இன்னும் எத்தனை லாக் டவுனோ!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் கடந்த மூன்று மாதங்களைக் காட்டிலும் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும் சமூகப்பரவல் இல்லை என்ற அதே பழைய பல்லவியை அரசு இன்னமும் பாடிக் கொண்டுள்ளது. பெரம்பூர் இரயில்வே மருத்துவமனை, ஆவடி ஐ.சி.எஃப். மருத்துவ மனைகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் அரசின் பட்டியலில் வராதது, சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றம் போன்ற நடவடிக்கைகள் அரசின் செயல்பாட்டில் உள்ள குளறுபடி களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

தற்போது சென்னை மற்றும் சுற்றுபுற மாவட்டங்களுக்கு மீண்டும் ஒரு பொது முடக்கத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். கூடவே இம்மாவட்டங்களைச் சேர்ந்த அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையும் அறிவித்துள்ளார்.

அரசின் செயல்பாடுகளை மட்டுமே எதிர் வரிசையில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து குறைகூறி வருகின் றன. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் முடக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கை களால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்க்கைத் தரமும் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளதை யாரும் மறுக்க இயலாது என்றாலும், மக்களின் ஒட்டுமொத்தப் பொருளாதார இழப்பையும் ஈடுகட்டும் நிலையில் அரசு இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை மக்கள் முறையாகப் பின்பற்றியிருந்தால் தற்போது இத்தனை பெரிய பரவல் நிகழாமல் தடுத்திருக்க முடியும். கோயம்பேடு காய்கறிச் சந்தையை அரசு முதல் கட்டத்திலேயே மூடியிருக்க வேண்டும். போலவே அதிகப் பரவல் நிகழும் மண்டலங்களில் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி, பரிசோதனைகளை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். நாம் எவ்வளவுதான் அரசின்மீது குறைப்படுக்கொண்டாலும் நோய் வந்தால் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள் மட்டுமே.

எனவே அன்றாட வாழ்வில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், இனியாவது மக்கள் மிக மிக அவசியமின்றி வெளியே நடமாடுவதைக் குறைத்துக்கொண்டு, பொது முடக்கத்தை முழுமையாகப் பின்பற்றினா லன்றி பரவலைத் தடுக்க இயலாது.

ஏற்கனவே சென்னையில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 400ஐத் தொட்டுவிட்ட நிலையில், முகக் கவசம் அணிவதிலும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பதிலும்கூட மக்கள் அலட்சியம் காட்டுவது வேதனை தருகிறது.

சமூகமும் நாமும் வேறு வேறல்ல என்பதை உணர்ந்து, நம் குடும்பத்தினரையும் நம்மோடு வாழும் மக்களையும் இழந்து விடாமல் இருக்க, நாம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால் மீண்டுவிடலாம். கொரோனாவைக் கட்டுப்படுத்த தற்போது நம்மிடம் உள்ள ஒரே வழி, நம்மை நாமே காத்துக்கொள்வது மட்டுமே!


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *