சந்தன வாசனை தோய்ந்த தமிழ்த்தேன்..

சந்தன வாசனை தோய்ந்த தமிழ்த்தேன்..

மாலை கனிந்து இருட்டு மெல்ல அந்த மலைக் காட்டு முகப்பில் எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கையில் கபிலரும் அவர் சீடன் மாறனும் உரையாடிக் கொண்டே உலா வந்தனர். சற்றுத் தூரத்தில் மர மறைவில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி மலைநாடன் மகள் என்று கபிலர் அறிவார். இன்னொருத்தி அவளின் தோழியாக இருக்க வேண்டும்.. கபிலர் பேச்சை நிறுத்தி அவர்கள் தனிமையைத் தொந்தரவு செய்யாது அவர்களைத் தாண்டிப் போய்விடுவோம் என்று சீடனிடம் சைகை செய்ய, இருவரும் சந்தடி இல்லாமல் மெல்ல அவர்களைக் கடந்து போகையில் அவர்கள் மென் குரலில் பேசிய சொற்களும் அவர்கள் காதில் விழத்தான் செய்தன. தோழி : உன் தோள்கள் மெலிந்துவிட்டன.. தூக்கமில்லாது கண்கள் சிவந்திருக்கின்றன. களவு தெருவுக்கு வருமுன்பு உன் காதலனைத் தாமதம் செய்யாது வீட்டில் மணம் பேசச் சொல். உன்னவர் நம்பிக்கையானவர்தானா..? தலைவி : அடியே.. யாரைச் சொன்னாய்..? அவர் சொன்ன சொல் மாறாது நிற்பவர். அதனால்தான் அவர் எனக்கு இனித்துக்கொண்டே இருக்கிறார்.. அந்த சந்தன மரத்தின் உச்சியில் தேன்கூடு உள்ளதைப் பார்த்தாயா..? அந்தத் தேனீக் கூட்டத்தைப் பார்.. பக்கத்துப் பொய்கையில் தாமரைத் தாதுவையும் ஊதிவிட்டு இந்த சந்தனத் தாதுவையும் ஊதுகின்றன.. இப்போது கூட்டுத் தேனடையிலிருந்து தேன் துளி விழுந்தால் அது எத்தனை வாசனை தோய்ந்து வரும்.. எமது சேர்க்கையும் அவ்விதமே.. உயர்ந்தோர் கேண்மையும் உயர்வானதே.. தோழி : இவ்வளவு நம்பிக்கையா அவர் மீது..! நல்லது.. நம்பிக்கை சீக்கிரம் பலிக்கட்டும்.. தலைவி : வான்மழை இல்லாது வையகம் தழைக்குமோ..? அவரில்லாத என் நிலைமையும் அஃதே.. அவர் சொல் தவறார்.. சீககிரம் வந்தென்னை சேர்ந்தணைவார்.. சந்தனம் தோய்ந்த தேனாக நான் ஆவேன்.. அவர்களைக் கடந்து சென்ற பின்னும் மௌனம் கலைக்காமல் நடந்தார் கபிலர். சீடன் அறிவான்.. இந்தக் குறிஞ்சிக் காதல் கபிலரின் மனத்தில் பாட்டொன்றை எழுப்பியிருக்கும் என்று.. கபிலர் : (இல்லம் நுழைந்ததும்) மாறா.. அவர்கள் பேச்சில் ஒரு செய்யுள் உதித்தது.. சொல்கிறேன்.. எழுதி வை.. இன்று பேசுவோம்..கபிலர் சொல்ல சீடன் எழுதி வைத்தான்.. ‘நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரே’தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்சாந்தில் தொடுத்த தீம் தேன் போலபுரைய மன்ற, புரையோர் கேண்மை;நீர் இன்று அமையா உலகம் போலத்தம் இன்று அமையா நம் நயந்தருளிநறு நுதல் பசத்தல் அஞ்சிச்சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! பின்னாளில் வந்த புலவர்கள், ‘பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொன்னது‘ என்று வகைப்படுத்தி நற்றிணையில் முதல் பாட்டாய் வைத்துக்கொண்டார்கள்..தொகுதி : எட்டுத்தொகைநூல் : நற்றிணைபாடல் 1திணை: குறிஞ்சி வள்ளுவருக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடித்துவிட்டதுபோலும்..‘நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு‘ என்று எழுதி பாயிரத்தில் சேர்த்துக்கொண்டார்.. அது சரி.. நற்றிணைப் பாடல் முந்தையதா..? திருக்குறள் முந்திப் பிறந்ததா..?சங்கப் பாடல்தான் என்று எல்லாரும் சொல்லிவிட்டார். ஆனால் பாருங்கள், நம் இலக்கிய ஆய்வாளர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, தொகை செய்காலத்தை கி.பி.400 – 500 வரை நீட்டுகிறார்.. திருக்குறள் காலத்தை கிபி. 650க்குக் கொண்டு போகிறார். ஏற்றுக்கொள்வோமா..? தமிழனல்லவா..! நாங்கள் இலக்கியம் எழுதி 2000 வருடம் ஆயிற்றே..! அவர் இலக்கிய வரலாறு.. அவரோடே இருக்கட்டும்.. இந்த ஆண்டில் இன்னொரு நாள் அதைப் பேசுவோம். அது போகட்டும்.. நமக்கு சந்தன மணம் தோய்ந்த தேன்தான் முக்கியம்.. எப்போது கிடைத்திருந்தால்தான் என்ன..?

சாபத்தில் பிறந்தவர்கள்

சாபத்தில் பிறந்தவர்கள்

கவிதை: செ. புனித ஜோதி நாங்கள்நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் எங்களோடுஓடிக்கொண்டிருக்கிறதுகண்ணீர் நாங்கள்மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் குண்டு வெடிப்பில்ஈந்து கொண்டிருக்கிறோம்உடலை நாங்கள்கடலின் சாபத்தில் பிறந்தவர்கள்உண்பதற்கும் உடுப்பதற்கும்உறங்குவதற்கும் இடமின்றிபரந்த தேசத்தில் தினம் தினம்அலைக்கழிக்கப்படுகின்றோம்அலைகளாய் நாங்கள்காற்றின் சாபத்தில் பிறந்தவர்கள்மூச்சுவிடக்கூடஉரிமையற்று இருக்கின்றோம் அத்தனையும்மனிதமற்ற மனங்களின்வன்மத்தில் விளைந்தவிளைச்சல்கள் அவர்களின் ரொட்டித் துண்டுகளில்பழக்கூழ் போலத் தடவித்தடவிஉண்டு மகிழ்கின்றனர்எங்கள் குருதியை காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடும்அரசியல் ஆதிக்கத்தில்திசைக்கொன்றாய்த் திரிகின்றோம்செத்த பிணமாய் ஏனெனில் நாங்கள்திரிசங்கு நேரத்தில் பிறந்தஅகதிகள்

ஷ்யாமா போகா

ஷ்யாமா போகா

சிறுகதை காலையிலிருந்து எல்லாமே வித்தியாசமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் செர்வர் கனெக்ட் ஆகவில்லை. மற்றொன்று கனெக்ட் ஆன அடுத்த நொடி, ஆட்டோ எக்ஸிட் ஆகிக்கொண்டிருந்தது. அனைத்தும் விர்ச்சுவல் செர்வர்கள். என்னளவில் எல்லா முயற்சியும் செய்துபார்த்துவிட்டு, அடுத்து இதை க்ளவுட் டீம்தான் சரி பண்ண முடியும் என்கிற புரிதலுக்கு வந்தவுடன், சர்வீஸ் டெஸ்க் இணையதளத்தில்  ஒரு கம்ப்ளெயிண்ட்டை புக் செய்தேன். இனி டீம் அனுப்புகிற பதிலைப் பொறுத்துதான் அடுத்த வேலை. எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். மெயிலைத் திறந்து ஏதாவது வேலை மிச்சமிருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. டைரியைத் திறந்து இன்று செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை ஒரு பார்வை பார்த்தேன். அனைத்தும் செர்வரில் மேற்கொள்ள வேண்டிய வேலைகள். டீமின் பதில் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை..?  ஓய்வு.   சாட்டை சுழற்றின பம்பரம் போலச் சுழன்றுகொண்டே இருந்துவிட்டு, சுழற்சியைத் திடீரென்று நிறுத்துவது எப்படி? ராட்டினம் தன் அதிவேகச் சுழற்சியைத் திடீரென நிறுத்தினால், அதில் அமர்ந்திருப்பவர் என்ன ஆவார்? மண்டை பரபரத்தது. இன்றென்றில்லை. பரபரப்பான வேலைக்கு நடுவே வரும் இடைவெளியை, ஓய்வு நேரத்தை என்ன செய்வதென்று எப்போதுமே தெரிந்ததில்லை. வெகுகாலம் நின்றிருந்த பெரிய மரத்தை வெட்டிய பிறகான வெற்றிடம் போல உறுத்தும்; துன்புறுத்தும். முன்பில்லாத அளவு இடம் கிடைத்திருக்கிறது, வெளிச்சம் கிடைக்கிறது என்றெல்லாம் மகிழாது.   கொஞ்சநேரம் நெற்றியைத் தேய்த்தபடி அமர்ந்திருந்தேன். நான் வேலைப் பளுவிற்குப் பழகியவள். ஒருவிதத்தில் அதற்கு அடிமைப்பட்டிருந்தேன். இப்போது சும்மா இருப்பதின் அழுத்தம் தாளாது ஒரு பதற்றம் உருவானது. அதைச் சரி செய்ய, அலுவலக அறையைவிட்டு உடனே எழுந்து, வெளியே போகவேண்டும் போலத் தோன்றியது. ஆணாக இருந்திருந்தாலோ இன்றைய  தலைமுறையாக இருந்திருந்தாலோ தம் அடிக்கப் போயிருப்பேனோ என்னவோ..  எனக்கு ஏதாவது ஒரு மரத்திடம் போக வேண்டும். குனிந்து அதனடியில் இருந்து எதையாவது பொறுக்க வேண்டும். செருப்பைக் கழற்றிவிட்டு வெறும் காலோடு இலைகள், சருகுகள், கற்கள் குத்தும்படி மரத்தடித் தரையில் நிற்கவோ நடக்கவோ வேண்டும். அதன் மரப்பட்டைகளில் அல்லது புதர்ச்செடிகளில் விரல் முட்டிகளை வலிக்கும்படியாகத் தேய்க்க வேண்டும். When I’m among the Trees-இல் மேரி ஆலிவர் சொல்வதுபோல, ’என்னைப்போல நீயும் ஒளி ஊடுருவவும் பிரதிபலிக்கவும் உருவானவள்தான்’ என்று மரங்கள் என்னிடம் சொல்ல வேண்டும். சிஸ்டமை லாக் செய்துவிட்டு, லிப்ட்டைத் தவிர்த்துப் படிகளின் வழியாக நான்கு மாடிகள் வளைந்து வளைந்து இறங்கி, ஆபீஸ் கேம்பஸின் வெளிப்பிரகாரத்திற்கு வந்தபோது வெயிலில் கண் கூசியது. கடைசியாக உடலை வெயில் சுட்டது எப்போது? தூரத்தில் கதலி மரம். இன்னும் பூக்கவில்லை. அருகே ஏழிலைப்பாலைகள். இப்போதுதான் மொட்டுவிடத் தொடங்கியிருக்கின்றன. இன்னும் சில வாரங்களில் தில்லியின் அத்தனை ஏழிலைப்பாலை மரங்களும் பூத்து, மொத்த தில்லியும் நறுமணத்தால் நிறைந்திருக்கும். மரத்தடியெங்கும் பூக்கள் உதிர்ந்து தரை மூடிக் கிடக்கும். பூக்கள் உதிர்ந்து கிடக்கிற காட்சியை நினைத்தபோது, நேற்று வீடு முழுக்க அதேபோல, ஆனால் பூக்களுக்குப் பதிலாக பூச்சிகள் நிறைந்து கிடந்த  காட்சி தோன்றியது. நேற்றிரவு நான் வழக்கம்போல இரவு உணவை முடித்துவிட்டு ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ பறக்க ஆரம்பித்தது. முதலில் ஒன்று இரண்டு என்று ஆரம்பித்தது; பிறகு மெதுமெதுவாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. தூசியா, சாம்பலா, ஈக்களா? ஏதோவொரு பூச்சியின் படையெடுப்பு என்று புரிந்துகொள்வதற்கு எனக்குச் சில நிமிடங்கள் பிடித்தது. அவை வெட்டுக்கிளிகளைப்போல இருந்தன. கடுகைவிடச் சற்றே பெரிய வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகள். அவை மட்டும் சற்றுப் பெரியதாக இருந்திருந்தால் பைபிளில் வருகிற வெட்டுக்கிளிகளின் படையெடுப்புபோல இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அதிகாலை வேலைக்குப் போய், இரவு வீடு திரும்புவள் என்பதால் ஜன்னலைத் திறப்பதே இல்லை. வாசற்கதவையும் வீடு திரும்பியதும் அடைத்துவிடுபவள். எதுவும் திறந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் நான் எழுந்துபோய் ஜன்னல்களையும் கதவையும் சரி பார்த்தேன். அனைத்தும் பூட்டியே இருந்தன. ‘விளக்கை அணைத்தால் பூச்சிகள் போய்விடும்’ என்று நினைத்து, விளக்கை அணைத்தேன். சிறிது நேரத்தில் அத்தனையும் தரையில் விழுந்து இறந்தன. படுக்கையை உதறி வீட்டைப் பெருக்கி அள்ளிக் குப்பையில் கொட்டிய பிறகும் படுக்கைக்குத் திரும்பியபோது நிறைய பூச்சிகள் காணக் கிடைத்தன. நான் களைப்பில் அப்படியே உறங்கிப்போயிருந்தேன். காலை எழுந்தபோது வீடெங்கும் பூச்சிகள் இறந்து கிடந்தன, கறுப்பும் வெள்ளையுமாக, எள்ளை வாரி இறைத்தாற்போல. அப்படியென்றால் விநோத நிகழ்வு இன்று காலை அல்ல,  நேற்றிரவே ஆரம்பித்திருக்கிறது. ஏழிலைப்பாலை மரத்தடியில் நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. இந்த மரத்தடிப் பகுதிக்கு அலுவலர்கள் யாரும் வருவதில்லை. சற்றுத் தொலைவில்  கொத்துக்கொத்தாக வெள்ளைப் பூக்களோடு அந்த மரம்.  அதன் ஒரு பெரிய கிளை ஒடிந்து, அதே நேரம் முற்றிலும் உடையாமல்  தொங்கிக்கொண்டிருந்தது. உடைத்தது, இங்கே குடும்பம் குடும்பமாக, நாள் முழுக்க  சேட்டை பண்ணிக்கொண்டுத் திரியும் குரங்குகளாகக்கூட இருக்கலாம். மரத்தில் பாதி இதய வடிவமும் ஒடிந்து கீழே தொங்கிக்கொண்டிருந்த கிளையில் பாதி இதய வடிவமுமாக, அக்கிளை ஒடிந்திருந்து. மரத்தை நோக்கி நடக்க நடக்க, அம்மரத்தில் ஒரு உடைந்த இதயம் சேர்வதும் பிரிவதுமாகக் காட்சிப்பிழையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. முடிந்தவரை சேர முயற்சித்து எல்லா முயற்சிகளும் தோல்வியுற்ற பிறகே உடைவதென்பது இதயத்தின் விதி போல; அது மரத்தாலானதென்றாலும்.   மரத்தருகே வந்திருந்தபோது அதனடியில் நிறைய மலர்கள் உதிர்ந்தன. எனக்குத் தாகூரின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. பெண் குழந்தை ஒன்று அதன் அம்மாவிடம் பேசுவதுபோல அமைந்தது. சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, உதிர்ந்து கிடந்த மலர்களை எல்லாம் பொறுக்கியெடுத்து உள்ளங்கைகளில் வைத்து, ஆழ முகர்ந்து பார்த்தேன். அதன் வாசம் சற்றே தீவிரமானது. ஒரே நேரத்தில் ஈர்க்கவும் விலக்கவும் செய்ய வைக்கும் தனித்துவமானது. சற்றுத் தொலைவில், கீழே புல் தரையில் ஒரு சிறிய வெட்டுக்கிளி. எனக்கு மீண்டும் வெட்டுக்கிளிகளைப் போன்ற அந்தப் பொடிப் பூச்சிகள் நினைவுக்கு வந்தன. அவற்றைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும்போலத் தோன்றியது. ஆபீஸ் வருகிற வழியில், சிறிய பூச்சிகள், பச்சைப் பூச்சிகள் என்று பல்வேறு விதமான வார்த்தைகளில் அவற்றை விவரித்து கூகுளில் தேடியபிறகு உத்தேசமாகக் கிடைத்திருந்த அதன் பெயரை, ‘கோகுல் பையா ஜிந்தாபாத்’ என்று என் வழக்கமான கோஷத்தை மனசுக்குள் ஒரு சிரிப்புடன் சொல்லிக்கொண்டு, குனிந்து போனில் கூகுளைத் திறந்து அந்த வார்த்தையை டைப் செய்யப் போனபோதுதான், சத்தமாக ஒரு ஆண் குரல் கேட்டது. “ஷ்யாமா போகா” நான் அதிர்ந்தேன். திடுக்கிட்டதில் என் கையிலிருந்து நழுவிக் கீழே விழப்போன போனை இறுகப் பற்றிக்கொண்டு திரும்பிப் பார்த்தேன். வழக்கமாக ஆண்கள் அணிகிற சட்டையின் காலர் போலில்லாமல், குர்தா ஜிப்பாவில் இருப்பது போன்ற வட்டமான காலர் வைத்த, சட்டையென்றோ குர்தா என்றோ சொல்ல முடியாத ஒரு கதர்ச் சட்டையில், தானும் அந்த வெட்டுக்கிளியைப் பார்த்தபடி ஒருவர். இல்லை; இவர் வேறு ஏதோ கூறியிருக்க வேண்டும். “ஷ்யாமா போகா”  மீண்டும் அருகில் இருந்தவர். விசித்திர நாளின் தொடர்ச்சியா இது? இது, நான் இப்போது தேட இருந்த வார்த்தை. இன்று காலைதான் முதன்முதலில் தெரிந்துகொண்ட வார்த்தை; நீங்கள் மனத்தில் நினைத்துக்கொண்டிருந்த, நீங்கள் ம‌ட்டுமே அறிந்த அல்லது நீங்கள் அப்போதுதான் எதிர்கொள்ள நேர்ந்த அபூர்வமான ஒரு  விஷயத்தை, நீங்கள் முன் பின் அறியாத ஒருவர் உங்களிடம் வந்து உரக்கச் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? Coincidence, Synchronicity, Carl Jung, Serendipity, Kate Beckinsale, John Cusack. என் மூளை malfunctioning பண்ணுகிற கம்ப்யூட்டர் போல, நிறைய வார்த்தைகளைச் சம்பந்தமில்லாமல் துப்பியது. இன்னும் சற்று நெருங்கி நின்றிருந்தாலும் இருவரின் உடைகளும் தொட்டுக்கொள்ளும்படியான அருகில் நின்றுகொண்டிருந்தவரிடம், ‘ஏன் ஷ்யாமா போகா என்று  சொன்னீர்கள்’ என்று கேட்கலாமா? நான் கேட்க நினைத்ததைப் புரிந்துகொண்டாற்போல, அவரே சொன்னார். “இந்த வெட்டுக்கிளியைப் போன்ற மிகச் சிறிய ஷ்யாமா போகா  இந்நேரம் வந்திருக்க வேண்டும்” ‘வந்துவிட்டதே’ சொல்ல நினைத்தேன்; சொல்லவில்லை. “உங்களுக்கு அந்தப் பூ பிடிக்குமா?” “சம்பா?” என் மனத்துக்குள் மீண்டும் தாகூரின் வரிகள். “நீ என்னை அறிந்துகொள்வாயா?” மீண்டும் அவரது உரத்த, ஆனால் சோர்வுற்ற குரல். ‘இவர் மீண்டும் என் மனத்தைப் பிரதிபலிக்கிறார். திஸ் இஸ் டூ மச்’ மனத்துக்குள் முணுமுணுத்தேன். “யெஸ்.. நீ என்னை அறிந்துகொள்வாயா?” அவரைப் பார்த்து முகம் மலரச் சிரித்தேன். அவர் சிரிக்கவில்லை. ஒரு சின்ன தடுமாற்றத்தோடு பார்வையை விலக்கி, மீண்டும் அந்த வெட்டுக்கிளியைப் பார்த்தார். “இது ஷ்யாமா போகாக்கள் வருகிற பருவம். அவை நவராத்திரியின் வருகையை அறிவிப்பவை” நான், திறந்திருந்த கூகுளில் நவராத்திரி 2023 என்று டைப் செய்தேன். நாளை நவராத்திரி. ஹா! அடுத்த வியப்பு. என் மனத்தின் இறுக்கங்கள் எல்லாம்  மெல்ல மெல்லத் தளர்ந்துகொண்டிருப்பதும் நான்  வேறொன்றாக மாறிக்கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். இன்னும் சிறிது நேரம் இவருடன் நின்றாலும் நான் பேச ஆரம்பித்துவிடுவேன். என் இயல்பிற்கு அது வினோதமாகப் பட்டது. நான் அவரிடமிருந்து சற்று விலகி மரத்தின் அந்தப்பக்கமாக நகர்ந்தேன் “போகா என்றால் பூச்சி. ஷ்யாமா என்றால் கறுப்பு. கறுப்பு, காளியின் வண்ணம். காளி மாதாவின் வருகையை அறிவிக்க வருபவை என்று நம் ஊரில் பெரியவர்கள் சொல்வார்களே.. உனக்குத் தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா?” ‘உனக்கு?! நம் ஊரில்?!’ எனக்குப் புரிந்துவிட்டது. அவர் என் அருகில் வந்து நின்றது, பழகிய நபர் போலப் பேசுவது, தாகூர், காளி என்றெல்லாம் சொல்வது , எல்லாவற்றுக்கும் இப்போது  விடை கிடைத்தாற்போல இருந்தது. இவர் என்னை வேறு யாரோ என்று நினைத்திருக்கிறார். இங்கே இப்படி அடிக்கடி நடக்கும். என்னை பெங்காலி என்றோ  மலையாளி என்றோ நினைத்துக்கொண்டு நிறைய பேர் பழக நெருங்குவது. “நீங்கள் என்னை வேறு யாரோவென நினைத்துக்கொண்டீர்கள் போல. நான் தமிழ். பெங்காலி இல்லை” “தமிழென்றால், பிறகு நீங்கள் அந்த மலரை சம்பா என்று ஏன் அழைத்தீர்கள்?” உண்மைதான். தமிழிலிலோ ஆங்கிலத்திலோ இல்லாமல், இதை சம்பா என்று ஏன் சொன்னேன்? எனக்கே தெரியவில்லை. ‘இன்று ஒரு வினோதமாக நாள். அதனால்தான்’ மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார் போலப் பட்டது. திரும்பி அவரை ஏறிட்டபோது, அவர் அவசர அவசரமாகப் பார்வையை அந்த முறிந்த மரக்கிளையின்புறம் திருப்பினார். இப்போதுதான் கவனித்தேன்.  கலைந்த

மக்கள் கவிஞர்

மக்கள் கவிஞர்

29 ஆண்டுகளே வாழ்ந்த பட்டுக்கோட்டையார் தனது 19 வயது வரை இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி என 17 வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார். இறுதியாக, கவிஞராக உருவாகியிருக்கிறார். இவரது பாடல்களில் வழி வழி மரபு, அதாவது நாடோடிப் பரம்பரை மற்றும் நவீன முறை என இரு கூறுகளை இணைத்த பாட்டுத் திறமையைக் காணமுடியும். இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு ஒன்றை இப்பகுதியில் நினைவுகூர்வதன் மூலம் எப்படிப்பட்ட மனிதர் இவர் என்பதை அறியலாம். சென்னை இராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில், தனது மனைவி கௌரவம்பாளுடன் தனிக்குடித்தனம் செய்து வருகிறார் கல்யாணசுந்தரம். வீட்டின் கீழ்த்தளத்தில் எப்போதும் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், பாடலுக்கான சூழ்நிலையைக் கூறும் கதாசிரியர்கள் எனக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். ஜெமினி நிறுவனம் ஏராளமாகப் பணத்தை வசூலித்துக்கொண்டிருந்த பைகாம் என்ற இந்திப்படத்தைத் தமிழில் மறுதயாரிப்பு செய்ய உரிமை பெற்றுச் செயலில் இறங்கியது. தொழிலாளர் போராட்டத்தைப் பற்றிய திரைக்கதை அது. தமிழில் இரும்புத்திரை என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்குப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் பாடல்கள் எழுதக் கேட்டுக்கொண்டது நிறுவனம். ‘ஜெமினி நிறுவனத்தில், எப்போதும் பிரமாதமாகப் பாட்டெழுதும் கொத்தமங்கலம் சுப்பு என்ற பெருங்கவிஞர் இருக்கும்போது நான் எழுதுவது நியாயமா? அப்படியெல்லாம் என்னால் எழுத இயலாது’ என்று மறுத்தார் கல்யாணசுந்தரம். பாகப்பிரிவினை என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியை சரவணா பிக்சர்ஸ் ஜி.என்.வேலுமணி பட்டுக்கோட்டையிடம் விளக்கிக்கொண்டிருந்தபோது அங்கே வந்தார் கொத்தமங்கலம் சுப்பு. வாசலுக்கே ஓடோடி வந்து வணக்கம் கூறி கொத்தமங்கலம் சுப்புவை வரவேற்றார் பட்டுக்கோட்டை. வரவேற்ற அவரை ஜெமினி நிறுவனத்திற்குக் காரில் அழைத்துச் செல்ல விரும்பிய சுப்புவின் வார்த்தைகளைப் பட்டுக்கோட்டையாரால் மறுதலிக்க இயலாமல் போயிற்று. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், கல்யாணசுந்தரத்திடம் ‘கொத்தமங்கலம் சுப்பு எங்கள் நிறுவனத்தின் ஆஸ்தான வித்வான். அவருக்கு இங்கே மாதச் சம்பளம். நீங்கள் பாட்டு எழுதுவதால் இவருக்கு நஷ்டம் வராது. தொழிலாளர் பிரச்சினை தொடர்பான படம் என்பதால் அது குறித்த பாடல்களை நீங்கள் எழுதுங்கள். கொத்தமங்கலம் சுப்பு பொதுவான பாடல்களை எழுதட்டும். சரிதானே?’ என்றார். சம்மதம் தெரிவித்தார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார். இதுதான் பட்டுக்கோட்டையாரின் பெருந்தன்மை. ஒருமுறை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தாம் எழுதிய ‘நண்டு செய்த தொண்டு’ என்ற கவிதையை எடுத்துக்கொண்டு ஜனசக்தி அலுவலகத்திற்குச் சென்று, ‘நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். அப்படியே ஒருவரிகூட விடாமல் வெளியிட வேண்டும்’ என்ற வேண்டுகோளுடன் கவிதையைத் தந்தார். இதழாசிரியர் கவிதையைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘தலைப்பும் கவிதையும் தரமாக இருக்கிறது’ என்று கூறிவிட்டு, ‘உங்கள் பெயர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று கவிதையைவிட நீளமாக இருக்கிறது. கம்பன், வள்ளுவன், இளங்கோ என்று எவ்வளவு சுருக்கமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?’ என்றார். ‘அவர்களெல்லாம் மிகப்பெரிய கவிஞர்கள். ஆகவே பெயரைச் சிறிதாக வைத்திருக்கிறார்கள். ஆனால் நானோ மிகச்சிறிய கவிஞன். எனது பெயராவது பெரிதாக இருக்கட்டும்’ என்று பட்டுக்கோட்டை சொன்னதும் ஆசிரியர் அந்தப் பதிலை வெகுவாக ரசித்துப் பாராட்டினார். திரை உலகிற்கு வரும் முன்பு கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிக்கையிலும் அவரது உதவியாளராகச் சிறிது காலமும் பணியாற்றினார்.அ வரது திருமணம் 11.09.1957இல் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில்தான் நடந்தது. பாடலோ கடிதமோ, தான் எழுதுவது எதுவாக இருந்தாலும் முதலில் ‘பாரதிதாசன் வாழ்க!’ என்று எழுதிவிட்டுத்தான் எழுதத் தொடங்குவார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அந்த அளவிற்குப் புரட்சிக் கவிஞரிடம் மக்கள் கவிஞருக்கு மரியாதை. பாண்டிச்சேரியில் வேளாளர் வீதியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, புதுவை விடுதலை வீரரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வ. சுப்பையாவைச் சந்தித்து, பட்டுக்கோட்டை அழகிரியின் அறிமுகக் கடிதத்தை கொடுத்தார். அந்தக் கடிதத்தில், ‘இக்கடிதம் கொண்டுவரும் பையனின் பெயர் கல்யாணசுந்தரம். நன்றாகக் கவிதை எழுதக்கூடியவன். கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு உடையவன். பாரதிதாசனிடம் உதவியாளனாகச் சேர்த்து விடுங்கள்’ என்று பட்டுக்கோட்டை அழகிரி வ.சுப்பையாவிற்கு எழுதியிருந்தார். அணைக்கட்டு டேவிட் கடிதம், அழகிரியின் கடிதம், அண்ணன் கணபதி சுந்தரம் வரைந்த ஓவியம் மற்றும் 12 மாம்பழங்களுடன் வ. சுப்பையா அனுப்பிவைத்த கட்சித் தொண்டரோடு பாரதிதாசனைப் பார்த்தார். பகல் முழுவதும் பாரதிதாசன் இல்லத்தில் பணி; இரவில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் படுக்கை என வாழ்ந்தார். ஒருநாள் தனது மாணவர்களை பாரதிதாசன் உற்சாகத்தோடு அழைத்து, ‘ஏய் ஆம்பிளைப் பசங்களா! நீங்களும்தான் கவிதை எழுதுகிறீர்கள்! இதைப் பாருங்கள். அகல்யா என்னும் பெண்ணொருத்தி பிரமாதமாகப் பாட்டு எழுதியிருக்கா பாருங்க!’ என்று அஞ்சலில் வந்த கவிதையை வாசித்துக் காட்டினார். இந்த அகல்யா யார் என்பது பட்டுக்கோட்டைக்கு மட்டுமே தெரியும். அ. கல்யாணசுந்தரம் என்பதில், புள்ளியையும் கடைசி ஐந்து எழுத்துக்களையும் நீக்கிவிட்டதில் ‘அகல்யா’ வந்திருந்தாள். 1954 ஆகஸ்ட் முதல் தேதி, திண்டுக்கல் காந்தி மைதானத்தில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் மக்கள் நாடக மன்றத்தின் ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் அரங்கேறியது. இந்த நாடகத்தில் இடம்பெற்ற பட்டுக்கோட்டையின் பாடல் ஒன்று, அவரது ஆழ்மனத்தில் பதிந்திருந்த நெடுநாள் கவலையை எதிரொலித்தது. அப்பாடல் ஆணும் பெண்ணும் பாடுவது போன்று இருந்தது. பெண்: தேனாறு பாயுது! செங்கதிரும் சாயுது!ஆனாலும் மக்கள் வயிறு காயுது!ஆண்: மானே இந்நாட்டிலே வகையான மாறுதல் வந்தாலன்றி ஏது சீருகள்?இறுதியாக இருவரும்: உழவனும் ஓயாத உழைப்பும்போல நாமே ஒன்றுபட்டு வாழ்க்கையிலே என்றும் இருப்போம்! என்பதாக இருந்தது அப்பாடல். நாடகத்திற்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, இந்தப் பாடலையும் நாடகத்தில் இடம் பெற்றிருந்த இதர பாடல்களையும் வெகுவாகப் பாராட்டிவிட்டு, பட்டுக்கோட்டையாரை ‘மக்கள் கவிஞர்’ என்று மகுடம் சூட்டி அழைத்தார். அன்றிலிருந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ‘மக்கள் கவிஞர்’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். சென்னையில் வாடகைக்கு வீடு கிடைக்காத காரணத்தால், அவரது மனைவி கெளரவாம்பாளை அவரது சொந்த ஊரான செங்கப்படுத்தான் காடு என்ற கிராமத்தில் தனது சொந்த வீட்டில் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் இருக்குமாறு செய்திருந்த கல்யாணசுந்தரம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது ஊருக்குச் செல்வார். அவரது மனைவியை சின்ன பொண்ணு என்றும் செல்லப் பிள்ளை என்றும் அழைப்பார். தனிமையில் மனைவியைப் பார்க்கும்போது, ‘துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே செல்லுது?’ என்று குறும்புத்தனமாகப் பாடுவார். அது ஒரு புகழ்பெற்ற பாடலின் பல்லவியாக மக்கள் மனத்தில் நிலைத்தது. கல்யாணப் பரிசு படத்தில், வளைகாப்புக் காட்சிக்கு ஒரு பாடல் எழுதும் சூழல். பட்டுக்கோட்டை அவரது மனைவியையும் மனைவியின் அக்காவையும் எழுதச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். கெளரவாம்பாளின் அக்கா அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டார். ஆனால் கௌரவாம்பாளால் அவ்வாறு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் வந்து திட்டுவாரே என்ற பயத்தில், ‘அக்காவுக்கு வளைகாப்பு, அத்தானுக்கு இடுப்பு வலி’ என்று இருவரிகளில் பல்லவி எழுதினாராம். அதைப் பார்த்துவிட்டு, ‘பரவாயில்லையே’ என்று பாராட்டினாராம் கவிஞர். பிறகு, ‘அக்காவுக்கு வளைகாப்பு, அத்தான் முகத்திலே புன் சிரிப்பு’ என்று மாற்றி எழுதிய பல்லவியோடு அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. தோழர் ஐ. மாயாண்டி பாரதி, சோவியத் யூனியன் சந்திரனுக்கு (ஆளில்லாத) ராக்கெட் விட்டதைப் பற்றிப் பாடல் எழுதக் கேட்டபோது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காகிதத்தை ஜன்னலில் வைத்து, நின்றுகொண்டே எழுதிய பாடல், ‘சந்திரனைத் தொட்டதின்று மனித சக்திசரித்திரத்தை மாற்றியது மனித சக்திமந்திரமா வெறுங்கதையா இல்லை இல்லைமனித சக்தி, சோவியத்தின் மனித சக்தி!’ என்று தொடங்கியது. காதல் பாடல்களை மிகவும் சுவையாக எழுதியுள்ளார் பட்டுக்கோட்டையார். காதலியைக் காணும் காதலன், காதலியை,‘ஆடை கட்டி வந்த நிலவோ? கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?’ என்று புகழ்கிறான். ஆடை கட்டி வந்த நிலவு என்று கவிஞர்கள் பலர் பாடியுள்ளனர். ஆனால் பட்டுக்கோட்டையோ, ‘காதலியானவள், காதலன் கண்ணிலே மேடை கட்டி ஆடுகின்ற எழில்’ என்பதாகக் கற்பனையின் உச்சிக்கே சென்று விடுகிறார். மக்களின் தேவைக்கேற்ற புதுமையான கருத்தாட்சி, மக்கள் மொழியில் எழுதியுள்ள சொல்லாட்சியோடு, படிப்போர் – கேட்போர் மனத்தில் தைத்து நிற்கும் பாடல் ஆகியவற்றில் முத்திரை பதித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இன்று அவரது நினைவு தினம்.

புரட்சியின் தரிசனம்

புரட்சியின் தரிசனம்

நூல் அறிமுகம் நீலகண்ட பிரம்மச்சாரி – ஒரு புரட்சிக்காரரின் வாழ்க்கை வரலாறு எனும் நாடக நூலினை வாசிக்கும் பேறு பெற்றேன். இரா.கோமதி சங்கர் அவர்கள் ஆக்கி அளித்துள்ள இந்த நாடகம், மனத்திரையில் அரங்கேறிய ஒவ்வொரு தருணமும் வியப்பும் பெருமிதமும் சிலிர்ப்பும் மேலோங்கி எழுந்ததை உணர்ந்தேன். நீலகண்ட பிரம்மச்சாரி 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி, சீர்காழியை அடுத்த எருக்கூர் எனும் கிராமத்தில் பிறந்து, முதல் 44 ஆண்டுகள் புரட்சிக்காரராகவும், அடுத்த 44 ஆண்டுகள் தவ வாழ்க்கையும் வாழ்ந்து 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். புரட்சிக்காரராய் அவர் வாழ்ந்த வாழ்வையும் அதிகம் அறியப்படாத அவருடைய தவ வாழ்க்கையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதாய் நாடகம் அமைந்துள்ளது. மேடை நாடகமாக அரங்குகளில் நடிக்கத்தக்க வகையில் விறுவிறுப்புடன், பல புதிர்களுக்கு விடையளிக்கும் தகவல் செறிவுடன், உணர்ச்சி பொங்கும் காட்சி அமைப்புகளுடன் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. கதை நாயகரின் வரலாற்றினை இயற்றமிழில் இல்லாமல், நாடகத் தமிழில் ஆக்கி அளித்திடல் வேண்டும் என்ற நூலாசிரியரின் உத்தி பாராட்டத்தக்கது. சங்கர கிருஷ்ணன் என்ற பத்திரிகையாளர் சென்னையிலிருந்து வந்து மைசூர் நந்தி மலை அடிவாரத்தில் ‘சத்குரு ஒம்கார் ஆசிரமம்’ என்ற பெயரில் ஆசிரமம் அமைத்துத் தவ வாழ்வு மேற்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் நீலகண்ட பிரம்மச்சாரி ஸ்வாமியைச் சந்தித்து அவரை நேர்காணல் செய்து நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாக நாடகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பாரதியார் வீட்டில் நாடகத்தின் முதற்காட்சி தொடங்குகிறது. ஆஷ் கொலை வழக்கின் முதற் குற்றவாளியாகக் கூண்டிலேற்றப்பட்டு, வழக்கின் முடிவில் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, தண்டனை முடித்து வந்த நீலகண்டர் பழைய நட்பின் தொடர்ச்சியாக பாரதியார் வீட்டிற்கு வருகைபுரியும் காட்சியுடன் நாடகம் தொடங்குகிறது. அடுத்து வரும் இருபத்து மூன்று காட்சிகளிலும் வீர சுதந்திரம் வேண்டி எழுச்சித் திட்டங்கள் தீட்டி, புரட்சி இயக்கங்களைக் கட்டமைத்து, பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய வ.உ.சி., நீலகண்டர், வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, திருவனந்தபுரம் பத்மநாப அய்யங்கார், ஓட்டப்பிடாரம் மாடசாமி, மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, வ.ரா., சிங்கார வேலர் என, அத்தனை தேச பக்தச் செம்மல்களையும் நாம் சந்திக்கிறோம். மட்டுமின்றி, பின்னாளில் நந்தி மலை அடிவாரத்தில் அமைந்திருந்த ஓம்கார் ஆஸ்ரமத்துக்கு வருகை புரிந்த காந்தி அடிகளையும், அவருடைய சீடர் ஜே.ஸி. குமரப்பாவினையும் சந்திக்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சி, தேச பக்தர்களின் மனப் போராட்டங்கள், சிறைக் கொடுமைகள், போராட்டத்தின் விளைவாகத் தியாகிகள் சந்தித்த வறுமை நிறைந்த குடும்பச் சூழல், தலைமறைவு வாழ்க்கை எனப் பல நிலைகளையும் நாடகம் உணர்த்தி நிற்கிறது. நாடகம் முழுவதும் உரையாடல்கள் நறுக்குத் தெரித்தாற்போலும் கருத்துவளம் மிக்கவையாவும் இருந்தாலும் எடுத்துக்காட்டாகச் சில காட்சிகள்: காட்சி 2இல், ஓம்கார் சுவாமியாகிய நீலகண்டர் கூற்றான, ‘நாங்க ஆரம்பிச்சு வச்சோம்; காந்தி வந்து முடிச்சு வச்சார். எங்க கோளாறு எங்களுக்குத் தெரியல. பெருசா யோசிச்சோம். நாங்க செஞ்சுட்டா ஜனங்க எங்க பின்னால வந்துடுவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா ஜனங்களைத் தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலை எல்லாம் செஞ்சார்.’ காட்சி 6இல், வ.உ.சி. நீலகண்டர் உரையாடலில் வ.உ.சி.யின் கூற்றாக வரும், ‘தேச பக்தின்னா என்ன? மக்களோட பிரச்சினையைப் பேசறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமனே தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனக்கிறீரா நீலகண்டர்? இந்தப் பாடம் யாரு சொன்னது?’ காட்சி 3இல், பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமியான நீலகண்டரிடம், ‘அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல இது (சந்நியாச வாழ்க்கை) தப்பித்தலோ என்று தோன்றுகிறது சுவாமி’ என்று உசுப்பியதும் ஓம்கார் சொல்லும் பதிலில், புரட்சிக்காரர் தொண்டுகள் ஆற்றும் தவ வாழ்க்கைக்கு மாறி வந்ததின் சூட்சுமம் வெளிப்படுகிறது. காட்சி 19இல், ஓம்கார் சுவாமிகள் பத்திரிகையாளர் சங்கரகிருஷ்ணன் உரையாடலில் ஓம்கார் சுவாமிகளின் கூற்றாக வரும், ‘தேசத் தொண்டு என்பது தேச மக்களுக்காக நாம் செய்வதுதான் என்பதை எனக்குப் போதித்தவர்கள் சிதம்பரம் பிள்ளையும் சிங்கார வேலரும்தான்’ என்ற வரிகள் புரட்சிக்காரர் தொண்டுகள் புரியும் தவ வாழ்க்கைக்குத் திரும்பிய புதிரை அவிழ்ப்பதாய் அமைகின்றன. மேலும் அதே காட்சியில், 1922 ஜூலையில் கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுயராஜ்யம்’ தீர்மானத்தைக் கொண்டு வந்தது சிங்கார வேலர்தான் என்பதை ஓம்கார் சுவாமிகள் தெரிவிப்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை. காட்சி 18இல், 1921ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் சிங்கார வேலர் இல்லத்தில், அவருக்கும் நீலகண்டருக்கும் இடையே நடக்கும் உரையாடலில், நீலகண்டரின் கூற்றான, ‘தேச விடுதலை என்பது தொழிலாளர்கள், விவசாயிகள், கற்றவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள், எல்லாருடைய ஐக்கியமான போராட்டத்தில் உருவாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வருகிறேன்‘ என்ற வரிகள் சிங்கார வேலருடன் இணைந்து பணியாற்றியதில் பெற்ற தெளிவு என்று நீலகண்டர் வெளியிடுவதும் அதே காட்சியில் சிங்கார வேலர், காந்தி அடிகள் சுதந்திரப் போராட்டத்தில் கொண்டு வந்த மாற்றத்தைக் கூறி, ‘இந்த நாட்டில் இப்போது தேவைப்படும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை, சாதி பேதம் கடந்த மக்களின் ஐக்கியம், தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பது என்று பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்கிற சக்தியும் அவரிடம்தான் (காந்திஅடிகளிடம்) இருப்பதாகக் காங்கிரஸில் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது’  என்ற வரிகள் நமது மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய கொள்கைகளின் தொன்மத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. நூலாசிரியர் நீலகண்டரின் வரலாற்றை நாடகமாகக் கருக்கொண்டு, வளமான உரையாடல்களுடன், மேடை நாடகமாக அரங்கேற்ற வசதியாக செட் சிக்கனத்தை மனதில் கொண்டு, ஒலி-ஒளி தொடர்பான காட்சி அமைப்புக் குறிப்புகளையும் வழங்கியிருப்பது அவருடைய கலைப்புலம் சார்ந்த திறமைக்குச் சான்று. இந்நூல் தமிழ் நாடக உலகிற்குக் கிடைத்துள்ள சற்று வித்தியாசமான படைப்பு. வாசிப்பதற்கு மிக உகந்தது ஆயினும் இதன் நாடக அரங்கேற்றம் நூல் ஆக்கப்பட்டதின் முழுப் பயனையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குவதாய் அமையும். பாராட்டுகளும் வாழ்த்துகளும். சுவடு இணைய இதழில் தோழர் கோமதி சங்கர் ஆக்கத்தில் தொடராக வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றதுடன், சுவடு வெளியீடாக நூலாக்கம் பெற்று விடுதலைப் போராட்ட வீரர் தோழர் நல்லகண்ணு அவர்களால் வெளியிடப்பட்ட ‘நீலகண்ட பிரம்மச்சாரி’ நாடக நூலுக்கான முதல் மதிப்புரையை அதிவிரைவில் வழங்கியுள்ள தோழர் பாப்பையா அவர்களுக்கு சுவடு பதிப்பகம் சார்பிலும் சுவடு இணைய இதழ் சார்பிலும் நாடக ஆசிரியர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆ-ர்

சொல்லணு குண்டுகள்

சொல்லணு குண்டுகள்

கவிதை எங்கள் கவிதை வரிகளேஎங்கள் வெடிகுண்டுத் தொழிற்சாலையிலிருந்துவெளி வருகின்ற அணுகுண்டுக் காவியங்களே நாங்கள் உங்களை வெளியே வீசும்போதுஅன்று யூரோசீமாவில் வீசப்பட்டஐன்ஸ்டீன் உருவாக்கியஅணுகுண்டுகளைப் போல் அழிவுகள்உருவாகப்போவதில்லை அந்த அணுகுண்டுசுரண்டுவோன் சுரண்டப்படுவோன் என்றுஎவரையும் மிச்சம் வைக்காமல்தன் தீ வாயினுள் வைத்துப்பொசுக்கி உண்டு ஜீரணித்துவிட்டது ஆனால், இன்று நீங்களோஏழைகளைச் சுரண்டியதால் தங்கள் வாழ்க்கையைசொர்க்கமாக மாற்றிக்கொண்டிருக்கும்சூழ்ச்சிக்காரர்களின் உல்லாச உப்பரிகைகளைவேரோடு தரைமட்டமாக்கிஇந்நாள் வரையில் சுரண்டப்பட்டுஏழ்மைக் குவியல்களில் வாழ்கின்றமுதுகுத் தண்டுகளுக்குப் புதிய பாதைசமைக்கப் போகின்றீர்கள் இந்த சமுதாய ஜீவநதியைத்தனது நச்சுக் கருத்துக்களால்சாக்கடை நீராக்கி, சகதிக் குளமாக்கிஓட முடியாமல் தேங்கும்தடைகளைக் களைவதற்குஎங்கள் உடலிலிருந்து ஒவ்வொரு செல்லையும்அழித்து உருவாக்கும் எங்கள்அருமைக் கவிதைகளே நீங்கள் வெளியே பாய்ந்து வருவதுஅந்தச் சாக்கடையில் சங்கமாவதற்கு அல்லஉங்களுள் இருக்கின்ற சொல்லணுக்களால்அதிலே இருக்கின்ற கிருமிகளையும்கிளர்ச்சி செய்து போரிட்டு அழித்து ஒழித்துவிட்டுபுதிய ரத்த ஓட்டத்தை உருவாக்கவேநீங்கள் புறப்பட்டுச் செல்கின்றீர்கள் நீங்கள்வரிசை வரிசையாய்ஏட்டில் வந்து படியும்போதெல்லாம்எங்களது கண்களில்தொழிலாளி வர்க்கம்வரிசை வரிசையாக வந்துஓரணியில் திரண்டு கூக்குரல் இடுகின்றகாட்சிகள்தான் தென்படுகின்றன தான் உண்ட உணவை ஜீரணிக்கதன்னைச் சுற்றிக் கூடு கட்டிக்கொண்டிருக்கும்கூட்டுப் புழுக்கள் அல்ல நீங்கள்இந்தச் சமுதாயத்திலுள்ள கொடுங்கோலர்களைக்கொட்டுவதற்காகப் பறந்து செல்லும்குளவிப் பூச்சிகள் இந்தச் சமுதாயத்தில் நீச்சலடிக்க முடியாமல்தத்தளிக்கும் ஏழை மக்களுக்கு நீங்கள்கட்டுமரங்களாகவும் கலங்கரை விளக்கமாகவும்விளங்க வேண்டுமென்றேஎங்கள் சிந்தனைத் தேரோட்டத்திலிருந்துசெதுக்கப்பட்டுப் புறப்படுகின்றீர்கள் எங்கள் சோதனைக் குழாயிலிருந்துவெளி வருகின்ற நீங்கள் குழந்தைகள் அல்லதிராவக ஆவிகள் உங்களை உருவாக்கும் பிரம்மாபின்புறம் கையை வைத்துஉங்கள் தலையெழுத்தை எழுதவில்லைமுன்னே வைத்துதீர்க்க தரிசனப் பார்வையோடுஇரும்புச் சூட்டு எழுத்துக்களால் எழுதுகிறான் உங்களது கதிரொளியால் இங்கு உருவாகப்போவதுபச்சை நிற வயல் வெளிகளல்லசெஞ்சாத்து நிறத்தின் செங்குருதிஆற்றில் மிதக்கக் போகும்துப்பாக்கிக் கட்டைகள் நீங்கள் மேடை ஏறியதும்உங்களுக்கு சூட்டப்படப் போவதுமலர் மாலைகள் அல்லஇரும்புச் சங்கிலிகளும்தூக்கு மரச் சுறுக்கு முடிச்சுமே ஆகும் உங்களை யாரும் தூக்கி வைத்துகுழந்தைப் பாட்டு பாடப்போவதில்லைஉங்களைத் தூக்கி தூக்கி வீசப் போகிறார்கள்ஏனென்றால் நீங்கள்அனைத்தும் வெடிகுண்டுகள் நீங்கள் ஆடப் போவதுஊர்வசியின் மோகன அடிகளல்லதொழிலாளி வர்க்கத்தின் ருத்ர தாண்டவம் உங்களிடமிருந்து பனி உருகுவதால் நீங்கள்வால் நட்சத்திரமாய்த் தெரியப் போவதில்லைஅப்போது உருகப்போவதுதனியுடைமைவாதிகளின் ரத்தக் கொழுப்புகள் உங்கள் அடிகளின் கீழே நசுங்கப்போகும் மாட மாளிகைகள்சுரண்டியதால் உருவான குடிசைகளைவிண் முட்டும் கோபுரங்களாகக் காட்டப்போகின்றன நீங்கள் சுவற்றில் எழுதப்படுகின்றதேர்தல் கோஷங்கள் அல்லஇதயத்தில் கீறப்படுகின்ற வறுமை கீதங்கள் நீங்கள் சிவப்பு விளக்கு போட்டுக்கொண்டுவெளியே வந்தாலும்அங்கே நடக்கப்போவதுபாலியல் வன்கொடுமைகள் அல்லஅங்கே போடப்போவதுபொதுவுடமைப் பூ மஞ்சமும்அறிவுடைய அன்பு வாழ்வுமே ஆகும் நீங்கள் வெளியே வரும்போதுகோழி இறகால் உங்களை நாங்கள்அடைகாக்கப் போவதில்லைசெங்கற்சூலை போட்டுசுட்டு எடுத்து அடுக்குகிறோம் உங்களைக் கொண்டு கட்டப் போகும் மாளிகைக்குகுருதி நீர்தான் தெளிக்கப்பட்டாலும்அதன் நிறம் இறுதியில்வெண்மையாகவே மாறப்போகிறது நீங்கள்நான்கு சுவர் அறையிலேபாப் மியூசிக்கோடு கத்தப் போகும்காட்டுக் கூச்சல் அல்லதெருவின் முனையில்பசியின் கண்களோடும் கிழிந்த உடைகளோடும்ஆவலோடு எதிர்பார்க்கும்ஏழைகளின் காதுகளில் விழப் போகும்பூபாள எழுச்சி ராகங்கள் நீங்கள்இந்தத் தனியுடமைக் கடலைத் தாண்டும்போதுஎதிர்ப்படுகின்ற முதலாளித்துவ அரக்கிகளின்வாயிலே புகுந்து காதிலே வரக்கூடாதுஉன் அகன்ற தீ வாயிலேஅவர்களை விழுங்கிவிட்டுபொதுவுடைமை பூமியிலே காலூன்ற வேண்டும் செல்லுங்கள்திசை மாறிச் சென்று சோம்பிக் கிடக்காதீர்கள்உங்களுக்குநாங்கள் ‘போ போ’ என்று கட்டளை இடவில்லைஉங்கள் காதுகளிலே ‘போர் போர்’ என்றதாரக மந்திரத்தை உச்சரித்து அனுப்புகிறோம் உங்களுக்காகஏழை மக்கள் கோடி கோடியாகக்காத்துக் கிடக்கின்றனர்அவர்களின் கைகளிலேயேஉறுதி மிகுந்த அன்புப் பிணைப்பினை ஏற்படுத்துங்கள்முதலாளித்துவத்தின் தலையிலேசதிராட்டம் போடுங்கள்

