ஷாம் சிங்கா ராய்
திரை விமர்சனம் சமீப காலங்களில் திரையுலகம் சமூக இழிவுகளை, மனித அவலங்களைத் துணிச்சலுடன் திரும்பிப் பார்க்க விழைந்துள்ளதும் சராசரி ரசிகர்களையும் அக்கறையுடன் அவற்றைக் கவனிக்கச் செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது, பாராட்டவும் தக்கது. அந்த வகையில், ஜங்கா சத்யதேவ் கதைக்கு, ராகுல் சாங்கிருத்தியன் அருமையாக திரைக்கதை எழுதி இயக்கி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் உடன் இரட்டைவேடங்களில் நானி நாயகனாக நடித்து, தெலுங்கில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘ஷாம் சிங்கா ராய்’. தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு. அறிமுக இயக்குனர் வாசுதேவ் கந்தா (நானி) மீது கதைத் திருட்டு வழக்காகத் துவங்கி, அந்தக் குற்றச்சாட்டை அறவே மறுக்கும் அவன், அதிலிருந்து மீண்டு வர மேற்கொள்ளும் முயற்சிகளாக விரிந்து, எதிர்பாராத முடிவாக முடிவது, அவனுக்கு மட்டுமல்ல; ரசிகர்களுக்கும் கூடத்தான். “நாங்க கேணிகிட்ட போ கூடாதுங்கய்யா” – “அப்படின்னு கேணி சொல்லுச்சா? உன் குடம் நிறையனும்னா உடனே மழை வரணும்; இல்லன்னா உனக்குள்ள தைரியம் வரணும்”, “அவங்கள்லாம் தாழ்த்தப்பட்டவங்க” – “அதுக்காக தாகமும் தாழ்ந்து போயிடுமா? அவன் தீண்டத்தகாதவன்னா, அவன் நடந்து போற பாதையில நீங்க ஏன் நடந்து போறீங்க? அவன் சுவாசிச்சு விடற காத்த நீங்க ஏன் சுவாசிக்கிறீங்க? நிறுத்திக்க வேண்டியதானே? காற்றுக்கும் நீருக்கும் நிலத்துக்கும் காப்பாற்றுகிற குணம் இருக்குமே தவிர, காவு வாங்கற குணம் இருக்காது. இது குலத்தோட காலைப்பிடித்துத் தொங்கிட்டு இருக்கறதுக்கு ரிக்வேதம் காலம் கிடையாது, சுதந்திர பாரதம்”, “இப்போ இந்தக் கேணியும் தாழ்த்தப்பட்டதுதான், அவனுக்கே சொந்தம். தாகம் இருக்கிறவங்க மொண்டு குடிங்க, சாதி இருக்குங்கிறவன் நாவறண்டு சாவுங்க. அவன் குடிசையை எரிக்கப் போனீன்னா, உன் வீடு எங்கிருக்குன்னு ஷாம் சிங்கா ராய்க்கு நல்லாத் தெரியும்” “மனுஷன மனுஷனா பார்க்காதவன் ஊரா இருந்தா என்ன, வீடா இருந்தா என்ன, என்னால இருக்க முடியாது”, ” சமுதாயத்தை மாத்தற சக்தி எழுத்தாளனுக்கு மட்டும்தான் உண்டு, நான் போகணும், நான் எழுதணும்”, “பண்டிகை ஒவ்வொரு வருஷமும் வரும், என் காலம் போனால் திரும்பி வராது” போன்ற அர்த்தபூர்வமான காட்சிகளும் வசனங்களும் அசத்தல். “இந்த உலகத்ல ஒவ்வொரு வேலையையும் ரெண்டு விதமா செய்யலாம். ஒண்ணு பயத்தோட, இன்னொன்னு காதலோட”, “தெய்வத்தின் துரோகத்தால் தேகமெங்கும் முள்ளாகி, மனமெல்லாம் தெய்வீகம் நிரம்பிய ரோஜாமலர்”, “பெண் யாருக்கும் தாசி இல்லை; தனக்குத் தாசி வேணும்னு நெனக்கிறவன் கடவுளே கிடையாது”, “ஆத்ம அபிமானத்தவிட, எந்த ஆகமும் தப்பு கிடையாது. தப்புன்னு தெரிஞ்சா கடவுளே ஆனாலும் எதிர்க்கறதுல தப்பே கெடையாது. பயந்தவங்கதான் கர்மா சித்தாந்தம் பேசுவாங்க”, “எம்.எஸ். சுப்புலட்சுமி பேரை கேள்விபட்டிருக்கியா, ஒரு காலத்தில் தேவதாசி, இப்ப பத்மபூஷன் அவார்டு வாங்கி இருக்காங்க. பரதநாட்டியத்தில் பாரத தேசத்தில் மிகப் பெரிய டான்சர் பாலசரஸ்வதி, தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்”,“பெண் யாருக்கும் தாசி அல்ல; அந்தக் கடவுளுக்கும் கூட” எந்த ஒரு சமூகத்திலே தன் பசியைப் போக்கிக்கறதுக்கு ஒரு பெண் மேலேயும் கீழேயும் இருக்கற அவயங்கள விற்கிறாளோ, அந்தச் சமூகத்தில இருக்கிற ஆம்பளைங்க, ஆம்பளைங்களே கிடையாது, பெண்கள் விற்பனைப் பொருள்கள் அல்ல” இப்படி மனதை வருடும், சிந்தையில் அறையும் வசனங்கள் படமெங்கும். காளி கோவிலில் உள்ள தேவதாசிகளில் தினமொருவளை சுகித்து வரும் தலைமை அர்ச்சகர் மஹந்தாவிடம், “யார் வேணா தொட்டுப் பார்க்கறதுக்கு நாங்க கோயில்ல உள்ள தூண்கள் கெடயாது, மானமுள்ள மனுஷிங்க. எங்க மேல யாருக்கும் உரிமை கெடயாது, அந்த தெய்வத்துக்கும் கூட” என்று ரோஸி சொல்ல, “நீ கடவுளுக்குத் தாசி கிடையாது; எனக்குதான் தாசி” என்று சொல்லி, ரோஸியைப் பல பெண்களுக்கு மத்தியில் கடுமையாகத் தாக்கி, மனுசாஸ்திரம் பாதுகாப்பில் பூணூலைக் காதிலே சுற்றி, அவள்மீது சிறுநீர் கழித்து அவமதித்த மகாதேவ் மஹந்தாவின் ஆணுறுப்பை, காளி சிலை கையில் இருந்த அரிவாளைக் கொண்டு அறுத்தெறிந்து, அவனை நெருப்புச் சட்டியில் ஷாம் சிங்கா ராய் எறியும் காட்சி புல்லரிக்கச் செய்கிறது. வித்தியாசமான உருவ அமைப்பில், உடல் மொழியில், இருவேடங்களில் நானியும், வயது வித்தியாசங்களில் சாய்பல்லவியும், பக்குவப்பட்ட சிறப்புக்குரிய நடிப்பை வழங்கியுள்ளது அருமை. இருவருக்குமே திரை வாழ்க்கையில் இப்படம், குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமையலாம். க்ருத்தி ஷெட்டி (காதலி கீர்த்தி), மடோனா செபாஸ்டியன் (லாயர் பத்மாவதி), நண்பன் பிரமோத் (அபிநவ் கோமடம்), உளவியல் நிபுணர் (லீலா சாம்சன்), ஜிசு சென்குப்தா (தேபேந்திர சிங்கா ராய்), ராகுல் ரவீந்திரன் (மனோஜ் சிங்கா ராய்), முரளி சர்மா (அட்வகேட் கிருஷ்ணமூர்த்தி), மனீஷ் வத்வா (மகாதேவ் மஹந்த்), சுபலேகா சுதாகர் (நீதிபதி) ஆகிய கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே செய்துள்ளனர். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக, சாய் பல்லவி நடனக் காட்சிகள், நானியின் சண்டைக் காட்சிகள், பரந்த கங்கை நீர் நிலை, கொல்கத்தா காளிகாட் (செட்) நகரம். மிக்கி ஜே மேயரின் பின்னி எடுக்கும் பின்னணி இசையும், ஈர்க்கும் பாடல்களும் சிறப்பு. பழுதில்லாத படத்தொகுப்பு, நவீன் நூலி. கதைத் திருட்டு புகாரின்பேரில் கைது செய்வது எல்லாம், சற்று அதீதம். அறிவியல் ரீதியான பாலி கிராப் முறையை ஏற்கும் சாட்சிகள் சட்டம், அதே ரீதியிலான உளவியல் நிபுணரின் ஹிப்னாஸிஸ் அறிக்கையை ஏற்காதது, வினோதம். ரோஸி குழந்தை பெற வாய்ப்பில்லை என போகிற போக்கில் மருத்துவர் சொல்வதுபோல் சொல்வது, தெளிவில்லை. மறு ஜென்மத்திற்கு அறிவியல் ரீதியான சாட்சி இல்லை என்கிற வாதத்தை மறுப்பதற்கு, விஷ்ணு மறு ஜென்மத்தில் ராமராக வந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ( ! ) மேற்கோள்காட்டி நிறுவ முற்படுவது, அபத்தமானது; கதைக் கருவுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கக் கூடியது. நல்லவேளை, இந்த நீதிமன்றம் இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்காதது! திரை உத்திக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்பட்ட, படத்தில் அறிவியலுக்குப் புறம்பான சிலவற்றை, சினிமா லாஜிக், லிபர்டி என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, ஏற்றுக் கொள்வதோ, தள்ளுவதாகவோ இருந்தாலும் அதையும் தாண்டி புரிய வேண்டியவர்களுக்கு, அவரவர்களுக்குப் புரிகிற மொழியில், உத்தியில் கதைக்கருவும் வசன – காட்சி அமைப்புகளால் அதனை அழுத்தம் திருத்தமாக மனதில் உறைக்கும்படியும் பதியும்படியும் கட்டமைத்தும் வழங்கப்பட்டிருப்பதில் இயக்குனரின் திறமையையும் நேர்த்தியையும் பாராட்டித்தான் ஆகவேண்டும். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்