கண்டுகொள்ளப்படாத ‘கக்கன்’ திரைப்படம்

திரைப்பட அறிமுகம்: ரசல்ராஜ்

தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர்களாக இருந்த தந்தை பெரியார், கல்விக்கண் திறந்த காமராசர், துணிச்சல் மிக்க ஜெ.ஜெயலலிதா இவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படங்கள் திரையில் உலாவின. மக்களும் கண்டுகளித்தனர். அதே வரிசையில் நேர்மையின் சிகரமாகத் தமிழக அமைச்சரவையில் திகழ்ந்த அமைச்சர் ‘கக்கன்’ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட படமான ‘கக்கன்’ கடந்த ஆகஸ்ட் மாதம் 24இல் வெளிவந்தது.

‘என்ன கக்கன் படமா? எப்போ வந்துச்சு?’ என ஆச்சரியப்படவேண்டாம். வருத்தப்படவும் வேண்டாம். ‘கக்கன்’ படம் வந்ததும் தெரியாது; திரையரங்கை விட்டுக் காணாமல்போனதும் தெரியாது பலருக்கு. எழுத்தாளர் ஒருவர் எப்படியாவது ‘கக்கன்’ படத்தைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் திரையரங்கை நோக்கிச் செல்ல,
அவருக்கு முன்பாகவே திரைப்படம் திரையரங்கைவிட்டு வெளியேறிச் சென்றிருந்தது கண்டு, பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது எழுத்தாளருக்கு. நம் தமிழகத்தில் விளம்பரமில்லா நல்ல படங்களுக்கும் வரலாற்றுப் படங்களுக்கும் கிடைக்கும் வெகுமதி இதுதான்.

அடிதடிப் படங்களுக்கும் வன்முறையைத் தூண்டும் படங்களுக்கும்தான் திரையரங்குகள் திறந்திருக்கும்; நிறைந்திருக்கும். சமீபத்தில் வெளியான ‘சித்தா’, ‘ஹர்காரா’ போன்ற சிறந்த கதையமைப்பைக்கொண்ட எளிய, குறைந்த பட்ஜெட் படங்களுக்கும் இதே நிலைதான். இதுபோன்ற படங்களுக்கு மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை. படம் வந்ததே பலருக்குத் தெரிவதில்லை. தலித் இயக்கங்களும் கக்கன் படத்தைக் கண்டுகொள்ளவில்லை. சமூச அக்கறையுள்ளவர்களின் சமூக வலைதளங்கள் மூலமாகவும் இணைய இதழ்களின் மூலமாகவுவே இப்படங்கள் மக்களைச் சென்றடைகின்றன.

நேர்மையோடு, எளிமையாக, மக்களின் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ‘கக்கன்’ போன்ற மாமனிதர்களின் வரலாற்றைக் கூறும் படங்களை, குறைந்த கட்டணத்தில் திரையரங்குகளில் மக்கள் பார்க்கவும் கல்விக் கூடங்களில் மாணவர்கள் பார்த்து அறிந்துகொள்ளும் வகையிலும் அரசே முன்வந்து, ஏற்பாடு செய்ய வேண்டும். எத்தனையோ இலவசத் திட்டங்களை அறிவிக்கும் அரசு, கக்கன் படத்தைப் பார்ப்பவர்களுக்குச் சலுகைகள் அறிவித்திருந்தால் தியாகசீலர் கக்கனும் மக்கள் மத்தியில் தெரிவார். அரசும் பெருமை கொள்ளலாமே!

நேர்மையின் சிகரம் ‘கக்கன்’ படத்திற்கு ஜோசப் பேபி திரைக்கதை, வசனம் எழுதி அவரே கக்கனாக நடித்துமிருக்கிறார். தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருக்கிறார். ஒரு மணிநேரம் 40 நிமிடம் ஓடக்கூடிய இவ்வரலாற்றுப் படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவானது, தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி மற்றும் கக்கன் அவர்களின் மகள் கஸ்தூரி, பேத்தி ராஜேஸ்வரி (IPS) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது மகிழ்ச்சிக்குரியதுதான்.

1951 முதல் 1967 வரை தமிழக அமைச்சரவையில் உள்துறை, ஆதிதிராவிடர், விவசாயம், பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக இருந்தவர் கக்கன். கக்கன் அவர்களின் பேத்தியும் சேலம் சரக போலீஸ் அதிகாரியுமான ராஜேஸ்வரி (IPS), படத்தின் தொடக்கத்தில் ‘கக்கன்’ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த, படம் ஆரம்பமாகிறது.

முதல் காட்சியிலேயே, நினைவிழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கக்கனைப் பார்வையிட வருகிறார்கள் சிலர்.

மதுரை மேலூரில் உள்ள தும்பைப்பட்டியில் பூசாரி கக்கன் (கக்கனின் தந்தை) கோயில் பூசாரியாக இருந்து, குடிசை வீட்டில் மனைவி குப்பு (கக்கனின் அம்மா) உடன் எளிய வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். கக்கன் பிறப்பு (1908), சட்டைகூடப் போடாமல் திண்ணைப் பள்ளிப் படிப்பு என, அடுத்தடுத்த காட்சிகளாக எளிய வறுமை நிறைந்த வாழ்க்கை வரலாறு நகர்கிறது. வறுமையால் ‘ஹரிசன சேவ சங்கம்’ (மதுரை) மூலம் கக்கனைப் படிக்கவைக்க விடுதியில் சேர்த்துவிடுகிறார் பூசாரியான அவரின் அப்பா. ஒரு பாடத்தில் தோல்வி அடைகிறார் கக்கன். பள்ளியில் பணம் கட்டமுடியாமல் தவிக்கும் கக்கனுக்கு, வைத்தியநாதய்யர் உதவிசெய்து கடனையும் அடைக்கிறார். ‘ஹரிசன சேவா சங்கமும்’ உதவி செய்து கக்கன் படிப்பும் தொடர்கிறது.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்வை யவை (குறள்:400)

உணவைப்போல் கல்வியும் அவசியம் என வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு ‘இரவு நேரக் கல்வியை’ நிதியில்லாமல், சமூக ஆர்வலர்கள் மூலம் நடத்துகிறார் கக்கன் தம் இளமைப் பருவத்தில்.

கணபதி ஐயர் மதுரையில் ஆசிரியராகப் பணிபுரியும் ‘சொர்ணம் பார்வதி’யைக் கக்கனுக்கு மணமுடித்து வைக்க எண்ணி, பூசாரியான கக்கனின் அப்பாவிடம் கேட்க, பெண் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள் என்பதால் முதலில் மறுப்புத் தெரிவிக்கிறார் அவர். “நாங்க வீரமாகாளியைக் கும்பிடுகிற குடும்பம்; பொண்ணு வேதம் படிக்கிற பொண்ணு. எப்படிங்க?” எனத் தயங்குகிறார் கணபதி ஐயரிடம். பின்பு, ஊர்ப் பெரியவர்கள் கலந்து பேச, மிகவும் எளிய முறையில் சீர்திருத்தத் திருமணம், கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் தாலி எடுத்துக்கொடுக்க, திருமணம் (1932) நடைபெறுகிறது, ‘காந்தியடிகளின்’ பெரிய புகைப்படத்திற்கு முன்னால்.

திருமணம் முடிந்ததும் மனைவியிடம், “கல்வி அழியாத சொத்து. இயலாத குழந்தைகளை மதுரையில் விடுதி அமைத்துப் படிக்கவைக்க வேண்டும் பார்வதி. இதில் உனக்குச் சம்மதம்தானே?” எனக் கேட்க, “வள்ளுவனுக்கு ஒரு வாசுகி எனப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். எனக்கு முழுச் சம்மதங்க” என முகமலர்ச்சியோடு சொல்லும் சொர்ணம் பார்வதியின் வார்த்தைகள் அவருக்கு உறுதுணையான காட்சி.

மதுரையில் காந்தியடிகளைச் சந்தித்தபோது (1934), “தமிழ் எனக்குப் பிடித்த மொழி. தமிழர்களை நான் மிகவும் நம்புகிறேன்” எனக் கூறும் காந்தியடிகளிடம் கக்கனின் நேர்மையையும் நாட்டுப்பற்றையும் பற்றித் தெரிவிக்கிறார் காங்கிரஸ் தலைவர் N.M.R.சுப்புராமன்.

காங்கிரஸில் இணைந்த கக்கன், கோவில்களில் நுழைய ஹரிசன மக்களுக்கு இருந்த தடைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி, கோயில்களுக்குள் நுழைகிறார். அதில் தமிழக வரலாற்றில் முதல் வெற்றியும் பெறுகிறார். “சாதியையும், மதத்தையும் முதல்ல ஒழிக்கணும். அப்போதான் நமக்குள்ள சமத்துவம் பிறக்கும்”, “நமக்குள்ளயே ஒத்தும இல்ல; பின்ன எப்படி வெள்ளக்காரங்கக்கிட்ட போராடி விடுதலைய வாங்கமுடியும்?” என்று அமைதியாகப் பேசும் இடங்களில் கக்கனின் விடுதலை தாகம் தென்படுகிறதைக் காணலாம்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து ‘வந்தே மாதரம்’ என முழங்கியதற்காகவும் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததிற்காகவும் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் கடுங்காவலில் சிதைக்கப்படுகிறார்; நினைவிழக்கிறார். அக்கொடூரக் காட்சியைக் கண்ட அவரது மனைவி கண்ணீர் சிந்தும் காட்சி நமக்கும் துயரம்தான். நம் கண்ணிலும் வெள்ளம்தான்; வேதனைதான்.

விடுதலையாகி, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் மாறுவேடமிட்டு (பர்தா அணிந்து) மறைவாகத் தன்னைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்கிறார். வீண்பழி சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதியின் கேள்விகளுக்கு, “தமிழன் ஒருநாளும் இந்தியாவைக் காட்டிக்கொடுக்க மாட்டான்” என்று விடுதலை உணர்ச்சி பொங்கக் கூறும் காட்சி, நம்முள்ளத்திலும் உணர்வைத் தூண்டிவிடுகிறது. 18 மாதச் சிறைத் தண்டனையை அலிப்பூர் மத்தியச் சிறையில் பட்டினியாக இருந்து, கல்லுடைத்து, லத்தியால் முதுகில் அடிக்கு மேல் அடி வாங்கும் காட்சிகளைக் காணும்போது, உண்மையிலேயே அவர் இதைவிடக் கொடுமைப்படுத்தப்பட்டிருப்பார் என்றெண்ணிக் கண்கள் குளமாகின்றன.

இந்திய விடுதலைக்குப் பின், தமிழக முதலமைச்சர் காமராசரின் ஆட்சியில் ‘கக்கன்’ அமைச்சராகிறார். ஒப்பந்த அடிப்படையில் போடப்பட்ட தரமற்ற சாலைகளை நேரிலே பார்வையிட்டுக் கண்டிக்கிறார்; ரத்தும் செய்துவிடுகிறார். மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கான (1966) ஆணையை கக்கன் மற்றும் அமைச்சர்களோடு கலந்தாலோசித்துத்தான் முடிவெடுக்கிறார் கர்மவீரர் காமராசர். “விவசாயிகளின் எதிர்காலமும் குழந்தைகளின் கல்வியும் ரெண்டு கண்ணுங்றேன். அட.. என்ன நான் சொல்றது சரிதான..” என்று திருநெல்வேலியின் வட்டார மொழியோடு காமராசர் பேசுவதைக் கேட்க இனிமையாக இருக்கிறது. அவரின் அக்கறையும் இனிமையிலும் இனிமையல்லவா!

ஒருமுறை கக்கன் அவர்களின் வீட்டிற்குக் காமராசர் வர, அரிசிகூட இல்லாமல் சொர்ணம் பார்வதியும், மகள் கஸ்தூரியும் விழிக்க, அதை நாசூக்காக அறிந்த காமராசர், வறுமை நிலையை அறிந்து சொர்ணம் பார்வதிக்கு அரசு வேலை ஒன்றை ஏற்பாடு செய்கிறார். இதை அறிந்த கக்கன் காமராசரிடம், “அண்ணன், என்னோட வறுமை நிலையை வச்சு என் மனைவிக்கு நீங்க வேல போட்டு கொடுத்தது உங்க பதவிய நீங்களே துஷ்பிரயோகம் செஞ்ச மாதிரி. தமிழகத்தில் எத்தனையோ படித்த மக்கள் வேலையில்லாம இருக்காங்க. முதல்ல 1000 பேருக்கு வேல போட்டு குடுங்க. அவளோட வேலைய வாபஸ் வாங்குங்க” என்று உணர்ச்சி ததும்பக் கூறும்போது, கேட்கும் காமராசரே கண் கலங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது படத்தில்.

காமராசர் ஆட்சியைப் போன்று ‘இனிமேல் வாரோதோ’ என எதிர்ப்பார்க்க முக்கியக் காரணமே, கக்கன் போன்ற நேர்மையான அமைச்சர்கள் மட்டுமே காமராசர் ஆட்சியில் இடம் பெற்றிருந்ததுதான்.

தும்பைப்பட்டி சென்று அப்பா அம்மாவைப் பார்க்கிறார் அமைச்சர் கக்கன். அங்கு ‘தீட்டு’ எனச் சொல்லி, கிராமத்தின் ஒரு பிரிவினரைத் தண்ணீர் பிடிக்கவிடாமல் செய்கின்றனர், அதே கிராம மக்களின் மற்றொரு பிரிவினர். இரு பிரிவினரையும் பஞ்சாயத்துக்கு அழைத்து, அமைச்சராக இருந்தாலும் பஞ்சாயத்தின் தீர்ப்புக்கு ஒரு ‘அமைச்சரே’ கட்டுப்பட்டு குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் காட்சி மனத்திற்கு இதம்.

படத்தில் கக்கனின் நேர்மைக்குச் சான்றாக மற்றுமொரு காட்சி. கக்கன் காவல்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது தம்பியான விஸ்வநாதனுக்குக் காவல்துறையில் வேலை கிடைத்ததை அறிந்து, தம்பியிடம் வேலையை விட்டுவிடும்படியாகவும் வேலைக்குத் தேர்வு செய்த அதிகாரியிடம் “அவனது கையில் விரல் கோணலாக இருக்கிறது. அவனால் எப்படி துப்பாக்கியைப் பிடித்து மிகச்சரியாகச் சுடமுடியும்? நம் நாட்டில் திறமைக்குத்தான் வேலை. நான் காவல்துறை மந்திரியாக இருப்பதால்தானே அவனுக்கு வேலை கொடுத்தீர்கள்?” என்று நேர்மை தவறாமல் கூறும் காட்சியைப் பார்க்கும்போது மெய்சிலிர்த்துவிடும். இப்படி இக்காலத்தில் அமைச்சரில் யாரேனும் இருப்பார்களா?!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ‘அட, நாடு நமக்கு மட்டும் சொந்தமில்ல. அவங்களுக்கும்தான்’ என்ற காமராசரின் வாய்மொழி, 1967 தேர்தல் பரப்புரைகளில் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும் கலைஞரின் குரல், நேர்மையான காமராசர் மற்றும் கக்கன் ஆகியோரின் தேர்தல் தோல்வி, உதயமாகும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, பணப்புழக்கத்தால்தான் வெற்றி என்ற பேச்சு (இன்றைக்கும் அதே நிலைதானே).

உடல் நலம் குன்றிப் பல்லவன் பேருந்தில், போதிய காசுகூட இல்லாமல் பயணிக்கும் கக்கனின் எளிமை, மதுரை இராசாசி மருத்துவமனையில் தரையில் படுத்தபடி மேற்கொள்ளும் முடக்குவாதச் சிகிச்சை, தற்செயலாக வந்த எம்.ஜி.ஆர் விவரமறிந்து முதல் தர சிகிச்சைக்கு உத்தரவு, ஆட்சியின்போது வரும் நன்கொடைகளை அரசுப் பதிவேட்டில் குறித்துக்கொள்ளும் காட்சி (தங்கப் பேனாவையே வேண்டாம் என்றவராச்சே), அரசு ஊழியர் தன் வீட்டிற்கு மண்ணெண்ணெயை வாங்கி வருவதைக் கண்டு அவரையும் மனைவியையும் கடிந்துகொள்ளும் காட்சி என, அன்று நடந்ததைச் சிறந்த காட்சிகளாக நாம் வியந்து பார்க்கும் அளவுக்கு, நமக்கெல்லாம் நினைவூட்டி இருக்கும் படக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால், ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை இப்படம் தரவில்லை. ஆவணப்படம் போன்ற உணர்வைத்தான் தருகிறது. கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அத்தனை அழுத்தமில்லை. அவர்களுடைய குறைந்த பொருளாதரத்தில் இதுவே பெரிய முயற்சியாகத் தோன்றுகிறது. ஆயிரம் குறைகளுடன் பல கோடிகள் செலவழித்து, வரலாற்று நாவல்களே வருந்தும்படியாகப் படமெடுக்கும் இந்தத் திரையுலகில், ‘நேர்மையாக’ வாழ்ந்த அமைச்சர் ‘கக்கன்’ அவர்களை என்றும் அழியாத் திரைக்காவியமாக உலகறியச் செய்த ‘ஜோசப் பேபி’ மற்றும் படக்குழுவினர் அனைவரும் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்தான். படத்தின் முடிவில், இரண்டாம் பாகம் வருவதாக அறிவித்துள்ளார்கள்.

இரண்டாவது பாகத்தையாவது இயல்பான நடிப்பில் எடுத்தால் பார்க்க ஆர்வமாக இருக்கும். வாழ்க்கை வரலாறைத் தெரிந்துகொள்வதற்காக ஒருமுறையாவது இப்படத்தைப் பார்க்கலாம். நேர்மையை, எளிமையைக் கண்டு வியக்கலாம். இவ்வரலாற்றை இளையோர்க்குக் காண்பித்து, அவர்களையும் வருங்காலத்தில் நல்ல தலைவர்களாக உருவாக்கலாம். நான் இப்படத்தைப் பார்த்ததே ‘Telegram app’இல்தான். என்ன செய்ய? திரையில் பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லையே!

இறுதிக் காட்சியாக, சிகிச்சை பலனின்றி, தமிழகத்தின் நேர்மையின் அடையாளம், தமிழ் போற்றும் எளிமையின் அடையாளம், அரசு மருத்துவமனையிலேயே சரிகிறது (1981). வேதனையின் உச்சக்காட்சி இதுதான். இறந்த அவரது உடலைக் காணக் கலைஞர் மு.கருணாநிதி, முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆகியோர் வருவதாகப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காகவே எளிமையாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் சுயநலமில்லாமல் வாழ்ந்த தலைவர்களைப் பற்றிய திரைப்படங்களை இக்காலத் தலைமுறையினர் பார்த்துத் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நல்வழியைக் கடைபிடித்து, கக்கனைப் போன்ற நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுத்தால் நன்மை பிறக்கும் நாட்டு மக்களுக்கு. மேலே சொன்னதுபோல, இன்றைய தலைமுறையினர், கக்கன் போன்ற வரலாற்றுப் படங்களுக்கு ஆதரவு தரவேண்டும். அரசும் இதற்குப் பெரிதும் உதவவேண்டும். திரைப்படத் துறையில் உள்ளவர்களும் மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் குரல் எழுப்ப வேண்டும். இதுபோன்ற படங்களுக்குப் பெரிய அளவில் வருமானம் தேவையில்லை. பெரிய அளவில் மக்களிடம் சென்றடைந்தாலே போதுமானது.

– வன்முறைப் படங்களுக்கும் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் கொடி பிடிக்கும் இளைய தலைமுறை, நாட்டுப்பற்று மிக்க தலைவர்களின் படங்கள் எனத் தெரிந்தும் அதற்கு எள்ளளவும் பங்களிப்பைத் தராமல் கண்ணைக் கட்டிக்கொள்வது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். இன்றைய ஆட்சியில் அமைச்சராக இருப்பவர்களின் அசையும் சொத்து, அசையாச் சொத்துகளின் அளவு உயருமே தவிர, ஒருபோதும் வறுமை நிலையில் இருக்கிறார்கள் என்ற பேச்சுக்கே துளியளவும் வாய்ப்பில்லை. காமராசர் ஆட்சியின் போது, அரசு அளித்த நிலத்தையே ஏழை எளிய மக்களுக்குத் தானமாக வழங்கியவர் கக்கன் என்ற மாமனிதர். தமிழக முன்னாள் அரசு ‘கக்கன்’ அவர்களின் நேர்மையைப் பாராட்டி, அவருடைய உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டதும் தும்பைப்பட்டியில் மணிமண்டபம் எழுப்பியதும் உண்மையிலேயே கைத்தட்டலுக்குரியதுதான். நேர்மை என்றும் நிலைக்கட்டும் என்று சொல்லி முடிப்போம்.

  • ரசல்ராஜ், திருநெல்வேலி

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *