சாபத்தில் பிறந்தவர்கள்
கவிதை: செ. புனித ஜோதி
நாங்கள்
நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்
எப்போதும் எங்களோடு
ஓடிக்கொண்டிருக்கிறது
கண்ணீர்
நாங்கள்
மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்
எப்போதும் குண்டு வெடிப்பில்
ஈந்து கொண்டிருக்கிறோம்
உடலை
நாங்கள்
கடலின் சாபத்தில் பிறந்தவர்கள்
உண்பதற்கும் உடுப்பதற்கும்
உறங்குவதற்கும் இடமின்றி
பரந்த தேசத்தில் தினம் தினம்
அலைக்கழிக்கப்படுகின்றோம்
அலைகளாய்
நாங்கள்
காற்றின் சாபத்தில் பிறந்தவர்கள்
மூச்சுவிடக்கூட
உரிமையற்று இருக்கின்றோம்
அத்தனையும்
மனிதமற்ற மனங்களின்
வன்மத்தில் விளைந்த
விளைச்சல்கள்
அவர்களின் ரொட்டித் துண்டுகளில்
பழக்கூழ் போலத் தடவித்தடவி
உண்டு மகிழ்கின்றனர்
எங்கள் குருதியை
காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடும்
அரசியல் ஆதிக்கத்தில்
திசைக்கொன்றாய்த் திரிகின்றோம்
செத்த பிணமாய்
ஏனெனில் நாங்கள்
திரிசங்கு நேரத்தில் பிறந்த
அகதிகள்

மர்யம்
October 19, 2023இவர்கள் சாபத்தில் பிறந்தவர்கள்இல்லை..
இறைவனின் பேரன்பைப் பெற்றவர்கள்.. அதனால் தான் எத்தனை ஆண்டுகள் பேரிழப்பைச் சந்தித்தாலும் மீண்டும் உயிர்த்தெழுகிறார்கள்.. ஆகையால்.. இவர்கள் இறைவனின் பெருங்கருணையைப் பெற்றவர்கள்..!!