பாரதி கவிதா மண்டலத்தின் மூன்றாம் தலைமுறை

பாரதி கவிதா மண்டலத்தின் மூன்றாம் தலைமுறை

கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக கவிதையில், புதுப் பாதைகளை உருவாக்கி, தமிழ் மக்களின் சிந்தனைப் போக்கில் முழுமையான மாறுதலுக்கு அடித்தளமிட்ட பாரதி முதல் தலைமுறை என்றால், பாரதி விட்டுவைத்துப்போன சொத்து என்று புதுமைப்பித்தனால் புகழப்பட்டவரும் பாரதியின் கருத்துகளால் ஈர்ப்புற்று எளிய பாடல்களை எழுதியவருமான பாரதிதாசன் இரண்டாம் தலைமுறை. இருவரும் வகுத்துச் சென்ற வழியை மேலும் செம்மைப்படுத்திய கவிஞர் தமிழ் ஒளி மூன்றாம் தலைமுறை. பாரதி கவிதா மண்டலத்தில் முத்திரை பதித்தவர் கவிஞர் தமிழ் ஒளி. இவரது இயற்பெயர் விஜயரங்கம். குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூரில் 21.09.1924இல் பிறந்த இவர், மாணவப் பருவத்திலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். பாரதி, பாரதிதாசன் ஆகியோரால் உந்தப்பட்டு, உணர்வுத் தாகமும் சிந்தனை வீச்சும் நிறைந்த கவிதைகளை எழுதி மக்களின் கவனத்தைப் பெற்றவர். பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் போன்வேன் (Bonvan) என்ற ஆளுநரின் மகளின் ஆணவத் திமிரைக் கண்டு ஆத்திரம் அடைந்த தமிழ் ஒளி, அவளது அதிகாரத்தைப் பற்றித் துண்டுப் பிரசுரம் எழுதி நகரெங்கும் பரப்பினார். இதனால் அவரால் பாண்டிச்சேரியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு வாரங்கள் புதுவையில் சிறைவாசம். விடுதலை செய்யப்பட்ட பிறகு பாரதிதாசனின் முயற்சியால் தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அங்குதான் தன்னுடைய பெயரை தமிழ் ஒளி என மாற்றிக்கொண்டார். பிறர் துன்பம் கண்டு பொங்கி எழுபவர், வேதனைப்படுபவர், தான் வாழும் சமுதாயத்தில் மக்கள் படும் இன்னல்களைக் கண்டு மக்களைப் போலத் தானும் கவலை கொள்ள வேண்டும்; இன்னல்களையும் தடைகளையும் எதிர்த்து நிற்கும் வல்லமையைப் பெறுவதற்குப் பாடுபட வேண்டும்; அவனே உண்மையான கவிஞன் என்பதற்கேற்ப வாழ்ந்து காட்டியவர். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லவற்றை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார். ‘பொதுவுடைமைப் போர்க்களத்தில் வீரக் கவிஞனாக விளங்கியவர் தமிழ் ஒளி’ என்று இவரைப் பற்றிப் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை சரியாகவே கணித்துள்ளார். அது உண்மையே. தனது காலத்தின் பொதுவுடைமை இயக்கத்தின் சாதனைகளையும் மக்கள் எழுச்சியையும் தமிழ் ஒளியைப்போல எந்தக் கவிஞனும் வீறுடனும் கவித் திறத்துடனும் வெளிப்படுத்தவில்லை. இவர் கவிதையையே வாழ்வாகக் கொண்டவர். வாழ்க்கையையும் கவிதையாக மாற்றியவர். தனக்கென்று வேறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதவர். கவிஞனாகவே வாழ்ந்து முடிந்தவர். வங்கக் கவிஞன் நஸ்துலைப் போல, உலகப் புகழ்பெற்ற கவிகளான ஷெல்லி, பைரனைப் போல, தமிழ் ஒளியும் கவிதையையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர். ‘பாரதி பரம்பரை’ என்ற கவிதையில் அவர் தன்னை யார் என்று அடையாளம் காட்டி, பெருமிதமும் அடைகிறார்.‘கண் வழி சொட்டுங் குருதியொடுங் கானில் வழிதடவி – தமிழ்ப்பண் வழி சென்று பழம் புகழ் சேர்த்தவன் பாரதி’ என்கிறார். சேரியில் வாழ்ந்த வீராயி, பிறந்த நாட்டிலும் வாழ முடியாமல், கடல் கடந்து ஆப்பிரிக்க நாட்டுக்குச் சென்று பிழைத்தாலும் அங்கும் எமனாகத் திரிந்து சுரண்டும் முதலாளித்துவக் கொடுமைகளை, ‘வீராயி’ என்ற காவியத்தில் கொதிப்போடு எடுத்துக்கூறியிருக்கிறார் கவிஞர் தமிழ் ஒளி. முத்தியாலுப்பேட்டை கல்வே கல்லூரியில் பாரதிதாசன் ஆசிரியராகப் பணியாற்றியபோது தமிழ் ஒளி அவரது மாணவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை தினமான மே தினத்தை, ‘கோழிக்கு முன் எழுந்து கொத்தடிமைபோல் உழைத்து, பாடுபட்ட ஏழை முகம் பார்த்துப் பதைபதைத்து, கண்ணீர் துடைக்க வந்த காலமே, நீ வருக! மே தினமே நீ வருக!’ என முதன்முதலில் தமிழில் பாடியவர் தமிழ் ஒளியே. ‘சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?’ என்னும் நூலில், ‘பல்வேறு கலை வடிவங்களைக் குறிக்கும் பல்வேறு சொற்களும் இயற்கையே என்பதை உணராமல், ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்களும் உள்ளன என்று கருதி அரைத்த மாவை அரைத்தும் சுற்றியசெக்கையே சுற்றியும் தமிழ் உலகம் புதுமையைக் காணவும் இல்லை; பழமையைப் பேணவும் இல்லை; நாணவும் இல்லை. இதுவே இன்றைய நிலை’ என்று ஆதங்கப்படுகிறார். ‘மூன்று காண்டங்களும் 30 காதைகளும் அடங்கிய சிலம்பு கதை, பாடுவோனால் அரங்கில் பாடப்பெறவும் ஆடுவோரால் கூத்துகள் ஆடப் பெறவும் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி ஆகியன கூடப் பெறவும் சிறந்து விளங்கும் இசை நாடகமாகத் திகழ்கிறது’ என்று கூறுகிறார். தமிழகத்தில் பண்டு பெருகியிருந்த இசை நாடகங்களின் கடைசிச் சுடரே சிலப்பதிகாரம். அது கடைசிச் சுடர் ஆகையினாலேதான், இளங்கோவடிகள் இசை நாடக இலக்கணத்தையும் சிலம்பினுட் பொதிந்து வைத்தார். ‘நிலை பெற்ற சிலை’யில் காதலன் மருதவாணன், காதலி வஞ்சி இருவரும் ஊரின் எதிர்ப்புக்கு மத்தியில் தனியாகச் சந்திக்கிறார்கள். காதலனைக் கண்டதும் வஞ்சி நாணமும் அதிர்ச்சியும் கொண்டு பேசாது ஒதுங்கி நிற்கிறாள். ‘நீ எட்டப் போய் நிற்கலாமா?’ என்று கேட்டு வஞ்சியை வாரி அணைத்துவிடுகிறான். அதற்கு வஞ்சியும் ‘தங்கள் காதல் ஏவி வரும் உணர்ச்சியினை, என்றன் உள்ளம் எட்டி அணைக்காமல் இருந்திடுமோ அத்தான்?’ எனக் கேட்க, ‘இருவரும் நீ நான் என்றில்லாமல் ஒன்றிவிட்டார் இருள் கிழித்தே; நிலவோடு வான் தழுவ நிறைந்தது இன்பம்’ என்று, காதலர் கூடுவதை இயற்கை இன்பத்தோடு இணைத்துக் கற்பனையாக கூறும் அழகே காதலரின் அன்பை உயர்வுபடத் தெரிவிக்கிறது. ‘தமிழர் சமுதாய நிலை’ நூலில் குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் தொழில் மாற்றங்கள், இறை வணக்கம் பற்றிய செய்திகளைப் புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்திருக்கிறார். நிலப் பிரபுத்துவச் சமுதாயம், கற்பனைகளையும் புராணங்களையும் ஏற்றுக்கொண்டதன்மூலம், தன் பண்டைய மரபான பொருண்முதன்மைக் கருத்தை வளர்க்கத் தவறிவிட்டது என்கிறார். வீரவணக்கம் கடவுள் வணக்கமாய் மாறியபோது, அதாவது சமயங்கள் முகிழ்த்தபோது அச்சமயங்களில் எண்ண முதல் கருத்துகளே தலைமை வகித்தன என்கிறார். 40 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழ் ஒளி, பல துறைகளில் தனது தமிழ் அறிவைப் பயன்படுத்தி, அரிய பல நூல்களை இயற்றினார். ‘தனிப்பட்ட முறையில் எனது தோழராகவும் ஆசானாகவும் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ் ஒளி. தமிழ் மொழியில் அவர் அறியாத துறை இல்லை’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்களில் குறிப்பிடுகிறார். ‘தமிழ் வானத்தில் விளங்கிய ஒரு விண்மீன்! அதன் மங்காத கவிதை ஒளியைப் போற்றுவோமாக!’ என்று சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் மு. வ. தமிழ் ஒளி கவிதைகள் வெளியீட்டுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். 1957ஆம் ஆண்டு விண்வெளிப் பயணம் வந்த நேரத்தில், ‘அந்தரத்தில் மேடை அமைத்தான்’ என்ற பாடலை எழுதியிருக்கிறார். சந்திர மண்டலத்தில் மனிதன் போய் தரையிறங்கிய நேரத்தில், ‘சரித்திரத்தையும் மாற்றியது மனித சக்தி; சாத்திரத்தை மாற்றுவது மனித சக்தி’ என்று பாடினார். பாரதி, பாரதிதாசன், தமிழ் ஒளி, பட்டுக்கோட்டை என்று நேர் செய்ய வேண்டிய தேவை அவரது நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கிறது. திருக்குறளில் பேசப்படும் இயற்கை நெறி சார்ந்த கடவுள் மரபு, வைதீக நெறி சார்ந்த கடவுள் மரபாகக் கட்டமைக்கப்படுவதை தமிழ் மொழி மறுக்கிறார். திருக்குறளின் மொழி அமைப்பு, சொற்களின் பொருள் ஆகியவற்றை விவாத முறையில் அணுகியவர் அவர். 25 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் காமத்துப்பாலை, தனது கண்ணோட்டத்தில் உரைநடையில் எழுதியுள்ளார். அவரது படைப்புகள், தொழிலாளி வர்க்கத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஊக்கம் தந்து உற்சாகம் ஊட்டக்கூடியவை ஆகும்.

தமிழைத் தோளேந்திக் காத்த எழிற் சுப்பிரமணிய பாரதியார்

தமிழைத் தோளேந்திக் காத்த எழிற் சுப்பிரமணிய பாரதியார்

பாரதியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சீவலப்பேரியில் நன்கு அறிமுகமான, செல்வாக்கு மிக்கவரான, சத்திரம் சுப்பையர் என்ற கடுவாய்ச் சுப்பையர் – பாகீரதி அம்மையார் ஆகியோரின் மகன் சின்னச்சாமியின் (சுந்தரராஜன் என்ற செல்லப் பெயரும் உண்டு) மகன் சுப்பிரமணியன் என்ற பாரதி, கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். 39 ஆண்டுகளே வாழ்ந்த பாரதி எழுதிக் குவித்திருப்பவை ஏராளம். ஒரு கவிஞனாக, பத்திரிகை ஆசிரியராக, கார்ட்டூனிஸ்ட்டாக, சிறுகதை எழுத்தாளராக, கட்டுரை ஆசிரியராக அவரது பரிமாணங்கள் கணக்கிலடங்கா. வீர சுதந்திரம் வேண்டி நின்ற போராளி; பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த சீர்திருத்தவாதி; சாதிப் பிரிவுகளையும் தீண்டாமையையும் எதிர்த்துப் போரிட்ட புரட்சியாளர்; சர்வதேசக் கண்ணோட்டத்துடன் சமகால அரசியலை விமர்சித்தவர். பாரதியின் கவிதைகள் போலப் போற்றத்தக்க வகையில் கட்டுரைகளும் கதைகளும் அமைந்துள்ள பான்மையை ஒரு சிலரே அறிவர். கவிதா மண்டலத்தின் ஏகச் சக்கரவர்த்தியாக விளங்குவது போலவே, உரைநடைக்கும் அவரே வழிவகுத்துள்ளார் என்பதைத் தமிழகம் இன்னும் உணராதது விந்தையே! கவிதைகளில் சுருக்கமாகக் கூறப்பட்ட பல செய்திகளை, கட்டுரைகளிலும் கதைகளிலும் விரிவாக விளக்கியுள்ளார். இவரது சிறுகதைகள் ஒழுக்க மேம்பாட்டிற்காக, கலாச்சார மேம்பாட்டிற்காக, தேசபக்தியை உருவாக்குவதற்காக எழுதப்பட்டன. நிலப் பிரபுத்துவச் சமூகத்தில் நிலவிய சாதி அமைப்பு, மூட நம்பிக்கை, பெண் அடிமைத்தனம், போலி வாழ்க்கை ஆகியவற்றை அவரது சிறுகதைகள் அம்பலப்படுத்துகின்றன. இவர் ஒரு முற்போக்கான புரட்சிகரப் புனைவியல்வாதியாவார். கலை இலக்கியத்தில் நிலப்பிரபுத்துவத் தன்மை நிலவிவந்த காலத்தில், கலை இலக்கியக் கோட்பாட்டை ஜனநாயகத் தன்மை உள்ளதாக மாற்றுவதற்குப் பாடுபட்டவர். பாரதியின் காலகட்டம் சமூக அடிப்படையில் தேசியப் பூஷ்ர்வாக்களின் தோற்றக் காலமாக இருந்தது. வெள்ளையரின் வருகைக்குப் பின்பு நிலப்பிரபுத்துவத்துடன் இந்தியவகை முதலாளித்துவம் வளரத் தொடங்கியதன் காரணமாக, தேசிய முதலாளிகள் பாரம்பரியக் கருத்துக்களைச் சுவீகரித்துக்கொண்டதுடன் புதுமையையும் வரவேற்கும் போக்குக் கொண்டவர்களாகவே இருந்தனர். அதனால், வெள்ளையர்களை எதிர்த்தார்கள். அதே நேரத்தில், பாட்டாளி வர்க்கத்தினருடன் முரண்பாடு கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்களிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இருந்தபோதிலும் தங்களது வர்க்க நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டும் போக்கும் இவர்களிடம் இருந்தது. இத்தகைய காலகட்டத்தில்தான் இலக்கியம் படைத்தார் பாரதி. புதர் மண்டிக் கிடந்த தமிழ் இலக்கியத்தைச் சுத்தம் செய்யும் முதல் பணியாக அவரது பணி அமைந்துவிட்டது. அப்படிச் சுத்தம் செய்யும்பொழுது அவர் முற்போக்கானவற்றைத் தன் வசப்படுத்திக்கொள்கிறார். அவற்றைக் காலத்தின் தேவை கருதிப் புதிய இலக்கியமாகப் படைத்துத் தந்தார். அந்தப் புதிய இலக்கிய வகைதான் அவரது சிறுகதைகள். ஆறில் ஒரு பங்கு என்ற கதைக்கு பாரதி இவ்வாறாக முகவுரை தருகிறார்: ஒரு சாதி ஓர் உயிர். பாரத நாட்டில் உள்ள 30 கோடி ஜனங்களும் ஒரு சாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது; வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது; மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது; இந்த உணர்வே நமக்கு சுதந்திரமும் அமரத் தன்மையும் கொடுக்கும். இந்நூலை பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து இரட்சிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத்தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன். பள்ளர், பறையர் என்ற பஞ்சமர் சாதியைச் சார்ந்தவர்களுக்கு வைசியர் என்ற புதிய அந்தஸ்தைக் கொடுத்து நிலப்பிரபுத்துவ எதிர்ப்பைக் காட்டுகிறார். அவர் காலத்தில் அவர் கண்ட சமூக அமைப்பிலிருந்து மீறிய சிந்தனை உலகப் படிமம்தான் இந்தக் கதையின் மூலப் பொருளாக அமைந்துள்ளது. மதங்கள் காதலுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதை ஸ்வர்ணகுமாரி என்ற கதையின் மூலமாகக் கூறுகிறார். சாதியக் கட்டுகள் தகர்த்தெறியப்பட வேண்டும் என்ற பாரதியின் கனவு நிலையை பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகளைக் கதையின் பாத்திரங்களுடன் இணைத்துப் பிரதிபலித்து காட்டுகிறார். வேதம், மகாபாரதம், பைபிள், குர்ஆன் ஆகியவை கூறுபவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற, அறிவு வளர்ச்சிக்கு – விஞ்ஞான வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தவற்றை, குதிரைக்கொம்பு என்ற கதையின் மூலம் கேலி செய்கிறார். ‘அஞ்சியஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ என்று இந்நாட்டு மக்களின் அச்சத்தை இடித்துரைக்கும் வகையில் ஆனைக்கால் உதை என்ற நகைச்சுவைக் கதை மூலம் கேலி செய்கிறார். இதுபோன்ற கதைகள்மூலம், தான் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூகச் சூழலைக் கவனித்து இலக்கியம் படைத்தார். மகாகவியின் புதிய ஆத்திசூடி ஒரு தனி இலக்கியம் என்றே கூறலாம். இந்தப் புதிய ஆத்திசூடிக்குக் காப்புப் பாடலாக எழுதியதில், பரம்பொருள் வாழ்த்தாக சர்வ மதச் சமரசமாக அனைத்துச் சமயங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். ஆத்திசூடி இளம்பிறை யணிந்துமோனத்திருக்கு வெண் மேனியான்கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்உருவகத்தாலே உணர்ந்து உணராதுபலவகையாகப் பரவிடும் பரம்பொருள்ஒன்றே! அதனியல் ஒளியுறுமறிவோம்அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார்அதனருள் வாழ்த்தி அமர வாழ்வெய்துவோம் என்று தொடங்கும் பாடலில் சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம் ஆகிய சமயங்களைக் குறிப்பிட்டு, ‘அனைத்து மதங்களிலும் கூறப்படுவது ஒரே பரம்பொருளைப் பற்றித்தான். இந்தப் பரம்பொருளில் ஒளியுறுவது . அவ்வறிவு நிலை கண்டார்க்கு அல்லல் இல்லை. எனவே அத்தகைய பரம்பொருளின் அருளை வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்’ என்று காப்புப் பாடலில் பாடுகிறார். பாரதியின் புதிய ஆத்திசூடி நல்ல அறிவுரைகளும் ஆணைகளும் நிரம்பிய நல்லதோர் இலக்கியமாகும். நாட்டிற்குத் தேவையானவற்றைக் கூறும் இந்த ஆத்திசூடி நாட்டு மக்களிடம் பரவ வேண்டும். பாரதி திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் விருப்பமின்றியே ஆங்கில மொழியைக் கற்றார். காசியில் சமஸ்கிருதமும் ஹிந்தி மொழியும் பயின்றார். காசியில் இருந்த சமயத்தில் உருது மொழியையும் கற்றார். புதுச்சேரியில் இருக்கும்போது பிரஞ்சு, வங்காளம் ஆகிய மொழிகளைக் கற்றார். பின்னர் ஜெர்மன் மொழியையும் அறிந்தார். சென்னை வாசத்தின்போது தெலுங்கு மொழியைப் படித்தார். பின்னர் அரபு மொழியையும் மலையாள மொழியையும் கற்றார். கோத்த பொய் வேதங்களை எல்லாம் சாடி, மடத்தன முதலையின் வயிற்றைக் கிழித்தவன் பாரதி. கற்றறிந்த பண்டிதர்கள் மட்டுமே பொருள் அறிந்துகொள்ளக்கூடிய காவியங்கள், நூல்கள் கொண்டிருந்த தமிழுக்கு புதிய ஒளி கொண்டுவந்தவர் பாரதி. எளிய நடையில் பாமரருக்கும் பொருள் விளங்குமாறு கவிதைகளை இயற்றியவர் பாரதி. அவர் காலத்துச் சூழ்நிலையில் மக்களின் துயரம், வறுமை, அடிமைத்தனம், மடமை பற்றிக் கனலும் கவர்ச்சியும் கலந்த நடையிலே பாடல்களை எழுதினார். வெயில் பயிர்களுக்கு உயிர் கொடுப்பதைப்போல, தமிழர்களின் உள்ளத்தை மலர்ந்து விரியச் செய்த மகாகவி பாரதி 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு இயற்கை எய்தினார். பாரதியின் இறுதிச்சடங்கில் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மா கொள்ளி வைத்தார். இறுதிச் சடங்கிற்கான செலவுகளை வக்கீல் துரைசாமி ஐயர் செய்தார். ஒண்டிக் குடித்தனச் சூழல், பிராமண சமூக வழக்கம், இன்று இருப்பதைப் போன்று பாதுகாத்து வைக்கக்கூடிய வசதியின்மை ஆகியவற்றால் பாரதியின் உடல் எரியூட்டப்பட்டது. சிலமணி நேரங்களில் தகவல் சொல்வதற்கோ மற்றவர்கள் வந்து பங்கேற்பதற்கோ வசதி இல்லாத அந்தக் காலத்தில், வெறும் 14 பேருடன் மட்டுமே பாரதியின் இறுதிச்சடங்குகள் நடந்தன. இருப்பினும் அவரது உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் பாரதி கலந்தே நிற்கின்றார்.

அத்தியாகிரகம்

அத்தியாகிரகம்

கவிதை ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும் நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது அதன் நூற்றாயிரம் துகள்களும்கோரப் பார்வையோடு வெறித்தபடி நடக்கும்கால் நரம்புகளை ஊடுருவி கண் நரம்புகளைச் சிதைக்கும்அத்தியாகிரகத்திற்குஅழைப்பு விடுத்திருக்கின்றன மெளனச் சாணத்தால்கிழவனின் கண்ணாடிச் சில்லுகளைஒருபோதும் ஒற்றி எடுத்திட முடியாது நாடே போற்றிய எழுபத்தைந்துநைந்து போனது வீதியெங்கும் மூவர்ணம்பறக்க-விட்டோம்வீடெங்கும் ஏற்றி வைத்துச்சிறக்க வைத்தோம் அதையின்றுஉயர் வர்ணம் யாரென்றகர்ணத்தில் உடைத்துவிட்டார்கள் கிழவனின் கண்ணாடிச் சில்லுகளின் மீதுமெளனத்தை அடைகாக்க அனுமதித்தால் ஆபரணங்களைப் போலஆடைகளுக்கும்வட்டி கட்ட நேரிடும்

ஆடி மாதம்

ஆடி மாதம்

கவிதை வானமே கூரையெனவாழ்ந்திருந்த சாமிகள்மூன்று பிரகாரங்கள் கொண்டகான்கிரீட் கட்டடத்துக்குள்அடைக்கப்பட்டனர் கோயில்கள் எல்லாம்ஆலயங்கள் ஆகிவிட்டனபேச்சியம்மனுக்கும் முண்டகக்கண்ணிக்கும்கூடஸ்ரீ என்ற முன்னொட்டு சேர்ந்துகொண்டுவிட்டது எல்லாத் தெருக்களிலும்எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கிறார்எல்.ஈ.டி. அலங்காரக் கட் அவுட்டிலிருந்துஅருள்பாலிக்கிறார்கள் அம்மன்கள் முளைப்பாரி சுமந்துவரும்ஆறு பேருக்கு முன்பாகஎட்டுப் பேர் வருகிறார்கள்கொட்டு அடித்தபடி பொங்கல் வைப்பவர்கள் ஒருபக்கம்கூழ் ஊற்றுபவர்கள் மறுபக்கம்பொங்கிப் பெருக்கெடுக்கிறதுநாள் முவழுதும் பக்திப் பரவசம் மாலையில் தொடங்குகிறதுதீ மிதிக்கும் நிகழ்வுஆத்தாவின் சக்தியில் ஐயம் கொண்டுஅருகே நிறுத்தப்படுகிறது ஆம்புலன்ஸ் முன்னிரவில் களை கட்டும்இசைக் கச்சேரியும் ஆடலும் பாடலும்கூடவே, கூழ் வார்த்த களைப்பு நீங்கடாஸ்மாக் பழரசத்தின் பரவசம் ஆலயத்தின் முன் அனைவரும் திரண்டிருக்கஎதிர்த்திசையில் சிலர்மாரத்தான் ஓடிக்கொண்டிருந்தனர்தலைவிரி கோலமாய் இடைமறித்து நிகழ்த்தப்பட்ட விசாரணையில்அம்பலமானது செய்திஒலிபெருக்கியின் ஓலம் தாங்காமல்ஓடிக்கொண்டிருந்தார்கள் அம்மன்கள்

நங்கூரம்

நங்கூரம்

கவிதை நீண்ட நெடியஓட்டத்திற்குப் பிறகுநிதானமாய் மெல்லதிரும்பிப்பார்க்கிறேன் எத்தனை தூரம்நதியில் விழுந்த இலையாககாலம் என்னைஇழுத்துக்கொண்டு வந்திருக்கிறது! காலத்துக்கேற்றகதாபாத்திரங்களின்ஒப்பனை கலையாமல் உள்வைத்துத் தைத்தஉணர்வுகளின்சுயம் கசியாமல் விழி பூக்கும் கண்ணீரின்வேர்களின்வலி விழுங்கி உதட்டுப் புன்னகையில்கூடுதலாய்க் கொஞ்சம்ஒளி கூட்டி என் குணம் தெரியாமல்பூச்சாண்டி காட்டிய வாழ்விற்கும்நேசம் போதித்து எஞ்சி நிற்கும்காலப் பெருவெளியில்நங்கூரமாகும் என்னை நினைத்தால்எனக்கே சற்றுபொறாமையாகத்தான் இருக்கிறது

சுத்தமான கடவுள்

சுத்தமான கடவுள்

கவிதை அகல் விளக்கை‘சுத்தமான’ எள் எண்ணையால் ஏற்றினால்சனி சமாதான உடன்படிக்கைக்கு வருவாராம் கடைவீதிகளைச் சலித்தால்தங்க விளக்குகூட கண்முன்னே மின்னுகிறதுமண்விளக்கென வாய் திறந்தால்அதிசயப்பிறவி போல் பார்க்கிறார்கள்எங்கே போனார்கள் மண்பாண்டக் கலைஞர்கள்..?அறுபது மைலுக்கு அப்பால் போனால்‘சுத்தமான’ அகல்விளக்கு கிடைக்குமாம் எள் எண்ணை கேட்டால்எள் படம் போடப்பட்டஎண்ணற்ற பைகள் வரிசையில் கிடந்தனஎங்கே போனார்கள் செக்காட்டுவோர்.?இருபது மைல் கடந்து போனால்‘சுத்தமான’ எண்ணெய் கிடைக்குமாம் திரி கேட்டால்‘சுத்தமான’ பஞ்சுத்திரி கிராமத்தில்தானாம்மறைந்துவிட்டதா பருத்தி உற்பத்தி..? வெறுப்பின் உச்சத்தில்பொறுப்பாய் வீடு வந்துகிண்ணத்தை விளக்காக்கிநீரை எண்ணையென வார்த்துபூவைத் திரியென மிதக்கவிட்டுகோபத்தைத் தணலாக்கிப் பற்ற வைக்கபூத்திரியில் ஒளிர்கிறார் ‘சுத்தமான’ கடவுள்

பேனா வீரர் பிரேம்சந்த்

பேனா வீரர் பிரேம்சந்த்

வாழ்வாவது மாயம் என்று எழுதியவர்களும் எழுத்தாளர்கள்தான்; வாழ்க்கை வாழ்வதற்கே என்று முழங்கியவர்களும் எழுத்தாளர்கள் தான்; இரண்டும் கெட்டானாக, வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாவோம் என்ற தோரணையிலே வளவளா சித்தாந்தங்களை வழங்கியவர்களும் எழுத்தாளர்கள்தான். இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் வாழ்ந்த உலகிலேதான் பிரேம்சந்த் – அன்பு நிலவன் என்ற எழுத்தாளரும் வாழ்ந்தார். மானுடத்தை உயர்த்துவது இலக்கியம்தான் என்று கருதிய இவர், நோய்வாய்ப்பட்ட காலத்தை, வெளியூர்ப் பயணம் மேற்கொண்டிருந்த காலத்தைத் தவிர மற்ற நேரங்களில், ஒவ்வொரு நாளும் எழுதுவதை ஒரு தவமாகக் கொண்டு தனது இறுதிக் காலம் வரை எழுதிக்கொண்டே இருந்தார். ஒருமுறை அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, எழுதுவதை நிறுத்துமாறு வேண்டியபோது, “நான் எப்படி எழுதாமல் இருக்கமுடியும்? நான் ஒரு தொழிலாளி; எனக்குத் தொழில் எழுதுவது; உழைக்காமல் உண்ண எனக்கு உரிமை இல்லை” எனக் கூறியதோடு, தன்னைப் ‘பேனா பிடிக்கும் சிப்பாய்’ என்று சொல்லிப் பெருமிதம் கொண்டவர். ‘எங்கெல்லாம் அநீதியும் அநியாயமும் தலை தூக்குகின்றதோ அங்கெல்லாம் அவற்றிற்கெதிராக மனிதநேய உணர்வை வலுப்படுத்திப் போரிடச் செய்வதுதான் இலக்கியத்தின் லட்சியமாகும் என்று உரக்கக்கூறிய எழுத்தாளர் பிரேம்சந்த். தன்பத்ராய் ஸ்ரீ வத்சவா என்பது பிரேம்சந்தின் இயற்பெயர். உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி என்ற காசிக்கு அருகில் உள்ள லாம்கி என்ற இடத்தில் 31.07.1880இல் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1895இல் முதல் திருமணம் செய்துகொண்டார். 1905இல் சிவ்ராணி தேவி என்ற இளம் விதவையை மணந்துகொண்டார். பிரேம் சந்தின் தந்தை அஜா யப் லால், ஓர் அரசுப் பணியாளர். பிரேம் சந்தின் எட்டாவது வயதில் அவரது தாய் காலமானார். இவர்களது குடும்பம் ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாகும். தந்தை மறுமணம் செய்துகொண்டார். இதனால் மாற்றாந்தாயின் அலட்சியத்திற்கு ஆட்படுத்தப்பட்டார். காசியில் பள்ளியில் படிக்கும்போது, அவரது தந்தை அவருக்குச் செலவிற்குக் கொடுத்த ரூபாய் 5 போதுமானதாக இல்லாததால், ஒரு பையனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டது. 17ஆவது வயதில் இவரது தந்தை மரணமுற்றார். குடும்பச் சுமை இவர் மீது விழுந்தது. உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தபோது சித்தி, சித்தியின் தம்பி, தனது தம்பி ஆகியோரைக் காப்பாற்றவேண்டிய கட்டாயச் சுமையை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மெட்ரிகுலேஷன் தேர்வில் தேறிய இவர், வறுமை காரணமாக கல்லூரியில் சேர பெரும்பாடாய்ப் போயிற்று. அப்போதும் ஒரு பையனுக்குப் பாடம் கற்பிக்கத் தொடங்கினார். தனது 19ஆவது வயதில் ஆசிரியரானார். அதனால் பொருளாதார நிலை சற்று உயர்ந்தது. அவர் உருது மொழியில் படைத்த படைப்புகளுக்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்தியில் எழுதத் தொடங்கிய பிறகு வருமானம் அதிகரித்தது. வருமானத்தில் பெரும் பகுதி அச்சகம், பத்திரிக்கை நடத்தச் செலவிடப்பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. புத்தக வெளியீட்டாளர்கள் உரிய பணத்தை தராமல் மோசம் செய்ததால் அச்சகத்தை மூடினார். பாதி அச்சடிக்கப்பட்ட அவரது புத்தகங்களைப் பாதி விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், வறுமையைத் தனது நித்தியத் தோழி என்று பகடியாக வர்ணிப்பார். உருது, இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரிந்த இவர், அம்மொழிகளில் உள்ள ஏராளமான புத்தகங்களைப் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே அக்காலத்தில் வந்த பிரபலமான நாவல்களைப் படித்து முடித்துவிட்டார். கணிதம் பயிலக் காசி சென்றபோது, அங்குள்ள நூல்நிலையங்களில் கணிதத்திற்குப் பதிலாகக் கதைப் புத்தகங்களைப் படித்தார். தன் மைத்துனர் மூலமாக அலகாபாத் நூல் நிலையத்திலிருந்து நூல்களைப் பெற்றுப் படித்தார். மூன்று மொழிகளிலும் நிறையப் பத்திரிகைகள் படித்தார். அரசியல், பொருளாதாரம், சமூகவியல் இவற்றிலும் நிறைய புத்தகங்களை படித்தார். அவருடைய வாசிப்புப் பழக்கம் இறுதிவரை இருந்தது. உலகத்தின் கொடுமைகளையும் துன்பங்களையும் பார்த்த அவரால், இவை எல்லாம் கருணைமிக்க ஒரு கடவுளின் படைப்பு என்று ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நாத்திகத்தில் நாட்டம் கொண்டார். இலக்கியத்தின் மூலம் சமூகத்தைச் சீர்திருத்த, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க ஆரம்பத்தில் முயன்றார். அடிமை நாட்டில் அரசாங்கத்தின் கீழ் பணி செய்வது அவரது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. காந்தியடிகளின் சொற்பொழிவைக் கேட்டபிறகு, ஒத்துழையாமை இயக்கத்தில் சேர முடிவு செய்து, தனது அரசுப் பணியைத் துறந்தார். அவர் அரசுப் பதவியில் இருந்தபோதே, தூக்கிலிடப்பட்ட தியாகி குதிராம்போசின் உருவப் படத்தைத் தமது அறையில் மாட்டி வைத்திருந்தார். சமகால சமூகப் பிரச்சினைகளை எதார்த்த நோக்கோடு, இயற்கையான பாத்திரங்கள் மூலம் தம் நாவல்களிலும் சிறுகதைகளிலும் கையாண்டு, தற்கால இந்தி, உருது கதை இலக்கியத்திற்கு வித்திட்டார். 12 நாவல்களை உருது அல்லது ஹிந்தியில் எழுதி, அவற்றில் பலவற்றைத் தாமே, தாம் அறிந்த பிற மொழிகளிலும் பெயர்த்தார். 300 சிறுகதைகள், மூன்று நாடகங்கள் எழுதியுள்ளார். பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்ட, கொடுமைக்குள்ளான, சுரண்டப்பட்ட மனிதன் அல்லது சமூகத்தின் குரலை உயர்த்திப் பிடிப்பது தமது கடமை என்று உறுதிபட நம்பி, அவற்றைத் தமது படைப்புகளில் வெளிப்படுத்தினார். ‘நம் நாட்டில் விவசாயிகளைச் சுரண்டும் ஜமீந்தார்களும் சேட்டுகளும் இருக்கக் கூடாது’ என்பதுதான் என் கம்யூனிசம் என்று உரையாடும்போது கூறியதோடு, அவற்றைத் தமது படைப்புகளில் எழுதினார். மனித நேயத்தின் வெளிப்பாடாக ஒரு நாவலில் குருட்டுப் பிச்சைக்காரனைக் கதாநாயகனாகச் சித்தரித்துள்ளார். வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் பிற அநீதிகளின் காரணமாகப் பெண்கள் விலை மாதர்களாக மாறும் நிர்ப்பந்தத்தை, பொருத்தமற்ற திருமணத்தின் விளைவுகளை, சேவா சதன், நிர்மலா என்ற கதைகளில் எழுதியுள்ளார். அந்நிய ஆட்சிக்கெதிராக மக்களின் சத்யாகிரகம், மதுவிலக்குப் பிரச்சாரம், அந்நியப்பொருள் மறியல், கதர் இயக்கம், தேசபக்தர்கள் போலீஸ் தடியடிக்குள்ளாகிச் சிறை சென்று உயிர்த் தியாகம் செய்வது போன்ற நிகழ்வுகள் இவரது சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன. உபன்யாஸ் சாம்ராட், அதாவது நாவல் சக்கரவர்த்தி என்ற அடைமொழியை பிரேம் சந்திற்கு முதலில் பயன்படுத்தியவர் வங்க இலக்கியவாதி சரத் சந்திரர்.பிரேம்சந்த் சரத் சந்திரரிடம் தனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதித் தருமாறு வேண்டியபோது, அதற்கு அவர் வங்காளத்தில் ரவீந்திரநாத் தாகூர் எழுதக்கூடிய அளவிற்கு உங்களது கதை உள்ளது. இதற்கு முன்னுரை எழுதும் தகுதி தனக்கில்லை என்றார். இதன் மூலம் பிரேம்சந்த் கதைகள் எந்த அளவிற்கு அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிய முடியும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பெரும் புகழ்பெற்ற இந்தி, உருது எழுத்தாளர் மட்டுமல்லாது இந்திய விடுதலைக்காகவும் விவசாயிகளுக்காகவும் தீவிரமாகவும் தீரமாகவும் போராடிய இலக்கியப் போராளி பிரேம்சந்த். 1936இல் உருவான இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தலைவரும் இவரே. இவரது பிறந்த தினம் இன்று.

மனிதத் தொழிற்சாலைகள்

மனிதத் தொழிற்சாலைகள்

மொழிபெயர்ப்புக் கவிதை நாட்கள்… ஒருவேளை அவற்றில் பலவகை இருக்கலாம்ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும், சகோதரி டுமல்ட்? என் கடிதம், நானே செய்த அசைந்தாடும் நாற்காலி, என் வீணை எதுவுமே உனக்குக் கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது உன் வெளிச்சத்தில் என்குடியிருப்பை நிறுவ நான் விரும்பினேன்என்னுடைய ஒளிக்கீற்றுகளின் இருப்பை நீஅடையாளம் காணவில்லை என்கிறாயா? எனில், நிச்சயமாக எங்கோ ஒருதவறு நிகழந்திருக்க வேண்டும் நகரத்தின் பொழுதுபோக்கு மையத்தில்நீச்சல் குளத்தின் அருகேஉன் குழந்தையுடன் நீநடமாடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,ஒருமுறை நாம் அதே நீச்சலுடை அணிந்தோம்ஆனால் இப்போதுநம் கனவு தரிசனங்களின் குவிப்பில்சிறு விலகல் நடந்துள்ளது தோட்டத்து மண்நரியின் கால்தடம் பதிந்ததைப் போலதொடுவதற்கு சூடாக இருக்கிறது எங்கள் நடுத்தர நகரத்தை நான் பின்தொடர்ந்தேன்ஒரு வால்கிரீன்ஸில் நம் பாதை பிளவுபட்டபோதுவிக்டோரியன் துப்பறியும் நபரைப் போலகிரினோலின் ஆடையுடனும் குழைந்த இன் சொற்களுடனும்என் அடிச்சுவடுகளை நான் திரும்பப் பெற்றுக்கொண்டேன் ஆனால் இதோ, சகோதரி டுமல்ட்,நிழல்கள் என் பருத்த கைகளில் இறங்குகின்றனஎன் மார்பகங்களை இழுத்த குழந்தைகளைநான் நினைவில் வைத்திருக்கிறேன் எங்கள் வியர்வையும் பாலும்கலந்தே இருக்கின்றன

மூன்றாம் விதி

மூன்றாம் விதி

சிறுகதை பாதி பூச்சு வேலை இன்னும் பாக்கி இருக்கு. ஷோகேஸ் வேலை, அடுப்படில கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லாம வீடு கிரகபிரவேசம் நடத்தி, அதில இருந்து வசூலாகுற பணத்துலதான் பாக்கி வைச்ச கொத்தனார் கூலியைக் குடுக்கணுமுனு முடிவு பண்ணீட்டேன். பேங்குல வாங்குன வீட்டுக் கடனுக்கு மேல பிரசனல் லோன், நகைக் கடன் எல்லாம் வாங்கியும் வீட்டை முழுசா கட்டி முடிக்க முடியல. இதுல சில சவரன் நகை ஏலம் போயிருச்சு. கொஞ்சத்த வித்துப்புட்டேன். மொபைல்ல நம்பர் இருக்குற அத்தனை பேருட்டையும் முடிஞ்சளவு கறந்துட்டேன். ஒரு ஹால், ஒரு ரூம் இருக்கிற மாதிரி ஒன்னேமுக்கா செண்ட்டுல அரைகுறையா இந்த வீடு கட்டவே எனக்கு நாலு வருசம் ஆச்சு. அதுக்குள்ள பேங்குக்கு இ.எம்.ஐ வேற கட்ட வேண்டியதாயிருச்சு. இப்படி, இந்த வீட்ட இப்ப கட்டித்தான் ஆகணுமான்னு நினைக்காத நாளே இல்ல. “வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார்”ன்னு பெரியவுக சும்மாவா சொன்னாங்க?! பாதி உசுரும் பாதி உடம்பும் மொத்தமா போயும் முழுசா முடிக்க முடியல. கல்யாணத்தப் பண்ணி பொஞ்சாதியக் கூட்டிக்கிட்டு வந்த உடனேயே, நம்மல திருத்தி வழிநடத்த ஆரம்பிச்சுடறாளுக. என்னமோ நாமலாம் தறிகெட்டுத் திரியுற மாதிரியும் இவளுக வந்துதான் நமக்கு வாழ்க்கைய கத்துக் குடுக்குற மாதிரியும் நம்மல முழுசா வேற ஆளாவே மாதிப்புடுறாளுக. எப்படியாவது சொந்தமா ஒரு வீட்ட கட்டிப்புடணுமுன்னு மண்டைக்குள்ள இறங்கி வெதச்சுப்புட்டா மகராசி. ஆனா நம்ம முடிவெடுத்தா மட்டும் எதுவும் நடந்துடுமா என்ன? புள்ளைய இரண்டுக்கு மொட்டை போட்டு, குலதெய்வம் கோயில்ல கயறு கட்டி, வர்றவன் போறவன் சொல்லுற வேண்டுதலை எல்லாம் அவனவன் சொல்லுற மாதிரியே அப்படியே செஞ்ச பொறவுதான் பேங்கு லோன் சாங்சனே ஆச்சு. அதுவும் அந்த அழகர் கோயில் மலை மேல இருக்குற ஆறுபடை வீடுகள்ல ஒன்னான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலுக்குப் போயி, அங்க பக்கத்துல ஏழு கல்லை எடுத்து அடுக்கி வைச்ச பிறகுதான் கிரீன் லைட்டே எரிஞ்சுது, இந்த ஆபரேசன் ஓன் ஹவுஸ் திட்டத்துல. பத்தாயிரம் ரூபா வாடகை கொடுத்து, ரெண்டு பெட்ரூம் இருக்குற வீட்டுல எல்லா வசதியோட, ஊருக்குள்ளேயே பஸ் ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி, புள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம், எல்லாமே பக்கத்துலேயே இருக்குற மாதிரி ஒரு இடத்துல சௌக்கியமா இருந்துக்கிட்டு இருந்த நாங்க, இப்ப ஊருக்கு வெளியே ரிங் ரோட்டோரம், எந்த வசதியும் இல்லாத, என்ன வேணுமின்னாலும் ஒரு பத்து பதினஞ்சு கிலோமீட்டர் தூரம் போய் வரவேண்டி இருக்கிற இந்த இடத்துல வீட்ட கட்டி, அதுல நம்ம பேர எழுதி சொந்த வீடுனு மார் தட்டிக்கணுமாம். இதுல இந்த இ.எம்.ஐ. மட்டும் பதினஞ்சாயிரம் மாசம் அஞ்சாம் தேதி வந்தா கட்டணும். வாழ மரத்துல இருந்து சாப்பாடு வரைக்கும் வெறும் அட்வான்ஸ் மட்டுமே குடுத்து கிரகப்பிரவேசத்துக்கான வேலைய ஆரம்பிச்சிட்டேன். என் ராசிக்கு ஒம்போது ராசியும் எதிர்த் திசையில இருக்கறதால சிறப்புப் பரிகாரம் பண்ணணுமுன்னு நாலு பக்கத்துக்கு பூசை சாமான் வாங்க லிஸ்ட் வேற தந்தான் அந்த புரோகிதரு. நெருப்புல கொட்டி எரிக்கிறதுக்கு வாங்குன நெய் மட்டுமே ஐநூறு ரூவா. எனக்கு வந்த ஆத்திரத்துல அந்த புரோகிதரையே தூக்கி அந்தத் தீயில போடணுமுன்னு தோனுச்சு. அதுக்கு, எம்பொஞ்சாதி நான் கட்டுன தாலிய எடுத்து அவ கண்ணுல ஒத்திக்கிட்டா. எதிர்பார்த்த மாதிரி ஐநூறு பேத்துக்கு மேல கூட்டம் வந்துருச்சு மதியத்துக்குள்ளேயே. தலைக்கு கொறஞ்சது இருநூறு ரூவா மொய் செஞ்சாலும் இன்னைக்கு ஆகுற செலவுக்கு ஈடாகிருமுன்னு நிம்மதி வந்துருச்சு. கிரகப்பிரவேசத்துக்காக வீட்டு வாசல்ல பந்தல் போட இடஞ்சலா இருந்த அந்த மரத்துக் கிளைகளை வெட்டிப்போட்ட கொப்பு ஒன்னுல காக்கா கூடு ஒன்னு இருந்திருக்கு. வெட்டுனவன் அதைப் பாக்காம வெட்டிட்டான். வாசல்ல இருந்த அந்த மரத்துல ரெட்டைக் கிளை இருந்தா பக்கத்து வீட்டுக்கும் நமக்கும் சண்டை வருமுன்னு அவன் சொன்ன காரணம் ஏத்துகிற மாதிரி இருந்ததால, ஒரு கொப்பை வெட்ட அனுமதிச்சேன். இப்ப அந்தக் காக்கா பாவமுன்னு மனசு வலிக்க அதைப் பாத்தா, அது ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடாம அடுத்த கொப்புல புதுக் கூடு ஒன்ன கட்டி முடிச்சு குடியேறிடுச்சு ஒரே நாள்ல. காக்காவுக்குலாம் எப்படித்தான் அதுக்குள்ள எல்லா லோனும் கிடைக்குதோ! இந்த லோன் வாங்குற கஷ்டத்தைவிடப் பெரிய கஷ்டம் ஒன்னு இருக்குன்னா, அது அந்த கவர்மெண்டு ஆபீஸ்ல அப்ருவல் வாங்குறதுதான். யாராருக்கு எவ்வளவு கொடுக்கணுமுன்னு ஒருத்தன் சொல்லுவான். அவன் யாருன்னு அந்த ஆபீசுல கண்டுபிடிக்கவே நான் நாலு பேத்துக்கு கத்தை கத்தையா செலவழிச்சது போக, டீ வாங்கிக் குடுக்கவே தனியா ஒரு லோன் போட வேண்டியிருந்துச்சு. அங்க இருக்கிறவன் கால்ல விழுந்து கெஞ்சி, காசையும் கொடுத்தாதான் காரியம் கொஞ்சமாவது நடக்கும். ஒவ்வொரு முறை இந்த இடம் ஒருத்தருட்ட இருந்து அடுத்தவனுக்குக் கைமாறும் போதும், இடத்தோட மதிப்புல பத்துல இருந்து இருவது சதவீதம் கவர்மெண்ட்க்கு வரி கட்டிதான் நம்ம பேருக்குக் கிரயம் பண்ணமுடியும். அப்படி இருந்தாலும் அதுல நம்ம இஷ்டப்படி ஒரு வீட்டக் கட்ட நம்மால முடியாதாம். அதைவிட ஒரு கொடுமை என்னன்னா, தண்ணிக்குன்னு போர் ஒன்னு போட்டேன். அதுக்கு கரண்டு கனெக்சன் வாங்கப் போனா, அம்பது மீட்டர் தூரத்துல வாய்கால் ஒன்னு இருக்குன்னு சொல்லி, பி.டபுல்யூ.டி ஆப்பீசுல நோ அப்சக்சன் சர்டிபிக்கேட்டு ஒன்னு கேட்டான். இதுல காமெடி என்னன்னா, அவன் வைச்சுருக்கிற மேப்ல இருக்கிற வாய்கால் நிஜத்தில எங்க இருக்குன்னு அந்த ஏரியாவுல இருக்கிற யாருக்குமே தெரியல. வேலூர்ல இருக்குற வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் போய், பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசி வாங்குன பின்னாடிதான் இந்த தோசம் தீர்ந்து, அந்த அப்ரூவல் கிடைச்சுது எனக்கு. ஏழாவது பந்தி சாப்பாடு போய்கிட்டு இருக்கும்போது பாயாசம் தீர்ந்து போச்சுன்னும் அதுக்கு பதிலா சாப்பிட வர்ர எல்லாருக்கும் ஐஸ்கிரீம் கொடுக்கணுமுன்னும் அவ வந்து மூக்க உறிஞ்ச, இல்ல இல்ல, என் ரெத்தத்த உறிஞ்ச ஆரம்பிச்சுட்டா. பக்கத்தில கடை எதுவும் இல்லாததால மாப்ளைய கூப்ட்டு வண்டியக் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கிவர அனுப்ப, அந்த நேரத்துல கவர்மெண்டு வண்டி ரெண்டு வந்து நின்னுச்சு. அதில இருந்து இறங்குன ஆபீசர்களை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. கிரகப்பிரவேசப் பத்திரிக்கையும் கொடுக்கல. வந்தவங்கள்ல நாலு பேர் அளக்கிற டேப் ஒன்ன எடுத்து, ரோட்டுல இருந்து என் வீடு வரைக்கும் அளந்து பார்த்துட்டு, பின்னாடி இருக்கிற அடுப்படி வரைக்கும் இடிக்கணும், ரிங்ரோடு அகலப்படுத்துறதுக்கு ஆடர் வந்துருச்சு, அடுத்த மாசம் வேலை ஆரம்பிக்கப் போகுது, ஆபீஸ்க்கு வந்து என்னைப் பாருங்கன்னு சொன்னாங்க. மூக்க உறிஞ்சுகிட்டு பக்கத்துல நின்னவ, மூச்சப் பிடிச்சுக்கிட்டு அப்படியே சரிஞ்சுட்டா. எனக்கு ரெண்டு மணி நேரம் என்ன நடந்துச்சுனே தெரியாது. முழிச்சுப் பாக்கும்போது ஏதோ எழவு வீட்டுல இருக்குற மாதிரி ஒப்பாரிச் சத்தம் கேட்டுக்கிட்டு இருந்துச்சு. நாலு வருசத்துக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு அப்ரூவல் கொடுக்கும்போது இந்தமாதிரி பிராஜெக்ட்லாம் இல்லையாம். இப்ப கவர்மெண்ட்டே மாறிருச்சு, சிட்டியும் பெருசாயிருச்சுன்னு ஏதேதோ சொல்ல, எத்தன சாமிக்கு என்னென்ன பரிகாரமெல்லாம் செஞ்சு ஒழுங்கா நியாயமா ஒழச்சுக் கட்டுன வீட்டுல முழுசா ஒருநாள்கூட இன்னும் குடிபோகல. அதுக்குள்ள இந்த மாதிரி நடக்குதுன்னு அத்தனை சாமி மேலயும் கொலவெறி வந்துருச்சு. ஓன் ஹவுஸ்க்கு கிரீன் சிக்னல் போட்டு ஆரம்பிச்சு வச்ச, அந்த அழகர்கோயில் மலை மேல ஒய்யாரமா உக்கார்ந்து இருக்குற பழமுதிர்ச்சோலை முருகன நேருக்கு நேர் பார்த்து, நறுக்குன்னு நாலு வார்த்தை கேக்கணுமுன்னு பொஞ்சாதி புள்ளைகள கூட்டிகிட்டு வந்து சேர்ந்தேன். அங்கே ரோடுலாம் புதுசா, அகலமா, வண்டிங்க வசதியா போய் வர்ற மாதிரி போட்டிருந்தாங்க. நாங்க வேண்டுதலுக்காக அடுக்கி வைச்ச அந்த ஏழு கல்லு எங்கன்னு தேடினோம். எல்லாரும் வேண்டுதலுக்கு கல்லு அடுக்கி வைக்கிற இடத்தை எல்லாம் எடுத்துதான் இங்கயும் ரோட்ட அகலமா போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுது. நிரந்தரமா குடி இருக்கறவங்களவிட அப்பப்ப வந்து போறவங்களோட வசதிதான் கவுருமெண்ட்டுக்கு முக்கியம்னு அப்பத்தான் எங்களுக்குப் புரிஞ்சுச்சு.

சிறுகதைகளின் பேரரசன்

சிறுகதைகளின் பேரரசன்

ஆன்டன் செகாவ் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சுவை, பயன், காலத்தை வெல்லும் தன்மை, பிறந்த இடத்திலே மட்டுமல்லாமல் செல்லும் இடமெங்கும் சிறப்பும் புகழும் பெறுகின்ற தன்மை ஆகிய பண்புகள் ரஷ்ய இலக்கியத்திற்கு உண்டு. மாளிகையிலே மதோன்மத்தராக இருந்தவர்களுக்கு, மாளிகை வாசம் பெற்ற பேனா தூக்கித் தந்த களிப்பு பானம் அல்ல ரஷ்ய இலக்கியம். பசியுடனும் பட்டினியடனும் பாதகருடனும் பாதிரியுடனும் போராடிச் செத்துக்கொண்டிருந்தவர்களுக்காகத் தீட்டப்பட்டது தான் ரஷ்ய இலக்கியம். புதியதோர் உலகு எழ, விழிப்புறச் செய்ததன் மூலம் உலகெங்கும் உயரிய இடம் கிடைத்தது ரஷ்ய இலக்கியத்திற்கு. அந்த வகையில் உலகச் சிறுகதை எழுத்தாளர்களில் முன்னணியில் நிற்பவன் ஆன்டன் பாவ்லோவிச் செகாவ் ஆவான். பிரெஞ்சு இலக்கியத்தை மாப்பசான் எந்த அளவிற்கு அலங்கரிக்கிறானோ அதற்கும் மேம்பட்ட அளவிற்கு ரஷ்ய இலக்கியத்தை அழகு செய்பவன் செகாவ். ரஷ்ய இலக்கியத்தின் பூர்த்தி செய்யப்படாத சிறுகதை மண்டபத்தை ஆடம்பரமாக, கம்பீரமாக எழச் செய்தவன் அவனே. தென் ரஷ்யாவில் உள்ள டாகன் பெர்க் என்ற நகரத்தில் 1860ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிறந்தான் செகாவ். அவனது தந்தை பால் செகாவ், ஒரு பலசரக்குக் கடைக்காரர். அவனது தந்தை வணிகம் செய்ததோடு, உலகைப் பற்றிய நல்ல அறிவையும் பெற்றிருந்தார். பரந்த மனப்பான்மையோடு இருந்த தன் தந்தையின் எண்ணம் நிறைவேறும் வகையில், நன்கு படித்துப் பள்ளி வாழ்க்கையில் வெற்றி கண்டான் செகாவ். வணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக, செலவுக்கு ஏற்ற வருமானம் இல்லாது போயிற்று. ஆகவே, 1876இல் அவனது தந்தை மாஸ்கோவிற்கு இடம்பெயர்ந்தார். மீதி இருந்த பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு 1879இல் ஆன்டன் செகாவும் மாஸ்கோ சென்றான். அங்கே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, 1884இல் மருத்துவரானான். மாஸ்கோவில் மருத்துவராகப் பணிபுரிந்தாலும் அறியாமை நிரம்பிக் கிடந்த ரஷ்யாவில், அறிவின் மதிப்பை உணர்ந்து, இடையறாத தொல்லைகளைச் சமாளித்துக்கொண்டு, தன்னை அறிஞனாக்கிய பெற்றோர்களுடனே வாழ்ந்தான். மாஸ்கோ வந்தது முதலே எழுதுவதில் ஆசை கொண்டு, அவ்வேலையை ஆரம்பித்துவிட்டான். கிட்டத்தட்ட, 1884இல் மருத்துவராக வெளிவரும் பொழுது அவன் முழு வளர்ச்சியடைந்த பத்திரிக்கையாளனாக ஆகி இருந்தான். சில பொழுதுபோக்குப் பத்திரிகைகளுக்குக் கேலிச் சித்திரங்களை வரைந்து வந்தான். அதனால் ஓரளவு வருமானம் கிடைத்தது. 1886இல் அவனுடைய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து, சேர்த்து ஒரு நூல் வெளிவந்தது. அந்த நூல் மக்களின் மனதைக் கவர்ந்தது. அதிகமான பிரதிகளை அச்சேற்றிய மாஸ்கோவின் தினசரிப் பத்திரிக்கையின் ஆசிரியர்களான கிரி கரோவிச், சுவோரின் என்கிற இரண்டு இலக்கியத் தலைவர்களின் கண்களில் அது பட்டு கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு செகாவின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாறுதல் ஏற்பட்டது. அவ்விரு பத்திரிக்கை ஆசிரியர்களும் செகாவைத் தங்கள் தினசரிப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டனர். செகாவின் கதைகளைப் பிரசுரிப்பதற்கு வார இலக்கிய ஏடு ஒன்றை ஆரம்பித்தனர். இவ்வாறாக, பொழுதுபோக்கு இலக்கியத்திலிருந்து உண்மை இலக்கியத் தளத்திற்கு வந்து சேர்ந்தான் செகாவ். 1886 – 1887 ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடைந்த நிலையில், அருமையான சிறுகதைகளை எழுத ஆரம்பித்துவிட்டான் செகாவ். இதே ஆண்டுகளில் நல்ல முறையிலே ஓரங்க நாடகங்களும் எழுதினான். இதனால் அவனது புகழ் வெகு விரைவில் ஓங்கியது. அவனுடைய இலக்கிய வருமானம் அவன் குடும்பம் முழுவதையும் நல்ல நிலையில் வைக்கும் அளவிற்கு வளர்ந்தது. 1890இல், செகாவ் சைபீரியாவை நோக்கிப் பயணம் செய்தான். அந்தக் காலத்தில், பெரிய சைபீரிய ரயில்வே கிடையாது. இருப்பினும் மிகுந்த சிரமத்துடன் ஆவலோடு பிரயாணம் செய்தான். திரும்பி வரும்போது சீனக் கடல் வழியாக இலங்கையைச் சுற்றி வந்து, ரஷ்யாவை அடைந்தான். ரஷ்யாவிற்கு வந்தவுடன் சைபீரியாவிலும் கீழ்க் கோடியிலும் குற்றவாளிகள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்பங்களைத் தனது எழுத்தில் வடித்து, அவற்றைப் போக்க சீர்திருத்த யோசனைகளையும் கூறி ஒரு புத்தகம் எழுதினான். இந்த எழுத்தின் காரணமாக 1892இல் சிறைச் சீர்திருத்தங்கள் பல செய்யப்பட்டன. அவனது எழுத்து வன்மை, நிறைய பணத்தை அள்ளித்தந்தது கைக்கு வந்த பணத்தை எல்லாம் பொதுநலம் குறித்துச் செலவு செய்தான். தான் பிறந்த ஊரான டாகன் பெர்கில், ஒரு நூல் நிலையம் மற்றும் பொருட்காட்சிச் சாலை அமைப்பதற்குப் பொருளுதவி செய்தான். 1892 – 1893 இல் காலராவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக இலவசமாக மருத்துவம் பார்த்தான். 1897இல் காசநோயால் பாதிக்கப்பட்டான். நோய் குணமாவதற்காக, அந்த ஆண்டே காகசஸ் மலைப் பகுதிக்குச் சென்றான். அன்று முதல் அவன் சாகும் வரை காகசஸிலும் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் வாழ்ந்தான். மக்களின் ஊழல்கள், போலி வாழ்க்கை, சிறுமை முதலியவற்றை எல்லா இடங்களிலும் பார்த்து வந்ததால், இவருக்கு மனித சுபாவத்திலேயே நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. இந்த அவநம்பிக்கை அவருடைய இலக்கியம் முழுவதும் பிரதிபலிக்கிறது. புஷ்கின், துர்கனேவ், செகாவ் ஆகியோரால் ரஷ்ய மொழி வளர்ச்சி அடைந்தது. ரஷ்ய மொழி இவர்களால்தான் சிருஷ்டிக்கப்பெற்றது என்று எதிர்காலத்து இலக்கிய, சரித்திர ஆசிரியர்கள் சொல்வார்கள் என்று மாக்ஸிம் கார்க்கி செகாவைப் பற்றிப் புகழாரம் சூட்டுகிறார். ரஷ்ய வசன இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா, உண்மை ரஷ்யாவை மக்கள் முன் வைத்தவனான நிக்கோலி வாஸ்ஸிலி விச் கொகேல், காந்தியின் குரு, உலகம் முழுவதும் உயர்ந்த எழுத்தாளன் லியோ டால்ஸ்டாய், விடுதலை கீதத்தை பரப்பிய தியோடர் டாஸ்டாவஸ்கி ஆகியோர் இவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். 400க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் செகாவ். சொந்த வாழ்க்கையிலும் படைப்பிலும் காதலே அவரது ஆதாரப் புள்ளியாக இருந்தது. ‘பிணத்திற்குத்தான் ஆறடி நிலம் வேண்டும்; மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது. உயிருள்ள மனிதனின் தேவையும் இறந்தவனின் தேவையும் ஒன்றில்லை’ என்ற இந்த வார்த்தைகள், வாழ்வின் மீதான செகாவின் பற்றுதலின் வெளிப்பாடாக உள்ளன. உப்புச் சப்பற்ற, சலிப்புமிக்க, அர்த்தம் புரியாத, துயரம் நிறைந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை, தனது கதைகளில் சுவாரசியமாக வர்ணிக்கும் திறன் மிகுந்தவர். வேறு எந்த எழுத்தாளனாலும் இவரைப் போல் வர்ணிக்க இயலாது. வாழ்வின் அத்தனை அம்சங்களையும் தனக்கே உரிய மாறுபட்ட கோணத்தில் அவரது கதைகள் கொண்டிருக்கின்றன. லியோ டால்ஸ்டாய், தியோடர் டாஸ்டாவஸ்கி ஆகியோர் நாவல்களில் செய்திருக்கும் சாதனையை, இவர் தனது சிறுகதைகளில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். தன் எழுத்தை நம்பகத் தன்மையுடனும் துல்லியத்துடனும் கட்டமைக்கும் ஒரு தொழில்நுட்ப நிபுணன் எழுத்தாளன் என்ற சித்திரத்தை இலக்கிய உலகிற்கு அளித்தவர். செகாவ் தனது கதைகளின் மீதான விமர்சனத்தை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. அதுபற்றிக் கூறும்போது, ‘உழுதுகொண்டிருக்கும் குதிரையை அனாவசியமாகத் தொல்லைப்படுத்தும் ஈயைப் போல விமர்சகர்கள் இருக்கின்றனர்’ என்கிறார். சிக்கலான மனித உணர்ச்சிகளை விவரிப்பதில், மக்களின் உருவ அமைப்புகளை அப்படியே ஓர் ஓவியர் போலச் சித்தரிப்பதில் கைதேர்ந்த ஆன்டன் செகாவ் நினைவு தினம்  (15. 07. 1904) இன்று.

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

நா. முத்துக்குமார் பிறந்தநாள் நினைவுக் கவிதை சிறகு முளைத்த சிறிய காலங்களில்வான் உயரப் பறந்த உன்னைஇன்னும் பாடலில்தான் தேடுகிறோம்பறவையே எங்கு இருக்கிறாய்? கணையாழியில் ‘தூர்’எழுதிசுஜாதா காதல் கொண்டுமென்பூவாய் மேல் வந்தபறவையே நீ எங்கு இருக்கிறாய்? அம்மையை எழுதி எழுதிஅப்பனுக்குப் பிள்ளையாகி‘ஆனந்த யாழை’ மீட்டியபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘அணில் ஆடும் முன்றிலில்’மகனுக்குக் கடிதம் எழுதிவிட்டுஅத்தைகளின் உலகம் போனபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘தெய்வங்கள் எல்லாம்தோற்றே போகும்’தான்உன் மகன் உனக்கு எழுத என்ன செய்வான்?வார்த்தைகளையாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? எழுத்து பழகி எங்களைப் பழகிசத்தம் இல்லாமல் அதிகாலை முத்தம்போல் கடந்தஉன் காதல் கவிதைக்குத் துணை தேடுகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘உனக்கொரு தொட்டில் கட்டிநானே தாயாய் மாறிட வேண்டும்’ என்று சொன்னாயேஉன் தாலாட்டில் நாங்கள்ஆண் தாயாக உறங்குகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘வெயிலோடு உறவாடி’ பால்யத்தையோ சொன்னாய்வேறெங்கு உனக்கு உறவு?வா விளையாடுவோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘விழிகளில் ஒரு வானவில்இமைகளைத் தொட்டுப் பேசுதே’ என்றாய் நீ இல்லாமல் சிறு புல்லின்மீது விழுந்தபனித்துளியாய் இருக்கிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? “கனாக் காணும் காலங்கள்’ இல்லாமல்இனி காதலிக்க முடியுமா இந்தத் தலைமுறை?பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘உனக்கென இருப்பேன்’ என்று முடித்திருக்கலாம்‘உயிரையும் கொடுப்பேன்’ என்றாய்‘வார்த்தைகள் இல்லை என்றால்உன் மவுனங்கள் போதும்’ என்றபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘சுற்றும் விழிச் சுடராய்‘மண்ணை உண்ணும் பூக்கள்’ வரைந்த உன்னைவிழுங்கிய உலகில் தேடுகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘ஒரு பாதி கதவு நீயடி’ என்றுதாண்டவம் ஆடியபறவையே நீ எங்கு இருக்கிறாய்? “உன் பேரைச் சொல்லும்போதேஉள் நெஞ்சில் கொண்டாட்டம்..உன்னோடு வாழத்தானே எந்நாளும் போராட்டம்’ என்றபறவையேஇன்னும் கொஞ்சம்போராடியிருக்கலாம் அல்லவா?

யாவரும் கேளிர்?!

யாவரும் கேளிர்?!

சிறுகதை “குழந்தைக்குக் காய்ச்சல் கொதிக்குது. மருந்து கொடுத்தியா.. இல்ல சீரியல் பாத்துட்டு மறந்துட்டியா?” கேட்டுக்கொண்டே உடை மாற்றும் வேலையில் மும்முரமானார் ரவி. “ரொம்பத்தான் அக்கறை.. மில்லுக்குப் போனா குடும்பத்தை மறக்கற ஆளு.. என்னைய சொல்லாதீங்க. எல்லாம் என்னோட கிரகம். அப்புறம் பேசி என்ன பிரயோசனம்..” பதிலுக்குப் பொருமினார் மங்களம். “அடேங்கப்பா! கரடிவாவிகாரிக்கு வாயப்பாரு.. உன்கிட்ட போட்டி போட முடியுமா? ஊருக்குள்ள நடக்கிற அத்தன கூட்டத்துலையும் பேச்சால துவம்சம் செய்யும் எனக்கு, வீட்ல நேர் எதிர்தா போ..” என்று, ஆரம்பிக்க இருந்த சண்டையை விளையாட்டாக மடைமாற்றிவிட்டு, நிற்காமல் மெல்ல நழுவினார் கொல்லைப்பக்கம். ரவிக்கு திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணி. கம்பீரமான தோரணையும் தெள்ளத் தெளிவான பேச்சும் நேர்மையான நடத்தையும் ரவியைத் தொழிற்சங்கத் தலைவராக உயர்த்தின. ஊதிய உயர்வு, பணி நீட்டிப்பு, போதாக்குறைக்கு வடமாநிலத் தொழிலாளர்களால் பணியிழப்பு என, போராடக் காரணங்களா இல்லை?! போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் முழக்கங்களும் முதலாளிகளுடனான மோதல்களும் தொழிற்சங்கத் தலைவர் ரவியை, சக தோழர்களுக்குப் போராளியாய் அடையாளம் காட்டின. குறிப்பாக, வடமாநிலத்தவரைப் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு சிம்ம சொப்பனமாகினார் ரவி. எல்லாரிடமும் இனிமையாகப் பழகும் பண்புடையவர். ஆனால் வடமாநிலத்தவரைக் கண்டால் அத்தனை வெறுப்பு அவருக்கு. “இந்த வடக்கனுங்க குறைஞ்ச கூலிக்கு வேலை செய்றதால, நம்மாளுக எத்தன பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க?! நம்ம கோட்டியப்பன், தொழில்ல அனுபவமிக்க ஆளு. பழைய ஆளுக்கு சம்பளம் அதிகமா கொடுக்கணும்னு நிறுத்திட்டு, அவரு சம்பளத்துக்கு இரண்டு பேர வேலைக்கு வைச்சுட்டான் இந்த பாழாப்போன கம்பெனிக்காரன். வேலை போன கவலையில, ஆளே போயிட்டாரு. அவருகூட வயசான ஆளு.. நம்ம பீட்டர் பொண்டாட்டி.. வேலையில்லாதவன்கூட வாழ மாட்டேன்னு, குழந்தைய தூக்கிட்டுப் போயிடுச்சு. நம்ம மில்லு வேலைனுதான்னு இல்ல; தமிழ்நாட்டுக்குள்ள எந்த வேலைக்குப் போனாலும் இவனுகதா இருக்கானுங்க. தொழிற்சங்கத்துக்குப் போனா தொழிலாளிகளோட புலம்பல கேக்கவே அத்தன விசனமா இருக்கு. அவங்க ஊர்லயே இருக்க வேண்டியதுதான? இங்க வந்து உயிரெடுக்குறானுங்க பீடா வாயானுங்க.. ச்சே! அவுங்க ஊர்ல யோசிக்காம ஓட்டுப்போட வேண்டியது; அப்புறம் வேலையில்ல, தண்ணியில்ல,பஞ்சம்னு இங்க வந்து நம்ம வேலைக்கு ஆப்பு வைக்க வேண்டியது..” என நார்த் இண்டியன்களை நாறுநாறாய் கிழிப்பார். இத்தனைப் பிரதாபங்கள் கொண்ட நம்ம மாவீரர்தான், இப்போது பொஞ்சாதிக்குப் பயந்து கொல்லைப்பக்கம் ஓடியுள்ளார். சரி.. ‘ஊருக்கு பருப்பா இருந்தாலும் வீட்டுக்குத் தொடப்பக்கட்டதானே?!’ “ஐயோ.. என்னங்க.. ஓடியாங்க. குட்டியப் பாருங்க..” என மரகதம் போட்ட கூச்சலில், தெருவே கூடியது. வலிப்பால் துடித்துக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். “அதிகக் காய்ச்சலால் குழந்தைக்கு வலிப்பு வந்துள்ளது. ஈரத்துணியால் சுற்றப்பட்டு குழந்தை நலமாக உள்ளது. ஊசி போடப்பட்டுள்ளது. இன்று இரவு மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவிட்டு, காலையில் போய்க் கொள்ளலாம்” என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவசர அலாரம் மருத்துவரின் அறையில் ஒலித்தது. பேசிக்கொண்டிருந்த மருத்துவர் அறையைவிட்டு வெளியே ஓட, ரவியும் பின்தொடர்ந்தார். தலையிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட, பதின்ம வயது இளைஞன் ஒருவன் ஸ்டெச்சரில் கிடத்தப்பட்டு, பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது ரவிக்கு. உடன் வந்தவர், “சார், சீக்கிரம் பாருங்க சார்” என பதைபதைத்தார். அவசர சிகிச்சை அறைக்குள் அந்த இளைஞனோடு உள் சென்றார் மருத்துவர். அந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் பாதியில் விட்டுச் சென்ற மருத்துவருக்காகக் காத்திருந்தார் ரவி. வரவேற்பறைக்கு நேர் எதிராக அமைந்த அவசர சிகிச்சை அறையின் கதவைத் திறந்து மூடும்போது உள்ளே நடப்பவற்றையும் பேசுவதையும் ரவியால் தெளிவாகக் கேட்க முடிந்தது. இதற்கிடையில் அந்த இளைஞனை அழைத்து வந்தவர், மதுபோதையில் இருந்த சில இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்வதைக் கவனித்த ரவி, அவருக்கு உதவ அருகில் சென்றார். “என்னங்க பிரச்சனை? என்ன ஆச்சு?” என ரவி கேட்கத் தொடங்கியபோது, மருத்துவர் இவர்களை நோக்கி வேகமாக வந்தார். “அந்தப் பையன் கூட வந்தது யாரு? காயங்களைப் பார்த்தா ஆக்ஸிடண்ட் மாதிரி தெரியல. என்னாச்சுனு அவனைக் கேட்டா இந்தில என்னமோ சொல்றான்..” என்றார். “சார் இந்த நாலு பேரும் அந்தப் பையன அடிச்சுட்டாங்க. நான்தான் தடுத்து இங்க கொண்டு வந்தேன்.” “அப்போ போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாமா?”டாக்டர் கேட்டவுடன் அந்தக் குடிபோதை ஆசாமிகள் காலில் விழுந்து கதறத் தொடங்கினர். “சரி.. நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு, டாக்டர் திரும்ப அறைக்குத் திரும்பினார். ரவியை நோக்கித் திரும்பிய அவர், “அடிபட்ட பையன் வேலை செய்யுற ஹோட்டல்ல நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்; இவங்க நாலு பேரும் வந்ததுலயிருந்து குடிபோதையில பிரச்சனை பண்ணிட்டுதான் இருந்தாங்க. தமிழ் தெரியாத இந்திக்காரப் பையனைக் கூப்பிட்டு, தமிழ்ல ஏதோ சொல்லச் சொன்னாங்க. அவனுக்கு புரியல; திருதிருன்னு முழிச்சான். அவனை கையில் கிடைத்ததை வச்சு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க சார். நல்லவேளையா நான் போய்த் தடுத்தேன். இல்லைன்னா குடிபோதையில் இருந்த இவனுக, அடிச்சே கொன்னுருப்பானுக, பாவம். மொழி தெரியாதனால இவங்க சொன்னதுக்கு பதில் சொல்ல முடியாம இருந்த பையன, ‘பதில் சொல்ல மாட்டியா?’ன்னு கேட்டுக் கேட்டு அடிச்சத பார்க்கவே கொடுமையா இருந்தது சார். என்ன கஷ்டமோ.. சொந்த ஊரு, சொந்த பந்தங்களை விட்டு நம்ம ஊரை நம்பி வராங்க. அவங்களுக்கு உதவி செய்யாட்டியும் பரவால்ல. கஷ்டம் கொடுக்கக் கூடாதில்ல சார்.. இவனோட முதலாளிக்கு இவனோட பேருகூடத் தெரியல. குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ற அடிமையாகத்தான் நினைக்கிறாங்க, பாவம். இதுல, ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ன்னு சொல்லிப் பெருமைப்பட்டுக்கிறோம்.” அவர் சொன்னது, ரவிக்கு நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற உண்மை மெல்லப் புரிந்தது, தொழிற்சங்கத் தலைவர் ரவிக்கு.

வலிகள்

வலிகள்

கவிதைகள் பிரிவு மிகவும் ரசித்துத்தான்எழுதிக்கொண்டிருக்கிறேன்நம் பிரிவையும் இணைந்திருந்தஇனிப்புத் தருணம் பரிசளித்தஅதே அடிவயிற்றுச் சில்லிடல்இதிலும் நேர்கிறது இதயம் படபடக்கஉடலெங்கும் அதிவேகமாய்ஓடிய புதுக்குருதிஇப்போதும் பாய்கிறது சொற்களற்றுத் தடுமாறிகண்களால் மட்டும்பேச முடிந்தது போலவேஇப்போதும் நடக்கிறது மழைநாளின் சிறு தூறல்நாம் ஒன்றென உறுதி சொல்லிஆசிர்வதித்தது போன்றேநாம் வேறுவேறெனச் சொல்லவும்சாரலை அனுப்பியுள்ளது இயற்கை எனக்குள் இறங்கிய உன்னையும்உனக்குள் புதைந்த என்னையும் மட்டுமேகாணவில்லை என்பதைத் தவிரபிரிவுக்கும் இணைவிற்கும்பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லைதானே? கற்கள் காலம் வாழ்வை அகழ்ந்தெடுத்துசந்தோஷங்களை சலித்துப்பிரித்தெடுக்க முயல்கிறதுஒரு கூட்டம் வறண்ட எண்ணங்களைக்குழைத்தெடுக்கவெனஎப்போதாவது வரமாய் வாய்க்கிறதுஒரு காதலும் சிறு கூடலும் அவ்வப்போது கிடைக்கும்தேநீரின் சுவையைநேர்த்தியான துண்டுகளாக்கிஅடுக்கிவிட இயலுகிறதுஅவர்களால் கிளர்ந்தெழும் ஆசைகளைவெயிலில் இட்டுஇறுகச் செய்துவிடமனம் வாய்த்திருக்கிறது மொத்தத்தில் சூளையில் இட்டுஇவர்கள் சுட்டெடுப்பதுசெங்கற்களோடு சேர்த்துசொந்த ஊர் நினைவுகளையும்தான் சொற்களின் வலி என்ன சொல்லாடல்கள்எதிர்பார்க்கிறாய்என் கவிதையில் பசித்துக் கிடக்கும் வயிறுகள்தவித்து நிற்கும் அகதிகள்கொதித்து எரியும் போர்முனைஉடல்கள் ஒதுங்கும் கடற்கரைஒருமுறை கண்டு வா வார்த்தைகளற்றுப்போய்தொண்டை அடைக்கநெஞ்சில் உருளும் பாறை நசுக்கிவெளிவரும் சொற்களில்ரத்தக் கவுச்சியன்றிபன்னீரின் மணமாமுகரக் கிடைக்கும்?