கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?
கலைஞர் 100 – சிறப்புப் பதிவு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது நூறாவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவருடைய எழுத்தாற்றல் பற்றி நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் கலைஞரைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரலாறு எழுதவியலாது. அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் இன்றியமையாதவையாக நிலைத்திருக்கின்றன. தனது தூக்குமேடை நாடகம் அரங்கேற்றத்தின் முடிவில் நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களால் கருணாநிதியைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டம்தான் கலைஞர். அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல, தமிழ்கூறும் உலகம் இருக்கும்வரை கலைஞர் என்று உச்சரித்தால் அது கருணாநிதியை அழைப்பதாகவே இருக்கும். அவர் தனது வாழ்நாள் முழுவது தமிழ் இலக்கியத்துக்காக பணியாற்றினார் என்று கூறினால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு அரசியல் உலகில் எந்த அளவுக்கு அவர் பணியாற்றினாரோ அதையும் விஞ்சும் அளவுக்கு தமிழிலக்கியத்திற்கும் பணியாற்றினார் என்பதும் உண்மையே. அவருடைய மாணவப்பருவத்திலேயே தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் கொண்டதின் காரணமாக ‘மாணவ நேசன்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி அதில் அவருடைய எண்ணங்களைப் படைத்து மாணவர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்க முயன்றிருக்கிறார். பத்திரிகைப் பணிகள் 1942இல் முரசொலி எனும் துண்டு பிரசுரத்தை எழுதி வெளியிட்டுவந்தார். அவ்வெளியீடு சில மாதங்களிலேயே நின்றுபோனது. 1946இல் மீண்டும் முயற்சித்து அதை மாத இதழாக வெளியிட்டார். 1948இல் மீண்டும் அது நின்றுபோனது. கருணாநிதி அவர்கள் தனது முயற்சியைக் கைவிடாமல் 1953இல் மீண்டும் முரசொலியை மாத இதழாகக் கொண்டுவந்தார். முரசொலியின் மூலம் தனது கருத்துகளை, தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை மிகத்தெளிவாக மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் மாணவர்களும் இளைஞர்களும் திராவிடர் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற உந்துதலாக இருந்திருக்கின்றன. 1960இல் மாத இதழாக இருந்த முரசொலி, நாளிதழாக வெளிவரக் காரணமாயிருந்தவரும் அவரே. அன்று முதல் இன்று வரை திமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக முரசொலி வெளிவந்துகொண்டிருக்கிறது. திரையுலகப் பயணம் கலைஞரின் எழுத்தில் வெளிவந்த திரைப்படங்களும் ஏராளம். சுமார் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றோடு சில திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1952இல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. தனது 20ஆம் வயதிலேயே ஜூபிடர் பிக்சர்ஸ் எனும் படக் கம்பெனியில் அவர் பணியாற்றியபோது அவருடைய வசனத்தில் வெளியான முதல் திரைக் காவியம் ராஜகுமாரி. திரும்பிப்பார், மனோகரா போன்ற திரைப்படங்கள் அவரைத் திரையுலகில் ஜொலிக்க வைத்தன. நாடக உலகில் கலைஞர் பல்வேறு நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதி அவற்றில் அதில் நடித்தும் இருக்கிறார். 1947 தொடங்கி 1979 வரையிலும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் மணிமகுடம், மகான் பெற்ற மகன், மந்திரி குமாரி, தூக்குமேடை ஆகிய சில நாடகங்கள் அவரை நாடக்கலையிலும் வல்லுநராகப் பார்க்க வைத்தன. இலக்கிய உலகில் நீங்கா இடம் புதிய கோணங்களில் புதினங்களைப் படைப்பதிலும் கருணாநிதி கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார். அரும்பு, இரத்தக் கண்ணீர், சுருளி மலை, நடுத்தெரு நாராயணி, புதையல், பெரிய இடத்துப் பெண், ஒரே இரத்தம் ஆகிய புதினங்கள் மிகச்சிறப்புப் பெற்றவை. கலைஞரின் சிறுகதைகள், பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் அரசியல் மற்றும் கட்சித் தலைமைப் பண்பையும் விவரிக்கும் படைப்பாகவே அமையப்பெற்றிருப்பது அவருடைய கொள்கைப் பற்றையும் அரசியல் தெளிவையும் நமக்குச் சொல்வதாகவே காணப்படுகின்றன. பாலைவன ரோஜா, விஷம் இனிது, வேணியின் காதலன், நளாயினி, நுனிக் கரும்பு ஆகிய சிறுகதைகள் படிக்கும்போதே நம்மை மெய் சிலிர்க்கச் செய்யும். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவருடைய படைப்பில் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் கண்ணடக்கம், ஒரு மரம் பூத்தது, கிழவனின் கனவு, சங்கிலிச் சாமியார் ஆகிய அனைத்துமே கொள்கைக் களஞ்சியமாக, பெட்டகமாக வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தொகுப்புகள். அவருடைய இலக்கியப் படைப்புகள் இத்தோடு நின்றுவிடவில்லை. கலைஞரின் கவிதைகள், திரையிசைப் பாடல்கள் ஆகியவற்றோடு திருக்குறள் உரை, சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா, குரளோவியம், சிலப்பதிகாரம், தாய், பூம்புகார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார். தமது வாழ்க்கையைத் தன்வரலாறாக எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற நூலாக வெளியிட்டுள்ளார். 4000க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட நெஞ்சுக்கு நீதி 6 பாகங்களாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கில் விற்னையாகியுள்ளது. கலைஞரின் சொற்பொழிவுகள், பத்திரிகைப் பேட்டிகள் மட்டுமே 5 தொகுப்புகளாக உள்ளன என்பதை மெச்சாமல் இருக்கமுடியுமா!? கட்டுரைத் தொகுப்புகள் 30 தலைப்புகளிலும் சிறு குறிப்புகள் 20 தலைப்புகளிலும் வெளிவந்துள்ளன. கலைஞர் கடிதங்கள் 12 தொகுப்புகள், குடியரசு கட்டுரைகள், கரிகாலன் பதில்கள் என்று அவரது எழுத்துகள் எங்கெங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏராளமான பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1957 முதல் 2018 வரை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய சட்டமன்ற உரைகளின் தொகுப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. அவருடைய மொத்தப் படைப்புகளையும் வாசித்து முடிக்க நமக்கு ஒரு வாழ்நாள் போதாது என்றால் மிகையில்லை. கலைஞரின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் விதமாக வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் தற்போதைய திமுக தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகிறது. ஆனால் கலைஞரின் படைப்புலகப் பங்களிப்புகளை இன்றைய திமுகவினர் பெரும்பாலானவர்கள் சிறிதளவுகூட வாசித்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மையே. கலைஞரின் நூற்றாண்டு தொடங்கும் இந்த வேளையில், அவருடைய படைப்புகள் பொதுமக்களைப் பரவாலாகச் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதே அவருடைய இலக்கியப் பங்களிப்பை நிலை நிறுத்த உதவும். இல்லையேல் அது வெறும் அடையாளமாகவே நின்றுவிடும். முகப்புப் படம்: இணையத்திலிருந்து