சந்தன வாசனை தோய்ந்த தமிழ்த்தேன்..

மாலை கனிந்து இருட்டு மெல்ல அந்த மலைக் காட்டு முகப்பில் எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கையில் கபிலரும் அவர் சீடன் மாறனும் உரையாடிக் கொண்டே உலா வந்தனர். சற்றுத் தூரத்தில் மர மறைவில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி மலைநாடன் மகள் என்று கபிலர் அறிவார். இன்னொருத்தி அவளின் தோழியாக இருக்க வேண்டும்..

கபிலர் பேச்சை நிறுத்தி அவர்கள் தனிமையைத் தொந்தரவு செய்யாது அவர்களைத் தாண்டிப் போய்விடுவோம் என்று சீடனிடம் சைகை செய்ய, இருவரும் சந்தடி இல்லாமல் மெல்ல அவர்களைக் கடந்து போகையில் அவர்கள் மென் குரலில் பேசிய சொற்களும் அவர்கள் காதில் விழத்தான் செய்தன.

தோழி : உன் தோள்கள் மெலிந்துவிட்டன.. தூக்கமில்லாது கண்கள் சிவந்திருக்கின்றன. களவு தெருவுக்கு வருமுன்பு உன் காதலனைத் தாமதம் செய்யாது வீட்டில் மணம் பேசச் சொல். உன்னவர் நம்பிக்கையானவர்தானா..?

தலைவி : அடியே.. யாரைச் சொன்னாய்..? அவர் சொன்ன சொல் மாறாது நிற்பவர். அதனால்தான் அவர் எனக்கு இனித்துக்கொண்டே இருக்கிறார்.. அந்த சந்தன மரத்தின் உச்சியில் தேன்கூடு உள்ளதைப் பார்த்தாயா..? அந்தத் தேனீக் கூட்டத்தைப் பார்.. பக்கத்துப் பொய்கையில் தாமரைத் தாதுவையும் ஊதிவிட்டு இந்த சந்தனத் தாதுவையும் ஊதுகின்றன.. இப்போது கூட்டுத் தேனடையிலிருந்து தேன் துளி விழுந்தால் அது எத்தனை வாசனை தோய்ந்து வரும்.. எமது சேர்க்கையும் அவ்விதமே.. உயர்ந்தோர் கேண்மையும் உயர்வானதே..

தோழி : இவ்வளவு நம்பிக்கையா அவர் மீது..! நல்லது.. நம்பிக்கை சீக்கிரம் பலிக்கட்டும்..

தலைவி : வான்மழை இல்லாது வையகம் தழைக்குமோ..? அவரில்லாத என் நிலைமையும் அஃதே.. அவர் சொல் தவறார்.. சீககிரம் வந்தென்னை சேர்ந்தணைவார்.. சந்தனம் தோய்ந்த தேனாக நான் ஆவேன்..

அவர்களைக் கடந்து சென்ற பின்னும் மௌனம் கலைக்காமல் நடந்தார் கபிலர். சீடன் அறிவான்.. இந்தக் குறிஞ்சிக் காதல் கபிலரின் மனத்தில் பாட்டொன்றை எழுப்பியிருக்கும் என்று..

கபிலர் : (இல்லம் நுழைந்ததும்) மாறா.. அவர்கள் பேச்சில் ஒரு செய்யுள் உதித்தது.. சொல்கிறேன்.. எழுதி வை.. இன்று பேசுவோம்..
கபிலர் சொல்ல சீடன் எழுதி வைத்தான்..

‘நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே’
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

பின்னாளில் வந்த புலவர்கள், ‘பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொன்னது‘ என்று வகைப்படுத்தி நற்றிணையில் முதல் பாட்டாய் வைத்துக்கொண்டார்கள்..
தொகுதி : எட்டுத்தொகை
நூல் : நற்றிணை
பாடல் 1
திணை: குறிஞ்சி

வள்ளுவருக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடித்துவிட்டதுபோலும்..
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்
இன்று அமையாது ஒழுக்கு
‘ என்று எழுதி பாயிரத்தில் சேர்த்துக்கொண்டார்..

அது சரி.. நற்றிணைப் பாடல் முந்தையதா..? திருக்குறள் முந்திப் பிறந்ததா..?
சங்கப் பாடல்தான் என்று எல்லாரும் சொல்லிவிட்டார்.

ஆனால் பாருங்கள், நம் இலக்கிய ஆய்வாளர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, தொகை செய்காலத்தை கி.பி.400 – 500 வரை நீட்டுகிறார்.. திருக்குறள் காலத்தை கிபி. 650க்குக் கொண்டு போகிறார்.

ஏற்றுக்கொள்வோமா..? தமிழனல்லவா..! நாங்கள் இலக்கியம் எழுதி 2000 வருடம் ஆயிற்றே..! அவர் இலக்கிய வரலாறு.. அவரோடே இருக்கட்டும்.. இந்த ஆண்டில் இன்னொரு நாள் அதைப் பேசுவோம்.

அது போகட்டும்.. நமக்கு சந்தன மணம் தோய்ந்த தேன்தான் முக்கியம்.. எப்போது கிடைத்திருந்தால்தான் என்ன..?

  • கோமதிசங்கர், திருநெல்வேலி

Comments (2)


அன்பு மணிவேல்
அன்பு மணிவேல்
January 2, 2024

சந்தன மணத்தோடு தமிழ்த்தேன் ❤️

வெகுவாக ரசித்தேன்.
தொடருங்கள் சார்.

Govindaraj R
Govindaraj R
January 6, 2024

அருமையான ஆய்வு தோழர். தமிழ் என்றும் வாழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *