தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்
நீட் தேர்வு இன்னொரு உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. “மருத்துவம் மட்டும்தான் படிப்பா?”, “ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி நீட்டை நீக்க முடியும்? தேதி குறிப்பிட்டுச் சொன்னார்களா?”, எல்லாம் சட்டப்படிதானே செய்ய முடியும்?”, “நீட்டை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு”. இப்படி அவரவர் பங்குக்கு ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வருக்கிறார்கள். ஆனால், இவை யாவுமே இழந்த உயிர்களை மீட்டுத் தரப்போவதும் இல்லை. இவர்கள் எவருமே மீட்பரும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

கடந்த ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் மரணங்களை முன்வைத்து முழங்கியவர்கள், அந்த மரணங்களை வைத்து அரசியல் செய்தவர்கள் இப்போது கள்ள மௌனம் காக்கிறார்கள். ஒருவேளை ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், இந்நேரம் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கும்போது, உண்மையிலேயே அந்த உயிர்கள் மீது அக்கறை உள்ளவர்களால் ஆற்றாமையும் அறச்சீற்றமும் பீறிட்டு எழுவதைக் கட்டுப்படுத்த முடியாது.
தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, நீட் தேர்வை முன்வைத்து மாணவர்களின் உயிரோடு விளையாடும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசும் முன்பாக நீட் தேர்வு கடந்து வந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.
கடந்து வந்த பாதை
2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India -MCI) கெசட்டில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளில் (Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்து, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (Eligibility cum entrance test) என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இவை “Regulations on Graduate Medical Education, 2010” என்று அழைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் MCI 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் எதிரிப்பு காரணமாக தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது.

கெசட் அறிவிப்பு வந்ததுமே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு, பல்வேறு தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவது திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தனர். மே 5, 2013ல் முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
இதை எதிர்த்து வேலூர் சி.எம்.சி. கல்லூரி உள்ளிட்டோர் மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்தனர். அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர். தவே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அல்டாமஸ் கபீர் ஒய்வு பெறுகிற நாளில் அவரது கடைசித் தீர்ப்பாக நீட் தீர்ப்பு வெளியானது. “நீட் தேர்வு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தவே ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. நீட்டுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு, 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு வெளியானபோது, நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி தவே, ஓய்வு பெறும் நாள் வந்துவிட்டதால், வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிபதி கபீர் மீது குற்றம் சாட்டினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு, முந்தைய வழக்கில் நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த, நீட்டுக்கு எதிராகத் தீர்ப்பளித்த கபீர் மீது குற்றம்சாட்டிய நீதிபதி தவே தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆண்டே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனால் 2017-ல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களை தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கி அன்றைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் தொடுத்த வழக்கில், தமிழக அரசின் ஆணை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பின்னர், தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் வரைவு அவசரச் சட்டத்தை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்பியது. அது சட்ட ரீதியாக செல்லாது என்ற அட்டார்னி ஜெனரலின் கருத்தால் கைவிடப்பட்டது.
இத்தனை இடர்களைக் கடந்து, 2020 ஆம் ஆண்டில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றியது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மாநில அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அன்றைய அதிமுக அரசு அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டது. சுமார் 400 அரசுப்பள்ளி மாணவர்கள் சென்ற ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கால் பதிக்க அந்தச் சட்டம் வழிவகை செய்தது. 7.5% இடஓதுக்கீட்டை ஏற்க முடியாது என்றவர்கள், தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், பொறியியல், சட்டம், விவசாயம் உள்ளிட்ட இதர தொழிற்கல்விக்கும் அதனை விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.

நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து அதிமுக அரசுமீது குற்றம் சாட்டிவந்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்யும் நோக்கில், ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து கருத்துக் கேட்பு நடத்தி சட்டமுன்வடிவைத் தயாரித்து வருகிறது. விரைவில் அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இந்தச் சட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து நீட் தேர்வு இல்லாத நிலை உருவாகுமா? அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வார் இங்கே யாருமில்லை.
பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நம் கல்வி முறையில், அனைவருக்குமான ஒற்றைத் தேர்வு என்பது, அரசியல் சாசனம் வழங்கும் அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமையை மறுப்பதாகும். பெரு நகரங்களில் பல லட்சங்களைக் கொட்டி, தனிப்பயிற்சி பெற்று வரும் மாணவனோடு, எங்கோ தொலைதூரக் கிராமத்திலும், மலைப்பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவனைப் போட்டியிடச் செய்வது சமூக நீதியின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் செயலாகும்.
இடைக்கால நடவடிக்கைகள் ஏன் இல்லை?
நீட் தேர்வு அறிவிப்பு வெளியான 2010, நீட்டுக்கு எதிரான தீர்ப்பின் மீதான மேல் முறையீடு செய்யப்பட்ட 2013 ஆகிய ஆண்டுகளில் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில் திமுகவும் பங்கு வகித்தது. திமுகவின் காந்திச்செல்வன் சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் 85% இடங்களை, சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கிய தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் தீரப்பைப் பெற்றுத் தந்தவர்கள் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் முந்தைய திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனராலாக இருந்த பி.எஸ்.ராமனும் ஆவர். தீர்ப்பு வெளியான பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நளினி சிதம்பரம், “இனி நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார்.

இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அப்போது எதிர்க்கட்சியாகவும் இப்போது ஆளும் கட்சியாகவும் இருந்து நீட்டுக்கு எதிராகப் பேசிவரும் திமுக, இன்றுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. லட்சக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவு வெறும் ஐந்து நீதிபதிகளின் சிந்தனையோடு முடிந்துவிடுவதில்லை. அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு.
ஐந்து நீதிபதிகள் அமர்வோடு நீதி நின்றுவிடுவதில்லை. இதற்கு முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஏழு மற்றும் ஒன்பது நீதிபதிகள் அமர்வுகள் அமைக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. சபரிமலை வழக்கில்கூட ஒன்பது நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. 1973-ல் கேசவானந்த பாரதி Vs கேரள மாநிலம் வழக்கில் அதிகபட்சமாக 13 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்ட வரலாறும் நம்மிடையே உள்ளது. ஆனால், நீட் தேர்வைப் பொறுத்தவரை, இவ்வளவு தீவிரமாக நீட்டை எதிர்ப்பவர்களும், எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்பவர்களும் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இதற்கு முன்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் +2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டின் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் வைக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை, பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண்ணை முற்றாகப் புறம் தள்ளுகிறது. குறைந்தபட்சம், மாநில அரசின் இடங்களுக்கு, அந்தந்த மாநிலங்களே அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்திக்கொள்ளக் கூட இங்கே உரிமை கோரப்படவில்லை.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் முகமையாக, தகுதி பெற்ற அமைப்பாக வரையறை பெற்றது எப்படி என்ற கேள்விகளுக்கு விடையளிப்பார் யாருமில்லை.
முந்தைய அதிமுக ஆட்சி மீதும், 2014 – 2019 வரை தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதே எண்ணிக்கையில் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட்டுக்கு எதிராக டெல்லியில் எழுப்பிய குரல்கள், மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? கருத்துக் கேட்புக் குழு அமைத்த தற்போதைய திமுக அரசு, மேல்முறையீட்டு வாய்ப்புகள் குறித்து ஏன் ஆலோசிக்கவில்லை?
அதிகாரம், பொருளாதாரம், எண்ணிக்கை என அனைத்திலும் பலம் பொருந்தியவர்கள் மாணவர்களின் மரணங்களுக்கு விலை வைத்துக் கொண்டிருக்க, இவை எதுவுமே இல்லாத எளியவர்கள் இப்படியான கேள்விகளை மட்டுமே தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்க முடிகிறது என்பதுதான் வேதனையான உண்மை. நீட் தேர்வு ஒழிக்கப்படுமா? அந்த அதிசயம் எப்போது நிகழும்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்வரை மாணவர்கள் மன உறுதியோடு அதனை எதிர்கொள்ள வேண்டும். போராட்ட முடிவில் வெற்றி வசப்படாவிடில் உங்கள் கனவுகளை மட்டும் பலியிடுங்கள், உயிர்களையல்ல.
Bhuvana Gopalan
September 13, 2021அட்டகாசமான கட்டுரை தோழர்
சோ பாலகுமார்
September 15, 2021நீட் குறித்த உண்மை நிலையை புரிந்து கொள்ள உதவும் ஒரு சிறப்பான கட்டுரை.
வெற்றி வசப்படாத சூழ்நிலையில் ‘மாணவர்கள் கனவுகளை பலியிடலாம்..ஆனால் உயிர்களை அல்ல’ என முடித்திருப்பது சிறப்பு.