நெடுங்கணக்கு – பகுதி 3

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பதில் ‘ஒலி’ என்ற தலைப்பின் கீழ் ‘திராவிட நெடுங்கணக்கு’ என்பதை விளக்கிய கால்டுவெல், மெய் எழுத்துகளின் ஒலி அமைப்பு பற்றியும் விளக்குகிறார்.

க், ச், ட், த், ப்,ற் ஆகிய வல்லொலி எழுத்துக்களை வல்லினம் என்றும், ங், ஞ், ண், ந்,ம், ன் ஆகிய மூக்கெழுத்துக்களை மெல்லினம் என்றும், ய், ர்,ல்,வ், ழ், ள் ஆகிய அரை உயிர் எழுத்துக்களை இடையினம் என்றும் மெய் எழுத்துக்களை மூன்றாகப் பிரிக்கலாம். வடக்கே வாழும் திராவிட மொழிகள், தேவநாகரி நெடுங்கணக்கைப் பார்த்து, தாமும் வல்லொலி – மெய், மெல்லொலி மெய்களை அறிவிக்க, தனித்தனி எழுத்துகளை மேற்கொண்டுள்ளன.

ஆனால் தமிழ், வல்லொலி எழுத்தையும் மெல்லொலி எழுத்தையும் குறிக்க, ஒரே வடிவெழுத்தையே பெற்றுள்ளது என்றும் கூறும் கால்டுவெல், இம்முறை அம்மொழியின் வடிவெழுத்தை மட்டும் பற்றியதன்று ; இஃது, அம் மொழியுடன் பிறந்த, அம்மொழிக்கே உரிய ஓர் ஒலி (ஒலிப்பு) முறையாகும் என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். இம்முறை, எல்லா திராவிட மொழிகளிலும் உள்ளது என்றாலும், தமிழிலும் மலையாளத்திலும் மட்டுமே முறையாகவும், முழு வளர்ச்சியும் பெற்றுள்ளது என்கிறார் கால்டுவெல்.

முதற்கண் நிற்கும் க், ட், த், ப் என்ற வல்லெழுத்துகள் நான்கும் (இவற்றை ஹகர ஒலி இணையா வல்லெழுத்துகள் என்கிறார் கால்டுவெல்) ‘ட’ சொற்களின் மொழி முதல் எழுத்துகளாக வரும், இரட்டித்து வரும் க், ட், த், ப் என வல்லொலி வல்லெழுத்துக்களாகவே ஒலிக்கப் பெறும். அதே மெய் எழுத்துக்கள் சொற்களின் இடையே தனித்து வரின், க், ட், த், ப் என மெல்லொலி வல்லெழுத்துக்களாக ஒலிக்கப் பெறும் என்கிறார் கால்டுவெல்.

மெல்லொலி வல்லெழுத்து, மொழி முதல் எழுத்தாக வராது. அவ்வாறே வல்லொலி வல்லெழுத்து, சொல்லின் இடையே இரட்டித்து அன்றி, தனியாக வராது. ஆனால் சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து சொற்கள் கடன் வாங்கப் பெற்றால், அச்சொற்களில் உள்ள வல்லொலி வல்லெழுத்து, மெல்லொலி வல்லெழுத்தாகவும், மெல்லொலி வல்லெழுத்து வல்லொலி வல்லெழுத்தாகவும் அவை நிற்கும் இடங்களுக்கேற்ப மாற்றியே ஒலிக்கப் பெறும் என்று கூறும் கால்டுவெல, சமஸ்கிருத ‘தந்த’ என்றும் சொல், தமிழில் ‘தந்தம்’ எனவும், ‘பாக்ய’ என்றும் சொல் தமிழில் ‘பாக்கியம்’ எனவும் வருவதை சுட்டிக்காட்டுகிறார். இம்முறை, தனிச் சொற்களிடையே மட்டுமல்லாமல், இரு சொற்கள் புணர்ந்த தொகைச் சொற்களிடத்தும் வரும் என்கிறார்.

இரு சொற்கள் புணர்ந்துழி, வருமொழி முதற்கண் நிற்கும் மெய்யெழுத்து, அச் சொல் புணராது தனித்து நிற்புழி, வல்லொலி வல்லெழுத்தாக இருப்பினும், நிலைமொழியோடு புணர்ந்து இடையயழுத்தாம் தன்மையுற்று விடவே, மெல்லொலி வல்லெழுத்தாகவே மாற்றி ஒலிக்கப் பெறும். தெலுங்கில் இவ்வேறுபாடு வேறு வடிவெழுத்து கொடுத்து எழுதுவதன் மூலமாகவே காட்டப்படுகிறது என்கிறார் கால்டுவெல்.

அண்ணனும், தம்பியும் என்ற பொருளில் ‘அன்னதம்முலு’ என வரவேண்டிய சொல், புணர்மொழிக்கண், ‘அன்னதம்முலு’ என்றே எழுதப்படும். அதுபோன்றே, ‘அடிபட’ என்ற பொருளில், ‘கொட்டபடு’ என வரவேண்டிய சொல் ‘கொட்டபடு’ என்றே வரும். ஆனால் தமிழில், ‘கொட்ட’, ‘படு’ என்ற இவ்விரு சொற்புணர்ச்சி ‘கொட்ட’, ‘படு’ என இரட்டிக்கப்படுகிறது என்கிறார்.

‘எண்ணுப் பொருட்கண்’வரும் இரு சொற்கள், இடையில் ‘எண்ணும்மை’ பெறாமல், ‘கபிலபரணர்’ என்பது போல் எண்ணப்பட்டு, இரு சொற்களுக்கும் ஒத்த ‘பன்மை விகுதி’ கொண்டு முடியும் என்கிறார். அதே போன்று ‘ச’ என்ற எழுத்து தனித்து வந்துழி மிகவும் மென்மையாகவும், ஷ், ச் இவ்விரு எழுத்துகளின் ஒலிகளுக்கும் இடைபட்ட ஓர் ஒலியுடையதாக ஒலிக்கப் பெறும் என்கிறார் கால்டுவெல்.

இவ்வெழுத்தின் ஒலிப்புமுறை முன்னர் கூறியபடியே என்றாலும், செயற்படும்போது சில மாறுபாடு நிகழ்கிறது என்று கூறும் கால்டுவெல், இவ்வெழுத்து சொல்லின் முதற்கண் நிற்பினும், அன்றி இடையில் நிற்பினும் மெல்லொலி வல்லெழுத்தைப் போன்று, ‘ச’ என ஒலிக்கப் பெறுவதே  மாறுபாடாகும் என்கிறார். இதுபோன்றே, ‘ற’ கரம் பற்றியும் நிலவுகிறது என்கிறார் கால்டுவெல். தனித்து வந்தால் ‘ற்’ எனவும், இரண்டாக இணைந்து வந்தால் ‘த்த்ர்’ எனவும் ஒலிக்கப்படும் என்கிறார்.

ஒரே வடிவெழுத்து,  ஓரிடத்தில் ‘க’ காகவும், மற்றொரிடத்தில் ‘க’ வாகவும், ஓரிடத்தில் ‘ட’ வாகவும் மற்றொரிடத்தில் ‘ட’ வாகவும், ஓரிடத்தில் ‘த’ வாகவும் மற்றொரிடத்தில் ‘த’ வாகவும், ஓரிடத்தில் ‘ப’ வாகவும் மற்றொரிடத்தில் ‘ப’ வாகவும் ஒலிக்கும் முறையானது, தமிழ்மொழி தோன்றிய காலத்தே உடன் தோன்றி அம்மொழியினின்று பிரிக்க இயலாதவாறு ஒன்றி நிற்கும் சிறப்பு இயல்பாகும் என்கிறார் கால்டுவெல்.

வல்லொலி வல்லெழுத்தும், மெல்லொலி வல்லெழுத்தும் ஒன்று பிறிதாக மாறும் இத் திராவிட ஒலிப்புமுறை அமையும் வகையில் தமிழ் நெடுங்கணக்கு வரிசை செய்யப்பட்டது என்று கூறும் கால்டுவெல், தமிழ் நெடுங்கணக்கு ஒரே வடிவெழுத்து, இவ்விரு வகை வல்லொலிகளையும் ஒலிக்கப் போதும் என்று கருதி, சமஸ்கிருத மெல்லொலி வல்லெழுத்துக்களை தவிர்த்தது என்கிறார்.

இது திராவிட மொழிகளுள் மிகப் பழைய மொழியாகிய தமிழ்மொழி வாயிலாக வெளிப்பட்டு தோன்றும் திராவிட ஒலிப்பு முறைகளாகும் என்றும் கூறுகிறார் கால்டுவெல். இந்தோ -ஐரோப்பிய மொழி எதிலும் வல்லொலி வல்லெழுத்தும், மெல்லொலி வல்லெழுத்தும், ஒன்று பிறிதாக மாறுதல் அடைவதை நாம் கண்டதில்லை என்று கூறும் கால்டுவெல், ஏப்ரு மொழி மெய் எழுத்துக்கள், ‘பெகத்’, ‘கெப்ஹத்’ என அவை நிற்கும் இடத்திற்கு ஏற்ப இருவகையாக ஒலிக்கப் பெறும் என்கிறார்.

அம் மெய் எழுத்துக்களுள் யாதேனும் ஒன்று, ஒரு சொல்லின் முதலிலோ, அல்லது ஓர் ‘அசை’யின் முதலிலோ வந்தால் அது வல்லொலி வல்லெழுத்துப் போலவே ஒலிக்கப்பெறும் என்றும் அவ்வெழுத்து ‘ஹகர’ ஒலி இணைந்த எழுத்தாயின், அது இயற்கையாய் பெற்றுள்ள ‘ஹகர’ ஒலியை இழந்து ஒலிக்கப் பெறும். இதைக் குறிக்க ‘தகெஷ்’ என் வழங்கப்படும் ஒரு சிறு புள்ளி பொறிக்கப்படும் என்கிறார் கால்டுவெல்.

‘திராவிட மெய் எழுத்துக்கள் ‘ பற்றி கால்டுவெல் விரிவாகக் கூறுவதை அடுத்த பகுதியில் காணலாம்.

  • கந்தசாமி விநாயகம்

Comment (1)


Mohan Raja
Mohan Raja
July 4, 2022

சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *