சிறுகதைகளின் பேரரசன்

ஆன்டன் செகாவ் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை

சுவை, பயன், காலத்தை வெல்லும் தன்மை, பிறந்த இடத்திலே மட்டுமல்லாமல் செல்லும் இடமெங்கும் சிறப்பும் புகழும் பெறுகின்ற தன்மை ஆகிய பண்புகள் ரஷ்ய இலக்கியத்திற்கு உண்டு. மாளிகையிலே மதோன்மத்தராக இருந்தவர்களுக்கு, மாளிகை வாசம் பெற்ற பேனா தூக்கித் தந்த களிப்பு பானம் அல்ல ரஷ்ய இலக்கியம். பசியுடனும் பட்டினியடனும் பாதகருடனும் பாதிரியுடனும் போராடிச் செத்துக்கொண்டிருந்தவர்களுக்காகத் தீட்டப்பட்டது தான் ரஷ்ய இலக்கியம். புதியதோர் உலகு எழ, விழிப்புறச் செய்ததன் மூலம் உலகெங்கும் உயரிய இடம் கிடைத்தது ரஷ்ய இலக்கியத்திற்கு.

அந்த வகையில் உலகச் சிறுகதை எழுத்தாளர்களில் முன்னணியில் நிற்பவன் ஆன்டன் பாவ்லோவிச் செகாவ் ஆவான். பிரெஞ்சு இலக்கியத்தை மாப்பசான் எந்த அளவிற்கு அலங்கரிக்கிறானோ அதற்கும் மேம்பட்ட அளவிற்கு ரஷ்ய இலக்கியத்தை அழகு செய்பவன் செகாவ். ரஷ்ய இலக்கியத்தின் பூர்த்தி செய்யப்படாத சிறுகதை மண்டபத்தை ஆடம்பரமாக, கம்பீரமாக எழச் செய்தவன் அவனே.

தென் ரஷ்யாவில் உள்ள டாகன் பெர்க் என்ற நகரத்தில் 1860ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிறந்தான் செகாவ். அவனது தந்தை பால் செகாவ், ஒரு பலசரக்குக் கடைக்காரர். அவனது தந்தை வணிகம் செய்ததோடு, உலகைப் பற்றிய நல்ல அறிவையும் பெற்றிருந்தார். பரந்த மனப்பான்மையோடு இருந்த தன் தந்தையின் எண்ணம் நிறைவேறும் வகையில், நன்கு படித்துப் பள்ளி வாழ்க்கையில் வெற்றி கண்டான் செகாவ். வணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக, செலவுக்கு ஏற்ற வருமானம் இல்லாது போயிற்று. ஆகவே, 1876இல் அவனது தந்தை மாஸ்கோவிற்கு இடம்பெயர்ந்தார். மீதி இருந்த பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு 1879இல் ஆன்டன் செகாவும் மாஸ்கோ சென்றான். அங்கே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, 1884இல் மருத்துவரானான்.

மாஸ்கோவில் மருத்துவராகப் பணிபுரிந்தாலும் அறியாமை நிரம்பிக் கிடந்த ரஷ்யாவில், அறிவின் மதிப்பை உணர்ந்து, இடையறாத தொல்லைகளைச் சமாளித்துக்கொண்டு, தன்னை அறிஞனாக்கிய பெற்றோர்களுடனே வாழ்ந்தான்.

மாஸ்கோ வந்தது முதலே எழுதுவதில் ஆசை கொண்டு, அவ்வேலையை ஆரம்பித்துவிட்டான். கிட்டத்தட்ட, 1884இல் மருத்துவராக வெளிவரும் பொழுது அவன் முழு வளர்ச்சியடைந்த பத்திரிக்கையாளனாக ஆகி இருந்தான். சில பொழுதுபோக்குப் பத்திரிகைகளுக்குக் கேலிச் சித்திரங்களை வரைந்து வந்தான். அதனால் ஓரளவு வருமானம் கிடைத்தது. 1886இல் அவனுடைய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து, சேர்த்து ஒரு நூல் வெளிவந்தது. அந்த நூல் மக்களின் மனதைக் கவர்ந்தது. அதிகமான பிரதிகளை அச்சேற்றிய மாஸ்கோவின் தினசரிப் பத்திரிக்கையின் ஆசிரியர்களான கிரி கரோவிச், சுவோரின் என்கிற இரண்டு இலக்கியத் தலைவர்களின் கண்களில் அது பட்டு கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு செகாவின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாறுதல் ஏற்பட்டது. அவ்விரு பத்திரிக்கை ஆசிரியர்களும் செகாவைத் தங்கள் தினசரிப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டனர். செகாவின் கதைகளைப் பிரசுரிப்பதற்கு வார இலக்கிய ஏடு ஒன்றை ஆரம்பித்தனர்.

இவ்வாறாக, பொழுதுபோக்கு இலக்கியத்திலிருந்து உண்மை இலக்கியத் தளத்திற்கு வந்து சேர்ந்தான் செகாவ். 1886 – 1887 ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடைந்த நிலையில், அருமையான சிறுகதைகளை எழுத ஆரம்பித்துவிட்டான் செகாவ். இதே ஆண்டுகளில் நல்ல முறையிலே ஓரங்க நாடகங்களும் எழுதினான். இதனால் அவனது புகழ் வெகு விரைவில் ஓங்கியது. அவனுடைய இலக்கிய வருமானம் அவன் குடும்பம் முழுவதையும் நல்ல நிலையில் வைக்கும் அளவிற்கு வளர்ந்தது.

1890இல், செகாவ் சைபீரியாவை நோக்கிப் பயணம் செய்தான். அந்தக் காலத்தில், பெரிய சைபீரிய ரயில்வே கிடையாது. இருப்பினும் மிகுந்த சிரமத்துடன் ஆவலோடு பிரயாணம் செய்தான். திரும்பி வரும்போது சீனக் கடல் வழியாக இலங்கையைச் சுற்றி வந்து, ரஷ்யாவை அடைந்தான். ரஷ்யாவிற்கு வந்தவுடன் சைபீரியாவிலும் கீழ்க் கோடியிலும் குற்றவாளிகள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்பங்களைத் தனது எழுத்தில் வடித்து, அவற்றைப் போக்க சீர்திருத்த யோசனைகளையும் கூறி ஒரு புத்தகம் எழுதினான். இந்த எழுத்தின் காரணமாக 1892இல் சிறைச் சீர்திருத்தங்கள் பல செய்யப்பட்டன.

அவனது எழுத்து வன்மை, நிறைய பணத்தை அள்ளித்தந்தது கைக்கு வந்த பணத்தை எல்லாம் பொதுநலம் குறித்துச் செலவு செய்தான். தான் பிறந்த ஊரான டாகன் பெர்கில், ஒரு நூல் நிலையம் மற்றும் பொருட்காட்சிச் சாலை அமைப்பதற்குப் பொருளுதவி செய்தான். 1892 – 1893 இல் காலராவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக இலவசமாக மருத்துவம் பார்த்தான். 1897இல் காசநோயால் பாதிக்கப்பட்டான். நோய் குணமாவதற்காக, அந்த ஆண்டே காகசஸ் மலைப் பகுதிக்குச் சென்றான். அன்று முதல் அவன் சாகும் வரை காகசஸிலும் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் வாழ்ந்தான்.

மக்களின் ஊழல்கள், போலி வாழ்க்கை, சிறுமை முதலியவற்றை எல்லா இடங்களிலும் பார்த்து வந்ததால், இவருக்கு மனித சுபாவத்திலேயே நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. இந்த அவநம்பிக்கை அவருடைய இலக்கியம் முழுவதும் பிரதிபலிக்கிறது. புஷ்கின், துர்கனேவ், செகாவ் ஆகியோரால் ரஷ்ய மொழி வளர்ச்சி அடைந்தது. ரஷ்ய மொழி இவர்களால்தான் சிருஷ்டிக்கப்பெற்றது என்று எதிர்காலத்து இலக்கிய, சரித்திர ஆசிரியர்கள் சொல்வார்கள் என்று மாக்ஸிம் கார்க்கி செகாவைப் பற்றிப் புகழாரம் சூட்டுகிறார்.

ரஷ்ய வசன இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா, உண்மை ரஷ்யாவை மக்கள் முன் வைத்தவனான நிக்கோலி வாஸ்ஸிலி விச் கொகேல், காந்தியின் குரு, உலகம் முழுவதும் உயர்ந்த எழுத்தாளன் லியோ டால்ஸ்டாய், விடுதலை கீதத்தை பரப்பிய தியோடர் டாஸ்டாவஸ்கி ஆகியோர் இவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். 400க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் செகாவ். சொந்த வாழ்க்கையிலும் படைப்பிலும் காதலே அவரது ஆதாரப் புள்ளியாக இருந்தது. ‘பிணத்திற்குத்தான் ஆறடி நிலம் வேண்டும்; மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது. உயிருள்ள மனிதனின் தேவையும் இறந்தவனின் தேவையும் ஒன்றில்லை’ என்ற இந்த வார்த்தைகள், வாழ்வின் மீதான செகாவின் பற்றுதலின் வெளிப்பாடாக உள்ளன.

உப்புச் சப்பற்ற, சலிப்புமிக்க, அர்த்தம் புரியாத, துயரம் நிறைந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை, தனது கதைகளில் சுவாரசியமாக வர்ணிக்கும் திறன் மிகுந்தவர். வேறு எந்த எழுத்தாளனாலும் இவரைப் போல் வர்ணிக்க இயலாது. வாழ்வின் அத்தனை அம்சங்களையும் தனக்கே உரிய மாறுபட்ட கோணத்தில் அவரது கதைகள் கொண்டிருக்கின்றன.

லியோ டால்ஸ்டாய், தியோடர் டாஸ்டாவஸ்கி ஆகியோர் நாவல்களில் செய்திருக்கும் சாதனையை, இவர் தனது சிறுகதைகளில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். தன் எழுத்தை நம்பகத் தன்மையுடனும் துல்லியத்துடனும் கட்டமைக்கும் ஒரு தொழில்நுட்ப நிபுணன் எழுத்தாளன் என்ற சித்திரத்தை இலக்கிய உலகிற்கு அளித்தவர்.

செகாவ் தனது கதைகளின் மீதான விமர்சனத்தை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. அதுபற்றிக் கூறும்போது, ‘உழுதுகொண்டிருக்கும் குதிரையை அனாவசியமாகத் தொல்லைப்படுத்தும் ஈயைப் போல விமர்சகர்கள் இருக்கின்றனர்’ என்கிறார்.

சிக்கலான மனித உணர்ச்சிகளை விவரிப்பதில், மக்களின் உருவ அமைப்புகளை அப்படியே ஓர் ஓவியர் போலச் சித்தரிப்பதில் கைதேர்ந்த ஆன்டன் செகாவ் நினைவு தினம்  (15. 07. 1904) இன்று.

  • அக்ரி பரத்வாஜ்

Comments (2)


m.kaviyarasan
m.kaviyarasan
July 15, 2023

நல்லதொரு கட்டுரை 💖

Anita Srikanth
Anita Srikanth
July 16, 2023

அருமை.. செகாவ் அவர்களை பத்தி தெரிஞ்சுகிட்டேன்.
கட்டுரையில் அவரை பத்தி எழுதும் போது அவன்..னு ஒருமையில் பேசினது சிலருக்கு மரியாதை குறைவா தெரியலாம்..
அவர் மேல உள்ள ஈர்ப்பும் , ஈடுபாடும் , உங்களை அப்டி எழுத வெச்சிருக்கும் னு நினைக்கிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *