திருப்பூர் எனும் திருப்புமுனை – 20
தொழிலாளர் மேம்பாடும் திறன் மேம்பாடும்
கடந்த அத்தியாயத்தில் திருப்பூரின் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பார்த்தோம். இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பார்ப்போம்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் என்றாலும் உள்நாட்டு உற்பத்தி, அதில் உள்ளாடைகள் உற்பத்தி மற்றும் இதர ஆடைகள் உற்பத்தி, ஏற்றுமதிக்கான உற்பத்தி என, பல்வேறு வகைகளில் இங்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வகை உற்பத்தியிலும் இயந்திரங்கள் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும் திறன் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் மாறுபடும் நிலை உள்ளது. உள்ளாடைகள் உற்பத்தியைப் பொறுத்தமட்டில் ஒரே சீரான வேலைவாய்ப்பும் ஒரே மாதிரியான ஆடைகளை உற்பத்தி செய்யும் முறையும் உள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி உற்பத்தியைப் பொறுத்த மட்டில் குறிப்பிட்ட வகை ஆடைகளை மட்டுமே தயாரிக்கும் நிறுவனங்கள் சீரான வாய்ப்புகளையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உற்பத்தி முறையையும் கையாள்வது நடைமுறையில் உள்ளது.
மேலே குறிப்பிட்ட உற்பத்தி முறைகளைக கடந்து ஒவ்வொரு ஆர்டர்களும் வெவ்வேறு வகைகளில், வடிவங்களில் தயாரிக்க வேண்டிய சூழலைப் பல நிறுவனங்கள் சந்திக்கின்றன. அந்த நிலை தொழிலாளர்களின் திறனுக்கான சோதனையாகவும் அமைகிறது. அது மட்டுமல்ல. ஒரேவிதமான வேலையைச் செய்வது தொழிலாளர்களுக்கு ஒருவிதமான சலிப்புத் தன்மையை உருவாக்குவதால் ஒரே தொழிற்சாலையில் நீடிப்பது கேள்விக்குறியாகிறது. இதனால் உற்பத்தித் தடை, தரத்தில் குறை, கால தாமதம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன. ஒருபுறம் தொழில் வளர்ச்சியில் கவனத்தைச் செலுத்திய அளவுக்கு இதைப்போன்ற நுண் விடயங்களை நாம் தவறவிட்டதாகவே கருதுகிறேன்.
சிறிதும் பெரியதுமாக, அனைத்து உற்பத்தி நிலையிலும் ஏறத்தாழ 20000 தொழில் நிறுவனங்கள் உள்ளன. சுமார் ஆறு லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் இங்கு பணியாற்றினாலும் தொழிலாளர் சேம நல நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதித் திட்டங்களின் கீழ் இரண்டு லட்சத்திற்குக் குறைவானவர்களே பதிவு செய்துள்ளனர். இதுகுறித்துத் தொழிலாளர்கள் தரப்பில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது ஒருபுறம். மற்றொரு புறம், தங்களின் சிறிய பங்களிப்பைச் செலுத்துவதில் உள்ள மனத்தடையால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணிக்காலச் சலுகைகளை இழந்து வருகின்றனர். இந்த நிலையை மாற்ற அரசு, தொழில் முனைவோர் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
இன்னும் இரு அவலங்களையும் இங்கே குறிப்பிட்ட விரும்புகிறேன். நாள் சம்பளம் என்பதைக் கடந்து பீஸ் ரேட், அதாவது எவ்வளவு ஆடைகளைத் தைக்கின்றார்களோ அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆடைக்குமான கட்டணத்தை நிர்ணயம் செய்து, வார இறுதியில் தைத்த ஆடைகளுக்கு ஏற்ப சம்பளத்தைப் பெறுகின்றனர். இது குறுகிய காலத்தில் பெரும் பயனை அளித்தாலும் பல்வேறு உரிமைகள் மற்றும் சலுகைகளை இழப்பதோடு, தரம் மற்றும் தொடர்ந்து தொழிற்சாலைகளை மாற்றிச் செல்லும் போக்கு என ஆரோக்கியமற்ற சூழலுக்கு வழிவகுத்துள்ளது. பல சிறிய உற்பத்தி நிறுவனங்கள் இந்தப் போக்கினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி, தொழிலை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு அவலம், உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படும் தாமதங்களைச் சரி செய்ய, இறுதியாக ஆடைகள் தயாரிப்பை வேகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவர். இந்த அழுத்தம் மொத்தமும் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படுகிறது. தங்களது நிறுவனம் சிரமப்படக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தொழிலாளர்களும் கடுமையான உழைப்பினைக் கொடுத்து நிறுவனத்தின் சிரமத்தைக் குறைக்க உதவுவர். ஒருகட்டத்தில் இது ஒரு கலாச்சாரமாகவே மாறி, தொழிலாளர்கள் மத்தியில் ஒருவிதமான சலிப்புத் தன்மையை ஏற்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும்.

எப்பொழுதுமே திருப்பூரைப் பொறுத்தமட்டில், ஆட்கள் பற்றாக்குறை என்பது நிரந்தரம். இதைப் பயன்படுத்தி அடிக்கடி தொழிலாளர்களும் தொழிற்சாலைகளை மாற்றும் போக்கும் ஆங்கங்கே நடக்கவே செய்கிறது. இது உற்பத்தி, தரம் மற்றும் கால தாமதத்தை ஏற்படுத்தி, தொழில் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் சூழலும் இருக்கவே செய்கிறது. இவற்றையெல்லாம் கள ஆய்வுக்கு உட்படுத்தி, தொழில் முனைவோர் தரப்பும் தொழிலாளர் தரப்பும் கலந்துரையாடி, நல்லதொரு வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவேண்டிய முக்கியத் தேவை உள்ளது.
திறன் மேம்பாடு மற்றும் தொடர் பயிற்சிகள், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை சமீப வருடங்களில் ஏற்பட்டு, அதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. மத்திய மாநில அரசுகள் திறன் மற்றும் தர மேம்பாடு குறித்து மிகுந்த அக்கறை கொண்டு, அதற்கான திட்டங்களை வகுத்து, தொழிலுக்கு உதவுகின்றன.
அதுமட்டுமல்ல; நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில், திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. அதனைச் சரியான முறையில் தொழில்துறையினர் பயன்படுத்தி, தங்களுக்கான தொழிலாளர்களை உருவாக்கிக் கொள்கின்றனரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. திருப்பூரைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கஜா புயல் சமயத்தில மீட்பு நடவடிக்கைக்காக சில நாட்கள் டெல்டா பகுதியில் பயணம் செய்தேன். அங்கே ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றித் தவிப்பதைக் காண நேர்ந்தது. குறிப்பாக, மீனவக் குடும்பத்துப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறவே இல்லை என்றே சொல்லலாம். அவர்களுக்கான வேலைவாய்ப்பினை அளிக்கும் வல்லமை ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிலுக்கு உள்ளது. ஏனெனில், அவர்களைப் புலம் பெயரச் செய்ய இயலாது. ஆனால், உற்பத்தித் தொழிற்சாலைகளை அங்கே அமைக்கலாம்.
நாளது தேதியில் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சிறந்த சாலை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதைப் பயன்படுத்தித் தொழிலாளர்களை தொழில் அமைந்துள்ள திருப்பூருக்கு வரவழைப்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் நிறைந்த பகுதிக்குத் தொழிற்சாலைகளைக் கொண்டு செல்வதன்மூலம் தொழிலை வளர்ப்பதோடு வேலைவாய்ப்புகளைப் பரவலாக மாநிலம் முழுவதும் ஏற்படுத்த இயலும்.
கொங்குப் பகுதியைப் பொறுத்தமட்டில், அதிக அளவு தொழில் வளர்ச்சியைக் கொண்ட மாவட்டங்கள் உள்ள பகுதி இது. இந்தியாவின் முன்னணி மாநிலமாக இருந்தும் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசில் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தாலும் மாவட்டங்களுக்கிடையே ரயில் போக்குவரத்தை மேம்படுத்தாமல் விட்டுவிட்டனர். ரயில் போக்குவரத்தை அதிகரித்தால் நிச்சயமாக இன்னும் பெருமளவு வேலைவாய்ப்பிற்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.
ஆயத்த ஆடைத் துறையைப் பொறுத்தமட்டில் எந்த அளவு இயந்திரங்கள் அவசியமோ அந்த அளவுக்கு தொழிலாளர்களும் மிக அவசியம். அந்தவகையில் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல, உற்பத்திச் செலவில் பெரும்பகுதியைத் தொழிலார்களின் திறன் குறைவு காரணமாகச் செலவிடுவதைக் கருத்தில்கொண்டு, அதை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்லும்.
இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு குடும்பத்தில் இருவர் ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணியாற்றினால், குறைந்தது மாதம் இருபதாயிரத்திற்கும், கூடுதலாகப் பொருளீட்டலாம். முன்புபோல் இல்லாமல் தற்காலத்தில் தொழிற்சாலைகள் சர்வதேசத் தரத்தில் அமையப்பெற்றுள்ளன. சரியான அணுகுமுறையை மேற்கொள்வதான் மூலம் நிச்சயம் ஏரளமான தொழிலாளர்களை இந்தத் தொழிலுக்கு ஈர்க்க முடியும்.
மீண்டும் வரும் திங்களன்று வேறு சில தரவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
- குமார் துரைசாமி

Comments (0)