பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

கல்விக் கட்டுரை : சு. உமா மகேஸ்வரி பள்ளிக்கல்வியின் சூழல் நாளுக்கு நாள் பல வழிகளில் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது. இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அதிகம் பேசப்படும் ஒன்றாக, போதைப்பொருள் பிரச்சனை இருந்துவருகிறது. அது குறித்து செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரங்கள் கீழ்வருமாறு. மாவட்ட ஆட்சியரது வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில், சட்ட விரோத போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்தல் குறித்தான, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்குதல். மாணவர்களிடையே COOL LIP என்ற போதை தரக்கூடிய மிட்டாய் பயன்பாடு உள்ளதா என்பதை ஆசிரியர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். பள்ளி அருகில் உள்ள கடைகளில் COOL LIP  விற்கப்படுகிறது எனத் தகவல் தெரிந்தால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்திடல் வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கும் தகவல் அளித்திட வேண்டும். RBSK (Rashtriya Bal Swasthya Karyakram) என்ற மருத்துவக் குழு, பள்ளிகளில் மருத்துவ‌ முகாம் நடத்தும்போது, மாணவர்களின் பற்களைப் பரிசோதனை செய்து, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் கறைகள் உள்ளதா எனக் கண்டறிந்து, அம்மாணவர்களுக்கு த் தனியே உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அம்மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதைக் கண்டறிந்து, மந்தன முறையில் காவல் நிலையத்தில் புகார் தரப்படவேண்டும். அவ்வாறு மந்தன முறையில் காவல்துறையில் தரப்பட்ட புகாரின் நகல், முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பிரதி வாரம் திங்கட்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில், அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள், உளவியல் ஆலோசகர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மூலமாக, போதை விழிப்புணர்வு சார்ந்த கருத்துருக்களை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்களிடையே உரையாற்ற வேண்டும். போதை விழிப்புணர்வு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும். காவல்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து, பாரத சாரணர் சாரணியர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை இணைத்து, போதை விழிப்புணர்வுப் பேரணி பள்ளியளவில் நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கை வழிகாட்டுதலைத் தருகிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் கண்ணகி நகர், வடசென்னை, பல்லாவரம், குரோம்பேட்டை, ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் இந்த COOL LIP பழக்கத்தைக் கைக்கொண்டுள்ளதாகக் கூறினர். இதனால் மாணவர்கள் சமுதாயம் செல்லும் மோசமான பாதை குறித்தும் தங்கள் சி.ஆர்.சி பயிற்சி அரங்குகளில் வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட சென்னைப் பகுதி மாணவர்களிடம் மட்டுமே இந்தப் பழக்கம் உள்ளதா? தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இந்தப் பழக்கம் எவ்வாறு இருக்கிறது என  ஆசிரியர்கள் சிலரிடம் பேசும்போது, கள நிலவரம் என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், இந்தச் சுற்றறிக்கைகள் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் என, அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மூன்று மாதங்களாகச் சுற்றி வருகின்றன. தஞ்சாவூரைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி அவர்கள் இது குறித்துப் பேசும்போது, “வழிபாட்டுக் கூட்டத்தில உறுதிமொழி எடுக்கச் சொல்லியிருக்கோம். வாசல்ல tobacco free zone என்று ஒட்டியிருக்கோம். தலைமையாசிரியர்கிட்ட பக்கத்துல எந்தக் கடையிலும் போதைப்பொருள் விற்பனையில்லைன்னு சான்று வாங்கியிருக்கோம். மாணவர்களிடம் இருந்தால், அதைப்பெற்று அன்பாகக் கண்டிச்சிருக்கோம் என்கிற அளவில் அரசும் கல்வித்துறையும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கின்றன. உண்மையில் இந்தப் பழக்கம் வெளிவட்டாரப் பெரியவர்கள்,  பெற்றோர், முன்னாள் மாணவர்கள் போன்றோரிடமிருந்து மாணவர்கள் பழக்கத்திற்கு வருகிறது. பெற்றோரே பலர் அப்படி வரும்போது, யாரிடம் போய்ச் சொல்வது? விற்பவர்களுக்கும் உபயோகிப்போருக்கும் கடுமையான தண்டனைக்கு வழிவகை செய்யாமல், பள்ளியையோ மாணவர்களையோ குறை சொல்வது அர்த்தமற்றது” என்கிறார். “அரசு இதன் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும். பள்ளி மாணவர்களிடையே வயது வித்தியாசம் இன்றி, இப்பழக்கம் பரவி வருகிறது. பல மாணவர்களை இப்பழக்கத்திற்கு  அடிமையாக்கி வைத்திருக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஷாலினி. “இதற்காகவே எங்கள் பள்ளியில் கேமரா வைக்க வேண்டும் என நான் வற்புறுத்தி, சில ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி நன்கொடையாளர்கள் மூலம் கேமரா வைத்தோம். தற்போது ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் பள்ளிக்கு வெளியே என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. பெண் பிள்ளைகள் இதற்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள்” என்கிறார் திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர  ஆசிரியர் கௌதமன். “எங்கள் பள்ளி அருகில் கடைகளில் விற்பனை இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத் (PTA) தலைவரை வைத்து வார்னிங் கொடுத்துள்ளோம். மீறினால் அவரு இவங்களை வேற மாதிரி கவனிப்பார்னு பயம். நம்ம பையனுகளே ஏஜன்சி எடுத்து நடத்துறாங்க. காட்டில்தான் அவனுகளுக்கு ஓப்பன் டாய்லெட். மண்ணில் புதைத்து வியாபாரம் செய்வாங்க. நாங்களும் சஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்கோம்” என்கிறார் தாராபுரத்தில் அரசுப்  பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஜெய கீதா. “அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை கமிஷன் போகிறது. சென்ற ஆட்சியில் குட்கா கமிஷன் ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சரே ரெய்டில் சிக்கினார். வட இந்தியக் கூலித் தொழிலாளர்கள் மூலமே இதுபோன்ற பழக்கங்கள் தமிழகத்தில் நுழைந்தது. இப்பழக்கத்தால் வாய்ப் புற்றுநோய் ஏற்படும்” என்கிறார் சீர்காழி ஆசிரியர் கண்ணன். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப் பகுதி ஒன்றின் அரசு  மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர், “முறத்தில் அள்ளி அள்ளிக் கழிப்பறைகளில் கொட்டினேன், COOL LIP பாக்கெட் கவர்களை” என்று கூறி வேதனையாகப் பகிர்ந்துகொண்டார். கூடுவாஞ்சேரி அருகே சில பள்ளிகளில் மாணவர்களிடம் பேசும்போது, சின்ன பசங்ககூட கூலிப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.  திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஆசிரியர், “பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், ஒருநாள் முழுவதும் தங்கள் பள்ளிகளில் நடக்கும் கூலிப் பிரச்சனை குறித்துதான் பேசி வருந்துகின்றனர். மொரட்டுப்பாளையம், வாவி பாளையம், முதலிபாளையம், ஊத்துக்குளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் இந்த போதைப் பொருள் பயன்பாட்டால் சீரழிவதைக் காணச் சகிக்கவில்லை” என்கிறார். கரூர் பகுதி ஆசிரியர் சாதாரணன் என்பவர், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகர மயமான தனது பள்ளியில், இந்த கூலிப் பழக்கக் குழந்தைகளைக் கண்டறிந்து, அதைக் களையப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு, தனது முகநூலில் விரிவாக எழுதியிருந்தார். இப்படி ஏராளமான கதைகள் அன்றாடம் நடந்துகொண்டு இருக்கின்றன பள்ளிகளில். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள்தான்  அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கைக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் வந்தபிறகு, பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் மதுக்கடைகளுக்குச் சீருடையில் செல்வதாகவும் சில பள்ளிகளில் பள்ளிக்குள்ளேயே மது அருந்திவிட்டு வந்து மாணவர்கள் பிரச்சினை செய்வதாகவும் செய்திகளைப் பார்த்திருக்கலாம். ஆனால் கொரோனா காலத்தின் கொடையால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இலைமறை காய்மறையாக இருந்த இந்த போதைப்பொருள் கலாச்சாரம், தற்போது பள்ளிகளில் வெளிப்படையாகவே வேரூன்றி, மாணவர் சமுதாயத்தை நாசம் செய்து வருகின்றது. இப்படியான பழக்கம் கண்டறியப்பட்ட எத்தனையோ மாணவர்கள், மருத்துவச் சிகிச்சைக்கும் செல்கின்றனர். அப்படியான ஒரு சூழலில் ஒரு மருத்துவர் பகிர்ந்துகொண்ட செய்தி நம்மைத் திகைக்க வைக்கிறது. “இந்த ‘கூலிப் ‘ போதை மருந்துப் பொடியில் கண்ணாடித் துண்டுகள் மிகப் பொடியாக அரைத்துக் கலக்கப்படுகின்றன” என்கிறார் அவர். அதை மாணவர்கள் வாயில் வைத்து அடைத்துக்கொள்ளும்போது, வாயின் உட்புறம் இருக்கும் மிக மெல்லிசான தசைப் பகுதியை அறுத்துச் செல்லும் கண்ணாடித் துண்டுகள், இரத்தத்தில் உடனடியாக போதை மருந்து கலப்பதற்காகவும் அந்த போதை உணர்வை வீரியப்படுத்துவதற்காகவும்  அப்படி காலக்கப்படுகிறது” என்று சொல்வதை எப்படி நம்மால் சந்தேகிக்க முடியும்? இந்தப் பழக்கம் ஏழை – பணக்காரன், ஆண் குழந்தைகள் – பெண் குழந்தைகள், அரசுப்பள்ளி – தனியார் பள்ளி என்று எந்த வேறுபாடுகளும் இல்லாமல், அனைத்துத் தரப்பு மாணவர்களையும் அடிமைப்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளும் இதைப் பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனனர். எண்ணிக்கையில் குறையலாம். ஆனால், இப்போது மது குடிக்கும் பழக்கம் எப்படிப் பெண் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லையோ, அதுபோலவே இதுவும்.  வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதை உபயோகிப்பதை, ஒவ்வொரு பள்ளியையும் கண்காணித்தால் தெரிந்துகொள்ள முடியும். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள்  ஓரளவு பெற்றோர்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதால் கண்டறிய முடிவதாகவும் பெரும்பாலும் மீட்டுவிடுவதாகவும் சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும், பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் என்றே கூறுமளவிற்கு வீடுகளில் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் எதார்த்தம். ஏனெனில், இந்தச் சமுதாயத்தில் அன்றாடங்காய்ச்சிகளாகவே வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் கடைக்கோடி மக்களின் குழந்தைகளுக்கான அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் இந்த வியாபாரிகளின் வலையில் சிக்கித் தவிப்பவர்கள். அரசாங்கம் நினைத்தால் இந்த போதைப் பொருள்கள் தயாரிப்பு, விநியோகம் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும் என்று சுற்றறிக்கைகள் விடுவது எந்த வகையிலும் பொறுப்பேற்காத தன்மையைக் காட்டுகிறது. பாம்பின் கால் பாம்பறியும். ஆமாம், காவல்துறைக்குத் தெரியாமல் எந்தக் கடைகளுக்கு இந்த போதைப் பொருள்கள் வந்துவிடும் சொல்லுங்கள். அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் இதுபோன்ற கேடுகள் சமூகத்தில் நடக்க வாய்ப்பு உண்டா? அதோடு, எந்த ஆசிரியர் இயக்கங்களும் சங்கங்களும் இது குறித்து அரசையோ கல்வித் துறையையோ ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்? அல்லது ஏன் இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்ளவில்லை? என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம். இத்தனை விபரீதமான பழக்கத்தை ஒழிக்க, பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கச் சொல்கிறது அரசு. விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தக் கூறுகிறது.  ஆனால், தலைமை ஆசிரியர் பாடம் நடத்தும் ஆசிரியர்களது வகுப்பறையைக் கவனித்து எமிஸ் ஆப்பில் போட வேண்டும். அதில் இதுபோன்ற மாணவர்கள் வகுப்பறைகளில் ‌இருக்கின்றனரா என்று ஏதாவது கேள்வியை வடிவமைத்திருக்கிறதா கல்வித்துறை என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். தேசிய கல்விக் கொள்கை, இப்படியான மாணவர்களுக்கோ பள்ளிகளைப் பீடித்திருக்கும் இந்த விபரீதப் போக்கிற்கோ என்ன தீர்வை வைத்துள்ளது? இந்த அரசு எடுக்கும் கல்வி சார்ந்த திட்டங்களில் இந்தப் பிரச்சனைக்கு என்ன திட்டம் வைத்துள்ளது? பள்ளி மேலாண்மைக் குழுக்களில் இவையெல்லாம் மனம் திறந்து பேசப்படுகிறதா? கிராமங்களில்கூட வேரூன்றி வளர்ந்துள்ள இந்தப் பழக்கங்களைக் களைய, கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் போடப்படுகிறதா? மாணவர்கள் எதிர்காலம் நாசமாகி வருவதைத் தடுக்க, கல்வி அமைச்சர்

குமிண் சிரிப்பு

குமிண் சிரிப்பு

நாடக விமர்சனம் : மது ராஜேந்திரன் சிவபுரம் நடராஜர் சிலை கடத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட உண்மைக் கதையின் அடிப்படையில், சுஜாதா விஜயராகவன் எழுத்தில், திரைப்பட இயக்குநரும் வீணைக் கலைஞருமான எஸ்.பாலச்சந்தர் அவர்களின் மகன் எஸ்.பி.எஸ். ராமன் இயக்கத்தில் மேடையேறி  இருக்கும் நாடகம்தான் ‘குமிண் சிரிப்பு.’ புதுப்பிப்பதற்காகத் தம்மிடம் வந்த  ராஜநல்லூர் சிவன் கோவில் நடராஜர் சிலையைப் போன்றே அச்சு அசலான ஒரு சிலையைப் பணத்தாசையால் மாணிக்க ஆசாரி செய்து விற்றுவிடுகிறார். அச்சிலை பல கைகள் மாறி, அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு கலைக்கூடத்திற்குப் போய்ச் சேருகிறது. இச்சிலைத் திருட்டு, பின்னர் வெளியுலகத்திற்குத் தெரிந்ததையடுத்து நடந்த சட்டப் போராட்டத்தின் இறுதியில் நடராஜர் சிலை மீட்கப்பட்டு, கிராமத்திற்குத் திரும்ப வருவதுதான் ‘குமிண் சிரிப்பு’ நாடகத்தின் மொத்தக் கதை. அப்பர் பாடலில் வரும் வார்த்தைகள் நாடகத்தின் தலைப்பாக இருப்பதுடன், உண்மையை வெளிப்படுத்த அதையே ஒரு உத்தியாகவும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. சிலை செய்யும் நேர்த்தியில் பெருமிதம் கொள்வதிலாகட்டும் வந்தவர்களிடம் முடிந்தவரை பேரம் பேசுவதிலாகட்டும்  நகை செய்யும் ஆசாரியிடம் மனைவிக்கு வாங்கும் நகை குறித்துச் சந்தேகம் தீர விசாரிப்பதிலாகட்டும்  மாப்பிள்ளை,  மகளிடம் பெற்ற பயனைப் பங்குபோட முனைவதிலாகட்டும் செய்த குற்றம் வெளிப்பட்டுவிட, அதைப் பேசிப் புலம்பி மருகுவதிலாகட்டும், பாத்திரத்தின் தன்மையை முழுதும் உள்வாங்கி மாணிக்க ஆசாரியாகவே மாறி நடிப்பில் பிரகாசிக்கிறார் ராஜா மான்சிங். ஆசாரியின் மகள் செல்லம்மா, மனைவி, மருமகன் கோபால், நிலக்கிழார் குமாரசாமி,  காவல் ஆய்வாளர், கலை வரலாற்றாய்வாளர் ரோஜர் வில்லியம்ஸ் உள்ளிட்ட துணைப் பாத்திரங்களும் நடிப்பில் தத்தம் பங்களிப்பைக் குறையின்றி வழங்கியுள்ளனர். மேடையில் வழக்கமான அரங்க அமைப்புகளைத் தவிர்த்து, பிரம்மாண்டமான டிஜிட்டல் பின்புலத்தைப் பயன்படுத்தியுள்ள புதுமை பாராட்டத்தக்கது. எனினும் அந்தத் திரை வரம்பிற்கு அப்பாலும் பாத்திரங்கள் நிற்பதைத் தவிர்த்திருக்கலாம். அதேபோன்று, மேடை ‘மைக்’குகளுக்குப் பதிலாக, பாத்திரங்களின் தலையைச் சுற்றி ஒலிவாங்கியைப் பயன்படுத்தியிருப்பதும் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அவை வெள்ளை நிறத்தில் அல்லாது கருப்பு நிறத்தில் இருந்திருந்தால், பார்வைக்குச் சற்று உறுத்தல் இல்லாமல் இருந்திருக்கும். பின்னணி இசையின் துல்லியமும் பாடலின்  கனீரென்ற குரல்களும் ஈர்க்கின்றன. ஒளியமைப்பும் ஒப்பனையும் அருமை. இடையிடையே வரும் நிதீஷ் குமாரின் ‘சிவ’தாண்டவம் நேர்த்தியாக இருந்தாலும் கதை ஓட்டத்தில் அதன் குறியீடு என்னவென்பது (எஸ் பி எஸ்) ‘ராமனு’க்குத்தான் வெளிச்சம்! பொதுவாகச் சிலைத்திருட்டு பற்றி அமையாமல், வசதியாக சிவபுரம் நடராஜர் வழக்கைப் பின்புலமாகக் கொண்டு இந்த நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளதால், சிலைத் திருட்டில் கைக்கொள்ளப்படும் செயல்முறைகள் குறித்து ஒரு முழுமையான தோற்றம் வெளிப்படாதது ஒரு குறையே. சிலைத் திருட்டில் கடவுளர் சிலைகள் மட்டுமின்றி, பழமையான கலைப் பொருட்களும் ஓவியங்களும்கூட அடங்கும். இதனை பக்தி நாடகமாகவே உருவகித்துவிட்டதால், ஒரு ‘திரில்லர்’ அளவிற்குச் செல்ல வேண்டிய கதையோட்டம் இல்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம், சிலைத் திருட்டின் மர்மத்தை முதல் காட்சியிலேயே உடைக்காமல், விறுவிறுப்பான விசாரணையின் முடிவில் வழக்கின் முடிச்சை அவிழ்த்திருந்தால், குறைவான எண்ணிக்கையிலேயே படங்களைத் தந்திருந்தாலும் தமிழ்நாட்டின் ஹிட்ச்காக் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட எஸ்.பாலச்சந்தரின் புதல்வரானஇயக்குநரிடமும் அவரின் மரபு வெளிப்பட்டிருக்கும். மதிப்பெண் 6.5/10

ஒரு மரணத்தின் கதை

ஒரு மரணத்தின் கதை

சிறுகதை: ஆண்டன் பெனி நான் தவசி தாத்தா. இன்னைய தேதிக்கு ரொம்பப் பழைய மனுச உசுரு. ஏன்னா, எனக்கு இப்போ நூத்தி அம்பத்து நாலு வயசு ஆகுது. நீங்க நம்பலன்னாலும் அதுதான் நெசம். இந்த வயசுக்கும் என்கிட்ட கணக்கு இருக்கு. பென்சன் புக்கையும் வேலைக்குச் சேர்ந்த ஆர்டரையும் பத்திரமா வச்சிருக்கேன். எனக்கு இவ்ளோ வயசு ஆகுதுன்னு நிரூபிக்க, இன்னைய தேதிக்கு என்கிட்ட இருக்கிற ஆதாரம் அது ரெண்டும்தான். இதைத் தொலைச்சிட்டேன்னா, நான் உசுரோட இருக்கிறதுல அர்த்தமில்லங்கிறதும் உண்மை. வாரிசுபோல கூடயே இருக்குதுங்க. ஆறேழு தலைமுறைக்குப் பிறகும் உசுரோட இருக்கிறவனுக்கு, ஆதரவுன்னு ஒன்னு வேணுமில்ல? அதான். இதுபோக, நாலு வேட்டி சட்டை, ரெண்டு துண்டு, ஒரு தகரக் கட்டில். இதுவும் எப்பவோ வாங்கினது. என் நேரம்னு நெனைக்கிறேன், இன்னமும் பழுதாகாமக் கெடக்கு. இந்தத் தலைமுறை சனங்களுக்கு என்னையப் பத்தித் தெரிஞ்சதெல்லாம், கீழ்வீட்டுத் தாத்தா, இல்லனா காரை வீட்டுத் தாத்தா. நூறு வயசு முடிஞ்சி ஒரு பத்து வருசம் வரைக்கும், நான் பரபரப்பாத்தான் இருந்தேன். வேடிக்கை பார்க்க வர்றதும் பேட்டி எடுத்துப் போடுறதும்னு ரொம்பப் பரபரப்பாவே இருந்தேன். கொஞ்ச காலத்துக்குப் பிறகு நின்னுடுச்சி. இப்பவும் யாராவது பார்க்க வர்றாங்கன்னாலும், அடிக்கடி இல்ல. வீடே கதின்னு ஆகிருச்சி. வீட்டுக் கூரையும் எப்படி இன்னமும் விழாம இருக்குதுன்னு தெரியல. பக்கத்துல இருக்கிற வீடுகளும் பெருசு பெருசா வளர்ந்திருச்சி. இடிச்சிட்டு, புதுசா கட்டணும்னு தோனினது. பிறகு எதுக்குன்னு விட்டுட்டேன். எனக்கு படிப்புன்னு எதுவுமில்ல. ஆனாலும் கவர்மெண்ட் வேலை கிடைச்சது. பெரிய வேலைன்னு நினைக்க வேண்டாம். வெள்ளைக்காரத் துரைக்கு விசிறிவிடுற வேலை. அப்போ உடம்பு சும்மா கிண்ணுன்னு இருக்கும். கையும் காலும் இரும்புத்தூண் மாதிரின்னு சொல்லுவாங்க. அதனாலயே வேலை கிடைச்சது. தொடர்ச்சியா என்னால ரெண்டு மணி நேரம் விசிறிவிட முடியும். துரைக்கும் என் வேலை ரொம்ப பிடிச்சிப் போயிருச்சி. ஆபீஸ் வேலை மட்டும்தான். அதுவும் துரை ஆபீஸ்ல இருந்தா. வெளியில, வெளியூருக்கெல்லாம் கூட்டிட்டுப் போறதில்ல. ராயல் கமிசன்னு ஒன்னு, அரசாங்க வேலையில இருக்கிற எல்லோருக்கும் பென்சன்னு சொல்லிருச்சி. அப்படித்தான் எனக்கும் இந்தப் பென்சன் வருது. வெள்ளைக்காரங்க நாட்டைவிட்டுப் போனதுமே பென்சன் இல்லன்னு சொல்லிட்டாங்க. அரசாங்கத்துக்கு மனு மேல மனுப்போட்டு மினிமம் பென்சன் வாங்கினேன். துரைமாருங்க வீட்லயே இருந்ததால, கொஞ்சமா இங்கிலீசு வார்த்தைகள் தெரியும். பென்சன் பணம் ரெண்டாயிரத்துச் சொச்சம்னாலும் அப்பப்ப அதுக்கு அரியர்னு ஒன்னு கொடுப்பாங்க. அதுல வந்த காசுலதான் இந்த வீட்டு வேலைகளைச் செய்ய முடிஞ்சது. ரெண்டு துணிமணிகளும் வாங்கினேன். ஆனாலும், எனக்கு முன்னாடியே இந்த வீடு ஆயுச முடிச்சுக்கும்போல. இந்த வீடும் இல்லனா, இச்சி மரத்தடியிலதான் சின்னதா குடிசை போட்டு இருக்கணும். எனக்குன்னு யாரு வீடு கட்டிக்கொடுப்பா? இல்ல, வீட்டுலதான் சேத்துக்குவாங்க? இதுக்குப் பிறகு கட்டின எத்தனையோ வீடுக இப்ப இல்ல. என்கூடவே ஆயுச முடிச்சிக்கணும்னு இருக்குதுபோல. இப்ப கட்டுற கட்டடங்களுக்கு ஆயுசே அம்பது அறுபது வருசம்தான்கிறாங்க. இந்தக் கூரை எந்தலையில விழுந்துதான் ஆயுசு முடியும்னா, அத யாரால மாத்த முடியும்? சாப்பாட்டுக்குப் பென்சன் பணமே போதும். என்ன பெருசா சாப்பிடப் போறேன்? காலையில ராயல் டிபன் சென்டர்ல ரெண்டு இட்லி, ஒரு காபி. மதியம் அளவு சாப்பாடு. ராத்திரிக்கி எதுவும் சாப்பிடுறதில்ல. மதியச் சாப்பாடு செரிமானம் ஆகுறதுக்குள்ள விடிஞ்சிரும். நிறைய சாப்பாடுக் கடைகள் ஊருல இருந்தாலும் ரொம்பக் காலமா எனக்கு இதே கடைதான். அறுபது வருசம் முன்னாடி பொன்னாத்தா இட்லிக் கடைன்னு இருந்தது. காலம் மாற, சரவணன் சிற்றுண்டிக் கடைன்னு மாறி, இப்போ ராயல் டிபன் சென்டர்.  சாப்பிடுறதுக்கு உயிர் வாழ்றேனா, உயிர் வாழ்றதுக்கு சாப்பிடுறேனான்னு தெரியல. வேகமா நடக்க முடியலனாலும் மெதுமெதுவா குச்சிய ஊனிக்கிட்டு இச்சி மரத்துக்கு வந்துருவேன். வீட்டுக்கு வெளியில எனக்குன்னு இருக்கிறது இந்த மரமும் சாப்பாட்டுக் கடையும். கடைக்கு லீவு விடுறதுன்னா, மொத நாளே சொல்லிடுவாங்க. அன்னைக்கு மட்டும் வேற கடை. இச்சி மரத்துலேருந்து பெரிய அளவுல நிழல் இல்லனாலும் ஓய்வு நேரங்கள்ல ஊர்கூடி நிக்க அதவிட்டா வேற வழியும் இல்ல. இதுக்கு முன்னால ஊர் மந்தைவெளியில ஒரு பெரிய ஆலமரம் இருந்துச்சி. பெருசுனா அப்படியொரு பெருசு. ஒரு சின்ன மழைக் காத்துக்கே விழுந்திருச்சி. அப்ப எனக்கு ஒரு எழுபது எழுபத்தஞ்சி வயசிருக்கும். அது இருந்தவரைக்கும் வெயில்தாழ சிறுசு பெருசுகெ எல்லாரும் அங்கதான் கெடப்பாங்க. ஒரு தெரு நீளத்துக்கு இருக்கும். ஊர் பஞ்சாயத்துலேருந்து சிறுசுகெ விளையாடுறதுவரைக்கும் அது நிழல்ல ஆளரவம் இருந்துக்கிட்டே இருக்கும். அது இல்லேன்னு ஆனபிறகு, வேற கதியில்லாம இந்த இச்சி மரத்துல கெடக்க வேண்டியதாப் போச்சி. ஆலமரத்தை நினைக்கும்போதெல்லாம் என் உசிர சாய்க்க அதுமாதிரி ஒரு சின்ன காத்து மழைதான் வரும்போலன்னு நினைச்சுக்குவேன்.   எனக்கு சாவு பயம் அதிகம். தூங்குற நேரம் தவிர, சாவு நினைப்புதான் எப்பவும். சாவு பயத்தையும் தாண்டி எனக்குன்னு இருக்கிற வேலை, சாப்பிடப் போக வேண்டியது, முடிச்சிட்டா திண்ணையில உக்காந்து வேடிக்கை பாக்க வேண்டியது, தூங்க வேண்டியது.  ஆரம்பத்துல என்கிட்ட, அந்தக் காலத்துப் பழைய கதைகளைக் கேட்டவங்களுக்கு, இப்ப நல்லது கெட்டது எல்லாமே போன்ல கிடைக்க, என் பக்கம் யாருமே வர்றதில்ல. எப்போ பேசுறதுக்குக்கூட எனக்கு யாரும் இல்லனு ஆச்சோ, அப்பவே எனக்கு சாவு பயம் போயி, இதுக்கு மேலயும் இருந்துதான் ஆகணுமான்னு மனசு நினைக்கத் தொடங்கிருச்சி.   வெறுமனே எல்லாத்தையும் வேடிக்கை பாத்துக்கிட்டே எப்படி இருக்கிறது? ஒரேமாதிரியா வாழ்க்கை போகுதுனாலும், பெருசா உடம்புக்கு முடியாமப் படுத்ததில்ல. உடம்பு சூடா இருக்குதுன்னு தெரிஞ்சாலே, ஊர் நர்சம்மாகிட்ட மாத்திரையும் மருந்தும் வாங்கிக்குவேன். அம்பது வருசமா அதே மாத்திரைதான். போட்டுட்டு படுத்தா நாள் முழுக்க படுத்தே கிடப்பேன். எங்க பெருசு நடமாட்டம் இல்லயேன்னு, ஒருநாளும் யாரும் கதவத் தட்டி என்னான்னு கேட்டதில்ல. செத்தா பொண நாத்தம் அடிக்குமில்ல, அப்பப் பாத்துக்கலாம்னு இருப்பாங்கபோல. இத்தன வயசுவரைக்கும் உசுரோட இருக்கிறது எம்மாம் பெரிய ஆச்சர்யம்ங்கிறது ஒரு பத்துப் பதினைஞ்சி வருசத்துக்கு முன்னமே முடிஞ்சிருச்சி. தவறாம பத்திரிக்கைக்காரங்க வர்றதும் டி.வி.காரங்க வர்றதுமா இருந்தது. மெடிக்கல் காலேஜ்காரங்ககூட என்னயக் கூட்டிட்டுப் போயி ஒருமாசம் வச்சி ஆராய்ச்சி பண்ணினாங்க. என்ன கண்டுபிடிச்சாங்கன்னு தெரியல, கொண்டுபோன கார்லயே திரும்பக் கொண்டாந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. வெளிநாடு, வெளிமாநிலக்காரங்களுக்கும் கண்காட்சிப் பொருளா இருந்த காலம் கடந்திருச்சி. இப்ப அவங்களுக்கும் நான் சலிச்சிப்போக, ஊரு உலகத்தைப் பொறுத்தவரைக்கும் இப்பெல்லாம் நானொரு வேண்டாத உசுரு. அவங்களுக்கெல்லாம் என்னோட சாவுக்குக் காத்திருக்கிற மாதிரி ஒரு பார்வை. சாதாரணமா கடந்து போயிடுறாங்க. அதனாலயே, நானே என்னை ஒரு அதிசயமான உசுரா பாக்கிற மனநிலை குறைஞ்சிக்கிட்டே போயி, இப்போ அப்படி எதுவும் இல்லேங்கிற நிலமைக்கு வந்திருச்சிங்கிறது என்னவோ உண்மைதான். ஆறு புள்ளைங்கள பெத்தேன்.  அதுங்களும் இல்ல, அதுங்க பெத்தது, அதுங்க பெத்ததுங்க பெத்ததுன்னு, ஒரு ஆறேழு தலைமுறைகூட இந்நேரம் கடந்திருக்கும். வாரிசுகள்ல யாருமே எழுபதைத் தாண்டல. எம்புள்ளைங்க காலத்துலயே, சின்ன மகன் தவிர மத்தவங்க, படிப்பு வேலைன்னு வெளியூர், வெளிமாநிலம்னு போயித் தங்கிட்டாங்க. நல்லது கெட்டதுன்னு வர்றப்போ பாக்கிறதுதான். பொறவு பேரன் பேத்திகெ நெனப்புல இருந்தது, அதுங்களுக்குப் பொறந்ததுகெ யாரையுமே நான் பார்த்ததில்ல.  சின்ன மகன் செத்த பிறகு, அவன் புள்ளைங்களும் வேலை அது இதுன்னு வெளியெடம் போயிட்டாங்க. அததுகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நாலு தலைமுறைக்கு முன்னால நம்ம கிளை எதுன்னு கண்டுபிடிக்கிற பொறுமை யாருக்கு இருக்கப்போகுது? தேடவும் அப்படியென்ன தேவை?  பாவம், இந்தக் கிராமத்துல வந்து என்ன செய்யப் போகுதுகெ? ஊரும் கிராமத்துக்கான அடையாளத்த தொலைச்சி, கிட்டத்தட்ட டவுன் மாதிரி ஆகிருச்சி. ஏரியில தண்ணி பார்த்து வருசமாச்சி. ஆறு இருக்கா இல்லையான்னே தெரியல. சாயங்காலமானா ஒரு மணி நேரத்துக்கு பறவைங்க அடையுற சத்தமே அப்படி சந்தோசமாயிருக்கும். இப்ப அப்படி எதுவுமே இல்ல. வெளியூருக்குப் பொழைக்கப் போன சனங்க ஒன்னு கூடுறதுக்குன்னு இருந்த திருவிழாவும் இப்ப இல்ல. ஊரு ரெண்டுபட்டதுல போட்ட பூட்டு, இன்னும் கோயில் நடைவாசல்ல தொங்குது. நானும் எந்தக் காரியத்துக்கும் தெருக்குள்ள போறதில்ல. வீடு, வீட்டவிட்டா இந்த மரம். சாவுக் காரியத்துக்குப் போனா, சிறுசுகெ, பொணத்தைப் பார்த்துட்டு, ‘அடுத்து நீதானே’ங்கிற மாதிரி என்னையப் பாக்குதுகெ. கல்யாணக் காரியங்களுக்குப் போனா, ’எங்கே நடுவாலே நான் செத்து, நல்ல காரியம் கெட்டிருமோ’ன்னு பயப்படுறாங்க. வருசா வருசம், உசுரோடதான் இருக்கேன்னு நிரூபிக்கப் பென்சன் ஆபீசுக்குப் போனா, ’அடுத்த வருசமும் வருவியா தாத்தா’ன்னு கேக்கும்போது கஷ்டமா இருந்தாலும், எதுவும் சொல்லாம திரும்பி வந்துருவேன். சாவுக்குப் பயந்த எனக்கு, நாளும் ஒருத்தராவது சாவை கண்ணு முன்னால கொண்டுவந்து நிறுத்துறாங்க. நான் வேண்டாம்னு ஒதுக்குன சாவு, இப்ப எங்கயோ தூரமா போயிருச்சி. இவங்க கேக்குறாங்கன்னு சுயமாவா சாகமுடியும்? எனக்கு வெவரம் தெரிஞ்சதலேருந்து சாவுன்னா பயம். சாகாமலே இருந்திடணும்னு நெனப்பேன். அப்படியே செத்துட்டாக்கூட, ஒரு நூறு எறநூறு அடி ஒசரத்துல ஆவியா மெதந்துக்கிட்டு, இங்க நடக்குற எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருக்கணும்னு ஒரு யோசனை இருக்கும். சொந்தமா செத்துப் போறவங்கள நினைச்சா ஆச்சர்யமா இருக்கும், ‘ஏன் இப்படி பொசுக்குன்னு போயிடுறாங்க? திரும்பி வரவே முடியாதுன்னா எதுக்கு தற்கொலை பண்ணிக்கணும்?’னு. ஒருகட்டத்துல சாவு பயம் அதிகமாகி, சைக்கிள்ல போறதயும் நிறுத்திட்டேன். சைக்கிள்ல போறதே அப்டீன்னா, கார், பஸ் இன்னும் பயம். நூறு வயசத் தாண்டும் முன்னாடியே “தாத்தா, உம்மோட உசுர, எமன் மொளகா வத்தல் பானையில வச்சிட்டானோ?”ன்னு ஊர்க்காரங்க பேசும்போது கோவம் வந்தாலும் ’போங்கடே’ன்னு வெரட்டி விட்டுருவேன். எதிர்பார்க்க ஆயிரம் விசயம் இருந்தாலும் அதெல்லாம் விட்டுட்டு, நான் எப்ப சாவேன்னு காத்துக் கெடக்குதுங்க சவங்கெ. நடமாட்டம் இருந்தா, நமக்குத் தேவையானத நாமே செஞ்சிக்கிட்டா, வயசானவங்கள யாரும் பாரமா நினக்கிறதில்லதானே? அதுலயும், பென்சன் பணம் வந்ததால யாரும் என்னய அப்படி நினைக்கல. மருமகெமாருங்க அப்படி இப்படின்னு பேசினாலும், மகன்களும் மகள்களும் என்னைய எப்பவும் விட்டுக் கொடுக்கல. அதுலயும், மூத்த மருமகனுக்கு நான்னா அம்புட்டு இஷ்டம். ‘மாமா மாமா’ன்னு கைக்குள்ளயே இருப்பாரு. ஊருலேருந்து வரும்போது எனக்குன்னு தீனி வாங்கியாருவாரு. புள்ளைங்க,

கண்டுகொள்ளப்படாத ‘கக்கன்’ திரைப்படம்

கண்டுகொள்ளப்படாத ‘கக்கன்’ திரைப்படம்

திரைப்பட அறிமுகம்: ரசல்ராஜ் தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர்களாக இருந்த தந்தை பெரியார், கல்விக்கண் திறந்த காமராசர், துணிச்சல் மிக்க ஜெ.ஜெயலலிதா இவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படங்கள் திரையில் உலாவின. மக்களும் கண்டுகளித்தனர். அதே வரிசையில் நேர்மையின் சிகரமாகத் தமிழக அமைச்சரவையில் திகழ்ந்த அமைச்சர் ‘கக்கன்’ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட படமான ‘கக்கன்’ கடந்த ஆகஸ்ட் மாதம் 24இல் வெளிவந்தது. ‘என்ன கக்கன் படமா? எப்போ வந்துச்சு?’ என ஆச்சரியப்படவேண்டாம். வருத்தப்படவும் வேண்டாம். ‘கக்கன்’ படம் வந்ததும் தெரியாது; திரையரங்கை விட்டுக் காணாமல்போனதும் தெரியாது பலருக்கு. எழுத்தாளர் ஒருவர் எப்படியாவது ‘கக்கன்’ படத்தைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் திரையரங்கை நோக்கிச் செல்ல,அவருக்கு முன்பாகவே திரைப்படம் திரையரங்கைவிட்டு வெளியேறிச் சென்றிருந்தது கண்டு, பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது எழுத்தாளருக்கு. நம் தமிழகத்தில் விளம்பரமில்லா நல்ல படங்களுக்கும் வரலாற்றுப் படங்களுக்கும் கிடைக்கும் வெகுமதி இதுதான். அடிதடிப் படங்களுக்கும் வன்முறையைத் தூண்டும் படங்களுக்கும்தான் திரையரங்குகள் திறந்திருக்கும்; நிறைந்திருக்கும். சமீபத்தில் வெளியான ‘சித்தா’, ‘ஹர்காரா’ போன்ற சிறந்த கதையமைப்பைக்கொண்ட எளிய, குறைந்த பட்ஜெட் படங்களுக்கும் இதே நிலைதான். இதுபோன்ற படங்களுக்கு மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை. படம் வந்ததே பலருக்குத் தெரிவதில்லை. தலித் இயக்கங்களும் கக்கன் படத்தைக் கண்டுகொள்ளவில்லை. சமூச அக்கறையுள்ளவர்களின் சமூக வலைதளங்கள் மூலமாகவும் இணைய இதழ்களின் மூலமாகவுவே இப்படங்கள் மக்களைச் சென்றடைகின்றன. நேர்மையோடு, எளிமையாக, மக்களின் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ‘கக்கன்’ போன்ற மாமனிதர்களின் வரலாற்றைக் கூறும் படங்களை, குறைந்த கட்டணத்தில் திரையரங்குகளில் மக்கள் பார்க்கவும் கல்விக் கூடங்களில் மாணவர்கள் பார்த்து அறிந்துகொள்ளும் வகையிலும் அரசே முன்வந்து, ஏற்பாடு செய்ய வேண்டும். எத்தனையோ இலவசத் திட்டங்களை அறிவிக்கும் அரசு, கக்கன் படத்தைப் பார்ப்பவர்களுக்குச் சலுகைகள் அறிவித்திருந்தால் தியாகசீலர் கக்கனும் மக்கள் மத்தியில் தெரிவார். அரசும் பெருமை கொள்ளலாமே! நேர்மையின் சிகரம் ‘கக்கன்’ படத்திற்கு ஜோசப் பேபி திரைக்கதை, வசனம் எழுதி அவரே கக்கனாக நடித்துமிருக்கிறார். தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருக்கிறார். ஒரு மணிநேரம் 40 நிமிடம் ஓடக்கூடிய இவ்வரலாற்றுப் படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவானது, தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி மற்றும் கக்கன் அவர்களின் மகள் கஸ்தூரி, பேத்தி ராஜேஸ்வரி (IPS) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது மகிழ்ச்சிக்குரியதுதான். 1951 முதல் 1967 வரை தமிழக அமைச்சரவையில் உள்துறை, ஆதிதிராவிடர், விவசாயம், பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக இருந்தவர் கக்கன். கக்கன் அவர்களின் பேத்தியும் சேலம் சரக போலீஸ் அதிகாரியுமான ராஜேஸ்வரி (IPS), படத்தின் தொடக்கத்தில் ‘கக்கன்’ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த, படம் ஆரம்பமாகிறது. முதல் காட்சியிலேயே, நினைவிழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கக்கனைப் பார்வையிட வருகிறார்கள் சிலர். மதுரை மேலூரில் உள்ள தும்பைப்பட்டியில் பூசாரி கக்கன் (கக்கனின் தந்தை) கோயில் பூசாரியாக இருந்து, குடிசை வீட்டில் மனைவி குப்பு (கக்கனின் அம்மா) உடன் எளிய வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். கக்கன் பிறப்பு (1908), சட்டைகூடப் போடாமல் திண்ணைப் பள்ளிப் படிப்பு என, அடுத்தடுத்த காட்சிகளாக எளிய வறுமை நிறைந்த வாழ்க்கை வரலாறு நகர்கிறது. வறுமையால் ‘ஹரிசன சேவ சங்கம்’ (மதுரை) மூலம் கக்கனைப் படிக்கவைக்க விடுதியில் சேர்த்துவிடுகிறார் பூசாரியான அவரின் அப்பா. ஒரு பாடத்தில் தோல்வி அடைகிறார் கக்கன். பள்ளியில் பணம் கட்டமுடியாமல் தவிக்கும் கக்கனுக்கு, வைத்தியநாதய்யர் உதவிசெய்து கடனையும் அடைக்கிறார். ‘ஹரிசன சேவா சங்கமும்’ உதவி செய்து கக்கன் படிப்பும் தொடர்கிறது. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்வை யவை (குறள்:400) உணவைப்போல் கல்வியும் அவசியம் என வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு ‘இரவு நேரக் கல்வியை’ நிதியில்லாமல், சமூக ஆர்வலர்கள் மூலம் நடத்துகிறார் கக்கன் தம் இளமைப் பருவத்தில். கணபதி ஐயர் மதுரையில் ஆசிரியராகப் பணிபுரியும் ‘சொர்ணம் பார்வதி’யைக் கக்கனுக்கு மணமுடித்து வைக்க எண்ணி, பூசாரியான கக்கனின் அப்பாவிடம் கேட்க, பெண் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள் என்பதால் முதலில் மறுப்புத் தெரிவிக்கிறார் அவர். “நாங்க வீரமாகாளியைக் கும்பிடுகிற குடும்பம்; பொண்ணு வேதம் படிக்கிற பொண்ணு. எப்படிங்க?” எனத் தயங்குகிறார் கணபதி ஐயரிடம். பின்பு, ஊர்ப் பெரியவர்கள் கலந்து பேச, மிகவும் எளிய முறையில் சீர்திருத்தத் திருமணம், கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் தாலி எடுத்துக்கொடுக்க, திருமணம் (1932) நடைபெறுகிறது, ‘காந்தியடிகளின்’ பெரிய புகைப்படத்திற்கு முன்னால். திருமணம் முடிந்ததும் மனைவியிடம், “கல்வி அழியாத சொத்து. இயலாத குழந்தைகளை மதுரையில் விடுதி அமைத்துப் படிக்கவைக்க வேண்டும் பார்வதி. இதில் உனக்குச் சம்மதம்தானே?” எனக் கேட்க, “வள்ளுவனுக்கு ஒரு வாசுகி எனப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். எனக்கு முழுச் சம்மதங்க” என முகமலர்ச்சியோடு சொல்லும் சொர்ணம் பார்வதியின் வார்த்தைகள் அவருக்கு உறுதுணையான காட்சி. மதுரையில் காந்தியடிகளைச் சந்தித்தபோது (1934), “தமிழ் எனக்குப் பிடித்த மொழி. தமிழர்களை நான் மிகவும் நம்புகிறேன்” எனக் கூறும் காந்தியடிகளிடம் கக்கனின் நேர்மையையும் நாட்டுப்பற்றையும் பற்றித் தெரிவிக்கிறார் காங்கிரஸ் தலைவர் N.M.R.சுப்புராமன். காங்கிரஸில் இணைந்த கக்கன், கோவில்களில் நுழைய ஹரிசன மக்களுக்கு இருந்த தடைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி, கோயில்களுக்குள் நுழைகிறார். அதில் தமிழக வரலாற்றில் முதல் வெற்றியும் பெறுகிறார். “சாதியையும், மதத்தையும் முதல்ல ஒழிக்கணும். அப்போதான் நமக்குள்ள சமத்துவம் பிறக்கும்”, “நமக்குள்ளயே ஒத்தும இல்ல; பின்ன எப்படி வெள்ளக்காரங்கக்கிட்ட போராடி விடுதலைய வாங்கமுடியும்?” என்று அமைதியாகப் பேசும் இடங்களில் கக்கனின் விடுதலை தாகம் தென்படுகிறதைக் காணலாம். ஆங்கிலேயர்களை எதிர்த்து ‘வந்தே மாதரம்’ என முழங்கியதற்காகவும் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததிற்காகவும் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் கடுங்காவலில் சிதைக்கப்படுகிறார்; நினைவிழக்கிறார். அக்கொடூரக் காட்சியைக் கண்ட அவரது மனைவி கண்ணீர் சிந்தும் காட்சி நமக்கும் துயரம்தான். நம் கண்ணிலும் வெள்ளம்தான்; வேதனைதான். விடுதலையாகி, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் மாறுவேடமிட்டு (பர்தா அணிந்து) மறைவாகத் தன்னைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்கிறார். வீண்பழி சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதியின் கேள்விகளுக்கு, “தமிழன் ஒருநாளும் இந்தியாவைக் காட்டிக்கொடுக்க மாட்டான்” என்று விடுதலை உணர்ச்சி பொங்கக் கூறும் காட்சி, நம்முள்ளத்திலும் உணர்வைத் தூண்டிவிடுகிறது. 18 மாதச் சிறைத் தண்டனையை அலிப்பூர் மத்தியச் சிறையில் பட்டினியாக இருந்து, கல்லுடைத்து, லத்தியால் முதுகில் அடிக்கு மேல் அடி வாங்கும் காட்சிகளைக் காணும்போது, உண்மையிலேயே அவர் இதைவிடக் கொடுமைப்படுத்தப்பட்டிருப்பார் என்றெண்ணிக் கண்கள் குளமாகின்றன. இந்திய விடுதலைக்குப் பின், தமிழக முதலமைச்சர் காமராசரின் ஆட்சியில் ‘கக்கன்’ அமைச்சராகிறார். ஒப்பந்த அடிப்படையில் போடப்பட்ட தரமற்ற சாலைகளை நேரிலே பார்வையிட்டுக் கண்டிக்கிறார்; ரத்தும் செய்துவிடுகிறார். மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கான (1966) ஆணையை கக்கன் மற்றும் அமைச்சர்களோடு கலந்தாலோசித்துத்தான் முடிவெடுக்கிறார் கர்மவீரர் காமராசர். “விவசாயிகளின் எதிர்காலமும் குழந்தைகளின் கல்வியும் ரெண்டு கண்ணுங்றேன். அட.. என்ன நான் சொல்றது சரிதான..” என்று திருநெல்வேலியின் வட்டார மொழியோடு காமராசர் பேசுவதைக் கேட்க இனிமையாக இருக்கிறது. அவரின் அக்கறையும் இனிமையிலும் இனிமையல்லவா! ஒருமுறை கக்கன் அவர்களின் வீட்டிற்குக் காமராசர் வர, அரிசிகூட இல்லாமல் சொர்ணம் பார்வதியும், மகள் கஸ்தூரியும் விழிக்க, அதை நாசூக்காக அறிந்த காமராசர், வறுமை நிலையை அறிந்து சொர்ணம் பார்வதிக்கு அரசு வேலை ஒன்றை ஏற்பாடு செய்கிறார். இதை அறிந்த கக்கன் காமராசரிடம், “அண்ணன், என்னோட வறுமை நிலையை வச்சு என் மனைவிக்கு நீங்க வேல போட்டு கொடுத்தது உங்க பதவிய நீங்களே துஷ்பிரயோகம் செஞ்ச மாதிரி. தமிழகத்தில் எத்தனையோ படித்த மக்கள் வேலையில்லாம இருக்காங்க. முதல்ல 1000 பேருக்கு வேல போட்டு குடுங்க. அவளோட வேலைய வாபஸ் வாங்குங்க” என்று உணர்ச்சி ததும்பக் கூறும்போது, கேட்கும் காமராசரே கண் கலங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது படத்தில். காமராசர் ஆட்சியைப் போன்று ‘இனிமேல் வாரோதோ’ என எதிர்ப்பார்க்க முக்கியக் காரணமே, கக்கன் போன்ற நேர்மையான அமைச்சர்கள் மட்டுமே காமராசர் ஆட்சியில் இடம் பெற்றிருந்ததுதான். தும்பைப்பட்டி சென்று அப்பா அம்மாவைப் பார்க்கிறார் அமைச்சர் கக்கன். அங்கு ‘தீட்டு’ எனச் சொல்லி, கிராமத்தின் ஒரு பிரிவினரைத் தண்ணீர் பிடிக்கவிடாமல் செய்கின்றனர், அதே கிராம மக்களின் மற்றொரு பிரிவினர். இரு பிரிவினரையும் பஞ்சாயத்துக்கு அழைத்து, அமைச்சராக இருந்தாலும் பஞ்சாயத்தின் தீர்ப்புக்கு ஒரு ‘அமைச்சரே’ கட்டுப்பட்டு குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் காட்சி மனத்திற்கு இதம். படத்தில் கக்கனின் நேர்மைக்குச் சான்றாக மற்றுமொரு காட்சி. கக்கன் காவல்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது தம்பியான விஸ்வநாதனுக்குக் காவல்துறையில் வேலை கிடைத்ததை அறிந்து, தம்பியிடம் வேலையை விட்டுவிடும்படியாகவும் வேலைக்குத் தேர்வு செய்த அதிகாரியிடம் “அவனது கையில் விரல் கோணலாக இருக்கிறது. அவனால் எப்படி துப்பாக்கியைப் பிடித்து மிகச்சரியாகச் சுடமுடியும்? நம் நாட்டில் திறமைக்குத்தான் வேலை. நான் காவல்துறை மந்திரியாக இருப்பதால்தானே அவனுக்கு வேலை கொடுத்தீர்கள்?” என்று நேர்மை தவறாமல் கூறும் காட்சியைப் பார்க்கும்போது மெய்சிலிர்த்துவிடும். இப்படி இக்காலத்தில் அமைச்சரில் யாரேனும் இருப்பார்களா?! இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ‘அட, நாடு நமக்கு மட்டும் சொந்தமில்ல. அவங்களுக்கும்தான்’ என்ற காமராசரின் வாய்மொழி, 1967 தேர்தல் பரப்புரைகளில் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும் கலைஞரின் குரல், நேர்மையான காமராசர் மற்றும் கக்கன் ஆகியோரின் தேர்தல் தோல்வி, உதயமாகும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, பணப்புழக்கத்தால்தான் வெற்றி என்ற பேச்சு (இன்றைக்கும் அதே நிலைதானே). உடல் நலம் குன்றிப் பல்லவன் பேருந்தில், போதிய காசுகூட இல்லாமல் பயணிக்கும் கக்கனின் எளிமை, மதுரை இராசாசி மருத்துவமனையில் தரையில் படுத்தபடி மேற்கொள்ளும் முடக்குவாதச் சிகிச்சை, தற்செயலாக வந்த எம்.ஜி.ஆர் விவரமறிந்து முதல் தர சிகிச்சைக்கு உத்தரவு, ஆட்சியின்போது வரும் நன்கொடைகளை அரசுப் பதிவேட்டில் குறித்துக்கொள்ளும் காட்சி (தங்கப் பேனாவையே வேண்டாம் என்றவராச்சே), அரசு ஊழியர் தன் வீட்டிற்கு மண்ணெண்ணெயை வாங்கி வருவதைக் கண்டு அவரையும் மனைவியையும் கடிந்துகொள்ளும் காட்சி என, அன்று நடந்ததைச் சிறந்த காட்சிகளாக நாம் வியந்து பார்க்கும் அளவுக்கு, நமக்கெல்லாம் நினைவூட்டி இருக்கும் படக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். ஆனால், ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை இப்படம் தரவில்லை. ஆவணப்படம் போன்ற உணர்வைத்தான் தருகிறது. கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அத்தனை அழுத்தமில்லை.

முதிரா இரவு

முதிரா இரவு

சிறுகதை: சுருளி காந்திதுரை காலையில அஞ்சு மணிக்கு டான்னு எந்திரிச்சு, உடல் உபாதையை முடிச்சுட்டு, செம்புல தண்ணிய மோந்து குடிச்சிட்டு பெத்த பெருமாள் நடக்க ஆரம்பித்தார். ஒரு பெட்டை நாய்க்குப் பின்னே ஆறு ஏழு ஆண் நாய்கள். மெல்லக் கடந்து போனார். இப்படித்தான் காலையில பத்து நாப்பது பேருக்கு மேல் இருக்கும். நடந்தார்கள். வயது, வயிறு, உடைகள், மேக்கப்பு, பேச்சுத் தோரணை. இதில சுமார் இருபதுக்கு மேல, பட்டதாரிகள். மத்திய மாநில அரசிடம் வேலை பாத்துட்டு ஓய்வு பெற்றவர்கள். அதில் பென்ஷன் பெறுபவர்கள் பெரும்பான்மையானோர். சாப்பாட்டுக்கு மொத்தமா பேசிக் காசக் கொடுத்துட்டா, இப்ப சாப்பாட்டுப் பிரச்சனையில்லன்னு மனஆறுதல் இவர்களுக்கு. கால, மால இருவேளையும் நடக்க வேண்டியது. பேச்சு ஊர்ப் பேச்சு, உலகப் பேச்சு. சரியா ஏழரைக்கு வீட்டுக்குப் போயி குளிச்சிட்டு சாப்பிட வேண்டியது; பேப்பர மேய, பிறகு தொலைக்காட்சி சேனல மாத்தி மாத்தி ரிமோட் பட்டன் தேய்ஞ்சு போயிருச்சு. ஏதாவது போடுறாங்களான்னு தோணும். என்ன செய்ய? வர்றதுதான் டிவியில வரும். வெளியில இருந்து பாக்கிறவுகளுக்கு, ஊர் உலகத்துக்கு, பெருசுகளுக்கு என்ன கவல? பிள்ளைக நல்லா வைச்சுக்கிறாங்கன்னு பேச்சு. மக்கமாரு, ராஜா மாதிரி வச்சுருக்காங்கன்னு போற வர்ற மக்க மனுசார் பேசுவாங்க. உறவுகளும் அப்படித்தான் நெனைக்கும். ஆனா, வீட்ல பெத்தபெருமாள் மாதிரியா இருக்கிற பெருசுகளுக்குத்தான் தெரியும், மகன், மகள்… வீட்ல இருக்கிற பொருள பாதுகாக்க, திருடனுக்குப் பயந்து அப்பாவ முழுநேர வீட்டு வாட்ச்மேனா அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்காங்கன்னு. ஒரு நா என்பது ஒரு யுகம் மாதிரி போகும். இதெல்லாம் வெளிய சொல்ல முடியுமா? தொனைக்கி நாயி வேற. அத வேற மேய்க்கணும். பெத்த பெருமாள் “ரோட்ல படுத்திருக்கிற நாயிக்கு இருக்குற சுதந்திரம் நமக்கு இல்ல”ன்னு முனங்கினார் பல நேரம். “யோவ், பெத்த பெருமாள்… என்ன பலத்த யோசனை? உனக்கு எப்படி, அப்படித்தான் இங்க இருக்கிற எல்லாத்துக்கும். நாங்களும் அப்படித்தான் இருக்கோம்னு புரியணும். வா… வா… நம்ம எல்லார் கதையும் ஒரே மாவுல சுட்ட இட்லிபோலத்தான்”னு புலவர் சந்தானம் சொல்லவும் எல்லாரும் தன்னை மறந்து சிரித்தார்கள். நடையில வேகமில்ல. கால்கள் மட்டுமல்ல மனங்களும் தளர்ந்து போயிருந்தன. “அறுபத்தைக்கும் எண்பதுக்கும் இடைப்பட்டவர்கள். நம்ம ஒண்ணாத்தான் இருக்கம். இடையே நம்ம பிள்ளைக உலகம் வேறு. பாவம் அம்மாக்கள். நமக்கு என்ன கவல. ராஜேந்திரன்னு சொல்லுயா”ன்னு அய்யனாரைக் கேட்க, “பகவான் இருக்கும்போது எனக்கு என்ன கவல? போயிம் போயிம் அய்யனார்ட்டக் கேட்டா… அப்படித்தான் சொல்லுவார். ஒரே சிரிப்பொலி. எதிரொலித்தது. *** பலத்த ஹாரன் சத்தத்துடன் சென்னையில இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் கூடல்நகர் ஜங்சனைக் கடந்து அதேவேகத்தில் நிக்காம போனது. பிள்ளைகளில் ஆண், பெண் இருவருமே ஒரே மனநிலையில் இருப்பதைப்போல, ரெண்டு பக்கமும் பிளாட்பாரம் மிக அருமையா மேடு பள்ளமில்லாம சமதளமாக இருந்தது. இங்க வாக்கிங் போகும் ஆட்களின் நடமாட்டம் அதிகம். இதில் பெண்களைவிட ஆண்கள் அதிகம். மாலைநேரம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நாகமலைக்கு மேலே மஞ்சள் வெயில் மறையத் தொடங்கியிருந்தது. மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு, இதமான தென்றல் காத்து வீசியது. ஜங்சன் பாதையில் இருபக்கமும் வேப்பமரக் குளுமை. நேத்துச் சாயங்காலம் நல்ல மழை. மண் மனமும் தென்றல் காத்தும் கனமான இதயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு போனது. எல்லாரையும் ஆரத்தழுவி ஆனந்தமாக்கியது. என்ன? இவுங்கள இளைஞர்கள்ன்னு சொல்லுறேன்னு நினைக்க வேணாம். ‘இளமை திரும்புகிறது.’ அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நகைகள், கடிகாரங்கள், செல்போன்கள், கேன்வாஸ்… எல்லாமே நல்ல வசதிக்கான அடையாளம். வாழும் காலத்தில் பல்லைக் கடிச்சுக்கிட்டு சுகதுக்கங்களை மறைத்து, மறந்து, பிள்ளைகளே உலகமுன்னு வாழ்ந்தவர்கள். பிள்ளைகள நல்லபடியா கரையேற்றிவிட்டாங்க. ஆனா பெத்தவங்க ‘தனிமைக் குளத்தில்’ தவிக்கிறார்கள். வீட்ல தனிமை. மெல்ல மெல்ல மனித நடமாட்டத்தை நாடி நடக்க வந்துவிடுகிறார்கள். ஜங்சன் இருக்கு. ஆனால் ரயில்கள் நின்னு போகல. அப்படித்தான் இவர்களின் வாழ்க்கையும். எல்லாமே இருக்கு. எதுவுமே இல்ல. ஆஸ்தி, அந்தஸ்து, காசு, பணம், நகைநட்டு, காரு, பங்களா, வேலைக்கு ஆட்கள், காவலுக்கு ரெண்டு நாய் இவ்வளவும் இருந்தும், என்ன பயன்? எல்லாருக்கும் எல்லாம் இருக்கு. பிள்ளைகளின் வாழ்க்கைமுறை வேறு.  இவர்களின் உலகம் இலையுதிர்க்காலத்து மரம்போல. எல்லாருக்கும் மனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என “உறவுகள்” இருக்கிறார்கள், கோலார் தங்கச் சுரங்கம்போல. ஆனால் மனிதனின் வாழ்க்கை பலத்த காற்றில் பறந்து போன கூட்டைத் தேடும் குருவிபோல. உறவுகளைத் தேடுகிறார்கள், இன்னும் தொலைத்த இன்பங்களைத் தேடியே. யாருக்காக வாழ்றோம்னு எதுவும் தெரியாது. இளைப்பாறுதல் இல்லா மனநிலையில், முதியோர்களின் பயணம். “என்ன இருதயராஜ்… இந்த ஆண்டு ஜுன் மாசம் காவிரியில இருந்து தண்ணி வருமா?” “என்ட்ட ஏன் கேட்குறீங்க?” “நீதானே பி.டபிள்யூ.டி. இஞ்சினியர்?” “சும்மா இருக்கமாட்டீங்க புலவரே..” “அவுக என்னைக்கி நமக்குத் தண்ணி கொடுத்தாங்க? கேரளாவும் கர்நாடகாவும்.. நல்ல பாம்பு அது; விரியம் பாம்பு இவுக. நமக்குப் பெரியாறிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குக்கும் காவேரில இருந்து தஞ்சை டெல்டா பகுதிக்கும் தேவைப்படும்போது தண்ணியத் தரமாட்டாங்க. ஆனா, அங்க மழை சக்கப்போடு போடட்டும். அய்யோ, டேம பாதுகாக்கிறோம்ன்னு சத்தமில்லாம போன் பண்ணிட்டுத் தண்ணிய திறக்கிறோம்னு சொல்லுவாங்க. ஆனால் தண்ணியத் தொறந்துட்டுதான் போன் பண்ணுவாங்க.” “புலவரே ஆனா.. பட்டம் தப்பி விடுற தண்ணி நமக்கு விவசாயத்துக்குப் பயன்படாது. நேரா கடலுக்குத்தான் போகும். இங்க ரெண்டு பக்கமும் அதே நிலமதான். என்ன இஞ்சினியர் சார்? நம்ம, ஆம்பளப் பிள்ளையும் பொம்பளப் பிள்ளையும், கேரளாவும் கர்நாடகாவும் ஒன்னுதான்னு சொல்லுங்க.” “எத எதுலக் கொண்டாந்து பொருத்துறீங்க? என்னை வம்புல மாட்டிவிடுறீக” என்று இதயராஜ் சொல்லவும் பெத்த பெருமாள், “புலவர் சொல்லுறது சரிதான். ரெண்டு பிள்ளையும் அப்படித்தான் இருக்காங்க. அது அவுக நிலை. இது நம்ம நிலைமை.” கால்கள் நடந்தன. மனங்கள் இறுகிப்போயின. நடந்தார்கள் நீண்டநேரம். மௌனத்தை உடைத்தார் அய்யனார். “நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போறேன் நாளைக்கி. யாராவது வர்றிங்களா?” “யோவ், எப்பப்பாரு கோயில் கோயில்… அய்யனார் போயிட்டு வாங்க. கடவுள்ட்ட எங்கள காப்பத்த வேண்டான்னு வேண்டிக்கங்க.” “நம்ம விதியை நொந்துக்கறாத விட்டு.. அய்யனார் நீங்க போயிட்டு வாங்க” என்று மாணிக்கம் முடித்தார். என்ன.. எல்லாப் பிள்ளைகளுக்கும் அம்மாவைப் பிடிக்கிது. அடப்போங்கப்பா! அம்மா அடுப்படி வேலைக்கு. பிள்ள தூக்கும். அவுகளுக்குப் பிள்ள வளர்ற வரைக்கும் மகனும் மகளும் அம்மாவத் தாங்குறாங்க. இல்ல அம்மான்னு பாசத்தில தொங்குறாங்க. இது தெரியாத அம்மாக்க, பிள்ளைகதான் பெருசுன்னு புருஷன விட்டுட்டுப் போய் மக வீட்ல மகன் வீட்ல இருந்துக்கிறாக. புரியும்போது அம்மாக்கள் புலம்புவாங்க. பிள்ளைக திருமணம் முடிச்சாப் பத்தாநாள் தனிக்குடித்தனம். பாம்பு தன்னுடைய தோலக் கழட்டுற மாதிரி, தானா விலகிறவுகளும் இருக்காங்க. முதுமை கஷ்டமாயிருக்கு எல்லாத்துக்கும். பொஞ்சாதியின் துணையில இருந்துட்டு இருந்த கணவன்களைத் திடீர்னு பொஞ்சாதி விட்டுட்டுப் போனா, பலர் பித்துப் பிடித்துப்போய் டென்சன், பிரசர், எமோசன், சுகர்ன்னு மனநோயாளியாகவும் கணவன்மார்கள் போயிர்றாங்க. அத மறந்து பேச்சில காலத்தக் கடத்துவதாகவே வாக்கிங் கூட்டதில் சேர்வதும் அங்க பெரும் பேச்சு, நோயும் மாத்திரையும் டாக்டருமாத்தான் இருக்கு. நோய்க்கு மருந்தா? இல்ல மனசுக்கா? மாத்திரைக்கும் டாக்டருக்கும்தான் வெளிச்சம். எல்லார்ட்டையும் புன்னகையோடு பேசினாலும், சிரிப்ப விலை கொடுத்து வாங்குவாங்கன்னு சொல்லுறது மாதிரிதான் இருப்பாங்க. அவுககிட்ட காசு இருக்கு. சிரிப்பு வாங்குவாங்க. ஆனா, சிரிப்பு வரணுமே… மதுரை – திண்டுக்கல் பேசஞ்சர் ரயில் மெதுவாகக் கூடல்நகர்ல நின்னுபோனது. மாதா கோயில் மணி அடித்தது. “நேரம் சரியாக ஆறுமணி. எல்லாரும் சுகமாக இருக்க கர்த்தருக்கு தோத்திரம்… உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன் (யாத்தி.23-26) ஆமேன்… ஆமேன்…” பேசஞ்சர் ரயில் மெல்ல தன் ஹாரன் ஒலியை எழுப்பியது. மூன்றாவது ஹாரன் ஒலி எழுப்பிய உடனே கிளம்ப சிக்னல் கிடைச்சு புறப்பட ஆரம்பித்தது. மீண்டும் ஹாரன் சத்தம்… ஸ்ஸ்… டைசக்கு டைசக்கு டைசக்கு. ரயில் புறப்பட்டுவிட்டது. “என்னய்யா, மணி ஆறாச்சு. இன்னும் கிளம்பள. நாங்க இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்கோம். அய்யா, கதிரவன் நீங்க போயிட்டு வாங்க.” பழைய பி.ஆர்.சி.யில செக்கரா இருந்தவர் பெத்த பெருமாள். “சுந்தரம், வீட்ல இருந்து எத்தன வாட்டி கடிகாரத்தையும் செவுத்தையும் பார்க்கிறது?” “எவ்வளவு நேரம் பகல்லப் படுத்துக் கிடக்கிறது? உங்களுக்கு என்ன?” ஜங்சனை விட்டுக் கிளம்பவே மணி ஏழரையாகும். “என்னங்க சார் கொசுக்கடிக்காதா?”ன்னு கேட்டேன். அமூட்டுதான் குறுக்கிட்ட சக்திவேல் சார், “பேரப் பிள்ளைக தராத முத்தத்த கொசுவாவது கொடுக்கட்டும்”ன்னு சொல்லவும், எல்லாரும் கொல்லுன்னு சிரிக்க, எனக்கு ஏன்டா கேட்டோம்ன்னுப் போச்சு. டியூப்லைட் வெளிச்சம் இரவைப் பகலாக்கியது. கருக்கொண்ட மேகம் இவர்கள் மனம் போலவே அமைதியா இருக்கு. மழை பெய்யவா? வேண்டாமான்னு யோசித்தது. பிள்ளைக, வயதான அப்பா அம்மாவ வெளியே கூட்டிட்டுப் போவம்மா, வேண்டாமான்னு பொஞ்சாதிகிட்டக் கேட்டமாதிரி… மழை காத்தக் கேட்டு இருக்கு. காத்து வேகமா அடித்தது. மழைக்குணம் மாறி மேகக்கூட்டம் களைந்து போனது. இப்படித்தான் பல வீடுகளிலும் பேச்சுகள் தடுமாற்றத்தால் கூட்டுக் குடும்ப உறவுகள் கலைந்து போயின. பெத்த பெருமாள் குடும்பத்தத் தெருவே பேசும். அவுகள மாதிரியா அண்ணன் தம்பி, தங்கை ஒன்னாயிருக்க முடியாதுன்னு… கூட்டுக்குடும்பம். நல்லது கெட்டதுன்னா அவுக வீட்டு ஆளுக போதும். இப்ப வீட்டைப்பாரு, ‘மனுச வாடை அத்துப்போயிக் கிடக்கு’. வீடு மட்டுமே பெருசா. மனித மனங்கள் காஞ்சு போன வாழை இலை சுருண்ட மாதிரி சுருங்கிப்போச்சு. இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையில வாழ்க்கை. பழச மறக்க முடியாம, புதுச ஏத்துக்கு முடியல. முதியவர்கள் மனதளவில் போராடுகிறார்கள். ரெண்டு தண்டவாளம் போல, சேருமா? சேராது. ரயில் சேரணும்… ஆனா சேராது தண்டவாளம். தவளையும் ஓந்தியும் காதலர்கள். ஆனா பார்வைக்கு ஒரே மாதிரியா இருக்கும். எங்கூட வான்னு தவளை தண்ணிக்குள்ளக் கூப்பிட, ஓந்தி, இல்ல வா மேட்டுக்குன்னு தவளய கூப்பிட. இப்படியே ரெண்டு குளத்தம் கரைமேல நட்புச் சண்டை நடக்க, மேலே இருந்து பார்த்த பருந்து ரெண்டையும் சேத்து தூக்கிட்டுப் போயிருச்சு. தண்ணி தவளைக்கும் ஓந்தி மேட்டுக்கும் கதைதான் நம்மக் குடும்பங்களின் கதையும்.  தயிர்ப் பானையில விட்ட மத்தாட்டம், எல்லோர் நாவும் உறவுகளை

தலைகீழாகத்தான் குதிப்பேன்

தலைகீழாகத்தான் குதிப்பேன்

அரசியல் நையாண்டி: ஆர்னிகா நாசர் உதயசங்கர் ஸ்கூட்டி பெப்பை ஓட்டியபடி அந்த குறுக்குச் சந்துக்குள் புகுந்தான். எதிரில் ஒரு இ-பைக் மோதுவது போல வந்து சறுக்கி நின்றது. இ-பைக்கில் அமர்ந்திருந்த சீனிவாசன் இரைந்தான். “உனக்கு என்னோட மோதுரதே பழக்கமாகிப் போச்சு உதயா!” மோத வந்தது நீயா நானா?” இருவரும் ஓரமாய் ஒதுங்கி அவரவர் வாகனங்களை ஸ்டாண்டிட்டனர். “அப்புறம்?” “ரொம்ப சந்தோஷமா இருக்க போல சீனி…” “ஹிஹி… ஆமா… எங்க மோதானியின் சாதனைகளை நினைச்சா எனக்கே மார்பளவு 65 இஞ்ச் ஆகுது!” “வெடிச்சிறப் போகுது நெஞ்சு. நாட்டை பிடித்த ஒன்பதரை நாட்டுச் சனி உங்க மோதானி. பீடையைக் கைகழுவ நேரம் பார்த்துக்கிட்டு இருக்கம்!” “அதெல்லாம் நடக்காது. மோதானியின் டாப்கிளாஸ் சாதனைகளில் ஒன்றாக சிந்தியாவின் பெயர் மாற்றம் இருக்கப் போகிறது. ‘சாரத்’ எவ்வளவு இனிமையான பெயர்!” “இருபத்தெட்டு எதிர்க்கட்சிகள் ஒன்னு கூடி கூட்டணி அமைச்சிருக்கிறது, உங்க மோதானிக்கு பீதியைக் கிளப்பிருச்சு. பிரதீப்ஷாவுக்கு அல்லு விட்ருச்சு. உங்க பிஎஸ்எஸ்ஸுக்கு பேதியை பிடுங்கி விட்ருச்சு!” “ஹ… ‘சாரத்’ என்கிற பெயர் மாற்றத்துக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரம் ஒளிந்திருக்கிறது உதயா!” “அப்படி என்ன ராஜதந்திரம்?” “மோதானி அரசு 105 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என உபிகள் புலம்புகின்றனர். கிருணாச்சலசத்தில் கோனா நுழைஞ்சதுக்குப் போய் வாயிலும் வயிற்றிலும் லபோதிபோன்னு அடிச்சுக்கிறாங்க. சிந்தியான்னு பெயர் இருக்கும் போதுதானே கடன் வாங்கினோம்? இப்ப எங்க பெயர் சாரத் எங்களுக்கும் சிந்தியா வாங்ன கடனுக்கும் துளி சம்பந்தமில்லை என கடன் கொடுத்தவனை விரட்டுவோம். சிந்தியால சில இடங்களை புடிச்சோமா சாரத்தில் சில இடங்களை பிடிச்சோமான்னு கன்ப்யூஸ் ஆகி பிடிச்ச இடத்தை விட்ருவான் கோனாக்காரன்!” “அரைகுறை மங்கியாக இருந்த நீ முழு மங்கியா மாறிட்ட சீனி!’ “சாரத்’ பெயர் மாற்றத்துக்கு அறிவியல்பூர்வமான காரணம் ஒன்னு சொல்றேன் கேளு உதயா!” “சொல்லு…” “நிலாவுக்குப் போன கிந்தராயன் விண்வெளில இருந்து பாத்தப்போ சிந்தியா நாடு நாடு ‘சாரத்’ என்கிற எழுத்து வடிவில் தெரிஞ்சிருக்கு, ‘சாரத்’ என்கிற சொல்லில் சா-ர-த் எனும் மூன்று எழுத்துகள் உள்ளன. ‘சா’ என்பது மித்வோ குணம். ‘ர’ ரஹிஜோ குணம். ‘த்’ என்பது தங்மோ குணம். இந்த மூன்று குணங்களும் இணைந்த ‘சா—ர-த்’ என்பது சக்தி வாய்ந்த மந்திரம். ஒருமுறை கான்ஸ்டீன் விண்வெளி ஆராய்ச்சி செய்யும்போது ‘சாரத்’ எனும் ஒலி பிரபஞ்சத்தில் இருந்து கேட்பதை உணர்ந்தார். ‘சாரத்’ என ஒருமுறை சொல்வது கிக் வேதத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த மந்திரங்களை ஆயிரம் முறை சொல்வற்குச் சமம். ‘சாரத்’ என்று சொன்னால் நீண்ட நாள் நோய் குணமாகும். கடன் பிரச்சனை தீரும். பஸ்ஸில் போனால் வாந்தி வராது, ஏடிஎம்மில் நீங்கள் எத்தனை முறை பணம் எடுத்தாலும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறையாது.” “அட பைத்தியக்கார பக்கி… மங்கித்தனம் தொத்து நோயா? படிச்சவன், படிக்காதவன், சயின்டிஸ்ட், கிஸ்ரோ டைரக்டர், ஜட்ஜ், போலீஸ்காரன், இப்படி எல்லார்கிட்டயும் தாறுமாறா பரவி இருக்கு. துட்லரின் பெர்மனி ஆகிக்கிட்டு இருக்கு சிந்தியா…” “எங்களைக் கழுவிக் ழுவி ஊத்தினாலும் துளி வெக்கப்பட மாட்டோம். தொடர்ந்து மங்கிதனம் செய்வோம்!” “சாரத்னு பெயர் மாத்தறதுக்கு பதில் ‘வல்லரசு’ என்று பெயர் மாத்திடுங்க. நாட்டை வல்லரசு ஆக்கிட்டோம்னு கும்மாளம் போடலாம் நீங்க!” “வல்லரசு சாரத்’-னு பெயர் மாத்திட்டா போச்சு!” “பெயர் மாற்றத்துக்கு 15000 முதல் 20000 கோடி ரூபாய் வரை செலவாகும்!” “ஆனா ஆகிட்டுப் போகுது டிலோன் ஸ்ரீபங்கானும், திர்மா ஸயான்மர்ன்னும், கிர்ஷியா டர்ரான்னும், டயாம் சேய்லாந்துன்னும், டோலந்து பெதர்லாந்துன்னும், பம்பூச்சியா லம்போடியான்னும், காடீசியா டும்பாவேன்னும் பெயர் மாறிக்கலையா?” “நீ சொன்ன சில நாடுகள் நியாயமான காரணங்களுக்காகத் தங்கள் பெயர்களை மாற்றி இருக்கலாம். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் மோதானி செய்த அலங்கோலங்களைப் பட்டியலிடுகிறேன் கேள். நாணயமதிப்பிழப்பு நடவடிக்கை 13000கோடி செலவு. மைரோனா ஊரடங்கால் நூற்றுக்கணக்கானோர் மரணம். வாழ்வுரிமை திருத்த சட்டத்தால் கிஸ்ஸாம் அகதி மாநிலம் ஆயிற்று. கிஸ்லாமிய பெண்களின் குடும்ப வாழ்க்கையை சீரழிக்க பத்தலாக் சட்டம். கார்ப்பரேட்களுக்கு 14,5லட்சம் கோடி கடன் தள்ளுபடி. பந்தி திணிப்பு. செத்துப் போன உமஸ்கிருதத்தை தலையில் வைத்து கூத்தாடுதல். கட்சி சொத்தை 6500கோடியாக பெருக்கியது. 90சதவீத கிரிமினல்களை லஞ்ச ஊழல் பேர்வழிகளை வைத்து கட்சி நடத்துதல். கட்சிதாவல் தடை சட்டத்தை கேலி கூத்தாக்கி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தல். மதவெறி இனவெறி அரசியல் பண்ணுதல். பணிப்பூர், தரியானா, ச.பி.,யில் இரத்தவெறியாட்டம். வேலைவாய்ப்பின்மை. விலைவாசி உயர்வு. டாலருக்கு நிகரான சிந்திய ரூபாய் மதிப்பு சரிவு. சுகாதார கட்டமைப்பின்மை. வடக்கத்தியர்களை தெற்கில் குடியமர்த்துவது. வங்கி ரயில்வே பணிகளில் கிமிழர்களை முழுமையாக புறக்கணித்தல். குலக்கல்வி திட்டத்தை அமுல்படுத்தல். இரண்டு சதவீத உயர்சாதி சிந்துகள் கால்களில் 140கோடி சிந்தியரை விழுந்து கிடக்க செய்தல். நீதிதுறையை பாவிமயமாக்குதல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்… மோதானியின் ஒன்பதரை ஆண்டு ஆட்சி நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னே கொண்டு சென்றுவிட்டது. மோதானி எந்த அழிவு காரியம் செய்தாலும் அதனை ஆதரித்து பேசி எழுதுகிறீர்களே… இதனை தெரிந்து செய்கிறீர்களா, தெரியாமல் செய்கிறீர்களா?” “பேதர்களும் உயர்ஜாதி சிந்துகளும் ஒன்று. எங்களுக்கான ராஜா மோதானி. அவரை ஆதரிப்பதே எங்கள் உயிர்மூச்சு!” “சிந்தியாவை ‘சாரத்’ என மாற்றினால் என்னென்ன குழப்படிகள் நேரும் தெரியுமா? சிந்திய ரிசர்வ் வங்கி, சிந்திய தொழில்நுட்ப கழகம், சிந்திய ரயில்வே, சிந்தியா போஸ்ட், சிந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சிந்திய தேர்தல் ஆணையம், சிந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பெயர்களை மாற்ற வேண்டிவரும்!” “மாத்திட்டு போரோம்…” “பாஸ்போர்ட், பேஜார்அட்டை, பிங்பாங் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமை, சிண்டியன் கரன்ஸி இப்படி எல்லா விஷயங்களையும் பெயர் மாற்றவேண்டும்!”  “மாத்திட்டுப் போறோம்!” “எதிர்கட்சி கூட்டணி ‘சிண்டியா’ன்னு பேர் வச்சதினால ‘சாரத்’னு பேர் மாற்றம் செய்றீங்க சரி… நாளைக்கே எதிர்கட்சி கூட்டணி தங்களின் பெயரை ‘சாரத்’னு மாத்தி வச்சுக்கிட்டா என்ன பண்ணுவீங்க!” சிரித்தான் சீனிவாசன். சிரிப்பு ஹிஸ்டீரிகலாய் இருந்தது. கண்கள் கொடூரமாய் மின்னின. “கினாதன் ராஷ்டிரம் என மாற்றுவோம்…” “சீனி! ஒரு முக்கியமான விஷயத்தை உனக்கும் உன் சகமங்கிகளுக்கும் வலியுறுத்த வேண்டி இருக்கிறது. சிறுபான்மை மக்கள் இல்லாத சிந்தியா சாத்தியமே இல்லை. ஒரு கட்டத்தில் சிந்தியா ரஷ்யாபோல 28மாநிலங்களும் 8யூனியன் பிரதேசங்களும் தனித்தனி நாடுகளாய் சிதறி விடும். சோற்றுக்கும் தண்ணீருக்கும் மத்தியோப்பியர்கள் போல் அடித்துக் கொள்வோம். ஸ்ரீபங்கா போல திவாலாகி விடுவோம். தேர்தல் ஜனநாயகத்தை கிஜேபி ரத்து செய்துவிடும். சிந்தியாவோ சாரத்தோ கற்காலக் காட்டுமிராண்டிகள் நாடாகிவிடும். அப்படி ஒரு மோசமான சிந்தியாவை நம் மகன்களுக்கும் நம் பேரன் பேத்திகளுக்கும் விட்டுச் செல்லப் போகிறோமா?” “சும்மா பூச்சி காட்டாதே உதயா… ஒட்டுமொத்த சலேசியா கண்டமும் ‘அகண்ட சாரத்’ ஆகும் நாள் வெகுதூரத்தில் இல்லை!” “கண்களை திறந்து கொண்டே அதளபாதாளத்தில் தலைகீழாய் விழுகிறீர்கள்!” “அப்படித்தான் விழுவோம் உதயா!” “உன் சீனிவாசன் என்கிற பெயர் உனக்கு பிடித்திருக்கிறதா?” “அறுபது வருடங்களுக்கு முன் என் அப்பன் எனக்கு இந்தப் பெயரை வைத்து விட்டான்… அபிஷ்டு… பிரம்மஹத்தி… அசடு… நான் என் பெயரை கவர்மென்ட் கெஜட்ல குடுத்து மாத்திக்கப் போறேன்!” “புதுசா என்ன பெயர் வச்சுக்கப் போற?” “ரொம்பதூரம் போய்ட்டேன்… திரும்பி வர முடியாது… எங்களை மங்கி மங்கின்னுதானே கேலி பண்றீங்க… கேலி பண்ற பெயரையே வச்சுக்கிட்டா?” ‘மங்கின்னா லட்சக்கணக்கான மங்கிகளில் நீயும் ஒருவன் என்றாகிறது உன் தனித்தன்மை பாழாகுமே?” சீனிவாசனின் முகம் சூரியனித்தது. “இன்றிலிருந்து என் பெயர் கினாதன் மங்கி…” நூறுமுறை தனக்குள் சொல்லி பார்த்துக் கொண்டான், “ஆயிரம் நஷ்டங்கள் வந்தாலும் இனி என் பெயர் கினாதன் மங்கிதான்… கினுதர்மம் வாழ்க! பர்ணாசிரமம் வாழ்க! குலத்தொழில் வாழ்க வாழ்க!” மானசீகத்தில் லட்சம் மங்கிகள் கூடிக் குலவை ஒலி எழுப்பினர்.

திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்

திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்

தொ. மு. சி. ரகுநாதன் நூற்றாண்டு நிறைவு சிறப்புக் கட்டுரை: அக்ரி பரத்வாஜ் ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற ஒற்றை வரியில் தன்னை வெளிப்படுத்திய மகாகவி பாரதியின் பெருமையை, தர்மாவேசத்துடன் உலகிற்கு உணர்த்திய முற்போக்கு இலக்கியப் படைப்பாளி, சமரசங்களுக்குட்படாத போராளி, தொ.மு.சி என்ற தொண்டைமான் முத்தையா சிதம்பரம் ரகுநாதன். தன் பெயருக்கு முன்னே தலைப்பெழுத்துப் போடுவதையே கைவிட்டு, ரகுநாதன் என்றே தனது பெயரை எங்கும் பயன்படுத்தியவர். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில், அறிவுச் செருக்கும் கறார்த்தன்மையும் மிக்க பெருமித வாழ்விற்குச் சொந்தக்காரர். பேராசிரியர் நா. வானமாமலைக்கு முன்பாகவே எதார்த்த வாதத்தையும் முற்போக்குச் சிந்தனையையும் புதுமைப்பித்தன், பாலதண்டாயுதம் ஆகியோரின் தொடர்பால் தமிழில் வளர்த்த படைப்பிலக்கியவாதி. அது மட்டுமின்றி தத்துவம், வரலாறு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் அழுத்தமான பார்வை கொண்ட கருத்துப் போராளி. இலக்கிய ஆளுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ரகுநாதன். ‘எழுத்தாளன் ஒரு தனி மனிதன். ஆனால் சமூகம் சார்ந்த மனிதன். இந்த இரண்டும் முரண்படாமல் பார்த்துக்கொண்டு, தன் தனித்துவத்தைக் காப்பாற்றியாக வேண்டும்’ என்ற ரகுநாதன், பாரதியை வழிகாட்டியாகக் கொண்டு தனது இலக்கியப் பயணத்தை நடத்தியவர். இடதுசாரிச் சிந்தனை கொண்ட இவரது பேராசிரியர் கே. எஸ். சோணாசலம், நெல்லை இந்துக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியராக இருந்தவர். தினமணி ஆண்டு மலரில் சோசலிசம் என்றால் என்ன? என்ற கட்டுரை எழுதியவர். இவர்தான் ரகுநாதனுக்கு மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை அறிமுகப்படுத்தியவர். பேராசிரியர்கள் அ. சீனிவாச ராகவன், மு. அருணாசலக் கவுண்டர் ஆகியோர், இவருக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்தவர்கள். இண்டர்மீடியட் – பட்டப் படிப்புக்கு முந்தைய இரண்டாண்டு கல்லூரிப் படிப்பில் தோற்றுப்போன ரகுநாதன், இரணியவாதம் பற்றிப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தனது சிறை அனுபவத்தின் பின்னணியில் அவர் எழுதிய கதைதான் கூண்டுக்கிளி. 1944 – 46இல் தினமணியின் துணை ஆசிரியராகவும் 1946 – 1947இல் முல்லை இதழின் ஆசிரியராகவும் 1948 – 1952இல் சக்தி இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1954 – 1956இல் நெல்லையில் சாந்தி என்ற இலக்கிய இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்தார். 1967முதல் 1988 வரை சோவியத் நாடு, சோவியத் பலகணி ஆகியவற்றில் பணி புரிந்தார். பின் நெல்லை திரும்பிய காலகட்டத்தில், இலக்கிய வரலாறுகள், இலக்கியக் கோட்பாடுகள் என ஏராளமாகப் படித்தார். படித்தவற்றில் பலவற்றைத் தீவிர மறுவாசிப்பிற்கு உட்படுத்தினார். திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.ஜனநாயகம் என்ற பெயரில் வெளிவந்த அதிதீவிர இடதுசாரி இதழில் ஜீவா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ‘சத்தியத்தின் இன்னுருவாய் சாத்துவீகப் போராளியாய்பத்தியங்கள் பல நோற்று பாரதத்தின் நோய் நொடியைக்கத்தியின்றி ரத்தமின்றி களைந்தெறியப் பாடுபட்டசத்தியவான் போய் மறைந்தான் சண்டாளன் கொன்றுவிட்டான்’ என்ற கவிதையை காந்திஜியின் மறைவையொட்டி எழுதினார். பாரதி மீது அளவற்ற பாசம் கொண்ட ரகுநாதன், கலை இலக்கியப் பெருமன்ற மேடைகளிலும் எட்டையபுரம் பாரதி விழா மேடைகளிலும் பாரதியின் பெருமைகளை முழங்கினார். பாரதி பற்றிய அவரது கவிதை முழக்கங்கள், கேட்போரைக் கிறங்க வைக்கக் கூடியவை. ‘சாதி பேதமெனும் சழக்கறுத்து மானிடமாம்நீதி ஒன்றே தர்மம் என நிலைநாட்டும் சமுதாயம்மானிடர்கள் எல்லோரும் வளவாழ்க்கைதனைப் பெற்றசமுதாயம்,இதைத்தான் நம் கவிஞன் இத்தரையில்ஒப்பில்லா சமுதாயம் என்றுரைத்தான்’ என, பாரதி தன் கவிதைகளில் உயிராக நிலைநிறுத்திய ஒப்பில்லாச் சமுதாயம் என்ற கருத்திற்கு விளக்கம் தருகிறார். இலக்கிய உலகில் நாவலாசிரியர் என அங்கீகரிக்கப்பட்டவர் ரகுநாதன். புதுமைப்பித்தன் கவிதைகள், புதுமைப்பித்தன் கதைகள், காந்திமதி கலித்துறை அந்தாதி ஆகிய நூல்களை இவரே பதிப்பித்தார். அவரது முதல் நாவலான புயல், 1945இல் எழுதப்பட்டது. 1949இல்முதலிரவு, 1950இல் கன்னிகா ஆகிய நாவல்களை எழுதினார். 1953இல் பஞ்சும் பசியும் எனும் நாவலை எழுதினார். கன்னி முயற்சியான ‘புயல்’ நாவலை, தனது 22ஆம் வயதில் தினமணியில் இருந்தபோது ரகுநாதன் எழுதினார். இந்நாவல் ஒரு காதல் கதைதான். ஆனால், புதுமையான கதை. ஒரு பெண்ணின் மன ஓட்டங்களின் வழியாக நாவல் வளர்கிறது. இந்நாவல் இளம்பெண் ஒருத்தியின் மென்மையான மனோ உணர்ச்சிகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் கவிநயத்தோடு சித்தரிக்கிறது. கருத்துச் செறிவு மிக்க, படிக்கப் படிக்க இன்பம் தரும் படைப்பு ‘கன்னிகா’ என்ற இவரது மூன்றாம் நாவல். கள்ளம் கபடமற்ற கமலா என்னும் பெண்ணின் கனவுமயமான காவியக் காதல் உணர்வு, படிப்படியாக இறங்கி ரத்தமும் சதையுமான மண் வகைப்பட்ட காதலுக்குத் திரும்புவதே நாவலாக விரிந்து நிற்கிறது. சிறுகதையாக எழுத நினைத்து, திருப்தி இல்லாத காரணத்தால் நாவலாக எழுதப்பட்டதுதான் இந்நாவல். பெண்களின் பருவ காலத்தை, ஐந்தைந்து ஆண்டுகளாக வகுத்துக்கொண்டு இந்நாவலை எழுதியுள்ளார் ரகுநாதன். இவரது இரண்டாவது நாவலான ‘முதலிரவு’ மராட்டிய எழுத்தாளரான காண்டேகரின் தாக்கத்தால் எழுதப்பட்டது. காண்டேகரின் ‘கருகிய மொட்டு’க்குப் பதிலாக ரகுநாதன் எழுதினார். மனித வாழ்க்கையின் வலுப்பிடியாக விளங்கும் மிகப் பெரிய சக்திகள் பசி, காமம். இவற்றில் காமமும் பசியைப்போல முக்கியமானது என்ற தெளிவுறுத்தலும் மக்கள் காமக் கலையறிவைத் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவும் இந்நாவலைக் காணமுடியும். இவரது நான்காவது நாவல்தான் ‘பஞ்சும் பசியும்’. முன்னால் வந்த பாதையின் திருப்புமுனையாகவும் இனி செல்லும் பாதைக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறது இந்த நாவல். திசை மாறிப்போய்ப் பள்ளத்தில் விழவிருந்த தமிழ் நாவலைப் புதிய பாதைக்கு இட்டுச் சென்றது. 1953ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த நாவல், பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. அம்பாசமுத்திரம் நகரின் நெசவாளர்கள் ஊர்வலமாக உரிமைக் குரலை ஒலித்துக்கொண்டு வருவதை, நதியின் பிரவாகத்திற்கு ஒப்பிட்டுக் காட்டும் இந்த ஒப்புமை கம்யூனிஸ்டுகள் விக்கிரமசிங்கபுரத்தில் நடத்திய தொழிலாளர் போராட்டத்தை உள்ளபடி விவரிக்கிறது. சமுதாய இயக்க விதிகளையும் எதிர்காலச் சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக்கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை உண்மையுடன் சித்தரிப்பவனே எதார்த்தவாதி. இத்தகைய சிறப்புமிக்க எதார்த்த இலக்கிய நெறியை, பஞ்சும் பசியும் நாவலில் விதந்து கூறும் வகையில் படைத்துள்ளார் ரகுநாதன். அயல்நாட்டு மொழி ஒன்றில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், முதல் பதிப்பிலேயே 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. செக்கோஸ்லோவாகியா அகாடமியில் திராவிடவியல் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் கபில் ஸ்வலெபில் என்பவரால் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் நம் மத்தியில் நடமாடிய, நடமாடும் பாத்திரங்களாக உள்ளன. சோவியத் நாவலான மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்‘ நாவலை இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய மொழிபெயர்ப்புகள் சமூக வாழ்வை மையமாகக் கொண்ட ரஷ்ய இலக்கியங்கள் ஆகும். மாயாகாவிஸ்கியின், மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய ‘மதத்தைப் பற்றிய கட்டுரைகள்’ என, முக்கியமான உலகப் படைப்புகள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பைப் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்: ‘ஓர் இலக்கிய கலா சிருஷ்டியின் மொழிபெயர்ப்பும் ஒரு கலா சிருஷ்டியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு நூலை மொழிபெயர்க்கும்போது, முதலில் அதனை உயிருள்ள மொழிநடையில் – மொழிபெயர்க்கப்படும் மொழிக்கு முரணாகாத முறையில் – மொழிபெயர்க்க முயல வேண்டும். அவனது வார்த்தைப் பிரயோகங்களும் நடை அமைதியும் மூல நூலில் உள்ள பொருளை நேர்மை உணர்ச்சியுடன் உணர்த்துவதாக இருக்க வேண்டும்.’ 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் நிமிர்ந்து நிற்கும் பெருஞ்சிகரமான ரகுநாதன், கவிதைத் தொகுதிகள், சிறுகதைத் தொகுதிகள், நாடகங்கள், திறனாய்வு, ஒப்பிலக்கிய ஆய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரை, தமிழ் இலக்கிய வரலாறு என எண்ணற்ற நூல்களைப் படைத்துள்ளார். பாரதியை ஆதர்சமாகக் கருதிய இவர், ‘பாரதியும் ஷெல்லியும்‘, ‘கங்கையும் காவிரியும்‘ ஆகிய ஒப்பிலக்க ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்துள்ளார். ‘பாரதியும் ஷெல்லியும்’ என்ற நூல், பாரதியையும் பாரதியின் இதயத்தைப் பறித்து எண்ணத்தைப் பெரிதும் பக்குவப்படுத்திய ஒரே ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியையும் ஒப்பீடு செய்கிறது. புரட்சி இலக்கியப் பாரம்பரியத்தில் தனக்கு மூத்தோனும் முதல்வனுமாக இருந்த ஷெல்லியிடம் பாரதி கொண்ட ஈடுபாட்டை ஒப்பு நோக்கி எழுதிய, தமிழில் அதுவரை இல்லாத ஓர் ஒப்பிலக்கிய நூல் இதுதான் என்று அறுதியிட்டுக் கூறலாம். தமிழறிந்தவர்கள் போதுமான அளவு ஷெல்லியை அறிந்துகொள்ள இந்நூல் உதவுமென்பதையும் அறுதியிட்டுக் கூறலாம். நாடும் மொழியும் அரசியலும் இலக்கியமும் பின்னிப் பிணைந்திருந்த பாரதியை, வங்கத்தில் தோன்றி வங்க மொழியில் சிறந்த கவிதை படைத்த ரவீந்திரநாத் தாகூருடன் ஒப்பு நோக்கி, ஒற்றுமை – வேற்றுமை கண்டு, நுணுக்கமாக ஆராயும் ஒப்பிலக்கிய நூல்தான் ‘கங்கையும் காவிரியும்’. பெர்சி பைசி ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞர் இளம் வயதிலேயே மாண்டுபோன, உலக முற்போக்குக் கவிஞர்களின் மானசீக வழிகாட்டி. பாரதியும் 40 வயதுக்கு முன்னரே மறைந்து போனார். பாரதியின் மறைவுக்குப் பிறகு 21 ஆண்டுகள் ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்திருந்தார். இவர்களைப் பற்றிய சிறந்த ஒப்பாய்வு நூல்களைத் தந்தவர் ரகுநாதன். பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின் ஓர் அம்சத்தைஆய்வு செய்த நூல்தான் ‘பாரதி: காலமும் கருத்தும்‘ நூல். இந்நூல்1983இல் இலக்கியச் சிந்தனை பரிசைப் பெற்றது. 1984இல் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்தது. தமிழ்நாட்டில் ஓர் இடதுசாரி இலக்கியவாதிக்கு முதன்முதலாக இவ்விருதைப் பெற்றுத்தந்தது ‘பாரதி:காலமும்கருத்தும்’ என்ற நூலே. இந்நூல் பற்றிரகுநாதன் கூறும்போது, “எனது இலக்கிய வாழ்வை மேற்கொண்ட காலம் தொட்டு, சென்ற 40 ஆண்டு காலமாகவே நான் பாரதியைப் பயின்று வந்திருக்கிறேன்; பயின்று வருகிறேன். எனது இலக்கிய நோக்குக்கும் போக்குக்கும் ஏற்ப, சரித்திர வளர்ச்சியின் ஒளியில் அவனை நான் பலவாறும் இனம் கண்டு வந்தபோது, இந்த நூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்தது” என்கிறார். ஏற்கனவே திரட்டி வைத்திருந்த தகவல்களுடன் புதிய தகவல்களையும் சேர்த்து இந்த நூலை இரவு பகலாக எழுதி, 1982இல் பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டார். 30 ஆண்டு காலக் கடும் உழைப்பின் அரிய விளைவு இந்நூல். பாரதி பற்றிய பழைய பத்தாம் பசலித்தனப் பார்வையை நொறுக்கியது இந்நூல். 20ஆம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகள் ஆயுதமேந்திய இளைஞர்கள் போராட்டம் பெருமளவு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகவே இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். ஆயுதமேந்திய போராட்டத்தில் பாரதிக்கும் பங்குண்டு என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? பாரதியை விடுதலைப் போர்த் தளபதிகளில் ஒருவராக இந்நூல் இனம் கண்டது. 1984இல் ‘இளங்கோவடிகள் யார்?’ என்னும் நூலை தமிழ் ஆய்வு

இறுகப்பற்று

இறுகப்பற்று

திரை விமர்சனம்: மது ராஜேந்திரன் காதலித்து மணந்த அர்ஜுன் (ஸ்ரீ) திவ்யா (சானியா ஐயப்பன்) இடையே, அவள் சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இல்லாததாகப் பிரச்சினை. ஒரு குழந்தை உள்ள ரங்கேஷ் (விதார்த்) பவித்ரா (அபர்னதி) தம்பதியருக்குள், அவள் குண்டாக இருப்பதுதான் பிரச்சினை. இனி சேர்ந்து வாழ முடியாது என விவாகரத்து முடிவுக்கு வந்துவிடும் நிலையில் அவர்கள் தனித்தனியாகவும், சமயத்தில் ஒன்றாகவும் உளவியல் நிபுணரும் திருமண ஆலோசகருமான மித்ராவைச் சந்திக்கிறார்கள். “கல்யாணம் என்பது கண்ணாடி மாதிரி. உடைந்தால் ஒட்டாது. உறவு என்பது ரப்பர் பேண்ட் போன்றது. இருபக்கம் இழுக்கும்போது அறுந்துபோகும். அதைச் சிலர் தூக்கி வீசுவார்கள். சிலர் அதை முடிச்சுப் போட்டுப் பயன்படுத்துவார்கள். வீசி எறிய வேண்டுமா, முடிச்சுப் போட வேண்டுமா என்பது நம் கையில்தான் இருக்கிறது” என்று, ஆலோசனைக்கு வரும் அத்தம்பதியர்களிடம் நேர்மறையான முடிவை எட்டும் நோக்கில், எதிர்மறையான சில செயல்பாடுகளை முன்னெடுக்கும்படி ஆலோசனை கூறும் மித்ராவும் (ஸ்ரத்தா ஸ்ரீநாத்) கணவன் மனோகருடன் (விக்ரம் பிரபு) சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்த வாழ்வில் எதிர்பாராத விதமாகப் பிரச்சினையைச் சந்திக்கிறாள். அவர்களுக்குள் உள்ள பிரச்சினைகளின் உண்மையான வடிவத்தை இனம் கண்டு, அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகவும் சுவைபடவும் கூறுவதுதான், மகராஜ் தயாளனுடன் திரைக்கதை எழுதி, யுவராஜ் தயாளன் இயக்கி வெளிவந்துள்ள ‘இறுகப்பற்று’ திரைப்படம். ஸ்ரத்தா ஸ்ரீநாத் – விக்ரம் பிரபு ஜோடியாகட்டும், ஸ்ரீ சானியா ஐயப்பன் மற்றும் விதார்த் அபர்னதி ஜோடிகளாகட்டும், பாத்திரங்களின் தன்மையை முழுவதுமாக உள்வாங்கி, நடிப்பில் அற்புதமாக  வெளிப்படுத்தும் பாங்கில், ஒருவருக்கொருவர் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருப்பது சிறப்பு. சில நிமிடங்கள்தான் என்றாலும், அந்தப் பாத்திரத்திற்கு மனோபாலா ஏகப் பொருத்தம். அவர் இனி இல்லாதது பெரும் வருத்தம். கோகுல் பினாயின் ஒளிப்பதிவு ‘பளிச்’சென்று கண்களுக்குக் குளுமை. ஜஸ்டின் பிரபாகரனின்  மென்மையான பின்னணி இசையும் இனிமை தரும் பாடலிசையும் அருமை. ஜே.வி. மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பு, கச்சிதம். கதைக்கரு புதிதல்ல. அதைத் திரையில் தந்த விதம் அருமை. நகைச்சுவை குழைத்த வசனங்கள்; என்றாலும், சில ‘நறுக்’கென்று இருக்கின்றன. என்னதான் திருமணமாகிவிட்டாலும், கணவனோ மனைவியோ அவரவர்க்கு உள்ள தனித்த அடையாளங்களை, திருமணத்திற்குப் பிறகு விட்டுவிட வேண்டும் என்கிற பரஸ்பர எதிர்பார்ப்புதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை. சமரசமின்றி இந்த எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து, பரஸ்பரம் துணை நின்றால் பிரச்சினைகளுக்கே இடமில்லை என்பதை, அழுத்தம் திருத்தமாகவும் கலை நயத்தோடும் சொல்வதில், இயக்குநர் யுவராஜ் தயாளன் வெற்றி பெற்றிருக்கிறார். பிரச்சினைகளில் உழலும் தம்பதியர், அவற்றைக் களைய ஏதுவாக, சுயபரிசோதனை செய்துகொள்ளவும், திருமணத்தை எதிர்கொள்ளும் ஆண் பெண்ணோ, காதலர்களோ, திருமண ஆலோசனையாகக் கொள்ளவும் அவசியம் இந்த, ‘இறுகப்பற்று’. மதிப்பெண் : 8/10

சாபத்தில் பிறந்தவர்கள்

சாபத்தில் பிறந்தவர்கள்

கவிதை: செ. புனித ஜோதி நாங்கள்நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் எங்களோடுஓடிக்கொண்டிருக்கிறதுகண்ணீர் நாங்கள்மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் குண்டு வெடிப்பில்ஈந்து கொண்டிருக்கிறோம்உடலை நாங்கள்கடலின் சாபத்தில் பிறந்தவர்கள்உண்பதற்கும் உடுப்பதற்கும்உறங்குவதற்கும் இடமின்றிபரந்த தேசத்தில் தினம் தினம்அலைக்கழிக்கப்படுகின்றோம்அலைகளாய் நாங்கள்காற்றின் சாபத்தில் பிறந்தவர்கள்மூச்சுவிடக்கூடஉரிமையற்று இருக்கின்றோம் அத்தனையும்மனிதமற்ற மனங்களின்வன்மத்தில் விளைந்தவிளைச்சல்கள் அவர்களின் ரொட்டித் துண்டுகளில்பழக்கூழ் போலத் தடவித்தடவிஉண்டு மகிழ்கின்றனர்எங்கள் குருதியை காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடும்அரசியல் ஆதிக்கத்தில்திசைக்கொன்றாய்த் திரிகின்றோம்செத்த பிணமாய் ஏனெனில் நாங்கள்திரிசங்கு நேரத்தில் பிறந்தஅகதிகள்

ஷ்யாமா போகா

ஷ்யாமா போகா

சிறுகதை காலையிலிருந்து எல்லாமே வித்தியாசமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் செர்வர் கனெக்ட் ஆகவில்லை. மற்றொன்று கனெக்ட் ஆன அடுத்த நொடி, ஆட்டோ எக்ஸிட் ஆகிக்கொண்டிருந்தது. அனைத்தும் விர்ச்சுவல் செர்வர்கள். என்னளவில் எல்லா முயற்சியும் செய்துபார்த்துவிட்டு, அடுத்து இதை க்ளவுட் டீம்தான் சரி பண்ண முடியும் என்கிற புரிதலுக்கு வந்தவுடன், சர்வீஸ் டெஸ்க் இணையதளத்தில்  ஒரு கம்ப்ளெயிண்ட்டை புக் செய்தேன். இனி டீம் அனுப்புகிற பதிலைப் பொறுத்துதான் அடுத்த வேலை. எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். மெயிலைத் திறந்து ஏதாவது வேலை மிச்சமிருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. டைரியைத் திறந்து இன்று செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை ஒரு பார்வை பார்த்தேன். அனைத்தும் செர்வரில் மேற்கொள்ள வேண்டிய வேலைகள். டீமின் பதில் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை..?  ஓய்வு.   சாட்டை சுழற்றின பம்பரம் போலச் சுழன்றுகொண்டே இருந்துவிட்டு, சுழற்சியைத் திடீரென்று நிறுத்துவது எப்படி? ராட்டினம் தன் அதிவேகச் சுழற்சியைத் திடீரென நிறுத்தினால், அதில் அமர்ந்திருப்பவர் என்ன ஆவார்? மண்டை பரபரத்தது. இன்றென்றில்லை. பரபரப்பான வேலைக்கு நடுவே வரும் இடைவெளியை, ஓய்வு நேரத்தை என்ன செய்வதென்று எப்போதுமே தெரிந்ததில்லை. வெகுகாலம் நின்றிருந்த பெரிய மரத்தை வெட்டிய பிறகான வெற்றிடம் போல உறுத்தும்; துன்புறுத்தும். முன்பில்லாத அளவு இடம் கிடைத்திருக்கிறது, வெளிச்சம் கிடைக்கிறது என்றெல்லாம் மகிழாது.   கொஞ்சநேரம் நெற்றியைத் தேய்த்தபடி அமர்ந்திருந்தேன். நான் வேலைப் பளுவிற்குப் பழகியவள். ஒருவிதத்தில் அதற்கு அடிமைப்பட்டிருந்தேன். இப்போது சும்மா இருப்பதின் அழுத்தம் தாளாது ஒரு பதற்றம் உருவானது. அதைச் சரி செய்ய, அலுவலக அறையைவிட்டு உடனே எழுந்து, வெளியே போகவேண்டும் போலத் தோன்றியது. ஆணாக இருந்திருந்தாலோ இன்றைய  தலைமுறையாக இருந்திருந்தாலோ தம் அடிக்கப் போயிருப்பேனோ என்னவோ..  எனக்கு ஏதாவது ஒரு மரத்திடம் போக வேண்டும். குனிந்து அதனடியில் இருந்து எதையாவது பொறுக்க வேண்டும். செருப்பைக் கழற்றிவிட்டு வெறும் காலோடு இலைகள், சருகுகள், கற்கள் குத்தும்படி மரத்தடித் தரையில் நிற்கவோ நடக்கவோ வேண்டும். அதன் மரப்பட்டைகளில் அல்லது புதர்ச்செடிகளில் விரல் முட்டிகளை வலிக்கும்படியாகத் தேய்க்க வேண்டும். When I’m among the Trees-இல் மேரி ஆலிவர் சொல்வதுபோல, ’என்னைப்போல நீயும் ஒளி ஊடுருவவும் பிரதிபலிக்கவும் உருவானவள்தான்’ என்று மரங்கள் என்னிடம் சொல்ல வேண்டும். சிஸ்டமை லாக் செய்துவிட்டு, லிப்ட்டைத் தவிர்த்துப் படிகளின் வழியாக நான்கு மாடிகள் வளைந்து வளைந்து இறங்கி, ஆபீஸ் கேம்பஸின் வெளிப்பிரகாரத்திற்கு வந்தபோது வெயிலில் கண் கூசியது. கடைசியாக உடலை வெயில் சுட்டது எப்போது? தூரத்தில் கதலி மரம். இன்னும் பூக்கவில்லை. அருகே ஏழிலைப்பாலைகள். இப்போதுதான் மொட்டுவிடத் தொடங்கியிருக்கின்றன. இன்னும் சில வாரங்களில் தில்லியின் அத்தனை ஏழிலைப்பாலை மரங்களும் பூத்து, மொத்த தில்லியும் நறுமணத்தால் நிறைந்திருக்கும். மரத்தடியெங்கும் பூக்கள் உதிர்ந்து தரை மூடிக் கிடக்கும். பூக்கள் உதிர்ந்து கிடக்கிற காட்சியை நினைத்தபோது, நேற்று வீடு முழுக்க அதேபோல, ஆனால் பூக்களுக்குப் பதிலாக பூச்சிகள் நிறைந்து கிடந்த  காட்சி தோன்றியது. நேற்றிரவு நான் வழக்கம்போல இரவு உணவை முடித்துவிட்டு ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ பறக்க ஆரம்பித்தது. முதலில் ஒன்று இரண்டு என்று ஆரம்பித்தது; பிறகு மெதுமெதுவாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. தூசியா, சாம்பலா, ஈக்களா? ஏதோவொரு பூச்சியின் படையெடுப்பு என்று புரிந்துகொள்வதற்கு எனக்குச் சில நிமிடங்கள் பிடித்தது. அவை வெட்டுக்கிளிகளைப்போல இருந்தன. கடுகைவிடச் சற்றே பெரிய வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகள். அவை மட்டும் சற்றுப் பெரியதாக இருந்திருந்தால் பைபிளில் வருகிற வெட்டுக்கிளிகளின் படையெடுப்புபோல இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அதிகாலை வேலைக்குப் போய், இரவு வீடு திரும்புவள் என்பதால் ஜன்னலைத் திறப்பதே இல்லை. வாசற்கதவையும் வீடு திரும்பியதும் அடைத்துவிடுபவள். எதுவும் திறந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் நான் எழுந்துபோய் ஜன்னல்களையும் கதவையும் சரி பார்த்தேன். அனைத்தும் பூட்டியே இருந்தன. ‘விளக்கை அணைத்தால் பூச்சிகள் போய்விடும்’ என்று நினைத்து, விளக்கை அணைத்தேன். சிறிது நேரத்தில் அத்தனையும் தரையில் விழுந்து இறந்தன. படுக்கையை உதறி வீட்டைப் பெருக்கி அள்ளிக் குப்பையில் கொட்டிய பிறகும் படுக்கைக்குத் திரும்பியபோது நிறைய பூச்சிகள் காணக் கிடைத்தன. நான் களைப்பில் அப்படியே உறங்கிப்போயிருந்தேன். காலை எழுந்தபோது வீடெங்கும் பூச்சிகள் இறந்து கிடந்தன, கறுப்பும் வெள்ளையுமாக, எள்ளை வாரி இறைத்தாற்போல. அப்படியென்றால் விநோத நிகழ்வு இன்று காலை அல்ல,  நேற்றிரவே ஆரம்பித்திருக்கிறது. ஏழிலைப்பாலை மரத்தடியில் நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. இந்த மரத்தடிப் பகுதிக்கு அலுவலர்கள் யாரும் வருவதில்லை. சற்றுத் தொலைவில்  கொத்துக்கொத்தாக வெள்ளைப் பூக்களோடு அந்த மரம்.  அதன் ஒரு பெரிய கிளை ஒடிந்து, அதே நேரம் முற்றிலும் உடையாமல்  தொங்கிக்கொண்டிருந்தது. உடைத்தது, இங்கே குடும்பம் குடும்பமாக, நாள் முழுக்க  சேட்டை பண்ணிக்கொண்டுத் திரியும் குரங்குகளாகக்கூட இருக்கலாம். மரத்தில் பாதி இதய வடிவமும் ஒடிந்து கீழே தொங்கிக்கொண்டிருந்த கிளையில் பாதி இதய வடிவமுமாக, அக்கிளை ஒடிந்திருந்து. மரத்தை நோக்கி நடக்க நடக்க, அம்மரத்தில் ஒரு உடைந்த இதயம் சேர்வதும் பிரிவதுமாகக் காட்சிப்பிழையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. முடிந்தவரை சேர முயற்சித்து எல்லா முயற்சிகளும் தோல்வியுற்ற பிறகே உடைவதென்பது இதயத்தின் விதி போல; அது மரத்தாலானதென்றாலும்.   மரத்தருகே வந்திருந்தபோது அதனடியில் நிறைய மலர்கள் உதிர்ந்தன. எனக்குத் தாகூரின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. பெண் குழந்தை ஒன்று அதன் அம்மாவிடம் பேசுவதுபோல அமைந்தது. சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, உதிர்ந்து கிடந்த மலர்களை எல்லாம் பொறுக்கியெடுத்து உள்ளங்கைகளில் வைத்து, ஆழ முகர்ந்து பார்த்தேன். அதன் வாசம் சற்றே தீவிரமானது. ஒரே நேரத்தில் ஈர்க்கவும் விலக்கவும் செய்ய வைக்கும் தனித்துவமானது. சற்றுத் தொலைவில், கீழே புல் தரையில் ஒரு சிறிய வெட்டுக்கிளி. எனக்கு மீண்டும் வெட்டுக்கிளிகளைப் போன்ற அந்தப் பொடிப் பூச்சிகள் நினைவுக்கு வந்தன. அவற்றைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும்போலத் தோன்றியது. ஆபீஸ் வருகிற வழியில், சிறிய பூச்சிகள், பச்சைப் பூச்சிகள் என்று பல்வேறு விதமான வார்த்தைகளில் அவற்றை விவரித்து கூகுளில் தேடியபிறகு உத்தேசமாகக் கிடைத்திருந்த அதன் பெயரை, ‘கோகுல் பையா ஜிந்தாபாத்’ என்று என் வழக்கமான கோஷத்தை மனசுக்குள் ஒரு சிரிப்புடன் சொல்லிக்கொண்டு, குனிந்து போனில் கூகுளைத் திறந்து அந்த வார்த்தையை டைப் செய்யப் போனபோதுதான், சத்தமாக ஒரு ஆண் குரல் கேட்டது. “ஷ்யாமா போகா” நான் அதிர்ந்தேன். திடுக்கிட்டதில் என் கையிலிருந்து நழுவிக் கீழே விழப்போன போனை இறுகப் பற்றிக்கொண்டு திரும்பிப் பார்த்தேன். வழக்கமாக ஆண்கள் அணிகிற சட்டையின் காலர் போலில்லாமல், குர்தா ஜிப்பாவில் இருப்பது போன்ற வட்டமான காலர் வைத்த, சட்டையென்றோ குர்தா என்றோ சொல்ல முடியாத ஒரு கதர்ச் சட்டையில், தானும் அந்த வெட்டுக்கிளியைப் பார்த்தபடி ஒருவர். இல்லை; இவர் வேறு ஏதோ கூறியிருக்க வேண்டும். “ஷ்யாமா போகா”  மீண்டும் அருகில் இருந்தவர். விசித்திர நாளின் தொடர்ச்சியா இது? இது, நான் இப்போது தேட இருந்த வார்த்தை. இன்று காலைதான் முதன்முதலில் தெரிந்துகொண்ட வார்த்தை; நீங்கள் மனத்தில் நினைத்துக்கொண்டிருந்த, நீங்கள் ம‌ட்டுமே அறிந்த அல்லது நீங்கள் அப்போதுதான் எதிர்கொள்ள நேர்ந்த அபூர்வமான ஒரு  விஷயத்தை, நீங்கள் முன் பின் அறியாத ஒருவர் உங்களிடம் வந்து உரக்கச் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? Coincidence, Synchronicity, Carl Jung, Serendipity, Kate Beckinsale, John Cusack. என் மூளை malfunctioning பண்ணுகிற கம்ப்யூட்டர் போல, நிறைய வார்த்தைகளைச் சம்பந்தமில்லாமல் துப்பியது. இன்னும் சற்று நெருங்கி நின்றிருந்தாலும் இருவரின் உடைகளும் தொட்டுக்கொள்ளும்படியான அருகில் நின்றுகொண்டிருந்தவரிடம், ‘ஏன் ஷ்யாமா போகா என்று  சொன்னீர்கள்’ என்று கேட்கலாமா? நான் கேட்க நினைத்ததைப் புரிந்துகொண்டாற்போல, அவரே சொன்னார். “இந்த வெட்டுக்கிளியைப் போன்ற மிகச் சிறிய ஷ்யாமா போகா  இந்நேரம் வந்திருக்க வேண்டும்” ‘வந்துவிட்டதே’ சொல்ல நினைத்தேன்; சொல்லவில்லை. “உங்களுக்கு அந்தப் பூ பிடிக்குமா?” “சம்பா?” என் மனத்துக்குள் மீண்டும் தாகூரின் வரிகள். “நீ என்னை அறிந்துகொள்வாயா?” மீண்டும் அவரது உரத்த, ஆனால் சோர்வுற்ற குரல். ‘இவர் மீண்டும் என் மனத்தைப் பிரதிபலிக்கிறார். திஸ் இஸ் டூ மச்’ மனத்துக்குள் முணுமுணுத்தேன். “யெஸ்.. நீ என்னை அறிந்துகொள்வாயா?” அவரைப் பார்த்து முகம் மலரச் சிரித்தேன். அவர் சிரிக்கவில்லை. ஒரு சின்ன தடுமாற்றத்தோடு பார்வையை விலக்கி, மீண்டும் அந்த வெட்டுக்கிளியைப் பார்த்தார். “இது ஷ்யாமா போகாக்கள் வருகிற பருவம். அவை நவராத்திரியின் வருகையை அறிவிப்பவை” நான், திறந்திருந்த கூகுளில் நவராத்திரி 2023 என்று டைப் செய்தேன். நாளை நவராத்திரி. ஹா! அடுத்த வியப்பு. என் மனத்தின் இறுக்கங்கள் எல்லாம்  மெல்ல மெல்லத் தளர்ந்துகொண்டிருப்பதும் நான்  வேறொன்றாக மாறிக்கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். இன்னும் சிறிது நேரம் இவருடன் நின்றாலும் நான் பேச ஆரம்பித்துவிடுவேன். என் இயல்பிற்கு அது வினோதமாகப் பட்டது. நான் அவரிடமிருந்து சற்று விலகி மரத்தின் அந்தப்பக்கமாக நகர்ந்தேன் “போகா என்றால் பூச்சி. ஷ்யாமா என்றால் கறுப்பு. கறுப்பு, காளியின் வண்ணம். காளி மாதாவின் வருகையை அறிவிக்க வருபவை என்று நம் ஊரில் பெரியவர்கள் சொல்வார்களே.. உனக்குத் தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா?” ‘உனக்கு?! நம் ஊரில்?!’ எனக்குப் புரிந்துவிட்டது. அவர் என் அருகில் வந்து நின்றது, பழகிய நபர் போலப் பேசுவது, தாகூர், காளி என்றெல்லாம் சொல்வது , எல்லாவற்றுக்கும் இப்போது  விடை கிடைத்தாற்போல இருந்தது. இவர் என்னை வேறு யாரோ என்று நினைத்திருக்கிறார். இங்கே இப்படி அடிக்கடி நடக்கும். என்னை பெங்காலி என்றோ  மலையாளி என்றோ நினைத்துக்கொண்டு நிறைய பேர் பழக நெருங்குவது. “நீங்கள் என்னை வேறு யாரோவென நினைத்துக்கொண்டீர்கள் போல. நான் தமிழ். பெங்காலி இல்லை” “தமிழென்றால், பிறகு நீங்கள் அந்த மலரை சம்பா என்று ஏன் அழைத்தீர்கள்?” உண்மைதான். தமிழிலிலோ ஆங்கிலத்திலோ இல்லாமல், இதை சம்பா என்று ஏன் சொன்னேன்? எனக்கே தெரியவில்லை. ‘இன்று ஒரு வினோதமாக நாள். அதனால்தான்’ மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார் போலப் பட்டது. திரும்பி அவரை ஏறிட்டபோது, அவர் அவசர அவசரமாகப் பார்வையை அந்த முறிந்த மரக்கிளையின்புறம் திருப்பினார். இப்போதுதான் கவனித்தேன்.  கலைந்த

தபால்காரர் தெய்வமான கதை

தபால்காரர் தெய்வமான கதை

திரைப் பார்வை ‘அலை ஓசை’ நாவல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும், அதன் முதல் அத்தியாயத்தில் தபால் சாவடி என்று வரும். 1930களின் போஸ்ட் ஆபீசை, கல்கி அவ்விதம் எழுதியிருப்பார். ‘வெளியே சற்றுத் தூரத்தில் ‘ஜிங் ஜிங் ஜிக ஜிங்’ என்ற சத்தம் கேட்டது. வர வர அந்தச் சத்தம் தபாலாபீசை நெருங்கியது. ரன்னர் தங்கவேலு கையில் உள்ள ஈட்டிச் சிலம்பைக் குலுக்கிக்கொண்டு தபால் சாவடியின் வாசலுக்கு வந்து சேர்ந்தான்‘ என்று அந்த அத்தியாயத்தை முடித்திருப்பார் கல்கி. 1930களில் தபால்காரருக்கு ரன்னர் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது என்பதை அறிகிறோம். தபால்காரர்கள் வெள்ளையர் காலத்திலேயே கேந்திரமான பணியை வகித்தார்கள். நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த தபால்காரர்களுக்கும் தற்காலத்தில் வேலை பார்க்கும் தபால்காரர்களுக்கும் மிக முக்கியமான வேறுபாடே, முன்னவர்கள் நடந்தும் ஓடியுமே கடிதங்களைக் கொண்டு சேர்த்தார்கள் என்பதுதான். வனத்திலும் மலையிலும் அவர்களின் தடத்தை இந்தத் திரைப்படம் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது. ‘ஹர்காரா‘ படத்தைப் பார்த்ததும் ஹர்காரா என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தபால்காரர் என்று தெரிந்தது. நூறாண்டுக்கு முந்தைய தபால்காரரின் கதையைக் கேட்கிற இன்றைய தபால்காரர்.. எல்லா வேலைகளிலும் ரொம்ப முன்னால ஒருத்தர் இருந்திருப்பாரே.. இன்றைய மாறுதல்கள் எல்லாவற்றின் ஆரம்பமும் அவர் அல்லவா?! அவரின் கதை என்ன? அவர் ஒரு மலை மக்களின் தெய்வமாக மாறியது எப்படி? சென்ற காலத்தின் வரலாற்று விழுமியங்கள் நிகழ்காலத்தில் புதைக்கப்பட்டதால் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மண்டிக் கிடக்கும் சூழலில் வந்திருக்கும் சரியான கலைப் படைப்பு. ஆனால் தியேட்டரில் வெகுஜனங்களுடன் பார்த்து, திரைப்படம் முன்வைக்கும் விவாதங்களை ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் கவலை மேலிடுகிறது. பாலசந்தரின் ‘தண்ணீத் தண்ணீர்’ வெகுமக்கள் திரள் முன்பு எத்தனை விவாதங்களைத் தந்தது? ஜெயிலருக்கும் சந்திரமுகிகளுக்கும் கோடித் திரைகள் திறக்கட்டுமே.. எம் மக்களின் கதைகளைக் கேட்பதற்கு ஓரிரு திரைகளாவது ஒளிரக்கூடாதா? இப்படித்தான் ‘கக்கன்’ என்றொரு படம் வெளியாகி, தியேட்டர் இல்லாமல் பார்க்க முடியாது போனது. தமிழ்த் திரைஅரங்குகள் வெகுஜன விழுமியத்தில் இருந்த காலம் போய்விட்டது. சரி, படத்துக்கு வருவோம். மலையும் வனமும் சூழ்ந்திருக்கும் கிராமம் ஒன்றில், மலை மக்களைச் சமாளிக்க முடியாத தபால்காரரின் சிரமம் மிகுந்த பணிக்கிடையே, அவர் கேட்கும் பழைய தபால்காரரின் கதையை அவரோடு நாமும் கேட்கிறோம். ஒரு தபால்காரனின் துணிச்சலான முடிவு, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வர்த்தகச் சதியை முறியடிக்கிற கதையை, அதன் விளைவாக அவன் கழுவேற்றப்பட்டு தெய்வமாகிற சரித்திரத்தை நாமும் கேட்கிறோம். 19ஆம் நூற்றாண்டில் வெள்ளையன், தன்னை எதிர்ப்பவர்களைத் தூக்கில் ஏற்றுவான், பீரங்கி வாய்முன் சுட்டுப் பொசுக்குவான். கழு ஏற்றினானா என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் கதை விவாதத்தில் பயணித்திருக்கிற வாசிப்பை நேசிப்போம் குழுவின் கதிரவன் ரத்தினவேலிடம் பேசும்போது, அப்படியான செய்திகள் கிடைத்திருக்கின்றன என்கிறார். மலை சூழ்ந்த சூழலில் அதிகாரம் செலுத்துகிற வெள்ளைத் துரைகள் தனக்கு வாய்ப்பான முறையைப் பின்பற்றியிருக்கலாம் என்று சமாதானம் கொண்டேன். ஒரு மலைக் கிராமத்துக்குப் புதிதாக வந்திருக்கும் தபால்காரரை அந்த மலைக் கிராமத்து மக்கள் அணுகும் முறையில் பளிச்சென்று படம் தொடங்குகிறது. விடியும்போதே தபால்காரரை எழுப்பி, சேமித்த பணத்தைக் கேட்டு, அதிலும் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அதிகமாகப் பெற்றுச் செல்கிற பெண்ணும் அப்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசுகிற மக்களும்.. கொட்டாவி கலையாத முகத்துடன் பணத்தைக் கொடுக்கிற நம் தபால்கார் காளி என்ன செய்வார், பாவம்? தனக்கு மாற்றல் வேண்டி மேலதிகாரிகளுடன் பேசுகிறார். அதுவும் எப்படி? சிக்னல் இல்லாத மலைப் பிராந்தியத்தில் போனை வைத்துக்கொண்டு அலைந்தவாறு சிக்னல் கிடைக்கும்பொழுதில் சின்ன சந்தோஷத்தை முகத்தில் காட்டிப் பேச, மாறுதல் மறுக்கப்பட, உடனே எரிச்சலைக் காட்டுகிற அழகு.. மலைக் கிராமத்து தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டர், குமாஸ்தா, போஸ்ட்மேன் எல்லாம் ஒருவரே. நம் ஊர் ஓராசிரியர் பள்ளி போல, ஒரு நபர் போஸ்ட் ஆபிஸ்.தன் மாறுதலுக்காக மலை மக்களுக்கான அந்த ஒற்றைத் தபால் அலுவலகத்தையும் இல்லாமல் செய்ய, அந்த வெள்ளந்தி மக்களையே ஏமாற்றி அவர்களிடம் கைநாட்டு வாங்குகிறார் இந்தத் தபால்காரர் காளி. எத்தகைய மக்கள்? அரசுப் பணியில் இருக்கும் அந்தத் தபால்காரரை வெள்ளந்தியாக நம்புகிற மக்கள். வாழ்க்கையில் நேர்மறையான நம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்துகிற மலைவாசிகள். அந்த ஒற்றைக் காக்கிச் சட்டைக்காரரின் மேல் உரிமையையும் அன்பையும் காட்டுகிற கள்ளமில்லாத மக்கள். மாரியம்மாள் என்கிற, மலைமேல் இருக்கிற ஒரு முதிய பெண்ணுக்கு வந்திருக்கும் கடிதத்தைக் கொடுக்க, ‘நடை தூரத்தில்தான் இருக்கிறது’ என்று மலை மக்கள் வழிகாட்ட, போய்க்கொண்டே இருக்கும் மலைப் பாதையில் ஏறிக் களைத்துப்போய் மாரியம்மாளிடம் கடிதத்தைக் கொடுக்கிறார். மிக நீண்ட காலம் போராடிய அவளுக்கு, அரசு அவள் கோரிக்கையை ஏற்ற செய்தியைத் தெரிவிக்கிற கடிதம் அது. அது அவளுக்கான கோரிக்கை மட்டுமல்ல; அந்த மலை மீது வாழ்கிற முதியவர்கள் அனைவருக்குமான கோரிக்கை. அது என்ன? அது சொல்லும் அரசியல் என்ன? முதியோர் பென்சனைத் தபால்காரர் கொண்டு தந்து, வாங்கிக்கொண்டிருந்த மலைமக்களை இனி வங்கிக் கணக்கு மூலமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று முகத்தில் அறைந்துவிட்டது அரசு. மாரியம்மாள் தொடர்ந்து மனுப் போட்டு, மீண்டும் தபால் அலுவலகம் மூலம் தபால்காரரே கொண்டு தருவார் என்று தனது கோரிக்கையில் வென்றிருக்கிற செய்தியைச் சுமந்து வந்திருக்கிறார் நம் காளி. அதாவது, மலை மக்கள் சேமிப்பைத் தபால் அலுவலகம் இல்லாமல் வங்கிக்கு மாற்றலாம் என்று மலை மக்களே கேட்பதாகப் பொய் மனு எழுதி, மக்களிடம் கைநாட்டு வாங்கி இருக்கிற காளி. மலை மீது ஏறிவரும் பாதையில், ஏகாதிபத்திய வெள்ளையனால் கழுவிலேற்றப்பட்டு தெய்வமான பழைய ‘ஹர்காரா’ என்ற ரன்னர் மாதேஸ்வரனின் கதையைச் சொல்கிறார் அந்த மலைவாழ் பெரியவர் ஒருவர். செஞ்சட்டை அணிந்திருக்கிறார். அவர் காளியைக் கேட்கும் கேள்விகள், திரையரங்கில் பார்த்தால் கைத்தட்டல்களை அள்ளிவிடும் தன்மையுடன் மிகக் கூர்மையாக நம்மைத் துளைக்கின்றன. மாதேஸ்வரனின் கதை காவியத் தன்மையோடு திகழ்கிறது. மாதேஸ்வரனாக நடித்திருக்கும் ராம் அருண் காஸ்ட்ரோ அந்தப் பாத்திரத்தின் கூர்மையைக் கொண்டுவர இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அவரே படத்தின் இயக்குநரும் அவரே. இயக்குநராகவே அதிகம் ஸ்கோர் செய்கிறார்.தபால்காரர் காளி பாத்திரத்தில் வருபவர் பெயரும் காளி வெங்கட்தானாம். என்ன அருமையான, இயல்பான நடிப்பு! மலைக் கிராமப் பணியின் மீதான எரிச்சல், பொய் மனு வேலையில் காட்டும் கள்ளத்தனம், மாரியம்மாளைப் பார்த்துவிட்டு வரும்போது தன்னில் எழும் குற்றவுணர்வு, அத்தனையிலும் சிறந்த நடிப்பைக் காட்டியிருக்கிறார். பட்டப் படிப்பு படித்திருந்தாலும் கிராம வாழ்வை மெச்சி வாழும் அந்தக் கிராமத்தின் இளைஞன், பொய் மனுவைப் படிக்காமலே கையெழுத்துப் போடும்போது தங்கள் ஊர் தபால்காரர் மீது காட்டும் நம்பிக்கை மனதை அள்ளிவிடுகிறது. விடிந்தும் விடியாத காலையில் சேமிப்புக் கணக்கில் இல்லாத பணத்தை வாங்கி வந்து, அதைக் கறாராகத் திருப்பிக் கொடுத்ததுடன், தனது குட்டியாடை நன்றியுடன் தபால்காரரின் பெயரான காளி என்று பெயரிட்டு அழைக்கும் நன்றியறிதலில் கரைந்துபோகிறோம். நவீன யுகத்துத் தபால்காரர் ஒரு சைக்கிளாவது வைத்துக்கொண்டிருக்கலாமே என்பது மட்டும் பெரிதாக உறுத்துதியது. தலைப்பும் மக்களை ஈர்க்கும் விதத்தில் இருந்திருக்கலாம். படத்தின் தொழில்நுட்பக் குறைகளைக் கலைத்துறையில் தேர்ந்தவர்கள் சொல்லக்கூடும். முதல் முயற்சியிலேயே நல்லதொரு படத்தைத் தந்திருக்கும் இந்த வளர்ந்துவரும் கலைஞர்களைப் பாராட்ட மட்டுமே தோன்றுகிறது. பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்கள் மனம் நிறைக்கும் படங்களில் ஒன்றாகக் கண்டுகொள்வீர்கள். ஹர்காரா, தெய்வமானவர்களின் கதை மட்டுமல்ல; முதல் தலைமுறை அஞ்சல்காரர்களின் வரலாறும்தான்.

மக்கள் கவிஞர்

மக்கள் கவிஞர்

29 ஆண்டுகளே வாழ்ந்த பட்டுக்கோட்டையார் தனது 19 வயது வரை இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி என 17 வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார். இறுதியாக, கவிஞராக உருவாகியிருக்கிறார். இவரது பாடல்களில் வழி வழி மரபு, அதாவது நாடோடிப் பரம்பரை மற்றும் நவீன முறை என இரு கூறுகளை இணைத்த பாட்டுத் திறமையைக் காணமுடியும். இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு ஒன்றை இப்பகுதியில் நினைவுகூர்வதன் மூலம் எப்படிப்பட்ட மனிதர் இவர் என்பதை அறியலாம். சென்னை இராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில், தனது மனைவி கௌரவம்பாளுடன் தனிக்குடித்தனம் செய்து வருகிறார் கல்யாணசுந்தரம். வீட்டின் கீழ்த்தளத்தில் எப்போதும் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், பாடலுக்கான சூழ்நிலையைக் கூறும் கதாசிரியர்கள் எனக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். ஜெமினி நிறுவனம் ஏராளமாகப் பணத்தை வசூலித்துக்கொண்டிருந்த பைகாம் என்ற இந்திப்படத்தைத் தமிழில் மறுதயாரிப்பு செய்ய உரிமை பெற்றுச் செயலில் இறங்கியது. தொழிலாளர் போராட்டத்தைப் பற்றிய திரைக்கதை அது. தமிழில் இரும்புத்திரை என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்குப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் பாடல்கள் எழுதக் கேட்டுக்கொண்டது நிறுவனம். ‘ஜெமினி நிறுவனத்தில், எப்போதும் பிரமாதமாகப் பாட்டெழுதும் கொத்தமங்கலம் சுப்பு என்ற பெருங்கவிஞர் இருக்கும்போது நான் எழுதுவது நியாயமா? அப்படியெல்லாம் என்னால் எழுத இயலாது’ என்று மறுத்தார் கல்யாணசுந்தரம். பாகப்பிரிவினை என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியை சரவணா பிக்சர்ஸ் ஜி.என்.வேலுமணி பட்டுக்கோட்டையிடம் விளக்கிக்கொண்டிருந்தபோது அங்கே வந்தார் கொத்தமங்கலம் சுப்பு. வாசலுக்கே ஓடோடி வந்து வணக்கம் கூறி கொத்தமங்கலம் சுப்புவை வரவேற்றார் பட்டுக்கோட்டை. வரவேற்ற அவரை ஜெமினி நிறுவனத்திற்குக் காரில் அழைத்துச் செல்ல விரும்பிய சுப்புவின் வார்த்தைகளைப் பட்டுக்கோட்டையாரால் மறுதலிக்க இயலாமல் போயிற்று. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், கல்யாணசுந்தரத்திடம் ‘கொத்தமங்கலம் சுப்பு எங்கள் நிறுவனத்தின் ஆஸ்தான வித்வான். அவருக்கு இங்கே மாதச் சம்பளம். நீங்கள் பாட்டு எழுதுவதால் இவருக்கு நஷ்டம் வராது. தொழிலாளர் பிரச்சினை தொடர்பான படம் என்பதால் அது குறித்த பாடல்களை நீங்கள் எழுதுங்கள். கொத்தமங்கலம் சுப்பு பொதுவான பாடல்களை எழுதட்டும். சரிதானே?’ என்றார். சம்மதம் தெரிவித்தார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார். இதுதான் பட்டுக்கோட்டையாரின் பெருந்தன்மை. ஒருமுறை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தாம் எழுதிய ‘நண்டு செய்த தொண்டு’ என்ற கவிதையை எடுத்துக்கொண்டு ஜனசக்தி அலுவலகத்திற்குச் சென்று, ‘நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். அப்படியே ஒருவரிகூட விடாமல் வெளியிட வேண்டும்’ என்ற வேண்டுகோளுடன் கவிதையைத் தந்தார். இதழாசிரியர் கவிதையைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘தலைப்பும் கவிதையும் தரமாக இருக்கிறது’ என்று கூறிவிட்டு, ‘உங்கள் பெயர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று கவிதையைவிட நீளமாக இருக்கிறது. கம்பன், வள்ளுவன், இளங்கோ என்று எவ்வளவு சுருக்கமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?’ என்றார். ‘அவர்களெல்லாம் மிகப்பெரிய கவிஞர்கள். ஆகவே பெயரைச் சிறிதாக வைத்திருக்கிறார்கள். ஆனால் நானோ மிகச்சிறிய கவிஞன். எனது பெயராவது பெரிதாக இருக்கட்டும்’ என்று பட்டுக்கோட்டை சொன்னதும் ஆசிரியர் அந்தப் பதிலை வெகுவாக ரசித்துப் பாராட்டினார். திரை உலகிற்கு வரும் முன்பு கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிக்கையிலும் அவரது உதவியாளராகச் சிறிது காலமும் பணியாற்றினார்.அ வரது திருமணம் 11.09.1957இல் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில்தான் நடந்தது. பாடலோ கடிதமோ, தான் எழுதுவது எதுவாக இருந்தாலும் முதலில் ‘பாரதிதாசன் வாழ்க!’ என்று எழுதிவிட்டுத்தான் எழுதத் தொடங்குவார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அந்த அளவிற்குப் புரட்சிக் கவிஞரிடம் மக்கள் கவிஞருக்கு மரியாதை. பாண்டிச்சேரியில் வேளாளர் வீதியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, புதுவை விடுதலை வீரரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வ. சுப்பையாவைச் சந்தித்து, பட்டுக்கோட்டை அழகிரியின் அறிமுகக் கடிதத்தை கொடுத்தார். அந்தக் கடிதத்தில், ‘இக்கடிதம் கொண்டுவரும் பையனின் பெயர் கல்யாணசுந்தரம். நன்றாகக் கவிதை எழுதக்கூடியவன். கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு உடையவன். பாரதிதாசனிடம் உதவியாளனாகச் சேர்த்து விடுங்கள்’ என்று பட்டுக்கோட்டை அழகிரி வ.சுப்பையாவிற்கு எழுதியிருந்தார். அணைக்கட்டு டேவிட் கடிதம், அழகிரியின் கடிதம், அண்ணன் கணபதி சுந்தரம் வரைந்த ஓவியம் மற்றும் 12 மாம்பழங்களுடன் வ. சுப்பையா அனுப்பிவைத்த கட்சித் தொண்டரோடு பாரதிதாசனைப் பார்த்தார். பகல் முழுவதும் பாரதிதாசன் இல்லத்தில் பணி; இரவில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் படுக்கை என வாழ்ந்தார். ஒருநாள் தனது மாணவர்களை பாரதிதாசன் உற்சாகத்தோடு அழைத்து, ‘ஏய் ஆம்பிளைப் பசங்களா! நீங்களும்தான் கவிதை எழுதுகிறீர்கள்! இதைப் பாருங்கள். அகல்யா என்னும் பெண்ணொருத்தி பிரமாதமாகப் பாட்டு எழுதியிருக்கா பாருங்க!’ என்று அஞ்சலில் வந்த கவிதையை வாசித்துக் காட்டினார். இந்த அகல்யா யார் என்பது பட்டுக்கோட்டைக்கு மட்டுமே தெரியும். அ. கல்யாணசுந்தரம் என்பதில், புள்ளியையும் கடைசி ஐந்து எழுத்துக்களையும் நீக்கிவிட்டதில் ‘அகல்யா’ வந்திருந்தாள். 1954 ஆகஸ்ட் முதல் தேதி, திண்டுக்கல் காந்தி மைதானத்தில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் மக்கள் நாடக மன்றத்தின் ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் அரங்கேறியது. இந்த நாடகத்தில் இடம்பெற்ற பட்டுக்கோட்டையின் பாடல் ஒன்று, அவரது ஆழ்மனத்தில் பதிந்திருந்த நெடுநாள் கவலையை எதிரொலித்தது. அப்பாடல் ஆணும் பெண்ணும் பாடுவது போன்று இருந்தது. பெண்: தேனாறு பாயுது! செங்கதிரும் சாயுது!ஆனாலும் மக்கள் வயிறு காயுது!ஆண்: மானே இந்நாட்டிலே வகையான மாறுதல் வந்தாலன்றி ஏது சீருகள்?இறுதியாக இருவரும்: உழவனும் ஓயாத உழைப்பும்போல நாமே ஒன்றுபட்டு வாழ்க்கையிலே என்றும் இருப்போம்! என்பதாக இருந்தது அப்பாடல். நாடகத்திற்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, இந்தப் பாடலையும் நாடகத்தில் இடம் பெற்றிருந்த இதர பாடல்களையும் வெகுவாகப் பாராட்டிவிட்டு, பட்டுக்கோட்டையாரை ‘மக்கள் கவிஞர்’ என்று மகுடம் சூட்டி அழைத்தார். அன்றிலிருந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ‘மக்கள் கவிஞர்’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். சென்னையில் வாடகைக்கு வீடு கிடைக்காத காரணத்தால், அவரது மனைவி கெளரவாம்பாளை அவரது சொந்த ஊரான செங்கப்படுத்தான் காடு என்ற கிராமத்தில் தனது சொந்த வீட்டில் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் இருக்குமாறு செய்திருந்த கல்யாணசுந்தரம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது ஊருக்குச் செல்வார். அவரது மனைவியை சின்ன பொண்ணு என்றும் செல்லப் பிள்ளை என்றும் அழைப்பார். தனிமையில் மனைவியைப் பார்க்கும்போது, ‘துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே செல்லுது?’ என்று குறும்புத்தனமாகப் பாடுவார். அது ஒரு புகழ்பெற்ற பாடலின் பல்லவியாக மக்கள் மனத்தில் நிலைத்தது. கல்யாணப் பரிசு படத்தில், வளைகாப்புக் காட்சிக்கு ஒரு பாடல் எழுதும் சூழல். பட்டுக்கோட்டை அவரது மனைவியையும் மனைவியின் அக்காவையும் எழுதச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். கெளரவாம்பாளின் அக்கா அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டார். ஆனால் கௌரவாம்பாளால் அவ்வாறு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் வந்து திட்டுவாரே என்ற பயத்தில், ‘அக்காவுக்கு வளைகாப்பு, அத்தானுக்கு இடுப்பு வலி’ என்று இருவரிகளில் பல்லவி எழுதினாராம். அதைப் பார்த்துவிட்டு, ‘பரவாயில்லையே’ என்று பாராட்டினாராம் கவிஞர். பிறகு, ‘அக்காவுக்கு வளைகாப்பு, அத்தான் முகத்திலே புன் சிரிப்பு’ என்று மாற்றி எழுதிய பல்லவியோடு அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. தோழர் ஐ. மாயாண்டி பாரதி, சோவியத் யூனியன் சந்திரனுக்கு (ஆளில்லாத) ராக்கெட் விட்டதைப் பற்றிப் பாடல் எழுதக் கேட்டபோது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காகிதத்தை ஜன்னலில் வைத்து, நின்றுகொண்டே எழுதிய பாடல், ‘சந்திரனைத் தொட்டதின்று மனித சக்திசரித்திரத்தை மாற்றியது மனித சக்திமந்திரமா வெறுங்கதையா இல்லை இல்லைமனித சக்தி, சோவியத்தின் மனித சக்தி!’ என்று தொடங்கியது. காதல் பாடல்களை மிகவும் சுவையாக எழுதியுள்ளார் பட்டுக்கோட்டையார். காதலியைக் காணும் காதலன், காதலியை,‘ஆடை கட்டி வந்த நிலவோ? கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?’ என்று புகழ்கிறான். ஆடை கட்டி வந்த நிலவு என்று கவிஞர்கள் பலர் பாடியுள்ளனர். ஆனால் பட்டுக்கோட்டையோ, ‘காதலியானவள், காதலன் கண்ணிலே மேடை கட்டி ஆடுகின்ற எழில்’ என்பதாகக் கற்பனையின் உச்சிக்கே சென்று விடுகிறார். மக்களின் தேவைக்கேற்ற புதுமையான கருத்தாட்சி, மக்கள் மொழியில் எழுதியுள்ள சொல்லாட்சியோடு, படிப்போர் – கேட்போர் மனத்தில் தைத்து நிற்கும் பாடல் ஆகியவற்றில் முத்திரை பதித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இன்று அவரது நினைவு தினம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 20

திருப்பூர் எனும் திருப்புமுனை – 20

தொழிலாளர் மேம்பாடும் திறன் மேம்பாடும் கடந்த அத்தியாயத்தில் திருப்பூரின் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பார்த்தோம். இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பார்ப்போம். சிறு, குறு, நடுத்தரத் தொழில் என்றாலும் உள்நாட்டு உற்பத்தி, அதில் உள்ளாடைகள் உற்பத்தி மற்றும் இதர ஆடைகள் உற்பத்தி, ஏற்றுமதிக்கான உற்பத்தி என, பல்வேறு வகைகளில் இங்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வகை உற்பத்தியிலும் இயந்திரங்கள் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும் திறன் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் மாறுபடும் நிலை உள்ளது. உள்ளாடைகள் உற்பத்தியைப் பொறுத்தமட்டில் ஒரே சீரான வேலைவாய்ப்பும் ஒரே மாதிரியான ஆடைகளை உற்பத்தி செய்யும் முறையும் உள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி உற்பத்தியைப் பொறுத்த மட்டில் குறிப்பிட்ட வகை ஆடைகளை மட்டுமே தயாரிக்கும் நிறுவனங்கள் சீரான வாய்ப்புகளையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உற்பத்தி முறையையும் கையாள்வது நடைமுறையில் உள்ளது. மேலே குறிப்பிட்ட உற்பத்தி முறைகளைக கடந்து ஒவ்வொரு ஆர்டர்களும் வெவ்வேறு வகைகளில், வடிவங்களில் தயாரிக்க வேண்டிய சூழலைப் பல நிறுவனங்கள் சந்திக்கின்றன. அந்த நிலை தொழிலாளர்களின் திறனுக்கான சோதனையாகவும் அமைகிறது. அது மட்டுமல்ல. ஒரேவிதமான வேலையைச் செய்வது தொழிலாளர்களுக்கு ஒருவிதமான சலிப்புத் தன்மையை உருவாக்குவதால் ஒரே தொழிற்சாலையில் நீடிப்பது கேள்விக்குறியாகிறது. இதனால் உற்பத்தித் தடை, தரத்தில் குறை, கால தாமதம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன. ஒருபுறம் தொழில் வளர்ச்சியில் கவனத்தைச் செலுத்திய அளவுக்கு இதைப்போன்ற நுண் விடயங்களை நாம் தவறவிட்டதாகவே கருதுகிறேன். சிறிதும் பெரியதுமாக, அனைத்து உற்பத்தி நிலையிலும் ஏறத்தாழ 20000 தொழில் நிறுவனங்கள் உள்ளன. சுமார் ஆறு லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் இங்கு பணியாற்றினாலும் தொழிலாளர் சேம நல நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதித் திட்டங்களின் கீழ் இரண்டு லட்சத்திற்குக் குறைவானவர்களே பதிவு செய்துள்ளனர். இதுகுறித்துத் தொழிலாளர்கள் தரப்பில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது ஒருபுறம். மற்றொரு புறம், தங்களின் சிறிய பங்களிப்பைச் செலுத்துவதில் உள்ள மனத்தடையால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணிக்காலச் சலுகைகளை இழந்து வருகின்றனர். இந்த நிலையை மாற்ற அரசு, தொழில் முனைவோர் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இன்னும் இரு அவலங்களையும் இங்கே குறிப்பிட்ட விரும்புகிறேன். நாள் சம்பளம் என்பதைக் கடந்து பீஸ் ரேட், அதாவது எவ்வளவு ஆடைகளைத் தைக்கின்றார்களோ அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆடைக்குமான  கட்டணத்தை நிர்ணயம் செய்து, வார இறுதியில் தைத்த ஆடைகளுக்கு ஏற்ப சம்பளத்தைப் பெறுகின்றனர். இது குறுகிய காலத்தில் பெரும் பயனை அளித்தாலும் பல்வேறு உரிமைகள் மற்றும் சலுகைகளை இழப்பதோடு, தரம் மற்றும் தொடர்ந்து தொழிற்சாலைகளை மாற்றிச் செல்லும் போக்கு என ஆரோக்கியமற்ற சூழலுக்கு வழிவகுத்துள்ளது. பல சிறிய உற்பத்தி நிறுவனங்கள் இந்தப் போக்கினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி, தொழிலை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு அவலம், உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படும் தாமதங்களைச் சரி செய்ய, இறுதியாக ஆடைகள் தயாரிப்பை வேகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவர். இந்த அழுத்தம் மொத்தமும் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படுகிறது. தங்களது நிறுவனம் சிரமப்படக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தொழிலாளர்களும் கடுமையான உழைப்பினைக் கொடுத்து நிறுவனத்தின் சிரமத்தைக் குறைக்க உதவுவர். ஒருகட்டத்தில் இது ஒரு கலாச்சாரமாகவே மாறி, தொழிலாளர்கள் மத்தியில் ஒருவிதமான சலிப்புத் தன்மையை ஏற்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். எப்பொழுதுமே திருப்பூரைப் பொறுத்தமட்டில், ஆட்கள் பற்றாக்குறை என்பது நிரந்தரம். இதைப் பயன்படுத்தி அடிக்கடி தொழிலாளர்களும் தொழிற்சாலைகளை மாற்றும் போக்கும் ஆங்கங்கே நடக்கவே செய்கிறது. இது உற்பத்தி, தரம் மற்றும் கால தாமதத்தை ஏற்படுத்தி, தொழில் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் சூழலும் இருக்கவே செய்கிறது. இவற்றையெல்லாம் கள ஆய்வுக்கு உட்படுத்தி, தொழில் முனைவோர் தரப்பும் தொழிலாளர் தரப்பும் கலந்துரையாடி, நல்லதொரு வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவேண்டிய முக்கியத் தேவை உள்ளது. திறன் மேம்பாடு மற்றும் தொடர் பயிற்சிகள், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை சமீப வருடங்களில் ஏற்பட்டு, அதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. மத்திய மாநில அரசுகள் திறன் மற்றும் தர மேம்பாடு குறித்து மிகுந்த அக்கறை கொண்டு, அதற்கான திட்டங்களை வகுத்து, தொழிலுக்கு உதவுகின்றன. அதுமட்டுமல்ல; நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில், திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. அதனைச் சரியான முறையில் தொழில்துறையினர் பயன்படுத்தி, தங்களுக்கான தொழிலாளர்களை உருவாக்கிக் கொள்கின்றனரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. திருப்பூரைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கஜா புயல் சமயத்தில மீட்பு நடவடிக்கைக்காக சில நாட்கள் டெல்டா பகுதியில் பயணம் செய்தேன். அங்கே ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றித் தவிப்பதைக் காண நேர்ந்தது. குறிப்பாக, மீனவக் குடும்பத்துப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறவே இல்லை என்றே சொல்லலாம். அவர்களுக்கான வேலைவாய்ப்பினை அளிக்கும் வல்லமை ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிலுக்கு உள்ளது. ஏனெனில், அவர்களைப் புலம் பெயரச் செய்ய இயலாது. ஆனால், உற்பத்தித் தொழிற்சாலைகளை அங்கே அமைக்கலாம். நாளது தேதியில் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சிறந்த சாலை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதைப் பயன்படுத்தித் தொழிலாளர்களை தொழில் அமைந்துள்ள திருப்பூருக்கு வரவழைப்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் நிறைந்த பகுதிக்குத் தொழிற்சாலைகளைக் கொண்டு செல்வதன்மூலம் தொழிலை வளர்ப்பதோடு வேலைவாய்ப்புகளைப் பரவலாக மாநிலம் முழுவதும் ஏற்படுத்த இயலும். கொங்குப் பகுதியைப் பொறுத்தமட்டில், அதிக அளவு தொழில் வளர்ச்சியைக் கொண்ட மாவட்டங்கள் உள்ள பகுதி இது. இந்தியாவின் முன்னணி மாநிலமாக இருந்தும் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசில் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தாலும் மாவட்டங்களுக்கிடையே ரயில் போக்குவரத்தை மேம்படுத்தாமல் விட்டுவிட்டனர். ரயில் போக்குவரத்தை அதிகரித்தால் நிச்சயமாக இன்னும் பெருமளவு வேலைவாய்ப்பிற்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். ஆயத்த ஆடைத் துறையைப் பொறுத்தமட்டில் எந்த அளவு இயந்திரங்கள் அவசியமோ அந்த அளவுக்கு தொழிலாளர்களும் மிக அவசியம். அந்தவகையில் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல, உற்பத்திச் செலவில் பெரும்பகுதியைத் தொழிலார்களின் திறன் குறைவு காரணமாகச் செலவிடுவதைக் கருத்தில்கொண்டு, அதை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்லும். இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு குடும்பத்தில் இருவர் ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணியாற்றினால், குறைந்தது மாதம் இருபதாயிரத்திற்கும், கூடுதலாகப் பொருளீட்டலாம். முன்புபோல் இல்லாமல் தற்காலத்தில் தொழிற்சாலைகள் சர்வதேசத் தரத்தில் அமையப்பெற்றுள்ளன. சரியான அணுகுமுறையை மேற்கொள்வதான் மூலம் நிச்சயம் ஏரளமான தொழிலாளர்களை இந்தத் தொழிலுக்கு ஈர்க்க முடியும். மீண்டும் வரும் திங்களன்று வேறு சில தரவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன்.  

புரட்சியின் தரிசனம்

புரட்சியின் தரிசனம்

நூல் அறிமுகம் நீலகண்ட பிரம்மச்சாரி – ஒரு புரட்சிக்காரரின் வாழ்க்கை வரலாறு எனும் நாடக நூலினை வாசிக்கும் பேறு பெற்றேன். இரா.கோமதி சங்கர் அவர்கள் ஆக்கி அளித்துள்ள இந்த நாடகம், மனத்திரையில் அரங்கேறிய ஒவ்வொரு தருணமும் வியப்பும் பெருமிதமும் சிலிர்ப்பும் மேலோங்கி எழுந்ததை உணர்ந்தேன். நீலகண்ட பிரம்மச்சாரி 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி, சீர்காழியை அடுத்த எருக்கூர் எனும் கிராமத்தில் பிறந்து, முதல் 44 ஆண்டுகள் புரட்சிக்காரராகவும், அடுத்த 44 ஆண்டுகள் தவ வாழ்க்கையும் வாழ்ந்து 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். புரட்சிக்காரராய் அவர் வாழ்ந்த வாழ்வையும் அதிகம் அறியப்படாத அவருடைய தவ வாழ்க்கையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதாய் நாடகம் அமைந்துள்ளது. மேடை நாடகமாக அரங்குகளில் நடிக்கத்தக்க வகையில் விறுவிறுப்புடன், பல புதிர்களுக்கு விடையளிக்கும் தகவல் செறிவுடன், உணர்ச்சி பொங்கும் காட்சி அமைப்புகளுடன் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. கதை நாயகரின் வரலாற்றினை இயற்றமிழில் இல்லாமல், நாடகத் தமிழில் ஆக்கி அளித்திடல் வேண்டும் என்ற நூலாசிரியரின் உத்தி பாராட்டத்தக்கது. சங்கர கிருஷ்ணன் என்ற பத்திரிகையாளர் சென்னையிலிருந்து வந்து மைசூர் நந்தி மலை அடிவாரத்தில் ‘சத்குரு ஒம்கார் ஆசிரமம்’ என்ற பெயரில் ஆசிரமம் அமைத்துத் தவ வாழ்வு மேற்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் நீலகண்ட பிரம்மச்சாரி ஸ்வாமியைச் சந்தித்து அவரை நேர்காணல் செய்து நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாக நாடகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பாரதியார் வீட்டில் நாடகத்தின் முதற்காட்சி தொடங்குகிறது. ஆஷ் கொலை வழக்கின் முதற் குற்றவாளியாகக் கூண்டிலேற்றப்பட்டு, வழக்கின் முடிவில் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, தண்டனை முடித்து வந்த நீலகண்டர் பழைய நட்பின் தொடர்ச்சியாக பாரதியார் வீட்டிற்கு வருகைபுரியும் காட்சியுடன் நாடகம் தொடங்குகிறது. அடுத்து வரும் இருபத்து மூன்று காட்சிகளிலும் வீர சுதந்திரம் வேண்டி எழுச்சித் திட்டங்கள் தீட்டி, புரட்சி இயக்கங்களைக் கட்டமைத்து, பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய வ.உ.சி., நீலகண்டர், வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, திருவனந்தபுரம் பத்மநாப அய்யங்கார், ஓட்டப்பிடாரம் மாடசாமி, மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, வ.ரா., சிங்கார வேலர் என, அத்தனை தேச பக்தச் செம்மல்களையும் நாம் சந்திக்கிறோம். மட்டுமின்றி, பின்னாளில் நந்தி மலை அடிவாரத்தில் அமைந்திருந்த ஓம்கார் ஆஸ்ரமத்துக்கு வருகை புரிந்த காந்தி அடிகளையும், அவருடைய சீடர் ஜே.ஸி. குமரப்பாவினையும் சந்திக்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சி, தேச பக்தர்களின் மனப் போராட்டங்கள், சிறைக் கொடுமைகள், போராட்டத்தின் விளைவாகத் தியாகிகள் சந்தித்த வறுமை நிறைந்த குடும்பச் சூழல், தலைமறைவு வாழ்க்கை எனப் பல நிலைகளையும் நாடகம் உணர்த்தி நிற்கிறது. நாடகம் முழுவதும் உரையாடல்கள் நறுக்குத் தெரித்தாற்போலும் கருத்துவளம் மிக்கவையாவும் இருந்தாலும் எடுத்துக்காட்டாகச் சில காட்சிகள்: காட்சி 2இல், ஓம்கார் சுவாமியாகிய நீலகண்டர் கூற்றான, ‘நாங்க ஆரம்பிச்சு வச்சோம்; காந்தி வந்து முடிச்சு வச்சார். எங்க கோளாறு எங்களுக்குத் தெரியல. பெருசா யோசிச்சோம். நாங்க செஞ்சுட்டா ஜனங்க எங்க பின்னால வந்துடுவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா ஜனங்களைத் தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலை எல்லாம் செஞ்சார்.’ காட்சி 6இல், வ.உ.சி. நீலகண்டர் உரையாடலில் வ.உ.சி.யின் கூற்றாக வரும், ‘தேச பக்தின்னா என்ன? மக்களோட பிரச்சினையைப் பேசறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமனே தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனக்கிறீரா நீலகண்டர்? இந்தப் பாடம் யாரு சொன்னது?’ காட்சி 3இல், பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமியான நீலகண்டரிடம், ‘அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல இது (சந்நியாச வாழ்க்கை) தப்பித்தலோ என்று தோன்றுகிறது சுவாமி’ என்று உசுப்பியதும் ஓம்கார் சொல்லும் பதிலில், புரட்சிக்காரர் தொண்டுகள் ஆற்றும் தவ வாழ்க்கைக்கு மாறி வந்ததின் சூட்சுமம் வெளிப்படுகிறது. காட்சி 19இல், ஓம்கார் சுவாமிகள் பத்திரிகையாளர் சங்கரகிருஷ்ணன் உரையாடலில் ஓம்கார் சுவாமிகளின் கூற்றாக வரும், ‘தேசத் தொண்டு என்பது தேச மக்களுக்காக நாம் செய்வதுதான் என்பதை எனக்குப் போதித்தவர்கள் சிதம்பரம் பிள்ளையும் சிங்கார வேலரும்தான்’ என்ற வரிகள் புரட்சிக்காரர் தொண்டுகள் புரியும் தவ வாழ்க்கைக்குத் திரும்பிய புதிரை அவிழ்ப்பதாய் அமைகின்றன. மேலும் அதே காட்சியில், 1922 ஜூலையில் கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுயராஜ்யம்’ தீர்மானத்தைக் கொண்டு வந்தது சிங்கார வேலர்தான் என்பதை ஓம்கார் சுவாமிகள் தெரிவிப்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை. காட்சி 18இல், 1921ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் சிங்கார வேலர் இல்லத்தில், அவருக்கும் நீலகண்டருக்கும் இடையே நடக்கும் உரையாடலில், நீலகண்டரின் கூற்றான, ‘தேச விடுதலை என்பது தொழிலாளர்கள், விவசாயிகள், கற்றவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள், எல்லாருடைய ஐக்கியமான போராட்டத்தில் உருவாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வருகிறேன்‘ என்ற வரிகள் சிங்கார வேலருடன் இணைந்து பணியாற்றியதில் பெற்ற தெளிவு என்று நீலகண்டர் வெளியிடுவதும் அதே காட்சியில் சிங்கார வேலர், காந்தி அடிகள் சுதந்திரப் போராட்டத்தில் கொண்டு வந்த மாற்றத்தைக் கூறி, ‘இந்த நாட்டில் இப்போது தேவைப்படும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை, சாதி பேதம் கடந்த மக்களின் ஐக்கியம், தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பது என்று பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்கிற சக்தியும் அவரிடம்தான் (காந்திஅடிகளிடம்) இருப்பதாகக் காங்கிரஸில் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது’  என்ற வரிகள் நமது மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய கொள்கைகளின் தொன்மத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. நூலாசிரியர் நீலகண்டரின் வரலாற்றை நாடகமாகக் கருக்கொண்டு, வளமான உரையாடல்களுடன், மேடை நாடகமாக அரங்கேற்ற வசதியாக செட் சிக்கனத்தை மனதில் கொண்டு, ஒலி-ஒளி தொடர்பான காட்சி அமைப்புக் குறிப்புகளையும் வழங்கியிருப்பது அவருடைய கலைப்புலம் சார்ந்த திறமைக்குச் சான்று. இந்நூல் தமிழ் நாடக உலகிற்குக் கிடைத்துள்ள சற்று வித்தியாசமான படைப்பு. வாசிப்பதற்கு மிக உகந்தது ஆயினும் இதன் நாடக அரங்கேற்றம் நூல் ஆக்கப்பட்டதின் முழுப் பயனையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குவதாய் அமையும். பாராட்டுகளும் வாழ்த்துகளும். சுவடு இணைய இதழில் தோழர் கோமதி சங்கர் ஆக்கத்தில் தொடராக வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றதுடன், சுவடு வெளியீடாக நூலாக்கம் பெற்று விடுதலைப் போராட்ட வீரர் தோழர் நல்லகண்ணு அவர்களால் வெளியிடப்பட்ட ‘நீலகண்ட பிரம்மச்சாரி’ நாடக நூலுக்கான முதல் மதிப்புரையை அதிவிரைவில் வழங்கியுள்ள தோழர் பாப்பையா அவர்களுக்கு சுவடு பதிப்பகம் சார்பிலும் சுவடு இணைய இதழ் சார்பிலும் நாடக ஆசிரியர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆ-ர்

சித்தா

சித்தா

திரை விமர்சனம் பழனி நகராட்சியில் பணிபுரியும் ஈஸ்வரன், அவனது அண்ணி, அவளது எட்டு வயது சுந்தரி என மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது அக்குடும்பம். அவனுக்கு சுந்தரியும் சுந்தரிக்கு சித்தாவும்தான் எல்லாமுமே. அண்ணி அவனுக்குப் பெண் பார்க்க முனைகிறாள். பிடி கொடுக்காத ஈஸ்வரன், அதே நகராட்சியில் பணியில் சேரும் தன்னுடன் பள்ளியில் படித்த சக்தியை நேசிக்கிறான். இந்நிலையில், சுந்தரியுடன் படிக்கும் பொன்னியின் வேறுபாடான நடவடிக்கையைக் கவனித்த ஈஸ்வரன், அவளைத் தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க முயல, அவள் பித்துப் பிடித்தவள் போல பயத்தால் நடுங்கி, அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள்.  மருத்துவப் பரிசோதனையில் பொன்னி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறான். மேலும் அந்தப் பழி அவன் மீது விழ, இது இரட்டிப்பாகி அவனை நிலைகுலையச் செய்கிறது. அதிர்ச்சியிலிருந்து மீண்ட பொன்னி சொன்ன உண்மை அவன் மீதான பழியைத் துடைக்க, நிம்மதி அடைந்த வேளையில் சுந்தரி காணாமல் போக, பேரதிர்ச்சி அடைகிறான் ஈஸ்வரன். சுந்தரி எப்படிக் காணாமல் போனாள், அவள் கடத்தப்பட்டாளா, அவள் என்ன ஆனாள், மீட்கப்பட்டாளா என்பதுதான் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘சித்தா’ தமிழ்த் திரைப்படத்தின் மீதிக் கதை. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது போக, ஒவ்வொரு நாள் விடியும்போதும் இந்தக் கொடூரங்கள் நாடெங்கும் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்திற்கிடையே ‘சித்தா’ கவனம் பெறுகிறது. இந்தக் கதையை அருண்குமார் எழுதி இயக்கியதும் நடிகர் சித்தார்த் தயாரித்ததும் அவர்களுக்குக் குழந்தைகள் மீதுள்ள அக்கறையையே காட்டுகிறது. சித்தார்த் (ஈஸ்வரன்), சகஸ்ர ஸ்ரீ (சுந்தரி), நிமிஷா சஜயன் (வள்ளி), அஞ்சலி நாயர் (அண்ணி) முக்கியப் பாத்திரங்களாக இருந்தாலும் சித்தார்த்  ‘சேட்டை’ என சுந்தரி மீது கட்டற்ற பாசத்தைப் பொழிவதிலாகட்டும் பெண்ணுக்கு நேர்ந்ததை அறிந்து உடைந்து போவதிலாகட்டும் பழி தம்மீதே பேரடியாக இறங்கும்போதிலாகட்டும் “சித்தப்பாவாக இருந்தாலும்..” என்று அண்ணி சொல்வதைக் கேட்டு வேதனையான சிரிப்பை உதிர்ப்பதிலாகட்டும் சேட்டை காணாமல் போனதை அறிந்து துடித்துப் போவதிலாகட்டும் வள்ளி தனக்கு நேர்ந்ததைச் சொன்னதைக் கேட்டு நொந்து போவதாகட்டும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க இயலாத கையறு நிலையில் கதறுவதாகட்டும் திறம்பட்ட உணர்வுப்பூர்வமான நடிப்பால் படம் முழுவதும் மட்டுமல்ல, நம் மனத்திலும் வியாபித்து நிற்கிறார் சித்தார்த். காதல், வலி, வேதனையைத் துல்லியமாக நிமிஷா சஜயன் வெளிப்படுத்துகிறார். சுந்தரியாக சகஸ்ர ஸ்ரீயின் பங்களிப்பும் பொன்னியாக நடித்த சிறுமியின் நடிப்பும் அருமை. அண்ணியாகவும் ஓர் அம்மாவாகவும் அழுத்தமான நடிப்பைப் பதிவு செய்கிறார் அஞ்சலி நாயர். வடிவேலு பாத்திரத்தை ஏற்றவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். வசனங்கள் கூர்மையானவை; சிந்திக்கத் தக்கவை. கதைக் கருவுக்கு இணக்கமாக பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவும் விஷால் சந்திரசேகரின் விறுவிறுப்பைக் கூட்டும் பின்னணி இசையும் சுரேஷ் ஏ.பிரசாந்தின் படத்தொகுப்பும் படத்தின் சிறப்பு. கொஞ்சம் பிசகினாலும் பிரச்சாரமாகப் போய்விடக்கூடிய நிலையில், கத்தி மேல் நடப்பதான சவாலாக நடந்து,  உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், பார்ப்போர் மனத்தில் குழந்தைகள் மீதான பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை உணர்வு, இயல்பாகப் பதியும் வகையில் நேர்த்தியான திரைப்படமாக ‘சித்தா’வைத் தந்து, சவாலில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் அருண்குமார். மதிப்பெண்: 8.5/10

ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் காந்தி பிறந்ததினத்தை நேற்று நாடே பெருமையுடன் நினைவு கூர்ந்தது. அவரின் அறவழிப் போராட்டங்கள் குறித்து சிலாகித்துப் பேசப்பட்டது. தமிழ்நாட்டில், காந்தி காட்டிய அறவழியில் ஆசிரியர்கள் போராட்டக் களம் கண்டு வருகின்றனர். காந்தி நடத்திய அறப்போராட்டம் ஆங்கிலேயரின் மனத்தையே மாற்றி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டது. ஆனால் ஆசிரியர்களது அறப் போராட்டம் நமது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழர்களின் நெஞ்சையே தொட மறுக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நடக்கும் பல நிகழ்வுகளைப் பட்டியலிட்டால், அவற்றுள் முதன்மையாக இருப்பது ஆசிரியர்களது போராட்டம். கல்வி கொடுக்கும் பள்ளிகளில் மிக முக்கியமானவர்கள் ஆசிரியர்கள். பிறகுதான் கட்டமைப்பு, வகுப்பறைகள், இன்ன பிற வசதிகள் யாவும். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஏராளமான சிக்கல்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஆசிரியர்கள் நியமனமே இல்லாமல் இருக்கும் பள்ளிகளும் இருக்கின்றன. பெயரளவுக்கு நியமனம் செய்து, அவர்களைப் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற பெயரில் வாரத்தில் மூன்று அரை நாட்கள் – அதாவது மொத்தமாக ஒன்றரை நாட்கள் மட்டுமே வரவழைப்பது; ஒரு மாதத்திற்கு 12 நாட்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிப்பது என்று, சுமார் 16000 ஆசிரியர்களது வாழ்க்கையைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தது அரசு. மத்திய அரசின் வழிகாட்டுதல்தான் இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்  என்றாலும், நம் குழந்தைகள் கல்வி பெற வேண்டுமெனில் முழு நேரமும் ஆசிரியர்களது தேவை பள்ளிகளுக்கு இருக்கிறது என்று மாநில அரசுக்குத் தெரியாதா? அதைக் குறித்து அப்போது முதல் இப்போது வரை எவருக்கும் அக்கறை இல்லை. இருந்திருந்தால் இத்தனை வருடங்களாகத் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிக் குழந்தைகள் இந்த அவலத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். ஆம்; ஒரு பள்ளியின் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதில் முதன்மையாளர் உடற்கல்வி ஆசிரியர்தான். வகுப்பறை ஒழுங்கை வகுப்பாசிரியர் பார்த்துக்கொள்வார் என்றாலும் பள்ளியின் மொத்த ஒழுங்கை, அனைத்து ஆசிரியர்களது உதவியுடன் உடற்கல்வி ஆசிரியர்கள்தான் கவனிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அவர்களது பணியும் அதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  மூன்று அரை நாட்கள் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தால், மற்ற மூன்றரை நாட்கள் பள்ளிகளில் ஒழுங்கை யார் கவனிப்பது? அந்த மீதி மூன்றரை நாட்களில் உடற்கல்வி வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளை விளையாட வைப்பது யார்? விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயார் செய்வது எப்படி? இதையே மற்ற துறை பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம் எனில், நம் குழந்தைகளுக்கு எத்தனை தூரம் கல்வி மறுக்கப்படுகிறது, அவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் என்று நாம் உணர முற்படுதல் அவசியம். படைப்பாற்றல் திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் களம் கலை ஆசிரியர்களது கையில்தான் இருக்கிறது. மற்றபடி அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று நாம் பேசலாம். ஆனால் பாட ஆசிரியர்களுக்குத் தேர்வு மதிப்பெண் என்ற வட்டத்துக்குள் நின்று வாளைச் சுழற்றும் அளவிலான இடமே உள்ளது. ‘வானமே எல்லை; நீ உன் திறமையைக் காட்டு’ என்று மாணவர்கள் பார்வையை விசாலமாக்கும்  உத்தியை ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்களால்தான்  செய்ய இயலும். கணினிச் செயல்பாடு  உள்ளிட்ட பல திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் இந்தச் சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிக்குள் இருந்தும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலைமையைக் கடந்த பத்தாண்டுகளில் எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. விளைவு, ஆசிரியர்கள் தேவைப் பட்டியலில்  இவர்கள் பணியாற்றும் எந்தப் பள்ளிக்கும் புதிய ஆசிரியர் நியமனம் கிடையாது. இந்தப் பத்தாண்டு காலமாக எந்தவித ஆசிரியர் நியமனமும் இல்லை என்பது மற்றொரு துக்க வரலாறு. ஆனால், இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்தில் மாணவர்கள் நலனுக்கும் கேடு; ஆசிரியர் நலனுக்கும் கேடு. அவர்கள் பெறும் ஊதியம் தற்போது பத்தாயிரம் மட்டுமே.  மாதம் பன்னிரண்டு நாட்களுக்குப் பத்தாயிரம் போதாதா என்ற குரல்களும் இங்கே ஒலிக்கின்றன. அது மிகப்பெரிய தவறு. ஒரு மாதத்தில் மீதி பதினெட்டு நாட்கள் அந்த ஆசிரியர்கள் எங்கே செல்வார்கள்? வேறு இடத்தில் நிரந்தரமாக வேலை செய்ய முடியுமா? வேலை தருவார்களா? இன்றுள்ள விலைவாசியில் இந்த ஊதியத்தை வைத்துக் குடும்பம் நடத்துவது இயலாத காரியம் என்பதை சமூகப் பார்வையுடன் சிந்திக்கும் அனைவராலும் அறிந்துகொள்ள முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் சிந்திக்க மறுக்கின்றனர். அத்தோடு பதினோரு மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு ஊதியம்  தரப்படுகிறது. மே மாதத்தில் அவர்களுக்குப் பசி எடுக்காதா? வாடகை வீட்டில் வசிப்போரிடம் வீட்டு உரிமையாளர் வாடகை கேட்க மாட்டாரா? அந்த மே மாதத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் யாருக்கும் எந்தப் பணத் தேவையும் இருக்காதா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். இந்த  ஊதியச் சிக்கலைத் தீர்க்கவும் மாணவர் நலன் கருதியும் எங்களை நிரந்தரப் பணியாளர் ஆக்குங்கள் என்று பகுதி நேர ஆசிரியர்கள் இன்று வரை 52க்கும் மேற்பட்ட முறைகள் போராட்டக் களத்தில் நின்றுள்ளனர். அந்தப் போராட்டங்களின் பலனாக முதலில் ஐந்தாயிரமாக இருந்த அவர்களது ஊதியம் தற்போது பத்தாயிரமாக மாறியுள்ளது; அவ்வளவே. ஊதியத்தைக் கடந்து, பணியாற்றும் பள்ளியிலோ சமூகத்திலோ வீட்டிலோ அவர்களுக்கு மரியாதை கிடையாது என்பது மற்றொரு வகை மன உளைச்சல். கடந்த பத்தாண்டுகளில் இறந்தவர், வேலையை விட்டவர், வேறு வேலைக்குச் சென்றவர், ஓய்வு பெற்றவர் என நான்காயிரம் ஆசிரியர்கள் காணாமல் போக, எஞ்சியுள்ளவர்கள் 12000 சொச்சம் ஆசிரியர்கள்தான். செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வந்தன.  இந்த நேரத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கி, சில நாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, தற்போது தொடர் போராட்டத்தில் இன்று ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றனர். இதுவரை ஐந்தாயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் நாட்கள் செல்லச் செல்லப் பெண் ஆசிரியர்களுக்கு அங்கு தங்க, உடைமாற்ற, கழிப்பறை செல்ல என்று எதற்கும் இயலாத சூழல். ஆகவே போராடுவோருக்குக் கடும் சிக்கல்கள் நிலவுகின்றன எனவும் சங்கப் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தடைகளை மீறி ஒன்பதாவது நாளாக இன்றும் களத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இதற்கிடையே போராட்டம் தொடங்கியது முதல் நேற்று வரையிலான எட்டு நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கணினி ஆசிரியர் உடல்நலக் குறைவால் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்துள்ளார்.  மற்றொரு பகுதி நேர ஆசிரியரான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த மணிகண்டன் என்ற ஓவிய ஆசிரியர், கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிருக்கிறார். இருவருக்கும் பணம்தான் பிரச்சனை. அதற்கு இவர்களது ஊதியம் மிக முக்கியமான காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மனிதாபிமானமற்ற முறையில் இப்படி ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படுவது கண்டனத்துக்குரியது. இவர்கள் துன்பம் சமூகத்தை அதிர்வுக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடந்த காலங்களில் 2016 தேர்தலின்போதும், 2021 தேர்தலின்போதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியை திமுக அளித்தது. அதை நம்பி குடும்பம் குடும்பமாக இவர்களுக்கு வாக்களித்தோம். ‌எங்கள் உறவினர்கள் குடும்பங்களையும் இவர்களுக்கே வாக்களிக்க வைத்தோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் நாங்கள் பலமுறை போராடிவிட்டோம்.  இப்போதும் எட்டு நாட்கள் ஆகியும் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறார்கள் கல்வி அமைச்சரும் முதல்வரும் என்று வெளிப்படையாகப் புலம்பித் தீர்க்கின்றனர் பகுதி நேர ஆசிரியர்கள். இவர்களின் போராட்ட முழக்கமே 181ஆவது கோரிக்கை என்ன ஆயிற்று? என்பதுதான். இந்த நேரத்தில் பல ஆசிரியர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்குச் செல்வது என்ற சூழலும் நிலவுகிறது. கடந்த எட்டு நாட்களில் ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். பள்ளிக்கல்வி இயக்குனர், கல்விச்செயலர், இணை இயக்குநர், சமக்ஷ்ர சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் வெறும் ஊதிய உயர்வு மட்டும் தருவதாகக் கூறிப் போராட்டத்தை முடித்துவிடப் பார்ப்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதியாக நேற்று எட்டாவது நாள் மாலை, கல்வி அமைச்சர் தனது வீட்டிற்குப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் இன்றும் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் சங்கதினரிடம் கேட்டபோது, “பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். இந்நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று மாலை (அக்டோபர் 2) எங்களை அழைத்துப் பேசினார். அப்போது எங்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் பேசிய வகையில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன்பும் பலமுறை அமைச்சரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாகப் பேசியுள்ளோம். அப்போதும் அமைச்சரின் பதில் எங்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எங்கள் கோரிக்கைகள் மீது எந்தவிதமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அமைச்சருடனான பேச்சுவார்த்தையின்போது உடனிருக்கும் அதிகாரிகள், அமைச்சர் முன்னிலையில் ஒரு மாதிரியும் அவர்களைத் தனியே சந்திக்கும்போது வேறு மாதிரியும் பேசுகின்றனர். அமைச்சர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முனைந்தாலும் அதிகாரிகள் அதற்குத் தடையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது,  அவர்கள் இந்த அரசுக்கு எதிராகச் செயல்பட எங்களைத் தூண்டி விடுகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டால் ‘உங்கள் கோரிக்கையை நிதித்துறைக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நிதித்துறையைக் கை காட்டுகின்றனர். ஆனால் நிதித்துறையிலிருந்து எங்களுக்குச் சாதகமான எந்த பதிலும் வரவில்லை. பள்ளிக் கல்வித்துறையும் நிதித்துறையும் சேர்ந்து அரசுக்கு எதிராக ஆசிரியர்களைத் திசை திருப்புகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. ‘திமுக அரசு ஆசிரியர்களுக்கானது’ என்ற நிலையை ‘ஆசிரியர்களுக்கு எதிரானது திமுக அரசு’ என்று மாற்ற அதிகாரிகள் முயல்கிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார்கள். கல்வித்துறையில் அவுட் சோர்சிங்கில், ஃபெல்லோசிப் நியமனங்களுக்கே அரை லட்சத்திற்கும் அதிகமாக ஊதியம் தரும் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமல்  வஞ்சித்து, அவர்களை நிரந்தரமாக்காமல் குழந்தைகளின் வாழ்க்கையையும் சேர்த்து வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. சம வேலைக்கு சம ஊதியம்  அடுத்து, பகுதி நேர ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கும் அதே டிபிஐ வளாகத்தின் புதிய கட்டிட வாகன நிறுத்துமிடத்தில் நிரந்தர ஆசிரியர்களும் பல ஆயிரக்கணக்கில் இணைந்து கடந்த ஐந்து நாட்களாக நீர் அன்ன ஆகாரம் இன்றிப் போராடி வருவது மற்றொரு வேதனை. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 2009ஆம் ஆண்டு பணியில்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 19

திருப்பூர் எனும் திருப்புமுனை – 19

தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அவர்களின் தேவைகளும் சுயம்புவாக உருவான திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வெற்றிக்குப் பின்னணியில் முக்கியக் காரணமாக இன்றளவும் விளங்குவது தொழிலாளர்களின் உழைப்பு. உலகில் வேறு எங்கும் காண இயலாத ஒரு வழக்கம், இங்குள்ள தொழிலாளர்கள் அனைவரும் பணிபுரியும் நிறுவனத்தைத் தங்களின் நிறுவனமாகக் கருதி உரிமையுடன் பணியாற்றும் காரணமே இங்குள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னணியில் உள்ள காரணங்களில் ஒன்று. இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்களின் வரலாற்றுப் பின்னணியில் நிச்சயம் அதன் உரிமையாளர்களும் பங்குதாரர்களும் ஏதேனும் ஒருவகையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து உழைப்பினால் முன்னேறி ஒரு நிறுவனத்தைக் கட்டமைத்து பல நூறு தொழிலாளிகளுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் நிலைக்கு உயர்ந்திருப்பதைக் காணலாம். தொழிலாளிகளைப் பொறுத்தமட்டில், மிக ஆரம்பக் காலகட்டங்களில் உள்ளூர்த் தொழிலாளர்களே தேவையான அளவு அனைத்து நிலை உற்பத்திகளிலும் பணியாற்றினர். ஒருகட்டத்தில் தொழில் அபரிதமாக வளர, வெளி மாவட்டத் தொழிலாளர்கள், குறிப்பாக தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலிருந்து புலம்பெயர்ந்து இங்கே பணிபுரியத் தொடங்கினர். பருவமழை பொய்த்துவிட்டது, வேளாண்மை சாத்தியம் இல்லை, வேலை இல்லை, குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் போன்ற பல்வேறு தேவைகளில் உள்ளவர்களின் புகலிடமாகத் திருப்பூர் திகழ்ந்தது, வந்தார் யாரையும் கைவிடாமல் அரவணைத்துக்கொண்டது திருப்பூர். இன்று இங்குள்ள பல முதலாளிகள் புலம்பெயர்ந்து, பிழைப்பிற்காகத் தொழிலாளியாக இங்கே வந்தவர்கள். ஒரு தலைமுறை தொழிலாளியாகப் பணியாற்றி, வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்தது. வாழ்வின் அடுத்த படிநிலை அவர்களை ஒரு தொழில் முனைவோர், அரசுப் பணியாளர், தனியார் நிறுவனங்களில் நிர்வாகி, அயல்நாட்டில் பணிபுரிவோர்  என முன்னேறிச் செல்ல, ஒருபுறம் ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியும் பிற மாவட்டத் தொழிலாளர்களைச் சொந்த மாவட்டத்தை நோக்கித் திரும்பச் செய்தது. ஏனெனில் திருப்பூரில் ஈட்டும் வருவாய் அவர்களின் ஊரில் ஈட்ட இயலாத காரணத்தால் இங்கு வந்ததும் தற்சமயம் அவர்களின் மாவட்டத்திலும் இதே அளவு வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் உருவானது ஒருபுறம்; மற்றொருபுறம் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவீனங்கள் திருப்பூரில் அதிகரித்தது போன்ற காரணங்களால் பல ஆயிரம் தொழிலாளர்கள் சொந்த மாவட்டத்தை நோக்கித் திரும்பினர். இந்த நிலையில் வட மாநிலத் தொழிலார்களின் வரவு அதிகரித்தது. ஆரம்பக் கட்டத்தில் வீடுகளுக்குப் பளிங்குக் கற்கள் பதிக்க, அவற்றிற்குப் பாலிஷ் செய்வதற்கான பணிகளுக்கு இங்கே வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், இங்குள்ள வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு, தங்களின் உற்றார், உறவினர், நண்பர்கள் என ஏரளாமானோரை இங்கு கொண்டுவந்து சேர்த்தனர். நாளது தேதியில், திருப்பூரின் தொழிலாளர்களில் 45 விழுக்காட்டுக்கும் அதிகமாக 19 வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு உற்பத்திப் படிநிலைகளில் பணியாற்றுகின்றனர். தொழிற்சங்கங்களைப் பொறுத்தமட்டில், பிரதான கட்சிகளின் 8 தொழிற்சங்கங்கள் வலுவாக இயங்குகின்றன. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சப்படிப் போராட்டம் என்றென்றும் திருப்பூரின் வரலாற்றில் அழியா இடம் பிடித்த ஒன்றாகும். 1990க்குப் பிறகு, தொழில்முனைவோர்கள் சங்கங்களின் சார்பில் ஒரு கூட்டமைப்பு, தொழிற்சங்கங்களின் சார்பில் ஒரு கூட்டமைப்பு, அரசாங்கம் என முத்தரப்பும் இணைந்து தொழிலார்களுக்கான சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்துப் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துகின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தை வாயிலாகப் புதுப்பிக்கப்படும். அந்தவகையில் கடந்த 30 ஆண்டு காலத்தில் சம்பளம் உள்ளிட்ட எந்தவொரு சலுகைகள் குறித்த சிறு சலசலப்போ போராட்டமோ இங்கு நடந்ததில்லை. அதற்குக் காரணம், தொழிற்சங்கங்களின் மனம் நிறைந்த ஒத்துழைப்பு மட்டுமல்ல; இந்தத் தொழிலுக்குச் சிக்கல் வந்தபோதெல்லாம் போராட்டக் களத்தில் முன் வரிசையில் நின்று நியாயம் பெற்றுத் தந்ததில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு அளப்பரியது. நாட்டிலேயே தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் சேம நல நிதிப் பங்களிப்பில் அதிகப் பங்களிக்கும் தொழில் நகரங்களில் திருப்பூரும் ஒன்று என்றாலும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இங்கு ESI மருத்துவமனையின் கட்டுமானம் நடைபெறுகிறது. தொழிலாளர்கள் அடர்ந்து காணப்படும் தொழில் நகரத்தில், தொடர்ந்து தொழில் வளர, மாதாந்திரச் செலவுகள் உயர்ந்துகொண்டே வருவதும் வருவாயின் பெரும் பகுதி அதற்கே செல்வதும் தற்சமயம் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதேசமயம், பெரும் நிறுவனங்கள் விடுதிகளை அமைத்து தொழிலார்களைத் தங்க வைத்துள்ளனர். ஒவ்வொரு மனிதனின் கனவு, வசிக்க ஒரு வீட்டை வாழ்நாளில் சொந்தமாகக் கட்டிவிட வேண்டும் என்பதே. அந்த வகையில், இங்குள்ள தொழிலாளர்களின் அந்தக் கனவினை நிறைவேற்ற, அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இன்று வரை அதற்கான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தொழிலாளர் பங்களிப்பு ஒரு பங்கு, பிரதமரின் வீட்டு வசதி மானியம் ஒரு பங்கு, மற்றவை எளிய தவணையில் கடனாக வங்கிகள் வாயிலாக அந்தத் தொழிலார்கள் பணிபுரியும் இங்குள்ள நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய, மாநில அரசு உரிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்தால் ஏரளமான குடும்பங்கள் பயன்பெறும். ஏனோ ஆட்சியாளர்கள் அது குறித்த சிந்தனையின்றி இருப்பது பெரும் ஏமாற்றமே. தொழிலாளர்களின் நிலையைப் பார்த்தோம். நாளது தேதியில் கள எதார்த்தம் என்ன? தொழிலார்களுக்கான சிக்கல் என்ன? அதைக் களையவேண்டிய திட்டங்கள் என்ன? வரும் வெள்ளியன்று விரிவாகக் காண்போம்.  

விடுதலையின் வரலாறுகள்

விடுதலையின் வரலாறுகள்

நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழா சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல் – என்பது வள்ளுவர் வாக்கு. வாசிப்புப் பழக்கம் உள்ள எல்லாரும், ஏதோ ஒரு நாளில் எழுதவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். சில சமயம் அதை வெளியே சொல்வதும் உண்டு. சொல்பவர்கள் எல்லாரும் செயல்படுத்திவிடுகிறோமா என்ன? கடந்த ஜூலை 2 அன்று, தாம்பரத்தில் நடைபெற்ற சென்னை வாசிப்பாளர்கள் சந்திப்பில், தான் ஒரு நாடகத்தை எழுதவிருப்பதாக அறிவித்தார் தோழர் கோமதிசங்கர். யாரைப்பற்றி, எந்தக் கருவை மையமாகக் கொண்டு அந்த நாடகம் அமையப்போகிறது என்கிற எந்த விவரமும் அன்று அவர் குறிப்பிடவில்லை. இன்று, அக்டோபர் 2. மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள். சிறப்புமிக்க இன்றைய தினத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், கோமதிசங்கர் தோழர் எழுதிய நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழா சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று கூறியது போலவே, ஆகஸ்டு 15, இந்திய சுதந்திர தினத்தன்று நீலகண்ட பிரம்மச்சாரி பற்றிய வரலாற்றுத் துளிகளை, நாடக வடிவில் தினசரித் தொடராக நமது சுவடு வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினார். 24 காட்சிகளாக, நாள் தவறாது சுவடு இணைய இதழில் வெளிவந்தது. வெளிவரும் நாட்களிலே நாடகத்திற்குப் பரவலான வரவேற்பு இருந்தது என்பதை சுவடு வாசகர்கள் நன்கறிவர். அறிவிப்பு வெளியான நாளிலிருந்து மிகச் சரியாக 90 நாட்களில் இந்த நாடகம் நூலாக்கம் பெற்று சுவடு பதிப்பக வெளியீடாக வந்துவிட்டது. இன்று, காலை 10 மணியளவில் சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில், புத்தகத்தின் வெளியீட்டு விழா மிக விமர்சையாக, நூற்றுக்கணக்கான தோழர்கள் மற்றும் வாசகர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு அவர்கள் நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர். மு.வீரபாண்டியன் மற்றும் தோழர். ஜீவபாரதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர் கணபதி இளங்கோ அனைவரையும் வரவேற்றார். நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய தோழர் முத்தரசன், பெயரே தெரியாத, தமிழகத்தின் ஏதோ ஒரு கடைக்கோடியில் வாழ்ந்த ஒரு சவரத் தொழிலாளியின் தேசப்பற்றையும் தன்மானத்தையும் பறைசாற்றும் செயலை மிகச் சுருக்கமாகவும் அவரின் எளிமையான கம்யூனிச சித்தாந்தத்தையும் எடுத்துரைத்தார். இந்த நாடகம் தமிழ்நாடு முழுவதும்  நிகழ்த்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். தோழர் ஜீவபாரதி அவர்கள் தனது தலைமை உரையில், விடுதலைப் போராளியை அவமதிக்கும்விதமாக, ஆங்கிலேய அதிகாரி அவருக்கு மொட்டை அடிக்கச் சொன்னபோது, தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு முடி திருத்துநரின் தியாகத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். தோழர் வீரபாண்டியன் அவர்களுடைய உரையில், இந்த நூல் குறித்து முழுமையானதொரு ஆய்வரங்கம் இதே அரங்கில் நிகழ்த்தப்பட வேண்டும் என்றார். அவரைத் தொடர்ந்து இந்த நாடகப் பனுவலை முன்வைத்து உரையாற்றிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர். ஆ. பாஸ்கர் அவர்கள் தனது மதிப்பீட்டு உரையைச் சிறப்பாக முன்வைத்தார். நாடக வடிவத்தின் தாக்கம் குறித்துத் தொடங்கிய அவர், புத்தகத்தின் சாராம்சத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் மிகச்சிறப்பாகவும் சற்று விரிவாகவே கூறியதுடன், இந்த நாடகத்தை மேடையேற்ற வேண்டும் என்று கூறி முடித்தார். அடுத்ததாக புத்தகத்தின் ஆசிரியர் தோழர் கோமதிசங்கர், தனது ஏற்புரையை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார். ஏன், எதனால், எதன்பால் இந்த நாடகம் தொடங்கப்பட்டு இவ்வளவு விரைவாகப் புத்தகமாகப் வெளியிடப்பட்டது என்ற விவரங்களோடு, நூலில் இடம்பெற்றுள்ள தரவுகளுக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றியுரைத்து தனது ஏற்புரையை நிறைவு செய்தார். இறுதியாக சுவடு பதிப்பாசிரியர் தோழர் நல்லு இரா. லிங்கம் ரத்தினத்தைவிடச் சுருக்கமாக நன்றியுரை நல்கினார். இன்றைய நாளின் அதிசிறப்பு, ஒரு விடுதலைப்போராட்ட வீரரின் வரலாற்றுப் பக்கங்களை வாழும் விடுதலைப் போர் வீரர் தோழர் நல்லகண்ணு அவர்கள் வெளியிட்டதுதான். தனது 98 ஆம் அகவையிலும் காந்தி பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் கட்சிக் கூட்டத்திற்கும் பதிப்பகத்தார் மற்றும் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்த அவருக்கு நன்றி என்ற ஒரு சொல் காணாது. நூலைப்பற்றியும் நூலாசிரியர் பற்றியும் வயது மூப்பு காரணத்தால் பேசமுடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த அந்த உள்ளத்தை என்னவென்று சொல்ல! அவரைப் பார்த்ததே பேறு என்று உணர்கையில், நூலாசிரியருக்கோ அது வாழ்நாளுக்கான வரலாறு அல்லவா?!

கத்தாழைப் பள்ளிக்கூடம்

கத்தாழைப் பள்ளிக்கூடம்

சிறுகதை இரண்டு மைலுக்கு முன்னும் பின்னும் கறுப்பு மை தடவிய கரிசல் மண் எங்கள் பூமி. அதைத் தாண்டிய நிலம் எல்லாம் செவக்காடு என்ற செம்மண்தான். காலால் உரசி அந்தச் செம்மண்ணை மழைக்காலத்தில் ரசிக்கும் விருப்பம் கரிசலில் வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும். என்ன நட்டுவைத்தாலும் முளைக்கும் மண் அது. ஆனால் கரிசல் மண் அப்படி இல்லை. ஒவ்வொரு துகளும் சூரியனிலிருந்து உதிர்ந்தது போன்ற வெப்பத்தைத் தனக்குள் வைத்து, எப்போதும் எங்களுக்குக் கடத்திக்கொண்டிருக்கும். ஆவணி மழையில்தான் கரிசலை நாங்கள் மிகுதியாகக் கொண்டாடுவோம். சரசரவென்று பெய்யும் மழையில் முழுவதும் சகதியாக, கருமையில் பிறந்த குழந்தையின் கன்னம் போன்று எங்கள் உடலெல்லாம் அந்த மண் ஊரும். சிறுவனாக அந்த மண்ணில் உழன்ற கைகளை எவ்வளவு நாள் கழித்துப் பார்த்தாலும் பிசுபிசுப்பு மாறாத ஞாபகம் எல்லாருக்கும் இருக்கும். சரியாக் ஒன்றிரண்டு நாட்களை மட்டும் கழித்துவிட்டப் பார்த்தால், எனக்கும் ஊருக்கும் இடைவெளி இருபத்தியோரு வருடங்கள். எல்லாத் தேடலும் முடிந்தது என்று தொடங்கிய இடத்திற்கே வந்திருந்தேன். நிறைய கணங்களுக்கு மத்தியில் வாழ்ந்த ஊர், ஒரு ஆசுவாசமான பிரியத்தைத் தந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நிஜம்தான்; அன்றைய நாளும் எனக்கு அப்படித்தான் இருந்தது. விட்டுச் சென்ற இடமல்ல இது. நானாக விலகிச் சென்ற ஒவ்வொன்றையும் தேடினேன். ஆனால் கிடைக்காத ஒன்றைப் பற்றிய கவலை இன்னும் இருக்கிறது. கத்தாழை முளைக்கும். அதுவும், செழித்துப் பழம் விடும் கத்தாழையை நீங்கள் கடைசியாக எங்காவது பார்த்ததுண்டா? நான் பார்த்திருக்கிறேன், கடைசியாக எங்கள் ஊரில். கத்தாழை என்றதும் சப்பாத்திக் கத்தாழை என்ற வட்ட வடிவக் கத்தாழை அல்ல இது. தென்னங்கீற்றின் சாயலில் வளரும் குருத்துக் கத்தாழை.   எவ்வளவோ ஓடைகள் இருந்தாலும் அணைக்கட்டு மேட்டில் மட்டும் மேற்குக் கால்வாய் ஓரத்தில் வேலிக்கம்பி வலைபோல் ஒரே உயரத்தில் நெடுந்தூரத்திற்குக் கத்தாழைதான். பச்சைப் பசேரென்று கரிசல் மண்ணில் இரண்டு செடிகளைப் பார்க்கலாம், ஒன்று, கருவேலம் இன்னொன்று கத்தாழை.   காலையில் எங்களுக்கு அந்த ஓடைதான் எல்லாமும். எல்லாமும் என்பதன் அர்த்தம், அரிய அந்தக் கத்தாழையின் இரண்டு பக்க முட்களுக்கு நடுவில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் பார்த்தால் அறியலாம். கூரிய கருவேலம் முள்ளை வைத்துக் கத்தாழை நடுவில் எழுதலாம்; படம் வரையலாம்; வெட்டிப் பாதியை எடுத்தும் விடலாம். மருந்துக்காக அப்படி வெட்டிய கத்தாழையை நாங்களும் பார்திருக்கிறேம். சுண்ணாம்பு அடிக்க இப்போது வந்திருக்கும் பிரஸ்க்கு முன்பாகக் கத்தாழை நார்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் எங்களுக்கு எழுதத்தான் பிடிக்கும். அப்போதைய போதையான வார்த்தைகளை எங்களுக்கு அந்தக் கத்தாழைதான் கற்றுத் தந்தது. இரண்டாவது வார்த்தைப் பள்ளிக்கூடம் அந்தக் கத்தாழைக் காடு. அடுத்த தலைமுறை கழிப்பறையில் எழுதிய சொற்களை நாங்கள் கத்தாழையில் அதற்கு முன்பாகவே எழுதியிருந்தோம். முதலில் எழுதி, பின்பு அந்தரங்கப் படம் வரைதலைப் பார்த்துக் குதூகளித்த கூட்டம் நாங்கள். காலையில் ஒன்பது மணிக்குப் பள்ளி நேரம் என்றால், சரியாக ஆறு மணியில் இருந்து எட்டரை வரை அந்த ஓடைதான். அப்போதுதான் தொடர்கதை ஒன்று எங்களுக்கு அதில் கிடைத்தது. பரிச்சயமான பெயர் உள்ள பெண்ணின் பெயரோடு, இன்னொரு பெயரும் அதில் இருந்ததை முதலில் முருகேசன்தான் கண்டுபிடித்தான். முருகேசனுக்குத் தெரியாமல் கத்தாழை ஓடையில் ஒன்றும் நடக்காது. ஓடைக்கும் அவன் வீட்டுக்கும் இருக்கும் தூரம் எங்களைவிடக் குறைவு. ஆனால் அதிகாலை வேளையில் எங்களால் மட்டுமல்ல; முருகேசனால்கூடக் கத்தாழைப் பக்கம் போக முடியாது. பாம்பின் தடமும் அதுதான். எந்தப் படம் யார் வரைந்திருக்கக் கூடும். அந்த இரண்டெழுத்து யாருடைய பெயர். இந்தக் குறியீடு, உறுப்புகளில் எதைக் குறிக்கிறது என்பது வரை எங்களுக்குக் கத்தாழை ஆசான் முருகேசன்தான். எவ்வளவோ வற்புறுத்தியும்கூட, அந்த இரண்டு பெயர்களுக்கான மனிதர்களை முருகேசன் எங்களுக்குச் சொல்லவே இல்லை. நாங்களாக யூகித்துச் சொன்ன எல்லா மனிதர்களையும் அவன் நிராகரித்தான். நிச்சயமாக அந்தப் பெயர்கள் எங்களுக்கு முன்பான தலைமுறையுடையது. அந்தத் தலைமுறைக்கும் எங்களுக்கும் இடைப்பட்ட பையன் முருகேசன். பெயருக்குக்கூட அண்ணன் என்று அழைக்கமாட்டோம். ஆனால் எல்லா சேட்டை, சச்சரவுக்கு அவன்தான் மூலதாரி. மணி ஐஸ் வாங்கித் தின்னும்போது முருகேசனுக்கு ஒன்றும் வாங்கிப் பள்ளி மைதானைத்தில் அவனுக்குக் கொடுத்தேன். அவனுக்குத் தெரியும், ஏதோ ஒன்றை வாங்குவதற்கான கொடுக்கல் இது என்று. “என்னடா… புதுசா..” என்றான். என்னால் அந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை. “சும்மாண்ணா…” என்று சமாளித்தேன். அவனாகவே சொல்லத் தொடங்கினான். “அது யாருன்னு தெரியலடா. ஆனா காலைல எழுதுற ஆளு, சாயங்காலம் அதைக் கீறி வச்சிடறாரு. இதுக்காகவே காலைல மொத ஆளா நான் பாக்கப் போயிர்றேன்..” என்ற மழுப்பிய சொல்லை முருகேசன் உதிர்த்தான். ஆனால் அது நிஜமல்ல. முருகேசன் பார்த்த எல்லாக் கத்தாழைப் பெயர்களும் அங்கேயே இருந்தன. எதுவும் அழிக்கப்படவில்லை. எங்களுக்குள்ளகப் பேசி முடிவு செய்த பெண்ணொருத்தியின் திருமணம் மிக வேகமாக நடந்தது. அந்தத் திருமண பற்றிய தகவலில்கூட, நாங்கள் கத்தாழைப் பக்கம்தான் தேடினேன். ஆனால் முருகேசன் அங்கு இரண்டு மூன்று நாட்களாக வரவில்லை. பெருசுகள் பெரும்பாலும் கத்தாழை ஓடைக்குள் வரமாட்டார்கள். அது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம். ஒரு மைல் தொலைவில் காலைக் கடனை முடித்துவிட்டு, ஏதாவது ஒரு பம்பு செட் பக்கம் ஒதுங்கி, வேப்பங்குச்சியைப் பல் இடுக்கில் வைத்தவாறு வந்துவிடுவார்கள். நாங்கள் முருகேசன்தான் இதற்குக் காரணம் என்று நினைத்திருந்தோம். நிச்சயமாக அதற்கு நேர் எதிரான மனிதர், நிறைய குடியில் விழுந்து மீள முடியாத மனிதராக இருந்தார். ‘சரி சமமான பொருத்தம்’ என்ற எங்கள் மனது, அப்போது கரிசலைப்போல ஊமையானதுதான். நிலத்தோடு மல்லுக்கட்டும் மனிதர்களுக்கான வீம்பு, அந்த இரண்டு பேரைப் பிரித்தது. சந்தேகங்களைப் பொருத்திப் பார்த்துக்கொண்டோம். பொது நிகழ்ச்சியில் விழுந்த புன்னகையைப் பார்த்தாகவும் நானே கோடு போட்ட ஒரு பக்கத் தாளைத் தந்ததாகவும் கத்தாழைக் கூட்டணியில் விஷயம் வந்தது. கடைசியாக, கத்தாழையைத் தேடிக் கிடைக்காதபோது, அவரைப் பற்றிய சேகரிப்பு எனக்கு வேண்டும் எனத் தோன்றியது. ஊரைவிட்டு சற்றுத் தள்ளி, ஆனால் செம்மண் தளத்தில் இரண்டு குழந்தைகளோடு இருக்கிறார் எனத் தகவல் வந்தது. அத்தோடு நானும் நின்றிருக்கலாம். கற்றாழையோடு அதே ஊரில் இரண்டாவது பெயர் இன்னும் இங்குதான் இருக்கிறது. நானாக ஊகித்த பெண், என் முன்னால் இன்னும் நடமாடுகிறாள். துயரங்களை மென்று விழுங்கி, அவள் போக்கில் போகும் பெண்ணொருத்தியை அந்தக் கத்தாழை விழுங்கிவிட்டதாகவே இன்று நினைக்கிறேன். எழுத்து என்னவாக வேண்டும் என்பதற்கான சாட்சி அவள். எந்தத் தவறையும் குற்றம் காணாமல் எல்லாவற்றையும் மறைத்து வாழ முடிந்த ஒற்றை மனுசியாக இன்னும் இருக்கிறாள். நல்லவேளையாக, இன்னோரு தெய்வமாக மாறாமல் உயிரோடு இருக்கிறாள் என்பதே என்னுடைய ஆசுவாசம். ஆனால், இப்போது எங்கள் ஊரில் கத்தாழை எங்குமில்லை. முருகேசனும் இப்போது அவ்வளவாக யாருடனும் பேசுவதில்லை.