கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே)
திரை விமர்சனம்
ஒரு வாரத்தில் மதுரையில் மாண்டி என்கிற மந்தாகினியுடன், வெங்கடேஷ் விஸ்வநாத் ஐயர் என்கிற விஷுவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பீகாரில் ரிங்கு சூரியவன்ஷியுடன் திருமணம் நடந்தேறிட, அதை இருவருமே விரும்பாத நிலையில், அவர்களது வாழ்க்கைப் பயணத்தை விறுவிறுப்பாகவும் சுவையாகவும் கொஞ்சம் லாஜிக் தவிர்த்தும் கூறும் ஹிந்திப் படம்தான், ஹிமன்ஷு ஷர்மா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஆனந்த் எல்.ராய் இயக்கி, தமிழ் மொழி மாற்றத்தில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள ‘அத்ராங்கி ரே’, தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’.

“இந்த வாயாலதான் நான் இன்னும் உயிரோட இருக்கேன், இல்லேன்னா என்னை எப்பவோ வெட்டி இந்த அடுப்புல போட்டுப் பொசுக்கி இருப்பீங்க, என்னை என்ன கோயில் பிரசாதம்னு நினைச்சியா? கையை நீட்றவனுக்கெல்லாம் தூக்கி கொடுக்கறதுக்கு, இதென்ன கருமம் பிடிச்ச லவ்வு? லவ்வுன்னா நாலஞ்சி தலைங்க உருளனும், ரெண்டு வீட்டுக்காரர்களும் அடிச்சுக்கணும், ஊர்ல பேரு கெடணும், ரெண்டு குடும்பமும் பத்திக்கிட்டு எரியணும். இதெல்லாம் இல்லேன்னா பீகார்ல அது அரேஞ்ச்ட் மேரேஜ் தான்” ரிங்கு பேசும் இத்தகு வசனங்களிலிருந்து பீகாரின் சமூக நிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

ரொமான்டிக் காமெடி வகையான இப்படத்தில், அக்ஷய் குமார் (சஜ்ஜாத் அலி கான்), சாரா அலி கான் (ரிங்கு), தனுஷ் (விசு) போன்றோரின் பண்பட்ட நடிப்பால், அழகான அழுத்தமான பங்களிப்பை வழங்கி, இரண்டே கால் மணி நேரம் போவதே தெரியாமல், ரசிகர்களைப் படத்தோடு லயித்துப் போகச் செய்து விடுகின்றனர்.

சாரா அலி கானின் மனப்போராட்டம், வெகுளித்தனம், காதல் வயப்படுதல் என, அசத்தலான நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதேபோன்று, நிச்சயதார்த்தத்தின்போது திருமணம் நின்ற பின்பு, முதன்முதலாக ரிங்குவிடம் தனது காதலை தனுஷ் வெளிப்படுத்துவதும் அருமை. சாரா அலி கான் – அக்ஷய் குமார் இணைந்து வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பானவை.

“டெல்லி… கொஞ்சம் மூச்சுதான் விட முடியல, மத்தபடி நல்லா இருக்கு” ஆட்டோவுக்கு வெளியே தலை நீட்டிச் சொல்லும் ரிங்கு, “விஷு சார், இந்த உலகத்லேயே நான் ஒரே பொண்டாட்டின்னு நெனைக்கிறேன், சொந்தப் புருஷனோட எங்கேஜ்மெண்ட்ல இவ்வளவு குஷியா இருக்கேன்”, விஷுவிடம் ரிங்கு, “இவன் பாடு ரொம்பக் கஷ்டம்ப்பா, ஒரு மொபைலில் ரெண்டு சிம் போடப் பாக்கறான்”, எம்.எஸ். சஜ்ஜாத் கொண்டு வரும் ஆட்டைக் கட்டி, மது பால் கறக்கும் பரிதாபம், ஆக்ராவில் தாஜ்மகாலை மறைய வைக்க முயன்று, முடியாத தோல்வியை ரிங்கு உணரும் சோகம், தொடர்ந்து விஷுவை அவள் உணர்ந்து கொள்ளல் போன்றவை, பசுமையாக நினைவில் நிற்கும் காட்சிகள்.

துணைப் பாத்திரங்களான, ஆஷிஷ் வெர்மா (எம்எஸ்), டிம்பிள் ஹயாதி (மாண்டி), சீமா பிஸ்வாஸ் (துல்ஹயன்), நித்யா ரவீந்திரன் (விசுவின் அம்மா), ஜி மாரிமுத்து (மாண்டியின் அப்பா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பில் நிறைவைத் தருகின்றனர்.

படத்தின் இன்னுமொரு சிறப்பு, இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் துள்ளலான பாடல் இசையும் அருமையான பின்னணி இசையும்தான். மதன் கார்க்கி, யுகபாரதி, கபிலன், தனுஷ், ரோகிணி, விவேக் எழுதிய அனைத்துப் பாடல்களும், மனோ, ஹரிசரன் சேஷாத்ரி, ஸ்ரேயா கோஷல், ஏ.ஆர். ரகுமான், கே.எஸ்.சித்ரா, தனுஷ் குரல் இனிமையால், பன்முக உணர்வுகளில் மூழ்கடித்து விடுகின்றன, பாடல்கள் அனைத்தும்.

பங்கஜ் குமாரின் காமிரா, பீகார் சிவன் ஜங்ஷன், டெல்லி, ஆக்ரா, செட்டிநாடு வெளிப்புறம் உள்புறமுமாகவும், பகலும் இரவுமாகவும் சுழன்று சுழன்று கண்களைக் கவர்ந்து விடுகிறது. ஹிமல் கோத்தாரியின் படத்தொகுப்பும் நிறைவைத் தருகிறது.

சுவைக்காகவும் சுலபத்திற்காகவும் அமானுஷ்யம், பேய் பிசாசு என்று பூ சுற்றி விடாமல், உளவியலை (பாராகசம்) முன்வைத்து, தெளிவான ஒரு கதையை அழகான பொழுதுபோக்குச் சித்திரமாக்கித் தந்திருக்கும் இயக்குனரின் நேர்மை பாராட்டுக்குரியது.
மதிப்பெண் : 7/10
விமர்சனம்: மது ராஜேந்திரன்
Comments (0)