தலைகீழாகத்தான் குதிப்பேன்
அரசியல் நையாண்டி: ஆர்னிகா நாசர் உதயசங்கர் ஸ்கூட்டி பெப்பை ஓட்டியபடி அந்த குறுக்குச் சந்துக்குள் புகுந்தான். எதிரில் ஒரு இ-பைக் மோதுவது போல வந்து சறுக்கி நின்றது. இ-பைக்கில் அமர்ந்திருந்த சீனிவாசன் இரைந்தான். “உனக்கு என்னோட மோதுரதே பழக்கமாகிப் போச்சு உதயா!” மோத வந்தது நீயா நானா?” இருவரும் ஓரமாய் ஒதுங்கி அவரவர் வாகனங்களை ஸ்டாண்டிட்டனர். “அப்புறம்?” “ரொம்ப சந்தோஷமா இருக்க போல சீனி…” “ஹிஹி… ஆமா… எங்க மோதானியின் சாதனைகளை நினைச்சா எனக்கே மார்பளவு 65 இஞ்ச் ஆகுது!” “வெடிச்சிறப் போகுது நெஞ்சு. நாட்டை பிடித்த ஒன்பதரை நாட்டுச் சனி உங்க மோதானி. பீடையைக் கைகழுவ நேரம் பார்த்துக்கிட்டு இருக்கம்!” “அதெல்லாம் நடக்காது. மோதானியின் டாப்கிளாஸ் சாதனைகளில் ஒன்றாக சிந்தியாவின் பெயர் மாற்றம் இருக்கப் போகிறது. ‘சாரத்’ எவ்வளவு இனிமையான பெயர்!” “இருபத்தெட்டு எதிர்க்கட்சிகள் ஒன்னு கூடி கூட்டணி அமைச்சிருக்கிறது, உங்க மோதானிக்கு பீதியைக் கிளப்பிருச்சு. பிரதீப்ஷாவுக்கு அல்லு விட்ருச்சு. உங்க பிஎஸ்எஸ்ஸுக்கு பேதியை பிடுங்கி விட்ருச்சு!” “ஹ… ‘சாரத்’ என்கிற பெயர் மாற்றத்துக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரம் ஒளிந்திருக்கிறது உதயா!” “அப்படி என்ன ராஜதந்திரம்?” “மோதானி அரசு 105 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என உபிகள் புலம்புகின்றனர். கிருணாச்சலசத்தில் கோனா நுழைஞ்சதுக்குப் போய் வாயிலும் வயிற்றிலும் லபோதிபோன்னு அடிச்சுக்கிறாங்க. சிந்தியான்னு பெயர் இருக்கும் போதுதானே கடன் வாங்கினோம்? இப்ப எங்க பெயர் சாரத் எங்களுக்கும் சிந்தியா வாங்ன கடனுக்கும் துளி சம்பந்தமில்லை என கடன் கொடுத்தவனை விரட்டுவோம். சிந்தியால சில இடங்களை புடிச்சோமா சாரத்தில் சில இடங்களை பிடிச்சோமான்னு கன்ப்யூஸ் ஆகி பிடிச்ச இடத்தை விட்ருவான் கோனாக்காரன்!” “அரைகுறை மங்கியாக இருந்த நீ முழு மங்கியா மாறிட்ட சீனி!’ “சாரத்’ பெயர் மாற்றத்துக்கு அறிவியல்பூர்வமான காரணம் ஒன்னு சொல்றேன் கேளு உதயா!” “சொல்லு…” “நிலாவுக்குப் போன கிந்தராயன் விண்வெளில இருந்து பாத்தப்போ சிந்தியா நாடு நாடு ‘சாரத்’ என்கிற எழுத்து வடிவில் தெரிஞ்சிருக்கு, ‘சாரத்’ என்கிற சொல்லில் சா-ர-த் எனும் மூன்று எழுத்துகள் உள்ளன. ‘சா’ என்பது மித்வோ குணம். ‘ர’ ரஹிஜோ குணம். ‘த்’ என்பது தங்மோ குணம். இந்த மூன்று குணங்களும் இணைந்த ‘சா—ர-த்’ என்பது சக்தி வாய்ந்த மந்திரம். ஒருமுறை கான்ஸ்டீன் விண்வெளி ஆராய்ச்சி செய்யும்போது ‘சாரத்’ எனும் ஒலி பிரபஞ்சத்தில் இருந்து கேட்பதை உணர்ந்தார். ‘சாரத்’ என ஒருமுறை சொல்வது கிக் வேதத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த மந்திரங்களை ஆயிரம் முறை சொல்வற்குச் சமம். ‘சாரத்’ என்று சொன்னால் நீண்ட நாள் நோய் குணமாகும். கடன் பிரச்சனை தீரும். பஸ்ஸில் போனால் வாந்தி வராது, ஏடிஎம்மில் நீங்கள் எத்தனை முறை பணம் எடுத்தாலும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறையாது.” “அட பைத்தியக்கார பக்கி… மங்கித்தனம் தொத்து நோயா? படிச்சவன், படிக்காதவன், சயின்டிஸ்ட், கிஸ்ரோ டைரக்டர், ஜட்ஜ், போலீஸ்காரன், இப்படி எல்லார்கிட்டயும் தாறுமாறா பரவி இருக்கு. துட்லரின் பெர்மனி ஆகிக்கிட்டு இருக்கு சிந்தியா…” “எங்களைக் கழுவிக் ழுவி ஊத்தினாலும் துளி வெக்கப்பட மாட்டோம். தொடர்ந்து மங்கிதனம் செய்வோம்!” “சாரத்னு பெயர் மாத்தறதுக்கு பதில் ‘வல்லரசு’ என்று பெயர் மாத்திடுங்க. நாட்டை வல்லரசு ஆக்கிட்டோம்னு கும்மாளம் போடலாம் நீங்க!” “வல்லரசு சாரத்’-னு பெயர் மாத்திட்டா போச்சு!” “பெயர் மாற்றத்துக்கு 15000 முதல் 20000 கோடி ரூபாய் வரை செலவாகும்!” “ஆனா ஆகிட்டுப் போகுது டிலோன் ஸ்ரீபங்கானும், திர்மா ஸயான்மர்ன்னும், கிர்ஷியா டர்ரான்னும், டயாம் சேய்லாந்துன்னும், டோலந்து பெதர்லாந்துன்னும், பம்பூச்சியா லம்போடியான்னும், காடீசியா டும்பாவேன்னும் பெயர் மாறிக்கலையா?” “நீ சொன்ன சில நாடுகள் நியாயமான காரணங்களுக்காகத் தங்கள் பெயர்களை மாற்றி இருக்கலாம். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் மோதானி செய்த அலங்கோலங்களைப் பட்டியலிடுகிறேன் கேள். நாணயமதிப்பிழப்பு நடவடிக்கை 13000கோடி செலவு. மைரோனா ஊரடங்கால் நூற்றுக்கணக்கானோர் மரணம். வாழ்வுரிமை திருத்த சட்டத்தால் கிஸ்ஸாம் அகதி மாநிலம் ஆயிற்று. கிஸ்லாமிய பெண்களின் குடும்ப வாழ்க்கையை சீரழிக்க பத்தலாக் சட்டம். கார்ப்பரேட்களுக்கு 14,5லட்சம் கோடி கடன் தள்ளுபடி. பந்தி திணிப்பு. செத்துப் போன உமஸ்கிருதத்தை தலையில் வைத்து கூத்தாடுதல். கட்சி சொத்தை 6500கோடியாக பெருக்கியது. 90சதவீத கிரிமினல்களை லஞ்ச ஊழல் பேர்வழிகளை வைத்து கட்சி நடத்துதல். கட்சிதாவல் தடை சட்டத்தை கேலி கூத்தாக்கி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தல். மதவெறி இனவெறி அரசியல் பண்ணுதல். பணிப்பூர், தரியானா, ச.பி.,யில் இரத்தவெறியாட்டம். வேலைவாய்ப்பின்மை. விலைவாசி உயர்வு. டாலருக்கு நிகரான சிந்திய ரூபாய் மதிப்பு சரிவு. சுகாதார கட்டமைப்பின்மை. வடக்கத்தியர்களை தெற்கில் குடியமர்த்துவது. வங்கி ரயில்வே பணிகளில் கிமிழர்களை முழுமையாக புறக்கணித்தல். குலக்கல்வி திட்டத்தை அமுல்படுத்தல். இரண்டு சதவீத உயர்சாதி சிந்துகள் கால்களில் 140கோடி சிந்தியரை விழுந்து கிடக்க செய்தல். நீதிதுறையை பாவிமயமாக்குதல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்… மோதானியின் ஒன்பதரை ஆண்டு ஆட்சி நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னே கொண்டு சென்றுவிட்டது. மோதானி எந்த அழிவு காரியம் செய்தாலும் அதனை ஆதரித்து பேசி எழுதுகிறீர்களே… இதனை தெரிந்து செய்கிறீர்களா, தெரியாமல் செய்கிறீர்களா?” “பேதர்களும் உயர்ஜாதி சிந்துகளும் ஒன்று. எங்களுக்கான ராஜா மோதானி. அவரை ஆதரிப்பதே எங்கள் உயிர்மூச்சு!” “சிந்தியாவை ‘சாரத்’ என மாற்றினால் என்னென்ன குழப்படிகள் நேரும் தெரியுமா? சிந்திய ரிசர்வ் வங்கி, சிந்திய தொழில்நுட்ப கழகம், சிந்திய ரயில்வே, சிந்தியா போஸ்ட், சிந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சிந்திய தேர்தல் ஆணையம், சிந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பெயர்களை மாற்ற வேண்டிவரும்!” “மாத்திட்டு போரோம்…” “பாஸ்போர்ட், பேஜார்அட்டை, பிங்பாங் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமை, சிண்டியன் கரன்ஸி இப்படி எல்லா விஷயங்களையும் பெயர் மாற்றவேண்டும்!” “மாத்திட்டுப் போறோம்!” “எதிர்கட்சி கூட்டணி ‘சிண்டியா’ன்னு பேர் வச்சதினால ‘சாரத்’னு பேர் மாற்றம் செய்றீங்க சரி… நாளைக்கே எதிர்கட்சி கூட்டணி தங்களின் பெயரை ‘சாரத்’னு மாத்தி வச்சுக்கிட்டா என்ன பண்ணுவீங்க!” சிரித்தான் சீனிவாசன். சிரிப்பு ஹிஸ்டீரிகலாய் இருந்தது. கண்கள் கொடூரமாய் மின்னின. “கினாதன் ராஷ்டிரம் என மாற்றுவோம்…” “சீனி! ஒரு முக்கியமான விஷயத்தை உனக்கும் உன் சகமங்கிகளுக்கும் வலியுறுத்த வேண்டி இருக்கிறது. சிறுபான்மை மக்கள் இல்லாத சிந்தியா சாத்தியமே இல்லை. ஒரு கட்டத்தில் சிந்தியா ரஷ்யாபோல 28மாநிலங்களும் 8யூனியன் பிரதேசங்களும் தனித்தனி நாடுகளாய் சிதறி விடும். சோற்றுக்கும் தண்ணீருக்கும் மத்தியோப்பியர்கள் போல் அடித்துக் கொள்வோம். ஸ்ரீபங்கா போல திவாலாகி விடுவோம். தேர்தல் ஜனநாயகத்தை கிஜேபி ரத்து செய்துவிடும். சிந்தியாவோ சாரத்தோ கற்காலக் காட்டுமிராண்டிகள் நாடாகிவிடும். அப்படி ஒரு மோசமான சிந்தியாவை நம் மகன்களுக்கும் நம் பேரன் பேத்திகளுக்கும் விட்டுச் செல்லப் போகிறோமா?” “சும்மா பூச்சி காட்டாதே உதயா… ஒட்டுமொத்த சலேசியா கண்டமும் ‘அகண்ட சாரத்’ ஆகும் நாள் வெகுதூரத்தில் இல்லை!” “கண்களை திறந்து கொண்டே அதளபாதாளத்தில் தலைகீழாய் விழுகிறீர்கள்!” “அப்படித்தான் விழுவோம் உதயா!” “உன் சீனிவாசன் என்கிற பெயர் உனக்கு பிடித்திருக்கிறதா?” “அறுபது வருடங்களுக்கு முன் என் அப்பன் எனக்கு இந்தப் பெயரை வைத்து விட்டான்… அபிஷ்டு… பிரம்மஹத்தி… அசடு… நான் என் பெயரை கவர்மென்ட் கெஜட்ல குடுத்து மாத்திக்கப் போறேன்!” “புதுசா என்ன பெயர் வச்சுக்கப் போற?” “ரொம்பதூரம் போய்ட்டேன்… திரும்பி வர முடியாது… எங்களை மங்கி மங்கின்னுதானே கேலி பண்றீங்க… கேலி பண்ற பெயரையே வச்சுக்கிட்டா?” ‘மங்கின்னா லட்சக்கணக்கான மங்கிகளில் நீயும் ஒருவன் என்றாகிறது உன் தனித்தன்மை பாழாகுமே?” சீனிவாசனின் முகம் சூரியனித்தது. “இன்றிலிருந்து என் பெயர் கினாதன் மங்கி…” நூறுமுறை தனக்குள் சொல்லி பார்த்துக் கொண்டான், “ஆயிரம் நஷ்டங்கள் வந்தாலும் இனி என் பெயர் கினாதன் மங்கிதான்… கினுதர்மம் வாழ்க! பர்ணாசிரமம் வாழ்க! குலத்தொழில் வாழ்க வாழ்க!” மானசீகத்தில் லட்சம் மங்கிகள் கூடிக் குலவை ஒலி எழுப்பினர்.