தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்
[குழந்தைகளின் கல்வி நலனில் கவலையும் அக்கறையும் கொண்டு, ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கான கற்பித்தல் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களை சுவடு இதழ் மனதாரப் பாராட்டுகிறது. இந்தக் கட்டுரை அவர்களைக் குறித்தது அல்ல.]
‘உலகெங்கும் கொரோனா தாக்கத்தால் கோடிக்கணக்கான குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதனால் பல வருடங்கள் பின் தங்கிய சூழலுக்குப் போய் விட்டோம்’ என்று யூனிசெஃப் குழந்தைகள் அமைப்பு உட்பட பல தனியார் அமைப்புகள் ஆய்வு செய்து, தங்கள் ஆய்வு முடிவுகளை ஊடகங்கள் வழியே தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
இவை தமிழகத்திற்கும் பொருந்தும். கூடுதலாக இங்கு தனியார் மயமும் தலைவிரித்தாடுகிறது. பெண் குழந்தைகள் திருமணம் எல்லா மாவட்டங்களிலும் நடப்பது பற்றிய புள்ளி விபரங்கள் வெளியாவது தொடர்கிறது. அதைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆசிரியைகளைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. நமது சுவடு இதழ் A3 ஆசிரியர்கள் அமைப்புடன் இணைந்து நடத்திய கருத்தரங்கில், இவற்றையெல்லாம் விரிவாக விவாதித்து அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. 
அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாகவும், கல்வி வரி, தொழில் வரி, வருமான வரி, சாலை வரி உள்ளிட்ட பலப்பல வரிகளைக் கட்டி வரும் சாதாரண குடிமகன்கள் சார்பாகவும், கல்வி மீதும் எதிர்காலத் தலைமுறை மீதும் அக்கறையும் பொறுப்பும் கொண்டவர்களாகவும் இங்கு சில நியாயங்களைக் கேள்விகளாக முன் வைக்கிறோம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களே, வேலையே செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்க வெட்கமாக இல்லையா?
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டு முழுவதுமே ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தும் பணியை மேற்கொள்ளவில்லை. இன்று வரை ஒவ்வொரு அரசுப்பள்ளி ஆசிரியரும் பல லட்சங்களை சம்பளமாகப் பெற்றுள்ளீர்கள். ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ‘உறவினர் வீடே என்றாலும் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது, அது தன்மானத்துக்கு இழுக்கு’ என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி அது. ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களோ கடந்த 15 மாதங்களாக சும்மா இருந்து கொண்டே சம்பளம் வாங்குவது எந்த விதத்தில் நியாயமானது?
பல்லாயிரம் ஆசிரியர்கள் பணி புரியும் நமது கல்வி அமைப்பில் மிகச் சொற்ப விழுக்காடு ஆசிரியர்கள்தான் குழந்தைகளுக்காக ஏதாவது ஒரு வகையில் பேசிக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கின்றனர். மீதமுள்ள பெரும்பான்மை ஆசிரியர்கள் வேலையே செய்யாமல் அரசு வழங்கும் சம்பளத்தைக் கொஞ்சமும் கூச்சமின்றி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பலர் சொந்தமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொண்டும் விவசாயம் பார்த்துக் கொண்டும் வேறு ஏதாவது சொந்தத் தொழில் செய்துகொண்டும் ஏதோ ஒரு வகையில் இன்னும் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு இருப்பதோடு அரசு தரும் மாத ஊதியத்தை ஒரு பைசா குறையாமல் வாங்கி அனுபவித்து வருகிறார்கள். 
ஆனால் மறுபக்கம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பொது மக்கள், வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து, வருமானமே இல்லாமல் வாழ்வா சாவா எனப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலப்பல சிக்கல்களைச் சந்தித்து வரும் அந்த மக்களின் வரிப்பணத்தையும் உள்ளடக்கியதுதான் நீங்கள் வாங்கும் சம்பளம். ஆனால், அந்த மக்களின் குழந்தைகளது கல்வி குறித்து அக்கறை எதுவுமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு, ‘அரசு பள்ளியைத் திறக்கவில்லை, அரசாங்கம் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்’ என்று சொல்லி அரசின் மீதே பழியைச் சுமத்தி தப்பித்துக் கொண்டு வருகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த உணர்வே இல்லாமல் கற்பித்தல் பணியையே அவமதிக்கும் இந்த ஆசிரியர்களுக்கு தங்கள் பணி குறித்த பொறுப்புணர்வும் சொரணையும் என்று வரும்?
தண்டச்சோறு தின்னும் ஆசிரியர் சங்கங்கள்
சின்னச் சின்ன விஷயங்களுக்கும், பதவி உயர்வு, சம்பளப் பற்றாக்குறை, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு போன்ற தங்களது சொந்த நலன் சார்ந்து அரசை எதிர்க்கும், போராட்டங்கள் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சமாவது கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இந்தக் கல்வியாண்டாவது பள்ளிகளைத் திறக்க எங்காவது குரல் கொடுத்தீர்களா?
முதல்வரிடம் நல்ல பேர் வாங்க கொரோனா நிதியை (குழந்தைகளின் கல்விக்காக வாய் திறக்காத ஆசிரியர்களிடம் இருந்து) வசூலித்து அரசிடம் கொடுக்கத் தெரிந்த சங்கங்களுக்கு, தங்கள் வாழ்வதாரத்திற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் பள்ளிக் குழந்தைகளது கல்வி நலன் பேணப்பட வேண்டும் என்று கொஞ்சமும் தோன்றவில்லையா?

குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லையென்றால் உங்களுக்கு வேலை ஏது? சம்பளம் ஏது?
உங்கள் சங்கங்களின் உறுப்பினராக இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வகுப்பறைகளில் பயின்ற லட்சக் கணக்கான குழந்தைகள் இப்போது எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? குழந்தைத் தொழிலார்களாகப் போய்விட்டனரா? திருமணம் செய்துகொண்டு போய்விட்டனரா? போன்ற தகவல்கள் ஏதாவது தெரியுமா? அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வர ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டீர்களா? 
கொரோனா சூழல் இப்படியே நீடித்தால், அரசு உங்களுக்கு வாழ்நாள் முழுக்க தண்டச்சோறு போட்டுக்கொண்டிருக்கும் என்ற கனவில் மிதக்கிறீர்களா? இதனால் அரசுப் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளதை உணர முடியவில்லையா? இந்தச் சூழலில் மாற்று வழிகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பு உங்களுக்குக் கொஞ்சம்கூட இல்லையா? உழைக்காமல் ஓசிச்சோறு தின்ன உங்களுக்குக் கூசவில்லையா?
கல்வி அதிகாரிகளே, நீங்கள் பூம்பூம் மாடுகளா?
ஆசிரியர்களாவது கற்பித்தல் பணியைச் செய்கின்றனர். ஆனால் நமது தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை முன்னேற்றத் திட்டமிடும் இடத்தில் இருக்கும் நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குப் பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியை மட்டும் சுற்றறிக்கைகளாக அனுப்பிக்கொண்டு இருப்பீர்கள்? ஆசிரியர்களை விட ஒன்றிரண்டு மடங்கு அதிக ஊதியம் பெறும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்களும் கடந்த 15 மாதமாக வேலை செய்யாமல்தானே சம்பளம் வாங்குகிறீர்கள்? உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லைகளில் எத்தனைக் குழந்தைகள் வேலைக்குப் போய், அவர்களின் கல்வி நாசமாகப் போய்விட்டது என்று தெரியுமா? மாநிலமெங்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை நிர்வகிக்கும் அலுவலுக்காகத்தானே அத்தனை சம்பளமும் பெறுகிறீர்கள்? கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா உங்களுக்கு? இன்னும் எத்தனைக் காலம் கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளிக்கூடங்களை மூடி வைத்து, குழந்தைகளைக் கற்றலில் இருந்து விலக்கி வைத்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?
படிக்காத குழந்தைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து புத்தகம் அச்சடிப்பது எதற்காக? கமிஷன் அடிக்கவா? பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடிக்கிடக்கின்றன. எப்போது திறக்கப்படும் என்ற எந்த விவரமும் இல்லை. இந்தச் சூழலில் மாற்று வழி குறித்து கொஞ்சமாவது நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ஆட்சியாளர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சொல்வதற்குத் தலையாட்டும் பூம்பூம் மாடுகளா நீங்கள்? 
லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த ஆண்டு தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு வந்திருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் ஆங்கில வழியில் படித்தவர்கள் அல்லவா? கல்வித் தொலைக்காட்சியில், பாடங்களைத் தமிழ் வழியில் மட்டும்தானே ஒளிபரப்புகிறீர்கள்? எனில், ஆங்கில வழியில் சேர்ந்த மாணவர்களின் நிலை என்ன? இதுகூடத் தெரியாமல்தானே அதிகாரிகளாக அமர்ந்துகொண்டு இருக்கிறீர்கள்? எந்த அடிப்படையில் கல்வித் தொலைக்காட்சி பாடத்திட்டத்தை எழுதச் சொல்லி சுற்றறிக்கை அனுப்புகிறீர்கள்? சம்பளம் பெறுவதற்கு உங்களுக்குப் பதிவேடுகள் வேண்டும். குழந்தைகள் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? பள்ளிகள் திறந்தால் என்ன? திறக்காவிட்டால் உங்களுக்கு என்ன?
8ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பது இந்த வருடம்தான் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. அது கல்வி உரிமைச் சட்டம் 2010-லிருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் 9 , 10 , 11 வகுப்பு முடித்து, கல்விக் கட்டணம் கட்ட முடியாததால் தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற முடியாமலும் அரசுப் பள்ளியில் சேர முடியாமலும் தத்தளிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பற்றிய தரவுகள் எடுத்து அரசுக்கு அனுப்பினீர்களா? இந்தப் பிரச்சினை குறித்து அரசுக்கு ஏதேனும் வழிகாட்டினீர்களா? 
கொரோனா காலத்தில் எத்தனைக் குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச்சென்றுவிட்டார்கள் என்றும் அவர்களை எப்படி மீட்டு பள்ளிக்குள் கொண்டுவருவது என்றும் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? இந்தப் பணிகள் எல்லாம் நடக்கிறதா இல்லையா என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமா? எந்தப் பணியும் செய்யாமல் கல்வித் துறையின் வட்டார, ஒன்றிய, மாவட்ட, மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் எதற்காக இருக்கிறீர்கள்?
அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும் உறங்குகிறதா?
சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படை கல்வி வாய்ப்புகள்தான். ஆனால் அது தற்போது எதிர்த்திசையில் பயணிக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே, தமிழக முதல்வர் அவர்களே, கடந்த ஆண்டு நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதே கொரோனா தாக்கம், பள்ளிகள் மூடல் என்ற நிலை இருந்ததே? அது அடுத்த வருடமும் தொடர்ந்தால் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் ஏன் உங்களிடம் இல்லாமல் போனது? அது கூடப் பரவாயில்லை. உழைக்கும் மக்களிடமிருந்து வாங்கும் வரிப்பணத்தில் ஆசிரியர்களை வேலையின்றி உட்கார வைத்து ஓசிச் சம்பளம் கொடுப்பது ஒரு புறம் இருக்கட்டும். இன்னும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் கொரானா நீடிக்கும் எனத் தெரியாத சூழலில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் கல்வியிலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க வேண்டாமா? இதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டாமா? சிறந்த கல்வியாளர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டாமா? 
குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாமல், தங்கள் மன உணர்வுகளை, அழுத்தத்தை வெளிப்படுத்த வழியில்லாமல் தவறான நடத்தை மாற்றங்களுக்கும் உளவியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். இந்தக் கோணத்தில் பள்ளிக் கல்வித்துறை இப்பிரச்சினைகளை அணுகியதா? சமூகத்தைப் பல வருடங்கள் பின்னுக்கு தள்ளும் ஆபத்தை உருவாக்கும் சூழலையே தற்போது வளர்த்து வருகிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?
தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை இழந்து தங்கள் உயிரையே இழந்து வரும் செய்திகள் கூட வருகின்றன. இணையவழிக் கல்வி பெருகி வருகிறது. இது நம் எதிர்கால சந்ததிக்கு நல்லதல்ல. பள்ளிகள் மூடல் தொடர்ந்தால் படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் அருகிவிடும். பள்ளிகள் வெறும் பாடம் கற்பிக்கும் இடமல்ல, குழந்தைகளின் நடத்தை மாற்றங்களைச் செதுக்கும் சிற்பக் கூடங்கள். தயவு செய்து பள்ளிகள் திறப்பில் மாற்று முறைகளைக் கையாளுங்கள்.
எங்கே போயின எதிர்க்கட்சிகள்?
பள்ளிகள் நிரந்தரமாக மூடிக் கிடக்கின்றன. குழந்தைகளின் வாழ்க்கை வீணாகிறது. ஆசிரியர்கள் வேலையே செய்யாமல் ஒன்றரை ஆண்டு காலமாக சம்பளம் பெறுகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் மக்கள் நலன் கருதி குரல் எதுவும் எழுப்பவில்லையே, ஏன்? சமூக வளர்ச்சியில் உங்கள் பங்கு என்ன? எதிர்காலத் தலைமுறை மீதான உங்கள் அக்கறைதான் என்ன? 
முற்போக்கு பேசும் சிந்தனாவாதிகள் / மாணவர் அமைப்புகள் / சமூக அமைப்புகள்
மேற்குறிப்பிட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் கண்டு கவனமாக அமைதி காக்கும் நீங்கள் இந்த சமூகத்தின் நீதியைக் காக்க குரல் கொடுக்க வேண்டாமா? ஏழை மாணவர்கள் கல்வி பெற வேண்டாமா? இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படியே நகரும்? கல்வியில் நிலவும் இந்த மாபெரும் ஏற்றத்தாழ்வுச் சூழல் சமூக நீதிக்கு வைக்கப்படும் வேட்டு இல்லையா?
மாற்று என்ன? 
அரசு பள்ளிகளைத் திறக்கிறதா இல்லையா என்பதல்ல இப்போதைய பிரச்சினை. இந்தச் சூழலுக்கு மாற்று என்ன? என்பதே நம் கேள்வி. மாற்றங்களைக் குறித்து சிந்திக்காதவர்கள் எதிர்காலம் குறித்த அக்கறையற்றவர்களாகவே கருதப்படுவர். தண்டச் சம்பளம் பெறுவோர் மனசாட்சி இருந்தால், இனியாவது மாணவர்களின் கல்வி குறித்துச் சிந்தியுங்கள். உங்கள் கருத்துகளைத் துணிவோடு அரசுக்குத் தெரிவியுங்கள். அல்லது எதிர்காலத் தலைமுறை நாசமாய்ப் போனாலும் பரவாயில்லை என்று இப்படியே நீங்கள் தண்டச்சோறு தின்னுங்கள்.
தஞ்சிகுமார்
August 2, 2021‘தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்’ கட்டுரை எதிர்கால நம்பிக்கையான மாணவர்களின் கல்வி குறித்து அருமையான அலசல்.அதே சமயத்தில் அரசாங்க திட்டமிடல் மற்றும் நெறிமுறைகள் பாதிபங்கு வகுக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
விஜய்
August 3, 2021மாதா பிதா குரு தெய்வம்.
அலசல் சரி. ஆனால் சமூகத்திடம் ஆசிரியர் குறித்த தவறான பார்வையை உருவாக்கும் தறிகெட்ட ஊடகங்களில் ஒன்றா சுவடு. பணத்துக்காக ஒழுக்கம் கெடும் சுவடு ஊடகம்.
Editor
August 4, 2021சுவடு இதழுக்கு யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற தகவலைத் தந்தால் அந்தச் செய்தியும் இங்கே வெளியிடப்படும். நன்றி.
Sudaroli
August 3, 2021இந்நோய்க்காலத்தை எவ்வாறு எதிர்கொண்டு கல்வி நலன் காப்பது எனும் எவ்வித பரிந்துரையும் அரசுக்கு அளிக்கும் அளவுக்கு அறிவில்லாத அரசை கேள்வி கேட்க முதுகெலும்பில்லாத அரைகுறை வேக்காட்டு கட்டுரை. அரசு, கல்வித்துறையைச் சார்ந்த இயக்குனர் முதல் ஆசிரியர் வரை, குழந்தைகள் நலக் குழுமம், ஊடகம், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கொரோனா நோய்த்தொற்று சூழலில் குழந்தைகள் நலன் காப்பவர்களாக செயல்பட வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் இருக்கிறது. இக்கொடூர சூழலில் உண்மையில் சிக்கலுக்கான தீர்வு நோக்கிய சிந்தனைகளை திசை திருப்பும் உங்களைப் போன்ற கருங்காலிகள் நீங்கள் தண்ட சோறாகக் கருதும் ஆசிரியர்களைவிட மோசமானவர்கள்.
Sudaroli
August 3, 2021இந்நோய்க்காலத்தை எவ்வாறு எதிர்கொண்டு கல்வி நலன் காப்பது எனும் எவ்வித பரிந்துரையும் அரசுக்கு அளிக்கும் அளவுக்கு அறிவில்லாத அரசை கேள்வி கேட்க முதுகெலும்பில்லாத அரைகுறை வேக்காட்டு கட்டுரை இது. அரசு, கல்வித்துறையைச் சார்ந்த இயக்குனர் முதல் ஆசிரியர் வரை, குழந்தைகள் நலக் குழுமம், காவல்துறை, ஊடகம், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கொரோனா நோய்த்தொற்று சூழலில் குழந்தைகள் நலன் காப்பவர்களாக செயல்பட வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் இருக்கிறது. இக்கொடூர சூழலில் உண்மையில் சிக்கலுக்கான தீர்வு நோக்கிய சிந்தனைகளை திசை திருப்பும் உங்களைப் போன்ற கருங்காலிகள் தண்ட சோறாக நீங்கள் கருதும் ஆசிரியர்களைவிட மோசமானவர்கள்.
Sudaroli
August 3, 2021கொரோனா நோய்த்தொற்று காலத்தை எவ்வாறு எதிர்கொண்டு கல்வி நலன் காப்பது எனும் எவ்வித பரிந்துரையும் அரசுக்கு அளிக்கும் அளவுக்கு அறிவில்லாத அரசை கேள்வி கேட்க முதுகெலும்பில்லாத அரைகுறை வேக்காட்டு கட்டுரை இது. அரசு, கல்வித்துறையைச் சார்ந்த இயக்குனர் முதல் ஆசிரியர் வரை, குழந்தைகள் நலக் குழுமம், காவல்துறை, ஊடகம், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கொரோனா நோய்த்தொற்று சூழலில் குழந்தைகள் நலன் காப்பவர்களாக செயல்பட வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் இருக்கிறது. இக்கொடூர சூழலில் உண்மையில் சிக்கலுக்கான தீர்வு நோக்கிய சிந்தனைகளை திசை திருப்பும் உங்களைப் போன்ற கருங்காலிகள் தண்ட சோறாக நீங்கள் கருதும் ஆசிரியர்களைவிட மோசமானவர்கள்.
Editor
August 4, 2021அரசுக்கு என்ன பரிந்துரைகளை வழங்கியுள்ளோம் என்பதை நீங்கள் சுவடு இதழைத் தொடர்ந்து வாசித்திருப்பின் புரியும். இருப்பினும் உங்களுக்காக மீண்டும் அவற்றை வெளியிடுவோம். வாசித்துவிட்டு அதன் பின்னர் உங்கள் கடமைகளையும் தொடர்ந்து செய்யுங்கள். நன்றி.
சக்தி
August 3, 2021இன்றைய தமிழ் பத்திரிகை சமுதாயத்தில் தான் இருப்பதற்கான *சுவடே* இல்லாத *சுவடு* இதழ் ஆசிரியருக்கு…
பிறரை விமர்சிப்பதற்கு முன் உங்கள் இதழ் இந்த சமுதாயத்திற்கு என்ன நன்மை, தியாகம் செய்ததது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்…
இது பெருந்தொற்று காலம்… இந்தியா மட்டும் அல்ல உலகமே முடங்கிப் போய் கிடக்கிறது என்பது தான் யதார்த்த நிலை…
உலகம் இது வரை சந்தித்திராத ஒரு சூழல்.. இந்த தொற்று நோயின் பரவலை அறிந்து கொள்ள முடியவில்லை… முதல் அலை, இரண்டாம் அலை முடியும் தருணம்… மூன்றாவது அலை வந்துவிடுமோ என அரசும், மருத்துவர்களும், பொது மக்களும் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்…
எல்லாவற்றையும் விட மனிதனின் உயிர் முக்கியம்…
உயிர் இருந்தால் மட்டுமே கல்வியும், பணமும்…
தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்… என்ன ஒரு வார்த்தை (வக்கிரம்)… அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களை பார்த்து எவ்வளவு ஒரு வக்கிரமான, கேவலமான, தரம் கெட்ட வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் தரம் கெட்ட *சுவடே* இல்லாத சுவடு இதழ் ஆசிரியர்…
உனக்கு அப்படி என்ன வக்கிரம் ஆசிரியர் சமுதாயத்தின் மேல்…
ஆசிரியர் சாப்பிடக்கூடாதா? ஆசிரியர் சம்பளம் பெறக்கூடாதா??? உனக்கு என்ன பிரச்சினை இப்ப…
சமுதாயத்தின் மேல் உண்மையிலேயே அக்கறை இருந்தால் உன் இதழில் பின்வரும் விசயங்களை எழுதியிருக்கலாம்…
ஒரு சில தண்டச்சோறுகள்(சுவடு இதழ் ஆசிரியர் மொழியில்) இந்த தேசத்தை குட்டிச்சுவர் ஆக்கிட்டு இருக்கு, உரிமைகள் பறிக்கப்படுகிறது, பெட்ரோல் விலை கடும் உயர்வு, கடந்த நான்கு ஆண்டுகளாக கிட்டத்தட்ட 30 தண்டச்சோறுகள்(சுவடு இதழ் ஆசிரியர் மொழியில்) தமிழ் மக்களின் உழைப்பை சுரண்டி ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்து கொள்ளையடித்தது, இப்படி பல்வேறு விஷயங்களை எழுதியிருக்கலாம்…
சமுதாயத்தின் மேல் உண்மையில் அக்கறை இருந்தால் எழுதியிருக்கலாம்…
ஆசிரியர்களை இவ்வளவு வன்மமாக, வக்கிரமாக எழுதிய சுவடு இதழ் ஆசிரியரை வன்மையாக கண்டிக்காமல், இதை சிலர் கண்மூடித்தனமாக பகிர்ந்து ஆசிரியர் சமுதாயத்தை இழிவு படுத்துகிறார்கள்…
ஆசிரியர்கள் மேல் அப்படி என்ன கொல வெறி….
ஆசிரியர்களை இழிவு படுத்துபவன் ஒரு போதும் உருப்படமாட்டான்…
*கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை*
Editor
August 4, 2021சுவடே இல்லாத பத்திரிகையின் கட்டுரைக்குத்தான் நீங்கள் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆசிரியர்கள் மட்டுமல்ல, உழைக்கும் யாவருமே சம்பளம் பெறலாம். ஆனால் அதற்கான உழைப்பைச் செலுத்துங்கள் என்பதே எங்கள் வேண்டுகோள். தேசத்தைக் குட்டிச்சுவர் ஆக்குவோர் பற்றிய எங்கள் கட்டுரைகளை முந்தைய இதழ்களில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அதே நேரம் அந்தக் குட்டிச்சுவர் ஆக்குவோருக்கு எதிராக நீங்கள் எடுத்த முன்னெடுப்புகளையும் சொன்னால், அதையும் எங்கள் இதழில் வெளியிடுவோம். நன்றி.
சக்தி
August 3, 2021ஏழை பின்தங்கிய மணவர்களுக்கான எதிர்கால வழிகாட்டல் ஆசிரியர்கள் மட்டுமே, அவர்களை ஒழித்து அவர்கள் அடிமட்டத்திலேயே இருக்கவேண்டும் என்ற உன் வக்கிரபுத்தி புரிகிறது..
அடி முட்டாளே இந்த வருடத்தில் மட்டும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறியுள்ளார்கள் என்பதை தகவலறியும் உரிமை சட்டத்தில் பார்த்து தெரிந்துகொள்..
Editor
August 4, 2021பல லட்சமா? இருக்கட்டும். அவர்கள் அரசுப்பள்ளிக்கு வந்து என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி. ஏழை பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியான நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று புத்திசாலியான தாங்கள் சொன்னால், அதையும் எங்கள் இதழில் வெளியிடுவோம். நன்றி.
அருன்
August 3, 2021உங்களை மாதிரி நான்காம் தர பத்திரிக்கைகள் , விபச்சார பத்திரிக்கைகள் தங்கள் விளம்பரத்திற்காக இப்படிபட்ட கேவலமான கட்டுரைகளை எழுதி விளம்பரம் தேடி கொள்ள நினைக்கிறீர்கள்… இப்போது மாணவர்களின் உயிரை விட கல்வி முக்கியமா போச்சா உங்களுக்கு.. கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்ப்படாமல் தவிர்க்க வேண்டும் என்பதற்காக. கடமை
Editor
August 4, 2021உங்களுடைய முதல் தரமான வார்த்தைகளுக்கு நன்றி. உயிரை விட கல்வி முக்கியம், கல்லாதவன் நடைப்பிணத்துக்குச் சமம், விலங்குக்குச் சமம் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. திருவள்ளுவர் சொல்கிறார். முடிந்தால் திருக்குறள் கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு இல்லாவிடினும் உங்களுக்காவது பயன்படும். நன்றி.
DINESH
August 3, 2021இக்கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு வணக்கம்.
இப்போதைய சூழ்நிலையில் இணைய வழிக் கற்பித்தல் மட்டுமே இதற்கான தீர்வாகும்.
பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு தயாராக உள்ளனர்.
ஆனால் மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் மற்றும் இணைய வசதிகள் பெரும்பாலும் இருப்பதில்லை.
நமது அரசானது அனைத்து மாணவர்களுக்கும் டேப் மற்றும் கல்வி கற்பதற்கான இலவச சிம்கார்டு வழங்கினால் மட்டுமே இணையவழி கற்பித்தலுக்கு சாத்தியமாகும்.
ஏனென்றால் அரசு பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் ஆவார்கள்.
எனவே இதனை அரசின் கவனத்திற்கு தாங்கள் எடுத்து சென்று மாணவர்கள் நலனில் உங்களுக்குள்ள அக்கறை இல் நடைமுறைப்படுத்தும் என்று நினைக்கிறேன்.
Editor
August 4, 2021வணக்கம். உங்கள் கருத்துக்கு நன்றி. ஏற்கனவே சுவடு இதழ் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், ஊடகவியாலாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி, அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி உரிய பரிந்துரைகளை அரசு, கல்வித்துறை, அனைத்துக் கட்சிகள், ஊடகங்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளோம். அவற்றையும் விரைவில் இங்கே பதிவேற்றம் செய்கிறோம். நன்றி.
Raja
August 6, 2021கொரோனாவை உலகிற்கு கொண்டு வந்தவனையும் (நாட்டையும்), அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத வல்லுனர்களையும் அடுத்த இதழில் வெளுத்து வாங்குங்கள். அதோடு நில்லாது சுவடு பத்திரிக்கையோரே கூட அதற்கு தடுப்புமருந்து கண்டறிந்து முதலில் கொரோனாவை ஒழித்து மனித உயிர்களை காப்பாற்றுங்கள்.ஏன்னா மருத்துவ வல்லுனர்களை விட சிறந்த வல்லுனர்கள் நீங்களே. இது எனது வேண்டுகோள். அம்புட்டுத்தான்.
Editor
August 8, 2021முந்தைய கருத்தையே இந்தக் கருத்துக்கும் வாசித்துக்கொள்ளுங்கள். நன்றி.
ராஜா
August 6, 2021Editor ஐயா அவர்களுக்கு வணக்கம். உங்கள் தலையங்கம் முழுமையாகப் படித்தேன்.எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
கொரோனோவை முதலில் அறிமுகப்படுத்தி உலக மனித குலத்தை கபளீகரம் செய்யும் கொரோனாவை ஒழிக்க ஏதேனும் தடுப்பு மருந்து கண்டறிந்து அதை தாங்களே அதாவது சுவடு பத்திரிக்கை (ஆசிரியரே) நிர்வாகமே கூட இலவசமாக மக்களுக்கு வழங்கி விலைமதிப்பில்லா இந்த மனித உயிர்களை காப்பாற்றுங்கள்.ஏன்னா முதலில் உங்கள் நலனுக்காகவே இதைக் கூறுகிறேன். அப்பத்தான் சுவடு பத்திரிக்கை வாங்கிப் படிக்க மனித சுவடுகள் மிஞ்சும், அப்படியே இதை எமனின் பரிசாக உலகிற்கு முதலில் பரப்பிய நாட்டினரை அடுத்த இதழியாவது வெளுத்து வாங்குங்கள்.ஏன்னா…இது போன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் அவன் தான காரணம். அவனை ஐ.நா.சபை வரை கொண்டு சென்று பன்னாட்டு நீதி மன்றத்தின் கூண்டு ஏற்றி அவனுக்கு தண்டனையும், இறந்த உயிர்களுக்கு நஷ்டஈடும் வாங்கிக் கொடுத்தால் தங்கள் சுவடு வரலாற்றுச் சுவட்டில் பல லட்சம் ஆண்டுகளாய் தடம் பதிக்கும்.
நன்றி ஐயா.
Editor
August 8, 2021அற்புதமான உங்கள் கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. நீங்கள் ஆசிரியரா எனக் குறிப்பிடவில்லை. ஒருவேளை நீங்கள் ஆசிரியராக இருப்பின், உங்களிடம் படிக்க நேரிட்ட மாணவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ராஜா
August 8, 2021எனது கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. எனது தொழில் குறித்த தங்களின் ஆவலை வரவேற்கிறேன். முதலில் தாங்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். தெரியாத ஒரு விஷயத்தை, செயலை அல்லது அறிவை பிறரிடம் இருந்து எப்போது கற்றுக்கொள்கிறோமோ அப்போது முதல் அவர் ஆசிரியரே. அப்படியெனில் நானும் கூட ஆசிரியர் என்ற முறையில் எனது கருத்தைக் கூறினேன். ஆனால் நீங்கள் அப்படிக் கூட இல்லை என்று உங்கள் சொல்லிலும், செயலிலும் நிரூபித்துவிட்டீர்கள். தாங்கள் ஆசிரியர் வேலை கிடைக்காத விரக்தியில் மனம் நொந்து, வெந்து போனது போல எனக்குப் படுகிறது. விரைவில் ஆசிரியர் பணி கிடைக்க எனது வாழ்த்துக்கள்.
Editor
August 18, 2021வணக்கம். வாழ்வின் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொள்ளும் காலமே. அந்த வகையில் எல்லோருமே இந்த உலகில் மாணவர்களே. நீங்கள் எப்படியோ நானறியேன். ஆனால், மரணத்தைத் தழுவும் நொடிவரை நான் ஒரு மாணவனே.
இன்னொரு முக்கியச் செய்தி, நான் ஆசிரியர் பணி கிடைக்காத விரக்தியில் இருப்பவன் என்ற உங்கள் கற்பனைக்கும், எனக்கான வாழ்த்துக்கும் மிக்க நன்றி. உங்களுக்கான செய்தி ஒன்று உண்டு. நான் சுவடு இதழின் ஆசிரியர், பள்ளி ஆசிரியர் அல்ல. நன்றி, வணக்கம்.
ராஜா
August 18, 2021சுவடு இதழ் மாணவருக்கு என் அன்பு வணக்கம்🙏.
உலகில் உள்ள அனைவரும் மாணவர் என நீங்கள் சொல்லுகிறீர்கள்.நான் உங்களையும் கூட ஆசிரியர் என்று சொன்னேன். (உலகில் உள்ள ஒவ்வொருவரிமிருந்தும் நாம் எதையாவது கற்றுக்கொள்கிறோம். பிறகு அதை பிறருக்கு ஏதோ ஒரு வழியில் கற்றும் கொடுக்கிறோம்) ஆனால் நீங்கள் எப்போதும் கற்பவராகவே இருப்பீர்கள் போல, அப்படியே இருங்கள். சுவடு இதழ் மாணவரே.
நன்றி
Editor
August 27, 2021அன்பின் எல்லாம் கற்றறிந்த ஆசிரியருக்கு, நான் என்றென்றும் மாணவனே. நீங்கள் எல்லாம் கற்ற ஆசிரியர் என்று செருக்கு கொள்வீராயின் அதுதான் அறியாமையின் உச்சம். நான் எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பேன். நன்றி.
ராஜா
August 29, 2021வணக்கம் 🙏
இவ்வுலகில் எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை. ஆனால் தாங்கள்தான் எல்லாம் அறிந்த ஏகாம்பரம் போல பிறரைப் பற்றி தரம் தாழ்ந்து (உங்கள் தரம்) எழுதியிருந்தீர்கள். புரிந்துகொண்டு செயல்பட்டால் சரி.
ராஜா
August 8, 2021தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்