ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

பள்ளி திறந்து சில நாட்கள் ஆகின்றன. ஜூன் முதல் தேதி பள்ளி திறந்தாலே பாடத்திட்டங்களை முழுவதுமாக முடித்துவிட முடியாது என்கிற சூழலில் 11 நாட்கள் தாமதமாவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் வெயிலின் தாக்கம்  காரணமாக இந்தத் தாமதம் இருந்தாலும் களத்தில் வேறுவகையான பிரச்சனைகளை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டின் பள்ளிகளில் எந்தப் பாகுபாடுமின்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத மாணவர்கள் எல்லா இடங்களிலும் எல்லாப் பள்ளிகளிலும்  இருப்பார்கள். தனியார் பள்ளிகளில் இப்பிரச்சினை எப்படி கையாளப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும்போதும் பாடத்துக்கு ஒரு ஆசிரியர், மொழி ஆசிரியர் என முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களைக் கையாளும்போதும் இப்பிரச்சினைகள் களையப்படலாம். அப்படியான சூழல் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளிலோ கடந்த பல பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதத் தெரியாதவர்கள், வாசிக்கத் தெரியாதவர்கள், அடிப்படைக் கணக்குத் திறன்கள் இல்லாதவர்கள் என ஆறாம் வகுப்பிலிருந்து  பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் காணலாம். இருபதாண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளிலிருந்து அல்லது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து  வெளிவரக்கூடிய மாணவர்கள் எழுத்துகளை வாசிக்கவும் எழுதவும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பர். ஆனால் சமீப காலங்களில் இதுபோன்று இல்லாமல், மிக மோசமான கற்றல் அடைவுடன், அடிப்படை எழுத்துகள் அறியாமலும் வாசிப்பின்றியும்தான் மாணவர்கள் வெளிவருகின்றனர். கணக்குப் பாடத்திலும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வாய்ப்பாடு தெரியாமலும்தான் இருக்கின்றனர். இவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல; தனியார் பள்ளிகளிலிருந்தும் வருகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படியாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பில் அல்லது ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில்  சேர வரும் மாணவர்களை நாம் தனியார் பள்ளிகளைப்போல நுழைவுத்தேர்வு வைத்துப் புறக்கணிக்கவோ அல்லது இது உங்களுக்கான பள்ளி இல்லை எனத் திருப்பி அனுப்பவோ முடியாது; அனுப்பவும் கூடாது. சட்டப்படியும் அது ஏற்புடையதல்ல. ஏனெனில் அரசுப் பள்ளிகள் எல்லாருக்குமான பள்ளிகள். மேற்குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளுடன் அரசுப் பள்ளிகளை வந்தடையும் மாணவர்கள் எண்ணிக்கை  ஒவ்வொரு வருடமும்  ஏறத்தாழ 50 சதவீதத்தைத் தாண்டிவிடுகிறது. வகுப்பறையில் பெரும்பான்மைக் குழந்தைகள் மேற்கூறிய பிரச்சனைகளுடன்தான் இருக்கின்றனர். இவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், தனிப்பட்ட கவனம் எடுத்துதான் இந்தச் சிக்கலைச் சரி செய்ய முயற்சி செய்கிறார்கள். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, 6 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களில் வாசிக்கத் தெரியாதவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பது நடக்கும். அல்லது வகுப்பாசிரியர் கவனித்து கூடுதல் நேரம் எடுத்து எழுத்துகளைக் கற்பித்தல், பயிற்சி தருதல் போன்ற செயல்பாடுகள் நடக்கும். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இவற்றைச் செயல்படுத்துகிறதா என்பது குறித்துத் தனியாக ஆய்வு செய்துதான் அறிந்துகொள்ள முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, பல மாவட்டங்களில் அல்லது அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் இப்பிரச்சனையை முன்வைத்து , வாசிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சொல்கின்றனர்.  பெரும்பாலும்  இந்த  ஆணை வாய்மொழி உத்தரவவாகத்தான் இருக்கும். இது வருடத்திற்கு வருடம் கூடுதல் அழுத்தங்களுடன் நடந்தேறி வருகிறது. இதற்காகத் தனிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று EMIS வரை எடுத்துச் சென்றனர். உண்மையாகவே கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மேம்படுகின்றனரோ இல்லையோ, பதிவேடு தயாரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.  இந்தக் கல்வி ஆண்டில், சில தினங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், ‘இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு, அடிப்படைக் கற்றலை மேம்படுத்தும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத, அடிப்படைக் கணிதக் கணக்குகள் மற்றும் வாய்ப்பாடு தெரியாத, கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனியாக ஒரு பிரிவை (section) உருவாக்கி, பள்ளி திறந்த நாளிலிருந்து (12/06/2023) முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கென கால அட்டவணை‌ (Time Table) தனியாகப் பின்பற்றி, மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்தி, மீண்டும் அதே வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் அவர்களை சேர்த்துக் கல்வி பயில அனுமதிக்குமாறு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்  6 முதல் 8 வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான முயற்சியைப் போர்க்கால அடிப்படையில் எடுத்துள்ளது  வரவேற்கத்தக்கது. ஆனால் இதைத் தொடக்கப் பள்ளிகளிலேயே நடைமுறைப்படுத்தி, எழுத்துகளைக் கற்றுக் கொடுத்தபிறகு  உயர்நிலை வகுப்புகளுக்கு ஏன் அனுப்பக்கூடாது? என்ற கேள்வியை நாம் முன்வைக்கிறோம். தொடக்க வகுப்புகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்ன நடக்கிறது? எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் கற்றல் அடைவுகளுக்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, ‘தொடக்கக்கல்வி முடித்து வரும் குழந்தைகள் ஏன் அடிப்படைத் திறன்களைப் பெறாமல் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்கின்றனர்?’ என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அங்குள்ள ஆசிரியர்களைக் கல்வி அலுவலர்கள் கேள்வி கேட்காமல், அதே குழந்தை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும்போது, அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர் என்ற புலம்பல் ஆசிரியர்களிடம் இருப்பதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால், அரசியல் சட்டத்தின்படி எல்லாருக்குமான சமமான கல்வி கிடைக்கிறதா என்று சிந்திக்கத் தோன்றும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அதிகம் இருப்பதாலும் வெறும் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருவதாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களை நாம் முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்குவதில்லை என்றும் அறிந்துகொள்ள முடியும். அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களை அவர்கள் எப்போது படிப்பார்கள்? மேற்சொன்ன சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாத காலத் தனி  வகுப்பு என்பது  மாணவர்களுக்கு மிக முக்கியமான காலம். பள்ளி திறந்து முதல் மூன்று மாதங்களில்தான்  முதல் பருவப் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். முதல் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்த மாணவர்கள் எப்போது கற்றுக்கொள்வார்கள்? இப்படியாக ஒரு வகுப்பில் படிக்கவேண்டிய பாடங்களைத் தவறவிட்டு, தவறவிட்டு பத்தாம் வகுப்பு வரும்போது வெறும் 35 மதிப்பெண்களுக்கு அவர்களைத் தயார் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இதில் எங்கே நாம் அனைவருக்குமான கல்வியை, சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குகிறோம்? ‘ஒரு மாணவனுக்கு வெறும் எழுத்துக் கூட்டிப் படிக்க, எழுத மட்டுமே கற்றுத் தருவதற்கு, எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் தற்காலிக ஆசிரியர்களைக் குறைந்த ஊதியத்திற்கு அரசு நியமனம் செய்துகொள்கிறதோ?!’ என்ற எண்ணம் தோன்றுகிறது. நுண்திறன்களைக் கற்றுக்கொள்ள நம் மாணவர்களை எப்படித் தயார்படுத்துவது? ஆகவேதான் தொழிற்கல்வி பற்றியும் திறன் மேம்பாடு என்று சொல்லி, வேலைக்காக ஆட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே பள்ளிகளைத் தயார்படுத்தி வருகிறது அரசு. நவீன அறிவியலையும் கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படித்து ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகாமல் போவதற்கு தொடக்க வகுப்புகளில் சரியாகக் கற்றுத்தராதது மிக முக்கியமான காரணம். கல்வி அலுவலர்கள் என்ன செய்கின்றனர்? தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அடிப்படை வாசிப்பை மாணவர்களிடம் உருவாக்கி எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க வேண்டியதை ஏன் கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதில்லை? எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வியும் எட்டாம் வகுப்புவரை செயல்பட்டது. இத்தனை இருந்தும் ஏன் அனைத்துக் குழந்தைகளையும் எழுத்துகளை வாசிக்கவைக்கக்கூடச் செய்ய முடியவில்லை?   தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறுதலாகி வந்துசேரும் 60% குழந்தைகள் அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத நிலையில் இருக்கும் போக்கும் நிலவுகிறதே, அந்தப் பள்ளிகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? BRT எனப்படும் கல்வி அலுவலர்கள், வருடந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்கின்றனரே! ஏன் முழுமையான வாசிப்புத் திறனைக்  கொண்டுவர இயலவில்லை? உளவியல் சிக்கல் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இது போன்ற மாணவர்களைத் தனியாகப் பிரித்து உட்கார வைக்கும்போது மனதளவில் தாழ்வு மனப்பான்மை உருவாவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.  குழந்தைகள் உரிமை, சமத்துவம் எதுவும் இங்கே காக்கப்படுவதில்லை. குழந்தைகளிடம் கற்றல் திறனில் வேறுபாடு இருக்கலாமே தவிர, எழுத்துகளை, அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், குற்றத்தைக் குழந்தைகள் மீதே போடும் போக்கு வரவேற்கத்தக்கதல்ல. அவர்களை எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று ஒதுக்கி வைத்து, எட்டாம் வகுப்பு வரை கடைசி பெஞ்ச் மாணவர்களாக மாற்றி, சமூகத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கைப் பொதுச்சமூகம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், சிறார்களுக்காக இயங்குவோர் என அனைவரும் இவை பற்றியெல்லாம் சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. குழந்தைகள் உரிமையைத் தட்டிப் பறிக்கும் போக்கு இங்கே நிலவுகிறது. அடித்தட்டு மக்கள், முதல் தலைமுறைக் குழந்தைகள் ஆகியோருக்கு தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை எழுத்து, வாசிப்பு, கணக்குத் திறன்களைக் கொடுக்காத சூழலில், அவர்களை அவையில் முந்திய இருக்கச் செய்வது எப்படி? சிறார்களின் மன, உளவியலைக் கணிக்கிறோமா, காக்கிறோமா என்று ஆய்வு செய்யுங்கள். தரமான கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் எனில், அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இங்குள்ளோருக்கு வேண்டும். அப்போதுதான்  ஐந்தாம் வகுப்பிலேயே சரளமாக எழுதப் படிக்க, அடிப்படைக்  கணக்குகளைச் செய்ய மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பவேண்டும் என்ற கருத்து வலுப்பெறும். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் பெரிய பாடப் புத்தகங்களை வாசித்து உள்வாங்கி, தனக்கான வாழ்க்கையை நோக்கி  நகரும் சூழல் உருவாகும். ஆகவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எழுத்துகள் கற்றுத்தரும் வேலையை மட்டும் ஆசிரியர்கள் செய்யாமல், அவரவர் பாடங்களைக் கற்பிக்கும் பணியை உருவாக்க வேண்டும். முக்கியக் காரணமும் உரிய தீர்வும் என்ன? அரசு தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை, ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் ஏராளமாக இருக்கும் சூழலில், ஐந்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் மட்டுமே கவனித்துக்கொள்ளும் சூழல் இருப்பதால், அவர்களால் ஒரே நேரத்தில் ஐந்து வகுப்புகளுக்கும் எவ்வாறு கற்றல் பணியை மேற்கொள்ள இயலும்? எனவே ஒரு வகுப்புக்கான பாடங்களை எடுக்கும்போது, மற்ற நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் – கற்றல் நிகழ்வதில்லை. ஐந்தில் ஒரு பங்கு கற்பித்தல் மட்டுமே நிகழ்வதால், இறுதியாக அவர்கள் ஐந்து வகுப்புகளை முடித்து வெளியே வரும்போது ஒன்று அல்லது இரண்டாம் வகுப்புக்கான மாணவர்களின்

சோப்பு வாசனை

சோப்பு வாசனை

சோப்பு வாசனை – சிறார் கதை நள்ளிரவு நேரம். இரண்டாம் வகுப்புப் படிக்கும் குட்டிப் பாப்பா செல்வி, அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள். திடீரென யாரோ பாட்டுப் பாடும் சத்தம் கேட்டு விழித்தாள். கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தாள். அம்மாவும் அப்பாவும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார்கள். ‘இந்த நேரத்தில் பாட்டுச் சத்தம் கேக்குதே! யாரா இருக்கும்? எங்கிருந்து சத்தம் வருகிறது?’ என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது குளியலறையில் இருந்து சத்தம் வருவது புரிந்தது. ‘இந்த நேரத்தில் யார் குளிக்கிறார்கள்? போய்ப் பார்ப்போம்’ என்று நினைத்தபடி குளியலறைப் பக்கம் சென்றாள் செல்வி. இப்போது சத்தம் இன்னும் தெளிவாகக் கேட்டது. மெல்ல கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். குளியலறையில் ‘லாலலா.. லாலால்லா லாலலல’ என்று பாடிக்கொண்டு நடனம் ஆடிக்கொண்டு இருந்தது கண்ணாடி சோப்பு. அதைப் பார்த்த சந்தன சோப்பு, “என்ன நண்பா.. இன்னிக்கு ஆட்டமெல்லாம் பயங்கரமா இருக்கு? என்ன விசயம்?” என்று கேட்டது. “நான் இன்னிக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். அதான் நடனம் ஆடுறேன். வா நீயும் ஆடு” என்றது கண்ணாடி சோப்பு.   “எதுக்கு இவ்வளவு சந்தோசம்? எனக்கும் சொன்னா நானும் ஆடுவேன்” என்றது சந்தன சோப்பு. “இன்னைக்கு இந்த வீட்ல தண்ணி வரல. அதான் கொண்டாட்டமா இருக்கேன்.” கண்ணாடி சோப்பு பதில் சொன்னது. “எனக்குப் புரியல. அதுக்கும் உன் ஆட்டத்துக்கும் என்ன தொடர்பு?” சந்தேகத்துடன் கேட்டது சந்தன சோப்பு. “அட மக்கு.. தண்ணி வரலைன்னா என்ன நடக்கும்? இந்த வீட்டுல இருக்கறவங்க யாரும் கை கழுவ முடியாது. குளிக்க முடியாது. அப்போ அவங்க நம்மைப் பயன்படுத்த மாட்டாங்க. நாமும் தேயாம, கரையாம அப்படியே அழகா இருப்போம், இல்லையா? வா ரெண்டு பேரும் சேர்ந்து இதைக் கொண்டாடுவோம்..” என்று சொல்லிவிட்டு, “லாலலா.. லா.. லாலலா..” என்று பாடியபடி தன்னுடைய ஆட்டத்தைத் தொடர்ந்தது கண்ணாடி சோப்பு. இதைக் கேட்ட சந்தன சோப்பு, “இது ரொம்ப தப்பு.. இப்படி யோசிக்காத..” என்றது. “உனக்குப் பிடிக்கலைன்னா போ. இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கே தண்ணி வராது. அதுவரைக்கும் ஜாலிதான்” என்றது கண்ணாடி சோப்பு. ‘தான் காண்பது கனவா அல்லது நனவா’ என்ற சந்தேகத்துடன் செல்வி பாப்பா திரும்பி வந்து படுத்துக்கொண்டாள். காலையில் எழுந்தவுடன் இதை அப்பா அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள். பொழுது விடிந்தது. அன்று விடுமுறை நாள் என்பதால் செல்வியின் அப்பாவும் அம்மாவும் பரபரப்பு எதுவும் இல்லாமல் நிதானமாக எழுந்துகொண்டார்கள். சிறிது நேரம் கழித்து செல்வி பாப்பாவை எழுப்பினார் அப்பா. “செல்வி கண்ணு.. எழுந்திருடா.. இன்னைக்கு நாம எங்கே போகப் போறோம் தெரியுமா?” என்றார். கண் விழித்த செல்வி, “தெரியலையேப்பா.. நீங்களே சொல்லுங்க..” என்றாள் படுக்கையை மடித்து வைத்துக்கொண்டே. “பக்கத்து ஊர்ல சிலர் பள்ளம் தோண்டும்போது, நம்ம ஊருக்கு தண்ணி வர்ற குழாயை உடைச்சுட்டாங்களாம். அதைச் சரி செய்யுற வரைக்கும் நம்ம ஊருக்குத் தண்ணி வராதாம்” என்றார். செல்விக்கு நேற்று இரவு நடந்தது கொஞ்சம் நினைவுக்கு வந்தது. அப்பா தொடர்ந்து சொன்னார். “தண்ணி லாரி வரச் சொல்லி இருக்கோம். ஆனா அவங்களும் நாளைக்குதான் வருவாங்களாம்” என்றார். “அச்சச்சோ.. அப்படின்னா நாம எப்படிப்பா குளிக்கிறது?” என்றாள் செல்வி. “அதனாலதான்.. நாம இன்னைக்கு..” என்று சொல்லி நிறுத்தினார். “அப்பா சொல்லுங்க.. அதனால.. நாம இன்னைக்கு..?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் செல்வி. “பக்கத்துத் தோட்டத்தில் இருக்கிற பம்ப் செட்டுக்கு குளிக்கப் போறோம்.. நீ போய் சோப்பு எடுத்துட்டு சீக்கிரம் வா..” என்றார் அப்பா. குளியலறையில் இருந்து இதைக் கேட்ட கண்ணாடி சோப்பு திடுக்கிட்டது. “குளியலறையில் வரும் தண்ணீரின் வேகத்தையே நம்மால் தாங்க முடியாதே.. பம்ப் செட் வேகத்தை எப்படித் தாங்கப் போகிறோம்? நாம ஒரே நாளில் முழுமையா கரைஞ்சு அழிந்து போயிடுவோம்” என்று சொல்லிப் புலம்பியது. இதைக் கேட்ட சந்தன சோப்பு சிரித்துக்கொண்டே, “பார்த்தாயா.. தண்ணீர் இல்லைன்னா ஜாலியா இருக்கலாம்னு நீ நினைச்ச. ஆனா இப்போ இன்னும் அதிகமான தண்ணீரைச் சமாளிக்கணும். ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ.. தண்ணி இருக்கறதாலாதான் மனிதர்கள் நம்மை உருவாக்கறாங்க. வாங்கிப் பயன்படுத்தறாங்க. நமது வேலையே தண்ணீரில் கரைந்து மனிதர்களை சுத்தமா வச்சுக்கறதுதான். அதுமட்டும் இல்லாம, ‘சுத்தம் சோறு போடும்’ அப்படின்னு ஒரு பழமொழியே இருக்கு. மனிதர்களைச் சுத்தமா வச்சுக்கறதுதான் நம்ம வேலை. நமக்கான அந்த வேலையைச் செய்ய நாம தயங்கக்கூடாது. தண்ணீர் இல்லைன்னா நமக்கு இங்கே வேலையே இல்லை. இது உனக்கும் எனக்கும் மட்டும் இல்ல. தண்ணி இல்லைன்னா மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் எதுவுமே இந்த பூமியில் வாழ முடியாது. ஆனா இதைப் புரிஞ்சுக்காத பலர் தண்ணீரை வீணாக்கிட்டு பின்னாடி கஷ்டப்படறாங்க. அதனாலதான் திருவள்ளுவர் தாத்தா, ‘நீரின்றி அமையாது உலகு’ அப்படின்னு சொல்லி இருக்கார்” என்று கூறி முடித்தது.    “நல்லா புரிஞ்சுகிட்டேன். நாம எல்லாருமே நமக்கான வேலையைச் செய்யத் தயங்கக்கூடாது. இனி என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று சிரித்துக்கொண்டே சொன்னது கண்ணாடி சோப்பு. அப்போது குளியலறைக்கு வந்த செல்வி பாப்பா, சோப்புகளைத் தூக்கிக்கொண்டு பம்ப் செட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள். தாங்களும் பம்ப் செட்டில் குளிக்கப்போகும் மகிழ்ச்சியோடு சோப்புகளும் செல்வியுடன் சேர்ந்து ஓடின.  

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

மனிதர்களை அடிமைப்படுத்தி, சந்தையில் அவர்களை நிறுத்தி விற்பனை செய்த வரலாறுகளைப் படித்திருக்கிறோம். கிளர்ந்தெழுந்த அடிமைகள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட கதைகளைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அடிமை வணிகங்கள் இல்லாததாக இன்றைய உலகம் மாறிவிட்டது என்று நிம்மதியாகப் பெருமைப்படுகிறோம். ஆனால் உண்மையில் அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா? நவீன காலத்து அடிமைமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு பதிவு செய்திருக்கிறது. பாலியல் தொழில், கொத்தடிமை, கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை இவற்றில் குறைந்தது 4 கோடிப் பேர் சிக்கியிருக்கிறார்கள். நாடுவிட்டு நாடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டுக்குள்ளேயே மனிதக் கடத்தல் நடக்கிறது. இவற்றுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதில் பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. உலக அளவில் சுமார் 12.16 லட்சம் கோடி ரூபாய் லாபம் குவிக்கப்படுகிறது. உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்மம் மட்டுமின்றி இவர்கள் அனுபவிக்கிற உடல் நோய்கள் உள்ளிட்ட துயரங்களும் அவமதிப்புகளும் ஏராளம். மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையாக இருக்கக்கூடிய பழங்குடியினர், பூர்வ குடியினர், ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட, வஞ்சகங்களுக்கு எளிதில் இரையாகக்கூடிய மக்கள் நவீன அடிமை வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், மனநலம் குன்றியோர், உடல் ஊனங்களுக்கு உள்ளானோர் போன்ற எதிர்த்துநிற்க முடியாதவர்கள் வலுக்கட்டாயமாகவோ, பணத்தைக் காட்டியோ, சூழ்ச்சி செய்தோ கடத்தப்படுகிறார்கள். குழந்தைகளில் நான்குக்கு ஒரு குழந்தை வீதம் கடத்தப்படுகிற தகவல் நெஞ்சை உறைய வைக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? அடிமைத்தனத்தை ஒழிப்பது என்பது அ, டி, மை என்ற மூன்று எழுத்துக்களை அழிப்பதல்ல. நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கச் செயல்படுவோம். அவ்வாறு செயல்படுகிறவர்களோடு சேர்ந்தாவது நிற்போம். இந்தத் தகவல்களை சக மனிதர்களுக்குச் சொல்வோம். நவீன பொருளாதார அடியாட்களான அரசாங்கங்களின் கொள்கைகளும் பாராமுகங்களும் இதற்கொரு காரணம் என்பதையும் சேர்த்தே சொல்வோம். அழகுக்கு அடிமை, அன்புக்கு அடிமை, கவிதைக்கு அடிமை, காதலுக்கு அடிமை… என்பதாகவெல்லாம் உணர்ச்சி மிகுந்து பேசுவோமே, அதை நிறுத்திக்கொள்வோம். எதற்காகவும் யாரும் யாருக்கும் அடிமையாவதை மறுப்போம். இன்று (டிசம்பர் 2) உலக அடிமைத்தன ஒழிப்பு தினம்.

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்னமும் அறிவிக்கவில்லை. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்ட அமைப்பின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு, 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டன. 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை முடிந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் பெறப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி சேர்க்கைக்காகக் காத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான தனியார்  கல்லூரியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல் என மாணவர்களுக்கான சேர்க்கைப் பட்டியல்களும் வெளிவந்து கொண்டுள்ளன. உண்மையில் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்துவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. ஆனால், இன்னமும் தேர்வு முடிவுகள் வெளியாகாத இந்தச் சூழலில், ‘எங்கள் குழந்தைகளுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?’ என CBSE பள்ளிகளில் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையுடன் கேட்கின்றனர்.  மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர்களது ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல, பெரும்பாலான  CBSE பள்ளிகளில் பத்தாம் வகுப்புத்  தேர்வு முடிவுகள் வராமலேயே, பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் சில பள்ளிகளில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு இடைத்தேர்வுகூட நடத்தி முடிக்கப்பட்டதுவிட்டது என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இரண்டுக்குமே MCQ (Multiple Choice Questions) என்றழைக்கப்படும்  கொள்குறிவகைத் தேர்வில் எடுத்த முடிவுகளை மட்டும் பிரிண்ட் அவுட் எடுத்து  பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  சிபிஎஸ்சி பள்ளிகளைப்  பொறுத்தவரை, இருபருவங்களாக நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளில், முதல் பருவத்தின் இந்தத் தேர்வு முடிவுகளை வைத்து பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையை நடத்தி உள்ளனர். மாணவர்களுக்கான பாடப் பிரிவுகளையும் பெற்றோர்களிடம் பேசி அவர்களாகவே தெரிவு செய்து 11 ஆம் வகுப்பு சேர்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில அரசுப் பாடத்திட்டத்திற்கான  தேர்வு விடைத்தாட்கள்  திருத்தும் பணி, ஜூன் முதல் வாரத்தில்  முடிந்து தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் மத்திய  இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் வரக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணி ஜூன் 5 ஆம் தேதியே முடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எதற்காகத் தேர்ச்சி முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வி, ஆசிரியர் மற்றும் பெற்றோர் தரப்புகளிலிருந்து வருகின்றன.  கொரோனா காலத்தில் கடந்த இரண்டு கல்வியாண்டுகளும் மாணவர்களுக்கு முறையான கல்வி கிட்டாத சூழல் நிலவியது. ஆனால், தற்போது எல்லா இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தச் சூழலில் மாணவர்கள் சரியான காலத்தில் உயர் வகுப்புகளுக்குச் சென்று முறையான கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் உண்டல்லவா? அதை முறைப்படி செயல்படுத்த வேண்டிய கடமை அரசுகளுக்கும் அரசு சார்பு அமைப்புகளுக்கும் உண்டல்லவா? ஆனால் இதுவரை, ஒன்றிய அரசோ, மாநில அரசோ, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளோ இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கல்வியில் சமமின்மை நிலவுவது குறித்து நாம் நன்கறிவோம். குறிப்பாக நம்  தமிழகத்தில், மாநிலப் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று பல்வேறு வகையான, பாடத்திட்டங்கள் சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் வேறுபட்ட மன நிலையை உருவாக்கக்கூடிய கல்விச் சூழலே அதிகரித்து வருகிறது. இங்கு சமத்துவம் பேசுகிறோம்; சமமான கல்வி என்று கூறுகிறோம்; வாய்ப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கிடையே கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு, பொருளாதாரம் சார்ந்த வியாபாரமாகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட அண்மைக் காலங்களில், கல்விச் சூழலில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதிகப் பணம் செலவழித்துப் படிக்கவைக்கக் கூடிய பள்ளிகள்தான் தரத்தில் உயர்ந்த பள்ளிகள் என்ற மனப்போக்கும் நிலவுகிறது. அதன் அடிப்படையிலேயே பத்தாண்டுகள் முன்பு வரை கோலோச்சிய பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சமச்சீர் கல்வி முறை வந்தபிறகு,  தங்களை மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ள, CBSE பள்ளிகளாக மாறின. இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத சூழலில் இப்பள்ளிகள் CBSE அமைப்புக்கு எதிராக எந்தக் குரலும் எழுப்பாமல், மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலை ஏதும் இல்லாமல் மௌனமாக உள்ளனர். தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனடியாக, மாணவர்கள் நலனைப் பொருட்படுத்தாமல், சட்டத்துக்குப் புறம்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கும் தனியார் பள்ளிகள், மாணவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் CBSE-ஐ எதிர்த்துப் போராட்டம் நடத்தாது ஏன்? ஒரே மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் தேர்ச்சி முடிவுகள் வரப்பெற்று உயர் வகுப்புகளுக்குச் சென்றுவிட்ட சூழலில், சக வகுப்பு சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளை இன்னமும் தேர்வு முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழலில் வைத்திருப்பது, மாணவர்கள் எதிர்காலத்தையும் மனநிலையையும் பாதிக்கும், பாழாக்கும் செயலாகும். எந்தக் கல்வி முறையில் பயின்றாலும், பயிலும் மாணவர்கள் அனைவரும் நமது குழந்தைகளே. இங்குள்ள கல்வி மற்றும் மனித வளத்துறைகள் இது குறித்து உரையாடல் நடத்தி இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-இடம் உரிய விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மாறாக, CBSE அமைப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும்வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கச் சொல்வது என்ன நிர்வாக முறை? என்பது விளங்கவில்லை. மாநில அரசு எப்போது உறக்கம் கலைக்கும்? இந்தச் சூழலிலாவது, நம் குழந்தைகளுக்கு ஏற்ற பள்ளிகள் அரசுப் பள்ளிகள், ஏற்ற பாடத்திட்டம் மாநிலப் பாடத்திட்டம் என்ற புரிதல் பெற்றோர்களிடம் உருவாக வேண்டும். கல்வி என்பது நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதை  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் கேட்டுப் பெற வேண்டியது நம் கடமை. நாம் தொடர்ந்து வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வர வேண்டும். கல்வி உள்ளூர் வளம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கல்வி கற்பார்கள். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, அலங்கார முகமூடிக்கு ஆசைப்பட்டு CBSE பின்னால் ஓடினால், நமது குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும்தான் பாழாகும் என்பதைப் பெற்றோர்களும் இந்த அரசும் உணர வேண்டும். கல்வி முதலாளிகள் தங்கள் மேட்டிமை மனப்பான்மையை மாற்றிக்கொண்டு மாநிலப் பாடத்திட்டத்திற்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், நுகர்வோர் உரிமைச் சட்டப்படி, ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியது கட்டாயம். பெற்றுக்கொண்ட பயணத்துக்கு உரிய சேவை வழங்காவிட்டால் அந்தந்தக் கல்வி நிறுவனங்கள்தான் குற்றவாளிகள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக அரசும் மெத்தனப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு CBSE பள்ளிகளில் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும். உமா மகேஸ்வரி, கல்வியாளர்

களங்கமின்மையின் சுடர்

களங்கமின்மையின் சுடர்

கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம் ஜூலை 5, கு. அழகிரிசாமி நினைவு நாள் சிறப்புக் கட்டுரை “உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள்“. குழந்தைகள் உலகை, தமிழிலக்கியத்தில் புனைவுகளாக நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி,  ஜெயமோகன், கி.ராஜநாரயணன், எஸ்.ராமகிருஷ்ணன், என்று குழந்தைகளை மையப்படுத்திய கதைகளை எழுதி சாதனை செய்திருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியல், இயல்புகளைப் பற்றிப் பெரியவர்கள் புரிந்து கொள்கிற கதைகளாக அவை வெளிப்பாடடைந்திருக்கின்றன.  சிறார் இலக்கியத்தின் முக்கியமான மூன்று வகைமைகளாக, குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் இலக்கியம், குழந்தைகளே எழுதுகிற இலக்கியம், குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகப் பெரியவர்கள் எழுதுகிற இலக்கியம் என்று சொல்கிறார்கள் சிறார் இலக்கிய ஆய்வாளர்கள். அதில் குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியுள்ள ஏராளமான கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைகளான ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, தெய்வம் பிறந்தது, போன்ற கதைகள் உச்சத்தைத் தொடுகின்றன. கு. அழகிரிசாமியின் எளிமையான கலை வெளிப்பாடு குழந்தைகளின் எளிமையான உலகத்துடன் மிகச் சரியாகப் பொருந்தி அந்தக் கதைகளை கலையின் பூரணத்துவத்துக்கு அருகில் கொண்டு போய் விடுகிறது.   கு.அழகிரிசாமியின் தனித்துவமான வெளிப்பாடு என்று எதைச் சொல்லலாமென்றால், அன்றாட வாழ்க்கையின் அன்றாடக் காட்சிகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்கிறார். அதில் தன் கருத்தைத் திணிக்காமல் அதே நேரம் அந்தக் காட்சியில் தன் கருத்துக்கு ஏற்ற இயல்பை, வண்ணத்தீற்றலை அல்லது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுக்கிறார். குழந்தைகள் வரையும் ஓவியம் போல அவ்வளவு இயற்கையாக இருக்கிறது. முதலில் அதன் எளிமை நம்மை ஏமாற்றி விடுகிறது. ஆனால், உற்று நோக்க நோக்க, அந்த ஓவியத்தின் அழகும் ஆழமும் கடலென விரிவு கொள்கிறது. அதை உணர்ந்துகொள்ளும்போது வாசகன் திடீரென, தான் ஒரு பெருங்கடலுக்கு நடுவே நிற்பதை உணர்வான். தன்னைச்சுற்றி வண்ணவண்ண முத்துகள் கீழே கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பான். ஒரு ஒளி, வாழ்க்கை மீது ஊடுருவி பேருணர்வின் தரிசனத்தைக் கொடுக்கும்.  அதுவரை கெட்டிதட்டிப் போயிருந்த மானுட உணர்வுகளின் ஊற்றுக்கண் உடைந்து உணர்ச்சிகள் பெருகும். விம்மலுடன் கூடிய பெருமூச்சு எழுந்து வரும். கண்களில் ஈரம் பொங்கும். தன்னையும் அந்தச் சித்திரத்துக்குள் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்கும். அப்போதுதான் வாசகன் கு.அழகிரிசாமியெனும் மகாகலைஞனின் மானுட அன்பை உணர்வான். அவருடைய கலைக்கோட்பாட்டை உணர்வான். அவருடைய கலை விதிகளைத் தெரிந்து கொள்வான். அவருடைய அரசியலை புரிந்து கொள்வான். அந்தச் சித்திரம் வாசக மனதில் அவர் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தைத் துல்லியமாக ஏற்படுத்தியதை உணர்ந்து கொள்வான். கு.அழகிரிசாமியின்  கதைகளில் பெரிய தத்துவ விசாரமோ, ஆன்மீக விசாரமோ செய்வதில்லை. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அந்தக் கதைகளுக்குள் வருமென்றால், அதை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல வாசிப்பு இருந்தாலும், ஏராளமான கவிதைகளை எழுதியிருந்தாலும் கதைகளில் எளிய மொழியையே கையாண்டார். இதழியல் துறையில் வேலை பார்த்ததாலோ என்னவோ, யாருக்கு எழுதுகிறோம் என்ற போதம் இருந்தது. தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக, குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, என்ற நான்கு கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, அறியாமையை, குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதியிருப்பதை வாசிக்கும் போது உணரமுடியும். ஒருவகையில், ராஜா வந்திருக்கிறார் கதை, கு.அழகிரிசாமியின் மையம் என்று கூடச் சொல்லலாம். அவர் இந்த வாழ்க்கையின் அவலத்தை, எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், துன்பதுயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக் கொள்ளவும் மங்கம்மாளைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும், தான் வாழும் வாழ்க்கையை வம்புக்கிழுக்கவும், அதில் வெற்றி பெறவும் முடியும் என்பதைச் சொல்கிற மிக முக்கியமான மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு.அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எழுத்தாளராகிறார். 1950–ல் சக்தி இதழில் வெளியான ராஜா வந்திருக்கிறார் கதையின் தொடக்கமே, மங்கம்மாளின் குழந்தைகளின் போட்டி விளையாட்டுடன்தான் தொடங்குகிறது. சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் சட்டையில் தொடங்கும்போதே, இரண்டு வர்க்கங்களை அறிமுகப்படுத்தி விடுகிறார் கு.அழகிரிசாமி. மங்கம்மாளும் அவளுடைய மூத்த சகோதரர்களான செல்லையாவும் தம்பையாவும் ஏழ்மையில் உழலும் குடும்பம் என்பதும், அந்த ஊரிலேயே பெரியதனக்காரரின் மகனான ராமசாமி சில்க் சட்டை போடுகிற, ஆறு பசுக்களை வைத்திருக்கிற வசதியான குடும்பத்தினர் என்பதும் தெரிந்து விடுகிறது. புத்தகத்தில் பதிலுக்குப் பதில் படம் காண்பிக்கும் விளையாட்டிலிருந்து என் வீட்டில் ஆறு பசு இருக்கிறது, உன்வீட்டில் இருக்கிறதா? என்று வளர்ந்து, பதில் பேச முடியாத ராமசாமியை மங்கம்மாளும், செல்லையாவும், தம்பையாவும், சேர்ந்து தோத்தோ நாயே என்று கேலி செய்வதில் முடிகிறது. இரண்டு குடும்பத்தினரும் வெவ்வேறு சாதியினர் என்பதை, கோழி அடித்துத் தின்பதைப் பற்றிக் கேலியாக ராமசாமி சொல்வதன் மூலம் காட்டி விடுகிறார். செல்லையாவையும் தம்பையாவையும் விட, மங்கம்மாளே துடிப்பான குழந்தையாக அறிமுகமாகிறாள். ராமசாமியின் வீட்டு வேலைக்கராரால் விரட்டப்பட்டு குடிசைக்கு வரும் குழந்தைகளில், மங்கம்மாள் அவளுடைய தாயாரான தாயம்மாளிடம், ‘ஐயா வந்து விட்டாரா?’ என்று கேட்பதிலிருந்து வேறொரு உலகம் கண்முன்னே விரிகிறது. எங்கோ தொலைதூரத்தில் வேலை பார்த்து, அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடித்து, எப்படியோ மிச்சப்பட்ட காசில் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மல் துணியில் இரண்டு பனியன்களும், இரண்டு டவுசர்களும், ஒரு பாவாடையும், பச்சைநிறச் சட்டையும், ஒரு ஈரிழைத் துண்டும் இருக்கின்றன. அம்மாவுக்குத் துணியில்லை. அப்பாவுக்கு அந்தத் துண்டை வைத்துக்கொள்ளலாம் என்று அம்மா சொல்கிறார். ‘அம்மாவுக்கு இல்லாத துணி அப்பாவுக்கு எதுக்கு?’ என்று மங்கம்மாள் கேட்கிறாள். இருட்டில் அவர்கள் குடிசைக்குப் பின்னாலிருந்த வாழை மரத்துக்குக் கீழே ஒரு சிறுவன் எச்சில் இலையை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவனை அழைத்து விவரம் கேட்கிறார் தாயம்மாள். அப்பா, அம்மா இல்லாத, அநாதையான, சிரங்கும் பொடுகும் நாற்றமும் எடுக்கும், தன் அரையில் கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தச் சிறுவனுக்குக் கூழு கொடுத்து, தன் குழந்தைகளோடு படுக்க வைக்கிறாள். இரவில் பெய்யும் மழைக்கூதலுக்கு, தான் மறுநாள் தீபாவளியன்று உடுத்தலாம் என்று எடுத்து வைத்திருந்த பீத்தல் புடவையை எல்லாருக்குமாகப் போர்த்தி விடுகிறார். மறுநாள் விடிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். ராஜா என்ற அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்து, சீயக்காய் பொடி போட்டு பக்குவமாகக் குளிப்பாட்டி விடுகிறார். குளிக்கும்போது சிரங்குப்புண்களால் ஏற்பட்ட வேதனையினால் ராஜா அழும்போது, ‘சரியாயிரும் சரியாயிரும்.. புண் ஆறிரும்’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்தப் பகுதியை வாசிக்கும்போது மனம் இளகாமல் இருக்கமுடியாது. பரிவின் சிகரத்தில் தாயம்மாளைப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி. மற்ற குழந்தைகள் புதுத்துணி உடுத்தும்போது, ‘ராஜாவுக்கு என்ன செய்ய?’ என்று தாயம்மாள் குழம்பி நிற்கும்போது, மங்கம்மாள்தான் அப்பாவுக்கென்று வைத்திருந்த அந்த ஈரிழைத்துண்டைக் கொடுக்கச் சொல்கிறாள். அவள் சொன்னதும் தயக்கமில்லாமல் அந்தத் துண்டை எடுத்து ராஜாவுக்குக் கட்டி விடுகிறாள். ஒரு வகையில் தாயம்மாளையும் மங்கம்மாளையும் ஒரே உருவின் இரண்டு பிறவிகளாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி என்று சொல்லலாம். புதுத்துணி உடுத்திய குழந்தைகள் தெருவுக்கு வரும்போது, பெரிய வீட்டு ராமசாமி வருகிறான். அவனுடைய அக்காவைத் திருமணம் முடித்த ஜமீன் ராஜா அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை,“எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்..” என்று சொல்லும்போது, மங்கம்மாள் பழைய பள்ளிக்கூடப் போட்டியை நினைத்துக் கொண்டு,“ ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்…? எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறான்.. வேணும்னா வந்து பாரு..”என்று சொல்வதோடு கதை முடிகிறது. இந்த வரிகளை வாசிக்கும்போது கண்ணில் நீர் துளிர்க்கிறது. இந்தக் கதையை வாசிக்க வாசிக்க, வாசக மனதில் பேரன்பு ஒன்று சுரந்து பெருகி இந்த மனிதர்களை, உலகத்தை, பிரபஞ்சத்தை, அப்படியே சேர்த்தணைப்பதை உணரமுடியும்.  எளியவர்களின் மனவுலகை, அவர்கள் இந்த வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையை, இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லவில்லை. எல்லாவிதமான இல்லாமைகளுக்கும் போதாமைகளுக்கும் நடுவில் தாயம்மாளிடம் அன்புக்குக் குறைவில்லை. தாய்மையுணர்வு குறையவில்லை. பொங்கித் ததும்பும் இந்த அன்பின் சாயலையே குமாரபுரம் ஸ்டேஷன் கதையிலும் வரைந்திருப்பார். முன்பின் தெரியாதவர்களிடம் ஏற்படும் உறவுகளின் தார்மீக நேசத்தைச் சொல்லியிருப்பார்.  கு.அழகிரிசாமி ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில், தன்னுடைய அம்மாவுக்குக் கோயில் கட்டியிருப்பதாக கி.ரா. சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு இந்திய கிராமத்தின் ஆத்மாவினைத் தொட்டுக் காட்டுகிற கதையாக ராஜா வந்திருக்கிறார் கதையைச் சொல்லலாம். தமிழ்ச் சிறுகதைச் சிகரங்களில் ஒன்று  ராஜா வந்திருக்கிறார். வாழ்வின் எந்தக் கட்டத்திலாவது புறக்கணிப்பின் துயரை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்தத் துயரே அவர்களை வாழ்க்கை முழுவதும் வேட்டையாடிக் கொன்று தீர்த்துவிடும். நிராகரிப்பின் கொடுக்குகளால் கொட்டப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு கசப்பானதாக இருக்குமென்பது அதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். ஆனால், குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற புறக்கணிப்பை எப்படி அவர்கள் வழியிலேயே ஈடுகட்டி மகிழ்கிறார்கள் என்பதை நேர்த்தியாகச் சொல்கிற கதை அன்பளிப்பு. கதையின் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்த, நாம் பங்கேற்ற கணமாகவே இருப்பதை வாசிக்கும்போது உணரலாம். கதையின் இறுதிக்காட்சியில் நம்மை அறியாமல் நாம் மூச்சு விடக்கூட மறந்து போவோம். அந்தக் கடைசி வரியில் புறக்கணிப்பின் துயர் மொத்தமாக நம்மீது மிகப்பெரிய பளுவாக இறங்கி நசுக்குவதை உணர்ந்து கொள்ளமுடியும். ஒரு புதிய பாதை, ஒரு புதிய வெளிச்சம் நம் கண்ணுக்கு முன்னால் தெரியும். நமக்கு அழுகை வரும்; சிரிப்பும் வரும். நாம் அழுதுகொண்டே சிரிக்கவோ, சிரித்துக்கொண்டே அழவோ செய்வோம். இதுதான் கு.அழகிரிசாமி நம்மிடம் ஏற்படுத்துகிற மாயம். மிகச்சாதாரணமாக  ஆரம்பிக்கிற கதை, எப்படி இப்படியொரு மனித அடிப்படை உணர்வுகளில் ஊடாடி நம்மை அசைக்கிறது, வாழ்க்கை குறித்த மகத்தான ஞானத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது என்பதுதான் கலை. மகத்தான கலை எளிமையாகவே இருக்கிறது. அந்தக் கலை ஏற்படுத்தும் உணர்வு, மானுடம் முழுவதற்கும் பொதுமையானது. அன்பளிப்பு கதை அந்த உணர்வை அளிக்கும் அற்புதத்தைச் செய்கிறது. பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், பக்கத்து வீடுகளிலிருக்கும் குழந்தைகளோடு மிக அன்னியோன்யமான பாசத்தையும் நேசத்தையும் கொண்டிருக்கிறான்.

குட்டீசுடன் கும்மாளம்

குட்டீசுடன் கும்மாளம்

இப்ப எல்லாம் நாம வேலைக்குப் போறதைவிட அதிகமா கவலைப்படறது குழந்தை வளர்ப்பு பற்றிதான். இதைப் பார்க்கும் வீட்ல இருக்கற பெரியவங்க “அட, நாங்க எல்லாம் அஞ்சாறு புள்ளைகளை அழகா பெத்து வளர்த்தோம். ஆனா இவங்க ஒண்ணு ரெண்டு புள்ளைகள வைச்சிகிட்டு பண்ற அலம்பல் இருக்கே… தாங்க முடியல” அப்படின்னு சொல்லுவாங்க. நாம குழந்தைகளா இருந்த காலத்தில் எல்லா சொந்த பந்தங்களும் அக்கம் பக்கத்தில் ஒன்னு மண்ணா இருந்து வந்தாங்க. இன்னைக்கு நாம குழந்தை களுக்குச் சொல்ற “ஷேரிங் ரொம்ப நல்லது” அப்படிங்கிற விஷயம் அப்ப இயல்பா வாழ்க்கை முறையில இருந்துச்சு. பெரியப்பா தன் கொழந்தைகளுக்கு மட்டும் இல்லாம தம்பி பிள்ளைகளுக்கும் சேர்த்தே வாங்கிட்டு வருவார். அதே மாதிரி சித்தப்பா, அத்தைகள், மாமன்கள் எல்லா ருமே அப்படி இருப்பாங்க. எங்க அப்பா வேலை முடிஞ்சு வரும்போதே நெறைய மிட்டாய், தின்பண்டம் வாங்கிட்டு வருவார். வீட்டுக்கு அரை கிமீக்கு முன்னாடி இருக்கற இடத்தில் நாங்க மற்ற பசங்களோடு விளையாடிட்டு இருப்போம். அப்பாவோட பைக் சத்தம் கேட்டதும் எல்லா பசங்களும் “மிட்டாய் மாமா! மிட்டாய் மாமா!!”ன்னு பின்னாடியே வருவாங்க. வீட்டுக்கு வந்ததும் எல்லாருக்கும் எடுத்துக் குடுப்பார். ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல… எல்லா நாட்களும் இப்படிதான் பண்ணுவார். இதைப் பார்த்து இயல்பா ஷேரிங் குணம் எங்களுக்குள் வந்துச்சு. அதே மாதிரி வீட்ல என்ன செஞ்சாலும் நம்ம கையில கொடுத்து அதை அக்கம் பக்கம், சொந்தக் காரங்களுக்கு தந்துட்டு வரச் சொல்லுவாங்க. இது மாதிரி எல்லா விசயங்களும் பெரியவங்க சொல்லித் தந்து தெரிஞ்சுக்காம செயல்முறை யாவே நாம கத்துக்கிட்டோம். ஆனா இன்னைக்கு சூழ்நிலை அப்படியா இருக்கு? வாழ்தல் வேண்டி படிப்பு துரத்த, வாசல், முற்றம், மரங்கள் என்ற அழகிய வீட்டை விட்டுப் பல மைல்கள் தாண்டி ஆயிரம் சதுரஅடி வீட்டுக்குள் நாமும் சிறைப்பட்டு, பிள்ளைகளையும் சிறைப்படுத்தி வாழ்கிறோம். அக்கம்பக்கத்துல இருக்கறவங்க யாருன்னே நமக்குத் தெரியாது. நிறைய சம்பாதிக்கணும்னு சொல்லி, காசைக் குடுத்து அனைத்து வசதிகளையும் கைக்கு அருகில் கொண்டு வந்தாச்சு. குழந்தைகளை நம்முடைய நீட்சியா நெனைச்சு நம்ம கனவுகள் ஆசைகள் எல்லாம் அவங்க மேல திணிச்சு, “வாழ்க்கை ஒரு பந்தயம். ஓடு.. ஓடு…ன்னு அவங்கள பந்தயக் குதிரைகள் ஆக்கி வைச்சிருக்கோம். குழந்தைகளை குழந்தைகளா வாழ விடுறோமா? பணம், புகழ்ங்கற வட்டத்திற்குள் அவங்களையும் சிக்க வைச்சு, கடைசியில “நான் அப்படி அருமையா வளர்த்தேன்… இன்னைக்கு என் பேச்சைத் துளி கூட மதிக்கறது இல்ல”ன்னு நெறைய பேர் புலம்பிட்டு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்காங்க. ஒரு கணம் யோசிச்சுப் பார்த்தா தவறு எங்கே ஆரம்பம் ஆகுதுன்னு நாம் உணர்வோம். விதை ஒண்ணு போட்டு மரம் ஒண்ணு வளரணும்னு எதிர்பார்த்தா எப்படி நடக்கும்? நம்மிடம் ஆயிரம் தவறுகளை வைத்துக் கொண்டு பிள்ளைகள் மட்டும் சரியானவர்களாய் வளரணும்னு நினைச்சா அது எப்படி சரியாகும்? அதனால் நாம முதல்ல மாறணும். பின்னர் பிள்ளைகளும் அவங் களாகவே நம்மைப் பார்த்து மாறுவாங்க. இப்ப உள்ள குழந்தைகள்கிட்ட பட்டிமன்றத் திற்கு ஒரு தலைப்பு வைக்கச் சொல்லிக்  கேட்டா “அதிகம் அட்வைஸ் பண்றது அம்மாவா? அப்பாவா?” ன்னுதான் தலைப்பு தருவாங்க. பொதுவா யாருக்குமே அறிவுரை சொல்றது பிடிக்காது. ஆனா செலவில்லாம கொடுக்கற விசயம் அப்படிங்கறதால எல்லாரும் அறிவுரைகளை அள்ளி வீசுவோம். அறிவுரை என்பதை விட அதையே ஆலோசனைகளா பிள்ளைகள் கிட்ட சொல்லிப் பாருங்க. ஆலோசனைகள் சொல்லி, ஆரோக்கியமான விவாதம் அவர்களிடம் பண்ணும்போது அவங்க அதை ஏத்துக்குவாங்க. அறிவுரைக்கும் ஆலோ சனைக்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம். ‘அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே’ என்பதை விட “இப்படி செய்யலாமே, அப்படி செய்யலாமே” என ஆலோசனைகள் கூறலாம். அடுத்து நாம செய்யற இன்னொரு தப்பு ஓப்பீடு. நம்ம குழந்தைகளை மற்றவங்க குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசும்போது குழந்தைகளிடம் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை வந்துடும். அதனால ஒப்பிடுதல் கண்டிப்பா வேண்டாம். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். நம்ம குழந்தையிடம் என்ன தனித்திறமை இருக்கு அப்படின்னு கண்டு பிடிச்சு அதில் அவங்களுக்கு நிறைய விருப்பம் இருந்தால் மட்டுமே அவங்கள அந்த வகுப்புகளுக்கு அனுப்பணும். “பக்கத்து வீட்டுப் பொண்ணு பாட்டு கிளாஸ் போறா. அதனால நீயும் போ”ன்னு சொல்லி திறமைகளைத் திணிக்க கூடாது. எந்தவொரு மனிதரும் ஏங்குவது அங்கீகாரத்துக்கும், பாராட்டுக்கும்தான். அதனால சின்ன சின்ன விசயங்கள் செய்யும் போது அவங்கள பாராட்டி, சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்கணும். எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்னு ஆரோக்கியமா வாழ்றது.  ஆரோக்கி யமான குழந்தைதான் நல்லபடியாக வளரும். அதனால உடற்பயிற்சியின் அவசியத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்தணும். முன்னுதாரணமா நாமும் உடற்பயிற்சிகள் செய்தால்தான் பிள்ளைகளும் அதைப்பார்த்து  கடைப்பிடிப்பாங்க. ‘நாம எப்போதாவது பிள்ளைகளிடம் சாரி சொல்லி இருக்கோமா?’ன்னு ஒரு கணம் யோசிச்சுப் பாருங்க. ‘என் குழந்தைகிட்ட நான் எதுக்கு சாரி கேக்கணும்?’ அப்படின்னுதானே பெற்றோர்கள் நினைக்கிறோம். அதை மாத்தி, கண்டிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சாரி, ப்ளீஸ், தேங்க்யூ போன்ற கோல்டன் வார்த்தைகளைப் பயன்படுத்தணும். அப்போதான் குழந்தைகளும் அந்த வார்த்தைகளைப் பள்ளிகளிலும், வீடுகளிலும், வெளியிடங்களிலும் பயன்படுத்துவாங்க. குழந்தை வளர்ப்பில் நம் மனதில் இருத்த வேண்டிய இரண்டு முக்கிய  விசயங்கள்… 1. குழந்தைகள் நம்மால் வந்தவர்களே தவிர நமக்காக வந்தவர்கள் அல்ல. 2. குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை கேட்ட வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார்கள். இந்த இரண்டையும் விசயங்களையும் நினைவில் கொண்டு நம்மை நாம் செதுக்கிக் கொண்டாலே, குழந்தை வளர்ப்பு என்பது இனிமையானதொரு அனுபவமாகிவிடும்.