பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

 இயல்பாகவே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் ராமன். அதனால் நட்பு வட்டத்தில் அவனைச் செல்லமாக, ‘தெனாலி ராமன்’ என்றே அனைவரும் அழைத்தனர். யாராவது அவனிடம், “ஏன் ரொம்ப பயப்படுகிறாய்?” எனக் கேட்டால், பயப்படுவதற்குதான் நான் எப்போதும் பயப்படுவதேயில்லை என்று தெனாலி படத்தில் வரும் கமலின்  டயலாக்கைச் சொல்லுவான். வயதோ 28, பி.ஏ. பட்டதாரி. சொந்தமாக வீட்டிற்கு அருகிலேயே E- சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தான். 

சமீபத்தில்தான் அவனுக்கு காதலில் படுதோல்வி ஏற்பட்டது. ஆம், தான் காதலித்த பெண்ணையே மணம் முடிக்கும்படி ஆகிவிட்டது. மனைவி நிவேதா கல்லூரியில் அவன் கூடப் படித்தவள். அறிவானவள், துணிவானவள். ஒரு முறை அவனை நாய் ஒன்று  துரத்தியபோது, அவனை நாயிடம் இருந்து கடிபடாமல் அலேக்காகத் தூக்கி காப்பாற்றிய போதுதான், அவனுக்கு அவள்  அறிமுகமானாள். அவனை எப்படியாவது தைரியசாலியாக மாற்ற வேண்டும் என்று ராஜாதிராஜா பட நதியா போல் நிறைய அறிவுரைகளைக் கூறிக்கொண்டே இருப்பாள். 

“தைரியம்ங்கிறது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்” என்று அவனிடம் அவள் சொல்ல, “அப்படின்னு சிக்மன்டு ஃப்ராய்டு சொன்னாரா?” என்று கேட்டான்.  “இல்லையில்லை, இதுவும் குருதிப்புனல் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் சொன்னதுதான்” என்றாள் அவள். 

தோழி ஒருத்தியின் ஆலோசனைப்படி அருகில் இருந்த மனநல மருத்துவரிடம் ஒரு நாள் அவனை அழைத்துச் சென்றாள்.  “எதற்கெல்லாம் பயம்?’”என்று அவர் அவனிடம் கேட்க, அவன் மனைவி நிவேதாவைப் பார்க்க, “மனைவிக்கு பயப்படுறதெல்லாம் நார்மல்தான்” என்றார் மருத்துவர். பின் அவன் சொன்ன  அவனுடைய பயங்களையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, அவனுக்கு மனப்பதட்ட நோய் இருப்பதாகவும் அதற்கு மருந்துகள் பரிதுரைப்பதாகவும் கூற, மருந்து உட்கொள்ள பயந்து அதை எடுத்துக் கொள்ளாமல், அடுத்து அவரைப் பார்க்கச் செல்வதையும் தவிர்த்து விட்டான். 

கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது தன் ஈ சேவை மையத்தையும் மூடிவிட்டு வீட்டிற்குள் முடங்கினான் ராமன்.  கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கவும், இவனுடைய பயமும் அதிகரித்தது. அனைத்து விஷயங்களிலும் முன்னெச்செரிக்கையுடன் நடக்கத் தொடங்கினான். குடும்ப வாழ்க்கையிலும்கூட  சமூக இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறவில்லை. மனைவிக்கு பறக்கும் முத்தம் மட்டும்தான்.

 

எப்பொழுதும்  கொரானா பற்றிய தகவல்களை மட்டுமே அலைபேசியில் தேடித் தேடி படித்தும் கொரோனா பற்றிய செய்திகளை யூ-டியூபில் பார்த்தும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். 

இரவு தூங்கும்போதும்கூட முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான். மனைவி கேட்டதற்கு, முந்தைய நாள் இரவு தூங்கும்போது, தன் ஈ சேவை மையத்துக்கு முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக வாடிக்கையாளர்கள் வருவது போலவும் இவன் முகத்திற்கு நேராக வந்து  இருமுவது போலவும் தும்முவது போலவும் பயங்கரக் கனவு வந்ததாகவும், கனவிலும் பாதுகாப்பாக இருப்பதற்காக தூங்கும்போதும் அணிந்து கொள்வேன் என்று அடம்பிடித்து, N95 முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான். 

ஒரு ஞாயிற்றுக் கிழமை, கொரோனா முழு முடக்கம்  காரணமாக, கறிக்கடையெல்லாம் அடைத்திருக்கும் என்பதால் அதிகாலையில் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கோழிக் கறிக்கடைக்காரர் வீட்டின் பின்புறம் சென்று ரகசியமாக பிளாக்கில் கோழிக்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து பிரியாணி செய்யச் சொன்னான். வயிறு முட்ட முட்டையில் இருந்து வந்த கோழி பிரியாணியைச்  சாப்பிட்டுவிட்டு உறங்கிப் போனான். 

மாலை சுமார் 4 மணி இருக்கும், மாடியில் டமார் என்று ஏதோ சத்தம் கேட்க, திடீரென்று முழித்தான். உடல் முழுவதும் ஏதோ இனம் புரியாத கஷ்டத்தை உணர்ந்தான். காய்ச்சலாக இருக்குமோ என்று  வீட்டிலிருந்த தெர்மா மீட்டரை எடுத்து உடலின் வெப்ப நிலையைப் பரிசோதித்தான். 98.4 என்று காட்டியது. 

மதியம் சாப்பிட்டது செரிமானம் ஆகாதது போன்ற உணர்வும் மார்பை ஏதோ  அழுத்துவது போன்ற உணர்வும் சேர, அவனுக்கு பயம் கூடியது. படபடப்புடன்  வேர்த்துக் கொட்டியது.  மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மூச்சு நின்று இறந்து விடுவோம்’ என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. வாங்கி வைத்திருந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டரை எடுத்து தன் ஆள் காட்டி விரலில் மாட்டி ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்தான். அதில் 94 என்று காட்டியது. 

உறங்கிய மனைவியை அவசரமாக எழுப்பி விவரத்தைச் சொல்லி ஒருவேளை தனக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனால்  உடனடியாகத் தன்னை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினான். 

மருத்துவமனையின் அவசரப் பிரிவை  அடைந்ததும், மருத்துவர் அவனுக்கு  முன்பாக இன்னொரு  நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அந்த நோயாளி தனக்குச் சாதாரண இருமல்தான் என்றும், தனக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டாமென்றும் மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மருத்துவர், “சாதாரண இருமலா அல்லது கொரோனா இருமலா என்று பரிசோத்தித்தால் மட்டுமே தெரியும். ஏதோ கொரோனா இருமலென்றால் ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் பின்னனி இசையோடு தனியாகத் தெரியும் என்று நினைக்க வேண்டாம்” என்று கூறிக்கொண்டிருந்தார். 

அவசர வார்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் நாட்டில் நிலவும் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டவுடன், தனக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. அடுத்ததாகத் தன்னை அழைத்த டாக்டரிடம், “சார், ஆக்ஸிஜன் வைச்சிருக்கீங்களா? எனக்குக் கொடுத்து காப்பாத்திடுவீங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டான். 

அதைக் கேட்ட மருத்துவர், “இருக்கிற ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டுல, ஆக்ஸிஜன் கொடுத்து நோயாளியைக் காப்பாற்றுவதைவிட, நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜனைக் காப்பாற்றச் சொல்லிதான் எங்களுக்கு மேலிடத்துல இருந்து ஆர்டர்” என்றார்.  

மிரட்சியுடன் அவன் டாக்டரைப் பார்க்க, அவர் “சும்மா விளையாட்டுக்குத்தான்  சொன்னேன்” என்றார். “உங்க பிரச்சினை என்னனு சொல்லுங்கள்” என்று கேட்டார். அவனுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் அனைத்தையும் அவன் பட்டியலிட பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டார். அவனுடைய முழுப் பிரச்சினையையும் கேட்டு விட்டு, O2 அளவு, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சுருள் படம் போன்ற பரிசோதனைகளைச் செய்துவிட்டு, அவனுக்கு உடம்பில் ஒரு கோளாரும் இல்லை, பேனிக் என்ற ஒரு வகை தீவிரமான மனப் பதட்ட நோய்தான் என்றும், பயப்பட ஒன்றுமில்லை என்றும் கூறினார். 

கொரோனா பற்றிய செய்திகளை அதிகம் பார்க்க வேண்டாம் என்றும் தைரியம் வருவதற்கு சில மருந்துகள் தருவதாகவும் அதனை  அவன் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வர வேண்டும் என்றும் சொன்னார். அப்போது உடனே நாக்கின் அடியில் வைக்க ஒரு மாத்திரையும் கொடுத்தார். மாத்திரையை நாக்கின் அடியில் வைத்து சில நிமிடங்களில் அவனுடைய மனம் அமைதியானது. மருத்துவர் அவனுடைய வாழ்க்கையில் சில ஆரோக்யமான மாற்றங்களைக் கொண்டு வர அறிவுறுத்தினார். 

வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் தினமும் ஆறேழு முறை டீ குடிக்கும் பழக்கம் அவனுக்கு வந்து விட்டிருந்தது, அதைக் குறைத்துத் தினமும் இருமுறை மட்டும் என்று மாற்றிக் கொள்ளச் சொன்னார். 

“உடல் உழைப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறீங்க. நீங்களே சொந்தமா உங்க பல்ல விளக்கிக்கிறீங்க. நீங்களே சொந்தமா சோப்பு போட்டு குளிச்சிக்கிறீங்க. நீங்க தூங்கும்போது நீங்களே சொந்தமா புரண்டு படுத்துக்கிறீங்க. அதெல்லாம் உடற்பயிற்சிதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். கட்டாயம் ஒரு முக்கால் மணி நேரமாவது நடைப் பயிற்சிக்குப் போங்க. லாக்டவுன் காலத்துல புது ஹோட்டல் திறக்கும்போது, ஐந்து புரோட்டா வாங்கினால் ஐந்து புரோட்டா இலவசம்னு கூவிக் கூவிக் கூப்பிடுறாங்க. அதெல்லாம் வாங்கிச்  சாப்பிட்டு உடம்பக் கெடுத்துக்காம ஒழுங்கா காய்கறிகள், பழங்கள்னு சாப்பிடுங்க. மொபைல் ஃபோனையே எப்பொழுதும்  நோண்டிக்கிட்டு இருக்கிறதுக்குப் பதிலாக ஏதாவது புத்தகம் எடுத்துப் படிங்க”. 

இப்படியாக மருத்துவர் சொன்ன அறிவுரைகளைச் சரியாக பின்பற்றியதாலும் மருந்துகளை சரியாகச் சாப்பிட்டு வந்ததினாலும் அவன் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல மன நலத்துடன்  எந்த பயமும் இல்லாமல் தைரியசாலி ராமனாக மாறிவிட்டான் தெனாலி ராமன்.

Dr. ர. நிஷாந்த்,
மனநல மருத்துவர்,
அருப்புக்கோட்டை.

படங்கள்: இணையத்திலிருந்து


Comments (4)


தஞ்சிகுமார்
தஞ்சிகுமார்
August 29, 2021

‘பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்’ Dr.நிஷாந்த் கட்டுரை ஹாஸ்யமான அதேசமயம் யதார்த்தமான படைப்பு.அருமை.

Nishanth

மிக்க நன்றி!

Rajadurai S
Rajadurai S
August 29, 2021

அருமை Dr. நிஷாந்த் அவர்களே. வரிக்கு வரி நகைச்சுவை இழையோடி இருப்பது அருமை 👌👍

Nishanth

மிக்க நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *