திராவிட மாடல் – கவிதைகள்

திராவிட மாடல் – கவிதைகள்

சமத்துவம் நான் உனக்காக மாறிவிடநிறைய இருக்கின்றன நீயும் எனக்காக மாறிக்கொள்ளகொஞ்சம் இருக்கிறது ஆனால்நமக்காக மாறிக்கொள்வதில் மட்டும்கவனம் கொள்வோம் மற்றவை மாறிடினும்மாறாவிடினும் என்ன? நீ பாதி நான் பாதி என்பதில்உனக்கு நம்பிக்கை உண்டா? நீயும் முழுமைநானும் முழுமைஎன்பதே சரிஅதற்கு மாறிக் கொள்வோம் ============================ சுயமரியாதை என்னிடத்திலான உன்எதிர்பார்ப்புகளெவையும்நமுத்துப் போகாதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் அன்றாடத் தேவைகளெதுவும்எள்ளளவும் அயர்ச்சியுறாத வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு என் சுயத்தை முற்றிலுமாய் ஒழித்துஉன் சுயத்துக்காய் நான் ஒடுங்கியிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் நினைவின் பின்னோடேஎன் நடை நழுவாதிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு அடுப்பங்கறை தாண்டிஎன் சிந்தைகளுக்குச்சிறகு முளைக்காதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு கிள்ளியெடுக்கும் பூவில்வழியும் வலி யாரறிவார்?! முனை மழுங்கிப்போன என்சுயமரியாதையைப் புதைத்த இடத்தில்முளைத்து நிற்கும் சுயபச்சாதாபத்தைவேரோடு பொசுக்கிவிட்டால்உனதன்போடு பின்னிக்கொள்வதில்எந்தத் தடையும் இருக்கப்போவதில்லைஎனக்கும்

மகா மகா சாணக்கியன்

மகா மகா சாணக்கியன்

“தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட – இழிவாய்க் கருதப்பட்ட மக்கள், அதாவது தீண்டத்தகாதோர் –  கீழ் சாதியார் – ஈன சாதியார் – சூத்திரர் என்பனவாகிய, ‘பிறவி இழிவும் – பிறவி அடிமைத்தனமும், சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி, பிரவாகமும், வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கை கொண்டு, அதில் இறங்கி வேலை செய்தவர், அவ்வேலையில் அவர்பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு விரோதி; ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி; ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலிகளுக்கு விரோதி! இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான  நிலையில், நெருப்பின்மேல்  நின்றுகொண்டு வேலை செய்வதுபோல், வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் – இலக்கியமாகவும் விளங்கினார்.” இவ்வளவு அடைமொழிகளையும், அர்த்த மிக்க சொல்லாடல்களையும் தந்தை பெரியார் அவர்களால் பொழிந்து எழுதப்பட்டது யாருக்கு என்றால், பானகல் அரசர் என்று கூறப்படும் பனங்கண்டி இராமராய நிங்கர் அவர்களுக்குத்தான்! தந்தை பெரியார் நெஞ்சத்தில் ஆழமாகக் குடிகொண்ட இந்தப் பெரு மகனாரின் பிறந்தநாள் இந்நாள் (சூலை 9, 1866). பெருஞ்செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் முன்னோர்கள் ஆந்திராவின் பானகல்லு எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். அதன்பின் காளஸ்திரியில் குடியேறினர். காளஸ்திரி அரசர் குடும்பத்தோடு மண உறவு கொண்டவர்கள். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்தவர் – சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர். 1912 முதல் 1915 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு முத்திரையைப் பொறித்தவர். டாக்டர் சி. நடேசனார் அவர்களால் தொடங்கப்பட்ட திராவிடர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நீதிக் கட்சியின் வேர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். 1919ஆம் ஆண்டில் பார்ப்பனர் அல்லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி, பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் வாதிட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் பானகல் அரசர் அங்கம் வகித்தார். 1920ஆம் ஆண்டில் சென்னை மாநில முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். வழக்குரைஞர் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். உடல் நலக்குறைவு காரணமாக சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் பதவியிலிருந்து விலகியபோது, பிரதம அமைச்சராகப் பதவியேற்றார். 1923ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதம அமைச்சர் ஆனார். இவர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் பெற்ற உரிமைகளும், வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் அசாதாரணமானவை. 1) 1921ஆம் ஆண்டில் முதல் வகுப்புவாரி உரிமைச் சட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) இயற்றப்பட்டது.  2) பஞ்சமர், பறையர் என்ற பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி திராவிடர் என்று அழைக்கப்படுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 3) தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக ‘லேபர் கமிஷனர்’ என்ற தனி அதிகாரிகள் நியமனம். 4) ஆங்கிலேயர் வசமிருந்த சென்னை மாநில மருத்துவத் துறை இந்தியர் மயமாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது. (நீதிக்கட்சி ஆங்கிலேயர்களுக்குத் துணை போனது என்று வாய்க் கூசாமல் பேசுவோர்க்கு இது காணிக்கை)  5) சென்னைப் பல்கலைக்கழக சட்டம்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. 6) கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தலைமை ஆசிரியர்களின் அதிகாரத்தில் இருந்தது.  பெரும்பாலும் அவர்கள் பார்ப்பனர்களாக இருந்ததால், பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரிகளில் நுழைவு என்பது தடையாக இருந்தது. இதனை மாற்றி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு என்று தனிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. 7) மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது (இந்தக் கால மருத்துவர்களுக்கு இந்த வரலாறு தெரிய வேண்டும்). 8) பார்ப்பனர்களின் கொட்டமாக இருந்து வந்த இந்துக் கோயில்களின் சொத்துகளைக் காப்பாற்ற, இந்து அற நிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (மத விஷயங்களில் அரசு தலையிடுகிறது என்று சத்தியமூர்த்தி அய்யர் போன்ற தலைவர்கள் போட்ட கூச்சல் கொஞ்ச நஞ்சமல்ல! நீதிக்கட்சிக்காரர்கள் பிராமணர்களை மட்டுமல்ல; கடவுளையும் அழிக்கக் கிளம்பி விட்டனர். மதத்தை அழிக்க முனைந்து விட்டனர் என்று முரட்டுக் கூச்சல் போட்டனர்). 9) நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவும் திட்டம் – தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கு வழி செய்யப்பட்டது. 10) சென்னையில் தியாகராயர் நகர் என்ற விரிந்த பகுதியை உருவாக்கிய வரும் இவரே! “மகா மகா சாணக்கியன்” என்று பார்ப்பனர்களால் கருதப்பட்டவர் பானகல் அரசர். தனது திரண்ட செல்வத்தைப் பொது வாழ்வுக்காகக் கொட்டியவர். தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். பானகல் அரசர் மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய மிக நீண்ட அறிக்கை – பானகல் அரசரின் அருமையையும், சாதனையையும் என்றென்றைக்கும் பறைசாற்றும்! வேறு எந்தத் தலைவருக்கும் இவ்வளவுப் பெரிய அறிக்கையை தந்தை பெரியார் வெளியிட்டதில்லை. ‘திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது?’ என்று கேட்பவர்கள் அதன் சாதனைகளை அறியாதவர்களே! நீதிக்கட்சி அடிகோலிய கட்டுமானத்தின்மீதுதான் இன்றைய வளர்ச்சிகள் எல்லாம் நிமிர்ந்து நிற்கின்றன என்பதுதான் உண்மை. குறிப்பாக, சமூகநீதி என்பது இன்றைக்கு இந்தியா முழுவதும் உயிரோட்டமாக – ஒடுக்கப்பட்ட மக்களின் அடிநாதமாக இருக்கிறது.  இந்திய அரசமைப்புச் சட்டமே அங்கீகரிக்கிறது என்றால் அதற்கான ஆசான் நீதிக்கட்சியே! நீதிக்கட்சியே!! ‘மகா மகா சாணக்கியன்’ என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட பானகல் அரசரின் பிறந்த நாளில் அந்தப் பெருமகனாரை மிகுந்த நன்றியுணர்வுடன் நினைவு கூர்வோம். சமூகநீதிக்கு அறை கூவல்கள் புறப்பட்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பானகல் அரசர் என்ற பெருமானின் உணர்வுகளை, தந்தை பெரியார் கொடுத்துச் சென்ற போராட்டக்  குணத்தோடு முன்னெடுப்போம்! சமூக நீதிக்கான சவால்களை முறியடிப்போம்! வாழ்க பானகல் அரசர் என்ற பெம்மான்! கி.வீரமணிதலைவர்,திராவிடர் கழகம்9-7-2016சென்னை பானகல் அரசரின் 156 ஆம் பிறந்தநாள் இன்று! ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பானகல் அரசரின் 150 ஆம் பிறந்தநாளில் வெளியிட்ட அறிக்கை இது.

நெடுங்கணக்கு – பகுதி 3

நெடுங்கணக்கு – பகுதி 3

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பதில் ‘ஒலி’ என்ற தலைப்பின் கீழ் ‘திராவிட நெடுங்கணக்கு’ என்பதை விளக்கிய கால்டுவெல், மெய் எழுத்துகளின் ஒலி அமைப்பு பற்றியும் விளக்குகிறார். க், ச், ட், த், ப்,ற் ஆகிய வல்லொலி எழுத்துக்களை வல்லினம் என்றும், ங், ஞ், ண், ந்,ம், ன் ஆகிய மூக்கெழுத்துக்களை மெல்லினம் என்றும், ய், ர்,ல்,வ், ழ், ள் ஆகிய அரை உயிர் எழுத்துக்களை இடையினம் என்றும் மெய் எழுத்துக்களை மூன்றாகப் பிரிக்கலாம். வடக்கே வாழும் திராவிட மொழிகள், தேவநாகரி நெடுங்கணக்கைப் பார்த்து, தாமும் வல்லொலி – மெய், மெல்லொலி மெய்களை அறிவிக்க, தனித்தனி எழுத்துகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் தமிழ், வல்லொலி எழுத்தையும் மெல்லொலி எழுத்தையும் குறிக்க, ஒரே வடிவெழுத்தையே பெற்றுள்ளது என்றும் கூறும் கால்டுவெல், இம்முறை அம்மொழியின் வடிவெழுத்தை மட்டும் பற்றியதன்று ; இஃது, அம் மொழியுடன் பிறந்த, அம்மொழிக்கே உரிய ஓர் ஒலி (ஒலிப்பு) முறையாகும் என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். இம்முறை, எல்லா திராவிட மொழிகளிலும் உள்ளது என்றாலும், தமிழிலும் மலையாளத்திலும் மட்டுமே முறையாகவும், முழு வளர்ச்சியும் பெற்றுள்ளது என்கிறார் கால்டுவெல். முதற்கண் நிற்கும் க், ட், த், ப் என்ற வல்லெழுத்துகள் நான்கும் (இவற்றை ஹகர ஒலி இணையா வல்லெழுத்துகள் என்கிறார் கால்டுவெல்) ‘ட’ சொற்களின் மொழி முதல் எழுத்துகளாக வரும், இரட்டித்து வரும் க், ட், த், ப் என வல்லொலி வல்லெழுத்துக்களாகவே ஒலிக்கப் பெறும். அதே மெய் எழுத்துக்கள் சொற்களின் இடையே தனித்து வரின், க், ட், த், ப் என மெல்லொலி வல்லெழுத்துக்களாக ஒலிக்கப் பெறும் என்கிறார் கால்டுவெல். மெல்லொலி வல்லெழுத்து, மொழி முதல் எழுத்தாக வராது. அவ்வாறே வல்லொலி வல்லெழுத்து, சொல்லின் இடையே இரட்டித்து அன்றி, தனியாக வராது. ஆனால் சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து சொற்கள் கடன் வாங்கப் பெற்றால், அச்சொற்களில் உள்ள வல்லொலி வல்லெழுத்து, மெல்லொலி வல்லெழுத்தாகவும், மெல்லொலி வல்லெழுத்து வல்லொலி வல்லெழுத்தாகவும் அவை நிற்கும் இடங்களுக்கேற்ப மாற்றியே ஒலிக்கப் பெறும் என்று கூறும் கால்டுவெல, சமஸ்கிருத ‘தந்த’ என்றும் சொல், தமிழில் ‘தந்தம்’ எனவும், ‘பாக்ய’ என்றும் சொல் தமிழில் ‘பாக்கியம்’ எனவும் வருவதை சுட்டிக்காட்டுகிறார். இம்முறை, தனிச் சொற்களிடையே மட்டுமல்லாமல், இரு சொற்கள் புணர்ந்த தொகைச் சொற்களிடத்தும் வரும் என்கிறார். இரு சொற்கள் புணர்ந்துழி, வருமொழி முதற்கண் நிற்கும் மெய்யெழுத்து, அச் சொல் புணராது தனித்து நிற்புழி, வல்லொலி வல்லெழுத்தாக இருப்பினும், நிலைமொழியோடு புணர்ந்து இடையயழுத்தாம் தன்மையுற்று விடவே, மெல்லொலி வல்லெழுத்தாகவே மாற்றி ஒலிக்கப் பெறும். தெலுங்கில் இவ்வேறுபாடு வேறு வடிவெழுத்து கொடுத்து எழுதுவதன் மூலமாகவே காட்டப்படுகிறது என்கிறார் கால்டுவெல். அண்ணனும், தம்பியும் என்ற பொருளில் ‘அன்னதம்முலு’ என வரவேண்டிய சொல், புணர்மொழிக்கண், ‘அன்னதம்முலு’ என்றே எழுதப்படும். அதுபோன்றே, ‘அடிபட’ என்ற பொருளில், ‘கொட்டபடு’ என வரவேண்டிய சொல் ‘கொட்டபடு’ என்றே வரும். ஆனால் தமிழில், ‘கொட்ட’, ‘படு’ என்ற இவ்விரு சொற்புணர்ச்சி ‘கொட்ட’, ‘படு’ என இரட்டிக்கப்படுகிறது என்கிறார். ‘எண்ணுப் பொருட்கண்’வரும் இரு சொற்கள், இடையில் ‘எண்ணும்மை’ பெறாமல், ‘கபிலபரணர்’ என்பது போல் எண்ணப்பட்டு, இரு சொற்களுக்கும் ஒத்த ‘பன்மை விகுதி’ கொண்டு முடியும் என்கிறார். அதே போன்று ‘ச’ என்ற எழுத்து தனித்து வந்துழி மிகவும் மென்மையாகவும், ஷ், ச் இவ்விரு எழுத்துகளின் ஒலிகளுக்கும் இடைபட்ட ஓர் ஒலியுடையதாக ஒலிக்கப் பெறும் என்கிறார் கால்டுவெல். இவ்வெழுத்தின் ஒலிப்புமுறை முன்னர் கூறியபடியே என்றாலும், செயற்படும்போது சில மாறுபாடு நிகழ்கிறது என்று கூறும் கால்டுவெல், இவ்வெழுத்து சொல்லின் முதற்கண் நிற்பினும், அன்றி இடையில் நிற்பினும் மெல்லொலி வல்லெழுத்தைப் போன்று, ‘ச’ என ஒலிக்கப் பெறுவதே  மாறுபாடாகும் என்கிறார். இதுபோன்றே, ‘ற’ கரம் பற்றியும் நிலவுகிறது என்கிறார் கால்டுவெல். தனித்து வந்தால் ‘ற்’ எனவும், இரண்டாக இணைந்து வந்தால் ‘த்த்ர்’ எனவும் ஒலிக்கப்படும் என்கிறார். ஒரே வடிவெழுத்து,  ஓரிடத்தில் ‘க’ காகவும், மற்றொரிடத்தில் ‘க’ வாகவும், ஓரிடத்தில் ‘ட’ வாகவும் மற்றொரிடத்தில் ‘ட’ வாகவும், ஓரிடத்தில் ‘த’ வாகவும் மற்றொரிடத்தில் ‘த’ வாகவும், ஓரிடத்தில் ‘ப’ வாகவும் மற்றொரிடத்தில் ‘ப’ வாகவும் ஒலிக்கும் முறையானது, தமிழ்மொழி தோன்றிய காலத்தே உடன் தோன்றி அம்மொழியினின்று பிரிக்க இயலாதவாறு ஒன்றி நிற்கும் சிறப்பு இயல்பாகும் என்கிறார் கால்டுவெல். வல்லொலி வல்லெழுத்தும், மெல்லொலி வல்லெழுத்தும் ஒன்று பிறிதாக மாறும் இத் திராவிட ஒலிப்புமுறை அமையும் வகையில் தமிழ் நெடுங்கணக்கு வரிசை செய்யப்பட்டது என்று கூறும் கால்டுவெல், தமிழ் நெடுங்கணக்கு ஒரே வடிவெழுத்து, இவ்விரு வகை வல்லொலிகளையும் ஒலிக்கப் போதும் என்று கருதி, சமஸ்கிருத மெல்லொலி வல்லெழுத்துக்களை தவிர்த்தது என்கிறார். இது திராவிட மொழிகளுள் மிகப் பழைய மொழியாகிய தமிழ்மொழி வாயிலாக வெளிப்பட்டு தோன்றும் திராவிட ஒலிப்பு முறைகளாகும் என்றும் கூறுகிறார் கால்டுவெல். இந்தோ -ஐரோப்பிய மொழி எதிலும் வல்லொலி வல்லெழுத்தும், மெல்லொலி வல்லெழுத்தும், ஒன்று பிறிதாக மாறுதல் அடைவதை நாம் கண்டதில்லை என்று கூறும் கால்டுவெல், ஏப்ரு மொழி மெய் எழுத்துக்கள், ‘பெகத்’, ‘கெப்ஹத்’ என அவை நிற்கும் இடத்திற்கு ஏற்ப இருவகையாக ஒலிக்கப் பெறும் என்கிறார். அம் மெய் எழுத்துக்களுள் யாதேனும் ஒன்று, ஒரு சொல்லின் முதலிலோ, அல்லது ஓர் ‘அசை’யின் முதலிலோ வந்தால் அது வல்லொலி வல்லெழுத்துப் போலவே ஒலிக்கப்பெறும் என்றும் அவ்வெழுத்து ‘ஹகர’ ஒலி இணைந்த எழுத்தாயின், அது இயற்கையாய் பெற்றுள்ள ‘ஹகர’ ஒலியை இழந்து ஒலிக்கப் பெறும். இதைக் குறிக்க ‘தகெஷ்’ என் வழங்கப்படும் ஒரு சிறு புள்ளி பொறிக்கப்படும் என்கிறார் கால்டுவெல். ‘திராவிட மெய் எழுத்துக்கள் ‘ பற்றி கால்டுவெல் விரிவாகக் கூறுவதை அடுத்த பகுதியில் காணலாம். கந்தசாமி விநாயகம்

நெடுங்கணக்கு – பகுதி 2

நெடுங்கணக்கு – பகுதி 2

https://hexamedia.in/p-2022-0605/ நெடுங்கணக்கு பகுதி 1 – ஐ இந்த இணைப்பில் வாசிக்கலாம். தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகள்:தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகளாக கீழ்க்கண்டவற்றை கால்டுவெல் அவர்கள் குறிப்பிடுகிறார் : தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகளைப் போன்றே தமிழும், ‘எ’ மற்றும் ‘ஒ’கரத்தின் குறில், நெடில்களைக் குறிக்க தனித்தனி வடிவெழுத்துக்களைப் பெற்றிருக்கிறது. இந்த குறில், நெடில் வடிவெழுத்துக்களைப் பிரித்துக்காட்டும் குறிகள் முதன்முதலாக பெச்சி பாதிரியாரால் இணைக்கப்பட்டன. ‘ழ்இ’, ‘ல்ழ்இ’ என்ற அரை உயிர்களைக் குறிக்கும் சமஸ்கிருத ஒலிகளை யொத்த ஒலிகளை குறிக்கும் வரிவடிவ எழுத்துகள் தமிழில் இல்லை என்கிறார் கால்டுவெல். மேலும் சமஸ்கிருத அனுஸ்வரா ஒலிகளையும் தமிழ் நெடுங்கணக்கு மேற்கொள்வதில்லை என்கிறார். தமிழில் மூக்கெழுத்துகள் மிகவும் உறுதியானவை. தனித்தியங்கும் ஒலிகளை உடையவை. இவற்றில் இயற்கையான ஒலியை உடையது ‘மகர ஒலி’ ஒன்றே என்கிறார் கால்டுவெல். ‘ம’கரத்தைத் தொடர்ந்து, ‘க’ வரும் போது, ‘ம’கரம் மெல்லின மெய்யாகிய ‘ங’ வாக மாறுகின்றது என்கிறார். மகரத்தைத் தொடர்ந்து ‘ச’வும், ‘ட’வும், ‘த’வும் வந்தால் அம்மகரம் முறையே ‘ஞ’ வாகவும், ‘ண’ வாகவும், ‘ந’ வாகவும் மாறுகின்றது; இதில் ‘ச’ வை ‘அண்ண எழுத்து’ என்றும், ‘ட’ வை ‘நாவெழுத்து’ என்றும் ‘த’வை ‘பல்லெழுத்து’ என்றும் குறிப்பிடுகிறார் கால்டுவெல். தெலுங்கு மொழிக்கே உரிய ‘அரை அனுஸ்வரா’ எழுத்தையொட்டிய எழுத்து எதுவும் தமிழில் இல்லை என்றும் வல்லின மெய் எழுத்துகளின் முன், அவற்றிக்கினமான மெல்லின மெய் எழுத்துகளை அமைத்து, அவ் வல்லின மெய் எழுத்துகளின் வன்மையொலியைக் குறைத்து இனிய ஒலியாக மாற்றுவதே அரை அனுஸ்வார ஒலித் தோற்றம்; அம்முறை தமிழில் பெரிதும் மேற்கொள்ளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். சமஸ்கிருதத்தில் காணப்பெறும் வலிய ஒலிகளுள் எதையும் கடன் வாங்கியது கிடையாது. தனித்து இயங்கும் இயல்புடைய ‘ஹகர’ ஒலியையும் தமிழ் ஏற்றுக் கொள்வதில்லை என்கிறார். சமஸ்கிருத ‘விஸர்க்க’த்தை ஒத்த அரை உயிரும், அரை மெய்யுமாகக் கருதப்படும் ஆய்தம் என்ற எழுத்தைத் தமிழ் கொண்டுள்ளது. மேலும், சமஸ்கிருத மிடற்றுஒலி, ‘ஹ’கரம் போல ஒலிக்கப்பெறுகின்றது. அது பெரும்பாலும் செய்யுள்களில் மட்டும் இடம் பெறுகின்றது. அது புலவர்களுக்காக, பயனின்றித் தோற்றுவிக்கப்பட்ட எழுத்து (விஸர்க்கம்) என்கிறார். சமஸ்கிருதம், தன் மெய் எழுத்துகளை தேவநாகரி வர்க்க முறையைக் கையாண்டு வகைப்படுத்தி வரிசைப் படுத்தியுள்ளது. அதே முறையையே தமிழும் கையாண்டுள்ளது என்கிறார் கால்டுவெல். தமிழ் நெடுங்கணக்கு, முதல் வரிசையாகிய மிடற்று எழுத்துகளில், ‘க’ வையும், அதற்கு அடுத்து மூக்கெழுத்தாகிய ‘ங’ வையும் மேற்கொண்டு, இடையில் உள்ள ‘கஹ’,‘க’, ‘கஹ’ என்ற எழுத்துகளை நீக்கிவிட்டது. இரண்டாம் வரிசையாகிய அண்ணவெழுத்துகளில் ‘ச’ வையும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ஞ’வையும் மேற்கொண்டு, ‘சஹ’,‘ ஐ’, ‘ஐஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. மூன்றாவது வரிசையாகிய தலைவளி எழுத்துகளில் ‘ட’வும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ண’வையும் மேற்கொண்டு, ‘டஹ’,‘ ட’, ‘டஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. நான்காவது வரிசையாகிய வல்லெழுத்துகளில் ‘த’வையும், அதற்கின மூக்கெழுத்தாகிய ‘ந’ வையும் மேற்கொண்டு, ‘தஹ’, ‘த’, ‘தஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. ஐந்தாவது வரிசையாகிய இதழ் எழுத்துகளில், ‘ப’ வையும் அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ம’வையும் மேற்கொண்டு, ‘பஹ’, ‘ப’, ‘பஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. இவ்வாறு தேவநாகரியின் ‘ஹகர’ ஒலி மெய் எழுத்துகளை அறவே தமிழ் நீக்கிவிட்டது என்றும் அந் நெடுங்கணக்கின் மெல்லொலி மெய் எழுத்துகளையும் நீக்கிவிட்டது என்றும் கூறும் கால்டுவெல், தமிழில் வடிவெழுத்து ஒன்றே ஓர் இடத்தில் வல்லொலி உடையதாகவும் மற்றொர் இடத்தில் மெல்லொலி உடையதாகவும், தமிழுக்கே உரிய ஒலி முறைப்படி குறிக்க மேற்கொள்ளப்படுகின்றது என்றும், அவ்வடிவெழுத்து தேவநாகரி வர்க்கத்தின் முதல் எழுத்தாகிய வல்லொலி எழுத்து என்றும் கூறுகிறார் கால்டுவெல். தேவ நாகரி எழுத்துகளோடு வேறு நான்கு எழுத்துகளையும் தமிழ் இணைத்துக் கொண்டுள்ளது என்று கூறும் கால்டுவெல், இடையின ‘ழ’, வல்லின ‘ற’, லகர, ரகர ஒலிக்கலவை என்று கருதப்படும் இடையின ‘ள’, மெல்லின ‘ன’ ஆகிய நான்கு எழுத்துகளையும் குறிப்பிடுகிறார். ‘இஸ்’ என்ற ஒலியைத் தரும் சமஸ்கிருத எழுத்துகள் எவையும் தமிழ் நெடுங்கணக்கில் இடம் பெறவில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஒலிக்கும் போதும், எழுதும் போதும் தமிழ், ‘ஷ­’, ‘ஸ’ என்ற ஒலிகளை மேற்கொண்டாலும் இவ்வெழுத்துகள் பழந்தமிழ் இலக்கணத்திலோ, இலக்கியத்திலோ இடம் பெறவில்லை என்றும் தமிழ் நெடுங்கணக்கிலும் இடம் பெறவில்லை என்றும் கூறுகிறார் கால்டுவெல். சமஸ்கிருத ‘ஸ’ என்ற எழுத்து தமிழில் என்றும் இடம் பெற்றதில்லை என்றும் சமஸ்கிருத ‘ச’ என்ற ஒலியோடு ஒத்த ஒலியை உடையதும் தனித்து எழுதினால் ‘ஸ’ எனவும், இணைத்து எழுதினால் ‘ச’ எனவும் ஒலிக்கப் பெறும் ‘ச’கரமே தமிழில் ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். திராவிட ஒலிப்பு முறைதமிழ் நெடுங்கணக்குகளின் வரிசை, அமைப்பு முறை விளக்கிய கால்டுவெல் திராவிட வடிவெழுத்துகளின் ஒலிப்பு முறைகளை உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என்ற பகுப்பு முறையில் விரிவாக விளக்குகிறார். உயிர் எழுத்துகள் : தமிழ் உயிர் எழுத்துகளில் ‘அ’கர ஒலியே கடினமான ஒலி என்றும் அதனால் அது பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. சில இடங்களில் ‘எ’ எனவும் மாறுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். அதற்கு எடுத்துக் காட்டாக, சமஸ்கிருத ‘பலம்’, தமிழில் ‘பெலம்’ எனவும், ‘ஜபம்’, ‘செபம்’ எனவும் மாறுவதை கூறுகிறார். ஈற்றில் வரும் ‘அ’கரம் தமிழில் ‘ஐ’ காரமாக மாறுகிறது. கன்னடத்தில் அது பொதுவாக ‘எ’கரமாக மாறுகிறது என்கிறார். மலையாளத்தில் இன்றும் ‘அ’கரம், வழக்குத் தமிழில் பெரும்பாலும் ‘ஐ’காரமாகவும், தெலுங்கில் ‘இ’கரமாகவும், கன்னடததில் ‘உ’கரமாகவும் மாறுகிறது என்கிறார் கால்டுவெல். ‘அவ’ என்னும் சுட்டு, தமிழில் ‘அவை’ எனவும் தெலுங்கில் ‘அவி’ எனவும், கன்னடத்தில் ‘அவு’ எனவும் மலையாளத்தில் ‘அவ’ என்றே வருகிறது என்கிறார். இதுதான் ‘ஈற்று அ’ என்று ஒலிப்பு முறை எப்படி மாறுகின்றது என்பதை விளக்குகிறது. குறில் ‘அ’ இரண்டு இணைவதால் ‘ஆ’ தோன்றுகிறது. அது செய்யுளில் ஒ என மாறுகிறது. எடுத்துக்காட்டாக, விண் + அ+வ்+அர் = விண்ணவர், விண்ணோர். கன்னடத்தில் குறில் ‘அ’கரமும் ‘ஒ’கரமாக மாறும். சமஸ்கிருத உயர்திணைப் பெண்மையைக் குறிக்க வரும் ‘ஈற்று ஆ’, தமிழில் ‘ஐ’ என மாறும் என்கிறார் கால்டுவெல். எடுத்துக்காட்டாக, விருப்பம் என்ற சொல் சமஸ்கிருத்தில் ‘ஆஸா’, தமிழில் ‘ஆசை’ என்று மாறுகின்றது. சமஸ்கிருத ‘சித்ரா’, தமிழில் ‘சித்திரை’ என்று திங்கள் ஒன்றின் பெயராக வருகிறது என்றும் எடுத்துக் காட்டுகிறார். இதே ‘ஆ’, கன்னடத்தில் ‘எ’என மாறும். எடுத்துக்காட்டாக சமஸ்கிருத ‘கங்கா’ தமிழில் ‘கங்கை’ என்றும், கன்னடத்தில் ‘கங்கெ’ அல்லது ‘கங்கெயு’ என்றும் மாறும் என்கிறார் கால்டுவெல். தமிழ் ‘ஐ’ காரம் ‘அ’கரத்தில் இருந்து தோன்றுகின்றது என்றாலும் இவ் ‘ஐ’ கார ஒலி ஒலிக்கும் பொழுது அவ் ‘அ’கர ஒலி அடியோடு மறைந்துபோதல் வியப்பாக உள்ளது என்று நுட்பமாக எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல். இவ்வொலி, கிரந்த , மலையாள நெடுங்கணக்குகளில் ‘எஎ’ என இரண்டு ‘எ’கர எழுத்துகளாலும், கன்னட நெடுங்கணக்கில் ‘எ’, ‘இ’ என்று ஒலிகளின் கூட்டொலியை அறிவிக்கும் எழுத்து ஒன்றாலும் எழுதப்படுகிறது என்கிறார் கால்டுவெல். இரண்டாம் வேற்றுமை உருபு, மலையாளத்தில் ‘எ’ என இருக்க, அது தமிழில் ‘ஐ’ ஆக இருப்பது குறிக்கத் தக்கது என்கிறார் கால்டுவெல். தொழிற் பெயர்களின் இறுதி, கன்னடத்தில் ‘எ’ என இருக்க, தமிழில் ‘ஐ’ என இருப்பதும் ஆராயத்தக்கது என்கிறார் கால்டுவெல். ‘இ’,‘ ஈ’ இவை குறித்து கூறத்தக்கன எதுவும் இல்லை என்று கூறும் கால்டுவெல், திராவிட மொழிகளில் ‘ஊ’ காரம் நிலைத்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தது என்றாலும், குறில் ‘உ’, உயிர் எழுத்துகள் எல்லாவற்றிலும் மிக மிக மென்மையானதும் எளிமையானதும் ஆகும் என்கிறார். ஒலித்துணை, ஒலி நயம் காரணமாக, பெரும்பாலும் சொற்களின் ஈற்றில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். தெலுங்கு இலக்கண நடையில் ஒவ்வொரு சொல்லும் ‘உயிர் ஈறாகவே’ முடிதல் வேண்டும். உயிர் ஈற்று இல்லாமல் போகின்றபோது, ஈற்று மெய்யெழுத்துடன் ‘உ’கரம் இணைக்கப்படும் முறை சமஸ்கிருத்தில் இருந்து வந்த முறை என்கிறார் கால்டுவெல். ‘மகர’ ஈற்றுச் சமஸ்கிருத அஃறிணைப் பண்புப் பெயர்கள், தெலுங்கில் ‘மு’ என்றே முடிகிறது. எழுதும்போது உகரம் எழுதப்பட்டாலும் ஒலிக்கும் பொழுது பெரும்பாலும் ஒலிக்கப்படுவதில்லை என்கிறார் கால்டுவெல். கன்னடத்தில் ‘அ’கர ஈறாக முடியும் சொற்களின் ஈற்றிலும் ‘உ’கரம் சேர்க்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக ‘சில’, ‘பல’ என்ற தமிழ்ச் சொற்கள், கன்னடத்தில் ‘கெலவு’, ‘பலவு’ என வருகிறது என்று எடுத்துக்காட்டுகிறார் கால்டுவெல். க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற வல்லின மெய் எழுத்துகளை ஈறாக உடைய சொற்களோடு உகரத்தை இணைக்கும் தமிழ் முறை, கன்னட முறையோடு ஒத்துள்ளது என்கிறார் கால்டுவெல். இவ்வாறு இணைக்கப்படும் உகரம் அளவில் மிகவும் குறைந்து கால் கூறு அளவே ஒலிக்கிறது என்றும் கூறுகிறார். தமிழின் இக் ‘குறை உகரம்’ வட மலையாள மொழிகளில் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘கிழக்கு’ என்பது மலையாளத்தில் ‘கிழக்க’ என்று ஒலிக்கப்படுகிறது. துளு மொழியில் மேலும் விரிவாக ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். தன்னை அடுத்து, குறை உகரமோ அன்றி, ‘அ’கரமோ இணைக்கப்பட்ட ஈற்று வல்லின மெய்கள், சில வேளைகளில் இரட்டிப்பாக ஒலிக்கும் என்றும், ‘சொல்’ என்று பொருள் தரும் சமஸ்கிருத ‘வாக்’, தமிழில் ‘வாக்கு’ என்றும் ‘நீர்’ என்று பொருள்படும் சமஸ்கிருத ‘அப்’, தமிழில் ‘அப்பு’ என்றும் ஒலிக்கும் என்கிறார் கால்டுவெல். திராவிட மொழிகள், ‘எ’கர, ‘ஒ’கரக் குற்றுயிர் ஒலிகளைப் பெரும் அளவில் மேற்கொள்கின்றன என்கிறார் கால்டுவெல். எகர, ஒகரங்களின் நெடில்களான, ‘ஏ’கார, ‘ஓ’கார ஒலிகளிலிருந்து குற்றுயிர் ஒலிகளைப் பிரித்து, தனி வடிவெழுத்துகளை கொண்டுள்ளது. இவ்வாறு தனிக்குறில்கள் சமஸ்கிருதத்தில் கிடையாது என்கிறார். சமஸ்கிருத மொழியில் அறவே இடம் பெறாத இவ்விரு ஒலிகளும், திராவிட மொழிகளில் பெற்றிருக்கும் இன்றியமையாப் பெருநிலை, திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியின் தொடர்பற்ற தனி மொழிகளாகும் என்ற உண்மையை உறுதி செய்யத் துணை புரிவதாகும் என்கிறார். எகர, ஒகரக் குறில்கள் வரும் இடங்களில் அவற்றிற்கு ஈடாக, ஏகார, ஓகார நெடில்கள் அமைந்த சொற்கள் வந்தால் அவ்விரு சொற்களுக்கும் இடையே தோன்றும் வேற்றுமை, ஒலி நயம் குறித்து வந்ததாக இல்லாமல், சொற்களின் அடிப்படையையே, அச் சொற்களின் பொருளையே

நெடுங்கணக்கு

நெடுங்கணக்கு

கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலைப் படிக்க முயல்வது எவ்வளவு கடினமானது என்பதையும் அதனை வாசிக்க எவ்வளவு ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டேன். தோற்றுவாய்ப் பகுதியையும் முதற் பாகத்தையும் இயன்றளவு படித்து முடித்துவிட்டேன். இரண்டாம் பாகம் படிக்கும்போது திணறிவிட்டேன். படித்ததில்சில குறிப்புகள்: துளு மொழி, மலையாள வரிவடிவத்தில் எழுதப்பட்டு வந்தன என்றும் தற்போது மங்களுர், ஜெர்மன் மி­ன் பதிப்பகத்தில் வரும் துளு மொழி நூல்கள் கன்னட வரிவடிவுகளைப் பயன்படுத்துகின்றன என்றும் பிரைகில் என்பவர் எழுதிய துளுமொழி இலக்கண நூலும் கன்னட வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். கூ (கோண்டு) மொழி இலக்கண நூல் ஒரியா வரிவடிவத்தில் காணப்பட்டாலும் தெலுங்கு வரிவடிவே ஏற்புடையது என்கிறார் கால்டுவெல். ஏனைய திருந்தா மொழிகள் அனைத்தும் உரோமன் வரிவடிவங்களைப் பயன்படுத்துகின்றன என்றும் கூறுகிறார். திராவிட வரிவடிவங்கள் மாற்றம் பற்றி பீம்ஸ் என்பவர், ஒரிய மொழிகளின் வரிவடிவங்கள் ஆரியரல்லாத இனமொழிகளின் வடிவெழுத்துக்களோடு (தெலுங்கு, மலையாளம், தமிழ், சிங்களம், பர்மிய மொழிகள்) ஒத்துள்ளன என்றும் பர்மிய வரிவடிவங்கள் வட்டமாக மட்டுமே உள்ளன என்றும் நேர்க்கோடு என்பது கிடையாது என்றும், அசோகன் கையாண்ட வரிவடிவ எழுத்துக்கள் நேர்க்கோடுகளும், கோணங்களும் உடையனவாய் உள்ளன என்றும், அவை சியோனி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார். இதனுடைய தொடர்ச்சி கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி என்ற இடத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதில் சதுரங்களாக இருந்த வரிவடிவங்கள் அரை வட்டங்களாக மாற்றம் பெறுகின்றன. இம்மாற்றங்களிலிருந்தே திராவிட, சிங்கள மொழிகளின் நெடுங்கணக்குகள் தொடங்கப்பட்டன. ஜாவா நாட்டு அழகிய வரிவடிவங்களும் அவ்வாறே தோன்றின என்கிறார் கால்டுவெல். அடுத்து ஒரிய மொழி குறித்துக் கூறும் கால்டுவெல், எழுதும் ஆற்றலை ஒரியர்கள் வங்காளத்திலிருந்து பெற்றனரா அல்லது மத்திய இந்தியாவிலிருந்து பெற்றனரா என்று தெரியவில்லை என்கிறார். மேலும், ஒரியர்களும், வங்காளக் கரையோரப் பகுதியில் வாழும் பிற மொழியாளர்களும், தாலிப்பனை, விசிறிப் பனை, பனை இவற்றின் ஓலைகளில் எழுதுகின்றனர். நீண்ட நேர்க்கோடுகளால் ஆன தேவநாகரி எழுத்துக்கள், இப்பனையோலையில் எழுத இயலாது. எழுதினால், எழுத்தாணி பனையோலையைப் பிளந்து விடும் என்கிறார் கால்டுவெல். எழுத்தாணி வலது கையிலும், ஓலை இடக்கையிலும் வைத்து, இடது கைப்பெருவிரல் எழுத்தாணியின் அசைவிற்குக் காரணமாக இருப்பதால் வட்டவடிவ எழுத்துக்களை எழுதுவதற்கு ஏதுவாக இருக்கிறது என்றும் பீம்ஸ் அவர்களின் குறிப்புகளை எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல். தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைக்கவில்லை என்கிறார் கால்டுவெல். பிராமணர்கள் தமிழ்நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே, பண்டைத்தமிழர்கள், எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர் என்றும், அப்பிராம்மணர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த போது, தமிழ் வரிவெழுத்துக்களை தங்கள் மொழியாகிய சமஸ்கிருதத்திற்குரிய ஒலிகளை வெளியிடும் ஆற்றல் வாய்ந்த சில வடிவெழுத்துக்களையும் சேர்த்து, தமிழ் எழுத்துக்களையும் சீர்திருத்தினர் என்றும் கிரந்த லிபி அல்லது நூல் எழுத்துக்கள் என்று அவர்களால் அழைக்கப்பட்ட அவ்விணைப்பு எழுத்துக்களில் இருந்தே இன்றைய தமிழில் வழங்கும் வரிவெழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டன என்றும் எல்லீஸ் கூறியதையும் இங்கு எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல். அடுத்து பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார் கால்டுவெல். அதில், பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவங்களும், கூட்டு எழுத்துக்களில் இரண்டாவது எழுத்திற்குத் தனிவடிவம் தரும் பஸங்கன் முறையும், உயிர் எழுத்துக்களின் வேறுபாட்டைக் குறிக்க, வேறுபாட்டுக்குறிகளை வழங்கும் சந்தங்கன் முறையும், இம்மொழிகள் ஆரிய மொழியின் வழி வந்தன என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது என்கிறார். ‘சமஸ்கிருதத்திற்கு முந்திய தமிழ் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பது குறித்து ஐயப்பாடு இருக்கிறது. தாய் மொழியில் எழுத்தையும், நூலையும் குறிக்க வழங்கும் தனித்தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பது உண்மையே எனினும், பிராம்மணர்கள் இந்நாட்டில் முதன் முதலாகக் குடியேறியதற்கு முற்பட்ட காலத்தில், தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைத்தில’ என்கிறார் கால்டுவெல். மேலும், பழைய காலத்துக் கல்வெட்டுகளில் தமிழ் மொழியை வழங்க மேற்கொண்ட பல்வேறு வகை வடிவெழுத்துகள் தொடக்கத்தில் சமஸ்கிருத எழுத்துகளை வழங்க மேற்கொண்ட நெடுங்கணக்கு முறையின் அடிப்படை மீது அமைந்துள்ளனவாகவே தோன்றுகிறது என்கிறார் கால்டுவெல். இது தொடர்பாக மீண்டும் எல்லிஸ் அவர்களை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். ‘திருவாளர் எல்லீஸ் அவர்களின் கருத்தோடு ஒத்த கருத்து அல்ல என்றாலும் அவர் கருத்தோடு தொடர்புடைய கருத்து ஒன்றைத் திருவாளர் எட்வர்டு தாமஸ் என்பார் வெளியிட்டுள்ளார்’ என்று கூறும் கால்டுவெல், ‘அசோகன் கல்வெட்டுகளில் காணப்படுபவையும், சமஸ்கிருதம் அல்லது பிராகிருத மொழிகளை வழங்க மேற்கொள்ளப் பயன்பட்டவையும் ஆன மிகப் பழைய வடிவெழுத்துக்கள், திராவிட இனப்பிறப்பை அடிப்படையாகக் கொண்டன என்றும் அவை துரேனியர் (திராவிடர்) மொழிகளின் தேவைகளுக்காகவே தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவை வடமொழி ‘ஹகர’ வொலிகளை ஒலிக்க மேற்கொள்ளப்பட்ட பிராகிருத அல்லது லாட் நெடுங்கணக்குகளாய் பழைய திராவிட வடிவெழுத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட காலத்தில்தான் அவற்றில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது’ என்றும் எட்வர்டு தாமஸ் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். லாட் மொழியில் ‘ஏ’காரத்தைக் குறிக்க வழங்கும் வடிவெழுத்தே ‘ஐ’காரத்தைக் குறிக்கவும் வழங்கப்படுகிறது என்றாலும் அந் நெடுங்கணக்கில், ‘எ’கர, ‘ஏ’கார ஒலிகளைக் குறிக்க வரும் வடிவெழுத்துக்களிடையே வேறுபாடு உள்ளது