மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்
MBBS மட்டுமே மருத்துவப் படிப்பு என பொதுப்படையாக எல்லார் மனத்திலும் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பல் மருத்துவத்தைத் தேர்வு செய்வோர் சிலர். ஆனால் அதையும் தாண்டி நிறைய துணை மருத்துவப் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதைக் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடமோ பொதுமக்களிடமோ இன்னமும் இல்லை. மருத்துவர்கள்கூட அப்படிப்புகள் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஆனால், ஆண்டுதோறும் புதிதாக உருவாகும் அந்தப் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகளின் காலி இடங்கள் வெகுவாக அளவாக நிரப்பப்படவே இல்லை. கடந்த 2021இல் NSSO (National Sample Survey Organization) மேற்கொண்ட ஆய்வின்படி 2030இல் 10000 நபர்களுக்கு 22 துணை மருத்துவப் பணியாளர்கள் என்ற அளவில் (22.3 : 1000) தேவை விகிதம் இருக்கும் எனத் தெரிய வருகிறது. மற்ற எல்லாத் துறைகளிலும் பாலினப் பாகுபாடு இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினாலும் செவிலியர்களின் துறையில் மட்டும் 79.85 சதவீதம் பேர் பெண்களாக இருக்கின்றனர். வெறும் 20.15% ஆண்கள் மட்டுமே இந்தத் துறையில் உள்ளனர். பெரும்பாலான இடங்களில் ஆண்கள் செவிலியர் துறைக்கு வருவதை ஒரு இழுக்காகவே கருதுகின்றன்றனர். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு மட்டுமே ஆன செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளைத் தனியார் கல்லூரிகள் நிறுவத் தொடங்கியுள்ளன. கொரோனா காலத்தில் நிலைமை மோசமாகி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர துணை மருத்துவர்களுக்கு மிகுந்த பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த நேரத்தில் OECD (The Organization for Economic Co-operation and Development) நாடுகள் நிறைய துணை மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்ததன் விளைவாக கோவிட் காலகட்டங்களில் துணை மருத்துவர்களுக்கான நெருக்கடி ஏற்பட்டு அதன் விகிதம் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்றளவிலும்கூட துணை மருத்துவ ஊழியர்களின் தேவை குறித்த விழிப்புணர்வு பேசப்படுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம். இன்னும் ஆராய்ந்து பார்த்தால் மருத்துவர்களிடமே இந்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்றே கூறலாம். மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு சில படிப்புகளையும் அந்த ஊழியர்களையும் குறித்த தாழ்வு மனப்பான்மையே நிலவுகிறது. அவர்களைக் குறித்து இழிவாகப் பேசுவதும் நடத்துவதும் நடந்துகொண்டே இருக்கின்றன. எவ்வளவோ பகுத்தறிவுச் சிந்தனைகள் பேசப்பட்டாலும் “ஓ.. நர்ஸா..? ஓ.. தெரபிஸ்டா..? அப்போ டாக்டர் இல்லையா?” என்ற வார்த்தைகள், மேலும் ஒரு சமூகச் சீர்திருத்தமின்மையைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. சிறந்த துணை மருத்துவப் படிப்பு என்று கூகுளில் தேடினால், ஏதோ கடமைக்கு நான்கு படிப்புகளைக் காட்டிவிட்டு முதுகலைப் பட்டப்படிப்பை எல்லாம் அங்கே அள்ளிவிட்டிருக்கிறார்கள். MBBS மட்டும்தான் மருத்துவப் படிப்பு என்ற ஆழ்ந்த எண்ணம் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவம் என்பது பலதரப்பட்ட அணுகுமுறை (Multidisciplinary approach) கொண்ட பல துறைகளும் தொடர் சங்கிலிகளைப்போலப் பிணைந்திருப்பது. ஒரு மருத்துவமனையை நடத்துவதற்கு மருத்துவர்கள் மட்டுமே போதாது. மருத்துவத் துறை சார்ந்த இதர கருவிகளை இயக்கவும் அதை நேர்க்கோட்டில் நகர்த்திச் செல்லவும் அனைத்து வகையான இதர துணை மருத்துவ ஊழியர்களும் அவசியம். Every health worker’s work matters. மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் துணை மருத்துவப் படிப்புகள் குறித்தும் அவற்றிற்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, தங்கள் குழந்தைகளை மருத்துவர்கள் ஆக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ள பெற்றோர்கள் இதைக்குறித்து அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். B.PHARMB.P.T. (Physiotherapy)B.ASLP (Audiology Speech Language Pathologist)B.Sc. (NURSING)B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGYB.Sc. RADIO THERAPY TECHNOLOGYB.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGYB.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGYB.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGYB.Sc. CARDIAC TECHNOLOGYB.Sc. CRITICAL CARE TECHNOLOGYB.Sc. DIALYSIS TECHNOLOGYB.Sc. PHYSICIAN ASSISTANTB.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGYB.Sc. RESPIRATORY THERAPYB.OPTOMB.O.T (Occupational Therapy)B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGYB.Sc. CLINICAL NUTRITION மேலே உள்ளது துணை மருத்துவப் படிப்புகளுக்கான பட்டியல் மட்டுமன்று. இந்தத் துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு, தமிழ்நாடு அரசு கலந்தாய்வையும் நடத்துகிறது. பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாகப் படித்த மாணவர்கள் தங்கள் மருத்துவ கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் இந்தப் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்காக இணைய வழியில் கீழ்க்காணும் இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.net விண்ணப்பிக்கும் காலம் ஜூன் 19 அன்று தொடங்கி ஜூன் 28 மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் குறித்த விரிவான விவரங்கள் கொண்ட கையேடும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்கள் மேற்கண்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தும் படிக்கலாம். எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்புகளையும் பெறலாம். – லக்ஷயா, Occupational Therapist