நகைச்சுவைச் சிறுகதை

குளித்து முடித்து வெளியே வந்தார் சின்னமலை. வயது 42. உயரம் 170 செமீ, மார்பளவு 40 அங்குலம். திராவிட நிறம், தூக்கி வாரப்பட்ட சொற்பக் கேசம், சகுனி கண்கள், மீசை இல்லாத சுயசவர முகம். பூஜையறைக்கு வந்தார். அனுமன் விக்கிரகம் முன் வந்து நின்று, அனுமன் சாலீஸா மந்திரத்தை ஓத ஆரம்பித்தார்.

“ஜெய ஹனுமானே! ஞானக் குணக்கடலே!
உலகத்தின் ஒளியே வானரர் கோனே!
ராம தூதனே! ஆற்றலின் வடிவமே!
அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே…”

தொடர்ந்து ஓதி முடித்தவுடன் தனக்குள் முணுமுணுத்தார் சின்னமலை.

‘ஜிலேபி கட்சிக்கு மாநிலத் தலைவராக, கும்பிடுற சாமியையே மாத்த வேண்டி இருக்கு பாரேன்.. முனியப்பனைக் கும்பிட்டு, சாராயம் குடிச்சிட்டு கறிவிருந்து சாப்ட்டுட்டு மல்லாக்ற சுகத்தை விட்டு ரெண்டு வருஷமாகுது. சில சமயங்களில் கட்சில இருக்கோமா அல்லது ட்ராமா கொட்டகைக்குள்ள இருக்கோமான்னு சந்தேகம் வந்திருது. நொடிக்கு நொடி வேஷத்தை மாத்திக்கிட்டே இருக்க வேண்டியதாயிருக்கு.. “

யாரோ வரும் சத்தம் கேட்கவே, (சத்தமாக) “ஜெய் பஜ்ரங் பலி!”

உதவியாளன் அண்டா மணி வந்தான். உருண்டு திரண்ட அவன், சபாரி அணிந்திருந்தான். நெற்றியில் விபூதிப் பட்டை. நடுவில் குங்குமம்.

“காலை வணக்கம் தலைவரே”

“காலை வணக்கம் மணி!”

“தலைவரே.. எனக்கொரு சந்தேகம்”

“கேளுடா..”

“நீங்க நிஜமாவே ஐஎஸ் ஐஎஸ்ஸா?”

“அடேய்.. அது ஐஎஸ் ஐஎஸ் இல்லடா.. ஐபிஎஸ்!”

“என்னவோ ஒன்னு தலைவரே. என் சந்தேகம் அது இல்ல. ஐபிஎஸ் ஆகுறதுக்கு நீங்களே பரிட்சை  எழுதுனீங்களா? இல்ல உங்களுக்கு பதில் ஆள் வச்சு எழுதுனீங்களா?”

“டேய் அதிகப் பிரசங்கி.. என்னடா உளர்ற?”

“இல்ல தலைவரே.. பல சமயங்கள்ல நீங்க எட்டாம் கிளாஸ் அஞ்சு தடவை பெயிலானவன் மாதிரியே பேசுறீங்க..”

“ஐபிஎஸ் சின்னமலை வேற.. ஜிலேபி கட்சித் தலைவர் சின்னமலை வேற.. காசுக்காக, புகழுக்காக, பதவிக்காக நடத்துற டிராமாடா இது..”

“அது சரி, ஐபிஎஸ் வேலையை எதுக்குண்ணே ரிஸைன் பண்ணுனீங்க?”

“ஜிலேபி கட்சிக்குத் தலைவர் ஆகுறதுக்குதான்?”

“அதான் தலைவரே கேக்கறேன்.. தோள் பட்டைல நூல் பட்டை மாட்டுன ஆளுங்க இருக்கும்போது உங்களை எப்படி செலக்ட் பண்ணாங்க..?”

“அப்பதானடா ஆண்ட பரம்பரை ஆளுங்களை ஏமாத்த முடியும்?”

“என்ன தலைவரே சொல்றிங்க? ஏமாத்தவா?”

“ஆமா.. தோள்ல கயிறு மாட்டினவங்க சாய்ஸ் எப்படின்னாலும் ஜிலேபி கட்சிதான். ஆனா கைல கலர் காலரா கயிறு கட்டுற ஆளுங்கள கவர் பண்ணனும்னு சொல்லி எனக்குக் கொடுக்கப்பட்ட அஜெண்டா இது..”

“அப்படின்னா எல்லாமே டுபாக்கூரா தலைவரே..”

“வாயைத் திறந்தா வர்றது பூராவுமே வண்டி வண்டியா டுபாக்கூர்தான்..”

“கன்னிமாரா லைப்ரரியைக் கரைச்சுக் குடிச்சது?”

“டுபாக்ஸ்!”

“ரெண்டு லட்சம் கேஸ் போட்டது?”

“டுபாக்ஸோ டுபாக்ஸ்.. என்னடா மணி.. நான் பேசுறதை வீடியோ எதுவும் எடுக்கறியா?”

“திருட்டு விடியோ பிளாக்மெயில் எல்லாம் உங்க வேலை தலைவரே.. சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது!”

“என் தினப்படி ஸ்பான்ஸர்கள் எங்கடா?”

“வரவேற்பறைல காத்துக்கிட்டு இருக்காங்க..”

“அண்ணே! நீங்க வாக்கிங் போகக் கேரவன் வேணும்னு கேட்டீங்களே.. இந்தாங்க சாவி. வண்டி வெளியே நிக்குது..” – ஒரு ஸ்பான்ஸர்.

“கரன்ட் பில் கட்டிட்டேன்!’‘

“உங்க நாலு போன்களுக்கு ரீசார்ஜ் பண்ணிட்டேன்!”

“வீட்டு வாடகை செட்டில் பண்ணிட்டேன்!”

“உங்க ஒரு மாத பெட்ரோல் செலவை நான் பாத்துக்கிட்டேன்!”

“இந்தாங்க நீங்க எங்க போனாலும் சோத்துக்கு கூப்பன்..”

“ஒரு டஜன் ஜாக்கி ஜட்டி கேட்டீங்கள்ல.. இந்தாங்க..”

“ஓகே ஓகே ஸ்பான்ஸர்ஸ். நீங்க எந்த அளவுக்கு எனக்கு ஸ்பான்ஸர் பண்ணுறீங்களோ, அந்த அளவுக்கு உங்கள் பித்தலாட்டங்களை எல்லாம் வாசிங் மெஷின்ல போட்டு கிளீன் பண்ணித் தரச் சொல்லி நம்ம மேலிடத்துக்கு ரெக்கமண்ட் பண்ணுவேன்..”

“வாழ்க எங்க வார்ரூம் தலைவர் சின்னமலை!”

“வாழ்க குபீர் கடிகாரம் சின்னமலை!”

வாழ்க கோஷம் கேட்ட மகிழ்ச்சியில் செல்போனைத் திறந்த சின்னமலையின் முகம் சுருங்கியது.

“டேய் மணி, ஒரு சிங்கம் வேணும்னு கேட்டு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியிருந்தம். ஆனா ஒரு கரடி பொம்மையை அனுப்பி ஏமாத்திட்டடாங்கன்னு மீம்ஸ் போட்ருக்காங்கடா..”

“விடுங்க தலைவரே.. இதெல்லாம் அரசியல்ல ஜகஜம்தானே!” – அண்டா   மணி.

தலைமை அலுவலகத்துக்குக் கேரவனில் கிளம்பினார் சின்னமலை. உடன் அல்லக்கைகள் மற்ற கார்களில் ஏறிக்கொண்டனர். தலைமை அலுவலகத்தின் போர்டிகோவில் போய் வண்டி நின்றது. போர்டிகோவுக்கு இடதுபக்கம் பத்தாயிரம் பேரும் வலதுபக்கம் பத்தாயிரம் பேரும் நின்றிருந்தனர்.

இடதுபக்கம் நின்றிருந்தோர். “கர்நாடக முதலமைச்சர் சின்னமலை வாழ்க!’‘

வலதுபக்கம் நின்றிருந்தோர் “தமிழ்நாடு முதலமைச்சர் சின்னமலை வாழ்க!”

நடுவில் நின்ற கூட்டம், “கர்நாடக முதலமைச்சரும் சின்னமலைதான், தமிழ்நாட்டின் முதலமைச்சரும் சின்னமலைதான்!’‘

சின்னமலை அந்தக் கூட்டத்திடம் போனார்

“என்னப்பா இதெல்லாம்?”

ஒருவன் மார்புச் சட்டையை கிழித்து காட்டினான் “இதோ உங்க பெயரை பச்சை குத்தி வச்சிருக்கேன். நீங்க ஆட்சிக்கு வந்தாதான் ரெண்டு மாநிலத்தையும் காப்பாத்த முடியும்!”

“நீங்க ரெண்டு மாநிலங்களுக்கும் முதல்வராக மறுத்தீங்கன்னா சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்!”

“எங்க கோரிக்கையை டிமோஜி ஏத்துக்கிடனும்னு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை அங்கப் பிரதட்சணம் செய்வோம்!”

“இருமாநிலங்களிலும் மதக்கலவரங்கள் ஏற்படுத்துவோம்!”

“சரி, சரி. உங்க உணர்வுகளை மதிச்சு நான் ரெண்டு ஸ்டேட்டுக்கும் சிஎம் ஆகிடறேன்..”

“தலைவரே, அது எப்படி நீங்க ஒரே ஆள் ரெண்டு ஸ்டேட்டுக்கும் சிஎம் ஆக முடியும்..? அதுவுமில்லாம, கர்நாடகாவுல போன மாசம்தான் தேர்தல் முடிஞ்சிருக்கு. அங்க உங்க ஜிலேபி கட்சி வாய்ல அல்வா திணிச்சிட்டாங்க. தமிழ்நாட்டுல ஏற்கனவே ஸ்ட்ராங்கா ஒரு ஆட்சி நடந்துட்டு இருக்கு. இன்னும் அவங்களுக்கு மூனு வருஷம் ஆட்சி இருக்கு. இதுல நீங்க எப்டி ரெண்டு ஸ்டேட்டுக்கும் சிஎம் ஆகறது?” – அண்டா  மணி.

“அடேய் அண்டா .. நம்ம டிமோஜியால முடியாதது எதுவுமே இல்லடா.. கர்நாடகா மார்க்கெட்ல எம்எல்ஏ என்ன விலைன்னு விசாரி.. நம்ம பாதுஷாகிட்ட சொல்லி பேசி முடிக்கச் சொல்லி நான் சிஎம்மாகிடுவேன். தமிழ்நாட்டுல எந்திரன் சனாவுக்கும் அழகி தனத்துக்கும் ஆபத்துன்னு சொல்லி நம்ம கொப்பர மணியாட்டி சாமிய விட்டு ஆட்சியைக் கலைச்சிட வேண்டியதுதான்.. அப்புறம் என்ன, நான்தான் டபிள் ஸ்டேட் சிஎம்!’‘

“அரசியல் அமைப்புச் சட்டத்துல இதுக்கெல்லாம் இடம் இருக்கா தலைவரே..”

“அடேய்.. இங்கிலீஷ் மியூசிக் ரெண்டு டிஸ்ட்ரிக்ட்ல கலெக்டரா இல்லையா? அதையே உதாரணமா சொல்லி, சட்டத்தை நமக்குச் சாதகமா திருத்திக்கிட்டா போச்சு..”

“நீங்க கன்னடிகான்னு கர்நாடகக்காரன் ஒத்துப்பானா? தமிழ்நாட்டுக்காரன் உங்களை ஏத்துப்பானா?”

“அடேய்.. நம்ம டிமோஜி நினைச்சார்ன்னா, நைட்டு எட்டு மணிக்கு டிவில வந்து, உலகம் முழுக்க நடந்த எந்தத் தேர்தலும் செல்லாது அப்படின்னு சொல்லி, எல்லா நாட்டுலயும் ஆட்சியைக் கலைச்சிட்டு, ஒட்டு மொத்த பூமியையும் பாரத் தேஷ் அப்படின்னு அறிவிச்சுடுவார். ஒரே உலகம் ஒரே எலெக்சன்னு சொல்லித் தேர்தல் நடத்தி, அவர் பூமி பாரத் அதிபராவும் என்னை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கவர்னராகவும்கூட ஆக்கிடுவாரு.. ஏன்னா அவங்களை அடக்க என்னை மாதிரி ஐபிஎஸ் ஆபீசராலதான் முடியும்.. தெரிஞ்சுக்கடா அண்டா ..”

“இதெல்லாம் நம்புற மாதிரியா தலைவரே இருக்கு..”

சுற்றி நின்ற கூட்டம் கோஷமிடத் தொடங்கியது.

“வந்தே பாரத் அதிபர் வாழ்க.. டபுள் கண்ட்ரி பிஎம் ஸ்மால் மவுண்டன் வாழ்க..!”

“எனக்கு வெக்கமாயிருக்கு தலைவரே..”

“அடேய்.. அதெல்லாம் உனக்கு. நான் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னமே சூடு சொரணை சுயகௌரவம் தன்மானம் வாய்மை உண்மை நேர்மை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டுதானே வந்தேன்.. இங்க பாரு, வந்தே பாரத் அப்படிங்கிறது ரயிலுக்கு வச்ச பேருன்னு கூடத் தெரியாம வாழ்க கோஷம் போடறாங்க.. இந்த மாதிரி ஆட்கள் இருக்கிற வரை, ஜிலேபி கட்சி எவ்வளவு வடை சுட்டு வித்தாலும் வியாபாரம் ஆகும்.. புரியுதா..?”

“இந்தக் கண்றாவியெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியல தலைவரே..”

“ஏத்துக்க முடியலைன்னா நீ போய் உன் குலத் தொழிலைக் கவனிடா.. இது கவர்னரின் உத்தரவு”

கோபமாகக் கத்திய சின்னமலையைப் பிடித்து உலுக்கினான் அண்டா  மணி.

“என்ன தலைவரே.. பகல் கனவா? யார் குலத்தொழில் பாக்கணும்? எல்லாரும் அவரவர் குலத்தொழில்தான் பாக்கணும்னா நீங்க எப்படி தலைவரே ஐபிஎஸ் ஆகியிருக்க முடியும்?”

அண்டா மணியின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார் சின்னமலை.

“மணியடிக்கிறவன் காலத்துக்கும் மணியடிக்கணும். மத்தவனெல்லாம் அவனுக்கு அடிமை சேவகம் பண்ணனும் அப்படின்னு சொல்ற நீங்க நியாயப்படி இப்போ என்ன பண்ணனும்? ஆடுதானே மேய்க்கணும்? அப்புறம் எப்படி மக்களை ஆள நினைக்கலாம்? இவ்வளவு கேவலமான புத்தி இருக்கிற உங்ககூட இனிமேலும் என்னால இருக்க முடியாது தலைவரே..”

எப்படியாவது பெட்ரோமேக்ஸ் லைட் வாயை வாடகைக்கு விட்டுப் பிழைத்துக்கொள்ளலாம் என்று கனவு கண்ட சின்னமலையின் மேண்டிலை உடைத்த பெருமையுடன் அங்கிருந்து வெளியேறினான் மணி.

  • ஆர்னிகா நாசர்

Comments (2)


சுவடு மன்சூர்
சுவடு மன்சூர்
September 10, 2023

படிச்சாட்டே வந்தேன்.. திடீர்ன்னு அந்த இங்கிலீஸ் மியூசிக் 2 மாநிலத்துல கவர்னர் ன்னு பார்த்ததும் வாய்விட்டு சப்தமா சிரிச்சுட்டேன்.. நையாண்டி எழுத்து அபாரம்.. ஆர்னிகா நாசர் அவர்களுக்கு வாழ்த்துகள் ..

அரசு தாமசு .
அரசு தாமசு .
September 10, 2023

கதையின் ஓட்டம் விறுவிறுப்பு அருமை.
கதாபாத்திரங்களுக்கான பெயர்கள் அருமையிலும் அருமை.
கதையின் முடிப்பு மிகச் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *