ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

பள்ளி திறந்து சில நாட்கள் ஆகின்றன. ஜூன் முதல் தேதி பள்ளி திறந்தாலே பாடத்திட்டங்களை முழுவதுமாக முடித்துவிட முடியாது என்கிற சூழலில் 11 நாட்கள் தாமதமாவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் வெயிலின் தாக்கம்  காரணமாக இந்தத் தாமதம் இருந்தாலும் களத்தில் வேறுவகையான பிரச்சனைகளை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர்.

தமிழ்நாட்டின் பள்ளிகளில் எந்தப் பாகுபாடுமின்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத மாணவர்கள் எல்லா இடங்களிலும் எல்லாப் பள்ளிகளிலும்  இருப்பார்கள். தனியார் பள்ளிகளில் இப்பிரச்சினை எப்படி கையாளப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும்போதும் பாடத்துக்கு ஒரு ஆசிரியர், மொழி ஆசிரியர் என முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களைக் கையாளும்போதும் இப்பிரச்சினைகள் களையப்படலாம். அப்படியான சூழல் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருக்கின்றன.

அரசுப் பள்ளிகளிலோ கடந்த பல பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதத் தெரியாதவர்கள், வாசிக்கத் தெரியாதவர்கள், அடிப்படைக் கணக்குத் திறன்கள் இல்லாதவர்கள் என ஆறாம் வகுப்பிலிருந்து  பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் காணலாம். இருபதாண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளிலிருந்து அல்லது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து  வெளிவரக்கூடிய மாணவர்கள் எழுத்துகளை வாசிக்கவும் எழுதவும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பர். ஆனால் சமீப காலங்களில் இதுபோன்று இல்லாமல், மிக மோசமான கற்றல் அடைவுடன், அடிப்படை எழுத்துகள் அறியாமலும் வாசிப்பின்றியும்தான் மாணவர்கள் வெளிவருகின்றனர். கணக்குப் பாடத்திலும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வாய்ப்பாடு தெரியாமலும்தான் இருக்கின்றனர். இவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல; தனியார் பள்ளிகளிலிருந்தும் வருகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படியாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பில் அல்லது ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில்  சேர வரும் மாணவர்களை நாம் தனியார் பள்ளிகளைப்போல நுழைவுத்தேர்வு வைத்துப் புறக்கணிக்கவோ அல்லது இது உங்களுக்கான பள்ளி இல்லை எனத் திருப்பி அனுப்பவோ முடியாது; அனுப்பவும் கூடாது. சட்டப்படியும் அது ஏற்புடையதல்ல. ஏனெனில் அரசுப் பள்ளிகள் எல்லாருக்குமான பள்ளிகள். மேற்குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளுடன் அரசுப் பள்ளிகளை வந்தடையும் மாணவர்கள் எண்ணிக்கை  ஒவ்வொரு வருடமும்  ஏறத்தாழ 50 சதவீதத்தைத் தாண்டிவிடுகிறது. வகுப்பறையில் பெரும்பான்மைக் குழந்தைகள் மேற்கூறிய பிரச்சனைகளுடன்தான் இருக்கின்றனர். இவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், தனிப்பட்ட கவனம் எடுத்துதான் இந்தச் சிக்கலைச் சரி செய்ய முயற்சி செய்கிறார்கள். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, 6 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களில் வாசிக்கத் தெரியாதவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பது நடக்கும். அல்லது வகுப்பாசிரியர் கவனித்து கூடுதல் நேரம் எடுத்து எழுத்துகளைக் கற்பித்தல், பயிற்சி தருதல் போன்ற செயல்பாடுகள் நடக்கும். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இவற்றைச் செயல்படுத்துகிறதா என்பது குறித்துத் தனியாக ஆய்வு செய்துதான் அறிந்துகொள்ள முடியும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, பல மாவட்டங்களில் அல்லது அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் இப்பிரச்சனையை முன்வைத்து , வாசிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சொல்கின்றனர்.  பெரும்பாலும்  இந்த  ஆணை வாய்மொழி உத்தரவவாகத்தான் இருக்கும். இது வருடத்திற்கு வருடம் கூடுதல் அழுத்தங்களுடன் நடந்தேறி வருகிறது. இதற்காகத் தனிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று EMIS வரை எடுத்துச் சென்றனர். உண்மையாகவே கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மேம்படுகின்றனரோ இல்லையோ, பதிவேடு தயாரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி. 

இந்தக் கல்வி ஆண்டில், சில தினங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில்,

‘இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு, அடிப்படைக் கற்றலை மேம்படுத்தும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத, அடிப்படைக் கணிதக் கணக்குகள் மற்றும் வாய்ப்பாடு தெரியாத, கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனியாக ஒரு பிரிவை (section) உருவாக்கி, பள்ளி திறந்த நாளிலிருந்து (12/06/2023) முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கென கால அட்டவணை‌ (Time Table) தனியாகப் பின்பற்றி, மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்தி, மீண்டும் அதே வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் அவர்களை சேர்த்துக் கல்வி பயில அனுமதிக்குமாறு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்  6 முதல் 8 வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியான முயற்சியைப் போர்க்கால அடிப்படையில் எடுத்துள்ளது  வரவேற்கத்தக்கது. ஆனால் இதைத் தொடக்கப் பள்ளிகளிலேயே நடைமுறைப்படுத்தி, எழுத்துகளைக் கற்றுக் கொடுத்தபிறகு  உயர்நிலை வகுப்புகளுக்கு ஏன் அனுப்பக்கூடாது? என்ற கேள்வியை நாம் முன்வைக்கிறோம்.

தொடக்க வகுப்புகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்ன நடக்கிறது?

எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் கற்றல் அடைவுகளுக்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, ‘தொடக்கக்கல்வி முடித்து வரும் குழந்தைகள் ஏன் அடிப்படைத் திறன்களைப் பெறாமல் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்கின்றனர்?’ என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அங்குள்ள ஆசிரியர்களைக் கல்வி அலுவலர்கள் கேள்வி கேட்காமல், அதே குழந்தை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும்போது, அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர் என்ற புலம்பல் ஆசிரியர்களிடம் இருப்பதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது.

இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால், அரசியல் சட்டத்தின்படி எல்லாருக்குமான சமமான கல்வி கிடைக்கிறதா என்று சிந்திக்கத் தோன்றும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அதிகம் இருப்பதாலும் வெறும் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருவதாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களை நாம் முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்குவதில்லை என்றும் அறிந்துகொள்ள முடியும்.

அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களை அவர்கள் எப்போது படிப்பார்கள்?

மேற்சொன்ன சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாத காலத் தனி  வகுப்பு என்பது  மாணவர்களுக்கு மிக முக்கியமான காலம். பள்ளி திறந்து முதல் மூன்று மாதங்களில்தான்  முதல் பருவப் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். முதல் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்த மாணவர்கள் எப்போது கற்றுக்கொள்வார்கள்? இப்படியாக ஒரு வகுப்பில் படிக்கவேண்டிய பாடங்களைத் தவறவிட்டு, தவறவிட்டு பத்தாம் வகுப்பு வரும்போது வெறும் 35 மதிப்பெண்களுக்கு அவர்களைத் தயார் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதில் எங்கே நாம் அனைவருக்குமான கல்வியை, சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குகிறோம்?

‘ஒரு மாணவனுக்கு வெறும் எழுத்துக் கூட்டிப் படிக்க, எழுத மட்டுமே கற்றுத் தருவதற்கு, எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் தற்காலிக ஆசிரியர்களைக் குறைந்த ஊதியத்திற்கு அரசு நியமனம் செய்துகொள்கிறதோ?!’ என்ற எண்ணம் தோன்றுகிறது.

நுண்திறன்களைக் கற்றுக்கொள்ள நம் மாணவர்களை எப்படித் தயார்படுத்துவது? ஆகவேதான் தொழிற்கல்வி பற்றியும் திறன் மேம்பாடு என்று சொல்லி, வேலைக்காக ஆட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே பள்ளிகளைத் தயார்படுத்தி வருகிறது அரசு. நவீன அறிவியலையும் கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படித்து ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகாமல் போவதற்கு தொடக்க வகுப்புகளில் சரியாகக் கற்றுத்தராதது மிக முக்கியமான காரணம்.

கல்வி அலுவலர்கள் என்ன செய்கின்றனர்?

தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அடிப்படை வாசிப்பை மாணவர்களிடம் உருவாக்கி எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க வேண்டியதை ஏன் கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதில்லை? எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வியும் எட்டாம் வகுப்புவரை செயல்பட்டது. இத்தனை இருந்தும் ஏன் அனைத்துக் குழந்தைகளையும் எழுத்துகளை வாசிக்கவைக்கக்கூடச் செய்ய முடியவில்லை?  

தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறுதலாகி வந்துசேரும் 60% குழந்தைகள் அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத நிலையில் இருக்கும் போக்கும் நிலவுகிறதே, அந்தப் பள்ளிகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? BRT எனப்படும் கல்வி அலுவலர்கள், வருடந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்கின்றனரே! ஏன் முழுமையான வாசிப்புத் திறனைக்  கொண்டுவர இயலவில்லை?

உளவியல் சிக்கல்

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இது போன்ற மாணவர்களைத் தனியாகப் பிரித்து உட்கார வைக்கும்போது மனதளவில் தாழ்வு மனப்பான்மை உருவாவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.  குழந்தைகள் உரிமை, சமத்துவம் எதுவும் இங்கே காக்கப்படுவதில்லை. குழந்தைகளிடம் கற்றல் திறனில் வேறுபாடு இருக்கலாமே தவிர, எழுத்துகளை, அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், குற்றத்தைக் குழந்தைகள் மீதே போடும் போக்கு வரவேற்கத்தக்கதல்ல. அவர்களை எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று ஒதுக்கி வைத்து, எட்டாம் வகுப்பு வரை கடைசி பெஞ்ச் மாணவர்களாக மாற்றி, சமூகத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கைப் பொதுச்சமூகம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.

குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், சிறார்களுக்காக இயங்குவோர் என அனைவரும் இவை பற்றியெல்லாம் சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. குழந்தைகள் உரிமையைத் தட்டிப் பறிக்கும் போக்கு இங்கே நிலவுகிறது. அடித்தட்டு மக்கள், முதல் தலைமுறைக் குழந்தைகள் ஆகியோருக்கு தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை எழுத்து, வாசிப்பு, கணக்குத் திறன்களைக் கொடுக்காத சூழலில், அவர்களை அவையில் முந்திய இருக்கச் செய்வது எப்படி? சிறார்களின் மன, உளவியலைக் கணிக்கிறோமா, காக்கிறோமா என்று ஆய்வு செய்யுங்கள்.

தரமான கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் எனில், அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இங்குள்ளோருக்கு வேண்டும். அப்போதுதான்  ஐந்தாம் வகுப்பிலேயே சரளமாக எழுதப் படிக்க, அடிப்படைக்  கணக்குகளைச் செய்ய மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பவேண்டும் என்ற கருத்து வலுப்பெறும். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் பெரிய பாடப் புத்தகங்களை வாசித்து உள்வாங்கி, தனக்கான வாழ்க்கையை நோக்கி  நகரும் சூழல் உருவாகும். ஆகவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எழுத்துகள் கற்றுத்தரும் வேலையை மட்டும் ஆசிரியர்கள் செய்யாமல், அவரவர் பாடங்களைக் கற்பிக்கும் பணியை உருவாக்க வேண்டும்.

முக்கியக் காரணமும் உரிய தீர்வும் என்ன?

அரசு தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை, ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் ஏராளமாக இருக்கும் சூழலில், ஐந்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் மட்டுமே கவனித்துக்கொள்ளும் சூழல் இருப்பதால், அவர்களால் ஒரே நேரத்தில் ஐந்து வகுப்புகளுக்கும் எவ்வாறு கற்றல் பணியை மேற்கொள்ள இயலும்? எனவே ஒரு வகுப்புக்கான பாடங்களை எடுக்கும்போது, மற்ற நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் – கற்றல் நிகழ்வதில்லை. ஐந்தில் ஒரு பங்கு கற்பித்தல் மட்டுமே நிகழ்வதால், இறுதியாக அவர்கள் ஐந்து வகுப்புகளை முடித்து வெளியே வரும்போது ஒன்று அல்லது இரண்டாம் வகுப்புக்கான மாணவர்களின் அடைவுத் திறனை மட்டுமே பெற்றிருப்பார்கள் இல்லையா?

சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்றால், அனைவருக்கும் ஒருமித்த கல்வி வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற முனைப்பு இருந்தால், அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் உடனடியாக வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வரவேண்டும். அதற்கு காலிப் பணியிடங்களை அரசு போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, முறையான கல்வித் தகுதி பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்களா என்பதையும் மாணவர்கள் உரிய அடைவுத்திறன் பெறுகிறார்களா என்பதையும் அரசு கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

‘இளமையில் கல், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ இவையெல்லாம் முதுமொழிகள். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதுபோல், குழந்தைப் பருவத்தில், தொடக்க வகுப்புகளில் கற்பிக்கவேண்டியதை விட்டுவிட்டு, உயர்நிலை வகுப்புகளில் தொடக்கக் கல்வியைக் கற்பிப்பது என்பது அறிவுடைமை ஆகாது. மேலும் அந்த மாணவர்களால் அதே வகுப்பின் பிற மாணவர்களோடு இணைந்தோ இணையாவோ பயணிக்க முடியாது; தாழ்வு மனப்பான்மையால் தொடர்ந்து முன்னேறவும் முடியாது என்பதையெல்லாம் அரசும் கல்வியாளர்களும் உணர்ந்துகொண்டு இந்த இடைவெளியைக் களைய உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

  • சு. உமா மகேஸ்வரி, கல்விச் செயற்பாட்டாளர்

Comments (3)


Ssr

இது‌ தொடர்கதை. நான் பணியிலிருந்த பொழுதும் இப்பிரசினை‌ இருந்தது. ஆறாம்‌ வகுப்பில்‌ முதல் மூன்று‌ மாதங்கள் அடிப்படை மொழி மற்றும் கணிதத் திறன்களை எய்திட‌ திட்டம் வகுக்கபப்பட்டு‌ செயல்படுத்தப்படும். தொடக்கக்கல்விப்‌ பாடத்திட்டம்‌ மற்றும் வகுப்பறைக் கற்பித்தல் அனைவரது‌ வீட்டுமொழி தமிழ்‌ என்று கருதி நடைமுறைப்படுத்துகின்றன. இது‌ உண்மைநிலைக்கு‌ முரண்பட்டது.

Sudarkodi
Sudarkodi
June 18, 2023

கருத்து ஏற்புடையதே . ஆனால் நடுநிலைப் பள்ளிகளில் SSA,NON SSA என இரு வகையாக உள்ளது. SSA பள்ளிகளில் 3 பட்டதாரிகள் , NON SSA பள்ளிகளில் 2 பட்டதாரிகள் மட்டுமே . இருவரும் மொழி பாட ஆசிரியர்கள் அல்லது ஒரு மொழிப்பாட ஆசிரியர் ஒரு அறிவியல் ஆசிரியர். சமமான கல்வி என்றால் 6 ஆம் வகுப்பு முதல் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாகஅல்லவா ஆசிரியரை நியமிக்க வேண்டும். இது 20 வருடகால குறைபாடு. Mozhippaada ஆசிரியர் மற்ற பாடங்களை முழு திறனுடன் நடத்த இயலாது. இதுபோல் இன்னும் அடிப்படையில் எவ்வளவோ… நோய் நாடி நோய் முதல் நாடி என செயல் பட்டால் தான் மாற்றம் வரும் . இல்லையேல் இதே நிலை தான் நீடிக்கும்.

சு.மூர்த்தி
சு.மூர்த்தி
June 19, 2023

தோழர்,

வட்டார அளவில் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் அடைவில் பின்னடைவு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து ஆசிரியர்களிடம் உரையாடல் நடத்த வேண்டும். ஒவ்வொரு வட்டார அளவிலும் தீர்வுகளை கண்டறிந்து தொடக்கப்பள்ளி அளவிலேயே குறைபாடுகள் சரி செய்யப்பட வேண்டும்.

குழந்தைகளின் கறறல் அடைவில் வட்டாரங்களுக்கிடையிலேயே வேறுபாடுகள் இருக்கும்.

ஆசிரியர்கள் பள்ளி நேரங்களில் முழுமையாக கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் சூழல் உருவாக வேண்டும். வகுப்புக்கு ஒரு ஆசிரியர் தொடக்கப் பள்ளிகளில் அவசியம் நியமிக்கப்பட வேண்டும்.

ஈராசிரியர் பள்ளிகள் இருக்கும் வரை குழந்தைகளுக்கு முழுமையான கற்றல் அடைவு உருவாக வாய்ப்பு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *