திரைவிமர்சனம்

எத்தனையோ வாதப் பிரதி வாதங்களையும் தாண்டி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, நாடாளுமன்றம் இயற்றிய சட்ட அங்கீகாரத்தின்படி, இந்நிகழ்வு இன்றைய நிலையில் இயல்பான ஒன்று என்றாலும், அத்தனை சுலபமாக இல்லாமல், நடைமுறையில் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள், வலிகளின் நேர்த்தியான திரை வடிவம்தான், சுப்திக் சென், துஷார் பரஞ்சிபே எழுதி, அபிஷேக் கபூர் இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஹிந்தியில் வெளியாகியுள்ள ‘சண்டிகார் கரே  ஆஷிகி’.

பாடி பில்டர் மனு முஞ்சள் (ஆயுஷ்மான் குரானா) சொந்தமாக ஜிம் நடத்தி வருகிறான். அதன் ஒரு பகுதியில், ஜும்பா நடனப் பயிற்சி தரும் ஆசிரியை மான்வி (வாணி கபூர்) இடையே மலர்ந்து பயணிக்கும் காதல், திருமணத்தை எட்டும் நிலையில், அவள் சொல்லும் ‘அந்த’ உண்மையை அவன் சகித்துக் கொள்ள முடியாமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முனைகிறான். தனது நேர்மையை உணராமல் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதையும், யாதொரு தவறும் செய்யாத நிலையில், சுயமரியாதை  காயப்படுத்தப்பட்டதையும் ஜீரணிக்க முடியாது தவித்துப் போகிறாள் மான்வி. இந்நிலையில், இவர்களிடையேயான பிரச்சனை எவ்விதம் தீருகிறதென்பதே சண்டிகார் கரே  ஆஷிகி படத்தின் மீதிக் கதை.

புரிந்து கொள்ளாமல் மனு கிளம்பும்போது,  உடைந்து போவதில் ஆகட்டும், ஒரு சிறு கீரலுக்குக் குழந்தை போல அழுததைச் சுட்டிக்காட்டி, எத்தனை வெட்டு, ரண வலிகளை தான் தாங்கியதைச் சொல்லி, “இனி இதைவிட என்னைக் காயப்படுத்த ஏதுமில்லை, அப்படியான வலி ஏதாவது உனக்கு இருந்தா காட்டு” என்று சவாலாகச் சொல்வதில் ஆகட்டும், அப்பா, மகன் என்று குறிப்பிடும்போது, உடன் ‘மகள்’ என்று திருத்துவதில் ஆகட்டும், ஜிம்மை விட்டு நின்று விடும்படி கோரும் அப்பாவிடம், “என்னோட ஸ்கூல், என்னோட வீடு, என்னோட ஊர விட்டுட்டேன். இப்போ ஜிம்மையும் விட்டுட்டு எங்க ஓடுவேன்? நான் நான்தான். நானா இருக்கிற  எனக்கு எந்த அவமானமும் கிடையாது” என்று ஸ்திரமாக சொல்வதில் ஆகட்டும், “என்னோட கௌரவத்தை என்னால பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று சொல்வதில் ஆகட்டும் மான்வி பாத்திரத்தில் வாணி கபூர்,

அதேபோல, அவளின் நிலையை, அவளுடனான உறவை ஏற்றுக்கொள்வதிலான தயக்கத்தால், தேய்த்துத் தேய்த்துக் குளிப்பதில் ஆகட்டும், தனது நண்பர்களுடன் அவற்றைப் பகிர்ந்து தவறு இழைத்ததாகத் தடுமாறிப் புலம்புவதில் ஆகட்டும், அதே சந்தர்ப்பத்தில் அவர்கள் அவளை இழிவாகக் குறிப்பிடுவதை ஏற்காமல் சண்டையிடுவதில் ஆகட்டும், மருத்துவர் வழங்கிய ஆலோசனைகளுக்குப் பிறகு தெளிவு பெறுவதில் ஆகட்டும் மனு முஞ்சள் பாத்திரத்தில் ஆயுஷ்மான் குரானா என இருவருமே ஏற்ற பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, தத்தம் நடிப்பின் பன்முகத் தன்மையை வெளிக்காட்டியுள்ளது சிறப்பு.

மான்வியின் தந்தை மொஹிந்தர் (கன்வல்ஜித் சிங்), மனுவின் நண்பர்கள் (கௌரவ் சர்மா, கௌதம் சர்மா), மனுவின் அப்பா நவீன் (கிரிஷ் தாமிஜா), மனுவின் சகோதரிகள் (தான்யா அப்ரால், சாவன் ரூபாவாலி) ஆகிய கலைஞர்களும் சிறப்பாகவே பங்களிப்பைச் செய்துள்ளனர்.

ஒளிப்பதிவும் (மனோஜ் லோபோ) அருமை.  மாண்டேஜ் வகைப் பாடல்கள் இனிமை. இசை, சச்சின்-ஜிகர். சந்திரன் அரோரா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஓடும் படத்தில், முதல் நாற்பதாவது நிமிடத்திலேயே ‘அந்த’ உண்மையைப் போட்டுடைத்தும், படத்தின் இறுதிவரை இக்கதைக் கருவில் ரசிகர்களை அக்கறைப்படுத்தி,  ஈடுபாட்டுடன் கொண்டு செல்லும் இயக்குனர் அபிஷேக் கபூரின் துணிச்சலான திறமை பாராட்டுக்குரியது.

மதிப்பெண்:7/10

விமர்சனம்: மது ராஜேந்திரன்


Comment (1)


மோகன் ராஜா
மோகன் ராஜா
January 25, 2022

தரமான விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *