கவிதைகள்
- நீயோ உறங்கிப்போய்விட்டாய்
நிலவும் இரவும் இன்னும்
விழித்திருக்கின்றன.
கிறக்கத்துக்கும் மயக்கத்துக்கும்
இடையிலான திரிசங்கில்
ஊடாடுகிறேன் நான்
- தேனூறும் நிலவோடும்
காதோரம் இசையோடும்
எத்தனை நேரம் இவ்விரவில்
எனக்குத் தனிமையைச் சபிப்பாய்.
அவ்விரண்டில் எழும்
மோகத்தை சமன் செய்யும்
உன்னிரண்டு தனங்களை
நானெப்போது சேர்த்தணைப்பது?
- கால மயக்கத்தில்
இரவைத் தன் அலகிற்கவ்வி
அங்குமங்கும் மாறிமாறிப்
பறக்கிறதொரு ஆக்காட்டி.
அஃதெழுப்பும் அரற்றல்கள்
தழுவவுனைத் தேடியரற்றும்
என் மோகத்தின்
ஓசைகளை ஒத்திசைக்கின்றன
- நதியலைகளின் மீதொரு தக்கையென
மிதந்தாடுகிறது நிலவு
தூண்டிலோ உன் கையில்.
முள் தொங்கும் புழுவெனவும்
புழு கவ்வும் மீனெனவும்
இரட்டுற உருக்கொள்கிறது
உன்மீது நான் கொண்ட மோகம்
- விடியாமல் தவித்து
நீளும் இவ்விரவும்
தணியாமல் தவித்துத்
துடிக்குமென் மோகமும்
சமநிறைப் பொருட்களாய்
உன் தராசுத் தட்டுகளில்.
எதைக் கொள்வாய்?
எதைக் கொடுப்பாய்?
- சுரேஷ் பரதன்

Gomathi Sankar Gosar
July 29, 2023எத்தனை அழகான சொல்லாடல்.. சபாஷ் பரதன்..
Anita Srikanth
July 29, 2023வணக்கம் சுரேஷ் அண்ணா..
//முள் தொங்கும் புழுவெனவும்
புழு கவ்வும் மீனெனவும்
இரட்டுற உருக்கொள்கிறது
உன்மீது நான் கொண்ட மோகம்//
எவ்வளவு ஏக்கம்…அதை எவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க….
உங்க கவிதை ரொம்ப அழகா இருக்குண்ணா..