என்கிறார் தாமஸ் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல். கொச்சியில் வாழும் யூதர்களிடத்தும், மலபார் கடற்கரையில் வாழும் சிரியன் கிறித்தவர்களிடத்தும் உள்ள அரசப் பரிசுகள் அடங்கிய பட்டயங்கள் போலும் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்பெறும் தமிழ் வடிவெழுத்துகள் தனியாக ஆராயத் தக்க தகுதியுடையன என்கிறார் கால்டுவெல். அக்கல்வெட்டுகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, சென்னை இலக்கியக் கழக வெளியீட்டில் வெளியிடப்பெற்று ஆராயப்பட்டுள்ளன. அவற்றில் மலையாள வாடை சிறிது வீசுகிறது எனினும், அவை தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் சென்னை மாநில அரசியல் அலுவலில் இருந்த, பேராசிரியர் பர்னல் என்பவரால் பம்பாயினின்றும் வெளியாகும் இந்தியன் ஆண்டிகுவரி என்னும் வெளியீட்டின், 1872 ஆம் வெளியீட்டில் அச்சிடப் பெற்றுள்ளன என்ற செய்தியையும் தருகிறார் கால்டுவெல். இந்தப் பேராசிரியர் பர்னல்தான், தான் கண்டு வெளியிட்ட மிகப் பழைய திராவிட நெடுங்கணக்கு, எகர, ஏகார ஒலிகளை அறிவிக்கும் வடிவெழுத்துகளில் எவ்வித வேறுபாடும் காட்டுவதில்லை என்றும் அந்நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டில் காணப்பெறும் சமஸ்கிருத நெடுங்கணக்கிலிருந்து தோன்றியது என்பதற்குச் சான்றாகவும் இதை எடுத்துக் காட்டியவர் என்கிறார் கால்டுவெல். அவ்வடிவெழுத்துகள், கொச்சியைச் சேர்ந்த யூதர்களும் கிறித்துவர்களும் வைத்திருந்த செப்புப் பட்டயங்களிலிருந்து பெயர்த்தெடுத்த படிகளிலிருந்து எடுக்கப்பட்டன என்றும் அப்பட்டயங்களில் காணப்பெறும் வானநூல் பற்றிய செய்திகளைக் கொண்டு, அப்பட்டயங்களில் ஒன்று கி.பி. 774 ஆம் ஆண்டைச் சேர்ந்ததென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் செய்தியையையும் தருகிறார் கால்டுவெல். தென்னாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கல்வெட்டுகள், இப்பட்டயங்களே யாதலாலும், தமிழ் வடிவெழுத்துகளின் தொன்மை வடிவம் இஃது எனத் தெரிவிப்பன அவையே ஆதலாலும் அப்பட்டயங்கள் வடிவெழுத்தாராய்வார்க்குப் பெரும்பயன் அளிப்பவாகும் என்பதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். எட்டாம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டுகள்தான் கால்டுவெல் போன்றவர்களுக்கு கிடைத்த மிகத் தொன்மையான கல்வெட்டுகளாகத் தெரிந்திருக்கிறது என்பதிலிருந்து, அவர்களுக்கு தமிழின் தொன்மை குறித்து அறிவதில் உள்ள நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ‘யூதர்களிடத்தும் சிரியன் கிறித்துவர்களிடத்தும் கிடைக்கும் பட்டயங்களில் காணப்பெறும் தமிழ், மலையாள வடிவெழுத்துகளே, அசோகன் கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்துகளின் பிறப்பிடமாம் என்று முடிவு செய்வதோடு,தென்னாட்டுக் கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் பொய்னீஷ்யாவிலிருந்து செங்கடல் வழியாக வந்த வாணிப மக்களால் கொண்டுவரப்பட்டவை என்பதால், அவை எகிப்து மொழி எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், பழைய தமிழ் நெடுங்கணக்கு, யேமன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப் பெற்ற கல்வெட்டுகளில் காணப்பெறும் தென் கிழக்கு அரேபிய மொழியாகிய ஹிம்யாரிடிக் மொழி நெடுங்கணக்கோடு ஒத்துள்ளது என்றும், மெய்யெழுத்துகளின் வடிவம், உயிர் எழுத்துகளின் சேர்க்கைக்கேற்ப மாற்றப்படும் இயல்பால், தமிழ் நெடுங்கணக்கு, ஒருவகையில் அந்த ஹிம்யாரிடிக் மொழியோடு பெரிதும் மாறுபட்டு, அபிசீனியாவில் வழங்கும் செமிடிக் இன மொழிகளுள் ஒன்றாய எதோபிய மொழியின் நெடுங்கணக்கோடு ஒற்றுமை கொண்டுள்ளது என்றும் கருதுகின்றார் பேராசிரியர் பர்னல்’ என்கிறார் கால்டுவெல். ‘இம்முடிவுகள் மேலும் ஆராய்ந்து நோக்கத்தக்க சிறப்பு வாய்ந்தனவே எனினும், நாமறிந்த இந்தியப் பண்பாட்டு வரலாற்றினை அறிவிக்கும் நிகழ்ச்சிகளோடு தொடர்பற்றனவாகத் தோன்றுகின்றன’ என்று பேராசிரியர் பர்னல் அவர்களோடு முரண்படுகிறார் கால்டுவெல். ஆரியர்கள் தோன்றிய இடத்திலேயே தானும் தோன்றி, தென்கோடி வரை பரவி வளர்ந்த இலக்கிய வளத்தைப் போன்றே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வழங்கிய அசோகன் கல்வெட்டிற் காணப்பெறும் வடிவெழுத்துகளே, பல நூற்றாண்டு காலமாகச் சிறிது சிறிதாக மாற்றம் பெற்று, கி.பி. 774 இல் வழக்கில் இருந்ததாக அறியப்பட்ட தமிழ்-மலையாள எழுத்துகளாக மாறின என்ற கொள்கை, அவ்வசோகன் கல்வெட்டெழுத்துகள், தமிழ்-மலையாள வடிவெழுத்துகளிலிருந்து தோன்றியன அல்லாமல் வேறு இல்லை என்ற கொள்கையிலும் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது’ என்று முடிக்கிறார் கால்டுவெல். ‘தமிழ்-மலையாள வடிவெழுத்துகள், இப்பொழுதுள்ள வடிவினும் வேறுபட்ட வடிவங்களைப் பண்டு பெற்றிருந்தன என்பதை ஒப்புக் கொண்டாலும் அவற்றை நிலைநாட்டும் சான்று எதுவும் கிடைக்கவில்லை’ என்றும் கூறுகிறார் கால்டுவெல். ‘பழைமையுடையவாக அறியப்பட்ட தென்னிந்திய நெடுங்கணக்குகள், அகர, ஆகார, இகர, ஈகார, உகர, ஊகாரம் இவற்றின் குறில், நெடில்களைக் குறிக்கத் தனித்தனி வடிவெழுத்துகளைப் பெற்றிருக்கவும், சமஸ்கிருதம், இன்றைய மலையாளம் ஆகிய மொழிகளைப் போல, எகர, ஏகாரங்கள், ஒகர, ஓகாரங்கள் இவற்றின் குறில் நெடில்களைக் குறிக்க, தனித்தனி வடிவெழுத்துகளைப் பெறாது, இரு ஒலிகளையும் குறிக்க ஒரே வடிவெழுத்தைப் பெற்றிருப்பதை நோக்கும் போது, அந்நெடுங்கணக்கு, சமஸ்கிருத ஒலிகளை அறிவிக்கத் தோற்றுவிக்கப்பட்டவையே அல்லாமல் திராவிட மொழி ஒலிகளைக் குறிக்கத் தோன்றியவை அல்ல என்றே தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால், இந்திய வடிவெழுத்துகளின் தோற்றம் – அஃதாவது, அசோகன் நெடுங்கணக்கு, திராவிட நெடுங்கணக்கினின்றும் தோன்றியதா அல்லது திராவிட நெடுங்கணக்கு அசோகன் நெடுங்கணக்கிலிருந்து தோன்றியதா என்பது இன்னமும் முடிவாக உறுதி செய்யப்படவில்லை என்பதே என் கருத்து’ என்று கூறிய கால்டுவெல்,‘என்றாலும் இப்போதுள்ள நிலையில் திருவாளர் பீம்ஸ் அவர்கள் கொள்கையோடு இணைந்து, பின் முடிவை ஏற்றுக்கொள்ளவே நான் விரும்புகிறேன்’ என்கிறார். எட்வர்டு தாமஸ் அவர்கள் வெளியிட்ட ‘இந்தியப் பழமை பற்றி பிரின்செப் அவர்கள் எழுதிய கட்டுரைகள்’ என்ற நூலில் இந்திய நெடுங்கணக்குகள் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன என்ற குறிப்பையும் தருகிறார் கால்டுவெல். ‘தமிழ் வடிவெழுத்துகள், தேவநாகிரி எழுத்துக்களோடு எத்துணை வேற்றுமையுடையவாக இருந்தாலும் அதனினும் பன்மடங்கு அதிகமாக

உண்மையான சமூகநீதி நாள்

உண்மையான சமூகநீதி நாள்

பெரியார் பிறந்த செப்.17-ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பெரியார் விரும்பிய சமூக நீதி எது? அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதா? வெறும் உறுதிமொழி மட்டும் ஏற்பதா? பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற முடிந்தது. இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தவர்களும் இன்று தங்களுக்குத் தாங்களே இட ஒதுக்கீடு வழங்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டால் பலன் அடைந்தவர்கள் வேற்றுகிரகவாசிகளைப் போல நடந்துகொள்ளும் அளவிற்கு அதன் வரலாறு தெரியாமல் இருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகியுள்ளது என்பது சமூகநீதித் தளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சமூக நீதி என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதோடு முடிந்துவிட்டதா? இதனைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டாமா? ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? மக்கள் தொகையில் சரிபாதி அளவில் உள்ள பெண்களுக்கான இடப் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? எப்போது கட்சிப் பதவிகளில் வாரிசு அரசியல் ஒழிந்து, தலைமைப் பொறுப்புகள் அனைவருக்கும் சாத்தியமாகும்? எப்போது ‘கல்வியும் மருத்துவமும் விற்பனைக்கு’ என்ற நிலை மாறி அனைவருக்கும் சமமான கல்வியும் மருத்துவமும் கிடைக்கும்? இட ஒதுக்கீட்டின் பலன் எப்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும்? மிக முக்கியமாக, எப்போது பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாகும்? இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறை, “நான் இப்போது பேசுவதைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பிய பெரியாரின் கனவு நனவாகும் நாளே உண்மையான சமூக நீதி நாளாகும். அப்படியான ஒரு நாள் உருவாகும் வகையில், இளைய தலைமுறையை வழிநடத்துவோம் என்று உறுதியேற்றுச் செயல்படுவதே உண்மையான சமூகநீதியை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக இருக்கும்.

திராவிடக் களஞ்சியமா? தமிழ்க் களஞ்சியமா?

திராவிடக் களஞ்சியமா? தமிழ்க் களஞ்சியமா?

சங்க இலக்கிய நூல்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்பாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்தது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. திராவிடம் ஆரியத்துக்கு எதிரான சொல் என்று ஒரு தரப்பும் திராவிடமும் தமிழும் வேறு வேறல்ல, தமிழ் என்ற சொல்லின் திரிந்த வடிவம்தான் திராவிடம் என்று ஒரு தரப்பும் சொல்லிக்கொண்டிருக்கையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்தேசியப் பேரியக்கத்தின் பெ. மணியரசன், கார்ட்டூனிஸ்ட் பாலா போன்ற தூயமைவாத தமிழ்த்தேசியவாதிகள் திராவிடக் களஞ்சியம் என்ற பெயருக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருக்கிறார்கள். அரசியல்வாதியும் நடிகருமான சீமான் ஆரியத்தின் செல்லக்குழந்தைதான் திராவிடம் என்றும் திராவிடத் திருட்டுத்தனம் என்றும் தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதே சீமான்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்கள் பெரும்பாட்டன் மாயோன்தான் கிருஷ்ணன் என்று சொல்லி வழிபாடு நடத்துவதாகச் சொன்னார். மாயோன் கிருஷ்ணனாகத் திரிபடையும்போது, தமிழ் திராவிடமாகத் திரிபடைந்திருக்காதா என்ன? அவ்வளவு ஏன், பெரியாரின் பேரனாக இருந்த சீமான், பெரும்பாட்டன் மாயோனின் பேரனாக மாறி இருக்கும்போது, தமிழ் என்ற சொல் பிற இடங்களில் திராவிட எனத் திரிபடையாதா என்ன? திராவிடம் ஆரியத்தின் குழந்தை எனில், எச் ராஜா, நாராயணன், ராகவன், அண்ணாமலை வகையறாக்கள் எல்லாம் ஏன் திராவிடத்தைக் கண்டு பதறப்போகிறார்கள்? ஆனால் அந்த நபர்கள் யாருமே சீமான், மணியரசன் போன்றோர் குறித்து எதுவுமே பேசுவதில்லையே, அது ஏன் ? எப்போதும்போல இப்போதும் திராவிட தமிழ்தேசிய சர்ச்சை, சமூக ஊடகங்களில் மட்டுமே பேசுபொருளாகும். சீமான், பாலா போன்றோரின் திராவிடத் திருட்டு என்ற விமர்சனத்துக்கு திராவிடத் தலைவர்கள் எதிர்ப்பு அறிக்கை வெளியிடப்போகிறார்களா? அல்லது வழக்கம் போலவே மௌனம் காப்பார்களா? என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும். மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவிலிருந்து என்கிறது அறிவியல். ஆளுக்கு ஒரு இனம் எனில் ஒவ்வொரு இனக்குழுக்கள் வாழும் இடத்திலும் மனித இனம் ஒரே நேரத்தில் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான ஆதாரங்கள் எதுவுமே இதுவரை கிடைக்கவில்லை. எனில், அறிவியல் கோட்பாட்டின்படி மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்தான். குடும்ப அமைப்பு உருவாகும் முன்பாக ஆண் பெண் கலப்பு என்பதற்கான வரைமுறைகள் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. தாய் வழிச்சமூகக் காலத்தில் பெண்ணே தன் விருப்ப ஆணைத் தேர்வு செய்திருப்பதால், இனக்கலப்பு என்பது இயல்பாகவே இருந்திருக்கும். அதனால், நான் தூய்மையான இனத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவர்கூட சொல்லிக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஊருக்கு ஒரு தமிழ் பேசப்படுகிறது. எழுத்துகளின் பண்டைய வரிவடிவம் ஏராளமான மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது. போலவே அந்தந்த ஊரில் வரி மற்றும் ஒலி வடிவங்கள் மாறியிருக்கக்கூடும். அதனால் திராவிட மொழிக்குடும்பம், தமிழ் மொழிக்குடும்பம் என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. சங்க இலக்கியங்கள் தமிழில் இருப்பதால் தமிழ்க் களஞ்சியம் என்று பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தவறில்லை. அதுவே நியாயமானதும் கூட. ஏனெனில், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பிற்போக்குவாதக் கருத்துகளை முன்வைக்கும் நூல்களையும் உள்ளடக்கிய தொகுப்புக்கு திராவிடக் களஞ்சியம் என்று பெயரிடுவதே அபத்தம்தான். நாளடைவில் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவிளையாடல் புராணம் போன்றவையும்கூட திராவிடக் களஞ்சியத்தில் சேர்ந்துவிடக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது. பகுத்தறிவு மற்றும் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட பெரியார், அண்ணா, பாரதிதாசன், சுரதா, கலைஞர் கருணாநிதி, எஸ்.எஸ்.தென்னரசு, இரா.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, டி.கே.சீனிவாசன், குடியரசு, கி.வீரமணி, உள்ளிட்ட ஏராளமான திராவிட இயக்க எழுத்தாளர்களின் நூல்களை ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற பெயரில் கொண்டு வருவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், திராவிடம் என்பது வெற்றுப் பழம் பெருமை பேசும் கோட்பாடாக மாறிவிடாமல், முற்போக்குடனும் தொலைநோக்குடனும் அறிவியல் பார்வையுடனும் சமத்துவ நோக்குடனும் சிந்திப்பதற்கான அடையாளச் சொல்லாகவே இருக்க வேண்டும். திராவிடம் என்பது எப்போதும் ஆரியத்தின் நேரடி எதிர்ச்சொல்லாக இருப்பதே காலத்தின் தேவை. இதற்கிடையே, இந்தக் கட்டுரையை நிறைவு செய்து வெளியிடவிருந்த நேரத்தில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். “சர்ச்சையை எழுப்புபவர்கள், வெளியிடப்பட்ட அறிவிப்பை முழுமையாகப் படிக்காமல் விமர்சிக்கிறார்கள். சங்ககால நூல்கள் சந்தி பிரிக்கப்பட்டு, இளைய தலைமுறையினர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படும். திராவிடக் களஞ்சியம் என்பது கடந்த 150 ஆண்டுகளில் வெளிவந்துள்ள திராவிட இயக்க உணர்வாளர்கள் சமூக சீர்திருத்தம் சார்ந்து எழுதிய, மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்டவை சார்ந்த நூல்கள், கால்டுவெல் முதல் ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சமகால ஆய்வாளர்கள் வரையிலான ஆய்வு நூல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல், இரண்டையும் போட்டு குழப்பிக்கொண்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டாம்” என்று கூறியுள்ளார். அவ்வகையில் நமது எண்ணத்தின் வெளிப்பாடே அரசின் நிலைப்பாடாக உள்ளது எனபது மகிழ்வான செய்தியாகும். இந்தக் குழப்பத்துக்குக் காரணமான, செய்தி – மக்கள் தொடர்புத்துறை அறிவிப்புப் பதாகையும் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.