இந்தத் தகவல்களை சக மனிதர்களுக்குச் சொல்வோம். நவீன பொருளாதார அடியாட்களான அரசாங்கங்களின் கொள்கைகளும் பாராமுகங்களும் இதற்கொரு காரணம் என்பதையும் சேர்த்தே சொல்வோம்.

அழகுக்கு அடிமை, அன்புக்கு அடிமை, கவிதைக்கு அடிமை, காதலுக்கு அடிமை… என்பதாகவெல்லாம் உணர்ச்சி மிகுந்து பேசுவோமே, அதை நிறுத்திக்கொள்வோம். எதற்காகவும் யாரும் யாருக்கும் அடிமையாவதை மறுப்போம்.

இன்று (டிசம்பர் 2) உலக அடிமைத்தன ஒழிப்பு தினம்.

  • அ. குமரேசன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *