பழம்பெருமை பேசுவதுதான் கல்வியா?
தொடக்கக் கல்வியில் நுழைந்துள்ள NCFFS ஆபத்து குறித்து AISEC அமைப்பு முன்னெடுத்துள்ள தொடர் உரையாடலின் முதல் அமர்வின் நிறைவுப் பகுதி; NCFFSஇன் பல்வேறு இடங்களில் பண்டைய (ancient) என்ற சொற்பயன்பாடு குறித்தும் அதன்வழியே தொடக்கக் கல்வியைப் பின்னுக்கு இழுக்கும் முயற்சி குறித்தும் முந்தைய பகுதியில் பார்த்தோம். நடைமுறையில் இருக்கும் சில புதிய தேசிய கல்விக் கொள்கையின் திட்டங்கள் மற்றும் கல்வியின் நோக்கம் குறித்து இதில் கூறப்பட்டுள்ளவை குறித்த உரையாடலைத் தொடர்கிறார் பேராசிரியர் யோகராஜன். (NIPUN) National Initiative for proficiency in Reading with Understanding and Numeracy) நிபுன் பாரத் திட்டம் என்ற இந்தத் திட்டம்தான் NEP 2020இன் திட்டம். அதைத்தான் நமது தமிழக அரசு எண்ணும் எழுத்தும் திட்டம் என்று கூறி நடைமுறைப்படுத்தி வருகிறது. வித்யா பிரவேஷ் (Vidya Pravesh) – கல்விக்குள் நுழையும் குழந்தைகளுக்கு 4 மாத காலத்திற்கு ஓரியண்டேஷன் தரும் திட்டம். இதற்கான கலைத் திட்டங்களை NCERT உருவாக்கியிருப்பதாகக் கூறியுள்ளனர். பாலவாடிகா (Balvatika) – இத்திட்டம் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு ECCE தகுதியுள்ள ஆசிரியர்களை வைத்துக் கற்பிப்பதாகக் கூறுகின்றனர். இதை நம் தமிழகம் 2020இல் எல்லாப் பள்ளிகளிலும் அவசர அவசரமாகக் கொண்டுவரும்படி கட்டாயமாக்கி, முழு வீச்சில் நடத்தியது. அதன்பிறகு அது கவனிக்கப்படவில்லை என்பதும் உண்மை. மேலே சொன்ன பல்வகைத் திட்டங்களை, இந்தக் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மிகச் சிறந்த வழி விளையாட்டுகள் என்கின்றனர். விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் விளையாட்டுகளின் வகைகள் குறித்து மிக மிக நுட்பமாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிரியர்களை வலியுறுத்தும் விதமாகவும் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கொள்கை என்னவோ நாம் முன்னர் பார்த்ததுதான். இதுவரை சொல்லப்பட்ட யாவும் வெறும் முன்னுரை மற்றும் நோக்கங்கள்தான். இனி இதன் இரண்டாவது பகுதியான பாடத்திட்ட இலக்குகள் மற்றும் கற்றல் விளைவுகள் குறித்து NCFFS கூறுவதைப் பார்ப்போம். ஏற்கனவே நாம் பார்த்த நோக்கங்களையும் ஒவ்வொரு (domain) துறையிலும் உடற்கல்வி, மொழிக் கல்வி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய உடற்தகுதி என, அந்தத் துறையில் இந்த நோக்கத்தை பிரயோகித்து Manifesto உருவாக்கி, அதற்கேற்றவாறு அதிலிருந்து, கற்றல் இலக்குகள் Curricular Goalஐ உருவாக்கி, அந்தக் கற்றல் இலக்குகள் நிறைவேறினால் அந்த மனிதரிடம் என்ன திறன் அல்லது வல்லமை வரும் என்று (Competency) பார்த்து வரிசைப்படுத்தி, அந்தத் திறன் இருப்பதை உறுதிப்படுத்த, Check list உருவாக்குகின்றனர். வல்லமை ஒரே நாளில் தோன்ற முடியாது. சிறிது சிறிதாக வளரும்.. அந்தச் சிறு பகுதிகளை learning outcome (கற்றல் அடைவுகள்) என்று வரிசைப்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு, பேசுதல் திறன். இத்திறன் ஒருவரிடம் இருப்பதற்கு என்னென்ன காரணிகள் இருக்க வேண்டும் என்று ஒரு கடினமான கட்டமைப்புக்குள் (rigid frame work) கொண்டுவந்துவிடுகின்றனர். இந்த இடத்தில்தான் உண்மையான பயம் உருவாகிறது. Aims – Curricular goals – Competency – Learning Outcome இதுதான் முறை. இந்தக் கற்றல் அடைவுகள் என்ன வேண்டுமோ அதற்கேற்றபடிதான் கலைத்திட்டம் இருக்க வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, இந்த முறைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கான கல்வியை அமைத்துக்கொள்ளலாம் என்கிறது. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறதென்றால், இந்த முறைப்படி ‘கலைத் திட்ட (Curriculum & Syllabus) உருவாக்கும் பணியை NCERT வசம் கொடுத்துவிட்டது. NEP சொல்வதோ, பள்ளிக் கல்வியில் என்ன மதிப்பெண் பெற்றாலும் அதற்கு முக்கியத்துவம் இல்லை. மேலும் அது அந்தளவிற்குத் தேர்வு முறையே இலகுவாக இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், சாதாரண மக்கள், தேர்வு என்றால் பரீட்சை, குழந்தைகளுக்கு அறிவு இருக்கின்றதா எனச் சோதிக்கிறார்கள் என அவர்கள் நினைப்பார்கள். ஆனால் கற்றல் – கற்பித்தல் பணியில் ஈடுபடுவோர்க்கும் கல்வியாளர்களுக்கும், தேர்வு என்பது கற்றல் கற்பித்தல் நிகழ்முறைப் போக்கை நாமே பரிசோதனை செய்துகொள்வது என்பது தெரியும். ஒரு தேர்வின் மதிப்பீட்டு முறை எதற்காக என்றால், அது இல்லையேல் கற்றலும் கற்பித்தலும் நடந்ததா என்று நமக்குத் தெரியாது. ஆனால் இப்போது தேர்வையே மிக எளிமையாக்க வேண்டும் என்கின்றனர். அந்தத் தேர்வில் மாணவன் பெறும் மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இல்லை. ஏனென்றால், இந்தியாவில் பன்னிரண்டாம், பத்தாம் வகுப்பு முடித்த அத்தனை பேரும் உயர் கல்விக்குச் செல்ல வேண்டும் என்றால், அந்த மதிப்பெண் இனிமேல் தகுதியாக இருக்க முடியாது. அதற்குப் பதிலாக (NTA ) என்ற அகில இந்திய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கி இருக்கின்றனர். National Testing Agency. இது வைக்கும் தேர்வு, மிகவும் கடினமாக இருக்கும். அந்த National Testing Agency என்ன தேர்வு வைக்கிறதோ, அதில் யார் தேர்ச்சி பெறுகிறாரோ, அவர்கள்தான் இனிமேல் கல்லூரிகளுக்கே செல்ல முடியும். இதுதான் NEP 2020 சொல்லக்கூடிய விசயம். இந்தக் கற்றல் அடைவுகள் (learning outcome) என்னவென்பதை NCERT புத்தகங்கள் தீர்மானிக்க ஆரம்பித்தால், இந்த NTA வைக்கக்கூடிய தேர்வுகளில் NCERTஇன் புத்தகங்களே அடிப்படையாக இருக்கும். அதாவது இந்த learning Outcome உருவாக்கும் முறையை எல்லா மாநிலங்களும் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எந்த மாநில அரசாவது NCERT பாடத்திட்டத்திற்கு மாறாக, வேறு சிலபஸை வைத்திருக்க முடியுமா? என்ன பெயரில் வேறு சிலபஸ் வைத்திருந்தாலும் அதனுடைய கற்றல் விளைவுகளும் NCERTஇன் கற்றல் விளைவுகளும் ஒரே மாதிரிதான் இருக்கும்; இருக்க வேண்டும். இவர்கள் சொல்லக்கூடிய aim – அதிலிருந்து உருவாக்கப்படும் Curricular goal – அந்த Curricular goal இலிருந்து உருவாக்கப்பட்ட Competency – அதிலிருந்து உருவாக்கப்பட்ட learning outcome – இந்த learning Outcome குழந்தைகளுக்குக் கிடைப்பதற்குத் தேவையான Curriculum and சிலபஸ் – இப்படியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒரு சிக்கலான அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். இறுதியில் இவர்கள் சொல்வது, எதிக்ஸ் வேல்யூஸ் – நெறிமுறைகளுக்கு மதிப்பாளிக்க வேண்டும் என்கின்றனர். அதில் பலவற்றைக் கூறினாலும் முக்கிய இடம் தந்திருப்பது இந்தியப் பண்டைய பெருமையே. எந்தவிதப் பெருமைவாதத்துக்கும் இடம் தராமல், உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா மனிதர்களையும் இனம், சாதி, மதம், மொழி, பால் பேதமின்றி அனைவரையும் சமமாகப் பார்ப்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் பெருமைவாதத்தையே தொடர்ந்து பேசுகின்றனர்; வழியுறுத்துகின்றனர். அடுத்த அமர்வில், NCFFSஇல் கூறப்பட்டுள்ள அடுத்த சில பிரிவுகள் குறித்து உரையாடுவோம். உரையாடல் தொடரும்.