திரை விமர்சனம்: மது ராஜேந்திரன்

காதலித்து மணந்த அர்ஜுன் (ஸ்ரீ) திவ்யா (சானியா ஐயப்பன்) இடையே, அவள் சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இல்லாததாகப் பிரச்சினை. ஒரு குழந்தை உள்ள ரங்கேஷ் (விதார்த்) பவித்ரா (அபர்னதி) தம்பதியருக்குள், அவள் குண்டாக இருப்பதுதான் பிரச்சினை. இனி சேர்ந்து வாழ முடியாது என விவாகரத்து முடிவுக்கு வந்துவிடும் நிலையில் அவர்கள் தனித்தனியாகவும், சமயத்தில் ஒன்றாகவும் உளவியல் நிபுணரும் திருமண ஆலோசகருமான மித்ராவைச் சந்திக்கிறார்கள்.

“கல்யாணம் என்பது கண்ணாடி மாதிரி. உடைந்தால் ஒட்டாது. உறவு என்பது ரப்பர் பேண்ட் போன்றது. இருபக்கம் இழுக்கும்போது அறுந்துபோகும். அதைச் சிலர் தூக்கி வீசுவார்கள். சிலர் அதை முடிச்சுப் போட்டுப் பயன்படுத்துவார்கள். வீசி எறிய வேண்டுமா, முடிச்சுப் போட வேண்டுமா என்பது நம் கையில்தான் இருக்கிறது” என்று, ஆலோசனைக்கு வரும் அத்தம்பதியர்களிடம் நேர்மறையான முடிவை எட்டும் நோக்கில், எதிர்மறையான சில செயல்பாடுகளை முன்னெடுக்கும்படி ஆலோசனை கூறும் மித்ராவும் (ஸ்ரத்தா ஸ்ரீநாத்) கணவன் மனோகருடன் (விக்ரம் பிரபு) சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்த வாழ்வில் எதிர்பாராத விதமாகப் பிரச்சினையைச் சந்திக்கிறாள்.

அவர்களுக்குள் உள்ள பிரச்சினைகளின் உண்மையான வடிவத்தை இனம் கண்டு, அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகவும் சுவைபடவும் கூறுவதுதான், மகராஜ் தயாளனுடன் திரைக்கதை எழுதி, யுவராஜ் தயாளன் இயக்கி வெளிவந்துள்ள ‘இறுகப்பற்று’ திரைப்படம்.

ஸ்ரத்தா ஸ்ரீநாத் – விக்ரம் பிரபு ஜோடியாகட்டும், ஸ்ரீ சானியா ஐயப்பன் மற்றும் விதார்த் அபர்னதி ஜோடிகளாகட்டும், பாத்திரங்களின் தன்மையை முழுவதுமாக உள்வாங்கி, நடிப்பில் அற்புதமாக  வெளிப்படுத்தும் பாங்கில், ஒருவருக்கொருவர் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருப்பது சிறப்பு. சில நிமிடங்கள்தான் என்றாலும், அந்தப் பாத்திரத்திற்கு மனோபாலா ஏகப் பொருத்தம். அவர் இனி இல்லாதது பெரும் வருத்தம்.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவு ‘பளிச்’சென்று கண்களுக்குக் குளுமை. ஜஸ்டின் பிரபாகரனின்  மென்மையான பின்னணி இசையும் இனிமை தரும் பாடலிசையும் அருமை. ஜே.வி. மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பு, கச்சிதம்.

கதைக்கரு புதிதல்ல. அதைத் திரையில் தந்த விதம் அருமை. நகைச்சுவை குழைத்த வசனங்கள்; என்றாலும், சில ‘நறுக்’கென்று இருக்கின்றன.

என்னதான் திருமணமாகிவிட்டாலும், கணவனோ மனைவியோ அவரவர்க்கு உள்ள தனித்த அடையாளங்களை, திருமணத்திற்குப் பிறகு விட்டுவிட வேண்டும் என்கிற பரஸ்பர எதிர்பார்ப்புதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை. சமரசமின்றி இந்த எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து, பரஸ்பரம் துணை நின்றால் பிரச்சினைகளுக்கே இடமில்லை என்பதை, அழுத்தம் திருத்தமாகவும் கலை நயத்தோடும் சொல்வதில், இயக்குநர் யுவராஜ் தயாளன் வெற்றி பெற்றிருக்கிறார்.

பிரச்சினைகளில் உழலும் தம்பதியர், அவற்றைக் களைய ஏதுவாக, சுயபரிசோதனை செய்துகொள்ளவும், திருமணத்தை எதிர்கொள்ளும் ஆண் பெண்ணோ, காதலர்களோ, திருமண ஆலோசனையாகக் கொள்ளவும் அவசியம் இந்த, ‘இறுகப்பற்று’.

மதிப்பெண் : 8/10


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *