திராவிடக் களஞ்சியமா? தமிழ்க் களஞ்சியமா?
சங்க இலக்கிய நூல்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்பாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்தது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
திராவிடம் ஆரியத்துக்கு எதிரான சொல் என்று ஒரு தரப்பும் திராவிடமும் தமிழும் வேறு வேறல்ல, தமிழ் என்ற சொல்லின் திரிந்த வடிவம்தான் திராவிடம் என்று ஒரு தரப்பும் சொல்லிக்கொண்டிருக்கையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்தேசியப் பேரியக்கத்தின் பெ. மணியரசன், கார்ட்டூனிஸ்ட் பாலா போன்ற தூயமைவாத தமிழ்த்தேசியவாதிகள் திராவிடக் களஞ்சியம் என்ற பெயருக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருக்கிறார்கள். அரசியல்வாதியும் நடிகருமான சீமான் ஆரியத்தின் செல்லக்குழந்தைதான் திராவிடம் என்றும் திராவிடத் திருட்டுத்தனம் என்றும் தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதே சீமான்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்கள் பெரும்பாட்டன் மாயோன்தான் கிருஷ்ணன் என்று சொல்லி வழிபாடு நடத்துவதாகச் சொன்னார். மாயோன் கிருஷ்ணனாகத் திரிபடையும்போது, தமிழ் திராவிடமாகத் திரிபடைந்திருக்காதா என்ன? அவ்வளவு ஏன், பெரியாரின் பேரனாக இருந்த சீமான், பெரும்பாட்டன் மாயோனின் பேரனாக மாறி இருக்கும்போது, தமிழ் என்ற சொல் பிற இடங்களில் திராவிட எனத் திரிபடையாதா என்ன?
திராவிடம் ஆரியத்தின் குழந்தை எனில், எச் ராஜா, நாராயணன், ராகவன், அண்ணாமலை வகையறாக்கள் எல்லாம் ஏன் திராவிடத்தைக் கண்டு பதறப்போகிறார்கள்? ஆனால் அந்த நபர்கள் யாருமே சீமான், மணியரசன் போன்றோர் குறித்து எதுவுமே பேசுவதில்லையே, அது ஏன் ?

எப்போதும்போல இப்போதும் திராவிட தமிழ்தேசிய சர்ச்சை, சமூக ஊடகங்களில் மட்டுமே பேசுபொருளாகும். சீமான், பாலா போன்றோரின் திராவிடத் திருட்டு என்ற விமர்சனத்துக்கு திராவிடத் தலைவர்கள் எதிர்ப்பு அறிக்கை வெளியிடப்போகிறார்களா? அல்லது வழக்கம் போலவே மௌனம் காப்பார்களா? என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவிலிருந்து என்கிறது அறிவியல். ஆளுக்கு ஒரு இனம் எனில் ஒவ்வொரு இனக்குழுக்கள் வாழும் இடத்திலும் மனித இனம் ஒரே நேரத்தில் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான ஆதாரங்கள் எதுவுமே இதுவரை கிடைக்கவில்லை. எனில், அறிவியல் கோட்பாட்டின்படி மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்தான். குடும்ப அமைப்பு உருவாகும் முன்பாக ஆண் பெண் கலப்பு என்பதற்கான வரைமுறைகள் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. தாய் வழிச்சமூகக் காலத்தில் பெண்ணே தன் விருப்ப ஆணைத் தேர்வு செய்திருப்பதால், இனக்கலப்பு என்பது இயல்பாகவே இருந்திருக்கும். அதனால், நான் தூய்மையான இனத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவர்கூட சொல்லிக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஊருக்கு ஒரு தமிழ் பேசப்படுகிறது. எழுத்துகளின் பண்டைய வரிவடிவம் ஏராளமான மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது. போலவே அந்தந்த ஊரில் வரி மற்றும் ஒலி வடிவங்கள் மாறியிருக்கக்கூடும். அதனால் திராவிட மொழிக்குடும்பம், தமிழ் மொழிக்குடும்பம் என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை.
சங்க இலக்கியங்கள் தமிழில் இருப்பதால் தமிழ்க் களஞ்சியம் என்று பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தவறில்லை. அதுவே நியாயமானதும் கூட. ஏனெனில், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பிற்போக்குவாதக் கருத்துகளை முன்வைக்கும் நூல்களையும் உள்ளடக்கிய தொகுப்புக்கு திராவிடக் களஞ்சியம் என்று பெயரிடுவதே அபத்தம்தான். நாளடைவில் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவிளையாடல் புராணம் போன்றவையும்கூட திராவிடக் களஞ்சியத்தில் சேர்ந்துவிடக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது.

பகுத்தறிவு மற்றும் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட பெரியார், அண்ணா, பாரதிதாசன், சுரதா, கலைஞர் கருணாநிதி, எஸ்.எஸ்.தென்னரசு, இரா.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, டி.கே.சீனிவாசன், குடியரசு, கி.வீரமணி, உள்ளிட்ட ஏராளமான திராவிட இயக்க எழுத்தாளர்களின் நூல்களை ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற பெயரில் கொண்டு வருவதே பொருத்தமாக இருக்கும்.
ஏனெனில், திராவிடம் என்பது வெற்றுப் பழம் பெருமை பேசும் கோட்பாடாக மாறிவிடாமல், முற்போக்குடனும் தொலைநோக்குடனும் அறிவியல் பார்வையுடனும் சமத்துவ நோக்குடனும் சிந்திப்பதற்கான அடையாளச் சொல்லாகவே இருக்க வேண்டும். திராவிடம் என்பது எப்போதும் ஆரியத்தின் நேரடி எதிர்ச்சொல்லாக இருப்பதே காலத்தின் தேவை.

இதற்கிடையே, இந்தக் கட்டுரையை நிறைவு செய்து வெளியிடவிருந்த நேரத்தில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். “சர்ச்சையை எழுப்புபவர்கள், வெளியிடப்பட்ட அறிவிப்பை முழுமையாகப் படிக்காமல் விமர்சிக்கிறார்கள். சங்ககால நூல்கள் சந்தி பிரிக்கப்பட்டு, இளைய தலைமுறையினர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படும். திராவிடக் களஞ்சியம் என்பது கடந்த 150 ஆண்டுகளில் வெளிவந்துள்ள திராவிட இயக்க உணர்வாளர்கள் சமூக சீர்திருத்தம் சார்ந்து எழுதிய, மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்டவை சார்ந்த நூல்கள், கால்டுவெல் முதல் ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சமகால ஆய்வாளர்கள் வரையிலான ஆய்வு நூல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல், இரண்டையும் போட்டு குழப்பிக்கொண்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டாம்” என்று கூறியுள்ளார். அவ்வகையில் நமது எண்ணத்தின் வெளிப்பாடே அரசின் நிலைப்பாடாக உள்ளது எனபது மகிழ்வான செய்தியாகும்.
இந்தக் குழப்பத்துக்குக் காரணமான, செய்தி – மக்கள் தொடர்புத்துறை அறிவிப்புப் பதாகையும் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.


Sibi Sibi
September 3, 2021திரிபடைந்த திராவிடத்தை ஏன் தூக்கிச் சுமக்கனும். திரியாத தமிழ் இருக்கும்போது!
ஹாஜா
September 4, 2021திராவிடம் என்றால் என்னவென்று விவாதிக்க திராவிடக் கும்பல் தயாரா? அய்யா மணியரசன் மற்றும் பல தமிழ் தேசியவாதிகள் தயார்